.

Pages

Monday, November 26, 2012

அதிரை நூலகம் – ஓர் பார்வை !!!


நாம் கற்கும் கல்விக்கு அடிப்படை புத்தகமே. இவற்றைக்கொண்டு நம் அறிவித்திறன்களை வளர்த்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் உலக விசயங்கள் பலவற்றை அறிந்துகொள்ளவும் உதவுகின்றன. நமது அறிவுத்திறன் வளர்வதற்கு முதுகெலும்பாகத் திகழும் நூலகம் நம்மிடேயே நட்புறவு, சகோதரத்துவம், தன்னம்பிக்கை ஆகியவற்றையும் ஏற்படுத்துகின்றன. 

வாசகர்களின் எண்ணிக்கை :
அதிரையில்  கடந்த 15-06-1955 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நூலத்தில் கவிதை, நாவல், நாடகம், பொது அறிவு, இயற்கையியல், கணிதவியல், இயற்பியல், பொறியியல், வேதியியல், தொழில்நுட்பவியல், உயிரியல், புவியியல், தாவரவியல், வேளாண்மை, விலங்கியல், மருத்துவயியல், பயன்படு கலைகள், கவின் கலைகள், இலக்கியம், மொழியியல், சமயம், தத்துவயியல், உளவியல், கல்வி, நிலவியல், வரலாறு, அரசியல், பொருளாதாரம், சமூகவியல், சட்டவியல் போன்ற தலைப்புகள் அடங்கிய 31517 புத்தகங்கள் இருந்தும் 8 புரவலர்களையும், 3227  உறுப்பினர்களையும் மட்டுமே பெற்றிருப்பது வேதனை தருவதாக இருகின்றது.
இவைகள் நமது மக்களிடயே வாசிக்கும் பழக்கம் குறைந்துள்ளதையே காட்டுகின்றன. அதற்கு வலு சேர்க்கும் விதமாக ஏறக்குறைய எழுபதாயிரம் மக்கள் தொகையைக் கொண்ட ஊரில் தினமும் சுமார் 90 - 100  வாசகர்கள் மாத்திரம் நூலகத்திற்கு வந்து செல்வது அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்றது. ஒரு வேலை நூலகம் அமைந்துள்ள இடம் ஊரின் மத்திய பகுதியில் இல்லாமல் ஊரின் கடைகோடியில் இருப்பது ஒரு காரணமாக இருக்குமோ என்னவோ !?`

நூலகத்தின் கட்டிடம் :
நமதூர் கரையூர் தெரு பஞ்சாயத்தார் சார்பாக வழங்கப்பட்ட 10 சென்ட் நிலத்தில் கடந்து [ 30-09-1980 ] அன்று கட்டிடப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளில் பணிகள் அனைத்தும் நிறைவுற்று கடந்த  [ 16-01-1993 ] அன்று முதல் இந்நூலகம் செயல்பட துவங்கியது.

கட்டிடம் இன்றைய நிலையில் பராமரிப்புகளின்றி சுவற்றில் காணப்படும் வெடிப்புகளாலும், உப்புக்கற்றால் கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டு கீழே இடிந்து விழும் நிலையில் இருக்கின்றது. நீண்ட காலமாக நூலக கட்டிடத்திற்கு பெயின்ட் அடிக்காமல் விட்டதனால் மங்கிப் போய் காட்சியளிக்கின்றன.

நூலகத்தின் வசதிகள் :
நூலாக வாசகர்களுக்கு அமர்ந்து படிப்பதற்கு நாற்காலிகள், மேஜைகள், போதிய வெளிச்சத்துடன் கூடிய மின் விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளற்று மிகவும் பின்தங்கிக் காணப்படுகின்றன.

அறிவிப்பு பலகை :
நூலகம் குறித்த வாசகர்களின் புகார்கள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு கோரும் ‘அறிவிப்புப் பலகை’யை அனைவரின் பார்வையில் படுமாறு நூலகத்தில் இடம்பெறுவது அவசியம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. நூலகக் கட்டிடத்தைப் பாதுகாக்கும் பொருட்டு உடனடியாக அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று அதன் தரத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தலாம்.

2. வாசிக்கும் திறனை அதிகரிக்கச் செய்து உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

3. வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நூலகம் அமைந்துள்ள இடம் ஊரின் கடைகோடியில் அமைந்து இருப்பது ஒரு காரணமாக இருந்தாலும் ஊரின் மத்தியில் கிளை நூலகம் ஒன்றை ஏற்படுத்த அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லலாம்.

4. நூலகத்தில் புத்தகத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லலாம்.

5. புரவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து அவர்களிடமிருந்து பெறப்படும் நிதியைக்கொண்டு நூலகத்திற்கு தேவையான மேஜைகள், நாற்காலிகள், மின் விளக்குகள், மின் விசிறிகள் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

6. நமதூரைச் சேர்ந்த நல்லுள்ளம் படைத்த கொடை வள்ளல்களிடமிருந்து நிதி உதவிப் பெற்று நூலகத்திற்கு தேவையான பெயின்ட் அடித்தல், குடிநீர் வசதி மற்றும் இன்னபிற அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புத்தகங்களை, வாசகர்களைக் கொண்டிருக்கும் நூலகங்களைத் தரம் உயர்த்துவதற்காக Go.ms.no.1408/EDN (k) Dated 25.07.1980 - ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆண்டுக்கு 20 ஆயிரம் புத்தகங்கள் இருப்பு, 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் பயன்பாடு இருந்தால் அவற்றை முதல் நிலை நூலகமாகவும், ஆண்டுக்கு 8 ஆயிரம் புத்தகங்கள் இருப்பு, 12 ஆயிரம் வாசகர்கள் பயன்பாடு இருந்தால் அவை 2-ம் நிலை நூலகங்களாகவும் அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணற்ற தகவல்கள் இன்று வலைதளங்களின் உதவியால் விரைந்து கிடைக்கின்றன. உலகின் எந்த நூலகத்தில் உள்ள நூல்களையும் "மவுஸி'ன் மூலம் "கிளிக்' செய்தால் இருக்கும் இடத்தில் இருந்தே படிக்க முடிகிறது. இன்டர்நெட் மூலமாக மின் புத்தக நிலையங்களில் புத்தகங்களை நமக்கு நாமே வாங்கும் சூழல் இருந்தாலும் கனிந்த சேவை, காயம் ஏற்படுத்தாத சொற்கள், நிறைந்த அரவணைப்பு போன்றவைகளால் வாசகர் தளத்தை பெரும்பான்மையாக நூலகம் நோக்கி அழைக்க முடியும் என்பதை மனதில் இருத்தி பல்வேறு ஊடகங்கள் பெருகி விட்ட இக்காலக்கட்டங்களில் மாணவ, மாணவிகளின் வாசிக்கும் ‎பழக்கத்தை அதிகரிக்கச்செய்து, நூலகங்களின் பயன்கள் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு ‎ஏற்படுத்துவது அவசியமானதொன்றாகிறது.

இதற்காக நாம் நூலகம் தரும் பயன் அறிந்து அங்கு நூல் பல கற்று அறிவை வளர்த்துக் கொள்வோம் - வாசிப்பை நேசிப்போம். நமது நூலகத்தை நாமே தரத்திலும் சேவையிலும் உயரச்செய்வோம்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! பார்வைகள் தொடரும்...

Sunday, November 25, 2012

[ 15 ] ஏன் அழுதாய்…? அழும் குரல் முற்றும்

தங்கமே..!
நீ  இருக்கும் வீடு
செல்வமான வீடு 
நீ அதிகம் இருப்பு இருக்கும் நாடு 
செல்வமான நாடு 
அழகுக்கு அழகு சேர்க்கும் உன் அணிகலன் 
உன் வருகை..!
செல்வத்தின் வருகை 
நல்ல மனதை 
"தங்கமான மனது" என்பர்
அந்த அளவிற்கு உன் சிறப்பு 
இன்னும் பல சிறப்பு இருந்தும் 
என் அழுதாய் இன்று...?
இதோ தங்கத்தின் பதில்...
அங்கம் மின்னும் தங்கமான நான்
அங்கத்திற்கு பங்கம் சேர்க்கும் 
நிலையாக மாறிப்போனேன் நான் 
விலை உயர்வு காரணமாய் 
காது கம்மல் அபகரிக்க 
காதையே அறுத்து செல்லும் அவலம் 
கையை அலங்கரித்த வலைவி 
கையை வெட்டி செல்லும் அவலம் 
அன்பின் வெளிப்பாடாய் இருந்த நான் 
அபாயத்தின் அறி குறியாய் 
ஆகிப் போனேனே...
அதை நினைத்து தான் அழுகிறேன்..! 

அதிரை சித்திக்
'அழும் குரல்' முற்றும்...
[ பதினான்காவது அழும் குரலை கேட்க ]

Friday, November 23, 2012

சூனா வீட்டு பள்ளிக்கூடம் – ஓர் பார்வை !!!

பள்ளிக்கூடம் என்றாலே சற்றென்று நினைவு கொள்வது நாம் கல்வி பயின்ற தொடக்கப்பள்ளிகளே ! காரணம் நெஞ்சம் நெகிழும் அந்த மலரும் நினைவுகள் பசுமரத்து ஆணி போல் பளிச்சென்று நம் மனதில் ஒவ்வொன்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும்.

அந்தவகையில் நமதூர் மேலத்தெருவில் கடந்த 1921 ஆண்டுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இன்று நடுநிலைப் பள்ளி என்ற அந்தஸ்தைப் பெற்று அப்பகுதியை சுற்றி வசிக்கக்கூடிய ஏழை எளியோர் வீட்டு மாணவ மாணவிகள் கல்வியை கற்பதற்குரிய சிறப்பை வழங்கி வருகின்றது. பரப்பளவில் மிகப்பெரும் இடத்தைக் கொண்டுள்ள பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும்.

என்னுடைய ஆரம்பக் கல்வியை இப்பள்ளியில் பயின்றதால் இப்பள்ளி மீது எனது கவனம் சற்றுக் கூடுதலாகவே இருக்கும். இப்பள்ளியின் சாலை வழியே பலமுறை நான் கடந்து சென்றிருந்தாலும் தேர்தல் நேரத்தில் ஓட்டு போடுவதற்காக மட்டும் சென்று வந்ததை தவிர்த்தால் மற்ற நேரங்களில் அங்கே செல்வதற்குரிய வாய்ப்பு எனக்கு அமையாமலேயே போய்விட்டது.

இன்று காலை எனது நண்பன் ஜமாலுதீன் மூலம் எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இருவரும் ஒன்றாகச் சென்றோம். பள்ளியை சென்றடைந்தவுடன் பள்ளியை முழுவதுமாக பார்வையிட்டுக் கொண்டே எங்களின் நினைவுகள் ஒவ்வொன்றையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துவாறு பார்வையிட்ட எங்களுக்கு அங்கே கண்ட காட்சிகள் அதிர்ச்சியடைய வைத்தன...

மாணாக்கர்களின் எண்ணிக்கை விகிதம் :
மிகுந்த ஜனத்தொகை இருக்கும் குடியிருப்பு பகுதியின் அருகே பள்ளி இருந்தும் மாணாக்கர்கள் எண்ணிக்கை என்னவோ !? இரண்டு இலக்க எண்ணைத் தாண்டாமல் இருந்தது எங்களுக்கு வேதனையைத் தந்தன. அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி பாட திட்டமே நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன என்பதை மறந்து விட்டு கட்டணத்தை செலுத்தி கல்வியை கற்க எங்கேயோ அனுப்பி வைத்துவிடும் பெற்றோர்கள் நம் முன்னோர்கள் பலர் இதுபோன்ற பள்ளிக்கூடங்களில் கல்வி பயின்று பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை மறந்து விட்டதேக் காரணமாக இருக்கும்.

தற்போது புதிய உணவு வகைகளை சத்துணவு திட்டத்தில் அறிமுகம் செய்துள்ள தமிழக அரசு, புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், சீருடைகள், காலணிகள், வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி [ Geometry Box ], பேருந்து பயண அட்டை, கல்வி உதவித் தொகை, மிதிவண்டி, லேப்டாப் உட்பட தேர்வில் வெற்றிபெறும் மாணக்கர்களுக்கு பரிசுத்தொகை என இதுபோன்ற எண்ணற்ற சலுகைகளை வழங்கி அனைவருக்கும் கல்வி என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் அரசு செயல்படுத்தி வரும் வாய்ப்பை பெற்றோர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளாமல் தங்களின் பிள்ளைகளை எங்கேயோ இருக்கும் பள்ளிக்கு கல்வி கற்க அனுப்புவதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விகிதம் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றன.

வகுப்பு அறை !?
வகுப்பறையின் அருகே செல்வதற்கே எங்களுக்கு அச்சமாக இருந்தது. காரணம் நாங்கள் கல்வி பயின்ற காலக்கட்டத்திற்கு முன்பே கட்டப்பட்டிருந்த இக்கூடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்து இருப்பதைக் கண்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது. மீதமுள்ள பகுதியும் இடிந்து விழுந்து ஆசிரியர், மாணாக்கர் போன்றோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முன்பு இதில் கவனம் செலுத்துவது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை.அடுத்த அடுத்தக் கட்டங்களின் மீது எங்கள் பார்வை பட்டாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பது எங்களுக்கு மேலும் அதிர்ச்சியைத்தந்தன.

கழிப்பறை வசதி :
அதேபோல் கழிப்பறைகள் எழுதுவதற்கே கூசுகின்றன அந்தளவு மிகவும் அசுத்தமாக காணப்பட்டன. ஆசிரியப் பெருமக்கள் மாணாக்கர்கள் இவற்றை எப்படி பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நினைத்து போது எங்களின் மனது மிகவும் வேதனையடைந்தது.

அரசின் விதியின் படி...
1. 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிப்பறை மற்றும் 50 மாணவர்களுக்கு 1 மலக் கழிப்பறை என்ற அளவில், போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டம் / போதிய வெளிச்சத்துடன் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவை அன்றாடம் தூய்மையாகப் பேணப்பட வேண்டும். கிருமி நாசினி தெளித்து ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக வகுப்பறையை ஒட்டிய கடைசியாக அமைக்கப்படவேண்டும். தனியே மைதானத்திலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலோ அமைதல் கூடாது. கட்டிட உறுதி / உரிமச் சான்றுகள் கழிப்பறைகளுக்கும் அவசியம்.

2. கழிப்பறைகள் தண்ணீர் குழாய் வசதியுடன் கூடியதாக இருத்தல் வேண்டும்.

உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. இப்பிரச்சனைகளை பெற்றோர் – ஆசிரியர் கழகம் மூலம் சம்பத்தப்பட்ட கல்வித்துறையின் கவனத்துக்கு எடுத்துச்செல்வது...

2. மஹல்லா நிர்வாகிகளின் சார்பாக பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய கல்விக்குழு, உள்ளாட்சியினர் ஆகியோரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வது...

3. மேலே குறிப்பிட்ட இருவரின் கவனத்துக்கு எடுத்துச்சென்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்ட விலை என்றால் தமிழக முதல்வருக்கு கோரிக்கையை அனுப்பி வைப்பது...

4. பொது மக்களின் ஒத்துழைப்போடு நமது பேரூராட்சியின் அனுமதியோடு தமிழக அரசின் “தன்னிறைவுத் திட்டம்“ மூலமாக பாதுகாப்பானக் பள்ளி அறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்...

அதென்ன தன்னிறைவுத் திட்டம் ?
தன்னிறைவுத் திட்டம் : - [ முந்தைய ஆட்சியில் ‘நமக்கு நாமே திட்டம்’  ]
கிராமங்கள், நகரங்களில் மக்கள் விரும்பும் திட்டங்களை தன்னிறைவுத் திட்டம் மூலம் மேற்கொள்ளலாம். திட்ட மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பங்குத் தொகையை சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் செலுத்த வேண்டும்.  [ உதாரணமாக நாம் அரசுக்கு ரூபாய் ஒரு லட்சம் செலுத்தினால் அரசு சார்பில் கூடுதலாக இரண்டு லட்சங்கள் பெற்று நமக்கு வேண்டிய திட்டங்களை நாமே செயல் படுத்திக்கொள்ளலாம் ]

அரசுப் பள்ளிக் கட்டடங்கள், ஆய்வுக்கூடங்கள், பள்ளிக் கழிவறைகள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கும் அரசு விடுதிகள் கட்டுதல், அரசு மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்கள், கால்நடை மருத்துவமனைகள், கால்நடை வளர்ப்பு மையங்கள், நூலகங்கள், அங்கன்வாடிகள், சத்துணவு மையங்கள், ரேஷன் கடைகள் ஆகியவற்றை கட்டுவதற்கு இத்திட்டத்தை பயன்படுத்தலாம்.

சமுதாய சொத்துக்களை உருவாக்குதல், குடிநீர் ஆதாரம் உருவாக்குதல், சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்தல், தானியகளம் அமைத்தல், ஊரக குழந்தைகள் மற்றும் மகளிர் சுகாதார வளாகங்களை பராமரித்தல், பாலங்கள் அல்லது சிறுபாலங்கள் கட்டுதல், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் அமைத்தல்  உள்ளிட்ட பல்வேறு பணிகளை இத்திட்டம் மூலம் மேற்கொள்ள முடியும்.

உள்ளூர் பள்ளிகளை உயரச்செய்வோம் !
அடிப்படை வசதிகளான சுகாதாரம், குடி நீர், உணவுக் கூடங்கள் மற்றும் வகுப்பறைகளின் தரம், கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி நமது பள்ளிகளை நாமே தரத்திலும் சேவையிலும் உயர்ந்து நிற்க துணை புரிவோம்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! பார்வைகள் தொடரும்...

சரி அதென்ன சூனா வீட்டு பள்ளிக்கூடம் !?
எனது வாப்புச்சா வீட்டிலிருந்து எட்டிப் பார்க்கும் தூரத்தில் இருந்த வாய்க்கால்தெரு [ நடுத்தெரு ] பள்ளிக்கூடத்தில் எனது தகப்பனார் ஆரம்பக் கல்வியைக் கற்றிருந்ததால் இப்பள்ளியில் தொடக்கக் கல்வியை கற்ற எனது தாயாரிடம் ‘சூனா வீட்டு பள்ளிக்கூடம்’ என்ற பெயர் எப்படி வந்தன ? என்ற கேள்வியை கேட்டேன்.

ஓ அதுவா ! நம்ம தெருவிலே ஆரம்பத்திலே பள்ளிக்கூடம் இல்லை. முதன் முதலா நம்ம சூனா வீட்டு ‘கவ்வா ராத்தா’ வீட்டிலுள்ள மிகப்பெரிய திண்ணையில் தான் படிப்பை சொல்லித்தந்து பள்ளிக்கூடத்தை ஆரம்பித்து வைத்தனர். அன்றிலிருந்து இன்று வரை இப்பள்ளியை ‘சூனா வீட்டு பள்ளிக்கூடம்’ என்றே அனைவராலும் அன்பாக அழைக்கப்படுகிறது என்ற தகவலைத் தந்து என்னை வியக்கவைத்தார்.

Wednesday, November 21, 2012

[ 14 ] ஏன் அழுதாய்...? ‘அழும் குரல்’ தொடர்கிறது...

குளிர் பிரதேசம்...
உன் பிறப்பிடம்...
பசும் சோலையோ
உன் இருப்பிடம்...
வானுயர வளர்ச்சி...
உன் இயற்கை...
தன் துயர்... பிறர் கானா வண்ணம்
செழிப்பாய் காட்சி தரும்
ரப்பர் மரமே....
தினம் உன் உடல் கீறி
ரணம் [ ரப்பர் ] எடுத்து...
உயிர் பிழைக்கும் மனிதர்
நீ என்றும் நீ அழுததில்லை
வனத்தை வனப்பாய் ஆக்கிய நீ
ஏன் அழுதாய் இன்று...
இதோ ரப்பர் மரத்தின் பதில்கள்...
தினம் என் நெஞ்சை கீறி
பணம் பார்க்கும் மனிதா...
உனக்கென உழைக்கும்
தொழிலாளி படும் அவலம்...
நான் அறிவேன்... இலை சருகுகளும்
தண்ணீர் கலந்த சருகுகளும்
சகதியாய் மாறி கிடக்க
காணு கால் அளவு சகதியில்
நீ நடக்க புழுவும் பூச்சியும் அட்டையும்
நெளியும் போது நீ நடந்து
ரப்பர் எடுக்கும் போது
உன் உடலில் அட்டை இரத்தம் எடுக்கும்
அட்டை உன் உடம்பில்
இரத்தம் உறிஞ்சியது போதாது என
உன் முதலாளி உன் உழைப்பை உறிஞ்சி
கால தாமதமாக குறைந்த ஊதியம் தன்னை
கால தாமதமாக உனக்கு தரும் நிலை
நான் அறிவேன்...
எனை கீறி பணம் பார்க்கும்
மனிதரை கண்டேன்... மனிதரின்
மனம் கீறி பணம் பார்க்கும் மனிதரால்
மனம் அழுதேன்... சிலர் எடுக்கும் சினிமா
பலர் நோகும் நிலையாகும்...
உலகில் வாழும் பல கோடி மக்கள்
மனம் நோகி பணம் பார்க்கு
நிலை கண்டு அழுகிறேன்...

அதிரை சித்திக்
'அழும் குரல்' தொடரும்...
[ பதிமூன்றாவது அழும் குரலை கேட்க ]

Tuesday, November 20, 2012

தண்ணீரை நாம் வீணாக்குகின்றோமா !?தண்ணீரின் அருமையை பற்றியும் மகத்துவத்தை பற்றியும் அறியாதவர்கள் யாரும் இலார், அந்த அளவுக்கு தண்ணீரின் பயன்பாட்டை மனித இனம், விலங்கினம் மற்றும் தாவரினம் அனைத்தும் பெற்று வருகின்றன.

விலங்கினங்களும் தாவரினங்களும் தண்ணீரை வெகு சிக்கனமாக உபயோகித்துக் கொள்கின்றன, ஆனால் ஆறு அறிவு பெற்ற மனிதனுக்கு மற்றும் அடிக்கடி தண்ணீரின் சிக்கனத்தைப்பற்றி சொல்ல வேண்டியதாயிருக்கு.

நம்மில் பலருக்கு தண்ணீரின் மகிமை தெரியாமலே உள்ளது. உடம்பின் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும், சில்லரை உபாதைகளை தீர்த்து வைக்கவும் தண்ணீர் உதவுகிறது. அதன் நன்மைகள் அனேகம்.

தண்ணீர் அருந்தாவிடில் உயிர் வாழ முடியாது எல்லோரும் தெரிந்தது தான். தாகம் தணிப்பதற்கு மேலாகவே அது பலவிதத்திலும் பயன்படுகிறது. ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். நம் உடம்பில் சென்று சேர்கிற உணவு பிராண வாயு, ரத்தத்திலுள்ள நோய் எதிர்ப்பு செல்கள் என்று பார்த்தல் அவை 83 சதவீதம் தண்ணீராகவே உள்ளது. உணவை ஜீரணிக்கவும், உறிஞ்சவும் தண்ணீர் அவசியமாகிறது.

உடம்பிலுள்ள கழிவுகளை வெளியேற்றவும், வெப்பநிலையை சீராக வைத்துருக்கவும் தண்ணீர் அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீரகம சிரமப்படும், மலச்சிக்கல் வரும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் சிறுநீரகத்தின் வழியே சென்றாக வேண்டும் இல்லாவிடில் பாக்டீரியாக்கள் ஆங்காங்கே தங்கி விடும் முதுகு வலி, சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் என்று அனேக உபாதைகள் வரும், சிறுநீரகத்தில் கல் அடைப்பு நோய்த் தொற்று ஏற்படாமலிருக்க சுத்தமான தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

சிறுநீரின் நிறம் அடர்ந்த காணப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் தேவை என்று புரிந்துகொள்ள வேண்டும்.

நமது நாட்டில் தற்போதுள்ள நீர் வளமானது ஒருவருக்கு 1600 சதுர மீட்டர் அளவிற்குக் கிடைக்கிறது. பன்னாட்டு அளவில் 1700 சதுர மீட்டருக்கு குறைவான அளவை பற்றாக்குறையாக மதிப்பீடு செய்கிறார்கள். இது 1000 சதுர மீட்டராக குறைந்தால் அதனை நீர் வறட்சி நிலையாக மதிப்பீடு செய்கிறார்கள். நமது நாற்றில் தற்போது நீர் வளத்தைக் தருகிற 20 நதிகளில் 9 நதிகள் வறண்டு கிடக்கின்றன.

உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர் ஆனால் நாம் பயன்படுத்தக்கூடிய தண்ணீரின் அளவு 4 சதவீதம்தான். அத்துடன் வேகமாக பொருளாதார வளர்ச்சி மற்றும் நகர்மயமாதல் காரணமாக தண்ணீர் தேவைக்கும் கிடைக்கும் அளவுக்கும் உள்ள வித்தியாசம் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இன்று நமக்கு உலக அளவிலோ, தேச அளவிலோ, மாநில அளவிலோ, மாவட்ட அளவிலோ, வட்ட அளவிலோ ஆராய்ந்து பார்க்க நேரம் இல்லை, முதலில் நமதூரைப் பற்றி ஆராய்வோம் பின்பு படிப்படியாக நகர்ந்து போவோம்.

நமதூரை எடுத்துக்கொண்டால் இன்றைய நிலையில் நீரின் தேவை மிக மிக அதிகம், காரணம் பச்சை மரங்கள் இருந்த இடத்தில் எல்லாம் பல வண்ணங்களில் உருவான வீடுகளின் ஆதிக்கம் தான், மக்கள் பெருக்கம் ஜனப்பெருக்கம் போன்ற காரணங்களினால் புதுப்புது இருப்பிடங்கள் தேவைதான்.

நாம் இப்படியே பெருக்கிக் கொண்டே போகின்றோமே தவிர அதற்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களைப் பற்றி சிந்திக்கிறோமா ? அல்லது அது குறித்து விழிப்புணர்வு கொள்கின்றோமா ?

நமதூரில் 90 சதவீதம் வீடுகளில் நீரை தேக்கிவைத்து, தேவைப்படும்போது உபயோகப்படுத்துகிறோம், அதாவது தேக்கியிலிருந்து நீரைப் பெறுவதற்கு குளியல் அறை, சமையல் அறை, படுக்கை அறை இன்னும் எத்தனையோ தேவையான இடங்களில் திறந்து மூடும் வசதியுள்ள நீர்குழாயை பொருத்தி இருப்போம்.

நாளடைவில் அந்த திறந்த மூடும் நீர்குழாய் தேய்ந்து மூடும் திறனை கொஞ்சம் இழந்துவிடும், இப்படியான நிலையில் அதிலிருந்து நீர் சொட்டு சொட்டாக வடிந்து கொண்டிருக்கும்.

உதாரணத்திற்கு :-
இந்த கணக்கு ஒரு சராசரியாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஒரு வீட்டில் பத்து நீர்க் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம், அந்த பத்து நீர்க் குழாய்களின் வழியே நீர் சொட்டு சொட்டாக வடிந்து வீணாகிறது, ஒரு நீர்க் குழாய் மூலமாக 10 விநாடிகளுக்கு ஒரு சொட்டு என்று கொண்டால், ஒரு நிமிடத்திற்கு 6 சொட்டுகள் , ஒரு மணிநேரத்திற்கு 360 சொட்டுகள்,  ஒரு நாளைக்கு சராசரியாக வீட்டின் நீரின் உபயோக நேரம் 10 மணி நேரத்தை கழித்துவிட்டு மீதி இருப்பது 14 மணி நேரங்கள். இந்த 14 மணி நேரத்தில் நீர் சொட்டுகள் வெளியாகின்றன, அப்போ 10 நீர்க் குழாய் வழியாக மொத்தம் 50,400 நீர் சொட்டுகள் வெளியாகின்றது.

இது ஒரு வீட்டுக்கு கணக்கிடப்பட்டது

தாகமெடுத்து குடிக்க நீர் இல்லாமல் தவிக்கின்ற போது, நா வறண்டு போக, ஒரு சொட்டு நீர் கிடைத்தால் போதும் என்ற எண்ணம் எழும்போது நீரின் அருமை நமக்கு புரியும், முக்கால்வாசி நீரால் சூழப்பட்ட உலகத்தில் வாழ்கின்றோம், ஆனால் குடிப்பதற்கு நீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றோம்.

பச்சை நிறங்கள் போய்க் கொண்டிருக்கின்றன.
பாவங்கள் நிறைந்து கொண்டிருக்கின்றன.
வறட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன.

மரணத் தருவாயில் மரணப் படுக்கையில் இருப்பவருக்கு நீர் அருந்த வேண்டும் என்ற தாகம் இருக்கும், அருகில் இருப்பவர்கள் நீரை சொட்டு சொட்டாக அவர் வாயில் ஊற்ற முயற்சிப்பார், ஆனால் நீர் உள்ளே செல்லாது.

எல்லா வற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வான் என்று சொல்லும் மனிதன், அந்த இறைவன் உனக்கு ஞானத்தை கொடுத்தது எதற்காக ?

சிந்திப்போமா ?

விழிப்புணர்வு அடைவோமா ?

மாணவச் செல்வங்களே உங்களுக்கும் தான், கன்னத்தில் கைவைப்பதை எடுத்துவிட்டு இன்று முதல் சிந்தித்து செயல்பட உங்களால் முடியாதா ?

வாழ்க வளமுடன்
அன்புடன்,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Sunday, November 18, 2012

அதிரையில் என்னை அதிர்ச்சியடைய செய்த இரண்டு !!! அதிர்ச்சி 1 :
நமதூரில் மீன் மார்க்கெட்டுக்கு செல்லாதவர்களே இருக்க மாட்டார்கள் காரணம் அங்கே ப்ரஸ்ஸாக கிடைக்கிற மீன்கள், இறால், நண்டு, கணவாய் போன்ற கடல் சார்ந்த உணவுப்பொருட்கள். இவைகள் உணவுப்பொருட்களாக மட்டும் நமக்கு பயன் தரவில்லை என்றாலும், ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு மருத்துவ குணமுடையவை உதாரணமாக பிரசவம் ஆன தாய்மார்களுக்கு கூடுதலாக பால் சுரக்க கத்தாழை மீனை வழக்கமாகக் கொடுப்பதை நாம் அறிந்திருப்போம்.

வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் மீன் ஆணம் சோத்தை சாப்பிடாத அதிரையர்கள் உண்டா ? என கேட்குமளவுக்கு இதன் ருசி அனைவரையும் சுண்டி இழுத்து விடுகிறது. வித வித பெயரைக் கொண்ட ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு ருசியைக் கொண்டது. இதனாலே எனக்கு மீன் மார்க்கெட் சென்று மீன் வாங்கி வருவது பிரியம் என்றாலும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளேன்.

இன்று காலை மீன் மார்கெட்டுக்கு சென்ற எனக்கு மீன் வரத்து சற்று அதிகமாக இருந்தததைக் கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் எல்லா வகை மீன்களும் மார்க்கெட்டில் ஆங்காங்கே கொட்டி குமித்து வைத்துருந்தனர். ஆஹா இன்னிக்கி விலை சல்லிசா கிடைக்கும் பாருங்கன்னு அருகில் நின்ற ஜபருல்லாஹ் காக்காகிட்டே சொன்னேன். நீ ஒரு ஆளுப்பா, பாடு குறைவா இருந்தாலும் சரி...இல்லே கூடுதலா இருந்தாலும் சரி.... ‘விலையை மட்டும் குறைக்க மாட்டானுங்க’ என என் காதில் முணுமுணுக்க..

எனக்கு பிடித்த மீன்களை தேர்வு செய்து என்னப்பா விலை ? ன்னு கேட்டா ஜபருல்லாஹ் காக்கா கூறியது போல நமக்கு அதிர்ச்சியை தந்தது அவர் கூறிய விலை !

விலை உயரக் காரணமென்ன ?
தன் உயிரை பணயம் வைத்து இராப் பகலா கடலில் மிதந்து மீன்களைப்பிடித்து கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் வரை கஷ்டமாக இருந்தாலும், அவைகள் இரண்டு மூன்று கைகள் மாறி சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றவற்றை இறுதியில் அதிக விலை கொடுத்து சுவைப்பது நாமாகவே உள்ளோம் என்பதை மறுக்க இயலா விட்டாலும், விற்பனையாளர்களின் அன்றாட வாழ்வாதாரங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் அவர்களின் பொழுதுகள் பெரும் சிரமத்துடனே ஒவ்வொரு நாளும் கழிகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களுடையே தீய பழக்கங்களாகிய ‘மது அருந்துதல்’, ‘வட்டிக்கு பணம் வாங்குதல்’ போன்றவற்றை நிறுத்திவிட்டால் அதிகரித்துவிட்ட மீன் விலையை மட்டுமல்ல அவர்களின் ஏழ்மை நிலையையும் தவிர்க்கலாம்.

 அதிர்ச்சி 2 :
இன்றைய அதிரையில் முட்டையை விநியோகம் செய்யும் லாரியிலிருந்து மட்டையை கொண்டு சேர்க்கும் ட்ராக்டர் வரை செல்லாத பாதைகளே இல்லை என்று சொல்லுமளவுக்கு பரப்பரப்பான சாலைகளாக உள்ளன. இதனாலே என் வீட்டிற்கு செல்வதற்காக இன்று சந்துப் பாதையை பயன்படுத்தித்தான் பார்ப்போமே என நினைத்து அவ்வழியே சென்றேன்.

ப்ளீஸ் என் மீது கையை வச்சிடாதிங்கோ ! நான் கீழே சாய்ந்துடுவேன் என்று சொல்லுமளவுக்கு உள்ளது இம்மின்கம்பத்தின் நிலை [ எண் TP 736, கீழத்தெரு ]   வயதானவர்கள் முதல் சிறுவர் சிறுமிகள் வரை கடந்து செல்லக்கூடிய குறுகிய பாதை மட்டுமல்ல இப்பதிவை தளத்தில் பதியும் போது குடியிருப்பு வீட்டின் மீது விழுந்து சாய்ந்து விட்டன என்ற செய்தி நம் காதிற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மின் கம்பத்தின் பாதுகாப்பிற்காக கம்பு ஒன்றை முட்டு வைத்துள்ளதைக் கண்டவுடன் எனக்கு கிச்சு கிச்சு மூட்டாமலே சிரிப்பை வரவழைத்து விட்டது.

அதிரையை மிரட்டும் மின்வெட்டால் ஊழியர்களின் பிஸியான வேலைகள் சற்று குறைத்துவிட்ட போதிலும் அவர்களுக்குரிய போதிய நேரமிருந்தும் இவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட காரணமென்ன ?

அல்லது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் அலட்சியப் போக்கால் மின்சார வாரியத்தின் கவனத்திற்கு எடுத்துச்செல்லாமல் இருந்துவிட்டனரா ?

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

[ 13 ] ஏன் அழுதாய்…? 'அழும் குரல்' தொடர்கிறது...[ பணத்திடம் மனித மனம் பேசினால்... ]

பணமே நீ இருக்கும்
இடமெல்லாம் புத்துணர்ச்சி
உன்னை இலக்காய் வைத்தே படிப்பு
உழைப்பிற்கும் நீயே இலக்கு
மருத்துவனும் உன் வரவை 
இரவு பகலாய் வரவேற்கிறான்
நியாங்கள் பேசுவோர் வண்டி வண்டியாய்
பொய் சொல்கிறார் உன் வரவுக்காக
கட்டாந்தரையை கூட வளமாக்கப்படுகிறது
விவசாயி உன் இருப்பிற்காக
பேரலையை பெரிது காணாமல்
மீன் பிடித்து வர கடல் செல்லும்
மீனவன் மீளா பயணம் செல்வதும்
உன்னை நாடியே.. உன் மீது
இவ்வளவு பற்று கொண்ட
மனிதன் மடியில் இருந்து கொண்டு
ஏன் அழுகிறாய்...?

நல்லவற்கு நான் சேர்த்தல்
நல்ல பல காரியங்கள் கை கூடும்
ஆனால்..
கெட்டவர்கள் கூடாரத்தில் சிக்கியல்லவா
தவிக்கிறேன் நான்..
ஒன்றுமறியா சிறுபிள்ளையை கடத்தி கொலை
காரணம் நானாம் ..
உடன் பிறந்த அன்பு சகோதரனுக்கு
உலை வைப்பதும் நானாம்
அரசியல் சூழ்ச்சியென்று
ஆயிரம் ஆயிரம் மக்களை
கொல்ல காரணமும் நான் என்று
என் தலையில் இத்தனை
குற்றச்சாற்று ..அழாமல் என் செய்வேன் !
நான் கிரியா ஊக்கி மட்டுமே
நல்லவர்க்கும் பொல்லாற்கும்
இடையே நான் திண்டாடும் நிலை
பொல்லாரின் செயல் கூடி
அழு நிலைக்கு ஆளானேன்..!

அதிரை சித்திக்
'அழும் குரல்' தொடரும்...
[ பன்னிரெண்டாவது அழும் குரலை கேட்க ]

Friday, November 16, 2012

[ 9 ] பயண அனுபவங்கள் – சீனா

ஸ்ஸீ” “ ஸ்ஸீ “ Xie Xie  [ நன்றி வருகிறேன் ] எனச்சொல்லி மகிழ்ச்சியோடு விடை பெற்றுக்கொண்டு அடுத்த பூத்திற்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு எதிரே இன்ப அதிர்ச்சியாக எனது நிறுவனத்தின் உரிமையாளர் !
பரஸ்பரம் நலம் விசாரிப்புகளை முடித்துக்கொண்டு தான் வழக்கமாக தங்கி வரும் ஹோட்டலைப் பற்றிக் கூறினார். இங்கே ஒன்றைக் குறிப்பிட ஆசைப்படுகிறேன். வணிகச் சந்தைகள் நடைபெறும் தினங்களில் குவாங்சோ நகரிலுள்ள தர சான்றிதழ் பெற்றுள்ள அனைத்து தங்குமிடங்களிலும் வாடகையை கணிசமாக உயர்த்திருப்பார்கள். உதாரணமாக சாதாரண நாட்களில் இரன்று மூன்று தர சான்றிதழ் பெற்றுள்ள தங்குமிடங்களில் நாள் ஒன்றுக்கு USD 100 என்றால் வணிகச் சந்தை நடைபெறக்கூடிய தினங்களில் USD 500 என நிர்ணயித்து இருப்பார்கள். எனது நிறுவனத்தால் எனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் நான் தங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளேன். காரணம் செலவீனங்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பானதாகவும் இருக்கும். மேலும் சுயமாக சமைத்து உணவருந்துவதற்கும் ஏற்றதொரு இடமாக இருக்கும். ஏராளமான தொழிலதிபர்கள் தங்களின் தொழில் நிமித்தமாக வருகை தரும் போது அவர்கள் தங்கிச்செல்வதற்கு இது போன்ற அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நிறுவனங்களின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து பூத்துகளுக்கும் செல்ல வேண்டியிருப்பதால் தனித்தனியே கவனம் செலுத்துவது என்று முடிவு செய்து ஆளுக்கொரு பகுதிகளை பிரித்துக்கொண்டோம்.

நாங்கள் குளிர் காலத்தில் சென்றிருந்தாலும் நமது கவனம் கோடை காலத்திற்குரிய பொருட்கள் மீதே இருக்க வேண்டும் என்பதையும் சிறு சிறு நிறுவனங்களுக்கு முதலில் செல்வது என்றும் இறுதியாக பெரிய நிறுவனங்களுக்கு செல்லலாம் என்ற எனது கருத்தை எனது நிறுவனத்தின் உரிமையாளரிடம் உறுதிபடுத்திவிட்டு விடைபெற்று அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்று அருகிலுள்ள வீட்டு உபயோக சிறிய மின் சாதனங்களை [ Small Home Appliances ] தயாரிக்ககூடிய ஒரு நிறுவனத்திற்குச் சென்றேன்.
அங்கே தினமும் என்னோடு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளும் விற்பனை பிரிவில் பணிபுரியும் நிர்வாகியை முதன் முதலாகப் பார்த்தவுடன் முகத்தில் இருவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.

பொதுவாக சீன நிறுவன அலுவலகங்களில் ஆங்கில மொழி பேசும் திறனால் ஆண்களை வீட அதிகளவில் பெண்களே பணிபுரிந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இவர்கள் பேசும் ஆங்கிலத்தின் உச்சரிப்பில் சிறிது மாற்றம் இருந்தாலும் சற்று அமைதியாக நாம் கவனித்தால் அவர்கள் நிதானத்துடன் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பதிலளிப்பது சற்று வித்தியாசமாக இருக்கும்.

இன்றைய தினத்தில் சீனாவில் ஆங்கிலம் கற்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் மூவாயிரம்  எழுத்துக்களைக் கொண்ட சீன மொழியை அசராமல் பேசுபவர்கள் இருபத்தியாறு எழுத்துக்களைக் கொண்ட ஆங்கில மொழியில் அடக்கமாக பேசும் போது எனக்கு வியப்பாகவே இருந்தது.

அங்கே புதிதாக தயாரிக்கப்பட்ட  மாடல் ஒன்றைக் கண்டவுடன் எங்களின் சந்தைகளாகிய  Middle East & North Africa ஆகிய இரு பகுதிகளுக்குரிய ஏற்றதொரு பொருளாக இருந்ததால் இவற்றை இறக்குமதி செய்து சந்தைப்படுத்தினால் விற்பனை படு ஜோராக இருக்கும் என்று நான் கருதியவுடன் உடனடியாக ஆர்டர் எடுக்க வேண்டும் என்று தோன்றியது. பொருளின் தரம், விநியோகக் காலம், பணம் செலுத்தும் முறையில் அவர்களின் கட்டுப்பாடுகள், எங்களுடைய எதிர்பார்ப்புகள், விலை பேரம் பேசுதல் போன்ற சாதாரண நடைமுறைகளை உறுதி செய்துவிட்டு அவர்களிடமிருந்து  Proforma Invoice  ஐ எதிர்பார்த்தேன்.

அது என்ன Proforma Invoice  !?

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ‘பயண அனுபவங்கள்’ தொடரும்...

Thursday, November 15, 2012

குடும்பக் கொல்லியை ஊரை விட்டுத் துரத்துவதற்காக ஒன்று திரண்ட பொதுமக்கள் [ காணொளி ] !!!

மதுக்கடைகள் - இவை ஓன்று, இரண்டாகி, மூன்று, நான்காகி, ஐந்து என பெருகிக்கொண்டே வருவது மிகவும் வேதனையளிக்கக் கூடியது மட்டுமல்ல ஊரிலுள்ள குடும்பங்களையே அழிவின் பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.

இப்படி குடும்பத்திற்கு சங்கு ஊதிடும் குடும்பக்கொல்லியாகிய மதுக்கடையொன்று கடந்து சில நாட்களுக்கு முன்பு ஏரிபுறக்கரை பஸ் நிறுத்துமிடத்தின் [ பெரிய ஏரி அருகில் ] அருகே திறக்கப்பட்டன.

இப்பகுதி அதிகளவில் வாகனங்கள் கடந்து செல்லக்கூடிய இரு வழிச்சாலைப்பகுதி E.C.R. என்பதும், பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயில கடந்து செல்லுகின்ற பாதை என்பதும், மேலும் பஸ் நிறுத்துமிடம், பொதுமக்கள் அதிகாலை, மாலை நேரங்களில் "வாக்கிங்" "சைக்கிளிங்","ஜாக்கிங்" போன்ற பயிற்சிகளை மேற்கொள்கின்ற பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் அதிகமாக விபத்துக்கள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு நமது அரசு மருத்துவமனையின் இரவு நேர சேவை மற்றும் கூடுதல் மருத்துவர் நியமிக்க வேண்டி நமதூரைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது அமைப்புகளின் கோரிக்கையாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வேளையில் அப்பகுதியில் குடும்பத்தையே அழித்துவிடக்கூடிய சமூகக்கொல்லி, குடும்பக்கொல்லி, உயிர்க்கொல்லியாகிய "மதுக்கடை" 

இதையடுத்து இப்பகுதி பொதுமக்கள் ஓன்று திரண்டு குடும்பக்கொல்லியை ஊரை விட்டுத் துரத்த கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிரை மற்றும் ஏரிப்புறக்கரை கிராமத்தை சார்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் உணர்வை வெளிப்படுத்தி மதுக்கடையை அப்புறப்படுத்த அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Wednesday, November 14, 2012

[ 12 ] ஏன் அழுதாய்...? 'அழும் குரல்' தொடர்கிறது...

பூவே...
நீ பச்சை பசுஞ்சோலையை 
உன் வண்ணத்தால் அலங்கரிப்பாய் 
உன் வாசத்தால் அந்த பகுதியையே
மனம் கமழ்ந்திட வைப்பாய் 
உன் வாசம் மட்டுமா அழகு
சுவைதரும் தேன்தரும் உன் நற்குணம்
இப்படி நல்ல பல குணம் கொண்ட நீ
ஏன் அழுதாய்...!

இதோ பூவின் பதில்
செடிகளின் செல்லம் நான்
நான் நிறைந்த இடம் பூங்கா வாகும்
மொட்டுக்கள் மலர வண்டு காத்திருக்கும்
மனிதனின் மனம் கவர்ந்த நான்
மகிழ்விக்கும் அத்தனை நிகழ்விற்கும்
நானே முதலிடம் பூமாலை சூட்டி
மரியாதை என்பது மரியாதையின் உச்சம்
கழுத்தில் சேர கெளரவங்கள் சேர்ப்பேன்
கண்ணியமாய் நானிருந்த நேரம் ஆனால்
இப்போது பொதுக்கூட்டம் என்ற பெயரில்
பலரை வசை பாடும் படு பாதகற்களுக்கு
மாலை சூட்டி மகிழ என்னை அவன்
கழுத்திற்கு செல்லுமுன்
தூக்கி எரியும் எத்தனின் நிலை கண்டு
குப்பையிலிருந்து வதங்கி அழுகிறேன்

அதிரை சித்திக்
'அழும் குரல்' தொடரும்...

அலர வைக்கும் மின்சாதனங்கள் ! அசர வைக்கும் டிப்ஸ் !!

மின்சாரம் இல்லாமல் இன்றைய வாழ்வே இல்லை. நமக்கு வரமாகக் கிடைத்திருக்கிற மின்சாரத்தை, சாபமாக்கிக் கொள்ளாமல் அதை சரியாகப் பயன்படுத்தும் விதம் பற்றி எடுத்துச் சொல்கிறார்கள் நிபுணர்கள்.

மின்சாதனப் பொருள்களை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார்,

ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறதா என்று பார்த்தே மின்சாதன பொருட்களை வாங்குங்கள்.

மூன்று பின்கள் உள்ள பிளக்கை பயன்படுத்துங்கள். ஸ்விட்ச் பாக்ஸ் தரைமட்டத்திலிருந்து 4 அடி உயரத்துக்கு மேல் இருக்கும்படி பொருத்துங்கள். விபரம் தெரியாத குழந்தைகளின் பாதுகாப்புக்கு இதுவே சிறந்த வழி.

ஸ்விட்ச் பாக்ஸை பொறுத்தவரை பாதுகாப்பான நிறைய வகைகள் இப்போது கிடைக்கின்றன. உதாரணமாக, பிளக்கில் 'பின்' செருகும்போது துவாரப் பகுதி திறந்தும், பின்னை வெளியே எடுக்கும்போது துவாரம் தானாகவே மூடும்படியான க்ளோசிங் வகை ஸ்விட்ச் பாக்ஸ்கள் உள்ளன. அவை மிகவும் பாதுகாப்பானவை.

டி.வி, ஃப்ரிட்ஜ், ஏ.சி. போன்ற மின்சாதனப் பொருட்களுக்கு ஸ்டெபிலைசர் வைப்பது மிகவும் பாதுகாப்பானது.

மின்சாதனங்களை பயன்படுத்தும்போது கவனிக்க-வேண்டிய முக்கிய விஷயங்களைப் பற்றிய தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர்.

முக்கியமான மின்சாதனங்களுக்கு [ஃப்ரிட்ஜ், ஏ.சி., கம்ப்யூட்டர், டி.வி. போன்றவை..] தனித் தனியாக 'எர்த் கனெக்ஷன்' கொடுப்பது பாதுகாப்பானது. எர்த் கொடுக்கும் போது அது சரியான முறையில் [ ஆறடிக்குக் குறையாத ஆழம் தோண்டி, உள்ளே கரித்துகள்கள், உப்பு, ஆற்று மணலைப் போட்டு'எர்த்' கொடுக்கவேண்டும் ] கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவேண்டும். எர்த் கொடுத்த இடத்தில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது எர்த் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கவேண்டும்.

பிளாட்ஃபார கடைகளில் மின்சார பொருட்களை வாங்கவே கூடாது. தரமான ப்ராண்டட் பொருட்களை உபயோகிப்பதே சிறந்தது. மின்சாதனங்கள் பழுதுபட்டால், அவற்றுக்குரிய நிறுவனங்களில் கொடுத்துத்தான் சரிசெய்ய வேண்டும்.

வெவ்வேறு மின்சாதன பொருட்களுக்கு தனித் தனி 'பின்'களையே பயன்படுத்தவேண்டும். ஒரே பின்&ல் பல 'பிளக்'குகளை செருகிவைக்கக் கூடாது. தீய்ந்துபோன ஸ்விட்ச்சுகளை பயன்படுத்துவது, ஒயரை சீவிவிட்டு பின்னுக்குள் செருகி வைப்பது போன்றவற்றை செய்யவே கூடாது. சில சமயங்களில் ஸ்விட்ச் பாக்ஸில் கரையான் கூடு கட்டியிருக்கும். மழைக்காலத்தில் அது ஈரப்பதமாகி, விபத்து நிகழ அதிக வாய்ப்புண்டு. எலெக்ட்ரீஷியனை அழைத்து, கரையான் கூட்டை எடுத்துவிட வேண்டும்.

லேசாக ஷாக் வருகிற மாதிரி தெரிந்தால்கூட, சரி செய்யாமல் அப்பொருளை பயன்படுத்தவே கூடாது.

கிரைண்டர், மிக்ஸி, கெய்ஸர், ஹீட்டர் [ தண்ணீருக்குள் போட்டு சூடு செய்யும் கருவி ], டேபிள் ஃபேன் உள்ளிட்ட பொருட்களை துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். துருவின் மூலமாக வெளியே மின்சாரம் கசியக் கூடும்.

மின்பழுதுகளை சரிசெய்ய லைசன்ஸ் வாங்கிய எலெக்ட்ரீஷியன்களையே அழைக்க வேண்டும். நமது சொந்தத் திறமைகளை பரிசோதிக்கும் இடம் அது இல்லை என்பதையும் உணர வேண்டும். தொடர்ந்து ஒரே எலெக்ட்ரீஷியனையே கொண்டு பழுது பார்ப்பது நல்லது. அவருக்கு வீட்டின் மின் கட்டமைப்பு நன்கு தெரிந்திருக்கும் என்பதால், குறைபாட்டை முழுவதுமாக சரிசெய்ய முடியும்.

பாத்ரூமில் ஈரப்பதம் இருந்து கொண்டேயிருப்பதால், அங்கு பயன்படுத்தப்படும் மின்சாதனங்களுக்கான ஸ்விட்ச் பாக்ஸ் வெளியில் இருக்கவேண்டியது அவசியம். ஹீட்டர், கெய்ஸரை நிறுத்திய பின்னரே குளிக்கச் செல்ல வேண்டும்.

கூடுதல் பாதுகாப்புக்கு E L C B [ Earth Leaker Circle Breaker ] என்ற கருவியை மெயின்னில் பொருத்திக் கொள்ளலாம். எங்காவது சின்ன மின்கசிவு இருந்தால்கூட மொத்தமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரண்டே நிமிடத்தில் மீண்டும் அதுவாகவே 'ஆன்' ஆகிவிடும் வசதி இந்தக் கருவியில் உண்டு. இந்த சிக்னலால் மின்கசிவைக் கண்டுபிடித்து உடனடியாக சரி செய்துவிடலாம்.''

மின் தாக்குதலுக்குள்ளானவரின் அருகிலிருப்பவர் செய்யவேண்டிய முதலுதவிகள் பற்றிச் சொல்கிறார் பொது மருத்துவ நிபுணர் டாக்டர் கணேசன்.

மின்சாரம் தாக்கியவரை தொடவே கூடாது. மின்சாரம் பாயாத ரப்பர்,மரக்கட்டை முதலான பொருட்களைக் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லையெனில், மெயினை ஆஃப் செய்து மின்சாரத்தை நிறுத்தவேண்டும்.

மின்சாரம் தாக்கியவர் நினைவின்றி இருக்கும்போது அவருக்கு உடனடியாக தண்ணீர் கொடுக்கக் கூடாது.அப்படிச் செய்தால், தண்ணீர் சுவாசக் குழாய் வழியாகச் சென்று மேலும் பிரச்னைகள் ஏற்படும். மின்சாரத்தால் தீக்காயம் ஏற்பட்டிருந்தால், காயத்தின் மேல் குளிர்ந்த தண்ணீரை ஊற்றவேண்டும்.

மின்கசிவு உள்ள இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தால், அதில் காலை வைக்கவே கூடாது.

ஈரம் உள்ள இடத்தில் மின்கசிவு இருப்பின், எத்தனை அவசரமாக இருந்தாலும் ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு தான் அருகில் செல்ல வேண்டும்.

மின்சாரம் உடலில் பாய்ந்த உடன் இதயம் நின்றுவிடும் அபாயம் இருக்கிறது. அதனால், இடது மார்புப் பகுதியை அழுத்தி இதயத்தை இயங்கச் செய்யவேண்டும். அந்த நபர் மூர்ச்சையாகியிருந்தால், வாய் வழியாக செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். பிறகு வாய் இறுக்கமாக மூடிக்கொள்ளாதவாறு நீளமான பொருளில் அல்லது ஒரு ஸ்பூனில் துணியைச் சுற்றி பற்களுக்கு இடையே வைத்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

K.M.A. ஜமால் முஹம்மது
Consumer & Human Rights.
S/o K.M.Mohamed Aliyar(late)

Monday, November 12, 2012

[ 8 ] பயண அனுபவங்கள் – சீனா


சுவையான ‘கிரீன் டீ’ யை அருந்திக்கொண்டே எங்களின் பேச்சு சந்தை நிலவரம், எரிபொருள் மற்றும் காப்பர் போன்றவற்றின் விலையேற்றத்தைப் பற்றி அமைந்தது.

அப்போது எனது பேச்சு ‘எக்ஸ்க்ளுசிவ்’ பற்றி அமைந்தன. தொழில்துறையில் எனக்கு பிடிக்காத வார்த்தை என்றால் அது ‘எக்ஸ்க்ளுசிவாகத்தான் இருக்கும் காரணம் உற்பத்தியாளர்கள் ‘எக்ஸ்க்ளுசிவ்’ என்ற பெயரில் தங்களின் நிறுவனங்களில் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு பொருளின் ஏக போக உரிமத்தை நிபந்தனையின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சந்தைகளின் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்குவதே ! இவ்வாறு செய்வதனால் வாடிக்கையாளர்கள் அப்பொருளை விருப்பம் போல் விலையை நிர்ணயித்து சந்தைகளில் விற்பனை செய்வதற்குரிய வழிமுறைகள் ஏராளமாக இருப்பதும், இதனால் பாதிக்கப்படுவது நுகர்வோர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனையைப் பொறுத்து அதேபொருளை உற்பத்தியாளருடன் மீண்டும் விற்பனை ஒப்பந்தம் [Sales Contract ]  செய்யும் போது அப்பொருளுக்குண்டான விலையை கணிசமான அளவு உயர்த்துவதற்குரிய வாய்ப்புகள் அமைந்து விடுகின்றன. இதற்கும் மேலாக ‘எக்ஸ்க்ளுசிவ்’ க்கான ஒப்பந்தமிட்டும் அவற்றை உற்பத்தியாளர்கள் எல்லை மீறும் போதும் விற்பனையாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது ஒரு ஏமாற்று வேலை என்று நான் கருதுவதால் ‘எக்ஸ்க்ளுசிவ்’ என்ற வார்த்தை தொழில்துறையில் எனக்கு பிடிக்காமலே போய்விட்டது. இதனால் அவர்களுடன் இதைப்பற்றிய பேச்சு தொடர்வதை நான் தவிர்த்துக்கொண்டேன்.

அடுத்து எனது பார்வை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புதிய மாடல்கள் மீது பட்டன. இங்கே ஒன்றைக் குறிப்பிட ஆசைப்படுகிறேன். சீன தேசத்திலுள்ள உற்பத்தியாளர்களில் குறிப்பிட்ட சில நிறுவனங்களைப் பொறுத்த வரையில் அவர்களால் தயாரிக்கப்பட்ட புதிய மாடல்களை இது போன்ற பொருட்காட்சி சந்தைகளில் பார்வைக்கு வைப்பதை தவிர்த்துக் கொள்கின்றனர். காரணம் அதே பொருளை சிறு சிறு நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி செய்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிடுவார்கள் என்கிற பயம். இதனால் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களைக்கூட புகைப்படங்கள் எடுப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றன.

தொழில் துறையை பொறுத்த வரையில் வியாபார மொழி [ Business Language ] என்ற ஒன்றை தெளிவாக நாம் அறிந்துகொண்டால் இத்துறையில் நீண்ட காலத்திற்கு கோலோச்சுவதற்கு கண்டிப்பாக அவை உதவும். குறிப்பாக புதிய தொழில் முனைவோருக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அமையும்.

இறுதியாக கையில் வைத்துள்ள நோட் புத்தகத்தில் அவர்களால் தரப்பட்ட புதிய விலைகளின் குறிப்புகளை எடுத்துக்கொண்டு விடைபெறும் போது  அவர்களின் வேண்டுகோள்ளாக என்னை அவர்களின் தொழிற்சாலைக்கு வருகை தரும்படி அன்புடன் அழைத்தனர். அவர்களால் விடப்பட்ட அன்பு அழைப்பை ஏற்றுக்கொண்டு இங்கே மூன்று கட்டங்களாக நடைபெறும் வணிகச்சந்தையின் முதல் கட்டத்தில் கிடைக்கும் இடைவெளியின் முதல் நாளை அவர்களுக்காக ஒதுக்கினேன். அவர்களும் எனது வீட்டிலிருந்து என்னை அழைத்து செல்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்வதாகக்கூறினர்.

ஸ்ஸீ” “ ஸ்ஸீ “ Xie Xie  [ நன்றி வருகிறேன் ] எனச்சொல்லி மகிழ்ச்சியோடு விடை பெற்றுக்கொண்டு அடுத்த நிறுவனத்தின் பூத்திற்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு எதிரே இன்ப அதிர்ச்சி ஓன்று காத்திருந்தன...

அது என்ன இன்ப அதிர்ச்சி !?

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ‘பயண அனுபவங்கள்’ தொடரும்...

[ 11 ] ஏன் அழுதாய்...? 'அழும் குரல்' தொடர்கிறது...

செல்ல மகனே நீ..!
பிறந்த நாள் முதல் 
உன் சிரிப்பில் என் மகிழ்வு 
நீயே என் உலகம்
ஓர் வயது முதல் ஐந்து வரை
என் மடியே உன் இருப்பு
உன் ஆசை எதுவானாலும்
மறு நொடியே தீரும்… நீ
பள்ளி சென்று திரும்பும்
சில மணி நேரம் எனக்கு பல வருடம்
உன் சிரிப்பு என் பூரிப்பு
ஒன்று முதல் ஒன்பது வரை 
தேர்வு பெற்ற சிரிப்பில் 
உன் அறிவின் வெற்றி என்று
அகம் மகிழ்ந்து போனேன் 
சிறு வயதில் விளையாட பொம்மை தந்தேன்
சில காலம்...

காலம் செல்ல உன் தேவை அதிகரிக்க
மன நிறைவாய் நான் தந்தேன்
கையடக்க வானொலி என்றாய்
மறு நிமிடமே உன் கையில்
நவீன கண்டு பிடிப்பு அன்றாடம்
உன் கையில் கைய்யடக்க
பதிவு நாட முதல் மடி கணணி வரை
உன் ஆசை நிறை வேற்றினேன் நான்…!
செல்வத்தின் செல்லம் நீ...!
என் அழுதாய்...? என் மகனே..!
நான் வளர்ந்த விதம் நான் அறிவேன்
ஒன்று முதல் ஒன்பது வரை
நான் பெற்ற வெற்றி..!
நம் மனம் கோனா வண்ணம்
வாத்தியார் தந்த வெற்றி
செல்வத்தின் செல்லம் 
நம் வீடு வரை தான் 
பத்தாம் வகுப்பு வந்தும்
அறிவு தேட்டம் அறியா நான்
அன்பு வலைக்குள் அடைபட்டு கிடந்தேன்
அதட்டலும் சிறு அடியும்
அறிவை பட்டை தீட்டும்
என்பதை அறியா நீ 
அன்பை மட்டும் அள்ளி தந்தாய் 
பத்து வகுப்பு வரை என்னை
பொத்தி பொத்தி வளர்த்தாய்
அதில் குறை ஒன்றும் இல்லை அம்மா
நேரங்கள் பொன் போன்றது
என்பதை அறியா நான் 
பொழுது போக்கி கழித்து விட்டேன்
பாடங்கள் படிக்காமல் 
படங்கள் பார்த்து மகிழ்ந்தேன்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எனக்கு
பேரிடியாய் அமைந்ததுவே
அடைந்து விட்டேன் படு தோல்வி
அதனாலே அழுதேன் தாயே…!
இனி எழுவேன்...வெல்வேன்...
வெற்றி பெறுவேன் உழைப்பால்...!

அதிரை சித்திக்
'அழும் குரல்' தொடரும்...

Sunday, November 11, 2012

வெளிநாட்டு வாழ்க்கை !?


என் நெஞ்சம் அது இன்று புண்ணாச்சி,
வெளி நாட்டு வாழ்க்கையெல்லாம் மண்ணாச்சி

நித்தம் அதை நினைத்து நினைத்து வெம்புகின்ற மனசே...
தூக்கம் இன்றி புறண்டு கண்ணீர் சிந்தும் விழியே 
நெஞ்சில் வேதனை வாழ்வில் சோதனை சேர்ந்திருக்க

எத்தனை வண்டி எத்தனை வேலை போவதும் வருவதும் 
பிடிக்கவே இல்லை சம்பளம் இல்லை சாப்பாடு தொல்லை 
நினைக்கையில் இருக்கவே விருப்பம் இல்லை.

மூளை கெட்ட ஒரு வேலைதான் வந்தது என்றும் இனி போகாது சோகம்
அது தன்னந் தனியா நான் ஏறி வந்தது, இன்று வெறும் சோகமாய் 
ஆனது அதை எண்ணி எண்ணி மனம் நாட்டு நினைவில் பாடு படுதப்பா

ரோட்டிலே வேலை மேட்டிலே வேலை ஒரு சிலர் படுவதும் பெரும் அவதி
பார்க்கவும் இயலா தாங்கவும் இயலா கொடுப்பதோ கையிலே குறைந்த நிதி, 
கேடு கேட்டு போனாலும் நாட்டோடு போ, 
இங்கு வந்து சாகாமல் வீட்டோடு போ

இங்கு ஒன்றும் சேராது நீ எண்ணிக்கோ,
நல்ல நிலை நான் சொல்லுகிறேன் நீ கேட்டுக்கோ, 
உன் அன்பு மனைவியும் செல்லக் குழந்தையும் பாவம்மா

என் நெஞ்சம அது இன்று புண்ணாச்சி,
வெளிநாட்டு வாழ்க்கையெல்லாம் மண்ணாச்சி

குறிப்பு : இது எல்லோருக்கும் பொருந்தாது, அடிமட்ட சம்பளத்துக்கு வந்து அவதிப்படுவோருக்கு மாத்திரம் எழுதப்பட்டதாகும்.

K.M.A. ஜமால் முஹம்மது
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Thursday, November 8, 2012

[ 10 ] ஏன் அழுதாய்...? 'அழும் குரல்' தொடர்கிறது...

படகு காரில் பவனி வந்து
பங்களாவில் குடியிருக்கும்
பல்லு போன தாத்தாவும் 
பாசமிகு பேரனும் பக்குவமாய்
கொஞ்சி மகிழ்ந்த நேரம்
பேரனுக்கு ஆசையாய் வாங்கி
வந்த ஐஸ் கிரீமை அன்புடனே
கொடுத்து மகிழ்ந்தார் தாத்தா
தாத்தா தந்த ஐஸ் கிரீமை
ஆசையாய் வாங்கிய பேரன்
வாய்க்கு செல்லு முன்னே
அம்மா அழைத்திடவே.. அங்கேயே
வைத்து விட்டு அம்மாவிடம்
சென்று வந்தான் 
வந்து அவன் பார்த்த போது
ஐஸ் அதும் கரைந்ததுவே 
கரைந்த ஐஸை பார்த்த போது
பேரனுமே அழுது விட்டான் 
தாத்தாவும் தேம்பி தேம்பி
அலுத்து விட்டார்.. அழுத பேரன்
அழுகை நின்று.. ஏன் அழுதாய்
தாத்தா..? என பேரன் கேட்க 
உனது ஐஸ் கரைந்தது போல்
என் இளமை அந்நிய நாட்டில்
உழைப்பிலேயே கரைந்த தப்பா
உன் பாட்டி இல் வாழ்வு
இல்லாமலேயே இறந்து விட்டால்
பணம் மட்டும் வாழ்க்கையல்ல
என்பதை நீ உணர்ந்து விடு

அதிரை சித்திக்
'அழும் குரல்' தொடரும்...

Monday, November 5, 2012

[ 9 ] ஏன் அழுதாய்...? 'அழும் குரல்' தொடர்கிறது...

தேர்தல் காலம் வந்ததுமே
தொண்டனுக்கு குதூகலம்
தலைவனின் வெற்றிக்கு
துணிந்து அவன் உழைத்திட்டான்
உக்கிரமான உச்சி வெயிலில்
கட்சி கொடிபிடித்து
பாதகைகள் பல தூக்கி
சுவரொட்டிகள் பல ஒட்டி
வெற்றிக்கு உழைத்திட்டான்
உழைப்பு வீண் போகாமல்
அவன் கட்சி வென்றதுவே..!

நாட்கள் பல கடக்க
தொண்டன் பதறி அழுதான் ஏன்...?
தொண்டனின் சாலையோர
சில காணி நிலம் மந்திரியின்
கண்ணில் பட
மந்திரியும் தந்திரமாய் 
அபகரித்தார் அவன் நிலத்தை
வெகுண்டெழுந்து எதிர்த்தும்
ஒன்றுமே உதவ வில்லை
தொண்டை கிழிய கோஷமிட்டு
மக்களிடம் சேர்த்ததை போல்
அவன் குறையை தலைமையிடம்
கதறியழுது சொன்னபோது 
பாராமுகமாய் இருந்ததுவே
தேம்பி அழுதான் தொண்டனுமே...!

அதிரை சித்திக்
'அழும் குரல்' தொடரும்...
[ எட்டாவது அழும் குரலை கேட்க ]
Pro Blogger Tricks

Followers