.

Pages

Saturday, August 31, 2013

[ 9 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ மனைவி ஒரு மந்திரி ]

வளைகுடா நாட்டில் உழைக்கும் எண்ணற்ற நம் சொந்தங்களில் எத்தனை பேர் ஓய்வாக இருக்க பணம் சேர்த்துள்ளார்கள் ? எத்தனை பேர் முதுமை அடைந்த நிலையில் வாழ்வை நிம்மதியாக கழிக்கிறார்கள் என்று எண்ணி பார்ப்போமேயானால் மிக சொற்ப நபர்களே ராஜாவை போல வாழ்கிறார்கள். மற்றவர்கள் நிலை மிக பரிதாபமாகவே இருக்கிறது. இதற்கு காரணம் உழைத்த பணத்தை சரியாக முதலீடு செய்யாததே கரணம்.

1985 களில் மனைகள் வாங்கி குவித்தவர்கள் இன்று கோடீஸ்வரர்களாக வளம் வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணகர்த்தா ஊரில் இருக்கும் மனைவியே...!?

நான் கண்ட சில நிகழ்வுகளை இங்கு பதிய விரும்புகிறேன்...
சென்ற வாரத்தில் கூறியது போல, குளிர் சாதன பெட்டி வாங்கும் நிலை சாதாரண குடிமகனிடம் இல்லை ஆனால் கடும் வறுமை நிலையில் இருந்த ஒருவன் வறுமையை போக்க அரபுநாடு சென்று சற்று நிலைமை சீரான நிலையில் ஆடம்பர நிலைக்கு ஆசை படுகின்ற போது அவன் வாழ்வில் பின்னடைவு ஏற்படுகிறது.

தனது கணவன் வளைகுடா நாட்டில் வேலை பார்க்கிறான் என்பதை பறைசாற்றும் விதமாக சிலர்  பெண்கள் ஆடம்பரமாக செலவு செய்வதையும் காண முடிகிறது. அன்றாட உணவு பழக்கத்தில் கூட மாற்றம் செய்து பணத்தை விரயம் செய்து ஒவ்வொரு மாதமும் கணவனிடமிருந்து பண வரவை எதிர்பார்த்து காத்திருப்பர்.

இது போன்றவர்களில் முற்றிலும் மாற்றமான சில பெண் மணிகள் பற்றியே கூற விரும்புகிறேன்...

கணவன் வெளிநாடு சென்று சம்பாதிக்கிறான் என்பதால் தனது உணவு பழக்கத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் எளிமையான உணவு, ஆடம்பரம் இல்லா உடை கணவனிடமிருந்து வரும் பணத்தை அப்படியே சேகரித்து நான்கைந்து மாதத்தில் முதிரும் பெரும் தொகையை அப்படியே சிறு நிலம் வாங்கி, தனது முதலீடு வாழ்க்கையை ஆரம்பித்தாள் அந்த பெண்மணி கணவன் மூன்று ஆண்டுகள் கழித்து ஊர் வரும்போது கணவன் அன்பாய் வாங்கி வந்த பொருட்களை சேகரித்து நல்ல விலைக்கு விற்று கணவன் கை செலவிற்கு கொடுத்தாள். அன்பாய் வாங்கி கொடுத்த தங்க நகையை மட்டும் அணிந்து காட்டி மகிழ்வித்தாள்..

காலங்கள் சென்றன... இப்படியே பதினைந்து வருடங்கள் கடந்தன... கணவன் விடுப்பில் ஊர் வந்தார். அப்போது அவர் மனைவி கூறினார்.    

இனி நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் !

ஏன் ? என்றார் கணவன்

நீங்கள் இதுவரை அனுப்பிய பணம் என் முதலீட்டால் பெருகி பல லட்சங்களாய் உள்ளது.

ஒவ்வொரு மனையும் பத்து லட்சம் போகும். நீங்கள் அனுமதித்தால் அனைத்தையும் விற்று மாத வருமானம் தரும் வாடகை கட்டிடங்கள் வாங்கி நம் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளலாம் என்றார்.

பல வருடங்கள் உழைத்து களைத்த கணவனுக்கு மனைவி கூறிய வார்த்தை அக்கால மன்னர்களுக்கு மந்திரிகள் கூறிய ஆலோசனை போலபட்டது.

நீ கூறும் யோசனை மிக சரி என்றார்.

ஊரில் நலமாய் வாழ்கிறார். அவர் மனைவி மந்திரிதான்.

* நான் கூறிய கால கட்டம் :

ஒரு குளிர் சாதன பெட்டி பதினைந்தாயிரம்...

ஒருவீட்டு  மனை  இருபத்தி ஐந்தாயிரம்...

அடுத்த வாரம் நகைச்சுவை நிகழ்வை காண்போம்
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, August 30, 2013

முறிவு

மணமுறிவு ஏற்படுதற் காரணம்
....மனமுறிவு உண்டாதல் ஆகுமே
குணமறிந்து விட்டுக்கொ டுத்தலே
...குடும்பத்தில் இன்பத்தை வளர்க்குமே
பணம்பறிக்கும் எண்ணமெலாம் இல்லறம்
...பாழ்பட்டுப் போவதற்கு அறிகுறி
உணர்வறிந்தப் பாலியலில் இன்பமே
...உதட்டளவில் பழகுவதால் துன்பமே!

இணைகோடு இணையாது போயினும்
....இணைபிரியா உறவுகளில் இரயிலின்
இணைசேரா தண்டவாளம் மீதினில்
...இரயிலும்தான் செல்லுதலைப் போலவே
துணையோடு ஒத்துபோகும் நீயுமே
....துன்பமிலாப் பயணத்தில் வெல்லுக
வீணையோடு இணைகின்ற பாடலும்
....வெற்றியான தாம்பத்யம் போலவே!

முதலாளி தொழிலாளி உறவினில்
......முறிவும்தான் ஏற்படுதற் காரணம்
முதலில்நீ ஒப்பந்த நிபந்தனை
...முறித்துவிட்டு விருப்பம்போல் நடப்பதே
உதவாத காரணங்கள் சொல்லியே
..ஒதுங்குகின்றாய்ப் பணிநேர கடமையில்
அதனாலே உங்கட்குள் முறிவுகள்
....அனுதினமும் வருவதையும் காண்பீரே!

சந்தேகம் கொண்டாலே நட்பினில்
...சந்தோசம் முறிந்துவிடும் விரைவுடன்
உந்தேகம் அவன்தேகம் வேறுதான்
....உயிருக்குள் உயிராகப் பழகினால்
உந்தேசம் அவன்தேசம் மாறியும்
...உள்ளன்பில் வென்றிடுவாய் யாரையும்
வந்தாரை வாழவைக்கும் தமிழகம்
...வண்டமிழ்போல் போற்றுவது நட்பையே!

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு : 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இக்கவிதை கடந்த [ 28-08-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

Wednesday, August 28, 2013

நபிதாஸின் அறிவுத்தேன்-குறுந்தொடர்[2]

இக்கொள்கைகளில் இவர்களின் அறியாமையாலோ அல்லது அறிவு திருத்தத்தாலுமோ காலப்போக்கில் ஒவ்வொன்றிலும் மற்ற கொள்கைகள் புகுந்து அதில் பலப்பல பிரிவுகள் உண்டாகிவிட்டது.

ஒவ்வொரு மத/மார்கங்களில் அதில் அதனையேற்று பின்பற்றிவருபவர்கள் அம்மத/மார்கங்களில் ஒரே கொள்கை இல்லாமாமல் பல கொள்கைகள் இருப்பதை அம்மக்களே நன்கு அறிவர்.  அவைகள் அதனின் உட்பிரிவுகள் என்று மற்ற மத/மார்கத்தினர் பொதுவாக கூறினாலும் ஒரு பொதுப் பார்வையில் இவர்கள்ஒருங்கினைந்தாலும் அவர்களுக்குள் இவர்கள் வேறு வேறாகத்தான் இருந்து வருகின்றனர்.

வணக்கம், வழிபாடு இவைகள் இம்மத/மார்கங்களில் வேறுபாடு இருப்பினும் அதன் உள்ளார்ந்த தாத்பரியங்களை பொதுவாக விளங்குதல் நன்மை பயக்கும் என்ற நன்னோக்கில் அதனதன் கருத்துக்களை உள்வாங்கி கொள்ளுதல் நலம்.

வழிபாடு என்பதற்கு இரண்டு வேண்டும். ஒன்று வழிப்பட மற்றது வழிப்பாட்டை பெற. ஒன்றை ஒன்று வழிப்படவேண்டும். இதை வணக்கம் என்றும் வழிபாடு என்றும் சொல்லிக்கொள்வார்கள். இது அத்வைதத்தைத் தவிர மற்ற கொள்கைக்காரர்களையுடையது.

கற்பனைகளை உருவமாக சமைத்து அதனை வழிப்பட்டால் அது அந்த உருவத்தை வணங்கியது என்றும் அல்லது அந்த கற்பனையை வணங்கியது என்றும் தானே பொருள். உருவம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவ்வாறு செய்யப்படும் வழிபாடு/வணக்கம் இவைகளுக்கு இரண்டு உள்ளமைகள் இருக்கும்.

வணக்கமும் வழிபாடும் ஒன்றாகது. வழிபாட்டிற்கு இரண்டு உள்ளமைகள் தேவை. ஆனால் வணக்கத்திற்கு இரண்டு உள்ளமைகள் தேவையில்லை.
வணக்கம் என்றால் அதில் முழு இணக்கம் வேண்டும், பரிபூரண அர்ப்பணிப்பு இருக்கவேண்டும். வணக்கத்தில் வணங்குபவன் அவனின்சுயம் வணங்கப்படுவத்தின் சுயமாக தன்னை முற்றிலும்  இணங்கி; இழந்து ஒரே சுயத்திலாகிவிடவேண்டும். வணக்கத்தில் இரண்டு உள்ளமை உணர்வு இருந்தால் அது குறை உள்ளது என்று சொல்வதைக்காட்டிலும் அங்கு வணக்கம் இல்லை வழிபாடுதான் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

எதாவது ஒரு மதத்தையோ/மார்கத்தையோ விளக்கம் தெளிவுபெற எடுத்தாள்வது புரிதலுக்கு துணைபுரியும் என்பதால், அவற்றில் ஒன்றான இஸ்லாமியத்தை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்துதல் தவறாகா.

இஸ்லாமிய கொள்கை அத்வைதத்தை சார்ந்தது. ஆனால் இன்று இக்கொள்கையில் பிரிவுணர்வு சுபாவ அறியாமையின் காரணத்தால்,  மற்ற இரு தத்துவங்களும், அதில் புகுந்து பலப்பல பிரிவுகள் உண்டாக்கிவிட்டது.

எங்கும் நிறைந்தவன்.
அவனின்றி எதுவுமில்லை.
நீக்கமற நிறைந்தவன்.
எல்லாம் அவன் செயல்.
எங்கு நோக்கினும் அவன் முகமே.
ஏகன்.
எல்லமானவன்.
கிழக்கிலும் மேற்கிலும் அவனே.
உள்ளும் வெளியும் அவனே.
உண்டானதெல்லாம் அவனைக்கொண்டே.

இவைகளெல்லாம் அத்வைத கொள்கையைச் சேர்ந்தது.

இஸ்லாத்தில் இறைவனுக்கு உருவம் இல்லை. அவனே நீக்கமற நிறைந்துள்ளான். அவன் நிலையானவன். அவனுக்கு அழிவு என்பதே இல்லை. அவனது படைப்புகள் நிலையற்றது, அழியக்கூடியது.

உதாரணம் ஒன்றைக் கூறலாம் ஆனாலும் அது மிகப் பொருத்தம் அல்ல. இருந்தாலும் விளக்கம் தரும் என்பதற்காக இதனைப் பார்க்கலாம். தங்கம் நிலையானது என்று எடுத்துக்கொண்டால், அதில் செய்யப்படும் அணிகலன்கள் நிலையற்றது. பெண்டீருக்கு நகை தெரியும் ஆனால் தட்டானுக்கு தங்கம் தெரியும். நமக்கு இரண்டும் தெரியும் ( காரணம் பணம் கொடுப்பதால் ) ஒன்றில் இரண்டு. ஒன்று உண்மை மற்றது மாயை. அழியக்கூடியது மாயை. அழியாதது உண்மை. அரூபம் நிலையானது. உருவம் நிலையற்றது. உருவம் அழிந்து இல்லாமையாகிவிடும்.

புரிந்துகொள்வதர்க்காக இதையும் சொல்லலாம். பெட்ரோல் அதனில் தீயிட்டால், அது எரிந்து இல்லாமல் போய்விடும். அரூபத்திலிருந்து உண்டானது எரிந்து மறைந்துவிட்டது. எதிலிருந்து வந்ததோ பின் அதிலே மீண்டுவிட்டது.

சிலகேள்விகள் உங்களில் தோன்றும். அவை தோன்றாமல் இருக்க இவைகளையும் கவனத்தில்கொள்ளவும்.

(1) நல்ல புத்தி சுவாதீனம் உள்ள மனிதர். அவர் எதோ ஒரு அசம்பாவிதத்தில் புத்திமாறிவிட்டார். தான் யார் என்பதும் தெரியவில்லை. தான் ஏதும் செய்வதும் புரியவுமில்லை, நினைவுமில்லை.   அவர் அந்நிலையில் செய்த மன்னிக்கமுடியாத கொலைகூட மன்னிக்கப்பட்டுவிடும். கொலைக்கு கொலை தண்டனை தராமல் காப்பகத்துக்குத்தான் அனுப்பிவிடுவார்கள்.

(2) அம்பை எய்து ஒருவனை கொன்றால், தண்டனை எய்தவனுக்குத்தான் அம்புக்கில்லை.
'அறிவுத்தேன்' தொடரும்...
நபிதாஸ்

Tuesday, August 27, 2013

சேராத இடம் தன்னில் சேர வேண்டாம் ! சேரனே உன் தந்தை மறக்க வேண்டாம் !!

காதல் எல்லோருக்கும் ஏதோ ஒரு சமயத்தில் வந்து போவதுதான் சிலருக்கு வந்து வந்து போகும். சிலருக்கு வந்தது வெந்து சாகும் அளவிற்கு நொந்து போகும் காதலித்து ஓடியவளை, தந்தையாகிய பொறுப்பாளன் காப்பாற்ற நினைக்கையில் அவன் பெற்ற மகளாலையே கொலை முயற்ச்சி பழி சுமத்தப்படுகிறான் இது ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதுபோல், உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது போல்.

காதல் தீண்டத் தகாததா ?
காதல் பெருங்குற்றமா ?
காதல் செய்வது என்ன பாவம் ?

என்று கேட்கும் காதல் ஆதரவாளர்களே !

காதலனோடு ஓடிப்போய் பெற்றோருக்கு எதிராக காவல் நலையத்தில் புகார் தருவது அவர்களை அலைகழிக்க வைப்பதும் என்ன நியாயம் சொல்வீர்கள், பாசமாய் வளர்த்து ஆளாக்கி கடைசியில் காதல் என்று காரணம் சொல்லி பெற்றோரை பரிதவிக்க விடுவது என்ன நியாயம்.

சேரனின் மகள் தாமினி விவகாரம் கோர்ட் வரை சென்று இரண்டு வாரம் கழித்து நான் அப்பாவுடனே செல்ல விரும்புகிறேன் என்று தாமினி கூற காதலன் அதிர்ச்சியில் உறைந்து போய் இவ்வளவு நேரம் என்னுடனே இருப்பேன் என்று கூரியவள் எப்படி மாறிப்போனால் என்னால் நம்ப முடியவில்லை என்று  பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்கிறார் !

20 வருடங்களாக தாய் தந்தையரின் அரவணைப்பில் இருந்தவள் அவர்களை விட்டு உன்னிடம் வந்தாலே! அதற்காக பெற்றோர்தான் ஆச்சரியப்பட வேண்டும், கவலைப்படவேண்டும், கண்ணீர் சிந்த வேண்டும்.

பெற்றோரிடம் மகள் போய் சேர்ந்ததினால் காதல் தோற்பதாக நினைக்க வேண்டாம் பெற்றோர் பாசம் ஜெயித்ததாக நினையுங்கள் பெற்றோர் கரம் பிடித்து தந்தவளை காதலியுங்கள் கண்ணியமுடன் மாமனார், மாமியார்களை நேசியுங்கள் பெற்றோரின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.

பெற்றோரிடம் போய் சேர்ந்த தாமினி பெற்றோரை மனம் குளிர செய்து விட்டால். சந்ரு [ காதலன் ]அவர்களே கவலையில் இருந்து விடுபடுங்கள் உங்கள் காதல் உண்மையெனில் நேரில் சென்று தாமினி பெற்றோரை அணுகி உங்கள் மீது தவறான எண்ணம் கொண்டிருந்தால் அதை தெளிவுபடுத்தி அவர்களுக்கு பிடித்தவராக நடந்துகொண்டு அவர்களிடம் போய் பெண் கேளுங்கள்... எந்த தகப்பனும் பாழுங்கிணற்றில் தன் பிள்ளையை தள்ளமாட்டான்.

'பிள்ளைய பெத்தா கண்ணீரு... தென்னைய வளர்த்தா இளநீரு...' என்று பாட வைக்காதீர் அன்பர்களே !
மு.செ.மு.சபீர் அஹமது

Monday, August 26, 2013

படைத்தவன் படைத்தது பற்றாக்குறையா ?

பொருளாதாரம் என்றால் என்ன என்பதற்கு பலர் விளக்கங்கள் அளித்து இருந்தாலும்   லயனல் ராபின்ஸ் என்கிற பொருளியல் வல்லுநர் சுட்டிக்காட்டிய கோட்பாடு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைந்தது. அந்தக் கோட்பாட்டின் சாராம்சங்களை சாறுபிழிந்து தருவது இந்த தலைப்பில் விவாதிக்கவும்   தொடர்ந்த விளக்கங்களுக்கும் விளங்கிக் கொள்வதற்கும் உறுதுணையாக இருக்கும்.

லயனல் ராபின்சின் கோட்பாட்டின் அடிப்படை மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டதாகும். அவை :

மனிதனின் தேவைகள் அதிகம். ( Countless Desires)

அந்தத்  தேவைகளை நிறைவேற்றும் பொருள்கள் அல்லது சேவைகள் பற்றாக்குறையானவை . ( Scarce Means)

அவ்விதம் வரையறைக்குட்பட்ட பொருள்கள் மற்றும் சேவைகள் மனிதனுக்கு ஒரே நேரத்தில் எழக்கூடிய மற்ற தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள மாற்றிப் பயன்படுத்தத் தக்கவை . ( Alternative Uses).

இறைவன் வழங்கி இருக்கக் கூடிய உலகின் வளங்கள் மற்றும் தனிமனிதனின் உடல் உழைப்பு மற்றும் புத்திசாலித்தனம் உட்பட யாவுமே ஒரு வரையறைக்குட்பட்டதே. வரையறைக்குட்பட்டதை எப்படிப்  பயன்படுத்துகிறோம் என்பதே  நாம் மேற்கொள்ளும் பொருளாதார நடவடிக்கைகளை அமைந்து இன்பம் அல்லது துன்பத்தை விளைவிக்கிறது.

அருள்மறை இதையே இவ்வாறு கூறுகிறது ,

“எந்தப் பொருளாக இருந்தாலும் அதன் கருவூலம் நம்மிடம் இல்லாமல் இல்லை. எந்தப் பொருளையும் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே நாம் இறக்கி வைக்கிறோம் . 
And there is not a thing but its (sources and)  treasures are with Us; but We only send down thereof in due and ascertainable measures” ( Al Hijr 15: 21) .

மேலும் இறைவன் கூறுகிறான்

“ நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் அதனதன் அளவில்  ஒரு குறிப்பிட்ட விதி முறையின்படி     படைத் திருக்கின்றோம்.”  Verily, all things We have created in proportion and measures “ ( Al Qamar 54:49).  

உலகம் பின்னாளில் மட்டுமல்ல இந்நாள்வரை ஒப்புக் கொண்ட  லயனல் ராபின்சின் பொருளியல் தத்துவம் இஸ்லாத்தின் வித்திலிருந்து வீறிட்டுக் கிளம்பிய கோட்பாடே என்பதற்கு இவையே சான்றாகும். நவீனப் பொருளாதாரம் பயிலும் மாணவர்கள் குறிப்பாக இஸ்லாமிய மாணவர்கள் மனதில் இருத்திக் கொள்ளவேண்டியவை இவை.  ஆங்கிலேயர்கள்தான் அனைத்து கலை மற்றும் அறிவியல் கருத்துக்களின் புதுப் பரிமாணங்களுக்குச்  சொந்தக்காரர்கள் என்று உலகம் நம்பும் வகையில் வடித்து வைத்து புட்டிப் பாலாய்  புகட்டப்  பட்ட வரலாற்றுப் புரட்டுக்களை இடுப்பொடிக்க உதவும் வாதங்கள் இவை.

இறைவனால் அளவிட்டு வழங்கப் பட்ட வளங்களை கைப்பற்றி அவற்றை  வகைப் படுத்தி , வளப்படுத்தி அதே இறைவனால் தனக்கு வழங்கப் பட்ட பகுத்தறிவைப் பயன்படுத்தி எதை , எங்கு,  எதற்காக நமது   இம்மை மறுமைகளின்   வாழ்வுக்கு ஏற்றதாய் மாற்றிக் கொள்வதுதான் மனிதன் மேற்கொள்ள வேண்டிய  பொருளாதார நடவடிக்கைள் என்பதே இதன் பொருள்.

அதே நேரம், படைப்பினங்களின் மனம்  துவண்டுவிடாதவண்ணம்  இறைவன் அருளி இருக்கிற அளவற்ற செல்வங்களையும் அவை பற்றி நம்பிக்கை ஊட்டும்  விதத்தில் அவன் வழங்கி இருக்கிற கீழ்க்கண்ட வரிகளையும் நாம் எண்ணிப் பார்த்துக் கொள்வது நமது தன்னம்பிக்கையை தளரவிடாமல் செய்யும் இறைவாசகங்கள் .

“ உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும் அது வசிக்குமிடத்டையும் சென்று சேருமிடத்தையும் அவன் நன்கு அறிகிறான்”  “There is not a moving creature on earth but its sustenance is on Allah.” ( ஹூத்   11:6 ) 
என்றும்

“எத்தனையோ பிராணிகள் உள்ளன; அவை தாமே தமது உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை . அல்லாஹ் அவற்றுக்கு உணவளிக்கின்றான்; உங்களுக்கும் அவன்தான் உணவளிக்கின்றான்.”  How many creatures that carry not their own sustenance. It is Allah Who feeds them and you “ ( அல் அன் கன்பூத் 29:60 ) 

மேலே காணப்படும் இறைவாசகங்களில் ஒரு புறம் பற்றாக்குறை அல்லது அளவோடு படைத்திருப்பதையும் மறுபுறம் எல்லா உயிரினங்களுக்கும் இறைவன் பொறுப்பேற்று  இருப்பதையும் எண்ணிப் பார்க்கும்போது பொருளாதாரக் கோட்பாடுகளின் அம்சங்களாகிய பற்றாக்குறை மற்றும் தன்னிறைவு  ( SCARCITY & SUFFICIENCY ) ஆகியவற்றின் கூட்டுக் கோட்பாடே இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடு என்கிற எண்ணம் நம்மிடம் உறுதிப்படும் என்பதை உணரலாம்.  பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்படுகிற நேரங்களில் அவற்றிற்கான  தீர்வு இறைவனின் வழிகாட்டுதலின்படியும் அண்ணல நபி அவர்களின் வாழ்வு முறைகளையும் சீர்தூக்கி   மனிதன் நடைமுறையான மார்க்கம் பேணும்  முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதே இங்கு நாம் அறிய வேண்டியது ஆகும் .

இறைவன்  வழங்கி இருக்கிற மூலவளங்களை தனது வாழ்வுக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும்  ஏற்றபடி தனது உழைப்பின் மூலமும் அறிவின் மூலமும் கண்டறிந்து,  பயன்படுத்தி தனது  மனம் திருப்திஅடையும் அளவுக்குத்தக்கபடி  பயன்படுத்தி கொள்வதற்கு மனிதனுக்கு உரிமைகள் உள்ளன. வேறொரு வார்த்தைகளில் சொல்லப்போனால் இறைவன் மனித இனத்துக்கு மட்டுமல்ல தன்னால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் வழங்கி இருக்கிற வாழும் வாய்ப்புகளையும் செல்வங்களையும்  மனித இனம் தனக்கு உரித்தாக்கிக் கொள்வதும் அவற்றில் வெற்றி காண்பதும்   அவரவர்களின் தனிப்பட்ட எண்ணங்கள், முயற்சிகள், வாய்ப்புகள் திறமைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் பயன்படுத்துவதிலேதான் அமையும். இது தனி மனித வளம் சார்ந்த திறமைகளை வளர்ப்பது மற்றும் செயல்படுத்துவதன் வெற்றிகளைக் குறித்து நாம் விளங்கவேண்டியதாகும். மனித வளங்களில்  மறைந்திருக்கும் மேம்பாடுகளை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற கோட்பாடு இங்கே வெளிப்படுகிறது.  திருமறை தீர்க்கமாகக்  கூறுகிறது,
 
“ ( அதாவது பாவச்சுமையை ச் ) சுமக்கக்கூடியது எதுவும் மற்றொன்றின் ( பாவச் ) சுமையை சுமக்காது. மனிதனுக்கு அவன் முயற்சி செய்ததேயல்லாமல் ( வேறு) இல்லை.”  Namely, that no bearer of burdens can bear the burden of another; that human can have nothing but what he strives for “ ( அன்னஜ்ம் 53: 38-39). 

மேலும்

“ அல்லாஹ்விடமே நீங்கள் உணவைத்தேடுங்கள் “  Then seek your sustenance from Allah  “ (அல் அல்கன்பூத்   29:17) .

மேலேகண்ட நாம் விவாதித்த கருத்துக்களில் நாம் காண்பது இறைவன் படைத்து வழங்கி இருக்கும்  உலக வளங்கள் மனித குலம் ஒட்டு மொத்ததுக்கும் பற்றாதா    என்று அடிமனதில் கேள்விகளை எழுப்பலாம்.
ஆனால் எல்லோருக்கும் எல்லாம் படைத்திருப்பதாகவும் தேவைகளை இறைவனிடமே கேட்கவேண்டுமென்றும் அப்படியே கேட்டாலும் அவரவர் திறமைக்கு ஏற்றபடியே மெய் வருத்தக் கூலி வழங்கப்படும் என்றும் இறைவாசகங்களில் இருந்து  நாம் உறுதியுடன் விளங்கலாம்.  பற்றாகுறை என்பது படைத்தவன் படைத்ததல்ல.  மனிதனுடைய ஊதாரித்தனம், திறமையின்மை, பேராசை, பதுக்கல் , விரயம் செய்வது , வீணாக்குவது , தேவைக்கு மேலே சேர்த்து வைக்கும் எண்ணம் , முக்கியமாக நிர்வாகக் குறைபாடுகள், வேண்டியவர்களுக்கு சலுகைகள் ஆகியவையே பற்றாக் குறையை ( SCARCITY)  ஏற்படுத்துகின்றன.

மனிதன்,  என்னுடைய பொருள் , என்னுடைய பொருள் என்று ஆவலாகப் பறக்கிறான். உண்மையில் மனிதனுடைய பொருள் யாது என வினவப்பட்டபோது அவனுடைய பொருள் என்பது அவன் உண்டு முடித்திருக்கும் உணவு, அவன் அணிந்து கிழிந்துபட்ட ஆடைகள், அல்லாஹ்வுடைய வழியில் அவன் செலவழித்திருக்கும் செல்வம் ஆகிய மூன்றும்தான் என்று அண்ணல் பெருமானார்( ஸல்) அவர்கள் கூறியதாக நபி மொழி ( முஸ்லிம் ) குறிப்பிடுகிறது. 

திருடன் என்பவன் யார் என்று ஒரு கவிஞரிடம் கேட்கப்பட்டபோது  “ தேவைக்கு மேலே சேர்த்து  வைப்பவனே திருடன்! ஏனென்றால் இவன், இறைவன், எல்லோருக்குமாகப் படைத்ததிலிருந்து திருடுகிறான் ” என்று கூறினார்.

பற்றாக்குறை பற்றி இன்னும் சூடாக விவாதிக்க இருக்கிறோம் இறைவன் நாடினால்... அடுத்த வாரம்.
'மனிதவள ஆர்வலர்'
இப்ராஹீம் அன்சாரி
குறிப்பு : அதிரையின் பிரபல எழுத்தாளரும் மூத்த சகோதரருமாகிய இப்ராஹீம் அன்சாரி அவர்களால் 'இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்' என்ற தலைப்பில் 'அதிரை நிருபர் பதிப்பகம்என்ற இணையதளத்தின் மூலம் நெடுந்தொடராக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நெடுந்தொடர் அனைவரின் வரவேற்பையும் பெற்றுவருவது குறிப்பிடதக்கது.

Saturday, August 24, 2013

தலைவா ! தலைகுனிவா !? தலைமை ஏற்கவா !?

தலைவனுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை பார்க்கையில் என்ன பிரச்சனை, ஏன் பிரச்சனை, ஒன்றும் புரியாமல் அவர்கள் ரசிகர்கள் மண்டையை பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
   
ஒவ்வொரு கலைஞர்களுக்கும் தாம் எப்படியாவது சினிமா துறையில் பங்காற்ற வேண்டும் என்பது ஆழ்மனது ஆசையாக இருக்கும் காரணம் சுலபமாக மக்களிடத்தே பரிச்சயமாகும் வாய்ப்பு,கைநிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு, புகழ்,,, எல்லாமே இத்துறையில் வந்துவிட்டால் சுலபமாக கிட்டிவிடும் தனக்கென்று ஓர் இடம் கிடைத்தவுடன் அடுத்த ஆசை வரும் அதுதான் அரசியல்.

அறிஞர் அண்ணா அவர்கள் துவங்கி வைத்தது கருணாநிதி,எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா, இன்று எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் வரைக்கும் சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான் சினிமாவின் புகழ் ஆட்சி பீடத்திலும் அமர வைத்து விட்டது அமர்ந்த அத்துனைபேர்களும் அடுத்து ஒரு சினிமாகாரன்  ஆட்சிக்கு வந்துவிட கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கின்றார்கள் இதற்கு எம்.ஜி.ஆரும் விதிவிலக்கல்ல அன்று அவரிடம் அடிவாங்கியவர்கள் இன்று விஜய்க்கு இதுபோல் நிறைய பிரச்சனைகள் சந்திக்க வேண்டிவரும் என்று சமாதானம் கூருகின்றனர்.
   
சினிமாவில் சுலபமாக அநீதிக்கு போராடியவர்கள் தம் சொந்த வாழ்வில் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு காண திணறுகிறார்கள் தன் சொந்த படம் வெளிவர போராட உண்ணா விரதம் மேற்கொள்ள முடியாமல் பரிதவிக்கின்றனர் தம் ரசிகர்கள் இருந்த உண்ணாவிரதத்தையும் எனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்று அறிக்கை விடுகிறார் காரணம் புரியாமல் ரசிகர்களோ மனம் வெதும்புகின்றனர் வெள்ளை திரையில் காட்டிய நடிப்பால் சேர்ந்த கருப்புப்பணம் செய்யும் வேலைதான் தன் தலைவன் பரிதவிப்புக்கு காரணம் என்று பாவம் அவர் ரசிகர்களுக்கு தெரியாது
     
ஒரு நடிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை தடைசெய்வதில் காட்டும் அக்கறை நாட்டின் வளர்ச்சியில் காட்டட்டும் என்று காட்டமாக சூளுரைத்தார் என்ன மாயமோ தெரியல மறு அறிக்கையில் நான் அந்த அர்த்தத்தில் சொல்ல வில்லை என்று பல்டியடித்தார் [ எல்லாம் கருப்பு பணம் செய்யும் மாயம்தான் ]

நான் எப்ப வருவேன் எப்படிவருவேன் வரவேண்டிய நேரத்துக்கு சரியா வருவேன்னு பன்ச் டயலாக் பேசிக்கொண்டே தன்னோட காரியத்தை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கொண்டு போகின்றார் ஒரு நடிகர் ! எல்லா நடிகர்களும் கட்சி ஆரம்பிக்கும் வரையில் நிறைய சிரமங்களை அனுபவித்துதான் ஆகவேண்டும் கட்சி ஆரம்பித்து 10 சீட் ஜெயித்து விட்டால் பிறகு தடை ஏற்படுத்தியவர்களே சிவப்பு கம்பளம் வைத்து வரவேற்பார்கள்
   
தலைவாவிற்கு ஏற்பட்ட பிரச்சனை சில பாடங்களை நமக்கு கற்று தந்துள்ளது

1. அளவிற்கு மீறி கடன் வாங்கி எல்லா சொத்துக்களையும் அடமானம் வைத்த தயாரிப்பாளர் ஆட்சியாளரிடம் கெஞ்சிய கெஞ்சலும் தடை நீட்டித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலால் நெஞ்சுவலி மருத்துவமனையில் அட்மிட்

2. அளவிற்கு மிறிய சினிமா மோகம் நடிகர்மேல் பாசம். படத்தின் தடை தற்கொலைவரை அந்த ரசிகரை கொண்டு சேர்த்தது

3. ஊருக்கு உபதேசம் தாம் செய்வதெல்லாம் அநியாயம் சம்பாதித்த பணங்களை கணக்கு காட்டாமல் கருப்பாக்கியதன் காரணமாய் ஆட்சியாளர் மிரட்டும் மிரட்டலுக்கு கட்டுப்படவேண்டிய சூழல்.

இந்த மூன்று விஷயங்களும் நாம் கவனிக்கவேண்டிய விஷயமாகும்

தலைவா பட தலைப்பில் TIME TO LEAD இதுதான் அவர்களின் எண்ணமும் ? அவர்களின் பிரச்சனையும் ? பிரச்சனைக்கு தீர்வென்ன போராட்டமா அல்லது வாசகத்தை வாபஸ் வாங்குவதா தலைவன் எடுத்த முடிவு போராட தலைமை ஏற்றாரா ?  வாசகத்தை நீக்கி தலைகுனிவை ஏற்றுக்கொண்டாரா ?

மு.செ.மு.சபீர் அஹமது

Friday, August 23, 2013

பாலைவனத் தொழிலாளியி​ன் வேலை கூறும் பாடம் !

1)
சுயமாகத் தொழிலைத்தான் செயல்படுத்த வழியின்றி
அயல்நாட்டில் பணியாற்றி அடிமையாய் வளர்ந்துகொண்டு
துயரத்தைக் குடும்பத்தில் துடைத்திட்டப் பணமெல்லாம்
வியர்வையின் விதைகளிலே விளைந்திட்ட விருட்சமன்றோ ?

2)
இரைதேடும் பறவையாய் இழந்திட்டார் உறவையே
கரைதேடும் படகாகக் கலக்கத்தி லுழைக்கின்றார்
விரைவாகக் கடனெல்லாம் விடுதலையா குமென்றெண்ணி
தரைமீது தவிக்கின்றார் தகிக்கும்வெய் யிலிலன்றோ ?

3)
பாலையாம் வாழ்க்கையை பைஞ்சோலை யாயாக்க
பாலையாம் நாட்டிற்குள் பாதங்கள் வைத்தநாளாய்
காலைத்தூக் கத்தையே காசாக்கி வீட்டிற்கு
ஓலையாய் மாற்றத்தான் ஓயாமல் வேலையாம்

4)
இளமைக் கருக்க இரத்தம் சுருங்க
வளமைப் பெருக்க வடிக்கு முழைப்பை
களவாய்ச் செலவு; கடும்விலை ஏற்றம்
உளமே வெடிக்க உறிஞ்சிக் குடிக்கும்

ஓலை = காசோலை (cheque)
களவாய்ச் செலவு = களவாகுதற்போல் வீண் செலவு
--
யாப்பிலக்கணம்:
பாடல் 1 & 2 = இயற்றரவு கொச்சகக் கலிப்பா
பாடல் 3 & 4 = வெண்டளையால் வந்த கலிவிருத்தம்


"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு : 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இக்கவிதை கடந்த [ 24-08-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. 

Thursday, August 22, 2013

முஸ்லிம் பெண்களை ஏன் பீவீ என்று அழைக்கிறார்கள் ?

நான் பிறந்த ஊர் ஒரத்தநாடு. அது தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது.

தஞ்சாவூருக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையில் ஒரத்தநாடு ஒய்யாரமாய் உட்கார்ந்திருக்கிறது.

எனக்கு அப்போது வயது ஒரு 20 இருக்கும். என் அக்கா வீட்டிற்கு அருகில் ஒரு மாதா கோவில் இருக்கிறது. அதை மடம் என்று சொல்வார்கள்.

அங்கே நிறைய அனாதைக் குழந்தைகள் படிக்கிறார்கள். எல்லாம் இலவசம். அந்தச் சேவை...யை நினைத்தமாத்திரம் என் நெஞ்சம் நெகிழும்.

அனாதைகளை ஆதரிக்கும் எவரையும் எனக்குப் பிடிக்கும் கூடவே அவர்களுக்குக் கல்வி வழங்கினால் எத்தனை கருணை மனம் அது. போற்ற வார்த்தைகள் இல்லை.

மடத்தின் நிர்வாகியை அம்மாங்க என்றும் மற்ற மடத்துக் கன்னிகளை சிஸ்டர் என்றும் அங்கே அழைப்பார்கள். இந்த சிஸ்டர் என்பதை ஏன் தமிழ்ப்படுத்தவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.

நான் ஒரு விசயமாக அம்மாங்கவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். என்னை அன்போடு விசாரித்த அவர், பீவி எங்கே வரவில்லையா என்றார்கள்.

எனக்குத் திருமணம் ஆகி இருக்கவில்லை. அவர்கள் பீவி என்று மரியாதையாகச் சொன்னது என் மூத்த சகோதரியை. என் சகோதரிமீது அவர்களுக்கு மரியாதை அதிகம்.

எனக்குக் குபீர் என்று சிரிப்பு வந்துவிட்டது. என் சிரிப்பை அடக்க கொஞ்ச நேரம் ஆனது.

ஏன் சிரிக்கிறீர்கள் என்று அம்மாங்க கேட்டார்.

Mother என்று ஆங்கிலத்தில் சொல்வதை அம்மா - அம்மாங்க என்று தமிழ்ப்படுத்திச் சொன்னால் அதில் ஓர் அர்த்தம் இருக்கிறது.

தமிழுக்குச் சம்மந்தமே இல்லாத பீவீ என்ற சொல்லை என் சகோதரிக்குப் பயன்படுத்துவது எப்படி சரி?

கல்லாதவர்கள் எதையோ சொல்லலாம் கற்றவரான, ஒரு மடத்தின் நிர்வாகியான நீங்கள் எப்படி அப்படிச் சொல்லலாம் என்று கேட்டேன்.

சற்றே சங்கடப்பட்டார் ஆனால் தான் சொல்வது சரிதானே என்ற ஐய உறுதியோடு என்னிடம் விளக்கம் கேட்டார்.

பீவீ என்பது பீபீ என்ற சொல் மருவி வந்தது. Bibi என்றால் உருதுவில் Miss அதாவது செல்வி என்று பொருள்.

பீபீ ஜெயலலிதா என்றால் பொருள் சரி. ஆனால் அப்படியா அழைக்கிறோம்? ஏன் அப்படி அழைப்பதில்லை? எவரேனும் விடை சொல்வார்களா?

ஏனெனில் ஜெயலலிதா ஒரு முஸ்லிம் பெண்மணி இல்லை. அவ்வளவுதான்

உருது, ஆப்கானிஸ்தான் மற்றும் சில பகுதியினர் பீபீ என்று மணமான பெண்களையும் கன்னியமாய் அழைத்தார்கள்.

பீபீ என்றால் மனைவி என்ற பொருளிலும் பயன்படுத்துவார்கள். உங்க பீவீ யாரு என்றால் உங்கள் மனைவி யார் என்று பொருள்.

பீபீ என்பது உருது.

ஒரு தமிழ்ப் பெண்ணை சகோ (சகோதரி) என்றுதானே அழைக்க வேண்டும்? அல்லது திருமதி என்று மணமான பெண்களையும் செல்வி என்று மணமாகாத பெண்களையும் தமிழ் வழக்கப்படியல்லவா அழைக்க வேண்டும்?

இந்த பீபீ பீவீ எல்லாவற்றையும் உருது மற்றும் ஆப்கானிஸ்தான் காரர்களிடமே விட்டுவிடுங்கள். தமிழர்களாகிய நமக்கு அது தேவை இல்லை. அது நம்மைத் தாய்மொழி அறியாதவர்கள் என்ற நிலைக்குக் கொண்டு சென்று விட்டுவிடும்.

ஓர் முஸ்லிமிற்கு தாய், தாய்மொழி, தாய்மண் என்பனவெல்லாம் மிக அவசியம்.

இஸ்லாமிய வேத நூலை எவரும் அவரவர் தாய் மொழியிலேயே பயிலலாம். ஆர்வம் இருந்தால் தாராளமாக குர்-ஆனின் மொழியை அரைகுறையாய் அல்லாமல் ஆழமாகக் கற்றும் பயிலலாம்.

குரானின் மொழி அந்தக் கால அரபுமொழி. அதன் சொற்களுக்கு இந்தக்கால அரபிகள் சிலருக்கே பொருள் தெரிவதில்லை.

சங்ககாலத் தமிழைப்போல குர்-ஆனின் மொழி கலப்படமற்றத் தூய்மையானது.

முதலில் தமிழ்நாட்டின் முஸ்லிம்கள் சரியாகப் புரிந்துகொண்டால்தான் தவறாகச் சொல்லும் மற்ற மதத்தினருக்கு எடுத்துச் சொல்ல முடியும்.

அன்புடன் புகாரி

Wednesday, August 21, 2013

நபிதாஸின் அறிவுத்தேன் - குறுந்தொடர்

ஆதிகாலத்திலிருந்து மனிதனுக்கு ஒரு தேடல் இருந்து வருகிறது. தன்னை, மற்ற உயிரினங்களை, பூமி; வானுலகம்; பிரபஞ்சம் இவைகளை படைத்தது யார் ? என்பதே அத்தேடல். இன்றும் பல மதம், மார்கங்கள் வந்தும் இத்தேடல் இவ்வுலகில் தொடர்ந்து இருந்துதான் வருகிறது.

மதம்/மார்கங்கள் அதில் ஒன்றை ஏற்றுக்கொண்ட மனிதன், அதில் அவன் தெளிவின்மையாலும், தெளிவைத் தருபவர்களை தெரியாததினாலும் அல்லது இதற்காக தனி முயற்சிகொள்ளாததினாலும் அல்லது தனது கேள்விகளுக்கு தகுந்த பதில் தன்னைச் சுற்றிவுள்ளவர்களிடமிருந்து கிடைக்காததினாலும், கிடைக்கும் பதில் பொருத்தமின்மையினாலும், அல்லது அதை புரிந்துகொள்ள முடியாமைனாலும் இவ்வாறு பலப்பல காரணங்களினால் படைத்தவன் யார் ? என்புது பரிபூரணமாக புரியாததினால் இவ்வுலகில் இன்னும் இத்தேடல்  இருக்கத்தான் செய்கிறது. அதனாலும் மேலும் நம்பிக்கையில் மனிதன் கட்டுண்டாலும் நாத்திகமும் இவ்வுலகில் இல்லாமல்லாகிடவில்லை.

சிலர் நடத்தும் பாடம் தெளிவாக நன்கு புரியும் என்பதுபோல் சொல்பவர்கள் சொன்னால் புரிந்துகொள்ள முடியாமல் போகாது. அவர்கள் படித்தறிந்ததுமட்டுமல்லாமல் இறைவனை அறிந்தவர்களை அறிந்தவர்கள், அனுபவத்தாலும் இறைவனை அறிந்தவர்கள், அடைந்தவர்கள் அவர்களே மகான்கள் என்ற அந்த சிலர். குறிப்பிட்ட சில வருடங்கள் படித்தவர்கள் எல்லாம் ஞானங்களை, உண்மைகளை, தெளிவாக அறிந்தவர்களாகவும்; அதனை இவ்வுலகிற்கு அறியப்படுத்தியவர்களாகவும் ஆகிவிடவில்லை. இறைநாட்டம் பெற்றவர்களே ஞானங்களை, உண்மைகளை அறிந்து, அடைந்து இவ்வுலகத்திற்கு தந்தனர்.

சிலர் தன்தனது புரிதலுக்கேர்ப்ப ஒவ்வொருவிதமாகத்தான் இறைவனை அறிந்துள்ளனர். ஒவ்வொருவரையும் வினவினால் ஒவ்வொருவிதமான பதில் தருவார்கள்.  பல தீர்க்கதரிசிகள் வந்தும், பல ஞானிகள் தோன்றியும், இவ்வுலகில் தெளிவு புரட்சிகள் செய்தும் அறியாமையும் வாழ்ந்துதான் வருகிறது. அதனால்தான் இருக்கும் மதம்/மார்கங்களிலும் அதனுள் பலப்பிரிவுகள் உண்டாகிவிட்டது. இதை யாரும் மறுக்க முடியாது.
காலத்துக்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு காலப்பரிணாம வளர்ச்சிக்கு ஏற்பவும்; அறிவு தெளிவிற்கு ஏற்பவும் தத்துவங்கள் பல வந்தன. துவைதம், விசிஷ்டா துவைதம், அத்வைதம் என்பன அவைகள்.

துவைதம் இதில் இரண்டு உள்ளமைகள் உள்ளன. இறைவன் ஒர் உள்ளமை.
மற்ற உள்ளமையிளிருந்து தனக்கு முற்றிலும் மாற்றமான படைப்பினங்கள் படைக்கப்பட்டுள்ளன என்ற தத்துவம் உடையது.

விசிஷ்டா துவைதம் இதிலும் இரண்டு உள்ளமைகள் உள்ளன.  இறைவன் ஒர் உள்ளமை.  மற்ற உள்ளமையிளிருந்து தனக்கு முற்றிலும் மாற்றமான படைப்பினங்கள் படைக்கப்பட்டுள்ளன. மற்றும் படைப்பினத்தில் சில நல்லொழுக்கமுடன் வாழ்ந்து வருபவர்களிடம் இறைவன் வாசம்புரிகிறான் என்ற தத்துவத்தில் உள்ளது.

அத்வைதம் இதில் இரண்டு உள்ளமைகள் இல்லை. ஒரே உள்ளமை அது தன் அறிவிலே கணக்கற்ற  படைப்புகளை படைத்துள்ளது. இருந்தபோதிலும் அவ்வறிவு தான் தானாகவே இருக்கின்றது. படைப்புகள் பின்பு அதனளவில் மீண்டுவிடுகிறது. இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஒவ்வொரு தத்துவமும் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. மூன்றும் வேவ்வேறு தத்துவம் உடையதாக இருந்தும் அவைகளில், அவர்கள் காண்பிக்கும் இறைவன், இது என்று கூறியும் இறைதேடல் இருந்ததுதான் வருகிறது. தான் எதோ ஒரு இலக்கணத்தில் மிக சக்திவாய்ந்தது என்று அறிந்ததை, இறைவன் என்று அத்வைதத்தைத் தவிர மற்ற கொள்கைக்காரர்கள் அமைத்துக் கொண்டனர்.

அவைகளில் உருவம் தெளிவாக தெரிந்ததும் உண்டு, உருவம் தெரியாததும் உண்டு. உருவம் தெரியாதவைகளுக்கு தன் கற்பனைகேற்ப அவர்கள் உருவங்கள் அமைத்துக்கொண்டனர். இவைகளை  இறைவன் என்றும் அல்லது அவைகள் அவர்கள் இறைவனின் பிரதிநிதிகள் என்றும் ஏற்றுக்கொண்டனர். அவைகள் மூலமாக அவ்விறைவனை அவர்கள் வழிபடுகின்றனர்.

இக்கொள்கைகளில் இவர்களின் அறியாமையாலோ அல்லது அறிவு திருத்தத்தாலுமோ காலப்போக்கில் ஒவ்வொன்றிலும் மற்ற கொள்கைகள் புகுந்து அதில் பலப்பல பிரிவுகள் உண்டாகிவிட்டது.
அறிவுத்தேன் தொடரும்...
நபிதாஸ்

Tuesday, August 20, 2013

பொருளாதாரம் நமக்கு கைகூடுமா !?

பொருளாதாரம் என்பது வெறும் பொருளோடு மட்டும் அல்ல,  ஒரு மனிதனின் அந்தஸ்தோடும் ஒப்பிடப்படுகிறது ! சொந்தங்கள் ஓரங்கட்டப்பட்டு செல்வந்தர் சிறப்பிக்கப்படுவர்கள் கல்யாண வைபோகத்தில். ஏன் ஒரு நாடே பொருளாதாரத்தின் அடிப்படையில் தான் முன்னேறிய நாடாக கருதப்படுகிறது பொருள் இல்லாதோருக்கு இவ்வுலகமில்லை எனும் வார்த்தை ஒரு மூதறிஞரின் பண்டைய வார்த்தை.

காசேதான் கடவுளடா எனும் பிதற்றல் பண ஆசை பிடித்தோரின் தார்மீக வார்த்தை.  

ஒரு மனிதனுக்கு அத்யாவசிய தேவை பொருளா ?அல்லது தாரமா ? என்றால் இரண்டுமே என்போம். பொருள் நம் வாழ்வு சிறக்க! தாரம் நம் சந்ததிகள் செழிக்க. பெற்றோரை பிரிந்து,மனைவி மக்களை பிரிந்து உற்ற நண்பர்களை பிரிந்து பொருள் ஈட்ட வேண்டும் என்ற நோக்கிற்காக எவ்வளவு சிரமங்களை சுமக்க வேண்டி இருக்கிறது?! என்ன செய்ய பொருளாதாரத்தை கொண்டுதான் அஸ்திவாரமே அமைந்திருக்கிறது ! மேலும் பார்ப்போம்...
 
உண்டியல் இல்லா வழிபாட்டுத்தளங்கள் உண்டா ? பொருளாளர் இல்லா கட்சிகள் உண்டா ? நிதியமைச்சர் இல்ல நாடுகள் உண்டா ? ஒரு பள்ளிவாசலின் முத்தவல்லி, ஒரு கோயிலின் அறங்காவலர், பூசாரியோ, மௌலானாவோ இருக்க மாட்டார் மாறாக பணம் கொழுத்த ஓர் ஆசாமிதான் அந்த பொறுப்பில் இருப்பார். அந்த மதத்தைப்பற்றி படித்தவர்கள் மணியாட்டவும், தொழுகை நடத்தவும் மட்டுமே பயன் படுத்தப்படுவார் வருமானம் இல்லா வணக்கஸ்தலம் படும்பாடு ஏராளம்.
 
இஸ்லாத்தின் 5 கடமைகளில் கடைசி 2 கடமை பொருளாதாரம் சம்மந்தப்பட்டது. ஒரு வரைமுறை கணக்குப்படி பணம் உள்ளோர்க்கு ஜகாத் எனும் சட்டம் அமலாகும். அதுபோல் பணபலமும், உடல் பலமும் உள்ளோர்க்கு ஹஜ் புனித பயணம் கடமையாகிறது பணம் காசுகள் சேர்க்க ஆசைப்பட்டார் இவ்விரண்டு கடமைகளும் நிறைவேற்றலாம் என்ற ஆசையோடு சம்பாதிக்கும் பொழுது வருமானமும் பர்கத் உண்டாகிறது.

தன்னிகறில்லாத்தலைவர், இஸ்லாமியர்களால் ரஸூல் என போற்ற படுபவரான, முஹம்மது [ ஸல் ] அவர்கள் ஏழ்மையை தான் விரும்பினார்கள் செல்வத்தை வெறுத்தார்கள் ஒரு முறை இறைவன் புறத்தில் இருந்து செல்வம் தரப்படவா என கேட்க்கும் பொழுது அவர்கள் மறுத்தார்கள் மாறாக எனது நாளைய உணவு தேவைக்காக இன்று உன்னிடம் கை ஏந்துவதையே விரும்புகிறேன் என்று பதில் அளித்தார்கள். அரசு கஜானாவில் இருந்து சம்பளமாகக்கூட பொருளோ, பணமோ எடுத்துக்கொள்ளவில்லை எனது வாரிசுகளும் எடுப்பது ஹராம் என்றார்கள் [ இன்றைய அரசியல் வாதிகள் கவனிக்க வேண்டிய விஷயமாகும் ]    தனக்கு கிடைக்கும் பரிசுப்பொருள்களை வீட்டுக்கு கொண்டு வந்ததில்லை வழியிலேயே ஏழைகளுக்கு பங்களித்து விடுவார்கள் உணவில்லாமல் எத்தனையோ நாட்கள் கடந்திருக்கின்றது அவர்கள் வாழ்வில்.

பொருளாதாரத்தை ஒருவர் எப்படி நேசிக்கிறாரோ, எப்படி சிந்திக்கிறாரோ, அப்பொருளாதாரம் அவர் என்னப்படியே அவர்கட்கு கைகூடும்.

மு.செ.மு.சபீர் அஹமது

Saturday, August 17, 2013

[ 8 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ கிராமத்து ராசாவும்... பட்டணத்து கூசாவும்... ]

கிராமத்து ராசாவும் ! பட்டணத்து கூசாவும் !
தொலை தொடர்பு முன்னேறிய காலம் ஊருக்கு போன் பேச ஆசைபட்டால் டெலிபோன் கார்டு வாங்கி பொதுவாக உள்ள தொலை பேசி மூலம் பேசி கொள்ளலாம் .விடுமுறை காலங்களில் டெலிபோன் பூத்துகளில் வரிசையில் நின்று பேசுவார்கள். ஒருவர் பேசி முடியும் வரை மற்றவர் முகம் போகும் போக்கை பார்க்க வேண்டுமே! இன்று நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது.

சிலர் மணி கணக்கில் பேசுவர் குளிர் என்று பாராமல் காத்திருந்து பேசும் நிலை ஊரில் உள்ளவரோடு உரையாட மனம் ஏங்கும்..இப்படி காத்திருக்கும் போது ஒவ்வொருவரின் குடும்ப விசயங்களை கூட மற்றவர் காதுபட கேட்க நேரும் .

இதில்  படிப்பினைக்காக இரண்டே உரையாடலை முன் வைத்து இனி வரும் இரண்டு மூன்று வாரங்கள் இது பற்றி விவாதிப்போமா ?

ஒரு கிராமத்துக்காரர் ! ஏதோ ஒரு கட்டிட தொழிலாளி போன் பேசுகிறார் .

ஆத்தா !

எப்படி இருக்கே ?

நம்ம வீட்டு லட்சுமி ( பசு மாடு ) கன்று போட்டுடிச்சா ?

ரொம்ப சந்தோசம்மா

அத்தான்... வீட்டுக்கு வரப்போக இருக்காரா ?

சரி... சரி...

முக்கியமா ஒரு விஷயம்

நம்ம வீட்டுக்கு கிழக்கால மூணுமா வயல் விலைக்கு வருவதா கேள்வி பட்டேன். மாரிமுத்து மாமாவிடம் சொல்லி நமக்கு கிரயமா வாங்கித்தர சொல்லு... பணம் சேர்த்து வச்சிருக்கேன் அனுப்பி விடுகிறேன்.

அம்மா ஊருக்கு வரமுன்னே இன்னுமொரு சிறிய தோப்பு தொறவு வாங்கியாகனும் ஆத்தா

உடம்ப கவனிச்சிக்கோ... வச்சிடட்டுமா... எல்லோரையும் கேட்டதா சொல்லு ஆத்தா ...!

என்று பேசி வைக்கிறார் கிராமத்து ராசா !

நம்ம பட்டணத்துக்காரர் போனை எடுக்கிறார்

இரண்டு முறை டயல் செய்து மூன்றாவது முறை...

ஹலோ ! எங்கம்மா போனே ?

வீட்டில் எல்லோரும் சுகமா ?

வீட்டில் வாங்கிய ஃபிரிஜ் நல்லபடியா வேலை செய்கிறதா ? பார்த்து உபயோகிங்கள் அது எனது இரண்டு மாதச்சம்பளம். இன்னும் ஆறு ஏழு மாதத்தில் ஊர்வர இருக்கிறேன். எல்லா சாமான்களும்
வாங்கி வருகிறேன். இனி வீட்டு செலவுக்கு பணம் அனுப்ப இயலாது. நான் அனுப்பியதை வைத்து சமாளித்து கொள்ளுங்கள்.

சரி.. சரி... கார்டு டயம் முடிய போகிறது. எல்லோரையும் கேட்டதாக சொல்லுமா !

இந்த இரண்டு உரையாடலில் உள்ள நிதர்சன உண்மையை எண்ணி பார்க்கிறேன்

கிராமத்து ராசா தான்வந்த நோக்கத்தை சரியாகப் பயன் படுத்தி நிலம் வாங்கி அதில் பயிரிட்டு  பலன் காண்கிறார்.

பட்டணத்துக்காரரோ ஃபிரிஜ் வாங்கி நடு வீட்டில் உரம விட்டு மின்கட்டணம் கொடுத்து அழுகிறார்.

இதில் யார் ராசா !? யார் கூசா !? நீங்களே சொல்லுங்கள்...

அது மட்டுமா ! நமதூரில் முன்பெல்லாம்... பழைய இய்யம் பித்தளைக்கு பேரிச்சம் பழம் என கூவி வருவார்கள்.

இப்போது மினி லாரிகளில் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தபடி வரும் வியாபாரம் என்ன தெரியுமா ?

பழுதான ஃபிரிஜ் வாங்கறது... பழுதான கிரைண்டர் வாங்கறது...நகைப்புக்காக சொல்ல வில்லை. வளைகுடாவில் சிந்திய வியர்வை ஊரில் விரயமாகும் நிலை ! இதனை சிந்திக்கவே சுட்டிக்காட்டினேன்.

அடுத்த வாரம் மனைவி ஒரு மந்திரி !?
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

சவாரி

தந்தையின் அணுவும் கருவறை நோக்கித்
****தனிமையில் முதன்முதற் பயணம்
முந்தவும் பின்னே இறையருள் கொண்டு
****முயற்சியால் வென்றதும் பயணம்
பந்துபோ லுருண்டு பதிவுடன் திங்கள்
****பத்தினில் கருவறைப் பயணம்
வந்திடும் தருணம் வந்ததும் நலமாய்
****வையகம் கண்டதும் பயணம்

கருவறைப் பயண மிருந்ததை மறந்து
****கனவினில் மிதந்திடும் நீயும்
ஒருமுறை எழும்பித் தீர்ப்பினைக் காணும்
****உறுதியை நம்பியே மரணம்
வருவதும் பயணம்; அதுவரை உலகில்
****வாழ்வதும் நிலையிலாப் பயணம்
பருவமும் மாறி வளர்சிதை மாற்றம்
****படிப்பினை கூறிடும் பயணம்
மடியினில் சாய்ந்து தாயுடன் பயணம்
****மகிழ்வுடன் தந்தையின் தோளில்
நடைதனைப் பழக்கும் நண்பனாய் வந்த
****நடைபயில் வண்டியில் பயணம்
தடைகளை யுடைத்துப் புரளவும் முயன்று
****தவழவும் வாய்த்ததும் பயணம்
விடைகளாய் அறிவும் தெளிந்திடப் பள்ளி
****வகுப்பினிற் சேர்ந்ததும் பயணம்

பிழைப்பினை நாடி தாயகம் விட்டுப்
****பிரிந்ததும் சுவையிலாப் பயணம்
உழைப்பினப் பொருத்து ஊரெலாம் மாறி
****உலகினில் உழன்றிடும் பயணம்
தழைத்திடும் இளமைப் பருவமே எமக்குத்
****தந்தநற் றுணையுடன் பயணம்
அழைத்திடும் காலம் வரும்வரை நாமும்
****அவனியில் உலவுதல் பயணம்

மனிதனாய் வாழ நல்வழி தேடி
****மார்க்கமும் பயிலுதல் பயணம்
புனிதமாய்க் கருதும் புகலிடம் தேடி
****புறப்படல் அருள்நிறைப் பயணம்
இனிவரும் மறுமை இனியதாய் அமைய
****இறைவனை வழிபடும் பயணம்
கனியென நினைத்த வாழ்க்கையின் பின்னே
****கடைநிலைப் பயணமே மரணம் !

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு : 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இக்கவிதை கடந்த [ 15-08-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. 

Friday, August 16, 2013

ஒரு முஸ்லிம் நண்பரை ஏன் பாய் என்று அழைக்கிறார்கள்?

இஸ்லாம் சகோதரத் துவத்தைப் போற்றும் ஒரு மார்க்கம்.

எல்லோரும் எல்லோரையும் ஒரு சகோதரனைப்போல உறவாகக் காணவேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டது.

அயலானை நேசி என்பது இஸ்லாத்தின் அடிப்படைப் பண்பு.

இதில் பாய் எங்கிருந்து வந்தது ?

ஆங்கிலத்தில் Bro அழைத்துக்கொள்வார்கள். இது Brother என்ற சொல்லின் சுருக்கம்.

விஜய் துப்பாக்கி படத்தால் முஸ்லிம்களைச் சுட்டுவிட்ட காயத்துக்கு மருந்துபோடுவதாய் தலைவா படத்தில் Bro Bro என்று சொல்லித் திரிவாரே அந்த Bro தான் இது.

என்றால் தமிழர்கள் எப்படி முஸ்லிம்களை அழைத்துக்கொள்ள வேண்டும் ?
பாய் பாய் என்றா ?

இல்லை.

அது தவறாக அழைப்பு.

சரியான அழைப்பு ”சகோ” என்று  இருக்க வேண்டும். சகோதரா என்பதன் சுருக்கம்தான் சகோ.

பிறகு ஏன் பாய் என்று அழைக்கிறார்கள் ?

இது உருது மொழியைத் தமிழில் திணிக்க விரும்பிய அந்தக்கால சில முல்லாக்களால் வந்த விணை.

உருது மொழியில் பாய் என்றால் சகோதரா என்று அர்த்தம்.

பாய் என்று ஒரு தமிழன் அழைப்பது அவன் தன் தாய்மொழிக்குச் செய்யும் துரோகம்.

தமிழ் வட்டத்தில் தமிழ் நாட்டில் சகோ என்று அழைப்பதே சரி.

தமிழரல்லாத இடங்களில் Bro என்று ஆங்கிலத்தில் அழைக்கலாம். அல்லது சகோ என்றே அழைக்கலாம். காலப்போக்கில் புரிந்துகொள்வார்கள்.

அரபு மண்ணில் அஹூ என்று அழைப்பார்கள். அஹூ என்றாலும் சகோ என்றுதான் பொருள்.

இனியாவது இந்த பாய் பாய் என்னும் நோயை விட்டு விடுங்கள். அதைக் கேட்கும்போது தமிழ் மனத்தின் காதுகள் கூசுகின்றன அல்லவா ?

அன்புடன் புகாரி

Thursday, August 15, 2013

எம் தந்தை !

[இறைவன் அருளால்]
விந்தை செலுத்தி
விந்தை புரிந்தவனே !
இப்பந்துலகம்
வந்துதிக்க
காரனியாணவனே
எந்தையே
என் விந்தையே

என் பிஞ்சிப்பாதம்
பூ உலகில்
கால் பதிக்க
விரல் தந்தவனே
உன் இடுப்பளவு
நான் வளர்கையில்
உயரப்பிடித்து
நீ காணாததை
நான் கண்டுகளிக்க
வைத்தவனே
உன் தோல் மட்டம்
நான் எட்ட
தோழனாய் பழகியவனே
எந்தையே
என் விந்தையே !

உன் காதலின் [ தாய் ]
அன்பை
எனக்கும்
பகிர்ந்தளித்தவனே
எந்தையே
என் விந்தையே !

உனது உரிமையை [ சொத்து ]
எனதுரிமையாக்கியவனே
எந்தையே
என் விந்தையே !

தந்தையின் பாசம், அவரின் அரவணைப்பு, கண்டிப்பு, கனிவு, செல்லும் இடமெல்லாம் படிப்பினைகள்,,, பல தருவார் அவர்தான் விந்தையிலும் விந்தை நம் தந்தை இது சிலர்க்கு கிட்ட வாய்ப்பில்லாமல் போகும் காரணம் வேலை நிமித்தமாக தொலைதூற இடங்களில் குடும்பத்தை பிரிந்து இருப்பதால் தான் அந்த துரதிஸ்ட நிலை.
 
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை எனும் கூற்றிற்கு தந்தையில் சொல் செல் வழியே தனையனை போய்சேர தந்தையின் அறிவுரை கேட்டு அவன் நடந்தானா என தரிந்துகொள்ள பிறரின் உதவிவேண்டும் தந்தைக்கு. போதனைகள் அனைத்தும் மெயில் வழியிலும் Skype யிலும் தான்.
 
பொருள் சேர்க்க தெரிந்த நமக்கு பிள்ளைகளின் வளர்ச்சியை நேரடியாய் பார்க்கும் அனுபவங்கள் மிக குறைவு தந்தையோடு வளரும் பிள்ளைகளுக்கு அவர் வெளியில் அழைத்து செல்லும் பொழுது வாங்கி கொடுக்கும் தீன் பண்டங்கள் பிள்ளைக்கு சேர்க்கிறது [ உடலுக்கு ஒத்துக்கொள்கிறதா ] எனவும் தந்தை பார்ப்பார் ஒத்துக்கொள்ளாத பண்டங்களை இனி வாங்கி கொடுக்கமாட்டார். இதுவெல்லாம் வெளிநாட்டு பிரிவில் கிடைக்காது நாம் அனுப்பும் பணம் பிள்ளையின் எல்லா தேவைகளையும் நிறைவு செய்கிறது அது அவன் ஆழ்மனதில் பதிந்துபோய் அவன் பெரியவனாகி நாம் முதியவனாகி பிள்ளையின் ஆதரவு வேண்டில் இருக்கையில் பணம் காசுகள் மட்டும் தாராளமாய் நமை வந்து சேரும் பிள்ளைகள் அருகில் இருக்கும் ஆதரவு தவறிவிடும்.
   
நீண்ட நாள் வெளிநாட்டில் இருந்த நண்பர் ஒருவரை சந்தித்தேன் நலன்கள் விசாரித்துவிட்டு மேல் சொன்ன விஷயங்களை கலந்துரையாடினோம் அத்துனைகளையும் ஒத்துக்கொண்டார் இந்த பிரச்சனைகளுக்காகவே செலவுகளை பார்க்காமல் நான் குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டேன் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார் நான் கேட்டேன் உன் குடும்பம் என்றாயே உன் தாயும் தந்தையும் யார் குடும்பம் என்றேன் சிந்தனையை எங்கோ செலுத்தி சிலையாகிப்போனார். இத்துணைக்கும் அவருக்கு கூட பிறந்தவர் யாரும் இல்லை அவரின் பெற்றோர்க்கு அவரே ஆதரவு என்ன செய்ய பொருளாதாரம் படுத்தும் பாடு நமை எப்படியெல்லாமோ வாழவைக்கிறது அடுத்தவாரம் பொருளாதாரம் பற்றி பார்ப்போம்.
மு.செ.மு.சபீர் அஹமது

Saturday, August 10, 2013

[ 7 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ உழைப்பால் உயர்ந்தவன் ]

அரபியிடம் சேவை புரிபவர்கள் பொறுமையாக கனிவான சேவை செய்து அவர் தம் அன்பை பெற்று வாழ்வில் பெரும் முன்னேற்றம் அடைந்தவர்கள் பலர் உண்டு. அதில் நான் கண்ட நிகழ்வை இங்கு பதிய விரும்புகிறேன்.

அரபு நாடுகளில் கிளீனிங் கம்பெனி அதிக மாக உள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு ஆபீஸ் பாய் மற்றும் உதவியாளர் போன்ற சேவைகளும் உபரியாக செய்யும். உயர் பதவிகளில் உள்ள அரபிகளுக்கு நேரடி தொடர்புகள் உதவியாளர் மற்றும் ஆபிஸ்பாய் களுக்கு  மட்டுமே.!

இது போன்ற சந்தர்பங்களில் ஆபிஸ் பாய் இன்முகத்துடன் பெரிய பதவியில் இருக்கும் அரபிக்கு சேவை புரிவர் ஆனால் கம்பெனியின் நேரடி அலுவலராக செயல்படாத அந்த ஆபீஸ் பாய்க்கு க்ளீனிங் கம்பெனியின் சொற்ப தொகையே சம்பளமாக கிடைக்கும். இது அரபிக்கும் தெரியம் எனவே மாதமாதம் கணிசமான தொகையை அன்பாக அளிப்பார். இது பொதுவான நடை முறை.

ஒருவர் வாழ்வில் நடந்த சோதனைக்கு பிறகு கிடைத்த சாதனை பற்றி இந்த வாரம் கூறுகிறேன்...

ஒருநாள் ஆபீஸ் பாய் ..அரபிக்கு சேவை செய்யும்போது ..இன்முக சேவை இல்லாது சோகமாய் சேவை செய்தான் அந்த ஆபீஸ் பாய்...காலை நேரம் அலுவல் துவங்கும் தருவாயில் ஆபீஸ் பாயின் சோகமான முகம் கண்டு அதிர்ந்தார் !

ஏன் சோகமாய் இருக்கிறாய் ? என கேட்டார்...

எங்கள் கம்பெனியில் ஆள் குறைப்பு செய்கிறார்கள். பலரை ஊருக்கு திருப்பி அனுப்புகிறார்கள். மீதம் இருப்பவர்களுக்கு சம்பள குறைப்பு செய்கிறார்கள். இந்த வேலையால் எனக்கு எதிர் காலம் இல்லை என கூறினான்.

என்ன செய்வதாக உத்தேசம் ? என அரபி கேட்டார்.

இந்தியா சென்று ஜவுளி கடை வைக்க போகிறேன் என்றான்.

அப்படியா ! உனக்கு இந்த நாட்டிலேயே கடை வைத்து தருகிறேன். என கூறி அதன் படியே சிறிய கடையும் வைத்து கொடுத்தார்.

கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கடின உழைப்பின் மூலம் ஊரிலேயே பெரிய கடையாக மாற்றினான். அந்த அரபிக்கு கிடைத்த சம்பளத்தை விட மூன்று மடங்கு பணம் ஈட்டி கொடுத்தான். அவனும் நல்ல நிலைக்கு  வந்தான்.

எனவே அன்பு சகோதரர்களே... நல்ல வாய்ப்பு கிடைத்தால் நழுவ விடாதீர்கள்..!

அடுத்த வாரம்... கிராமத்து ராசாவும் !? பட்டணத்து கூசாவும் !? காத்திருங்கள்...
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, August 9, 2013

கவித்தீபத்தின் தேடல்...

தண்ணீர் தாகத்தைத் தேடும்
தாகம் தண்ணீரைத் தேடும்

உணவு பசியைத் தேடும்
பசி உணவைத் தேடும்

காற்று சுவாசத்தைத் தேடும்
சுவாசம் காற்றைத் தேடும்

நிலம் மழையைத் தேடும்
மழை நிலத்தைத் தேடும்

வானம் நிலவைத் தேடும்
நிலவு வானத்தைத் தேடும்

நெருப்பு அடுப்பைத் தேடும்
அடுப்பு நெருப்பைத் தேடும்

மூளைக் கல்வியைத் தேடும்
கல்வி மூளையைத் தேடும்

ஞானம் தேடலைத் தேடும்
தேடல் ஞானத்தைத் தேடும்

பசி வயிற்றைத் தேடும்
வயிறு பசியைத் தேடும்

வாழ்க்கை சுகத்தைத் தேடும்
சுகம் வாழ்க்கையைத் தேடும்

நோய் நிவாரணத்தைத் தேடும்
நிவாரணம் நோயைத் தேடும்

 இரணம் மனிதனைத் தேடும்
மனிதன் இரணத்தைத் தேடுகின்றான்

மண் மனிதனைத் தேடும்
மனிதன் மண்ணைத் தேடுகின்றான்

நீர்க்குமிழியை நீர் தேடும்
நீரை நீர்க்குமிழி தேடும்
நீருக்குள் நீர்க்குமிழ்யும் உண்டு
நீர்க்குமிழிக்குள் நீரும் உண்டு

வரலாறு கூறும்
வள்ளல் நபி(ஸல்) வாழ்வா ?

வள்ளல் நபி(ஸல்) கூறும்
வாழ்வியல் வரலாறா ?

தேடுங்கள் கிடைக்கும்
தட்டுங்கள் திறக்கும் !
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு : 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இக்கவிதை கடந்த [ 08-08-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. 

Thursday, August 8, 2013

ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள் !

அளவற்ற அருளாளனின் - என்றும்
            நிகரற்ற அன்பாளனின்
களவற்ற உள்ளங்களில் - நாளும்
            குறைவற்று வாழ்பவனின்
நிறைவான அருள்நாளிது - நெஞ்சம்
            நிமிர்கின்ற பெருநாளிது
கரையற்ற கருணையினை - ஏந்திக்
            கொண்டாடும் திருநாளிது

மண்ணாளும் செல்வந்தரும் - பசியில்
            மன்றாடும் வறியோர்களும்
ஒன்றாகக் தோளிணைந்தே - தொழுது
            உயர்கின்ற நன்நாளிது
இல்லாதார் நிலையறிந்து - நெஞ்சில்
            ஈகையெனும் பயிர்வளர்த்து
அள்ளித்தினம் பொருளிறைக்க - வறுமை
            அழிந்தொழியும் திருநாளிது

சொந்தங்கள் அள்ளியணைத்து - நட்பின்
            பந்தங்கள் தோளிழுத்து
சிந்துகின்ற புன்னகையால் - உறவைச்
            செப்பனிடும் சுகநாளிது
உள்ளத்தின் மாசுடைத்தும் - தளரும்
            உடலுக்குள் வலுவமைத்தும்
நல்லின்ப வாழ்வளிக்கும் - வலிய
            நோன்பில்வரும் பெருநாளிது

நபிகொண்ட பண்பெடுத்து - அந்த
            நாயகத்தின் வழிநடந்து
சுபிட்சங்கள் பெற்றுவாழ - நம்மைச்
            சேர்த்திழுக்கும் பிறைநாளிது
சமத்துவமே ஏந்திநின்று - என்றும்
            சகோதரத்தைச் சொல்லிவந்து
அமைதியெனும் கொடிகளேற்றி - எவர்க்கும்
            அன்புசிந்தும் பொன்னாளிது

அன்புடன் புகாரி

Wednesday, August 7, 2013

ஞான் கண்டுட்ட ரமலான் !

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் அளவற்ற அருளாளனின் சங்கைமிகு ரமலான் முடிவுறுகிறது அவனின் கருணை பார்வை யார் யாருக்கெல்லாம் கிடைத்ததோ அத்துனைபேர்களும் பேருபகாரம் பெற்றவர்களாய், ஆளாகி இருப்பார்கள். சிலருக்கு நோயினாலும், வேலையின் காரணத்தாலும், சூழ்நிலைகளாலும், ரமலானை முழுவதுமாக அமல் செய்ய முடியாமல் போயிருக்கும் வல்ல ரஹ்மான் அடுத்து வரும் ரமலானை சிறப்பாக நிறைவேற்ற அருள்பாலிப்பானாக.

மனிதர்களில் பலவிதப்பட்டவர்கள் பல ஆசாபாசங்களுக்கு அடிமை பட்டவர்களாக இருப்பார்கள். சிலரின் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் அல்லாஹ்விற்காக ஒதுக்கி வைத்துவிட்டு சொல்லப்போனால் தியாகங்களை செய்து அமல்களையும் பர்லுகளையும் நிறைவேற்றி இருப்பார்கள் அனைவர்களது அமல்கள் பர்ளுகள் அனைத்தையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்.

உணவு பழக்கங்களில் அதிகமாக நொறுக்கு தீனி தின்பவர் உடல் பருத்து மருத்துவரிடம் சென்று உடல் பருமனை குறைக்க ஆலோசனை கேட்டார் மருத்துவரோ காலையில் 2 இட்லியும் மாலையில் கொஞ்சம் அவித்த காய்கரி வெஞ் சூப் மற்றும் இரவில் பாலும் ஒரு ஆப்பிளும் உண்ண சொன்னார் எல்லாவற்றையும் கேட்ட அந்த நபர் இவைகள் எல்லாம் சாப்பாட்டிற்கு முன்பா அல்லது சாப்பாட்டிற்கு பின்பா என கேட்டாராம் அப்படி பட்டவர்களெள்லாம் அலாஹ்விற்க்காக 15 மணிநேரம் சொட்டு தண்ணிர் கூட அருந்தாமல் 2 வேலை உணவை தவிர்த்து நொறுக்கு தீனி பகலில் தவிர்த்து இருந்தார்களே இதுவும் ஒருவகை தியாகம்தான்

இறைவனின் நமக்களித்த அருள் கொடையில் முக்கியமானது தூக்கம். சிலர் இரவு 10 மணிக்கு படுத்தவர்கள் காலை 7.30 மணிக்கு எழும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள் அப்படிப்பட்டவர்கள் ரமளானின் மான்புக்காக மகத்துவத்தை அடையவேணும் என்ற நோக்கிற்காக இரவில் இரவுத்தொழுகை தஹஜ்ஜத் தொழுகை சகர் உணவு போன்ற விஷயங்களுக்காக இரவின் முக்கால் பாகத்தை விழித்திருப்பதில் கழிப்பார்கள் காலையில் வேலைக்கும் செல்வார்கள் இவர்களின் இந்த செயல் ஒரு வகை தியாகம்தான்

கஞ்சன், சிக்கனக்காரன், என பெயர் எடுத்தவர்கள் கூட இந்த மாதத்தில் கெஞ்சிக்கேட்கும் பிச்சைக்காரர்களுக்கோ, கொஞ்சமேனும் கஞ்சிக்கோ, பள்ளியில் விநியோகிக்கும் தபுரூக்கிற்க்கோ, தம்மிடமுள்ள பணத்தில் சிறிதளவு கொடுத்திருப்பார்கள்.

தமது வாழ்வில் வரவைவிட செலவுகளையே பார்த்த பரம ஏழைகளின் வாழ்வில் இம்மாதம்தான் செலவைவிட வரவு அதிகம் பார்க்கக்கூடிய மாதமாகும்.

இப்படி உணவுப்பிரியர்கள்,தூக்க பிரியர்கள்,கெஞ்சர்கள், அனைவர்களது செயல்பாட்டில் ஒரு பெரிய மாற்றத்தை காண்கின்ற மாதமாகும்.ஆக தம் விருப்பங்களை, அனுபவித்த ஆசைகளை, அல்லாவிற்காக துறந்தவர்கள் தமது வாழ்நாள் முழுவது நல்ல செயல்கள் புறிந்தவர்களாகவும் கெட்டசெயல்களை ஒரு மாதத்திற்காக துறந்தவர்கள்!?. தம் வாழ் நாள் முழுவது துறந்தவர்களாகவும், மாண்போடு வாழ்ந்து மகத்துவமான சுவர்க்கம் சென்றடைந்தவர்களில் நாமும் இருப்போம்.

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசளிப்பதுபோல் இந்த ரமலானை சிறப்பாய் அமல் செய்தவர்களுக்கு நோன்பு பெருநாள் எனும் அற்புத பரிசை அல்லாஹ் நமக்களித்துள்ளான் அப்பேற்பட்ட சங்கை மிகு நாள் நம்மிடம் வர இருக்கிறது எல்லோரும் சந்தோஷமாக கொண்டாடி மகிழ்வோமாக அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள் [ EID MUBARAQ ]

மு.செ.மு.சபீர் அஹமது

Tuesday, August 6, 2013

ஜகாத் ~ ஓர் பார்வை !

இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் – ஜகாத் :
“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்று முழங்கப் பட்ட கோஷம் அண்மைக்கால அரசியலில் இடம்பெற்ற கோஷங்களில் புகழ்  பெற்ற ஒன்று. ஆனால் அவை எல்லாம் வெற்று கோஷத்துடன் நின்று விட்டன.  அல்லது நீர்க்குமிழிகள் போல் சில திட்டங்கள் சில வருடங்கள் மட்டுமே தோன்றி மறைந்துவிட்டன. அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மறைக்கப்பட்டுவிட்டன.  காலம் தோறும்  நின்று நிலைக்கும்படி ஆக்கபூர்வமாக எதுவும் செய்யப்படவில்லை.  ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஏழையின் ஏற்றத்தை என்றுமே காணும் திட்டத்தை மனிதனின் வாழ்நாள் கடமையாக்கி மார்க்கத்தின் சட்டமாக்கி வைத்திருப்பது இஸ்லாம்.

பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இஸ்லாத்தின் கோட்பாடுகளில், இஸ்லாத்தின் ஐந்து கட்டாயக் கடமைகளில் ஒன்றாக சேர்க்கப் பட்டு, உலகில் மனித இனம் வாழ்வதற்கு பொருளாதாரம் எவ்வளவு முக்கியம் என்பதை இறைவனே உலகுக்குப் பறைசாற்றும் ஒரு ஜீவாதாரக் கொள்கை ஜகாத். படைத்த இறைவனின் சாம்ராஜ்யத்தின் பொருளாதாரக் கொள்கைதான் ஜகாத். இஸ்லாமிய அமைச்சரவையின் பொருளாதார  திட்டக் கமிஷனின் தலைமை இடம் ஜகாத்துக்குத்தான்.  ஜகாத் என்பது பக்தர்கள் செலுத்தும் காணிக்கையல்ல; கடமை. ஜகாத் என்பது ஒரு சடங்கு அல்ல ; சட்டம்.

அவரவர் திறமைக்கேற்ப  பொருளீட்டும் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வை எடுத்தெறிந்து  பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமையை இக்கடமை பெற்று இருக்கிறது. பொருளாதாரத்தின் ஆணிவேரான  உற்பத்திப்  பெருக்கத்துக்கு ஜகாத்  காரணமாகிறது. அடுத்து,  செல்வம் ஒரே  இடத்தில் குவியாமல் செல்வத்தின் பகிர்வு பகிர்வு என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் மற்ற இசங்களுக்கு மத்தியில் ஆன்மீக முறையில் அடக்கமாக கத்தியின்றி இரத்தமின்றி அந்தப் பணியைச் செய்கிறது. மேலும் ஜகாத் பொருளாதாரத்தின் ஆதாரமான வேலை வாய்ப்புப் பெருக்கத்தையும் வாய்ப்புகளையும் அதிகமாக்குகிறது. உரிய முறையில் நிறைவேற்றப்படும்போது சமூகம் சார்ந்த பல்வேறு சவால்களைச் சமாளிக்கும் சாத்தியம் ஏற்படுகின்றது.

நவீன பொருளியல் கோட்பாடுகளைப் பற்றிப் படிக்கும் மாணவர்கள் LAW OF DIMINISHING MARGINAL UTILITY (குறைந்துசெல் பயன்பாட்டுவிதி) என்கிற கோட்பாட்டை விழுந்து விழுந்து படிப்பார்கள். இது வேறொன்றுமல்ல . ஒரு மனிதனின் பயன்பாட்டுக்கு உதவும் ஒரு பொருள் , அந்தப் பொருளின் அளவு அவனிடம் சேரச்சேர தொடக்கத்தில் அந்தப் பொருள் அவனிடம் சேரத்தொடங்கிய போது அந்தப் பொருள் அவனுக்குப் பயன்பட்டதாக அவன் உணர்ந்த அளவுக்குப் பயன்பாட்டை தொடர்ந்து சேரும் அதே பொருளால் அந்த மனிதனால்  உணர முடியாது என்பதே இந்த விதி. உதாரணமாக சொல்லப் போனால்  வேலைக்குச்சென்று வாங்கும் முதல் சம்பளத்தின் மீது இருந்த ஆர்வம், பயன்பாடு, தேவை, வேட்கை ஆகியவை முப்பது வருடங்கள் டேரா போட்டு சம்பாதித்து வாங்கும் கடைசி சம்பளத்தின் மீது மனிதனுக்கு இருக்காது.  இடைப்பட்ட காலத்தில் அவன் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தின் மீதும் ஆசை குறைந்துவிடும்.  பணம் சேரச்சேர மனதளவில் அதன் மதிப்பு இறங்கிக் கொண்டே வரும். முதல் சம்பளத்தின் தேடல் மற்றும் தேவைகளின் அளவு இருபதாவது  முப்பதாவது சம்பளத்தில் இருக்காமல் இறங்க ஆரம்பித்துவிடும்.

அடுத்து சொல்ல வருவதுதான் மிக முக்கியம்.

இப்படி உபரியாக மனிதனால் ஈட்டப்படும் அந்தப் பணம் அடுத்தவர்களின் தேவைக்கு அளிக்கப் பட்டால் அது அவர்களின் அத்தியாவசிய காரியங்களுக்குப் பயன்படும். அதாவது ஒருமனிதன் தனக்குப் போதும் என்கிற நிலையில் கருதும் பணம் மற்றவனுக்கு வாழ்வின் ஆதாரமாக ஆகும்.  இதுவே ஜகாத் என்கிற தாரக மந்திரத்தின் சூட்சமக் கயிறு. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே ஜகாத் விதியாக்கப் பட்ட போது இன்றைக்கு நவீனப் பொருளாதாரத்தின் விதி இவ்வாறு இறைவனால் அன்றே உபதேசிக்கப் பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

தனது செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை எழைகளுக்கு வருடா வருடம் வரியாகப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டுமென்கிற சட்டம் சமுதாயத்தில் பாய்கிற போது கொடுப்பவருக்கும் துன்பமில்லை. அதைப் பெறுபவர் அந்த நிதியைக் கொண்டு தங்களின் ஏழ்மை வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள இயலும் என்பதே இதன் பொருளாதாரத் தத்துவம். ஒரு பணக்காரரின் வருமானத்திலிருந்து ஒரு சிறு அளவு,  ஜகாத்தாக ஏழைக்கு சென்று சேர்கிற பொழுது பணக்காரருக்கு ஏற்படும் இழப்பைவிட ஏழைக்குக் கிடைக்கும் இலாபமே அதிகமாகும். இதனால் ஒட்டுமொத்த சமுதாயத்தில் சமத்துவம்    சம்மணம்  போட்டு அமரும்.

ஜகாத் என்பது ஒரு பெரிய ஏரியின் வரப்புகள் நீர் மிகுதியால் உடைப்பெடுத்துக் கொள்ளாமல்  வெட்டிவிடப்பட்ட ஒரு சிறு வாய்க்கால். அதிலிருந்து ஏழைகளின் வயல்களை நோக்கி உற்பத்திக்கான நீர் ஓடிக்கொண்டே இருக்கும் . அதே நேரம் இறைவனின் அருள் என்கிற ரஹ்மத்தும், பரக்கத்தும் பெருமழையாய் பெய்து ஏரியை நிரப்பிக் கொண்டே இருக்கும். ஆண்டுதோறும் ஜகாத்  செலுத்தப் படவேண்டுமென்கிற  விதி  இந்த ஆன்மீகப் பணியின் மூலமான சமுதாய வளர்ச்சி   தொய்வில்லாமல் நடைபெற வழி வகுக்கிறது.  சொர்க்கத்தில் நமக்கென இடத்தைப் பதிவு செய்யும் நன்மைக் கட்டணமாக ஜகாத் இறைவனிடம் சென்று செயல்படுகிறது.

மனிதப்  பிறவியின் மாறுபட்ட மோகம், பொறாமை, கர்வம், அகம்பாவம் போன்ற கெட்ட இயல்புகளை  மாற்றும் மாபெரும் சக்தி ஜகாத்துக்கு இருக்கிறது.

‘ஆசைகளின் மூட்டை’ என வர்ணிக்கப் படும்  மனிதனிடம் இயல்பாகவே பொருளாதாரத்தில் மோகம் இருக்கின்றது. பொருளாதாரத்தைத் தேடி, திரட்டி அதைப் பார்த்து மகிழ்வடையும் மனநிலை காணப்படுகின்றது. தொடர்ந்து நியமப்படி ஜகாத்  வழங்கிவரும் ஒருவனிடம், பொருளாதாரத்தின் மீதான வெறித்தனம் தணிந்து அதிலே ஓரளவு தாராளத்தன்மை ஏற்படும். இது ஏற்பட்டு விட்டால் நியாயமான முறையில் பணம் திரட்டும் பக்குவம் ஏற்பட்டுவிடும். நீதியையும் நேர்மையையும் நெறிப்படுத்தும் மாபெரும் சக்தி பெற்றது ஜகாத்.

தான் தேடிய செல்வத்தை, தான் கூட அனுபவிக்காமல், அதனைப் பார்த்துப் பார்த்து ரசிக்கும் தன்மை பலரிடம் காணப்படுகின்றது. தனக்கே செலவழிக்காதவன் பிறருக்கு எப்படிக் கொடுப்பான்? இறைவனின் ஆணையை ஏற்று, இந்தக் கட்டாய தர்மத்தைச் செய்பவனிடம் கஞ்சத்தனம் விடுபட்டுவிடும். அதன் பின் அவன் தாராளத் தன்மையுடன் உபரியான தர்மங்களைச் செய்பவனாக மாறிவிடுவான். கஞ்சத்தனம் இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட குற்றமாகும்.

‘தனக்குக் கிடைத்தது அடுத்தவனுக்குக் கிடைத்து விடக்கூடாது, அல்லது அடுத்தவனுக்குக் கிடைத்தது அவனிடமிருந்து அழிந்துவிட வேண்டும்’ என்ற உணர்வே பொறாமையாகும்.  ஜகாத்  கொடுப்பவன் தன்னைப் போல் அடுத்தவனும் பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று விரும்புவதால் அவனிடமிருந்து இயல்பாகவே பொறாமைக் குணம் பாதியிலேயே கழன்றுபோய் விடுகிறது.  ஏழைகள்கூட செல்வந்தர்கள் மீது பொறாமை கொள்ளலாம். அதே செல்வந்தர்கள் ஜகாத்  மூலம் தமக்கு உதவும் போது தமக்கு உதவுபவர்கள் மீது அவர்களுக்கு பொறாமை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, ஜகாத் கொடுப்பவர், எடுப்பவர் இருவரிடமும் பொறாமை என்ற தீய குணம் ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.

சிலரிடம் பெருமை, கர்வம் என்ற தீய குணம் இருக்கலாம். தன்னைப் போல அடுத்தவனும் உயர்வடைவதை, கர்வம் கொண்டவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால், ஜகாத்   செல்வந்தர்களிடம் இந்த கர்வ உணர்வை ஒழிக்கின்றது. ஏழைகளும் செல்வந்த நிலையை அடைவதை விரும்புபவனிடம் கர்வம் அற்றுப்போகும். பொது நல உணர்வு மேலோங்கும்.

பணம்படைத்தவர்களில் பலர்  சமூக உணர்வு அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் ஜகாத் வழங்குபவர்களாக மாறும் போது சமூகத்தில் நலிவடைந்தவர்களின் வாழ்க்கை நிலவரத்தைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் மீது அக்கறை  காட்டவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இவர்கள் ஏழைகளின் மீது  அக்கறை செலுத்தும் போது,  இயல்பாக சமூக உணர்வு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு நோக்கும் போது ஜகாத் பல்வேறு விதத்திலும் மனித மனங்களைத் தூய்மைப்படுத்தி நல்ல மாற்றங்களை                       விளை விக்கின்றது.

உலக சரித்திரத்தில் பொருளாதார சித்தாந்தங்களில் இன்றுவரை பேசப்படும் ஒரு வார்த்தை வர்க்க பேதம் என்பதாகும். செல்வம் ஒரே இடத்தில் குவிவதால் ஒரு புறம்  பணக்கார வர்க்கமும் , அவர்களின் செல்வத்தின் குவியலுக்குக் காரணியாகத்  திகழ்கிற - காலத்துக்கும்  பஞ்ச்சையாக, பராரியாக யாரிடமும் எதுவும் கேட்கமுடியாத ஊமையாக  பாட்டாளி வர்க்கமும் அமைந்துவிட்டதால் - செல்வத்தைப் பகிர்வதற்கு ஆன்மீக ரீதியாக அன்பு முறையில் முறைகள் சொல்லப் படாததால் - வழிகள் வகுக்கப் படாததால் செங்குழம்பு இரத்தம் சிந்தப்  பட்ட  வரலாறுகளைப் படித்து இருக்கிறோம். அத்துடன் நேற்றைக்குப் பணக்காரன் இன்றைக்குப் பிச்சைக்காரன் ஆகும்படி அவனது செல்வங்கள் வன்முறையால் பிடுங்கப் படும் வரலாறுகளை ஜகாத் தடுத்து நிறுத்துகிறது. ஒரு ஆன்மீக உடன்பாட்டில் –இறையச்சத்தில்-  ஏழைகளுக்கு,  அவர்களுக்குரிய செல்வம் பணக்காரர்களால் பாசத்துடன் பந்திவைத்துப் பரிமாறப் படுகிறது.  அரசியல் சரித்திரத்தில் ஆன்மீக மேம்பாட்டில் அமைதியை  தழைக்கச் செய்யும் அருமருந்தே ஜகாத்.

இறைமறையிலும் நபி மொழியிலும் வலியுறுத்திக் கூறப்  படுகிற ஜகாத்துடன் நவீனப் பொருளாதாரத்தை ஒப்பிட்டுக் காட்டினால் ஜகாத்தின் சிறப்பு இன்னும் புலப்படும்.

இன்றைக்கும் வளரும் நாடான நமது இந்தியாவில் நக்சலைட்டுகள் என்றொரு இயக்கம் உருவாகி வெறியாட்டம் போடுவதன் பின்னணியில் வறுமையும் வேலை இல்லாத் திண்டாட்டமும் இருப்பதை யாரும் மறுக்க இயலாது. ஏழைகளின்பால்               இறக்கமற்றவர்களின் செல்வக் குவிப்பு - தனக்கே எல்லாம் வேண்டும் என்கிற சுயநலப் போக்கு  காடுகளில் மலைகளில் பல ஏழை இளைஞர்களை நெஞ்சில் பொறாமையுடனும்  கையில் துப்பாக்கிகளுடன் வன்முறை வெறியாட்டங்களுக்கு வித்திட்டு வைத்திருக்கிறது. பணக்காரர்கள் இரக்கமற்ற பாவிகளாக இருப்பதால் இல்லாதவர்களின் நெஞ்சில் அவர்களின் மேல் ஏற்படும் பொறாமைத் தீ  அமைதியான  வாழ்வுக்கு அங்கங்கே சாவுமணி அடித்துக் கொண்டே இருக்கிறது. ஜகாத்தின் சட்டங்கள் அமுலில் இருக்கும் நாடுகளில் - ஜகாத் வழங்கப் படும் சமுதாயத்தில் பணக்காரர்களின் மேல ஏழைகளுக்கு பொறாமைக்கு பதிலாக மரியாதை ஏற்படுகிறது என்பதே கண்கூடான காட்சி. ஜகாத் அரசாளும் பிரதேசங்களில் ஆண்டான் அடிமை வர்க்க பேதங்கள் அடிபட்டுப் போகின்றன. ஏழைகளையும் பணக்காரர்களாக்கும் இறைவனின் வித்தை இது . பணக்காரர்களை நன்மை செய்யத்தூண்டும் நற்பணி மன்றம் இது.

நவீனப் பொருளாதாரத்தில் வரிவிதிப்புக் கொள்கைகளை சில முறைகள் வரையறுக்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது

“Keep it simple. The tax system should be as simple as possible, and should minimize gratuitous complexity. The cost of tax compliance is a real cost to society, and complex taxes create perverse incentives to shelter and disguise legitimately earned income.”  என்பதாகும் . அதாவது, எந்த ஒரு வரியும் வசூலிப்பதற்கு இலகுவாகவும்  எளிதாகவும்  இருக்க வேண்டும் என்பதே இதன் சாராம்சம்.

இன்றைய அரசுகள் வசூலிக்கும் வரிகள் இந்தத்தன்மையைப்பெற்று  இருக்கின்றனவா என்றால் இல்லை என்ற சொல்ல நேரிடும். வரியை வசூலிக்க அந்த குறிப்பிட்ட வரியால் வரும் வருமானத்தைவிட அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. விற்பனை வரிச்சட்டம்- வருமானவரிச்சட்டம்- நிலவரிச்சட்டம்- உள்ளூராட்சிவரிச்சட்டம் –  என்பன போன்ற சட்டங்கள், அவற்றிற்கான தனித்தனி அலுவலகங்கள்- அவற்றிற்கான ஊழியர்கள் என்றெலாம் அளவிடமுடியாத அமைப்புகள் மற்றும் செலவுகளை மேற்கொண்டே அரசுகளால் வரிகளை வசூலிக்க முடிகிறது. இத்தனை ஏற்பாட்டுக்குப் பிறகும் கூட இவற்றில்  பல கள்ளக் கணக்குகள்,  தில்லுமுல்லுகள், செப்பிடுவித்தைகள்,  ஏமாற்றுகள்,  நிலுவைகள் என்று   பலதகிடுதத்தங்கள் வெளிப்படுகின்றன.

இந்தியாவில் வசூலிக்க முடியாத நிலுவையில் உள்ள  வருமான வரிமட்டும் ஒழுங்காக வசூலிக்கப் பட்டால் அதைவைத்து எதிர்காலத்தில் வரியே போடாமல் ஆள முடியுமென்று ஒரு ஆய்வு கூறுகிறது. பலருடைய வரி பாக்கிகளுக்காக அவர்களுடைய இருப்பிடம் உட்பட சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்படுகின்றன. இருக்கும்போது  நவாப்சாவாக இருந்தவன் இல்லாவிட்டால் பக்கீர்சாவாக ஆகிவிடுகிறான். வரியை  ஏய்ப்பதற்கு தகுந்தபடி கணக்கை சரிக்கட்டுவதற்கே தனித்திறமை பெற்ற ஆடிட்டர்கள் இருக்கிறார்கள். அரசை ஏமாற்றி பதுக்கப் பட்ட பணம் கள்ளப் பணமாக உருவெடுத்து மற்றொரு பொருளாதார சீர்கேட்டின் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இவ்வளவுக்கும் காரணம் , வரி வசூலிக்கும் முறையும் சரியில்லாமல் இருப்பது மட்டுமல்ல வரிகளின் விகிதமும் உச்சாணியில் ஏறி , ஏமாற்றுவதை  தூண்டிவிடும்வகையில் அதிகமாக இருப்பதுதான்.

இதற்கு மாறாக இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் ஜகாத் பிரதான  வரியாக விதிக்கப்படுவதாக நாம் கற்பனை பண்ணிப் பார்ப்போம்.  இறையச்சத்தின் அடிப்படையில் அமையும் அந்த சமுதாயத்தில் ஏமாற்று வேலைகளுக்கு வேலை இல்லை. சட்ட நடவடிக்கைகளுக்கு சாத்தியம் இல்லை. இருக்கும் சொத்தை ஏலம் விட அவசியம் இல்லை. தந்து தேவைகள் போக திரளும் செல்வத்தில் மட்டுமே செலுத்துபவர் தரும் சதவீதம் மிகவும் குறைவு என்பதால் செலுத்துபவர்களுக்கும் கஷ்டம் இல்லை; அரசுக்கு வருமானம் திட்டமிட்டபடி வந்து சேரும். ஜகாத் செலுத்துவதும் இறைவணக்கத்தின் ஒரு பகுதி என்று ஆகிவிடுவதால்  இன்முகத்துடன் எல்லோரும் அவரவர் வைத்திருக்கும் செல்வங்களுக்கு ஏற்றபடி தந்துவிடுவார்கள். இறையச்சத்தின் அடிப்படையில் கூடுதலான சதகா என்கிற தர்ம சிந்தனையும் சேர்ந்துகொண்டால் ஜகாத்தும் சதக்காவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வறுமை என்னும்  பிசாசின் அடையாளத்தை அடித்து நொறுக்கிவிடும்.  இப்படி ஒரு இனிய சமுதாயம் அமையுமா?

நவீனப் பொருளாதாரத்தைப் பின்பற்றும் நாடுகள் மாய்ந்து மாய்ந்து தீய்ந்து போவது இரண்டு விஷயங்கள் பற்றித்தான். ஒன்று உள்நாட்டில் வறுமை, மற்றது வெளிநாட்டுக் கடன் அதன் வட்டிமற்றும் அதன் குட்டிகள்.

அரசின் வரி  வருமானம் ஜகாத் மூலம் சரியாக , ஒழுங்காக வருமானால் அரசு வெளிநாடுகளிடம் கடனுக்காக கை ஏந்தவேண்டியது இல்லை. அதற்காக பெரும்தொகையை வருடாவருடம் உலகவங்கிகளுக்கு வட்டியாகக் கட்டிவிட்டு தனது நாட்டு மக்களின் நல்வாழ்வுத்திட்டங்களுக்கு பணமில்லாமல் ஈரச்சாக்கைப் போட்டுப் போர்த்திக் கொண்டு படுக்க வேண்டியது இல்லை.

வளர்ந்து வரும் நாடான இந்தியா தனது வருமானத்தில் 26% த்தை வெளிநாடுகளில் வாங்கிய கடன்களுக்காக அழுது வருகிறது என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. நாட்டில் வாழும் மக்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவை முழுமையாக தரப்படவில்லை. வறுமைக்கோட்டுக்கு கீழே பல கோடிமக்கள். இந்நிலையில் இவ்வளவு பெரும்தொகை வட்டியாகப் போகிறது . இந்த சுமையில் இருந்து மீள வல்லுனர்கள் கூறும் கருத்து வரிகளையும் வரிகளின் நிலுவைகளையும்  வசூல் செய்யுங்கள் என்பதுதான். ஆனால் வரி செலுத்தும் நிலுவைப் பட்டியலில் உள்ளவர்களோ மலை முழுங்கி மகாதேவன்களாக இருக்கின்றனர்.   அரசியலில் வாலாட்டும் தன்மை கொண்டவர்களுக்கு எலும்புத்துண்டுகளைப் போட்டு அவ்வப்போது தப்பித்துக் கொள்கின்றனர்.  இந்த நிலையில் ,

இந்த நிதியாண்டில் மட்டும் இந்தியா தனது மொத்த வெளிநாட்டு கடனான 390.04 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, 172.35 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த தொகை இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடனில்  44 சதவீதம் ஆகும். 

உலகம் முழுதும் இத்தகைய நிலைகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட பொருளாதார சறுக்கல்கள் ஏன் ஏற்படுகின்றன? யாரால் காப்பாற்ற முடியும்? இஸ்லாம் காப்பாற்றும். இஸ்லாமியப் பொருளாதாரம் காப்பாற்றும். காப்பாற்றச் சொல்லி இறைவனை நோக்கி கை ஏந்துவார்களா?

ஜகாத் பற்றிய இறைவனின் வாக்குகள், எச்சரிக்கைகள், நபிமொழிகள், வரலாற்று சம்பவங்கள் ஆகியவற்றை அடுத்து காணலாம்.

'மனிதவள ஆர்வலர்'
இப்ராஹீம் அன்சாரி

குறிப்பு : அதிரையின் பிரபல எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்களால் 'இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்' என்ற தலைப்பில் 'அதிரை நிருபர் பதிப்பகம்என்ற பிரதான இணையதளத்திலிருந்து நெடுந்தொடராக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நெடுந்தொடர் அனைவரின் வரவேற்பையும் பெற்று வருவது குறிப்பிடதக்கது.

Monday, August 5, 2013

தேவையற்றானின் தேவை !

ஆயிரம் ரக்காத்து வணக்கங்கள்
அதனைவிட மேல் !
அவனைப்பற்றிய சிந்தனையில்... மூழ்குவது
அண்ணலார் அறிவிப்பு.

புனித ரமளான்
அதில் ஓர் இரவு
அது மட்டும்
ஆயிரம் மாதங்களை விட மேலானது !
அவனின் அறிவிப்பு.

அந்த இரவும்
வந்து சொல்லும் வழியில்
அந்த இருசஹாபிகள் சண்டையில்
மறந்துவிட்டது.

ஆனாலும்
ரமலானின் கடைசி பத்தில்
ஒற்றைப் படையில்
அந்த ஓர் இரவு !
அண்ணலாரே அறிவிப்பு.

அந்த இரவின் மகிமை
என்பது வருடம் நான்கு மாதம்
நின்று வணங்கினால் கிடைக்கும் நன்மை !
அதுவும் கண் இமைக்கும் நேரம் கூட
மாறு செய்யாமல் !
இது வானவர் கோமான் ஜிப்ரயீல் அறிவிப்பு.

அறிவிப்புகள் அதன் நோக்கங்கள்
அறிந்தால் அது ஒன்றே !

அமல் செய்ய
பகலைவிட்டு இரவு மட்டும்
ஏன்' அவன்'  கூறவேண்டும் ?

அமைதி, தனிமை
இவை இரவில் சத்தியம்

தனித்தவனை அறிந்துகொள்ள
தனித்திருக்க தனித்த தக்க தருணமோ !.
ஆனாலும் இவிரவுக்கு மட்டும்
ஏன் ? இத்தனை சிறப்புகள் !...

புனித ரமளானில்
இனிய நன்மைகள்.

நற்செயல் எண்ணம்
உள்ளத்தில் மலர்ந்தாலே ஒரு நன்மை.
செய்தால் ஒன்றுக்கு
பத்து, எழுபது, நூறு, ஆயிரம் !

இவன் தகுதிக்கேற்ப
'அவன்' தருகிறான்!

அவனை அறியும் தகுதி- அதுவே
அதிகம் பெரும் வெகுமதி.யோ !

தீய எண்ணம்
உள்ளத்தில் உதித்தால்
இல்லை தண்டனை !
செய்தாலே ஒன்றுக்கு
ஒரு தண்டனையே !

நன்மை தீமை கணக்கில் ஏற்றத்தாழ்வு.
என்ன கருணை !
இவன் மீது அவன் கருணை.!
இல்லை !
இதில் ஏதோ சுய நலம் !

'அவனை' அறிந்துகொள்ள
இவன் வேண்டும்.
அதற்கு 'அவனின்'  இத்தனை சலுகைகள் !
சுய நலம் !

அதைத்தான் அவன்
'நான் மறைந்த பொக்கிஷம்
என்னை அறியப்பட வேண்டும் !
அதற்காகவே
படிப்புகளை படைத்தேன்'
என்றானோ !
தெளிவான சுய நலமோ !

இரமளானின் சிறப்புகளும், சலுகைகளும்
இவை மிகும் இப்புனித இரவும்
இவன் படைக்கப்பட்ட நோக்கமும்
'அவனை' அறிவதர்காகவேயாம்.

தேவையற்றானின் இத்தேவையில்
'அவனும்' இவனும்
தேவையற்றவனாகும் தேவை !
இணையழிந்து பிரிவில்லாத
அவனின் சுயமாகும் தேவை !
சுயத்தின் சுய நலம் !
ஆம் ! அது பொது நலமே.

இடம் பொருள் காலம் என்பார்.
'அவனும்' லைலத்துல் கத்ர் சொன்னான்
அவ்விரவிலே வேதம் தந்தேனென்றான்
அண்ணலும் காலம் காட்டினர்.

அண்ணலாரின் ஆயிரமாயிரம் அற்புதம் !
கல்,கறி,மரம் பேசியது ! சந்திரன் பிளந்தது !
சென்ற உயிர் மீண்டது ! கனவில் தந்தது நினவில் நின்றது !
எண்ணிலடங்க அதில் "அருள்மறை" ஒன்றே
அண்ணலவர்கள் அற்புதம் அற்புதம் என்றனர்.

அவனும் அண்ணலுக்கு
நிகரில்லா அவிரவில்
வேதம் தந்ததைத்தான்
வேதத்தில் சொல்கிறான்.

வேதம் பெற
நீதர் நிகரில்லானை
நிகரில்லாது அறிந்தும், அடைந்தும்
இருந்ததாலே பெற்றனர்.

தான் பெற்ற இன்பம்
தன்னை சார்ந்தோர் பெறவே
தலைவனின் லைலத்துல் கத்ரை
தூதரும் வழிகாட்டினர்

ஏகனவனை !
எதுகையற்றவனை !
எங்கும் நிறைந்தவனை !
எங்கு நோக்கினும்
அவன் முகமென்றானை !
உருவமற்றானை !
புனித இரவில் நாமும்
அவன் நாட்டத்தில்
அறிந்திடுவோம் !
அடைந்திடுவோமே !

இது சந்தர்ப்பம்
இதை விட்டால்...
இனி அடுத்த வருடம்தான் !

அண்ணலாரின் திருப்பேரர்
அப்துல் காதிர் ஜீலானி அண்ணவர்களும்
"அவன் அடியார்களுக்கு
இருபத்தியேழில்
லைலத்துல் கத்ரு இரவை அமைத்துள்ளான்"
என்றனரே !

அண்ணலாரும்
"மார்கத்தில் முந்தியது
'அவனின்' இரகசியங்களை அறிவது"
என்றனரே !

நபிதாஸ்

அமல்- அவனை அறிந்திட செய்யும் செயல்.
சஹாபி- நபித் தோழர். 
ரக்காத்- தொழுகையில் ஒரு சுற்று.
லைலத்துல் கத்ர்- புனித இரவு.

Saturday, August 3, 2013

[ 6 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' தொடர்கிறது...

HOUS BOY வேலைக்கு செல்பவர்களில் பலர் தனது வீட்டு ஏழ்மை நிலை அறிந்து இளம் வயதிலேயே உழைக்க முன் வருபவர்களாக இருப்பர். நான் முன்பு கூறிய நிகழ்வின் நாயகன் வீட்டு ஏழ்மை நிலை போக்க வேலைக்கு செல்ல வில்லை மாறாக தான்தோன்றி தனமாக ஊர் சுற்றிய இளைஞனை எப்படியாவது நல்வழி படுத்த ஏதாவது வேலைக்கு அனுப்பி அவன் வாழ்க்கை என்றால் என்ன என்று புரிய வேண்டும் என்ற நோக்கில் வேலைக்கு அனுப்பப்பட்டான். ஆனால் சென்ற  இடத்திலும் தனது குறும்புத்தனத்தால் உடுத்திய உடையோடு நாடு திரும்பினான்.

அரபிகள் புதிதாக வீட்டு வேலைக்கு வரும் நபரை ஆறுமாதம் வரை கண்காணிப்பர். நாணயமான நடவடிக்கை வேண்டும் என்பது முதல் எதிர் பார்ப்பு அதில் நம்பிக்கை கிடைத்து விட்டால், அரபியர்களுக்கு தனி பிரியம் வந்து விடும். அதன் பின்னர் சோம்பலற்ற வேலை, அற்பணிக்கும் தன்மை இவைகளால் வீட்டில் ஒருவனாக மாறும் நிலை ஏற்படும் .எங்கு சென்றாலும் தன்னோடு அழைத்து செல்வர் .மேலை நாடுகளுக்கு சுற்று பயணம் செல்லும் போது கூட தன்னோடு அழைத்து சென்று மகிழ்வர்.

அப்பாவி என்ற எண்ணம் ஏற்படும் செயல் பாடு HOUS BOY வேலைக்கு சிறந்த தகுதி. ஒரு அப்பாவி இளைஞன் ..வீட்டு வேலைக்கு சென்றான் ..வேலைக்கு சென்ற ஆறு மாதத்திலேயே வீட்டு எஜமானரின் அன்புக்கு பாத்திரமாக மாறினான். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பான் அந்த இளைஞன்.

1980 களில் கடித தொடர்புகளே அதிகம் .ஒவ்வொரு வாரமும் தனது தாயிடமிருந்து வரும். கடிதத்தை படித்து மகிழ்வான். ஒரு நாள் கடிதம் வந்தது கடிதம் படித்த மறுகணமே கவலைக்கு உள்ளானான் காரணம் ஊரில் அடைமழை காரணமாக் தனது வீட்டு சுற்று சுவர்  இடிந்து விட்டது என்ற செய்தி கடிதத்தில் வந்த செய்தியே காரணம்.

சோகமாக காட்சி அளித்த அவ்விளைஞனிடம் எஜமானி விசாரித்தார்.

ஏன் கவலையாக உள்ளாய்...

அரபி மொழி அரை குறையாக தெரிந்து வைத்திருந்த அந்த இளைஞன்

கடும் மழை காரணமாக வீடு இடிந்து விட்டது என கூறி விட்டான்.

கவலைப்படாதே என்று கூறிய எஜமானி இந்தியாவில் சிறியதாக புதிய வீடு கட்ட எவ்வளவு தொகை தேவை படுமோ அவ்வளவு தொகையை அந்த இளைஞனிடம் கொடுத்து கவலை படாதே ஊருக்கு அனுப்பி வீடு கட்டி கொள்ளச்சொல் என்று எஜமானி கொடுத்துள்ளார்.

அந்த இளைஞனும் மகிழ்வோடு அம்மாவிடம் அனுப்பி வைத்தான். பணம் கிடைத்த மறுகணமே தாயார் பதறி போனார். வீட்டு வேலை செய்யும் தன் மகனுக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது வகை தெரியா பையன் பணம் புழங்கும் அரபி இடத்தில் திருடி இருப்பானோ என்ற பயமே காரணம். களவுக்கு கை வெட்டும் தண்டனையும் உண்டு என்று அறிந்த தாய் பதறிப்போனார். அதே ஊரில் வேலை பார்க்கும் வேறு நபருக்கு போன் செய்து விவரம் கேட்க... அந்த நபர் அரபியிடம் விவரம் கேட்க... தான் கொடுத்த பணம் தான் என கூறியதோடு வீட்டு வேலைக்கார பையனிடம் அவனது தாயாரின் நேர்மையை பாராட்டியதோடு தன் வீட்டின் ஒரு அங்கத்தினராக ஏற்று கொண்டார்.

நேர்மைக்கும், அயராத உழைப்பிற்கும் கிடைத்த பரிசு அரபியரின் அன்பிற்கும் பிரியத்திற்குரிய வேலை ஆளாய்  ஆகி விட்டால், வாழ்வில் முன்னேற்றம் மிக சுலபம். அடுத்த வாரம் காண்போம்...
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, August 2, 2013

முரண்பாடுகளை முறியடிப்போம் !

உயர்ந்த கட்டிடங்கள் கட்டுகின்றோம்,
தாழ்வான எண்ணங்களில் உள்ளோம்;
விரிவான பாதைகள் அமைக்கின்றோம்,
குறுகிய மனப்பான்மையிலே உள்ளோம்;
நிறைய செலவு செய்கின்றோம்,
குறைவாகவே பெறுகின்றோம்;
பெரிய வீடுகள் உள,
சிரிய குடும்பமே வசிக்கின்றது;
நிரம்ப வசதிகள் உள,
குறைவான நேரங்களே கிடைக்கின்றன;
பட்டங்கள் நிரம்பப் பெறுகின்றோம்,
பட்டறிவு குறைவாகவே பெற்றுள்ளோம்;
நிறைய அறிந்திருந்தாலும்,
அரைகுறையாகவே நீதி வழங்குகின்றோம்;
அறிஞர்கள் அதிகமானதால்,
குழப்பங்களும் கூடி விட்டன;
மருந்துகள் பெருகிவிட்டன,
நிவாரணம் அருகிவிட்டன;
உடைமைகளைப் பெருக்கிவிட்டோம்,
அதன் மதிப்பைச் சுருக்கிவிட்டோம்;
அதிகமாகவே பேசுகின்றோம்,
அன்பைச் சுருக்கி; வெறுப்பைப் பெறுக்கிவிட்டோம்;
வாழ்வாதாரங்களை உருவாக்கக் கற்று கொண்டோம்,
வாழ்க்கையை அல்ல;
ஆயுளுக்கு ஆண்டுகளைச் சேர்க்கும் நாம்,
வாழும் பருவத்துக்கு உயிரைச் சேர்ப்ப்தில்லை;
விண்ணுக்குச் சென்று திரும்பும் நாம்,
மண்ணில் அண்டை வீட்டாரைக் காண்பதேயில்லை;
வெளிக்கட்டமைப்புகள் யாவற்றையும் வென்றாலும்,
உள்கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்துவதில் தோற்றுவிட்டோம்;
காற்று வெளியாவும் தூய்மைப் படுத்தி விட்டோம்,
ஆற்றல் மிகு ஆன்மாவை தூய்மைப் படுத்தவேத் தவறிவிட்டோம்;
அணுவைப் பிளக்கும் அறிவைப் பெற்றோம்,
அகத்தின் அழுக்காறு பிளந்தெடுக் கற்றோமா..?
உயர்வான ஊதியம் காணுகின்றோம்,
குறைவாகவே ஒழுக்கம் பேணுகின்றோம்;
அளவையிலே நிறைந்துள்ளோம்,
தரத்தினிலே குறைந்துள்ளோம்;
இலாபத்தைப் பெருக்கி விட்டோம்,
உறவுகளை கழித்து விட்டோம்;
"உலக அமைதி"க்கு உச்சி மாநாடு,
கலகம் உருவாக்கி உள்நாடே ம்யானக்காடு..!;
வகைவகையான உணவு பதார்த்தங்கள்,
மிகமிக குறைவான சத்துக்களே- என்பதே யதார்த்தம்;
இருவழிப் பாதையாக வருமானம்,
ஒருவ்ழிப் பாதையாக "விவாகரத்து" பெருகுவதே அவமானம்;
அலங்கார இல்லங்கள்,
அலங்கோல உள்ள்ங்கள்;
காட்சிக்கு அழகான ஜன்னல்கள் வெளியே,
வைப்பறையில் ஒன்றுமேயில்லை உள்ளே;
தொழில் நுட்பம் பெருகி விட்ட இவ்வேளையிலே
அழித்து விடாதீர் இவ்வரிய வரிகளை !!!!!

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு : 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இக்கவிதை கடந்த [ 01-08-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

Thursday, August 1, 2013

ஒரு ஹதீதை எப்படி அணுகவேண்டும் ?

ஒரு ஹதீதை நாம் அறிவைக்கொண்டு பார்க்கக் கூடாது என்று சொல்லுகிறார்கள் சிலர்.

ஆனால் குர்-ஆனை நீங்கள் அறிவைக் கொண்டு பார்க்கலாம்.

இஸ்லாம் அறிவியல் பூர்வமான ஓர் மார்க்கம். அதனுள் மூட நம்பிக்கைகளுக்கு இடமில்லை.

மூடநம்பிக்கைகளே இல்லாத அற்புதமான மார்க்கம் என்ற பெருமையை உடையது இஸ்லாம்.

உலகின் தலை சிறந்த அறிஞர்கள்கூட (அறிஞர் பெர்னாட்சா போல) குர்-ஆனை வாசித்துத்தான் இஸ்லாம் ஓர் சிறந்த மார்க்கம் என்று சொன்னார்கள்.

குர்-ஆன் அப்படிப்பட்ட ஓர் புனித நூல், புரட்சி நூல், உண்மையின் மையம்.

பலகீனமான ஹதீதுகளை ஏற்றுக்கொள்வதால் நீங்கள் இஸ்லாத்தின் உயர்வுக்கு பங்கம் விளைவிக்கிறீர்கள்.

பலகீனமான ஹதீதுகள் உண்டு.

பலகீனமான இறைவசனம் ஏதேனும் ஒன்று உண்டா ? 

குர்-ஆன் அப்படியே உண்மையின் இழைகளால் கட்டப்பட்டது.

ஹதீதுகள் பொய்யர்கள் சூழ்ந்து செய்த சதியால் கலப்படம் செய்யப்பட்டது.

ஹதீதுகளில் பலகீனமானவற்றைக் களைவது ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமை.

அன்று இயன்றவரை அறிஞர்கள் களைந்தார்கள்.

ஹதீதுகளைப் பார்வை இட்டு ஆயிரம் ஹதீதுகளுக்கு ஒன்றிரண்டைத்தான் ஏற்புடையது என்றார்கள்.

குர்-ஆனில் ஏதேனும் ஒரு இறைவசனத்தை உங்களால் நீக்க முடியுமா ? 

அப்படி ஓர் குழு அமைக்கப்பட்டு குர்-ஆன் வசனங்கள் ஏதேனும் நீக்கப்பட்டதா ?

ஏற்புடைய ஹதீதுகள் என்று பல லட்சம் ஹதீகளில் இருந்து சில வற்றை மட்டுமே தொகுத்தார்கள். ஏன் என்று சிந்திக்கவேண்டும்.

ஏற்புடைய குர்-ஆன் வசனம் என்று பல ஆயிரம் இறைவசனங்களை நீக்கி சிலவற்றை மட்டும் தேர்வு செய்து எந்த அறிஞர் குழுவாவது தொகுத்ததா ?

ஒரு சொல்லும் ஓர் எழுத்தும் மாற்றாமல் நபித் தோழர்களின் நினைவாற்றல்களிலிருந்தும், எழுதி வைக்கப்பட்ட அனைத்து வகை ஏடுகளிலிருந்தும் குர்-ஆனை நூலாக்கினார்கள்.

ஹதீதுகள் அப்படியா ?

ஹதீதுகளின் வரலாற்றை வாசியுங்கள்
http://anbudanislam2012.blogspot.ca/2012/10/blog-post_3595.html

அறிவுடைய ஒவ்வொருவருக்கும் 
மேலான அறிவுடைய ஒருவன் 
இருக்கிறான் (குர்-ஆன் 12:76)
அன்புடன் புகாரி
Pro Blogger Tricks

Followers