.

Pages

Tuesday, April 30, 2013

ஏமாறாதே !? ஏமாற்றாதே !?

இந்த வாரம் ஒரு வித்தியாசமான விழிப்புணர்வு ஆக்கத்தை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்ப காரணம் மக்கள் இன்னும் மூட நம்பிக்கை என்னும் ஏமாற்றத்தில் இருப்பதுதான். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.

அனேகமனோருக்கு 8, 13 போன்ற எண்கள் என்றாலே அலர்ஜி. அது ஒரு துரதிஷ்டமான எண்கள் என்று. யாரும் 8ம் 13ம் நம்பர் உள்ள வீட்டு எண்ணில் குடிவர மறுப்பார்கள். அந்த நம்பர் உள்ள ஹோட்டல் அறை எண்ணில் தங்க மறுப்பார்கள். அந்த நாளில் எந்த காரியத்தையும் ஆரம்பிக்க தயங்குவார்கள். சில/பல நாடுகளில் ஆஸ்பத்திரிகளில் 8ம் 13ம் எண் உள்ள வார்டே கிடையாது.

எண்களை உருவாக்கியது மனிதன், ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் பூஜ்யம் வரை அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப வடிவங்களும் மாறும். இப்போது இந்த வடிவங்களை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0. பாருங்கள் இதுதான் இன்று உலகளவில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படும் வடிவமாகும். இதில் மூட நம்பிக்கையாளர்களுக்கு பிடிக்காத எண்கள் 8ம்  13ம். நானும் பல பேர்களிடம் கேட்டுப்பார்த்து விட்டேன் ஒரு விடையும் இன்றளவும் கிடைக்க வில்லை.

நாட்களை உருவாக்கியது மனிதன், எண்களைப்போலவே ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எது நல்ல நாள் எது கெட்ட நாள். காரணம் கேட்டால் தெரியவில்லை.

நேரங்களை உருவாக்கியதும் மனிதன், இதிலும் நல்ல நேரம், கெட்ட நேரம், இன்னும் எனக்கு விடை கிடைக்க வில்லை, ஒரு சமயம் நல்ல நேரத்தில் விடை கிடைக்கப் போகுதோ ?

குழந்தை இறைவனால் கொடுக்கப்படுகின்ற ஒரு உயிர், குழந்தை பிறந்த நேரம் பார்த்து குடும்பத்தில் ஏதாவது நடந்திருந்தால், அவ்வளவுதான் அந்தக் குழந்தை. அதுவும் அது பெண் குழந்தையாக இருந்தால் சொல்லவே தேவை இல்லை.

மனிதனுக்கு உண்டான அடிப்படை தேவைகளில் வீடும் ஒன்று. அதை எல்லோரும் இப்படித்தான் கட்டிக் கொள்ளனும் என்றில்லை, அவரவர் விருப்படி எப்படி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். கட்டும்போது தனித்தோ அல்லது கூட்டியோ அந்த எட்டும் பதிமூன்றும் வராதவாறு வீடு மற்றும் உள் அளவுகளை அமைத்து, நல்ல நாட்கள் பார்த்து, நல்ல நேரம் பார்த்து, எல்லாம் பார்த்து அந்த புதிய வீட்டுக்குள் குடி போய் இருப்பார்கள், கை தவறி ஒரு கண்ணாடி கிளாஸ் உடைந்து இருக்கும், அவ்வளுதான் எல்லாம் அவுட். அந்த கண்ணாடி கிளாஸ் உடைந்தது இவர்களுடைய கவனக் குறைவினால், ஆனால் அவர்கள் அதை உணர மாட்டார்கள், வீடு சரியில்லை, முதலில் யார் அடி எடுத்து வைத்தது ? என்றெல்லாம் ஒரு போறே நடக்கும்.

யார் முகத்தில் விழித்தேனோ ? மருமகள் வந்த நேரம் சரியில்லை, பூனை குறுக்கே போய்விட்டது, எதிரே அந்த ஆள் வந்த சகுனம் சரியில்லை, நேற்று இராத்திரி ஆந்தை வீட்டின் கூரைமீது கத்தியது, நாடு இராத்திரி ஜாமம் ஒன்றரை மணிக்கு குடு குடுப்பைக்காரன் ஏதோ சொல்லிவிட்டு போனது மனதுக்கு சங்கடமாக இருக்குது, மேலும் அப்படியென்றும் இப்படியென்றும் புழம்பித் தள்ளுபவர்கள் அநேகரைக் காணாலாம். இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் இந்த மூட நம்பிக்கையைப்பற்றி எழுதித் தள்ளலாம்.

ஒரு விபத்தில் பல பேர் ஒரே நேரத்தில் உயிர் இழந்து விட்டதாக வைத்துக் கொள்வோம், அந்த அத்தனை பேர்களுடைய ஜாதகத்தை வாங்கிப் பாருங்கள், வித்தியாசமாக இருக்கும், உயிர் இழந்தது ஒரே நேரம், ஜாதகம் சொல்லுவதோ வித்தியாசமான நேரங்கள். இதில் எது உண்மை எது பொய் ?

ஒரு தம்பதிக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது, அந்தக் குழந்தையை தாயே விஷம் கொடுத்துக் கொன்றாள், காரணம் அந்தக் குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்ததினால் அவளுக்கு எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை அமையாது என்று மந்திரவாதி ஒருவன் சொன்னது தான். மந்திரவாதிக்கு ஒழுங்கான வேலை இல்லாததினால், அவன் ஊர் ஊரா சென்று மக்களை ஏமாற்றி வாழ்ந்து வருகின்றான்.

பதை பதைக்க வைக்கும் இந்த நிகழ்வு கலாச்சாரங்களிலும், இலக்கியத்திலும் செழித்து விளங்கும் நமது தமிழகத்திலேயே நிகழ்ந்துள்ளது என்பது மூட நம்பிக்கை எந்த அளவுக்கு நம்முடைய சமுதாயத்தின் வேர்களை அரித்திருக்கிறது என்பதற்கு ஒரு சான்று. இது மட்டுமல்ல, தலைப்பிள்ளையை நரபலியிடுதல், குழந்தையைக் கீறி இரத்தம் எடுத்தல் என்றெல்லாம் தினசரி ஏடுகளில் வரும் செய்திகள் 

இறைவன் நமக்கு மன வலிமையை கொடுத்துள்ளான், சிந்திக்கக் கூடிய திறமையை கொடுத்துள்ளான், எல்லாவற்றிற்கும் அவனே காரணம் என்று இறைவன் கூறுகின்றான். விதை விதைத்தவன் நீர் ஊற்றாமல் இருப்பனா ? நடப்பவை எல்லாம் நம்மைக்கே என்று இருந்து விட்டால் அந்த இடத்தில் ஒரு சிறு துளி சிரமம் ஏதும் இல்லாமல் மனது நிம்மதியாக இருக்கும்.

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Monday, April 29, 2013

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் : அனுபவம் பேசுகிறது...

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கூறுவார்கள். 

எவ்வினையோருக்கும் இம்மையில் தம்மை இயக்குதற்கு இன்பம் பயக்கும் ஓர் வேலை – தேவை. அந்த வேலைதான் அவர்களுக்கு சமுக அந்தஸ்தையும் அடையாளத்தையும்  கொடுக்கும். அந்த வேலைதான் அவர்களுக்கு வாழ்வுத்தேவைகளை நிறைவேற்றும்.  அதுமட்டுமல்லாமல் உலகத்தில் தான் ஒரு உபயோகமான நிலையில் இருக்கிறோம் என்ற மன திருப்தியை அவரவர்களுக்கு தருவதும் வேலைதான். நமக்கு பிடிக்காவிட்டாலும் மாப்பிள்ளைமார்களுக்கு வரதட்சனையை நிர்ணயம் பண்ணுவதும் வேலைதான். பெண் கூட வேலையை பார்த்துதான் கொடுக்கிறார்கள். ஒவ்வொருவரும்  ஏதாவது வேலையில் இருந்து பொருள் ஈட்டுவது அவரவர் சார்ந்திருக்கும் சமூகத்திறக்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும். அந்த வேலைக்காகத்தான் படிக்கிறோம் – பட்டம் வாங்குகிறோம். கடல் கடக்கிறோம் –அன்னையை, தந்தையை ,மனைவி, மக்களை சுற்றம் நட்பை பிரிகிறோம்.

வேலையில்   திறமை காட்டுவதன் அடிப்படையில்தான் [ DELIVERING EXCELLENCE ]  நமக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும் . 
பலர் தங்களுக்கு ஒரு வேலை கிடைத்து அதில் அமர்ந்துவிட்டால் போதும் என்று நிறுத்திக்கொள்கிறார்கள்.. தங்களின் வேலையில் தேவையான திறமை காட்டுவதற்கோ அதிலிருந்து அடுத்த மேற்படிககு செல்வதற்காக தங்களுடைய தகுதிகளை உயர்த்திக்கொள்ளவேண்டுமென்றோ நினைத்து பலர் பாடுபடுவது இல்லை. பணிக்கால மூப்பின் அடிப்படையில் சட்டத்திற்கும் ஒழுங்குமுறைக்கும் உட்பட்டு வருடா வருடம் கிடைக்கும் ஊதிய உயர்வும் பதவி உயர்வுமே போதும் என்று திருப்தி அடைந்து விடுகிறார்கள் அரசு வேலையில் அமர்ந்துவிட்டவர்களுக்கு வேண்டுமானால் இந்த எண்ணம் சரியாக இருக்கலாம் அதுவும் சில நேரங்களில்தான். ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அளக்கப்படும் என்பதை அவர்கள் உணரவேண்டும்.

எனக்கு தெரிந்து இந்திய அஞ்சல் தந்தி துறையில் அலுவலராக பணிக்கு சேர்ந்து தனது ஐம்பத்திஐந்தாவது வயதில் தலைமை அலுவலராகி 58 வது வயதில் ஒய்வு பெற்றவரை தெரியும். அதே நேரத்தில் சாதா தபால்காரராக சேர்ந்து 5 வருடத்தில் அலுவலராகி 10 வருடத்தில் தலைமை அலுவலராகி 15 வருடத்தில் மாவட்ட பிரிவு நிர்வாகியாகி 52 வயதில் மாவட்ட நிர்வாகியாகி ஒய்வு பெற்றவரையும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

சிலர் வேலை செய்வார்கள். ஆனால் அந்த வேலையை திருந்த செய்ய மாட்டார்கள். வேலையை திருந்தவும் சிறப்புறவும் செய்பவர்களே கவனிக்கப்படுகிரார்கள். பதவி உயர்வு பெறுகிறார்கள். அதையும் விட செய்தவேலையை மேலதிகாரிகளுக்கு அவர்களுடைய கவனத்தில் படும்படி செய்வது ஒரு கலை. இதை ACCURACY, PERFORMANCE & PRESENTATION என்று கூறலாம்.

தான் ஈடுபட்டு இருக்கும் வேலை சமபந்தப்பட்ட கல்வித்தகுதிகளை வேலை செய்தபடியே மேம்படுத்திக்கொள்வதும் ஒரு இன்றியமையாத தன்மையாகும். அதை CAREER DEVELOPMENT  என்று கூறலாம். 

ஒரு மரம வெட்டுபவன் ஒரு எஸ்டேட்டில் வேலைக்கு சேர்ந்தான். நல்ல உரம்பாய்ந்த உடல் தகுதி உள்ளவன். வேலைக்கு சேர்ந்த முதல் வாரம் 20 மரங்களை வெட்டி அடுக்கினான். அடுத்தவாரம் அவனால் 15 மரம்தான் வெட்ட முடிந்தது. அதற்கு அடுத்தவாரம் 10  மரங்களே வெட்ட முடிந்தது. நேராக தனது முதலாளியிடம் போனான். தனது பிரச்னையை சொன்னான். தன்னால் எவ்வளவு உழைத்தும் முன்பு போல் அதிக மரங்கள் வெட்ட முடியவில்லை என்றான். முதலாளி சிரித்துக்கொண்டே அவன் கையில் இருந்த கோடாரியை வாங்கிபார்த்தார். அது கூர் தீட்டப்படாமல் மழுங்கி இருந்தது.

மரம்வெட்டியிடம் இவ்வாறுகூறினார். கோடாரியின் முனை தீட்டப்படாத காரணத்தால் உன்னால் முன்புபோல் அதிக மரம வெட்ட முடியவில்லை . அவ்வப்போது கோடாரியை கூர் தீட்டி மரம வெட்டு என்றார். அதன்படி செய்ததால் அவனால் மீண்டும் 20   மரம வெட்ட முடிந்தது. 

மரவெட்டிக்கு சொல்லப்பட்டது பணியில் உள்ள எல்லோருக்கும் பொருந்தும் . கோடாரியை அடிக்கடி கூர் தீட்டிக்கொள்வதுபோல் தனது துறை சம்பந்தப்பட்டவைகளில் அடிக்கடி நமது அறிவை கூர் தீட்டிக் கொள்ளவேண்டும்.  அன்றாடம் படும் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் இதைத்தான் பட்டறிவு என்று கூறுவார்கள். 

இளநிலை பட்டதாரியாகி வேலையில் சேர்பவர்கள் தான் சேர்ந்து இருக்கும் துறை சம்பந்தப்பட்ட முதுகலையை அஞ்சல் வழியாக கற்கலாம். அத்துடன் துறை சம்பந்தப்பட்ட போட்டி தேர்வுகளில் படித்து கலந்து கொள்ளலாம். பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தங்கள் செலவிலேயே பயிற்சி GLOBAL ENGLISH TRAINING , ORACLE,  PREMVIERA, ACONEX , QUALITY CONTROL, QUALITY ASSURANCE, HEALTH & SAFETY, ENVIRONMENTS போன்ற வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.  ஆனால் பலர் அதில் பங்கெடுப்பது இல்லை .தோற்றுவிட்டால் என்ன செய்வது என்ற பய உணர்வும் காரணமாக இருக்கிறது. 

கட்டிட பொறியாளர்கள் பலருக்கு AUTOCAD  இயக்க தெரியாது . அதனால் அவர்களுக்கு உயர்வு தடைபடும். சிவில் மட்டும் தெரிந்து பணியில் சேர்பவர்கள் அதை தொடர்ந்து மெகானிகல் , எலெக்ட்ரிகல் , உள்அரங்க டிசைன், பிளம்பிங்க் போன்றவைகளையும் அதன் மென்பொருள் பயன்பாடுகளையும் கற்று தெரிந்து தன்னை மேம்படுத்திக்கொள்வது அவரவர் வாழ்வில் தங்கப்பதக்கத்தில் ஒரு முத்து பதித்தது போலாகும். 

அலுவலகத்தில் தேநீர் கொடுத்துக்கொண்டு – கழிவறை சுத்தம் செய்து கொண்டிருந்த  ஒருவர் தனது முயற்சியால் கூட இருந்தவரிடம் கேட்டு கேட்டு கணிப்பொறி கற்று , இன்று ACONEX, PREMVIERA  போன்ற மென்பொருள் பயன்பாடுகளை கற்று அறிந்து டாகுமென்ட் கண்ட்ரோளராக பணிபுரிகிறார். [ ஜாபர் சாதிக் ]

அதேபோல் பத்தாவது மட்டும் படித்த ஒருவர் – கட்டிடத்தொழிலாராக வந்தவர் -இன்று நிறுவனம் நடத்திய ORACLE TRAINING- ல் துணிவுடன் பங்கேற்று  நேரகண்காணிப்பாளராக ( TIME –KEEPER)  பிளந்து கட்டுகிறார்.  (ராமமூர்த்தி)

எடுபிடி உதவியாளராக ( HELPER ) பணியில் சேர்ந்த பலர் எனக்கு தெரிந்து ஒரு தனிப்பட்ட தொழிலை தெரிந்தவர்கூடவே இருந்து கற்றுக்கொண்டு கொத்தனார்களாக, பிளம்பர்களாக, உருவெடுத்துவிட்டதுடன் அதில் திறமையும் காட்டி வருகிறார்கள். ( எவ்வளவோ பேர்கள்)

அடிப்படை கல்வி அறிவு அவ்வளவாக பெற்றிராத ஒருவர் தனது பணியின் ஈடுபாடு , அர்ப்பணிப்பு, ஒழுங்கு, நேரம் தவறாமை, காரணமாக உதவி கட்டிட பொறியாளராக உயர்வு பெற்றுள்ள உண்மை கதையும் உண்டு.  ( கார்த்திக்)
நிறைய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை புடம்போட்டு எடுக்கவும் –வெளிநாடுகள் அனுப்பிகூட மேற்கல்வி கற்றுவரவும் அனுப்புகிறார்கள். இதற்காக வருடத்துக்கு இவ்வளவு என்று நிதி ஒதுக்குகிறார்கள். 

இந்த கணிப்பொறியுகத்தில் மாற்றங்கள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கின்றன. இன்று உள்ள ஒரு செயல்பாடு நாளை புதிய ஒரு உருவில் வருகிறது. ஆகவே மாற்றங்களை, வளர்ச்சிகளை தொடர்ந்து கவனித்து வருவோர்களே – அதற்காக தங்களை தயார் படுத்திக்கொள்பவர்களே தங்களின்  உயர்வான மாற்றங்களுக்கு தாங்களே வழி வகுத்துக்கொள்வார்கள். 
அப்படி தன்முயற்சி, விடா முயற்சி, செய்தொழில் திறமை, அர்ப்பணிப்பு, உடையவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவது மனித வள மேம்பாட்டுதுறைகளின் தலையாய பணிகளில் ஒன்றாகும். [ RECOGANIZE AND REWARD ].

அடை காக்கப்படும் முட்டையிலிருந்து  கோழிக்குஞ்சுகூட தன் தோட்டை இளம் அலகால்  கொத்தி கொத்தித்தான் உடைத்துக்கொண்டு வெளிவருகிறது. இன்றைய உலகில் ஏற்றம் பெற எல்லா வசதிகளையும் பெற்றுள்ள நாம் முயன்றால் முடியாதது இல்லை - இறையருளால்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

Saturday, April 27, 2013

[ 7 ] உள்ளம் கேட்குமே !? MORE...!

அன்றாடம் நடைபெரும் பள்ளி கூட வகுப்பறையில் ஆசிரியரின் அணுகு முறை எப்படி இருக்கும் இதனை உளவியல் ரீதியாக பார்ப்போம்...

ஆசிரியருக்கு பாடம் நடத்திட  காலகெடு  நிர்வாகம்  கட்டளை இட்டிருக்கும் காலாண்டிற்குள் இத்தனை பாடம் நடத்தி முடிக்க வேண்டும்.

அறையாண்டிற்கு ..இத்தனை பாடம்  ..கல்வியாண்டு முடிவிற்குள் அனைத்து பாடங்களும் முடிக்க பட வேண்டும் இவையல்லாமல் வகுப்பில் நூறுசத விகிதம் தேர்வு பெற வேண்டும் என்ற கட்டளையும் இட்டிருப்பார்கள். இதுவே ஆசிரியரின் கடினமான அணுகு முறைக்கு காரணமாக அமைகிறது. நான் முன்பு கூறிய நான்கு பின்னணி கொண்ட மாணவர்களின் நுகர்வு அடிப்படையிலேயே  ஆசிரியரின் அணுகு முறையும் அமைகிறது.

சில பள்ளிகளில் நல்ல கல்வி பின்னணி கொண்ட மாணவர்கள் அதிகமாக காணப்படும் நிலை என்றால் அங்கு அமைதியான சூழலும் நிகழும். ஆனால் நான் கூறிய வறுமையில் வாடும் கல்வி பின்னணி இல்லா சூழலில் வளர்ந்த பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்ப்பிக்கும் முறை வழக்கத்திற்கு மாறான முறையில் இருக்கும். தனக்கு இவ்வுலகில் எந்த வசதியும் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் வாடிய முகம், வதங்கிய உள்ளம் உற்சாக மில்லா சூழல்  இதையறியா ஆசிரியர் கனிவான அணுகுமுறையை கையாளாமல், தான் நடத்திய பாடத்தை கவனிக்க வில்லையே என்ற குற்ற பார்வையே அவன் மீது  விழும் கடுமையான வார்த்தைகள், சில நேரங்களில் அவமதிப்பு ,சில நேரங்களில் வகுப்பை விட்டு வெளியே அனுப்பும் தண்டனை என்று மேலும் உள்ளத்தை வதங்க வைக்கும் என்ற உளவியல் ரீதியான  ஒரு தகவலைக் கூற விரும்புகிறேன்.

ஆசிரியருக்கும் மன அழுத்தம் இருக்கவே செய்யும் அவருக்கும் உளவியல் வல்லுனரின் ஆலோசனை தேவை. அதே போன்று வாழ்க்கை பின்னணி அறிந்து மாணவருக்கும் உளவியல் வல்லுனரின் ஆலோசனை தேவை.

எனவே ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் வல்லுநர் நியமிக்க பட வேண்டும். வறுமையில் வாடும் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் கவனி.. கவனி.. என்பார்கள் ஆனால் மாணவர்களை ஒவ்வொருவராக கவனிக்க வேண்டியது ஆசிரியரே ஆவார். 

சில மாணவர்களுக்கு பாராட்டு தேவை, 
சில மாணவர்களுக்கு அன்பு தேவை, 
சில மாணவர்களுக்கு ஆறுதல் தேவை.

உள்ளத்தை அறிந்து ஆசிரியர்கள் செயல்பட்டால் மாணவர்களின் உள்ளம் கேட்கும் MORE ... MORE... ஆசிரியரின் பாடத்தை கேட்பர்.

உயர்நிலை பள்ளிக்கூடம் செல்லும் ஏழைக் குழந்தைகள் உள்ளம் கேட்கும். சாய்ந்து கொள்ள ஒரு தோல் வேண்டும் என்று அது என்ன !? என்பதை அடுத்த தொடரில் காண்போம்....
இன்னும்  வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, April 26, 2013

இலண்டன் வானொலியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட கவியன்பனின் சிறப்புக் கவிதை 'ஏற்றம் வேண்டின்' [ காணொளி ]

ஏற்றம் வேண்டின் ஏகுக பயணம்

மாற்றம் வேண்டின் மாற்றுக துயரம்

காட்டிடும் வழிகள் கண்டு சோம்பல்

பூட்டினை உடைத்துநீ புறப்படு இளைஞனே

திரைகடல் கடந்து தேடும் செல்வமும்

விரைவுடன் வளர்ந்து வீடு சேர்ந்திடும்

தடைகள் எல்லாம் தாண்டிநீ உழைத்திடு

விடைகள் கிட்டிடும்; விடியல் எட்டிடும்

உலகமும் சுருங்கி உன்னைத் தேடியே

பலவகை வழிகள்  பார்ப்பாய் அண்மையில்

தொடர்ந்து வாய்ப்புகள் தொடரும் வாயிலில்

படர்ந்து நோக்கியே பயணம் செல்கவே !"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Thursday, April 25, 2013

அம்மா

அம்மா
இந்த உலகம் சிறியது
உன் பாசம் மட்டுமே
பெரியது

என்
நாவசையும் முன்பே
நீயொரு
பாஷை கற்றுத்தந்தாய்
அதுதான்
அன்பு என்னும்
இந்த உலக பாஷை

உன்
கைகளுக்குள் புதைந்து
இந்த உலகத்தை நான்
எட்டிப் பார்த்தபோது
எல்லாமே எனக்கு
இனிப்பாய்த்தான் இருந்தது

.

பொழுதெல்லாம்
உன் முத்த மழையில்
என் உயிரை நனைத்தப்
பாச அருவியே

நீ
என்றென்றும்
எனக்காகவே கறுத்துக் கிடக்கும்
மழைமேகம் என்று சொன்னாலும்
என் எண்ணம் குறுகியது

என் கண்களில்
வெளிச்சத்தை ஏற்றவே
உன் மேனியைத் தீயில் உருக்கும்
மெழுகுவர்த்திப் பிறவியே

நான் வசித்த முதல் வீடு
உன்
கருவறையல்லவா

நான் உண்ட முதல் உணவு
உன் இரத்தத்தில் ஊறிய
புனிதப் பாலல்லவா

நான் கேட்ட முதல் பாடல்
உன் ஆத்மா பாடிய
ஆராரோ ஆரிரரோ வல்லவா

நான் கண்ட முதல் முகம்
பாசத்தில் பூரித்த
உன் அழகு முகமல்லவா

நான் பேசிய முதல் வார்த்தை
என் ஜீவனில் கலந்த
'அம்மா' வல்லவா

நான் சுவாசித்த முதல் மூச்சு
நீ இட்ட
தேவ பிச்சையல்லவா

.

வாய்க்குள் உணவு வைத்து
நான்
வரும்வரைக் காத்திருக்கும்
பாச உள்ளமே

என் பாதங்கள்
பாதை மாறியபோதெல்லாம்
உன் கண்ணீர் மணிகள்தாமே
எனக்கு வழி சொல்லித்தந்தன

உனக்காக நான்
என் உயிரையே தருகிறேன்
என்றாலும்
அது நீ
எனக்காகத் தந்த
கோடானு கோடி பொக்கிஷங்களில்
ஒரே ஒரு துளியை மட்டுமே
திருப்பித் தருகிறேன்
என்னும்
நன்றி மறந்த
வார்த்தைகளல்லவா
அன்புடன் புகாரி

Wednesday, April 24, 2013

[ 8 ] தொழில் புரிவோம் வாருங்கள் [ கணவன் (.=.) மனைவி ] !

தொடர்சியாக 7 வாரங்கள் வணிகப் பாடம் நடத்தியே போரடித்து விட்டேன் ஒரு மாறுதலுக்காக வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தங்களை கணவன் மனைவியாகப்போகும் ஆண் பெண்களின் உள்ளக்கனவு எப்படி என்பதை பாருங்கள்....

தாய், தந்தையரின் பாசத்தில், ஆதரவில்,அரவணைப்பில் வாழ்க்கையை துவங்கிய ஆண்,பெண் இருபாலரும் பதின் பருவத்தை கடந்ததோ அல்லது முடிவிலோ தமக்கென்று பல ஆசைகளோடு மனதில் ஆசைகளை வளர்த்துக்கொண்டு இருப்பர் முக்கியமாக தமது பேச்சுலர் காலம் முடிவில் கல்யாண கனவுகளோடு பல எதிர்பார்ப்பில் கனவுகளை வளர்த்துக்கொள்வர். அந்தவகையில் ஆண் தன் எதிர்பார்ப்பை எப்படி மனதில் நினைப்பார் பெண் தன் ஆசைகளை எப்படி நினைப்பார் என்பதனை வரிசையாய் பார்ப்போம்...

 ஆண் : தமக்கு வர இருக்கும் பெண் துணை அழகாய் இருக்கவேண்டும் என்று முதல் ஆசையை நினைப்பார் [ பொது ஆசை ] அடுத்து படித்த பெண்ணாய் இருப்பது இன்றைய கால இளைஞர்களின் திறமான ஆசையாய் உள்ளது [ காலத்திற்கு ஏற்ற ஆசை ] தம் பேச்சை எக்காலத்திலும் தட்டாது கேட்க வேண்டும் என்ற ஆசை ஒருவர் தவறாது அனைவரது ஆசையாக இருக்கும்[ பேராசை ] தம் தாய், தந்தையருக்கு பணிவிடை செம்மையாய் செய்ய வேண்டும் [ நியாயமான ஆசை ] என்னை மட்டுமே காதலிக்க [ அன்பு செலுத்துதல் ] வேண்டும் ! என் குடும்பத்தாரை போற்றி பழக வேண்டும் [ ஆசை தோசை ] வேலை முடித்து வீட்டு லேட்டாக வந்தால் என்ன ஏதுன்னு துருவித்துருவி கேள்வி கேட்க கூடாது !!!

 பெண் :  தமக்கு அமைய இருக்கும் துணைவன் அந்தஸ்தானவனாக இருக்கவேண்டும், நல்ல சம்பாத்தியம் கொண்டவனாய் இருக்கவேண்டும் [ அப்போ சம்பாத்தியம் குறைவானவர்களின் நிலை ] நான் எதை கேட்டாலும் வாங்கித்தருபவராக இருக்க வேண்டும், [ சர்தான் ] என் தாய் தந்தையரை தம் தாய் தந்தையரை போல் கருதவேண்டும், என்னை மட்டுமே காதலிக்க [ அன்பு செலுத்துதல் ] வேண்டும்,என் குடும்பத்தாரை மதிக்கவேண்டும், வேலை முடிந்ததும் உடனே வீட்டிற்கு வந்திட வேண்டும் [ ஆசை தோசை அப்பாளம் வடை ]
    
இப்படி இருவரும் தமது சுய நலத்தோடு சிந்திக்கையில் எதிர் பார்ப்புகள் அதிகமாகின்றது எதிர் பார்ப்பு நிறைவேறவில்லை எனில் சண்டைகளும் சச்சரவுகளும் பெரிதாகி விபரீத முடிவுகள் சமுதாய சீர்கேடுகள் கோர்ட் படி ஏறும் நிலை. இதற்கு என்னதான் முடிவு !? மாத்தி யோசிப்போம் ??!!
ஆண் யோசித்ததை பெண்ணும் ! பெண் யோசித்ததை ஆணும்!!  மாத்தி யோசித்தால் எல்லாம் சரியாகிவிடும்.
  
 ஆண் : தன் மனைவி,அவள் குடும்பம் ஆகியோரிடத்தில் அந்தஸ்தோடு நடந்து கொள்ள வேண்டும், கை நிறைய சம்பாதித்து மனைவி மக்களை மகிழ்விக்க வேண்டும் அவள் ஆசை பட்டதை தட்டாமல் வங்கி கொடுபவனாக இருக்கவேண்டும், அவளின் பெற்றோரை என் பெர்ரோற்போல் மதித்திடுவேன் அவள் அவள் சார்ந்த குடும்பத்தை ஆதரிப்பேன் அனுசரிப்பேன்.வேலை முடிந்ததும் சுனக்கமில்லாமல் வீடு வந்து சேர்வேன்.

 பெண் : என் அழகை அவருக்கு மட்டுமே காண்பிப்பேன், என் கல்வி அறிவு அவரின் தொழில், மற்ற பிரச்சனைகளுக்கு பயன் தரும் வகையில் பயன்படுத்துவேன், அவரின் ஆசை, கட்டளைகளுக்கு கட்டுப்படுவேன், அவரின் பெற்றோர் என் பெர்றோராவார், அவர் குடும்பம் என் குடும்பமாகும். அலுவலகம் சென்ற கணவன் வீட்டிற்கு லேட்டாக வந்தால் அவர்மனம் கோணாது அவரிடம் அனுசரணையாய் கம்பனியில் பிரச்சனையா சரியாகிவிட்டதா என்பதாய்  கேட்டு அவரின் தாமதத்தை அறிந்துகொள்வேன்.
என்று இரு பாலாறு சபதம் மேற்கொள்ள வேண்டும் ஆசை படுவதை விடுத்து சபதம் மேற்கொள்ளல் வேண்டும் வாழ்வும் வளமாகும் விட்டுக்கொடுத்தல் கெட்டுப்போவதர்க்கில்லை கணவன்,மனைவி என்பதுதான் ஒரு குடும்பம் நீ நான் என்பதல்ல நாம் நம் என்று சொல்லிப்பழகுங்கள் பிரச்சனைகள் என்பது நம் வாழ்வில் இராது

நாம் முன்பு சொன்னது போல் கணவன் = முதலாளி.  மனைவி = தொழிலாளி. கூட்டி கழித்து பாருங்கள் எல்லாம் சரியாகப்படும் நமக்கு தேவையானதை மட்டும் சிந்தித்து சுயநலமில்லாய் ஆகாமல். முதலாளியின் நலனில் தொழிலாளியும் தொழிலாளியின் நலனில் முதலாளியும் அக்கறை காட்டினால் தொழில் சிறக்கும்.

ஒரு மாணவன் தென்னை மரம் பற்றிய கட்டுரையை மனனம் செய்திருந்தான் தேர்வில் வந்த கேள்வியோ பசு மாடு பற்றியது மாணவன் அசரவில்லை தாம் படித்த தென்னை மரம் பற்றி முழுவதுமாக எழுதிவிட்டு கடைசியாக அந்த தென்னை மரத்தில் தான் மாட்டை கட்டுவார்கள் தென்னை மட்டையை உணவாக இடுவார்கள் என்று எழுதி முடித்தானாம். புரிகிறதா !?
காத்திருங்கள் வியாழன் வரை...
மு.செ.மு.சபீர் அஹமது

Tuesday, April 23, 2013

ஏன் இந்த தற்பெருமை !?

இது ஒரு வித்தியாசமான விழிப்புணர்வு, விழிப்புணர்வு என்று வரும்போது நாம் நம் மனதையும் ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்வதும் ஒரு வகையில் விழிப்புணர்வே. அந்த மாதிரியான வரிசையில் இதுவும் ஒரு சிறிய உதாரணத்துடன் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

ஒரு பெரிய மரம் ஒன்று, நல்ல உயரமாகவும் அடர்ந்தும் காணப்பட்டது, அதன் அருகில் வளர்ந்து வந்த ஒரு சிறிய புல்லை நோக்கி, ஓ அற்பப் புல்லே, நீ எவ்வளவு பலனற்றதும், நிலையற்றதும், சிறியதுமாயிருக்கின்றாய்! ஆனால் என்னைப் பார் நான் எவ்வளவு உயர்தோங்கி பெரிய மரமாயிருக்கின்றேன், என்று அடிக்கடி பெருமையடித்துக் கொண்டது. தன்னைப் பற்றி சொல்லிக் கொள்ள அந்த புல்லுக்கு ஒன்றும் இல்லாதபடியால் அது எப்போதும் அமைதியாகவே இருந்தது. ஒரு நாள் பலத்த புயல் காற்று வீசவே, அந்த பலம் வாய்ந்த மரம் ஆட ஆரம்பித்தது, தன்னால் இயன்ற மட்டும் நேராக நிமிர்ந்து நிற்க முயற்சித்தும் அது வெகு சீக்கிரமாகவே பெருஞ்சத்தத்துடன் தரையில் விழுந்து விட்டது.

புயல் காற்று ஓய்ந்தபோது, தரையில் சாய்ந்த அந்த பெரிய மரம் மெதுவாக எட்டி அந்த சிறிய புல்லை பார்த்தது. அந்தப் புல் எப்போதும் போல் தழைத்து நின்று கொண்டிருந்தது. அதைக் கண்ணுற்று வியப்படைந்த அந்த மரம், ஓ சிறிய புல்லே, அவ்வளவு உயர்ந்தோங்கிய என்னாலேயே அப் பலத்த புயற் காற்றில் நிலைநிற்க முடியவில்லையே, நீ இவ்வளவு சிறிய அற்பப் புல்லாயிருந்தும், உன்னால் எப்படி அப் புயலை சமாளிக்க முடிந்தது?’ என்று கேட்டது. அதற்க்கு அந்தப்புல் புன்முறுவலுடன், அது மிகவும் எளிதானது, காற்றும் புயலும் என் மீது வீசும்போது நான் தலை குனித்து கொள்வேன். அப்பொழுது அவை எந்த பிரச்சனையும் உண்டாக்காமல் எனக்கு மேலாக கடந்து சென்று விடும் என்று பதிலளித்தது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது பெருமையா? அல்லது, தாழ்மையா ?

தாழ்மை எவ்வளவு தூரம் இறைவனால் விரும்பப்பட்ட ஒரு நற்பண்பு பார்த்தீர்களா? நாம் மற்றவர்களை மன்னிக்க பழகும்வரை ஒருக்காலும் உண்மையான மனத்தாழ்மையை கற்றுக்க் கொள்ள முடியாது. மன்னிக்க முடியாத ஒவ்வொரு மனிதனின் மனதின் அடித்தளத்திலும் பெருமை என்ற கொடிய நோய் நிறைந்திருக்கிறது.

தாழ்மைக்கு மறுபெயர் கீழ்படிதல், மரியாதை செய்தல், அன்பு பாராட்டுதல், பொறுமையுடன் இருத்தல், விட்டுக்கொடுத்தல், பணிவிடை செய்தல், இன்னும் சொல்லிக் கொண்டே போனாலும் அதற்க்கு ஒரே பெயர் தாழ்மை.

எவன் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்கின்றானோ, அவன்தான் உச்சத்தில் இருப்பான், இதுதான் நிரந்தரமானது. இன்று பல ஊழல்களில், பல கோல்மால்களில், பல மோசடிகளில், பல தில்லு முல்லுகளில் உச்சத்தில் இருப்பதுபோல் தெரியும், ஆனால் அது அத்தனையும் தற்காலிகமானது.

நான் இதை எழுத என்ன காரணம், எல்லோரும் நிரந்தர சுகத்தோடு நன்றாக சந்தொஷத்துடன் இருக்கவே, மாறாக வேறு எதுவும் இல்லை.

இன்றிலிருந்து நாம் அனைவரும் ஒருவருக்கொருத்தர் அரவணைப்போடு, அன்போடு, தாழ்மையோடு பழகுவோம்.

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

பகுத்தறிவில் சிறந்தது மதமா !? அறிவியலா !?

உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்துக்கும் உள்ள வெளிப்படையான பொதுத்தன்மைகள்: ஊண், உடலுறவு, உறக்கம். உயிர்வாழ் உணவு. இனம்பெருக உடலுறவு. இவற்றுக்காக உழைப்பதால் ஏற்பட்ட உடற்சோர்வு போக்க உறக்கம். 'தான் உயிர்வாழ இரைதேட வேண்டும், பிறருக்கு தான் இரையாகிவிடக்கூடாது' என்ற சுயநலம் பேணாத உயிர்கள் இயற்கை தகவமைப்பிலிருந்து விடுபட்டு அழிந்துவிடும். உயிர்வாழ்க்கையின் இயக்கம் தொடருவதற்கு இம்மூன்று பொதுத்தன்மைகளும் தடையின்றி செல்ல வேண்டும்.

உயிரினங்களை மனிதன் அறிவின் அடிப்படையில் பகுத்துள்ளான்.அவற்றில் அதிகபட்ச அறிவு கொண்ட உயிராக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டுள்ளான். தனது எடையைவிட எட்டுமடங்கு பாரம் சுமக்கும் திறன் எறும்புக்கு உண்டு.குடிநீரின்றி பலநாட்கள் உயிர்வாழும் திறன் ஒட்டகத்துக்கு உண்டு.காற்றும், நீருமின்றி கல்லுக்குள் காலம் தள்ளும் உடலமைப்பு தேரைக்கு உண்டு.இருந்தும் இவைகளை எல்லாம்விடவும் அறிவில் சிறந்தவனாக மனிதன் இவற்றையெல்லாம் விஞ்சி நிற்கிறான்.

பிரபஞ்சத்தில் பூமியைவிட அளவில் பெரிய எத்தனையோ கோள்கள் இருந்தபோதும் 82% உப்பு நீரால் சூழப்பட்ட வெறும் 18% நிலத்தில் மட்டுமே மனிதர்கள் உளர். விஞ்ஞான அறிவுகொண்டு வடிவமைத்த கலன்கள் உதவியால் பூமியின் சுழல்வட்டப்பாதையின் எல்லைதாண்டி பயணிக்குமளவு முன்னேறியுள்ளான். இயற்கைச் சீற்றம் மற்றும் பேரழிவுகளிலிருந்தும் தற்காத்துக்கொண்டு மீண்டுள்ளான்.எங்கிருந்து வந்தோம் என்ற பிறப்பின் ரகசியங்களையும் ஓரளவு அறிந்துள்ள மனிதன், விடைதெரியாமல் திகைத்து நிற்கும் ஒற்றைப்புள்ளி மரணம் !

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் எத்தனை போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தனக்கென எல்லைகளை வகுத்துக்கொண்டு 'வலிவன வாழும்' என்ற தத்துவத்தைச் செயல்படுத்தி வருகிறான். எப்படியும் வாழலாம்,இப்படித்தான் வாழ வேண்டும் என்ற மாறுபட்ட இருநிலைகளில்தான் மனித வாழ்க்கையின் தத்துவங்கள் அடங்கியுள்ளன. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதையே மதங்கள் எனும் வழிகாட்டால் நெறிகள் போதிக்கின்றன.அதைப் பேணாதவர்கள் எப்படியும் வாழலாம் என்ற பிரிவினர்.ஊண்-உடலுறவு - உறக்கம் என்பன தவிர்த்து எங்கிருந்து வந்தது மதம்? மதமின்றி உயிர்வாழ முடியாதா? மனிதன் மட்டுமே மதநம்பிக்கை கொள்வது ஏன்?

மதங்களில்தான் எத்தனை பிரிவுகள்! மனிதன் கட்டுப்பாட்டுடன் வாழ்வதற்கு மதம் அவசியமென்று கொண்டாலும் ஏன் இத்தனை மதங்கள்?வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தெளிவுள்ள ஏதேனும் ஒரு மதத்தை மட்டும் உலக மக்கள் அனைவரும் பின்பற்றினால் ஊண்,உறவு,உறக்கம்போன்று வழிகாட்டும் மதமும் பொதுவாகி உலகம் சண்டைகளற்று அமைதியாக இயங்குமே? தனது வயிற்றுக்குப் பொருத்தமான உணவையும்,உணர்வுக்குப் பொருத்தமான இணையையும் அடையாளம் கண்டுகொண்ட மனிதனால் தனக்குப்பொருத்தமான மதத்தை மட்டும் ஏன் அடையாளம் காண முடியவில்லை ?

எல்லா மதங்களுமே மனிதன் மேன்மையடையும் வாழ்க்கை நெறிகளையே போதிப்பதாகச் சொல்லப்பட்டாலும் மதநம்பிக்கையாளர்களிடம் இல்லாத அமைதி மதநம்பிக்கையற்றவர்களிடம் காணப்படுகிறதே.ஆயிரம் ஆண்டுகள் கழிந்தபிறகும் மதங்களால் மனிதவாழ்வு அடைந்த நன்மைகளைவிட, நூறாண்டுகளேயான அறிவியலால் அடைந்த நன்மைகள் அதிகம்தானே! மதங்களின்றி அறிவியலால் இயங்கமுடியும். ஆனால், அறிவியலின்றி மதங்களாலும், மதவாதிகளாலும் தனித்து இயங்க முடியுமா ? ஆக, மதங்களைவிட அறிவியல்தானே பகுத்தறிவின்படி சிறந்தது!

குறிப்பு: நண்பர்களே, நான் அறிந்த நல்ல/கெட்ட விசயங்களை யாருடைய மனமும் நோகாதபடி எழுதியுள்ளேன். மதம் குறித்த உரையாடல்களை அவ்வபோது வாசிக்க நேர்ந்ததால்,மதவாதிகளிடம் இதற்கான தெளிவான கருத்து இருப்பின் அறிய ஆவலாக உள்ளேன்

அறிவுடைநம்பி
arivukkadal@gmail.com
நன்றி :http://ungalsakotharan.blogspot.in/2013/04/blog-post_21.html
உங்கள் சகோதரன்
ஜாஃபர்

Monday, April 22, 2013

ஒளியைத் தேடி ஒரு பயணம்...

செருப்பு இல்லையே என்று அழுதுகொண்டிருந்தேன் கால் இல்லாதவனை காணும்வரை- என்று ஒரு பழமொழி படித்து இருக்கிறேன்.

இதே போல்தான் இருந்த்து ஒரு வாரம் ஒரு கண் மட்டும் மூடி இருந்த நிலையில் இருந்த எனக்கு.

ஒரு கண் ஒரு வாரம் மூடி இருந்த நிலைகூட தாங்க முடியாத துன்பம் தந்தபோதுதான் - பிறவியிலேயே இரு கண்களும் இழந்தவர்களின் நிலையையும், இடையில் விபத்துகளில் கண்களை பறி கொடுத்தவர்களின் நிலையையும் அனுபவபூர்வமாக உணர முடிந்தது.

இறைவன் தந்ததை வைத்து திருப்தி அடையவேண்டும். இதையாவது தந்தாயே யா அல்லாஹ் என்று இறையை புகழும் மனப்பக்குவம் வேண்டும். நம்மைவிட இல்லாதவர்கள் இருக்கும் நிலைகள் உலகில் இருப்பதை உணர்ந்து நமக்கு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருத வேண்டும். வல்ல இறையோனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒருகண் மூடி ஒருவாரம் ஓய்வில் இருந்தபோதுதான்...
"தம்மின் மெலியாரை நோக்கி தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழ்க" என்ற நாலடியார் வரிகளும்-

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு" என்ற கண்ணதாசன் வரிகளும் நினைவுக்கு வந்தன.

அது என்ன ஒரு வாரம் ஒருகண் மூடி இருந்த நிலை என்று சில அன்பர்கள் கேட்பதாக தெரிகிறது. அதைப்பற்றி ஒரு விழிப்புணர்வுக்காக நீங்கள் எழுதவேண்டும் என்று ஒரு அன்புத்தம்பி கட்டளை இட்டார். ஆகவே இந்தக்கட்டுரையில் அந்த அனுபவங்களைப்பற்றி எழுதப்போகிறேன். எவ்வளவு நாள்தான் நானும் பொருளாதாரம், மத்திய அரசு, மன்மோகன் சிங்க், அலுவாலியா என்று எழுதுவது ? கொஞ்சம் மாறுதலுக்காக  மருத்துவம் பற்றி மருத்துவமனைப்பக்கம் ஒரு ரவுண்டு அடித்து வர மனம் நாடுகிறது. அதுவும் வழக்கம் போல அனுபவம்தானே மீண்டும் பேசப்போகிறது ?

கடந்த ஆண்டு 16/04/2012, அன்று காலை எனக்கு துபாய். N.M.C. SPECIALITY HOSPITALலில். வலது கண்ணில் ஏற்பட்ட பார்வைக் குறைபாடுக்காக அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை செய்தவர் அனுபவமிக்க இந்திய கண் மருத்துவர் டாக்டர். அமித் நாக்பால் என்கிற கர்நாடகத்தை சேர்ந்தவர். மழலை மொழியில் தமிழ் பேசுவார். "ரெண்டு வாருக்கு தலேலே தண்ணீ எண்ணே போடாதீங்கோ" என்பது அவர் பேசும் தமிழுக்கு உதாரணம். ரெண்டு வார் = இரண்டு வாரம். இது இருக்கட்டும் சப்ஜெக்டுக்கு வருவோம். 
எனக்கு ஏற்பட்ட குறைபாட்டை CATARACT என்று கூறுகிறார்கள்.

CATARACT  என்றால் என்ன ?
அல்லாஹ்வின் படைப்பின் அற்புதங்களில் ஒன்று மனித விழிகள். இந்த விழிகளில் ஒவ்வொரு  லென்ஸ் அமைக்கப்பட்டு இருக்கிறது. நாம் உணர்கிற வகையில் காட்சிகள் இந்த விழி லென்சில் விழும். அதைத்தான் நாம் இன்னது என்று அறிந்து வருகிறோம். இந்த விழி லென்சின் மீது ஒரு மேகத்தைப்போன்ற அல்லது ஒரு மூடு பனியைப்போன்ற மூட்டம் விழுந்து படிவதும்- அதன் காரணமாக தெளிவற்ற பார்வை எற்படுவதும்தான் CATARACT  காடராக்ட் ஆகும். மழை காலங்களில் – மார்கழி மாதங்களில் எதிரே வரும் வண்டி தெரியாமல் போய்விடுகிறதே அதுமாதிரி நமது கண்களில் படியும் ஒருவகை மூட்டமாகும். இதன் காரணமாக நாம் காண்பதை தெளிவாக காண இயலாது- படிக்க முடியாது.

பொதுவாக மேகம் என்பதை மப்பு என்று வழக்கு மொழியில் கூறுவார்கள். மப்பு என்று வந்துவிட்டாலே அது ஒருவகை ஸ்தம்பிப்புத்தான். இயங்க முடியாது. குழந்தைகளுக்கு வயிற்றில் மப்பு என்று கேட்டிருக்கிறோம். வயிற்றை சுண்டிப்பார்த்தால் வலையப்பட்டி தவில் மாதிரி சத்தம் வரும் குழந்தைகள் எதுவும் சாப்பிட முடியாது. அதே போல் குடிகாரர்கள் பாஷையில் மப்பு எகிறிவிட்டதாக சொல்வார்கள். ஆகவே மப்பு என்பது இயங்காத்தன்மை. இப்படி ஒரு மப்புத்தான்  நமது விழிகளில் ஏற்படும். இது ஒரு நகராத ஆனால் வளர்கிற மேகக்கூட்டம். பார்வைப்படலத்தின் மேல் படுத்து உறங்கும் மேகக்கூட்டம்.

எனது விழிகளை கணிணி மூலம் பெரிதுபடுத்திகாட்டிய மருத்துவர் என்னையே அதைக் காணச் சொல்லிக் காட்டியபோது வீட்டில் கிரைண்டரில் இட்லி மாவு அரைக்கும்போது நாம் அருகில் நின்றால் சில மாவுத் துளிகள் நமது ஆடைகளில் தெறித்து விழுந்து ஒரு வட்டமாக புள்ளிகளாக வெண்மையாகத்  தென்படுமே அதுபோல் இருந்தது.

பெரும்பாலும் காடராக்ட் குறைபாடு நமது வயதோடு தொடர்புடையதாகும். குறிப்பிட்ட வயதைக் கடந்தோருக்கு  கண்களில் இந்த குறைபாடு ஏற்படுவது பொதுவானதாகும். இந்த குறைபாடு இரண்டு கண்களிலுமோ அல்லது ஏதாவது ஒரு கண்ணிலுமோ ஏற்படலாம். ஒரு கண்ணில் ஏற்பட்டால் அடுத்த கண்ணுக்கு இது " அடுத்த வீட்டில் புளியானம்  தாளிப்பது மணப்பதுபோல்"பரவாது. அத்துடன் இக்குறை ஏற்பட்டவர்களுடன் பழகுபவர்களுக்கும் தொற்றாது. ஒட்டுவாரொட்டி அல்ல.

காடராகட் உண்டாகக் காரணங்கள் எவை ?
நமது விழிகளில் அமைக்கப்பட்டுள்ள லென்ஸ், நீராலும் புரோட்டினாலும் ஆனது ஆகும். ஒரு அபூர்வ படைப்பாக இந்த புரோட்டினின் வழியாகத்தான் காட்சிகள் லென்சுக்குள் செலுத்தப்படுகின்றன அத்துடன் லென்சுகளை தூய்மைப்படுத்திவைப்பதும் இந்த புரோட்டின்தான். வயதாகிறபோது இந்த புரோட்டின் சுருங்கி அல்லது உருண்டு , திரண்டு லென்சின் ஒரு இடத்தில் வந்து உட்கார்ந்து கொள்வதால் நாம் பார்ப்பது மறைக்கிறது. இதை உடனே சரி செய்யாவிட்டால் இந்த உருண்டு திரண்ட புரோட்டின், (இட்லி மாவு என்றே வைத்துக்கொள்ளுங்கள்.) விழி லென்சில் படர்ந்து நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தும்.
இது மட்டுமல்லாமல் புகைப்பிடித்தலும், நீரழிவு நோயும் (SMOKING & DIABETES.) கூட இந்த காடராக்ட் தன்மை ஏற்படுவதற்கு காரணங்களாக அமையலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

யாருக்கெல்லாம் காடராக்ட் உண்டாகும் ?

1. வயதானவர்களுக்கு – நாற்பது வயதுக்குமேல் உள்ளவர்கள் சோதித்துக்கொள்வது முக்கியம்.

2. இனிப்பு நீர் என்ற இனிமைப்பெயர்கொண்டவர்களுக்கு ஏற்படும்.

3. புகைப்பிடிப்பவர்களுக்கும் மது அருந்துபவர்களுக்கும் நிச்சயம் ஏற்பட்டே தீரும்.

4. தொடர்ந்து வெயிலில் நின்று வேலை செய்ய வேண்டியவர்களுக்கு ஏற்படும்.

எப்படி தடுத்துக்கொள்ள முடியும் ?
வயதாவதிலிருந்து தடுத்துக்கொள்ள முடியாது. [ மேக் அப்தான் போடலாம் ] ஆனால் வாழ்க்கையின் பழக்கங்களை ஒழுங்கு படுத்தித் தடுக்கலாம். வெயிலில் வேலை செய்ய வேண்டியவர்கள் குளிர் கண்ணாடிகளை அணிந்து கொள்வதுடன், தலையில் தொப்பி போட்டுக்கொள்ளலாம். [ யாரங்கே ! தொப்பி போடுவதை எதிர்ப்பவர்கள் ? இது மருத்துவம் – இதற்காகவாவது போடக்கூடாதா? ] சூரியனின் நுண்கதிர்கள் கண்ணுக்குள் நேரடியாக பாய்வதில் இருந்தும்  , தொப்பி இல்லாத  தலைவழியாக எமிகிறேஷன் இல்லாமல் இலங்கை வழி போவதுபோல் தலையின் வழியாக கண்ணுக்குள்  பிம்பம் அடித்து நுழைவதையும் தடுக்கலாம்.

புகைப்பிடிப்பதைத்தடுத்துக்கொள்ளலாம். வாய்வழியாகவும், மூக்கின் வழியாகவும் விடுகின்ற புகையிலையின் நச்சுப்புகை கண் படிவங்களின் மீது படியாமல் தடுக்க முடியும்.

மது குடிப்பதை தவிர்க்கவும் நிறுத்தவும் வேண்டும். [ புதிய மதுபானக்கடைகள் திறப்பதை எதிர்த்து போரிடவேண்டும். பெருநாள் தினங்களில் கூடுதலாக கல்லாக்கட்டுவதாக செய்திகள் வருகின்றன. இவற்றுக்கு நாம் வெட்கப்படவேண்டும். ] உணவுப்பழக்க வழக்கங்களை நோய்தடுப்புக்கு உதவும் வகையில் சீரமைத்துக்கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் ஆட்டிறைச்சி சோறுதான் வேண்டும் என்று அடம்பிடிக்ககூடாது. கறி கிலோ நானூறு அல்ல நாலாயிரம் விற்றாலும் வாங்கித்தான் தீருவேன் என்று கச்சை கட்டக்கூடாது. காய்கறிகளா அவை நமக்காக படைக்கப்பட்டதல்ல இதெல்லாம் யார் சாப்பிடுவது  என்று காரணம் கற்பித்து ஒதுங்கக்கூடாது. புரோட்டவையும் கறி சால்நாவையும் புரட்டி அடிக்கக்கூடாது. தழைத்த கீரைகள், காய்கறி, பயறுவகைகள், பழங்களை காலம் முந்தும் முன்பும்- நோய் முற்றும் முன்பும் சாப்பிடப்பழகிக் கொள்ளவேண்டும்.

காடராகட் நோய் தாக்கியுள்ளதன் அறிகுறிகள் யாவை ?
பொதுவாக கீழ்க்கண்டவைகள் அறிகுறிகளாக சொல்லப்படுகின்றன.

1. மேகம் அல்லது பணி மூட்டம் போன்ற புலப்படுதல்/கண்மறைத்தல் ( மப்பு )

2. நிறங்களின் வெளிறிய புலப்பாடு,

3. வாகனங்களின் தலைவிளக்குகள், வீட்டின் விளக்குகள், சூரிய வெளிச்சம் ஆகியவை மிகவும் பிரகாசமாக தெரிவதாக தோன்றுவது- கண் கூச்சம், வெற்றிடங்கள் சுற்றியும் விளக்குகள் எறிவதாக தோன்றுவது,

4. இரவுகளில் குறைந்து காணப்படும் காட்சிப் புலப்பாடுகள்

5. ஒரே பொருள் ஒரு கண்ணில் பலவாகத்தோன்றுவது

6. பார்வைக்குறைபாடுகளுக்கான கண்ணாடிக்கான மருத்துவரின் சீட்டுக்களில் அடிக்கடி வித்தியாசமான ஏற்றதாழ்வுகலான பவர்கள்.

இப்படிப்பட்ட பிரச்னைகளை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

காடராகட் இருப்பது மருத்துவ ரீதியில் எப்படி உறுதி செய்யப்படுகிறது?
முக்கியமாக இருவகை மருத்துவ சோதனைகளால் இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. 

1. VISUAL ACUITY TEST- இந்த முறையில் உங்களின் கண்களின் பார்வை சக்தியின் அளவு மாறுபட்ட தூரங்களில், எழுத்துக்களின் அளவுகளில் வைத்து கணிக்கப்படும்.

2. DILATED EYE EXAMINATION. – இந்த முறையில் சொட்டு மருந்துகளை கண்களில் விட்டு கண்களை /விழிகளை அகலப்படுத்த செய்து பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டுள்ள லென்ஸ்களின் மூலம் உறுதி செய்யப்படும். இந்த சொட்டு மருந்துகளை கண்ணில் விட்ட பிறகு இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு உங்களால் சரியாக பார்க்க முடியாது. எனவே இந்த சோதனைக்கு செல்லும் முன்பே துணைக்கு ஆள் அழைத்து செல்லவேண்டும். கார் ஒட்ட இயலாது- கூடாது. இரண்டு மூன்று மணிகளுக்குப் பிறகு சரியாகிவிடும்.

[ இந்த மருந்தை என் கண்ணில் ஊற்றிய செவிலியர் சகோதரி சார் வண்டி ஓடிக்குமா என்று கேட்டார்- என் வண்டி என்ன முருங்கைப் போத்தா என்று அதிரைக் குறும்புடன் மனதுக்குள் சிரித்துக்கொண்டே இல்லை டிரைவர் வந்திருக்கிறார் என்றேன். ]

சிகிச்சை முறைகள் :
மிக சிறிய அளவிலோ அல்லது ஆரம்ப நிலையிலையோ இந்நோய் தொடங்குவது கண்டறியப்ப்படும்போது கொஞ்சம் பெரிதுபடுத்திக்காட்டும், பிரதிபலிப்புத் தன்மைகள் குறைந்த மூக்குக் கண்ணாடிகள் அணிந்துகொள்ள பரிந்துரைப்பார்கள். ஆனால் இது ஒரு தற்காலிக ஏற்பாடே.

நிரந்தரமான பரிகாரம் வேண்டுமானால் அறுவை சிகிச்சை ஒன்றே வழியாகும். இந்த அறுவை சிகிச்சை என்பது, ஏற்கனவே மேகம் மூடிய விழி லென்சை  பிறவிக் கண்ணிலிருந்து  அகற்றிவிட்டு ஒரு செயற்கையான லென்சை அந்த இடத்தில்  அமைப்பதாகும்.

உங்களின் இரண்டு கண்ணிலும் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் ஒரே நாளில்  இரண்டு கண்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்படக்கூடாது என்று சட்டம் தடுக்கிறதாம். முதலில் ஒரு கண்ணில் செய்துவிட்டு அதன் பின் குறைந்தது எட்டு வாரங்களுக்குப் பிறகே அடுத்த கண்ணிலும் செய்யப்பட  வேண்டும்.

இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு முன்பாக ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவுகளையும், ரத்தக்கொதிப்பு முதலான அமசங்களையும் சோதித்து அவைகள் ஒரு சீரான நிலையில் இருந்தால் மட்டுமே அறுப்பதற்கு நாள் குறிப்பார்கள். ரத்தத்தில் குளுகோஸ் அதிகமாக இருந்தால் இன்சுலின் ஊசிகளைப்போட்டு அதைக் குறைத்துக்கொண்டே கத்தி வைப்பார்கள். அத்துடன் BIOMETRY  TEST  என்ற சோதனையும்  செய்வார்கள். இந்த சோதனை உங்கள் கண்களிண் லென்சின் அளவுகளையும், கண்களின் வளைவுகளையும் கணக்கிடுவதாகும். [ பூனைக்கண், சீனன் கண், சறுகல் கண், ஒன்னரைக்கண் எல்லாவற்றிற்கும் பொருத்தமான லென்சை தேர்ந்தெடுப்பதற்காக இது நடத்தப்படுகிறது.]

அறுவை சிகிச்சை நடப்பதற்கு பனிரெண்டு மணி நேரம் முன்பு முதல் நீங்கள் எதுவும் சாப்பிடவோ பருகவோ கூடாது. பயத்தில் எனக்கு வரண்டதுபோல் தொண்டை வரண்டுபோனால்  ஜூம் ஆவுக்கு போகும்போது ராஜா ஜாஸ்மின் அத்தர் போல் சில துளி நீரை நாக்கில் தடவிக்கொள்ளலாம்.

இந்த அறுவை சிகிச்சைக்கு மருத்துவ மொழியில் PHACOEMULSIFICATION  WITH IOL IMPLANTATION என்று பெயர். இயற்கையான விழி லென்சை அகற்றிவிட்டு செயற்கையான   INTRAOCULAR LENS (IOL) என்கிற பெயரில் அழைக்கப்படும் லென்சை விழித்திரையில் பொருத்துவார்கள். இந்த பொருத்தப்படும் லென்ஸ் ஒரு உயர்வகை பிளாஸ்டிக் அல்லது  அக்ரிலிக மூலப்பொருள்களால் ஆனது. [ பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலும் ஒழிக்கவேண்டுமானால் சிலரின் கண்களைத் தோண்டவேண்டி வரும் :) ] . இந்த மூலப்பொருளுக்குத் தகுந்தபடி இதன் விலை வித்தியாசப்படும். அக்ரிலிக் வகையில் உள்ளதே விலை அதிகம். [ கம்பெனிதான் செலவை ஏற்கிறது என்பதாலும் நண்பர் அஸ்லத்துக்கு பயந்தும் எனக்கு அக்ரிலிக் லென்ஸ்தான் வைக்கச் சொன்னேன். ] இந்த லென்ஸ் பொருத்தப்பட்டதும் அது உங்கள் உடலின் ஒரு அங்கமாகிவிடும். அப்படி ஒரு உறுப்புப் பொருத்தபட்டிருப்பதே தெரியாது உறுத்தாது.

சுன்னத் மாப்பிள்ளையை கொண்டுபோவதுபோல் துணிகளை மாற்றி தள்ளுவண்டியில் கொண்டுபோனார்கள். வழியனுப்பிய மனைவிக்கோ ஏதோ என் கிட்னியை எடுக்கக்கொண்டுபோகிறார்கள் என்ற உணர்வு விம்மலில் தெரிந்தது. உரலில் உட்காருவதற்கு பதில் படுக்கையில் படுத்துக் கொள்ளவேண்டும். ஆடாமல் அசையாமல் இருக்கும்படி தலைமை மருத்துவர்  கூறுவார். அவரைச் சுற்றி உதவியாளர் கூட்டம் நிற்கும்.

முதலில் கண்களில் விழிகளை அகலப்படுத்தும் சொட்டு மருந்துகளை விட்டார்கள். அதன்பின் ஒரு சிறிய ஊசி போடுகிறேன் என்று சொல்லி கண்ணுக்கும் மூக்குக்கும் இடையில் ஒரு மெல்லிய ஊசியைப் போட்டார்கள்.  அத்துடன் ஏதோ பாராங்கல்லை தலையில் வைத்தது போல் மறத்துவிட்டது. கண் கனத்துவிட்டது. காது  கேட்டது. உடலின் மற்ற பாகங்களில் உணர்வு இருந்தது. சிகிச்சை நடக்கும்போது முகத்தை மூடி , சிகிச்சைக்குரிய கண்ணை மட்டும் திறந்து வைத்து இருந்தார்கள். மூக்கின் துவாரங்களில்  ஆக்சிஜன் குழாயை சொருகிவிட்டர்கள். சிகிச்சை நடக்கும்போது ஏதோ கண்களில் மொசைக் போடுவதுபோல் உணர்ந்தேன். சரிதான் இட்லி மாவை சுரண்டி எடுக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.

ஒரு மணிநேரத்தில் முடிந்துவிட்டது. எல்லாம் முடிந்து பிரியாணியை "தம்"  போடுவதுபோல் காற்றுக்கூட புகாமல் கண்ணை மூடி டேப் வைத்து ஒட்டிவிட்டு , ' ஓகே மிஸ்டர் அன்சாரி. ' என்றார் எனது மருத்துவர். [அதாவது அந்த ஓகே அவரைப் பொருத்தவரை 13470/=  திர்ஹம் ].  அதன்பிறகு "கந்தூரியில்  கூடு முடிந்தகாலை கடைகளைப் பிரிப்பதுபோல்" முகமூடி, ஆக்சிஜன் முதலிய எல்லாவற்றையும் பிரித்துவிட்டு என்னை மீண்டும் தள்ளுவண்டியில் படுக்கவைத்து முதலில் அரைமணிநேரம் ரெகவரி அறையிலும் பின்னர் எனது அறையிலும் கொண்டுவந்து விட்டுச்சென்றுவிட்டார்கள்.  உடனே லெண்டில் சூப் தந்தார்கள். அதன்பிறகு மதிய உணவு வெஜிடபிள் பிரியாணி, தயிர், வேகவைத்த புரோகோலி ஆகியவை தந்தார்கள். அன்று மாலை ஐந்து மணிக்கே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். "தம்" போடப்பட்ட கண்ணை இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை திறந்து இரண்டு வகை சொட்டு மருந்துகளை அடுத்தடுத்து விடவேண்டும் அத்துடன் ஐந்து நாளைக்கு ஆண்டிபயாடிக் மற்றும் வலிவந்தால் சாப்பிட ஒரு பெயின் கில்லர். சாப்பாடு ஒன்றும் தடை இல்லை. சுகர் மட்டும் கட்டுப்பாட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த லென்ஸ் பொருத்தப்பட்டு ஒரு வாரம் வரை கண்களில் வெளிச்சம்படாமல் மூடி இருக்க வேண்டும். அதன்பின் கண்திறந்து பார்த்தால் உங்களுக்கே வித்தியாசம் தெரியும். பார்ப்பவை முன்பு தெரிந்ததற்கும் இப்போதும் ' பளிச்" என்று மின்னலடிக்கும் வெண்மையாகத் தெரியும். ஊசியில் நூலைக் கோர்க்க முடியும். ஆனாலும் இரண்டு வாரங்களுக்கு கணிணி , தொலைக்காட்சிப்பெட்டிகளை காணமல் இருப்பது நல்லது. [ யார் விடுகிறார்கள்- ஒரு நாளைக்கு எத்தனை ஈமெயில்கள் – பார்க்காமல் விட்டால் லேப்டாப் பிதுங்கி ஜிப கிழிந்துவிடும் நிலை ] . இரண்டு நாட்களிலேயே எந்த பிரச்னையும் இருப்பதாக நான் உணரவில்லை. ஆனாலும் மருத்துவர் கையால் கட்டுப்பிரிக்கும்வரை விட்டுவிட்டேன். ஒருவாரம் கழித்து கட்டுப்பிரித்து திறந்தே விட்டுவிட்டார். சொட்டு மருந்துகள் மட்டுமே இடவேண்டும். இரண்டுவாரம் அலுவலகத்துக்கு மருத்துவ சான்றிதழ். விடுப்பில் , முதலில் செய்தவேலை ஏற்கனவே எழுதிவைத்து இருந்த மாற்றம்! ஏற்றமா? ஏமாற்றமா? கட்டுரையை நெறியாளருக்கு சரிபார்த்து அனுப்பியதுதான்.

சிகிச்சைக்குப் பிறகு ?
சிலருக்கு அறுவை சிகிச்சைக்குபிறகு அரிப்புகள் வரக்க்கூடுமாம். அத்துடன் நீர் வடிதல், ஊளை தள்ளுதல் ஆகியவையும் ஏற்படக்கூடுமாம்.  அப்படியானால் உடனே மருத்துவரை அணுகவேண்டும். கீழே குனிந்து எதையும் எடுக்க முயற்சிக்க கூடாது. கனத்த பொருள்களை தூக்கக்கூடாது. தூசிகள் வரும் இடங்களுக்குப் போகவோ வசிக்கவோ கூடாது. அறுவை சிகிச்சை செய்யப்பட கண்ணின் பக்கமான பற்களில் வைத்து வேகாதவைகளை நீண்ட நேரம் மெல்லக்கூடாது. அதிக சத்தம்போட்டுப் பேசக்கூடாது. குலுங்கக் குலுங்க சிரிக்கக்கூடாது. (இதுதானே கஷ்டம்)  மற்றபடி நடக்கலாம், மாடிப்படிகளில் ஏறலாம். வெங்காயம் அல்லாத மற்ற காய்கறிகளை வெட்டிக்கொடுத்து வீட்டுக்கு உதவலாம். கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை சொட்டு மருந்துகளை தொடர்ந்து கண்ணில் விட்டுக்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை செய்யப்படாத கண்ணுக்கு சொட்டு மருந்துகளை விடுவது நல்லதல்ல.

ஒருமாதம் கழித்து மருத்துவரிடம் சென்று சோதித்துக்கொண்டு புதிய அலைவரிசையில் தேவைப்பட்டால் மூக்குக்கண்ணாடி அணிந்து கொள்ளலாம். கண்ணாடி அணியாமல்தான் இக்கட்டுரையை எழுதி இருக்கிறேன்.

இந்த பதிவை கூடியவரை எல்லா விவரங்களுடனும் பதிந்து இருப்பதாக கருதுகிறேன். படிப்பவர்களுக்குப்  பயன்படும் என்று கருதுகிறேன். கேட்ட கேள்விகளுக்கு முகம் சுளிக்காமல் பதில் தந்த செவிலியர் சகோதரி ஸ்வப்னா அவர்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறேன். இதைப்பற்றி எழுதவேண்டுமென்று அறுவை சிகிச்சைக்கு செல்ல முடிவு எடுத்த போதே முடிவு எடுத்தேன்.. தம்பி சபீர் அவர்கள் தூண்டினார்கள்.

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

Saturday, April 20, 2013

[ 6 ] உள்ளம் கேட்குமே !? MORE...!

இது ஆசிரியரின் பார்வைக்கு…

எத்தனை ஆசிரியர்க்கு சென்றடையும் என்று தெரியவில்லை தயவு செய்து இக்கருத்தை சேர்த்துவையுங்கள். 

சரி விசயத்திற்கு வருகிறேன்…

மாணவர்களின் பின்னணியை நான்கு வகையாகப் பார்க்கிறேன் .

1. வசதியான படித்த தம்பதியர்களின் பிள்ளைகள் .

2. வசதியான வீட்டு பிள்ளைகள் ஆனால் பெற்றோர் படிக்காதவர்கள் .

3. வசதியற்ற வீட்டு பிள்ளைகள் ஆனால் பெற்றோர் படித்தவர்கள்

4. வசதியற்ற வீட்டு பிள்ளைகள் படிக்காத தம்பதிகளின் பிள்ளைகள் 

இந்த மாணவர்களின் மனநிலை எப்படி ? உள்ளத்தில் பாடங்களை எந்த அளவிற்கு பதியவைக்க முடியும் என்பதை பார்போம்...

*  படித்த வசதியான பெற்றோர்களின் பிள்ளைகள் மன நிலை உற்சாக
மான நிலையில் இருக்கும் .தான் உயர்ந்த நிலைக்கு கல்வியே
காரணம் என்பதால் பிள்ளைக்கு கல்வியின் மகத்துவத்தை
வீட்டிலும் போதிப்பதோடு பிள்ளையின் சூழலை உன்னிப்பாக
கவனிப்பது ..ஆசிரியரிடம் பிள்ளையை பற்றி கேட்டு அறிந்து
கொள்வது போன்ற நடவடிக்கைகளால் முதல் தர மாணவராக
திகழ வாய்ப்புண்டு. பள்ளிக்கு உற்சாகமாய் வருவார்கள் .அவர்களின்
உள்ளம் உற்சாகத்தில் திகழும் .இது பொதுவான கருத்து

*  வசதியான வீட்டு பிள்ளை  ஆனால் பெற்றோர்கள் படிக்காதவர்கள்
இம்மாதிரியான பிள்ளைகள் வீட்டில் உற்சாகமாக இருக்கும்
ஆனால் பள்ளிக்கூடத்தில் சோபிப்பத்தில்லை. இவர்கள்
உள்ளத்தில் மன சோர்வு சிறிது காண பட்டாலும் வீடுதிரும்பியதும்
மனசோர்வு திரும்பி உற்சாக நிலைக்கு திரும்பி விடுவர் .

*  வசதியற்ற வீட்டு பிள்ளை ஆனால் பெற்றோர்கள் படித்தவர்கள்
பிள்ளைக்கு படிப்பின் மகத்துவம் ஊட்டி வளர்ப்பதால் வீட்டில்
பயிற்சி பள்ளியில் உற்சாக வரவேற்ப்பு உள்ளம் துள்ளும்
படிப்பின் மீது ஆர்வம் More... More... என்று உள்ளம் கூறும்.

 * வசதியற்ற படிக்காத பெற்றோர்களின் பிள்ளைகளின் நிலை மிக பரிதாபமானது வீட்டிலும் வறுமையின் கோரப்பிடி ..தத்தி தப்பி பள்ளிக்கு வரும் பிள்ளைக்கு மனச் சோர்வால் வதங்கிய பிள்ளைகளுக்கு பாடங்களை கவனிக்க இயலாத நிலை !

இதனை எப்படி சரி செய்வது ? அடுத்த வாரம் காண்போம்...
இன்னும்  வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, April 19, 2013

அம்மா என்னும் அன்பை நேசி !

அம்மாவின் வியர்வையினால் வெந்த இட்லி
......அளித்திட்டச் சுவைக்குத்தான் ஈடும் உண்டோ ?
அம்மாவின்  வியர்வையினால் அனைத்தும் உண்டோம்
......அம்மாவின் அன்புநம்மை அணைக்கக் கண்டோம்
அம்மாவின் அடக்கத்தைக் கண்டு தானே
.....அடக்கமவள் அடக்கத்தைக் கேட்கும் தானே
அம்மாவின் பண்புகண்டு பண்பு கூட
..... அவளுக்குப் பணிவிடையைச் செய்யும் தானே !

அன்புக்கு முகவரியை உலகில் கேட்டால்
......அம்மாவின் முகத்தைத்தான் உலகம் கூறும்
பண்புக்கும் பணிவுக்கும் விளக்கம் கேட்டால்
.....பாரிலுள்ளோர் அம்மாவைச் சுட்டிக் காண்பர்
இன்பத்தில் துன்பத்தில் இணையும் உள்ளம்
.....ஈடில்லா அம்மாவின் அன்பு வெள்ளம்
என்புக்கும் தோலுக்கும் அம்மா ஈந்த
.....இணையில்லாக் குருதியாலே நாமும் வந்தோம் !


\
வலியென்றால் உயிர்போகும் நிலையில் நாமும்
....வலியென்றால் உயிர்தருவாள் அம்மா மட்டும்
வலியொன்றை அனுபவித்து அவளும் ஈன்று
...வாஞ்சையுடன் அவ்வுயிரை நோக்கும் காலை
வலியென்றால் என்னவென்று கேட்பாள் நாளை
...வலிக்குமேலே வலியையும்தான் பத்து மாதம்
வலியெல்லாம் சுமந்தவளே அம்மா என்று
....வல்லோனும் சொல்லிவிட்டான் மறையின் கூற்றில் !கல்லறையில் உறங்குகின்றாய் என்றன் அம்மா
......கருவறையில் சுமந்தவளே என்றன் அம்மா
செல்லறையின் செல்லுக்குள் குருதிச் செல்ல
.....செய்திட்டத் தியாகங்கள் என்ன வென்பேன் !
சில்லறைகள் காணாத காலம் கண்டாய்
...செல்வத்தில் இருக்கின்ற நேரம் நீயும்
கல்லறைக்குள் போய்விட்டாய் என்ன செய்ய ?
...கர்த்தனவன் கட்டளையும் அஃதே தானோ !தலையணையும் படுக்கைகளில் இருந்தும் என்ன
....தானாக நித்திரையும் வருதல் இல்லை
தலையணையாய் உன்மடியில் படுக்க நீயும்
....தந்தசுகம் தலையணையும் தரவே இல்லை
மலையனைய துயரங்கள் என்றன் முன்னே
....மனக்குழப்பம் தந்துவிட்ட போதும் என்னை
நிலைகுலையாத் துணிவுடனே வாழ வேண்டி
....நீதந்த அறிவுரைகள் மறவேன் அம்மா !

என்முகமும் காணாமல் புதைத்த அன்று
...எப்படித்தான் துடித்தேனே நானும் என்று
உன்மனமும் அறியாமல் நீயும் மீளா
..உறக்கத்தில் சென்றுவிட்டாய் என்றன் அம்மா
தன்சுகத்தை உறக்கத்தை மறந்து நீயும்
...தவிப்புடனே என்னையும்தான் பாது காத்துப்
புன்சிரிப்பை மருந்தாக்கி வளர்த்தத் தாயே
...புண்ணியங்கள் செய்துவந்த தாயும் நீயே !படிக்கட்டுப் படிக்கட்டாய் முன்னே ஏறும்
....படித்தரங்கள் எல்லாமும் உன்னைக் கூறும்
நடிக்கின்ற உலகத்தில் உன்றன் அன்பில்
....நடிப்பில்லா உளத்தூய்மை கண்டேன் நானே
வடித்திட்டக் கண்ணீரால் என்னை அன்பாய்
...வாரிமுத்தம் தந்திட்டப் பொழுதைத் தேடித்
துடிக்கின்ற என்னுள்ளம் அறிய வேண்டும்
..தொடர்ந்துநீயும் கனவினிலே வரவும் வேண்டும் !


உனக்காக ஏங்கும்
உன்றன் உயிர்,

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

ஊருக்குத்தான் உபதேசம் !? நமக்கில்லே டோய் !

மதுவால் ஏற்படும் தீமைகள் எனும் தலைப்பில். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் மெரீனா கடற்கரை சாலையில் பேரணி துவங்கி வைத்தார் 
                                                                                                                                          - தினத்தந்தி
மான்புமிகுவின் கொடியசைப்பில்
மாபெரும் பேரணி,,,, 
வித விதமாய் பதாகையோடு 
மாணவர் வரிசையாய் !

பதாகைகள் சொன்தென்ன 
மது நாட்டுக்கும் 
வீட்டுக்கும் கேடு
கள்ளச்சாராயம் 
துறப்போம்
நம் கண்ணை காப்போம் 

கட்டிளம் காளையரை
சருகாக்கும் கள்ள சாராயம்.
கள்ள சாராய சந்தோஷம்
கல்யாண வீட்டையும்
காலன் வீடாக்கும்.

பாவிகளா ? பிள்ளையையும்
கிள்ளிவிட்டு
தொட்டிலையும்
ஆட்டுவீரோ

பதாகைகளின்
வாசகம் கண்டால்
சாத்தான் வேதம்
ஒதுவதுபோல்  உள்ளதே!

தந்தையின் கையில்
6 ஆம் விரலாய்
வெண் சுருட்டு
தனையனிடம்
கூரினான்
புகை நமக்கு
பகையென்று!

அஃதே உள்ளது உங்கள்
கூற்று !?

மதுக்கடை
மூடினால்
கள்ள சாராயம்
பெருக்கெடுக்கும்
என்கிறீரே !?

சட்டங்கள் இயற்றும்
சட்டமன்றம் எதற்கு
சட்டம் ஒழுங்கை
காப்பாற்ற
காவல் துறை எதற்கு

கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு
சொன்னவரின்
பெயர் தாங்கிகளே !?

மது ஒழிக்க
கடமையை செய்
கள்ள சாராயத்திற்கு
கட்டுப்பாடு விதி
கண்ணியமான
சமுதாயம்
பிறக்கும் !

தடையிலா
மின்சாரம் வேண்டும்
கடை [ மது ] இல்லா
தமிழகம் வேண்டும்

ஊருக்கு உபதேசம்
வீட்டிற்க்குள்
அத்துனையும்
அட்டகாசம் !

ஊருக்குத்தான் உபதேசம் !? நமக்கில்லே டோய் !

மு.செ.மு.சபீர் அஹமது

Thursday, April 18, 2013

இன்னும் விடியாமல்

பலர்
பதவிப் பற்று மிஞ்சியே
அரசியலுக்கு வந்தனர்
நாட்டுப் பற்றே நோக்கமென
சப்தமாய் முழங்கினர்

சிலரோ
நாட்டுப் பற்று மிஞ்சியே
அரசியலுக்கு வந்தனர்

ஒரு 
நாற்காலி வேண்டுமென
மெல்லவே மொழிந்தனர்

இருந்தும், இந்த
நாட்டுப் பற்றுக் காரர்களையே
நாற்காலியில் அமர்த்தியதும்
பதவிப் பற்றுக் காரர்களாய்
அழுக்காக்கி விடுகிறதே 
நம்மின் பொல்லாத அரசியல் 

பார்த்தீரா
அழுக்கைப் புழுக்களாய் மாற்றும்
ஒரு சாதாரண சாக்கடையல்ல
நம் அரசியல்
பயனுள்ள மனிதர்களையே
புழுக்களாய் மாற்றும் ஒரு
நரகலோகச் சாக்கடைக் கடல்

.

எத்தனையோ கற்பக விதைகள்
தங்களை
இதில் விதைத்துக் கொண்டு
கள்ளிகளாய் வளர்ந்துவிட்டன

எத்தனையோ புத்தர்கள்
இங்கு புண்ணியம் கற்பிக்க வந்து
சித்தார்த்தர்களாகி
தங்களின்
சில்லறை விளையாட்டுக்களில்
செலவழிந்து போயினர்

இந்த 
வளைவுகளையெல்லாம்
நிமிர்த்திவிட்டுத் தான்
உயிர் விடுவேன் என்று
வரிந்து கட்டிக் கொண்டு
இதில் குதித்தவர்களில் 

பலர்
வளைந்து போயினர்
சிலரோ
ஒடிந்தே போயினர்

.

என்ன ஒரு புதுமை பாருங்கள்

நம்
அரசியல் வயலில்
அழுகிய விதைகளுக்கே
அமோக விளைச்சல்

காரும் நிலமும்
கடிதில் வேண்டுமென்று
அரசியலுக்கு வந்த
பொல்லாதவாதிகள் தாமே
இன்று
முக்கால் வாசி அரசியல் வாதிகள்

இங்கே 
சத்தியங்களுக்காய்ப் பிறந்தவர்களெல்லாம்
எங்கே போனார்கள் 

சுதந்திர மரத்தின்
வேர்களுக்கு நீரூற்ற வந்த
ஒவ்வொருவருமா 
அதன் கிளைகளைத் திருடுவது

.

அடடா
நம் இந்தியாவில் தான்
எத்தனை தேசாபிமானிகள் 

கணிசமாய் வரதட்சணை வாங்க
ஒரு பட்டம் வேண்டுமென்ற
வணிகத்தனத்தில்
கேள்வித் தாள்களைப் பற்றி மட்டுமே
கவலைப்படும்
ஒரு கல்லூரி வருகையாளனைப் போல

பலரும்
இந்த தேசத்தைப் பற்றிக்
கவலைப் படுகிறார்கள் 

உண்மைதானே
இந்த அரசியல் அங்கவஸ்திரம் 
தோளில் ஆடினால் 
இவர்களின்
மீசைக்கே தகுதியற்றமேலுதடுகள் கூட
மீசையை விடவும்
அதிகமாய்த் தானே துடிக்கின்றன 

.

தம் பெயரைக்
கல்லில் நாட்டுவதற்காகவே
பல மந்திரிகள் இங்கே
மைல் கல்லுக்கும் கூட
அடிக்கல் நாட்டத் தவிக்கிறார்கள்

மந்திரிகளில் பெரும்பாலோர்
தங்களின்
சொந்த சுகதுக்கங்களைக்
கொண்டாடத் தானே
அரசியல் கூட்டம் கூட்டுகிறார்கள்

குண்டர்களே நல்ல தொண்டர்கள் 
என்று 
தீனி போடப்பட்டால்
நம் சுதந்திரப் பெண்ணின் கற்பு 
காற்றில் பறக்காமல்
கலையழகோடவா நடக்கும் 

பல நேரங்களில்
தவறு
நம் மந்திரிகளிடமில்லை
கைநாட்டுகள்தாம்
கைத்தட்டுகின்றன என்றால்
இந்தக் கற்றோர்களில் பலருங்கூட
இங்கே கண்மூடியல்லவா கிடக்கிறார்கள் 

.

யோசித்துப் பாருங்கள்
நாம்
வாக்களிக்க
முகராசியைத்தானே பார்த்தோம்
கொள்கைகளையா பரிசீலித்தோம்

கட்சிக் கூட்டங்களில்
பெரும்பாலோர் கேட்கும் விருப்பங்கள்
எதிர்க்கட்சித் தலைவரின்
வீட்டு விமரிசனங்கள்தாமே 

நம்மில் பலர்
மந்திரிகள் எதைச் சொல்கிறார்கள் 
என்பதை விட
மந்திரிகளுக்கு எத்தனை
மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டன
என்று தானே
கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்

.

வாய் வித்தைகளுக்காய் மட்டுமே
வாக்களித்து விட்டுப் போகும்
வாக்காளப் பெருமக்கள்
நம்மில் கொஞ்சமா

வியாபார விசயமாய்த்
தங்கள் வாக்குகளை
இரகசிய ஏலம் விடும்
தேசத் துரோகிகள் நம்மில்
கொஞ்சமா

.

இந்தியர்களே
நம்
தேசத்தின் அரசியல் நிர்ணயத்தில்
முழுப் பங்கும்
மொத்த வலிமையும் கொண்டோர்
நீங்களே

உங்களின்
அறியாமை ஓடுகளை
உடைத்தெறிந்து
சுதந்திமாகச் சுவாசிக்கச்
சிந்தியுங்கள்

சுதந்திரம்
தனியினச் சுவாசமல்ல - அது
மொத்த நாசிகளின் 
முழுச் சுவாசம்

ஒரு சுத்தமான
இரத்த தானம்தான்
விழுந்து கிடக்கும் இந்தியாவை
எடுத்து நிறுத்துமெனில்
தயங்க வேண்டாம்

எழுங்கள் இந்தியர்களே
எழுங்கள்.
அன்புடன் புகாரி

Wednesday, April 17, 2013

[ 7 ] தொழில் புரிவோம் வாருங்கள் !

தொழில் என்பது ஒரு குழந்தை பிரசவம்போல் சிலருக்கு ஆண் குழந்தை சிலருக்கு பெண் குழந்தை சிலர் எவ்வளவுதான் முயன்றாலும் அந்த பாக்கியம் கிடைப்பதில்லை எல்லாம் அவன் செயல் என்று தான் நினைக்க தோன்றும் மணவி, குழந்தை, தொழில் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
     
ஒரு குழந்தையை பெற்றெடுப்பதும் ஒரு தொழிலை உண்டாக்குவதும் அதன் பின் அதுகளை வளர்த்தெடுப்பதும் தாய் தந்தையரின் கடமையாகிறது. 
     
ஒரு தொழிலின் தந்தை என்பது முதலாளி, Managing Director, Working Partner போன்றோர்தான் அவர்கள் தம் தொழிலுக்கு தேவையான பொருளாதாரங்கள், சீர்திருத்தங்கள் இவைகளில் கவனம் செலுத்தி தொழிலை மேம்படுத்தி கொண்டே செல்ல வேண்டும் சரி தந்தையை சொல்லி விட்டோம் தாய் யார் ?
   
தாய் வேறு யாருமல்ல அந்த தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் அத்துணை ஊழியர்களும் தான் [ மேலாளர் முதல் கடை நிலை ஊழியர் வரை ] அவர்கள் தாம் பணிபுரியும் நிறுவனத்தை தம் குழந்தை போல் பார்க்கவேண்டும் குழந்தைக்கு பொருளாதாரம் உடைகள் இவைகளைவிட உணவு [பால்] முக்கியம் அதை தாயால் மட்டுமே கொடுக்க இயலும் தொழிலுக்கு தாய் ஊழியர் என்றோம் ஆக ஊழியர்கள் தான் அப்பணியை     திறம்பட செய்யவேண்டும்.
   
முதலாளியும் தொழிலாளியும் ஒரு தொழிலுக்கு தாயும் தந்தையும் என்றால் தாயும் தந்தையும் கணவன் மனைவிதானே ? எந்த சந்தேகமும் இல்லை சாட்ச்சாத் கணவன் மனைவிதான் இருவரின் ஊடல்கள் எந்தனையோ இருந்தாலும் ஒற்றுமை எனும் விஷயத்தில் உறுதியோடு இருத்தல் வேண்டும். 
 
கணவனாகிய முதலாளி தம் மனைவியாகிய தொழிலாளிக்கு அரவணைப்பு, தேவையை பூர்த்தி செய்தல்,பரிவோடு கவனித்தல் போன்றவைகளை சரியாக செய்தால் தொழில் சிறந்தோங்கும் 
   
ஒரு தொழில் தொய்வு ஏற்பட்டால் பாதிக்கப்படுவது முதலாளி, என்றாலும் முதல் பாதிப்பு தொழிலாளிக்கு தான். அனுபவப்பட்டவர்களுக்கு அதன் வருத்தம் தெரியும்! உதாரணத்திற்கு துபையில் வேளை செய்யும் ஒரு தொழிலாளிக்கு அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் நிறுவனத்தை மூடுவதாக கம்பெனி அறிவித்தால் அவரின் நிலை என்ன ?  அவரின் முதலாளியின் நிலை என்ன யோசியுங்கள் !?
     
நல்ல வருமானத்தில் இருந்துவிட்டு திடீரென்று வேலை இல்லை எனும் பட்சத்தில் திரும்ப தாய்நாடு வரவேண்டும் பின் வேறு நாடோ அல்லது சூழ்நிலைக்கு ஏற்றவாறு வேறு ஏதோ செய்ய வேண்டும் நினைத்தது அமையும் வரை மன குழப்பம் சுற்றத்தாரின் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஓய்ந்து விடுவோம்.
     
ஒருவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு ஊரில் சிறிது காலம் தங்கும் சூழ்நிலையில் அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் கேட்டாராம் என்ன ரொம்ப நாளா தங்கி விட்டதுபோல் தெரிகிறது? அதற்கு இவரின் பதில் ஆமாம் நான் என் வீட்டில் தான் சாப்பிடுகிறேன் என்றாராம் ! கேள்வி கேட்டவருக்கு ஒன்றும் புரிய வில்லை தம்பி நான் கேட்டது. என்று சொல்லும் பொழுதே இவர் கையை காட்டி பேச்சை நிறுத்தும்படி சைகை செய்து நான் உங்கள் விட்டில் சோறு கேட்கவில்லையே என்று பதில் உறைக்க பக்கத்து வீட்டுக்காரருக்கு முகம் மாறிப்போனது    

அடுத்த வாரம் கணவன்,மனைவி,கனவு எனும் தலைப்பில் [ தொழிலுக்கு சம்மந்தமில்லாத ] ஓர் ஆய்வு கட்டுரை...!?
காத்திருங்கள் வியாழன் வரை...
மு.செ.மு.சபீர் அஹமது

Tuesday, April 16, 2013

மனிதனுக்கு எது சொந்தம் ?பூட்டுக்கு சாவி சொந்தமா?
பானைக்கு மூடி சொந்தமா?
நெருப்புக்கு உஷ்ணம் சொந்தமா?
வயிற்றுக்கு பசி சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?

மலருக்கு அழகு சொந்தமா?
தேனுக்கு இனிப்பு சொந்தமா?
இனிப்புக்கு வண்டுகள் சொந்தமா?
காற்றுக்கு ஊர் சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?

பருத்திக்கு நூல் சொந்தமா?
நூலுக்கு ஆடை சொந்தமா?
ஆடைக்கு தூய்மை சொந்தமா?
பணத்திற்கு பணம் சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?

இணையத்துக்கு தளங்கள் சொந்தமா?
தளங்களுக்கு ஆக்கங்கள் சொந்தமா?
ஆக்கங்களுக்கு சிந்தனைகள் சொந்தமா?
சிந்தனைகள் யாருக்கும் சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?

உணவுகளுக்கு சுவைகள் சொந்தமா?
சுவைகளுக்கு நாக்கு சொந்தமா?
நாக்குகளுக்கு உணர்வு சொந்தமா?
முகத்திற்கு அழகு சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?

பேனாவுக்கு எழுத்து சொந்தமா?
தாகத்துக்கு தண்ணீர் சொந்தமா?
நோயிக்கு மருந்து சொந்தமா?
மனிதனுக்கு ஆரோக்கியம் சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?

வெயிலுக்கு களைப்பு சொந்தமா?
தென்றலுக்கு இன்பம் சொந்தமா?
மரக்கிளைகளுக்கு நிழற் சொந்தமா?
அரிசிக்கு தவிடு சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?

தலைக்கு முடி சொந்தமா?
மலைக்கு முகில் சொந்தமா?
சோலைக்கு பறவைகள் சொந்தமா?
இரவுக்கு பகல் சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?

மண்ணுக்கு மரம் சொந்தமா?
வீடுகளுக்கு மக்கள் சொந்தமா?
நாட்டுக்கு அரசு சொந்தமா?
நிலவுக்கு வான் சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?

தாயிக்கு பிள்ளை சொந்தமா?
மனைவிக்கு கணவன் சொந்தமா?
கணவனுக்கு மனைவி சொந்தமா?
இரத்தத்திற்கு இரத்தம் சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?

ஆடைகள் உடலுக்கு சொந்தமா?
உடலுக்கு உயிர் சொந்தமா?
மண்ணுக்கு உடல் சொந்தமா?
ஆசைக்கு இந்த மண் சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?

வட்டிக்கு வட்டி சொந்தமா?
வட்டியின் குட்டி முதலுக்கு சொந்தமா?
வட்டியும் முதலும் கைகளுக்கு சொந்தமா?
வட்டியோடு விளையாடும் கைகள் மனிதனுக்கு சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?

கலைஞனுக்கு கற்ற கல்வி சொந்தமா?
கவிஞனுக்கு படைத்த கவி சொந்தமா?
குயிலுக்கு குரல் சொந்தமா?
கடலுக்கு மீன் சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?

யாருக்கும் யாரும் சொந்தமில்லை,
எதுவுக்கும் எதுவும் சொந்தமில்லை,
எல்லாம் மறையக்கூடியது.
அப்போ மனிதனுக்கு எது சொந்தம்?

மனிதனான அவனுக்கு
செய்த நல்ல செயல்களுக்கு நன்மைகள் சொந்தம்.
செய்த தீய செயல்களுக்கு தீமைகள் சொந்தம்.
நல்லதையே நினைப்போம்,
நல்லதையே செய்வோம்,
நன்மைகளை அறுவடை செய்வோம்,
தீமைகளை விட்டு ஒதுங்குவோம்.

இறையச்சம், மரணம் குறித்து பயம், மறுமை குறித்து நம்பிக்கை இருக்கும் இதயத்தில் எந்த ஒரு களங்கம் இல்லாமல் தூய்மை மட்டும் இருக்கும்.

வாழ்க வளமுடன்
அன்புடன்,

மனித உரிமைக்காவலர்
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Monday, April 15, 2013

பொருளாதார வளர்ச்சி ! சுற்றுச்சூழல் தளர்ச்சி !

நமது ஊர்களை சுற்றிப்பாருங்கள். நமது ஊரையே பாருங்கள். வீடுகள் பெருகி இருக்கின்றன. கடை, கடைத்தெருக்கள் –புதிது புதிதாக இதுவரை பார்த்திராத  வர்த்தக நிலையங்கள் எங்கு பார்த்தாலும் பெருகி இருக்கின்றன. நகரங்கள் விரிவடைந்து இருக்கின்றன. போக்குவரத்து நெரிசல், அப்பனும் பிள்ளையும் எதிர் எதிரில் போனாலும் கூட பார்த்துக்கொள்ள முடியாத விரைவு, நடந்து போவோரை காண்பது அருகிவருகிறது. இரு சக்கர, மூன்று சக்கர வண்டிகள், வீடுகளில் வகை வகையான கார்கள்., உணவு விடுதிகளில் சொல்லொண்ணாத கூட்டங்கள், உல்லாச கேளிக்கை விடுதிகள், கல்வி நிலையங்கள், சூப்பர் மற்றும் ஹைபர் மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் இப்படி ஏகப்பட்டவை.

மாபெரும் பொருளாதார வளர்ச்சி. பொருளாதாரம் ஓரளவு பரவலாக அனைவருக்கும் அமையும் வண்ணம் வெளிநாட்டுப்பணமும், அவை செலவாகின்ற விதத்தால் உள்ளூரில், வெளியூர்களில்  வளர்ந்துவிட்டன தொழில்களும்.

அதே நேரம் கொஞ்சம் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள்.

ஊர்கள வளர்ந்த அளவு ஊர்களின் சுகாதாரம், சுற்றுச்சூழல் வளர்ந்திருக்கிறதா? எங்கு பார்த்தாலும் கழிவு நீர் வாய்க்கால்கள், தேங்கி  கிடக்கும் சாக்கடை குட்டைகள், ஒவ்வொரு தெருக்களின் ஆரம்பத்திலும் கொட்டப்பட்டு நாறிக்கிடக்கும் குப்பை கூளங்கள், எங்கு பார்த்தாலும் காற்றில் பறந்து கலர் கலராய்  பிளாஸ்டிக் கழிவுகள். இரவு நேரங்களில் நம்மை தூக்கிச்செல்ல படை எடுக்கும் கொசுக்கூட்டங்கள்.  அதிரையின். கஸ்டம்ஸ் சாலை முனையிலிருந்து ஜாவியா ரோட்டைப்பாருங்கள்- இருபுறமும் குப்பைகள். சி எம் பி லைனை பாருங்கள்.- மீன்கள் துள்ளிக்குதிக்க சிற்றோடையாக ஓடிக்கொண்டிருந்தது இன்று சாக்கடைகளின் தாயகமாக திகழ்கிறது. தைக்கால் ரோட்டிலிருந்து தரகர் தெரு செல்லும் ரோட்டை பாருங்கள்-எவருக்கும் கவலை இல்லாமல் எல்லோராலும் கொட்டப்படும் குப்பைகள். எல்லா சிறிய, பெரிய ஊர்களிலும் இதே நிலை. மேலோட்டமாக இவைகளை குறிப்பிட்டாலும் இவைகள் ஒரு சிறு சிந்தனைக்கே. ஆனால் விரிவான முறையில் இந்த தலைப்பைபற்றி எழுதவேண்டும் அதன் எல்லைகள் வானளாவியது. உலக பொருளாதார அரங்கில் விவாதப்பொருளானது . இது ஒரு ஹை டோஸ் ஊசி.

பொருளாதார வளர்ச்சி சுற்று சூழலையும் வளரச்செய்து மேம்படுத்தவேண்டும். ( ECONOMY WITH ECOLOGICAL PERSPECTIVE ) சுற்று சூழல் உள்ளடக்கிய பொருளியல்  என்று கூறுவார்கள். இதைப்பற்றித்தான் எழுதப்போகிறேன்.

சுற்று சூழலையும் சேர்த்து வளர்க்காத பொருளாதார வளர்ச்சி மனிதனின் இரண்டு கால்கள் வெவ்வேறு திசையை நோக்கி நடக்கத்தொடங்குவதற்கு இணையானது. இருகண்கள் இருவேறு திசைகளை பார்ப்பதற்கு ஒப்பானது.

வாழைப்பழம் வாங்க வசதி இருக்கிறது – இது பொருளாதார வளர்ச்சி என்று வைத்துக்கொள்ளலாம். – ஆனால் அந்த பழத்தை உரித்து உள்ளே தள்ளிவிட்டு  – அதன் தோலை நம் வீட்டு தலைவாசல்படியில் போடுகிறோமே அதுதான் சுற்று சூழலுக்கு கேடு விளைவிப்பது . வழுக்கிவிழுந்தால் உடைவது நமது இடுப்பல்லவா? இன்றைய உலக பொருளாதார வளர்ச்சி இதைத்தான் செய்திருக்கிறது.

வாருங்கள் சப்ஜெக்டுக்கு போவோம்...

குறிப்பாக உலகெங்கும், சிறப்பாக இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்னாள் அறிமுகப்படுத்தப்பட்டு ஆக்கிரமித்துள்ள உலகமயமாக்கலும், தனியார் மயமாக்கலும், சந்தை பொருளாதாரமும் சுற்று சூழல்களின் மேல் நிகழ்த்தியுள்ள வெறியாட்டங்கள் , தாக்கங்கள் கணக்கிலடங்காதவையாகும்.

உலகில் உள்ள பணக்காரர்களை வருடாவருடம் தரவரிசையில் கணக்கெடுத்து வெளியிடும் போர்ப்ஸ் இதழ் இந்தியாவில் 40 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 35100 கோடி அமெரிக்க டாலர் என்று கூறுகிறது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8  முதல் 9 விழுக்காடு என்ற அளவில் உயர்ந்துள்ளது. அதே நேரம் வேளாண்மை வளர்ச்சி விக்தம் 4.9  விழுக்காடாக குறைந்து விட்டது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஐந்து விழுக்காடு தவிர மற்றவர்கள் 97.45  கோடி மக்கள் தேவைக்கும், ஆசைக்கும் ஏற்ப வாழ்வதற்கு போராடுகிறார்கள். தொண்டைக்கும் வாய்க்கும் இழுத்துக்கொண்டுதான் போகிறது. ‘காடு விளைஞ்சென்ன மச்சான் கையும் காலும்தானே மிச்சம்’ என்கிற கதைதான்.

உலகமயமாக்கல் தொடங்கியதில் இருந்து 1,66,304  விவசாயிகள் ( 2006  வரை உள்ள புள்ளி) நவீன இரசாயன வேளாண்மையால் விளைச்சல் இன்றி , இடுபொருளின் அடக்க விலைக்கும், உற்பத்தி கண்டுமுதலின் விற்பனை விலைக்கும் ஏற்பட்ட மலையளவு வித்தியாசத்தால் கடனாளியாகி தற்கொலை செய்துகொண்டு செத்தார்கள். வறுமையால் செத்தவர்கள் இந்த கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. வறுமை ஏற்படக்காரணம் திடீரென முளைத்த ஆடம்பர சமாச்சாரங்களும் என்பதை இந்த இடத்தில் நினைத்தும் இணைத்தும் கொள்ளவேண்டும்.

ஓர் இந்தியன் குறைந்தபட்ச வாழ்க்கைதரத்துடன் வாழ மாதம் அவனுக்கு ரூபாய் 2,540/=  சராசரியாக தேவைப்படுகிறது. ( துபாயிலிருந்து இதைவிட அதிகமாக மாதாமாதம் அனுப்புகிறேனே என்று சுலைமான் காக்கா கூறுவது காதில் விழுகிறது. நீங்கள் அனுப்பும் அதிகப்பணம் பட்டுக்கோட்டை பூம்புகாரிலும், அசோகன் ஆபரண மாளிகையிலும், கல்யாணி கவரிங்கிலும் , வியாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தஞ்சை பாஸ்கர் டாக்டரிடமும் செலவாகிறது காக்கோவ். கண்டித்து வையுங்கள்) இந்த ரூ. 2540/= கூட இல்லாதவர்கள்தான் வறுமையில் உழல்கிறார்கள் அல்லது உயிரைமாய்க்கிரார்கள்.

பொருளாதார மேம்பாடு என்ற பெயரில் மாசுபடும் நமது மரபுக்கு இசைந்த சூழல்கள் - அவைகள் சுரண்டப்படுவதை இப்படி பட்டியல் இடலாம்...

- பசுமை புரட்சி தொடங்கி வைத்த இரசாயனம் சார்ந்த விவசாயம் ,

- பசுமை புரட்சி தொடங்கி வைத்த மரபணு மாற்ற பயிர்கள் படையெடுப்பு,

- நீர்வள ஆதாரங்களின் சேதாரங்கள் ,

- தோண்டப்படும் கனிம சுரங்கங்கள் ,

- மணல கொள்ளை,

- மாற்றப்பட்ட நில பயன்பாட்டு முறை,

- விளை நிலங்களை முடக்கிப்போடும் வீட்டுமனைகள், ( இது பற்றி எனது வயலும் வாழ்வும் –தனிக்கட்டுரை)

- விளை நிலங்களை ஆக்ரமித்து அமைக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்,

- விளை நிலங்களை ஆக்ரமித்து அமைக்கப்படும் பலவழி சாலைகள்,

- அடித்தட்டு மக்களின் நகரங்களை நோக்கிய இடப்பெயர்ச்சி, ( எங்கேப்பா செல்லப்பன் ஆசாரியை காணோம்? அவர் பையன் கம்ப்யூட்டர் படித்து அமெரிக்க போய்விட்டான். சென்னையில் வீடு வாங்கி குடியேறிவிட்டார். அவரது கருவிகள் ? பிள்ளைமார் குளத்தில் வீசி எறிந்து விட்டார். )

- பாரம்பரிய தொழில்களின் அழிவு,

- கைவினை தொழில்களின் கையறு நிலை,

- கட்டுப்படுத்தமுடியாத விலைவாசி உயர்வு,

- புவி வெப்பமயமாவது,

- கலாச்சார, பண்பாட்டு சீரழிவுகள்.

- உணவு முறை மாற்றங்கள் ( கே. எப். சி  முதல் அருண் ஐஸ் க்ரீம் வரை)
இப்படி பல.

ஒரு புறம உலக பணக்காரர்களில் நாற்பதுபேர் இந்தியர் என்ற நிலை .
மறுபுறம் 97.45 கோடிப்பேர்- நடுத்தர வர்க்கமும் சேர்த்து- வாழவே போராடும் நிலை . இதுவே  உலகமயமாக்கல் என்ற வேண்டாத பிள்ளையை பெற்று அது காண்டாமிருகமாகிய கதை.

முதலாளித்துவத்தால் இன்று உலகமயமாக்கல் நகர்த்தப்படுகிறது. நவீன அறிவியல் தொழில்நுட்பம், சமூகத்தை மாற்றியமைக்கும் சந்தைப் பொருளாதாரம் ஆகிய இரண்டும் உலகமயமாக்கலின் முக்கிய கூட்டணி கட்சிகள். உண்மையில் இவை பொருளாதார உறவுகளை மட்டுமல்லாமல் சூழலியல் பொருளாதார அமைப்புகளையும் பாதிக்கின்றன.
இந்த புள்ளிவிபரங்களை பார்க்கலாம்.

இந்த உலகமயமாக்கல் உலகத்தின்மீது காரி உமிழ்ந்த கரியமில வாயுவின் அளவுகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற அளவில்,

1950 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 110 டன்கள்
2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி  820  டன்கள்-
வெறும் ஐம்பது ஆண்டுகளில் எட்டு மடங்கு கரியமில வாயு இந்த பொருளாதார வளர்ச்சிக்காக போடப்பட்ட திட்டங்களால், பெட்ரோலிய எரிபொருள் உமிழ்வால் உலகை நாறடித்துவிட்டன. இதனால் உலகம் வெப்பமயமாவது ஊக்குவிக்கப்படுகிறது. அணு குண்டை விட, அணு கதிர்வீச்சைவிட புவி வெப்பமயமாவது ஆபத்தானது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சூழலுக்கு எதிரான இந்த பொருளாதார வளர்ச்சிப் போக்கு காரணமாக 2030ஆம் ஆண்டு புவியின் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்வதை யாராலும் தடுக்க முடியாது. இது மிக மோசமான காலநிலை மாற்றத்திற்கு உலகை உந்தித் தள்ளும். ஐ.நாவின் காலநிலை மாற்றம் குறித்த சட்ட வரையறையை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு, கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தினாலும் கூட புவியின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர்வதை தடுக்க முடியாமல் போகும். கோமாளி மீன், எம்பெரர் பென்குவின், ஸ்டாகோர்ன் கோரல் (பவள உயிர்), பெலுகுவா திமிங்கலம், தோனி ஆமை, ரிஸ்சீல், சால்மன் மீன் போன்ற கடல்சார்ந்த உயிரினங்களும், ஆர்டிக் நரி, துருவக் கரடி மற்றும் வறட்சி தாங்காத குயுவர் மரம் போன்ற அரிய உயிரினங்கள் புவி வெப்பமடைவதால் அழிந்துவிடும். இந்த அழிவு, சுற்றுச்சூழல் அழிவின், சூழலியல் பொருளாதாரத்தின் வீழ்ச்சியை மட்டுமல்லாமல் உலகின் இறுதி ஊர்வலத்தை அறிவுறுத்தும் சாவுமணிகளாகும்.

உலகமயமாக்களுக்கு பாலூட்டி சீராட்டி வளர்த்து வரும் உலக வங்கி, அதை நடைமுறைபடுத்தும் உலக வர்த்தக நிறுவனம், அதன் செல்லப்பிள்ளையான உலக பொருளாதார அமைப்பு ( WORLD BANK, WORLD TRADE ORGANIZATION, WORLD ECONOMIC FORUM) ஆகிய சக்திவாய்ந்த சந்தை பொருளாதாரத்தின் சாச்சாக்களும், மாமாக்களும், சுற்றுசூழல் இயல் இணைந்த- அந்தந்த மண்ணின் மைந்தர்களுக்கேற்ற  பொருளாதாரத்தை புறக்கணித்து வருவதால்தான் இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இலாப நோக்கங்களோடு ஆன்லைண் வர்த்தகங்கள் மூலமாக ஏற்படுத்தப்படும் செயற்கை பற்றாக்குறை , விலைவாசி உயர்வு இவைகளால் பணக்காரர்கள் மேலும் பணக்கரர்களாகவும் , ஏழைகள் இன்னும் ஏழைகளாகவுமே ஆக்கப்படும் “ யோசனை மன்சவாடு வண்டி சாட சப்பை “ திட்டங்களால் என்ன பயன் ?

உலகமயமாக்குதளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் வைக்கும் வாதம் கட்டுப்பாடற்ற பொருளாதாரம் கொண்டுவந்து கொட்டும் அதிக நிதிவளங்கள், புதிய தொழில் நுட்பங்கள் உலகை வளர்ச்சியின்பால் தலைகீழாக மாற்றி உயர வைத்துவிடும் என்பதாகும். ஆனால் உண்மையில்- நடைமுறையில்  உடல் கொழுத்து இருக்கும் அதில் உயிர் இல்லை என்ற நிலையும்- மரம் பருத்திருக்கும் ஆனால் பூக்காது, காய்க்காது என்ற நிலையும்- கண்ணிருக்கும் பார்க்கமுடியாது- காதிருக்கும் கேட்க முடியாது- காலிருக்கும் நடக்க முடியாது என்றும் இருந்தால் எவ்வளவு வேடிக்கையோ அப்படித்தான் இருக்கிறது.
உலகமயமாக்களும், பொருளாதார வளச்சியும்  மண்ணின் மரபுகளை அழிக்காமலும், சுற்றுசூழல்களை மாசுபடுத்தாமலும் வளர்ந்தால்-
கட்டுப்பாடற்ற வர்த்தகம் காசை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் உலக அமைதி , ஒற்றுமை இவைகள் ஓங்கி நிற்க செய்யும்வகையில் மாற்றங்களோடு வருமானால் -

“பழையன கழிதலும் – புதியன புகுதலும் வழுவல கால வகையினாலே “ என்ற அடிப்படையில் ஏற்கலாம்.

இத்தகைய குறிக்கோள் இல்லாத வளர்ச்சி

“ஓதிய மரங்கள் பெருத்து இருந்தாலும் உத்திரமாகாது
உருவத்தில் சிறியது கடுகானாலும் காரம் போகாது

விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது

விளக்கிருந்தாலும் எண்ணை இல்லாமல் வெளிச்சம் கிடைக்காது

பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது “

என்ற கருத்தைத்தான் நிலைக்கச்செய்யும். உலகமயமாக்களுக்கு உலகில் எதிர்ப்பு மேலோங்கவே செய்யும்.

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி
Pro Blogger Tricks

Followers