.

Pages

Saturday, December 6, 2014

[ 8 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(25)
உணர்வுகள் உள்ளத்தில் உன்னதம் ஆகக்
குணங்களில்செம்மையும் கூடும் - மணக்கும்
மதியிலும்நற்செயலில் மாண்பும்பிறப்பைத்
துதித்திடத் தெய்வம் துணை.

(26)
துணையில்லான் வாழ்க்கைத் துவண்டுவிடும் தூயத்
துணையில்லான் தன்மைச் சுவர்க்கம் - இணையின்
துவிதமில்லான்உள்ளம்தொழுதிடத் துன்பம்
தவிர்த்தேதான்இன்பம் தரும்.

(27)
தருவதில்ஊன்றித்தகுதியைக் கூட்ட
அருமைகள் காண்பார் அதிலே - பெருமைகள்
பேசியும்நீங்கிப் பிதற்றியே போகாமல்
ஆசிகள்பெற்றேநீ ஆள்.

(28)
ஆளுமை ஆற்றல் அருள்மிக்கோர் ஆற்றிட
சூளுரைக் காட்டுவோர் சொக்காரே -நாளும்
வழிப்பட நற்திறமை வல்லருள் மூளும்
விழிப்பின் நிலையில் விழை.
(தொடரும்)
நபிதாஸ்

வெண்பா (25) 
பொருள்: உணர்வுகள் ஒருவரின் உள்ளத்தில் மிக உயர்வானதாக இருக்க, அது அவரின் குணத்தினில் உயர் பண்பட்ட சிறப்பான நிலைகள் மிகுந்து மலரும். மேலும் அது அவரின் அறிவினிலும், செயலிலும் அந்த உயர்ந்த உன்னதத் தன்மைகள் தானே வெளிப்படும். அத்தகைய உயர் பிறப்பிற்கு உரியவரைப் புகழ இறைவனே வழிகாட்டித் துணையாக இருப்பான்.

வெண்பா (26) 
பொருள்: வாழ்வில் துணை இல்லையேல் அவ்வாழ்வு கசந்து துவண்டுவிடும். தூயத்துனையான எந்தத் துணையும் வேண்டாத இறைமையில் தன்னை பூரணமாக இழந்தான் ஆகிய பூரண இறையடிமையான இறைநேசரின் நிலை சுவர்க்கம் ஆகும். ஆகவே இணையுன்டாகும் துவிதம் இல்லாத மனதுடன்  ஓர்மையாய் ஒருமையில் தொழுதிடத் துன்பம் வாழ்வில் ஏற்படாமல் அதுத் தவிர்க்கப்பட்டே ஆனந்தமே தந்திடும்.

வெண்பா (27)
பொருள்: மேன்மக்கள் அல்லது ஞானிகள் தருகின்ற அல்லது பேசுகின்ற வார்த்தைகளில் முழுக்கவனம் செலுத்தி அதில் உள்ள உண்மைகளை உள்ளவாறு உணர்ந்து தனது அறிவை விருத்திச் செய்து சிறந்தவர்களாக தன் தகுதியை மேம்படுத்திக்கொள்வார். அவ்வாறல்லாமல் அப்பேச்சுக்களில் உதாசீனம் செய்து தனக்கு அது இது இப்படி அப்படித் தெரியும் என்றெல்லாம் பெருமைகள் பேசி அர்த்தமில்லாமலும் உலறாமலும் பணிவுடன் அவர்கள் சொன்னவிதம், கருத்து, அதன் நோக்கம் புரிந்து அதன்படி தான் நடந்து அதன்மூலம் அவர்கள் மனக்குளிர்ச்சியால் உளமார வாழ்த்தி, பல ஆசிகள் பெற்று இவ்வுலகில் உன்வாழ்க்கையை ஆள்.  

வெண்பா (28) 
பொருள்: நிர்வாகத் திறமையான ஆளுமை ஆற்றல் சூள்ளுரைகளால் மட்டும் வெற்றியைத் தராது. இறையருள் மிகுந்த நந்நெறியாளர்கள் ஆளுமையே நிலைத்த வெற்றியைத் தரும். ஒவ்வொருநாளும் நல்ல திறமைகள் நிறைந்திட வல்லவனின் அருள் பெற்ற நந்நெறியாளர்கள் வழியினில் வழிநடந்து இறையருள் மூளும் உயர்ந்த வழிகளிலேயே நிலைத்திருக்க விரும்பு

4 comments:

  1. பிறந்திடும் உமக்குள்
    வெண்பா அந்தாதிகள்
    பிறருக்கும் பயனாய்
    அமைவது நலமே

    மறுக்கும் மனதிற்கு
    நல்மருந்து
    மகுடம் சூற்றிட
    பகிர் உணர்வு
    மண்ணும் விண்ணும்
    வணங்கிடும்
    மகா பெரியோன்
    இறையோன் சிறப்பு

    ReplyDelete
    Replies
    1. சிறப்பு வாழ்த்துக்களைத் கூறியத் தங்களுக்கு நன்றி.

      Delete
  2. வெண்பாவும் அதன் விளக்கமும் அருமை !

    புதிய முயற்சி

    ReplyDelete
    Replies
    1. தங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers