.

Pages

Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Monday, November 26, 2012

அதிரை நூலகம் – ஓர் பார்வை !!!


நாம் கற்கும் கல்விக்கு அடிப்படை புத்தகமே. இவற்றைக்கொண்டு நம் அறிவித்திறன்களை வளர்த்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் உலக விசயங்கள் பலவற்றை அறிந்துகொள்ளவும் உதவுகின்றன. நமது அறிவுத்திறன் வளர்வதற்கு முதுகெலும்பாகத் திகழும் நூலகம் நம்மிடேயே நட்புறவு, சகோதரத்துவம், தன்னம்பிக்கை ஆகியவற்றையும் ஏற்படுத்துகின்றன. 

வாசகர்களின் எண்ணிக்கை :
அதிரையில்  கடந்த 15-06-1955 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நூலத்தில் கவிதை, நாவல், நாடகம், பொது அறிவு, இயற்கையியல், கணிதவியல், இயற்பியல், பொறியியல், வேதியியல், தொழில்நுட்பவியல், உயிரியல், புவியியல், தாவரவியல், வேளாண்மை, விலங்கியல், மருத்துவயியல், பயன்படு கலைகள், கவின் கலைகள், இலக்கியம், மொழியியல், சமயம், தத்துவயியல், உளவியல், கல்வி, நிலவியல், வரலாறு, அரசியல், பொருளாதாரம், சமூகவியல், சட்டவியல் போன்ற தலைப்புகள் அடங்கிய 31517 புத்தகங்கள் இருந்தும் 8 புரவலர்களையும், 3227  உறுப்பினர்களையும் மட்டுமே பெற்றிருப்பது வேதனை தருவதாக இருகின்றது.
இவைகள் நமது மக்களிடயே வாசிக்கும் பழக்கம் குறைந்துள்ளதையே காட்டுகின்றன. அதற்கு வலு சேர்க்கும் விதமாக ஏறக்குறைய எழுபதாயிரம் மக்கள் தொகையைக் கொண்ட ஊரில் தினமும் சுமார் 90 - 100  வாசகர்கள் மாத்திரம் நூலகத்திற்கு வந்து செல்வது அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்றது. ஒரு வேலை நூலகம் அமைந்துள்ள இடம் ஊரின் மத்திய பகுதியில் இல்லாமல் ஊரின் கடைகோடியில் இருப்பது ஒரு காரணமாக இருக்குமோ என்னவோ !?`

நூலகத்தின் கட்டிடம் :
நமதூர் கரையூர் தெரு பஞ்சாயத்தார் சார்பாக வழங்கப்பட்ட 10 சென்ட் நிலத்தில் கடந்து [ 30-09-1980 ] அன்று கட்டிடப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளில் பணிகள் அனைத்தும் நிறைவுற்று கடந்த  [ 16-01-1993 ] அன்று முதல் இந்நூலகம் செயல்பட துவங்கியது.

கட்டிடம் இன்றைய நிலையில் பராமரிப்புகளின்றி சுவற்றில் காணப்படும் வெடிப்புகளாலும், உப்புக்கற்றால் கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டு கீழே இடிந்து விழும் நிலையில் இருக்கின்றது. நீண்ட காலமாக நூலக கட்டிடத்திற்கு பெயின்ட் அடிக்காமல் விட்டதனால் மங்கிப் போய் காட்சியளிக்கின்றன.

நூலகத்தின் வசதிகள் :
நூலாக வாசகர்களுக்கு அமர்ந்து படிப்பதற்கு நாற்காலிகள், மேஜைகள், போதிய வெளிச்சத்துடன் கூடிய மின் விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளற்று மிகவும் பின்தங்கிக் காணப்படுகின்றன.

அறிவிப்பு பலகை :
நூலகம் குறித்த வாசகர்களின் புகார்கள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு கோரும் ‘அறிவிப்புப் பலகை’யை அனைவரின் பார்வையில் படுமாறு நூலகத்தில் இடம்பெறுவது அவசியம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. நூலகக் கட்டிடத்தைப் பாதுகாக்கும் பொருட்டு உடனடியாக அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று அதன் தரத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தலாம்.

2. வாசிக்கும் திறனை அதிகரிக்கச் செய்து உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

3. வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நூலகம் அமைந்துள்ள இடம் ஊரின் கடைகோடியில் அமைந்து இருப்பது ஒரு காரணமாக இருந்தாலும் ஊரின் மத்தியில் கிளை நூலகம் ஒன்றை ஏற்படுத்த அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லலாம்.

4. நூலகத்தில் புத்தகத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லலாம்.

5. புரவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து அவர்களிடமிருந்து பெறப்படும் நிதியைக்கொண்டு நூலகத்திற்கு தேவையான மேஜைகள், நாற்காலிகள், மின் விளக்குகள், மின் விசிறிகள் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

6. நமதூரைச் சேர்ந்த நல்லுள்ளம் படைத்த கொடை வள்ளல்களிடமிருந்து நிதி உதவிப் பெற்று நூலகத்திற்கு தேவையான பெயின்ட் அடித்தல், குடிநீர் வசதி மற்றும் இன்னபிற அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புத்தகங்களை, வாசகர்களைக் கொண்டிருக்கும் நூலகங்களைத் தரம் உயர்த்துவதற்காக Go.ms.no.1408/EDN (k) Dated 25.07.1980 - ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆண்டுக்கு 20 ஆயிரம் புத்தகங்கள் இருப்பு, 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் பயன்பாடு இருந்தால் அவற்றை முதல் நிலை நூலகமாகவும், ஆண்டுக்கு 8 ஆயிரம் புத்தகங்கள் இருப்பு, 12 ஆயிரம் வாசகர்கள் பயன்பாடு இருந்தால் அவை 2-ம் நிலை நூலகங்களாகவும் அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணற்ற தகவல்கள் இன்று வலைதளங்களின் உதவியால் விரைந்து கிடைக்கின்றன. உலகின் எந்த நூலகத்தில் உள்ள நூல்களையும் "மவுஸி'ன் மூலம் "கிளிக்' செய்தால் இருக்கும் இடத்தில் இருந்தே படிக்க முடிகிறது. இன்டர்நெட் மூலமாக மின் புத்தக நிலையங்களில் புத்தகங்களை நமக்கு நாமே வாங்கும் சூழல் இருந்தாலும் கனிந்த சேவை, காயம் ஏற்படுத்தாத சொற்கள், நிறைந்த அரவணைப்பு போன்றவைகளால் வாசகர் தளத்தை பெரும்பான்மையாக நூலகம் நோக்கி அழைக்க முடியும் என்பதை மனதில் இருத்தி பல்வேறு ஊடகங்கள் பெருகி விட்ட இக்காலக்கட்டங்களில் மாணவ, மாணவிகளின் வாசிக்கும் ‎பழக்கத்தை அதிகரிக்கச்செய்து, நூலகங்களின் பயன்கள் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு ‎ஏற்படுத்துவது அவசியமானதொன்றாகிறது.

இதற்காக நாம் நூலகம் தரும் பயன் அறிந்து அங்கு நூல் பல கற்று அறிவை வளர்த்துக் கொள்வோம் - வாசிப்பை நேசிப்போம். நமது நூலகத்தை நாமே தரத்திலும் சேவையிலும் உயரச்செய்வோம்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! பார்வைகள் தொடரும்...

Friday, November 23, 2012

சூனா வீட்டு பள்ளிக்கூடம் – ஓர் பார்வை !!!

பள்ளிக்கூடம் என்றாலே சற்றென்று நினைவு கொள்வது நாம் கல்வி பயின்ற தொடக்கப்பள்ளிகளே ! காரணம் நெஞ்சம் நெகிழும் அந்த மலரும் நினைவுகள் பசுமரத்து ஆணி போல் பளிச்சென்று நம் மனதில் ஒவ்வொன்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும்.

அந்தவகையில் நமதூர் மேலத்தெருவில் கடந்த 1921 ஆண்டுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இன்று நடுநிலைப் பள்ளி என்ற அந்தஸ்தைப் பெற்று அப்பகுதியை சுற்றி வசிக்கக்கூடிய ஏழை எளியோர் வீட்டு மாணவ மாணவிகள் கல்வியை கற்பதற்குரிய சிறப்பை வழங்கி வருகின்றது. பரப்பளவில் மிகப்பெரும் இடத்தைக் கொண்டுள்ள பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும்.

என்னுடைய ஆரம்பக் கல்வியை இப்பள்ளியில் பயின்றதால் இப்பள்ளி மீது எனது கவனம் சற்றுக் கூடுதலாகவே இருக்கும். இப்பள்ளியின் சாலை வழியே பலமுறை நான் கடந்து சென்றிருந்தாலும் தேர்தல் நேரத்தில் ஓட்டு போடுவதற்காக மட்டும் சென்று வந்ததை தவிர்த்தால் மற்ற நேரங்களில் அங்கே செல்வதற்குரிய வாய்ப்பு எனக்கு அமையாமலேயே போய்விட்டது.

இன்று காலை எனது நண்பன் ஜமாலுதீன் மூலம் எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இருவரும் ஒன்றாகச் சென்றோம். பள்ளியை சென்றடைந்தவுடன் பள்ளியை முழுவதுமாக பார்வையிட்டுக் கொண்டே எங்களின் நினைவுகள் ஒவ்வொன்றையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துவாறு பார்வையிட்ட எங்களுக்கு அங்கே கண்ட காட்சிகள் அதிர்ச்சியடைய வைத்தன...

மாணாக்கர்களின் எண்ணிக்கை விகிதம் :
மிகுந்த ஜனத்தொகை இருக்கும் குடியிருப்பு பகுதியின் அருகே பள்ளி இருந்தும் மாணாக்கர்கள் எண்ணிக்கை என்னவோ !? இரண்டு இலக்க எண்ணைத் தாண்டாமல் இருந்தது எங்களுக்கு வேதனையைத் தந்தன. அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி பாட திட்டமே நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன என்பதை மறந்து விட்டு கட்டணத்தை செலுத்தி கல்வியை கற்க எங்கேயோ அனுப்பி வைத்துவிடும் பெற்றோர்கள் நம் முன்னோர்கள் பலர் இதுபோன்ற பள்ளிக்கூடங்களில் கல்வி பயின்று பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை மறந்து விட்டதேக் காரணமாக இருக்கும்.

தற்போது புதிய உணவு வகைகளை சத்துணவு திட்டத்தில் அறிமுகம் செய்துள்ள தமிழக அரசு, புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், சீருடைகள், காலணிகள், வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி [ Geometry Box ], பேருந்து பயண அட்டை, கல்வி உதவித் தொகை, மிதிவண்டி, லேப்டாப் உட்பட தேர்வில் வெற்றிபெறும் மாணக்கர்களுக்கு பரிசுத்தொகை என இதுபோன்ற எண்ணற்ற சலுகைகளை வழங்கி அனைவருக்கும் கல்வி என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் அரசு செயல்படுத்தி வரும் வாய்ப்பை பெற்றோர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளாமல் தங்களின் பிள்ளைகளை எங்கேயோ இருக்கும் பள்ளிக்கு கல்வி கற்க அனுப்புவதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விகிதம் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றன.

வகுப்பு அறை !?
வகுப்பறையின் அருகே செல்வதற்கே எங்களுக்கு அச்சமாக இருந்தது. காரணம் நாங்கள் கல்வி பயின்ற காலக்கட்டத்திற்கு முன்பே கட்டப்பட்டிருந்த இக்கூடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்து இருப்பதைக் கண்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது. மீதமுள்ள பகுதியும் இடிந்து விழுந்து ஆசிரியர், மாணாக்கர் போன்றோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முன்பு இதில் கவனம் செலுத்துவது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை.



அடுத்த அடுத்தக் கட்டங்களின் மீது எங்கள் பார்வை பட்டாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பது எங்களுக்கு மேலும் அதிர்ச்சியைத்தந்தன.

கழிப்பறை வசதி :
அதேபோல் கழிப்பறைகள் எழுதுவதற்கே கூசுகின்றன அந்தளவு மிகவும் அசுத்தமாக காணப்பட்டன. ஆசிரியப் பெருமக்கள் மாணாக்கர்கள் இவற்றை எப்படி பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நினைத்து போது எங்களின் மனது மிகவும் வேதனையடைந்தது.

அரசின் விதியின் படி...
1. 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிப்பறை மற்றும் 50 மாணவர்களுக்கு 1 மலக் கழிப்பறை என்ற அளவில், போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டம் / போதிய வெளிச்சத்துடன் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவை அன்றாடம் தூய்மையாகப் பேணப்பட வேண்டும். கிருமி நாசினி தெளித்து ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக வகுப்பறையை ஒட்டிய கடைசியாக அமைக்கப்படவேண்டும். தனியே மைதானத்திலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலோ அமைதல் கூடாது. கட்டிட உறுதி / உரிமச் சான்றுகள் கழிப்பறைகளுக்கும் அவசியம்.

2. கழிப்பறைகள் தண்ணீர் குழாய் வசதியுடன் கூடியதாக இருத்தல் வேண்டும்.

உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. இப்பிரச்சனைகளை பெற்றோர் – ஆசிரியர் கழகம் மூலம் சம்பத்தப்பட்ட கல்வித்துறையின் கவனத்துக்கு எடுத்துச்செல்வது...

2. மஹல்லா நிர்வாகிகளின் சார்பாக பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய கல்விக்குழு, உள்ளாட்சியினர் ஆகியோரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வது...

3. மேலே குறிப்பிட்ட இருவரின் கவனத்துக்கு எடுத்துச்சென்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்ட விலை என்றால் தமிழக முதல்வருக்கு கோரிக்கையை அனுப்பி வைப்பது...

4. பொது மக்களின் ஒத்துழைப்போடு நமது பேரூராட்சியின் அனுமதியோடு தமிழக அரசின் “தன்னிறைவுத் திட்டம்“ மூலமாக பாதுகாப்பானக் பள்ளி அறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்...

அதென்ன தன்னிறைவுத் திட்டம் ?
தன்னிறைவுத் திட்டம் : - [ முந்தைய ஆட்சியில் ‘நமக்கு நாமே திட்டம்’  ]
கிராமங்கள், நகரங்களில் மக்கள் விரும்பும் திட்டங்களை தன்னிறைவுத் திட்டம் மூலம் மேற்கொள்ளலாம். திட்ட மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பங்குத் தொகையை சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் செலுத்த வேண்டும்.  [ உதாரணமாக நாம் அரசுக்கு ரூபாய் ஒரு லட்சம் செலுத்தினால் அரசு சார்பில் கூடுதலாக இரண்டு லட்சங்கள் பெற்று நமக்கு வேண்டிய திட்டங்களை நாமே செயல் படுத்திக்கொள்ளலாம் ]

அரசுப் பள்ளிக் கட்டடங்கள், ஆய்வுக்கூடங்கள், பள்ளிக் கழிவறைகள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கும் அரசு விடுதிகள் கட்டுதல், அரசு மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்கள், கால்நடை மருத்துவமனைகள், கால்நடை வளர்ப்பு மையங்கள், நூலகங்கள், அங்கன்வாடிகள், சத்துணவு மையங்கள், ரேஷன் கடைகள் ஆகியவற்றை கட்டுவதற்கு இத்திட்டத்தை பயன்படுத்தலாம்.

சமுதாய சொத்துக்களை உருவாக்குதல், குடிநீர் ஆதாரம் உருவாக்குதல், சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்தல், தானியகளம் அமைத்தல், ஊரக குழந்தைகள் மற்றும் மகளிர் சுகாதார வளாகங்களை பராமரித்தல், பாலங்கள் அல்லது சிறுபாலங்கள் கட்டுதல், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் அமைத்தல்  உள்ளிட்ட பல்வேறு பணிகளை இத்திட்டம் மூலம் மேற்கொள்ள முடியும்.

உள்ளூர் பள்ளிகளை உயரச்செய்வோம் !
அடிப்படை வசதிகளான சுகாதாரம், குடி நீர், உணவுக் கூடங்கள் மற்றும் வகுப்பறைகளின் தரம், கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி நமது பள்ளிகளை நாமே தரத்திலும் சேவையிலும் உயர்ந்து நிற்க துணை புரிவோம்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! பார்வைகள் தொடரும்...

சரி அதென்ன சூனா வீட்டு பள்ளிக்கூடம் !?
எனது வாப்புச்சா வீட்டிலிருந்து எட்டிப் பார்க்கும் தூரத்தில் இருந்த வாய்க்கால்தெரு [ நடுத்தெரு ] பள்ளிக்கூடத்தில் எனது தகப்பனார் ஆரம்பக் கல்வியைக் கற்றிருந்ததால் இப்பள்ளியில் தொடக்கக் கல்வியை கற்ற எனது தாயாரிடம் ‘சூனா வீட்டு பள்ளிக்கூடம்’ என்ற பெயர் எப்படி வந்தன ? என்ற கேள்வியை கேட்டேன்.

ஓ அதுவா ! நம்ம தெருவிலே ஆரம்பத்திலே பள்ளிக்கூடம் இல்லை. முதன் முதலா நம்ம சூனா வீட்டு ‘கவ்வா ராத்தா’ வீட்டிலுள்ள மிகப்பெரிய திண்ணையில் தான் படிப்பை சொல்லித்தந்து பள்ளிக்கூடத்தை ஆரம்பித்து வைத்தனர். அன்றிலிருந்து இன்று வரை இப்பள்ளியை ‘சூனா வீட்டு பள்ளிக்கூடம்’ என்றே அனைவராலும் அன்பாக அழைக்கப்படுகிறது என்ற தகவலைத் தந்து என்னை வியக்கவைத்தார்.

Wednesday, October 3, 2012

மதரஸாக்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை !!!



நமது பாரதப் பிரதமரின் 15 அம்சத் திட்டத்தின் கீழ் சிறுபான்மை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்திற்கும் நீடிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக மத்திய அரசு ரூபாய் 55  கோடி நிதி ஒதிக்கிடு செய்யப்பட்டுள்ளன.

மதரஸாக்களில் தொடக்க கல்வி தரத்திற்கான திட்டம் :
[ Scheme for Providing Quality Elementary Education in Madarasa ]
மதக் கல்வி போதிக்கும் மதரஸாக்களில் அறிவியல், கணிதம், சமூகவியல் மற்றும் மொழி போன்ற பாடங்களையும் சேர்த்து கற்பிக்கப்பட்டால் ஆசிரியர்களுக்கான சம்பள செலவீனம் மத்திய அரசால் 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

மதரஸாக்கள் மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை : 
1. கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு சம்பள உதவித்தொகை [ பட்டப்படிப்பு ஆசிரியருக்கு பிரதி மாதம் ரூ 6,000/- , முதுநிலைப் பட்டப்படிப்பு ஆசிரியருக்கு பிரதி மாதம் ரூ 12,000/- , அதிகபட்சம் மூன்று ஆசிரியர்களை நியமிக்கலாம் ]

2. மதரஸாக்களில் பாட நூல் வாங்குவதற்காக ஒரு முறை மாத்திரம் வழங்கப்படும் உதவித்தொகை ரூ 50,000/-

3. அறிவியல், கணிதம், சமூகவியல் போன்ற பாடநூல் வாங்குவதற்கு ஆண்டிற்கு ஒரு முறை வழங்கப்படும் உதவித்தொகை ரூ 5,000/-

4. அறிவியல் உபகரணங்கள், கணித உபகரணங்கள் மேலும் கற்றுக்கொடுப்பதற்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்காக ஒரு முறை மாத்திரம் வழங்கப்படும் உதவித்தொகை ரூ 15,000/-

5. அறிவியல், கணிதம், கம்யூட்டர் ஆய்வுக்கூடம் அமைப்பதற்கு ரூ 100,000/- உதவித்தொகையாக வழங்கப்படும்.

6. ஆய்வுக்கூடத்தை பராமரிப்பதற்காக உதவித்தொகை ரூ 5000/- வருடம்தோறும் வழங்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் :
தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர்,
சென்னை – 600 006
தொலைப்பேசி : 044-28271169

Ministry of Human Rights Development,
Department of Higher Education, Govt. of India
Shastri Bhavan, New Delhi

Sunday, September 9, 2012

'ஸ்மார்ட் கிளாஸ்' - அப்புடின்னா என்ன ?



தற்போது - ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் புதிய வகுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பாடங்களை ஆசிரியர் சொல்லிக் கொடுத்த பின்னர் மாணவர்களுக்குப் புரிகின்றதோ இல்லையோ மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை மாற்றி பாடங்களையே படங்களாக்கிக் காட்டி பல்வேறு உதாரணங்களையும் இம்முறை மூலம் எடுத்துக்காட்டும் போது வகுப்பறைகளில் மட்டுமின்றி வாழ்க்கையில் எங்கு எதைப் பார்த்தாலும் அதனுடன் தான் படித்த பாடத்தை ஒப்பிட்டு நோக்கும் முறையை இந்த ஸ்மார்ட் கிளாஸ் சிஸ்டம் ஏற்படுத்தித் தருகிறது என்றால் அது மிகையல்ல.

படிப்பது என்ன என்பது மாணவர்களுக்குப் புரிய வேண்டும். வெறும் தாள்களில் அச்சிட்ட பாடத்தை வாசிப்பதனாலும், மனப்பாடம் செய்து தேர்வில் மதிப்பெண்கள் வாங்குவது என்பது உபயோகமாக இருக்காது. கற்கும் முறையை விட கற்பிக்கும் முறை எளிதாக இருந்தால் கற்பதிலும், கற்பிப்பதிலும் ஆர்வம் கூடிக் கொண்டே இருக்கும். இந்த முறையை ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் தொழில் நுட்பத்தின் மூலமான கல்வி வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட் வகுப்புக்கு ஒரு சர்வர், ஒவ்வொரு வகுப்பறையிலும் எல்.சி.டி. மானிட்டருடனான கம்ப்யூட்டர் தேவை. இந்த சர்வர்களில் நமக்குத் தேவையான அனைத்துப் பாடங்களையும் நாம் பதிவு செய்து கொள்ள முடியும். இதைத் தவிர இன்டர்நெட் மூலம் தேவையான விஷயங்கள், எஜூசாட் மூலம் கிடைக்கும் விஷயங்களை டவுன்லோட் செய்து தேவையான நேரத்தில் வகுப்பறைகளில் காண்பிக்கவும் சர்வர் உதவும்.

புத்தகத்தைப் பார்த்து பாடம் படிப்பதை விட, செயல் வழி மற்றும் "விஷுவல்' முறையில் படிப்பது அதிக பலன் அளிக்கிறது. வெளிநாட்டு பள்ளிகளில் இந்த திட்டம் மூலம் படிக்கும் மாணவர்கள் புத்திக்கூர்மையுடன் விளங்குகின்றனர்.

இதற்கான பாடங்கள், "இன்டர்ஆக்டிவ் போர்டில்' தயாரிப்பின்போதே புகுத்தப்படுகிறது. பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு, மாணவர்களே திரையில் விடையை கண்டுபிடிக்க முடியும். ஜீரண மண்டலம் போன்ற பாடங்களை அசையும் படங்களுடன் வண்ணமயமாக காணொளியாக திரையில் காண முடிவதால், பாடங்கள் எளிதில் மனதில் பதியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks : http://viduthalai.periyar.org.in

Tuesday, August 28, 2012

பள்ளிக் ‘கல்விக்குழு’ சீரும் சிறப்பா செயல்படுதா !?



அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப்பட்டு உள்ளன. இந்தக் குழுவின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

இக்குழுவின் நிர்வாகிகள் மற்றும் அதன் பணிகள், திட்டங்கள் கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும் என்பது அரசால் குறிப்பிடப்படுகிறது.

குழுவின் நிர்வாகிகள் :

1. குழுவில் 75 சதவீதம் பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்கள் இடம்பெற வேண்டும். பொருளாதார, சமூக ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கும் குழுவில் வாய்ப்பளிக்க வேண்டும். மீதமுள்ள 25 சதவீத உறுப்பினர்கள் பின்வரும் விகிதத்தில் இடம்பெற வேண்டும்.

2. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளில்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருந்தும், மற்றொரு பங்கு உறுப்பினர்கள்
அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களில் இருந்தும், இன்னொரு பங்கு
உறுப்பினர்கள் உள்ளூர் கல்வியாளர்களிலிருந்தும் நியமிக்கப்பட வேண்டும்.

3. பெற்றோர் உறுப்பினர்களில் இருந்து குழுவின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர், அவர் இல்லாத பள்ளிகளில் பள்ளியின் மூத்த ஆசிரியர் இந்தக் குழுவின் பதவி வழி உறுப்பினராகவும், அமைப்பாளராகவும் செயல்படுவார்.

4. இந்தக் குழு மாதத்துக்கு ஒருமுறையாவது கூட வேண்டும். கூட்டத்தில்
விவாதிக்கப்படும் விஷயங்களை பொதுமக்களின் பார்வைக்கும் வைக்க வேண்டும். குழுவில் மொத்தமாக 50 சதவீத பெண்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். பள்ளி நிர்வாகக் குழுவில் 20 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

குழுவின் பணிகள் : 

1. ஆசிரியர்கள் நேரம் தவறாமல் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

2. இப்பகுதியை சுற்றி வசிக்கும் அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர்வதையும்,     அவர்கள் தொடர்ந்து கல்வி பயில்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

3. குழந்தைகளின் உரிமை மீறப்படும்போதோ, அவர்கள் துன்புறுத்தப்படும்போதோ, பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படும்போதோ உள்ளூர் கல்வி அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

4. குழந்தைகள் கல்வி பயில்வதற்குத் தடையாக
கல்விக் கட்டணம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

5. சத்துணவு வழங்கும் திட்டத்தை மேற்பார்வையிட வேண்டும். பள்ளிகளில் கற்பித்தலைத் தவிர ஆசிரியர்கள் தனிப் பயிற்சி எடுக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி மேம்பாட்டுத் திட்டம் : 

1. ஒவ்வொரு பள்ளி நிர்வாகக் குழுவும் ஒவ்வொரு ஆண்டுக்கும் பள்ளி
மேம்பாட்டுத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். நிதியாண்டு முடிவதற்கு
குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முன்னதாக இந்தத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

2. பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தில் பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் அல்லது
துணைத் தலைவர், அமைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்ட பிறகு, உள்ளாட்சி அமைப்பிடம் வழங்க வேண்டும்.

3. பள்ளி ஆசிரியர்களுக்கு கல்விப் பணிகள் தவிர வேறு பணிச் சுமைகள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

4. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகள், தேர்தல் பணிகள் தவிர பிற பணிகளுக்கு அவர்களைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

5. பள்ளிச் செலவுக் கணக்குகளையும், உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து பெறப்படும் நிதி குறித்த கணக்குகளையும் தனியாகப் பராமரிக்க வேண்டும்.

6. இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி நிர்வாகக் குழுவை
அமைப்பதற்கான நடவடிக்கைகளை திட்ட இயக்குநர் எடுக்க வேண்டும்.

சரி விசயத்திற்கு வருவோம்....

அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்விக் கூடங்கள் பல உள்ளன. இவற்றில் நிர்வாகிகளாக செயல்படுபவர்கள் நான்கில் மூன்று பங்கினர் அந்தந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அல்லது காப்பாளர்களாக இருக்க வேண்டும். ஆனால் அரசின் விதிக்கு மாற்றமாகவே இக்குழுவின் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகின்றனர். அதாவது குழுவின் தலைவரின் பிள்ளைகள் தான் பொறுப்பு வகிக்கும் அந்தந்த பள்ளிகளில் கல்வி பயில வேண்டும் என்பது விதியாக இருந்தாலும் அரசியலில் பொறுப்பில் உள்ளவர்கள், சமூக ஆர்வலர் எனச் சொல்லி பதவி விரும்புவோர், அவருக்கு வேண்டியவர், இவருக்கு நெருக்கமானவர், தெருவாசிங்க, இவரு முக்கிய புள்ளிப்பா ன்னு சொல்லி தொடர்ந்து பொறுப்பில் இருப்பது அரசால் குறிப்பிடப்படும் நிர்வாகக்குழு முறைக்கு மாற்றமாகவே உள்ளன.

சரி இவ்வாறு தொடர்ந்து பொறுப்பில் இருக்கும் இவர்களால் மாதத்துக்கு ஒருமுறையாவது பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணாக்கர்கள் ஆகியோர் பங்களிப்புடன் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து மாணாக்கர்களின் கல்வி அறிவு, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றின் நிலை என்ன ? பெற்றோர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் ? ஆசிரியர்களின் கற்பிக்கும் முறை எவ்வாறு அமைய வேண்டும் ? பள்ளியின் வளர்ச்சி மற்றும் அதன் தேர்ச்சி விகிதம் எவ்வாறு இருக்க வேண்டும் ? என இதுபோன்ற ஆலோசனைகள் செய்யப்படுகிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

ஒவ்வொரு வருடம் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் பள்ளியின் சார்பாக நடைபெறும் கொடிஏற்றம் நிகழ்ச்சிக்கும், ஆண்டு விழா நிகழ்ச்சிக்கும், அரசால் வழங்கும் நிதி உதவியை பெற காசோலையில் கையொப்பம் இடுவதற்கும் அதன் நிர்வாகிகள் சார்பாக ஓன்று கூடுதல் நடைபெறுவதாக ஒரு கருத்து நிலவுகின்றன.

பள்ளிகளின் தலைமை ஆசிரிய ஆசிரியைகளுக்கு அன்பான வேண்டுகோள் !

சமூக மேம்பாட்டுக்கும்,  மாற்றத்துக்கும் வித்திடக்கூடியக் கல்வி ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன என்றால் மிகையல்ல. உங்களால் கற்றுத்தருகிற இக்கல்வி அவர்களுக்கு நல்ல பயனுள்ள வகையில் உதவ வேண்டும். இக்கல்வியை திறம்பட கற்பித்தல் மூலம் சிறந்த மாணவர்களை உருவாக்கி அவர்களால் நம் சமூகம் முன்னேற்றமடைவதோடு மட்டுமல்லாமல் நமது நாடும் முன்னேற்றப்பாதையில் செல்லும்.

இதற்காக அரசால் குறிப்பிடப்படுகின்ற பள்ளிக் ‘கல்விக்குழு’வின் நிர்வாகிகள் மற்றும் அதன் பணிகள், திட்டங்கள் போன்ற பணிகளுக்கு தகுதியுடையோரை இனங்கண்டு அவர்களை நியமனம் செய்வதன் மூலம் மாணாக்கர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் ஒவ்வொன்றையும் சிறப்பாக செயல்படுத்த முடியும்.

இதனால் மாணாக்கர்களின் கல்வி அறிவு, ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவைகள் சிறப்பானவையாக அமையப்பெற்று பள்ளியின் வளர்ச்சி மற்றும் அதன் தேர்ச்சி விகிதம் உயர்ந்து காணப்படும்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

Tuesday, August 7, 2012

காதிர் முகைதீன் கல்லூரியின் தாளாளர் டாக்டர் முஹம்மது அஸ்லம் அவர்களுடன் ஒர் அழகிய சந்திப்பு ( காணொளி )


அதிரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதி மாணவ, மாணவிகளுக்கு “கல்வி” என்ற சிறந்த சேவையை வழங்கி வருகின்ற அதிரை காதிர் முகைதீன் கல்லூரி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி “அதிரைப்பட்டினம்” என்ற நமதூருக்கு பெருமையை தேடித்தந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக காலஞ்சென்ற “கொடை வள்ளல்” காதிர் முகைதீன் அப்பா மற்றும் “கல்வித்தந்தை” மர்ஹூம் ஹாஜி S.M. சேக் ஜலாலுதீன் மரைக்காயர் போன்றவர்கள் ஆற்றிய எண்ணிலடங்காத் தொண்டுகள் மட்டுமே என்றால் மிகையாகாது.

தன் தந்தையாரைப் போல கல்விச்சேவையை தொய்வின்றி திறம்பட தொடர்வதற்காக அல்லும் பகலும் அயாராது உழைத்து, காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டுக்கொண்டு இருக்கின்ற நமது கல்லூரியின் தாளாளர் டாக்டர் S. முஹம்மது அஸ்லம் அவர்களிடம் கீழ்கண்ட மூன்று கேள்விகளை முன்வைத்து அணுகினோம். அவர்களின் பல வேலைகளுக்கிடயே நமக்காக நேரத்தை ஒதுக்கி விரிவான விளக்கத்தை தந்தார்கள்.

1. அதிரையில் மகளிர் கல்லூரி

2. முன்னாள் மாணவர் சங்கம் உருவாகிய நோக்கம் மற்றும் செயல்பாடுகள்

3. கல்லூரியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள்

பேட்டியின் போது தன் கல்வி நிறுவனங்களின் மீதுள்ள ஆர்வமும் பிடிப்பும் அவர்களிடம் தென்பட்டது. மேலும் உலகளாவிய சாதனையாளர் விருதுகள் பல பெற்று நமதூருக்கு பெருமையை தேடித்தந்து கொண்டுருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர்களின் பதில்.....

அதிரையில் மகளிர் கல்லூரி :



முன்னாள் மாணவர் சங்கம் உருவாகிய நோக்கம் மற்றும் செயல்பாடுகள் :



கல்லூரியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் :

Sunday, March 4, 2012

காதிர் முகைதீன் கல்லூரி : “பட்டமளிப்பு விழா” நிகழ்ச்சிகள் !




அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் அரங்கில் இன்று ( 04-03-2012 ) காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் காதிர் முகைதீன் கல்லூரியின் தாளாளர் டாக்டர் சகோ. S. முஹம்மது அஸ்லாம் அவர்கள் தலைமையில், சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கல்லூரிப் பாடத்திட்ட வளர்ச்சிக் குழுவின் இயக்குனர் பேராசிரியர் டாக்டர். E. ராம் கணேஷ்அவர்களும், மேலும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவல ஆய்வகப் பணியாளர்கள் மற்றும் ஏராளமான பெற்றோர்கள் எனக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சியின் நிரலாக.........................................
1.       இக்கல்லூரியின் அரபி பேராசிரியர் மெளலவி  முஹம்மத் இத்ரீஸ் அவர்களால்“கிராத்” ஓதப்பட்டு நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமானது.

2.       இக்கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியர் டாக்டர் A. முஹம்மது முகைதீன்அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

3.       இக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் A. முஹம்மது அப்துல் காதர் அவர்களால் உறுதி மொழி வாசிக்கப்பட்டது.



4.       “அனைத்து வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்றுள்ள இக்கல்லூரியில், உள்ளூர் பெண்கள் இவ்வாய்ப்புகளை நன்கு பயன் படுத்திக்கொண்டு தங்களின் படிப்புகளை தொடர வேண்டும் “ என்ற வேண்டுகோளை இக்கல்லூரியின் தாளாளர்டாக்டர் சகோ. S. முஹம்மது அஸ்லாம் அவர்கள் அவர்களின் உரையில் குறிப்பிட்டார்.


5.       சிறப்பு விருந்தினர் டாக்டர். E. ராம் கணேஷ் அவர்களின் உரையில் “பெறப்பட்ட கல்வியினை அவ்வாறே பயன்படுத்தாமல் மாணவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தாங்கள் இருக்கும் இடத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே காலத்தின் கட்டாயம் “ என்று குறிப்பிட்டார்.



6.   எண்ணற்ற பட்டதாரிகளை அனுப்பிவைத்த இவ்வரங்கம் மிகவும் சிறப்பானது என்ற பெருமையை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


7.       பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் “பட்டங்கள்” பெறும் கண்கொள்ளாக் காட்சிகளைக் கண்டு பெரும் ஆனந்தம் அடைந்து மகிழ்ந்தனர்.


8.       பல்வேறுப் பாடப்பிரிவுகளில் தரங்கள் மற்றும் பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவிகள் உட்பட மொத்தம் 505 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.


9.       இளநிலை வரலாற்றுப் பாடத்தில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர் K.பிரேம்குமாருக்கு சிறப்பு விருந்தினர் டாக்டர். E. ராம் கணேஷ் அவர்கள் பதக்கம் மற்றும் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. 


10.       விழா நிகழ்ச்சிகளை பொருளாதாரத்துறைப் பேராசிரியர் டாக்டர். S. P. கணபதிஅவர்கள் தொகுத்து வழங்கினார்கள். 


11.       இக்கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் S. சிக்கந்தர் பாட்சா அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே முடிவுபெற்றது. 







“பட்டங்கள்” பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அதிரை வலைதள சகோதரர்கள் சார்பாக தங்களுக்கு வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் "மனிதநேயம்", "சகோதரத்துவம்" ,"சமுதாய விழிப்புணர்வு"போன்றவைகளில் தாங்கள் சிறந்து விளங்குவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு நல் உதவி புரிவானாக ! ஆமின் !
Pro Blogger Tricks

Followers