.

Pages

Sunday, September 28, 2014

[ 3 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

தேடித்தான் தந்தாரே தேவநேசர் "நல்லடிமை" 5
ஆடித்தான் பாரேன் அதுபோன்றே - ஈடில்லா
ஆனந்தம் உண்டாம் அதனிலே மாறாக
ஈனமாமே வாழ இழிவு.

இழிவல்ல நல்லடிமை இல்வாழ்வில் என்றும் 6
அழித்திட்டே உன்னாசை ஆங்கே - விழிக்கச்
செழிப்பான வாழ்வுகள் சேர்ந்திடுமே வல்லோன்
வழியாக நிற்பதே வாழ்வு.

வாழ்வுகள் எல்லாம் வழிப்படும் வாழ்ந்திடத் 7
தாழ்மையே பூரணத் தன்னகமாய் - வாழ்ந்த
வழிதனை நீபற்ற வள்ளல் பெருமான்
வழியன்றி வேறில்லை வாழு

வாழவேண்டும் நாமற்ற வண்ணம் தலைவனை 8
ஆழமாகக் கொண்டே அகத்திலே - தாழக்
கிடப்பினும் சிங்கத்தின் கீர்த்திபோல் மங்கா
இடத்திலே நின்னை இடு.
தொடரும்...
நபிதாஸ்

4 comments:

  1. தெளிவுறக் கற்ற வெண்பாக்கள்
    தெவிட்டாத அடிமையெனும் தலைப்பில்
    மலிவுற்ற உறவுகள் உந்தன் பாக்களால்
    மெளிர்ந்திட்டால் வெற்றியே
    மேலும்னீர் எழுதிடுவீர்

    ReplyDelete
  2. தங்களது உற்சாகமூட்டலுக்கும் மிக்க நன்றி. உடன் பின்னூட்டம் இட்டமைக்கும் நன்றி.

    ReplyDelete
  3. ஒவ்வொரு வெண்பாக்கும் உரைநடையாக கவிஞர் விளக்கம் அளித்தால் என்னைப்போன்று வெண்பா அந்தாதியை படிக்கும் பிறருக்கு புரிந்துகொள்ள இலகுவாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சேக்கனா நிஜாம் அவர்களே,. தங்களது கருத்து உண்மையே. அதன்படி உரைநடையில்...


      தேடித்தான் தந்தாரே தேவநேசர் "நல்லடிமை"
      ஆடித்தான் பாரேன் அதுபோன்றே - ஈடில்லா
      ஆனந்தம் உண்டாம் அதனிலே மாறாக
      ஈனமாமே வாழ இழிவு.

      இறைவனின் நேசத்தை முழுமையாகப் பெற்ற பெருமானார் (ஸல்) அவர்கள், இறைவனுக்காகப் பூரணமாக தன்னை அர்ப்பணித்தார்கள். இறைவனின் ஆணைப்படித் தன் வாழ்க்கையை அமைத்து வாழ்ந்தார்கள்., அந்த நல்லடிமை வாழ்வில்தான் நிகரில்லா ஆனந்தம் உண்டாகும். அவ்வாறில்லாமல் அவ்வழியிலிருந்து மாறுப்பட்ட வாழ்வானது அற்ப சுகம்தந்தாலும் அது ஈனமான இழிவான வாழ்வாகும். மனதில் அமைதி இருக்காது. மனதில் அமைதி என்பதுதான் பூரண ஆனந்தம். எனவே ஒருவன் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்தவனாக வாழவேண்டும். 'தான்' 'நான்' என்ற அடிமை எண்ணத்திற்கு விரோதமான அகந்தைகளை விட்டொழிக்க வேண்டும்.

      இழிவல்ல நல்லடிமை இல்வாழ்வில் என்றும்
      அழித்திட்டே உன்னாசை ஆங்கே - விழிக்கச்
      செழிப்பான வாழ்வுகள் சேர்ந்திடுமே வல்லோன்
      வழியாக நிற்பதே வாழ்வு.

      இறைவனுக்கு ஒருவன் பூரணமாக அடிபணிந்தவனாக வாழும் வாழ்வு உயர்வானது. தனக்கு என்ற தன் மனம் விரும்பும் இறைக் கோட்பாடுகளுக்கு மாற்றமாக வாழும் வாழ்க்கையை விட்டு இறைபொருத்தத்திற்கு உட்பட்டே வாழ வேண்டும். அவ்வாறு வாழ்வதே வாழ்வு. அதன் மூலம் இறை பொருத்தம் பெற்று வாழும் வாழ்வானது அமையும். அதுவே செழிப்பான வாழ்க்கை ஆகும்..

      வாழ்வுகள் எல்லாம் வழிப்படும் வாழ்ந்திடத்
      தாழ்மையே பூரணத் தன்னகமாய் - வாழ்ந்த
      வழிதனை நீபற்ற வள்ளல் பெருமான்
      வழியன்றி வேறில்லை வாழு

      இறைவனுக்காகவே ஒரு மனிதன் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் இவ்வுலகில் உள்ள அனைத்தும் இவன் எண்ணத்திற்கு மாற்றமாகாமல் வாழும். அது எத்தகைய வழிமுறை என்றால் பூரண இறைப் பணிவு. அவ்வாறான வாழ்வு வாழ்ந்தவர்கள் பெருமானார் (ஸல்) ஆவார்கள. எனவே அவர்கள் வாழ்க்கையைப் பூரணமாகப் பற்றிப் பிடித்துக்கொள் என்பதே.

      வாழவேண்டும் நாமற்ற வண்ணம் தலைவனை
      ஆழமாகக் கொண்டே அகத்திலே - தாழக்
      கிடப்பினும் சிங்கத்தின் கீர்த்திபோல் மங்கா
      இடத்திலே நின்னை இடு. .

      பணிவு, தாழ்மை, அடிமை என்பதெல்லாம் எவ்வாறெனில் 'தான்' 'நான்' என்ற எண்ணாம் முழுமையாக இல்லாமல் அதாவது காண வேண்டும் என்ற உணர்வு உண்டானவுடன் கண் பார்க்கும். கண் முழுமையாக நாம் என்ற எண்ணத்திற்கு பூரண அடிமையாக இருப்பதுப் போல் இறை எண்ணப் படியே மனிதன் வாழ வேண்டும். வணகுவதற்காகவே படைத்தேன் என்ற உண்மை அங்கு தெளிவாகும். அவ்வாறு வாழ்ந்தவர்களே மகான்கள். சிங்கமானது படுத்திருந்தால் அப்பக்கம் எந்த உயிரினமும் செல்லப் பயப்படும். அதுபோல் மகான்கள் இருக்கும் பக்கத்தில் மனிதர்கள் மிகவும் பயபக்த்தியுடன் இருப்பார்கள். அத்தகைய நிலை உன்னிலும் உருவாக நீ 'தான்', 'நான்' என்ற அகந்தைகளை விட்டொழிக்கும் அந்த உயர்ந்த இடத்தில் உன் மனதினை பக்குவப்படுத்து என்பதாகும்.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers