.

Pages

Tuesday, December 31, 2013

[ 1 ] இது எப்படி !? தொழில்நுட்ப தகவல்...

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த எண்ணற்ற புதிய தகவல்கள் இணையத்தில் பரவிக்கிடந்தாலும் அவற்றில் பிறர் பார்வையில் படாத - மற்றும் நமக்கு பயன்தருகின்ற சிலவற்றை எடுத்துக்கொண்டு எவ்வாறு இவற்றை செயல்படுத்தலாம் என்பது குறித்த விளக்கம் அடங்கிய தொகுப்பை காணொளி வடிவில் நமக்கு தொடர்ந்து வழங்க இருக்கிறார் ஷஃபி அஹமது அவர்கள்.

பல்வேறு பங்களிப்பாளர்களின் சிறந்த படைப்புகளை தொடர்ந்து வாசித்து வந்த வாசக நேசங்களுக்கு சிறிய மாற்றமாக தொழில்நுட்பம் குறித்த அறிய தகவல்கள் இதில் இடம்பெற உள்ளன. தகவல் தொழில்நுட்பம் குறித்து அறிந்துகொள்ள துடிக்கும் நண்பர்களுக்கு இவை பயனுள்ளவையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தொடரும்...

Monday, December 30, 2013

தானமா ? நிதானமா ?

தானம், நிதானம் இவ்விரண்டும் உச்சரிப்பு ஒலியில் ஒருமித்து இருந்தாலும், அர்த்தத்தில் வெவ்வேறானவை.

தானம் என்றால்...
கண் தானம், இரத்த தானம், அன்ன தானம், உயிரணு தானம், எழும்பு மஜ்ஜை தானம், உடைகள் தானம், நேரங்களை பாராமல் ஆக்கங்களை எழுது ஒரு வகையில் தானம், அதை பதிவில் ஏற்றி தளத்தில் தவழவிடுவது அதுவும் ஒரு வகையில் தானம் இன்னும் எத்தனையோ தானங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

நிதானம் என்றால்...
அமைதியாக, பொறுமையாக, சாதுவாக, இழகுவாக, சாந்தமாக, மெதுவாக இன்னும் எத்தைனையோ இப்படி சொல்லலாம்.

தானத்தை தர்மமாக எடுத்துக்கொண்டால், நிதானத்தை பொறுமை என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். தர்மம் செய்வதாக இருந்தாலும் அதை பொறுமையாக செய்ய வேண்டும்.

மனித வாழ்க்கை, கண்களுக்குப் புலப்படாத ஒரு விதிமுறையின் அடிப்படையில் தொடர்ச்சியாக நிகழ்கிறது என்ற உண்மையை நம் புரிந்து கொள்ளவேண்டும்.

மனிதன் நிதானம் என்ற ஆயுதத்தை பயன்படுத்த தெரியாமல் திக்குமுக்காடி திணறுகின்றான், ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் மனிதன்கூட எதோ ஒரு சில காரணங்களுக்காக நிதானத்தை இழந்து விட்டு தடுமாறுகின்றான்.

நன்றாக படித்து வருகின்ற பல மாணவர்கள் மாணவிகளை கண்டதும் காதல் என்ற மாயையில் சிக்கி நிதானத்தை இழந்து படிப்பை கோட்டை விட்டு ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமல் போய்விடுகின்றனர்.
வியாபாரிகளில் பலர் சில பெண் வாடிக்கையாளர்களின் அழகில் மயங்கி நிதானத்தை இழந்து தொழிலில் நஷ்டம் அடைந்து வீதிக்கு வந்தவர்கள் எத்தனைபேர்?

பெண்களை வேலைக்கு அமர்த்துவது எதற்காக, அவர்கள் நிதானமாக, பொறுமையாக, சரியாக, தெளிவாக வேலையை செய்து முடிப்பார்கள் என்றுதான் நம் தேசத்திலும், அயல் தேசத்திலும் வேலைக்கு அமர்த்துகின்றனர். ஆனால் பல ஆண் வர்கத்தினர்களாகிய முதாலாளிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள், உயர் பதவிகளில் இருப்பவர்கள், இன்னும் பலர் தங்கள் நிதானத்தை இழந்து வேலைக்கு வந்த பெண்களிடம் தகாத முறையில் நடந்து மானங்கெட்டு போனதும் உண்டு.

நாம் ஒரு அடி எடுத்து நடந்தால்கூட நிதானத்தோடு நடக்க வேண்டும். நிதானம் இல்லாமல் பேசி வசமாக மாட்டிக்கொள்கின்றனர், நிதானம் இல்லாமல் வாகனத்தை இயக்கி விபத்தில் சிக்கி விடுகின்றனர், நிதானம் இல்லாமல் எத்தனையோ பெண்கள் தங்கள் சுய மரியாதையை இழந்து அவதிபடுகின்றனர்.

கவிதையை எழுத படிக்க, ஆக்கத்தை எழுத படிக்க, நிதானம் தேவை.
நண்பர்களை தேர்ந்தெடுக்க நிதானம் தேவை. பொது சேவை செய்ய நிதானம் தேவை.

நிலத்தில் ஓடுகின்ற தண்ணீர் கூட நிதானமாக ஓடினால்தான் நிலத்தடி நீர்கூட உயர்ந்து நிற்கும்.

எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி, நிதானத்தோடு செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

நாம் கீழ்க்கண்டவைகளை விடாமல் கைப்பற்றி இருந்தால் நம்முடைய மரியாதையே வேறுங்க.

அன்பு, அடக்கம், மனவுறுதி, நிதானம், தானம், சமயோசித புத்தி, பொறுமை, விவேகம், நீதி, நியாயம், நாணயம், நேரம் தவறாமை, பண்பு, கவுரவம், பிறரை மதித்தல் இன்னும் நிறைய இருக்குங்க.

நிதானத்தோடு நடந்து இந்த மனித சமுதாயத்தையும், இந்த உலகத்தையும் உயர்த்தி காட்டுவோம் என்று நாம் எல்லோரும் இன்று முதல் ஒரு சபதம் எடுப்போம்.
'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Saturday, December 28, 2013

[ 26 ] 'வளைகுடா வாழ்க்கை' [ முற்றும் ]

வளைகுடா நாடுகளில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் நமக்கு பல படிப்பினையை தரும் விதமாக அமைந்துள்ளது. படித்த பட்டதாரிகள் வளைகுடா நாடுகள் சென்று மேலும் சிறப்புற்று தனது நிலையை மேம்படுத்தி கொண்டதும் உண்டு. படிக்காத நபர் பணிவாய் அரபிகளிடம் வேலை செய்து தனது நிலையை மேம்படுத்தி கொண்டதும் உண்டு.

அலுவலக உதவியாளராய் தனது வாழ்வை துவங்கி அரபியின் நன்மதிப்பை பெற்று மேலாளர் பதவி அளவிற்கு உயந்தவர்களும் உண்டு. அது போன்ற சிபாரிசு பெற்றவர்களின் செயல் பாடுகளால் பல பிரச்சனைகள் சந்தித்த
நிகழ்வுகளை என்னிடம் பலர் கூறி உள்ளனர். படித்த பட்டதாரி படிக்காத அந்த நபரிடம் வேலை செய்யும்போது நிகழும் அவலங்களும் அதிகம்.

வளைகுடா பயணம் ஒரு வகையான பாடம்...
படிக்காத பல இளைஞர்கள் வளைகுடா அனுபவங்களால் இன்று தலை நிமிர்ந்து வாழ்கிறார்கள். பலதரப்பட்ட மக்களை சந்திக்கும் சூழல் அவர்களை பண்புள்ளவர்களாக மாற்றி அமைத்துள்ளது என்றால் மிகையாகாது. ஆனால் குறுகிய கொள்கை உடையவர்கள் உழைக்க மனமில்லாதவர்கள் சிறு கஷ்டம்
கூட பொறுக்காமல் வீடு திரும்பியவர்கள் காலம் காலமாய் கஷ்டபடும்
நிலையையே காண முடிகிறது. நாற்பத்து வருட காலமாக நல்ல பல
வாய்ப்புகளை அள்ளி தந்த வளைகுடா நாடுகளில் இன்று மண்ணின் மைந்தர்கள் வேலை தேட ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலை பல நிறுவனங்கள நிர்பந்தங்களுக்குள்ளாகி  வருகிறது. அரசு உத்தியோகம் மண்ணின் மைந்தர்களுக்கே என்றாகி விட்டது. எனவே இளைஞர்களே ! இருக்கும் வேலையை தொலைத்து விடாதீர்கள்...

மற்றொரு முக்கியமான விஷயம்...
பங்களதேசிகளிடம் உள்ள குண நலங்களை அறிந்து கொள்ளுங்கள்
அவர்கள் முன்கோபிகள் தனது நலனுக்காக என்ன வேண்டுமானாலும்
செய்வார்கள். அது போன்று, வளைகுடாவில் வசிக்கும் சிலர் நேசமாக பழகுவார்கள். ஆனால் தான் மட்டுமே புத்திசாலிகள் என நினைப்பார்கள் குறிப்பாக அவர்களை ஒத்த நம்மை அவர்கள் அண்ணாச்சி அண்ணாச்சி என்று கேலியாக அழைப்பார்கள். சமயம் பார்த்து காலை வாரி விடுவதில் முதன்மையானவர்கள்.

ஒரு நெருடலான விஷயம்...
வளைகுடாவில்  வசிக்கும்  சிலர் தொழில் செய்ய முனைவதில் முதன்மையானவர்கள் கொடுக்கல் வாங்களில் மிகவும் பலவீனமானவர்கள் துரோகம் செய்வதில் முதன்மையானவர்கள் எனவே அவர்களிடம் தொழிலில் பங்கு கொள்வதை தவிர்த்துவிடுங்கள்.

அது போன்று மிசிறிகள் அவர்கள் தன்னை வளைகுடா அரபிகளாகவே எண்ணி
கொள்கின்றனர். எனவே அவர்கள் நம்மிடம் காழ்ப்புணர்வு கொள்வர். அவர்களிடம் சற்று நாம் பணிந்து போனால் சாதிக்கலாம்.

ஆங்கிலேயர்களிடம் வேலை செய்ய நேர்ந்தால், நமக்கு நல்ல வழியை
காண்பிப்பார்கள் வாழ்வில் முன்னேற்றம் நன்றாக தெரியும். பாகிஸ்தானிகள்   இந்தியர் என்றால் மிக அன்பாகவே இருப்பதை காண முடிகிறது. பாய்... பாய்... என்று பல உதவிகள் செய்வதை காண முடிகிறது.

இன்னும் பல விஷயம் பகிர்ந்து கொள்ள ஆசைதான் பல அலுவல்கள்
இருப்பதால் அடுத்த வருடம் இன்னும் ஒரு தலைப்போடு சந்திக்கிறேன்.

படிக்காவிட்டால் பரவாயில்லை ஏதாவது ஒரு தொழிலை கற்றுக்கொண்டு
வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்ய முயற்சி செய்யுங்கள்.

நன்றியுரை :
சமூக விழிப்புணர்வு பக்கங்கள் தளத்தை வழி நடத்தி வரும் தம்பி சேக்கனா நிஜாமிற்கும் மற்றும் பங்களிப்பாளர்களுக்கும், வாசக பெருமக்களுக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!
[ வளைகுடாப்பயணம் முற்றும் ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, December 27, 2013

பொருளீட்டும் போதினிலே... [ காணொளி ]

பாடல் எழுதியவர் : கவியன்பன் அபுல் கலாம்
பாடல் பாடியவர் : அதிரை ஜாஃபர்

பொருளீட்டும் போதினிலே
......பொறுமையைநீ போற்றிடுவாய்
இருள்நீங்க வாழ்வினிலே
.......இடுக்கணையும் மாற்றிடுவாய்!

சதிகாரக் கும்பலையும்
.......சரியாகக் கண்டிடுவாய்
அதிகாரத் தோரணையை
........அழகாக வென்றிடுவாய்!

குறைகூறும் மக்களையும்
.......குணத்தாலே மாற்றிடுவாய்
மறைகூறும் பாதையினை
......மகிழ்வாக ஏற்றிடுவாய்!

பணியாவும் திட்டமுடன்
..........பகிர்ந்தேநீ செய்திடுவாய்
துணிவானத் தோற்றமதைத்
........துணையாகக் கொய்திடுவாய்!

கனிவான வார்த்தைகளைக்
........கவனித்தே பேசிடுவாய்
இனியாவும் வெற்றியாக
......இதமாக வாதிடுவாய்!

அறங்கூறும் பாதையிலே
,,,,,.,அசையாமல் நின்றிடுவாய்
புறங்கூறும் வாக்குகளைப்
.......புறந்தள்ளிச் சென்றிடுவாய்!

தெளிதூய்மை ஆடையிலே
.......தெரிவாக்கிப் பூணிடுவாய்
ஒளிவீசும் வாய்மையினை
......ஒழுக்கத்தைப் பேணிடுவாய்!

பலம்கொண்ட கல்வியாலே
......பயன்கொள்ளச் சேர்த்திடுவாய்
நலம்காட்டும் ஆற்றலினால்
......நயமூட்டப் பார்த்திடுவாய்!
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு :
இந்தக் கவிதை கடந்த [ 26-12-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

Thursday, December 26, 2013

[ 15 ] அறிவுத்தேன் [ அரூப வணக்கம் ]

அரூப வணக்கம் (-அதில்)
இரண்டு இல்லை !
ஒன்றில் உண்டு
ஒன்றாய் உண்டு !

ஒருவன் மோட்டார் பைக் ஓட்டிச் செல்வது வழக்கத்தில் இருக்குமானால், இவன் கை, கால்கள் தானாகவே சாலை மேடு பள்ளங்கள் வளைவுகள் போன்றப் பயணச் சூழ் நிலைகளுக்குத் தகுந்தார்ப் போலவும், மோட்டார் வாகனம் தன் உருப்புபோலவும் வாகனத்தை இயக்கிக் கொண்டு செல்லுவான். வாகனமும் இவனின் விருப்பபடியே செல்லும்.

குதிரையில் ஒரு மனிதன் பயணம் செல்வது வழக்கமானால், குதிரையின் கண்கள் பதைத் தெரியும்படி கடிவாலம்மிட்டு சவாறிச்  செல்வான். இல்லையேல் குதிரை இவன் விருப்படிச் செல்லாமல் அதன் கண்களுக்குத் தெரியும் பக்கம் சிலசமயம் தடுமாறிச் செல்ல முற்படலாம்.

முன்பெல்லாம் எல்லா ஊர்களிலும் குதிரை வண்டிச் சவாரிகள்தான் உண்டு. ஆட்டோக்கள் இல்லாதக் காலம். பெரும்பாலும் குதிரை அதிரையில் காலையில் புகைவண்டி நிலையம் செல்வது வழக்கம். தாயகம் வருவபவர்களை அந்த வாடகை குதிரை வண்டி மூலம் அவர்கள் இல்லம் அழைத்து வருவது வழக்கம்.

புகை வண்டி நிலையம் தவிர வேறு இடங்களுக்கு செல்ல காலையில் குதிரை வண்டிக்காரர் குதிரையை வண்டியில் பூட்டிச் சென்றால் வண்டிக்காரன் கவனம் கொஞ்சம் குறைந்தால் குதிரை தானாகவே புகை வண்டி நிலையம் தான் செல்லும். அதுபோல் நடு இரவில் மாட்டு வண்டிக்கரான் அரைகுறை உறக்கம் உறங்கிக் கொண்டும், மாடுகள் சரியாக வழக்கமாகச் செல்லும் வழியிலேயே சென்று அவன் வீட்டைத்தான் அடையும்.

குதிரை, மாடுகள் சில சமயம் ஓட்டிகளின் விருப்பத்திற்கு மாற்றமாக நடப்பதும் உண்டு. அச்சமயம் ஓட்டியினால் பலத்த அடி வாங்கியபின் அவைகள் படிந்து செல்லும். இவைகளெல்லாம் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் பார்த்தவைகள்.

மோட்டார் வாகனம் அதற்கு மனம் இல்லை. அதனால் ஓட்டியின் விருப்பபடியே செலுத்தப்படும், செல்லும். ஆனால் குதிரை, மாடுகள் அவ்வாறு அல்ல. அவைகளுக்கு (உள்ளமை) மனம் இருப்பதால் சில சமயம் ஓட்டியின் விருப்பத்திற்கு ஏற்ப இணங்குவதும் இல்லை.

சிலசமயம் நம் வாழ்வில் நாம் வேறு கவனத்தில் முழுவதும் மூழ்கி எதயையும்(உணவைச்) உண்டால், சாப்பிட்ட நினைவே இருக்காது. மீண்டும் சாப்பிடத் தூண்டும். என் கல்லூரி வாழ்வில் ஒருசமயம் மாணவர்கள் வேலை நிறுத்தம் (ஸ்ட்ரைக்) செய்தார்கள். அதனில் முழுமையாக ஈடுபட்ட சக மாணவன் ஒருவன் போராட்டம் முடிந்தவுடன் வழக்கமாக சாப்பிடும் உணவு விடுதியில் போராட்டம் சம்பந்தமாகவே உச்சக்கட்ட காரசாரமாக பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தாகத்திற்கு தண்ணீர் கேட்டான். விடுதியாளர் தண்ணீர் தந்து குடித்த பின் மீண்டும் விறுவிறுப்பாகப் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது "நான் தண்ணீர் கேட்டேன் நீங்கள் தண்ணீர் தரவில்லை", என்று கூறி மீண்டும் அதே அளவு தண்ணீர் வங்கிக் குடிதான்.

தண்ணீர் குடிக்கும்போது தண்ணீர் குடிக்கிறோம் என்ற கவனம் இல்லாததால் தாகம் அடங்கவில்லை. (இங்கு அவன் முன்பு குடித்த தண்ணீர் என்ன வாச்சு என்ற கேள்வி எழலாம். உச்சகட்ட உணர்வில் குடித்தத் தண்ணீர் எல்லாம் இவன் உணர்வாகவும், வேர்வையாகவும் வெளியாகிவிட்டது.) அதனால் இவன் தண்ணீர் குடிக்கவில்லை என்றே மீண்டும் தண்ணீர் கேட்கிறான். அவன் மனமும் செயலும் ஒன்றாக இல்லாததினால் அங்கு முன்பு குடித்த தண்ணீர் அவனுக்கு ஞாபகம் இல்லை.

நோக்கத்திற்கேற்பவும், கவனத்தோடும் செயல்கள் இருக்குமானால் அச்செயலைச் செய்கிற அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படும். அல்லது தொடர்புடைய அனைத்தும் இணக்கமான முறையில் செயல் படுகிறது. அல்லது அனைத்தும் இணங்கி, வணங்கி செயல்படுகிறது என்பதாகும்.

ஒன்று என்ற ஒன்றித்த நிலையில் செயல்கள் நடைப்பெற்றால் அச்செயல்கள் செய்யும் அனைத்தும் இணக்கமான வணக்கத்தில் இருக்கிறது என்பதாகும். ஒவ்வொன்றும் இணங்கி வணகி நடக்கவில்லை என்றால் விருப்பிய செயல் இருக்காது.

மனிதன் இறை வணக்கத்தில் இறைவனை வணங்குகிறோம் என்ற எண்ணம் முதலில் கொண்டு பின் வணங்கும் எண்ணம், செயல்கள் இருக்கவேண்டும். அவ்வாறு நிகழ்த்தும்போது வணக்கம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள்; செயல்கள், அதனைத்தவிர சம்பந்தமில்லாத வேறு எண்ணம், செயல் மிக மிகச்சொற்பம்கூட அவ்வணக்கத்தில் இருக்கக்கூட்டது. இருந்தால் அது முழுமையான வணக்கம் அல்ல, அல்லது வணக்கமே அல்ல. வணக்கத்தில் வணங்குகிறோம் என்ற எண்ணமே இல்லாது வணக்கம் சார்ந்த எண்ணம், செயல் நிகழும்போது அதுவே தெளிவான வணக்கம் ஆகும். அதுதான் வணக்கம்.

வணக்கத்தில் வணங்குபவன் வணக்கப்படுவதில் ஒன்றாய் கரைந்து இரண்டு என்ற உணர்வே இல்லாது வணக்குவதுதான் வணக்கம். அதைத்தான் இறை விரும்பும்.

வணக்கத்தில் "தான்" "நான்" என்ற அகந்தைகள் அழிய வேண்டும். அதன் கருத்தாவது தான் என்ற தன் நிலையையும், இறைவன் என்ற இறை நிலையையுமான அவ்விரு நிலை எண்ணங்கள் ஒரே நிலையில் இல்லாது வணக்கம் என்ற ஒரே எண்ணத்தின் உணர்வின் செயல் நிகழ வேண்டும். மாறாக அவ்வாறு இல்லாது வணங்கும் எண்ணத்தில் வேறு வணக்கம் சம்பந்தமில்லாததான எண்ணம், செயல் கலந்து வணக்கம் நிகழ்ந்தால் அது அடிபணிதல் என்ற வழிபாடு அல்லது துதிபாடுதான் ஆகும். அது வணக்கம் ஆகாது; அல்ல. வணக்கம் என்றாலே அங்கு ஒன்றாகும் இறைச் சந்திப்பு நிலை ஏற்பட வேண்டும். அதுதான் பூரண அரூப வணக்கம் ஆகும். அதுவே வணக்கம்.

அரூப வணக்கத்திற்கு இரண்டிருப்பு என்ற இருவுள்ளமை இல்லை. வணங்குபவனும் வணங்கப்படுவதும் ஒரே உள்ளமையின் இரு நிலைகள். வணக்கத்தில் வணங்குபவன், வணங்கப்படுவது ஓர்மையில் பிசகின்றி இரண்டற்று; ஒருமையில் ஒன்றாய் உணர்ந்து; ஒன்றில் ஒன்றாய் ஐக்கியமாகி; இருமையிழந்து இருப்பது அரூப வணக்கம்.
(தொடரும்)
நபிதாஸ்

Tuesday, December 24, 2013

கவனம் : தங்க நகைச்சேமிப்பு திட்டம் !


முதலீடுகள் பலவிதம் அதில் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது ஒரு விதம் உடனடியாக பணமாக மாறக்கூடிய அதன் தன்மையினால் தங்கத்தை லிக்விட் அசெட் ( Liquid Asset ) என்று அழைக்கக் கூடியவர்களும் சமூகத்தில் இருக்கின்றார்கள்.

சரி விசயத்துக்கு வருவோம்...
தங்க முதலீட்டில் பல பெயர்களில் திட்டங்கள் வந்தபிறகும், பெண்களுக்கு நகைச் சீட்டின் மீது இருக்கும் மோகம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. யாரும் எளிதாகப் புரிந்துகொண்டு ஈஸியாக பணத்தைக் கட்ட முடியும் என்பதால் இதுபோன்ற தங்க நகைச் சீட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

தங்க நகைச் சீட்டு கட்டாத ஒரு பெண்ணை தமிழ்நாட்டில் தேடிக் கண்டுபிடிப்பது என்பது கடினமான வேலை. மாதச் சம்பளம் 5,000 ரூபாயோ, 50,000 ரூபாயோ அக்கம்பக்கத்தில் இருக்கும் நகைக் கடையில் நகைச் சீட்டு போட்டு தங்கம் வாங்க நினைக்காத பெண்களே இல்லை.

நகைகள் வியாபாரம் செய்யும் நிறுவனங்களும் தன் பங்கிற்கு தங்களிடம் வருகை புரியும் வாடிக்கையாளர்கள் தங்களிடம் நகைகள் வாங்குகின்றார்களோ இல்லையோ !? முதலில் அவர்கள் வைக்கும் வேண்டுகோள் இதுபோன்ற தங்க நகைச் சீட்டுகளில் இணைந்து மாத தவணையாக பணத்தை எங்களிடம் செலுத்துங்கள் என்று மூளைச்சலவை செய்து, அவர்களின் கையில் விண்ணப்பங்களை திணிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

தங்க நகைச் சீட்டு நடத்தும் நிறுவனங்கள் வைக்கும் நிபந்தனைகள் :
1. உங்களது மாத தவணையை 20 / 15 மாதங்கள் ஒவ்வொரு அங்கத்தினரும் சேலுத்த வேண்டும். பணம் செலுத்தும் போது அதற்குறிய ரசீதை பெற்றுக்கொள்ளவும்.

2. பிரதி ஆங்கில மாதம் 10-ம் தேதிக்குள் மாதத்தவணை தொகையை செலுத்தி கண்டிப்பாக பதிவேட்டை கொண்டு வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.

3. பிரதி ஆங்கில மாதம் 15-ம் தேதி மாலை 4.00 மணியளவில் எங்களது கடையில் தங்க நகை சிறுசேமிப்பு அதிர்ஷ்டசாலி தேர்வு நடைபெறும். பரிசு விழுந்தவர்கள் பரிசு தொகைக்கு உண்டான நகைகளை பெற்றுக்கொள்ளலாம். மேற்கொண்டு தவணைகள் கட்ட வேண்டிய தேவையில்லை.

4. மாதத்தவணை தவறாது 20 / 15 மாதங்கள் தொடர்ந்து செலுத்திவருபவர்கள், 20 / 15 மாதங்கள் முடிந்ததும் போனஸ் தொகையை சேர்த்து அன்றைய விலைக்கேற்ப தங்க நகைகள் பெற்றுக்கொள்ளவும்.

5. பரிசு விழாதவர்களுக்கு மட்டும் போனஸ் தொகை உண்டு, விற்பனை வரி கிடையாது. வரியை கம்பெனியே ஏற்றுக்கொள்ளும்.

6. மாதத்தவணை தவறி செலுத்துபவர்கள் தங்களின் போனஸ் தொகயை இழக்க நேரிடும்.

7. மாதத்தவணை தொடர்ந்து கட்டமுடியாமல் நடுவில் நிறுத்தி விடும் அங்கத்தினர்கள் 20 /15 மாதத்தவணை முடிந்த பின்பு அன்பளிப்பு சாமான் கிரயத்தை செலுத்திவிட்டு கட்டியுள்ள தொகைக்கு நகைகளை பெற்றுக்கொள்ளலாம்.

8. எக்காரணத்தை முன்னிட்டும் ரொக்கம் திருப்பி தரப்படமாட்டாது.

9. மாதத்தவணை தொடர்ந்து செலுத்தி வரும் அங்கத்தினர்களால் 20 / 15 மாதம் முடியும் முன்பு நகைகள் வாங்க விரும்பினால் செலுத்திய தொகை போக பாக்கி மாதங்களின் தவணை தொகையையும் அன்பளிப்பு சாமான் கிரயம் ரூ 500/- ஐயும் செலுத்திவிட்டு தங்க நகைகளை பெற்றுக் கொள்ளலாம்.

10. முத்திரை பவுன், தங்க கட்டிகள் மேற்படி சேமிப்பிற்கு தரப்பட மாட்டாது.

11. ஒவ்வொரு மாதமும் செலுத்தும் தவணைத் தொகை ரசீதுகளையும் இந்த பதிவு புத்தகத்தையும் தங்க நகைகள் வாங்கும் வரையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

12. இந்த பதிவு புத்தகத்தை தவறவிட்டு விட்டால் அதனால் ஏற்படும் நஷ்டத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

13. பிரதி மாதம் செலுத்தும் தொகைக்கு வெளியூர் செக்குகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

என இது போன்ற நிபந்தனைகளுடன்...

மாதம் 500 ரூபாய் வீதம் பணம் கட்டினால், பதினைந்தாவது மாதத்தில் நாம் 7,500  ரூபாய் கட்டியிருப்போம். இதற்கு போனஸாக ஐநூறு ரூபாய் சேர்த்து 8,000 ரூபாய்க்கு நகை வாங்கிக் கொள்ளலாம். கூடுதலாக 200 ரூபாய் மதிப்புள்ள கவர்ச்சிகரமான கிஃப்ட் பொருள் அல்லது அந்த தொகைக்கும் சேர்த்து நகையாக வாங்கிக் கொள்ளலாம். இது போன்ற திட்டத்தை தமிழகம் முழுக்க இருக்கும் சிறிய, பெரிய நகைக் கடைகள் நடத்தி வருகின்றன. இதன் மூலம் நம்மிடம் ஒவ்வொரு மாதமும் வசூல் செய்யப்படும் தொகையை பிற தொழில்களில் அவர்களால் முதலீடு செய்யபட்டு கொழுத்த இலாபம் சம்பாதிக்கப்படுகின்றனர் என்பது பலரின் கருத்துகளாக இருக்கின்றன.

சகோதரிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. இது போன்ற தங்க நகைச் சேமிப்புத் திட்டத்தில் தாங்கள் இணைவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

2. "அதிக லாபம்" என ஆசை காட்டும் இடங்களில் எல்லாம் முதலீடு செய்யாதீர்கள்.

3. "உடனே முதலீடு செய்யுங்கள்...இன்றே கடைசி !" என்றெல்லாம் உங்களை அவசரப்படுத்தும் நிறுவனங்களின் அழைப்புகளை அலட்சியப்படுத்துங்கள்.

4. மற்றவர்கள் இணைகிறார்கள் என கண்மூடித்தனமாக நீங்களும் போய் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

5. கவர்ச்சிகரமான கிஃப்ட் பொருட்கள் கிடைக்கும் என்பதற்காகவெல்லாம் இதில் இணையாதிர்கள்.

6. பிரபல நடிகர், நடிகைகளைக் கொண்டு விளம்பரப்படுத்தும் இது போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களில் இணைவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

7. எங்கள் நிறுவனங்கள் சார்பாக திருமண மண்டபங்களில் நடைபெறும் "ஒரு செமினாருக்கு வாங்க", "சாப்பாடு ஃப்ரீ..." டிபன் ஃப்ரீ” என்றெல்லாம் அழைப்பு வந்தால் போகாதீர்கள்.

சேக்கனா M. நிஜாம்
இது ஒரு மீள்பதிவு
குறிப்பு : கடந்தகாலங்களில் இது போன்ற நிறுவனங்களால் பணம் வசூல் செய்வதற்காக நியமிக்கப்படும் வெளிமாநில நபர்களால் எற்பட்ட பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு சமூகத்தினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே பதியப்பட்டுள்ளது.

Monday, December 23, 2013

மயான பூமி !

மெய் மறைத்து
பொய் பகட்டு
மயக்கும் உலகில்
தாக்கம் கொண்டன.

புனிதர் உள்ளம்
சொன்ன உண்மை
நஞ்சு நரியும்-அதில்
திட்டம் வகுத்தது.

பணம் பன்ன
குணம் கெட்ட
குள்ள நரியின்
வித்தையது.

பகுத்த அறிவு
பகுத்து பார்த்து
இருக்கும் இறை
இல்லை என்றது!

பூமி தட்டை
பகுத்து கண்டது
பின்பு கோலம்
என்று சொன்னது.

இந்த உண்மை
இருப்பது போல
நச்சு திணிக்க
நன்கு தீட்டியது.

பகுத்த அறிவே
தகுந்த கருவியென
வகுத்து கொண்டு
களம் வந்தது.

உண்மை அதில்
பகுத்து பிரித்து
உள்ளில் அழகாய்
கள்ளம் கலந்து
வெளியில் மின்ன
திறமை நுழைத்தது.

தேனை தடவி
வண்ணம் பூசி
கள்ள வஞ்சகம்
நூலை விட்டது.

இகத்து இளமை
அகத்து ஏற்று
பகுத்த அறிவு
என்றே ஏமாறின.

இன்றதனால் இந்த
நல்லவர்வாழ் பூமி
மயான கோலம்
நிறைந்தே உள்ளது.

நல்ல
உள்ளமதின்
மெல்லிய
உணர்வுகளைக்
கள்ளமாய்ப்
பயன்படுத்திக்
கொல்லும்
நச்சுக் கிருமிகள்
சுபிட்சமாய் வாழும்வரை...
இந்த பூமி
துக்கம் மட்டுமே
நிறைந்த
மயான பூமிதான்.

நபிதாஸ்

Saturday, December 21, 2013

[ 25 ] 'வளைகுடா வாழ்க்கை' [ இடைத்தரகர்களின் மனசாட்சியற்ற போக்கு ! ]

இடைத்தரகர்களின் மனசாட்சியற்ற போக்கு
பாரசீக வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பு என்பது மாயத்தோற்றம் காரணம் எல்லா துறையிலும் தன்னிறைவு பெற்று திகழ்கிறது. வேலையாட்கள் மித மிஞ்சி காணப்படுகிறார்கள். ஆனாலும் நம்மவர்கள்
படிக்காத பிள்ளைகளை அரபு நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. முன்பு போல ஏஜென்சி அணுகுவதில்லை வெளி நாட்டில் வேலை பார்க்கும் உறவினர்களிடம்  "எப்படியாவது தனது பிள்ளைக்கு விசா எடுத்து தாருங்கள்" என நச்சரிப்பார் அதன் விளைவு எதாவது ஒரு ஒரு வாய்ப்பு கிடைத்தால் உடன் ஏற்பாடு செய்ய உறவினர்
தயாராக இருப்பார்.

அரபு நாடுகளுக்கு சென்றவர்களில் சிலர் வேலை செய்யாமல் இலகுவாக பணம் பார்க்க விசா எடுத்து தரும் தரகர் வேலை செய்வார்கள். கிராமங்களில் வாழும் அரபிகளிடம் ஆசை வார்த்தை காட்டி அவர்களின் விசா பர்மிட்  மூலம் விசா எடுப்பார்கள். கிராம வாசி விவசாயியாக இருப்பார். அவருக்கு கிடைக்கும் விசா பர்மிட் தோட்ட வேலையாக இருக்கும் அல்லது ஒட்டகம் மேய்க்கும் வேலையாக இருக்கும். ஆனால் விசா பர்மிட் விற்கும் இடை தரகர் என்ன வேலை என்பதை மறைத்து உதவியாளர் வேலை என்பார். படிக்காத பிள்ளைக்கு உதிவியாளர் வேலை என்பது நியாயமான வேலைதானே என்று சம்மதித்து விசாவை வாங்கி உறவினர் பிள்ளைக்கு அனுப்பி வைப்பார்.

வளைகுடா வரும் இளைஞன்  விமான நிலையத்தின் அழகை  வியந்து போவான். நாட்டிற்குள் நுழைந்து வானுயர உள்ள கட்டிடங்களை பார்த்து ஆச்சர்யப்படுவான், கடை வீதிகளில் விற்கும் பொருட்களை பார்த்து
தாமும் வாங்க ஆசைப்படுவான். இவைகள் யாவும் மனதில் மின்னல் வேகத்தில் ஓடி மறையும். உறவினர் வீட்டில் ஒரு வாரம் தங்கி வித விதமான உணவுகள் உண்டு மகிழ்வான்.

விசா இடை தரகர் வருவார் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து செல்வார். அந்த இளைஞனின் கனவு கோட்டைகள் தகர்ந்து போகும் காரணம் தங்கும் இடம் மிக பழமையான களிமண் வீடாக இருக்கும் உணவு காய்ந்த  ரொட்டி துண்டுகளும் பழக்கத்திற்கு ஒவ்வாத உணவாக இருக்கும். நாட்டிற்குள் நுழைந்த கனவு உலகம் எங்கே ? என்று கண்கள் தேடும் இதில் அகப்பட்ட இளைஞர்கள் உடனே ஊர் திரும்பியவர்கள் ஏராளம் ! சிலர் சாதுர்யமாக கொஞ்ச காலம் வேலை செய்து அரபியின் நன்மதிப்பை பெற்று ஓரிரு வருடங்களில் நல்ல வேலைக்கு திரும்பியவர்களும் உண்டு.

இதனை ஏன் பதிகிறேன் என்றால், சென்ற வாரம் இருபது இளைஞர்கள் இலகுரக வேலை என்று அழைத்து வரப்பட்டு தோட்ட வேலைக்கு அனுப்ப பட்டனர். இதனை நம் வாசகர் எனது கவனத்திற்கு கொண்டு வந்தார்.

விசா எடுப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டுகிறேன்.
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, December 20, 2013

இலண்டன் வானொலியில் ஒலிப்பரப்பான கவிதை [ 'சுழற்சி' ] !

நமது பங்களிப்பார்கள் 'கவியன்பன்' கலாம் மற்றும் அதிரை ஜாஃபர் ஆகியோர் கூட்டணியில் உருவான கவிதை இலண்டன் வானொலியில் ஒலிப்பரப்பாகி அனைவரின் வரவேற்பையும் பெற்றன. 
குருதியின் சுழற்சி ஆக்ஸிஜன் கூட்டம்
..............குதித்திடும் இதயமும் ஓட்டம்
கருவினில் சுழற்சிக் குழந்தையாய் ஆக்கம்
................கருதிடும் தாய்மையின் நோக்கம்
மருவிலா மதியின் சுழற்சியால் தேயும்
.........வளர்ச்சியும் பிறையெனக் காயும்
உருவிலே வளர்ச்சி; சுழற்சியின் மாற்றம்
......உணர்த்திடும் முதுமையின் தோற்றம்

காற்றினால் சுழற்சிக் காட்டிடும் காட்சிக்
..............கடும்புயற் கோலமாய்ச் சாட்சி
ஆற்றினில் சுழற்சி நீரினில் வேகம்
......ஆர்த்திடும் பொழுதினில் சோகம்
நேற்றுள நிலைமை இன்றுதான் உண்டா
...............நேரிடும் சுழற்சியைக் கண்டால்
மாற்றிடும் காலச் சுழற்சியால் வாழ்க்கை
................மானிடன் நடந்திடும் போக்கே!

கதிரவன் சுழற்சி மாற்றிடும் நேரம்
.......காலமும் பொழுதெனக் கூறும்
புதியதில் சுழற்சிச் செய்திடும் வேலை
.............புகுத்திடும் புதுமையை நாளை
மதியினிற் சிந்தைச் சுழற்சியால் மாண்பாய்
.............மனிதனின் இலக்கினைக் காண்பாய்
நிதியுறும் சுழற்சி உலகினில் காசு
..........நிகழ்த்திடும் வினையினை யோசி!

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு :
இந்தக் கவிதை கடந்த [ 19-12-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

லோக்'பல்' !?

நீண்ட காலமாக எதிர் பார்த்த லோக் பல் எனும் ஊழலுக்கு எதிரான சட்டம் ராஜ்ய சபாவில் ஒருமனதாய் [ ஒரு வகையா !? ] நேற்று நிறைவேறியது லோக்பால் என்பது லோக் = மக்கள், பால் = காவலன், மக்கள் காவலன் என்பதுதான் லோக்பால் வார்த்தையின் பொருள்
   
சென்ற 2011 ல் அண்ணா ஹாஜாரே மற்றும் இன்று டில்லியில் இரண்டு பெரிய கட்சிகளையும் திணற வைத்த ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் சேர்ந்து உண்ணா விரதம் மேற்கொண்டு லோக்பால் திட்டம் நிறைவேற்ற உண்ணா விரதம் இருந்தனர் இதில் அண்ணா ஹசாரே இந்திய மக்களின் மனதில் இடம் பிடித்தார். நம்மில் சிலர் இந்தத்திட்டம் கொண்டு வந்ததே அண்ணா ஹசாரே என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் இது 1963ல் சட்ட வல்லுநர் M.M சிங்வி அவர்களால் உருவாக்கப்பட்டது.
 
இந்த சட்டத்தால் என்னன்ன பயன்கள் என்று பார்ப்போம்...
1. ஊழலுக்கு எதிரான நேர்மையான அமைப்பு இது. இந்த அமைப்பை ஏற்படுத்த பிரதமர்,லோக்சபா சபாநாயகர்,லோ.எதிர் கட்சி தலைவர்,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர்களைக்கொண்டே உருவாக்கப்படுகிறது

2. இதில் தலைவர் மற்றும் 8 உறுப்பினர்கள் இருப்பார்கள்  அதில் சட்டத்துறை வல்லுனர்கள்  50% பேர்களும் மீதமுள்ள இடத்தை  SC, ST, OBC சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் இந்த அவையை பூர்த்தி செய்வார்கள்.

3. மத்தியில் லோக்பால் எனவும் மாநிலங்களில் லோக் ஆயுக்த்தா என்னவும் செயல்படும்  [ லோக் ஆயுக்த்தா எனும் அமைப்பு இப்பொழுதும் சில மாநிலங்களில் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது ]

4. ஊழல் வழக்கில் பிரதமரும் குற்றம் சாட்டப்பட்டால் அவரையும்
விசாரிக்கும் அதிகாரம்  இந்த அமைப்பிற்கு உண்டு

5. அனைத்து அரசு மற்றும் பொது ஊழியர்களும் இந்த சட்ட வரம்பில் வருவர்

6. வெளிநாடுளில் இருந்து 10 லட்சத்திற்கு மேல் நன்கொடை பெரும் நிறுவனம்,அமைப்பு ஆகியவையும் லோக்பாலுக்கு கட்டுப்பட்டவர்களே

7. CBI யால் நடத்தும் விசாரணைகளுக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரமும் மேற்பார்வை இடவும் இதற்கு அதிகாரம் உண்டு

8. லஞ்சம், ஊழல் போன்றவைகளால் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் இதற்கு உண்டு

9. லோக் ஆயுக்த் எனும் அமைப்பு எந்த மாநிலங்களில் இன்னும் அமல் படுத்தாமல் இருக்கின்றதோ அங்கே ஒரு வருடத்திற்குள் அமல்படுத்த வேண்டும்

இந்த திட்டம் நிறை வேற இது சட்டமாக்கப்படவேண்டும் கூடிய விரைவில் அதுவும் நிறைவேறிவிடும், இனி இந்த அமைப்பு மக்கள் நினைப்பதுபோல் சரியாக செயல்பட வேண்டும் காரணம் மனிதன் தவறு செய்யக்கூடியவன் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பட்டுக்கோட்டையார் பாடியதுபோல் இல்லாமல் சவூதி அரசால் இஸ்லாமிய சட்டம் நிறைவேற்றப்படுவதால் அங்கே குற்றங்கள் குறைவு என்று பல நாட்டவர்களால் சொல்லப்படுவதுண்டு அதுபோல் இந்த லோக்பால் இருக்கும் என்று நம்புவோம்.
மு.செ.மு.சபீர் அஹமது

Thursday, December 19, 2013

[ 14 ] அறிவுத்தேன் [ வணங்கவே படைத்தேன் ]

வணங்கப் படைத்தேன்
வல்லவன் சொல்லில்
விளக்கம் கொள்ளுதல்
வகையிது வுமன்றோ !

மதம், மார்க்கம் அனைத்திலும் இறை வணக்கம் என்பது அவசியமாக இருக்கிறது. அதனால் அனைவரும் அவர்தம் அறிந்த வழியில் அல்லது வழிகாட்டப்பட்ட வழியில் இறைவனை வணங்குகின்றனர். இஸ்லாமியத்தில் வணங்கவே மனிதனைப் படைத்தேன் என்று இறை வாக்கியம் மறை மொழியாயாக உள்ளது.

வணக்கம் சம்பந்தமான விளக்கங்கள்தான் முன் எழுதப்பட்ட விளக்கங்களில் உள்ளது. அவைகளை அறியாவிட்டாலும் அவைகளை மனதில் கவனம் கொண்டு தொடர்ந்து புரிதல் நலம்.

'மனித இனத்தையும், ஜின் இனத்தையும் வணங்கவே படைத்தேன்', என்பது இஸ்லாமியத்தில் இறைவன் சொல். மற்றும் ஒன்றே அனைத்தாக உள்ளது என்பது இதில் மறை பொருளாக உள்ளது. இது சம்பந்தமாகவும் முன்பு எழுதப்பட்டுள்ளது.

மனித முழு உடல் உருவில் கை, கால், தலை போன்ற உறுப்புக்கள், தான் வேறு தன் உடம்பு வேறு என்றால் எவ்வாறு ? பொருத்தம் ஆகும். அனைத்தும் சேர்ந்தே உடல் உருவம் ஆகும்.

மனதில் நடக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் ஏற்பட்டு ஒரு மனிதன் நடப்பானேயானால், அங்கு இவன் எண்ணத்திற்கு ஏற்ப உடம்பின் கால் நடக்கின்றது.

எண்ணத்திற்குக் கால் என்ற உறுப்பு அடிபணிகிறது. அடிபணிதல் என்றால் தனக்கென்று ஓர் எண்ணம் இல்லாமல் செயல்படுதல் ( பூரணமாக அர்ப்பணித்து செயல் படுதல் ). தனக்கென்று ஓர் எண்ணம் இல்லாமல் செயல்படுதல் என்றால், மனித மனம் தான் நடக்கவேண்டும் என்ற ஓர் எண்ணமும், அம்மனிதனின் கால் தான் ஒய்வு எடுக்கவேண்டும் என்ற மாற்றமான ஓர் எண்ணமும் கொள்ளாமல் செயல்படுதல் ஆகும்.

அசதியினால் காலில் வலி உணர்ந்தால் முழு உடம்புமே ஓய்வெடுக்கும். அப்பொழுதுதான் கால் வலி போகும். படுத்துக்கொண்டு சிந்தித்துக் கொண்டே இருந்தாலும் கால் வலி இடையிடையே உணர்ந்துக் கொண்டே இருப்பான். மாறாக எவ்வெண்ணமும் இல்லாது உறங்கிவிட்டால், விழித்தவுடன் அசதியின் கால் வலி இருக்காது.

மனிதனின் கால் தனக்கென்று மாற்றமான தனித்த எண்ணம் (உதாரணமாக) கொள்ளுமானால் அங்கு செயல் இருக்காது. குழப்பம் ஏற்பபடும். மனத்தின் எண்ணம் வேறாகவும் கால் தனக்கென்று வேறு எண்ணம் கொண்டுச் செயல்பட்டால், மனிதனின் நடக்கும் செயல் எவ்வாறு ? இருக்கும். கால் தான் வேறு என்று கருதாமல் மனதின் எண்ணப்படி செயல் ஏற்ப்பட்டால் நடக்கும் செயல் நடைபெறும். அதனை இணக்கமான வணக்கம் என்று சொல்லலாம்.

உடம்பின் அனைத்து உறுப்புகளும் மனதின் எண்ணப்படிதான் செயல்படுகிறது அல்லது மனித அனைத்து உறுப்புகளும் அம்மனித எண்ணத்திற்கேற்ப இணங்கி வணக்கத்தில் தான் இருக்கின்றது. வணக்கம் இலையேல் எச்செயலும் இருக்காது.

ஒரே மனதை விளக்கத்திற்காக ஆழ் மனம், உள் மனம், வெளி மனம் என்று பிரிவாகச் சொல்வார்கள். ஆழ் மனம் உடலின் உள் உறுப்புக்களையும், வெளி மனம் உடலின் வெளி உறுப்புக்களையும், உள் மனம் நினைவு, திட்டமிடல், சிந்தனை இவைகளையும் செயல்படுத்தும் என்பதாகச் சொல்வார்கள்.

ஆழ் மனம் சர்வத்தோடு உள்ளது. வெளி மனம் அது "தான்" என்ற பிரிந்த உண்டாக்கிக் கொண்ட உண்டுமை உணர்வால் உள்ளது. உள் மனம் இரண்டிற்கும் இடைப்பட்டது.

இறை வணக்கத்தில் எந்த குறுக்கீடும் இல்லாமல் எண்ணமும் செயலும் இருக்கவேண்டும். அவ்வாறே மனித வாழ்வில் மன எண்ணத்திற்கு ஏற்ப கால் இணங்கி செயல்படுகிறது அதாவது வணக்கத்திலேயே இருக்கின்றது..

இஸ்லாமியத்தில் அனைத்தும் என்னை வணகிக்கொண்டே இருக்கின்றது என்று இறைவன் சொல்வதாக உள்ளது. அதாவது இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இறைவனை வணகிக்கொண்டே உள்ளது என்பதாகும்.

அனைத்து மத, மார்க்கங்களில் வணக்க முறை உள்ளது. அது ஏன் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்றால் அம்முறைப்படிதான் வாழ்வின் அனைத்து செயல்கள் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். அதைவிடுத்து குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வணக்கிவிட்டோம். இனி எப்படியும் தன் மன இஷ்டப்படி வாழலாம் என்று எம்மனிதனும் நினைப்பானேயானால் அவன் வணக்கத்தின் தாத்பரியத்தை புரியவில்லை என்றேக் கருதவேண்டும்.

வணக்க முறைப்படித்தான் வாழ்வின் அனைத்து செயல்களும் இருக்க வேண்டும் என்றால், இறைச் சொல்லுக்கு கட்டுப்பட்டு வணக்கத்தில் உடம்பும் மனமும் எவ்வாறு செயல்படுகிறதோ, அதுபோல் வாழ்வின் அனைத்து செயல்களிலும் இறைவன் வகுத்து தந்த முறைப்படி செயல்பட்டு வாழ வேண்டும். அவ்வாறு வாழ்தலே வாழ்வே வணக்கம் என்பதாகும். 'என்னை வணங்கவே மனிதனைப் படைத்தேன்' என்பதில் இப்பொருளும் உள்ளது என்பதை அறியவேண்டும்.

அனைத்தும் தனக்கென்று தனித்த உண்டுமை உள்ளது என்று எண்ணாது (அந்த எண்ணமே இல்லாது) ஒரே உள்ளமையில்தான் இருக்கின்றோம் என்ற எண்ணமும் இல்லாதும் செயல்படுகிறது அல்லது இயங்குகிறது. பிறந்த குழந்தை தனக்கென்று தனித்த உண்டுமை உள்ளதாக எண்ணுவதில்லை. அதுபோல் சர்வமும் ஒரே உள்ளமையில் இருக்கின்றோம் என்ற எண்ணமும் அற்று (பிறந்த குழந்தைப் போல்) இயங்குகிறது.

வளர்ந்த மனிதன் மட்டும் இவன் பகுத்தறிவில் தனக்குத் தனித்த உண்டுமை உள்ளதுபோல் செயல்படுகிறான். அதன் சுபாவத்தால்தான் "தான்" என்றே தனித்து, தனித்தே பிரிவுப் பிரிவாக பிரிந்தே இருக்கின்றான். அதனாற்தான் பல மத மார்க்கமாக பிரிந்து நிற்கின்றான்.

இவனுக்கு அந்தத் தனித்த உண்டுமை என்றதை அழிக்கும் செயலே இவன் செய்யும் இறைவணக்கம் ஆகும். ஏனென்றால் இறை வணக்கத்தில் இறை எண்ணத்தைத் தவிர்த்து மனிதன், தான் இறைவனை வணங்குகிறோம் என்ற எண்ணம் இருந்தால் கூட அங்கு இறைவணக்கம் இல்லை. காரணம் மனிதன் தான் என்ற எண்ணம் இருந்தால் வேறு என்ற ஒன்று உள்ளது என்று உண்டாகிவிடுகிறது. ஒன்றிலிருந்தே அனைத்தும் உண்டாகியுள்ளது என்பதனை முன்பே விளக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு, பல ஆற்றல்கள் எங்கேயுள்ளது ? ஒன்றின் செயலாக உணர்ந்தால் வணக்கமாகவே இருக்கின்றோம் என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது.

இருக்கும் ஒன்றான ஒன்று வேறு வேறு என்று தன்னில் பிரிவினைகளை, எவ்வாறு ? ஏற்கும். துண்டித்தலில் வலி இல்லாமல் இருக்காது. அதனாற்றான் பிரித்தலை அது மன்னிப்பதில்லை.

உண்மையில் யாரும் பிரிக்கமுடியாது. (மனதின் ஆழ் மனம் சர்வத்தோடுதான் என்பதைக்காட்டிலும் சர்வத்தினதாக இருக்கின்றது. அதனால்தான் உள் உறுப்புக்கள் மனிதனின் கவனம் இன்றி செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றது.) ஆனால் மனிதனில் அவன் தன் அறிவில் (வெளி மனதில்), உணர்வில் அவ்வாறு பிரிவு என்பது கானல்போல் உண்டாகி கனமாக பற்றிக்கொண்டது. அந்த மாயை அழியவேண்டும் என்பது இயற்கைத் தானே !

அம்மாயை அழிய வேண்டும். அதற்காக வணக்கவே படைத்தேன் என்பதின் மூலமும் இவன் அறிவேண்டும் என்பதை, இருக்கும் நித்தியா ஆற்றல் நினைவூட்டுதல், வழிகாட்டுதல் இயற்கைத் தானே.

நல்லவனாக வாழவேண்டும். தனக்கும் பிறர்க்கும் வாழிவின் அமைதி கெடாமல் வாழவேண்டும். அதாவது சக மனிதன் அவன், எம்மார்க்க/ மதத்தைச் சேர்ந்தவனாகவோ இருந்தாலும், அவனும் தானும் நிம்மதியாக வாழும் நிலையில் வாழ வேண்டும். ஏனென்றால் ஒன்றிலே உண்டாகி அனைத்தும் உள்ளது. அவ்வாறு வாழ்பவன் தான் அமைதியானவன், சாந்தியாளன். பிறக்கும் குழைந்தை அனைத்தும் சாந்தியாளனாகத்தான் பிறக்கின்றது என்ற வழிகாட்டுதலையும் மனதிற் கொள்க.

இறைச் சொல்லுக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் வாழ்வு வணக்கம் ஆகும். இறைவன் சொல் என்பது இறை எண்ணம் அதற்கேற்ப நம் செயல்பாடுகள் இருந்து வாழ்ந்தால் அச்செயல்கள் அனைத்தும் வணக்கமே.

கவனம் அப்பொழுதும் "தான்" என்ற தன் சுபாவத் தனித்த அகம்பாவ உணர்வு ஏற்பட்டால் நாசம்தான் ஏற்படும். ஏனென்றால் அதுதான் மன்னிக்க முடியாத ஒன்று. அப்பொழுது அவனைத் தவிர்த்த அனைத்தும் வேறு என்ற இவன் உணர்வில் இவனே எதிர் நிலைகளை இவனுக்குளே உண்டுபண்ணுகிறான்.

உலகின் அணைத்து மனிதர்கள் ஒன்றாக வாழும் இடத்தில் தனக்கு தனக்கு என்றும், தன் சம்பிரதாயங்கள் என்றும் அடுத்தவர்களை நெருங்க விடாமல் இவன் செயல் இருக்குமானால், சில காலத்தில் எதிர்ப்பு அலைகள், நிலைகள் ஏற்படத்தானே செய்யும். அவனை எதிர்க்கும் நிலை இவன் தனித்த பிரிவு உணர்வால் ஏற்பட்டது. எனவே வணங்கவேப் படைத்தேன் என்ற சொல்லில் தெளிவான விளக்கம் பெற்று வாழ்வே வணக்கமாக வாழ விளக்கமாக இதனையும் கொள்ளலாம்.

அரூப வணக்கம் (-அதில்)
இரண்டு இல்லை !
ஒன்றில் உண்டு
ஒன்றாய் உண்டு !

அரூப வணக்கம் என்றால் என்ன ?
(தொடரும்)
நபிதாஸ்

Tuesday, December 17, 2013

I'm from English மீடியம் :)

நம் தாயின்
மொழி தமிழ்
ஆதலால்
நம் தாய்
மொழி தமிழ்

ஆனால்
நம் பள்ளியில்
நமது இரண்டாம்
மொழி தமிழ்!

தப்புத்தப்பாய்
தமிழ் எழுதுவோர்
I am from English medium
என்று சிலாகிப்பார்

அக்கம் பக்கம்
சென்றாலும்
இரண்டு
அல்லது நான்கு
சக்கர வாகனமே
கதி என்றாலும்
நடை கூடவா
மறந்து போகும்

நடை தளர்ந்தோருக்கு
மூன்று சக்கர
வாகனம்போல்
தமிழை மறந்து
அயல் மொழி
பேசுபவர்
ஊனமாய் கருதப்படுவர்

தாய் காட்டிய
பாசமும்
அவள் ஊட்டிய
தமிழும்
மறக்கலாகுமோ
மு.செ.மு.சபீர் அஹமது

Monday, December 16, 2013

ஜாடை அறியாதவன் சர்வ முட்டாளா !?

ஜாடை என்றால் என்ன ? 
கண் ஜாடை, வாய் ஜாடை, நடை ஜாடை, முகபாவனை ஜாடை, உடை ஜாடை, செயல் ஜாடை, சைகை ஜாடை இப்படி பல வார்த்தைகளைக் கொண்டு ஜாடைகளை விவரிக்கலாம்..

அறியாதவன் என்றால் என்ன ? 
தெரிந்து கொள்ளத் தெரியாதவன், புரிந்து கொள்ளத் தகுதி இல்லாதவன், விளங்கிக் கொள்ள முயர்ச்சிக்காதவன் இப்படி பல வார்த்தைகளைக் கொண்டு விவரிக்கலாம்.

சர்வ என்றால் என்ன ? 
எல்லாவற்றிற்கும் மேலாக, அதுக்கு மேல் ஒன்றும் இல்லையென்று சொல்லலாம்.

முட்டாள் என்றால் என்ன ?
மூடன், மடையன், இன்னும் பல வார்த்தைகளைக்  கொண்டு விவரிக்கலாம்.

ஜாடை அறியாதவன் சர்வ முட்டாள் என்றால் என்ன ?
இடம், பொருள், ஏவல் அறிந்து பேசத் தெரியாதவன், செயல் படத் தெரியாதவன், நடந்து கொள்ளத் தெரியாதவன், புரிந்து கொள்ள தெரியாதவன்.

ஜாடை அறியாதவன் சர்வ முட்டாள். இதை அன்றே சொல்லிவைத்தார்கள் நம் முன்னோர்கள். அன்றைய மக்கள் இதை சரிவர அறிந்து கொண்டு ஒருத்தரை ஒருத்தர் முழுமையாக புரிந்து கொண்டு நடந்து கொண்டதால், அவர்களால் சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிந்தது, மேலும் பல குடும்பங்கள் கூட்டு குடும்பலாக ஒரே கூரையின் கீழ் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்துள்ளதாகவும், இதுக்கு மேலே அரசர்களும் அரசபை தலைவர்களும் தேசத்தின் மக்களும் ஒருத்தருக் கொருத்தர் புரிதலில் மேலோங்கி இருந்து சீரும் சிறப்போடும் வாழ்ந்துள்ளதாக சரித்திரம் நம்மைப் பார்த்து பறைசாற்றுகிறது.

பள்ளிப் பருவ வாழ்க்கையிலும் சரி, குடும்ப வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி, தொழில் வாழ்க்கையிலும் சரி, மற்ற பழக்க வழக்கங்களிலும் சரி ஜாடை அறியாமல் செயல் பட்டால் அதை விட ஒரு முட்டாள்தனம் வேறு ஒன்றும் இல்லை.

பல மாணவர்களுக்கு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியனாக இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். பெரிய பட்டப்படிப்பு படித்து இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். கம்பெனிகளில் பல நூறு வேலை ஆட்களுக்கு மேனேஜராக இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான்.  பெரிய செல்வந்தனாக இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். வெள்ளையும் சள்ளையுமாக இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். தன்னைச் சுற்றி இவ்வளவு கூட்டங்களா என்று பிரமிப்பு அடைவான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். இணைய தளங்களிலும்-தொலைக்காட்ச்சிகளிலும்-வானொலிகளிலும்-காகிதவடிவில் வருகின்ற பத்திரிகைகளிலும் தன்னுடைய போட்டோவும் பெயரும் வருவதைக் கண்டு ஆனந்தம் அடைவான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். இதுக்கு மேலே எத்தனையோ ஜாடை அறியாத சர்வ முட்டாள்களை நாம் பார்கின்றோமா இல்லையா?

நாம் தினம் தினம் சாலையில் நடந்து போகும் போதும், பிரயாணத்தில் இருக்கும் போதும் எத்தனையோ பேர்களை சந்திக்கின்றோம் உரையாடுகின்றோம் அத்துனைபேரும் நமக்கு நன்பர்காளா? அவர்கள் வந்து போகின்றவர்கள். அதாவது ஓடுகின்ற தண்ணீரைப் போன்றவர்கள்.

நாம் தினம் தினம் வசிக்கின்ற இடத்திலேயே எத்துணையோ பேர்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம், உரையாடிக் கொண்டிருக்கின்றோம், அவர்கள் அத்துனைபேரும் தெரிந்தவர்களாக, நண்பர்களாக இருகின்றார்கள், அவர்கள் அதே இடத்தில் நிலையானவர்கள், அதாவது தேங்கி கிடக்கின்ற தண்ணீரைப் போன்றவர்கள்.

ஓடுகின்ற தண்ணீர் ஒருபோதும் அழுக்காகுவது கிடையாது, அது சுத்தமாக இருக்கும். ஆனால் தேங்கி கிடக்கின்ற தண்ணீரோ அழுக்காகி விடும், கெட்டுவிடும், அதன் தன்மை அறிந்து சுத்தப்படுத்திக் கொண்டே இருக்கணும். அந்த தண்ணீர் நமக்கு கட்டுப்படவில்லையா? அந்த தண்ணீரை விட்டு விலகி இருக்கணும், தள்ளி இருக்கணும்.

அதுபோலவேதான் இந்த ஜனங்களும். நம் மத்தியில் வந்து போகின்றவர்களுக்கும், நம் மத்தியில் நிலையாக இருக்கின்றவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது. இந்த வித்தியாசத்தை ஜாடையில் அறிந்து நடந்து கொள்ளாதவன் சர்வ முட்டாள்.  

நம்வீட்டுக்கு அருகில் வேறு ஒரு குடும்பம் வீடு கட்டிக்கொண்டு குடி வருகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம், அவர்களின் நடத்தைகளை ஜாடையில் அறிந்து பழக வேண்டும், அதுபோல் அவர்களும் நம்மிடம் பழகவேண்டும். ஜாடை அறிந்து பழகாவிட்டால் இருவீட்டாருக்கும் தினம் தினம் போர்தான் நடக்கும். (இன்று பல இடங்களில் நடக்குதா இல்லையா?)

நமக்கு அவசரமாக ஒரு உதவி தேவைப்படுகிறது தற்போது நம்மால் அதை செய்ய முடியாது. அடுத்தவரை நாடியே ஆகணும் என்ற நிலைக்கு வந்தாச்சு, எவரிடம் போய் கேட்பது, யாரிடம் போய் கேட்டால் தட்டாமல் கிடைக்கும் என்று சிந்தித்து நம்மைநாமே சரிசெய்து கொண்டு கேட்க முயற்சிக்க வேண்டும். நாம் கேட்க போகும்போது அவர்கள் மனநிலையை அறிந்து, நேரத்தை அறிந்து, பிசியா இருக்கின்றாரா, யாரிடமாவது பேசிக் கொண்டிருக்கின்றாரா, வெளியில் கிளம்பிக் கொண்டிருக்கின்றாரா, போன்ற பாவனைகளை ஜாடையில் அறிந்து கேட்க முயற்சிக்கவோ அல்லது இப்ப வேண்டாம் நிலைமை சரியில்லை பிறகு கேட்கலாம் என்று இருந்துவிடவோ வேண்டும் இதுதான் புத்திசாலித்தனம். இப்படி இந்த முறையில் நடந்து கொண்டு பின்பு கேட்க்கும் பட்ச்சத்தில் நிச்சயம் அந்த உதவி கிடைக்கும், மாறாக இவையெல்லாம் பார்க்காமல் நேராக சென்று நம் இஷ்டப்படி கேட்டால் நண்பன் என்ன, கூடப் பிறந்த சகோதிரன் கூட இல்லை என்று சொல்லி வெளியில் அனுப்பி கதவை பூட்டிவிடுவான்.  

எங்கு பார்த்தாலும் குழப்பங்கள், அடிதடி, வெட்டு குத்து, இன்று நண்பன்-நாளை பகைவன், இன்று கணவன் மனைவி-நாளை நீ யாரோ நான் யாரோ, இன்று தலைவன்-நாளை டேய் போடா உன்னைப்பற்றித் தெரியாதா, இன்னும் எவ்வளவோ சங்கதிகள் நாம் காதுகளில் விழுந்து கொண்டும் கண்களில் பட்டுக்கொண்டும் இருக்கின்றதே, இதுக்கெல்லாம் என்ன காரணம், ஜாடை அறிந்து செயல் படவில்லை, ஜாடை அறிந்து கூட்டு சேரவில்லை, ஜாடை அறிந்து சம்பந்தம் கலக்க வில்லை, ஆக, ஜாடை அறியாதவன் சர்வ முட்டாள்.

இந்த அவசர காலத்தில் ஜாடை அறிந்து நடந்து கொள்ள நாம் அனைவரும் முயற்ச்சிப்போம்.
'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Saturday, December 14, 2013

[ 24 ] 'வளைகுடா வாழ்க்கை' [ இரட்டை குதிரை சவாரி !? ]

இரட்டை குதிரை சவாரி !?
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேட்கை இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகள் வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. ஆனால் குறுகியகாலத்தில் முன்னேற வேண்டும் என்ற அவசர புத்தியால் ஏற்படும் விபரீதம் பற்றியே இவ்வார பதிவு !

வளைகுடா வாழ்வில் சிலருக்கு சுபஸ்வரம் சிலருக்கு அபஸ்வரம். அந்த அபஸ்வரம் பற்றிய தகவலையே இவ்வார பதிவாக பதிய விரும்புகிறேன்...

குடும்ப கஷ்டங்கள் போக்க வளைகுடா வந்த வாலிபன் எப்படியும் முன்னேற வேண்டும் வேட்கை அவனுள் தீயாக எரிந்துகொண்டு இருந்தது. அவனுடைய ஆவலுக்கு ஏற்ப நல்ல வசதியான பெரும் பணக்கார ஷேக் (அரபி )வீட்டு
வேலைக்கார பையனாக தனது வளைகுடா வாழ்கையை துவக்கியவன் மிக குறுகிய காலத்தில் அரபி மனதில் இடம் பிடித்தார். சுறுப்பான வேலை, பொறுப்பை நிறைவேற்றுவதில் அதிக சிரத்தை மற்றும் ஒவ்வொரு நிகழ்வுகளை ஞாபகமூட்டுவது எல்லாவற்றிலும் அக்கறை எடுத்து செயல் படுவதன் அரபியின் தனி செயலாளர் ஆனார். அதன் மூலம் பல தரப்பட்ட வசதி படைத்த அரபிகளின் நட்பு ஏற்பட்டு நல்ல நிலைக்கு வந்தார். பல அரபிகளின் நிறுவனங்களுக்கு ஆட்கள் தேவைபட்டால் இவைரையே அரபிகள் அணுகுவர். பல ஆட்களை அரபு நாடுகளுக்கு அழைத்து வந்த பெருமை பெற்றார்.

நல்ல வருமானம் சிலரின் வருமானம் ரகசியமாய் இருக்கும் சிலரின் வருமானம் பகிரங்கமாய் இருக்கும். இவருடைய வருமானம் பலரின் பார்வைக்கு வரும் அளவிற்கு பகிரங்கமாய் அமைந்து இருந்தது. குறுகிய காலத்தில் பெரிய வீடு கட்டினார் எல்லோரின் முகத்திலும் ஆச்சர்ய குறி !
சிலரின் முகத்தில் கேளிவி குறி ? நல்ல நிலை அடைந்த அவர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஊர் வந்து செல்வார். நில தரகர்கள் அவரையே வட்டமடிப்பார். தோட்டம் விலைக்கு வருகிறது, கட்டிடம் விலைக்கு வருகிறது என்று தகவல்கள் தந்த வண்ணமே இருப்பர்கள். தன்னிடம் உள்ள பணத்தை விரயம் செய்யாது முதலீடு செய்து வந்தார்.

நன்றாக சென்று கொண்டிருந்த அவரின் வாழ்வில் இடியாய் வந்து அமைந்தது வியாபாரம் செய்யும் யோசனையை கேட்டு செயல்பட துவங்கியது தான். ஆம் தெரியாத தொழிலை பிறரை நம்பி துவங்கியதுதான் அவர் வாழ்வில் பேரிடியாய் அமைந்தது.

குறுகிய காலத்தில் பெரிய லாபம் பார்க்கலாம் என்ற யோசனையை கேட்டு களத்தில் இறங்கினார். ஊரில் இருந்த நிலா புலன்களை விற்று வியாபாரம் துவங்கினார். அவர் வேலை பார்க்கும் இடம் வேறு, வியாபாரம் செய்யும் இடம் வேறு இரண்டையும் கவனிப்பதில் இவருக்கு சிரமம் ஏற்பட்டது. வேளையில் சரியாக கவனம் செலுத்தாமல் அரபியின் அதிருப்தி வியாபாரத்தை சரியாக கவனிக்காமல் வியாபாரமும் நஷ்டத்தில் முடிந்தது.

கால போக்கில் வேலை இழந்து ஊர் வந்தார் மீண்டும் கஷ்டம் ? மீண்டும் முயற்சி ஒருவருக்கு ஒருமுறைதான் வாய்ப்பு வரும் அதனை முறையாய் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

ஜாக்கிரதை   நண்பர்களே ...!
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, December 13, 2013

வெற்றிதரும் பாதைகளைக் கற்றுதரும் பாடல் [ ஒலிப்பேழை ]


அதிரை ஜாஃபரின் இனிய குரலில் கவியன்பன் கலாம் அவர்களின் அழகிய வரிகள்...

வெற்றிதரும் பாதைகளைக் கற்றுதரும் பாடல் :
தொற்றிவிடும் சோம்பலினைத் தூக்கியெறி(ந்து)  போடு
வெற்றிபெறும் நோக்கத்தை விட்டுவிடா தோடு
பற்றிவிடும் வேகமுடன் பாருலகைச் சுற்றிக்
கற்றுதரும் பாடமும்தான் காண்பதெலாம் வெற்றி!

ஊக்கமதை மனத்தினிலே ஊன்றுவதால் கிட்டும்
வாழ்க்கையிலே வாய்ப்புகளாய் வாசலையும் தட்டும்
தாக்கவரும் சூழ்ச்சிகளைத் தாங்கிடவே நில்லு
போக்கினிலே வாழ்த்துகளும் போற்றுதலும் சொல்லும்

பூவுலகும் காட்டுமிடம் பூரணமாய்த் தேடு
நாவுதனில் சொல்வதற்கு நற்புலமை பாடு
தூவுகின்ற வாழ்த்துகளால் தோல்வியெலாம் ஓடும்
மேவுகின்ற நல்வழிகள் மேதினியில் கூடும்

உள்ளமதில் நற்குணங்கள் ஒன்றிவிட வேண்டி
முள்மலரில் காட்டுதல்போல் முன்னறிவைத் தூண்டிக்
கள்மனத்தை அன்புடனே கட்டிவிட நாடி
கொள்ளுமங்கு இன்பமெலாம் கோடியிலும் கோடி

அச்சமின்றிக் கூறிவிடு ஆய்வுரைகள் தந்தால்
துச்சமென்று சொல்லிவிடு துன்பமது வந்தால்
மிச்சமுள வாழ்க்கையினை மேன்மையுடன் வாழு
நிச்சயமாய் ஈருலகும் நிம்மதியால் சூழும்!

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு :
1. இவர்கள் இருவரின் கூட்டணியில் முதல் வெளியீடாக அருளைச் சுமந்த ஹாஜிகளே, இரண்டாம் வெளியீடாக பாலைவனப்பாட்டு, மூன்றாம் வெளியீடாக வாழ்க்கை என்னும் பாடம், நான்காம் வெளியீடாக எதிர்நீச்சல் ஆகியவற்றை தொடர்ந்து ஐந்தாம் வெளியீடு வெற்றிதரும் பாதைகளைக் கற்றுதரும் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.


2. மேலும் இந்தக் கவிதை கடந்த [ 28-11-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. இதோ அதன் காணொளி...

அவனா நீ !?

அறிவியல் முன்னேற்றம் நாகரிக உலகம் எப்படி வேண்டுமானாலும் இன்றைய உலகை கூறிக்கொள்ளட்டும். தப்பை தப்பு என்று சொல்ல அது பெரிய புரட்சி என்று கருதப்படுகிறது ! காற்றை, நீரை மாசுபடுத்தும் செயலை மிக வன்மையாக கண்டிக்கிறோம் சுத்தப்படுத்தப்பட்ட நீரை மட்டும்தான் குடிப்பேன் என்று அடம்பிடிக்கின்றோம். ஆனால் முக்கியமான ஒரு விஷயத்தை சரியாக சொல்லப்போனால் கேவலமான செயலை நீதிமன்றம் வரை கொண்டு செல்கிறோம்.
   
ஆம்  ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம் என்று உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு இப்படி ஒரு செய்தி தினசரி பத்திரிக்கைகளை வெளியாகி உள்ளது. ஓரினச்சேர்க்கை குற்றம் என்று நீதிமன்றம் சொன்னது அதிரடி விஷயமா!? ஆண்டாண்டு காலம் அந்த கேவலம் கெட்ட விஷயம் குற்றமில்லை என்று மானுடர்களால் சொல்லப்பட்டு வந்ததா ? இந்த நீதிமன்றம்தான் அது தவறு என்று கண்டுபிடித்து புதிதாய் நமக்கு சொல்கிறதா ? அது என்ன அதிரடி தீர்ப்பு ?
   
சென்ற 2009 ஆம் வருடம் தில்லி ஹை கோர்ட் ஒரு தீர்ப்பு வழங்கியது அது நாடு முழுவது பெரும் சர்ச்சையில் பேசப்பட்டது என்ன தெரியுமா அந்த கேவலமான செயலை [ ஓரினச்சேர்க்கை ]குற்றமல்ல என்று தீர்ப்பு வழங்கியது அந்த தீர்ப்பை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றம் கொண்டு சென்றனர். நான்கு வருடம் தேவைப்பட்டது ஓரினச்சேர்க்கை தவறுதான் என்று சொல்வதற்கு எப்படி இவ்வுலகை அறிவியல் முன்னேற்றம், நாகரீக உலகம் என்று சொல்ல முடியும்.
   
சரி உச்சநீதி மன்றமே அறிய கண்டுபிடிப்பை சொல்லி விட்டதே விட்டார்களா கயவர்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டவர்களில் சிலர்...

1. சிவானந்த திவாரி MP [ ஐக்கிய ஜனதா தளம் ] 2. டெரிக் ஓ பிரைன் MP [ திரிணமுல் காங்கிரஸ் ]ஆகியோர் கோர்ட் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறி இருக்கிறார்கள் இதற்காகவா உங்களை பாராளுமன்றம் அனுப்பி வைத்தார்கள் .
   
மேலும் கவனியுங்கள் மத்திய அரசு கூடுதல் தலைமை வக்கீல் இந்திரா ஜெய்சிங் தீர்ப்பு குறித்து தனது அதிர்ப்தியை தெரிவித்துள்ளார் அவர் கூறுகிறார் "அரசியல் சட்ட கோட்பாடுகளை விரிவுபடுத்த கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை  இழந்து விட்டோம்" என்கிறார் அவரின் மேலை நாட்டு கலாச்சார மோகம் அப்படி பேச வைக்கிறது
   
இந்த தீர்ப்பு வந்த நாள் கேவலம் கெட்ட பழக்கமுடையோர்கள் கருப்பு தினமாக கருதுகிறார்களாம்! நீங்கள் தான் இந்த நாட்டிற்கு கரும் புள்ளிகள் கலை எடுக்கப்பட வேண்டியவர்கள் இந்த பாவிகளுக்கு மேலும் ஒருவரின் ஆதரவு உண்டு இந்தியாவை சுத்தமாக வைத்துக்கொள்வோம் என்று விளம்பரத்தில் வருவாரே இந்தி நடிகர் அமீர்கான் அவரேதான்  இவர்களுக்கு எப்படி வெட்கமில்லாமல் ஆதரவு அளிக்கிறார்கள்.

ஒரு வேளை அவனா நீ  !?
மு.செ.மு.சபீர் அஹமது

Thursday, December 12, 2013

[ 13 ] அறிவுத்தேன் [ உணர்வில் உருவங்கள் ]

ஒன்றாய் உணர்ந்தால்
உருவம் இல்லை !
பலதாய் உணர்ந்தால்
உருவங் களுண்டாம் !

உணர்வில் உருவங்கள் எங்கனம்  ?

மனிதனின் ஐம்புலன்களும் ஓய்வெடுக்கும் பொழுது (ஐவுணர்வுகளும் செயல்படாது) மனம் மட்டும் செயல்படும். அப்பொழுது மனம் அது தன் ஒர்மைச் சிந்தனை, கனவு போன்றச் செயல்களில் இருக்கும். .

மனமும் முழுமையாக ஓய்வெடுக்கும் பொழுது, மனதால் செயல்படும் புலன் உணர்வுச் செயல்களும், புலன் இல்லா உணர்வுச் செயல்களும் (கனவு) ஏற்படாது. அதை ஆழ் உறக்கம் என்கிறோம்.

ஆழ் உறக்கத்திலிருக்கும் பொழுது வேறுகள் என்ற எதுவும் இல்லை. மேலும் உறங்கும் மனிதனும், அவன் உணர்வில் உறங்குகிறோம் என்ற உணர்விலும்கூட அவன் இல்லை.

மனிதன் உணர்வோடு இருந்தால்தான், புலன்கள் இவன் மனதின் என்னத்திற்கு ஏற்ப இயங்கும். பார்க்கும் புலன் பார்க்கும், கேட்க்கும் புலன் கேட்க்கும், அதுபோல் மற்றப் புலன்களும் இயங்கும்.

மனிதன் உணர்வோடு இருந்தும் புலன்கள் இயங்கவில்லை என்றால், எந்த புலன்கள் மூலமும் எதுவும் உணரப்படுவது இயலாது. கண் இருந்தும் குருடரால் காண முடியவில்லை. செவி இருந்தும் செவிடரால் கேட்க முடியவில்லை. வாய் இருந்தும் ஊமையாரால் பேச முடியவில்லை. உடல் இருந்தும் கோமா நிலையில் உள்ளவரல் உணரமுடியவில்லை.

மனிதனின் உணர்வு (புலன் உணர்வு, புலன் இல்லா உணர்வு) இயங்கவில்லை என்றால் வேறு எதுவும் இருக்கின்றது அல்லது தான் இருக்கிறோம் என்பதே உணர இயலாது. இவன் மனம் ஆன்மாவில் (ஆத்மாவில்) ஒடுங்கிவிடும்.

ஆன்மாவில் ஒடுங்குதல் என்றால் அந்நிலையில் தனித்த இவன் இல்லை ஆன்மா இருக்கிறது என்பதாகும். ஆன்மா எப்பொழுதும் இயங்கிக்கொண்டும் இருக்கும். ஆன்மாவினால்தான் மனிதனின் உயிர்வாழ்கிறான். அவனது உயிர்வாழ் இயக்க உறுப்புகள் ஆன்மாவைக் கொண்டு இயங்குகிறது. மனிதனின் உயிர்வாழ் இயக்க உறுப்புகள் அழிந்தாலும் ஆன்மாவுக்கு எந்தவிதக் கூடுதலோ அல்லது குறைதலோ இல்லை.

ஆன்மா அதன் ஆற்றலை முழுமையாக அறிந்துக் கொள்ளமுடியாது. ஆன்மா அதனைப் பற்றி மனிதர்கள் அறியாது ஆன்மாவின் மன இயக்கத்தில் வாழ்பவர்கள் சாதாரன மனிதர்கள்.

தன்னை அறிந்தவன் தன் தலைவனை அறிவான் என்ற உலக மாகப் புனிதரின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, ஆன்மா இயக்கம், ஆன்மாவின் மன இயக்கம் இவைகளை அறிந்து, அறிந்த அவ்வறிவின் தெளிவிர்கேர்ப்ப தெளிவுப் பெற்று வாழ்பவர்கள் அவர்கள் சாதாரன மனிதர்கள் அல்ல. அவர்களே மகான்கள் என்றோ, புனிதர்கள் என்றோ அழைக்கப்படுகின்றனர். அவர்களின் நேசம் ஆன்ம நேயம் எனப்படும்.

மனித ஆன்ம நேயத்தில்தான் உலகம் அமைதியுடன், ஒற்றுமையுடன் இருக்கும்.

ஆன்மாவிலிருந்து மனம், மனதிலிருந்து புலன்கள், புலன்களிருந்து மனதின் புரிதலுக்கேற்ப வேற்றுமைகள் என்ற உருவங்கள் தெரியும். அவ்வாறான வேற்றுமை என்ற புரிதல் இல்லையாகின் மனதின் குணம் இன்றி ( ஆன்மாவின் ) செயல் இருக்கும் ( பிறந்தவுடன் உள்ளக் குழந்தையின் செயல்கள் ).

பிறந்த குழந்தை தன்னையும் பிறர், பிறவற்றையும் பார்வையில் பார்க்கும். வேற்றுமைகள் என்பதும் அல்லாததும் அங்கிருக்காது. குழந்தையைப் பொறுத்த வரையில், வேறு அல்லது அல்லாதது என்றில்லாத பலவகை உருவங்கள் என்றில்லாது இருக்கும்.

உடல் இறந்தவன் அவன் முன் உள்ள யாவும் என்றும்போல் அவைகளின் பிம்பம் கண்ணாடியில் தெரிவதைப்போல் அவன் கண்களில் நிழலிடும். உடம்போடு மனம் இல்லாததால் அங்கு பார்வையில்லை. மனம் சேர்ந்தால்தான் பார்வை. அதனால் அக்காட்சியினால் அவ்வுடம்பில் குணம் இல்லை.

கிட்டத்தட்ட புலன்கள் இறந்த (கோமா) நிலை அல்லது மனம் அவ்வுடம்பைவிட்டு அகன்ற நிலை, அல்லது அங்கு உணர்ச்சிகள் அழிந்த கோமா நிலை. அந்நிலைப் (கோமாப்) பார்வையில் அனைத்தும் தெரியும் ஆனால் அங்கும் குணம் இல்லை. உடல் இயக்கத்திற்கு உணவு தரப்படும் உடம்பு வாங்கிக்கொள்ளும். அவ்வாறே கழிவுகளும் உடல் இயக்கத்தினால் வெளிவரும். பிறர்தான் அதனைச் சுத்தம் செய்ய வேண்டும். அம்மனித நிலையிலும் அவன் இருந்தும் அவன் இல்லை அனைத்தும் இருந்தும் அவனைப் பொறுத்த வரையில் அனைத்தும் இல்லை.

உடல் இறந்தவன் மனம் அதாவது அவ்வுடம்பில் குணம் பெற்று உண்டாகிய மனம் அவ்வுடலை விட்டு அகன்று இருக்கும். உடல் அழிந்துவிடும் அல்லது அழிக்கப்படும். மனம் குணத்திற்கேற்ப பலனில் இருக்கும். பின் எவ்வாறு வந்ததோ அவ்வாறேயாகிவிடும். அந்நிலையில் மணம் இல்லை. அதனால் உண்டு என்பதும் இல்லை, இல்லை என்பதும் இல்லை.

( தேவையைப்பொருத்து வலிமையான எண்ணம் கொண்ட உடலற்ற மனம், அழியும் முன் பிற மனவலிமைக் குன்றிய உடம்பில் குணம் செய்யும். அதனைப் பார்த்திருக்கலாம். பேயாடுதல் அல்லது சாடுதல் என்று கூறுவார்கள். கூடுவிட்டு கூடுபாயும் கலைக்கு இத்தத்துவம் பொருந்தலாம். )

கோமா நிலை, அந்நிலயில் மனிதனுக்கு அனைத்தும் இருந்தும் எதுவும் இல்லை. அதாவது உண்டு என்பதுவும் இல்லை, இல்லை என்பதுவும் இல்லை.

பிறந்த குழந்தையைப் பொறுத்தவரையிலும் உண்டு என்பதுவும் இல்லை, இல்லை என்பதுவும் இல்லை.

இல்லை என்றால் இல்லை என்பது இருக்கிறது. அதை ஒன்று என்றோ அல்லது இல்லை (பூஜ்யம்) என்ற ஒன்று என்றோ எனலாம்.

ஒன்று என்று இருக்கும் பொழுது உருவம்; உருவங்கள் இல்லை. அந்த ஒன்றில் ஒன்றதனின் உண்டாகிய உணர்வால், அவ்வுணர்வின் வேறு என்ற வேற்றுமையான அதனின் உணர்வால் உருவம்; உருவங்கள் உண்டு.

ஒன்றாய் உணர்ந்தால் உருவம் இல்லை ! பலதாய் உணர்ந்தால் உருவங்கள் உண்டாம் !

உணர்வில் உருவங்கள் அவ்வாறு தெரிகிறது.

வணங்க படைத்தேன்
வல்லவன் சொல்லில்
விளக்கம் கொள்ளுதல்
வகையிது வுமன்றோ !

விளக்கத்திற்காக ஏதாவது ஒரு மத;மார்க்கம்  அதனில் இருந்து ஒன்றை எடுத்து விளக்குவது நலம் என்பதால் முன்பே இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து விளக்கம் எழுதப்பட்டது.

மதம்; மார்க்கம் அனைத்திலும் வணக்கம் இருக்கிறது. இறை வணக்கம் என்பது அவசியம். அதனால் அனைவரும் அவர்தம் அறிந்த வழியில் அல்லது வழிகாட்டப்பட்ட வழியில் இறைவனை வணங்குகின்றனர். மேலும் இஸ்லாமியத்தில் வணங்கவே மனிதனைப் படைத்தேன் என்று இறை வாக்கியம் உள்ளது.

வணக்கம் சம்பந்தமான விளக்கங்கள் மேற்கண்ட விளக் கருத்துக்களில் எழுதப்பட்டுள்ளது.

அது எவ்வாறு ? என்பதைக் காண்போம்.
(தொடரும்)
நபிதாஸ்

Tuesday, December 10, 2013

சுவர்க்கமும் ! நரகமும் !!

சொர்க்கமும் நரகமும்
விவாதம் பண்ண
நாம்தான் அங்கே
நடுவராம்!

முதலில்
சுவர்க்கம் சொல்ல
நாமும் கேட்போம்

நல்லோரும்
நன்றாய் தொழுதோரும்
என் நண்பர்

பாவப்பட்டோரும்
பண்பாளரும்
என் மடியில்
துயில் கொள்வர்

நான் அவர்களை
நேசிக்க
அவர்களோ
என்னை நேசிப்பார்

ஆஹா சப்பாஷ்

இனி நரகம்
"உன் பெருமை
சொல்லேன்"
நாமும் கேட்க

ஆன்றோரே சான்றோரே
என் அருமை நண்பர்களே
என் பெருமை சொல்கிறேன்
கேளுங்கள்

அரசாட்சி புரிந்தோரும்
அரசியல் செய்தோரும்
சினிமாவில் சிறந்தோரும்
சீவி சிங்காரித்து
தன் அழகை
பிறருக்கு
பறை சாற்றியோரும்
என் சொந்தங்கள்
அறிவீரோ ?

பணம் பணம் என்று
கொள்ளை லாபம் ஈட்டி
கோடிகளை தன்பக்கம்
வைத்துக்கொண்டோரும்

படைத்தவனை மறந்திட்டு
பகட்டு வாழ்க்கை வாழ்தோறும்
படை படையாய்
வருவாரே எனை நோக்கி

அவர்கள் எனை
விரும்பாவிடினும்
என் விருப்பம்
அவர்கள் தான்

கூறுங்கள் நடுவரே
யார் பக்கம் அதிக கூட்டம்

நடுவர் நான் கூறுகின்றேன்
கேளுங்கள் செவி தீட்டி

நல்லாட்சி புரிந்தோரும்
உண்டு
நாகரிகமாய் அரசியல்
செய்தோரும்
உண்டு

ஆனால் அதுவெல்லாம்
சொற்ப எண்ணிக்கையே!

நாளைய
நம் விருப்பம்
சொர்க்கமென்றால்
அது தானே
நமக்கு வேண்டும்

விரும்பியவை
வேண்டுமென்றால்
வகுத்திடுங்கள்
நல் வாழ்வு

கெட்ட
பணமும் வேண்டாம்
பகட்டும் வேண்டாம்
படைத்தவனின்
சட்டங்களை
சரியாக செய்திடுவோம்
சன்மார்க்க வழியில்
சமத்துவமாய்
வாழ்ந்திடுவோம்.
மு.செ.மு.சபீர் அஹமது

நல்லதொரு குடும்பமும் ! சரியான புளிரசமும் !!

நாம் வீடுகளிலும் ஹோட்டல்களிலும் சாதத்தில் புளிரசம் இட்டு சாப்பிட்டு இருப்போம், வீடுகளில் உள்ள சுவை ஹோட்டல்களில் இருப்பது கிடையாது. காரணம் முதலில் நீரில் இட்டு பிழிந்து எடுத்து காய்ச்சப்படுவதே சரியான புளிரசம், இரண்டாவதாக நீரில் இட்டு பிழிந்து எடுத்து காய்ச்சப்ப்படும்போது அது சரியான புளிரசமாக இருக்காது, மாறாக வெறும் சக்கை ரசமாக இருக்கும்.

மானிடவியலில் எத்தனை உறவுகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவாரஸ்யமானவை. அப்பா-உம்மம்மா, வாப்பா-உம்மா, காக்கா-தம்பி, ராத்தா-தங்கச்சி, மாமா-மாமி, மச்சான்-மச்சி, பெரியப்பா-சின்னவாப்பா, பெரியம்மா-சின்னம்மா, இன்னும் அநேக உறவு வட்டங்கள் நம் மத்தியில் வட்டமடித்துக் கொண்டு இருந்தாலும் அதையும் தாண்டி உள்ள ஒரு உன்னதமான உறவுதான் கணவன் மனைவி என்ற உறவு. இந்த கணவன் மனைவி உறவு சிலருக்கு சந்தோஷமாக அமைவதுண்டு, இன்னும் சிலருக்கு பாதிக்கு பாதி தேவலாம் என்றும், பலருக்கு ஏன்தான் இப்படி அமைந்ததோ என்றும் இருப்பதுண்டு. ஆக மொத்தத்தில் திருப்த்தி அடைவது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

பெறோர்கள் பார்த்து வைத்து முடிவு எடுத்து நடக்கும் திருமணமாக இருந்தாலும் சரி, காதலித்து தானாக முடிவு எடுத்து நடக்கும் திருமணமாக இருந்தாலும் சரி, சரியான புரிதல் இல்லாமால் இடையில் அந்த தம்பதிகள் பிரிந்து வேறு திருமணம் செய்துகொண்டு வாழ்கின்றனர்.

நான் பல நாடுகளில், பல பேர்களிடம் இந்த இரண்டாவது திருமணத்தைப் பற்றி ஒரு சர்வே செய்து பார்த்ததில் நூற்றுக்கு நூறு சதவிகிதத்தினர் முதலில் அடைந்த இல்லற வாழ்க்கையைத்தான் முதன்மை படுத்துகின்றனர். இதிலிருந்து என்ன தெரிகின்றது? முதல் இல்லற வாழ்க்கையே சிறந்ததாக இருக்கின்றது.

இன்றைய அவசர காலத்தில் எதையும் சிந்திப்பது கிடையாது, கண்ணுக்கு அழகாக இருந்தால் மட்டும் போதுமா ? கை நிறைய காசு இருந்தால் மட்டும் போதுமா ? ஆணோ பெண்ணோ கடமை Duty, கண்ணியம் Respect, கட்டுப்பாடு Restriction, பண்பு Quality, கவுரவம் Dignity.  இதையெல்லாம் சிந்திக்காமல் முடிக்கப்படும் திருமணம் சரியான புளிரசமாக இருக்காது.

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Saturday, December 7, 2013

[ 23 ] 'வளைகுடா வாழ்க்கை' [ மகனின் நெகிழ்ச்சி ! ]

மகனின் நெகிழ்ச்சி :
வளைகுடா வாழ்வில் தியாகம் பற்றி கூற வேண்டும் என்ற நோக்கில் இந்த பதிவை எழுதுகிறேன். அது மட்டுமன்றி கல்வியினால் கிடைக்கும் நற்பதவி பற்றியும் இதில் பதிய முனைகிறேன்.

நான் கூறும் கால கட்டம் 1990 களில் நடந்த நிகழ்வுகள் கணினியின் முக்கியத்துவம் வெளிவந்த காலம். இந்தியாவில் கணினி பயிலும் ஆர்வம் நிறைந்த காலமது. வளைகுடா வாழ் நம்மவர்களிடமும் கல்வி கற்றவர்கள் நல்ல நிலையில் வசதியாக இருந்தமையால் கட்டிட தொழிலாளி கள்  தான் படும் கஷ்டம் பிள்ளைகள் பெற கூடாது என்பதை கருத்தில் கொண்டு படிக்க வைப்பதில் கவனமாக இருந்தனர். அதில் சிலர் வெற்றியும் கண்டுள்ளனர் அது பற்றிய பதிவே இவ்வார ஆக்கம்...

கட்டிடங்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்து தனது வளைகுடா வாழ்வை துவங்கியவர் கண் இமைக்கும் நேரத்தில் பதினைந்து வருடம் கடந்து விட்ட நிலையில் தனது மகன் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு செல்ல தயாராக  இருந்தான்.

சென்னைக்கு சென்று ஒரு கம்பெனியில் வேலை செய்து வருவதாக தந்தைக்கு கடிதமிட்டான். மிகுந்த மகிழ்வில் அன்று  தன்னுடன் வசிக்கும் நண்பர்களிடம் கூறி மகிழ்ந்தார். அதில் ஒருவர் தனது காம்பெனிக்கு ஆள் தேவை உங்கள் மகனின் கல்வி தகு மிக சரியாக பொறுந்தும் உடன் பாஸ்போர்ட் காப்பியை அனுப்பி வைக்க சொல்லுங்கள் என கூற... மிக மகிழ்ந்தார். மகனுக்கு விசா கிடைக்க பெற்று வளைகுடா வந்து சேர்ந்தான் .

ஒருவாரத்தில் எல்லா வேலைகளும் முடிந்து கையில் அடையாள அட்டையும் கிடைத்தது. கம்பெனிக்கு செல்ல  ஆயத்தமானான் தந்தை என்ன வேலை செய்கிறார் என்ற தகவல் அறியா மகன் தனது வேலை உண்டு தான் உண்டு என்று ..ஒரு மாதம் கழிந்தது. ஒரு நாள் தனது கம்பென்யில் வேலை பார்ப்பவருடன் நண்பகல் ஒருமணி அளவில் வெளியில் சென்று கொண்டிருக்கும் போது மூன்று மாடி கட்டிடத்தின் உச்சியில் தனது தந்தை பெயின்ட் அடித்து கொடிருக்கும் நிலையை கண்டு அதிர்ந்தான்.

அப்பா ! அப்பா !! என்று அழைத்தான் மகன் அழைப்பை உணர அவர் வேளையில் கவனமாக இருந்தார். நிலைமையை உணர்ந்த மகன் வீடு வந்து
பேசி கொள்ளலாம் என தன சகாவுடன் அலுவலகம் திரும்பினான் மாலையில் தனது அப்பா தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்றான்.

அப்பா என்று கதறி அழுதான்...

அப்பா ..நீங்கள் இப்படி கஷ்டபட்ட காசில் தான் எனது கல்லூரி காலத்தை ஆடம்பரமாக கழித்தேனா ! என்று கதறி அழுதான்.

தம்பி நீ சந்தோசமாக  கல்லூரி வாழ்க்கை முடித்தது எனக்கு மகிழ்ச்சி. படிப்பை முடித்து பட்டதாரியாய் வரவேண்டும் என்பதே எனது நோக்கம் அது நிறைவேறி விட்டது. நான் பட்ட கஷ்டம் நீ படக்கூடாது என்பதே நோக்கம்
அது நிறைவேறி விட்டது. அயர்ச்சியை மீறிய சந்தோசம் அவர் முகத்தில் தெரிந்தது.

அப்பா ! இனி  இந்த வேலை செய்ய வேண்டாம். ஊருக்கு போய் விடுங்கள். நான் இனி பார்த்து கொள்கிறேன் என்றான் அன்பு மகன்.

சில காலம் கழித்து ஊர் சென்று தந்தை ஓய்வெடுக்க சென்றார். கல்வி கற்ற மகன் சிறப்பாய் வாழ்வை கழித்து வருகிறான்.

நல்ல தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திப்போம்...
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, December 6, 2013

அய்மான் நடத்திய பூங்காச் சந்திப்பில் எங்கள் கவிஞர் பாடிய கவிதை ! [ புகைப்படங்கள் ]


அல்லாஹ்வை வணங்கிடவே சொல்லும் அய்மான்
......அதற்காக மார்க்கவிழா நடத்தும் அய்மான்
எல்லாரும் இணங்கிடவே  சொல்லும் அய்மான்
........இதயங்கள் ஒன்றுபடச் செய்யும் அய்மான்
இல்லார்க்கு வழங்கிடவே சொல்லும் அய்மான்
........ஈந்துவக்கும் ஜக்காத்தை வழங்கும் அய்மான்
கல்லூரி திருச்சியிலே அமைத்த அய்மான்
......கல்லாமை இல்லாமை ஆக்கும் அய்மான்

திருமறையின் மொழிபெயர்ப்பைத் தந்த அய்மான்
......திருவையென்னும் ஊரிலுள்ள அப்துற் றஹ்மான்
தருமுரைகள் ஒலிப்பேழைத்  தட்டில் கூறும்
....தரணியெங்கும் செவிப்பறையில் குர்ஆன் சேரும்
ஒருவரையும் நிந்திக்காப் பேச்சால் வெல்லும்
....ஒன்றுபட்டச் சமுதாயம் காணச் சொல்லும்
கருவறுக்கும் துர்குணங்கள் காணாச் சங்கம்
......கற்றவரும் மற்றவரும்  இணையும் அங்கம்!

ஒன்றுபடுவோம் என்றுதானே கூவும் கனிவு
........ஒற்றைவரிக் கோரிக்கை வைத்தப் பணிவு
நன்றுபெறுவோம் என்பதையும் சொல்லும் எண்ணம்
......நம்மவர்கள் வாக்குகளைச் சிதறா வண்ணம்
வென்றிடுவோம் அரசியலில் இத்னால் என்று
........வேண்டுகோளை முன்வைத்த அய்மான் அன்று
சென்றரமலான் இஃப்தாரில் தீர்ப்பைக் கண்டு
.....சென்னைவரை எட்டியதால் மாற்றம் உண்டு!

படியாதார் வேலையின்\றித் தவித்த நொந்தப்
......பணியாளர், படித்தோர்க்கும்  வேலை தந்து
முடிவாகக் கண்ணீரைத் துடைத்த சங்கம்
....முதலாக அமைந்திட்ட முஸ்லிம் அங்கம்
நெடியதொரு பயணத்தில் நிழலின் வாசம்
.....நிகழ்ந்துவிடும் விபத்துக்கும் உதவும் நேசம்
விடியலாக  வெளிச்சத்தை ஆங்குப் பார்த்தேன்
.....வென்றிடுக என்றுமனம் கூறும் வாழ்த்தே!

"கவியன்பன்"
அபுல் கலாம்Thursday, December 5, 2013

[ 12 ] அறிவுத்தேன் [ அருவே உருவில் ]

கண்ணது பார்வை
உன்னது பார்வை
கண்ணைக் காண
கண்ணுரு தெரியும் !

காணும் கண் காணும் போது மாட்டுமே தெரிவதெங்கனம் ?

ஒருவர் அவர் பேச்சிலே அவர் இலயித்து; உருசித்து மிக அற்புதமாக அழகியதோர் சொற்பொழிவைத் தந்துக் கொண்டிருப்பார். நாம் மெய்மறந்து வேறொன்றும் தன் பார்வையில் தெரியாது; சிந்திக்காது அப்பேச்சில் கட்டுண்டோர் நிலையில் இருந்திருப்போம்.

பேசுபவர் அந்நிலையில் அவர் தான் பேசும் அக்கருத்தில் அவர் இலயித்து தன் வாய்ப் புலன் மூலம் நாம் பேசுகிறோம் என்றும், கேட்பவர்கள் இரசித்து மயங்கி அவர் சொற்பொழிவைத் தங்கள் செவிப் புலன்கள் மூலம் கேட்கிறோம் என்றும் யாரும் தனித்துப் பிரித்து உணர்வதும் இல்லை; புரிவதும் இல்லை. மாறாக தான் பேசுகிறோம் என்ற தன் வாய்ப் புலன் உரிமை நினைவு அற்று அவர் பேசுவார், கேட்பவர்களும் தங்கள் செவிப் புலன் உரிமை நினைவு அற்றும் கேட்ப்பார்கள்.

அந்நிலையில்தான் உயர்வான நல்லப் பேச்சுகளும் வரும். கேட்பவரும் தன்னை மறந்துக் கவனிப்பார்; இரசிப்பார், அப்பொழுது ஒரு தனி இன்பமும்; முழூ கவனமும் உண்டாகும். சொல்பவரும், கேட்பவரும் அக்கருத்தின் ஒன்றிலேயே ஒன்றி இருப்பாராகள்.

அருவி ஓர் இடத்தில் உற்பத்தியாகி மறு இடத்திற்கு; இடங்களுக்கு நீர் ஓடிக் கொண்டிருக்கும். அதுபோல் சொற்பொழிவின் கருத்தானது ஒருவரிலிருந்து பலருக்குச் செல்கிறது. இது பூரண கவனத்தில் ஒன்றினுள் ஒன்றின் செயல் போல் நடக்கின்றது. தனித்த உணர்வுகள் திரும்பியவுடன் இருமையோ; பலமையோத் தெரியும். அதாவது அறிவு மயக்கத்தில் உணர்வால் இருமையாக; பலமையாக தெரியும்.

மேலும் ஒன்றினுள் ஒன்றின் செயல் என்பது, நாம் நம் தனிமையில் சிந்திக்கும் பொழுது நம்மில் ஓர் எண்ணம் உண்டாகி நாமே அதில் உள்ள உண்மைகளை இரசிப்போம்; விரும்புவோம். இது ஒரு தெளிவான நிலை. அதுபோல் பரிபூரண கவனத்தில் ஒருவர் பேச மற்றொருவர் கேட்கிறார்.

இங்கு பேசுபவரும், கேட்பவரும் அந்தச் சொற்பொழிவின் அச்செயல் முடிந்தவுடன் அந்தத் தெளிவான நிலையிலிருந்து, தாங்கள் தங்களின் தனித்த உண்டாக்கிக் கொண்ட சுபாவச் சுயவுனர்வுக்குத் திரும்பும் நிலைத் தானாக ஏற்பட்டுத் திரும்புவார்கள். அப்பொழுதுக் கருத்தைப் பேசிய அவர் தன் வாய்ப் பற்றியோ அல்லது கருத்தைக் கேட்ட இவர்கள் தங்கள் செவிப் பற்றியோ தங்களின் கவனத்தைத் திருப்ப அப்புலன்கள் உணரப்படும். பின்பு அப்புலன்கள் தெரியும்.

ஒருவர் அவர் தன்னில் ஓர் எண்ணம் உண்டாகிச் சிலத் தெளிவுகளைத் தந்து அவ்வெண்ணத்தின் குணம் அவர் தன்னில் அதிகமாக விரும்பப்பட்டால் அக்குனமாகவே அவ்வெண்ணம் உண்டாகிய அவர் இருப்பார். அருவே உருவில்.

அதுபோல் ஒர் உள்ளத்தில் ஓர் எண்ணம் உருவாகி பல உள்ளங்களுக்குச் செல்கிறது.  ஒர் உள்ளத்தில் உருவாகிய ஓர் எண்ணம் அவ்வுள்ளத்திலும் குணம் வெளிப்பட்டு அவ்வுள்ளம் அக்குணமாகவும், பல உள்ளங்களில் கேட்கப்பட்டு, அக்கருத்தின் குணம் அவ்வுள்ளங்களில் பதிந்து அக்குணம் வலுப்பட்டு பின் அவ்வுள்ளங்களிலும் அக்குணம் ஆகி நிற்கும். அருவே உருவில்.

மாம்பழத்தின் உருசி அலாதியானது. மாம்பலத்தில் அதன் சுவை தனித்து எங்கும் இருப்பதில்லை. அந்த சுவையே மாம்பழமாக இருக்கின்றது. மாமபலச் சுவை உருவமற்றது, பார்க்கமுடியாது. ஆனால் மாம்பழ உருவில் இருக்கின்றது. அருவே உருவில்.

தங்கத்தில் மோதிரம். தங்க மோதிரம். தங்கமே மோதிரம். ஆனாலும் தங்கமெல்லாம் மோதிரம் அல்ல என்பதிலும் நழுவிடக்கூடாது. அறிவின் தெளிவின் நிலைக் கேற்ப உண்மைகள் வெளிப்படும்.

உங்களில் கண். கண் இல்லாமல் நீங்கள் பார்க்க முடியாது. நீங்கள் இல்லாமலும் கண் இல்லை, அது தனித்து இயங்காது. நீங்கள் என்பது கண்ணும் சேர்ந்தும்தான்.

தனித்து கண்ணைக் கவணித்தாலே கண் உரு தெரியும். அருவில் உரு.
கண் காணாது. நீங்கள்தான் காண்கிறீர். அப்பொழுது உங்களில் கண் உருவம் தனித்து இல்லாமலாகிவிட்டது. கண்ணுடைய பார்க்கும் தத்துவம் உங்கள் உருவில் உள்ளது. பார்க்கும் ததுவமாகவே நீங்கள் இருப்பீர்கள். அருவே உருவில்.

இங்கு முக்கியமாக நாம் அறிந்துக் கொள்வது என்னவென்றால் அரு என்ற ஒன்றுதான் அனைத்துமாகி பல செயலானச் செயலாக ஒரே செயல் தன்னுள் நிகழ்த்துகின்றது, நிகழ்கின்றது. அருவே உருவில்.

ஒன்றாய் உணர்ந்தால்
உருவம் இல்லை !
பலதாய் உணர்ந்தால்
உருவங்க ளுண்டாம் !

உணர்வில் உருவங்கள் எங்கனம் ?
(தொடரும்)
நபிதாஸ்

Tuesday, December 3, 2013

தந்தை மகள் பாசம் [ கலிவிருத்தம் ]

...............................தந்தை மகள் பாசம்.........................
....................................(கலிவிருத்தம்)............................
தேன்மகளே  பூமகளே  தேடுகிறேன் உன்னை
நான்மறந்தேன் உன்முகத்தால் நாள்அதனின் துன்பம்
உன்பிறப்பில் என்மயிலே உன்உருவில் நானே
என்னைநானே கண்டுதானே இன்பமுற்றேன் மானே

நான்மயங்கும் நன்மனதின் நாயனவன் பண்பு
வான்அதிலும் கண்டிலனேன் வாஞ்சையான அன்பு
அன்பதனும் பண்பதனும் அங்கமான தங்கம்
உன்வடிவில் நான்பெறுவேன் ஓங்குபுகழ் எங்கும்

தன்வலியும் நானறியேன்  தாங்கிடுவேன் என்றும்
வன்மையான வேலைகளும் வார்திடுவேன் இன்னும்
பொன்மகளே இவ்வுலகில்  போரிடுவேன் உச்சம்
உன்சிரிப்பில் வாழ்ந்திடுதல் ஒன்றுதானே மிச்சம்

பொன்மணியும் சேர்த்திட்டேன் பூமகளே நன்றே
உன்மணவாழ் என்திருநாள் ஒன்றதுவே என்றே  
என்னுயிரே  ஓர்மகவை ஈன்றிடவே வேண்டும்
இன்பமுடன் அம்மகவை நான்முகர சொர்க்கம்

அண்ணலாரின் பொன்மகளாம் அன்னை(ஃ)பாத்தி மாபோல்
பெண்திலகம் யாருமுண்டோ பொன்மயிலே நீசொல்
வேண்டுகிறேன் அவ்வழியில் வென்றிடஉன் வாழ்வும்
கண்மணியே திண்மையுடன் கற்றுடுவீர் நாளும்        

நபிதாஸ்

வாஞ்சை : பரிவுகலந்த அன்பு
திண்மை : உறுதி

Monday, December 2, 2013

அங்கீகாரமும், தனியிடமும் வேண்டி முதல்வருக்கு கோரிக்கை !?

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற காலம் போய் ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் குறைவில்லை என்று ஆண்கள் செய்த அல்லது ஆண்கள் மட்டுமே செய்யும் வேலைகள் என்று இருந்த காவலர்கள் வேலை ஓட்டுனர்கள் வேலை [ விமானம் உள்பட ] இராணுவம் என்று எல்லா துறைகளிலும் பெண்களும் வந்துவிட்டார்கள் இது நல்ல முன்னேற்றமா அல்லது இவ்வளவு முன்னேற்றம் தேவை இல்லையா என்பதனை வாசகர்களாகிய நீங்கள் கருத்திடுங்கள்.
       
எப்படி ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலை என்று இருந்ததோ அதுபோல் பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய செய்து கொண்டு இருக்கிற ஒரு வேலை இருக்கிறது இது இன்றள்ள நேற்றல்ல ஆதிகாலம் தொட்டே இருக்கிறது. அதை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டியும் அதற்காக ஓர் இடம் தனியாக ஒதுக்கி தர வேண்டியும் நமது முதல்வரின் தனி பிரிவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள் பாலியல் தொழிலாளர்கள் இதற்கு தேசிய மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலாஜி என்பவர் நம் அரசு மதுக்கடைகள் நடத்தும் பொழுது பாலியல் தொழிலுக்கும் அங்கீகாரம் வழங்கி தனியாக இடம் ஒதுக்கலாம் என்கிறார்.

உங்கள் கருத்தென்ன வாசகர்களே ?     
பெண்களுக்கு ஏன் இந்த நிலை அரசர் காலம் தொட்டு தேவதாசி என்ற ஒரு பழக்கமும் அதற்காக ஒரு சமுதாயமும் இருந்தது பின் நாடகம் நாட்டியம் என்று தங்களின் நிலைகளை மாற்றிக்கொண்டனர். பெரிய ஜமின்கள் தனக்கு கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி இருக்க வேண்டும் என்று கேடுகெட்ட பழக்கத்தை வைத்து இருந்தனர் ஆண்களின் குணமே மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகர துடிக்கும் குணம் கன்னியரை கண்டு சபலம் கொள்ளும் தீய குணம் இதுவே கெட்ட பெண்களை ஆண்கள் பக்கம் போகச்செய்தது.
     
காதலித்து பின் ஆண்களால் கைவிடப்பட்டவர்கள்,  தன்னை பாதுகாத்து பராமரிக்க கூடிய ஆண்கள் சோடையாக இருக்கும் பொழுது வருமானம் வேண்டி பாலியல் தொழிலை தேர்ந்தெடுக்கின்றனர் இந்த சூழல் இல்லாது போகவேண்டுமானால் தன் மனைவிக்கோ,கணவருக்கோ துரோகம் செய்யக்கூடாது என்று அனைவரும் ஒழுக்கத்தை பேணவேண்டும்.பாலியல் செய்யும் எந்தப்பெண்ணும் தன்னிலைக்கு ஒரு காரணம் சொல்வாள் எப்படி இருந்தாலும் சுய ஒழுக்கம் என்பது அனைவர்களும் தம் வாழ்வில் கொண்டுவர வேண்டும்
     
அவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்த்தால் !?

எக்மோர் = இரயில் நிலையம்
கீழ்பாக்கம் = மனநல காப்பகம் [ பைத்தியகார மருத்துவமனை ]
புழல் = மத்திய சிறைச்சாலை
சௌகார் பேட்டை = சேட்டுகள் அதிகம் வசிக்கும் இடம்    
கோடம்பாக்கம் = சினிமாத்துறை சம்மந்தப்பட்ட இடம்
??????????????? = சிவப்பு விளக்கு பகுதியாக முத்திரை குத்தப்பட்டுவிடும் குடிமகன்களை உருவாக்கி கெட்டபெயர் எடுத்துக்கொண்ட நம் அரசு இதில் மிக கவனமுடன் செயல்பட வேண்டும்.
   
இப்படி ஒரு மக்கள் மனதில் நீங்காத ஒரு இடம் சென்னையில் முத்திரை குத்தப்பட வேண்டுமா ?

ஆகவே நம்மால் முடிந்தவரை நமது எதிர்ப்பை காட்டுவோமே !

மு.செ.மு.சபீர் அஹமது
Pro Blogger Tricks

Followers