.

Pages

Friday, December 20, 2013

இலண்டன் வானொலியில் ஒலிப்பரப்பான கவிதை [ 'சுழற்சி' ] !

நமது பங்களிப்பார்கள் 'கவியன்பன்' கலாம் மற்றும் அதிரை ஜாஃபர் ஆகியோர் கூட்டணியில் உருவான கவிதை இலண்டன் வானொலியில் ஒலிப்பரப்பாகி அனைவரின் வரவேற்பையும் பெற்றன. 
குருதியின் சுழற்சி ஆக்ஸிஜன் கூட்டம்
..............குதித்திடும் இதயமும் ஓட்டம்
கருவினில் சுழற்சிக் குழந்தையாய் ஆக்கம்
................கருதிடும் தாய்மையின் நோக்கம்
மருவிலா மதியின் சுழற்சியால் தேயும்
.........வளர்ச்சியும் பிறையெனக் காயும்
உருவிலே வளர்ச்சி; சுழற்சியின் மாற்றம்
......உணர்த்திடும் முதுமையின் தோற்றம்

காற்றினால் சுழற்சிக் காட்டிடும் காட்சிக்
..............கடும்புயற் கோலமாய்ச் சாட்சி
ஆற்றினில் சுழற்சி நீரினில் வேகம்
......ஆர்த்திடும் பொழுதினில் சோகம்
நேற்றுள நிலைமை இன்றுதான் உண்டா
...............நேரிடும் சுழற்சியைக் கண்டால்
மாற்றிடும் காலச் சுழற்சியால் வாழ்க்கை
................மானிடன் நடந்திடும் போக்கே!

கதிரவன் சுழற்சி மாற்றிடும் நேரம்
.......காலமும் பொழுதெனக் கூறும்
புதியதில் சுழற்சிச் செய்திடும் வேலை
.............புகுத்திடும் புதுமையை நாளை
மதியினிற் சிந்தைச் சுழற்சியால் மாண்பாய்
.............மனிதனின் இலக்கினைக் காண்பாய்
நிதியுறும் சுழற்சி உலகினில் காசு
..........நிகழ்த்திடும் வினையினை யோசி!

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு :
இந்தக் கவிதை கடந்த [ 19-12-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

16 comments:

  1. உங்கள் இருவரின் கூட்டணியில் உருவான இந்த படைப்பு உலகெங்கும் மீண்டும் மீண்டும் ஒலிக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்றோரின் ஊக்கம் எங்களின் ஆக்கம் மேன்மேலும் உலகமெலாம் பரவி “அதிரை” என்னும் ஊரின் பெயரை உச்சரிக்க வைக்கும், இன்ஷா அல்லாஹ்.

      எங்களின் வளர்ச்சியில் உளமார்ந்த அக்கறையுள்ள உங்கட்கு எங்களின் உளம்நிறைவான நன்றிகள்; ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா.

      Delete
  2. சுழற்சியை கவித்தீபத்தின் சிறப்பான வரிகளைக்கொண்டு சகோதரர் ஜாஃபரின் இனிய குரலோடு சுற்றியிருக்கும் விதம் அருமை.. உங்களிருவரின் கூட்டணியில் இன்னும் பல சிறப்பிகவிகள் படைத்திட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அன்பும் அரவணைப்பும் மிக்க அதிரை மெய்சா அவர்களின் அன்பான வாழ்த்தினுக்கு எங்கள் இருவரின் அன்பான நன்றிகள்; ஜஸாக்கல்லாஹ். உங்களின் வாழ்த்தும் ஆசியும் பலிக்கும், இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  4. யோசனை உண்டா முன்னேற வாழ்வில்
    ..........யூகிப்பதும் சிந்தனை ஓட்டம்
    வாசனைக் காற்றில் மிதந்துமே எங்கும்
    ...........வைத்திடும் மனதினில் இன்பம்
    தாசனைக் கவர்ந்த தலைவனின் வார்த்தை
    ..........தந்திடும் முயற்சிகள் வேட்க்கை
    வேசமும் அல்ல இருப்பவை சுழன்று
    ..........விளைவுகள் நிகழ்ந்திட வேண்டி.

    ReplyDelete
    Replies
    1. காலமும் நமக்குச் சாதகம் தந்து
      ...............காத்திருப் புகளெலாம் நீங்கி
      கோலமும் காணத் துடிப்புடன் வந்து
      .............கொண்டுதான் இருப்பதால் நீயும்
      பாலமும் அமைத்த யாப்பெனும் நீண்ட
      .............பாதையில் என்னுடன் சேர்ந்து
      ஞாலமும் போற்றப் பயணமும் செய்வோம்
      ............நற்கவி யாத்திடும் போதே!

      Delete
    2. போதுமென் றமனம் நிறைவு தந்து
      ...........பூட்டிடும் முயற்சிகள் வேண்டாம்
      ஏதுமென் றஎண்ணம் தோன்றி அப்பால்
      ..........இருத்தலும் எப்போதும் வேண்டாம்
      ஓதும(து) வார்த்தை என்றுமே தந்து
      ..........உரிமைகள் கொண்டிட வேண்டும்
      வாதுகள் என்றும் தொடர்ந்திட கர்த்தன்
      ..........வாழ்த்துடன் அமைந்திட வேண்(டு)மே.

      Delete
  5. ஒவ்வொரு படைப்பும் கூடுதலாக மெருகேற்ற பட்டுக்கொண்டே செல்கிறது வாழ்த்துகள் இரட்டையருக்கும் [ஆதரவு பெருகுவதால் இசை கலக்க தூண்டப்படும் உஷாராக இருந்து கொள்ளவும் நான் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்பதில்லை என்பதும் யாம் அறிவோம்]

    ReplyDelete
    Replies
    1. எழிலார் எழுத்தாளரானத் தொழிலதிபர் அவர்களின் வாழ்த்துக்கும், ஆலோசனைக்கும் கடப்பாடு உடையவர்களாகி விட்டோம், இக்கூட்டணியினர் என்பதை உறுதி செய்து கொண்டு, உங்களின் வாழ்த்தினுக்கும், ஆலோசனைக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றோம். நீங்கள் சிந்திப்பதும் உண்மையே! கேட்டவர்கள் வியந்தனர்; ””இப்படிப்பட்ட வண்ணப்பாடலில் வடிவுக்குள்; மரபின் கட்டுக்குள் இயற்றப்படும் பாடல்களை அற்புதமான ஓசை நயத்தைத் தன் அற்புதமான இனிய குரலுக்குள் இலகுவாகவே (இசையின் துணையின்றி) இந்தப் பாடகர்ப் பாடி விட்டாரே!” என்று வியந்தும் எனக்கு இரு திரைப்படங்களில் வாய்ப்பை இருவர் வலிய வந்து சிபாரிசும் செய்தனர் என்பதும் உங்களின் யூகம் உண்மையாக உறுதிப் படுத்தப்படுகின்றது எனப்தை ஈண்டுச் சொல்லிக் கொள்கின்றேன்; உங்களின் ஆழமான தொலைநோக்குப் பார்வையின் கூர்மையையும் எண்ணி வியக்கின்றேன்.

      Delete

  6. கதிரவன் சுழற்சி மாற்றிடும் நேரம்
    .......காலமும் பொழுதெனக் கூறும்
    புதியதில் சுழற்சிச் செய்திடும் வேலை
    .............புகுத்திடும் புதுமையை நாளை
    மதியினிற் சிந்தைச் சுழற்சியால் மாண்பாய்
    .............மனிதனின் இலக்கினைக் காண்பாய்
    நிதியுறும் சுழற்சி உலகினில் காசு
    ..........நிகழ்த்திடும் வினையினை யோசி!//
    நல்ல சிந்தை ...கவியாய் தந்தீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நீண்டுகொண்டே போகும் வண்ணம் இந்தச் சுழற்சி என்னும் தலைப்பு உள்ளது.

      கோளங்களின் சுழற்சியால்
      வாயுமண்டலத்தில் மாற்றம்- விழியின்
      நாளங்களின் சுழற்சியால்
      நினைவு மண்டலத்தில் தடுமாற்றம்

      இப்படிக் கூட என் எண்ணஙளில் ஓடின வரிகள்; ஆயினும், நேரம் கருதிச் சுருக்கி விட்டேன்.

      அதிரைத் தமிழூற்றின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

      Delete
  7. பதிவுக்கு நன்றி.

    நல்ல கருத்தோடு கூடிய கவிதையில் நயமான குரலும் தரமான வரி வடியமைப்பும் இரவுநேர வானத்து நட்சத்திரங்களைப் போலே அழகாக இருக்கின்றது.

    கதிரவன் ஒளியில் நட்சத்திரங்கள் ஒழிப்பு விளையாடுவதை பார்த்தால் நாமும் சேர்ந்து கொண்டு விளையாடலாம் போலல்லவா இருக்கின்றது.

    உங்கள் இருவருக்கும் என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. அன்பு மச்சானின் கற்பனைகளுடன் கூடிய வரிகளில் கவித்துவம் காண்கின்றேன். நீங்களும் முயற்சித்தால் கவிஞராகலாம் என்கின்றேன், இந்தக் கவியன்பன் கலாம்.

      பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள், மச்சான்!

      Delete
    2. இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கின்றேன்.

      Delete
  8. வாழ்த்திய/வாழ்த்தும் நெஞ்சங்களுக்கும்,,ஜஸாக்கல்லாஹ் ஹைரன்..

    சிறந்த ஆலோசனைகளை வழங்கிவரும் மு.செ.மு. சபீர் அஹமது காக்கா அவர்களுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைரன்..

    இசையுடன் பாட ஆர்வமூட்டப்பட்டு வந்தாலும் அதனை நிராகரித்தே வருகிறேன்.. கவியன்பன் கலாம் காக்காவும் அதனை ஆதரிக்கவில்லைல்.

    இன்ஷா அல்லாஹ் இசையற்ற பாடல்களே என் குரலில் ஒலிக்கும்.

    எங்களுக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் மீண்டும் நன்றி

    ReplyDelete
  9. தனித்தனியே நன்றி கூறவில்லையே என்று யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்..

    நான் இருக்கும் பிஸியில் பின்னூட்டம் இடுவதே பெரிய விடயம்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers