.

Pages

Thursday, December 19, 2013

[ 14 ] அறிவுத்தேன் [ வணங்கவே படைத்தேன் ]

வணங்கப் படைத்தேன்
வல்லவன் சொல்லில்
விளக்கம் கொள்ளுதல்
வகையிது வுமன்றோ !

மதம், மார்க்கம் அனைத்திலும் இறை வணக்கம் என்பது அவசியமாக இருக்கிறது. அதனால் அனைவரும் அவர்தம் அறிந்த வழியில் அல்லது வழிகாட்டப்பட்ட வழியில் இறைவனை வணங்குகின்றனர். இஸ்லாமியத்தில் வணங்கவே மனிதனைப் படைத்தேன் என்று இறை வாக்கியம் மறை மொழியாயாக உள்ளது.

வணக்கம் சம்பந்தமான விளக்கங்கள்தான் முன் எழுதப்பட்ட விளக்கங்களில் உள்ளது. அவைகளை அறியாவிட்டாலும் அவைகளை மனதில் கவனம் கொண்டு தொடர்ந்து புரிதல் நலம்.

'மனித இனத்தையும், ஜின் இனத்தையும் வணங்கவே படைத்தேன்', என்பது இஸ்லாமியத்தில் இறைவன் சொல். மற்றும் ஒன்றே அனைத்தாக உள்ளது என்பது இதில் மறை பொருளாக உள்ளது. இது சம்பந்தமாகவும் முன்பு எழுதப்பட்டுள்ளது.

மனித முழு உடல் உருவில் கை, கால், தலை போன்ற உறுப்புக்கள், தான் வேறு தன் உடம்பு வேறு என்றால் எவ்வாறு ? பொருத்தம் ஆகும். அனைத்தும் சேர்ந்தே உடல் உருவம் ஆகும்.

மனதில் நடக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் ஏற்பட்டு ஒரு மனிதன் நடப்பானேயானால், அங்கு இவன் எண்ணத்திற்கு ஏற்ப உடம்பின் கால் நடக்கின்றது.

எண்ணத்திற்குக் கால் என்ற உறுப்பு அடிபணிகிறது. அடிபணிதல் என்றால் தனக்கென்று ஓர் எண்ணம் இல்லாமல் செயல்படுதல் ( பூரணமாக அர்ப்பணித்து செயல் படுதல் ). தனக்கென்று ஓர் எண்ணம் இல்லாமல் செயல்படுதல் என்றால், மனித மனம் தான் நடக்கவேண்டும் என்ற ஓர் எண்ணமும், அம்மனிதனின் கால் தான் ஒய்வு எடுக்கவேண்டும் என்ற மாற்றமான ஓர் எண்ணமும் கொள்ளாமல் செயல்படுதல் ஆகும்.

அசதியினால் காலில் வலி உணர்ந்தால் முழு உடம்புமே ஓய்வெடுக்கும். அப்பொழுதுதான் கால் வலி போகும். படுத்துக்கொண்டு சிந்தித்துக் கொண்டே இருந்தாலும் கால் வலி இடையிடையே உணர்ந்துக் கொண்டே இருப்பான். மாறாக எவ்வெண்ணமும் இல்லாது உறங்கிவிட்டால், விழித்தவுடன் அசதியின் கால் வலி இருக்காது.

மனிதனின் கால் தனக்கென்று மாற்றமான தனித்த எண்ணம் (உதாரணமாக) கொள்ளுமானால் அங்கு செயல் இருக்காது. குழப்பம் ஏற்பபடும். மனத்தின் எண்ணம் வேறாகவும் கால் தனக்கென்று வேறு எண்ணம் கொண்டுச் செயல்பட்டால், மனிதனின் நடக்கும் செயல் எவ்வாறு ? இருக்கும். கால் தான் வேறு என்று கருதாமல் மனதின் எண்ணப்படி செயல் ஏற்ப்பட்டால் நடக்கும் செயல் நடைபெறும். அதனை இணக்கமான வணக்கம் என்று சொல்லலாம்.

உடம்பின் அனைத்து உறுப்புகளும் மனதின் எண்ணப்படிதான் செயல்படுகிறது அல்லது மனித அனைத்து உறுப்புகளும் அம்மனித எண்ணத்திற்கேற்ப இணங்கி வணக்கத்தில் தான் இருக்கின்றது. வணக்கம் இலையேல் எச்செயலும் இருக்காது.

ஒரே மனதை விளக்கத்திற்காக ஆழ் மனம், உள் மனம், வெளி மனம் என்று பிரிவாகச் சொல்வார்கள். ஆழ் மனம் உடலின் உள் உறுப்புக்களையும், வெளி மனம் உடலின் வெளி உறுப்புக்களையும், உள் மனம் நினைவு, திட்டமிடல், சிந்தனை இவைகளையும் செயல்படுத்தும் என்பதாகச் சொல்வார்கள்.

ஆழ் மனம் சர்வத்தோடு உள்ளது. வெளி மனம் அது "தான்" என்ற பிரிந்த உண்டாக்கிக் கொண்ட உண்டுமை உணர்வால் உள்ளது. உள் மனம் இரண்டிற்கும் இடைப்பட்டது.

இறை வணக்கத்தில் எந்த குறுக்கீடும் இல்லாமல் எண்ணமும் செயலும் இருக்கவேண்டும். அவ்வாறே மனித வாழ்வில் மன எண்ணத்திற்கு ஏற்ப கால் இணங்கி செயல்படுகிறது அதாவது வணக்கத்திலேயே இருக்கின்றது..

இஸ்லாமியத்தில் அனைத்தும் என்னை வணகிக்கொண்டே இருக்கின்றது என்று இறைவன் சொல்வதாக உள்ளது. அதாவது இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இறைவனை வணகிக்கொண்டே உள்ளது என்பதாகும்.

அனைத்து மத, மார்க்கங்களில் வணக்க முறை உள்ளது. அது ஏன் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்றால் அம்முறைப்படிதான் வாழ்வின் அனைத்து செயல்கள் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். அதைவிடுத்து குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வணக்கிவிட்டோம். இனி எப்படியும் தன் மன இஷ்டப்படி வாழலாம் என்று எம்மனிதனும் நினைப்பானேயானால் அவன் வணக்கத்தின் தாத்பரியத்தை புரியவில்லை என்றேக் கருதவேண்டும்.

வணக்க முறைப்படித்தான் வாழ்வின் அனைத்து செயல்களும் இருக்க வேண்டும் என்றால், இறைச் சொல்லுக்கு கட்டுப்பட்டு வணக்கத்தில் உடம்பும் மனமும் எவ்வாறு செயல்படுகிறதோ, அதுபோல் வாழ்வின் அனைத்து செயல்களிலும் இறைவன் வகுத்து தந்த முறைப்படி செயல்பட்டு வாழ வேண்டும். அவ்வாறு வாழ்தலே வாழ்வே வணக்கம் என்பதாகும். 'என்னை வணங்கவே மனிதனைப் படைத்தேன்' என்பதில் இப்பொருளும் உள்ளது என்பதை அறியவேண்டும்.

அனைத்தும் தனக்கென்று தனித்த உண்டுமை உள்ளது என்று எண்ணாது (அந்த எண்ணமே இல்லாது) ஒரே உள்ளமையில்தான் இருக்கின்றோம் என்ற எண்ணமும் இல்லாதும் செயல்படுகிறது அல்லது இயங்குகிறது. பிறந்த குழந்தை தனக்கென்று தனித்த உண்டுமை உள்ளதாக எண்ணுவதில்லை. அதுபோல் சர்வமும் ஒரே உள்ளமையில் இருக்கின்றோம் என்ற எண்ணமும் அற்று (பிறந்த குழந்தைப் போல்) இயங்குகிறது.

வளர்ந்த மனிதன் மட்டும் இவன் பகுத்தறிவில் தனக்குத் தனித்த உண்டுமை உள்ளதுபோல் செயல்படுகிறான். அதன் சுபாவத்தால்தான் "தான்" என்றே தனித்து, தனித்தே பிரிவுப் பிரிவாக பிரிந்தே இருக்கின்றான். அதனாற்தான் பல மத மார்க்கமாக பிரிந்து நிற்கின்றான்.

இவனுக்கு அந்தத் தனித்த உண்டுமை என்றதை அழிக்கும் செயலே இவன் செய்யும் இறைவணக்கம் ஆகும். ஏனென்றால் இறை வணக்கத்தில் இறை எண்ணத்தைத் தவிர்த்து மனிதன், தான் இறைவனை வணங்குகிறோம் என்ற எண்ணம் இருந்தால் கூட அங்கு இறைவணக்கம் இல்லை. காரணம் மனிதன் தான் என்ற எண்ணம் இருந்தால் வேறு என்ற ஒன்று உள்ளது என்று உண்டாகிவிடுகிறது. ஒன்றிலிருந்தே அனைத்தும் உண்டாகியுள்ளது என்பதனை முன்பே விளக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு, பல ஆற்றல்கள் எங்கேயுள்ளது ? ஒன்றின் செயலாக உணர்ந்தால் வணக்கமாகவே இருக்கின்றோம் என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது.

இருக்கும் ஒன்றான ஒன்று வேறு வேறு என்று தன்னில் பிரிவினைகளை, எவ்வாறு ? ஏற்கும். துண்டித்தலில் வலி இல்லாமல் இருக்காது. அதனாற்றான் பிரித்தலை அது மன்னிப்பதில்லை.

உண்மையில் யாரும் பிரிக்கமுடியாது. (மனதின் ஆழ் மனம் சர்வத்தோடுதான் என்பதைக்காட்டிலும் சர்வத்தினதாக இருக்கின்றது. அதனால்தான் உள் உறுப்புக்கள் மனிதனின் கவனம் இன்றி செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றது.) ஆனால் மனிதனில் அவன் தன் அறிவில் (வெளி மனதில்), உணர்வில் அவ்வாறு பிரிவு என்பது கானல்போல் உண்டாகி கனமாக பற்றிக்கொண்டது. அந்த மாயை அழியவேண்டும் என்பது இயற்கைத் தானே !

அம்மாயை அழிய வேண்டும். அதற்காக வணக்கவே படைத்தேன் என்பதின் மூலமும் இவன் அறிவேண்டும் என்பதை, இருக்கும் நித்தியா ஆற்றல் நினைவூட்டுதல், வழிகாட்டுதல் இயற்கைத் தானே.

நல்லவனாக வாழவேண்டும். தனக்கும் பிறர்க்கும் வாழிவின் அமைதி கெடாமல் வாழவேண்டும். அதாவது சக மனிதன் அவன், எம்மார்க்க/ மதத்தைச் சேர்ந்தவனாகவோ இருந்தாலும், அவனும் தானும் நிம்மதியாக வாழும் நிலையில் வாழ வேண்டும். ஏனென்றால் ஒன்றிலே உண்டாகி அனைத்தும் உள்ளது. அவ்வாறு வாழ்பவன் தான் அமைதியானவன், சாந்தியாளன். பிறக்கும் குழைந்தை அனைத்தும் சாந்தியாளனாகத்தான் பிறக்கின்றது என்ற வழிகாட்டுதலையும் மனதிற் கொள்க.

இறைச் சொல்லுக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் வாழ்வு வணக்கம் ஆகும். இறைவன் சொல் என்பது இறை எண்ணம் அதற்கேற்ப நம் செயல்பாடுகள் இருந்து வாழ்ந்தால் அச்செயல்கள் அனைத்தும் வணக்கமே.

கவனம் அப்பொழுதும் "தான்" என்ற தன் சுபாவத் தனித்த அகம்பாவ உணர்வு ஏற்பட்டால் நாசம்தான் ஏற்படும். ஏனென்றால் அதுதான் மன்னிக்க முடியாத ஒன்று. அப்பொழுது அவனைத் தவிர்த்த அனைத்தும் வேறு என்ற இவன் உணர்வில் இவனே எதிர் நிலைகளை இவனுக்குளே உண்டுபண்ணுகிறான்.

உலகின் அணைத்து மனிதர்கள் ஒன்றாக வாழும் இடத்தில் தனக்கு தனக்கு என்றும், தன் சம்பிரதாயங்கள் என்றும் அடுத்தவர்களை நெருங்க விடாமல் இவன் செயல் இருக்குமானால், சில காலத்தில் எதிர்ப்பு அலைகள், நிலைகள் ஏற்படத்தானே செய்யும். அவனை எதிர்க்கும் நிலை இவன் தனித்த பிரிவு உணர்வால் ஏற்பட்டது. எனவே வணங்கவேப் படைத்தேன் என்ற சொல்லில் தெளிவான விளக்கம் பெற்று வாழ்வே வணக்கமாக வாழ விளக்கமாக இதனையும் கொள்ளலாம்.

அரூப வணக்கம் (-அதில்)
இரண்டு இல்லை !
ஒன்றில் உண்டு
ஒன்றாய் உண்டு !

அரூப வணக்கம் என்றால் என்ன ?
(தொடரும்)
நபிதாஸ்

11 comments:

  1. வழக்கம் போல் மிகவும் கவனமாக வாசித்து வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது கவனத் தொடர்ச்சி இலக்கை அடைந்தால் பெறுவது மகா வெறித்தான்.

      நன்றி.

      Delete
  2. பதிவுக்கு நன்றி.

    இந்த தொடர் கட்டுரையை படிக்க வேண்டுமானால் எந்தொரு சப்தம் இல்லாத இடத்தில் வைத்து படிக்க வேண்டும்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. கவனம் முழுமை வேண்டும் என்பதை வழியுருத்துகிறீர்கள்.

      நன்றி.

      Delete
  3. மிக கவனமுடன் படிக்க வேண்டிய கட்டுரை என்பதில் யாருக்கும் ஐயப்பாடு இருக்க முடுயாது

    ReplyDelete
    Replies
    1. தகுதியானோர் தரும் கருத்துக்கள் போற்றப்பட வேண்டியவைகளே.

      நன்றி.

      Delete
  4. ///இறைச் சொல்லுக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் வாழ்வு வணக்கம் ஆகும். இறைவன் சொல் என்பது இறை எண்ணம் அதற்கேற்ப நம் செயல்பாடுகள் இருந்து வாழ்ந்தால் அச்செயல்கள் அனைத்தும் வணக்கமே///

    இறைச் சிந்தனையை நன்கு உணர்த்தும் வரிகள். அருமை.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் ரசித்த வரிகள் உண்மையிலே உயர்வானது, உயர்த்திவிடும் உணர்ந்து செயல்பட்டால்.

      நன்றி.

      Delete
  5. இணக்கம் முழுமை இறையின் வழியில்
    வணக்கம் புரிதலே மாண்பு.


    ஞானகுரு நபிதாஸ் அவர்களை இன்ஷா அல்லாஹ் நேரில் காணும் வாய்ப்பு நெருங்கி வருகின்றது.

    இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 01ம் திகதி தாயகம் வருகின்றேன்;துஆ செய்க.

    ReplyDelete
    Replies
    1. மாண்பு பெறுகின்ற மாட்சிமை சூட்சுமம்
      காண்போர் புனிதராம் காண்

      எல்லாம் அவன் நாட்டம்.

      நன்றி !

      Delete
    2. மாண்பு பெறுகின்ற மாட்சிமைச் சூட்சுமம்
      காண்போர்ப் புனிதராம் காண்

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers