.

Pages

Sunday, November 16, 2014

[ 6 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(17)
தீர்வுகள் எல்லாம் திகழாத் திருப்தியாய்
சார்புகள் பார்வையில் சார்ந்ததால் - சீர்மையானச்
சிந்தையில் பூர்ணம் சிதறாமல் சர்வமும்
பந்தமாய் ஒன்றாகிப் பார்

(18)
பார்வைப் பதியினதுப் பார்வையாகப் பார்த்திடப்
பூர்ண அடிமையாய் பூத்தலே - தேர்ந்த
இருப்பில் சுயம்பா யிசைய விரும்பும்
அருமைத் திகழ்ந்திடவே ஆகு ..

(19)
ஆகுமென்றே ஆணையிட ஆகி விடுவது
வாகு(ப்)பெற்ற வல்லோர் வரம்பாகும் - போகுமுன்
பேற்றினைப் பெற்றோரேப் பேறுபெற்றார் மாறாக
மாற்றுவழி மாயைமிகு மாசு.

(20)
மாசு மடிய மதியில் தெளிவாகிப்
பேசும் அனைத்தும் புனிதமாம் - கூசும்
செயலால் மதிகுறைந்தோர் சீண்டும் அவரில்
இயலாத் தனமே இருக்கும்
(தொடரும்)
நபிதாஸ்

வெண்பா (17)
பொருள்: இப்படித்தான் வாழவேண்டும் என்ற தானும் மற்றவைகளும் நிம்மதியாய் வாழும் தீர்வுகள் அல்லது முடிவுகள்; அல்லது ஒன்றைப் பற்றியத் தீர்ப்புகள் சம்பந்தப்பட்ட யாவருக்கும் அல்லது எல்லோருக்கும் ஏற்றுக் கொள்ளும் திருப்தியான வகையில் அமையாமல் போனால், அங்கு தன்னுடையது அல்லதுத் தன்னைச் சேர்ந்தது என்றச் சார்ப்புப் பார்வைச் சார்ந்தால் அத்தீர்வில் அல்லது அத்தீர்ப்பில் திருப்பதி ஏற்படாது. நீதி தவறாத நேர்மை அறிவினில் குறைவில்லா நிறைவானப் பூர்ணம் சிறிதேனும் குறையாமல் இருக்கும் அந்நிலையானச் சர்வமும் ஒன்று என்ற தன்மையில் கவனம் இருக்கப்பார். அந்நிலையில் அல்லது அப்பார்வையில் எல்லோருக்கும் திருப்பதித் தரும் தீர்வுகள், தீர்ப்புகள் வெளிப்படும்.

வெண்பா (18 )
பொருள்: தனதுப் பார்வை அல்லது அறிவுகள் எங்கும் நிறைந்த இறைவன் விரும்பும் தகமையில் இருந்திடத் தன்னை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணித்த இறை அடிமையாக ஆகிவிடவேண்டும். அத்தகையச் சிறந்தப் பண்பட்டத் தனிருப்பில் இணையேற்படாச்சுயம்பாகக் கனிய நிற்கும் அவ்வுயர்வான அருமை நிலையினில் இருந்திடவே விரும்பிவிடு

வெண்பா (19)
பொருள்: தான் விரும்பும் அல்லது நினைக்கும் யாவும் இறைவன் நிறைவேற்றித் தரும் மாசற்ற நிலை எங்கும் நிறைந்தானை அறிந்து தெளிந்த வாகானவர்கள் என்ற இறை அருளான அவ்வல்லமைப் பெற்றவர்களாகும். இவ்வுலகை விட்டுப் போகும் முன் அத்தகையப் பேற்றினைப் பெற்றவரே வீடுபேறு என்ற நித்தியானந்தச் சுவர்க்க வாழ்வைப் பெற்றவர் ஆவார். அவ்வாறல்லாமல் மற்றவர்கள் செல்லும் பாதையே நரகில் இழுத்துச்செல்லும் மாயை மிகுந்த மாசு வழியாகும்.

வெண்பா (20)
பொருள்: இணை என்ற மாசு நீங்கிப், பூரணமாக அவ்விணை இல்லாதுத் தெளிவாகிப் பேசும் யாவும் புனிதமானவைகளே. அந்த அதன் புனிதமான உண்மைகளை விளங்காமல் அதனைத் தூற்றுவோர், புரிந்துக்கொள்ளும் இயலாத்தன்மை உடைய மதிகுறைந்தக் கீழ்மக்கள் ஆவார்.

4 comments:

  1. வெண்பாக்கள் பொருள் விளக்கம்
    தேம்பாகத் தூண் நின்று
    வம்பாகத் தோன்றுமுன்
    வகுத்துப் பார்த்தல் வளமன்றோ

    உம்பார்வை உயர்வாகி
    உத்தமர்கள் அறிந்திட்டு
    நல்வழியில் செல்வாய் நீ
    நாயனருள் பெற்றிடவே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்தினுக்கு அகம் நிறைந்த நன்றி.

      Delete
  2. வெண்பாவோடு அதன் பொருளையும் வழங்கி வருவது புதிய முயற்சி !

    தொடரட்டும்....

    ReplyDelete
  3. என் பார்வைக்கு அனுப்பிப் பிழைத் திருத்தங்கள் செய்து எழிலாய்ப் பதிவு செய்து வாரந்தோறும் வருகின்ற உங்களின் இந்த "வெண்பா அந்தாதி" என்பது மிகவும் கடினமான - கனரக வாகனத்தை இயக்குவது போன்றதாகும். இதில் நீங்கள் வெற்றியும் பெற்று விட்டீகள். இன்ஷா அல்லாஹ், துபைத் தமிழர் சங்கமத்தின் சார்பில் அழைக்கப்பெற்ற உலகளாவிய கவிதைப் போட்டியிலும் நீங்கள் மூன்றாம் சுற்று வரைக்கும் வந்து விட்டீர்கள். இன்னும் இரு சுற்றுகளிலும் பங்கு பெற்று இறுதிச் சுற்றில் வெல்ல வேண்டும் என்பதே என் அவா. வாழ்த்துகள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers