.

Pages

Wednesday, May 13, 2015

[ 5 ] பத்திரிக்கையாளன் ஒரு பார்வையாளன் !

நேபாளில் நடந்த நில நடுக்கம், மக்களின் அவலம் பற்றி செய்தி சேகரிக்க வந்த இந்திய பத்திரிகையாளர்கள் தான் செய்தி சேகரிக்க வந்த இடம் மனித இழப்புகள் நிகழ்ந்த இடம் என்ற எண்ணமே இல்லாத அளவுக்கு அங்குள்ள மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நாடகம் எடுப்பது போல வீடியோ கேமராவுடன் அலைந்து கொண்டிருப்பதை காண முடிந்தது. ஊடகத்தை பற்றி ஊடகத்திலே குறை !

பாகிஸ்தான் .மலேசியா, கத்தார் போன்ற இஸ்லாமிய நாடுகளின் பல உதவிகள்  நேபாளில் குவிந்தது. இதனை பார்க்கும்போது என் மனதில் தோன்றிய எண்ணம். மத வேறுபாடுகள்  காரணமாக மனிதன் மோதி கொண்டு
அதன்  காரணமாக மனித அழிவுகள் ஏற்பட்டால் ..அல்லது இரண்டு நாடுகள் சண்டையிட்டு மோதிக்கொண்டு அதன் காரணமாக ஏற்படும் மனித அழிவுகள் ஏற்படும்போது யாரும் ஒன்று கூடி உதவி செய்வதில்லை. ஆனால் இயற்கை சீரழிவு ஏற்பட்டால் மதம் பாராது, இனம் பாராது ஒன்று சேர்வதை பார்க்கும்போது, இயற்கை மனிதர்களை ஒற்றுமையாய் இருக்க சொல்கிறது .
என்றே தோன்றுகிறது.

சந்திப்பு !
மணிமேகலை பதிப்பகம்,கற்கண்டு வார இதழ் ஆசிரியர் லேனா தமிழ்வாணன் அவர்களின் மகன் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார். தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. எதோ நெருங்கிய உறவை சந்தித்தது போன்ற உணர்வு.

நான் நேசிக்கும் துறை சார்ந்த வல்லுனரின் பிள்ளை என்ற ஒரே காரணம் தான். எனது ஆர்வம் கண்டு பிரமித்து போனார். தனக்கும் எழுத்து ஆர்வம் உண்டு என கூறினார். ஆனந்த விகடனில் அவருடைய கதை அரசு என்ற புனை பெயரில் வெளி வந்ததாக கூறினார். ஆத்ம பூர்வமான சந்திப்பு.

கேள்வி:
நான் தமிழூற்று மாத இதழ் நடத்திய போது, கேள்வி பதில் பகுதியில் ஒரு வாசகர் கேள்வி கேட்டார்.
நான் வசதி குறைவான நிலையில் ஊள்ளேன். எனது மகன் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளான். படிக்க வைக்க ஆசை, சரியான வழி சொல்லுங்கள் என்றார். கல்லூரி வரை படிக்க வாய்பில்லை என குறிப்பிட்டிருந்தார். நான் கூறிய பதிலை பின்னூட்டத்தில் கூறுகிறேன் நீங்கள் உங்கள் பதிலை கூறுங்களேன் .

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...
பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Thursday, May 7, 2015

[ 20 ] அவன் அடிமை: வெண்பா அந்தாதி

(73)
நம்பிக்கை எண்ணம் நடந்திட ஏகனே
நம்மிலே நாடிடும் நாடகம் - நம்புவோர்
நம்புதலில் தம்மை நன்கே நிலைத்திட
நம்பிக்கை வெல்லுமே நம்பு

(74)
நம்பிக்கை மோசங்கள் நல்லவர்போல் வேசங்கள்
அம்பலமே ஓர்நாளில் ஆகிவிடும் - அம்புகள்
ஒவ்வொன்றாய் பாய்ந்திடுமே, ஓரமாகஒண்டியாக
ஒவ்வொருநாள் செல்லும் உணர்

(75)
உணர்த்திடும் ஒவ்வொன்றில் உள்நோக்கிச் செல்ல
இணக்கமாய் எல்லாம் இருக்க - உணர்பவர்
ஒன்றிலே தன்னை உணர விளங்குவாரே
ஒன்றிலே நிற்குமெல்லாம் ஒத்து

(76)
ஒத்துழைப்பு வேண்டுமெனில் ஒத்தமனம் ஆகிடனும்
ஒத்தமனம் அர்ப்பணிப்பில் உண்டாகும் - நித்தியனில்
ஒத்துப்போய் ஒன்றிலாகி ஒன்றிட சத்தமில்லா
ஒத்தனாய் நிற்பாய் உணர்ந்து

நபிதாஸ் (தொடரும்)

வெண்பா (73
பொருள்: நம்பிக்கைக்கொள்வோர் தன் நம்பிக்கையில் உறுதியாக நின்றிட நம்பிக்கை நடந்தே வெல்லும். ஏனென்றால் நம்பிக்கை எண்ணம் நம்மில் உண்டாக ஏகனே நாடிடும் நாடகம். எனவே நம்பிக்கையில் தளர்ந்திடாதே.

வெண்பா (74
பொருள்: நல்லவர்போல் வேசங்கள் போட்டுக்கொண்டு நம்பிக்கை மோசங்கள் செய்து வந்தால் ஏதாவது ஒருநாளில் அது அம்பலம் ஆகிவிடும். அப்பொழுது அம்மோசத்தால் பாதிப்புகுள்ளானவர்களின் துன்புறுத்தல் என்ற அம்புகள் ஒவ்வொன்றாய் அவர்மேல் பாய்ந்துக்கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் ஒருவர்கூட துணைக்கு வரமாட்டாட்கள். ஒவ்வொருநாளும் வேதனையில் தனிமையிலே நரக வாழ்வாகச் செல்லும் என்பதை உணர்ந்து அந்நிலை ஏற்படாமல் நல்லவனாக வாழ் என்பதேயாகும்.

வெண்பா (75
பொருள்: ஒவ்வொன்றிலும் அது எப்படி? ஏன் ? எதனால் ? போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டே அதனுள் உள்நோக்கிச் செல்ல, எல்லாமே ஒன்றுக்கொன்றுத் தொடர்புடைய ஒரு இணக்கத்தில் இருக்கின்றதென்பதை அது உணர்த்திடும். அவ்வாறு உணர்பவர் அவ்வொன்றிலே தன்னையுணர ஒன்றிலே அவ்வொன்று பலவாக ஒன்றுக்கொன்று தொடர்புடைய இனக்கத்தில் இருக்கின்றது என்பதை விளங்குவார்.

வெண்பா (76
பொருள்: எல்லோருடைய ஒத்துழைப்பும் வேண்டுமெனில் எல்லோரும் தங்கள் மனநிலையில் எதற்கு ஒத்துழைப்பு வேண்டுமோ அதில் ஒத்தமனமுடைய என்ற ஒத்த விருப்பமுடையவர்களா இருக்க வேண்டும். அத்தகைய ஒத்தமனம் விட்டுக்கொடுத்தல் என்ற அர்ப்பணிப்பில் உண்டாகும். அதுபோல் நித்தியன் என்ற நிலையான எங்கும் நிறைந்த ஏகனில், வேற்றற்ற ஒன்றே என்ற ஒத்தக்கருத்துடையத் தாம் ஒத்துப்போய் ஒன்றிலாகிட,  ஒன்றே பலவாக இருக்கின்றநிலையான ஒத்தனாக நிற்பதை உணர்ந்துக்கொள்வாய் என்பதாகும்.
Pro Blogger Tricks

Followers