.

Pages

Sunday, February 8, 2015

[ 11 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(37)
காட்டி விளக்கிடக் காணும் பொருளாகக்
காட்டா மலெண்ணும் கருவாக - ஊட்டும்
ஒருவர் உதவியில் ஒன்றாகி நின்றே
விரும்பித் தெளிய விளங்கு.

(38)
விளங்க முயலும் விதத்தில் தெளிவு
பிளக்க நினைக்கப் பிரிவு - வளர்த்திடும்
நோக்கம் செயலாகி நேர்த்தியாய் ஆகிவிடும்
ஆக்கும் மனமே அதை

(39)
அதையடைந்தே தீரும் அதனிலே மூழ்க
இதையுணர எல்லாம் இயலும் - விதைக்க
முளைப்பதன்றி மாறி முடங்காதே வாய்ப்பில்
களைப்பதனை நீக்கியே காண்

(40)
காண்பதெல்லாம் உண்மையின் காட்சிகள் காணவே
தூண்டுமுணர் வுத்துயிலாத் தூய்மையில் - மாண்டபின்
காட்சிகளும் கண்ணும் கரைந்தொன்றும், ஒன்றதனின்
ஆட்சிகளின் ஆட்டம் அறி.

நபிதாஸ்

வெண்பா (37)  
பொருள்: இதுதான் என்று சுட்டிக்காட்டிடும் உருவமும் அன்று. ஆனாலும் இப்படித்தான் என்று விளங்கி; விளக்கிக் காட்டாமலும் போக உண்மைக் கருவே சத்திய உண்மை இறை ஆகும். அதனை அறிந்த இறைநெருக்கம் பெற்ற ஒருவர் உதவியில்; அவர்கள் காட்டும் நெறியில்; அந்நெறியான ஒன்றான உண்மையில் நின்றே; அதனில் ஆர்வம் மிகுந்து விரும்பி இறைவனை அறிந்துத் தெளிந்திடவே விளங்கிக்கொள் என்பதாகும்.

வெண்பா (38)  
பொருள்: ஒன்றைப்பற்றி விளங்க முயலும் விதத்தில் அதில் தெளிவுகள் பிறக்கும். அதைவிடுத்து அதில் குற்றம் காண முயன்றால் அவ்வொன்றை வேறொன்றாகக் குற்றம் காணும் உணர்வு காட்டும். ஆக, எந்த நோக்கத்தில் ஒன்றைப்பற்றித் தெரியத் தெளிய விரும்புகிறோமோ அந்த விதத்திலே இவனில் இருக்கும் மனம் என்ற ஆற்றல் செயல்படும் என்பதாகும். எனவே ஆற்றலை முறையான வழியில் செயல்படுத்த வேண்டும்.

வெண்பா (39)  
பொருள்: ஒன்றை அடைய விரும்பினால் அதனை அடையும் வழிதனில் தீவிரமாக மூழ்கினால் அதனை அடைவது உறுதி. இதை அறிந்த ஒருவனால் அவன் விரும்பும் எதனையும் அடைய இயலும். காரணம் இவன் மனதில் எந்த எண்ணத்தை விதைக்கின்றானோ அது முளைத்து அவன் விரும்பியவண்ணம் ஆக்காமல் இவனைப்படைத்த இறையாற்றல் விடாது. எனவே திட்டமிட்டதை அடையமுடியவில்லை என்று களைப்படைந்து முடங்கிவிடாதே என்பதாகும்.

வெண்பா (40)  
பொருள்: இப்பிரபஞ்சத்தில் காண்பதெல்லாம் உண்மையின் காட்சிகளே. அவ்வாறுக் காணும் பொழுதுக் காணவேண்டும் என்றத் தூண்டும் உணர்வு தூய்மை என்ற நிலையில் வழுவாதிருந்திடல் வேண்டும். தூய்மை என்பது வேற்றொன்று இல்லாத ஒன்று ஆகும். வேறொன்று ஒன்று இருந்தால்தான் மற்றதனில் கலந்து மாசு ஏற்படும்; தூய்மைப் போய்விடும். அத்தகைய ஒன்றானத் தூய்மையாகி காணும்போது காட்சிகளும் காணும் செயலும் கண்ணும் கரைந்தொன்றாகிவிடும். அந்நிலையில் ஒன்றே அனைத்தாகி இருக்கின்றதென்ற உண்மையை அறியலாம் என்பதாகும்.
Pro Blogger Tricks

Followers