.

Pages

Saturday, June 29, 2013

அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' !

முன்னுரை : 
வளைகுடா வாழ்க்கை !

சிலரின் வாழ்வில் வசந்தம் வீசிய வாழ்கை... சிலரின் வாழ்வில் புயலான வாழ்க்கை... கல்வியின் முக்கியத்துவம் தெரிய வைத்த வாழ்க்கை, உற்றார் உறவினர் விட்டு பிரிந்து வந்த இடத்தில் புது உறவாய் தன்னுடன் தங்கிய வெளியூர்க்காரர்களின் நட்பு அதில் கிடைத்த பல உதவிகள், பல துரோகங்கள், ஏமாற்றம், சந்தோசம் என்று பல விசயங்கள் கலந்த படைப்பாக தொடர்ந்து வர இருக்கின்றன. கடந்த கால நிகழ்வு, நிகழ்கால சம்பவங்கள் உள்ளடக்கிய ஆக்கமே "வளைகுடா வாழ்க்கை"

தனி மனித வாழ்க்கை தேவைகள் மிகவும் குறைவான காலங்களில் மனித உழைப்பு அந்த தேவைகளின் அடிப்படையிலேயே இருந்து. அதாவது உண்ண உணவு... உடுத்த உடை... இருக்க இருப்பிடம் இதற்கான சேவைகளே அந்த உழைப்பு தேவைப்படுகிறது.

பண்டை கால தமிழ் மன்னன் அதியாமான் ஆண்ட காலத்தில் வாழ்ந்த ஔவை பாட்டி உழைக்கும் வர்க்கத்தை பார்த்து 'திரை கடல் ஓடியும் திரவியம் தேடு' என்று உறங்கும் இளைஞனை  பார்த்து கூறினாள். ஔவையின் அன்றைய அறை கூவல் இன்றைய இளைஞர்களுக்கு பொறுத்தமாக  இருக்கிறது என்றால் மிகையாகாது.

நமது மூன்று தலை முறையினர் வெளிநாட்டு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இன்று மியான்மர் என்று அழைக்கப்படும் பர்மா மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று பொருளீட்டி வந்த நாம்மவர்களுக்கு 1968 முதல் 1972 வரை தொய்வான நிலை இருந்து வந்தது. ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று அந்நாட்டை வளம் பெற செய்து நல்ல நிலைக்கு கொண்டு வரும் நம்மவர்களின் வாழ்வில் பேரிடியாய் அந்நாட்டு மண்ணின் மைந்தர்களால் தொல்லைகள் ஏற்பட்டு அகதிகளாய் நாடு திரும்பும் நிலை ஏற்படத்தான் செய்கிறது.

இவைகளை பற்றி முத்தாய்பாய் வைக்க காரணம் பின் வரும் ஆக்கத்தில் வரும் நிகழ்வைப்பற்றி கூறிடவே இதனைக் குறிப்பிடுகிறேன்.

1972 அரேபிய வளைகுடாவில் வேலை வாய்ப்பு துளிர்த்த நேரம் அரபி கடலோரம் உள்ள மலையாளிகள் விழித்து கொண்டனர். வியாபாரிகளும், படித்த பட்டதாரிகளும் அதிகமானோர் அரபு நாட்டை குறி வைத்து குடியேறினர். அரபிகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய மலையாளிகளின் சேவையே போதுமானதாக இருந்தது. கன ரக இயந்திரங்கள் குறைந்த காலமது அந்த கால கட்டத்தில் அதிகமான தொழிலாளிகள் தேவைப்பட்டனர். சளைக்காது வேலை பார்க்க நம் தமிழர்களே  தகுதியானவர்கள். தேவைகள் முடிந்த பின்னர் சக்கையாய் தூக்கி எறிந்து விடலாம் என்ற எண்ணத்தில் நம்மவர்களை அதிகமாக வேலைக்கு அழைத்தனர். ஏஜெண்டுகள் மூலம் அன்று பம்பாய் என்று அழைக்கப்பட்ட மும்பைக்கு அழைத்து செல்ல பட்டு அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு  தலைமை ஏஜென்டிடம் அணி வகுத்து காண்பிக்க பட்டு பின்னர் அரபியிடம் அழைக்க பட்டு அவர் சம்மதம் கிடைத்த பின்னர் விசா ரெடியாக ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் என்பர்.

நம்மவரும் கனவோடு காத்திருப்பர்...
 [ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, June 28, 2013

கவியன்பன் கலாமின் 'தாலாட்டு'

கருவறையில் உறங்கிட
கருணையாளன் வழங்கிடும்
அருமையான முறைகளே
அளவற்ற தாலாட்டு !

தூளியை ஆட்டி
தாயவள் பொழிவாள்
தோளில் சாய்த்து
தந்தையும் தருவார்

தாலாட்டுப் பாடலாய்த்
தணிக்கும் அழுகையை
வாலாட்டும் மழலையும்
வாய்பொத்தி உறங்கவே

கற்றவர் சபையிலே
கண்ணியமாய்க் கைதட்டிப்
போற்றப்  படுதலும்
புண்ணியமாய்த் தாலாட்டு

வணிகமும் தொழிலும்
வளம்தரும் ஆக்கம்
பணிகளும் சீர்பட
பயன்தரும் ஊக்கம்

அரியதாய்த் தாலாட்டு
அஃதொரு சீராட்டு
பெரியதாய்ச் சாதிக்க
பேறுபெற்ற பாராட்டு

மனைவிதரும் அன்பு
மடிமீது சாய்ந்து
மனமெங்கும் பூசும்
மகிழ்வானத் தாலாட்டு

படகுக்குத் துடுப்பும்
படிப்புக்குத் துடிப்பும்
கடலுக்கு அலையும்
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 27-06-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. 

இறைவனின் கை !?

இரண்டுகைகள் கொண்டுதானே
இயன்றவைகள் செய்கிறாய்
இனியென்ன  நம்பிக்கை
இயலாதவை செய்திடுமே
இன்றதுவுன் மூன்றாம்கை !
இருக்கட்டுமே இதயத்திலே. .

இறைவன் தந்தான்
இயற்கை மந்திரம்
இனியநம் பிக்கை.
இன்னுமேன் கவலை
இன்றே ஏற்றிடு !

நம்பிக்கை நினைவது
நம்மிலேநி றைந்து            
நழுவாது நிலைத்திடின்
நினைவதுநட க்குமே !

நம்பிக்கை எண்ணம்
நின்மனதி லிருத்தி
நாயகனே நடத்தும்
நல்நியதி அதுவே !

நம்பிக் கைஉள்ளம்
நாயனின் இல்லம் !

இருகைகள் கொண்டு
இயன்றதைச் செய்தாய்
இனிநம் பிக்கை -இது
இறைவ னின்கை!
இயலா ததையும்
இனிதே செய்யுமே!

நீயென் பதென்ன ?
நானென் பதென்ன ?
அவனென் பதென்ன ?

நீநா னவனிது
உலகின் உணர்வு
ஒன்றின் உணர்வு.
ஒன்றினுள் அசைவு
தன்னில் மாற்றம்
நிகழ்த்திட நிகழும்
தவறா துடனே !

உண்மை இருந்தும்
உன்னில் தோன்றும்
நினைவுகள் பலவும்
நம்பும் நிலையில்
நடக்கவும் இல்லையே ?

இதனிலும் மறுப்பு
மதியிலும் தவறு
இருக்கவும் இல்லை !
விரிவு விளக்கம்
விளங்க வேண்டுமே !

உன்னில் உண்மை,
நினைவில் பிடிப்பு,
நம்பிக் கைமுழுமை
உன்னில் இல்லை !

உலகில் உள்ள
உலவும் மனிதன்
தன்னில் தோன்றும்...
தானும் வேறு
உலகும் வேறு
எண்ணம் இயல்பே.

பேசா மரமது
தானே பேசினால் !

மரமென பழத்தால்
மரம்பேசும் தன்னை !
பகுக்கா மரமென
பழம்தனை உணருமே !

மனிதனோ மூலமறியா
பிரிந்தே நிற்கின்றான்.

ஏகத்தில்நல் உலகம்
உலகத்தில் மனிதன்
ஏகமேஎல் லாமென
எதார்த்தம்தான் அறியான் !
என்பதாலே அவனில்
உண்மையது  இல்லையே !

உருவுள் இயன்றது
வெளியில் இயலா
நம்பும் இயல்பு
உன்னில் இருக்க
நினைவில் பிடிப்பு
உன்னில் இல்லையே !

பிரிந்த உணர்வுகள்
நிறைந்த உன்னுள்
நம்பிக் கைமுழுமை
நம்ப இயலுமோ ?

இடிந்திடா தேநீ !
இதோவழி உண்டு !
இன்றே ஏற்றிடு !
நம்பும் மனதில்
வேறுகள் இல்லை
ஒன்றின் உணர்வு.

ஒன்றின் உணர்வதுதான்
ஒன்றின்  நம்பிக்கை
ஏகமின்  நம்பிக்கை
ஏகனின்  நம்பிக்கை !
நடந்தே  தீருமது!
நன்குநம் பிடுவாயே !

இரு கைகள் கொண்டு
இயன்றதைச் செய்தாய்
இனிநம் பிக்கை - இது
இறைவ னின்கை !
இயலா ததையும்
இனிதே செய்யுமே !

நபிதாஸ்

Thursday, June 27, 2013

நச்சுக்கிரிமிகள்

நல்ல
உள்ளங்களின்
மெல்லிய
உணர்வுகளைக்

கள்ளமாய்ப்
பயன்படுத்திக் கொள்ளும்
நச்சுக் கிருமிகள்
சுபிட்சமாய் வாழும்வரை...
இந்த பூமி
துக்கம் மட்டுமே
நிறைந்த
மயான பூமிதான்
அன்புடன் புகாரி

Wednesday, June 26, 2013

வாங்கைய்யா பழகலாம் 'பழமொழி' :)

பழமொழிகள், தத்துவங்கள், பொன்மொழிகள் அன்றாட வாழ்க்கையில் மானுடர்களுக்கு பயன்தரும் நல்ல விஷயங்கள் பழமொழியை பொருத்தவரை நாடு, மொழி, சமயம், ஊர், மாநிலம் போன்றவற்றை சார்ந்திருக்கும்.

ஒரு சமயத்தின், ஊரின் மொழியின் பழமொழிகள் வேறு ஊரின் சமயத்தில் மொழியில் பொருந்தாது

உதாரணத்திற்கு...
ஆடிக்காத்தில் அம்மியும் நகரும் இது தமிழகத்தின் பழமொழி மும்பைக்கோ வேறு நாட்டிற்கோ பொருந்தாது ஆடியில் காத்தடிப்பது தென்நாட்டில்தான் வடநாட்டிற்கு பொருந்துவது இல்லை.

அதுபோல்,
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பன் இப்பழமொழி ஆங்கிலேயருக்கு பொருந்தாது காரணம் அத்தையை ஆண்டி என்றும் சித்தப்பா மற்றும் மாமாவை அங்கிள் [ Uncle ] என்றே அழைப்பர் அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பன் எனும் பழமொழி ஒரு தாய்க்கு இரண்டு ஆண்மகன் ஒரு பெண் மகள் எனும் பச்சத்தில் மூத்த மகனின் மகன் இரண்டாம் மகனை சித்தப்பன் என்றும் மூன்றாம் மகளை அத்தை என்றும் சொல்வதைத்தான் அப்படிச்சொல்கிறார்கள்.

பழமொழிகளில் சில...

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தம்பிள்ளை தானாக வளரும்

5ல் வளையாதது 50ல் வளையாது

சிறியார் விளைத்த வெள்ளாமை வீடுவந்து சேராது

தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை

ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்

குறை குடம் தழும்பாது

மின்னுவதெல்லாம் பொன்னல்ல
     
தத்துவங்கள் சொல்பவர்கள் நல்ல கல்வியாளர், அறிஞ்ஞர், கட்டுரையாளர்கள் கூறும் பண்பட்ட வார்த்தைகளே, மானுடர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதே தத்துவங்களாகும். ஒரு தத்துவத்தைச் சொல்லும் போது அதை யார்சொன்னது என்று குறிப்பிட்டால் தான் அந்த தத்துவத்திற்கு மதிப்பு.

சில தத்துவங்களை இங்கே சமர்பிக்கின்றேன்...

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே - பெஞ்சமின்

ஒவ்வொரு பொருளின் விளையும் தெரிந்திருக்கலாம் ஆனால் அந்த பொருளின் சரியானமதிப்பு தெரியாமல் இருந்தால் பயனில்லை - ஆஸ்கார் ஒயில்டு

நல்லவராய் இருப்பது நல்லதுதான் ஆனால் நல்லது கேட்டது தெரியாத நல்லவராய்  இருப்பது ஆபத்து - பெர்னாட்ஷா

செய்து முடிக்கப்பட்ட மாபெரும் சாதனைகள்அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று முதலில்பலரால் நிராகரிக்கப்பட்டவைதான் - கால்லைல்

யார் ஒருவன் தனக்கு உள்ள கவுருவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடிஇருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தைத்தான் அடைகிறான் - விவேகானந்தர்

ஒரு   மனிதனின் நடத்தையை அறியவேண்டுமா அவன் கையில் அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள்

முறிந்த கையைக்கொண்டு உழைக்கலாம் உடைந்த மனதைகொண்டு உழைக்க முடியாது - கெண்டார் செட்

உங்கள் எதிரிகளை தாராளமாக மன்னியுங்கள் மன்னிப்பைவிட அவர்களை உருத்தக்கூடியது வேறொன்றும் இருக்காது மன்னிக்கப்பட்ட எதிரிகளே உங்களுக்கு நண்பர்களாய் மாறிவிடுவர் - ஆபிரஹாம் லிங்கன்  

பொன்மொழிகள் இந்தவகை மொழிகளுக்கு படிப்பறிவு அவசியமில்லை பட்டறிவு, ஞானம் போன்றவை பொன்மொழிகளை தரும் எனக்கு பிடித்த பொன்மொழிகளை தந்தவரில் ஒருவரை சொல்கிறேன் அவர் எழுதவோ, படிக்கவோ தெரியாதவர் அவரிடம் உள்ளதெல்லாம் இறைவனின் அருள்மட்டும் தான் அவர் கூறும் வார்த்தைகள் அனைத்தும் இறைவனின் வார்த்தைகளே காலத்தால், மொழிகளால் வேறுபட்ட பழக்கவழக்கங்களால்  மாறுபடாத எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பொன்னான மொழிகள் சிலவற்றை தருகிறேன் அனுபவியுங்கள்.

உழைத்தவனின் வியர்வைதுளிகள் உலரும் முன்பே கூலியை கொடுத்துவிடுங்கள்.

தந்தையின் பொருத்தத்தில் [ இறைவனின் ] அல்லாஹ்வின் பொருத்தம் உள்ளது.

தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது

மனிதர்களில் யாரையும் பரிகாசிக்காதீர்

பெற்றோர்க்கு மாறு செய்யாதே

மனோ இச்சைப்படி நடக்காதீர்

குள்ளமான ஒருவரை குள்ளனென்று கூறாதீர்

சத்தியத்தை நிலைநாட்டுங்கள்

வீண் விளையாட்டில் காலத்தை கழிக்காதீர்

இது போன்ற பொன்மொழிகளை கண்மணி   நாயகம் முஹம்மது [ ஸல் ] அவர்கள் உபதேசித்துள்ளார்கள்.

அன்பர்களே உங்களுக்கு தெரிந்த தத்துவங்கள், பொன்மொழிகள் சுவையான பழமொழிகளை பகிர்ந்திடுங்கள் அனுபவிப்போம்.

மு.செ.மு.சபீர் அஹமது

Tuesday, June 25, 2013

உண்மையா !? இல்லையா !?

இது கவிதையும் இல்லை கட்டுரையும் இல்லை, என் மனதில் உதித்த சில வரிகள். “எத்தனையோ சங்கதிகளை நேரில் பார்த்ததினால் இப்படி எழுத தூண்டியது”.

இன்றைய நிலையை எடுத்துக் கொண்டால் எதிலும் உண்மை என்பது அடியோடு அழிந்து விட்டது. 100க்கு 99.999 சதவிகிதம் பொய்யே தலை தூக்கி நிற்கின்றது. இதற்கெல்லாம் காரணம் பேராசை, பேராசையின் காரணத்தினால் சுரண்டல்கள், சுரண்டல்கள் காரணத்தினால் பொய்மை தலை விரித்து ஆடுகிறது. அப்போ உண்மை எங்கே ?

பெற்றோர்கள் பிள்ளைகள் மத்தியில் சுரண்டல்கள், உண்மை இல்லை.
கணவன் மனைவி இடையில் சுரண்டல்கள், உண்மை இல்லை.

அண்ணன் தம்பிக்குள் சுரண்டல்கள், உண்மை இல்லை.
அக்கா தங்கைக்குள் சுரண்டல்கள், உண்மை இல்லை.

திருமணங்களில் சுரண்டல்கள், உண்மை இல்லை.
அன்பு காட்டுவதில் சுரண்டல்கள், உண்மை இல்லை.

குடும்பத்தில் சுரண்டல்கள், உண்மை இல்லை.
பங்களிக்குள் சுரண்டல்கள், உண்மை இல்லை.

தொழிலில் சுரண்டல்கள், உண்மை இல்லை.
நட்பில் சுரண்டல்கள், உண்மை இல்லை.

வாங்குவதில் சுரண்டல்கள், உண்மை இல்லை.
பள்ளிக் கூடத்தில் சுரண்டல்கள், உண்மை இல்லை.

ஆசிரியர்களிடத்தில் சுரண்டல்கள், உண்மை இல்லை.
மாணாக்கர்களிடம் சுரண்டல்கள், உண்மை இல்லை.

பணியாளர்களிடத்தில் சுரண்டல்கள், உண்மை இல்லை.
அலுவலகங்களில் சுரண்டல்கள், உண்மை இல்லை.

ஊருக்குள் சுரண்டல்கள், உண்மை இல்லை.
இணையத்தில் சுரண்டல்கள், உண்மை இல்லை.

கவிதையில் சுரண்டல்கள், உண்மை இல்லை.
ஆக்கங்களில் சுரண்டல்கள், உண்மை இல்லை.

எதிலும் சுரண்டல்கள், உண்மை இல்லை.
அப்போ உண்மையின் நிலை !?
'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Monday, June 24, 2013

இந்திய ரூபாய் மதிப்பு விழுவது எழுவதற்கா !? அழுவதற்கா !?

அண்மையில் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியும், அதைத் தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு அந்நிய செலாவணி சந்தையில் இந்தியா ரூபாயின் நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்ட சரிவும் பல வினாக்களை பலருக்கும் ஏற்படுத்தி இருக்கிறது. அதைப்பற்றிய ஒரு சிறு விளக்கக் குறிப்பைத்தரவே இந்தப் பதிவு அவசியமாகிறது.

தொடங்கும் முன்பு ஒரு வார்த்தை – குறிப்பாக வளைகுடா நாடுகளில்  ஊதியம் ஈட்டுவோருக்கும் – NRI  என்ற பட்டம் பெற்றோருக்கும் கூறிட விரும்புகிறேன். அமெரிக்க டாலரின் விலை ஏற்றத்தின் விளைவாக நாம் அயல்நாடுகளில் சம்பாதிக்கும் தொகைக்கு இந்தியப் பணத்தில் அதிக அளவு கிடைப்பதாக எண்ணி நாம் ஒரேயடியாக மகிழ முடியாது. காரணம் நம்முடைய பண வருமானத்தின் அளவு கூடி இருக்கலாம். ஆனால் உண்மை வருமானத்தின் அளவு கூடவில்லை. பொருளாதார கலைச் சொற்களில் பண வருமானத்துக்கும் , ( DIFFERENCE BETWEEN MONEY INCOME AND REAL INCOME ) உண்மை வருமானத்துக்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு. அதாவது நம்முடைய ஊதிய வருமானத்தில் செலவு போக நம் கையில் சேமிப்பாக மிஞ்சுவதன் அளவுதான் உண்மை வருமானமாகும். அதைவிட்டு அதிக  பண அளவிலான  வருமானம் சென்ற மாதத்தை விட இந்த மாதம் கிடைத்தாலும் நமது வழக்கமான செலவுபோக கையில் மிஞ்சாமல் பற்றாக்குறைதான் நிலைமை என்றால் அது நமக்கு பண வருமானமேயன்றி நமது உண்மை வருமானமல்ல. நமது நாட்டின் பணத்தின் மதிப்பு குறைகிறது என்றால் நாம் உபயோகப்படுத்தும் அல்லது நுகரும் பொருள்களின் விலையும் கூடுகிறது அல்லது கூடும் என்று பொருள். இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்றும் வேண்டாம் கடந்த மாத காய்கறி விலைகளையும் இந்த மாதம் விற்றுக் கொண்டிருக்கும் காய்கறிகளின் விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும்.

அதே நேரம் நாம் அயல்நாட்டில் ஈட்டும் சம்பளத்தைக்கொண்டு , இப்போதைய செலாவணி விகிதத்தில் ஊருக்கு பணம் அனுப்பி நாம் ஏற்கனவே வாங்கி இருந்த கழுத்தை நெறிக்கும் கடன்கள் இருந்தால் அவைகளை உடனே தீர்க்க முயற்சிக்கலாம். பேசிமுடித்து முன் பணம் மட்டும் கொடுத்து வந்திருக்கும் சொத்துக்களை இப்போது கூடுதலாக பணம் அனுப்பி பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த செயல்கள்   ஓரளவுக்கு நமக்கு பயன்தரும் என்பதை சொல்லிக்கொண்டு இதைப்பற்றி சில குறிப்புகளை அலசலாம்.

கடந்த ஓராண்டாகவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மெல்ல மெல்ல விழுந்துகொண்டிருந்தது; ஊசலாட்டம் ஆடிக்கொண்டிருந்தது என்பதை நாம் அறிவோம்.  2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து சற்றேறக்குறைய இப்போதைய  வீழ்ச்சிவரை ரூபாயின் மதிப்பு 22% சரிந்து வந்திருக்கிறது. பொருளாதார வல்லுனர்கள் இந்த சரிவு இன்னும் தொடரும் என்றுதான் கணக்கிடுகிறார்கள்.

இதற்கு நச் என்று ஒரு தலையாய காரணம் சொல்லவேண்டுமானால் அமெரிக்க டாலருக்கான நமது நாட்டின் தேவைகள் அதிகரித்துவிட்டன என்று சொல்லலாம். பொதுவாக பொருளாதார கோட்பாடுகளின் அரிச்சுவடி, எந்த ஒரு பொருள் அல்லது சேவைகளின் தேவை அதிகரித்து அதற்குத் தகுந்தபடி வரத்து இல்லையோ அந்தப்பொருள் அல்லது சேவைகளின் விலை உயரும் என்பதாகும். தக்காளி முதல் தங்கம் வரை இதே கோட்பாடுதான். அதன்படி பல்வேறு காரணங்களுக்காக நமது நாட்டின் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. இருக்கும் தேவைக்கு  சம்பந்தமே இல்லாமல் அமெரிக்க டாலரின் வரத்து குறைந்துகொண்டே போகிறது. இது முக்கிய காரணம்.

இப்படி தேவைகள் அதிகரித்து இருப்பதும் வரத்து குறைவாக இருப்பதும் அரசுக்கு தெரியாமல் திடீரென்று நடந்ததல்ல. இப்படி நடக்கும் என்று பல பொருளாதார மேதைகள் எச்சரித்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் ஆறு பொருளாதார நிபுணர்களைக்கொண்ட நமது நடுவண் அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும்  பெருமக்களுக்கு அயல்நாட்டு சுற்றுப்பயணம் பெருகியது மட்டுமல்ல அதற்கான செலவுகளையும் அரசே கொடுத்ததால் அந்த வலி தெரியவில்லை.

இப்படி நமது நாட்டுக்கு அமெரிக்க டாலரின் பற்றாக்குறை ஏற்பட மூன்று  முக்கியமான காரணங்களைச் சுட்டிக்காட்டலாம்.

முதலாவதாக அந்நிய முதலீடுகளின் வெளியேற்றமும், குறைவான ஏற்றுமதிகளும். நமது நாட்டுக்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் இரு வழிகள் நமது நாட்டில் செய்யப்படும் அந்நிய முதலீடுகளும், நாம் செய்யும் ஏற்றுமதி மூலம் வரும் பட்டியல் தொகைகளுமே ஆகும். 2000 – ஆம் ஆண்டு நம்மை நோக்கி அந்நிய முதலீடுகள் அதிக அளவில் வரத்தொடங்கின. இவைகள் பெரும்பாலும் அந்நிய நாட்டினர் நம் நாட்டில் செய்த முதலீடுகள் மட்டுமல்லாமல் நமது அரசியல்வாதிகள் செய்த மாயஜாலங்களின் மூலமும் கருப்பை வெள்ளையாக்கும் அகடம் பகடம் மூலமும் வந்தவை. ( படிக்க: எனது முந்தைய பதிவு அந்நிய முதலீடும் அன்னியர் முதலீடும் என்ற தலைப்பில் ) ஆனால் எப்படியானாலும் அவை அமெரிக்க டாலர்களாக வந்தன. ஆனால் சமீக காலத்தில் இந்த முதலீடுகளும் அதன் மூலமாக கிடைத்த இலாபங்களும்( REPATRIATION) வெளியேறத்தொடங்கியுள்ளன என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 2000  ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை நமது நாட்டிலிருந்து அந்நிய முதலீடுகள் பெரும்பாலும் வாபஸ் பெறப்படவில்லை.

ஆனால் 2009 ல் 3.1 பில்லியன் டாலரும், 2011 ல் 10.7 பில்லியன் டாலரும் நமது நாட்டின் அந்நிய மூலதனத்திலிருந்து வெளியேறிவிட்டன. 2012 ல் 19 பில்லியன்  பிளஸ் டாலர்வரை வெளியேறின. 

(கிளிக்கு ரெக்கை முளைச்சுடிச்சு. ஆத்தைவிட்டு பறந்து போயிடுச்சு.)
 இப்படி அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு செய்த பணத்தை உருவிக்கொண்டு துண்டைக்காணோம், துணியைக்காணோம் என்று ஓடுவதற்குக் காரணங்கள்? ஆதாயம் இல்லாமல் ஆற்றைக் கட்டி யார் இறைப்பார்கள்? நாட்டின் மந்தமான பொருளாதார வளர்ச்சி, கூட்டணி அரசின் நிலையற்ற கொள்கைகள், வணிக கோட்பாடுகளுக்குட்படாத திட்டமிடமுடியாத செலவினங்கள் என்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. வணிக கோட்பாடுகளுக்குட்படாத  செலவினங்கள் என்பது அரசியல்வாதிகளுக்கு காரியம் நடத்திகொள்வதற்காகக்  கொடுக்கப்படும் இலஞ்சம் ஆகும். இவைகளுக்கு பயந்து அந்நிய முதலீடுகள் வாபஸ் பெறப்படுகின்றன.

இரண்டாவதாக கச்சா எண்ணெய் விலை உயர்வு. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து கூடுவது ஒருபுறம் அதற்காக அமெரிக்க டாலரில் செலுத்தவேண்டிய பணம் கைவசம் இல்லாவிட்டால் சந்தையில் அதிக விலை கொடுத்தேனும் டாலரை வாங்கி செலுத்தவேண்டிய கட்டாயம். இதனால் எண்ணெய் நிறுவனங்களின் டாலர் தேவை, சந்தையில் டாலருக்கான விலையை ஏற்றிவிடுகிறது.

மூன்றாவதாக யூரோவுக்கு வந்துள்ள சோதனை. உலகின் அந்நிய செலாவணி சந்தைகளில் அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக கருதப்படுவது யூரோ எனப்படும் ஐரோப்பிய யூனியனின் செலாவணியாகும். இந்த யூரோ ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பொது செல்வாணியாகும். ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில்  கிரீஸ் – கிரேக்கம்-  நாடு ஒரு அங்கமாகும். கிரீஸ் நாட்டில் பலவித காரணங்களால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. ஒரு அங்கத்தினர் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்ற அங்கத்தினர் நாடுகளை பாதிக்கும் என்று அஞ்சும் நாடுகள் கிரீஸை ஐரோப்பிய யூனியனிலிருந்து ஒதுங்கிவிடும்படி வற்புறுத்துகின்றன. அப்படி கிரீஸ் வெளியேறும் சூழ்நிலையில் யூரோவின்மேல் உள்ள அழுத்தம் அதிகமாகி  மதிப்புகுறையும். இதைக் கண்ட உலகின் மற்ற நாடுகள் யூரோவை வைத்து முதலீடு செய்வதை தவிர்த்து அமெரிக்க டாலரில் முதலீடு செய்யத் தொடங்கி இருககிறார்கள்.

இதனாலும் உலக அளவில் அமெரிக்க டாலரின் விலை உயர்ந்து வருகிறது. குற்றாலத்தில் இடி இடித்து கோயம்புத்தூரில் மழை பெய்வதுபோல்தான் இந்தக் கதை . இதற்குக் காரணம் உலகமயமாக்கல் என்ற பொருளாதரத்தில் புதிதாய்ப் புறப்பட்டிருக்கும் அசுரனும் அவனை ஊட்டி வளர்க்கும் வல்லரசுகளுமாகும். இந்நிலை இல்லாவிட்டால் கிரீஸ் நாட்டில்  ஏற்பட்ட அரிப்புக்கு இந்தியா மற்றும்  ஏனைய நாடுகள் சொரிந்து கொள்ள வேண்டியதிருக்காது.

இந்த மாற்றங்களினால் நாம் எழுவோமா? அழுவோமா? பதில் என்ன வென்றால் நாம் இப்போது அழலாம் ஆனால் சில மாற்றங்களைக் கொண்டுவந்தால் நம்மால் எழவும் முடியும் .

இப்போது எப்படியெல்லாம் நாம் அழவேண்டி இருக்கும் ?

1. பெட்ரோலுக்கு இன்னும் அதிக விலை கொடுக்க நேரிடும். இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு தரும்  மானியம் அதிகரிக்கப்படவேண்டிவரும். அரசுமானியம் என்பது மன்மோகன்சிங் அல்லது மண்டேசிங் அலுவாலியா வீட்டுப் பத்தாயத்தில் உள்ள கோதுமையை விற்று வருவதல்ல. அரசின் மானியம் கூடினால் வரிச்சுமை கூடும் இதனால் விலைவாசி உயரும்.

2. நாம் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அதிக விலை கொடுக்க நேரிடும். ஒரு விவசாய நாட்டில் இன்றும் நிறைய உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய கேவலமான நிலைமையில் இருக்கிறோம்.

3. வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை மட்டும் பெரிதாக பேசுகிறோம். . வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் நமது மாணவர்களுக்கு அதிக கட்டணம் செலுத்த நேரிடும். விமானப் பயணத்தின் கட்டணங்கள் விமானம் பறக்கும் உயரத்துக்கு எகிறி விடும்.

4. விலை உயர்வால் நடுத்தரவர்க்கத்தின் நுகர்வு குறைவால் உற்பத்தியான பொருள்கள் தேக்கமடையும். உற்பத்திப் பொருள்களின் தேக்கத்தால் உற்பத்தி குறையும். முதலீடு செய்வோருக்கு முனைப்பு வராது. இலாபம் குறைவதால் சேமிப்பும்  அதன்மூலம் வரும் முதலீடுகளும் குறையும். பொருளாதார மந்த நிலை ஏற்படும்.

எப்படி எல்லாம் செய்தால் நாம் எழலாம் ?

1. ரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் அமெரிக்க டாலரை வங்கிகளுக்கு திறந்த சந்தையில் விற்று பற்றாகுறையை சற்று சரிக்கட்ட உதவலாம். இது ஒரு தற்காலிக முதலுதவியாகும். நீண்ட நாட்களுக்கு குணமாக்கும் மருந்தை அரசுதான் தரவேண்டும்.

2. தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து முதலீடுமட்டுமல்ல தொழில் வளர்ச்சிக்கான  நீண்டகால கடன்களும் அமெரிக்க டாலரில் வாங்கிக்கொள்வதற்கு வகை செய்யலாம்.

3. எண்ணை நிறுவனங்களுக்கும், இன்றியமையாத பொருள்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கும் நிர்ணய விலையில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட அளவு அமெரிக்க டாலர்களை விற்பனை செய்யலாம். சந்தை நிலவரத்தில் வாங்கும் டாலரின் விலையில் உள்ள ஸ்திரமற்ற நிலையும் விலையும் இதனால் தவிர்க்கப்படலாம்.

4. கூட்டணிக்கட்சிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றும் போக்கை மத்திய அரசு கைவிடலாம். ஒரு நிலையான அந்நிய முதலீடு மற்றும் அந்நிய செலவாணி கொள்கைகளை அறிவித்து பின்பற்றலாம்.

5. நாட்டின் மூல கனிம வளங்களை தனியாருக்கு குறைந்த விலையில் தாரைவார்ப்பதை நிறுத்தலாம். முக்கிய வருமானம் வரும் சுரங்க கனிமங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பி பட்டியலில் குறைத்து விலைபோட்டு – வித்தியாசங்களை சுவிஸ் வங்கியில் சேர்க்கும் சில அரசியல்வாதிகளின் ஊழல வெளிப்பட்டுள்ளதை தீவிர குற்றமாக கருதி அப்படி ஒதுக்கப்பட்ட மூல வளங்களை பறிமுதல் செய்யலாம்.

6. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் டெபாசிட்கள்  100 பில்லியன் வரை இருந்து இப்போது 50 பில்லியனாக ஆகிவிட்டது. ஊக்கப்படுத்தி அதிக டெபாசிட்டுகளை கவரலாம்.

7. உலகிலேயே அதிகம் தங்கம் இறக்குமதி செய்யும் நாடு என்ற பெயர் இந்தியாவுக்கு உள்ளது. இதற்கு ஏதாவது ஒரு கட்டுப்பாடு விதித்து கணவன்மார்களது கண்ணீரைத் துடைக்கலாம். வரதட்சணையாக தங்க நகை போடுவதற்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கலாம். ( யார் யார் அடிக்க வரப்போகிறார்களோ?).

அண்மையில் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்கு மதி வரியை அதிகரித்தது. நிதியமைச்சர் தங்கத்தின் இறக்குமதியை குறைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அறிவிக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். 8. வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செல்கிறேன் என்று சில குருவிக் கூட்டங்கள் அமெரிக்க டாலரை சலுகைவிலையில் வாங்கிக் கொண்டுபோய் வெளிநாடுகளில் விற்கும் நிலைகளைக் கட்டுப்படுத்தலாம்.

பொருளாதாரத்தில் பண மதிபபு குறைவது என்பது உலக அரங்கில் ஒரு நாட்டின் மரியாதைக்குரிய  பிரச்னை.   2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம், நிலக்கரிச் சுரங்க வயல்களைக் குறைந்த விலைக்குக் குத்தகை விட்டது, கனிமச் சுரங்கங்களில் அரசியல்வாதிகளை விருப்பம்போலச் சம்பாதிக்க அனுமதித்தது போன்ற நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் செல்வம் குறிப்பிட்ட சிலரால் சூறையாடப்பட்டுவிட்டது. 2ஜிஅலைக்கற்றை, நிலக்கரி மற்றும் கனிம வளங்கள் போன்ற அரசுக்கு வருவாய் பெற்றுத் தரும் தேசச் சொத்துகளைச் சரியான முறையில் விலை நிர்ணயம் செய்திருந்தாலே போதும். இந்திய அரசுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும்.  இப்படி நாட்டின்  செல்வத்தின்  மூலமான வருமானம் இடைக்கொள்ளை இன்றி வகைப்படுத்தப்பட்டு இருந்தால் திடீரென்று உலகைத்தாக்கும் பொருளாதார வீழ்ச்சி சுனாமிகளில்  இருந்து தப்பித்துக்கொண்டு விழுந்த பொருளாதாரம் எழுந்த பொருளாதாரமாக நிற்கவே முடியும். அரபு தேசங்கள் அப்படித்தான் ஆடாமல் நிற்கின்றன.

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

Saturday, June 22, 2013

[ 15 ] உள்ளம் கேட்குமே !? MORE…[ முற்றும் ! ]

நல்ல உள்ளம் விதைப்போம்..!

உள்ளம்  விதைக்கப்படும் பொருளா !? உள்ளம் என்றால் என்ற கேள்வி கேட்டு துவங்கிய நான் முடிவுரைக்குள் நுழையும் நான் மீண்டும் கேட்கிறேன்...

உள்ளம் என்றால் என்ன ? தனபாலன் அவர்கள் கூறிய அரூபமா !? அரூபம் என்ற சொல்லிற்கு பொருள் அறியா நான் எனது அறிவிற்கு உள்பட்ட  சொல்லில் விளக்குகிறேன்.

உள்ளம் உயிருள்ளவரை செயல் படுவதால் அதனை ஆன்மா என்றே  சொல்வேன் ! அந்த ஆன்மா உருவாக்கப்படும் நிகழ்வு ஆணும் பெண்ணும் கொள்ளும் தாம்பாதிய உறவுகள் மூலமே ! இரு ஆன்மாக்கள் இணைத்து புதிய ஒரு ஆன்மாவை உருவாக்கும்  நிகழ்வாய் அமைகிறது.

மனநிலையில் பக்குவபட்ட குடும்ப தலைவன் மன அமைதியான குடும்ப தலைவி இவர்களின் இணைவு மூலம் கிடைக்கும் சிறு அரும்பு உயிர் பெற்ற அதே சமயம் உள்ளமும்  உதித்தெழு கிறது . கருவுற்ற தாய் அவளது உணவு பழக்க வழக்கத்தை மாற்றி கொள்கிறாள் ஏன் என்றால்  தன் கருவில் வளரும் சிசுவிற்கு அதன் வளர்ச்சிக்கு குந்தகம் விளைய கூடாது என்பதற்காக அவளின் கவனம் ஊனமில்லா நல்ல உடல்  வாகினை பெற வேண்டும் என்ற நோக்கதிற்காக ஆனால் உடலோடு உள்ளமும் வளர்க்கிறது என்ற உண்மையை அறியாதோர் தனது செயல் பாடுகளை கவனம் செலுத்துவதில்லை.

பண்டை காலம் முதல் இன்று வரை கர்ப்பிணிகள் மனம் சந்தோசமாக இருக்க ஆசை பட்டதெல்லாம் வாங்கி கொடுத்து சந்தோச பட வைக்கும் சூச்சமம் என்ன வென்றால் உள்ளம் சந்தோஷத்தில் திளைத்திருக்க வேண்டும் என்பதற்காக தான். கர்ப்பிணியாகப்பட்டவள் தனது உள்ளத்தை சந்தோசமாக வைத்துக்கொண்டால் மட்டும் போறாது. நல்ல குணங்களோடு பத்து மாதம் தவம் இருக்க வேண்டும் .

 * பொறுமை

* தயாள குணம் [ தர்மம் ]

 * பணிவிடை

* நல்ல விடயங்களை கேட்பது .

 * நல்ல புத்தகங்களை படிப்பது

* ஆன்மீகத்தில் ஈடுபடுதல் போன்றவைகளால்  கர்ப்பிணி தனது உள்ளத்தை சீர் படுத்திகொண்டால் வளரும் சிசுவின் உள்ளமும் சீராய் ஆரோக்கியமாய் வளரும்.

* கோபம்

* பொறாமை

* புறம்

* களவு

* கசடு

 * பயம்

* சுயநலம் [ ஒருதலை பட்ச உணர்வு ]

இன்னும் பிற கெட்ட குணங்கள் தவிர்த்து. கருவை சுமப்பவள் உள்ளத்தில் உருவேற்றினால் நிச்சயம் நல்ல உள்ளம் படைத்த குழந்தை உருவாகும்.

உள்ளம் என்றால் ஆன்மா என்றேன். உயிருள்ள வரை ஆன்மா உறங்காது. உயிர் பிரிந்த பின்னர் ஆன்மாவின் நிலை !? பல மத தர்மங்கள் பலவிதமாக கூறு கின்றன. இந்து தர்மம் கர்ம பலன் அனுபவித்தே ஆக வேண்டும் என்கிறது . தான் செய்த தீமைகள் மறு ஜென்மத்தில் தண்டனையாக பிறந்து கஷ்டப்படுவார்கள் என்கிறது.

இஸ்லாம் கூறுவது... ஒரு ஆன்மாவுக்கு ஒரே வாய்ப்பு தான் மனித பிறப்பில் பிறந்து அதில் அவன் நல்ல விதமாக வாழ்ந்து பிறருக்கு இடையூறு தராவண்ணம் பிறருக்கு நால்லுதவி பிரிந்து இறைவன் ஒருவன் என நம்புவது. முகமது நபி இறைத்தூதர் என நம்புவது தொழுகை, நோன்பு நோற்று, ஜக்காத் எனும் வருட வருமானத்தில் இரண்டரை சதவிகிதம் தர்மம்செய்து, செல்வம் இருந்து உடலில் வலிமை இருந்து பயணத்திற்கு தகுந்த வாகனம் இருந்தால் புனித பயணம் மேற்கொள்ள வேண்டும். அப்படி பட்ட ஆன்மா ஈடேற்றம் பெரும்.

உடல் அழிந்தாலும் உள்ளம் அழியாது. இந்து தர்மத்தில் ஆன்மா சாந்தி அடைய இறையை பிரார்த்திக்கிறேன் என்பார்கள். ஆகவே நல்லுள்ளம் படைத்த அன்பு நெஞ்சங்களே நம் ஆன்மாவிற்கு நல்லது செய்ய உயிர் உள்ள போதே பிற ஆன்மாவை மகிழ்விப்போம்.

* இஸ்லாமிய கோட்பாடுபடி எந்த ஒரு ஆன்மாவும் தான் செய்த நன்மை தீமை களுக்கு தண்டனை பெற்றே தீர வேண்டும். ஒரு போதும் பிறர் மீது திணிக்க பட மாட்டாது என்கிறது.

மரணத்திற்கு பிறகு அழிய வாழ்க்கை உண்டு. நல்ல நிலையில் சுக போகமாய் வாழ்வதும், கஷ்ட்டங்களை அனுவிப்பதும், உள்ளத்தில் உதிக்கும் எண்ணமும், தன் நடை முறையை வைத்துதான் .

உள்ளத்தை நன்மை செய்ய தூண்டுவோம் ! உள்ளம் கேட்கும் MORE ..MORE  என நல்ல விசயங்களை நான் இது வரை விதைத்தது நல்ல விஷயம் தானே !

என் அன்பு நெஞ்சங்கள் நன்மை பல பெற்று வளமாய் வாழ என் உள்ளம் கேட்குது MORE MORE என்று விடை பெறுகிறேன் நன்றி !
[ முற்றும் ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, June 21, 2013

கதியற்றோர் வாழ்வு ?

கரைசேராக் கட்டையெனக் காலமெலாம் கருத்தின்றித்
திரைமேலே தினந்தோறும் திண்டாடுந் தீந்தமிழா !
இரைக்காகச் செய்நன்றி இவ்வுலகி லேத்துமந்த,
குரைக்கின்ற நாய்கூட குவலயத்தில் மேலன்றோ ?

கதியற்றோர் நிலைகளையும் கண்டுமிரக் கமின்றியுமே
நிதியற்றோர் நிற்கின்ற நிர்கதியை நினைக்காமல்
விதியென்று அவர்களையும் விரட்டிவரும் கூட்டத்தார்
மதியொன்று இருப்பவரோ மனசாட்சி இல்லையிங்கு !

வீணானச் செலவினங்கள்; விளம்பரத்தில் பேரார்வம்
தேனாகச் சொல்தடவித் தெரிவிக்கும் வாக்குறுதி
ஊணாக உடைமையாக உண்மையிலே அகதிகட்குத்
தூணாக வந்துதவாத் துரோகமென்று அறிவீரோ ?

புலம்பெயர்ந்தோர் கதியற்றப் புரியாதப் புதிரன்றோ
நலம்பயக்கும் திட்டங்கள் நடுக்கடலில் நிற்போர்க்குப்
பலம்கொடுக்கும்; அவர்வாழ்வில் பலன்கொடுக்கும் செய்வீரோ ?
நிலம்கொடுத்து வாழ்வாதா ரங்களெலாம் கொடுப்பீரோ ?

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 20-06-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

நபிதாஸின் 'காலம்'

வாழ்வது என்று
நேற்றைய நினைப்பில்
நாளைய எண்ணத்தில்
நிகழ்கால வாழ்வா !

இன்றும் வாழவில்லை
நாளையும் இதேநிலை
நேற்றும் கடந்தநிலை
என்றும் குழப்பநிலை !

நேற்றைய நினைப்பில்
இன்று இருந்தால்
நிகழ்காலம் நழுவி
இருமுறை வாழ்தலே !

நிகழ்கால வாழ்வில்
நடந்தவை வருபவை
நீங்கித்தான் வாழுதல்
நன்கென்பதும் இல்லை !

நேற்றைய அனுபவம்
நாளைய கனவு
நிகழ்கால வாழ்வில்
நேர்த்தியாய் நிற்கனும் !

காலம் வகுத்து
தேவை கேற்ப
கவனம் கலந்து
வாழ்தல் நலம் !

நோக்கம் நழுவி
நினைவு கனவு
காட்டும் வழியது
கலக்க வாழ்வு !

எதிர்கால சிந்தனை
எதிலும் குறிக்கிடாது
நிகழ்கால எண்ணத்தில்
நிம்மதியாய் வாழனும் !

ஒவ்வொரு நொடியும்
அர்த்தமுடன் செல்லுதல்
அதுதான் வாழ்க்கை
அறிஞனின் வாழ்கை !

புனிதரின் வாழ்கை
புரிய வேண்டின்
நேர நொடியில்
நிம்மதி வாழ்க்கை !

காலம் ஒதுக்கி
எதிர்கால சிந்தனை
நிகழ்கால வாழ்வில்
நிம்மதியாய் சிந்திப்பீர் !

கடந்த நினைவுகள்
அனுபவ வழித்தடம்
கவனமுடன் நிகழ்வில்
கலந்தே வாழ்வீர் !

திட்டம் தீட்டி
அனுபவ வழியில்
நடத்திடு வாழ்வை
நலமுடன் இருப்பாய் !

கொசு கடிக்க
நசுக்க வேண்டும்
காலம் கடந்தால்
விளைவு நோயாம் !

நினைவில் கனவில்
நிலைக்கும் அவனில்
அறிவு கொடுத்தும்
அசையா நிற்பான் !

நினைவு வந்ததும்
‘நேற்றில் இருந்தேன்
மீண்டு விட்டேன்’
மீண்டும் கேட்பான்!

காலம் பொன்னானது
கடந்தது திரும்பாது
கவனமுடன் இருத்தல்
நிம்மதி வாழ்வு !

உணர்வு சிரிக்க
உடம்பு இனிக்கும்!
உணர்வு அழ
உடம்பு வலிக்கும்.

உள்ள உணர்வு
உடம்பில் வெளிப்படும்
உள்ளம் உடம்பு
செழிக்க வேண்டும் !

தேவை நிமித்தம்
வளைய வேண்டும்
நிம்மதி ஒன்றே
நோக்கம் வேண்டும் !

நேற்று இன்று
நாளை என்று
காலம் பிரித்து
கணக்கு போட்டாய் !

காலம் ஒன்று !
கவனம் கொண்டால்
செயல் திறமை
செய்வது நிச்சயம் !

உண்டது உன்னது
எதிர்பார்த்து ஏங்காது
இருப்பதில் இன்றே
இதமாய் வாழ்ந்திடு !

ஏழு வார்த்தை
எழுதினான் வள்ளுவன்
ஒரே இலக்கணம்
உயர்ந்தான் உலகில் !

கடந்தவை உனது
வகுத்தவை சுமந்து
வாழ்ந்திடும் இவை
‘நான்’ என்றிடுமே!

கடந்தவை அனுபவம்
வகுத்தவை நற்குணம்
நிறைந்திவை வாழ்வு
வாழ்த்தப்படும் ‘நான்’!

வாய்த்தது ஒருமுறை
வாழ்ந்திடு வாழ்வது
நல்லவர் வாழ்க்கை
வல்லவன் விரும்புவது!

நல்லவர் வாழ்க்கை
உள்ளவர் மறைந்தும்
நாள்தோறும் மணத்திடும்
நன்கிதை ஏற்றிடு !

பூவது மறைந்தால்
வாசனை மறையும்
நல்லவர் மறைந்தால்
வாசனை மறையா!

மணப்பதும் வாசனை
புகழும் வாசனை
புரிபவர் இங்கு
புவியில் அரிதே!

காலம் வகுத்தலில்
கண்டது இவைகள்
கவனம் கொள்வாய்
காலமாய் நிற்பாய்!

நபிதாஸ்

Thursday, June 20, 2013

வேண்டும் அந்த வரம்

வாழை இலை விருந்து வேண்டாம்
வடை பாயச இனிப்பு வேண்டாம்
காலை மாலைத் தேனீர் வேண்டாம்
கழுத்துவரை விழுங்க வேண்டாம்

காய்ந்த வயிறு
பாய்ந்து உண்ணக்
கையளவு
சோறு போதும்

எட்டு மாடி கட்ட வேண்டாம்
எக்கச் சக்க அறைகள் வேண்டாம்
பட்டுத்திரைச் சீலை வேண்டாம்
பளபளப்புச் சுவர்கள் வேண்டாம்

கொட்டும்மழை
தலையை விட்டுத்
தள்ளிக் கொட்டும்
குடிசை போதும்

கழுத்துப் பட்டை எனக்கு வேண்டாம்
கோட்டு சூட்டு எதுவும் வேண்டாம்
கப்பல் விட்டுக் காற்றில் ஏறி
கண்டம் தாண்டிப் போக வேண்டாம்

பிழைக்க ஒரு
வழியைச் சொல்லும்
பிச்சை இல்லாப்
பிழைப்புப் போதும்

குடை விரிக்கும் கண்கள் வேண்டாம்
கொட்டும் அருவிக் கூந்தல் வேண்டாம்
நடை நிமிர்த்தும் படிப்பு வேண்டாம்
நல்லினியப் பேச்சும் வேண்டாம்

உடன் அழுது
குப்பை கொட்ட
ஒருத்தி வந்தால்
எனக்குப் போதும்

இப்படியாய் இருந்த தெல்லாம்
எப்படித்தான் மாறிப் போச்சோ
ஆகாயத்தை ஓட்டை போட்டு
அதுக்கு மேல கொடியை நட்டு

ஒய்யாரமா
வளந்து வளந்து
உசுரைத் தின்னு
வாழுதோ

வேண்டும்களின் பட்டியலில்
வேளைக் கொண்ணு மாறிப் போனா
மாண்ட பின்னும் நிம்மதிக்கு
மானிடரே வாய்ப்புண்டோ

தோண்டத் தோண்டப்
புதையல்கள்
தொலைந்து போகும்
இதயங்கள்

வேண்டாம் வேண்டாம் ஆசைகள்
வேதனையின் ஊற்றுக்கள்
வேணும் எனக்கு ஒற்றை வரம்
விபரமான மேன்மை வரம்

வேண்டாம் என்றே
எண்ணும் வரம்
வேண்டும் வேண்டும்
அந்த வரம்
அன்புடன் புகாரி

Wednesday, June 19, 2013

மரம் வளர்ப்போம் ! நல்லறம் செய்வோம் !

மழைகளின் வீழ்ச்சி
,,,நீர்
பூமியின் எழுச்சி
,,,மரம்

நம் கல்யாண
வைபோகத்தில்
பந்தல் அலங்கரிக்க,
,,,வாழை மரம்
வாசலில் தோரணமாம்
,,,மாவிலைகள்
வந்தோரை உபசரிக்க
,,,வெற்றிலை, பாக்கு
விருந்தோம்பளுக்கு,
,,,வாழை இல்லை
வயிறார உண்பதற்கு
,,,காய்,கனிகள்
அத்துனையும்
வேகவைக்க
மரங்களின் ஒத்துழைப்பு
விறகாய் !

மனிதன்
மறத்தால் கதவு செய்து
மரத்தாழ் இட்டு
தன்னை
தற்காத்துக்கொண்டான்

நான் என்ன
பணம் காய்க்கும்
மரமா ?
எனக்கேட்போர்க்கு
ஒன்று சொல்வேன்
பணத்தின் மூலக்கூறே
மரம்தான்!

மரம்
இருந்தாலும்
ஆயிரம் பொன்
இறந்தாலும்
ஆயிரம் பொன்

இறந்த மரம்
பூமிக்குள் புதையுண்டால்
மீண்டு வரும்
உந்து சக்தி
நிலக்கரியாய்

விலை மதிப்பில்லா
வைரங்களின்
முதாதையர்
மரங்கள்தாம்

மதி கெட்டோரை
மர மண்டை
என்று கூறாதீர்
மரங்கள்
கோபித்துக்கொள்ளும்

புத்தருக்கு,
,,,போதிமரம்
பிள்ளை இல்லார்க்கு
அரசமரம் [ அவர்களின் ஐதீகம் ]

மனிதனால்
வெட்டி வீழ்த்தப்பட்ட
மூங்கில்[ மரம் ]
எழுந்து நிற்கிறது
ஏணியாய் !

பிள்ளைய பெத்தா
கண்ணீரு
தென்னையை பெற்றா
இளநீரு

ஆளும்,வேலும்
பல்லுக்குறுதி.

நெருப்பில் போட்டால்
விறகு
நீரில் போட்டால்
கட்டுமரம்
வளரவிட்டால்
நிழல் குடை
அத்துனையும்
மனித பயன்பாடுதான்

வீழ்ச்சி கண்ட மனிதருக்கு
எழுந்து நின்ற மரம் சொல்லும்
ஆறுதலாய்
நானும் வீழ்ந்த விதைதான்
என்று

இருக்க இடம் தேடி
அழித்திட்டீர்
காடுகளை
அமைத்திட்டீர்
வீடுகளை

சரி
எதிர்கால
நம் சந்ததியினர்
உயிர் வாழ
உயிர் காற்றிர்க்கு
தினரத்தான் போகின்றீர்கள்

ஆகையால்
மரம் வளர்ப்போம்
நல்லறம் செய்வோம்
மு.செ.மு.சபீர் அஹமது

Tuesday, June 18, 2013

பள்ளி வாகனங்களா ! அம்மாடியோவ் !?

முப்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் இரு சக்கர வாகனமாகிய மிதி வண்டியை எல்லோருடைய வீட்டிலும் பயன்படுவதை காண்பது அரிதாக இருந்தது, அந்த நாட்களில் பள்ளி வாகன வசதிகள் இல்லாமல் இருந்தது, பள்ளிக்குச் செல்வது என்றால் நடந்துதான் செல்ல வேண்டும், யாராவது வசதி படைத்த வீட்டு பிள்ளையாக இருந்தால் மட்டும் இரு சக்கர வாகனமாகிய மிதி வண்டியில் வருவார்கள், இன்னும் சொல்லப்போனால் ஆசிரியர்கள்கூட நடந்தே சென்றார்கள். இப்படித்தான் அன்று கல்வி பயிலும் மாணவச் செல்வங்கள் பள்ளிக்கு சென்று வந்தார்கள்.

இன்று எரிபொருளில் இயங்கும் இரு சக்கர வாகனங்களின் படையெடுப்பும் சரி மற்ற வாகனங்கள், பள்ளி வாகனங்கள் என ஏகப்பட்ட வாகனங்கள் படையெடுத்து வந்து நம் அனைவரையும் ஆட்கொண்டு விட்டது என்று சொன்னால் அதுதான் உண்மை. இன்று வாகனம் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஒரு வீட்டிற்கு சாராசரியாக இரண்டு மூன்று என்ற கணக்கில் இருக்கின்றது, இதோடு நின்று விடாமல் மூன்று சக்கர மற்றும் நான்கு சாக்கர வாகனங்களும் பல வீடுகளில் உபயோகப்படுத்துவதை காணலாம்.

வாகனங்கள் பெருவாரியாக பெருகி விட்ட நிலையில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதிகள் கிடையாது, வாகனத்தை ஓட்டிச் செல்வதற்கு சாலை வசதிகளும் முறையாக இல்லாமல் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருக்கின்றது, நகருக்குள் பள்ளி வாகனங்களை ஓட்டிச் செல்வதற்கு சரியான ஓட்டுனர்கள் கிடையாது,

திருமண மண்டபங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், அங்காடிகள் போன்ற இடங்கள் நகருக்குள் பெருவாரியாக இருப்பதால் வருவோர் போவோர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். இதுமாதிரி சமயங்களில் வாகனங்களை முறையாக நிறுத்தி வைக்காமல் வருவோர் போவோர்களுக்கு இடைஞ்சலாகவும், நிறுத்தின வாகனங்களை வெளியில் எடுக்க முடியாமல் ஆங்காங்கே கண்டபடி நிறுத்தி வைப்பதும் பிறகு சண்டை சச்சரவுகள் வருவதும் வழக்கமாகி விட்டது. இது நம் இந்தியாவில் காலா காலமாக நடந்து வரும் சம்பவமாகும்.

கடந்த கல்வி ஆண்டில் மட்டும் நம் தமிழ் நாட்டில், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் வாகன ஓட்டுனர்கள், ஆயாமார்கள், பெற்றோர்கள், குழந்தையின் பாதுகாவலர்கள் இவர்களின் கவனக் குறைவால் எத்தனை பள்ளிக் குழந்தைகளின் உயிர்கள் அநியாயமாக துடிதுடித்து மாய்ந்தது? எத்தனை குடும்பங்கள் துடியாய்த் துடித்தன? மறந்து விட்டீர்களா?

தினம் தினம் பல ஊடகங்களிள் புகைப்பட ஆதாரத்துடன் செய்திகள் வந்ததே, ஞாபகம் இருக்குதா? இது குறித்து பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், வாகன ஓட்டுனர்கள், ஆயாமார்கள், பெற்றோர்கள் எல்லோரும் ஒன்று கூடி ஆலோசனை செய்தீர்களா? இது விஷயமாக அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

பள்ளி நிர்வாகத்தின் பொறுப்புகள்:-
பள்ளி முடிந்து பிள்ளைகளை வாகனங்களில் ஏற்றி வீடுவரை பாதுகாப்போடு கொண்டு செல்வது, வாகனங்களில் குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஏற்றாமல் பார்த்துக்கொள்வது, வாகனங்களை வாரத்திற்கு ஒருமுறை சரியான முறையில் பராமரித்து வைத்துக் கொள்வது, முறையான உரிமம் பெற்ற நடுத்தர வயதுடைய எந்த தீய பழக்கமும் இல்லாத ஓட்டுனர்களை அமர்த்துவது, ஓட்டுனர்கள் மற்றும் ஆயமார்கள் பணியில் இருக்கும்போது பள்ளிச் சீருடை அணித்துருக்க வேண்டியது, இன்னும் அனேக பொறுப்புகள் பள்ளி நிர்வாகத்துக்கு உண்டு.

வாகன ஓட்டுனர்களின் பொறுப்புகள்:-
வாகனத்தினுள் எல்லாக் குழந்த்தைகளும் பத்திரமாக இருக்கையில் அமர்ந்து விட்டனரா என்று பார்த்துக் கொள்வது ஓட்டுனர் மற்றும் ஆயாவின் பொறுப்பு, வாகனத்தை மிதமான வேகத்தில் ஓட்டிச்செல்வது, எந்த ஒரு அசம்பாவிதத்துக்கும் இடம் உண்டாகாமல் கவனமாக இருப்பது, குழந்தை இறங்கி வீட்டினுள் சென்ற பிறகே வண்டிய நகர்த்த வேண்டியது, அவசரப்பட்டு வாகனத்தை நகர்த்தக் கூடாது..

ஆசிரியர்களின் பிற பொறுப்புகள்:-
ஆசிரியர்கள், பிள்ளைகளுக்கு வாகனத்தில் எப்படி ஏற வேண்டும், புஸ்தக பைகளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், வாகனத்தில் அமர்ந்து இருக்குபோது மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வாகனத்தை விட்டு இறங்கும்முன் வண்டி நின்றபின் கவனமாக மெதுவாக இறங்க வேண்டும், சாலையைக் கடக்குமுன் இருபுறமும் வாகனங்கள் ஏதும் வருகின்றனவா என்று நன்றாக கவனிக்க வேண்டும், போன்ற விதி முறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இந்த விஷயங்களில் பெற்றோர்களின் பொறுப்பு என்று எடுத்துக் கொண்டால் கணக்கில் அடங்காமல் விவரித்துக் கொண்டே போகலாம். ஒரு பெண் கருவுற்றது முதல் பிரசவமாகும் வரை தன் பிள்ளை நல்ல விதமாக பிறந்து வரணும் என்று எந்த அளவுக்கு கவனமாக இருக்கின்றாரோ, அதைவிட அதிக கவனமாக இருக்கவேண்டும் அந்தப் பிள்ளை இம்மண்ணில் பிறந்த்ததுக்குப் பின்.

இக்கால கட்டத்தில் அதிகமான தேவைகளின் ஆடம்பர வாழ்க்கை என்ற போர்வையில் அளவுக்கு அதிகமான பேராசையை வளர்த்துக் கொண்ட பல பெற்றோர்களை நாம் பார்க்கின்றோம், இதனால் அவர்கள் காலை ஐந்து மணிக்கெல்லாம் வேலைக்குப் போக தயார் ஆகிவிடுகின்றனர், வேலை முடித்து நேராக வீடு வராமல் ஆங்காங்கே குட்டி குட்டி மீட்டிங் போட்டு ஊர் கதையெல்லாம் பேசிவிட்டு வீடு வந்து அடைய மாலை ஏழு மணிக்கு மேல் ஆகி விடுகின்றது, இதற்கிடையில் குழந்தை தூங்கிவிடும், பெற்றோர்களின் குரல்களைக் கேட்க்க அந்தக் குழந்தை பாடாய்ப் பட்டுப்போகும், இதனால் பாதிப்பது குழந்தைகள்தான், குழந்தைகளை கவனித்துக் கொள்ள வீட்டினுள் பணிப்பெண்களை வைத்துக் கொள்கின்றனர், நூறு சதவிகித வேலைகளை பணிப்பெண்களே கவனித்துக் கொள்வதால் பாதிப்பை சந்திப்பது குழந்தைகளே. பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குப் போவதால் அவர்களின் கவனங்கள் முழுக்க முழுக்க வேளையிலேயே இருப்பதால் பிள்ளைகளை கவனிப்பதில் இருந்து அவர்களது சிந்தனைகள் விலகி விடுகின்றது. எதிர்காலத்தில் தன் பிள்ளைகள் எப்படியெல்லாம் வரணும் என்று கனவு காணும் பெற்றோர்களே உங்களுக்கு இந்த ஆசைவிட மற்ற பேராசை தேவையா? சிந்தித்து பாருங்கள், இருவரும் அமர்ந்து இருந்து சிந்தித்து பாருங்கள். தெளிவான விடை கிடைக்கும்.

ஆக மொத்தத்தில் இன்னும் ஒரு விஷயம் உங்களுக்கு தெரியுமா? “உடையவர் இல்லையென்றால் ஒரு முழம் குட்டை” இது முன்னோர்கள் சொன்னது.

பள்ளி வாகன விஷயத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், வாகன ஓட்டுனர்கள், ஆயாமார்கள் இவர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே வாகன விபத்துக்களை முழுமையாக தவிர்க்கலாம்.

முடிவுரை :
பள்ளி நிர்வாகத்துக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு தொடர்பை உண்டு செய்யணும், அதாவது வீட்டிலிருந்து குழந்தை பள்ளி செல்ல வாகனத்தில் ஏறும் முன்பு குழந்தையின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் ஒட்டுனர்களிடத்தில் ஒப்புதல் கையெழுத்து வாங்கி விட்டு பிள்ளையை வாகனத்தில் அமர்த்த வேண்டும், அதேபோல் பள்ளி முடிந்து குழந்தையை வீட்டினுள் ஒப்படைக்கும் முன்பு ஓட்டுனர்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் அல்லது பாதுகாவலரிடம் குழந்தையை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் கையெழுத்து வாங்கிய பின்னரே வாகனத்தை நகர்த்த வேண்டும், சில குழந்தைகள் பள்ளி வாகனத்தில் ஏறமுடியாமல் நேரத்தை தவற விட்டு விடுவார்கள், பின்பு பாதுகாவலர் உதவியோடு பள்ளிக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள், அதே குழந்தை பள்ளி விடும்போது வீட்டிற்கு போவதற்கு பள்ளி வாகனத்தில் வருவார்கள், சில குழந்தைகள் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு வந்து பின்பு ஏதோ காரணத்தினால் பள்ளியின் நேர இடையிலேயே பள்ளி வாகனத்தை உபயோகப்படுத்தாமல் பாதுகாவலர் உதவியோடு வீட்டுக்கு சென்றுவிடுவார்கள், ஆகையால் குழந்தைகள் விஷயத்தில் மிகவும் கவனத்துடம் இருப்பது சம்பத்தப்பட்ட எல்லோருடைய கடமையாக இருக்கும்போது இதை ஏன் பள்ளி நிர்வாகம் உடன் செயல் படுத்தக்கூடாது?

வீதிகளிலும் சாலைகளிலும் பள்ளி வாகனங்கள் அளவுக்கு அதிகமான வேகத்தில் சென்றால், பொதுமக்கள் அந்த வாகன பதிவு எண்களையும் நேரத்தையும், வாகனம் சென்ற இடத்தையும் குறித்துக்கொண்டு பள்ளி நிர்வாகத்திடமும் காவல் துறை இடமும் புகார் செய்ய வேண்டும்.

இது குழந்தைகளுக்கு மிகுந்த பாதுகாப்பை கொடுப்பதோடு குழந்தைகள் தவறுவதற்கு சந்தர்பமே கிடையாது. பள்ளி நிர்வாகமும், பொதுமக்களும், காவல் துறையும்  ஒத்துழைப்பு தர முன்வரவேண்டும்.      

குறிப்பு : இந்த ஆக்கம் பொதுநலன் கருதியும், பள்ளிக் குழந்தைகள் மற்றும் பள்ளிகள்  சம்பந்தப்பட்ட அனைவர்களுடைய நலன் கருதியும் எழுத்தப்பட்டதாகும்.
'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Monday, June 17, 2013

அந்நிய முதலீடும் அந்நியர் முதலீடும்

தலைப்பை பார்த்ததும் ஒரு தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தலைப்பின் இரண்டு பகுதிகளுக்கும் ஒன்றுக்கு ஒன்று பெரிய முரண்பாடு இல்லாதது போல் தோன்றும் ஆனால் பெரும் முரண்பாடு மட்டுமல்ல இந்தியப் பெருநாட்டின் பொருளாதார சுரண்டலும் அவற்றுள் தொக்கி, மறைந்து நிற்கிறது.

வெளிப்படையாகப் பார்த்தால் அந்நிய முதலீடு என்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை பார்த்து- அரசுகள் அறிவிக்கும் புதுப்புது முதலீட்டு கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு – வளர்ந்து வரும் உள்கட்டமைப்புகளில் மயங்கி- உலகின் பெரும் பணம் படைத்த நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் தங்களிடம் தூங்கிக்கொண்டிருக்கும் பணத்தை இந்தியாவில் தொழில்களில் முதலீடு செய்ய மூட்டை கட்டி எடுத்து வருவது போல் தோன்றும் .
ஆனால் உண்மை அதுவல்ல.

வருவது அன்னியநாட்டின் செலாவணி  பணம்தான். உலகின் முக்கிய செலாவணியாக இருக்கக்கூடிய அமெரிக்க டாலரிலோ, யுரோவிலோ, ஸ்டெர்லிங் பவுன்ஸ்களிலோ, சிங்கப்பூர் டாலரிலோதான் நமது நாட்டுக்குள் வந்து பங்கு வர்த்தகம் மூலம் முதலீடு செய்யப்படுகிறது. அந்த வகையில் இது அன்னியப்பணம்தான்.

ஆனால் அது அன்னியர் உடைய அவர்களுக்கு சொந்தமான பணம் அல்ல.  நமது பணமே. இந்தக் கதகளியின் கதை இப்படிப்போகிறது.

அமெரிக்க, ஐரோப்பிய, சிங்கப்பூர் இன்னும் பிற நாட்டைச்சேர்ந்த முதலாளிகள் அவர்களுடைய பணத்தை நம்நாட்டில் முதலீடு செய்தால் அது அன்னியப்பணமாகவும் இருக்கும் அன்னியர் பணமாகவும் இருக்கும். ஆனால் இந்த நாட்டு ஏழைகளை சுரண்டி, ஏமாற்றி, ஊழல் செய்து கோடி கோடியாய் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் ஹவாலா முறையில் நாட்டை விட்டு வெளியேறி அந்நிய முதலீடு என்ற பெயரில் அரிதாரம் பூசி, முகமூடி போட்டு நமது நாட்டுக்குள்ளே மீண்டும் வருகிறது. புரியும்படி அதிரையின் மொழியில்  சொன்னால் நம் வீட்டில் கிண்டப்பட்ட பணியான் மாவு – திருடப்பட்டு  வெளியே போய் – வேறு இடத்தில் அதியதரமாக சுடப்பட்டு - மறவையில் அடுக்கப்பட்டு ஜெகதாம்பாள் தலையில் தூக்கிவைக்கப்பட்டு  - சீராக சம்பந்தி வீட்டுக்கு வருகிறது.

நம்மை ஆளும் அதிகாரவர்க்கத்தினர், அவர்கள் அரசியல்வாதிகளாக இருக்கலாம்- , உயர் அரசுப்பதவி வகிப்பவர்களாக இருக்கலாம் -, முதல்வர்களாகவும் அவர்களின்  புதல்வர்களாகவும் இருக்கலாம், மனைவிகளாகவும், துணைவிகளாகவும், தோழிகளாகவும், தோட்டக்காரர்களாகவும், செயலார்களாகவும், அல்லக்கைகளாகவும், அமைச்சர்களின் ஆசைக்குகந்தவர்களாகவும் இருக்கலாம். அரசுக்கு சேரவேண்டிய பணத்தை அல்லது அரசு திட்டங்களுக்காக ஒதுக்கிய பணத்தில் இருந்து  இவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து  ஒதுக்கிய பணத்தை- கட்டைப்பஞ்சாயத்து செய்து வாங்கிய பங்கை- நிலபேரம் செய்து வாங்கிய கமிஷனை- அரசு ஒப்பந்தங்கள் பெற்றுக்கொடுத்து வாங்கிய கையூட்டுகளை- பணி இடமாற்றம் செய்து கொடுத்து கிடைக்கும் இலஞ்சப்பணத்தை- கல்லூரிகளில் இடம் வாங்கித்தருவதாக பெற்றுக்கொள்ளும் அன்பளிப்புகளை- ஒப்பந்தக்காரர்களிடமிருந்து பெரும் பர்செண்டேஜ்களை- இப்படி கணக்கில் காட்டமுடியாத கறுப்புப்பணத்தை – கணக்கிலே கொண்டு வருவதற்காக கையாளும் சூழ்ச்சிதான் இந்த அந்நிய முதலீடு என்ற ஆளை மறைக்கும் தலைக்கவசம். ஆந்தை விழியனுக்கு அழகு சுந்தரம் என்று பெயர்- மாங்காய் மடையனுக்கு மதியழகன் என்று பெயர்.

திருமறையின்

“ஒருவர் மற்றவர் பொருளை தவறான முறையில் உண்ணாதீர்கள்; இலஞ்சம் வாங்காதீர்கள்”  (2:188)  என்ற எச்சரிக்கையை உணராத- அறியாத காரணத்தால் அல்லவா இந்த அவலம் ?

லஞ்சப்பணம் மட்டுமல்ல. அதற்கு ஒரு சகோதரியும்  உண்டு அவள் பெயர் வரி ஏய்ப்பு.

2009- 2010  மற்றும்   2010-2011 ஆகிய நிதியாண்டுகளில் வரி ஏய்ப்பு செய்தவர்கள்     22.5 கோடிப்பேர். அவர்கள் ஏய்ப்பு செய்த தொகை இரண்டாயிரம் கோடி. வருமானவரித்துறை இந்த புள்ளிகளை எப்படி கணக்கிடுகின்றன என்றால் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நடைபெற்ற வர்த்தக பரிமாற்றங்களை கணக்கிட்டு இவ்வளவு வரி வசூலாகி இருக்கவேண்டும் ஆனால் இவ்வளவுதான் வசூல் ஆகி இருக்கிறது என்று பாக்கியை கணக்கிட்டுவிடுகின்றன.

வந்திருக்கவேண்டியதில் குறைவுதான் இரண்டாயிரம் கோடி.  இது தவிரவும்  பத்திரப்பதிவு முறைகேடுகள், சுங்கவரி தில்லுமுல்லுகள், உற்பத்திவரி கள்ளக்கணக்குகள் இவைகள் மூலம் பெரும் நிறுவனங்கள் மறைக்கும் ஏய்க்கும் வரிகளின் அளவுகள் கணக்கில் அடங்காதவை ; காட்சிக்கு தெரியாதவை. இப்படி மறைக்கும் உக்திகளையும், ஏய்க்கும் வழிமுறைகளையும் சொல்லித்தருபவர்களுக்கு சிறந்த ஆடிட்டர் என்று பெயர்.

இப்படி அதிகார துஷ்பிரயோகத்தில் திரட்டப்படும், லஞ்சப்பணமும்,  வரி ஏய்ப்பின் மூலம் உருவாகும் பணமும் சேர்த்து இந்த நாட்டில் உருவாக்கப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட  கருப்புப்பணத்தின் அளவு ரூபாய் 25 லட்சம் கோடி.

இன்னொரு பக்கம்  நாம் பார்ப்போமானால் போபர்ஸ் வெளியிடும் உலக நாடுகளின் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த இந்தியர்கள் ஐம்பதுபேர். முன்னர் நாற்பதாக இருந்தவர்கள் இப்போது ஐம்பதாகிவிட்டார்கள். ( சுல்தான் காக்கா காதைக்கடிக்கிறார் இந்த பட்டியலில் சுட்டெரிக்கும் டிவி அதிபர்  136 –  வது இடமாமே என்று. ஆமாம் காக்கா! உலகபட்டியலில் 136- வது இடம்- இந்தியபட்டியலில் 16 வது இடம். அந்த விபரம் இன்னொரு ஆக்கத்தில். பின்னால் வரலாம்.) ஆனால் ஐம்பதுபேர் உலகப்பணக்காரர்களாக இருக்கும் நாட்டின் சொத்துவரி வசூல் எவ்வளவு தெரியுமா வெறும்  500 கோடிதான்.

இப்படி இந்த நாட்டின் செல்வங்கள் சூறையாடப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கப்படும் கருப்புப்பணம்,  பங்கு வர்த்தக பரிமாற்றம் மூலம் இந்நாட்டினுள் அந்நிய முதலீடாக் நுழைகிறது.  இப்படி பங்கு வர்த்தக பரிமாற்றம் மூலம் வரும் பணத்துக்கு ஒரு வரிவிதிக்கலாமே அதன்மூலம்  நாட்டுக்கு ஒரு வருமானமாக வருமே என்று நீங்கள் கேட்பது சரிதான். அதுவும் கிடைக்காது என்பதே சட்டரீதியான உண்மை. அதாவது கொப்பரை போட தேங்காய் வாங்கி உடைக்கும்போது அந்த தேங்காயும் அழுகல் தேங்காய் அதன் சிரட்டைகூட அடுப்பெரிக்க கிடைக்காது என்ற நிலை.

வெளிநாட்டில் நடக்கும் பங்கு வர்த்தக பரிமாற்றத்துக்கு இந்தியாவில் வரி செலுத்த தேவை இல்லை என்று சமீபத்தில் ஓடோபோன் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லி இருக்கிறது. இந்திய வருமானவரி சட்டத்தின் 163 ( 1-C)  பிரிவு இத்தகைய பரிமாற்றங்களுக்கு செல்லாது என்பது உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு. அதாவது பணமும் நமது பணம் – அது வரும் வழிக்கு வரியும் விதிக்க முடியாது என்பது ‘ உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா” கதைதான். கருப்பும் வெள்ளையாகும் அதற்கு வரியும் கிடைக்காது.

மேலும் இந்தியா சில நாடுகளுடன் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. சிங்கப்பூர், மொரிசியஸ், மாலத்தீவு, முதலிய நாடுகள் இதில் அடக்கம். நாட்டைவிட்டு ஹவாலா மூலமாக வெளியேறும் பணம் இத்தகைய நாடுகளில் போலி கம்பெனிகள்   தொடங்க பயன்பட்டு, அந்த கம்பெனிகளின் பெயரால் முதலீடும் செய்யப்பட்டு , அந்த முதலீடுகளுக்கான இலாபங்களும் வரிவிதிப்பின்றி வெளியேறுகின்றன. இப்படி நிருவனங்களை போலியாக தொடங்கி பதிவு செய்து கொடுக்கும் முகவர்கள் அந்நாடுகளில் இருககிரார்கள். அவர்களின் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. இத்தகைய போலி கம்பெனிகளின்  சில பெயர்கள்தான் 2- ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் வெளிவந்தன. சுரங்க ஊழலும் , ஹெலிகாப்டர் ஊழலும், காமன்வெல்த் ஊழலும் தன் பங்குக்குக் சிலவற்றை வெளிக்கொணரும்.

என்றைக்கு உண்மையிலேயே அந்நிய நாட்டவர்கள் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பால் ஈர்க்கப்பட்டு அவர்கள் பணத்தை நம் நாட்டு தொழில்களில் முதலீடு செய்கிறார்களோ அன்றுதான் நாம் அந்நியர் முதலீடுகளை அந்நிய முதலீடுகளாக பெற்றுள்ளோம் என்று மார் தட்ட முடியும். அதுவரை காகிதப்பூவை  முகர்ந்து பார்த்துக்கொண்டும் செய்த்தானுக்கு தேவதை பட்டம் சூட்டிக்கொண்டும் இருக்க வேண்டியதுதான்.

இந்த முறைகேடுகள் உளவுத்துறையை ஊட்டி வளர்க்கும்  அரசுக்கு தெரியாதா? நிதி அமைச்சருக்கு தெரியாதா? நாட்டின் எங்கோ ஒரு மூலையில் ஒரு நடுத்தரக்குடும்பத்தில் பிறந்து அரைகுறையாக படித்துவிட்டு இப்படி எல்லாம் சிந்திக்கும் நமக்கு தெரிந்தது ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கும்- முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னருக்கும்- பரம்பரையாக செல்வத்தில் புரண்டு வரும் செட்டிநாட்டு சீமான்களுக்கும் தெரியாதா? தெரியும்.

ஆனால் அதைவிட ஒரு கசப்பான உண்மை என்னவெனில் அரசியல் பதவி சுகங்களுக்காக அவர்கள் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன – சிந்திக்கும் சக்தி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய முறைகேடுகளுக்கு அவர்கள் சாட்சியாக மட்டுமல்ல சம்பந்தப்பட்டவர்களாகவும் இருப்பார்களோ என்பது நீதிமன்றத்தில் கேள்விக்குறியாக இருக்கிறது.

அத்துடன் இந்திய பொருளாதார கொள்கைகளை வகுப்பவர்கள் யார் ? நாம்  நம்பிக்கொண்டிருப்பதுபோல் நமது நிதி அமைச்சகம் அல்ல. அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஜி- 8 அமைப்பில் உள்ள நாடுகளும், அந்த நாடுகளின் பன்னாட்டு நிருவனங்களின் நிர்வாகிகளுமே.

உலகவங்கியில் என்றைக்கு கடன்வாங்க நாடு கை நீட்டியதோ அன்றே அவர்கள் சொல்லும் இடத்தில் கை எழுத்துப்போடவும் , கூறும் கொள்கைகளை அமுல்படுத்தவும் நாம் தயாராகிவிட்டோம். உதாரணத்துக்கு உலகவங்கியின் வற்புறுத்தலால் மின் கட்டணம், பேருந்து கட்டணம் ஆகியவை உயர்த்தபட்டதாக வெட்கமில்லாமல் மாநில மத்திய சட்ட/பாராளு  மன்றத்தில் அறிவிக்கின்றனர். எரிபொருள் விலைகளை நடு இரவில் உயர்த்தி நாடாலும் தத்துவத்திற்கு எரியுலை மூட்டுகின்றனர்.  சிறப்புகள் சிதைக்கப் படுகின்றன.    இதனால் நமது நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், மண்ணின் மாண்பு , மக்களின் இயல்பு – பொருளாதார வழக்கில் கூறப்போனால் நுகர்வோர் கலாச்சாரம்   (CONSUMER CULTURE)  ஆகியவற்றின்மேல் தாக்குதல் தொடுக்கும் தாக்கங்கள் அதிகரித்துவிட்டன.

செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள், அவர்களின் குடும்பத்தினர், வேண்டியவர்கள்,  மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் சுயநல சுரண்டல் போக்குக்கு நாட்டின் பொருளாதாரம், ஏழை, நடுத்தர வர்க்கத்தின் நலன் அடகுவைக்கப்படுகிறது.  ஒருபக்கம் மிகச்சிலர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர். மறு பக்கம் ஏழ்மை வளர்ந்து கொண்டே போகிறது.   இந்த இரு வர்க்கத்தின் எண்ணிக்கையும் வருடாவருடம் கூடிக்கொண்டே போகிறது. இதை தட்டி கேட்கும் நிலையில் இருப்பவர்கள் என்று நாம் நம்பிக்கொண்டு இருப்பவர்களுடைய சுவிஸ் வங்கி கணக்கில் இருப்பு ஏறிக்கொண்டே போகிறது. அவர்கள் தரப்பான அந்நிய முதலீடும் அதிகரித்துக் கொண்டே போகிறது. நாமோ அவர்களுக்கு வாழ்க கோஷம் போட்டு வாழத்துப்பாவும் பாடிக்கொண்டிருக்கிறோம்.

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

Saturday, June 15, 2013

[ 14 ] உள்ளம் கேட்குமே !? MORE…[ உறவை நாடும் உள்ளம் ! ]

ஒருவரின் மனநிலை சீராக இருக்க தனது உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களை பிறரிடம் பரிமாறி கொள்ள வேண்டும். அதற்கு உறவில் நல்ல நெருக்கம் வேண்டும். பிறர் மீது நாம் காட்டும் அன்பு, அவர்கள் நலம் மீது நாம் காட்டும் அக்கறை அடிப்படையில் உறவில் நெருக்கம் ஏற்படும். அப்படி சில உறவுகள் நண்பர்களாகவோ அல்லது உறவின் அடிப்படையாகவோ இருக்கலாம்.

தனக்கு ஏற்படும் கஷ்டங்களை உள்ளத்தில் பூட்டி வைத்து கஷ்டப்படும்
நிலையால் மனநோயாளியாக நேரிடும்  எனவே தனது மன குமுறலை உடனே பிறரிடம் கொட்டி தீர்த்து விட வேண்டும். உள்ளத்தின் உள்ள சுமைகள் நீங்கி அமைதிபெரும். தனது கஷ்டங்கள் கூறினால் தமது கெளரவம் குறைந்து விடும் வெட்க கேடான விஷயம் என்றெல்லாம் தனக்குள் புதைத்து கொள்ளும் நிலை வேண்டாம்.

ஒருவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றால், அவரிடம் பேசாது இருத்தலே போதும் எனவே ஒருவர் உறவை முறித்தல் முடிந்தவரை  தவிர்த்து கொல்லுதல் நலம்.

சிறுவயதில் ஒரு நற்போதனை செவியுற்றேன். அதனை வாசக அன்பு நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முகம்மது நபிகள் கூறிய போதனை நீங்கள் ஏதோ ஒரு காரணமாக சண்டையிட்டு நண்பர்களிடம் பேசாது இருந்தால் மூன்று நாட்களுக்குள்  கசப்பை மறந்து பேசி கொள்ளுங்கள் என்றார்கள். என்ற போதனைதான் அது உள்ளத்திற்கு உகந்த மருந்து என்பதை மறந்து விடாதீர்கள்.

சிறுபிள்ளைகள்   வாட்டமாக காணப்பட்டால் ஏன் ? என கேளுங்கள்.  நேசிக்க படும் நண்பர்கள். பேசாது இருப்பது காரணமாக இருக்கலாம் அது பெரிய மன சோர்வை தரக்கூடும் அதுபோன்ற சமயங்களில் உள்ளம் ஊட்டம் பெற பிள்ளைக்கு நாம் நல்ல நண்பனாக அச்சிறு உள்ளம் ஏற்கும் அளவிற்கு  நாமும் சிறுவனாய் மாறி அவனுடன் உரையாடி அவன் கஷ்ட்டங்களை உள்ளத்திலிருந்து நீக்க வேண்டும். வீட்டில் ஏன் இப்படி சோம்பலாய் உள்ளாய் ? என கடிந்து கொள்ளாதீர்கள். உள்ளம் ஒரு கண்ணாடி உடைத்து விடாதீர்கள் கண்ணாடியாய் இருந்து  அவர்களை நேர்த்தி செய்யுங்கள்.

உள்ளம் உறவை நாடும். நட்பு உள்ளத்திற்கு மிகவும் இன்றி அமையாதது என்பதற்கு நம் சிறுவயது நடவடிக்கைகளில் கூட காண இயலும் நண்பர்களில் சிலர் ஏதோ காரணத்தால் பேசாது பிரிந்து தனது வெறுப்பை காண்பிப்பர் சில் வாரமோ மாதமோ பிரிவு நீடிக்கும் ஆனால் சந்தர்ப்பம் தினமும் சந்திக்கும் சூழல்   மனதில் உள்ள கசப்பு நீங்கி பிற நண்பர்களால் ஒன்று சேர்க்க பட்டு ஒற்றுமையாக்கிவிடுவர்

சண்டையிட்ட நண்பர் ஒற்றுமையான சில தினங்கள் மனதில் ஏற்படும் புத்துணர்வு, சந்தோசம் அதிகமாக இருக்கும். வாழ்வில் நட்பின் பங்கு அனைவருக்கும் இன்றியமையாதது.

ஒரு அறிஞர் கூறிய கருத்தை இங்கு பதிய விரும்புகிறேன். உன்னுடைய நண்பனையும், நீ படிக்கும் புத்தகத்தை பற்றி கூறு உன்னை பற்றி நான் கூறுகிறேன் ! எனவே நல்ல நண்பனை தேர்ந்தெடுங்கள் வாழ்கை நபிக்கை பெரும் !

"நபிகளாரின் வாழ்கையில் நட்பின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்தது" நேர விரயத்திற்கோ, கேளிக்கைகோ பயன்படுத்தி 'நட்பு' என்ற அழகிய உறவை கொச்சைப்படுத்தி விடாதீர்கள்" 

நல்ல உறவுகளாய் அமைந்தால் அது ஆரோக்கியமே !

இத்தொடரின் முடிவுக்கு நெருங்கி விட்டோம் !

அடுத்த வாரம் சந்திப்போம் நட்புடன்...
இன்னும்  வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, June 14, 2013

”யார் ?”

அந்தரத் தோரணம் வானவில்
.. அழகை இறைத்தவன் யார் ? - பிறைச்
சந்திரன் கூடவே தாரகை
.. சமைத்து மறைத்தவன் யார் ?

வண்ணத்துப்  பூச்சிகளில் வரிகளை
.. வகையாய் நெய்தவன் யார் ? - எழில்
எண்ணற்றப் பூவினங்கள் மணங்களை
.. எழுப்பச் செய்தவன் யார் ?

பகலும் இரவும்  மாறிவர
.. பூமியைச் சுழற்றுபவன் யார் ? - வாழ்வில்
சுகமும் துயரும் மாறிவரச்
.. சோதனை வழங்குபவன் யார் ?

மாமறையை வழங்கி போதனைக்கு
.. மாநபியைத் தந்தவன் யார் ? - அதனை
தேமதுர நடையில் ஓதுவோர்க்குத்
.. தேர்ச்சிகளைத் தந்தவன் யார் ?

ஓடை களில்நீர் உருண்டெழுந்தால்
.. ஓசைகளை அமைத்தவன் யார் ? - சிறு
காடைக் குருவிச் சிறகடிக்கக்
.. காற்றைச் சமைத்தவன் யார் ?

சொற்களிட்  பொருளைப் புகுத்திச்
..  சுவையறிவுப் படைப்பவன் யார் ? - பசும்
புற்களில் உறங்கும் பனியை
.. பகலவனால் துடைப்பவன் யார் ?

அணிஅணி யாக  மரங்களை
..அழகுற வைத்தவன் யார் ? - அவற்றுள்
பிணிகளைப் போக்கும்  மருந்தினைப்
.. பிழையறத் தைத்தவன் யார் ?

தூணின்றி வானை உயரத்
...தூக்கி வைத்த இறைவன் - எவனோ
வீணின்றி வாழ்வை உனக்கு
..வாய்ப்பாய்த் தந்த அவன்தான்
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 13-06-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

Thursday, June 13, 2013

யார் அனாதை ?

யாருமற்றுப் போனாயோ
கண்ணே ஏக்கவிழி
அலைந்தாயோ

வேரொழிந்த பூங்கொடியோ
கண்ணே விரலெறிந்த
நகச்சிமிழோ

யாருந்தான் அடிக்கலியே
கண்ணே ஏனழுது
நிற்கின்றாய்

யாருந்தான் அடிக்கலியே
கண்ணே அதற்கழுதோ
நிற்கின்றாய்

தெருவோரம் கிடந்தாலும்
கண்ணே தெய்வத்தின்
உயிர்தானே

வருவோரும் போவோரும்
கண்ணே இருப்போரின்
தொடர்தானே

வயிறெல்லாம் வேறென்றால்
கண்ணே உறவென்றால்
பொருளுண்டோ

துயருள்ளம் கதறுகையில்
கண்ணே துணைநிற்கும்
தூணுண்டோ

கையோடு கைகுலுக்கு
கண்ணே கைவளர்ந்து
வான்கிள்ளும்

கையிரண்டும் உனதென்று
கண்ணே கர்வமனம்
புவிவெல்லும்

மெய்யான உறவுதேடி
கண்ணே பொய்யான
பூதலத்தில்

மெய்யறியும் வேளையுந்தன்
கண்ணே கைதானே
கவசமாகும்

இடதுகையோ யாசிக்க
கண்ணே இல்லாளும்
யோசிக்க

வலதுகையும் வந்துதானே
கண்ணே வாட்டத்தைத்
தூசாக்கும்

கொடுக்கின்ற மாந்தருக்கு
கண்ணே எடுப்போர்கள்
உறவாவர்

கொடுப்போனாய் நிலைத்துவிடு
கண்ணே குறையில்லா
உயிராவாய்
அன்புடன் புகாரி

Wednesday, June 12, 2013

வீட்டுக்கோர் மரம் ஏன் வளர்க்க வேண்டும் !?

மரம் : மனிதனின் சுவாசம்
மரம் : பறவைகளின் சரணாலயம்
மரம் : வழிப்போக்கரின் கூடாரம்.
மரம் : பழங்கள் தரும்
பலன்கள் தரும்
நிழல் தரும்
மழை தரும்
மனிதன் காடுவரை செல்ல
கூடவே வரும்

காசு காசு
என அலைவோரை
சாகும்போது
எதை கொண்டு போவாய் ?
என கேட்போர்க்கு
சந்தன மரம்
பதில் சொல்லும் !
அவன் கட்டையோடு
அதுவும் உடன் கட்டை ஏரி ?

மரம் ஓர் தியாகி ?
தன்னை வெட்ட வந்த,
கோடாரிக்கு
கைபிடியாய் !
தன்னையே கொடுத்ததே

பூமிப்பந்தில்
தெரியும் நீல நிறம்
மீன்கள் வாழுமிடம்
மரங்கள் உள்ள
பசுமை நிறம்
மனிதன் வாழுமிடம் !

மனிதனுக்கு
கிடைத்த அடையாளம்
அவனால் வெட்டப்படுகிறது !

வெட்டப்பட்ட
மரம்
,,,வெட்டியவனுக்கே
உணவிற்கு
,,,விறகாய் !
உறங்க
,,,கட்டிலாய் !
தன்னையே
அற்பணிக்கும்
அற்ப மனிதனுக்காக

பச்சை தமிழனின்
நிறம் கருமை
பசுமையை பறை சாற்றும்
மரங்களின் நிறமும்
கருமை

மரக்கலம் கொண்டு
வணிகம் செய்தவர்
மரைக்காயர்

மனிதனின்
கடைசி பயணத்தில்
மரம்,
,,,பாடையாய்,
சவப்பெட்டியாய்,
விறகாய்
அவனோடு
மடிந்து போகிறது !?

வீடு வரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை மரம் ?

அவன்
வெட்டிவைத்த
கிணறும் !
நட்டுவைத்த
மரமும்!
அவன் மரணத்திற்கு பின்னும்
அவனுக்கு நன்மை சேர்க்கும்
இது நாயகத்தின் கூற்று

வீட்டுக்கோர் மரம்,
,,,வளர்ப்போம்
நன்மைகள்,
,,,பல பெறுவோம் !
மு.செ.மு.சபீர் அஹமது

Tuesday, June 11, 2013

தம்பதியர்களே ! ப்ளீஸ் தூங்கிடாதீங்க !?

மாநிடவியலில் எத்தனை உறவுகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவாரஸ்யமானவை. தத்தா பாட்டி, அப்பா அம்மா, அண்ணன் தம்பி, அக்கா தக்கை, மாமா அத்தை, மச்சான் மச்சி,  பெரியப்பா சித்தப்பா, பெரியம்மா சின்னம்மா, இன்னும் அநேக உறவு வட்டங்கள் நம் மத்தியில் வட்டமடித்துக் கொண்டு இருந்தாலும் அதையும் தாண்டி உள்ள ஒரு உறவுதான் கணவன் மனைவி உறவு.

நம் தமிழ் நாட்டை பொறுத்தவரை கணவன்மார்கள் பொருள் ஈட்டுவதற்காக குடும்பத்தை பிரிந்து வெளி ஊர்களிலும், வெளி நாடுகளிலும் வசித்து வருகின்றனர். உள்நாடுகளில் இருப்பவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்தை பார்த்துவிட்டு போவது வழக்கம், வெளிநாட்டில் இருப்பவர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு முறையோ, இரு வருடத்திற்கு ஒரு முறையோ, மூன்று வருடத்திற்கு ஒரு முறையோ குடும்பத்தை வந்து பார்த்து விட்டு மீண்டும் திரும்பிச் செல்வது வழக்கம் இன்னும் சிலர் குடும்பத்தோடு அங்கு இருப்பதும் உண்டு,  இன்னும் சிலர் இதையும் கடந்து ஊருக்கே வராமல் உடம்பில் இருக்கின்ற பலம் குன்றும் அளவுக்கு சம்பாத்தித்து, தலை முடியெல்லாம் வெழுத்து, பற்களெல்லாம் பழுதாகி, முகத்தோற்றம் உருமாறி, அடையாளம் சிதைந்து குழைந்து ஊர் வருவதும் உண்டு, இன்னும் சிலர் ஊர் வராமலேயே அப்படியே போய்விடுவதும் உண்டு, இதையும் கடந்து வேறு தகாத உறவுகளோடு திருட்டுத்தனமாக வாழ்வதும் உண்டு, இப்படி பல சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கின்றது.

இவைகளுக்கு மத்தியில் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் குடும்பத் தலைவியாகிய மனைவிகளே கவனித்து கொள்ள வேண்டும்.
அன்று கணவன், குடும்ப நலம் மற்றும் சூழ்நிலைகளை அறிய மனைவிக்கு கடிதம் எழுதுவார், கடிதம் மனைவியின் கைக்கு கிடைக்க தொலை தூரத்திற்கு ஏற்ப கடிதம் இரண்டு நாட்கள் முதல் பதினைந்து நாட்கள் ஆகிவிடும்.

மனைவின் பதில் கடிதமும் கணவனுக்கு மேலே சொல்லப்பட்ட நாட்களில் சென்று விடும், வீட்டில் வேலையாக இருந்தாலும் கணவனின் கடிதம் வரும் நாள் நெருங்க நெருங்க கடிதத்திற்காக காலை பத்து மணி முதல் தபால் காரரின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்த மனைவிகளும் உண்டு, தபால் காரர் வீட்டு வாசலில் கிர்ர்ர்ரிங்-டிர்ர்ர்ன்-கிர்ர்ர்ரிங்-டிர்ர்ர்ன் என்று சைக்கிள் மணியை அடித்து விட்டு கதவின் இடைவெளியில் கடிதத்தை போட்டுவிட்டு சென்று விடுவார், ஓடோடிப்போய் அந்த கடிதத்தை எடுத்து அவரசர அவசரமாக பிரித்து படிப்பார்கள், ஒரு முறை அல்ல மீண்டும் மீண்டும் அந்த கடிதத்தை பிரித்து படித்து படித்து பதில் எழுதுவதுவார்கள், தபால் காரர் சைக்கிள் மணி அடிக்காமல் சென்று விட்டால் அன்றைய தினம் பைத்தியம் பிடித்தார் போல் இருப்பார்கள். அன்று கணவனும் மனைவியும் தங்கள் எண்ணங்களை இப்படித்தான் எழுத்து வடிவில் பரிமாறிக் கொண்டனர். அந்த நாட்களில் மட்டுமல்ல இன்றுகூட நாம் கடிதங்களையும், தபால் பெட்டியையும் மறக்க முடியாது.

இடைப்பட்ட காலத்தில் தொலை தொடர்பு துறையில் எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி., போன்ற வசதிகள் லேன்ட் லைனில் வரவே கடிதத் தொடர்பு என்பது நின்று போய், நினைத்த நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என்ற நிலை வந்து விட்டது. இப்படியாகப்பட்ட காலத்தில் கணவனிடம் இருந்து எந்த நேரத்திலும் தொலைபேசி அழைப்பு வரும் என்று இருந்த மனைவிகளுக்கு வெளியில் வேலைகள் ஏதும் இருந்தால் வேலைகளை முடித்துவிட்டு விறு விறுவென்று வீடு வந்த மனைவிகளும் உண்டு, இப்படித்தான் இடைப்பட்ட காலத்தில் கணவனும் மனைவியும் தங்கள் எண்ணங்களை குரல் வடிவில் பரிமாறிக் கொண்டனர். இவ்வளவு நவீன வளர்ச்சியிலும் பழைய மாடல்களில் உள்ள தொலைபேசி கருவிகளை உபயோகிப்போர்கள் இன்றும் உண்டு, அதையும் மக்கள் மறந்து விட வில்லை.

இன்று நவீனங்களின் அபார வளர்ச்சியினால், மொபைல் போன், இணையம், மேசை கணினி என்று அழைக்கப்படும் டெஸ்க் டாப், மடிகணினி என்று அழைக்கப்படும் லேப்டாப், கையடக்க கணினி என்று அழைக்கப்படும் டேப்லெட், ஐபோன், கேமரா போன், இன்டர்நெட் வசதி உள்ள போன், வெப் கேமரா, ஸ்கைப்பே, கோகுல் டாக், கேபிள் உள்ள இன்டர்நெட், கேபிள் இல்லாத ஒயர்லெஸ் இன்டர்நெட், இன்னும் அனேக புதுப் புது வசதிகள் நம் அனைவரையும் தினம் தினம் மாறி மாறி சுற்றி வந்து நம் எல்லோரையும் ஆட்கொண்டுவிட்டாலும், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் இருந்து கொண்டு தொடர்பு கொண்டு குரலோடு முகத்தோடு முகம்பார்த்து உடல் அனைத்தையும் பார்த்துக்கொண்டு எண்ணங்களை பரிமாறிக் கொள்ளலாம் என்ற நிலை உருவாகி விட்டது.

கணவனிடம் இருந்து எந்த நேரத்திலும் அழைப்பு வரும் என்ற நிலையில் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அப்படியொரு அழைப்பு வந்தால் தான் செய்து கொண்டிருந்த வேலைகளை அப்படியே போட்டு விட்டு  அழைப்பில் போய் உட்கார்ந்து விடுகின்றனர். வீட்டில் உள்ள மற்றவர்கள் டிவி சீரியல்களில் படு உற்சாகமாக அதிலே மனதை பறிகொடுத்து வாயை ஆஆவென்று பிளந்து கொண்டு தன்னை மறந்து விடுகின்றனர். இதினாலே பல நேரங்களில் நடக்கும் சம்பவங்களை பாருங்கள்.

அடுப்பில் ஏதாவது கொதித்துக் கொண்டு இருக்கும் அது பொங்கி வழிந்து அடுப்பு அணைந்து எரிவாயு சமையல் அறை முழுவதும் பரவக்கூடிய சந்தர்ப்பம் உண்டு, மின் அடுப்பாக இருந்தால் மின்சாரம் கசிந்து பாத்திரம் முழுதும் மின்சாரம் பாய்ந்து இருக்க சந்தர்ப்பம் உண்டு, கிரைண்டரில் ஏதாவது தானியங்களை அரைத்துக் கொண்டு இருந்தால் அதுவும் வழிந்து வீணாகக் கூடிய சந்தர்ப்பம் உண்டு, தண்ணீர் ஏற்றுவதற்காக மின் மோட்டார் இயங்கிக் கொண்டிருந்தால் அதுவும் வழிந்து நீரும் மின்சாரமும் விரயமாக சந்தர்ப்பம் உண்டு, இன்னும் ஏகப்பட்ட சம்பவங்கள் அசம்பாவிதமாக நடக்க சந்தர்ப்பம் உண்டு. இதற்கெல்லாம் காரணம் குடும்பத்தார்களின் அலட்ச்சியப் போக்கு. இது மாதிரி அலட்ச்சியப் போக்கினால் நடக்கும் சம்பவங்களை பல ஊடகங்களின் மூலமாக நாம் அறிகின்றோம்.

மனைவிக்கு அழைப்பு கொடுக்கும் கணவன், மறு முனையில் மாணவியின் குரல் ஹலோ என்று கேட்டதும் கொஞ்சுவதற்கு முன், எரிவாயு அடுப்பு, மின் அடுப்பு, கேஸ் சிலிண்டர், மின் மோட்டார், கிரைண்டர், வீட்டின் கதவு, மின் விளக்குகள், எமர்ஜென்சி விளக்குகள், சாவிகள் இது மாதிரி சாதனங்களை முதலில் விசாரித்து அவைகள் முறையாக இருகின்றனவா என்று வினவ வேண்டும், அப்படி வினவும் பட்ச்சத்தில் மனைவி உஷாராகி கொஞ்சம் லைனில் இருங்கங்க பார்த்துட்டு வந்துடறேன் என்று சொல்வார்கள், திரும்பி வந்ததும் உங்கள் நேரம் தானே, இஷ்டம்போல் பேசலாம்.

அன்பான பொறுப்பான கணவர்களே, பொருள் ஈட்ட வீட்டை விட்டு வெளியில் செல்லும் நீங்கள் பொறுப்புடன் வீட்டு சாதனங்களைக் குறித்து ஒரு பட்டியல் போட்டு உங்கள் மனைவி இடத்தில் கொடுத்து தினமும் கவனிக்கும்படி சொல்லுங்கள். மனையின் ஒய்வு நேரம் அறிந்து போன் பண்ணுங்கள், சமையல் நேரங்களில், பிள்ளைகளை பள்ளிக்கு தயார் படுத்தும் நேரங்களில், இறை வழிபாட்டில் இருக்கும் நேரங்களில் போன்ற நேரங்களை அறிந்து போன் பண்ணும் நேரங்களை சரி செய்து கொள்ளுங்கள், வீட்டு சாவிகளை ஒரே இடத்தில் வைத்து பழக வேண்டு, பல இடங்களில் வைத்து பழகினால் அவசரமான நேரங்களில் சாவியை தேடுவதில் சங்கடப்படவேண்டிவரும், நீங்கள் வீட்டுக்கு போன் பண்ணும் நேரமெல்லாம் இது குறித்து விசாரிக்க மறக்க வேண்டாம். மனைவிமார்களும் கணவனோடு எல்லா விஷயத்திலும் ஒத்துழைத்துப் போக வேண்டும்.

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Monday, June 10, 2013

மறைந்து கொண்டிருக்கும் மனிதத்தன்மைகள் !

இயற்கை சீற்றங்களான புயல் ,  நில நடுக்கம், சுனாமி போர்வை நிகழ்ந்து முடிந்த பின்  நம்மில் பலர்  நடந்து கொள்ளும் முறைகள் இயற்கை சீற்றங்கள் விளைவிக்கும் சேதத்தை விட அதிக சேதம் விளைவிக்கின்றன.  கடந்த மாதம் மகாசென் புயல் தமிழ்நாட்டை தாக்காமல் போய்விட்டதே என்று வருத்தப் பட்டோரும் இருக்கவே செய்தனர். கடந்த மாதம் மட்டும் மேலும் இரண்டு புயல் சின்னங்கள் உருவாகி வலுவிழ்ந்ததற்காக வருத்தப் பட்டோரும் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர்.

அண்மையில் புதுவையையும்,  கடலூர், விழுப்புரம் மாவட்டங்களையும் புரட்டிப்போட்ட “ தானே” புயலுக்கு பிறகு அந்த பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் பட்டபாடுகள் கொஞ்சமல்ல. நான் பழைய செய்திகளை எழுத வரவில்லை. இததகைய கொடும் இயற்கை சீற்றங்களுக்கு பிறகு அப்பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களில் சிலர்  நடந்து கொண்ட முறைகளைப்ப்றி கேள்விப்படும்போதும், படிக்கும்போதும் மனிதர்களுக்கு இருக்க வேண்டிய மாண்புகள்  கரைந்து கொண்டிருப்பதையும், மனிதப்பண்புகள் மருவி மறைந்து கொண்டிருப்பதையும் உணர முடிகிறது என்பதையே குறிப்பிட விரும்புகிறேன்.

“தானே” புயல் தானே வந்து அடித்து விட்டுப் போய்விட்டது.

ஆனால   அதன் பிறகு அந்த பகுதிகளில் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்வில் அடித்த புயலும் அதன் விளைவுகளும்  மனிதப்பண்புகள் மீது மாறா கலங்கங்களை ஏற்படுத்திவிட்டன. இயற்கையின் இத்தகைய சீற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் பலர் வாழ்வின் ஆதாரங்களை இழந்து தெருவுக்கு வந்து விடுகிறார்கள். சிலரோ சில நாட்களில் பல லட்சங்களை பார்த்துவிடுகிறார்கள்

பச்சிளம் குழந்தைகள் பாலின்றி தவித்தன.
வீடுகள் விளக்கின்றி மூழ்கின. குடிக்ககூட நீரில்லை.
அடுப்பெரிக்க விறகில்லை- படுத்துறங்க பாய் இல்லை- நிற்பதற்கு நிழல் இல்லை- வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை.  சாலைபோக்குவரத்து இல்லை. நோயாளிகளுக்கு மருந்து இல்லை. தொலை தொடர்பு இல்லை. மின்சாரம் இல்லை- செல் போன்களுக்கு பேட்டரி சார்ஜ் இல்லை. ரீ சார்ஜ் செய்ய முடியவில்லை.

பச்சிளம்குழந்தைகள் பாலின்றி தவித்து இருக்கலாம். ஆனால் லிட்டருக்கு நூறு ரூபாய் கொடுத்தால் பால் தாராளமாக கிடைத்தது. குடிக்க தண்ணீரின்றி மக்கள் தவித்து இருக்கலாம் ஆனால் குடிநீர் என்று கூறி விற்கப்பட்ட ஒரு வாளி தண்ணீருக்கு விலை ஐம்பது ரூபாய். மண்ணெண்ணை பதுக்கிவைக்கப்பட்டு அநியாய விலைக்கு  விற்கப்பட்டது. ரீ சார்ஜ் கார்டுகள் இரட்டை விலை கொடுத்தால் கிடைத்தன. அவசர நோயாளிகளை ஏற்றி செல்ல ஐந்து மடங்கு பணம் கொடுத்தால் ஆட்டோக்கள் வரத்தயாராக இருந்தன. இப்படி புயல் அடித்த பகுதிகளில் பகல் கொள்ளை புயல் அடித்தது. மறைந்து வரும் மக்கள் பண்புகளுக்கு மாறாத சான்று பகர்ந்து கலங்கமாய் நின்றன.

கடந்த 2011- ல் ஜப்பானில் சுனாமியும், பூகம்பமும் வந்த போது அந்த நாட்டு மக்கள் தங்களுக்குள் காட்டிக்கொண்ட சமூக வாஞ்சையும் ஒத்துழைப்பும் உலகளவில் பாராட்டப்பட்டன. ஐந்து லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டோர் அந்த ஐந்து லிட்டரை மட்டுமே போதும் என்று வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர். ஒரு பொட்டலம் உணவு தேவைப்பட்டோர் அதை மட்டுமே வாங்கிச்சென்றனர். கூடுதலாக கொடுத்தாலும் வாங்க மறுத்தனர். இதுதான் சமூக வாழ்வு - சமுதாய நேசம். ஆனால்  இங்கோ , தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும்  அடித்து பிடித்து வாங்கி கூடுதல் விலைக்கு விற்றனர்.

கடும் வெயிலில் நடுக்காட்டில் ஒருவன் வழிமாறிப்போனான். தாகத்தால் நாவறண்டு தவித்தான். வெகுதூரத்தே  கையால் தண்ணீர் அடித்து குடிக்கும் ஒரு குழாய் தெரிந்தது அதை நோக்கி ஓடினான். அருகில் சென்று பார்க்கும்போது அந்த கை குழாய் அருகில் ஒரு குவளையும்  அதனுள் ஒரு லிட்டர் அளவுள்ள தண்ணீரும் வைக்கப்படிருந்தது. தாகத்தால் தவித்து ஓடிவந்தவன் அந்த குவளையில் உள்ள தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்து தனது தாகத்தை தீர்த்துவிடவில்லை. மாறாக அந்த குவளையில் இருந்த  தண்ணீரை கைகுழாய்க்குள் ஊற்றி மெல்ல மெல்ல  குழாயிலிருந்து தண்ணீரை அடித்து குவளையில்  பிடித்து பின் குடித்து தனது தாகம் தீர்த்துக்கொண்டதுடன் அல்லாமல் அடுத்து வருபவருக்கும் உதவும் என்று அதே குவளையில் மீண்டும் நீர் அடித்து நிரப்பி வைத்துவிட்டு இடம் பெயர்ந்தான். தனது தேவையை பூர்த்தி செய்து கொள்ள நினைப்பவர்கள் அடுத்தவர் நலனையும் பேணவேண்டும் என்பதற்கு இந்த உருவக சம்பவத்தை சுட்டிக்காட்ட வேண்டியதாகிறது.

கால்பந்து காற்றை தன்னுள் வாங்கி வைத்துக்கொள்கிறது- அது சுயநலம்.  புல்லாங்குழல் தான் வாங்கும் காற்றை இசையாக வெளியிடுகிறது. அது பொதுநலம். சுயநலம் காலால் உதைக்கப்படுகிறது. பொதுநலம் இதழ்களால் முத்தமிடப்படுகிறது .

தனக்கு மட்டும் எல்லாம் கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை மேலோங்கி வருகிறது. அதனால் ஒட்டுமொத்த சமுதாயமே சுயநல சமுதாயமாக மாறிவருகிறது. எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்று பலர் செயல் பட்டு வருகிறார்கள். தான் சார்ந்து இருக்கும் சமுதாய நலன் பேணவேண்டுமே என்கிற மனிதப்பண்பு அருகி, மருகி, மாய்ந்து வருகிறது.

விபத்து நடந்த இடங்களில் –விமான விபத்தாக இருந்தாலும் சாலை விபத்தாக இருந்தாலும் அதில் சிக்கியவர்களை காப்பாற்ற ஓடி வரும் எண்ணத்தில் வருபவர்களைவிட அவர்கள் கழுத்தில் காதில் இருப்பதை அபகரிக்க ஓடி வருபவர்களே அதிகம். மங்களூரில் இது நடந்தது. காஞ்சீபுரத்திலும் இது நடந்தது. நாடு இரவில் சாலை  ஓரங்களில் விபத்தை எதிர்பார்த்து கூட்டங்கள் குடித்துவிட்டுக் காத்துக் கிடக்கின்றன. வக்கிர எண்ணங்களின் உச்சநிலை.
சூழ்நிலைகளை பயன்படுத்தி சுருட்டும்  கூட்டம் – கொள்ளை இலாபம் அடிக்கும் கூட்டம் புகைவண்டி நிலையங்களில் - பேருந்து நிலையங்களில்  –பொது மருத்துவமனைகளில் மட்டுமல்ல – பிணகொட்டகைகளிலும் கூட நிறைந்து மலிந்து காணப்படுகின்றன. இறந்தவர் உடலை ஏற்றிச்செல்லும் அமரர் ஊர்திகள், அழுது ஓலமிடும்  சொந்தக்காரர்களின் சோகத்தை அளவிட்டு அதற்கேற்ப  விலைவைக்கும் அவலங்கள் கண்கூடாக காணக்கிடைக்கின்றன. கேட்டதொகை கொடுக்காவிட்டால் பிணமும் நகராது; இறப்பு சான்றிதழும் கிடைக்காது.

அரசு மருத்துவ மனைகளில் அரசு தரும் ஊதியம் பெற்றுக்கொண்டே பணியாற்றும் பலர் கீழிருந்து மேல் மட்டம் வரை  நோயாளிகளின் அவசர அவல நிலைமைகளை பயன்படுத்தி பணம் பிடுங்குகிறார்கள். உடல் உறுப்புகளை திருடுகிறார்கள். பிறந்த குழந்தைகளை கடத்தி விற்கிறார்கள். கடத்தப்பட்ட குழந்தைகளின் உறுப்புகளை ஊனமாக்கி பிச்சை எடுக்க வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்.

புதைக்கப்பட்ட பிணங்களை கூட தோண்டி எடுத்து அதில் விட்டு வைக்கப்பட்ட தங்கம்  வெள்ளிகளை திருடுபவர்கள் அணியாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. இரு சக்கர வாகனங்களில் வந்து நடந்து செல்லும் பெண்களின் கழுத்தில் தொங்கும் தாலி சங்கிலிகளை அறுக்கின்றனர்.

வாடகை கொலையாளிகள் என்ற புதுவித வர்த்தக அமைப்பும், கைக்கு இவ்வளவு காலுக்கு இவ்வளவு உயிருக்கு இவ்வளவு என்று விலை நிர்ணய கலாச்சாரமும் அமுலுக்கு வந்துவிட்டது. இரும்புக்கு டாட்டா, செருப்புக்கு பாட்டா, அதிரையில் தேங்காய், மணப்பாரையில் முறுக்கு, பண்ருட்டியில் பலாப்பழம், நெய்வேலியில் நிலக்கரி என்பதுபோல் இந்த குற்றத்தை செய்வதற்கு இங்கிருந்து ஆள் கிடைக்கும் என்ற புதுவகை கமர்சியல் ஜியாக்ரபி உருவாகிவிட்டது.

வியாபாரிகள் நவீன முறைகளில்  கலப்படம் செய்து சமுதாயத்தை நோயாளிகளாக்குகின்றனர். சமுதாய இயக்கங்கள், சமூக நல இயக்கங்கள் என்ற பசுத்தோல் போர்த்திய புலிகள்  சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளின் பெயர் சொல்லி நிதி திரட்டி சொந்த பிரச்னைகளை தீர்த்துக்கொள்கிறார்கள்.           வழிபாட்டுத்தலங்கள்   கட்டுவதாகவும் , அநாதை விடுதிகள் நடத்துவதாகவும் குமர்களுக்காக நிதி வசூல் செய்வதாகவும் கூறி பொய் நெல்லை குத்தி பலர் பொங்க நினைக்கிறார்கள். உயிர் காக்கும் மருந்துகளை போலியாகவும் தயாரித்து விற்பனை செய்து  , காலாவதியான மருந்துகளை வாங்கி மொத்த வியாபாரம் செய்ய கிட்டங்கிகளில் குவித்துவைத்தும் அவைகளில் தேதிகளை மாற்றி பணம் பண்ணும பாவிகளையும் பார்த்தோமே.  நினைத்தாலே குலைநடுங்கும் செயலை செய்துவிட்டு ஆடம்பர கார்களில் உலா வருகிறார்களே!

அனாதைகளாக இருப்பவர்களைப் பற்றிய பட்டியல் தயாரிக்கப் பட்டு அவர்கள் பெயரில் உள்ள சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. முதியோர்களின் முன்னோரின்  சொத்துக்கள் எவர்  பெயரிலோ இலஞ்சம் கொடுத்துப் பட்டா பெறப்படுகின்றன.

காவல் நிலையங்களில் கட்டை பஞ்சாயத்துக்களும் , நீதி மன்றங்களில் இல்லாதோர் எளியவர்களுக்கு உரிய நியாயமான தீர்ப்புகள் கிடைக்காத தன்மைகளும், பள்ளிக்கூடம், சாலைகள் அமைக்கும் ஒப்பந்தகாரர்களுடன் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்  கைகோர்த்து ஒன்றுக்கும் உதவாத மட்டமான பொருள்களை பயன்படுத்தி கட்டப்பட்ட அரசு மற்றும் பள்ளி கட்டிடங்களுக்கும், போடப்பட்ட சாலைகளுக்கும் சான்று தருவதும் அவை குறைந்த வருடங்களில் இடிந்து விழுந்து இளம்பிஞ்சுகளும் உயிர்களும்  பலியாவதும்  அதிகரித்து வருகின்றன. ஏழை எளியவர்களின் நிலங்கள் அரசியல்வாதிகளாலும், செல்வாக்குப்படைத்தவ்ர்களாலும் ஏமாற்றி பிடுங்கப்படுகின்றன.

கோயிலுக்குப் போனால் செருப்பு ; ஆஸ்பத்திரிக்குப் போனால் உறுப்பு ; காவல் நிலையத்துக்குப் போனால் கற்பு ஆகியவை காணாமல் போய்விடுகின்றன.  .

இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகுமே தவிர குறையாது.

இதற்கு என்ன தீர்வு ? சமூக அக்கறையும், சமுதாய வாஞ்சையும் , மனிதாபிமான உயர்நோக்கும் எப்படி உருவாகும்? தழைக்கும்? வளரும்?
மனித சமுதாயம் தன்னை சீர்படுத்திக்கொள்ளவேண்டுமானால் இறைவனின் கட்டளைகளுக்கு பயந்து நடக்கவேண்டும் என்ற உணர்வு- அப்படி நடக்காவிட்டால் மறுமையில் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம்- ஆகியன தனிமனிதனிடம் மேலோங்க வேண்டும் அவைகள் மேலோங்கினால் மட்டுமே தவறுகள், சுயநலம், சுரண்டல், அநீதி  ஆகியவை சமுதாயத்தைவிட்டு ஒழியும். ஆகவே இதற்கு தீர்வு இஸ்லாம்தான். மறைந்து கொண்டிருக்கும் மனித தன்மைகளை மீண்டும் வளர்த்துக்கொண்டுவர மாற்று மருந்து இஸ்லாம்தான். இஸ்லாம் தழைத்துள்ள பகுதிகளில் இத்தகைய சமூக அவலகுற்றங்கள்  ஒப்பிடுகையில் குறைவு என்பது உலகம் ஒப்புக்கொண்ட உண்மை. .

இஸ்லாமிய கோட்பாடுகளின்படி அமைக்கப்படும் அரசியல், பொருளாதார, சமூக அமைப்புகளில் சுரண்டலும், கொள்ளை இலாபமும் எப்படி ஒழிக்கப்படும் என்பதையும்  தனிமனித ஒழுக்கங்கள் எப்படி மேம்படும் என்பதையும் அதற்கான நிருபிக்கப்பட்ட சான்றுகளையும் , இறைவனின் கட்டளைகளுக்கு மாறுபாடு செய்தோர் தண்டிக்கப்பட்ட வரலாற்று சான்றுகளையும் ஒரு தனி ஆக்கத்தில்தான் இன்ஷா அல்லாஹ் காணவேண்டும் .

திருமறை கூறுவதன்படி ,

“காலத்தின்மீது சாத்தியமாக! மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்துக்கொண்டும் பொறுமையை கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களைத்தவிர’” ( 103: 1-3)

சிந்திப்போம்.
'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

Saturday, June 8, 2013

[ 13 ] உள்ளம் கேட்குமே !? MORE…[ உள்ளம் உருவம் ]

'உருவத்தை பார்ப்பவன் மனிதனடா 
உள்ளத்தை பார்ப்பவன்  இறைவனடா'

என்ற பாடலின் வரியே  இந்த வார ஆக்கத்தின் ஆய்வாய் ஆராய்வோம். சிறு வயதில் நீதி போதனையாய் கேட்ட ஒரு கதையை இங்கு பதிய விரும்புகிறேன்.

ஒரு ஊரில் பஞ்சம் தலை விரித்தாடியது. உணவுக்கு பஞ்சம் பல மக்கள் ஊரைவிட்டு வெளியேறிய வண்ணம் இருந்தனர். அதில் ஒருவர் ஊருக்கு வெளியே மணல் மேடுகளைக் கண்டு அடடா... இவை அனைத்தும் தானியங்கள் ஆகவோ அல்லது ரொட்டி சுடும் மாவாகவோ இருந்து அது எனக்கு சொந்தமாக இருந்தால் ! இவ்வூரில் கஷ்டப்படும் மக்களுக்கு கொடுத்து உதவுவேனே என்று உள்ளத்தால் நினைத்தானாம்.

உள்ளத்தை அறிந்த இறைவன் அந்த மணல் மேடு அளவு தானியங்கள் தருமம் செய்த நன்மையை அம்மனிதனுக்கு கிடைக்க அதாவது நன்மை செய்ததாக பதிந்திட ஆணையிட்டான் என்று பாட்டி மூலம் காது குளிர கேட்டேன்.

உள்ளத்தூய்மை இறைவனுக்கு உகந்த ஒன்று.
உள்ளத்தை  பார்க்கும் மனிதன்
மனிதனில் புனிதன்
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா

ஒரு முறை முல்லா நசுருதீன் விருந்திற்கு அழைக்கபட்டார். தூய்மையான உடை அணியாமல் செல்ல விருந்திற்கு அனுமதிக்க வில்லை. நிலைமையை அறிந்த முல்லா வீட்டிற்கு சென்று நேர்த்தியான உடை அணிந்து மீண்டும் விருந்திற்கு செல்ல உள்ளே அனுமதிக்க பட்டார். விருந்து பரிமாறப்பட்டது எல்லோரும் முல்லாவை வினோதமாக பார்த்தார்கள்.

அப்படி என்ன செய்தார் முல்லா !?

கொடுக்கப்பட்ட சுவையான உணவுகளை தனது உடையில் அள்ளி தேய்த்து கொண்டாராம் ஏன் இப்படி என கேட்க ? விருந்து எனக்கல்ல எனது உடைக்கு தான் என்றாராம் புரிகிறதா !?

உள்ளத்தை பார்க்காமல் உருவத்தை பார்க்கும் உலகம் ! உருவத்தால் வசீகரம் நாகரிக உலக  நடைமுறைக்கேற்ப  தன்னை அலங்கரித்து உலகில் வளம் வருபவர்களுக்கு இக்கால மனிதர்கள் தரும் மரியாதை. சாதாரணமாக உலகில் எளிமையாக வளம் வருபவர்களுக்கு கிடைப்பதில்லை ..

உருவத்தை வைத்து மனிதர்கள் தரும் மரியாதை பற்றிய உளவியல் பார்வையை பாப்போம்...

சிறு வயதில் பிள்ளைகளுக்கு உடை விசயத்தில் அதிகம் கவனம் செலுத்துங்கள் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு சீருடை அணிவித்து அனுப்பும் பெற்றோர் கசங்கிய நிலையில் உள்ள ஆடைகளை அணிவித்து அனுப்புவர் அது பிள்ளைகளின் மனதில் ஏனோ தானோ என்ற மன நிலை உண்டாகும் ! பிறர் நம்மை பற்றிய எண்ணம் எப்படி இருக்கும் என்பதை அறிய வாய்ப்பில்லை. ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளிடம் தமது உடைகளை நேர்த்தியாக மடித்து வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

உடை நறுமணம் வீசும் அளவிற்கு  பிள்ளைகளின் உடையை சுத்தமாக சலவை செய்து கொடுக்க  வேண்டும். அக்குழந்தைகளிடம் ஆசிரியர்களின் அணுகுமுறையும் நன்றாக் இருக்கும். பிறரை  கவர வைக்கும் பிறர் தம்மை மதிக்க தோற்றம் முக்கியம்.

* பிறர் நம்மை பார்த்து புன்முறுவல் பூப்பதும். பாராமுகமாக இருப்பதும் நமது உருவத்தின் அடிப்படையில்தான்.

பிறர் நம்மிடம் அணுகும் போது புன்முறுவல் பூத்து முகமன் கூறுதல் நலம்    விசாரித்தல் மூலம் பிறர் மனம் கவரலாம்.

* பிறர் நமக்கு தரும் நன் மதிப்பை வைத்தே நமக்குள் தன்னம்பிக்கை ஏற்படும்.

* இயற்கையான முக வசீகரம் இறைவன் தந்த அருட்கொடை. அதற்காக இறைவனுடன் நன்றி பாராட்டலாம். ஆனால் பிறரை நகைப்பது, பிறர் குறை கூறித்திரிவது தனது அழகினால் இறுமாப்பு கொள்வதால் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். திமிர் பிடித்தவன் கர்வம்  கொண்டவன் என்ற பெயர் கிடைத்து விட்டால் நல்ல வாய்ப்புகள் வரும்போது கர்வம் பிடித்தவன் அவனுக்கு  ஏன் உதவ வேண்டும் என எண்ணுவர்.

 * பிறரை மதித்து நாமும் உயரலாம்.

உள்ளத்தை தூய்மையாய் வைத்து மனிதரில் புனிதராய் ஆக முயற்சிப்போம். தூய்மையான உள்ளத்திற்கு மதிப்பளித்து மனிதரில் புனிதராவோம் !
இன்னும்  வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, June 7, 2013

வரம்பு

வாழ்வியல் வயலின்  வரப்பு
.....வகுத்திடும் கொள்கை வரம்பு
தாழ்விலா வாழ்வை நிரப்பும்
.....தகுதியின் வரம்பே நிலைக்கும்
ஏழ்மையை வறுமைக் கோட்டின்
... எல்லையாய்ச்  சொல்லும் நாட்டில்
ஏழ்மையின் வரம்பும் நீங்கா
....இழிநிலை என்றும் காண்பாய் !

அளவினை மீறும் வரம்பே
...அசைத்திடும் நாக்கின் நரம்பால்
பிளந்திடும் பகையும் திறக்கும்
....பிறர்மனப் புண்ணில் சிரிக்கும்
அளவிலா வரம்பு கடந்தால்
..அக்கறைக் கூட இடர்தான்
களவிலாக் கற்பைப் பேண
...காதலில் வரம்பைக் காண்பாய் !

நாடுமுன் ஆசை நரம்பை
.....நாணெனக் கட்டு வரம்பால்
கேடுள குரோதம் மிகுந்தால்
...கோடென வரம்பைப் போடு
பாடுமுன் பாட்டை யாப்பின்
.....பாதையில் வகுத்தல் வரம்பு
கூடுமே ஓசை அதனால்
....குவலயம் போற்றும் மரபே !
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 06-06-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...
Pro Blogger Tricks

Followers