.

Pages

Wednesday, April 29, 2015

[ 19 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(69)
தாவிட உள்ளம் தனிமைச் சுயத்தெளிவில்
தாவிடும் உள்ளம் தலைவனுள் - ஆவியும்
தாவிடும் மெல்லத் தளர்ந்திட்டே காலத்தே
ஓவியம் இல்லஅரு ஓம்பு

(70)
ஓம்பு உறவினர் உற்றார் ஒருகாலும்
வீம்பில் எதிலும் விடமாட்டார் - கூம்பியே
உன்னவன் என்றேநீ உள்ளத்தில் எண்ணங்கள்
நன்னெறி ஊன்றியே நம்பு.

(71)
நம்புதலில் திண்ணம் நழுவாதே நின்றிட
நம்பிட்ட நாட்டம் நடக்குமாம் - நம்பிடும்
நல்லவைகள் அல்லவைகள் நன்கே நடந்திடுதல்
வல்லவனின் ஆற்றலான வாக்கு.

(72)
வாக்குகள் நாக்கினால் வந்ததல்ல மாறாக
ஆக்கையில் உண்டாகி ஆளுமே - ஊக்கமுடன்
உன்னிலே தேடிட உள்ளத்தை வாசலாக
நன்கொடைத் தந்தவனே, நம்பு

நபிதாஸ் (தொடரும்)

வெண்பா (69
பொருள்:  தான் யார் ? தான் எப்படி வந்தோம் ? அவ்வழியே செல்லத் தன் ஆதி மூலம்தான் எது ? என்று தன் சுயத்தெளிவில் தன் உள்ளம் தனிமையில் சிந்திக்கத் தாவிட, தன் உள்ளம் மேலும் தாவிடும் தன் தலைவனுள். இவ்வாறு சிந்தித்துக்கொண்டே முடிவில்லாமல் சென்றால் தன் ஆவியும் என்ற உயிரும் உடல் தளர்ச்சியினால் தாவிவிடும். எனவே உடன் காலத்தே தன் தலைவன் யார் ? அவன் அருவென்ற உருவமில்லாதவன் என்பதைப் பேணித் தலைவனுள் (இறைவனுள்) சிந்தனைச் செய். (அதன் மூலம் தன்னையும் அறிவாய் தன் தலைவனையும் அறிவாய்)

வெண்பா (70
பொருள்: உற்றார் உறவினர் அவர்களை நேசமுடன் பேணி நடந்துக்கொள். அவர்கள் ஒருகாலும் உன்னை வீம்பாகக்கூட எதிலும் பாதிப்பு ஏற்பட விட்டுவிடமாட்டார்கள். எனவே ஒன்றாக ஒற்றுமையாக அவர்களை அரவணைத்தே அவர்கள் உன்னுடையவர்கள் என்ற இறைவனின் நன்னெறியுடன் நீ உன் ஆழமான உள்ளத்தில் எண்ணங்கள் என்றும் மலர நம்பிக்கைக்கொள். நன்நம்பிக்கை நாட்டப்படி நல்லதாகவே மாற்றிவிடும். எண்ணம் என்பதும் வேண்டுதலே அதனை இறைவன் செயல்படுத்துவான்.

வெண்பா (71
பொருள்: நம்பிக்கையில் கிஞ்சுற்றும் நழுவாது மிகவும் உறுதியாக 
நின்றிட அந்நம்பிக்கை நாட்டாப்படியே நடந்துவிடும். இவ்வாறு நம்பிடும் நல்லதும் அல்லதானக் கெட்டதும் நன்றே நடந்திடுதல் எல்லாம் வல்லவனான அவனின் ஆற்றல்மிகு வாக்குப் போன்றதாகும். ஏனென்றால் அவன் நாட்டம் நடப்பதன்றி வேறாகாததுடன், அவன் நாட்டம் என்பதும் நம்பிக்கையும் அவன் படைத்த இம்மனதுடன் தொடர்புடையது.

வெண்பா (72
பொருள்:வாக்கு என்பது நாக்கினால் உண்டானதல்ல. மாறாக மனித உடம்பிலிருந்து உண்டாகி செயல்படும்; செயல்படுத்தும். மேலும் மிக ஆழமாக ஊக்கமுடன் உன்னிலே அறிந்திட உன் உள்ளத்தை அவன் நன்கொடை வாசலாக தந்த அவனின் ஆற்றலிலிருந்துத்தான் வருகிறது என்பதை நம்பு. வாக்கு பலிக்கிறது என்றுச் சொன்னால் எல்லாம் வல்லவனிடமிருந்துதான் என்பதை அறிந்துக்கொள். மனிதனுக்கு ஆற்றலில்லை எல்லாவற்றையும் படைத்த இறைவனிடத்தில் தான் ஆற்றல்கள் உள்ளது. அவனிடமிருந்துத்தான் ஆற்றல்கள் வருகிறது.

Sunday, April 26, 2015

ஏன் மறைந்தாய் ?

துள்ளித் திரிந்த காலமது...
தூரத்திலோர் சப்தம் கேட்கும்
வண்ண வண்ண ஒளிகொடுத்து
வானில் வண்ண வெடிகளாலே..

என்னவென்று நானும் பார்ப்பேன் ..
தீபாவளி திருநாள் என்று பலரும் சொல்ல ..
நாளை நமக்கு நல்ல பல பலகாரங்களும் ..
இனிய பல இனிப்புகளும்  நம்ம வீடு வந்து சேரும் ..

இஸ்லாமிய வீட்டிற்கும்
இனிய பொங்கல் ...கரும்புடனே
இன்னும் பல வைபவங்கள் ..
மதம்பாரா மனிதநேயம் ..இனியதாக நடந்தேறும் ...

பேருந்தில் பயணிக்கையில் ..
பெரியவர் நின்றிருந்தால் .
தன்னிருக்கை கொடுத்து
தயவாக நடந்த காலம் ..
தாடி ..தொப்பி போட்டிருக்கும்
பெரியவரும் ..பட்டை நாமம் போட்ட பெரியவரும்
பொக்கை வாய் பிளந்து சிரித்த காலம்  அக்காலம் ..

ரஹீமிற்கு காய்ச்சலென்று ..
ராமனுக்கு  கவலையாகும்
ரத்த பந்த சொந்தமில்லை ...
இருவருக்கும் பாசத்தில்
கொஞ்சமும் பஞ்சமில்லை ..

பஞ்சம் நிறைந்த காலமது
வஞ்சமில்லா காலமது ...
நந்தி கேஸ்வரனும் ...நவநீத கிருஷ்ணனும்
ஞான சேகரணனும்...நலம் பெறும் நண்பனாக
வாழ்ந்த காலமது

கடை மடை ..வரை
காவேரி தவழ்ந்து வந்த காலமது
காலமது கடந்ததுவே ..
தந்திரங்கள் புகுந்ததுவே ..

தண்ணீர் கேட்டால் ...
நீ பேசு மொழி வேறு ..
என்பதுவும் ...கல்வி கற்க இடம் கேட்டால்
நீ வேறு மதம் என்பதுவும் ..தந்திரத்தின்
வெளிப்பாடே ...

மனித நேயம் ...
நிறைந்த காலமதில்
அரசியலில் மதமில்லை ..
மனித நேயம் நிறைந்த காலமதில்
வணிகத்தில் மதமில்லை ..

மனித மனதில் ...
மனித நேயமிருந்தது
மனிதனிடம் மதம் புகுந்து
மனித நேயமதை ..
துரத்தினரே ...

ஏன் மறைந்தாய் ..
மனித நேயமே ..
என கேட்க நம் நாட்டில் நாதியில்லை ..
அனாதையாய் மனித நேயம் ...

நல்ல மனிதர் கேட்கும் கேள்வி ..
ஏன் மறைந்தாய் மனித நேயமே .!
பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Wednesday, April 22, 2015

உலக பூமி தினம் !

நாளும் மெலிகிறது
நாட்டின் பசுமை
கோளும் எரிகிறது
கோடை வெயிலில்!
சுற்றும் பூமியெனும்
சுகந்தரும் மாத்திரையைப்
பற்றிச் சாப்பிடத்தான்
பலமுடன் காத்திருக்கு!
.
தீவுகள் எல்லாம்
திரைகடல் உள்ளே
காவுகள் கொண்டு
கரைந்துதான் போகும்!
உயிராம் காற்றும்
உணவான நீருமின்றி
பயிரும் வாடும்
பரிதாபம் வேருடனே!
காசுகள்தான் இசைத்தாலும்
காகிதம் இசைக்குமா?
வீசுகின்ற அசைவின்றி
வேகிடும் நிலையிது!
பூவுலகின் உடலில்
பூவிதழ் உலர்ந்து
ஆவியினால் திடலாய்
ஆகிடும் கடலும்!
வானத் தாயின்
வல்லமை ஓசானாம்
மானத் தைத்தான்
மண்ணிலே துகிலுரித்தோம்!
புறவூதா தீக்குச்சிப்
புலம்பெயர்ந்து தெரிகிறது
நிறம்மாறும் போக்குத்தான்
நிலமடுப்பு எரிகிறது!
பச்சைத் துணியகற்றி
பால்வெண்மை விதவை:
இச்சைத் தணித்திடுமா
இந்தக்கா கிதமும்!
மரத்தை அறுத்து
மாளிகைச் சாளரம்
வரத்தைத் தருமா
வானிலே மாமழை!
காசின் தணப்பில்
காற்றின் துரோகிகள்
வீசும் அனலில்
வியர்க்கும் வறியவர் !
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Thursday, April 16, 2015

[ 18 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(65)
நிலைகள் நிலையற்ற நித்தியத்தின் மாற்றம்
நிலைத்தஅதிலே நிகழும் - அலைகள்
கடலில்பிறந்தே கலைந்திடும், ஒன்றில்
தொடரும் சுழற்சித் துடிப்பு.

(66)
துடித்திடும் துன்பம் தொடரும்பிரிக்க
வெடித்திடும் வேதனை விடாமல் - படித்திடும்
தத்துவம் நன்றே தடுத்தும் இணைவைக்கும்
பித்தனின் நல்லப் பிழை.

(67)
பிழைகளெனப் பார்வைப் பிரிக்கத் தெரியாத்
தழைத்திட்ட உள்ளமே தப்பு - விழையும்
விபரத்திலே நேர்மை விதியின் சமாதி
சுபமறியும் கல்வியைத் தொற்று.

(68)
தொற்றிடும் கொள்கைத் துவைதமே ஆகிடின்
பற்றிடும் எட்டே பரமனைக் - கற்றிடும்
எங்குமே நன்றே இருக்கும்இறையென்றே
தங்கிடும் அத்துவைதம் தாவு

நபிதாஸ் (தொடரும்)

வெண்பா (65
பொருள்: அலைகள் கடலில் பிறந்தே கலைந்திடுவதுப் போன்று ஒவ்வொருத் தோற்ற நிலைகளும், மாற்றங்களைத் தன்னிலே உண்டாகிக்கொண்டே இருக்கும் நிலையான நித்தியத்தின் நிலைகள். இவ்வாறு ஒன்றிலே தொடரும் சுழற்சிகள்.

வெண்பா (66
பொருள்: அறிந்தோம் என்ற ஆணவப் பித்தன் பிரிக்கும் நல்லப் பிழையாம் இறைவன் ஒருவன் என்றத் தத்துவம் அறிந்தும் அத்தத்துவம் தெளிவாகப் புரியாமல் இணைவைக்கும் செயலில் இருத்தல். எங்கும் நிறைந்த இறைவனை இவ்வாறே என்றறியாததனால் அமைதியின்மையின் துன்பம் தொடரும். எங்கும் நிறைந்தவனை எங்கோ இருப்பதாக இருக்குமிடம்; இலாத இடமாகப் பிரிக்கும் உணர்வால் அவ்வுலகிலும் வேதனை விடாமல் வெடிக்கும்.

வெண்பா (67
பொருள்: எனது உனது என்பதில் உரிமைகள் உண்டாக்கித் துன்பம் ஏற்படும். அதுபோலப் பார்வையில் தனது உரிமைப்பார்வைத் தனக்கும் துன்பம் தரும். அறிந்துக்கொள்வதற்காக உண்டாகும் உரிமைக்கொள்ளாப் பார்வை பிழையற்றப் பார்வையாகும். அந்த பிழை; பிழையற்றப் பார்வைப் பிரித்தறியாமல் இதுகால்வரை வளர்ந்த உள்ளம் தப்பானதே. விரும்புகின்ற விபரத்திலே தவறில்லாத நேர்மையான என்றும் அமைதியுடன் வாழும் நன்மைகள் தரும் சமாதி என்ற மனம் அமைதியுடன் வாழும் கல்வியை அறிந்துப் பற்றிக்கொள்.

வெண்பா (68
பொருள்:இறைவன் அல்லாத வேறு ஆற்றல்கள் உண்டு எனக்கொள்ளும் துவைதக் கொள்கை ஏற்றவர் இறைவனை எங்கோ அல்லது சிலவற்றில் இருப்பதாகக் காண்பார். இவர்கள் இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பதை காலபோக்கில் கேட்டும்; ஏற்றும் கொள்வார்கள். அது அத்துவைதக் கொள்கை. காலப்போக்கில் அது மனதில் தங்கிடும்.ஏற்றுக்கொண்ட அத்துவைத அக்கொள்கைக்குத் தாவிவிடு.எனவே அறிந்தும் அறியாமல் அத்துவைதக் கொள்கையில் இருந்துக்கொண்டுத் துவைதக் கொள்கை செயல்பாட்டில் இருக்காதே என்பதாகும். 

Saturday, April 11, 2015

[ 4 ] பத்திரிக்கையாளன் ஒரு பார்வையாளன் !

ஊடக பார்வை:
சென்ற வாரம் தமிழக ஊடகத்தை முற்றிலும் ஆக்கிரமித்த செய்தி தமிழக தொழிலாளர்கள் ஆந்திராவில் கொல்லப்பட்ட செய்தி இது தமிழக மக்களை எவ்வளவு பாதித்து உள்ளது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும்
கையில் எடுத்துள்ளதை வைத்தே தெரிய முடிகிறது.

செம்மர கட்டைகளின் மதிப்பு உலக சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் ஒரு மருத்துவ குணம் கொண்ட மரம். அதனை கடத்தி விற்று அதிக சம்பாதிக்கும் கும்பல் ஆந்திர அதிகார வர்க்கத்தில் இருப்பது ஆந்திர காவல் துறைக்கு தெரிந்த ஒன்றே. ஆயினும் அவர்களை ஒன்றும்
செய்ய முடியாத போலீசார் அப்பாவி தமிழர்களை கொன்று தனது ஆதிக்க வெறியை தீர்த்து கொண்டது. நன்றாகவே தெரிகிறது. அது அப்பட்டமான முட்டாள்தனமான செயல்.

இன்றைய கால கட்டத்தில் ஓடும் மனிதனை செயலிழக்க செய்து பிடிக்க எத்தனையோ யுக்த்திகள் காவல் துறையிடம் உண்டு அப்படி இருக்க கொல்ல துடித்தது ஏன் !?

ஏதோ இரண்டு தரப்பு கடத்தல்கார்களில் ஒரு தரப்புக்கு ஆந்திர போலீசார் துணை போனது போன்று உள்ளது. அதிகார வர்க்க கடத்தல் கும்பல் போலீசார் துணையோடு இக்காரியத்தை செய்து உள்ளதோ என்று சந்தேகப்பட தோன்றுகிறது. இது போன்று பயமுறுத்தலால் அப்பக்கம் இனி யாரும்
வரமாட்டார்கள். இனி அதிகார வர்க்கமே செம்மர கடத்தலை அமோகமாக செய்யலாம் என்றே சந்தேகிக்க தோன்றுகிறது.

அப்பாவி இளைஞர்கள் இப்படி அரக்கர்களால் கொல்லப்படுவதை  நிறுத்த அப்பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். இப்பிரச்சனை பின்னணிப்  பற்றி ஒரு ஊடகவியலாளர் செய்தி தொகுப்பில் கூறும்போது அப்பகுதி இளைஞர்களின் ஆடம்பர தேவைகள், மது அருந்த அதிக பணம் தேவைகளுக்காக தனது உயிரை பணயம்
வைத்து இது போன்ற வேலைகளுக்கு செல்கிறார்கள் என குறிப்பிட்டார்.

அப்பகுதியில் அதிகமாக மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் செல்வதையும், டாஸ்மார்க் கடைகளில்  அதிகமாக இளைஞர்கள் காணப்படுவதையும் மேற்கோள் காட்டி இருந்தார். ஆடம்பர வாழ்க்கை வாழ, ஆசை வார்த்தை காட்டி அழைத்து செல்லும் ஏஜென்ட்டுகளை முதலில் கலை எடுக்க வேண்டும். எங்கோ, எவனோ ஒருவன் கொள்ளை லாபம் சம்பாதிக்க ஏழை அப்பாவிகள் கொல்ல படுவது யாராலும் ஏற்று கொள்ளமுடியாத ஒன்று.

பத்திரிகை துறையில் செய்தி பற்றிய ஆய்வுகளில் முக்கியமாக  நினைவில் கொள்வது ஒரு செய்தி எத்தனை நாட்கள் பேசப்படுகிறது அதன் அடிப்படையில் அதன் வீரியம் கணக்கிடப்படும்.

இதே நாட்களில் இரண்டு பிரபலங்களின் மறவு செய்தி, முதல் நாள்  நாகூர் ஹனிபா அவர்களின் மறைவு செய்தி. இரண்டாம் நாள் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மறைவு பற்றிய செய்தி. இரு வேறு துறைகளில் பெரிய தூண்களாய்  திகழ்ந்த இவர்களின் மறைவு கூட செய்திகளின் தாக்கம் அவ்வளவாக இல்லை இது ஊடகத்தில் பார்க்கப்படும் ஆய்வுகளில் ஒன்று. ..

இருபது தமிழர்களின் மறைவு எனது மனதை மிகவும் பாதித்தது. வருத்தமளிக்கும் இந்நிகழ்வால் நான் ரசித்த படைப்பு பற்றி இவ்வாரம் எழுத விரும்பவில்லை.

இறைவா ! பலியான அப்பாவி தமிழர்களின் குடும்பத்தினருக்கு பொறுமையையும், மனதில் அமைதியையும் கொடுத்து, எந்த செல்வம் தேடி உயிர் விட்டார்களோ, அந்த செல்வம் அவர்களின் குடும்பத்திற்கு கொண்டு போய் சேர்ப்பாயாக...
பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, April 10, 2015

நல்லதையே செய் !

இது இப்படித்தான்
நிகழ வேண்டும் என்பதே
நிகழ்கிறது அப்படியே!
பேசி பேசியே

பொழுதைப் போக்கும் நீ
கடிகாரத்தைப்பார்
ஓடுவது முள் அல்ல
அது
"வாழ்க்கை "
முன்னேறக் கூறும்
வாழ்த்து!

இவ்வுலகம்
ஒரு கனவு போல
கனவு காண்க
நேர்வழிக்கு

கண்காண
உயிருடன் வாழும்
பெற்றோரை
மதிக்காத போது

கண்ணுக்குப் புலனாகாத
இறைவனை
வணங்கிப்
பயனில்லை -அதற்கு
"மதிப்"பெண் இல்லை!

தலை நீட்டாதே
பிறர் காரியங்களில்
குறை கூறி அலையாதே
குட்டுப்பட்டு வேகாதே!

யாரையும் வெறுப்பது
உண்மையாக இருந்தாலும்
நேசிப்பதில்
போலி மருந்தைத்
தடவாதே!

தொல்லை தருபவன்
கெட்டவன்தான்
ஆனால்
அவனிட மிருந்து
கிடைப்பதோ "அனுபவம் "
அதுவும்
வழிகாட்டும்!

விவாதம் - அதுஒரு
"வாதம்! "
போதையைப் போன்றது - அதைக்
கோதி முடிக்காதே!
புண்படுத்தும் ஆணவத்தை
மண்புதை!

முறையற்ற
கோபம் - ஒரு
கொடிய "வைரஸ் "
பிணிகள் அனைத்தையும்
துளிர்க்கச் செய்யும்
வேர்!

செயலும் அதற்குரிய
விளைவும்
உண்டு என்றும்
அதனால்
நல்லதையே செய்!
'கவிஞர்' அதிரை தாஹா

Wednesday, April 8, 2015

[ 17 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(61)
அறிவும் அருவுருவம் அவ்விதம் உன்னில்
அறியா நிலையே அருவம் - அறியவே
எல்லா நிலையிலுமே இல்லா திருப்புகளும்
நல்லா அறிய நடிப்பு.

(62)
நடிப்புகள் உள்ளத்தின் நாட்ட நளினம்
துடிப்புகள் நம்பிக்கைத் தோற்றம் - தடிப்புகள்,
இல்லாத உள்ள இருப்பொன்றின் கானலேயாம்
அல்லாமல் வேறேது ஆற்று.

(63)
ஆற்றல்கள் தன்னை அறிந்திடத் தோற்றமாகி
ஏற்றங்கள் எய்த இயங்குமே - மாற்றங்கள்
நில்லாதே தோன்றியும் நித்தியம் சேர்ந்திடுமே
பொல்லாத வாழ்க்கைப் புரி.

(64)
புரிந்திட நிம்மதிப் பொய்மை அகற்றத்
தெரிந்திடும் ஆற்றல்கள் தேவை - சரியென்கின்
சத்தியம் அண்மித்தே சாந்தியாகிச் சந்திக்கும்
நித்திய உண்மை நிலை

நபிதாஸ்

வெண்பா (61
பொருள்: எதாவதொருப் புலனால் மட்டும் அல்லது மனதால் உணருவது அருவுருவமாகும். அவ்வகையில்அறிவு என்பது அருவுருவமாகும். அந்த அறிவானது மனதில் அல்லது சிந்தனையில் தோன்றும்முன் அது தோன்றாமை அல்லது இல்லாமை என்ற அருவமான நிலையிலாகும். அவ்வகையில் ஒரு அறிவானது அறியா அல்லதுத் தோன்றா நிலையினில் அது அருவத்தின் நிலையிலாகும்.

அதன்படி அறிவு அருவுருவம். அது அறியா (தோன்றா) நிலையில் அருவம். இவ்வாறுத் தன்னை அறியவே எல்லா நிலையிலும் அந்த அருவம் என்றத் தோன்றாமை இல்லாமையில் இருப்புகளாக உள்ளது. இதனை நன்குத் தெளிவாக அறிவோமானால் அருவமே அருவுருவமாக; உருவமாக நடிப்பதுப்போல் தெரியலாம்.

இல்லாதிருப்புகள் என்பது எதுவுமே நிலையானதல்ல அவைகள் மாற்றத்திற்குட்பட்டது; மாறிக்கொண்டேயிருக்கும். இருப்பதுபோல் இருக்கும் எதுவும் நிலைத்திருப்பதில்லையே. அவைகள் மாறிக்கொண்டே இருக்கின்றது. இவ்வாறு மாறிக்கொண்டே இருக்கின்ற அனைத்தும் இல்லாதிருப்புகள் ஆகும்.

வெண்பா (62
பொருள்: உள்ளத்தின் நாட்டத்தின் நளினமே நடிப்புகள் என்ற செயலகள். அச்செயல்களில் நம்பிக்கையின் விளைவால் ஒருவித எழுச்சி என்ற துடிப்புகள் உண்டாகும். நம்பிக்கையின் உறுதியில் துடிப்புகளாகி வடிவங்கள் என்றத் தடிப்புகள் உண்டாகும். நாட்டத்திற்குமுன் இல்லாத ஒன்று பின் இருப்பதுபோல் தோன்றுவது கானல்போன்றதாகும். இவ்வாறே சுயவொன்றே இல்லாதிருகின்றதே அல்லாமல் வேறு என்பதில்லையே என்பதாகும். இதனை அறிந்தாற்று.

வெண்பா (63
பொருள்: ஆற்றல்கள் அதுத் தன்னை அறிந்திடவே அதுவே தோற்றங்களாகித் தானே தன்னை அறிந்துத் 'தானேதான்' என்றுத் தெளிவுறும். அத்தகையத் தெளிவையடையும் ஏற்றங்கள் அடைய அதுத் தொடர்ந்துச் செயல்படும். இவ்வாறுத் தோன்றி மறையும் மாற்றங்கள் நிலையில்லாதது. நிலைக்காத நிலையின் மாற்றங்கள், மறு மாற்றங்களாகி நித்தியம் என்ற நிலையை அடைந்திடும் என்ற இப்பொல்லாத வாழ்க்கையைப் புரிந்துக்கொள்.

வெண்பா (64
பொருள்: நிம்மதி என்பதும் அல்லதும் பொய்யே என்பதைத் தெரிந்துக்கொள்வதற்கே ஆற்றல்கள் தேவையாகும். இது சரியென்றால் அல்லது புரிந்துக்கொண்டால் சத்தியம் என்ற உண்மை நெருங்கி மனம் அமைதியாகும் சந்திப்பு ஏற்படும். இதுவே நித்தியம் என்பதின் உண்மை நிலையாகும்.

Sunday, April 5, 2015

[ 16 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(57)
முடிவு அமையும் முயற்சி நிலைக்கே
வடிவு மனதில் வகுத்தே - துடிப்புப்
படியப் படியப் பலனும்அருகே
பிடிக்கப் பெறுதலுமே பேறு

(58)
பேறுகள் பெற்றோர் பெருமைகள் கொள்ளாதே
வீறுடன் செல்லார் விரிந்தவர் - ஏறுவோர்
ஏகனில் உச்சம் இருந்தே விசாலமாய்
ஆகுதல் ஆனந்தம் ஆகும்.

(59)
ஆகிடத்தான் ஆசை அவனடிமைப் பூரணமாய்
தாகிக்கத் தந்திடுவான் தக்கதை - ஊகிக்க
ஒன்றும் நிகராக உன்னைப் படைத்தவன்
என்றும் தனித்தவனே எண்ணு.

(60)
எண்ணம் வருமுன்னில் எந்தவழிப் பாதையறித்
திண்ணம் தனித்தவன் திக்கேதான் - உண்மைத்
திரையிட்டே தன்னின் திறமைகள் என்பார்
அரைகுறையின் அர்த்த அறிவு.

நபிதாஸ்

வெண்பா (57
பொருள்: தான் விரும்பிய ஒன்றதான் அமைவு; அதன் முடிவு; அவைகளை மனதால் காணுதலோடுக்கூடிய முயற்சியின் நிலைக்கேற்பவும் முடிவுகள் அமையும். அம்முயற்சியின் அடிக்கடியாழ்ந்த ஈடுபாடு அதன் நிலைக்கேற்ப அதனை அடைதல் குறுகியக் காலத்தில் நிகழும்; இயலும். இவ்வாறான நம்பிக்கை, இதனையறிந்து அவ்வாறுச் செயல்படுதலுமே இறைப் பேறுப்பெற்றதாகும்.

வெண்பா (58
பொருள்: விசால விரிந்த மனதுடைய இறைப்பேற்றினைப் பெற்றவர்கள் பெருமைக் கொள்ளாது அடுத்தவர் மனம் நோகும்படி நடக்கமாட்டார்கள். அவ்வாறன இறையன்பை; இறைநெருக்கம் என்றப் பேற்றினைப் பெற விரும்புபவர் எங்கும் நிறைந்த வல்லவனில் அவன் குணங்களில் ஒன்றான விசாலமாகத் தன் மனத்தைக் கொள்ளுதல் ஆனந்தம் ஆகும்.

வெண்பா (59
பொருள்: மனமே ! எந்த ஊகங்கள் எதற்கும் நிகராகதவன்; உன்னைப் படைத்த வல்லவன் ஒருவனே; தனித்தவனே என்பதை என்றும் உன்னில் நிலைநிறுத்து. வேண்டுமென்பதைத் தாகிக்கத் தகுந்தைத் தருபவனான ஏகன் அவனே. அத்தகைய ஏகனின் பரிபூரண அடிமையாக ஆகிடத்தான் ஆசைக் கொண்டவனாக அலைகிறேன்; வேண்டுகிறேன் அவனிடத்தே.

வெண்பா (60
பொருள்: எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றதென அதன் பாதையை அறிந்து செல்வீரானால், நிச்சயம் அவனன்றி ஏதுமில்லா எங்கும் நிறைந்த எல்லாம் வல்லவனிலிருந்துதான் என்ற அதன் திக்ககை அறிந்திடுவாய். உண்மையாகச்; சத்தியமாக நான்தான் அவ்வாறுச் சிந்தித்துச் செய்தேன் என்பவரிவர்கள் அரைகுறையாக அர்த்தங்கள் புரியும் அறிவுடையவர்களே.

Saturday, April 4, 2015

அரபகத்தின் பாலையில் மணற்புயல் !

புழுதிக் காற்றே என்று
புலம்பிடவில்லை நாங்கள்
அழுதுச் சாற்றவுமில்லை
அவனே அறிவான்

ஆற்றல்மிக்க எங்களின்
அயராத உழைப்புக்கு
காற்றே நீ தானே
தோற்றுப்போனாய்!

கரைகாணா எங்களின்
கடின உழைப்பைக் கண்டு
அரைநாளுக் குள்ளாக
அடங்கிப் போய் ஒளிந்துவிட்டாய்!

நெருப்பின் ஆற்றலை
நேசரின் நம்பிக்கை வென்றது
விருப்பமுடன் குளிர்ந்தே
வியப்பினைச் சொன்னது

கத்திக்கு ஆற்றலில்லை
கலீலுல்லாஹ்வின்
பக்திக்கு முன்னால்
பணிந்து விட்டது!

கடலுக்கு ஆற்றலில்லை
கலீமுல்லாஹ்வின் கைத்தடியால்
திடலாக மாறியதும்
திகைப்புக்கு ஆளானோர்

அத்தனை ஆற்றலும்
அல்லாஹ் ஒருவனுக்கே!
இத்தரையில் நிகழும்
இவைகளே சான்றுகள்

இறைதூதர்களின் நம்பிக்கைக்கு
இத்தனை ஆற்றலும்
குறையேதும் செய்யாது போலவே
கூவி வந்த புயற்காற்றே

எதிர்நீச்சல் போட்டோம்
எதிர்வந்த  வேகத்தை
எதிர்த்தே போராடினோம்
என்னவாயிற்று உனக்கு?

மண்ணுக்குள் சென்றதும்
மண்ணே எங்களை உண்பாய்
மண்ணையும் உண்டோமின்று
மண்ணுக்குள் செல்லும் முன்பாய்!

உன்னாற்றலுக்கு முன்னெங்கள்
உழைப்பாற்றல் வென்றதை
உன்னையும் எங்களையும்
உருவாக்கியவனிடம் சொன்னாயோ?
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

மூர்க்கமாய் வீசினாலும்
மூச்சடைக்க வைத்தாலும்
போர்க்குண வீரியமாய்
புறப்பட்டுப் பணிசெய்து
மூக்குக்கு மூடியும்
கண்ணுக்குக் கண்ணாடியும்
செவிகட்கு அடைப்பானும்
தற்காப்புக் கேடயங்களை
தரித்துக் கொண்டே
அயராது உழைத்த
அரபகத் தொழிலாளிகள்
அனைவர்க்கும் சமர்ப்பணம்!

உங்களனைவரின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்..
Pro Blogger Tricks

Followers