.

Pages

Wednesday, July 31, 2013

வணக்கம்

ஒன்றை ஒன்று
தெளிவாய் அறிந்தும்
நன்றாய் வணங்க -அது
உருவ வணக்கம்.

வணங்கும் ஒருவன்
வணங்கபட ஒருவன்
இங்கே அவசியம் -இது
உருவ வணக்கம்.

ஒன்றது உருவம்
மற்றது அறியா
இருப்பினு மதுவும்
உருவ வணக்கம் !

எண்ண அசையும்
நினைக்க நடக்கும்
எண்ணமும் புலனும்
இதுவும் வணக்கம் !

இனிதது வாழ்வு
இதனை புரிய
மனிதன் மற்றவை
வணங்க படைத்தான்.

வல்லவனின் சொல்லது
வணக்கத்தி லனைத்தும்
வழுவாதிருக் கின்றன -அது
அரூப வணக்கம் !

பரத்தின் செயலில்
பலவது இருந்தும்
ஒன்றின் செயலாய்
அறிதல் ஞானம் !

நடக்க நினைக்க
காலது நடக்கும்
காண பார்க்கும் -இது
அரூப வணக்கம் !

அரூபம் எண்ணம்
உருவம் தன்னில்
நிகழும் செயலாய்
அதுதான் வணக்கம் !

வணங்கும் ஒருவன்
வணங்க 'அவனில்'
இணங்கி இழந்து
இல்லா திருப்பான் !

அவனல்லா திருப்பான் !
இவனில்லா திருப்பான் !
அவன்செயலா யிருப்பான் !
அருவுருவா யிருப்பான் !
ஒன்றாய் இருப்பான் !
இல்லாது இருப்பான் !
இரன்டற் றிருப்பான் ! -இது
அரூப வணக்கம் !

ஒன்றிலே உண்டானது
ஒன்றேயது பலவானது
உண்டாகும் முன்வொன்றே
நன்றேயிது அறிவீரே !

ஒன்றே இருப்பது
உருவா கிருப்பது
ஒன்றின் உருவம்
என்பது எதுவது ?

ஒன்றே இருந்து
பார்த்தல் கேட்டல்
தன்னில் நிகழ்தல் -இது
அரூப மன்றோ !

பலவா பழுத்து
மாவது முளைத்து
வேறா உணர்கிறது
உருவ மாகிறது !

ஒன்றது உருவம்
தானது இன்றி
தலைவன ரூவில்
சமைந்தது உருவம் !

கண்ணது பார்வை
உன்னது பார்வை
கண்ணைக் காண
கண்ணுரு தெரியும் !

ஒன்றாய் உணர்ந்தால்
உருவம் இல்லை !
பலதாய் உணர்ந்தால்
உருவங்க ளுண்டாம் !

வணங்க படைத்தேன்
வல்லவன் சொல்லில்
விளக்கம் கொள்ளுதல்
வகையிது வுமன்றோ !

அரூப வணக்கம் -அதில்
இரண்டு இல்லை !
ஒன்றில் உண்டு
ஒன்றாய் உண்டு !

ஆண்டவன் உண்டு
அடியவன் உண்டு
அத்தஹி யத்ததில்
அவனிவர் பேசுவர்.
வணங்கும் ஓன்று
வணங்கப்பட ஒன்று -இது
வணக்கம் அல்ல !
வழிபாடு அன்றோ !

உருவ வணக்கம்
அதுவே வழிபாடு !
அரூப வணக்கம்
அதுதானே வணக்கம் !

* அத்தஹியத்து - இஸ்லாமியர் வணக்கத்தில் இறைதூதர்(ஸல்) அவர்களும் இறைவனும் சம்பாசனை புரியும் ஒரு நிலை.

நபிதாஸ்

டர்... புர்... உஷ்... ஆபத்தா !?

ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, பலமான குறட்டை சத்தம் கேட்கும். ஆனால், அது அவருக்குக் கேட்காது. மற்றவர்களை இம்சைப்படுத்தும். “நீ குறட்டை விடுகிறாய்…’ என்று அவரிடம் சொன்னால், அதையும் உடனே மறுப்பார். எல்லா வீடுகளிலும் இந்தப் பிரச்னை உண்டு.

நாம் தூங்கும் போது, லேசான தூக்கத்தில் துவங்கி, ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்கிறோம். இப்படி தூங்கும் போது, வாயின் மேல் பகுதியில் உள்ள தசைகளும், தொண்டைப் பகுதியும் ஓய்வு எடுத்துக் கொள்ளும் வகையில், தளர்ந்து விடும். அப்போது, மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது, இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது.

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்னைகள் ஏற்படும் போதோ, சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது. கழுத்தைச் சுற்றி, அளவுக்கு அதிகமாக தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் வரை, குறட்டை விடுபவர்களை கிண்டல் செய்பவர்கள் அதிகம். குறட்டை ஏற்படுத்தும் குழந்தைகள் தொந்தரவு ஏற்படுத்துபவர்களாகக் கருதப்பட்டனர். இப்போது நிலைமை முற்றிலும் மாறி விட்டது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப்படுகிறது. ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது, நம் கண்கள் வேகமாக அசையும். அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று, வெளியேறும். இதற்கு, “அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு மணி நேரத்திற்கு, 15க்கும் மேற்பட்ட முறை, நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளி வருகிறது. குறட்டை விடும் போது திடீரென நின்று, திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால், நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதய அடைப்பு, திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

“அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ ஏற்படுவதற்கான அறிகுறிகள்:
அதிக சத்தம் கொண்ட குறட்டை, பகல் நேரத்தில் மயக்கமாக இருத்தல், இரவில் வியர்த்தல், காலையில் எழுந்ததும் தலைவலி. சாதாரண மயக்க நிலைக்கும், சோர்வுக்கும், குறட்டைக்கும் இது போன்ற ஆபத்தான உபாதைக்கும் “எப்ஒர்த்’ என்ற முறையில், வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.

கீழே உள்ள கேள்விக்கான பதில்களுக்கு, 0, 1, 2, 3 என மதிப்பெண்கள் கொடுங்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ளது எந்த மாதிரியான உபாதை எனக் கண்டுபிடித்து விடலாம்.

(0 – எப்போதும் இல்லை, 1 – குறைந்த அளவு வாய்ப்பு, 2 – போதுமான அளவு வாய்ப்பு, 3 – அதிக அளவு வாய்ப்பு).

1.எப்போதெல்லாம்தூக்கம்வருகிறது ?
அ) “டிவி’ பார்க்கும் போது.
ஆ) “மீட்டிங்’கில் உட்கார்ந்திருக்கும் போது.
இ) தொடர்ந்து ஒரு மணி நேரம் காரில் பயணிக்கும் போது.
ஈ) மதிய நேரத்தில் படுக்கும் போது.
உ) மதிய உணவுக்குப் பின், சும்மா அமர்ந்திருக்கும் போது.
ஊ) நீங்கள் அமர்ந்திருக்கும் கார், “டிராபிக் சிக்னலில்’ நிற்கும் போது.

மேலே உள்ள பதில்களுக்கு மதிப்பெண் கொடுத்து விட்டீர்களா?
இந்த மதிப்பெண்களைக் கூட்டும் போது விடை, 1 முதல் 9 வரை வந்தால், உங்களுக்கு இந்த நோய் ஏற்படவில்லை எனக் கொள்ளலாம்.
12 முதல் 16 வரை விடை வந்தால், இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கொள்ளலாம்.

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நம் பொருளாதார நிலை, மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் எம்.பி.ஏ., பட்டதாரிகளையும், மற்ற பட்டதாரிகளையும் பணிக்கு அமர்த்தி, கற்பனை செய்ய இயலாத அளவு சம்பளம் கொடுக்கிறது.

சொந்த தொழில் செய்பவர்கள், பொதுத் துறை ஊழியர்கள், இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது. இந்த புதிய வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். கவலை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள உயரதிகாரிகள், சாதாரண வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கின்றனர். உடற்பயிற்சி செய்ய அவர்களுக்கு நேரமே இல்லை. பள்ளிகளில் குழந்தைகள் விளையாட ஊக்குவிப்பதில்லை. மாலை நேரங்களில், “டிவி’ பார்க்கவே நேரம் சரியாகி விடுகிறது. உடல் பருமன் அதிகரித்த நிலை, தொற்று நோய் போல பரவி விட்டது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து, “ஸ்லீப் அப்னியே’ நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க, தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன. சற்று அதிக கட்டணம் வசூலித்தாலும், உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதா என்பதை, அவர்கள் கண்டறிந்து விடுவர்.

காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம். டான்சில், அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

ஆல்கஹால் அருந்துபவர்கள், போதை மருந்து சாப்பிடுபவர்களின் மூளையில், மூச்சு மையம் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். தங்கள் பழக்கத்தை அவர்கள் நிறுத்தி விட்டால், குறட்டை, “ஸ்லீப் அப்னியே’ நோயிலிருந்து மீண்டு விடலாம்.

மீதமுள்ள 70 சதவீதத்தினர், உடல் பயிற்சி மற்றும் சீரான உணவு முறை ஆகியவற்றை மேற்கொண்டு, உடல் பருமனைக் குறைத்தால் போதும்; இப்பிரச்னைகளிலிருந்து விடுபட்டு விடலாம். உடல் பருமனுடன் உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன், ஆபத்தான அளவில் குறைந்து காணப்படும். மூக்குக் கவசக் கருவி மூலம், தொடர் நேர் அழுத்த சுவாசம் (கன்டின்யுவஸ் பாசிட்டிவ் பிரெஷர் வென்டிலேஷன்) மேற்கொண்டால், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அதிகரிக்கும்.

குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குத் திருப்பி படுக்க வைத்தாலே, குறட்டை ஒலி குறையும். தினமும் 45 நிமிட மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடைபயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால், இளவயது பருமனைக் குறைக்கலாம்.

நன்றி: என் மருத்துவ தோழர். 
பரிந்துரை
'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Monday, July 29, 2013

[ 2 ] வட்டியில்லா வங்கி இந்தியாவில் சாத்தியமா !?

இந்தத்தொடரை ஆழ்ந்து படித்துவரும் அன்பர்களுக்கு ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். இந்த அத்தியாயத்தில் நான் பகிர இருக்கும்  தகவல்கள் யாவும் இஸ்லாமிய வங்கி முறைகள் பற்றி  நூல்கள் மற்றும் இணையத்தில் திரட்டிய தகவல்களின் மொழி பெயர்ப்பு ஆகும். கூடியவை நன்றாகவே மொழிபெயர்த்து எனது வழக்கமான தமிழ்நடையில் தர முயற்சித்து இருக்கிறேன். இஸ்லாமியப் பொருளாதார இயலில் ஆர்வமுள்ள தனிப்பட்டவர்களுக்கும் மாணவர்களுக்கும் இதில் குறிப்பிடப் போகும் தகவல்கள் பயனுள்ளவைகளாக இருக்குமென்று நம்புகிறேன். பெரும் உழைப்பின் பின்னணியில் திரட்டப் பட்ட  இந்தத்தகவல்களை உங்களின் அன்புக் கரங்களில் சமர்ப்பிக்கிறேன்.

நவீன பொருளாதார இயலின்  வளர்ச்சி -மற்றவர்களோடு போட்டி போட்டு வாழவேண்டிய சூழ்நிலை - அதே நேரம்  , அல்லாஹ் வகுத்த வழிகளில் இருந்தும் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழும் வழிகளில் இருந்தும் நெறி பிறழாமல் இந்த சமுதாயத்தை கொண்டு செல்லவேண்டிய நிலை சமூகத்தின் கல்வியாளர்களுக்கும் மார்க்க அறிஞர்களுக்கும்உதித்த எண்ணம்  தந்த உந்து சக்தியின் காரணமாக இஸ்லாமிய வங்கி முறையும் பலவித ஆராய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் பிறகு இம்முறைகள் சமுதாயத்துக்கு அறிமுகப் படுத்தப் பட்டன.

இதை என் இப்படி “பம்மி பம்மி” சொல்ல நேரிடுகிறது என்றால் நமது கை விரல் நகங்களில் வளர்ந்துள்ள நகத்தை வெட்டினாலே இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று வழக்குக் கூண்டில்  நிறுத்தப்படும்  ஒரு யுகத்தில் வாழவேண்டிய சூழ்நிலை. நான் சொன்னால் வழிகேடில்லை அதையே நீ சொன்னால் வழிகேடு என்று வழக்குரைக்கும்  மாந்தர்களின் நடுவே நடுநிலையில் சில நடக்கும் செய்திகளை நெறி பிறழாமல் சொன்னாலும் வடையைப் பார்க்காமல் வடையில் உள்ள துளையைப் பார்ப்பவர்கள் துரதிஷ்டவசமாக நம்மிடையே உலவுவதால் இந்த முன்னுரை தேவைப்படுகிறது.  வாருங்கள் நமது வேலையைப் பார்ப்போம்.

இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பின் பல முஸ்லிம் நாடுகளும் முஸ்லிம்கள்           சிறு பான்மையாக வும்  பெரும்பான்மையாகவும்  வாழ்ந்த நாடுகளும்  சுதந்திரம் பெற்றன. இதைத் தொடர்ந்து மற்ற நவீன கல்விகளைப் போல பொதுவான பொருளியல் கல்வியின் தேவை உணரப்பட்டது. பொதுவான பொருளியலில் போதுமான இஸ்லாமிய அடிப்படையின் சாயல் இல்லாததால் இஸ்லாமியப் பொருளாதாரம் என்கிற கோட்பாடுகள் வரையருத்துத் தேவைப்பட்டன. ஆகவேதான் ஷரியா மற்றும் சுன்னாவின் அடிப்படையில் “இஸ்லாமியப்  பொருளியல்” எனும் எண்ணக்கரு தோற்றம் பெற்றது.

முஸ்லிம்கள் , ஆங்கிலேயர் , பிரெஞ்ச, போர்த்துகீசியர் போன்ற  பிற மத ஏகாதிபத்தியவாதிகளின் அதிகாரத்திற்குள் இருந்த காலத்தில் தம் பொருளாதார நடவடிக்கைகளை இஸ்லாத்தின் வரையறைக்குள் நின்று மேற்கொள்ள முடியாதிருந்தனர். வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளியல் கோட்பாடு ஏனையோர் போன்று முஸ்லிம்கள் மீதும் திணிக்கப்பட்டிருந்தது. தொழுகை, நோன்பு போன்ற இபாதத்களை ஓரளவேனும் சீராக செய்யக்கிடைத்த முஸ்லிம்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இஸ்லாமிய விதிமுறைகளையும், விழுமியங்களையும் பேணுவது மிகச் சிரமமாக இருந்தது. இதுவே ஏகாதிபத்திய கெடுபிடியிலிருந்து சுதந்திரம் பெற்ற முஸ்லிம்களை தனியான இஸ்லாமிய பொருளியல் பற்றி சிந்திக்கத் தூண்டியது.

குர்ஆனும், ஸுன்னாவும் பொருளியலின் அடிப்படைகளைக் கூறியிருந்தன. அவற்றுக்கு வியாக்கியானம் செய்த இமாம்கள் பல்வேறு பொருளாதார கருத்துக்களை முன்வைத்தார்கள். இஸ்லாமிய சட்டத்துறை (ஃபிக்ஹ்)க்கு பங்களிப்புச் செய்த  இமாம்கள் பல்வேறு பொருளியல் கோட்பாடுகளை தனித்தனிப் பிரிவுகளாக சமூகத்தில் முன்வைத்தனர்.

இபாதாத் (வணக்க வழிபாடுகள்), முஆமலாத் (கொடுக்கல் வாங்கல்கள்), முனாக்கஹாத் (விவாகங்கள்), ஜினாயாத் (குற்றங்கள்) என நாற்பெரும் பிரிவுகளாக ஃபிக்ஹை வகைப்படுத்தி இரண்டாம் இடத்தை இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளுக்கு வழங்கினர்.

வாங்கல், விற்றல், பண்டமாற்று, தவணை அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல், முற்பணம் செலுத்தி வாங்கல், அடகு வைத்தல், இரவல் கொடுத்தல், கடன், பங்குடைமை, முதலீடு, குத்தகை இப்படி பல்வேறு தலைப்புக்களில் இமாம்களின் மார்க்க அடிப்படையிலான  ஆய்வுகளும், கருத்துக்களும், தீர்ப்புக்களும் சட்டத்துறை நூற்களில் இடம் பிடித்துள்ளன. எனினும் இவை தனியொரு கலையாக அல்லது ஒரு அறிவுத்துறையாக இஸ்லாமிய பொருளியல் எனும் பெயரில் அறிமுகம் பெற்றிருக்கவில்லை. அவர்களது காலப்பகுதி இதற்கான தேவையை வேண்டி நிற்கவுமில்லை.
நாளுக்கு நாள் வளர்ந்துவரும்  உலகம்,  நுண்கலை அறிவுத்துறைகளிலும் புதுப்புதுத் தத்துவங்களைக் கண்டுபிடித்ததன் விளைவாக சில வேளைகளில் முற்காலத்தில் ஓர்அறிவுத்துறையின் உட்பிரிவாக இருந்த ஒரு பகுதி தனிப்பெரும் அறிவுத்துறையாக பரிணமித்திருப்பதை நாம் காணலாம். உதாரணமாக பொது மருத்துவம் என்கிற துறை அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் நிபுணர் கல்வியை அதற்கான பட்டங்களை வழங்கத்தொடங்கியது.  அது போன்றே இஸ்லாமிய சட்டத்துறையின் உட்பிரிவாக இருந்த பொருளியல் , காலத்தின் தேவைக்கேற்ப இஸ்லாமிய பொருளியலாக பெயர்  சூட்டப்பட்டு ஒரு தனி அறிவுத்துறையாக உருவம் பெற்றது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பொருளாதார ரீதியில் பெரும்  பாதிப்புக்களை சந்தித்த நாடுகள் தம்மை பாதிப்பிலிருந்து மீட்டுக் கொள்ளும் பொருட்டு   முதலீடுகள் செய்வது பற்றி சிந்திக்கவும் ஆரம்பித்தன. இத்தருணத்தில் இலாப நஷ்டத்தை மூலதனத்தின் விகிதத்திற்கேற்ப முதலீட்டாளர்கள் பகிர்ந்துகொள்ளும் இஸ்லாமிய கூட்டு முதலீட்டு முறையை சுதந்திரம் பெற்ற முஸ்லிம் நாடுகளுக்கு அறிமுகம் செய்து வைப்பதில்  அறிஞர்கள் ஆர்வம் காட்டினர். மிக முக்கியமாக வழிகேடர்களின் வழிமுறைகளை தடுத்து நிறுத்தவும், நமக்கு ஏற்ற முறைகளை நாமே உருவாக்கிக் கொள்ளவும்  வேண்டுமென்ற கருத்தில்  இதன் மூலம் நடைமுறையிலுள்ள வட்டியடிப்படையிலான வங்கிகளின் நடவடிக்கைகளுக்கும் வட்டியடிப்படையற்ற ஒரு கூட்டு முதலீட்டு முறையை அறிமுகம் செய்து வைத்தனர்.

அறிஞர்களான அன்வர்குறைஷி, நயீம் சித்தீக்கீ, மஹ்மூத் அஹ்மத், முஹம்மத் ஹமீதுல்லாஹ் ஆகியோரே 1940இன் பிற்பகுதிகளில் இது பற்றி முதன் முதலில் பேசியோராவர். இவர்களைத் தொடர்ந்து 1950களில் இச்சிந்தனைக்கு மார்க்க அறிஞர்களால் பரவலாக உயிர் கொடுக்கப்பட்டது.  பேரரிஞர்முஹம்மத் ஹமீதுல்லாஹ் அவர்களின் பங்களிப்பு இவ்வகையில் நீண்டதாகும். 1940இலும், 1955இலும், 1957இலும், 1962இலும் இது தொடர்பில் அவர்எழுதினார்.  முதன் முதலில் இது பற்றி ஒரு தனியான நூல் அறிஞர் முஹம்மத் உவைஸ் என்பவரால் 1955இல் எழுதப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்துல்லாஹ் அல்-அரபி, நஜாத்துல்லாஹ் சித்தீக்கி, அல்-நஜ்ஜார், பாக்கிர்அஸ்-ஸத்ர்ஆகியோரின்  நூற்கள் 1960களின் பிற்பகுதியில் 1970களின் ஆரம்பப் பகுதியில் வெளிவந்தன.

~ இது வரை காலமும் அறிஞர்பெருமக்களின் தனிநபர்களின்  சிந்தனையாக விளங்கிய இஸ்லாமிய பொருளியல் 1970களில் நிறுவனமயப்படுத்தப்பட்டது        ( Organized status). 

~ இதன் ஓர்அங்கமாக இது பற்றி விவாதிக்க,  கராச்சியில் 1970இல் முஸ்லிம் நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு நடைபெற்றது. 

~ 1976இல் இஸ்லாமிய பொருளியல் சம்பந்தமான முதல் சர்வதேச மாநாடு மக்காவில் கூட்டப்பட்டது.  இம்மாநாட்டில் 200க்கும் மேற்பட்ட பொருளியல் அறிஞர்கள், சமூகவியலாளர்கள் உலகின் பல பாகங்களிலிருந்தும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. பல வகையிலும் திருப்புமுனையாக அமைந்த இம்மாநாடு இஸ்லாமிய பொருளியல் பற்றி மேலும் பேசவும், எழுதவும், உயர்மட்ட நிலையில் விவாதிக்கவும் வழிகோலியது. 

~ பின்னர் 1977இல் சர்வதேச பொருளாதார மாநாடு லண்டனில் நடைபெற்றது. 

இம்முயற்சிகள் யாவும் வெறும் எண்ணக்கருவாக இருந்த இஸ்லாமிய பொருளியலுக்கு ஒரு வடிவத்தை கொடுக்க ஆரம்பித்தன. இஸ்லாமிய பொருளியல் கோட்பாடுகளை அனுசரித்து தனித்தியங்கும் வங்கிகள் தோற்றம் பெற்றன.

* இஸ்லாமிய  வங்கிகளில் முன்னோடி வங்கியாக அமைந்தது 1972இல் எகிப்தில் நிறுவப்பட்ட Nasser Social Bank. 

* பின்னர் 1975இல் Dubai Islamic Bank நிறுவப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்குழுவொன்று இதனை நிறுவியது. 

* பின்னர் 1977இல் Faisal Islamic Bank எகிப்திலும், சூடானிலும் அமையப்பெற்றது. 

* இதே ஆண்டில் குவைத் அரசாங்கம் Kuwait Finance Houseஐ உருவாக்கியது. 

* தற்போது 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பொருளாதார கோட்பாடுகளை பேணி நடக்கக்கூடிய இவ்வாறான வங்கிகள் இயங்கிவருகின்றன. பெரும்பாலானவை முஸ்லிம் நாடுகளில் அமைந்துள்ளன. சில மேற்கு ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், லக்ஸம்பேர்க், சுவிஸர்லேன்ட், யுனைடட் கிங்க்டம் ஆகிய நாடுகளிலும் அமையப்பெற்றுள்ளன. இத்தகைய வங்கிகள் தனியார்வங்கிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

* 1981ஆம் ஆண்டு பாகிஸ்தானும், ஈரானும் வட்டியில்லா வங்கி முறையை சட்ட ரீதியாக அறிமுகம்  செய்தன.

இஸ்லாமிய பொருளியல் உதயத்தின் மூலம் பல்வேறு முன்னேற்றகர நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அவையாவன:-

1. சுய அறிவுத்துறை :-
தனியான இஸ்லாமிய பொருளியல் நூற்களும், சஞ்சிகைகளும் வெளிவரும் அளவுக்கு ஒரு தனிப் பெரும்  அறிவுத்துறையாக இஸ்லாமிய பொருளியல் பரிணமித்துள்ளது. வேறு பல சஞ்சிகைகள் இத்தலைப்பில் கட்டுரைகள் எழுதிவருகின்றன. பாரம்பரிய பொருளியல், முகாமைத்துவம், வர்த்தகம், கணக்கியல் பற்றி எழுதுகின்ற ஆய்வு சஞ்சிகைகள் இத்துறை பற்றி ஆய்வுக் கட்டுரைகளை இடம்பெறச்செய்கின்றன. Palgraves Dictionary of Money and Finance தற்பொழுது இஸ்லாமிய வங்கி முறை பற்றி ஒரு தனிப் பகுதியையே ஒதுக்கியுள்ளது.

2. அறிவு முயற்சிகள்:-
பல அறிஞர்கள் இத்துறையில் ஆழமான ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டு ஆக்கபூர்வமான ஆக்கங்களை சமூகத்திற்கு நல்கியதன் மூலம் இத்துறைக்கு அபார அறிவு முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இத்யாதி முயற்சிகள் பற்றி முஹம்மத் அன்வர்கான் மூன்று வால்யூம்களில் தொகுத்துள்ளார்.

3. பல்கலைக்கழக பாட  நெறிகள்:-
பல்வேறு பல்கலைக் கழங்களிலும்  பெரும் கல்லூரிகளிளும் பாடத்திட்டங்களில்   ஒரு முக்கிய இடத்தை இஸ்லாமிய பொருளியல் பெற்றுள்ளது. மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகமும், இஸ்லாமாபாத்திலுள்ள இஸ்லாமிய பொருளியல் சர்வதேச நிறுவனமும் இத்துறையில் தனியான பட்டம் தரும் பாடப்பிரிவுகளை   வழங்கிவருகின்றன. பாகிஸ்தான், ஈரான், சூடான், சவூதி அரேபியா இன்னும் பல இஸ்லாமிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களும் பட்டப்படிப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவே இத்துறையை ஆக்கியுள்ளன. யுனைடெட் கிங்க்டத்திலுள்ள Loughborugh University இத்துறையில் தனி நிகழ்ச்சியொன்றை தன் பாடபிரிவில்  உட்புகுத்தியுள்ளது. லன்டனில் அமையப்பெற்றுள்ள International Institute of Islamic Economics and Insurance தொலைக் கல்வி டிப்லோமா நிகழச்சியின்  நெறியொன்றை நடத்துகின்றது. (மலேசியாவில் உள்ள பல்கலைக் கழகத்தின் மூலம் பயின்று இஸ்லாமிய வங்கி முறைகளில் பட்டம் பெறும் முயற்சிகளை எனது நண்பர் வரலாற்றுப் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் நெறிப்படுத்தி வருகிறார்கள்.  )

4. பல்கலைக்கழக ஆய்வுகள் :-
பெரும் எண்ணிக்கையிலான சர்வகலாசாலைகள் Ph.D க்கான ஆய்வுகளை இஸ்லாமிய பொருளியல், அதன் உப பிரிவுகளை தலைப்பாகக் கொண்டு எழுத அனுமதிக்கின்றன. இவ்வாறு நூற்றுக்கணக்கான ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.

5. இஸ்லாமிய பொருளியல் ஆய்வு நிலையங்கள்:-
இஸ்லாமிய பொருளியல் ஆய்வு நிலையங்களின் வருகையும், இஸ்லாமிய பொருளியல் துறையின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். ஜித்தா இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் கீழ் இயங்கிவரும் Islamic Research and Training Institute இவற்றுள் முக்கியமானது. நூற்றுக்கணக்கான நூற்களை இது வரை இஸ்லாமிய பொருளியல் பற்றி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் அமைந்துள்ள International Institute of Islamic Thought இத்துறைக்கு அளப்பரிய பங்களிப்பு செய்து வரும் மற்றொரு அமைப்பாகும் . அரபிலும், ஆங்கிலத்திலும் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வெளியிட்டும், கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் நடத்தியும் பணிபுரிந்து வருகின்றது. Association of Muslim Social Scientists உடன் இணைந்து இந்நிலையம் வெளியிட்டு வரும் American Journal of Islamic Social Sciences இன் ஒவ்வொரு இதழும் பெரும்பாலும் இத்துறை சார்ந்த கட்டுரைகளை தாங்கி வருவது கவனிக்கப்படவேண்டியது.

6. இஸ்லாமிய பொருளியல் தகவல் மையங்கள்:-
இஸ்லாமிய வங்கி முறை, முதலீடு, பொருளியல் தொடர்பான தகவல் மையம் ஒன்றை ஜித்தா இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி ஏற்படுத்தியுள்ளது. இத்தகவல் மையம் இஸ்லாமிய வங்கி தகவல் முறை, இஸ்லாமிய பொருளியல் பற்றிய நூற்கள், முஸ்லிம் நிபுணர்தகவல் முறை, தொடர்புவழி விபரக்கொத்து போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

7. சட்டத்துறை நூற்கள்:-
இஸ்லாமிய பொருளியல் துறையை மையப்படுத்தி சட்டத்துறை நூற்கள் வெளிவந்துள்ளமை மற்றொரு அம்சமாகும். Fiqh Academy of the Organization of Islamic Countries, Fiqh Academy of India, Islamic Ideology Council of Pakistan, Association of Islamic Banks ஆகிய நிறுவனங்கள் இத்துறை பற்றிய மார்க்கத் தீர்ப்புகள் தழுவிய நூற்களை வெளியிட்டுள்ளன. குவைத்தின் மார்க்க விவகார வக்ஃப் அமைச்சு வெளியிட்டுள்ள ஃபிக்ஹ் கலைக்களஞ்சியம், இஸ்லாமிய பொருளியல் சார்ந்த பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது. லன்டனிலுள்ள Institute of Islamic Banking and Insurance இது தொடர்பில் இரு கலைக்களஞ்சியங்களை இது வரை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு கலைக்களஞ்சியத்திலும், இஸ்தன்பூலில் வெளியிடப்பட்டுள்ள கலைக்களஞ்சியத்திலும் இஸ்லாமிய பொருளியல் தொடர்பான விவகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

8. கணக்குத் தணிக்கை  அமைப்புகள்:- 
இஸ்லாமிய பொருளியல் வளர்ச்சியின் ஓர்அங்கமாக இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து கணக்குப் பரிசோதனை அவை  ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக Accounting and Auditing Organization for Islamic Financial Institutions உருவாக்கப்பட்டு பஹ்ரைனில் சிறப்பாக இயங்கிவருகின்றது. இந்நிறுவனம் மிகத் திறமைமிக்க துறைசார்ந்தோரைக் கொண்டு கணக்குப் பரிசோதனை அளவீடுகள் இஸ்லாமிய வங்கிகளுக்கும், முதலீட்டு நிறுவனங்களுக்கும் ஏற்றதாய் அமைத்துள்ளது. 1994இல் அது நூல் வடிவம் பெற்று பின்னர் 1997இல் புதிய பல தலைப்புக்களுடன் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.  இதே வேளை லண்டனிலுள்ள Institute of Islamic Banking and Insurance இஸ்லாமிய வங்கிகளுக்கான கணக்குப் பரிசோதனை முறை நூலொன்றை வெளியிட்டுள்ளது.

9. துறைசார்ந்தோர்அமைப்பு:-
இத்துறையின் ஒரு வளர்ச்சியாக முஸ்லிம் பொருளியலாளர்களைக் கொண்ட ஓர்அமைப்பு International Association of Islamic Economics எனும் பெயரில் அமைக்கப்பட்டு காலத்திற்குக் காலம் கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் ஒழுங்கு செய்வதில் ஈடுபட்டு வருவதோடு, ஆய்வு பத்திரிக்கை  ஒன்றையும் வெளியிட்டு வருகின்றது.

10. கருத்தரங்குகள், மாநாடுகள்:-
ஒவ்வொரு வருடமும் இத்துறைசார்கருத்தரங்குகளும், மாநாடுகளும் உலகலாவிய ரீதியில் ஏற்பாடு  செய்யப்பட்டு மேலாய்வுகளுக்கு வாயில்கள் திறந்து விடப்படுகின்றன. பிரச்சினைகளுக்கு முடிவு காணப்படுகின்றது. சந்தேகங்களுக்கு தெளிவு காணப்படுகின்றது.

11. இஸ்லாமிய வங்கி முறையும், முதலீடும்:-
இஸ்லாமிய பொருளியல் எண்ணக்கரு தோற்றம் பெற்றதன் பயனாக இஸ்லாமிய முதலீட்டு முறைகளுடன் கூடிய வங்கி முறைகள் அமுலுக்கு வந்துள்ளன. நூற்றுக்கணக்கான முதலீட்டு நிறுவனங்களும், வங்கிகளும் தோன்றியுள்ளதுடன் நாளுக்கு நாள் உலகின் பல பாகங்களிலும் இத்தகைய நிறுவனங்கள் தோற்றம் பெற்ற வண்ணம் இருக்கின்றன.
இஸ்லாமிய பொருளியலின் எண்ணக்கரு தோற்றம், அதற்கு உரு கொடுக்கப்பட்டமை, இதனால் ஏற்பட்ட பல்வேறு நன்மைகள் பற்றியெல்லாம் இது வரை பார்த்த  அதே வேளை இவை  பற்றிய ஒரு மதிப்பீட்டையும் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள், வங்கிகளின் நடவடிக்கைகள் குறித்தும், உலகப் பொருளாதாரத்தின் மீது அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் அறிஞர்கள் மதிப்பீடு செய்தனர். இதன் விளைவாக 1984இல் லண்டனில் ஒரு மாநாடு ஏற்பாடு  செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1986இல் வியன்னாவிலும், தெஹ்ரானிலும்,       வாஷிங்டனிலும், ஜெனீவாவிலும் இது குறித்த மாநாடுகள் நடைபெற்றன. பின்னர் 1988இல் லண்டனிலும், 1992இல் இஸ்லாமாபாத்திலும் மாநாடுகள் நடைபெற்றன. அதே வேளை இக்காலப்பகுதியில் பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டும், பல்கலைக்கழக  ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், நூற்கள் வெளியிடப்பட்டும் உள்ளன. இத்தகைய மதிப்பீட்டுப் பணியில் ஈடுபட்ட அறிஞர்களுள் முஹம்மத் அக்ரம் கான் சிறப்பாக குறிப்பிடத்தக்கவர்.
இத்தகைய மதிப்பீடு இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களிடம் சில குறைகளுக்கான  நீக்கங்களை  வேண்டி நிற்கின்றன. அவையாவன:

1. குறுகிய பார்வை:-
இது வரையும் இஸ்லாமிய பொருளியல், அதன் அகன்று விரிந்த உட்பிரிவுகள் உள்ளடக்கப்படாமல், முராபஹஹ், முஷாரக்கஹ், முழாரபஹ், இஜாரஹ் போன்ற சிலவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்டு எழுதப்பட்டும், பேசப்பட்டும் வருகின்றது. இதனால் இஸ்லாமிய பொருளியல் என்பது வட்டியில்லா வங்கி முறை என அர்த்தம் கொள்ளப்படுகின்றது. பாரம்பரிய வட்டி வங்கிகளுடன் தொடர்பு உடைய  முஸ்லிம் செல்வந்தர்களை வட்டியில்லா அமைப்பின் பக்கம் திருப்பும் உடனடி ஆரம்ப முயற்சியாகவே இது அமைந்துள்ளது. இதனால் சில தனவந்தர்கள் மாத்திரம் வட்டி பாவத்திலிருந்து விடுபட்டனரே தவிர நடுத்தர மக்களும், ஏழைகளும் அதிலிருந்து இன்னும் விடுபடவில்லை. எனவே இஸ்லாமிய பொருளியல், அதன் உட்பிரிவுகள் முழுமையாக புரிந்துகொள்ளப்பட்ட நிலையில் இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. இதற்கான ஆய்வுகள் அறிஞர்களால் தொடர்ந்து  செய்யப்பட வேண்டும். சமூகத்தின் சகல நிலையில்உள்ளவர்களுக்கும் இஸ்லாமிய பொருளியல் ஏற்புடையது, நடைமுறைச் சாத்தியமானது என்பது அப்பொழுது மாத்திரமே நிரூபிக்கப்படும்.

2. முறை பற்றிய குழப்பம்:-
இஸ்லாமிய பொருளியல் என்பது முற்றிலும் வித்தியாசமான தனிப்பெரும் தத்துவங்களையும், நெறிமுறைகளையும் உள்ளடக்கியதாகும். இது பற்றிய ஆழமான அறிவில்லாதோர்மூலம் இஸ்லாமிய முதலீட்டு அமைப்புக்களைக் கொண்டு நடாத்த முடியாது. பெரும்பாலான இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களில் உயர்மட்டம் முதல் அடி மட்டம் வரையிலான சகல ஊழியர்களும், நிர்வாகிகளின் அமைப்பு  கூட இத்துறையில் போதிய கல்வியற்ற  நிலையிலுள்ளனர். குறிப்பாக முடிவெடுக்கும் அதிகாரமுள்ளோர் வட்டி அடிப்படையிலான பாரம்பரிய வங்கிகளில் வேலை  பார்த்து அந்த சிந்தனைகளுடனும், பயிற்சிகளுடனும் இருப்பவர்கள். எனவே இஸ்லாமிய பொருளியல் பற்றி அறை குறை ஞானத்துடனும் பாரம்பரிய வங்கிகளின் அறிவு, பயிற்சிகளுடனும் இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் இயக்கப்படுவதால் பெரும்பாலான கொடுக்கல் வாங்கல்கள் அவர்களுக்கும் தெளிவில்லாமல், வாடிக்கையாளர்களுக்கும் தெளிவில்லாமல் நடந்தேறுகின்றன. உதாரணமாக: இஜாரஹ்வின் அடிப்படையை தெரிந்த நிலையில், அதன் உட்பிரிவுகள் பற்றிய தெளிவு இல்லாமல் நடைபெறும் இஜாரஹ் உடன்படிக்கைகள் பல. இதன் காரணமாக இத்தகைய உடன்படிக்கைகள் பல தவறுகளை  சுமந்த வண்ணம் நடைபெறுகின்றன. இதன் விளைவாக சில பொது நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கு மிடையே பல பிரச்சினைகள் எழுகின்றன. எனவே இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களைச் சார்ந்தோர்இஸ்லாமிய பொருளியல் தொடர்பாக நன்கு அறிவும், பயிற்சியும் முஸ்லிம் மார்க்க  அறிஞர்களால் பெறவேண்டியுள்ளனர்.  இந்த நிறுவனங்களில்  பணியாற்றுவோர் மார்க்க கல்வியைக்  கற்றுத் தேர்வதை கட்டாயமாக்க வேண்டும்.

3. ஷரீஆ விதிகளைப் பேணுவதில் அசிரத்தை:-
முராபஹஹ், முழாரபஹ், முஷாரக்கஹ், இஜாரஹ் போன்ற உடன்படிக்கைகள் சில பல வேளைகளில் ( பிற மத) ஊழியர்களின் அசிரத்தை காரணமாக அவற்றின் ஷரீஆ விதிகளில் சில பேணப்படாத நிலையில் நடந்தேறுகின்றன. ஆவணங்களில் கையொப்பம் இடுவதன் மூலம் இவ்வுடன்படிக்கைகள் பரிபூரணம் அடைவதில்லை. ஒவ்வோர் உடன்படிக்கையும் அதற்குரிய சகல விதிகளும் முழுமையாக சரியாக பின்பற்றப்பட்ட நிலையில் நடைபெறுவதை நிறுவனங்கள் உறுதி செய்தல் வேண்டும். இல்லையேல் நரகத்தில் இடத்தைப் பதிவு செய்ய நேரிடும்.

4. அறிவூட்டல் போதாமை:-
இஸ்லாமிய பொருளியல் பற்றி குறிப்பாக முஸ்லிம்களுக்கும், பொதுவாக சகல மதத்தவர்களுக்கும் அறிவூட்டப்பட்டமை போதாத நிலையிலுள்ளது. இதனால் இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் நடைமுறைப் படுத்திவரும் முழாரபஹ், முராபஹஹ், முஷாரக்கஹ் இஜாரஹ் போன்றவை கூட சமூக மட்டத்தில் பிழையாக விமர்சிக்கப்படுகின்றன. பாரம்பரிய வங்கிகளின் வட்டி வீதத்தை விட இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களின் வட்டி வீதம் அதிகம் என்றெல்லாம் விமர்சிக்கப்படுகின்றது. எனவே மக்களை அறிவூட்டுவதையும் ஒரு முக்கிய பணியாக தமது நிகழ்ச்சி நிரலில் ஆக்கிக்கொள்வது முதலீட்டு நிறுவனங்கள் முன்னுள்ள ஒரு முக்கிய பொறுப்பாகும்.

எந்தவொரு அறிவுத்துறையும் காலத்துக்குக் காலம் வளர்ச்சியடையாமலில்லை. இஸ்லாமிய பொருளியலும் இதில் விதிவிலக்கல்ல.  தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விமர்சனங்கள் செய்யப்பட வேண்டும். இப்பொருளியல் தத்துவங்களில் பலவற்றுக்கு உரு கொடுக்கும் நிறுவனங்களாக இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் திகழ வேண்டும். அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புக்களை அவை ஏற்க வேண்டும். ஆக்கபூர்வ விமர்சனங்களை புறந்தள்ளாமல் , அவை தம் வளர்ச்சிக்கு உந்து சக்தியென உள்வாங்கி தம்மை செப்பனிட்டுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வைப் பயந்த நிலையில் ஒவ்வோர் நடவடிக்கையும்  உடன்படிக்கையும் நடைபெற வேண்டும்.

மார்க்கக் கல்வியின் ஒரு அம்சமாக பொருளாதாரப் பாடங்களும் மார்க்க அடிப்படையாளான பொருளாதார கல்விக்கூடங்களும் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய வங்கி மற்றும் முதலீட்டுத்துறையில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் பிரிவுகளும் தொடங்க குரல் எழுப்பவேண்டுமென்பதே இந்த அத்தியாயத்தை நான் நிறைவு செய்யுமுன் வைக்கும் கோரிக்கை.  மேலும் இஸ்லாமிய வங்கி மற்றும் முதலீடுகள் பற்றி விளக்கமான தனித்தொடர் எழுதவேண்டுமென்று சில நண்பர்கள் கேட்டிருப்பதால் விளக்கமான மற்றொரு தொடரைத் தர வல்ல இறைவன் உதவிடுவானாக !
'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

குறிப்பு : அதிரையின் பிரபல எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்களால் 'இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்' என்ற தலைப்பில் 'அதிரை நிருபர் பதிப்பகம்என்ற பிரதான இணையதளத்திலிருந்து நெடுந்தொடராக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நெடுந்தொடர் அனைவரின் வரவேற்பையும் பெற்று வருவது குறிப்பிடதக்கது.

Saturday, July 27, 2013

[ 5 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' தொடர்கிறது...

முதல் கட்ட வளைகுடாவிலிருந்து வந்தவர்களிடம் பெற்ற தகவல் இளைஞர் கூட்டத்தை ஒரு கனவு பூமியாக  பணம் கொழிக்கும் பூமியாக பார்க்க வைத்தது எப்படியாவது வளைகுடா நாடுகளுக்கு செல்ல  வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது. இதன் விளைவாக பல இளைஞர்கள் பம்பாய் பயணம் செல்ல வைத்தது.

அங்கு பலமாதங்களாக வளைகுடா செல்ல முயற்சி செய்தவர்கள், தனக்கு வாய்ப்பு கிடைக்காத தருவாயில், விசா ஏஜெண்டுகளாக மாறி பயணம் செல்பவர்களுக்கு வழிகாட்டியாக பயணம் செய்ய உதவிடுவர் [ பம்பாய் அனுபவங்கள் பற்றி இடையிடையே சுவையான அனுபவங்களை தருகிறேன் ] இப்படி செல்லும் நம்மவர், ஒப்பந்தம் அடிப்படையில் வேலைக்கு செல்வதில்லை. ஏதாவது ஒரு கம்பெனியில் ஊழியராக அல்லது அரபியின் வீட்டுக்கு கார் ஓட்டுநராக மற்றும் வீட்டு வேலை செய்பவராக  செல்வர். இதன் மூலம் நம்மவரின் பார்வை விசாலமானது. பல அரபிகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு. அவர் தம் உறவினர்களுக்கு விசா எடுக்க எதுவாக அமைந்தது.

வெளி நாட்டிலிருந்து விடுப்பில் வருபவர்களிடம் உற்றார் உறவினர் தன் வீட்டு பிள்ளைகளுக்கு அரபு நாடுகளுக்கு விசா எடுக்க வேண்டுவர்.

அது போன்ற நிகழ்வை இங்கு விளக்க விரும்புகிறேன்...

ஒரு மூதாட்டி தனது பேரனுக்கு  ஒருவரிடம்  விசா   ஏற்பாடு செய்யச் சொல்கிறார். என் பேரன் சரியா படிக்கல, சும்மா ஊர் சுற்றுகிறான் ஏதாவது ஒரு வேலை அரபு நாட்டில் கிடைக்குமாயின் எனது பேரனுக்கு ஏற்பாடு செய்து உதவி செய்தால்அது எனது  குடும்பத்திற்கு செய்யும்  பெரிய உதவியாய் இருக்கும் என்று கோரிக்கை வைத்தார்.

வீட்டு வேலை பார்ப்பானா ? உங்கள் பேரன் என கேட்டார்...

என்ன வேலையாக இருந்தாலும் பரவாயில்ல தம்பி என்றார்.

பேரனுக்கு விசாவும் தயாராகி பயணம் மேற்கொள்கிறான் அந்த இளைஞன் வெட்டிப்பேச்சு, கூட்டாளிகளிடம் கும்மாளம் என்று அலைந்த அந்த இளைஞன், வயதான முதியவர்களை என்ன பெருசு !? என்ற தோரணையில் பேசி பழகிய அவனுக்கு, வீட்டு வேலை பார்க்க வேண்டும். வயதான அரபிக்கு உதவியாய் இருக்க வேண்டும். அந்த கிழட்டு அரபியோ விவரமானவர் அந்த இளைஞனோ  ஊர் சுற்றி திரிந்தவன் குறும்பு குறையாத நிலை அரபி ஏதாவது உதவி நாடி அழைப்பார்.

என்னடா கிழட்டு பயலே ! [ நாகரீகம் கருதி வார்த்தை மாற்றி உள்ளேன் ] என்றவாறு சொல்வான்.

வேலைக்கு சென்று ஆறு மாதமாக இதே வார்த்தை ! தனக்கு புரியாத மொழியில் எப்போதும் பேசியதை அறிய முற்பட்டார் அந்த அரபி அக்கம்பக்கத்தில் வீட்டில் வேலை பார்க்கும் இலங்கை தமிழ் பெண்மணிகளிடம் அந்த வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த அரபி மனவருத்தம் அடைந்தார்.

நல்ல பதவியில் இருக்கும் மகனிடம் நிலைமையை கூறி வருத்தப்பட அந்த அரபியன் மகனுக்கு கோபம் உச்சத்திற்கு ஏற !

கோபமாய் வெளியே சென்றார்.

அடுத்த நாள் அரபியின் மகன் வீட்டிற்கு வந்து தந்தை அருகில் இருந்து கொண்டு அந்த இளைஞனை அழைக்க சொன்னார் .

ஆறு மாதமாகியும் வேலையில் ஈடுபாடு இல்லாத அந்த இளைஞன்

என்னடா கிழட்டு பயலே ! என்றவாறு அந்த அரபி இருப்பிடம் சென்றான்.

அருகே அரபியின் மகன் இருந்தார்.

அரபியின் மகன் அந்த இளைஞனிடம்...

நாம் மூன்று நாள் கட்டம் வெளியூர் செல்கிறோம். எனவே உனது முக்கிய பொருள்களை பெட்டியில் எடுத்துக்கொள். நாம் சென்று வரலாம் என அழைத்தார்.

குதூகலத்துடன் அவசரமாக அரபியின் மகனுடன் புறப்பட்டான்.

சற்று நேரத்தில் விமான நிலையம் அடைந்தார்கள்.

குடியமர்வு துறை அதிகாரி வசம் அந்த இளைஞன் ஒப்படைக்கப்பட்டு இந்தியா அனுப்பி வைக்கப்பட்டான்.

அந்த இளைஞனிடம்... எனது தந்தையை நீ தர குறைவாக பேசியதற்கு இது தான் பரிசு !

இது தேவையா ? விசுவாசமாய் வேலை செய்து உயர் நிலையை அடைந்தவர்கள் பற்றி அடுத்த வாரம் கூறுகிறேன்...
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, July 26, 2013

'கவித்தீபம்' கலாமின் பிரார்த்தனை

மனக்குளத்தில் தூசிகளாய்
.....மடிந்திருக்கும் வேளையிலே
கனக்குமந்தப் பாவமெலாம்
.....கழுவுகின்ற மாதமன்றோ ?

உள்ளமென்னும் மணற்பரப்பில்
.....உலர்ந்துநிற்கும் குணச்செடிக்கு
வெள்ளமென்னும் அருளருவி
.....விழுந்திடவே இறைஞ்சுகிறேன் !

பொய்யொழித்துப் புறந்தள்ளிப்
.....பொல்லாங்குப் பேசாமல்
மெய்யடக்கி இருந்திட்ட
.....மெய்யான நோன்பாகும் !

ஆயிரம் திங்களினும்
…ஆங்கோர் இரவினையே
பாயுமுன் ஆற்றலாகப்
…பாய்ச்சும் இறைவனேநீ !

எரிகின்ற நரகமின்றி
.....எம்மையும் விடுப்பாயா ?
சொரிகின்ற அருளதனால்
சொர்க்கமும் தருவாயா ?

பசிவந்தால் பத்துகுணம்
.....பறந்திடுமாம் அத்தருணம்
பசிவந்தும் பக்குவத்தால்
.....பிறந்திடுமாம் நற்குணங்கள் !

ஷைத்தானை விலங்கிட்டுச்
.....சாதகமாய் நமக்காக
வைத்தானே இறைவன்தான்
.....வாழ்த்துகிறேன் அதற்காக !

தொழுகையின் வழியாகத்
.....தூயமனம் பெறுகின்றேன்
அழுகையின் வழியாக
.....ஆசைகளைத் துடைக்கின்றேன் !

கவனித்துப் பிழையறிந்து
...கண்களிடும் துளிகளலாம்
சுவனத்தின் மரங்களுக்குச்
....சொந்தமான விதைகளாகும் !

அழுகின்றேன் அல்லாஹ்வே
.....அரவணைப்பாய் அர்ரஹீமே
தொழுகின்றேன் தூயோனே
.....துடைத்திடுவாய்த் தீங்குகளை
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு : இந்தக்கவிதை அமீரகத்தில் அய்மான் [ AIMAN ] சார்பாக நேற்று [ 25-07-2013 ] நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இனிய குரலில் அனைவரின் முன்பாக வாசிக்கப்பட்டன. இதோ அதன் ஒலிப்பேழை...

Thursday, July 25, 2013

அது ஒரு நூல்

அது 
ஒரு நூல்

அந்த 
அற்புத நூல் 
உன் கைகளில்

உனக்கும் 
அந்த நூலுக்கும்
விட்டுப் பிரிவதியலாத் 
தொடர்பு

ஆனால் 
பரிதாப ஆச்சரியம் 
யாதெனிலோ
அந்த நூல் பற்றி 
ஏதும் தெரியாது 
உனக்கு

வெறுமனே 
அதை வாசித்தாலே
நன்மைகள் கோடி என்ற 
பிழையான நினைப்புதான் 
உனக்கு

நீ கற்றவன்
ஆனால் அந்த நூலை 
நீ கற்றதில்லை

நீ புத்திமான்
ஆனால் 
அந்த நூலுக்கும் 
உன் புத்திக்கும்
விளங்கி எட்டுவதில்
வெகு தூரம் 

பாட நூலை நீ வாசிப்பது 
கற்பதற்காக

ஆனால் 
உன் அந்த நூலை 
நீ வாசிப்பது
வாசிப்பதற்காக மட்டும்

வாசித்தால் போதும் 
சொர்க்கம் வசப்படுமென்று
தவறாக உன் மூளையைத் 
தட்டிக்கொடுத்த 
தப்பான அறிவிலிகளை
மன்னிக்கமாட்டான் அவன்

காலம் எழுப்பிவிட
உன் கல்விக்கண் 
விழித்துவிட 
இன்னுமா வேண்டும்
உனக்கு அந்த இருட்சிறை

எந்த ஒரு 
மொழியினைக் கற்பதும்
விளங்கவும் பேசவும் 
எழுதவும்தான் 

ஆனால் 
அந்த நூலின் 
மொழியைப் பயில்வது மட்டும் 
வாசிக்க மட்டும்தானா... ஏன்

அறிவுச் சுடர் எரியும்
உன் கல்வி வாழ்வின் தலைப்பணி
அந்த நூலை ஆய்ந்தறிவதாய் அல்லவா
அமைந்திருத்தல் வேண்டும்

அவன் 
சொல்லும் 
சொலைப் புரியாமல்
அவன் 
சொல்லைச் 
சொல்லி ஆவதென்ன 

அவன்முன் பணிந்து
அவன் காதில் நீ 
ஓதுகிறாய் 

உன் நெஞ்சினின்று
பொருளோடு புறப்படாத 
ஒரு சொல்
எத்தனை அழகானதாயினும்
அவன் செவியைச்
சேருமா

அவனை 
அறிவதற்காகவே
அருளப்பட்ட அந்த நூல்
இதோ 
இன்னமும் 
உன் கைகளில்தான்
அன்புடன் புகாரி

Wednesday, July 24, 2013

குடும்பத்தின் நிம்மதி உங்கள் கையில் !

ஆக்கம் : ஆடிட்டர் பெரோஸ்கான்
முன் எப்போதுமில்லாத அளவுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்துறையில் இமாலய முன்னேற்றத்தை மனிதன் அடைந்துள்ளான் என்பதை மறுக்கவியலாது. அதே சமயம் இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை அவன் அடைந்திருந்தாலும் – அவனுடைய தனிப்பட்ட வாழ்வில் நிம்மதியற்ற நிலையிலும் பல்வேறு குழப்பத்துடனும் தான் இருக்கிறான் என்பதும் கசப்பான உண்மை.

இதற்கான காரணத்தை நாம் ஆராய்ந்தால், விஞ்ஞானத்தையோ, அல்லது தொழில்நுட்பத்தையோ நாம் குறை காண முடியாது. இதற்கான விடையை தத்துவ ஞானியும் கவிஞருமான அல்லாமா இக்பால் இரண்டே இரண்டு வரிகளில் விளக்குவார்.

“தொழில்நுட்ப வளர்ச்சி என்பதும் மனித முன்னேற்றம் என்பதும் வெவ்வேறானவை”

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது விஞ்ஞான வளர்ச்சியோடு தொடர்புடையது. அது மனிதனின் உடல் சார்ந்த சொகுசான வாழ்விற்குத் தேவையானதை நிறைவு செய்யும். அது போல அவனது தேவைகளை அதிவிரைவில் செய்து முடிக்க அது உதவும். இண்டர்நெட், அதிவிரைவு வாகனங்கள் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.

ஆனால்… மனித முன்னேற்றம் என்பது மனிதனுடைய ஒழுக்கம், நற்பண்புகளை மையமாகக் கொண்டது. யாரெல்லாம் நல்லொழுக்கம், நற்பண்புகளுக்கு முன்னுரிமை அளித்து வாழ்கிறார்களோ அவர்கள் குறைவாக பொருளீட்டினாலும் நிறைவான வாழ்வுக்குச் சொந்தக்காரர்கள். ஆனால் யாரெல்லாம் பேராசையை அடிப்படையாகக் கொண்ட நவீன சிந்தாந்தங்களுக்கு அடிமைப்பட்டு வாழ்கிறார்களோ அவர்கள் அதிகமான பொருளீட்டுபவர்களாய்த் திகழ்ந்தாலும் அமைதி இன்றி தவிப்பதைத்தான் நம் அனுபவத்தில் காண்கிறோம்.

நபித்தோழர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தங்களுடைய வாழ்வில் நல்லொழுக்கங்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள். அவர்கள் உலக வாழ்விலும் மறுமை வாழ்விலும் வெற்றி பெற்றார்கள் என்றால், எதற்கு நாம் முக்கியத்துவம் தருவது என்ற சூட்சுமத்தை அவர்கள் விளங்கி வைத்திருந்தார்கள். ஆனால் அத்தகைய சூட்சுமத்தை இன்றைய இஸ்லாமியர்கள் நுகர்வுக் கலாச்சாரத்தின் முன் மண்டியிட வைத்து விட்டார்கள்.

இறைவனால் நமக்கு வழங்கப்பட்டுள்ள அறிவு, செல்வம், நேரம், உடல்பலம் இவை எல்லாவற்றையும் நாம் திட்டமிட்டு நிர்வகித்தோம் என்றால் நாம் எத்தகைய நிம்மதிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் ஏங்கி அலைகிறோமோ அது நம்மைத் தேடி வரும்.

அதிலும் குறிப்பாக பொருளாதாரம் என்பது இன்றைய வாழ்வின் பல்வேறு விஷயங்களின் ஆதாரமாக உள்ளது. வறுமை இறைநிராகரிப்பிற்கு நம்மை இட்டுச் செல்லும் என்பது நபிமொழி. மேலும் பொருளாதாரப் பிரச்சினை என்பது ஏழை, பணக்காரன், நடுத்தரவாதி என எல்லோருக்கும் பொதுவானது. எனவே, எல்லோரும் அதை முறையாக நிர்வகிக்கத் (Money Management) தெரிந்திருக்க வேண்டும். இல்லை என்றால் பல்வேறு சிரமத்திற்கும் கேவலத்திற்கும் உள்ளாக நேரிடும்.

நம்மூர் பக்கம் போனால், சிலரை வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்வார்கள். தினசரி பத்திரிகைகளில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தாத பல ஒட்டாண்டிகளின்                (Bank Rupt) சோகக் கதைகளைப் படிக்கிறோம். இது போல கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி அதைத் திருப்பித் தர முடியாத அவமானத்தில் மறைந்து வாழ்வதையும், ஆடம்பரமாக வாழ்ந்தவர்கள் இடையில் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தைத் தாங்க மாட்டாமலும், ஏழ்மையான வாழ்வு இனி இழிவானது என்ற எண்ணத்திலும் குடும்பத்தோடு தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொள்ளும் கையாலாகாத் தன்மையையும் பார்க்கிறோம்.

இவை அத்தனையும் Money Management இல்லாமையின் வெளிப்பாடுகள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

இன்று உலக அளவில் நுகர்வு (பயனீட்டாளர்) கலாச்சாரம் மேலோங்கி நிற்கிறது. கையில் காசு இல்லாவிட்டாலும் காண்பதை எல்லாம் வாங்கிக் குவிக்க வேண்டும் என்று அலைகின்றனர் பலர். இலவசங்களின் பக்கம் அலை மோதிக் கொண்டிருக்கின்றனர் பலர்.

சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள பிடோக் எனும் பகுதியில் அதிகாலையில் மெக்டோனல், ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தின் முன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவ்வழியே சென்ற நான் ஆர்வ மிகுதியால் அங்கே வரிசையில் பின்னால் நின்ற ஒருவரிடம் என்ன விவரம் என்று கேட்டேன்.

விவரம் என்னவென்று தெரியாது ஆனால், லைனில் தான் பிந்தி விடக் கூடாது என்பதற்காக நின்று கொண்டிருக்கிறேன் என்று வெகு அலட்சியமாக பதில் அளித்தார். இன்னும் கொஞ்சம் முன்னால் சென்று அங்கு நின்ற இன்னொருவரிடம் விவரத்தைக் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

“இருபது வெள்ளிக்கு ‘மெக்டோனால்’ வாங்கினால் ஜப்பானியப் பொம்மை ஒன்று இலவசமாகத் தருகிறார்களாம். அதற்காகவே இந்தக் கூட்டம்.”உண்மையில் அந்தப் பொம்மையின் விலை வெறும் ஐம்பது காசுகள் கூடப் பெறாது.

இந்தியாவில் ஒரு சேலைக்கு இன்னொரு சேலை இலவசம் என்ற கூத்து நடக்கிறதே அது போலத்தான் இதுவும். ( யாதும் ஊரே; யாவரும் கேளிர். இலவச மயக்கம் எங்கள் தத்துவம் ஒன்று பாட வேண்டும் போல் இருக்கிறதா…)

ஒன்றை நன்றாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். ”இலவசம் என்பது ஒரு வியாபார டெக்னிக். தூண்டிலில் மண் புழுவை மாட்டி மீனைப் பிடிப்பது போல ஒன்றின் கீழ் அதிக விலை வைத்து ஒன்றை இலவசமாகத்தான் தர வேண்டும். இல்லையேல், விலை போகாத இருப்புச் சரக்கை நம் தலை மீது கட்ட வேண்டும். இதுதான் இலவசத்தின் இரகசியம். இந்தச் சின்ன விவரம் கூட நம் மக்களிடம் இல்லை.

“ஓர் நம்பிக்கையாளன் ஒரே பொந்தில் இருமுறை கொட்டுப்பட மாட்டான்” என்று எச்சரிக்கை உணர்வு ஊட்டப்பட்ட இஸ்லாமிய சமூகமும் இதில் உள்ளடக்கம் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

நவீன மார்க்கெட்டிங் டெக்னிக் படிப்பவர் ஆற்று மணலைக்கூட பாக்கெட் போட்டு நம்மிடம் விற்கும் அபார (ஏமாற்றும்) திறமை பெற்றவர்கள். விற்காத சரக்கை ஏமாற்றி வெற்றிகரமாக விற்று விட்டால் இவருக்கு பி.ஹெச்டி. பட்டம் கூட கொடுப்பார்கள்.

வணக்க வழிபாடுகளின் நோக்கத்தை அறிந்து கொள்ளாமல் சடங்கு ரீதியாக நிறைவு செய்து அதில் எவ்வாறு முஸ்லிம்கள் கவனக்குறைவுடன் செயல்படுகிறார்களோ அது போலவே இது போன்ற நடைமுறை வாழ்வியலிலும் ஏமாற்று வேலைகளில் சிக்கித் தடுமாறுகின்றனர். முன்னுரிமை தரவேண்டிய பல விஷயங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டனர்.

அத்தகைய பின்னுக்குத் தள்ளப்பட்ட விஷயங்களில் ஒன்று தான் குடும்பப் பொருளாதார நிர்வாகம் என்பது. முதல் கட்டமாக இது சம்பந்தமாக சில விவரங்களை நாம் அறிந்து கொண்டு, அடுத்தடுத்த கட்டமாக முன்னுரிமை தர வேண்டியவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்,

இந்தக் கட்டுரை பாமர மக்களை மனதில் கொண்டு எழுதப்பட்டதாக இருந்தாலும் படித்தவர்கள், செல்வந்தர்கள், இஸ்லாமியர்கள், இஸ்லாமியர் ‘அல்லாதோர் அனைவருக்கும்’ பொதுவான ஒர் எளிமையான வழி காட்டுதலாக அமையும் என நம்புகிறேன். ‘பொருளாதார நிர்வாகம்’ என்பது ஏதோ ஒரு அரசாங்கத்துக்கோ, அல்லது பன்னாட்டு நிறுவனத்துக்கு மட்டுமோ சொந்தமானது அல்ல. ஒவ்வொரு குடும்பத்தலைவனும் தலைவியும் தெரிந்து வைக்க வேண்டிய விஷயங்கள். பொருளாதார நிர்வாகம், எதிர்கால வரவு செலவு திட்டம், அசலான செலவிற்கும் திட்டமிடுதலுக்குமிடையே உள்ள ஒப்பீடு இவற்றையெல்லாம் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
வரவுக்கும் செலவுக்கும் இடையே சமநிலை காணல்

எவ்வளவு நாம் சம்பாதிக்கிறோம் என்பதை விட அதை நாம் எவ்வாறு, எவ்வழியில் செலவு செய்கிறோம் என்பதே முக்கியம். இதுவே நாம் பொருளாதாரச் சிக்கலிலிருந்து விடுபட ஒரு காரணியாக அமையும்.

மேலோட்டமாக நாம் பார்க்கும் போது செல்வந்தர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போலவும் குறைந்த வருமானமுள்ளவர்கள் சிரமத்திற்குள்ளாவது போலவும் தோன்றலாம். ஆனால் எதார்த்தத்தில் அவ்விரு சாரார்களும் அவர்களுடைய செல்வம், அதன் மூலம் வரும் வருமானத்தை எவ்விதம் நிர்வகிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை நிம்மதியானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமையும்.

பரிந்துரை : 
M.S. ஷிஹாப்தீன்

Tuesday, July 23, 2013

ஹலோ, எப்படி இருக்கின்றீர்கள் ?

ன்பானவர்களே,

நாம் எல்லோரையும் மனிதர்களாக படைத்த இறைவன் நமக்கு எதுவெல்லாம் முடியுமோ அதுவரைக்கும் பெலத்தையும் திறமையையும் கொடுத்துள்ளான், ஆனால் நாம்தான் அதை முறையாக பயன்படுத்த தெரியாமல் திண்டாடி வருகின்றோம். நம்மில் ஒரு சிலரே சரியான இலக்குகளை அடைந்து வெற்றியும் அடைந்துள்ளனர். அடைந்து கொண்டும் இருக்கின்றனர்.

ஒரு நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு நாள் செய்தித்தாளை பார்த்த ஒருவர் தன்னுடைய மரண செய்தியை காண நேரிட்டது, தவறுதலாக வேறு யாருக்கோ பதிலாக அவருடைய பெயரும், புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்து, அவருடைய புகைப்படத்தின் கீழ் டைனமெட் உண்டாக்கிய இராஜா என்றும், மரணத்தின் வியாபாரி என்றும் எழுதப்பட்டிருந்தது.

அதை பார்த்தவுடன் அந்த மனிதர் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை, மரணத்தின்  வியாபாரி என்றா என்னை மக்கள் நினைவு கூறுவார்கள் என்று திடுக்கிட்டு துயரத்தில் ஆழ்ந்தார், அந்த திருப்புமுனை அவருடைய வாழ்க்கையையே புரட்டி போட்டது. தன்னை யாரும் அப்படி அழைப்பதை அவர் விரும்பவில்லை, உடனே அந்நாளில் இருந்து அவர் ஒரு முடிவு எடுத்தார், அதாவது இனிமேல் மக்களுக்காகவும் சமுதாயத்துக்காகவும் சமாதானத்திற்கான காரியங்களில் ஈடுபட ஆரம்பித்தார். அவர் யார் தெரியுமா ? அவர்தான் ஆல்பர்ட் நோபல் ஆவார். அவர் பெயரில் இன்றும் ஒவ்வொரு ஆண்டும் சமாதானத்திற்காகவும், மற்ற அறிவியல் ஆராய்ச்சிகளை கண்டுபிடித்ததர்காகவும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

நம் ஒவ்வொருவருக்கும் எல்லோரையும் போல ஒரு வாழ்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது, அந்த வாழ்க்கையின் முடிவில் நாம் மற்றவர்களால் எப்படி அறியப்படுகின்றோம்? சரியான கோபக்காரன் என்றோ, சரியான குடிகாரன் என்றோ, தொல்லைகளைக் கொடுக்கின்றவன் என்றோ எப்படி அறிந்து கொள்ளப் படுவோம்? அல்லது மற்றவர்களால், இவரைப் போன்ற நல்ல மனிதரை காண்பது அரிது என்று போற்றப்படுவோமா? நாம் இல்லாமற்போனால் மற்றவர்கள் நம்மை உண்மையாகவே இழந்து தவிப்பார்களா ?

இந்நாட்களில் ஒரு அரசியல் தலைவர் மரித்தவுடன், எங்கள் கட்சி ஒரு மாபெரும் மனிதரை இழந்து விட்டது என்று உடனே அறிக்கை விடுவார்கள், அவர் உயிரோடு இருந்த காலத்தில் அவரைக் கண்டுக் கொள்ளவே மாட்டார்கள். இவையெல்லாம் அரசியல் சகஜம்.

அதுப்போன்று நம்மை பெயரளவில் இழந்திருக்கின்றோம் என்று சொல்லி, இருதயத்தில் இவன் போனது எத்தனை நல்லது என்று நினைப்பார்களானால் அது எத்தனை பயங்கரம் !

நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது? மற்றவர்கள் போற்றும் வகையில் நம் வாழ்க்கை இறைவனுக்கும் மற்றவர்களுக்கும் பிரயோஜனமுள்ளதாக இருக்கிறதா? அல்லது யாரும் விரும்பாவண்ணம், மூர்க்கமான, பிரயோஜனமற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

மனிதனை ஏமாற்றி விடலாம், இறைவனை ஏமாற்ற ஒருக்காலும் முடியாது, இன்று பொறுப்பில் உள்ள எத்தனை மனிதர்கள் உண்மையாக இருக்கின்றனர் ? மானிடம் இதை சிந்திக்குமா ? சிந்தித்து ஒரு நல்ல முடிவு எடுக்குமா ?

உடம்பில் பெலமும் கையில் பணமும் இருக்கும் வரையில் மட்டும்தான் ஆட்டமும் பாட்டமும், அது இரண்டும் நம்மை விட்டு போய்விட்டால் ? பியூஸ் போன பல்பு மாதிரிதான். பின்னர் எதுவுமே திரும்பி பார்க்காது. வாழ்க்கைக்கு அது இரண்டு முக்கியமாக இருந்தாலும் நிரந்தரம் கிடையாது, கூடவே வராது.

மனிதன் இந்த அற்ப உலகில் எதை விதைக்கின்றானோ, அதைதான் அவன் மறுமை நாளில் அறுவடை செய்வான். நல்லதுக்கு நல்ல விளைச்சல் கிடைக்கும், தீயதுக்கு தீய விளைச்சல் கிடைக்கும்.

மனிதன் மாறனும், மனித நேயம் வளரனும், அன்பு பெருகணும், ஒற்றுமை ஓங்கணும், உதவிகள் உயர்ந்து நிற்கணும், இல்லாதோர்களுக்கு இருப்பவர்கள் கொடுக்கனும், எல்லோரும் எல்லாமும் பெற்று சந்தோஷமாக வாழனும், நாளை மறுமை நாளிலே நல்ல விளைச்சலை பெற்று வாழ்வோமாக.

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Monday, July 22, 2013

வட்டியில்லா வங்கி இந்தியாவில் சாத்தியமா !?

கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் சிறுபான்மை மக்களில் பெரும்பான்மையாக வாழும் மக்களான முஸ்லிம்களின் இயல்போடு ஒத்துவராத, அந்த மக்களோடு ஒன்றிப்போக இயலாதவங்கியியல் பரிவர்த்தனை இந்தியாவில் நடைமுறையில் இருகின்ற காரணத்தால் வேண்டா வெறுப்பாக வேறு வழியில்லாமல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வங்கிகளோடு பண பரிவர்த்தனை செய்ததின் காரணமாக இந்தியா முழுவதும் ஏறக்குறைய 75 ஆயிரம் கோடி ரூபாய் வட்டிப் பணம் கேட்பாரற்று, முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் வங்கிகளில் முடங்கிக் கிடக்கிறது. கேரளாவில் மட்டும் 45,000 கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பதாக  மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட – RBI Legal News and Views என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆகவே இஸ்லாமிய நெறிமுறை மற்றும் மார்க்க வழிகாட்டலுக்கு உட்பட்ட வங்கி முறை ஒன்று இந்தியாவிலும் அவசியம் என்பதை பொது மக்களும் வங்கி மற்றும் நிதித்துறையும் உணரத்தொடங்கிவிட்டனர். எனவேதான் இந்தியப் பிரதமரின்  வாயாலேயே அந்த முத்து உதிர்ந்து இருக்கிறது.

இஸ்லாமியர்களுக்கென தனி சட்டங்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கப் பட்டிருப்பதையே அவ்வப்போது நோண்டி நொங்கு எடுத்துக் கொண்டிருக்கும் மதவாத சக்திகள் இஸ்லாமிய வங்கி முறை ஏற்படுத்தப் பட்டாலும் இடையூறு செய்யவும் எதிர்ப்புக்குரல் எழுப்பவுமே  செய்வார்கள். ஆனால் இது காலத்தின்  கட்டாயம். ஒட்டுமொத்த நாட்டின் அனைத்து சமூகத்தையும்  வட்டியின் கொடுமையிலிருந்து விடுபடவைக்கும் அருமருந்து என்பதை அனைவருக்கும் உணர்த்த வேண்டும்.

இஸ்லாமிய வங்கி முறைமை என்றால் என்ன? என்பதையும் அதன் அடிப்படைகள் யாவை என்பதையும்  அவ்வங்கி முறைமையினை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இந்தியா போன்ற  நாடுகளில் அமுல்படுத்துவதில் செல்வாக்கு செலுத்தும் இடையூறுகள்  யாவை போன்ற பொதுவான விஷயங்களை இங்கு குறிப்பிடுவது   அவசியமாகும்.

 முதலில் நாம் வட்டியில்லாத வங்கி முறை அதாவது இஸ்லாமிய வங்கி முறை என்றால் என்ன? என்று புரிந்து கொள்ள வேண்டும். இது பற்றி இஸ்லாமிய அறிஞர்களும் கூட பல்வேறு வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளனர். இஸ்லாமிய வங்கி முறை இந்தியாவுக்கும் வேண்டுமென்றால் நம்மைப் பார்த்து முறைப்பவர்கள் பலர் இருப்பார்கள். ஆனால் அதன் பயன்பாட்டை அனுபவத்தில் உணர்ந்து கொண்டால் அட! பேஷ் ! பேஷ்! ரெம்ப நன்னா இருக்கு என்று போற்றுவர்.

“இஸ்லாமிய வங்கி முறை என்பது அவசியம், அது ஆன்மீகத்திலிருந்து பிரித்தெடுக்க முடியாத ஒரு துறையாகும். இஸ்லாத்தின் உறுதிமிக்க அடிப்படைகளுக்கு ஏற்ப அவை வரையறுக்கப்பட்டதாக காணப்படும்”  என்று Dr. Ziauddin Ahamed  என்கிற பொருளியல் அறிஞர்  கூறுகின்றார்.

“இஸ்லாமியப் பொருளாதார வழியில் செல்வத்தைப் பயன்படுத்துவதற்கும், வளப் பங்கீட்டை சீர்படுத்துவதற்கும், நீதியையும் சமூகப் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கும், சேவைகளை வழங்குவதற்கும், செல்வங்களை ஒன்று திரட்டி தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற நிதி சார் நடவடிக்கைகளை இஸ்லாமிய வரையறைக்குள் மேற்கொள்கின்ற நிறுவனமே இஸ்லாமிய வங்கியாகும்” என முனைவர்  அஹமது நஜ்ஜார் என்ற மற்றொரு  அறிஞர் கூறுகின்றார்.

இஸ்லாமிய வங்கி முறை (Islamic Banking System)  என்பது கொடுக்கல் வாங்கலின் போது அல்லது பணப்பரிமாற்றலின் போது அல்லாஹ்வும் அவனது அருட் தூதரும்  எச்சரித்த  வட்டியிலிருந்து தவிர்த்துக்கொள்ளக் கூடிய நாடு தழுவிய  ஒரு நிதிக் கொள்கையாகும். மற்றும் இஸ்லாமிய பொருளாதாரத்தினுடைய நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு உதவி புரியக் கூடிய வகையில் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதுமாகும். இந்த வங்கி முறைகள், பொருளியல் சமத்துவத்தை போதிக்கும் இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின்  அடிப்படைகளிலிருந்து எழுப்பப்பட்டதாகும். (இந்த முறைகள் ஆரம்பிக்கப் பட்ட வரலாறு தொடர்ந்து எழுதப்படும்.  )

இஸ்லாமிய வங்கி முறை  இலாபம் நட்டம் ஆகிய இரண்டையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய அதை கபூல் செய்துகொள்ளக் கூடிய உன்னதத் தன்மையும்  வாய்ந்ததாகும். எனவே இஸ்லாமிய வங்கிகள் PLS ( Profit and Loss Sharing ) என அடையாளப்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில் இஸ்லாமிய வங்கியியலின் நோக்கங்களை நாம் பின்வருமாறு நோக்கலாம்.

1. வட்டியிலிருந்து விடுபடல்
2. நிச்சயமற்ற தன்மையிலிருந்து தவிர்த்து கொள்ளல்
3. சூதாட்டத்தை நிராகரித்தல் 
4. ஹராம் – ஹலால் பற்றி கவனத்திற் கொள்ளல் 
5. ஸகாத் – இஸ்லாமிய வரியை பேணி நடைமுறைப்படுத்தல் 

எனவே இஸ்லாமிய வங்கியொன்று தனது செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது மேற்கூறப்பட்ட அடிப்படைத் தத்துவங்களை பின்பற்றியே செயல்பட வேண்டும்.

ஏனெனில் அவை இஸ்லாமிய பொருளியல் கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்ட அழகிய மாளிகையாகும். இஸ்லாமிய பொருளியல் கோட்பாடுகள்  நாம் ஏற்கனவே விவாதித்தபடி படைக்கப் பட்ட மனிதர்களால் உருவாக்கப் பட்ட  பொருளியல் கோட்பாடுகளைப்  போல அல்லாமல் படைத்த இறைவனிடமிருந்து பெறப்பட்டதாகும்.

இக்கோட்பாடானது இஸ்லாமிய அடிப்படை சட்ட மூலாதாரங்களான இறைவேதம் மற்றும் நபி மொழியின்  மூலம் தெளிவுபடுத்தப்பட்டதாகும். எனவேதான் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் வட்டியில்லாத வங்கிமுறையான இஸ்லாமிய வங்கிமுறையினடிப்படையில் இஸ்லாமிய ஷரீஆவிற்குட்பட்ட முறையில் தமது கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.

இன்றைய உலகில் இஸ்லாமிய வங்கியியல் முறையொன்று முஸ்லிம் அறிஞர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை இது பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

அந்த வகையில் இஸ்லாமிய வங்கியியல் எதிர்நோக்குகின்ற பெரியதொரு பிரச்சினை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழுகின்ற இந்தியா போன்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைமையை நடைமுறைப்படுத்துவதாகும்.

முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழுகின்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைமையை நடைமுறைப்படுத்துவதில் பின்வரும்  காரணிகள் இடையூறுகளாக  காணப்படுகின்றன.

1. இஸ்லாமிய வங்கிகளுக்கென ஒரு தனியான மத்திய வங்கி ஏற்படுத்தப் படாதது அல்லது இருக்கும் மத்திய வங்கியில் இதற்கென ஒரு தனித்துறை அமையாதது. 

2. இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சியின் போது அரசினது அல்லது மத்திய வங்கியினது பொதுவான தலையீடுகளுக்கும்  கட்டுப்பாடுகளுக்கும் உட்படவேண்டிய கட்டாயம். 

3. தற்போது நடைமுறையிலுள்ள கவர்ச்சிகரமான வட்டியுடன் கூடிய வங்கிகளுடன் போட்டி போட முடியாமை.

4. இஸ்லாமிய வங்கிகள் கிளைகளை நாடெங்கும் பரவலாக அமைத்து தமது சேவைகளையும், நடவடிக்கைகளையும் விஸ்தரிக்க முடியாமை.

5. இஸ்லாமிய பொருளாதார, முதலீட்டு நடவடிக்கைகள் பற்றிய அறிவின்மைகளும், நம்மவர்களே முதலீடுகளில் திருப்தி கொள்ளாமையும்.

ஆயினும் பல அரபு நாடுகளிலும் மலேசியா , இலங்கை , வங்க தேசம், ஆகிய நாடுகளில்  உள்ள  இஸ்லாமிய வங்கிகள் இஸ்லாமிய பொருளியல் தத்துவங்களையும், கோட்பாடுகளையும் உள்ளடக்கி ஷரீஆவின் அடிப்படையில் அமைந்த பின்வரும் முக்கிய கொடுக்கல் வாங்கல்களையும், வியாபார நடவடிக்கைகளையும், சேவைகளையும் மேற்கொள்கின்றன.

1. முழாரபா: கூட்டுப் பங்காண்மை

2. முஷாரகா: கூட்டுப் பங்குடமை

3. வீட்டு முஷாரகா முறைமை

4. முராபஹா: இலாபத்தை தெரியப்படுத்தி விற்றல்

5. முஸாவமா: சாதாரண வியாபாரம்

6. இஜாரா: வாடகைச் சேவை

7. வைப்புக்களை ஏற்றல்: ஆரம்ப வைப்பு, முதலீட்டு வைப்பு, நிரந்தர  வைப்பு ஆகியன.

8. பைஉல் முஅஜ்ஜல்: தவணை அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை

9. ஸலம்: முற்பணக் கொடுப்பனவு வியாபாரம்.

10. ரஹ்ன்: அடகுச் சேவை

11. கர்ழ்: கடன் கொடுக்கல் வாங்கல்

இவ்விடத்தில் நாம் முக்கியமானதொரு விஷயத்தை நோக்க வேண்டும். மேற் கூறப்பட்ட சேவைகளுக்கான செலவினங்கள், கட்டணங்கள் பாரம்பரிய வங்கிகளுக்கு மட்டுமா காணப்படுகிறது? ஏன் இவை இஸ்லாமிய வங்கிகளுக்கு இல்லையா? அவை அனைத்தும் இஸ்லாமிய வங்கிகளிடமும் காணப்படவே செய்கின்றன.

எனினும் இஸ்லாமிய வங்கிகளில் ஏற்கனவே கூறப்பட்ட செயற்பாடுகளினால் பெறப்படுகின்ற இலாபங்களினாலும், சேவைக் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டு  வசூலிக்கப்படும் கட்டணங்களால்  அவை ஈடு செய்யப்படுகின்றன.

இஸ்லாமிய வங்கிகளில் வாடிக்கையாளரினால் வைப்புச் செய்யப்படும் பணம் பற்றியும், அப்பணத்திற்கான முதலீடு, மற்றும் அதனால் கிடைக்கும் இலாபம் யாருக்குரியது? என்பது பற்றியும் அவைகள் பற்றிய மார்க்க தீர்ப்பு என்ன ? என்பது பற்றியும்

ஒரு வாடிக்கையாளர் இஸ்லாமிய வங்கியில் வைப்புகளை அல்லது முதலீடுளை செலுத்த செயல்படும்பொழுது அல்லது நடவடிக்கை மேற்கொள்ளும் போது ஏற்கனவே கூறப்பட்ட ஷரீஆ அனுமதித்த கொடுக்கல் வாங்கல்களின் அடிப்படையிலே தெளிவான முறையில் மேற்கொள்வர். அத்துடன் அவைகளுக்குரிய மார்க்க ரீதியான ஆலோசனைகள் அவருக்கு வழங்கப் படும்.

அவ்வாறு முதலீடுகளை மேற்கொள்ளும் போது வாடிக்கையாளரும் வங்கியும் ஏற்றுக் கொள்ளும் ஷரத்துக்கள் மற்றும்  வங்கி செயற்பாட்டு நடவடிக்கைகளின் தன்மை, மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப இலாபம் பகிரப்படும். அதேபோன்று சில கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் நட்டமும் பங்கிடப்படும். இதற்கான ஒப்புதலும் வாடிக்கையாளரிடம் பெறப்படும்.  எனினும் இந்நடவடிக்கைகளின் போது ஆன்மீக அடிப்படையில் இஸ்லாமிய ஷரீஆ பின்பற்றப்பட வேண்டும் என்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். .

உதாரணமாக மார்க்கம் தடை செய்துள்ள  மதுபான உற்பத்தி தொழிலுக்கு பணத்தை முதலீடு செய்ய முடியாது. அதேபோன்று விபசார விடுதிக்காக ஒரு கட்டிடத்தை வாடகைக்கு விட முடியாது. திரைப்படம் எடுக்க நிதிக்கடன் அளிக்க இயலாது.

மற்றொரு சந்தேகம் நம்மிடையே உண்டாகலாம்.  அதாவது இஸ்லாமிய வங்கிகள் முஸ்லிம்களுக்கு  மட்டுமே பயன்படும் . அல்லது முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்துவர் என்கிற வாதம்.  முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமிய மார்க்க சட்டதிட்டங்களுக்குட்பட்ட விதிமுறைகள் உள்ள வங்கிச்சேவைகளை  நாடமாட்டார்கள் என்று ஓர் கருத்தும் எழுவது இயற்கை.

 ஆனால் இஸ்லாமிய வங்கி முறைகள் பின்பற்றப்படும் நாடுகளின் புள்ளி விவரங்கள்  முஸ்லிமல்லாதவர்கள் கூட பெருமளவில் இஸ்லாமிய வங்கிகளில் நம்பிக்கையுடன் கூடிய நன்னடத்தை மிக்க வாடிக்கையாளர்களாக காணப்படுவது மாத்திரமன்றி, இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படையில் சேவைகளையும்  செயற்பாடுகளையும்  வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் தலைசிறந்த ஊழியர்களாகவும் விளங்குகின்றனர் என்பதை  பறை சாற்றுகிறது. உதாரணமாக அரபு நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைகளையும் பொதுவான வங்கி முறைகளையும் பின்பற்றும் வங்கிகளில் இஸ்லாமிய வங்கி முறைகளே தங்களுக்கு வேண்டுமென்று கேட்டு அந்த ரீதியிலேயே தங்களின் கணக்குகளைத் தொடங்கி நிர்வகித்து வரும்  மாற்று மத சகோதரர்கள் ஏராளம்.

இவற்றையெல்லாம் நாம் நோக்குகின்ற பொழுது இஸ்லாமிய வங்கியினால் இலாபமடைவது யார்?  என்று நம் மனதில் ஏழும்  வினாவிற்கு சுலபமாக விடை காண முடியும். இங்கு வங்கி, வாடிக்கையாளர் ஆகிய இரு தரப்பினருமே இலாபமடைகின்றனர். பயனடைகின்றனர் என்பது மறுப்பதற்கு இல்லை. அதனால்தான் இன்று உதாரணத்துக்கு சொல்லப் போனால்  இலங்கையில் காணப்படுகின்ற இஸ்லாமிய வங்கிகளின் நிதி நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்லும் அதேவேளை வாடிக்கையாளர்களின் தொகையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இஸ்லாமிய வங்கிகளின் நோக்கங்களையும் செயற்பாடுகளையும் தொடர்புபடுத்திப் பார்க்கும் போது இலாபமீட்டுதல், பணம் சம்பாதித்தல் என்பதைவிட சேவை வழங்குதல் என்பதே முதன்மை பெற்று விளங்குவதை காணமுடியும். இங்கு இஸ்லாமிய வங்கிகளின் ஸ்திரத்தன்மை முஸ்லிம் சமூகத்தில் தங்கியுள்ள அதேவேளை முஸ்லிம் சமூகத்தின் கொடுக்கல் வாங்கல் அடிப்படையிலான இயக்கப்பாடு இஸ்லாமிய வங்கிகளிலும் தங்கியுள்ளது.

எனவே ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாமிய ஷரீஆவிற்குட்பட்ட முறையில் வாழ்பவர் களாயின் அவர்கள் ஒவ்வொருவரும் இஸ்லாமிய அடிப்படையில் கொடுக்கல் வாங்கல்களையும், பொருளீட்டல் நடவடிக் கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மாறாக இஸ்லாமிய வங்கிகளை குறை கூறி, கூறி பாரம்பரிய வங்கிகளில் வட்டியில் முழுமையாக மூழ்குவதைவிட  இஸ்லாமிய அடிப்படையிலான வங்கிகள், வங்கிப் பிரிவுகள் நிதி நிறுவனங்கள் மேலானதே, என்றாலும் ஏற்கனவே கூறியதைப் போன்று முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைமைகளை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் மட்டுமன்றி சவால்களும் காணப்படவே செய்கின்றன.

அந்த வகையில் முஸ்லிம்களையும் தனது மக்கள் தொகையில் கணிசமாகக் கொண்டுள்ள நாடுகளும் இந்தப் பொறுப்புகளை மேற்கொள்வதில் இருந்து விதிவிலக்குப் பெறாமல் அவைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
வட்டி வாங்குவது, வட்டி கொடுப்பது, வட்டி கணக்கு எழுதுவது, அதற்கு சாட்சியாக கையெழுத்திடுவது அனைத்தும் பெரும் பாவம் என்று இஸ்லாமிய மார்க்கம் தெள்ளத் தெளிவாக்குகிறது. இதுபற்றி முன்னரும் சுட்டிக் காட்டி இருக்கிறோம். முழுவதும் வட்டி அடிப்படையிலான வங்கியியல் நடைமுறை காரணமாக முஸ்லிம்கள் வங்கிகளில் கணக்கு தொடங்குவதில் கூட பிற எல்லா சமூகங்களைக் காட்டிலும் மிகவும் பின்னுக்கு இருக்கிறார்கள். இதனால் இந்த சமூகம் பொருளாதார ரீதியாகமுன்னேறிய சமூகமாக மாறுவதற்கு, முஸ்லிம் சமூகத்தவர் பெரிய பெரிய தொழிற்சாலை தொடங்குவதற்கு,  பங்குகள் மூலம் பெரிய அளவிலான நிதியைத் திரட்டி பெரும்தொழில் செய்வதற்கு,  ஏழைமாணவர்கள் கல்விக்  கடன் பெறுவதற்கு என்று பிற சமூகங்களைப் போல  நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தங்கு தடையின்றி செயல்பட இயலாத நிலையில் உள்ளது.

காரணம்,  ஒரு உண்மை முஸ்லிம்  எந்தநிலையிலும் பேங்கிலிருந்து வட்டியை பெற்று பயன்படுத்தக் கூடாது. அவர்களுடைய கணக்கில் வட்டித் தொகை வருமானால் அதனை  அவர் அனுபவிப்பது ஹராமாகும். மேலும் பிறருக்கு கொடுப்பதினால் அது தர்மமாகவும் ஆகாது. தர்மத்தின் நன்மையும் கிடைக்காது. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதை மட்டுமே அவன் ஏற்றுக் கொள்வான். மேலும் எந்தவிதத்திலும் அந்தப் பொருளை தனக்காகப் பயன்படுத்தக் கூடாது. அந்தப் பணத்தில் உண்பது, பருகுவது, அணிவது, வாகனிப்பது, வசிப்பது, தாய், தந்தை, மனைவி, பிள்ளைகளுக்காக செலவு செய்வது, ஜகாத்தாகக் கொடுப்பது, தம்மீதுள்ள கடமையான வரிகளைச் செலுத்துவது, இவைபோன்ற எதற்கும் பயன்படுத்த அனுமதியில்லை. அல்லாஹ்வின் தண்டணைக்கு பயந்து வட்டியை விட்டு முற்றும் தவிர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும்ஆகிய கட்டுப்பாடுகளால் மொத்தத்தில் இந்திய முஸ்லிம்களின் பொருளாதார பின்னடைவிற்கு இன்றைய வங்கியியல் நடைமுறையும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.

முஸ்லிம்களின் சமூக – பொருளாதார – கல்வி நிலையைப் பற்றி ஆய்வு செய்த நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அவர்களின் அறிக்கையில் வங்கி பரிவர்த்தனையில் முஸ்லிம்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை படம் பிடித்துக் காட்டியுள்ளார். நாட்டில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் வெறும் 12 விழுக்காடு தான் முஸ்லிம்கள். மக்கள் தொகையில் 6 விழுக்காடு உள்ள ஏனைய சிறுபான்மை மக்கள் 8 விழுக்காடு அளவிற்கு வங்கி பரிவர்த்தனை செய்கின்றனர். நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் உள்ள வங்கிகளின் கிளைகளை பல முழுமை பெற்ற சேவை வசதிகளற்ற   கிளைகளாக அந்த வங்கிகளின் தலைமையகம் வைத்துள்ளது. முஸ்லிம்கள் இன்றைய வங்கிகளோடு நெருங்கி பரிவர்த்தனை செய்யாதது தான் இதற்குக் காரணம் என்று நீதியரசர் ராஜிந்தர் சச்சர் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென்று போராடும் இயக்கங்கள் இஸ்லாமிய வங்கி முறைகளும் நாட்டில் உருவாக்கப் பட வேண்டுமென்று போராட அரசியல் செயல் திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டியது காலத்தின்  அவசியம்.

ஏனென்றால் இஸ்லாமிய வங்கி முறைகளை மேல்நாடுகள் கை நீட்டி வரவேற்க ஆரம்பித்துவிட்ட சரித்திரம் தொடங்கிவிட்டது.   இதோ உலகப் பொருளாதாரத்தை அலசும் ஒரு  பிறமத பொருளாதார ஆசிரியர் கூறுகிறார்.

“அமெரிக்காவிலும், பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் கவர்மெண்ட் செலவில் தேசிய அளவு பயம் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய சமூகத்தைக் குறித்துத்தான்.

கான், ஹசன், முஸ்தபா இப்படிப் பெயரை பாஸ்போர்ட்டில் பார்த்தாலே மேற்படி நாடுகளில் ஏர்போர்ட் இமிகிரேஷன் அதிகாரிகளின் பிளட் பிரஷர் எகிறிப்போகிறது. காது மடல் சிவக்க பாஸ்போர்ட்டை விரித்து பெஸ்ட் செல்லர் லிஸ்ட் புத்தகம்போல் ஒரு பக்கம் விடாமல், ஒரு வரி விடாமல் படிக்கிறார்கள்.

பல சந்தர்ப்பங்களில் உள்ளே தனியறையில் மணிக்கணக்காக விசாரணை செய்து பின் லேடனுக்கு ஒண்ணு விட்ட, எட்டு, எண்பது விட்ட தம்பிக்கு மச்சினன் சம்சாரத்துக்கு மாமா பிள்ளை இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு, கடனே என்று கதவைத் திறக்கிறார்கள்.
ஓர் இனத்தையே மறைமுகமாக பயங்கரவாதி முத்திரை குத்திவைத்திருக்கும் இந்த நாடுகள் கூட, ‘இஸ்லாமிய வங்கி’ என்றால் இருகரம் நீட்டி வரவேற்று ‘வாங்க, கோக் சாப்பிடுங்க’ என்று உபசரிக்கின்றன. “ [ நன்றி : இரா. முருகன் ]

வேறென்ன வேண்டும் ?
இறைவன் நாடினால் இஸ்லாமிய வங்கி பற்றிய விளக்கங்கள் தொடரும்...

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

குறிப்பு : அதிரையின் பிரபல எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்களால் 'இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்' என்ற தலைப்பில் 'அதிரை நிருபர் பதிப்பகம்என்ற பிரதான இணையதளத்திலிருந்து நெடுந்தொடராக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நெடுந்தொடர் அனைவரின் வரவேற்பையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Saturday, July 20, 2013

[ 4 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ கப்பலுக்கு போன மச்சான் ]

ஒப்பந்தம் அடிப்படையில் சென்ற நம்மவர்கள் ஒப்பந்த காலம் முடியும் வரை அந்த கம்பெனியிலேயே வேலை செய்ய வேண்டும். சில கம்பெனிகளுக்கு தொடர்ந்து சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அது போன்ற தருணத்தில் வேலைபார்க்கும் தொழிலாளிகளுக்கு தொடந்து வேலை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

மூன்று வருடத்திற்கு முன்பே ஊருக்கு செல்ல முடிவெடுத்து ஊர் சென்றவர்கள் ஐந்தாறு மாதம் பவனி வந்து பழைய நிலைமைக்கே திரும்பி வேலை இல்லாமல் கஷ்ட்டமான சூழலுக்கு தள்ளப்பட்டு அவதியுறும் நிலை வளைகுடாவில் தங்கி விடுப்பு எடுக்காமல் வேலை பார்த்து வரும் மற்றவர்களுக்கு தெரிய வரும். நான்கு ஐந்து ஆண்டு வரை விடுப்பு கேட்காமலேயே வேலை பார்த்து வருவர். இதனை கண்டும் காணமல் இருக்கும் இரக்கமற்ற நிர்வாகமும் உண்டு. சில நல்ல நிர்வாகமும் உண்டு.

வேலைக்கு சென்ற நேரங்களில் நல்ல அறிவிப்புடன் நிர்வாக அதிகாரிகள் வருவார்கள். ஊர் சென்று வர விமான டிக்கெட் மற்றும் விடுமுறை நாட்களுக்கு ஊதியமும் வழங்கி மகிழ்விப்பார்கள்.

ஊர் வந்து மீண்டும் வளைகுடா பயணம் மேற்கொள்ளும் இவர்களின் அனுபவம் நல்ல வழி காட்டுதலாக அமையும். ஊர் வந்து வளைகுடா பயணம் பற்றி விசாரிபவர்களுக்கு நல்ல தகவல்களை கொடுப்பார்கள் அதன் பிறகு முயற்சி செய்பபவர்கள் நல்லநிலை அடைந்தவர்களும் உண்டு.

ஓவ்வொரு அனுபவங்களுக்கு முன்னர் பல பரிட்சைகள் அதன் வெற்றி, தோல்விகளே ! வருங்கால சந்ததியினர்களுக்கு பாடம். வேலை பார்க்கும் இடங்களில் கவனமின்மையால் உயிரிழப்பு ஏற்படும் நிகழவுகளும் உண்டு. தாய் மண்ணை பிரிந்து தன்சொந்தங்களுக்காக உழைக்க வந்த இடத்தில உயிரை இழந்த பரிதாப சம்பவங்களும்  உண்டு.

கப்பலில் வேலை பார்க்கும் போது சரக்கு பெட்டகம் இறக்கும்போது சமிக்கைகள் புரியாது. பல டன் பாரமுள்ள சரக்கு பெட்டகம் விழுந்து நசுங்கியவர்களும் உண்டு. குளிரூட்டப்பட்டு பனிக்கட்டிகலாய் வரும் பெருட்கள் உள்ள பெட்டகங்களில் அடைபட்டு பனிக்கட்டியாய் மாண்டவர்களும் உண்டு. இதே போன்று வாகன விபத்தில் மாண்டவர்கள் பலபேர் !

கட்டிய கணவன் பல ஆண்டுகள் கழித்து பணம் காசுகளோடு வருவான் என்று காத்திருக்கும் பல பெண்கள் பரிதாபமாய்  விதவையாய் வதங்கிய சரித்திரங்களும் உண்டு. கேலி கிண்டலால் வாழ்வை பறிகொடுத்த சம்பவங்களும் உண்டு. ஒவ்வொன்றாய் வரும் வாரங்களில் பார்போம்...

1975 லிருந்து 1980 வரை ஊடகங்கள் நவீனம் அடைந்திராத நிலை. நம்மவரின் வளைகுடா வாழ்கை பற்றி, கணவன் மனைவி பிரிவுகள் பற்றி வெளி உலகுக்கு காட்டிடவில்லை பத்திரிகைகள் கூட இதில் அதிகம் கவனம் செலுத்த வில்லை என்பது வேதனையான ஒன்று.

மூன்று மாதமே மணமான சூழலில் வளைகுடா பயணம் மேற்கொண்டு. இரண்டு மூன்று வருடம் பிரிந்து வாழும் தருவாயில் கணவன் மனைவிக்கிடையே கடிதமே வடிகால். இந்த சூழலை மைய்யப்படுத்தும் விதமாக பாடல்கள் வெளியாயின

அன்றைய சூழலில் மக்கள் இசை பதிவுகளை விரும்பி கேட்பார்கள் தொலை காட்சி, வீடியோ போன்றவை இல்லாத காலகட்டம் வானொலி, பதிவு நாடா எனப்படும் டேப் ரிக்கார்டர் மூலம் பாடல்கள் கேட்பார்கள் ..இஸ்லாமிய பாடல்கள் பாடும் பாடர்களில் நாகூர் ஹனீபா, காயல் சேக்முகமது இருவரும் பிரபலம். வளைகுடா வாழ்க்கை பற்றி சேக் முகம்மது அவர்கள் பாடிய பாடலைக் கேட்டுப் பாருங்கள் தலைவன் தலைவி பிரிவின் வலி தெரியும்...
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, July 19, 2013

'கவித்தீபம்' கலாமின் 'தவம்'

அறிவிப்பு :
'கவித்தீபம்' என்னும் பட்டத்தை கவியன்பன் அபுல் கலாம் அவர்கள், இலங்கையிலிருந்து செயல்படும் சர்வேதச அளவினான தடாகம் இலக்கிய வட்டத்திலிருந்து பெற்றுள்ளார்.

சமூக விழிப்புணர்வு பக்கங்கள் குழுமத்தின் சார்பாக 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களுக்கு பாரட்டுக்களையும் - வாழ்த்துகளையும் அன்புடன் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம்.

தவம் :
வரம் என்னும் கனிதரும்
மரம் தான் தவம்!

இறைவனுக்கு
இணை கற்பிக்காத
முறையான வழிபாடும்
மேன்மை தரும் தவம்!

சுவனமென்னும் வரம்
சுபச்சோபனம் தரும்
கவனமுடன் நோனபாய்க்
கடைபிடிக்கும் தவம்!

ஏழைக்குரிய வரியை
ஈந்துவக்கும் நெறியை
ஆழமாய் நோக்கினால்
ஆங்குண்டு தவம்!

இறுதிக் கடமையாய்
இறையில்லம் நோக்கி
உறுதியுடன் பயணித்தல்
உண்மையிலே தவம்!

பாவம் களைந்து
பகைமை ஒழிந்து
கோபம் இல்லாக்
குணமே தவம்!

காட்டில் தனித்துக்
காட்டுதல் தவமன்று;
நாட்டில் நன்மைகள்
நாட்டுதலே தவம்!
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இக்கவிதை 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் 57-ஆம் பிறந்த நாளான [ 18-07-2013 ] அன்று இலண்டன் வானொலியில் ஒலிபரப்பட்டன. அதன் காணொளி இதோ...

Wednesday, July 17, 2013

இரவே இல்லாத ஊர்களில் எப்படி நோன்பு நோற்பது ?

டென்மார்க்கில் முஸ்லிம்கள் இந்த ஆண்டு [ 2013 ] 21 மணிநேர நோன்பை கடைப்பிடிக்கின்றனர். ஆனால் அர்ஜெண்டினாவில் 9 மணி நேரமே நோன்பு நோற்கிறார்கள்.

ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மார்மான்ஸ்க் நகரத்தில் 24 மணிநேரமும் பகல் ஆகும். ஒரு நிமிடம் கூட அங்கு இருள் பரவாது. ஆகவே அங்குள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்பதும், நோன்பு திறப்பதும் சூரிய வெளிச்சத்திலேயேதான் நடக்க முடியும்.

இரவு அதிகமாக வரும் சில காலங்களில் சில இடங்களில் வெறும் 2 மணிநேரம் மட்டுமே நோன்பு நோற்பதாக அமையும். சில இடங்களில் முழு நாளும் இரவாகவே அமையக்கூடும். அவர்கள் இரவிலேயேதான் நோன்பு நோற்கவும் திறக்கவும் முடியும்.

இதன் அடிப்படையில் பார்த்தால், நோன்பு நோற்கும் கால அளவை உலக முஸ்லிம்கள் வரையறுத்துக்கொள்ளுதல் அவசியம் என்று ஆகிறது.

இறைவன் நமக்கான நன்மை தீமைகளை வரையறுத்துக்கொடுத்து, நல்ல அறிவையும் ஊட்டி, வாழும் வழியை அவன் திசையில் வகுத்துக்கொள்ள தேவையான அனைத்தையும் அவனே வழங்கியும் இருக்கிறான்.

உங்களில் எவர் ரமளான் மாதத்தை அடைகிறாரோ,
அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;
எனினும் எவர் நோயாளியாகவோ
அல்லது பயணத்தில் இருக்கிறாரோ
அவர் பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;
இறைவன் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர,
உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை;
குர்-ஆன் 2:185 (ஒரு பகுதி)

அன்புதான் இஸ்லாம்.
கருணைதான் இறைவன்.

பல இடங்களில் அவன் அழுத்தமாகக் கூறுவது யாதெனில் அவன் மனிதர்களை சிரமங்களுக்கு உட்படுத்துவதே இல்லை என்பதைத்தான்.

நன்மை தீமை அறிந்து நல்ல வழியில் செல்லவே மனிதர்களுக்கு இறைவன் கட்டளையிடுகிறானே தவிர மனிதர்களை அவன் சிரமங்களுக்கு உள்ளாக்குவதே இல்லை.

இறைவன் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை (குர்-ஆன் 2:185) என்று இறைவன் தெளிவாகவே தன் வசனத்தில் கூறுகின்றான்.

மெக்காவில் நோன்பு நோற்கும் காலம் என்பது 11 மணி நேரத்திலிருந்து 13 மணி நேரங்கள்தாம். நோன்பு என்பது மக்கா மதினா நகர வாசிகளைக் கொண்டுதான் வரையறுக்கப்பட்டது. அதைத்தான் உலக மக்கள் யாவரும் பின்பற்றுகிறோம்.

அப்படி பின் பற்றும்போது வரும் ஏற்ற இறக்கங்களை இறைவனின் வழியில் நாம் சரிசெய்துகொள்வதும் நமக்குக் கடமையாகும்.

ஒரு நாளில் அதிகப்படியாக 14 மணி நேரம் நோன்பு நோற்பது என்பது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிரமம் தராததாக அமையும்.

கடுமையான வெயில் காலங்களில் குழந்தைகள் தாகம் காரணமாக சுருண்டு விழுந்துவிடும் நிலையை இறைவன் ஒருக்காலும் தரமாட்டான். ஏனெனில் அவன் கருணையுடையவன், அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்.

நோன்பின் நோக்கம் அறியாமல் நோன்பு வைப்பதால் நன்மையைவிட தீமையே விளையும்.

நோன்பின் நோக்கங்கள் பல. அவற்றுள் மிக முக்கியமானவை என்று மூன்றினைக் கொள்ளலாம்.

1. பசியை உணர்ந்து உலக ஏழ்மையைப் போக்குதல்,

2. தனித்திருந்து ஓதியும் தொழுதும் இறைவனை அறிந்து நல் வழியில் செல்லுதல்,

3. உணவுக் கட்டுப்பாடுகளுடன் பசியில் இருந்து உடலை ஆரோக்கியமானதாகவும் வலுவானதாகவும் ஆக்குதல்.

நோன்பு நாட்களில் நோன்பு திறந்தபின்னும் நாம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம், ஒரு பேரீச்சம் பழத்தையும் ஒரு குவளை தயிரையும் கொண்டு நோன்பு திறந்ததாக குறிப்புகள் சொல்கின்றன.

நோன்பு திறக்க நம் ஊரில் வாங்கிக் குவிக்கும் உணவுவகைகள் ஏராளம். மற்ற மாதங்களில் உண்பதைவிட ரமதான் மாதத்தில்தான் நாம் அதிகம் உண்கிறோம்.

நோன்பின் நோக்கத்திற்கு இது மாறாக இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பகல் முழுவதும் உறங்கியும் இரவெல்லாம் விழித்திருந்தும் சிலர் நோன்பை சமாளிக்கிறார்கள். பகலில் சிறிது நேரம் உறங்குவது தவறில்லைதான். ஆனால் இப்படி இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றிக்கொண்டு பசியை உணராதிருப்பது சரியா என்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நோன்பின் நோக்கம் நிறைவேறாமல் கடமையே என்று நோன்பு நோற்பது கூடுமா என்று நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

அறிவினைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன். அன்புதான் இஸ்லாம் கருணைதான் இறைவன்.
அன்புடன் புகாரி

Monday, July 15, 2013

இணையற்றானின் இணையற்ற கூலி !

இணையற் றானின்
இணையற் றகூலி !
நன்நோன் பிற்கு
தன்னை தருதல் !

நின்னை உயர்த்த
நோன்பு நோற்க
தன்னை தருதல்
என்ன! சொல்லது !

ஊனும் இல்லை
உறக்க முமில்லை
தேவை அற்றான்
இறைவன் தனக்கு.

ஊனும் உண்டு
உறக்கமு முண்டு
தேவை உள்ளான்
மனிதன் தனக்கு.

நன்னுயர் கூலியென
தன்னைத ருகிறான்
தன்குணம் தாங்கிடும்
மண்இனத் தார்க்கு !

சுவர்கம் பெறபலர்
அவனைய டையசிலர்
வணக்கம் புரிகிறர்
இணங்கி நடக்கிறர்.
.
சுவர்கம் பெறுதல்
சுகமதில் இருத்தல்
அவனை அடைதல்
அனைத்தும் அடைதல் !

நன்றுயி னிபழகு
என்றும துஇலகு
நல்ல நோன்பது
நாயன் சொன்னது.

என்னப ரிசுஇது !
எங்கனு முண்டா !
ஏகனின் கூலி
நிகரே இல்லை !

உலகமுன் மாதரி
கூலிய டைந்த
புவிதனில் முதல்வர்
நபிகள் கோமான் !

போதனை அன்றி
தானே வாழ்ந்தும்
வாழ அழைத்தார்
சாதனை தந்தார் !

உணவை மறந்து
உறக்கம் இழந்து
அவனது நிலையில்
தன்னது நினைவு !

நோன்பு நோற்று
அவனை பெற்று
நல்அது வேதம்
நாயகம் தந்தார் !

இவனின் வாழ்வில்
இலக்குகள் உண்டு
அவைதனில் முதலாம்
அவனைய டைதலே !
 
இவனது நோம்பிலும்
அவனது பொருத்தம்
அவன்கூ லியாய்
இவன்பெற வேண்டும் !

உன்னது நோன்பில்
தன்னைத ருகிறான்
இன்னும் உண்டா ?
நன்னிது போலும் !

கருஅது விட்டு
ஊனது விட்டு
உறக்கம் துறந்து
நோற்றார் நோன்பு.

குதர்கம் கண்டு
தருக்கம் பூண்டு
நெருக்கம் அகன்று
நிற்கிறார் இன்று.

சுவர்கம் படைப்பு
அவனோ நிலைப்பு
நோன்பை நோற்றிடு
ஏகனை பெற்றிடு !

நன்நோன் பிற்கு
நாயனை பெறுதல் ! -இது
இணையற் றானின்
இணையற் றகூலி !

நபிதாஸ்

Saturday, July 13, 2013

[ 3 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' !

ஒப்பந்தம் அடிப்படையில் வேலைக்கு சென்ற நம்மவர்களில்... கம்பெனியின் நிலவரம், நிர்வாகிகளின் மனநிலை அறிந்து நல்ல முறையில் வேலை பார்ப்பவர்களும் உண்டு. அதிகமானோர் வெள்ளாந்தியாய் காலம் செல்ல செல்ல ஊர் சென்று குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற ஒரே சிந்தையில் நிர்வாகத்திடம் ஊர் செல்வதை பற்றி தகவல் கூறாமல் தானே முடிவெடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் பொருள் சேர்த்து அத்துடன் ஊர் செல்ல வேண்டும் என்ற ஆவலையும் சேர்த்து தனது முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள்.

இந்த நிலை நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு நிர்வாக செலவினம் பற்றிய சிந்தனையில் தந்திரமான நிபந்தனைகள் வைப்பார்கள். மூன்று வருடம் ஒப்பந்தந்தம் முடிந்து விட்டது இப்போதே ஊருக்கு செல்ல வேண்டும் எ ன்றால் உனக்கு திரும்பி வரும் விசா கிடையாது. இன்னும் ஒரு வருடம் காத்திருந்தால் விசா புதுப்பித்து தருகிறோம் என்பார்கள்.

நம்மவரின் மனநிலை நன்றாக அறிந்தே இந்த நிபந்தனை. ஆசையாய் வாங்கி வைத்த பொருள் அது மனைவி மக்களிடம் கொடுத்து அவர்கள் மகிழ நாம் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.

இப்படி ஊருக்கு செல்ல முற்படும் அப்பாவி ! ஒரு பயணி எவ்வளவு கிலோ கொண்டு செல்ல வேண்டும் என்பதை அறியா அவர்கள் புறப்படும் போது விமான நிலையத்தில் விலை மதிப்பற்ற பொருள்களுக்கு கூடுதல் கட்டணம் கட்டி சோகமாய் ஊருக்கு பயணம் மேற்கொள்வார்கள். நேரடியாக பம்பாய் வந்து இறங்கிய அவர்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகளால் கொடுக்கப்படும் தொல்லை மிகவும் பரிதாபமானது.

சுங்க பரிசோதனை என்ற பெயரில் நீண்ட தூர பயணத்தில் வந்த பயணியை குற்றவாளியை நிறுத்தி விசாரிப்பது போல என்ன கொண்டு வந்துள்ளாய் என கேட்டு அவர் கொண்டு வந்த உடமைகளை தனி தனியாய் சோதனை செய்து அதில் தனக்கு பிடித்த பொருளை அடாவடியாக எடுத்து கொண்டு உனது பொருளுக்கு சுங்க தீர்வையாக பத்தாயிரம் போடுகிறேன் என்பார் ! அப்பாவி தொழிலாளி செய்வது அறியாது திகைப்பார். அவ்வளவு பணத்திற்கு எங்கு செல்வேன் என்பார் உடனே இரக்கம் காட்டுவது போல் சரி சரி என்னிடம் ஆயிரம் தந்து விட்டு அங்கு ஆயிரம் கட்டி விட்டுச்செல் என்பார்.

அப்பாடா ! தப்பித்தோம் !? என்ற மன நிலையில் அப்படியே செய்வார் நம்மவர் பிறகு பம்பாயிலிருந்து உள்நாட்டு விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து அவர் தம் வீட்டிற்குச்செல்வார்.

ஊர் வந்த அவர் ஒரு மஹாராஜாவை போல கவனிக்கப்படுவார். காலாறா நடப்போம் என்று வீதி உலா, புது உடை, கையில் பல பலக்கும் கடிகாரம், ஊட்டமாக உணவுண்டு குளிரூட்டப்பட்ட அறையில் உறங்கியதால் பார்க்க நிறமாக காட்சி அளிப்பார். அரபு நாட்டு வாழ்க்கை பற்றி கேட்க சுற்றி வாலிபக்கூட்டம்.

வளைகுடா வாழ்கை பற்றிய முதல் தகவல் அறிக்கை ! அடுத்த தலை முறையினரின் ஆவலை தூண்டும் தகவலாய் அமைந்தது. நன்றாக படித்தவரின் நிலை காணாமல் கிணற்று தவளையாய் இருந்து ஊர்வந்த அப்பாவி பளபளக்கும் நிலை பல அப்பாவிகளை உசுப்பேற்றிய தகவலாய் அமைந்ததின் விளைவு பல ஆயிரக்கனக்கான்  நம்மவர்கள் பாஸ்போர்ட் எடுத்ததும் வளைகுடா !

செல்ல எத்தனித்தும் அதில் பலர் வெற்றி கண்டதை பற்றி அடுத்த வாரம் காண்போம்.

குறிப்பு :
* 1972..களில் ..சுதேசி கொள்கை காரணமாக வெளி நாட்டு பொருகள் அதிகம் கொண்டு வர கட்டுபாடு இருந்தது அது சுங்க துறை அதிகாரிகளுக்கு நல்ல வருமானத்தை ஈட்டி தந்தது.

* ஒரு ஒப்பந்த தொழிலாளி ஒன்வே விசா கொடுத்து ஊருக்கு அனுப்பப்பட்டால், மீண்டும் ஒரு நபர் தேவைப்படுவார் அதற்கு விசா விண்ணப்பித்து இந்தியாவில்  விசாவை விற்று பணம் பார்த்து விடுவர்.

* வளைகுடாவில் வேலை பார்ப்பவர்களின் பணங்கள் பொருளாகி பணம் விரயமாகுவதும் மன உளைச்சலினை எற்படுத்துவதுமாய் அமைகிறது. பணம் சம்பாதிக்க வந்தவர்கள் பணத்தினை ஊருக்கு அனுப்புவதில் கவனமாக இருத்தல் நலம்.

* ஊருக்கு செல்வதில் நாட்டம் கொள்வதை, கொஞ்சம் தாமதப்படுத்தினால் நலம்
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
Pro Blogger Tricks

Followers