.

Pages

Saturday, September 20, 2014

[ 2 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

தனக்காக வாழாமல் தன்தலைவன் ஆன 1
உனக்காக என்று உணர்ந்தால் - எனக்காக
எல்லாம் இருப்பதை என்கண்ணால் காணுகின்ற
நல்லார் நிலையினில் நான்.

நானென்ற எண்ணத்தை நாளும் அவனாகத் 2
தானென்ற நற்றளத்தில் சார்ந்திட - ஏனென்ற
கேள்விகளும் எப்பொழுதும் கேட்க எழாதாமே
ஆள்கின்ற உச்சம் அது.

அதுயிது வென்பதெல்லாம் ஆங்கில்லை என்பாய் 3
எதுவது வென்பதை ஏற்றால் - இதுஅது
என்றே தெளிந்திட ஏற்பாயே நல்லடிமை
நன்றே அதனிலே நாடு.

நாடிடும் நாட்டங்கள் நன்றே நடந்திடும் 4
தேடிடும் யாவுமே தென்படும் - கூடிடும்
வித்தைப் புரிந்தால் விளையும் நலன்களே
சொத்தில் சிறந்தயிதைத் தேடு.
தொடரும்...
நபிதாஸ்

6 comments:

  1. மென்மையான வெண்பாக்களால் வேய்ந்துள்ளீர்கள்.
    அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  2. Replies
    1. முயன்றால் முதலோனே முன்னிருப்பான் அல்லவா !

      நன்றி.

      Delete
  3. தனக்காக வாழாமல் தன்தலைவன் ///
    இந்த உயரிய குணம் ...இறைவனின் அற்புதம் ...
    நான் எழுதிய தொடரில் ..தனக்காக மட்டுமே எண்ணும்
    சுயநலம் என்ற குணத்தை சாடியுள்ளேன் ...
    நீங்கள் தொடங்கிய முதல் வரி ..அற்புதமான குணம் .
    அதில் சொட்டாகிலும் மனிதர்களில் காண பட்டால் .
    அவர் மனிதரில் மாணிக்கம்

    ReplyDelete
    Replies
    1. மனிதனுக்காகவே அனைத்தையும் படைத்தேன் என்று சர்வ வல்லமையாளன் இறைவன் கூறுகிறான். இறைவனுக்காகவே தன் வாழ்வை அமைத்து, இறைவன் வகுத்து தந்த வழிதனிலே தன் வாழ்வை நடாத்தும் மனிதர்களுக்கு அவர்கள் நாட்டங்களை அந்த வல்ல நாயன் நிறைவேற்றித்தருவான்.

      எவ்வாறெனில், தன் மன இச்சைப்படி வாழாமல் இறைவன் வகுத்து தந்த வழிதனிலே பூர்ண அர்பணிப்பில் வாழும் மனிதர்களுக்கு இவ்வுலகில் அனைத்தும் மனிதனுக்காகவே இறைவன் படைத்தான் என்ற இலக்கணத்திற்குட்பட்ட நிலையினில் இருப்பதை இம்மனிதன் காண இயலும். அவர்களே நல்லவர்கள் என்ற இலக்கணத்திற்குட்பட்ட மகான்கள்.

      பெருமானார் (ஸல்) அவர்களை பிடிக்க குதிரையில் பின்தொடர்ந்த சுறாக்க அவர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் "பிடி" என்றதும் மணல் குதிரையின் கால்களை அசையவிடாமல் பிடித்தது என்ற நிகழ்வினை நினைவுகூர இவ்வெண்பாவின் உண்மைகள் இன்னும் தெளிவாக அறியலாம்.

      தனக்காக வாழாமல் தன்தலைவன் ஆன
      உனக்காக என்று உணர்ந்தால் - எனக்காக
      எல்லாம் இருப்பதை என்கண்ணால் காணுகின்ற
      நல்லார் நிலையினில் நான்.

      இவ்வெண்பாவினுள் ஊடுருவிய தங்களுக்கு நன்றியினைத் தெரிவிக்கின்றேன்.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers