.

Pages

Loading...

Popular Posts

Saturday, January 16, 2016

குழந்தைகளை கவர்ந்திழுக்கும் தஞ்சை பூங்கா !

சுற்றுலா பகுதி: தஞ்சை பூங்கா
அதிரை – இது சேது பெருவழிச் சாலையில் அமையப் பெற்றிருக்கும் கடற்கரையோர ஊர். இங்கிருந்து சுமார் அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தஞ்சாவூர். இவை வரலாற்று நகர், சுற்றுலா நகர், தொழில் நகர் போன்ற பல்வேறு சிறப்புகளை பெற்றிருந்தாலும் 'தமிழகத்தின் நெற்களஞ்சியம்' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

தஞ்சையின் பழைய பேருந்து நிலையத்தின் அருகே உள்ள 'சிவகங்கைப் பூங்கா' அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது. நகராட்சியாக இருந்து வந்த தஞ்சையை தமிழக அரசு கடந்த வருடம் மாநகராட்சியாக உயர்த்தியது. சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பூங்காவை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

பள்ளி விடுமுறையை கழிப்பதற்காக மாணவ மாணவிகள், சிறுவர்கள் என இங்கு தினமும் வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்களில் நாள் ஒன்றுக்கு 1000 முதல் 2000 பேர் வரை வருவதாக கூறுகின்றனர். அதுவும் வார இறுதி நாட்களில் ( சனி, ஞாயிறுகளில் ) இந்த எண்ணிக்கை கூடுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

பூங்காவை வலம்வந்த நாம் சிறுவர் சிறுமிகளை மகிழ்விக்க மான், வான்கோழி, பச்சைக்கிளி, வாத்து போன்ற பறவை இனங்களும், நரி, முயல், புறா, சீமை எலி, மான் போன்ற விலங்கினங்களை தனித்தனி கூண்டுகளில் அடைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதை காணமுடிந்தது.

சிறுவர் சிறுமிகளுக்காக பிரத்தியோகமாக அமைக்கபட்டிருக்கும் சிறுவர் பூங்காவில் சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் விளையாட்டு, குடை ஊஞ்சல் ஆகியவற்றில் பெரும்பாலான குழந்தைகள் விளையாடி மகிழ்கின்றனர்.

கோடை வெயிலின் உஸ்ணத்தைப் போக்குவதற்கென்று பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை ஊற்று குளத்தில் பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் குளித்து மகிழ்ந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக பெற்றோர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தது  நம்மை நெகிழ்ச்சியுறசெய்யும்.  மேலும் பெரியவர்கள் நீந்துவதற்காக தனியாக நீச்சல் குளமும் அங்கு காணப்படுகின்றன.

பூங்காவில் செயற்கை வடிவமைப்புடன் காணப்படும் எருமை சவாரி சுற்றுலா வந்தோர் அனைவரையும் நிச்சயம் கவர்ந்திழுக்கும். குறிப்பாக எருமையை அடக்க அதன் மீது உட்கார்ந்து பயணிகள் செய்யும் சேட்டைகளும், இறுதியில் எருமையை அடக்க முடியாமல் கீழே சாய்ந்து விழுவதும் காண்போரை சிரிப்பை வரவழைக்கிறது. அதன் அருகே உள்ள ராட்சஸ பலூன்களில் குழந்தைகள் துள்ளி குதித்து விளையாடுவது அங்கு நின்று வேடிக்கை பார்க்கும் பெற்றோரை ஆனந்தமடைய செய்கிறது.

பூங்காவை சுற்றிவர ரயில் சவாரியும் அங்கே அமைக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் வலம்வந்ததை காணமுடிந்தது. குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து இளைப்பாற படர்ந்த புல்வெளி, போதுமான குடிநீர் வசதி, அரச மரம், ஆழ மரம், அசோகா மரம், யானைக்கால் மரம் ( !? ) போன்ற பழமைவாய்ந்த மரங்களும், அழகிய செடி வகைகளும் பார்ப்பதற்கு அழகுறக் காட்சியளிக்கின்றன.

பூங்காவிற்கு வருகை தரும் பெரும்பாலான குடும்பங்கள் உடல்நல சீர்கேட்டை ஏற்படுத்தும் ஹோட்டல் சாப்பாட்டிலிருந்து விலகி இருக்க தங்களின் வீட்டிலிருந்து பிரத்தியோகமாக தயாரித்து எடுத்து வந்த கட்டிச்சோறு, புளிச்சோறு, தயிர்ச்சாதம், பிரியாணி ஆகியவற்றை பூங்காவில் உள்ள நிழற்கூடத்தில் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவதை அங்கே காண முடிந்தது.

பூங்காவில் நிறைகள் அதிகமாக காணப்பட்டாலும் குறைகளும் அங்கு இல்லாமலில்லை. குறிப்பாக கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகள் அனைவரையும் சுண்டி இழுத்து வந்த அந்தரத்தில் தொங்கியபடிச் செல்லும் 'தொங்கு பாலம்' மற்றும் பூங்காவில் உள்ள குளத்தை சுற்றிப் பார்ப்பதற்கென்றே மிதி படகு சவாரி, துடுப்பு படகு சவாரி ஆகியன செயல்படாமல் முடங்கி காணப்படுவது சுற்றுலா பயணிகளை ஏமாற்றமடைய செய்தது. அதே போல் ஆண்கள் - பெண்களுக்காக தனித்தனியே அமைக்கப்பட்டிற்கும் கழிவறை மிகவும் சுகாதாரமற்று காணப்பட்டன. உள்ளே சென்றுவிட்டு திரும்பிய பயணிகளில் பெரும்பாலானோர் வாந்தியுடன் வெளியே வந்ததை காணமுடிந்தது. நகராட்சி நிர்வாகத்தினர் - ஒப்பந்ததாரர்கள் இவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்டு உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பதே பயணிகளின் விருப்பமாக இருக்கிறது.

குச்சி ஐஸ் சாப்பிடும் குட்டீஸ் முதல் குடை எடுத்து செல்லும் தாத்தா வரை பாதுகாப்பாக சென்று வரலாம் என்கின்றனர் அடிக்கடி அங்கு சென்று வந்தவர்கள். குறைந்த செலவில் பட்ஜெட் சுற்றுலாவாக செல்ல நினைப்போர் இங்கு படையெடுத்து வருவதாகவும் கூறுகின்றனர்.

அபூ இஸ்ரா
[ இது ஒரு மீள் பதிவு ]

Pro Blogger Tricks

Followers