.

Pages

Saturday, December 20, 2014

சுத்தம் சுவனம் தரும்!

வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும்
ஆதாரம் உண்டு
உடல் நலத்திற்கு
ஆதாரம்?
சுகாதாரம்!

புறத்தையும் அகத்தையும்
புழுதியில் போட்டு விட்டார்கள்
இன்று!
இரண்டுக்கும் மத்தியில்
நோய்ப் படைஎடுப்பு
எதிர்த்து சுடும் மருந்தில்
பசைஇல்லை!

கண்ணில்லாப் பிச்சைக்காரர்
வாழ்வாக
சுகாதாரத் திட்டம்
நகர -கிராம
வீதிகளில் எல்லாம்
நாற்றமெடுத்தப்
பிணக்காடு!

நகர வீதிகளில்,
மரத்தின் அடிகளில்
புழுக்களைப் போல்
நாதியற்றுக் கிடக்கும்
மக்கள் -
சுத்தமில்லாமல்!

ஆயுதம் விற்றுக்
காசு பறிக்க
நயவஞ்சகக் கூட்டம்
மோதலை உருவாக்கி
நாடுகளெங்கும் ரத்தச்சாக்கடை
கோரம்! பெரும்
சோகம்!

துவேஷப் புழுதி கிளம்ப
துவண்டு மடியும்
அப்பாவி மக்கள்
வெறிப்பசிக்குத் தீனிகள்!
சிதறிக்கிடக்கும் மேனிகள்!
அசுத்தக்காடுகள்!
அண்டிப் பிழைக்கும்
கிரிமிகள்!
ஆனந்தம்பாடு கொசுக்கள்!
ஆடிக்களிக்கும் பிணிகள்!

ஒவ்வொரு இல்லமும்
கழிவறைப் பெற்றதில்லை!
நாடு பீற்றிக் கொள்கிறது
"Super power " என்று!
வார்டு பிரதிநிதிகள்
வாட்டும் பிரதமர்கள்!
கடமையைச் சாக்கடைக்குள்
மறைக்கிறார்கள்!

கழிப்பறை பெரிதாகத்தான்
உள்ளது - கழுவுதற்குத்
தண்ணீர் மட்டுமில்லை!

அபராதம் போட்டார்கள்
திறந்த வெளியில்.......!
முரட்டுத்தனமாக மக்கள்!
அரசு பராமரிப்பு
மறப்பு!
சொரிசிரங்கில் மக்கள்
சுகம் - குருதிச் சொட்ட!

கிளியைப் பிடித்துக்
கூண்டில் அடைக்கலாம்,
எலியை அடித்துத்
தெருவில் போடலாமா?

நம்ம வீட்டுக்குப்பை
அடுத்த வீட்டுக்கு அலங்காரமா?
கொசுக்குக் கட்டும் தொட்டில்
கடியால்
குலுங்கி ஆடுது கட்டில்!
முத்தெடுக்க "நீதி "
கடலுக்குள் போய்விட்டது!

சுனாமி வந்தால்
மரணம் ஒருநொடியில்
அசுத்த சுனாமி.....
அனு அனுவாய்!
ஆயுள் குறைகிறது
அசுத்தம் பிரார்த்திக்க!

உடையிலே சுத்தமில்லை,
உடலிலே சுத்தமில்லை,
இடத்திலே சுத்தமில்லை,
எதிலுமே சுத்தமில்லை
இனி
வாழ்க்கை மிச்சமில்லை!

மனதிற்கு அமைதியா?
ஓடிப்பிடி சுத்தம்!

சுத்தம் செத்தால்..
உடல் நலக்குறைவு,
உணவுக் கசப்பு,
உழைப்பு இழப்பு,
கவர்ச்சித் தவிப்பு!

முன்னேறு முன்னேறு
சுத்தமாகி முன்னேறு!

கூழானாலும் குளித்துக்குடி
கந்தையானாலும் கசிக்கிக்கட்டு!
வேகாத பண்டம்
வெறும் பகட்டு!

சுத்தம் சுவனம் தரும்!
'கவிஞர்' அதிரை தாஹா

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. // சுத்தம் சுவனம் தரும்!//

    சரியாகச் சொன்னீர்கள்

    ReplyDelete
  3. சுத்தம் பற்றி பன்முகத்தில் நல்லதொரு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் கவிதை அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. 'புறத்தையும் அகத்தையும்
    புழுதியில் போட்டு விட்டார்கள்'
    அறத்தை கூறிடும்
    அழகே அதிரை அருட்கவி
    துறப்போம் துடைப்போம்
    தூண்டுவோம் சிந்தனை அமைதியில்
    சிறப்புடன் வாழ
    சிந்தையில் நிறைப்போம் சுத்தம்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers