.

Pages

Saturday, March 29, 2014

மகவே கேள் ! புதிய தொடர்...

அன்பு வலைதள வாசக நெஞ்சங்களை மீண்டும் சந்திப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன். 'மகவே கேள் !' என்ற புதிய தொடருக்கான கரு பெயரிலேயே தெரிகிறது என்று அன்பு சகோ நபிதாஸ் அவர்கள் கடந்த பதிவில் குறிப்பிட்டது மிக சரியானதே. பதிவு துறையில் காலம் காலமாய் வெளியாகும் புத்தகங்களில், சுய சரிதை, தளப் புராணம், பயணக் கட்டுரை இவைகளை போன்று அறிவுரை கூறும் பதிவுகள் காலம் காலமாய் வந்துள்ளது.

பழங்காலத்தில் மன்னர் ஆட்சி நிகழ்ந்த தருணத்தில் பிள்ளை பேரு இல்லாத மன்னர்கள் அருந்தவம் இருந்து முதுமை அடைந்த தருவாயில் குழந்தை பேரு பெறுவார். பெற்ற பிள்ளையை சகல கலையும் கற்ற வல்லவனாக திகழ முனைவர். இளம் பருவத்தில் உள்ள மகனிடம் எதிர்காலத்தை பற்றிய அறிவை பல கல்வியாளர்கள் மூலம் அறிவூட்டி வருவர். இளவல் இளைஞனாய் உருவெடுக்கு முன் சில மன்னர்கள் மரண படுக்கைக்கு செல்ல நேரிடும்போது தனது அன்பு மகனை அழைத்து அறிவரை கூறுவர். அது இன்றி அமையாத ஒன்றாக இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க பதிவாய் அமையும்.

கால போக்கில் நாகரீக உலகில் பதிவுத்துறை மேம்பட்டு கல்வியாளர் கையில் வந்ததன் காரணமாக நல்ல பல எதிர்கால முன்னேற்றத்துக்கான நூற்கள் வெளியாயின. வெளியாகி கொண்டு இருக்கின்றன. இணையதள வாயிலாக பல கட்டுரைகள் வந்து நல்ல பல கருத்துக்களை வழங்கி
வருவது அறிவு சார் உலகிற்கு நல்ல விருந்தாகவே அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. அதன் அடிப்படையில் எனது சில கருத்துக்களை பதிய விரும்பி 'மகவே கேள் !' என்ற புதிய தொடர்...

மகன் என்றால் ஆண் பால், மகளே என்றால் பெண் பால். வயிற்றில் கருவாகி ஒரு வாரிசு உருவாகும் தருவாயில் அக்கருவை மகவு என்பார்கள் எனவே மகவே என்றால் எதிர்கால இருபாலருக்கும் உள்ள அறிவுரை என்று வைத்து
கொள்ளலாம்.

இனி தொடருக்குள் செல்லலாமா !?
அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Thursday, March 27, 2014

கையூட்டு - ச்சீ !?

பொறுப்புள்ளக் குடிமகனின் அடையாளம்
..........புத்தியினைத் தீட்டித்தான் வாக்களிப்பார்
மறுப்புகளைச் சொல்லியவர் விடமாட்டார்
..........மதித்தேத்தான் பொறுப்புடனே வாக்களிப்பார்
வெறுப்புகளும் வரத்தானே நேர்ந்தாலும்
..........விவேகமாக நல்லாரைத் தேர்ந்தெடுப்பார்
உறுப்பினர்கள் சபையினிலே வெளியிட்டு
..........உரிமைகளைப் பெறவேதான் தூண்டிடுவார்.

உணர்வுகளைத் தூண்டுவாரின் மதிமயக்கும்
..........உளிகளின்சொல் தீவலையில் அவர்வீழார்
இணங்கிடவே எதனையுமே கையாளும்
..........இவர்களுடை வலையினிலே சிக்கிடாரே
கணப்பொழுதும் மதிமயங்கிப் போகமாட்டார்
..........கவலையுடன் முன்னோக்கிச் சிந்திப்பார்
குணம்கண்டே ஒதுங்கியேயேப் போய்விடுவார்
..........கொள்கைதனில் குறியாக நின்றிடுவார்.

மாற்றங்கள் வந்துதானே ஆட்சிகளும்
..........மான்பினதாய் நல்லாட்சித் தந்திடுமாம்
ஏற்றங்கள் வேண்டுமெனில் புத்தியுடன்
..........இப்பொழுதே தீர்மானம் கொண்டிருப்பார்
சீற்றங்கள் இடையிடையே தோன்றினாலும்
..........சிறப்பைத்தான் நோக்கித்தான் சிந்திப்பார்
தூற்றிடுவார் பொருளாசைக் காட்டிவிட்டால்
..........துவண்டிடார்நல் நேர்மைதானே உயர்வென்பார்.

தரும்காசு அவர்விதையாம் தவறாகத்
..........தருணத்தில் பலகோடிச் சுருட்டிடவே
ஒருநாளின் பசிப்போக்கும் கையூட்டு- ச்சீ !
..........ஒருபோதும் மேன்மக்கள் விளைபோகார்
வரும்நாளில் நம்வாழ்வு சிறப்பிடவே
..........வசந்தங்கள் நம்நாட்டில் பெருகிடவே
ஒருநேரம் கையூட்டு தரவந்தால்
..........ஓட்டிடுவார் கைப்பேசிச் சுழற்றிவிட்டே !

நபிதாஸ்
அரையடிக்கு காய் காய் காய் ஆசிரிய விருத்தம்.

Friday, March 21, 2014

முன்மாதிரியாய் வாழ்ந்திடு !

நல்லவனாக வாழ வேண்டும்
நாம் மட்டும் அல்ல...
எல்லோரும் விரும்பும் ஒன்று.
என்றாலும் வாழ்வில் அவ்வாறில்லை !
அல்லும் பகலும் நற்போதனைகள்
அயராது கேட்டுமே சறுக்கல்கள் !
சொல்லும்படி செயல் இருக்கனும்
சொற்பொழிவில் மட்டும் உள்ளவைகள்.

நல்லவன் தனக்கு நல்லவன்
நம்மனம் காட்டும் இலக்கணம்.
பொல்லாத வழிகளும் காட்டிடும்
புதுமைகளென கெடுத்தும் விடும்
இல்லாத நியதியும் உண்டாக்கும்
இதுதான் சரியென வாதிடும்
கல்லாமை என்றாலும் அல்ல
கல்லாதோர் காட்டியதே வாழ்வு.

என்னதான் வழிகள் என்றால் ?
எத்தனையோ வழிகளும் உண்டே.
உன்மனம் ஏற்றுத்தான் செல்லும்
ஒருபோதும் விட்டிடாது சுயநலம்.
அன்புகள் அயராது பேசிடும்.
அதனை தான்மட்டும் மறந்திடும் !
தன்னிலே மாற்றம் கொண்டால்
தவங்களும் ஏற்றம் பெறுமே.

தங்கமும் தீட்டிட மின்னும்
தவறாது தினம் நினைக்கணும்.
"எங்கும் உள்ளவைகள் தன்போலாம்
ஏற்றே தன்னிலே காணவேண்டும்."
பொங்கிடும் பாசமும் நேசமும்
போய்விடும் வேசமும் துவேசமும்
உங்களின் உள்ளேயிது பதியனும்
உண்மையிதனை உடனே பற்றனும்.

ஓருயிர் ஓருடல் என்றின்
ஒதுக்கங்கள் நீக்கிடத்தான் வேண்டும்
ஆருயிர் நண்பனும் அன்றுதான்
அசலான நண்பனும் ஆவான்
ஈருயிர் என்பதெல்லாம் உண்டே
இயக்கங்கள் தன்னிலே நிகழ்ந்திடத்தான்.
மாவுயிர் அடைந்திடல் வேண்டும்
மதிதனில் மாறுதல் கொண்டே.

ஓதியே ஓர்மையில் வந்தாலும்
உளத்தூய்மையுடன் "ஓருமையே" வேண்டுமே.
நீதிகள் சுயநலம் இன்றியே
நேர்மை வழிதனை காட்டிடுமே.
மாதிரிகள் வேண்டுமெனில் முன்மாதிரியாய்
முன்னரே வாழ்ந்தும் தந்திட்டனரே
காதிரும் கவனமாய் பற்றியே
காலனையே வென்றே காட்டினரே

எத்தனைத்தான் போதனைகள் எழுதினாலும்
எப்படித்தான் உண்மைகளைக் காட்டினாலும்
அத்தனையும் நன்மைகள் தரா !
அழுக்குகள் உள்ளத்தில் அகலாவிடின்.
சித்தத்தில் நல்முன்மாதிரியாய் தனையிருத்தி
சிந்தித்து வாழ்ந்து காட்டு
மொத்தத்தில் எங்கும் நிலவிடும்
முதிர்ந்த வாழ்வியல் நன்றே.

உன்னை மற்றவர் உற்றவர்
ஊக்கமுடன் உறுதியாய் பின்பற்ற
தன்னையே தகைமைமிகு முன்மாதிரியாய்
தறித்தே வாழ்ந்தே காட்டிடு.
சொன்னவர் நல்ல வழிகளையும்
சுகமாக ஏற்றேதான் வாழ்ந்திடுவாய்
இன்னும் ஏன் தாமதம் ?
இகத்தினை மாற்றியே அமைத்திடு.

நபிதாஸ்

Thursday, March 20, 2014

மறைந்து வரும் சிட்டு !?

இப்போது சிட்டுக் குருவிகளைக் காண்பது என்பது மிகவும் அபூர்வம்.. சிட்டுக்குருவி இனத்தைக் காத்து முன் போல மீண்டும் வானில் வட்டமிட வைக்க விட பல முயற்சிகள் நடந்து வருகிறது.

ஆண்டுதோறும் மார்ச் 20ம் தேதி உலக சிட்டு குருவிகள் தினமாக கடைப் பிடிக்கப்படுகிறது. அழிந்து வரும் சிட்டு குருவி இனத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. குருவிகளில் சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி, கருங்குருவி, படை குருவி போன்ற பல்வேறு வகைகள் உள்ளன. குருவிகளின் அழிவிற்கு தானிய உணவு பற்றாக்குறை மற்றும் பயிர்களை காப்பாற்ற பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் காரணமாகும்.இன்று வீடு கட்டுவதற்காக வயல் வெளிகள், வனங்களை அழித்து விட்டோம். இதனால் குருவிகள் கூடு கட்ட இடமின்றி போய் விட்டது. உலகம் முழுவதும் வெப்ப மண்டலமாக மாறியதாலும், செல்போன் டவர்களில் எழும் கதிர்வீச்சாலும் குருவிகளுடன் சேர்த்து, 226 பறவையினங்களும் அழிந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், சிட்டுக்குருவியை மாநிலப் பறவையாக அறிவித்தார். மேலும் அதனை காப்பாற்றும் விதமாக  பள்ளிகளில் வைக்க ப்ரத்யேகமாக வடிவமைக்கப் பட்டக் கூடுகளை (கம்பங்களில் மேல் வைக்கப்படும் வகையில்) அமைத்தார்.  தவிர, அங்கு  170 குருவிக் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன (இந்தியாவிலேயே டெல்லி நகரில் தான் இதன் எண்ணிக்கை அதிகம்).

மேலும் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், உடன்குடி சந்தையடியூரைச் சேர்ந்தவர் கோவில்பிச்சை. இவரது மகன் ஜேசுராஜ்(வயது 21). இவரது தங்கை தனீஷ்(வயது 18). கல்லூரியில் பயிலும் இருவருக்கும் உயிரினங்கள், பறவைகள் மீது மிகுந்த பிரியம் கொண்டவர்கள்.

தற்சமயம் அழிந்து கொண்டிருக்கும் உயிரினமான சிட்டுக்குருவிகளை அழிவின் விளிம்பில் இருந்து மீட்க இருவரும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இதற்காகவே அண்ணன்–தங்கை இருவரும் கல்லூரியில் விலங்கியல் பாட பிரிவை தேர்ந்தெடுத்து படித்து வருகின்றனர்.

மேலும் மார்ச் 20–ந்தேதி சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி இவர்கள் இருவரும் சிட்டுக்குருவிக்கென கூடுகள் தயாரித்து இலவசமாக வீடுகள், கடைகளுக்கு கொடுத்து வருகின்றனர்.

இது பற்றி ஜேசுராஜ், தனீஷ் இருவரும் கூறும் போது, 15 வருடங்களுக்கு முன்பு வீடுகள் பெரும்பாலும் ஓடுகள் வைத்து கட்டப்பட்டிருக்கும். மேலும் அதிக அளவில் மக்கள் கிணற்று நீரை பயன்படுத்தியதால் கிணறுகள் அதிகமாக இருக்கும். தற்காலத்தில் வீடுகள் அனைத்தும் கான்கிரீட் வீடுகளாகவும், கிணறு என்பது இல்லாமலும் போய் விட்டது. இதனால் சிட்டுக்குருவிகள் வாழ்விடம் இழந்து தவிப்பதை நாங்கள் இருவரும் உணர்ந்தோம்.

சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடத்தை மீட்டுக் கொடுக்க செயல்படுவது என சபதம் செய்தோம். அதன்படி 100க்கும் மேற்பட்ட செயற்கையான கூடுகளை நாங்கள் உருவாக்கினோம். இவற்றை அக்கம் பக்கம் வீடுகள், கடைகளுக்கு கொடுத்து சிட்டுக்குருவி பற்றிய விழிப்புணர்வும், அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கி வருகிறோம். உயிரினங்களின் வாழ்விடத்தை மீட்டுக்கொடுப்பதில் உயிர் உள்ள வரை போராடுவோம் என்றனர்.

இப்படிச் சிட்டுக்குருவி வாழ்வதற்கு ஏதுவாக இருந்த நடைமுறைகள் அனைத்தும் தழைகீழாக மாறியதால், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நகர பகுதிகளில் குறைந்து விட்டது. ஆனால், அந்த இனமே அழிவுக்கு சென்றுவிட்டதாக கூறும் எந்த ஆதாரமும் இல்லை.

ஆகவே நமதூரிலும், நமதூரைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் உள்ள  ஒவ்வொரு பள்ளி/கல்லூரி மாணவர்களும் ஒன்றிணைந்து சிட்டுக்குருவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, ஜேசுராஜ், தனிஷ் போன்று, நம் பகுதிகளிலும் சிட்டுக்குருவி கூடுகள் அமைத்து  சிட்டுக்குருவியை காப்பாற்றும் முயற்சியில் களமிறங்கலாம்.

உங்கள் சகோதரன்
ஜாஃபர்

Sunday, March 16, 2014

கவனம் தேர்தல் !?

கச்சேரிகள் ஆரம்பம்
கண்டபடி வாக்குறுதிகள் பளிச்சிடும்
மிச்சமில்லாமல் சிந்திப்பார்
மீறும் எதனையும் செய்திடுவார்
துச்சமாகக் கருதிடுவார்
துணிவுடன் தர்மத்தை மிதித்திடுவார்
அச்சம் கொள்ளார்
அரியணை ஏறிடத் துடிப்பார்.

ஆயுதங்கள் அனைத்தையும்
அளவின்றி பயன்படுத்தத் தீட்டுவார்
பாயும் சட்டங்கள்
பலப்பலப்பாய் பலபக்கம் மின்னும்
சாயும் நீதி
சல்லடைக் கொண்டும் தேடும்
நீயும் நானும்
நேர்மை பேசிப் பாதிப்போம்

மதமும் சதியும்
மனிதனைப் பிளந்து வாக்காக
எதனையும் செய்வார்
எப்படியும் வெல்லுவதே நோக்கம்
பதமாகநாம் பொறுமையில்
பவ்வியமாகத் தேர்தல் கடக்கவேண்டும்
அதர்மம் இப்படி
அடிக்கடி குறிக்கிடும் அசையாதே.

அனிச்சையான நம்முணர்வில்
அனைவரும் அண்ணன் தம்பியே
மனிதனாய் வாழ்வது
மண்ணில் பெரும் சவால்தான்
புனிதனாய் வென்றிட
புரிந்திடு அனைவரும் தான்போல்
இனியும் வேற்றுமை
எப்போதும் கொண்டிட வேண்டாமே.

அவன் குருதி
அதனைக் காண வலிக்கும்
எவனும் தூண்டாத
என்னிலும் உன்னிலும் ஆனவுணர்வு
சவம் ஆனதும்
சகிப்புகள் இயல்பாய் தோன்றும்
கவனம் மனிதா !
கடத்திவிடு காழ்ப்புணர்வுத் தேர்தல் !

நபிதாஸ்

Friday, March 7, 2014

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் [ காணொளி இணைப்பு ] !

முடியாது போகும் என்று முயல்வதை விடுதல் கண்டு
முடியாத செயலின் எல்லை முற்றிலும் இல்லை இல்லை
விடியாத இரவும் இல்லை விலக்கிடுச் சோம்பல் தொல்லை
தடைகள்தான் வந்தும் தூண்டும் தடகளம் போலத் தாண்டு!

இல்லாமல் போகா வாய்ப்பு இதுவெலாம் மனத்தின் ஏய்ப்பு
புல்லான போதும் கையில் புடமிடும் தங்கம் செய்யும்
வில்லான உறுதி மட்டும் விரைவுடன் முடிவை எட்டும்
சொல்லோடு செயலும் நின்றுச் சோம்பலும் ஒழியும் இன்று!

மல்லாந்துப் படுத்து வீணே மதியையும் சிதைத்தல் தானே?
கல்லாத போழ்தும் நெஞ்சில் காட்டிடும் அக்னிக் குஞ்சாய்ச்
சொல்லாலும் விளங்காச் சிந்தைச் சுடர்விடப் பொறியின் விந்தை
நில்லாமல் உழைக்கும் மெய்யும் நிதர்சனம் இதுவே மெய்யாம்!

உன்மனத்தில்  தோன்றிச் சுட்டும் உதிப்பினால் வெற்றிக் கிட்டும்
பன்முகத்தில் உன்றன் பார்வைப் பளிச்சிடத் தோன்றும் தீர்வே
நன்மையைநீ விரும்பிச் சேர்த்தால் நலமுடன் திரும்பிப் பார்த்தால்
பன்மையில்காண் வழிகள் ஆங்குப் பயனுறச் செழிக்கும் ஓங்கி!

வரிகளின் வரம்பு: பதினாறு அடிகள் மட்டும்
யாப்பிலக்கணம்:
காய்+மா+தேமா(அரையடிக்கு)
+விளம்+மா+தேமா(அரையடிக்கு)

பாடலாசிரியர்: அதிரை கவியன்பன் கலாம் (அபுதபி)
Lyrics: Adirai Kavianban KALAM (Abu Dhabi)

பாடியவர்: அதிரை  பாடகர் ஜஃபருல்லாஹ் (ஜித்தாஹ்)
Singer: Adirai Ilam murasu JAFARULLAH (Jeddah)

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு :
இந்தக் கவிதை நேற்று [ 06-03-2014 ] இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் அதிரை பாடகர் ஜாஃபர் அவர்களின் இனிய குரலோடு ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

Monday, March 3, 2014

வேண்டாம் எழுபது இலட்சம் !?

அறிவிப்புக் கண்டேன் அழுதேன் - இன்று
..........அரசியல் செல்லும் வழிகள் பழுதே
அறிந்துதானே திட்டமும் தீட்டுகிறார் - அவலம்
.........அழிவுகள் வாழ வகுத்திட்டே காட்டுகிறார்

வருமிந்த பாராளு மன்றம் - தேர்தல்
..........வசதியில் வேட்பாளர் வீண்செலவு ஒன்றாம்
வருமானம் மாதாமா தத்தில் - கிடைப்பதோ
..........வசதிகளும் ஐம்பது ஆயிரம் நித்தம்

எழுநூறு ஆயிரம் கொண்டாம் - ஆட்சியர்
..........இவர்கள் செலவுகள் செய்திடிவீர் என்றார்
பழுதாகிப் போகியே மிஞ்சும் - இதனால்
..........பைகளில் கொட்டிடும் தீதான (இ)லஞ்சம்

மம்தா ஒருவர் எதிர்திட்டார் - மற்றவர்
..........மாற்றத்தை ஏற்றே மகிழ்வில் பதிங்கிட்டார்
சும்மா சமுதாயம் போகலாமோ - தீமைகள்
..........சூழ்ந்திட்டே நம்மை அழிக்காமல் போகாதே

அறிவோம் அதைவிட ஆகும் - நடைமுறையில்
..........அனுமதி அற்றச் செலவும் மிகுதம்
அறிந்தத் தவறுகள் நீக்கனும் - சான்றோர்
..........அறிவுடன் சட்டமும் தந்திட்டே காக்கனும்

முகமுடன் கொள்கையும் சின்னமும் - விளம்பரம்
..........முறையுடன் செய்ய பலலட்சம் என்பதேன் ?
அகமும் அறிவும் தெரிந்திடல் - கடினமாம்
..........அதனால் எதற்குப் பலலட்சம் புரிந்திடேன்

தொடக்கம் படியே முடிவு - அதனால்
.......... தொடக்கத்தில் நேர்வழிக் காட்டேன் முடிவாய்
மடக்க அடிபணிய வேண்டாம் - நிமிர்ந்தே
..........மாண்புடன் ஆழுமை தந்திட வேண்டும்

முதல்குற்றம் ஆனால் முடிவிலுமே !  - எப்படி ?
..........முன்னேறும் நம்நாடு வேண்டும் படிப்பினையே
விதவிதமா நல்வழிகள் உண்டு - அதனால்
..........விட்டிடுவீர் இந்த இழிவழிகள் கண்டு

குழுவுகள் திட்டமிட வேண்டும் - இனிமேல்
..........குறைகள் கலைந்தே வகுத்திடுவார் காண்போம்
எழுதிடும் சொந்தக் கவியிலும் - தூண்டிடும்
..........ஏற்றமான சிந்தனை இந்தப் புவியிலும்

தொலைக்காட்சி வானொலி இப்படியும் - இன்னும்
..........தோன்றிடு ஒர்மேடைத் தந்திடு அப்படியே
விலைகுறைந்த இவ்வழிகள் கொண்டிடு - அனைவரும்
..........விரைந்தே வாக்களிப்பார் வெற்றிகள் தந்திடு

குறைமதியில் கூறவில்லை ஆழப்பார் - சீர்திருத்தம்
..........குறிக்கோள் மனதினில் உள்ளதில் தேடிப்பார்
நிறைவுகளும் எல்லாத் துறைகளிலும் - என்னிலும்
..........நின்னிலும் எல்லோரில் வந்திடும் துரையேக்கேள்

ஆளும் அடாவடிகள் வேண்டாம் - அழிவுகள்
..........அள்ளித்தான் தந்திடும் வல்லோர்க்கும் என்றும்
நாளும் இதனில் கவனித்தே - மக்களுக்கு
..........நல்லது செய்திட ஆளக் கவனிப்பீர்

வீண்விறையம் செய்யாமல் நம்கலாம் - ஜனாதிபதி
..........வேலையும் சீர்மிகச் செய்திட்டார் நம்மிலாம்
காண்போமே அவ்விதமே நம்மிலேயும் - உயர்த்துவோம்
..........கவனமுடன் நம்நாட்டை வல்லரசாய் இம்மண்ணில்

நபிதாஸ்

Saturday, March 1, 2014

போலிகள் [ செயலில் போலி !? ]

அறிவுத்தேன் II
இதற்குமுன் கருத்துப் போலிகள் பார்த்தோம். அதிலிருந்து எவ்வாறு தெளிவு பெறுவது என்பதை இறுதியில் பார்ப்போம்.

ஒவ்வொருவருக்கும் தனித்தன்மைகள் உண்டு. தன் தன்மைப்படித்தான் ஒவ்வொருவரும் வாழ வேண்டும். அதைவிடுத்து மற்றவர்போல் வாழ முயற்சிப்பது போலி வாழ்க்கையாகும்.

நல்லவர் ஒருவர் வாழ்ந்தது போல் நாம் வாழ வேண்டும் என்றால் அது போலி என்றாகிவிடாது. அந்நல்லவர் வாழ்ந்து காட்டிய பிரகாரம் வாழ்தல் என்பது அவர்களின் சுய நிலை புரிந்து அவர்களின் நற்குணங்களை தன்குனத்திலாகி, அக்குனங்களை தன் வாழ்வியலில், தன் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப செயல்படுத்த வேண்டும். இதனை பின்பற்றுதல் அல்லது வழிநடத்தல் அல்லது வழிப்படுதல் என்று கூறலாம்.

பொதுவாக உதவி செய்தல் என்பது நல்ல குணம். அதனால் திருடன் ஒருவன் திருடும்போது அவனுக்கு உதவி செய்கிறோம் என்று உதவி செய்தால் அவர் உதவி செய்தல் என்றதின் நோக்கத்தின் பொருளைப் புரியாமல் செயல் படுகிறார் என்றுதான் பொருள். அதுவும் போலியே.

மனித வாழ்வில் சில அனுஷ்ட்டானங்கள் என்ற பழக்கவழக்கங்கள் ஒவ்வொரு மத/மார்க்கங்களில் உண்டு. அது ஏன் செய்கிறோம் என்று புரியாமல் தவறாது அதனைச் செய்து வருவார்கள்.

சில உண்மைகளை சொன்னால் பக்குவமின்மை காரணமாக புரியாது. அதனால் "இதை செய்து வா", என்று முன்னோர்கள் கடமைப் படுத்தி வகுத்துத் தந்து சென்றிருக்கின்றனர். செய்யாவிட்டால் தெய்வக் குற்றமாகவும் சொல்லப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு மனிதரும் தன் அறிவு படித்தரத்தில் வேறுபட்டே இருப்பார்கள். என்று ? அவர்களுக்கு அறிவுத் தெளிவு ஏற்படுமோ அன்று, எதற்காக இந்த அனுஷ்டானம் என்ற இந்தப் பழக்கவழக்கம் என்று புரிவார்கள்.

தெளிவு ஏற்படும் முன் அப்பழக்க வழக்கங்கள் அதனை அவர்கள் அறிவைப் பயன்படுத்தி சிந்தித்து தவறு என்றும் தீர்ப்பும் கூறிவிடுவார்கள். அதனால் குழப்பங்களும், பிளவுகளும்  சமூகத்தில் உண்டாகும், ஒற்றுமை, அமைதி குழையும்.

மனிதன் இப்பூமியில் தோன்றி 6000+ வருடங்களுக்கு மேல் ஆகிருக்கின்றது. மனிதன் எந்த உணவு சாப்பிட தகுந்த நல்ல உணவு என்பதை அறிந்துக் கொள்வதற்கே பலதை சாப்பிட்டு இறந்தவர்களும் பல ஆயிரம் இருக்கலாம்.

நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்து அனுபவித்து, சிறந்த நல்ல உண்மைகளை நமக்கு சேகரித்து தந்து சென்றிருக்கின்றனர். அதனில் நாம் நம் நுண்ணறிவுடன் விளங்க இயலாதும், வளரும் வயதில் அது சரி, இது தவறு என்று சொல்வதும் எந்த வகையிலும் நியாயமும், தருமமும் ஆகாது.

இறைப்பொருத்தம் அடைவது உச்சம் என்றால் அவ்வாறு பல ஆயிரம் மனித புனிதர்கள் அந்நிலை அடைந்து வாழ்ந்துள்ளனர். அவர்கள் விட்டுச் சென்றதை இன்று புரிவதற்கே பலப்பிரிவுகளாக புரிந்த நிலைக்கேற்ப நிற்கின்றோம். அவர்களின் அறிந்தவைகலையே பல்கலைகழகம் மூலம் பயில்கின்றோம்.
பூமி தட்டை என்று வாழ்ந்த பின் அது உருண்டை என்று நிருபித்த காலத்தில் மட்டும்மல்லாது, அண்மித்த கிரகங்களையும் இயந்திரங்களைக் கொண்டு ஆராய்கிறோம், அறிகிறோம். வகுத்துத் தந்த வழிமுறைகளில் நம் அறிவுக்கு புரியவில்லை என்பதற்காக, அதனில் தவறு காணும் நிலை மாறி இன்னும் அறிய வேண்டிய புதுமைகளைக் காண்பது சிறப்பு.

ஒருவருடைய செயல்கள் சிலருக்கு அறியாமையாகவும் அல்லது மூட நம்பிக்கையாகவும் தெரியலாம். இதில் யார் மூட நம்பிக்கையில் இருக்கின்றார் என்பது அதன் விளைவில்தான் தெரியும். எனவே அடுத்தவர் இவர் மூட நம்பிக்கையில் இருக்கின்றார் என்று கூறுதல் அறிவுடமையாகாது. தான் அறிந்ததை சொல்லலாம், அதனால் அதனை அடுத்தவர் வாழ்வில் புகுத்துதல் வன்மம் ஆகும். இதனையே அன்றே "அவரவர் வழிகள் அவரவருக்கு, எனேவ மற்றவர் வழியில் குறுக்கிடாதே", என்று அறிவின் தோற்றமான அண்ணல் பெருமான்(ஸல்) வழிகாட்டியுள்ளனர்.

மனிதன் தானும் தன் சக மனிதர்களும் நிம்மதியாக வாழ்தல் ஒன்றை மையமாகக் கொண்டு நம் சிந்தனையைச் செலுத்த வேண்டும். அவ்வாறு அல்லாமல் நல்லது செய்கிறேன் அல்லது நல்வழி காட்டுகிறேன் என்று மனித மன நிம்மதியைக் குழைப்பது, தான் அறிந்த எந்த அறிவானச் செயல் என்றாலும், அது சரியாகாது. இது செயல் போலி என்று சொன்னால் மிகையாகாது.

நபிதாஸ்
Pro Blogger Tricks

Followers