.

Pages

Sunday, November 30, 2014

முதியவனின் முணங்கல் !

எனது வாலிப காலத்தில் கடும் உழைப்பால் கை நிறைய சம்பாதித்தவன் உத்யோகத்தோடு குடும்பத்தையும் இரு கண்களாய் பாவித்தவன். நான் பெற்ற 4 குழந்தைகளையும் சமமாய் செல்லமாய் வளர்த்தவன் மனைவியின் பொருப்பில் பாதியை என் தோளில் ஏற்றிக்கொண்டவன் விடுமுறை நாட்களிள் குழந்தைகளோடு முழு நேரத்தையும் செலவிட்டவன்.    
அவர்கள் கேட்ட விளையாட்டு பொம்மைகள் அத்தனையும் மறுப்பு சொல்லாமல் வாங்கிக்கொடுத்து அவர்கள் மகிழ்வதை கண்டு கவலைகள் மறந்து அகம் மகிழ்ந்து தன்னிலை மறந்திருக்கிறேன்.

என் மனைவி படிப்பறிவு குறைந்த கிராமத்து பெண். நான் சற்று புத்திசாலி. என் அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி எனது ஆலோசனையே முடிவாய் இருக்கும்.                   .                                                                     .                  

நான் கோபக்காரன், ரோஷக்காரன். சில நேரங்களிள் என்னை மறந்து கோபப்படுகையில் என்னை  கட்டுப்படுத்துவதிலும், மட்டுப்படுத்துவதிலும் என் மனைவி சிறந்தவள். எனக்கு ஆதவு, ஊன்றுகோல் தேவைப்பட்ட சமயமாய் பார்த்து இவ்வுலகை விட்டு பிரிந்துவிட்டாள். அந்த ஆதரவு என் பிள்ளைகளிடத்தில் இருந்து எதிர்பார்த்தேன். எனக்கு கிடைக்கவில்லை பணமும், பாசமும் அளவிளாக் கொட்டியவனுக்கு அளவோடு கூட கிடைக்கவில்லை பிள்ளைகளிடம் இருந்து பாசம்.                                  .                                                                   .    
இன்று நான் என் பழைய வீட்டில். உள்ளமும் உடலும் ஊனமுற்று தனிமையாய் ( வேலைக்காரி துணையோடு ) வா(டு)ழுகின்றேன்.  நீரிழிவு நேயால் ஒரு கால் அகற்றப்பட்டு மனச்சோர்வுற்று நடையில்லாப் பிணம்மாய் கிடக்கிறேன்.                 .                                                                     .              

என்னை பார்த்து ஆறுதல் கூறிவிட்டும், அனுதாபப்பட்டு விட்டும் செல்கின்றனர். எனக்கு அவமானமாய் இருக்கிறது. கம்பீரமாய் வாழ்ந்து தீர்க்கமான முடிவு செய்பவன் என்று பெயர் எடுத்தவன் இன்று மற்றவர்களின் அனுதாபத்திற்கு உறியவனாகிவிட்டேன். பாசத்திற்கும், ஆதரவிற்கும் பரிதவிக்கிறேன்.

காலங்கள் கடந்தன.. மனசு இருகியது.. என் உடல் நலம் விசாரிக்க வருபவர்களிடம் வியாக்யானமும், தத்துவமும் பேச ஆரம்பித்துவிடுகிறேன்.                          .          
பால்ய நண்பர் என்னை சந்திக்க வந்தார் என்னைப்பற்றி விசாரித்தவர் திடீரென அழ ஆரம்பித்துவிட்டார் ! அவரை ஆசுவாப்படுத்தி நானே எல்லாவற்றையும் மறந்து ( மறைத்து ) இருக்கிறேன் நீ ஏன் கலங்குகிறாய் என்றேன் அவனோ உன் நிலை ஊருக்கு தெரிந்து விட்டது என் நிலை வெளியில் தெரியவில்லை அவ்வளவுதான் வித்யாசம் என்றான் ( ஊருக்குள் முக்கால்வாசி பேருக்கு இந்த நிலைதானோ !? )                                 .                          

உன் பிள்ளைகளிடம் நீ கொடுத்த பணத்தையும், பாசத்தையும் திரும்ப எதிர்பார்க்காதே எதிர்பார்த்து ஏமாறுவதைவிட எதிர்பாராமல் கிடைத்தால் சந்தோஷமே எதிர்பார்த்து கிடைக்காவிடில் ஏமாற்றமும், மன உலைச்சலும்தான் என்றேன். அதற்கு அவன் அது எப்படி அவர்கள் குழந்தையாய் இருக்கும் பொழுது எப்படி பாராட்டினோம், சீராட்டினோம் இன்று அவர்களுக்கு நாம் குழந்தை போல்தானே அவர்களும் நம்மை சீராட்ட வேண்டிதுதானே என்றான்.

உண்மைதான் ! நாம் வாலிப வயதில் நம் மனம் மகிழ நம் குழந்தைகள் நமக்கு கிடைத்த விளையாட்டு பொம்மைகள் போல. அழகாய் கொழுகொழுவென்று நம் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் ரிமோட் பொம்மைகள் போல... ஆகையால் கொஞ்சி மகிழ்ந்தோம். ஆனால் நாமோ வத்தலும் தொத்தலுமாகிய கால் ஒடிந்த உறுப்பு ஊன பொம்மைகள் எப்படி நம்மை சீராட்டுவார்கள் ? கனத்த இதையத்தோடு நண்பனை தேற்றினேன்.
மு.செ.மு.சபீர் அஹமது

Monday, November 24, 2014

[ 7 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]


(21)
இருப்பதையே யில்லாமை யென்றறித லிங்கே
யிருப்பவனி னெண்ணத்தி னேற்றம் - உருப்பெற்று
வொன்றாகக் காணு முயர்வி னருள்நிலையி
லின்பங்கள் வாழ்வி லியல்பு

(22)
இயல்புகள் என்றும் இறையடிமைப் பண்பில்
செயல்லினில்ஆகுமே சித்தாய் - புயல்கள்
அடித்தாலும் வாழ்வு அதிராமல் புற்போல்
பிடிப்புடனே நிற்கும் பிறப்பு.

(23)
பிறப்பில் புதினங்கள் பேசத் திகழும்
சிறப்பின் அமைவின் சிருஷ்டி- அறம்கூறும்
இன்பமறி யாதெதிர்க்க இன்னும் அருளிருந்தும்
அன்னியமே அவ்விடத்தில் அஞ்சு.  

(24)
அஞ்சவேண்டாம் ஏகன் அடிமையாய் ஆனதில்
பஞ்சமில்லை பத்தும் பணிந்திடும் - கிஞ்சித்தும்
அண்டாதே அச்சமும் ஆசையும், தேவைகள்
உண்டாகித் தீர்க்கும் உணர்.
(தொடரும்)
நபிதாஸ்

வெண்பா (21)
பொருள்: இருப்பதையே இல்லாமை என்றறிதல் இங்கே
இருப்பவனின் எண்ணத்தின் ஏற்றம் - உருப்பெற்று
ஒன்றாகக் காணும் உயர்வின் அருள்நிலையில்
இன்பங்கள் வாழ்வில் இயல்பு. இருக்கின்ற எல்லாவற்றையும் சிந்தித்து இறுதியில் இல்லை என்ற முடிவுக்கு வருவதும் இவ்வுலகில் எண்ணத்தின் ஏற்றமான நிலைதான். ஆனாலும் இல்லாமை என்ற ஒன்றினில் உருவங்கள் தோன்றி பல்வேறாக தோன்றினாலும் அந்த இருக்கும் இல்லாமை என்ற ஒன்றின் ஓர் உருவாகவே அனைத்தையும் காணுதல் உயர்வு. அந்நிலையே அருள்பெற்ற நிலையாகும். அந்நிலையில் வாழ்வில் இன்பங்கள் இயல்பாகிவிடும். 

வெண்பா (22)
பொருள்: மனித இயல்புகள் என்றுமே இறைவனை பணிந்த இறையடிமைப் பண்பின் குணத்திலே நிலைக்க மனிதச் செயல்கள் யாவும் நல்லறிவு நிறைந்ததாய் நிலைக்கும். வாழ்வில் பல இன்னல்கள் நிலைகுழைக்க நேர்ந்தாலும் புயலிலும் நிலைக்கும் புற்செடிப்போல் நன்கு பிடிப்புடன் தன் வாழ்வைத் தன் நன்னோக்கிலே தொடரும் அவ்விறையடிமைப் பிறப்பு.

வெண்பா (23)
பொருள்: சிறந்த உயர்ந்த பிறப்புகள் பிறக்கும்போதே சிலப் புதினங்கள் நிகழும். (யானை வரும் முன்னே மணியோசை வரும் என்பதுப் போல அல்லது வாசனைமுன் வந்து மல்லிகையை பின் காண்பதுப்போல). அவ்வாறு பிறந்த அவ்வுயர் பிறப்புக் கூறும் இன்பம் நிறைந்த அறம் தெளிவாகப் புரிந்துக் கொள்ளாமல் தான் அருள் பெற்றவன் அறிவாளி என்று கூறுவோர் முழுமைப் பெறாதவர்களே. என்னதான் அறிவாளியாக இருந்தாலும் இவர்கள் முளுமையடையாதவர்கள் ஆதலால் இவர்கள் அவ்வுயர்ந்த பிறப்புகளிடத்து அஞ்சி ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

வெண்பா (24)
பொருள்: பத்து என்று கூறும் மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தானம், தவம், உயர்வு, தொழில், முயற்சி, காமம் ஆகிய அத்தனையும் எந்த ஊரும் செய்துவிடாது எங்கும் நிறைந்த ஏகன் அவனின் அடிமையாக ஆகிவிட்டால். கொஞ்சம் கூட அவர்மனதில் எதன் மீதும் அச்சமும் பாழ்படுத்தும் ஆசையும் நெருங்காது. அவர்களின் தேவைகள் உண்டாகும் போதே அவைகள் உண்டாகிய அவ்வாறே அதுதானே பூர்த்தியும் ஆகிவிடும் என்பதை அறிவீராக.

Saturday, November 22, 2014

கால்களும் காலணிகளும்

காலணியும் கால்களும்
கணவன் மனைவி போல
கால்களைப் பார்த்துக்
காலணிகள் கதைப்பதைக் கேளுங்கள்:

இன்னார்க்கு
இன்னாரென்று
எழுதி வைத்தான்
இறைவன் அன்று
உன்னோடு இருப்பேன் என்று
உனக்குத் தெரியுமா அன்று?
உன்னோடு எனக்கென்று
“ஜோடி” சேர்த்தது யார் இன்று?

என்னை “ஜோடி” என்பர்
நீ தான் என்றன் “ஜோடி” யானாய்

கல்லும் முள்ளும் படாமல்
காத்து வருகின்றேன்
அல்லும் பகலும் உன்னை
அயராத உழைப்பில் மனைவியாய்!

என்னை விட்டுச் சிலநேரம்
இருக்கும் பொழுது மனபாரம்
உன்னைக் காண மீண்டும்
உன்வாசலில் இருப்பேன் பலநேரம்!

வீதிவரை உறவானாய்
வீடுவந்ததும் கழட்டி விடுகின்றாய்
நாதியற்றவன் அல்லன்;
நான் உன்றன் துணைவி!

இறையில்லம் சென்று
இறைவனைத் தரிசித்து
இன்முகமாய் வரும்வரை
நிறைமனமாய் நானும்
நிற்கின்றேன் வாயிலிலே!

இருட்டிலே நீ
என்னை விட்டு விட்டு
குருட்டுப் பார்வையில்
குழம்பி மாற்றிப் போட்டாலும்
குத்திக் காட்டுவேன்
புத்தியில் படும்வரைக்கும்!

விடுப்பில் வந்து போகும்
வெளிநாட்டுக் கணவ்ன
விடுப்பு முடிந்ததும் என்னை
விட்டு விட்டுச் சென்றாலும்
வீடு வரும்வரை உனக்காக
வீட்டுக்குள் ஒளிந்திருப்பேன்!

ஆயினும்,
கல்லறைக்குச் செல்லும்
காலம் வந்து விட்டால்
சொல்லொணாத் துயரத்தில்
சோகமுடன் நானிருப்பேன்
சொல்லி விட்டேன் இப்பொழுதே!
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Monday, November 17, 2014

மண்புழு:

உழுகின்ற ஏர்கலப்பு
எங்கே போனது?
மாடுகள் மாண்டனவா?
காடுகளைக் கண்டனவா?
வயல் வெளிகளில்
சாணத்தைப் பார்த்தோ
மில்லை!
எருவை எங்கே
போட்டீர்கள்?
எருது மில்லை!
எருவுமில்லை!
இராட்சத வாகனம்
பூமி அதிர்கிறது
பூகம்பம் போல!
அதிலே,
நாங்க ளெல்லாம்
மாண்டுப் போகின்றோம்!
போர்க்களத்தில் உடல்
புண்படல் போல,
நிலம் புண்படுகிறது!
மண்புழுக்களாகிய
நாங்கள் புறமுதுகுக்
காட்டுகிறோம்!
மக்கிப்போன எருக்களை
மண்ணில்
தூவினர், மண்டும்
புழுக்களை
உணவாக உண்டோம்!
இறைவன்,
மண்ணிலே படைத்தான்
மண்ணையே உழுதோம்,
மண்ணில் கிடைப்பதை
மாந்தியே உண்டோம்
மண்ணிலே மடிந்தோம்
விளைச்சலுக் குதவ
உரமாக ஆனோம்!
"உழவரின் நண்பனென"
உலகமே உரைக்கும்
மண்டும் காசை
மடியில் கட்ட - எங்களை
மண்ணுக்குள் மாய்த்தீர்கள்!
மண்ணுள் புதைத்தப்
பெண்பிள்ளை போல,
நாங்கள்...!
'கவிஞர்' அதிரை தாஹா

Sunday, November 16, 2014

[ 6 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(17)
தீர்வுகள் எல்லாம் திகழாத் திருப்தியாய்
சார்புகள் பார்வையில் சார்ந்ததால் - சீர்மையானச்
சிந்தையில் பூர்ணம் சிதறாமல் சர்வமும்
பந்தமாய் ஒன்றாகிப் பார்

(18)
பார்வைப் பதியினதுப் பார்வையாகப் பார்த்திடப்
பூர்ண அடிமையாய் பூத்தலே - தேர்ந்த
இருப்பில் சுயம்பா யிசைய விரும்பும்
அருமைத் திகழ்ந்திடவே ஆகு ..

(19)
ஆகுமென்றே ஆணையிட ஆகி விடுவது
வாகு(ப்)பெற்ற வல்லோர் வரம்பாகும் - போகுமுன்
பேற்றினைப் பெற்றோரேப் பேறுபெற்றார் மாறாக
மாற்றுவழி மாயைமிகு மாசு.

(20)
மாசு மடிய மதியில் தெளிவாகிப்
பேசும் அனைத்தும் புனிதமாம் - கூசும்
செயலால் மதிகுறைந்தோர் சீண்டும் அவரில்
இயலாத் தனமே இருக்கும்
(தொடரும்)
நபிதாஸ்

வெண்பா (17)
பொருள்: இப்படித்தான் வாழவேண்டும் என்ற தானும் மற்றவைகளும் நிம்மதியாய் வாழும் தீர்வுகள் அல்லது முடிவுகள்; அல்லது ஒன்றைப் பற்றியத் தீர்ப்புகள் சம்பந்தப்பட்ட யாவருக்கும் அல்லது எல்லோருக்கும் ஏற்றுக் கொள்ளும் திருப்தியான வகையில் அமையாமல் போனால், அங்கு தன்னுடையது அல்லதுத் தன்னைச் சேர்ந்தது என்றச் சார்ப்புப் பார்வைச் சார்ந்தால் அத்தீர்வில் அல்லது அத்தீர்ப்பில் திருப்பதி ஏற்படாது. நீதி தவறாத நேர்மை அறிவினில் குறைவில்லா நிறைவானப் பூர்ணம் சிறிதேனும் குறையாமல் இருக்கும் அந்நிலையானச் சர்வமும் ஒன்று என்ற தன்மையில் கவனம் இருக்கப்பார். அந்நிலையில் அல்லது அப்பார்வையில் எல்லோருக்கும் திருப்பதித் தரும் தீர்வுகள், தீர்ப்புகள் வெளிப்படும்.

வெண்பா (18 )
பொருள்: தனதுப் பார்வை அல்லது அறிவுகள் எங்கும் நிறைந்த இறைவன் விரும்பும் தகமையில் இருந்திடத் தன்னை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணித்த இறை அடிமையாக ஆகிவிடவேண்டும். அத்தகையச் சிறந்தப் பண்பட்டத் தனிருப்பில் இணையேற்படாச்சுயம்பாகக் கனிய நிற்கும் அவ்வுயர்வான அருமை நிலையினில் இருந்திடவே விரும்பிவிடு

வெண்பா (19)
பொருள்: தான் விரும்பும் அல்லது நினைக்கும் யாவும் இறைவன் நிறைவேற்றித் தரும் மாசற்ற நிலை எங்கும் நிறைந்தானை அறிந்து தெளிந்த வாகானவர்கள் என்ற இறை அருளான அவ்வல்லமைப் பெற்றவர்களாகும். இவ்வுலகை விட்டுப் போகும் முன் அத்தகையப் பேற்றினைப் பெற்றவரே வீடுபேறு என்ற நித்தியானந்தச் சுவர்க்க வாழ்வைப் பெற்றவர் ஆவார். அவ்வாறல்லாமல் மற்றவர்கள் செல்லும் பாதையே நரகில் இழுத்துச்செல்லும் மாயை மிகுந்த மாசு வழியாகும்.

வெண்பா (20)
பொருள்: இணை என்ற மாசு நீங்கிப், பூரணமாக அவ்விணை இல்லாதுத் தெளிவாகிப் பேசும் யாவும் புனிதமானவைகளே. அந்த அதன் புனிதமான உண்மைகளை விளங்காமல் அதனைத் தூற்றுவோர், புரிந்துக்கொள்ளும் இயலாத்தன்மை உடைய மதிகுறைந்தக் கீழ்மக்கள் ஆவார்.

Tuesday, November 11, 2014

மனிதா சிந்தி !

தற்கொலை ஈனச் செயல்,
மிருகங்கள் செய்கின்றனவா
தற்கொலை!
உடல்சிதைய அடித்தாலும்
ஆமை உயிர்துடித்தும் வாழும்!
வாழும் ஆசையால்!
முயலா (ய்) மாளாதே
ஆமையாய் வெல்!
ஒன்றுபட்டு பலநாள்
பறக்கும்
வெட்டுக்கிளி!
ஒன்றுபட்டதால் _அதற்கு
வரவில்லை தோல்வி!
ஒற்றுமைக் கெட்டது
தாழ்வு மனப்பான்மைத்
தளிர்விட்டது!
தட்டுக் கெட்டாய்
கட்டித் தொங்க
எடுத்தாய் தீர்வு!
நாய்களுக்குத் தெரியாது
வர்ணபேதம்
ஒருதாய் வயிற்றில்
குடிக்கும் பால் பார்!
வர்ணபேதத்தால்
வசைகள் பாடினாய்!
வந்தவன் வெட்டினான்
படுகொலை! படுகொலை
பாதகமில்லையா?
நாய்களும் நகைக்கும்
நயமிலாச் செயலுக்கா
மனிதனாய்ப் பிறந்தாய்?
தற்கொலை செய்துகொண்ட
வீடு _
இழக்கும் பீடு!
தாயும் தந்தையும்
சுற்றமும்
சூழும் சோகத்தில்
நாளும்!
நேற்றை வாழ்வு
மறைந்தது!
நாளைய வாழ்வு
கற்பனை!
இன்றைய வாழ்வே
நிஜம்!
வாழ்ந்து காட்ட
துணிந்து நில்!
முள்ளில்லாதக் கடிகாரம் போல
மூளையில் படுக்காதே
துள்ளி எழுந்திரு
காலம் கருதி!
மரணம் வேண்டுமா?
காத்திரு
தவனைக் காலம்
வரும்வரை!
'கவிஞர்' அதிரை தாஹா

Friday, November 7, 2014

மது !?

மாது நினைவில்
மிதக்கும் சூது இந்தமது!

மதுக்கறை மீதில்
நடப்பவனே
துன்பக்கடலாய் ஆடுகிறது
அதில் நீ யொரு

மிதப்புக்கட்டை!
வாயால் சண்டை - பின்பு
கையால் சண்டை! - பின்பு
கத்தியால்.
இது
மதுவின் இலக்கணம்!

"ஓராண்டுதானே ஆகிறது
தாலி கழுத்திலேறி"
மனைவி சொன்னாள்
ஏறிய தாலியை
இறக்கடி
குடிக்க!
கணவனின் கருத்துரை!
பகா சூரனை
வெடியால் வெல்லாம்! - இந்த
மதுவரக்கனை...?

வெல்ல முடியாத
வெற்றி யாளனை
அரசு
தொட்டில் கட்டி
"என்வெல்லக்கட்டியே
என்று கொஞ்சித்
தாலாட்டுகிறது"!

வருமானம் கருதி
வரும் "மானம்" போகிறது!
எத்தனைக் குடும்பங்களில்
அரிசி வேகப் பாத்திரமில்லை,
அழும்பிள்ளைக்குப்
பாலில்லை
அடர்பசியால் உயிர்பிரிகிறது!

நாட்டையே சுடுகாடாக்கும்
வியாபாரிகளுக்குக்
கொண்டாட்டம்!
கோடி கோடி குடிகளுக்குத்
திண்டாட்டம்!

போதையிலே
புலியாட்டம்
குழந்தைகளிடம் பாலியல்
பலாத்காரம்!
குடிகெடுக்கும் கொடுமை!

டீகடைபோல ஆனதாம்
மதுக்கடை!
பால்மணம் மாறாப்
பையன்களும்
போடுகிறார்களாம்
மில்லி!
இதை எங்கே போய்
அழுவது
சொல்லி!...
'கவிஞர்' அதிரை தாஹா

Monday, November 3, 2014

கல்வி !

கவர்ச்சியான உறைகளிட்டப்
பட்டம் வேணுமா
இளைஞர்! பட்டம் வேணுமா?

காசு உள்ள சீமான் மட்டும்
வாங்குறாரம்மா - பட்டம்
வாங்குறாரம்மா!

ஏழையான மாணவனால்
வாங்க முடியுமா?
ஏங்கி ஏங்கி மூச்சுக்
கீழே வாங்குறாரம்மா!

கல்வி என்று சொன்னவுடன்
தேனாய் இனிக்குது!
தேடிப்போயி முடிவு கண்டால்
எட்டிக் காயது!

பணம் குவித்த கோடீஸ்வரர்
நாட்டை ஆளலாம்
பணக்காரப் பிள்ளைகளே
பதவி ஆளலாம்!

இந்த நாட்டில் ஏழைகளோ
கையை ஏந்தலாம்
அந்தோ வந்த கண்ணீரோடு
பையை இழக்கலாம்!

படித்த ஏழை மாணவனோ
வீரனாகணும்
பண்பில்லாத நாட்டில் காய்ந்த
விறகுவாகினான்!

பட்டம் பெற்றும் மம்மட்டியில்
பாடுபடுகிறான்
கட்டம் இந்த கட்டம் போக
வேண்டுமே ஐயா!
கட்டையாகிப் போன பிறகா?
கணக்கைச் சொல்லய்யா!

படித்திடாத மேதைகளும்
தாளாளர் ஆனார்
படிக்கவரும் மேதைகட்குப்
பாதை காட்டுறார்

நூல் படித்தும் முன்னேற்றமில்
வால் பிடிக்கிறார்
வால் பிடிக்க முடியாதவர்
கால் பிடிக்கிறார்!

கல்வி வேண்டுமா! ஐயா
கல்வி வேண்டுமா
கற்றபின்னே மயங்கி நிற்கும்
கல்வி வேண்டுமா?...
'கவிஞர்' அதிரை தாஹா

Saturday, November 1, 2014

[ 5 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(13)
அகத்தில் அனைத்தாக அன்பு மிளிரும்
முகத்தில் கருணை முகிழும் - இகத்திலே
துன்பம் நிகழத் துவளும் இவையெல்லாம்
இன்மை இயல்பின் எழில்

(14)
எழில்மிக்கத் தோற்றம் இலங்கும் நிதமும்
மழித்திடுமே தீயதான மாயை - மொழிந்திடுமே
முன்பின் நிகழ்வு முதிர்வான முக்தியில்
அன்பில் உயர்ந்த அறிவு

(15)
அறிதலே நாட்டமாய் ஆதியில் தன்னில்
அறிந்திடும் தோற்றங்கள் ஆனதே - அறிவுத்
தெளிதலில் தன்னையே திண்ணமாய் கண்டே
தெளிவதே உண்மைத் தேடல்

(16)
தேடியேஎங்கும் திரிந்தாலும் காணாதே
வாடியே வந்தே வருந்துவாய் - ஆடிப்பாடி
ஓடுவதில் இல்லையே ஒன்றும் அமைதியில்
தேடுவதில் உள்ளதே தீர்வு.
(தொடரும்)
நபிதாஸ்

வெண்பா (13)
பொருள்: இருக்குமனைத்தையும் தன் உள்ளத்தில் தானாகிக்கொள்ள, ஒவ்வொன்றின்மீதும் அந்த எழிலான அன்பு வெளிப்படும்; முகம் என்றுமே கருணையே வடிவாக பிரகாசித்தே ஈர்க்கும்; இவ்வுலகில் எங்கும் எதிலும் துன்பம் நிகழ்ந்தாலும் வேதனைப்படும். இவ்வாறான எச்செயலும் இன்மை என்ற இல்லாதிருக்கும் இப்பிரபஞ்சத்தின் உண்மையை உணர்ந்த தன் நிலையில் இயல்பானவைகள். இவ்வியல்பானச் செயலகள் எல்லாம் பிரபஞ்சத்தின் எழிலானவைகள். இது ஒன்றின் இரகசியம். (இல்லாதிருத்தல் என்பது புரிதலுக்கு வேண்டி உள்ளத்தைச் சொல்லலாம். உள்ளம் இருக்கின்றது. அது எப்படி என்பது புரியாத புதிரே !)

வெண்பா (14)
பொருள்: இறைவனை நேசித்து, நேசித்து அதன்மூலம் முக்த்தி அடைந்ததானதின் தோற்றம் என்றும் எழில் மிகுந்து, என்றும் அறிவை பிரகாசித்து எல்லோரையும் கவரும். என்றும் தீமையை உண்டாக்கும் மாயையைகளை அறிந்து அதனிலிருந்து உண்டாகும் துன்பத்திலிருந்து காத்திட வழிகாட்டி அதனை இல்லது நீக்கிவிடும். நடந்ததையும் இனி நடக்கப்போவதையும் சொல்லும். இது இறைவனை நேசித்ததால் கிடைக்கப்பட்ட உயர்ந்த அறிவு.

வெண்பா (15)
பொருள்: தன்னை அறியவேண்டும் என்ற நாட்டம் ஆதி நிலையில் உண்டாகியது. தன்னின் ஆற்றலை ஒவ்வொன்றிலும் கண்டே தெளிந்தே உண்டாகும் அனைத்தையும் அது அறிய நாடியது. அறிய வேண்டும் என்ற நாட்டத்தில் அனைத்தும் உருவானது, அறிகின்றது. இவ்வாறு அறிவதே உண்மைத்தேடல் ஆகும்.

வெண்பா (16)
பொருள்: எங்கும் நிறைந்த இறைவனை அறிந்திட வனவாசம் போன்ற எங்கும் தேடி அவனைக்காணாது வாடி வதங்கி வருத்தத்தில் சோகமாக இருப்பார். இவ்வாறு எங்கும் நிறைந்தவனை எங்கும் தேடி புரிய முடியாதவனை தனிமையில் அமைதியில் தேடினால் அங்கு உண்மைத் தெளிவில் தீர்வு கிடைத்திடும்.
Pro Blogger Tricks

Followers