.

Pages

Wednesday, January 28, 2015

[ 4 ] எழுதலாம் வாங்க ! பேட்டி எடுக்கும் முறை

நீண்ட இடைவெளி...

ஆம்...

நீண்ட நெடுந்தூர பயணம்....

உறவினர்களோடு சந்திப்பு... மீண்டும் அமெரிக்கா வந்த அயர்வு... இவைகளால் எனது பகிர்வில் நீண்ட இடைவெளி.

மீண்டும் தொடர்கிறேன்... தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி...

ஆ,,, சொல்ல மறந்து விட்டேன்.

புத்தாண்டு நல வாழ்த்துக்கள் ! பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!

நம் வாழ்வில் அமைதி நிலவட்டும்...

1980 கால கட்டத்தில் பேட்டி எடுப்பது என்பது  ஒரு சம்பிரதாய அடிப்படையாக அமைந்து இருந்தது. சிற்றூர் - பேரூர் மற்றும் நகராட்சி போன்ற
இடங்களில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் நிருபர்களிடம்
அளிக்கப்படும். அவர்கள் அதனை அப்படியே போஸ்ட் செய்வார்கள்
இரண்டு நாள் கழித்து செய்தியாக வரும். அரசியல் கட்சி கூட்டங்களுக்கு
வரும் மந்திரிகள் பற்றிய செய்தி, நிருபர்களுக்கு தெரிவிக்கப்படும்.

நிகழ்வன்று செய்தியாளர்கள் வரவழைக்கப்படுவார்கள். அவர்கள் துறைசார்ந்த கேள்விகள் கேட்ப்பார்கள். மந்திரி தரும் தகவல்களை அப்படியே செய்தியாக தருவார்கள்.

நான் பதினாறு வயது இளைஞனாக வயது முதிர்ந்த செய்தியாளர்களுடன்
அமர்ந்து செய்தி சேகரிக்கும் போது, தினத்தந்தி செய்தியாளர் எனக்கு தகவல் தந்து உதவியது இன்றும் ஞாபகம் உள்ளது. அன்றைய கால கட்டத்தில் நிருபர்களை கண்டு அரண்டு ஓடியது கிடையாது ..மாறாக அவ்வப்போது அன்பாய் கவனிக்கப்படும் நபராக இருந்தார்கள்.

1990 களில் பத்திரிக்கை துறை பரிணாம வளர்ச்சி அடைந்த தருணத்தில், தமிழகத்தை பொறுத்தவரை ஜூனியர் விகடன் பத்திரிகை வரவு பத்திரிக்கையாளரை தலை நிமிர்ந்து நடக்க வைத்தது. கொலையா ? தற்கொலையா ? என்று தலைப்பிட்டு கேள்வி கேட்க மட்டுமே முடிந்த பத்திரிகை களத்தில் இறங்கி உண்மையை வெளிக்கொணர உதவும் ஒரு சக்தியாக உருபெற்றது. இதன் பின்னர் இளம் பத்திரிக்கையாளர்கள் உருவாகினார்கள். நல்ல பல சாதனைகள் பத்திரிக்கை உலகம்
கண்டது.

பேட்டிஎடுக்கும் முறை:
*  எந்த ஒரு துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களிடம் பேட்டி
எடுக்க செல்பவர்கள், உடனே தான் கேட்க நினைக்கும் கேள்வியை கேட்டு
விட்டால் அவரிடம் எந்த ஒரு விவரத்தையும் பெற இயலாது. மிக அன்னியோனியமாய் உறவாடி நாம் கேட்க நினைக்கும் கேள்விக்கு அடி எடுத்து வைக்கவேண்டும்.

* யூகம் என்பது மிக அவசியமான ஒன்று, சூழ்நிலை, நாம் சந்திக்கும் நாபரின் முகபாவம் அடிப்படையில் அவர் நமக்கு தரும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

* கூட்டாக பேட்டி எடுக்கும்போது அவசியம் சூழ்நிலை கேற்ற முக்கியமான கேள்வியை கேட்க தவறக்கூடாது.
இன்னும் சொல்வேன்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Monday, January 26, 2015

Money... Money... Money...

Money... Money... Money...

காசேதான் கடவுலப்பா

பணம் பத்தும் செய்யும்

பணத்தை கண்டால் பிணமும் எழும்

பணம் பாதாலம் வரை பாயும்
   
இவ்வகை வழக்குச்சொற்க்கள் நம் அன்றாட வாழ்வில் பிறர் சொல்ல கேட்டிருப்போம் அல்லது நாம் பிறரிடம் கூறி இருப்போம்.

இவ்வகை மொழிகள் அனுப விஷயங்களாக இருக்களாம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது ஆனால் இந்த வழக்குச்சொல்லில் இருக்கும் பொருள் இஸ்லாத்திற்க்கு எதிரான சிர்கான சொல்லாகும். முதலில் கூறப்பட்டது நேரடியாய் பணத்தை அல்லாஹ்விற்கு இணையாக வைக்கும் வார்த்தையாகும். மற்ற கூற்றுக்கள் அல்லாஹ்வையன்றி அனுவும் அசையாது என்பதை மறந்து பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வார்த்தைகளாகும்.

பணம் வரும் போகும் மனுஷனை முதலில் மதிக்கவேண்டும்.

பணம் என்னடா பணம் குணம் தானடா நிரந்தரம்.

இதுபோன்ற தத்துவங்களை சொல்பவரை பார்த்து இவர் விரக்தியில் பேசுகிறார் என்று மற்றவர்கள் ஏளனம் பேசுவார்கள் காரணம். என்னதான் சொன்னாலும் பணம் இல்லாமல் எதுவும் ஆகாது என்பார்கள் ? பணம் இல்லாவிடில் சொந்த பந்தங்கள் மதிக்க மாட்டார்கள் பணக்காரனைத்தான் ஊர் மக்கள் மதிக்கிறார்கள். ஏன் மனைவி, மக்கள் கூட பணம் இல்லாவிடில் மதிப்பு தருவதில்லை !?

இப்படி மனிதனோடு பின்னிப்பிணைந்து கிடக்கிறது பணம். வாலிபத்தை தொலைத்து வெளி நாட்டிலும், பசியை மறந்து வேளையிலும், மார்கத்தை மறந்து அதிகமான பணத்தை சேர்க்கின்றனர். அந்த பணம் அவனின் வாழ்வில் அவனோடு எவ்வளவு தூரம் பயணிக்கின்றது என்று சற்று அலசி பார்ப்போம்.

முதல் சம்பவம்:
தாய், தந்தையரின் சொல் கேட்டு சமர்த்தாய் பள்ளிப்பாடங்களை படித்து முதல் மாணவனாய் தேர்வாகி நல்ல வேலையும் கிடைத்து கை நிறைந்த சம்பளம் White coller job ஜாலியாய் வாழ்கை போக சுற்றாத ஊரில்லை, உண்ணாத உணவில்லை இப்பொழுது வயது 40 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயது திடீரென்று ஹாட் அட்டாக் அடித்துப்பிடித்து மருத்துவமனை சென்று ஆபத்தான கட்டத்தை தாண்டியாச்சு ஆனா டெஸ்டு செஞ்ச வகையில் இனிப்பு நீரும் இரத்தக்கொதிப்பும் அதிகமா இருக்குதாம் என்று சொல்லி உலகத்துல உள்ள முக்கால் பாக உணவு பண்டத்தை கண்ணுல கூட பார்க்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு இதுல உப்பு நீரும் இருக்குதாம் கை நிறைய காசு இருந்து என்ன செய்ய ? இனிப்பு இல்லாத டீ , உப்பில்லாத சாப்பாடுதான், இனி வாழ் நாள் முழுவதும். அவரின் சம்பாத்யம் 50 வயதை தொடும் முன்னே அவருக்கு பயன் அளிக்காமல் இருக்கிறது. இனி விழுந்து விழுந்து சம்பாதித்து என்ன பயன் என்று வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

இரண்டாம் சம்பவம்;  
டாக்டரால் கைவிடப்பட்டு  வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நபருக்கு 70 வயது இருக்கும் தன் வாலிப வயதில் பணம் ஒன்றே குறிக்கோளாய் இருந்து நேர்மை தவறி நிறைய சொத்துக்கள் சேர்த்துவிட்டார். இவருக்கு நான்கு ஆண் மக்கள். படுத்த படுக்கையில் நால்வரையும் பக்கத்தில் அழைத்து மூத்த மகனை பார்த்து சொன்னார். தாம் சேர்த்த சொத்தில் ஒன்றை குறிப்பிட்டு அதை ஏழ்மை நிலையில் இருக்கும் தன் சகோதரிக்கு கொடுத்துவிடச் சொன்னார், இதைக்கேட்ட இரண்டாம் மகன் கோபம் கொண்டவராக "ஏன் திடீர்னு தங்கச்சி மேலே பாசம் வந்துடுச்சு நாங்க சின்ன வயசா இருக்கும்போதே அவங்க வீட்டுக்கு போகாதே நம்ம ஸ்டேடசுக்கு அவங்க சரி வராதுன்னும் அவங்க கெட்டவங்கன்னும் சொல்லியே எங்கள வளர்த்துட்டு இப்ப என்ன மரண பயம் வந்துடுச்சா ? அதல்லாம் சல்லி காசு கூட எங்க நால்வரை தவிர வேரு யாருக்கும் கொடுக்க மாட்டோம்" என்று கத்தினார்.

பெரியவரின் கண்களிள் இருந்து கண்ணீர் தாரை தாரையாய் வந்தது எதையும் கண்டும் கலங்காதவர் தன் கையாலாகாத நிலை கண்டு மிகவும் வருந்தினார் இவ்வளவு சம்பாதித்தும் நாம் இருக்கும்போதே நம் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லையே என்று கண்கலங்கினார்.

நபிகளாரின்(ஸல்)கூற்று:
1. முதுமை வரும் முன் இளமையையும்
2. வருமை வரும் முன் செல்வத்தையும்,
3. வேலை வரும் முன் ஓய்வையும்,
4. நோய் வரும் முன் ஆரோக்கியத்தையும்,
5. இறப்பு வரும் முன் வாழ்வையும்,

நேரான வழியில் மனிதன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சூளுரைத்துள்ளார்கள்.

ஒருவன் உண்டு முடித்த உணவும் உடுத்திக்கிழித்த உடையும் அவன் செய்த நல் அமல்களுமே அவனைச்சேரும்- நபி மொழி

காசு பணம் என்பது அவன் வாழ்கிண்ற வரையில்தான் இறப்பிற்க்குப்பின்னால் அதுவெல்லாம் கூட வராது என்பார்கள் ஆனால் மேலே சொன்ன இறன்டு சம்பவங்களும் அவன் வாழ்கிண்ற காளத்திலேயே சேர்த்த பணமும், சொத்தும் அவனுக்கு பலனளிக்கவில்லை

பாலாய்ப்போன பணத்திற்கு ஆளாய் பறக்கின்ற மானுடர்களே சம்பாதிக்கும் காலத்திலேயே தான தர்மங்களையும் நம் பொருளுக்குரிய கடமைகளையும் நாம் தாம் சரிவர செய்யவேண்டும் நாம் சிரமப்பட்டதெல்லாம் போதும் நம் பிள்ளைகள் எந்த சிரமம் படக்கூடாது என்று விதியை மீறி யோசிப்பதுதான் மனிதனின் கெட்ட குணமாய் இருக்கிறது. நம் தந்தை நம்மைபற்றி எவ்வளவு யோசித்திருப்பார். நம் வாழ்வு எப்படி போகிறது உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் வாழ் நாளைய உணவும் நிர்ணயிக்கப்பட்டே பிறக்கிறார்கள்.

வாழ்வதற்காக சம்பாதியுங்கள் ! சம்பாதிப்பதே வாழ்க்கையல்ல !!
மு.செ.மு.சபீர் அஹமது

Sunday, January 25, 2015

சோம்பலை விலக்கு: வெற்றியே இலக்கு !

இலக்கினைப் பார்த்து வாழ்வினை நகர்த்து இடைவரும் சோம்பலை யொழித்து
கலக்கமே யின்றி யிலக்கினைப் பற்றிக் களத்தினு ளிறங்கினால் வெற்றி
விலக்கிடு ஐயம் யாவுமே துணிந்து விதைத்திடு மனத்தினுட் பதிந்து
துலங்கிடும் புதிய வழிகளும் உன்னால் துவக்கிடுப் புள்ளியும் முன்னால்

நோக்கியே தேவை யுணர்ந்திட வேண்டும் நோக்கமும் முடிவுறும் நாளை
ஊக்கமாய்த் தெரிவு செய்திட வேண்டும் ஊடலும் விலகவும் வேண்டும் 
ஆக்கமும் குறையக் காரணம் என்ன ஆர்வமாய்த் துலக்கிட வேண்டும்
தாக்கிடும் விபத்தில் பரிவுடன் வந்து தாங்கிடும் நண்பரும் வேண்டும்

திட்டமிட் டபடி யிலக்கினை நோக்கித் திண்ணமா யுழைத்திட வேண்டும்
வட்டமாய்க் கவலை சுற்றியே மனத்தை வதைத்திடா திருந்திட வேண்டும்
நட்டமே வந்து தடுத்திட முனைந்தால் நம்பியே வென்றிட வேண்டும்
பட்டதும் தெளிவுக் கிட்டவும் வேண்டும் படைத்தவ னருளவும் வேண்டும்
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Monday, January 19, 2015

[ 10 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(33)
பார்வையில் பார்ப்பவன் பார்க்கிறான்; பாராயோ
பார்வைகள் பார்த்திடுவார் பார்வையாக ! - பார்த்திடுப்
பார்படைத்தப் பங்கமிலாப் பந்தப் பரமனின்
பார்வைதான், பக்குவமாய்ப் பாரு.

(34)
பாரினில் மிக்கப் பரிவுக்கருணையில்
கூரியப் புத்தியில் கூறிடுவார் - நேரிய
நல்வழிக் காட்டிடுவார் நாயன் அடிமையென்பார்
அல்லலும் நீக்கும் அவர்.

(35)
அவரிடம் ஆய்ந்தே அறிதலில் தன்னை
விவரம் விரித்திடும் விந்தை - இவரில்
இருவர் இயம்பும் இருமை நிலையும்
ஒருமை வணக்கத்தில் உண்டு.

(36)
உண்டுமைகள் உள்ளதின் ஒன்றின் வெளிப்பாடாய்
கண்டிடுவோர் தன்னிலே காட்சியாய் - கொண்டிடும்
கோலம்அ றிந்திடும் கோவவனைத் தன்னிலே
காலத்தே தேர்ந்திட்டே காட்டு.

நபிதாஸ்

வெண்பா (33)  
பொருள்: பார்வைக்கு உரியவன் ஆனப் பரம்பொருள், உன் கண்மூலம் பார்க்கின்றான். ஆனால் நீதான் பார்ப்பதாய்ப் பார்க்கின்றாய். அவனின்றி தனக்கு என்று ஒரு ஆற்றலும் இல்லா மனிதன் எங்கனம் பார்க்கமுடியும் ? பிரிவற்ற ஒன்றான அவன் ஆற்றலே பார்க்கின்றது. ஆனால் பிரித்துப் பழக்கப்பட்ட இவனோ தன் பார்வையென உரிமைக் கொள்கிறான். சர்வத்தையும் படைத்தப் பரம்பொருளின் ஆற்றலில் பார்வையும் அவன் ஆற்றல்தான் என்ற பக்குவம் பெற்றுப் பார் என்பதாகும்.

வெண்பா (34)  
பொருள்: இவ்வுலகில் அணைத்துயிரின் மேல் அன்பு மிகுந்தவர். அறியாமைகளை நீக்கப் பரிவுக் கருணையில் அவர்கள் இறை நெருக்கத்தில் பெற்றக் கூரிய அறிவினில் நற்போதனைகள் கூறிடுவார். குற்றம் காணவியலாச் சரியான நல்வழிகளைக் காட்டிடுவார். துன்பங்களைக் களையும் அவர்கள் இறைவனின் அடிமைதான் என்றேதான் கூறிடுவார்.

வெண்பா (35)  
பொருள்: இறை நெருக்கத்தைப்பெற்ற அப்பெரியோர்களைப் பற்றி மிகவும் ஆழ்ந்து சிந்திக்க விந்தையான விவரங்கள் வெளிப்படும். இவர்கள் இணையில்லாத தன் ஒருமை வணக்கத்தில் இவர்களும் பரம்பொருளும் உரையாடிக்கொள்ளும் விந்தையும் உண்டு என்பதாகும்.

வெண்பா (36)  
பொருள்: உண்மையில் தெளிந்தவர்கள் பலதாகத் தோன்றும் அனைத்தும் ஒன்றின் வெளிப்பாடு என்றதனை, தன்னையும் பிரியாப் பார்வையில் கண்டிடுவார்கள். பலதாகக் காணப்படும் அத்தூயவனின் ஒருமை நிலை தன்னிலே காலம் கடந்துச் செல்லாமல் அவ்வறிவில் தேர்ந்தவனாகி அறிந்துக்கொள் என்பதாகும்.

Tuesday, January 6, 2015

போனது !

தொ(ல்)லைக்காட்சி வந்து நம்மில்
ஒழுக்கம் போனது!
தொடர்ந்து ஓடும் திரைப்படத்தால்
வெட்கம் போனது!
பரிகசிக்கும் பாட்டு வந்து
பண்பு போனது!
மட்டையிலே கட்டையாட
படிப்பு போனது!
பணம்வந்து பாசத்தினைக்
கொண்டு போனது!
அனாச்சாரம் ஆட்டம்போட்டு
அன்பு போனது!
காதல்வந்து நம்மில்கலாச்
சாரம் போனது!
காதுபேசி வந்ததாலே
நட்பு போனது!
முகத்தை மூடாப்
பெண்கள் போக
மோசமானது!
வளைதளத்தால் வலையில்பட்டு
வாழ்க்கை போனது!
பலவழியில் சப்தம்பெருகி
மார்க்கம் போனது!
சிலகால வாழ்க்கையெல்லாம்
சீரழிந்தது!
'கவிஞர்' அதிரை தாஹா

Thursday, January 1, 2015

புத்தாண்டு வரவேற்பில்...

வருக வருக வரவேற்பு
.....வளத்தை நோக்கிச் சுறுசுறுப்பு
உருக உருக வேண்டுதலும்
.....உலகம் எங்கும் ஒர்மையிலே
திருகத் திருக மனதினிலும்
.....திருவைக் காண முயற்சிகளே
பெருகப் பெருக ஆனந்தம்
.....பெறுவோம் என்றும் நட்புடனே

பிறப்பைத் தினமும் போற்றிடுவார்
.....பிறந்தோர் புனிதர் பூமியிலே
அறத்தை அவரும் விதைத்திருப்பார்
.....அவரை உலகம் நினைத்திடுமே
இறப்பே இவர்கள் பிறப்பினிலே
.....இனியும் பிறக்க நினைத்திடுமோ
மறக்க நாமும் விட்டதில்லை
.....வருட வருடம் நினைத்திடுவோம்

வாழ்த்து எங்கும் கூறிடுவார்
.....வாரி அன்பைப் பொழிந்திடுவார்
ஆழ்ந்து நம்மில் சிந்திப்போம்
.....அவர்கள் வாழ்வை நினைத்திடுவோம்
வாழ்ந்தோர் புனிதர் புவியினிலே
.....மறவா திருக்க மதியினிலே
சூழ்ந்து அவரின் பிறப்பினையே
.....சுழல ஆண்டை அமைத்தாரே

இறைவன் தனதின் தூதுகளை
.....இகத்தில் இதுபோல் வைத்தானோ
மறைக்க யாரும் முடிந்திடுமோ
.....மதியைச் சுழற்றிப் பார்ப்பதிலே
நிறைகள் மனதில் நிறைந்திடவே
.....நீக்கம் நீக்கி சிந்திப்போம்
குறைகள் மறந்துக் கூடிடுவோம்
.....குன்றா அன்பைப் பொழிந்திடுவோம்

நபிதாஸ்
Pro Blogger Tricks

Followers