.

Pages

Saturday, December 27, 2014

[ 9 ] அவன் அடிமை { வெண்பா அந்தாதி }

(29)
விழைந்திடும் உச்சம் விரைவில் அடைதல்
தழைத்திடும் வாழ்க்கைத் தகுந்தே - பிழையறத்
தன்னிலே தானறியும் தன்மை நிறைவினில்
உன்னிலே மோட்சம் உயர்வு.

(30)
உயர்வுகள் வேண்டின் உழைப்பினில் மட்டும்
அயர்ந்திடா ஆற்றுதல் அன்று - தயங்காதே
தன்னிலே திட்பத் தெளிவுகள் கண்டபின்
நன்மையே செய்வதில் நாடு.

(31)
நாடும் மனதிலே நாட்டம் நிலைதனில்
தேடும் வகையில் திளைத்திடும் - வீடு
அடைதலே மூச்சாய் அகத்தின் உணர்வு
உடையவன் தூண்டும் உவப்பு

(32)
உவப்பின் மிகைவில் உதயமாகி அன்பு
தவத்தில் தனதாகித் தங்கும் -துவக்கம்
அவனில் நிலைக்க அகந்தை அழிந்தே
பவனம் அடைந்திடும் பார்

நபிதாஸ்

வெண்பா (29)  
பொருள்: ஒன்றின் மீது கொண்ட விருப்பம் உச்சமாகக் கொள்ள அதற்கேற்ப அடைந்து வாழ்க்கை அதனில் செழிப்புறும். அதுபோல் தன்னைப்பற்றித் தன்னிலே கலக்கமில்லாதுத் தெளிவாகத் தானறியும் விருப்ப உச்ச நிறைவினில் உன்னிலே உன் மோட்சம். அதுவே உயர்வு.  

வெண்பா (30)  
பொருள்: தன்னிலை புனிதத்தில் உயர அயராது உழைத்திடுதல் மட்டும் செய்வதில் நின்றுவிடாதே. திடமாகத் தன்னைத் தெரிந்து நன்மைகள் புரிதலையே விரும்பு.

வெண்பா (31) 
பொருள்: மனம் விரும்பும் நிலையொன்றில் எவ்வாறுத் தேடியதோ அவ்வழிதனில் மூழ்கிவிடும். அதனால் அதுபோல் வீடுபேறு அடைதல் நிலைத்திட அல்லது தொடர்ந்திட வீடுபேறு வேண்டும் என்ற உணர்வை எங்கும் நிறைந்த இறைவனே விரும்பி அம்மனதின் மூலம் தூண்டியடைய உவக்கிறான்.

வெண்பா (32) 
பொருள்: அதிகமாக மனம் ஒன்றை விரும்ப அங்கு அதன்மீது அன்பு உண்டாகும். பின் அது ஒர்மையானத் தவத்தின் வழிதனில் விரும்பிய அதனை அடைந்துவிடும். அதனால் விருப்பம் இறைவனில் நிலைக்க "தான்", "நான்" என்ற அகந்தை அழிந்து சுவர்க்கம் என்ற வீடுபேரை அடைந்துவிடும், அறிக.

7 comments:

  1. வெண்பாவகுத்த உமதறிவு
    பண்பை வளர்க்கும் பொருள்கூற்று
    இன்பால் உரைத்திடும் கருக்கூற்று
    என்பாள் அளித்திடும் நற்கருத்து

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. மெய்சாவின் மெய்யிலே மெய்மறந்தேன் தன்னிலே
      உய்த்துணர எண்ணத்தில் உற்சாகம் - மெய்யில்தாம்
      ஆய்ந்துணர வாழ்வில் அதீதமான ஆனந்தம்
      ஐயாநின் ஏற்றம் அழகு.

      Delete
  2. குருவின் வழியைக் குணத்துடன் பற்றி
    அருமைக் கவியை அழகு மரபில்
    தருமுன் திறனின் தகுதி உணர்தேன்
    வருவாய் உயர்வாய் வளர்ந்து

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தைப் படிக்க மனதில் உவப்புகள்
      ஆழ்ந்தே அலகிட்ட ஆசிகள் - யாழ்மீட்ட
      இன்பமும் ஊறிடும் என்ப அகத்தில்நான்
      அன்பினில் ஆழ்ந்தேன் அறி.

      Delete
  3. அதிரையர் வரலாற்றில் வெண்பா இயற்றி அதன் பொருளும் அடிக்குறிப்பிட்டு வழங்குவது இதுதான் முதன் முறை என நினைக்கிறன்..

    ReplyDelete
    Replies
    1. உயர்வாய் நினைக்கும் தாங்கள் போன்றோர் பலரை முன்னேற்றுகிறார்கள்.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers