.

Pages

Thursday, January 2, 2014

[ 16 ] அறிவுத்தேன் [ அவனிவர் பேசுதல் ]

ஆண்டவன் உண்டு
அடியவன் உண்டு
அத்தஹி யத்ததில்
அவனிவர் பேசுவர்.

இஸ்லாமியத்தில் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அண்ணவர்கள் இறைவனை சந்தித்தார்கள். அந்நிகழ்வு அண்ணவர்கள் வாழ்வில் நடந்த ஒரு மிக முக்கியமான ஒன்று. அதனை வின்னேற்றம் என்ற மிஃராஜ் என்று அழைப்பார்கள்.

அந்நிகழ்வில் எங்கும் நிறைந்த உருவமில்லா இறைவனும் நபிகள் நாயகம் (ஸல்) அண்ணவர்களும் சந்தித்து உரையாடிக் கொண்டார்கள். இஸ்லாமியர்கள் வணக்கத்தில் அவ்வாறான தொரு சிறு நிகழ்வான இறைச் சந்திப்பு முறையை அண்ணவர்களே இருத்தி அமைத்துத் தொழுகை முறைகளை வகுத்துத் தந்துள்ளார்கள். அதனைத் தொழுகையில் அத்தஹியத் ஓதுதல் என்பார்கள். தொழுகையில் இருப்பு நிலையில் அது வரும். அந்த நிகழ்வு இல்லையேல் வணக்கம் இல்லை.

உருவமுள்ள மனிதன் உருவமில்லா இறைவனை வணங்குதல் எவ்வாறு என்பதை அறிதல் மிக முக்கியமான ஒன்று. அவ்வணக்கத்தில் முழு அர்ப்பணம் இருக்கவேண்டும். வணங்கும் ஒருவன் தன்னைப் பூரணமாக இறைவனுக்காக அர்ப்பணித்துவிட வேண்டும். தான் என்ற தன்னின் உணர்வு இல்லையாகின் அதுவே பரிபூரண அர்ப்பணம்.

தான் இல்லையாகின் எங்கும் நிறைந்த ஒன்றே எப்போதும்போல் இருக்கும். அந்நிலை வணங்கும் அவனில் இவனின் தான் என்ற தனித்த உணர்வில்லாது அங்கு ஏற்பட வேண்டும். இறையின், இரசூலின் (ஸல்) உரையாடல் இவன் வணக்கத்தில் இவன் மூலம் நிகழவேண்டும்.

வணக்கத்தில் அவ்வுரையாடல் இவனில் அவ்விரு நிலைகளாக மாறி மாறி நிகழும். இருநிலையானாலும் அகத்தில் உரையாடல் பதிவு இருக்கும். அது எவ்வழி நிலையிலும் வெளிப்படும்.

ஒரு குழந்தையை கடினமாகத் திட்டினால் அடிக்காமலே அழுதுவிடும். ஒருவர் நகச்சுவையாகப் பேசும்போது சிலர் சப்தமிட்டே வாய்விட்டுச் சிரித்து விடுவார்கள். இங்கு உணர்வுகள் சப்தமாக மற்றவருக்குச் சென்று அவரில் அவ்வுணர்வுகள் செயள்களாக ஆகுகின்றது.

ஒருவரை வா என்றால் அவர் வருவார். இவரின் உத்தரவை ஏற்று அவர் வருகிறார். ஒருவன் தன்னில் ஒரு இடத்திற்கு போகவேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் அவன் அங்கு செல்கிறான். இது எண்ணமும் செயலும். எண்ணத்திற்கேற்ப செயல்கள் நடக்கின்றது. அல்லது சொல்லிற்கேற்ப செயல் உணர்வு இருக்கும்.

வணக்கத்தில் இறைவன் மகா பெரியவன் என்று எண்ணத்தைச்  சொன்னவுடன் இவன் மனதில், வேறு என்ற எந்த மகாச் சிறியதும்கூட மனதில் எழாமல், மாகப் பெரிய நிலையை எண்ணமும் செயலாகவும் உண்மைப்படுத்த வேண்டும். தான் என்ற தனித்த அல்லது பிரிந்த எண்ணத்தை இவனில் இவனில்லாமலாகிவிட வேண்டும். அந்நிலையில் அந்தந்த அச்சுயத்தில் அச்சுயம் பேச வேண்டும். அப்பொழுதுதான் வணக்கம் ஏற்படும். அது இல்லையேல் வெறும் சடங்குத்தான் நடக்கும். சடங்குகள் வணக்கம் அல்ல.

ஒரு நடிகன் ஒரு பாத்தித்தை ஏற்று நடிக்கும் பொழுது அந்தப் பாத்திரமாகவே அவன் ஆகிவிடுகிறான். வெவ்வேறு பாத்திரங்களில் வெவ்வேறாகவும் அவனே ஏற்று தத்ரூபமாகவும் அப்பாத்திரம் போலவேயாகி நடிகின்றான். அது போன்று என்றாலும் சரியாகாது. இங்கு நடிப்பே இல்லை. இருமையிழந்த நிலையின் உரையாடலின் அந்தந்தச் சுத்தச் சுயமாகவே அந்தந்த நிலையில் ஏற்படவேண்டும். அதுதான் சரியான வணக்கம் என்ற தொழுகை.

இவ்வாறு தொழும் தொழுகையின் அத்தஹியத் ஓதும் இருப்பில், அல்லாஹ்வும், அவன் தூதரும்  அவர்கள் தாங்களுக்குள்ளே உரையாடல் (சம்பாஷனை) புரியும் படியான நிலையில் தொழுபவர் தொழவேண்டும். அவ்வாறுதான்  தொழுகை உள்ளது. இது இவ்வரூப வணக்கத்தில்தான் சாத்தியம்.

அத்தஹியத்தில் அவன் நிலையிலும் அண்ணலின்(ஸல்) நிலையிலும் இவன் இல்லாததுவாக அவ்வாறு உரையாடுதல் அவனிவர் பேசுதல் என்பதாகும்.

வணங்கும் ஒன்று
வணங்க ஒன்று (-இது)
வணக்கம் அல்ல !
வழிபா டன்றோ !

வணக்கம் வேறு வழிபாடு வேறு எவ்வாறு ?
(தொடரும்)
நபிதாஸ்

4 comments:

  1. அற்புதமான விரிவாக்கம் தொழுகையின் இருப்பு நிலை பற்றிய செய்தி நல்ல நினைவூட்டல் சிறப்பாய் அமைந்துள்ளது கட்டுரை

    ReplyDelete
    Replies
    1. கவனமுடன் கருத்துக்களை உள்வாங்கிய தன்மை மிகவும் சிறப்புக்குரியது.

      Delete
  2. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete
  3. சுடர்மிகும் சொல்லில் சுகமான வாழ்த்துக்கள்
    திடம்தரும் வாழ்த்தில் திகைத்தேன் - கடவுள்
    கடாட்சம் கிடைத்தே கடினங்க ளில்லா
    நடாத்தும் உலகில் நாம்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers