.

Pages

Saturday, March 30, 2013

[ 3 ] உள்ளம் கேட்குமே !? MORE...!

பாசம் எவ்வளவு அவசியமோ... அது அளவிற்கு அதிகமானால் அதுவே குழந்தைகளின் எதிர் காலத்தை படு பாதாளத்திற்கு கொண்டு சென்று விடும். எப்படி  என்பதை பார்போம்…

சிறு குழந்தை ஆறு மாதமோ அல்லது ஒரு வருடமோ ஆனா  குழந்தை மீது நாம் காட்டும் அளப்பெரிய அன்பு அது எதை கேட்டாலும் கொடுக்கும் மனநிலை நம்மிடம் இருக்கும். நாம் அக்குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சும்போது நமது பாக்கெட்டில் உள்ள பேனாவையோ அல்லது முக்கியமான பொருளையோ அந்த பிஞ்சு கைகளால் எடுக்கும்... பார்த்து ரசிப்போம்... அக்குழந்தை உடனே அதனை வாயில் வைக்க முற்படும், அந்த சமயத்தில் நாம் வாயில்வைப்பதற்கு முன் தடுத்து விடுவோம். அழுது அடம் பிடித்தாலும் நாம் அனுமதிப்பதில்லை அதுபோன்றுதான் விவரம் அறிந்த வயதி ஐந்து முதல் பதினைந்து வயது வரை உள்ள குழந்தைகளிடம் அன்பு பாசம் என்ற பெயரில் எல்லாவற்றையும் அனுமதித்து விட கூடாது அது பெரிய எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.

உதாரணமாக சில உறவினர் வீட்டிற்கு விருந்தினராக வரும்போது பிள்ளைகளை கொஞ்சும் போது கொச்சையான வார்த்தைகளால் அழைப்பர். அந்த பயலே... இந்த பயலே... அதே போல் தாத்தா பாட்டி இடம் பிள்ளைகள் மரியாதை குறைவான வார்த்தைகள் கொண்டு அழைப்பார்கள். பாசங்களின் காரணமாக அதனை பெரிய பொருட்டாக எடுத்து கொள்வதில்லை. ஆனால் அது எதிர்காலத்தில் அக்குழந்தைக்கு எதிர்காலத்தில் உள்ளத்தில் பதிந்து பெரியவர்களை மதிக்காத தன்மை வெளிவரும். எனவே பிள்ளைகளுக்கு பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை கற்று கொடுக்க சரியான தருணம் பிள்ளைகள் பெரியவர்களிடம் எப்படி அணுகுகிறது என்பதை கண்காணித்து  திருத்தம் செய்ய வேண்டும். 

சிறு பிள்ளை விவரம் தெரியாமல் சொல்கிறது கொஞ்சும் வயதில் ஏன் அதட்டுகிறாய் என்று சில பெரியவர்கள் கூறுவார்கள். ஜாக்கிரதை திருத்துவது சிறு அரும்பில் மட்டுமே முடியும். எனவே பிறருக்கு மரியாதை கொடுக்கும் பழக்கத்தை கற்று கொடுத்தல் வேண்டும் .அதே போன்று பிறருக்கு இடையூறு செய்யும் போது உடனே அதற்கு தகுந்த விளக்கம் கூறி புரிய வைக்க வேண்டும். 

குழந்தை பருவம் தாய் மடியே கல்வி கூடம் நல்ல பழக்கங்களை ஊட்டி வளர்க்க வேண்டும். ஐந்து வயதிற்கு மேல் வெளியே சண்டை சச்சரவுகள் செய்து வீட்டிற்கு பஞ்சாயத்து வருகிறது என்று வைத்து கொள்வோம்.  ஒருபோதும் நம் குழந்தைக்கு ஆதரவாக எதிர் தரப்பிடம் சண்டைக்கு சென்று விடாதீர்கள். அது சிறு குழந்தை உள்ளத்தில் நமக்கு நல்ல ஆதர இருக்கிறது. பிறரிடம் சண்டையிடவோ இடையூறு தரவோ தயங்காத நிலை உள்ளத்தில் உருவாகலாம் பாசங்கள்  உள்ளத்தில் வைத்து கண்டிப்பை வெளியே காட்ட வேண்டும் என்ற கருத்தை அற்புதமாக அதிரை மெய்சா பின்னூட்டம் மூலம் தெரிவித்து இருந்தார். அது முற்றிலும் சரியே !

அதிகமான செல்லம், எந்த தவறு செய்தாலும் கண்டிப்பு செய்யாமல்,வளர்ந்த குழந்தை பள்ளி கூடம் செல்ல மறுத்த போதுதான் தனது தவறு அந்த தாய்க்கு தெரிய வந்தது.

உளவியல் மருத்துவரிடம் சென்றாள் தாயவள் ..குழந்தை மனதில் தாய் காட்டிய அபரிதமான அன்பு... பிறரிடம் அணுக கூட மறுக்கிறது என விளக்கம் கிடைக்கபெற்றாள். குழந்தைக்கு  தகுந்த பயிற்சி அளிக்க பட்டு பள்ளி கூடம் செல்ல ஆரம்பித்தது. எனவே பள்ளிக்கூடம் செல்ல போக வேண்டும் என்பதை பிள்ளைகளிடம் கூறி வருவதும் சிறு சிறு பாடங்கள் சொல்லி கொடுப்பதும் பிள்ளைகளை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் என்பது உளவியல் வல்லுனர்களின் கருத்து செல்லம் உள்ளம் கேட்கும் மோர்... மோர்... என்று. ஆனால் அளவாய் கொடுத்து வளமாய் வாழுங்கள். செல்லம் அதிகமாய் கொடுத்ததால் பிள்ளையின் வாழ்வு சூன்யமானதை அடுத்த ஆக்கத்தில் தருகிறேன்...
இன்னும்  வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, March 29, 2013

சவப்பெட்டிப் பேசுகிறேன் :

ஆவி அடங்கியதும் ஆணிகளே பூட்டாகச்
சாவி தரப்படாமல்  சாத்துவரே கூட்டாக!

பூட்டில்லாப் பெட்டிப் பூவுலகில் வேறுண்டா?
காட்டிவிட்டுக் கதையுங்கள் கல்லாப் பெட்டியே!

நீர்க்குமிழி நேரமுள்ள  .நிலையில்லா உலகம்தான்
ஆர்க்குமிதில் பேதமின்றி அடக்கம்தான் சவப்பெட்டி!

நாவடக்கம் எங்குமில்லை நான்பார்த்தப் பெட்டிகளில்
நானடக்கம் செய்வதனால் நான்மட்டும் கெட்டியாமே!

சென்ற நிமிடம் சிறப்பான கட்டில்
சென்ற உடனே  சவப்பெட்டித் தொட்டில்!

நாற்காலிக் கட்டிலில் நாளை கழிக்கும் நண்பர்காள்
நாலுபேரும் உங்களை நாளை சுமப்பர் என்பெட்டி!

வருபவர்க்கு இடம்வேண்டி வசிப்பவரை இடமாற்றித்
தருவதாற்றான் சவப்பெட்டித் தரைவழியின் புகைவண்டி!

என்னை உணராமல் என்னதான் அடைவீரோ?;
விண்ணை உணரத்தான் வந்துளேன் அறிவீரோ?

மரணமென்னும் கைப்பான மருந்தால் மயக்கத்தின்
தருணமதில் நீள்தூக்கம் தருமிச் சவப்பெட்டி!

கல்லாப் பெட்டிகளே  வாக்குப் பெட்டிகளே
எல்லாப் பெட்டிகளும் எங்கே போவீர்?

மயக்கம் கொட்டிட மாற்றம் செய்தவரே
தயக்கம் விட்டுநீ தங்குவாய் என்னிடமே!

எத்தனையோ வங்கியில் இட்டதெலாம் பங்காகும்
இத்தரையில் தங்கிட இவ்விடமே பங்காகும்!

உங்களின் பெட்டிகள் உங்களோடு வாரா
உங்களின் நண்பனாய் உற்றவனும் நானாம்!

செல்லாக் காசுகளாம் செல்லரிக்கும் உடலுக்குக்
கல்லாப் பெட்டியாகிக் கல்லறையாம் திடலுக்குள்!

என்னைப் பார்த்து அழுதவர்  வாக்குப்பற்றி
எண்ணிப் பார்க்கும் பொழுதில் வாக்குப்பெட்டி!

அஞ்சா நெஞ்சனும் அமைதியாய் எனக்குள்
தஞ்சம்  அடைந்திடும் அஞ்சறைப் பெட்டி!

எல்லாமே எனக்குள் இருப்பதால் தானே
இல்லாத பெருமை உங்களுக்கு வீணே!

கைக்கூலி வேண்டாம் கல்லறைப் பெட்டியில்
மெய்க்கூலி வேண்டும் மேனியின் நற்செயல்!

வாக்கெதுவும் இதுகாறும் வாய்திறந் துதிர்த்ததில்லை;
வாக்குகளை  விலைபேசும் வாக்குகளை உடையவரே!

வாக்குப் பெட்டி வாங்குவது  இலவயம்
கல்லாப் பெட்டிக் காட்டுவது தள்ளுபடி

அஞ்சறைப் பெட்டி அளிப்பது இணைப்பு
நெஞ்சாரச் சொல்லும் நானென்ன கேட்டேன்

சமாதான இடத்தில் சமாதான வழியும்
சமாதான மொழியில் சவப்பெட்டி மொழியும்!

நானா நீயா நாளும் போட்டி
நானோ நியா யத்தின்  பெட்டி

ஓயா துழைத்தவர் ஓய்வினைச் சுவைப்பாரே;
ஓயத் தரப்படும் ஓய்வறைச் சவப்பெட்டி!

அல்லும் பகலும் அயரா உழைப்பால்
அல்லல் படுமே  அனத்துப் பெட்டிகளும்!

நாடி ஒடுங்கும் நாடகம் கட்டுக்குள்
ஆடி அடங்கும்; ஆறடிப் பெட்டிக்குள்!

ஆறடி என்பதே என்றன் சிறப்பு
கூறடி மன்பதைக் காணும் இறப்பு!

அஞ்சறைப் பெட்டிக்கு அளவானச் சிறியனவாய்
அஞ்சறை மட்டுமே அமைந்தாலே பெருமையோ?

கல்லாப் பெட்டிக்குக் குழிகளாய்ச் சிற்றறை
வாக்குப் பெட்டிக்கு வாய்கிழிந்தச் சுற்றறை

நாடாளும் அரசரெலாம் நடந்திட்டார் வம்பாய்;
சாடாமல் அடங்கிடுவர் சவப்பெட்டிப் பாம்பாய்!

கோட்டைக் கட்டியவர் கொடிகட்டிப் பறந்தாலும்
வேட்டைச் சேட்டையர்க்கும் வருமிந்தச் சவப்பெட்டி!

கோடிக் கணக்கினிலே குவலயத்தை வளைத்தாலும்
கோடித் துணியுடுத்திக் குடிபுகுவோம் சவப்பெட்டி(க்குள்)!

ஆசையான நிலவினிலே அமாவாசைச் சவப்பெட்டி;
ஓசையாவும் அடங்குதலே உதட்டுக்குச் சவப்பெட்டி!

அதனாலே,
ஓசையின்றி ஒதுங்கிக் கொள்க
ஓரத்தில் அமர்ந்திடுக எல்லாப் பெட்டிகளும்
நான் மட்டும் நட்ட நடுவில்
நன்றாக அலங்கரிக்கப்பட்டு
உங்கள் உடலோடு ஒட்டியிருப்பேனே !

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Thursday, March 28, 2013

தாமதம்

அவசரச் செய்தியுடன்
அதிகாலை வரும்
செய்தித்தாள் பொடியன்

ஏழுக்கே வரவேண்டிய
எங்களூர்ப் பேருந்து

இதோ வருகிறேனென்ற
சக தொழிலாளி

ஒரு நொடியில்
தயாரென்ற இல்லாள்

எட்டே முக்காலுக்குத்
தரையெட்டும் விமானம்
மாலை வரவேண்டிய
மாண்புமிகு மந்திரி

என்று எல்லோரும் இங்கே
தாமதிக்கிறார்கள்..

வார்த்தை தந்துவிட்டால்
நெஞ்சுக்குள்
மணிச்சத்தம் கேட்காதா

நேரம் தாண்டும்போது
உயிருக்குள்
புயலொன்று வீசாதா

அதெப்படி
ஆறுக்கே வருகிறேனென்றுவிட்டு
ஆறிப்போய் நிற்பது

எட்டுக்கு வருகிறேனென்றவர்
ஏழுக்கு வந்து நிற்பார்
காலைக்குப் பதிலாய்
மாலை

நேரம் தவறாமை
நம் உயிரல்லவா
எத்தனை முறைதான்
அதைத் தூக்கிலிட

இங்கே
நேரத்தே வருவது
வேதனை மட்டுந்தானோ

பசி தாமதித்தால் நோய்
இதயம் தாமதித்தால் மரணம்
மனிதன் தாமதித்தால்
மனநோய்தானே

தாமதமே கௌரவம் என்பவனை
என்னவென்றழைப்பது

தருணத்தில் வாரா ஞாபகமும்
காலத்தே வாரா அறிவும்
துயரக்கடலில்தானே
நம்மை மூழ்கடிக்கும்

பொங்கும்போதே
இறக்காத பால்
பாழ்தானே

நேரத்தே காணா புண்
புற்றுநோயல்லவா

ஏனய்யா தாமதமென்றால்
எலி செத்துவிட்டது
அதன் ஈமக்கடனில்
தாமதமாகிவிட்டது
என்பார் சிலர்

காருக்குக்
கால் தடுக்கிவிட்டது
கைப்பிடியில்
பெட்ரோலும் இல்லை
என்பார் சிலர்

தாமதம் என்ற தப்புத்தானே
நம்மைப் பொய்புனையும்
குற்றவாளியாக்கியது

தாமதிப்போம்
கைமீறும் காரணங்களில்
நாம் தாமதிப்போம்

ஆனால்
தாமதமே சம்மதம் என்று
தரங்குறையலாமா
அன்புடன் புகாரி

Wednesday, March 27, 2013

[ 4 ] தொழில் புரிவோம் வாருங்கள் !

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் ! ஒரே பள்ளி, கல்லூரியில் படித்தவர்கள் படிப்பு முடிந்ததும் ஒருவர் அயல் நாடு சென்று பொருள் ஈட்டுவதற்காக போய்விட்டார் மற்றொருவரோ உள்நாட்டிலேயே ஒரு வேலையை தேடிக்கொண்டு தன் வாழ்க்கையை துவங்கினார் பல வருடங்கள் உருண்டோடின ஒருநாள் இரண்டு நண்பர்களும் சந்திக்கும் சூழல் உருவானது இருவரும் ஆரத்தழுவிக்கொண்டு பரஸ்பரம் விசாரித்துக் கொள்கின்றார்கள் வெளி நாட்டிலிருந்து வந்த நண்பர் உள் நாட்டு வாசியிடம் கேட்கின்றார் என்ன செய்து கொண்டு இருக்கிறாய் மாப்புலே ?  உள்நாட்டு வாசியின் பதில் ஓர் தொழில் நிறுவனம் சொந்தமாய் நடத்தி கொண்டிருப்பதாய் கூறுகிறார்.

நண்பருக்கு இன்ப அதிர்ச்சி ! இருவரும் பேசிக்கொள்வதை உரையாடலாய் பார்ப்போம் 

வெளி நாட்டு வாசி :  தொழில் நல்லா போகுதா 

உள்ளூர் வாசி :  எல்லா புகழும் அல்லாஹ்விற்கே 

வெளி நாட்டு வாசி :   எனக்கும் ரொம்ப நாளாக சொந்தமாய் தொழில் செய்யணும் என்ற ஆசை 

உள்ளூர் வாசி :  சந்தோஷம் தாராளமாக செய் எனது ஒத்துழைப்பு நிச்சயமாக உண்டு 

வெளி நாட்டு வாசி :  என்ன தொழில் செய்யலாம் 

உள்ளூர் வாசி :  [அமைதியாக இருக்கின்றார்] 

வெளி நாட்டு வாசி :  என்ன மாப்லே அமைதியாயிட்டே 

உள்ளூர் வாசி :  ஒன்னும்மில்லே நா ஒன்னு கேட்பேன் பதில் சொல்றியா 

வெளி நாட்டு வாசி :   ஓ தாராளமாக சொல்றேன் 

உள்ளூர் வாசி :  என் மகனுக்கு கல்யாணம் செய்யலாம்னு இருக்கேன் எப்படி பட்ட பொண்ணா பாக்கணும் 

வெளி நாட்டு வாசி :  நல்ல பொண்ணா பாரு

உள்ளூர் வாசி :  நல்ல பொண்ணுன்னா எப்படி !?

வெளி நாட்டு வாசி :  அழகான, அடக்கமான, அறிவான, பொண்ணாகவும் நல்ல குடும்பமாகவும் ஓரளவு வசதியும் சேர்ந்த இடமாக பார்க்கவேண்டியதுதானே

உள்ளூர் வாசி :  இது அனைத்தும் ஒரு சேர கிடைக்குமா !? ஒன்று இருந்தா ஒன்று இருக்காது நீ சொல்வது போல் பார்த்தால் கோடியில் ஒன்னு கிடைக்கிறது சிரமம் உனக்குத் தெரிந்தால் சொல்லேன்

வெளி நாட்டு வாசி :  சிரிக்கிறார் [ பதில் இல்லை ]

உள்ளூர் வாசி :  உனது சிரிப்புதான் நீ ஏற்கனவே தொழில் சம்மந்தமாய் கேள்வி கேட்டாயே அதற்கு உண்டான பதிலும் ஆகும்

ஒரு தொழில் செய்வதற்கு ஆசை மட்டும் போதாது அனுபவம் மிக மிக அவசியம் என்ன தொழில் செய்வதென்றே தெரியாமல் ஆசையாக இருக்கின்றது என்ன செய்யலாம் என்று கேட்டால் அபத்தமாக தெரிகிறது ஒரு பெண்ணிடம் அழகு, அறிவு அடக்கம், பணிவு என்று நாம் ஆசைப்பட்ட அனைத்தும் எதிர்பார்ப்பது எவ்வளவு அபத்தமோ அது போல் தான் தொழிலிலும். எந்த பிரச்சனையும் இருக்கக்குடாது, நல்ல வருமானம் இருக்கணும், அதிகநேரம் உழைப்பதுபோல் இருக்ககூடாது.என்றெல்லாம் யோசித்தால் அவர் தொழில் செய்ய லாயக் இல்லாதவராகிறார்.

தொழில் செய்பவர் போலீஸ்காரர் உத்தியோகம் போல் எந்த நேரமும் அலார்ட்டாக இருக்க வேண்டும். நீ ஆசையை வளர்த்து கொள்வது போல் ஏதாவது ஒரு தொழிலில் அறிவை வளர்த்துக்கொள் நீ வெளிநாட்டில் இருக்கும் பொழுதே ஊரில் தொழில்  செய்யும் ஆர்வம் கொண்ட உனது உடன் பிறப்பு, மைத்துனர், மிகவும் நம்பிக்கையான நண்பன் போன்றவர்களை தேர்ந்தெடுத்துக்கொள் ஒரு விடுப்பில் ஊர் வரும்பொழுது முன் சொன்ன நபர்களில் யாராவது ஒரு நபரை தேர்ந்தெடுத்து அவர்கள் எந்த தொழிலில் அனுபவமாக இருக்கிறார்களோ அதில் உனது முதல் ஈட்டை ஆரம்பத்தில்  [ குறைவாக ]  போட்டு முதலீட்டுக்கு ஓர் நபரை  உரிமையாளராக நியமித்து கூட்டாளி பத்திரம் தயார் செய்து தொழில் அனுபவசாலியான உனது தேர்ந்தெடுப்பை 40 சதவிகிதம் இலாப நஷ்ட கூட்டாக்கி ஆரம்பிக்கலாம் முதலின் உரிமையாளர் [ உனது தந்தை, மாமனார், மனைவி ] போன்றோர் இருக்கலாம் மாமனாருக்கு ஆண்மக்கள் இல்லாது இருந்தால் மாமனாரை  தேர்ந்தெடுக்கலாம் நண்பன் பாட்னராக அமைந்தால் மனைவியை உரிமையாளராக்க வேண்டாம் உனக்கு அண்ணன் தம்பிகள் இருந்தால் உன்  தகப்பனாரை உரிமையாளராக்க வேண்டாம்.

ஆக ஏதோ தொழிலை ஆரம்பித்து தாம் வெளிநாடு சென்று அடிக்கடி போன் தொடர்புகள் கொண்டு  கணக்கு வழக்குகள், வியாபார நடவடிக்கைகளை அறிந்து கொள்வது.  இவைகளை மாத மாதம் மெயில் செய்யச்சொல்லி சந்தேகங்களை அப்பொழுதே சரி செய்து கொள்ள வேண்டும் வியாபாரத்தில் நட்பு சொந்தங்களுக்கு இடமில்லை தொழிலில் கண்டிப்போடு இருக்கவேண்டும் எந்த விஷயங்களும் தெரியாதது போல் காட்டிக்கொள்ளக்கூடாது.

இரண்டு  வருடத்திற்கு ஒரு முறை விடுப்பு கிடைப்பவர்கள் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி 10-15 நாள் விடுப்பில் இடையில் வந்து வியாபார விஷயங்களை மேம்படுத்துதல்,கணக்கு பார்த்தல், பிரச்சனைகள் சரிசெய்தல், லாபம் எடுப்பது, முதலை அதிகரிப்பது, போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  
ஒரு நாள் வரும். அது நமது உடல் கோளாறு, கம்பெனி பிரச்சனை, வீட்டு பிரச்சனை இது போன்று சம்பவங்கள் வந்தால் கவலைப்படாது ஊர் வந்து நாம் ஆரம்பித்த தொழிலை சிறப்பாய் தொடரலாம்.
காத்திருங்கள் வியாழன் வரை...
மு.செ.மு.சபீர் அஹமது

Tuesday, March 26, 2013

ஐந்து விரல்களும்... ஆறறிவு மனிதனும்...

ஐந்து விரல்களும் ஆறறிவு மனிதனும், வித்தியாசமான தலைப்பு என்றாலும் இது ஒரு வித்தியாசமான விழிப்புணர்வுக்கான சிறிய கட்டுரை. சமையல் ஒன்றுதான் சுவை மட்டும் சற்று வேறுபாடாக இருக்கும், சுவைதான் வேறுபாடே தவிர புரதச் சத்துக்கள் வேறுபடாது. நம்பிக்கையோடு படிக்கலாம் [ புசிக்கலாம் ]

இந்த தலைப்பை நான் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் மனிதன் ஆறறிவு பெற்றவன்தான், இருந்தாலும் அவன் அவனைப் பற்றியும், அவனுடைய வாழ்க்கையைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் வித விதமாக விளங்கிக் கொண்டதுதான் பிரச்சனை, யானையைப் பார்த்த குருடன் எப்படி விளங்கி இருப்பானோ அதைப் போன்று எதையுமே முழுமையாக இந்த மனிதன் விளங்கியது இல்லை, அடுத்தவனை விளங்க விட்டதும் இல்லை.

இறைவன் படைத்த உயிரினங்களிலேயே தான் ஒரு விஷேஷித்தவன் என்று மனிதன் நன்கு அறிவான். மேலும் எல்லோரும் ஒரே எண்ணிக்கையிலான உடல் உறுப்புக்களை பெற்று இருந்தாலும் அதில் சில சில வித்தியாசங்கள்  இருப்பதை பார்க்கின்றான். அந்த வித்தியாசத்தை ஏன் இறைவன் கொடுத்தான் என்று சரியாக உணர்ந்து பாராமல் அதை வைத்தே கேளிக்கையாகவும், நையாண்டியாகவும் பேசி வருகின்றான்.

குடும்பத்தில் பிரச்சனை, சமூகத்தில் பிரச்சனை, கல்விக் கூடங்களில் பிரச்சனை, நட்பு வட்டாரங்களில் பிரச்சனை, ஊரில் பிரச்சனை, அரசாட்சியில் பிரச்சனை, இன்னும் ஏராளமான பிரச்சனைகளுக்கு அவன் எடுத்துக்கொள்வது இந்த ஐந்து விரல்களை மட்டும்தான். யெஸ், அதைதான் சொல்ல வந்தேன். அதாவது, ஏதாவது சில சில பிரச்சனைகள் வந்தால் அவன் சொல்லுவது ஐந்து விரல்களும் ஒன்றாகவா இருக்குது, சரிதான் போங்கப்பா, உங்க வேலையைப் பாருங்கப்பா. நீங்களும் பார்க்கலாம் பல இடங்களில் இது மாதிரி பேசுவதை.

நான் சொல்லவந்த கருத்து என்னவென்றால், உண்மையிலும் மெய்யாகவே ஐந்து விரல்களும் ஒரே அளவில் இல்லைதான், இரண்டு கைகளில் மற்றும் இரண்டு கால்களில், ஆனால் அவற்றுக்குள் உள்ள ஒற்றுமையை நாம் பார்க்க வேண்டும்.

எனக்கு தெரிந்த ஒரு சில ஒற்றுமையை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். உணவு உட்கொள்ளும்போது ஐந்து விரல்களும் ஒன்றாக இணைகின்றது, ஆபத்திலிருந்து பாதுகாக்க இணைகின்றது, எழுதும்போது இணைகிறது, நடப்பதற்கு ஒன்றாக இணைந்து செயல் படுகிறது. மேலும் தாய் வயிற்றிலிருந்து பிறக்கும் குழந்தையை கையேந்தி பெற்றுக்கொள்ள இரண்டு கைகளில் உள்ள ஐந்து விரல்களும் ஒத்துழைக்கின்றது, எத்தனையோ நன்மையான காரியங்களுக்கு எல்லாம் இந்த விரல்கள் இணைகின்றது.

இந்த ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாக இருந்திருந்தால் என்ன செய்ய முடியும் ? அதுதான் இறைவன் படைப்பின் இரகசியம்.

நம் மத்தியில் இருக்கும் மனிதர்களும் இப்படித்தான், எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படியும் இப்படியும்தான் இருக்கின்றார்கள், மனிதனுக்குள் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் அடியோடு ஒழிய வேண்டும், நன்மையாக முடிய வேண்டிய கணக்கில் அடங்கா எத்தனையோ காரியங்கள் முடியாமல் கிடக்கின்றது.
பறப்பன, ஊர்வன, நீந்துவன, கால்நடைகள், தாவரங்கள் இவைகளெல்லாம் மனிதனைவிட அறிவில் குறைந்து காணப்பட்டாலும், செயல்களில் உயர்ந்து காணப்படுகின்றன.

மனிதன் மனம் திருந்த வேண்டும், ஏற்றத் தாழ்வுகள் அடியோடு ஒழிய வேண்டும், ஒற்றுமை தழைத்து ஓங்கவேண்டும், மனித சமூகம் நிம்மதியாக வாழ வேண்டும், இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர வேண்டும், ஆண்கள் பெண்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், இன்னும் எத்தனை வேண்டும் ? வேண்டும், வேண்டும், உலக மக்கள் அனைவரும் புரிதல்களில் ஒன்றாகி ஒற்றுமையுடன் வாழவேண்டும்.

வாழ்க வளமுடன்
அன்புடன்,

மனித உரிமைக்காவலர்
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)


Monday, March 25, 2013

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு மீண்டும் சாத்தியமா ?

அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமுல் படுத்தவேண்டுமென்று பலதரப்பிலிருந்தும்  குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. சில அரசியல் கட்சிகள் குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை நடத்தியது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. வைகோ தமிழகத்தின் பல பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு மதுக்கடைகள் ஒழிப்புக்கு ஆதரவாக மக்கள் ஆதரவைத் திரட்ட முற்பட்டார். பல இஸ்லாமிய இயக்கங்கள் தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் மறியல் போராட்டம் என்றெல்லாம் நடத்திக் காட்டின. பல மகளிர் அமைப்புகள் அடையாள உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தின. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கூட அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. திரு. சக்தி பெருமாள் என்ற ஒரு பெரியவர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து சாகும் நிலையில் கைது செய்யப்பட்டுக் காப்பாற்றப்பட்டார். இவைகளைத் தொடர்ந்தும் கண்ணால் காணும் காட்சிகளின் அவலங்களையும் முன்னிட்டு முழுமதுவிலக்கை தமிழ் நாட்டில் மீண்டும் அமுல் படுத்த வேண்டுமென்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.  இந்த பிரச்னை பற்றி நாமும் சற்று விவாதிக்கலாம்.

ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு நீதிக் கட்சியும் பிறகு காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருந்த காலங்களில் தமிழ் நாட்டில் மதுவிலக்கு அமுலில் இருந்தது. அப்போது கூட திருட்டுத்தனமாக சிலர் மறைவான இடங்களில் சாராயம் போன்றவற்றைக் காய்ச்சி அச்சத்துடன் குடித்து வந்தார்கள். அந்தப் பழக்கம் உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு பேரூராட்சி என்று எடுத்துக் கொண்டால் அங்கு அதிகபட்சமாக  ஐந்து பேர்கள் மட்டுமே அப்படி இருப்பார்கள். சில நேரங்களில் காவல்துறையிடம் மாட்டிக் கொள்வார்கள். எனக்கு சிறுவயதாக இருந்த போது இப்படி சாராயம் காய்ச்சிய ஒருவரை கைது செய்து  சேது ரோடு வழியே கையைக் கட்டி காவல்துறை இழுத்துச் சென்றதை ஊரே கூடி  வேடிக்கை பார்த்தது நினைவில் நிற்கிறது.

காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா அவர்களை முதலமைச்சராகக் கொண்டு ஆட்சிக்கு வந்தது. அந்நேரம் மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுந்தபோது " அரசின் வருமானத்துக்காக மதுவிலக்கை ரத்து செய்வது  மூட்டைப் பூச்சிக்காக வீட்டைக் கொளுத்துவதற்கு ஒப்பானது " என்று கூறினார். இந்த நேரத்தில் அண்ணா மறைந்தார்.

அண்ணா அவர்கள் மறைந்த பிறகு அண்ணாவின் இதயத்தைக்  கடனாகக் கேட்டு இரங்கற்பா எழுதிய கலைஞர் கருணாநிதி அவர்கள் அண்ணாவை புகழ்ந்து பாடியபோது
  
" ஆந்திரத்து பிரம்மானந்த ரெட்டிகாரும் 
ஆஹா நீதானே அசல் காந்தியவாதி என்று 
ஆராதனை செய்திட்டார் 
மதுவிலக்கை தீவிரமாய் ஆக்குகின்றீர்!
பல மாநிலத்தில் கை கழுவி கலயம் கட்டிவிட்டார் மரங்களிலே என்று 
கிரி என்றால் மலையன்றோ! 
அந்த மலை தழுவும் முகிலானார் நம் அண்ணா ""

என்று  குறிப்பிட்டு  கவி பாடிவிட்டு அண்ணாவுக்குப் பிறகு தானே  முதலமைச்சராக வந்த பிறகு ஒரு சுப முகூர்த்தநாளில் மதுவிலக்கை தமிழ் நாட்டில் ரத்து செய்து மதுக்கடைகளை திறந்துவிட்டார். மதுக்கடைகளைத் திறக்க வேண்டாம் என்று தி மு க ஆட்சிக்கு வருவதற்கு துணையாக நின்ற முஸ்லிம் லீக் மற்றும் இராஜாஜி ஆகியோர் விடுத்த கோரிக்கைகள் கலைஞரின் காதுகளில் விழவில்லை.
  
கலைஞர் கருணாநிதியின் மீது ஏற்பட்ட கருத்துமாறுபாடுகளால் தி மு க வை விட்டு விலகி தனிக் கட்சி கண்டு வென்று ஆட்சியைப் பிடித்த எம் ஜி ஆர் காலத்தில் மீண்டும் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டுவரப்படுமென்று நன் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ " தைரியமாகச்சொல் நீ மனிதன் தானா? இல்லை!  நீதான் ஒரு மிருகம்! இந்த மதுவில் விழும் நேரம்! " என்ற திரைப் பாட்டுக்கு வாயசைத்துவிட்டதோடு தன் கடமை முடிந்தது என்று எண்ணி மதுக்கடைகளை தனது ஆட்சிக் காலம் முழுதும்  தொடர்ந்தார். அத்துடன் வெறும் சாராயக் கடைகளாக இருந்தவை ஒயின் ஷாப் என்று அழைக்கப்படும்  சீமைச்சாராயம் விற்கும் கடைகளாகவும் அப்பனே !  ராமச்சந்திரா ! என்று கோஷம் போட்டுத் துவக்கப்பட்டன. 

அதன்பின் கருணாநிதி முதல்வராகி பின் ஜெயலலிதா அம்மையார்  முதல்வரானாலும் எத்தனையோ மாற்றங்கள் கண்டாலும் மதுவிலக்கு மட்டும் மீண்டும் அமுல் படுத்தப் படவில்லை. மாறாக, ஜெயலலிதா ஆட்சியில்  மது விற்பனைக்காக   டாஸ்மார்க் என்ற அரசின் நிறுவனத்தை ஏற்படுத்தி , படித்த இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி அரசே சொந்தமாக மதுக்கடைகளை நடத்த ஆரம்பித்தது மட்டுமல்லாமல் அந்த மதுக்கடைகளை ஒட்டி அரசே " பார்" என்று அழைக்கப்படும் மதுபானம் அருந்தும் வசதிகளைக் கொண்ட விடுதிகளையும் நடத்த ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது. 

1983 ஆம் ஆண்டில் வெறும்  139 கோடி ரூபாய்களாக இருந்த மதுக்கடைகளின் ஏலத்தின் மூலம் இருந்த அரசின் வருமானம்  2002 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட இந்த அரசு மதுக்கடைகள் மூலம்    2,800  கோடி ரூபாய்களாக வானுக்குயர்ந்தது.  இந்த வருமானம்   2013ஆம் ஆண்டில்  25,000 கோடி ரூபாய்களாக இன்னும் உயர உயர்ந்து இருக்கிறது.  

இப்படிப்  பல ஆயிரம் கோடிகளாக மதுவிற்பனை மூலம் தமிழக அரசு கொட்டிக் குவித்திருக்கும் வருமானத்துக்குக் காரணமாக இருப்பது செல்வந்தர்கள் தரும் வரிகளல்ல. இந்த வருமானத்தின் பின்னணியில் இருப்பது ஒரு சமூக அவமானம். அரசு தனது வருமானத்தைப் பெருக்க எவ்வளவோ வழிகள் இருந்தும் இப்படி சாராயக்கடைகள் மூலம் பெறுவது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பிக்கொள்வதற்கு ஈடானது. 

கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேலான ஏழைத் தமிழர்கள் , கூலித் தொழிலாளிகள், நடுத்தர வர்க்கத்தினர் , பள்ளி கல்லூரி மாணவர்கள், சொல்வதற்கு வெட்கக்கேடாக இருந்தாலும் உண்மையில் பல பெண்கள் ஆகியோர் மதுவின் போதைக்கு அடிமையாகி தங்களின் வாழ்வையும் தாங்கள் குடும்பத்தினரின்  வாழ்வையும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் கவுரவத்தையும் துயருக்குள்ளாக்குகின்றனர்.  

முன்னெப்போதும் இல்லாத அளவில் தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள்  போன்ற அனைத்துப் பாதகங்களுக்கும் குடியே அடிப்படைக் காரணமாக அமைந்து இருக்கிறது.  

அறுபது சதவீதத்துக்கும் அதிகமான சாலை விபத்துக்கள் குடிப்பழக்கத்தின் காரணமாகவே நிகழ்வுறுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 

குடும்ப வன்முறையை கோலோச்சி  நிற்கச்செய்வதும் குடிப்பழக்கமே. குடிகாரக் கணவன்மார்களால் கொடுமைப் படுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பெற்ற குழந்தைகளை பேணாமல் அவர்களுக்கு கல்வி யறிவு தருவதில் சிந்தை செலுத்தாமல் இள வயதிலேயே அவர்களை வேலைக்கு அனுப்பி அவர்களின் கூலியைக் கூட தனது குடிப்பழக்கத்துக்கு பறித்துக் கொள்ளும் பாவிகளாக பெற்றோர் மாறும் சமூக அவலம் சந்தி சிரிக்கிறது. 

குடிக்கும் நிகழ்ச்சி இல்லாத சமுதாய நிகழ்ச்சிகளை சந்திக்க முடியவில்லை. பிறந்தநாள், கருமாதி செய்யும் நாள் முதல் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கூட குடிப்பதற்கும் குடிப்பவர்களுக்கும்  சிறப்பு ஏற்பாடுகள் செய்து வைப்பது சமூகப் பழக்கத்தில் தொத்து வியாதி போல்  குடியேறிய குஷ்டரோகமாகிவிட்டது. 

மனிதனுடைய ஒரு சில மணித்துளிகளின் சிறிய மகிழ்ச்சிக்கான விலை பண்பாட்டுச் சீரழிவு என்று ஆகிவிட்டது. 

படிக்கும் மாணவர்கள் பள்ளி கல்லூரிக்கு வரும்போதே குடித்துவிட்டு வரும் பழக்கத்துக்கும், தொழிலாளர்  கொஞ்சம் ஊத்தாமல் வந்தால் வேலை  செய்ய முடியவில்லை என்கிற நிலைமைக்கும் ஆளாகிவிட்டார்கள்.   

அரசியல் காரணங்களுக்காகவும் பொருளாதாரக் காரணங்களுக்காகவும் வாடகைக் கொலையாளிகளுக்கு வழங்கப்படும் இன்றியமையாதவைகளில் மது பாட்டில்கள் நீங்கா இடத்தைப் பெற்றுவிட்டன. மது குடித்த மயக்கத்தில் அடையாளம் காட்டப் படுபவர்களை வெட்டவும் குத்தவும் பின் விளைவுகளை சிந்திக்காமல் தலைப்பட்டுவிடுகிறார்கள். மது உள்ளே போனதும் மதி வெளியே வந்துவிடுகிறது.  மதுக்கடைக்குப் போக பணம் தராத தாயைக் கொன்ற மகனையும், மதுப்  பழக்கத்துக்காக பணம் இல்லாமல் பெற்ற மகளை விபச்சாரச் சந்தையில் விற்ற தகப்பனையும், மது போதையில் மருமகளை பெண்டாள நினைத்த மாமனாரையும், மதுக்கடைகளில் குடிபோதையில் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்ட நண்பர்களையும் சமீப கால  சரித்திரம் சந்தித்துவருகிறது.  

மாலை நேரங்களில் குடும்பங்களுடன் பொதுப் பேருந்துகளில் பயணிக்க முடியவில்லை. அருகில் வந்து அமர்பவர்கள் அடித்துவிட்டு வருவதால் ஒரு 'சக்தி பிறக்குது நம் மூச்சினிலே. '

கோயில்கள், பள்ளிவாசல்கள் , தேவாலயங்கள்  பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவை அமைந்திருக்கும் இடங்களுக்கு நெருக்கமான இடங்களில் மதுபானக் கடைகள் வைக்கக்கூடாது என்பது விதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் உண்மையில்  இந்த விதிகள் நடைமுறையில் விடைகொடுத்து அனுப்பப்பட்டு விட்டன.  

நெறிமுறைகளைக் கூட பின்பற்றாமல்  இப்படி இந்த மதுக்கூடங்களை அரசே முன்னின்று நடத்துவது ஏன்?   மதுவிலக்கை ஏன் மீண்டும் நடைமுறைப் படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்பினால் இதற்காக சொல்லப்படும் தலையாய  காரணங்கள் (1) கள்ளச்சாராயமும் கள்ளச்சாராய சாவுகளும் அதிகரிக்கும் என்பதும் (2) குடித்துப் பழகியவர்கள் அண்டையில் உள்ள மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று குடிப்பதால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய வருமானம் அயல் மாநிலங்களுக்குச்  சென்றுவிடுகிறது என்பதுமேயாகும். 

கள்ளச்சாரயத்தைக் கட்டுப்படுத்த அல்லது ஒழிக்க அதிகாரம் பெற்ற அரசு இயந்திரம் தனக்குத்தானே நாங்கள் ஒரு வேஸ்ட் என்று ஒப்புக்கொள்ளத்தான் இந்த விவாதம் உதவும். ஆட்சி அதிகாரங்களைக் கையில் வைத்திருக்கும் அரசு இப்படிச்  சொல்வது கையாலாகத்  தனம்  என்றுதான் வருத்தத்துடன் குறிப்பிடவேண்டி இருக்கிறது. கள்ளச்சாராயத்தை முழுதுமாக ஒழித்துவிட  முடியாது என்று அரசே நினைத்து  சாராயக் கடைகளை திறந்து வைத்திருப்பது போல் கொலை, கொள்ளை குற்றங்களை முழுதுமாக ஒழிக்க முடியவில்லை என்று இந்திய தண்டனை சட்டத்தை இரத்து செய்துவிடலாமா? 

தமிழகத்துக்கு வரவேண்டிய வருமானம்  அண்டை மாநிலங்களுக்கு சென்று விடுகிறது என்கிற வாதமும் பொருளற்றது. குடிக்கும் எல்லோரும் ஒரு டூரிஸ்ட் பஸ்ஸை எடுத்துக் கொண்டு அடிமடியில் பணத்தைக் கட்டிக்கொண்டு அண்டை மாநிலங்களுக்கு  தினசரி போய் குடிப்பதில்லை.  அந்தந்த மாநிலங்களின் எல்லை ஓரங்களில் இருக்கும் ஒரு சிலர் மட்டுமே போய் வர முடியும். மொத்த மக்கள்தொகையில்,  இப்படிப் போவோரின் அளவு, கடலில் கரைக்கப்பட்ட  பெருங்காய அளவே. மேலும் வருமானம் என்பதைப் பார்க்கும் அரசு தனது மாநில மக்களின் மானம் போவதை ஏன் பொருட்படுத்த மறுக்கிறது?  வருமானத்துக்காக மானத்தை இழக்க அரசுகள் தயாராக இருக்குமானால் மானம் தொடர்பான வேறு தொழில்களையும் அரசே விடுதிகள் தொடங்கி வியாபாரமாகச் செய்யலாமே.  அத்துடன் கஞ்சா முதலிய போதைப் பொருள்களையும் அனுமதித்து கல்லூரி வாசல்களில் அரசின் சார்பில் கடை திறந்து நடத்தலாமே!  இவையெல்லாம் கண்துடைப்புக் காரணங்கள். 

உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் இரு அரசியல் கட்சிகளே முதன்மைக் கட்சிகள். இந்த இரு முதன்மைக் கட்சிகளில் மாறி மாறி ஒன்று ஆளும் மற்றது எதிர்க் கட்சியாக மக்கள் மன்றத்தில் இருக்கும்.  இந்த இரு கட்சிகளிலும் ஒரு குறிப்பிட்ட சமூக அல்லது சாதியைச் சேர்ந்த சக்தி படைத்த மோகனர்களும் பாலர்களும் ரட்சகர்களும் உடனுறைத் தோழிகளும் தோழர்களும் இளவரசிகளும் மொடாக்குடியாக்கும் மிடாசுகளும்  மிகப் பெரிய அளவில் மதுபான ஆலைகளை ஏழைத்  தமிழ் மக்களை நம்பியே நடத்தி வருகிறார்கள். இவர்களில் விஜயம் செய்யும் யாரையாவது அழைத்து ஐயா! சொல்லய்யா! என்று கேட்டால் இல்லைய்யா! என்று சொல்லிவிடுவார்கள்.   இந்த அரசு நடத்தும் மதுபான விடுதிகளின் 'சாக்கனாங்கடை' என்று அழைக்கப்படுகிற உள்ளுறை உணவுக்கூடங்களை நடத்துபவர்களும் இந்தக் குறிப்பிட்ட  சமூகத்தினர்  அல்லது இவர்களின் பங்காளிகளே.  தவிரவும் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் வார்டு கவுன்சிலர் வரையும்  மாவட்டச் செயலாளர்கள், வட்டங்கள்  ஒன்றியங்கள் ஆகியவற்றின் பொறுப்பாளர்களே  டெண்டர் என்ற பெயரில் கூத்தடித்து கொள்ளையடிக்கிறார்கள்.  இந்த உள்ளுறை உணவு விடுதிகளுக்காகவே ஆட்சி மாறும்    போதெல்லாம் கட்சி மாறுபவர்களும்  இருக்கிறார்கள். மதுக்கடைகளை அரசு மூட முடியாமல்  இருப்பதற்கு இதுவே முக்கியக் காரணம் . யாராலும் தொட முடியாத சக்திகள் படைத்த சாம்ராஜ்ஜியம் இந்த சாராய சாம்ராஜ்ஜியம். இது நமக்கு சொல்ல முடிந்த கதை . நெருக்கத்தில் இருக்கும்  அரசுக்கோ சொல்ல முடியாத கதை.   

மதுபான ஆலைகளாலும் மதுபானக் கடைகளாலும்  அரசுக்கு கணக்கில்  வருவது ஒரு வகை வருமானமாகக் காட்டப்பட்டாலும் அரசுக்  கணக்குக்கு வராமல் அரசாளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் நிதிகளுக்காக ஆலை அதிபர்களால்   வழங்கப் படும் பெரும் தொகையான  கட்சி நிதிகள் கட்சிகள் தேர்தல்களில் அதிகாரம் பெற்று மீண்டும் ஆட்சிக்கு  வர   வாக்காளர்களுக்கு வழங்கவே பயன்படும் என்பதும் பூசனிக்காயைப் போட்டு உடைப்பதுபோல் உடைக்கவேண்டிய  ஊரறிந்த சிதம்பர ரகசியம். 

அரசின் தரப்பில் வைக்கப்படும் மற்றொரு குறிப்பிடத்தக்க வாதம் அரசு ஏழைகளுக்கு வழங்கும் இலவசம் அல்லது விலை இல்லாப் பொருள்கள் மற்றும் இலவச சலுகைகளால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மதுக் கடைகளால் வரும்  வருமானம் பொருளாதார ரீதியில் அரசின் கஜனாவுக்குத் தேவை என்று கூறப்படுகிறது.  " கண்ணிரண்டும்  விற்று சித்திரம் வாங்கினால் உலகம் கை கொட்டி சிரியாதோ ? " என்று பாரதியார் பாடிய வரிகளைத்தான் இந்த வாதம் நினைவூட்டுகிறது.  குடிக்கு அடிமையாகிவிட்ட ஒரு ஏழைத் தொழிலாளி ஒவ்வொருநாளும் ஒரு மது பாட்டில் வாங்கிக் குடித்தால் ,  ஐந்து ஆண்டுகளில் அரசு நடத்தும் டாஸ்மார்க் கடைகளில் செலவு செய்து இழக்கும் தொகை ஒரு இலட்சத்து இருபத்து ஆறு ரூபாய் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. ஆனால் அரசிடம் அவருடைய குடும்பம் இலவசமாகப் பெறும் பொருட்களின் மொத்த மதிப்பு  பதினாறு ஆயிரம்  ரூபாய் மட்டுமே. குரங்கு ஆப்பம் பங்குவைத்த கதை போலத்தான் இருக்கிறது இந்தக் கதை.  ஏர் ஓட்டுபவன் இளிச்ச வாயனாக இருந்தால் மாடு மச்சான் என்று கூப்பிடுமாம். அப்டித்தான் இந்த அரசுகள் இலவசம் என்று சின்ன மீனைப் போட்டு ஏழைகளின் உழைப்பின் வருமானம் என்கிற  பெரிய மீனை  ஒரேயடியாக தட்டிப் பறிக்கின்றன.  

குடிப்பவர்கள் தரப்பில் வைக்கப்படும் விவாதம் குடிப்பது அவரவர் தனி மனித உரிமை . இதில் அரசு தலையிடக் கூடாது என்பதாகும். மக்களுக்கு நல்லதை கற்பித்து தீயவற்றில் இருந்து விலகி இருக்கும்படி போதிப்பதும் அரசின் கடமை. குடிப்பது தனிமனித சுதந்திரம் என்றால் விபச்சாரம் செய்வது மட்டும் தனி மனித சுதந்திரம் இல்லை என்று ஆகிவிடுமா? காசுவைத்து சூதாடும் உரிமையையும் இந்தப் பட்டியலில் செர்த்துவிடலாமா? சுதந்திரம் கருதி அனுமதித்துவிடலாமா? பொது இடங்களில் புகைப் பிடிக்கக் கூடாது என்று அரசு போட்ட சட்டம் தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்காதா? பூக்களைப் பறிக்காதீர்கள் என்று ஏன் பூங்காக்களில் எழுதிவைக்கவேண்டும்? இந்த இடத்தில் சிறு நீர் கழிப்பவர்கள் தண்டனைகுள்ளாவார்கள் என்று ஏன் அறிவிப்புகள் தொங்குகின்றன?  மக்களின் வாழ்வை ஒழுங்கு படுத்துவது அரசின் கடமை. பொது அமைதிக்காக தனிமனித சுதந்திரத்தை கிள்ளிப் பார்ப்பது  தவறில்லை.  

அடுத்து அரசே நடத்தும் கடைகளாக இருப்பதால் நல்ல சரக்கு கலப்படமில்லாமல் கிடைக்கிறது என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. மது குடிப்பது உடலுக்கும் உடமைக்கும் கேடு விளைப்பது என்பது மருத்துவம் நிருபித்த உண்மைகள்.  இதில் அரசு தரும் மது மட்டும் நன்மை பயக்கும் என்று எண்ணுவது அறியாமையின் அரிச்சுவடி.   அரசே தன் பொறுப்பில் நடத்துவதால் குடிக்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு அரசாங்கமே குடிக்கச் சொல்லி கடை நடத்துகிறது  என்கிற ஒரு மன தைரியம் வருகிறது. இதனால் குடிப்பது சமுதாயத்தின் முன்னால்  நல்ல மரியாதையைத் தராது என்று தெரிந்தும் புதிய புதிய குடிகாரர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். 

ஒரு தேசிய அளவிலான புள்ளி விபரம்  நூற்றுக்கு தொண்ணூறு ஓட்டுனர்கள் குடிப்பழக்கம் உடையவர்கள்  என்று கூறுகிறது. ஆனால் மதுபானக்கடைகள் யாவும்  தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலேயே அமைந்திருப்பது ஒரு ஆபத்தை கைகாட்டி அழைக்கும் செயலாகும். அத்துடன் ஒரு ஊரின் எல்லையில் நான்கு திசைகளிலும் மதுபானக் கடைகள் திறக்கப் பட்டு ஜெகஜோதியாக ஒளிவீசிக் கொண்டு இருக்கின்றன. எல்லா நேரமும் அங்கு கூட்டம் அலை மோதிக்கொண்டு இருக்கிறது. 

இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த அல்லது துவக்கி வைத்த பல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தி விட்டார்கள். அண்ணா பெயரில் ஆசியாவிலேயே பெரிய நூலகம் திறக்கப் பட்டதை மூடிப் போட்டு அதை திருமண மண்டபமாக முயற்சிக்கிறார்கள். பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை அங்கு செயல் பட விடாமல் சிறப்பு மருத்துவ மனையாக மாற்றி விட்டார்கள். கலைஞர் பெயரில் காப்பீட்டுத்திட்டம் உட்பட பல திட்டங்களை அனாதையாக விட்டுவிட்டார்கள்.  அதே முறையைப் பின்பற்றி  கலைஞர் கருணாநிதியின் ஆட்சியின்  காலத்தில் அறிமுகப் படுத்தப் பட்ட மதுக்கடைகளையும் மூடினால் இந்நாள் முதல்வரை மக்கள் அம்மா என்று அழைப்பதற்கு ஒரு உண்மையான அர்த்தம் இருக்கும். பெண்கள் எல்லாம் இந்த அம்மையார்  இருக்கும் திசை நோக்கி திருப்புகழ் பாடுவார்கள். 

அரசு நினைத்தால் இந்த தற்கொலைப் பாதையை நோக்கி தமிழக மக்கள் மெல்ல மெல்ல சென்று கொண்டிருப்பதை தடுத்து நிறுத்த முடியும். அரசு நினைத்துத்தான் ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்த ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது; இராஜ மானியம் ஒழிக்கப் பட்டது; வங்கிகள் தேசியமயமாகப்பட்டன. இன்றைய முதல்வர் ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை நிறுத்தப் பட்டது. இன்றைய முதல்வர்தான் கந்துவட்டியில் இருந்து மக்களை காப்பாற்ற சட்டம் இயற்றினார்; கட்டைப் பஞ்சாயத்துக்கள் காவல் நிலையத்தில் கூட நடைபெறக்கூடாது என்று சட்டம் இயற்றினார்.  இதனால்தான் இவரை தைரிய லட்சுமி என்றும்  புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். 

தமிழக சரித்திரத்தில் இலவசக் கல்வி தந்ததற்காக  காமராசரின் பெயர் நிலைத்து நிற்கிறது. தமிழக சரித்திரத்தில் சத்துணவு தந்தற்காக எம் ஜி ஆர்  புகழ் நிலைத்து நிற்கிறது. அதே போல் மதுவிலக்கை மீண்டும் துணிச்சலுடன் அறிமுகப் படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் என்றென்றும் நிலைக்கும் பெருமையும் புகழும் பெறவேண்டும்.  பெண்களின் பிரதிநிதியாக இவர் இதைச் செய்ய வேண்டும்.  எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தில் தமிழகம் முழுமைக்கும் மீண்டும் மதுவிலக்கை தமிழக அரசு மீண்டும் கொண்டு வருமா ?

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

Saturday, March 23, 2013

[ 2 ] உள்ளம் கேட்குமே !? MORE…!

உள்ளம் கேட்குமே MORE ! என்ற தலைப்பில் எழுத ஆரம்பிக்கும்போது எனது மனதில் ஓடும் ஓட்டங்களில் அடிப்படையில் எழுதவே ஆசைபட்டேன் அதுவே ஆரோக்கியம் ! காரணம் பல்வேறு தரப்பு புத்தகங்களின் தொகுப்பாக ஒரு படைப்பு இருத்தல் கூடாது. அது எந்த தகவலையும் தந்து விடாது ஒரு கட்டுரையாளர் அல்லது ஆய்வாளர் தனது கருத்தினை பதிகின்ற போது ஒரு துளி தகவலாவது கல்வியாளர் மத்தியில் போய்சேரும் என்பதே எனது கருத்து இதே கருத்தை அன்புடன் புகாரி அவர்கள் ஒரு ஆக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார் அதுவே சரி பல அறிஞர்கள் பெயரை கூறி அவர் கூறும் கருத்தை பதிவது அவர்களை நினைவு கூறும் விதமாக அமையுமே தவிர நாம் என்ன சொல்ல வந்தோம் என்பதே இல்லாமல் போகும் இருப்பினும் நாம் ஆக்கம் எழுதுவதற்கு ஏற்ற கருத்துகள் உள்வாங்கி கொள்வதில் தவறில்லை.

உளவியல் என்பது மனிதர்கள் மத்தியில் அன்றாட செயல்பாடே அதில் குறிப்பிட்ட சில விசயங்களைப் பற்றி ஆராய்வோம் .உள்ளம் என்றால் என்ன என்று கேட்டிருந்தேன் அதற்கு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் அரூபம் என்றார்... KMA.  ஜமால் முஹம்மது அவர்கள் மனசு புத்தி என்றார்... ஆனால் அவைகள் உள்ளத்தை அழைக்கும் வேறு பெயர்கள் அது என்ன என்பதை சரியாக விளக்கினார் கவியன்பர் அபுல் கலாம் அவர்கள் எனவே உள்ளம் என்றால் நாம் பார்க்கும் கேட்கும் விசயங்களை கிரகிக்கும் மூளையின் ஒரு பகுதியே... அதன் செயல்பாடுகளே உள்ளம் ! அந்த உள்ளத்தில் பதியும் விசயங்கள் நல்லவையாக் அமைய இருக்கும் சூழல் முக்கியம் சிறு வயதில் பிள்ளைகளுக்கு தாய் சொல்லி கொடுக்கும் விசயமே உள்ளத்தில் பதியும் ! பசுமரத்து ஆணி போல பதியும் எனவே நல்ல விசயங்களை கற்றுக் கொடுப்பதில் ஆர்வம் செலுத்த வேண்டும். 

இது வரை எழுதிய விசயங்களுக்கும் உள்ளம் கேட்குமே MORE  என்ற தலைப்பிற்கும் சம்பந்தமே இல்லை.

இனி விசயத்திற்கு வருகிறேன்...

உள்ளம் எதுவெல்லாம் கேட்கும் MORE...?

பொதுவாக சிறு குழந்தைகள் பாசம் என்ற ஒன்றை மட்டுமே எதிர்நோக்கி காத்திருக்கும் ஆனால் நம்மவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாத வயதில்குழந்தைகளிடம்  பாசத்தை அள்ளி கொடுப்பார்கள். ஆனால் பாசங்களை எதிர்பார்க்கும் ஐந்து வயது முதல் பதினைந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பாசம் என்ற ஊட்டம் கிடைக்காமல் தடுமாறும் நிலை எப்படி ? பள்ளிக்கூடம் சென்றால் அங்கு ஆசானின் அறிவுரை ! வீட்டிற்கு  வந்தால் பெற்றோர் பள்ளிக்கூடப் பாடங்கள் பற்றிய கேள்வி இவைகளால் பிள்ளைகள் மத்தியில் மனச்சோர்வு ஏற்படும். அந்த சிறு உள்ளம் யாராவது அன்பு காட்டினால் அவர்களிடம்  இன்னும் இன்னும் என கேட்கும்...

கூட்டு குடும்பங்கள் இருக்கும் வீடுகளில் பெற்றோர் கண்டிப்புடன் நடந்து கொண்டால் பாட்டி போன்றோரின் அரவணைப்பு இருக்கும் ஆனால் இன்றைய கால கட்டத்தில் தனி குடும்பம் என்று பிரியும் சூழல் இயந்திர வாழ்க்கை உள்ளசோர்வு என்பது பெரியவர் முதல் சிறுவர் வரை உள்ளது அந்த உள்ளம் கேட்கும் அன்பு பாசம் MORE MORE... என்று பெரியவர்கள் சிறார்களுக்கு அன்பு காட்டி மகிழலாம் சிறுவர்களும் மகிழ்வர் பிள்ளைகளிடம் முற்றிலும் கல்வி பற்றியே கேட்டு போரடித்து விடாதீர்கள். உங்கள் விடுமுறை நாட்கள் மகனுக்கும் விடுமுறையே மகிழுங்கள்.
இன்னும்  வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, March 22, 2013

காலம்

நிகழ்வுகளை
நினைவுகளாய்ப்
பதிந்து வைக்கும்
ஒலிநாடா

இன்றைய செய்திகளை
நாளைய வரலாறுகளாய்ப்
பாதுகாத்து வைக்கும்
பேரேடு

துக்கங்கள் யாவும்
மறந்துப் போக வைக்கும்
மாமருந்து

வாய்ப்புகளாய்
வாசற்கதவினைத் தட்டும்
உருவமில்லா ஓர்
உற்ற நண்பன்

காத்திருத்தல்
தவப் பயனாய்
பொறுமை தரும்
வரம்

மேலும் கீழுமாய்ச்
சுழற்றிப் போடும்
சக்கரம்

பிறப்பு, இறப்பு
மறுமை யாவும்
மறைத்து வைத்துள்ள
இரகசியப்
பெட்டகம்

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Thursday, March 21, 2013

ஐயா, இது அமெரிக்கா !

கடன் அட்டை
இல்லாதான் வாழ்க்கை
கனவிலும் தைக்க இயலா 
ஓட்டை

வீதி அழுக்கும்    
விரும்பி வந்து ஒட்டாத
வறட்டு மொட்டை 

அட்டைகளோ அட்டைகள் 
என்று
ஆயிரமாயிரம் அட்டைகள் 
இங்கே

எந்த அட்டை 
இருந்தால் என்ன

கடன் அட்டை 
இழந்தோரெல்லாம்
உடன் கட்டை ஏறுவோர்தான்


இன்றைய நிலையில்
அம்மா பிடிக்குமா
அப்பா பிடிக்குமா என்று
ஐந்து வயது பொடியனை
நிறுத்தினாலும்

கடன் அட்டைதான் பிடிக்கும்
என்றே ஓடுவானோ
என்ற ஐயம் தின்கிறது


ஆயிரம் சாகசங்களை
நிகழ்த்தி நிமிர்ந்தாலும்
ஓர் 
அசிங்கமும் கிடைக்காது 
"ஐலவ்யூ" சொல்ல

கடன் அட்டை மட்டும்
கொஞ்சம் 
கண்ணில் பட்டுவிட்டால்
கிளியோபாட்ராதான்
கையணைவில்


கடன் அட்டையிலும்
அந்தத் தங்க அட்டை 
கிடைத்துவிட்டாலோ

அலாவுதீன் பூதம்
தன்
முழுமொத்த சக்தியையும்
முறுக்கிக்கொண்டு
அப்போதே வந்து நிற்கும்
நம் உத்தரவிற்கு


வரிசை வரிசையாய்
கழுத்துப் பட்டை அணிந்த 
நாகரிகத் திருடர்கள்

வாசல்வழியை 
அடைத்தால்
தொலைபேசி வழி

தொலைபேசி வழியை 
அடைத்தால்
மின்னஞ்சல் வழி 

மின்னஞ்சல் வழியை 
அடைத்தால்
கனவுவழி என்று

வந்து வந்து வழிவர்


நொந்த மனமுடன்
ஓர்
இதய வருடல் தேடி
ஊருக்குத் தொலைபேசினால்

"இங்கு மட்டும் 
என்ன வாழுதாம்
அந்தச் 
சனியன்தான்"

என்கிறாயே 
நிஜமா தோழா..!
அன்புடன் புகாரி

Wednesday, March 20, 2013

[ 3 ] தொழில் புரிவோம் வாருங்கள் !


சென்றவாரம் ஒரு பொருள் சந்தைக்கு வரும் முன் எத்தனை தொழிற்சாலை தொழிலாளர்கள் காலம் ஆகியவைகளை தாண்டி வருகிறது என்பதை விளக்குவதாக சொல்லி இருந்தேன்.

உதாரணமாக ஆண்கள் அணியும் டி சர்ட் கடையை அலங்கரிக்க விவசாயிகளின் உழைப்போடு துவங்குகிறது.

1. பருத்தி செடியில் காய்க்கும் பருத்திதான் முதல் மூலப்பொருள்

2. பஞ்சாலைக்கு அனுப்பப்பட்டு பருத்திக்காயும் பஞ்சும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு பஞ்சு சுத்தமாக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது.

3. நூற்ப்பாலை தரம் பிரிக்கப்பட்ட பஞ்சு நூற்பாலையில் பல தரங்களாக நூற்கப்பட்ட நூலாக வெளிவருகிறது.

4. நூலானது லுங்கி போன்ற தயாரிப்புகளுக்கு கஞ்சி போடக்கூடிய சைசிங் மில்களுக்கும் டி-சர்ட் தயாரிப்புகளுக்கு நிட்டிங் எனப்படும் நுல் அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும் நுல் துணியாக உருவெடுத்துவிட்டபின் 

5. சாயப்பட்டறை [ Dyeing Factory ] க்கு அனுப்பப்பட்டு தேவயான கலர் ஏற்றப்படும்

6. காம்பக்டிங் அல்லது ஸ்டீம் காலண்டரிங் செய்யும் இடம் [ அதாவது துனியை அயர்ன் செய்வதுபோல் செய்து மடித்து தரும் ஓர் அங்கம் ] வந்து சேர்ந்து அதன் பின் தேவைப்பட்டால் பிரிண்டிங் செய்யுமிடம் வரும் 

7. பிரிண்டிங் தேவை இல்லை எனும் பச்சத்தில் கட்டிங் செக்ஷன் வந்து ஆடையின் வடிவத்திற்க்கேற்ப்ப Patton வெட்டப்பட்டு தையல் செக்ஷனுக்கு வந்து சேரும் 

8. எம்பிராயட், லேபிள் போன்ற தேவைகளும் முடிக்கப்பட்டு

9. பேக்கிங் செக்க்ஷசன் வந்து பேக்கிங் செய்யப்பட்டு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆக பல நாட்களை செலவிட்டு பல தொழிலாளர்களை  வேலை செய்ய வைத்து பல தொழிற்ச்சாலைகளை கடந்துதான் ஒரு பனியன் உருவாகிறது அத்தனை விஷயங்களையும் தெரிந்து வைத்துதான் ஒரு முதலாளி இருக்கவேண்டும்.

ஒரு நிறுவனத்தை நடத்தும் பொழுது நல்ல மேலாளர் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்க்கு என்ன தகுதிகள் தேவையாக இருக்கும் என்பதை நல்லி குப்புசாமி செட்டியார் தனது நூலில் அழகாக விவரிப்பார் அதாவது தேர்ந்தெடுக்கப்படக்கூடிய ஒரு மேலாளர் என்பவர் கடின உழைப்பாளி, கை சுத்தமானவர், பணிவுமிக்கவர் என்ற பண்புகள் இருப்பது என்பதை கருத்தில் கொண்டால் சரியல்ல இந்த குணங்கள் சாதாரன   மனிதர்களுக்கு இருக்கக்கூடிய நற்பன்புகளாகும் மேலாளர் என்பவர் நல்ல ஆளுமை திறமை மிக்கவராக இருக்க வேண்டும் அதோடு கடின உழைப்பு, நேர்மை ஆகியன சேர்ந்திருந்தால் நல்ல தேர்வாகும் என கூறுவார் மேலும் கூடுதல் பலம் சமயேஜித முடிவுகளை உடனடியாக எடுக்க தெரிந்தவராக இருந்தால் முதலாளிக்கு பயனுள்ளவராக ஆகிவிடுவார்.

உதாரணமாக நம் நிறுவனத்தில் இருந்து சாமான்களை ஏறிக்கொண்டு வேறு ஒரு இடத்திற்கு நமது வேன் செல்கிறபோது வழியில் நமது வேன் எதிரே சென்ற பைக்கில் மோதிவிட்டன பைக்கிற்கு சிரிய சேதாரம் பைக் ஓட்டியவருக்கும் காயம் ஏற்பட்டு விட்டது வேன் ஓட்டுனர் மேலாளரான நமக்கு போன் செய்து விவரிக்கின்றார் [முதலாளி ஊரில் இல்லை] நாம் என்ன செய்யவேண்டும் ?

உடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்க்கு நாம் செல்லவேண்டும் முன் எச்சரிக்கையாக ஆக்டிங் டிரைவரை கூடவே அழைத்து சென்று பாதிக்கப்பட்டவரை சந்தித்து பரிதாபத்தைக்காட்டி நிகழ்வுகளை கேட்டு அவருக்கு உண்டான உதவிகளை செய்து தருவதாக ஒப்புக்கொண்டு நம்முடைய வேனை அங்கிருந்து அப்புறப்படுத்துவதில் குறியாக இருந்து காரியத்தை சரியாக முடிக்கவேண்டும் வேன் கிளம்பியதும் முதலாளிக்கு போன் செய்து கண்டேன் சீதையை என அனுமார் ராமனிடம் சொல்வதாக கம்பர் கூருவாரே அது போல் பிரச்சனையை விவரிக்கும் முன்பே பிரச்சனையை தீர்த்துவிட்டேன் என்பதை தெரியப்படுத்தி பின் விளக்கமாக சம்பவத்தை விவரிக்களாம். அதுதான் சமயோஜித புத்தி. இரண்டு நண்பர்கள் ஒருவர் சொந்தமாய் தொழில் நடத்துபவர், மற்றொருவர் அயல் நாட்டில் வேலை செய்பவர் இருவரும் சந்தித்து கொண்டால் அவர்களுடைய உரையாடல்கள் எவ்வாறு இருக்கும் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.
காத்திருங்கள் வியாழன் வரை...
மு.செ.மு.சபீர் அஹமது

Tuesday, March 19, 2013

எழுதாத பட்டியல் அழுதாலும் தீராது !

ஆதிமனிதன் குறிப்பு போன்ற பட்டியல்களை கற்களில் எழுதி வாழ்ந்து வந்தான், அவனுக்கு பிறகு வந்த மனிதன் குறிப்பு போன்ற பட்டியல்களை எழுதுவதற்கும் தகவல் பரிமாற்றத்துக்கும் இன்னும் கல்வி, அத்தாட்சி, பத்திரம், உரிமம், மேலும் பல தேவைகளுக்கு சற்று மாற்றத்துடன் ஓலைகளை பயன்படுத்தினான், இக்காலத்தில் அனைத்து பட்டியல், குறிப்புகள் போன்றவற்றை காகிதங்களை பயன்படுத்துவதோடு நவீனங்களும் வளரவே, பிளாப்பி டிஸ்க், காம்பக்ட் டிஸ்க், இன்டெர்னல் ஹார்டு டிஸ்க், எக்ஸ்டெர்னல் ஹார்டு டிஸ்க், மெமரி கார்டு, மெமரி சிப், பென்டிரைவ், கணினி போன்ற சாதனங்களையும் இணையம் போன்ற வழிகளையும் பயன்படுத்தி தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இருக்கின்றான். இருந்தாலும் தேவைகள் முழுமையாக பூர்த்தி ஆவது இல்லை.

ஒரு காரியத்தை செய்ய நாம் முற்படும்போது தனி ஒருவரோ,  இரண்டு பேர்களோ அல்லது அதற்க்கு மேற்பட்டவர்களோ இணைந்து ஆலோசனை செய்கின்றோம், பிறகு அதை ஒரு பட்டியலாக தயாரித்து சரிதானா என்று முடிவுசெய்து காரியத்தை நிறை வேற்றுகின்றோம்.

சில படித்த மேதாவிகள், விபரங்கள் தெரிந்த வல்லுனர்கள் எல்லாம் அங்கத்தினர்களாக வகிக்கும் எத்தனையோ நிறுவனங்களில் முறையாக பட்டியல் போட்டு எந்தக் காரியத்தையும் செய்வதில்லை, அதனாலேயே முடிக்கப்பட வேண்டிய ஏகப்பட்ட காரியங்கள் வாய் சொற்களால் மட்டும் பட்டியல் போட்டபடி அப்படியே ஒரு துளிக்கூட வளராமல் கிடந்து நேரம் வீணாய் அழிகின்றது. மேலும் முறையாக பட்டியல் போடாமல் செய்த காரியங்களும் அளவுக்கு அதிகமாகப் போய் அதிலும் நேரம் பொருள் வீணாகிக் கிடக்கின்றது.

ஆனால் சமூக விரோதிகள் மட்டும் முறையாக பட்டியல் போட்டு சமூகத்தில் குழப்பத்தை உண்டு பண்ண முயற்ச்சித்து வருகின்றனர்.

உதாரணத்திற்கு மனிதனுக்கு அடிப்படையில் தேவையானவைகள் யாவன என்று பாப்போம். 
மனிதனுக்கு - உணவு, உடை, இருக்க வீடு. இம்மூன்றும் அடிப்படையானது. 

உணவு – உயிர்வாழ முக்கியமானது.
"பசி அடங்கிய நேரத்தில் மட்டும்" போதும் என்று சொல்லக்கூடிய ஒரு பொருள் என்னவென்றால் அது உணவைத் தவிற வேறு எதுவும் இருக்க முடியாது.

உடை – உடம்பை மறைக்க முக்கியமானது.
கலாச்சாரம், நாடு இவைகளுக்கு இடையே உடையின் வடிவங்கள் மாறினாலும், தேவைகளுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அது சமூகத்தில் அந்தஸ்த்து பெறுவதில்லை. உடையிலும் முறையான போதுமான அளவு எடுத்து தைக்கும் உடைக்கு சிறந்த அந்தஸ்த்து கிடைக்கும். 

வீடு – தங்குவதற்கு முக்கியமானது.
ஒரு வீடு வேணும், அதை எப்படி அமைப்பது? முதலாவது இடம், இரண்டாவது அஸ்திவாரம், மூன்றாவது சுவர், நான்காவது தூண், ஐந்தாவது நிலையோடு கதவு, ஆறாவது ஜன்னல், ஏழாவது உத்திரம், எட்டாவது கூரை, ஒன்பதாவது படிக்கட்டு, இது அடிப்படையானது.

மேலும் படுக்கை அறைகள், சமையல் அறை, வீட்டுக்கு தேவையான சாமான்களை வைப்பதற்கு ஒரு அறை, கூடாரம், குளியல் அறை, கழிப்பறை போன்றவைகளை எந்தந்த அளவுகளில் இருக்க வேணும் என்று முறைப்படி பட்டியல் போட்டு கட்டுகின்றோம். மேலும் தண்ணீர், மின்சாரம், நெருப்பு போன்றவைகளையும் சரிபடுத்தி இது இப்போதைக்கு வசிப்பதற்கு போதும் என்று கருதுகிறோம்.

மேலே சொன்ன மூன்று அடிப்படை வசதிகளையும் மனிதன் முறைப்படி பட்டியல் போட்டு தேவைக்கு ஏற்ப உபயோகித்து வருகின்றானா? சிந்தித்து பாருங்கள்.

நாம் தினம் தினம் என்னென்ன செய்தோம், அல்லது செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டு செய்ததுண்டா? சிந்தித்து பாருங்கள்.

கல்வி பயிலும் மாணவச் செல்வங்கள் பள்ளியில் என்ன கற்றோம், நாளை என்ன கற்க வேண்டும் என்று பட்டியல் போட்டு படித்ததுண்டா? சிந்தித்து பாருங்கள்.

இன்று எத்தனை வீடுகளில் பள்ளிச் சிறுவர்கள் படிக்கும் பாடங்களை பெற்றோர்கள் கவனித்து வருகின்றனர்? சிந்தித்து பாருங்கள்.

தினம் தினம் நம்மலுடைய நேரங்கள் எப்படி கழிகின்றது? உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் எப்படி செலவு ஆகிறது? கடைகளில் வாங்கிய சாமான்கள் சேதம் அடையாமல் இருக்கின்றதா? தண்ணீர் மற்றும் மின்சாரம் ஒவொரு நாளும் எவ்வளவு உபயோகப்படுத்தப்படுகிறது? சிந்தித்து பாருங்கள். 

இப்படியாக இன்னும் எவ்வளவு விஷயங்களை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறதே, இதையாவது சிந்தித்து பார்த்ததுண்டா? 

நாம் எல்லா விஷயத்திலும் முறைப்படி பட்டியல் போட்டு விழிப்புணர்வோடு செயல்பட்டால், நேரம் பொருள் எல்லாம் மிச்சம் பெரும் என்பதில் சந்தேகமில்லை என்பதையாவது சிந்தித்து பார்த்ததுண்டா?

சிந்தித்து பாருங்கள். சில பேர் சொல்லலாம் அதாவது சிந்தித்தால் சிரிப்பு வரும் என்று. இந்த விஷயத்தில் சிந்திப்பதினால் சிரிப்பு வந்தால், மனம் வந்தால் அழுகை வருமே, அதுக்கும் சிந்தித்து விழிப்புனர்வோடு செயல் படனும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

குறிப்பு : உங்களுடைய பூர்வீக சொத்து, தொழில், வரவேண்டியது, கொடுக்கவேண்டியது, இன்னும் பிற சங்கதிகளை சரியான ஆவணங்களுடன் பட்டியல் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

இன்று பெரும்பாலும் யாரும் இதை முழுமையாக பட்டியல் போடாததினால் எல்லாமே முறை தவறி கை மாறிக் கொண்டிருக்கு. இப்பவாவது சிந்தித்து பாருங்கள்.
வாழ்க வளமுடன்
அன்புடன்,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Monday, March 18, 2013

தண்ணீர் : தாகம் தீர்க்கவா !? தாரை வார்க்கவா !?

உலக நாகரிகங்கள் நதிக்கரைகளில் தோன்றியதாக வரலாற்று ஏடுகளில் படித்துள்ளோம். நைல் நதி நாகரீகம், சிந்து நதி நாகரீகம், டைகரடீஸ், யூப்ரடீஸ் நாகரீகம் என்பவை வரலாற்றின் பாலபாடம். மனித இனம் வாழவும், வளரவும் நதிகளின் பங்கு நாடறிந்தது. மனிதன் வாழ்வதற்கு  தண்ணீர் தேசங்களை தேடிப்போனான் ஆனால் அவன் காலடியிலேயே தண்ணீர் இருக்கிறது என்பதை உணர்ந்து ஏழாயிரம் ஆண்டே ஆகிறது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

தண்ணீர் என்பது தயாளம் மற்றும் தாராளத்தின் அடையாளம். 'தண்ணி மாதிரி செலவழிக்கிறான்' என்றும் , ' தம்பிக்கு இது தண்ணிப்பட்ட பாடு ' என்றும்' ' தவிச்ச வாய்க்கு தண்ணீர் கூட தரமாட்டான்' என்றும்,  தண்ணீரின் எளிமையை உணர்த்தும் சொற்றொடர்கள் வழக்கில் உள்ளன. மிக எளிமையாக கைவசப்படும் சொத்துக்களுக்கு LIQUID ASSET என்பது பொருளியல் வழக்கு. தர்மம் செய்ய நினைக்கிறவர்கள் கோடைக்காலங்களில்-  சாலை ஓரங்களில்  தண்ணீர்ப்பந்தல் அமைப்பார்கள். கவிஞ்ர் வைரமுத்துவின் வரிகளில் தண்ணீரின் பெருமையைச் சொல்லவேண்டுமானால் உயிரை உருக்கும் வரிகளில்  இப்படிச் சொல்லலாம். 

முதல் உயிர் பிறந்தது
நீரில் என்பதால் ஒவ்வோர்
உடம்பிலும் இன்னும்
ஓடிக்கொண்டேயிருக்கிறது 
அந்த உறவுத் திரவம்.
கர்ப்பத்தில் வளரும் சிசு
தண்ணீர்க் குடத்தில்
சுவாசிக்கிறது.

- வைரமுத்து. 

ஒரு நாட்டின் மண்ணைநேசிப்பது போலவே அந்நாட்டின் நீர்க்குடும்பத்தின் அங்கங்களான ஆறுகளையும், ஓடைகளையும், சிற்றோடைகளையும், ஏரிகளையும், குளங்களையும் நேசிக்கும் இதயங்கள் எண்ணற்றவை. [ இன்றும் கூட நம்மை வளர்த்த நமது மண்ணின்  சி.எம்.பி. வாய்க்காலையும் , செடியன் குளத்தையும் நேசிக்கும் இனியவர்கள் நம்மிடையே உண்டு. ] பல சிறப்புக்களுக்கு தகுதிபடைத்த தண்ணீர் இன்று தனிச்சொத்தாக மாற்றப்பட்டு - ஒரு வணிகப்பொருளாக ஆக்கப்பட்டு – உலகமயமாக்கல் என்ற வித்தைக்காரியின் கரங்களில் அகப்பட்டுக்கொள்ள அஸ்திவாரம் தோண்டப்படும் அவலத்தைப்பற்றித்தான் இங்கு அலச இருக்கிறோம்.
மத்திய அரசில் நீர்வள அமைச்சகம் [ MINISTRY OF WATER RESOURECES ] என்று  [ மாநிலங்களுக்கிடையே நடைபெறும் நதிநீர் பங்கீடு சண்டைகளை வேடிக்கை பார்ப்பதற்காக ] ஒரு அமைச்சகம் இருக்கிறது. கடந்த 31.1.2012  அன்று  இந்த அமைச்சகம் ஒரு அறிவிக்கை வெளியிட்டு இருந்தது. அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்படவேண்டிய இந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிடப்பட்டு இருந்தது. இந்த அறிவிக்கை இந்த அமைச்சகத்தின் 2013  ஆம் ஆண்டுக்கான   கொள்கை வரைவை உள்ளடக்கிய அறிவிக்கையாகும். [ Draft - National Water Policy  2013 ] . அதாவது எப்படி இரயில்வே அமைச்சகம் தனது நிதிநிலை அறிக்கையை வெளியிடுகிறதோ, நிதி அமைச்சகம் எப்படி வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிடுகிறதோ அதேபோல்தான் இதுவும்.  

நியாயமாக இப்படிப்பட்ட அறிவிக்கைகளை வெளியிடும்போது அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் வெளியிட்டிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் விவசாயப்பிரதிநிதிகள் உட்பட எல்லாத்தரப்பு மக்களிடமும் இந்த அறிவிக்கையின் சாராமசங்கள் பற்றியும் கூட்டம் கூட்டி விவாதித்து இருக்கவேண்டியதும் அரசுத்தரப்புக் கடப்பாடாகும். பேய் அரசாள வந்தால் பிணம தின்னும் சாத்திரங்கள் என்பதுதான் இன்றைய நிலை. ஆகவே இந்த நடைமுறைகள் கடைப்பிடிக்கப்ப்படவில்லை. இவ்வளவு பீடிகை போட்டு ஆரம்பிக்கிறாயே என்று நீங்கள்  நெற்றி சுருக்குவது தெரிகிறது.

இரண்டே வரிகளில் சொல்லப்போனால் பொதுநன்மைக்குரிய வளமாக இருக்கும் தண்ணீரை [ COMMON GOODS ] சந்தைப்பொருளாக – பொருளாதார போகப்பொருளாக  [ ECONOMIC GOODS ] மாற்றி வரையறுத்து,  தண்ணீரை முற்றிலும் தனியார்மயமாக்குவதே மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இவ்வறிவிக்கை  கொள்கை வரைவின் அடிப்படை நோக்கமாகும். சாலைகளைப் பயன்படுத்தும்போது சுங்கம் கட்டுவதுபோல் இனி தண்ணீரை அடிப்படை தேவைக்கும், விவசாய பாசனத்துக்கும் பயன்படுத்தவும் சுங்கம் கட்டும் நிலைமைக்கு அடிகோலப்பட்டு இருக்கிறது.

நான் குறிப்பிடும் இந்தக் கொடிய தேசிய நீர்க் கொள்கை வரை வின் பத்தி 3.3 கீழ் வருமாறு கூறுகிறது.

"மனித இனம் உயிர் வாழ்வதற்கும், சுற்றுச் சூழல் அமைப்புகள் உயிர்ப்புடன் இருப்பதற்கும் தேவையான குறைந்த அளவு தண்ணீரைத் தவிர மற்ற தண்ணீரெல்லாம் பொருளியல் வளமாகப் பேணப்பட வேண்டும்". [ TO BE CONSIDERED AS RESOURCES OF ECONOMY ].

தேவையான குறைந்த பட்சத் தண்ணீரின் அளவு என்ன என இக்கொள்கை வரையறுக்கவில்லை. இவ்வாறான நிலையில் ஆற்று நீரும் ஊற்று நீரும் மழை நீரும் முற்றிலும் தனியார் பெருங் குழுமங்களுக்கு வழங்கப்பட இக் கொள்கை வழிவகுக்கிறது.

மேலும் இந்த அறிவிக்கையின் பத்தியான 13.4 –யில் குறிப்பிடப்பட்டுள்ளது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. 

"தண்ணீர் தொடர்பான பணிகளில் அரசின் பங்கும் பொறுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மக்களுக்குத் தண்ணீர் வழங்கும் பணியைத் தமது அடிப்படைக் கடமையாக அரசு மேற்கொள்ளக் கூடாது. தண்ணீர் தொடர்பான அனைத்துப்பணிகளும் சமூகத்திற்கு அல்லது தனியார் துறைக்கு மாற்றப்பட வேண்டும். இதனை ஒழுங்கு படுத்துவது, கட்டுப் படுத்துவது ஆகிய பணிகள் மட்டுமே அரசின் கடமையாக இருக்க வேண்டும்" எனக் கூறுகிறது.

மனிதர்களுக்கும், சுற்றுச் சூழல் தூய்மைக்கும் தேவை யான குறைந்தபட்ச நீர் வழங்கல் கூட தனியாரின் வர்த்தக நிறுவனங்கள் மூலமாகவே  நடத்தப்பட வேண்டும் என இக் கொள்கை வரைவு குறிப்பிடுவதிலிருந்தே நாட்டின் நீர் வளம் முழுவதும் வணிகச் சரக்காக மாற்றப்பட இருக்கிறது என்பது உறுதியாகிறது.

இந்த கொள்கைகள் ஏற்கப்பட்டு அமுல்படுத்தப்ப்படுமானால், இனிமேல் தண்ணீர் என்பது அரசின் சேவை என்ற தலைப்பில் வராது குடிநீர் வழங்கு துறை இனி குடிநீர் வழங்கல் கண்காணிப்புத்துறையாக மாறிவிடும் . 
இப்படி தனியாரை புகவிட்டால் சோழியன் குடுமி சும்மா ஆடுமா ? ஆதாயமில்லாமல் அவர்கள் ஆத்தைக்கட்டி இறைப்பார்களா ?
அதைத்தான் அறிவிக்கையின் பிரிவு 7 பேசுகிறது.

ஒரு சொட்டு தண்ணீர் கூட காசில்லாமல் யாருக்கும் வழங்கப்படக் கூடாது என இப்பிரிவு வலியுறுத்துகிறது. இதற்காக உப்யோகப்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை இன்னும் விசித்திரம். விலைக்குத்தான் விற்கவேண்டும் என்று நேரடியாக சொல்லாமல் தண்ணீருக்கு ஆகும் செலவை திரும்பப்பெருவது என்று கூறுகிறது. (RECOVERY OF TOTAL COST ). முழுச்செலவையும் பயனாளிகளிடமிருந்து திரும்பப் பெறவேண்டுமாம். இனி கையில் பணம் படைத்த செல்வந்தரே குளிக்க முடியும் – குடிக்க முடியும். யார் வீட்டு திண்ணையிலும் போய் உட்கார்ந்து அம்மா குடிக்கக் கொஞ்சம் தண்ணி தா! தாயே! என்று கேட்க இயலாது.

மானியமாகவோ,  இலவசமாகவோ தண்ணீரை வழங்கும் அரசின் கொள்கை நிலைப்பாடுகளை மாற்றியமைக்க வேண்டுமென்றும் அப்படி மானியமாகவும் இலவசமாகவும் கொடுப்பதால் அதன் உண்மை மதிப்பை உணராமல் வீணடிப்பதை தடுக்க முடியும் என்று   இக்கொள்கை வரைவில் பத்தி  7.5  குறிப்பிடுகிறது.

இந்த அறிவிக்கையின் பத்தி 9.5 இந்திய நாட்டின் அடிப்படை வாழ்வாதாரத் தன்மைக்கு எதிமறையானது. "இனி வரும் தண்ணீர் திட்டங்கள் விவசாயத்தையும், குடிநீர்  வழங்கலையும் மட்டும் முக்கிய நோக்கங்களாக கொள்ளக்கூடாது. அதற்கு மாறாக பலநோக்கு திட்டங்களாக வரையறை செய்ய வேண்டும்"  என்று கூறுகிறது.

பலநோக்குத்திட்டங்கள் என்றால் என்ன ? ஒரு விவசாயத்தை அடிப்படையாககொண்டுள்ள விவசாயனாட்டில் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை என்றும்- ஏழைகள் நிறைந்த பூமியில் இலவச குடிநீர்  இல்லை என்றும் கூறிவிட்டு பலநோக்குத் திட்டங்களுக்கு தண்ணீரை விற்க வேண்டும் என்றால் அந்த பலநோக்கத்தில் அடங்குவது பன்னாட்டுக் கொள்ளைக்கூட்டத்தின்  கேளிக்கை விடுதிகள் ,  பெரும் முதலீட்டில் உருவாகும் தொழிற்சாலைகள், தண்ணீரில் வாசனையையும், கழிவறை கழுவப்பயன்படும் இரசாயனங்களையும்  சமுதாயத்தை சீர்கெடுக்கும் சாராயத்துளிகளையும்  கலந்து விற்று காசாக்கும் தந்திரங்களும்  என்றுதானே  அர்த்தம் ?

இந்த 2013- க்கான கொள்கை வரைவின் 6.3, 6.4 ஆகிய பத்திகளைப் படிக்கும் போது 2002 –க்கான அறிவிக்கையும் ஒப்பிட்டு படிக்க வேண்டியது அவசியமாகிறது. தண்ணீரை மாசுபடுத்துபவர்கள் அப்படி மாசுபடுத்தியற்கான குற்றத்துக்கு  பொறுப்பாளர்களாக்கப்பட்டு, தூய்மைப்படுத்துவதற்காக  ஆகும் செலவையும் ஏற்கவேண்டுமென்பது 2002-ன் அறிவிக்கையில் சொல்லப்பட்டது (POLLUTER TO PAY) . ஆனால் இப்போது அது மாற்றப்பட்டு நீர் நிலைகளை சாக்கடையாக்கும் முதலாளிவர்க்கத்தை காப்பாற்றும் விதத்தில் அரசே ஊக்குவிப்பு வழங்கி, நீர் சுழற்சிமுறையை ( RECYCLING ) செய்யவேண்டுமென்று 2013-  ன் அறிவிக்கை கூறுகிறது.

இதில் கூறப்பட்டுள்ள  ஒரு காரசாரமான அம்சம் என்னவென்றால் இதுவரை  மாநில அரசின் அதிகாரப்பட்டியலில் இருந்துவரும்  தண்ணீரை மத்திய- மாநில அரசுகளின் கூட்டு அதிகாரப்பட்டியலுக்கோ அல்லது முழுக்க மத்திய அரசின் பட்டியலுக்கோ எடுத்துசென்றுவிடவேண்டும் என்றும் கூறப்பட்டு இருப்பதுதான். இதனால் நதிகள் தேசியமாக்கப்பட்டுவிடும். 'கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத்தூக்கி மனையில் வை என்ற கதையாகிவிடும். 
நதிகள் தேசியமாகப்பட்டுவிட்டால் நதிகளின்மேல் மாநிலங்களின் பிடிப்பு தளர்ந்து நாடு முழுதும் சீரான நதிநீர் பங்கீடு  ஏற்பட வாய்ப்புள்ளது என்று இதற்கு ஆதரவானவாதம் வைக்கப்படுகிறது.  வாய்ப்புதான் உள்ளது என்று சொல்லலாமே தவிர வாய்க்குமா என்று சொல்ல முடியாது. மத்திய அரசு நடுநிலையோடு நடந்து கொள்ளும் என்று நம்புவது  கனவு மாளிகைக்கு கால்கோள்விழா நடத்துவதற்கும், காதர்சா குதிரையின் மேல் பணம் கட்டுவதற்கும் ஒப்பானது.  அரசியல் காரணங்களால் – அதிகாரவர்க்கத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட மத, இன, மொழியினரின் செல்வாக்கால் மாநில உரிமைகள் மத்திய அரசு காலில் போட்டு மிதிக்க வாய்ப்புக்கள் உள்ளன. 
இதற்கு உதாரணம்- தமிழ்நாடே.

ஏற்கெனவே ஆற்று நீர் பங்கீட்டின் இறுதி அதிகாரம் மத்திய  அரசிடம் இருக்கும் போதே தமிழக நலனுக்கு எதிராக மத்திய  அரசு செயல்படுவதைக் கண்டு வருகிறோம். காவிரி, பாலாறு,  முல்லைப் பெரியாறு ஆகிய  சிக்கல்களில் நீதி மன்றத் தீர்ப்புகளைச் செயல் படுத்த வேண்டிய தனது சட்டக் கடமையைக் கைகழுவி விட்டு தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை அழிக்க எண்ணுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆறு ஆண்டுகள் அரசியல் காரணங்களால்  இந்திய அரசு தயங்கி நிற்பதை  பார்க்கிறோம். வானளாவிய அதிகாரம் கேரளத்திடமும், கர்நாடகத்திடமும் பல ஆண்டுகள் செல்லுபடியாகவில்லை.

மாநில அரசுகளில் கைகளில் நதிநீர் அதிகாரம் இருந்தால் மாநில நலன்கருதி அந்தந்த மாநிலங்கள் தங்களின் தேவைகளுக்காக போராடமுடியும். அந்த அதிகாரமும் பறிக்கப்பட்டுவிட்டால் முதலாளித்துவத்தின் கைப்பாவையாக மாறிவரும் மத்திய அரசு உனக்கும் பேப்பே, உங்க அப்பனுக்கும் பேப்பே என்று காட்ட வாய்ப்புக்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் நமது அனுபவம், எந்த ஒரு இயற்கை வளமும் மக்களின் பொது உரிமை என்ற நிலையிலிருந்து அரசுடமை என்று மாற்றப்படும்போது அது தனியாருக்கு விற்கப்படுவதற்கு வழிதிறந்து விடுவதாக அமைந்துவிடுகிறது. சுரங்க முறைகேடுகளால் சுரண்டப்பட்ட நாட்டின் செல்வம் கருப்புப்பணமாய் அவதாரம் எடுத்தது எப்படி?
மிகச்சுருக்கமாக இந்த அறிவிக்கையைப் பற்றி கருத்துக்கூற வேண்டுமானால் தண்ணீரையும் பெருவணிகதனியாரிடம் தாரைவார்த்துவிட  முயலும் அரசின் அவசரத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றே கூறவேண்டும். 

நான் ஏற்கனவே "அந்நிய முதலீடும் அந்நியர் முதலீடும் " என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை  பதிந்து இருக்கிறேன். அதில் பின்வருமாறு குறிப்பிட்டு இருக்கிறேன்.

"இந்திய பொருளாதார கொள்கைகளை வகுப்பவர்கள் யார் ? நாம்  நம்பிக்கொண்டிருப்பதுபோல் நமது நிதி அமைச்சகம் அல்ல. அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஜி- 8 அமைப்பில் உள்ள நாடுகளும், அந்த நாடுகளின் பன்னாட்டு நிருவனங்களின் நிர்வாகிகளுமே.  உலகவங்கியில் என்றைக்கு கடன்வாங்க நாடு கை நீட்டியதோ அன்றே அவர்கள் சொல்லும் இடத்தில் கை எழுத்துப்போடவும் , கூறும் கொள்கைகளை அமுல்படுத்தவும் நாம் தயாராகிவிட்டோம். உதாரணத்துக்கு உலகவங்கியின் வற்புறுத்தலால் மின் கட்டணம், பேருந்து கட்டணம் ஆகியவை உயர்த்தபட்டதாக வெட்கமில்லாமல் சட்ட மன்றத்தில் அறிவிக்கின்றனர் அனைத்து மானில ஆட்சியாளர்கள்.  இதனால் நமது நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், மண்ணின் மாண்பு , மக்களின் இயல்பு – பொருளாதார வழக்கில் கூறப்போனால் நுகர்வோர் கலாச்சாரம்   [ CONSUMER CULTURE ] ஆகியவற்றின்மேல் தாக்குதல் தொடுக்கும் தாக்கங்கள் அதிகரித்துவிட்டன."

என்று குறிப்பிட்டதை மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன். இங்கு நாம் விவாதிக்கும் இக் கொள்கை வரைவு தண்ணீர் வள ஆதிக்கத்தை விரும்பும் பன்னாட்டு பெரு நிறுவனங்களின் நிழல் ஆட்களால் உருவாக்கப் பட்ட கொள்கை வரைவு ஆகும்.

இந்த விஷயத்தை கொஞ்சம் கவனமாகப் படியுங்கள். – அதாவது 

1. உலக வங்கியின் கீழ் நீர் ஆதாரக்குழு 2030 [ 2030 WATER RESOURCES GROUP ] என்கிற அமைப்பு ஒன்று இயங்குகிறது. 

2. இந்த அமைப்பு " தேசிய நீர் ஆதாரத்திட்ட வரைவு ஆய்வு- சீர்திருத்ததுக்க்கான திசைகாட்டி " [ NATIONAL WATER RESOURCES FRAME WORK- STUDY & ROAD MAPS FOR REFORMS ] என்று ஒரு அறிக்கையை தயார்செய்து இந்திய அரசின் திட்டக்குழுவுக்கு வழங்கியது. 

3. அறிக்கையை தயார் செய்த நீர் ஆதாரக்குழு 2030- என்கிற அமைப்புக்கு மூணுவேளை சோறு போட்டு- மசால்வடையும் டீயும் வாங்கிக் கொடுத்தது – அதாவது இந்த அமைப்புக்கு நிதிவழங்குவது பெப்சி, கோக், கார்கில், யூனிளிவர், மெக்கன்ஸி ஆகிய பன்னாட்டு பெருங்குழுமங்கள் ஆகும்.  

4. கடந்த 2011 அக்டோபர் 11 அன்று இந்தியத் திட்டக் குழுவிற்கு மேற்சொன்ன நீர் ஆதாரக் குழு அளித்த "திசை வழி அறிக்கை"தான் சொல் மாறாமல் அப்படியே "தேசிய நீர்க் கொள்கை 2012" என்ற தலைப்பில் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சூட்சுமம் இப்போது புரிகிறதா ? வேறென்ன வேண்டும் ?

கோக், பெப்சி, கார்கில் போன்ற பன்னாட்டுக் குழுமங்கள் தண்ணீர் வணிகத்திலும் வேளாண்மை மற்றும் உணவுப் பொருள் வணிகத்திலும் கோலோச்சி வருபவை. அவர்களது நிதி ஆதரவு பெற்ற ஆய்வுக் குழு அறிக்கை அப்படியே இந்திய அரசின் கொள்கை வரைவாக வெளி வந்திருப்பதிலிருந்தே இக்குழுமங்களுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் இடையில் உள்ள பாசப்பிணைப்பும் அதன் வலைப் பின்னலும் தெளிவாகும். அன்னியர் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்றுவிட்டது என்று இனியும் யாரும் சொல்ல முடியுமா? அரசியல் விடுதலை பெற்று இருக்கலாம்- பொருளாதார விடுதலையும்  உண்மையில் பெற்றுவிட்டோமா ? 

"நள்ளிரவில் பெற்றோம் –ஆனால் இன்னும் விடியவே இல்லை " என்று கவிஞர் கூறியது உண்மையே. இன்னும் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றித்தர வக்கற்ற அரசுகள் நாட்டின் மூலவளங்களை முதலாளிகளுக்கு தாரைவார்க்க கச்சை கட்டி நிற்கின்றன.   

இந்த தேசிய நீர்கொள்(ல்)கையின் வரைவு அறிக்கை சொல்லுக்குச்சொல் கண்டனத்துக்கும், எதிப்புக்கும் ஆளாக்கப்பட வேண்டியதாகும். இதை வரைவு நிலையிலேயே முறியடிக்க வேண்டும். பொதுநல அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள் இணைந்து  இதற்கான எதிப்புக்குரல்களை எதிரொலிக்கவேண்டும்.

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

Saturday, March 16, 2013

[ 1 ] உள்ளம் கேட்குமே !? MORE…!

‘சமூக விழிப்புணர்வு  பக்கங்கள்’ தளத்திற்கு பல கல்வியாளர்கள், அறிவு ஜீவிகள் வந்து போகும் நிலையில் உள்ளம் பற்றிய தொடர் எனக்கு சவாலாகவே இருக்கும் என நினைக்கிறேன். உள்ளம் என்றால் என்ன ? என்ற கேள்விக்கு பதில் மருத்துவ ரீதியாக  உள்ள பதில் அனைவருக்கும் தெரிந்த விசயமே, இருப்பினும் இத்தொடருக்கு விளக்க வேண்டியது என்பொறுப்பு !

மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுக்கு பெயர் உண்டு.
கண் என்றால் பார்வை...
காது என்றால் கேட்பது...
மூக்கு என்றால் நுகர்தல்...
வாய் என்றால் பேச்சு...
உண்ணுதல் கை என்றால்...
எடுத்தல் கால் நடை...

ஆக ஒவ்வொரு உறுப்பின் செயலுக்கு  பெயர் உண்டு. உள்ளம் ஒரு உறுப்பா !? என்றால் இல்லை கண்களால் பார்க்கும் சூழல் காதுகளால் கேட்கும் வார்த்தைகள்  இவைகளின் உணர்வுகளை மூலைக்கு எடுத்து செல்லப்பட்டு அதற்கு ஏற்றார் போல் மூளையின் ஒரு பகுதியின் செயல்பாடே உள்ளம் எனலாம். ஆசை, கோபம், ஏக்கம், வெட்கம், வேசம் இப்படி நூற்றுக்கணக்கான மனித செயல்பாடுகள் உள்ளத்தின் செயல்பாடுகள் அந்த மனித செயல்பாடுகளை விவரிக்கவே  எண்ணி உள்ளேன்.

பின்னூட்டங்கள் மூலம் நான் எடுத்துவைக்க முடியாததை  வாசக நெஞ்சங்கள் அன்போடு எடுத்து வைக்க வேண்டுகிறேன்...

உள்ளம் கேட்குமே MORE...! என்ற தலைப்பில்...

தாய் வயிற்றில் வளர்ந்த பிள்ளை பிறக்கும் தருவாயில் தொப்புள் கொடி வழியாக கிடைக்கும் உணவு நிறைவடைந்து பிரசவிக்கும் குழந்தை உணவுக்காக தாய்மடி தேடி அழும். அந்த சிறு வயிற்றின் பசிக்கு தாயின் பால் இரண்டு மிடறு குடித்த மறுநிமிடமே உறங்கி போகும். அந்த சிறுஉறக்கம்  மறுபசிக்கு விழித்து அழும் மீண்டும் உறக்கம்... இப்படி பட்ட நிகழ்வு ஓரிரு மாதம் நிகழும் குழந்தையின் அழுகை உணவுக்காக மட்டுமே இருக்கும் கண் விழித்து பிறர் முகம் பார்த்து சிரிக்கும் பருவம் கண்களால் தன்னை சார்ந்தவர்கள் என்று அந்த சிறுஉள்ளம் அறிய முற்படும்.

கொஞ்சம் காலம் கடக்க கழுத்து வலுவடைந்து, பிறர் அழைத்தால் திரும்பி பார்க்கும் தனது பெயரை அந்த சிறு உள்ளம் தன்னகத்தே பதிந்து கொள்ளும் காலம் செல்ல செல்ல குழந்தையின் தேடல் அதிகரிக்கும்...இடுப்பு வலுபெற்று உட்காரும் பருவம் அதனை அடுத்து தவழும் பருவம் இப்படியாக குழந்தையின் வளர்ச்சி படு வேகமாக இருக்கும்.

உணவு சற்றே குறைய சராசரி மனிதர்கள் உண்ணும் உணவை உட்கொள்ளும் நிலைக்கு வந்தாலும் அந்த சிறு உள்ளம் மட்டும் சிறுக சிறுகவே அறிவுகளை கிரகிக்கும் ..ஓவ்வொரு பொருளையும் இது என்ன ,என்று கேட்கும் தான் அறியும் வரை கேள்விகள் ஓயாது அந்த சிறு உள்ளம் கேட்கும் MORE...!

குழந்தை உறங்க தொட்டிலில் ஆட்டியும், தாலாட்டு பாடியும் குழந்தையை உறங்க வைப்பாள் தாயவள். சில குழந்தை உடனே உறங்கும் சில குழந்தை உறங்க மறுக்கும் தாலாட்டு இன்னும் இன்னும் வேண்டும் என கேட்கும் அந்த சிறுகுழந்தையின் உள்ளம் கேட்குமே MORE..!

உள்ளம் என்றால் என்ன ?
கேட்பது வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, March 15, 2013

”காத்திருப்பு என்னும் ஏக்கம்”

தலைவி
தலைவனுக்காக
தலைவன்
தலைவிக்காகக்
காத்திருப்பது

தலைப்புக்காகக்
கவிஞன்
காத்திருப்பது

குழந்தைகள்
அரவணைப்புக்கும்
அன்புக்கும்
காத்திருப்பது

பயிர்கள்
பாயும் நீருக்காகக்
காத்திருப்பது

உணர்வுகள்
உணரப்படுவதற்காகக்
காத்திருப்பது

இருள்
வெளிச்சத்திற்காகக்
காத்திருப்பது

அறிவு
ஊட்டப்படுவதற்காகக்
காத்திருப்பது

விவசாயி
அறுவடைக்காகக்
காத்திருப்பது

பிரசவத்தில் தாய்
பிள்ளையைக் காணக்
காத்திருப்பது

தனது ஆக்கம்
பிரசுரம் ஆகும்
நாளுக்காக
எழுத்தாளன்
காத்திருப்பது

தேர்வெழுதிய மாணாக்கர்
மதிப்பெண்ணைக் காணக்
காத்திருப்பது

உழைப்பவர் யாவரும்
உரிமையாம் கூலிக்குக்
காத்திருப்பது

இந்தக்
காத்திருத்தல் எல்லாம்
என்று நிறைவேறும்
என்றே
காலமும்
காத்திருக்கும்
ஏக்கத்துடனே...
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Thursday, March 14, 2013

என் குடும்பம்

சில்லறையை அள்ளி 
தொப்பைக்குள் போட்டுக்கொண்டு
கள்ளச்சாராயச் சந்தைக்குச் 
சலாம் அடிக்கும் காவல்காரர் 

என் மச்சான்

எதைக் கொடுத்தாலும் 
குடிப்பேனென்று குடித்துவிட்டு 
நாக்குத்தள்ளி செத்துப்போன 
குடிகாரன் 

என் அண்ணன்

பட்டம் வாங்கிவிட்டேன் 
வங்கியில் மட்டும்தான் 
வேலை பார்ப்பேனென்று 
தெருத் தெருவாய்த் திரியும் 
வேலையில்லாப் பட்டதாரி 

என் தம்பி

மாவட்ட ஆட்சித்தலைவன் தொட்டு 
அடிமட்ட சேவகன் வரை 
கை நீட்டிப் பை நிரப்பும் 
அரசு நிர்வாகிகள் 

என் சகலைப்பாடிகள்

ஊரை அரித்து உலையில் போட்டு 
கைத்தட்டல் வாங்கும் 
அரசியல்வாதி 

என் மாமா

ஓர் எவர்சில்வர் குடத்திற்காக 
எவனுக்கும் ஓட்டுப் போடும் 
இந்நாட்டு அரசி 

என் அம்மா

உள்ளூரில் வேலையில்லை 
என்று திசைமாறிப் பறந்து 
அத்தோடு தொலைந்துபோன 
அமெரிக்கப் பிரஜை 

என் அக்கா

சுதந்திரம் 
வாங்கித்தந்தத் தியாகி 
என்ற பெருமையோடு 
சாய்வு நாற்காளியில் 
சலனமற்றுக் கிடப்பது 

என் தாத்தா

வார்த்தைகள் உயர்த்தி 
விடியல் திறக்கும் வலிய பேனாவால் 
தொலைந்துபோன காதலிக்காக 
புலம்பல் கவிதைகள் 
வடிக்கும் அற்புதக் கவிஞன்

நான்
அன்புடன் புகாரி

காட்டுக் கருவேலமரங்களை ஒழிப்போம் ! நம் மண்ணின் மாண்பை காப்போம் !!

அண்மையில் இராமநாதபுரம் சென்று வந்தோம். அங்குள்ள ஒரு கல்லூரியில் எனது  தோழர் முதல்வராகப் பணியாற்றுகிறார். அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த போது அவருடைய மேசையின் மேல் கையால் எழுதப் பட்ட கவிதை ஒன்று  கிடந்தது. கவிதை வடிவம் என்றாலே அது  நமது கண்களைக் கவர்ந்துவிடுமே! அனுமதி பெற்று  எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

அது ஒரு கவிதை மட்டுமல்ல. ஒரு மாவட்டத்தின் கதறல். அந்தக் கதறலில் நாமும் தெரிந்து கொள்ள வேண்டிய பல உண்மைகள் இருந்தன. அத்துடன் நாமும் இப்படி இவருடன் சேர்ந்து  கதற வேண்டிய  நிலையில்தான் இருக்கிறோம். இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கிவைக்கப்பட்டு இன்று தமிழகமெங்கும் தழைத்தோங்கி வளர்ந்திருக்கும் காட்டுக் கருவை பற்றிய செய்திகள் நிறைந்த கவிதை . நான் படித்துப் பார்த்த  இந்தக் கவிதை பல உண்மைகளைத் தோண்ட என்னைத் தூண்டி விட்டது.

இன்றைய தண்ணீர் பற்றாக்குறைக்கும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போய்க் கொண்டே வருவதற்கும்   காலாகாலத்தில் மழை பெய்யாத நிலைமைகளுக்கும் காட்டுக் கருவைச் செடிகளின் வளர்ப்பும் வளமும் காரணமாக இருப்பதை அறிவியல் ரீதியாகப் புரிந்து கொண்டேன் ; தெரிந்து கொண்டேன். அவற்றைப்  பகிர்ந்து கொள்வோம்.

அதற்கு முன் ஒரு அறிமுகத் தகவல் இந்தக் காட்டுக் கருவைச் செடிகள் அறிமுகப் படுத்தப் பட்டது கல்விக் கண் திறந்த காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில் என்பதாகும்.   இராமநாதபுர மாவட்டத்து மக்களின் வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த விஷச்செடியின் விதைகள் விளைந்து காடாகி பல விபரீதமான பின் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் கவிதையைப் படிக்கலாம்.

தலைப்பு: மாறும் தொன்மம். 
தெற்கத்திச் சீமையை தெம்பாக்க 
மரம்  வளர்ப்புத் திட்டம் தந்த 
மகராசரே !

"கல்விக்கண் திறந்தவரு 
கண்மாய்குலம் கண்டவரு" னு 
கட்சிக்காரங்க பாடுற பாட்டைக் 
காதுகொடுத்துக் கேட்டிருக்கேன் 
காமராசரே !

நீ தந்த திட்டத்தால் 
நாங்க படும் பாட்டையும் 
கோவிச்சுக்காம கொஞ்சம் கேளு !

வருணபகவானுக்கு வழிதெரியாத 
எங்கஊருக் காடு கழனியில் 
வேலை  எதுவும் இல்லாம 
வெட்டியா இருந்த எஞ்சனங்களுக்கு
வெட்டிவேலை தந்த 
கெட்டிக்காரரே!
ஆமா.....

நீ தந்த கருவேலவிதைகள் 
உன்புகழச் சொல்லிச்சொல்லி
உன்புகழச் சொல்லிச்சொல்லி
'ஒய்யாரமா' வளந்திருக்கு 
அதுனாலே நீ
கர்மவீரர் மட்டுமல்ல 
கருவேலரும் தான் !   

வெறகு வெட்டி மூட்டம் போட்டு 
வருமானத்தை பெருக்கச் சொல்லி 
நீதந்த வெதைவித்துக்களை 
அறுவடைசெய்ய
எஞ்சனங்களும்
வெட்றாங்க... வெட்றாங்க
வெட்டிக்கிட்டே இருக்காங்க
அருவாளும் அழுகுது 
இடைவேளை கேட்டு !

அண்ணா தந்த அரிசி கூட 
அள்ள  அள்ளக் குறையுது 
ஆனா-
நீ தந்த அட்சய மரம்...
அடடா...!

உன்னால நான் படிச்ச பாடம் 
"வெட்ட வெட்ட 
வேகமாத் தழையிறது 
வாழைமரம் மட்டுமில்ல 
நீ தந்த 
வேலமரமும் தான்!"

நீதந்த அதிசய மரங்கள் 
என்னைக்காவது ஏமாந்ததனமா 
வழிதவறிப் பெய்யுற 
கொஞ்ச நஞ்ச மழைத்தண்ணியவும்
அடையாளம் தெரியாத அளவுக்கு 
அப்பவே சாப்பிட்டுருதே..! 

ஒருகாலத்துல –
முத்துமுத்தா நெல்லு வெளஞ்ச
எங்க சேதுசீமையோட 
சொத்துக்களைக் காப்பாத்த- 
வறட்சியத் தாங்குற 
புரட்சியச் செஞ்ச கர்மவீரரே! – நீ 
என்னைக்குமே எங்களுக்குக் 
'கர்மா வீரர்' தான்!

அரசியல் வளர்ச்சிக்கு
நீதந்த ' K Plan '  ஐ 
ஆட்சியில மாறிமாறி 
அமருறவங்க நினைவுல 
இருக்கோ இல்லையோ 
நீ தந்த இந்த ' K Plan ' ஐ 
மாத்தி- எங்க 
மண்ணைக் காக்குற திட்டம் 
மருந்துக்குக்கூட இல்லை!
காந்திக்குக் கதர் மாதிரி 
ஒருவேளை – உன் 
நெனவுக்கு அடையாளம்னு 
நெனக்கிறாங்களோ என்னமோ ...!

இன்பச்சுற்றுலான்னு    
கேட்டிருக்கேன் – ஆனா 
என்னைக்காவது 
இராமநாதபுரத்துப் பக்கம்
யாரும் வந்ததுண்டா?
எது எப்படியோ –
ஆனை கட்டிப் போரடிச்ச 
பாண்டியனார் தேசத்துக்கு 
இப்போ 

' தண்ணியில்லாக்காடு'னு 
பேருவாங்கித் தந்த 
பெருமையெல்லாம் 
உங்களைத்தான் சேரும்...
இத்தனைக்கும் உத்தமரே – இது 
நீ பொறந்த மண்ணு இல்லையா...!

இதுக்குமேல உன் புகழச் சொன்னா
'இவன் ஏதோ 
சாதிக்கலவரத்த தூண்டுறான்டா ' னு 
சங்கத்தைக் கூட்டி சிலபேரு 
சந்திக்கு வந்துருவாங்க
ராசரே...!
நேரமாச்சு ,
நான் போறேன் வெறகு வெட்ட 

- பெயர் சொல்ல விரும்பாத மண்ணின் மைந்தரான ஒரு பேராசிரியர். #

காட்டுக் கருவேல மரங்கள் ! காட்டுக் கருவை என்றும் வேலிக்கருவை என்றும்   இதை அழைக்கலாம். Proposis Juli Flora என்று  தாவர இயலில் இதை அழைக்கிறார்கள்.  சுட்டெரிக்கும் வெயிலும் வறட்சியும்  தலைவிரித்துத்  தாண்டவம் ஆடினாலும் என்றும்  பசுமையாக  இருக்கும் இந்த மரத்தினையும் செடிகளையும்  பார்க்காத ஒரு தமிழன் தமிழ் நாட்டில் இருக்கமுடியாது. விதைபோடாமல் நீர் ஊற்றாமல் பராமரிக்காமல்  ஒரு தாவரம்   தழைத்து வளருமென்றால் அது இதுதான்.  

கொடியவைகள்தான் தமிழ்நாட்டில் இலகுவாக தழைத்து வளரும் என்பதற்கு இந்தத் தாவரமும் ஒரு உதாரணம்.  தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும்  பரவி வியாபித்து வளர்ந்து கொண்டு இருக்கிறது இந்த ஒரு மரம். எந்த ஒரு வறண்ட நிலத்திலும் எந்த ஒரு தட்ப வெப்பத்திலும் இது தழைத்து வளர்ந்து கொண்டு இருப்பதை நாம் பார்க்கலாம்.  சாலை ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் இது . 
தமிழகத்தின் இன்றைய வறட்சியான நிலைக்கு இந்த மரங்கள் தான் காரணம் என்று வல்லுனர்கள் உறுதியாக சொல்கிறார்கள்.  இந்தக் காட்டுக்  கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியவை. மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலைப்படாது. ஏனெனில் ஒரு காட்டுக் கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத்தில் நாற்பது அடி, அகலத்தில் நாற்பது அடி வரையில் அனுப்பி மண்ணின் நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் நிலத்தடிநீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது.

இதன் கொடூரம் அத்துடன் நிறைவுபெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னைச்  சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறதாம். காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சி விடுகிற இம்மரம், மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும் எண்ணெய்ப் பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுவதாக உணரப் படுகிறது. 

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கியகாரணம் என்பது புரியவேண்டிய யாருக்கும் இதுவரை புரியவில்லை.

ஆனால் இதை அறியாமல் தமிழ் மக்கள் இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள். தங்கள் வீடுகளுக்கும் தோப்புகளுக்கும்  வயல்களுக்கும் வேலியாக இம்மரத்தை நட்டு வைக்கிறார்கள். வணிக ரீதியாகவும் இதை நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்தமரத்தை வளர்த்துவருகின்றனர். அத்துடன் இம்மரத்தை வெட்டி மூட்டம் போட்டு எரிபொருள் கரியாக மூட்டை மூட்டையாக பெரு நகரங்களின் தேநீர்        விடுதிகளின் பாய்லரில் போட அனுப்புகிறார்கள். இந்த மரம்  நம் வாழ்வை கரியாக     ஆக்குகிறது என்கிற உண்மையையும்  இந்த மண்ணின் நீர் வளத்துக்கும்  பேராபத்தை உருவாக்குகிறது  என்பதையும்  அவர்கள் அறியாது  இருக்கிறார்கள்.

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும்  பயன்படாது. இதன் காயை வெட்டிப் போட்டு சாம்பார் வைக்க முடியாது. இதன் பூவைப் பறித்துப் போட்டு ரசம் வைக்க முடியாது. பழங்களைப் பறித்து பைகளில் போட்டு யாருக்கும் பரிசளிக்க முடியாது. ஆடுமாடுகள் கூட இதன் பக்கம் நெருங்காது. இதன் ஒரே உபயோகமாக நாம் காண்பது நமக்குப் பிடிக்காத பக்கத்து வீட்டுக்காரர்கள் நடக்கும் பாதையில் இதன் கிளைகளை வெட்டிப் போட்டு இடையூறு செய்யலாம் என்பது மட்டுமே.  வேறொரு முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடுமாம்,  கருத்தரிக்காதாம்.   ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமேஅது ஊனத்துடன்தான் பிறக்கும். கருவைக் கலைக்கும் மரத்துக்கு கருவை மரம்  என்று பெயர் வைத்து இருப்பதே ஆச்சரியமானது. 

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில்வேறு எந்தச்  செடியும் வளராது .  தவிர இம்மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடு கட்டுவதும் இல்லை. தேனீக்கள் கூடுவதும் இல்லை.  காரணம் என்னவென்றால் இந்த வேலிக்கருவை  கருவேல மரங்கள், ஆக்சிஜனை  மிகக் குறைந்த அளவே உற்பத்தி செய்கின்றன , ஆனால் கார்பன் டை ஆக்சைடு என்கிற கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புறக்  காற்று மண்டலமே நச்சுத்தன்மையாக மாறிவிடுகிறது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர். அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாத நிலையை உருவாக்கி வருகிறார்கள்.  சில ஆண்டுகளுக்குமுன் ஒரு திட்டமிடலுடன் செயல்பட்டு இந்தமரத்தை அவர்கள் தேடித்  தேடி அழித்து இருக்கிறார்கள்.  அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரிமிதமான நாடாக இருக்கிறது. நமதூர் வனத்துறையினர் குருவி பிடிப்பவர்களை சுடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோஅதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம். அமெரிக்க தாவரவியல் பூங்கா, வளர்க்க கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனிபட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பதுதான் இந்த காட்டுக்  கருவேல மரம் தான். அந்த மரத்தை வெட்டினால்தான் நம் மண்ணின் மாண்பைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் செய்தி ! தமிழ்நாட்டில் அகற்றப்பட வேண்டியவை அரசியலிலும் சமுதாயத்திலும் மட்டும்தான் என்று நினைக்க வேண்டாம். மண்ணிலும் வேரூன்றி இருக்கின்றன.  ஆகவே கருவேலமரங்களை  கண்ட இடங்களில் உடனே ஒழிப்போம் ! நம் மண்ணின் தன்மையைக் கட்டிக் காப்போம் !

# இந்தக் கவிதையை எழுதிய கல்லூரியின் பேராசிரியர் " உயிர் வாழப் போராடும் கருவாடு " என்கிற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பை விரைவில் வெளியிட இருக்கிறார். இந்தக் கவிதைத் தொகுப்பு இராமநாதபுர மாவட்ட மக்களின் வாழ்வின் பல பரிமாணங்களைப் பேசும் .  நாமும் பகிர்வோம்.
'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

Pro Blogger Tricks

Followers