.

Pages

Sunday, September 28, 2014

[ 3 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

தேடித்தான் தந்தாரே தேவநேசர் "நல்லடிமை" 5
ஆடித்தான் பாரேன் அதுபோன்றே - ஈடில்லா
ஆனந்தம் உண்டாம் அதனிலே மாறாக
ஈனமாமே வாழ இழிவு.

இழிவல்ல நல்லடிமை இல்வாழ்வில் என்றும் 6
அழித்திட்டே உன்னாசை ஆங்கே - விழிக்கச்
செழிப்பான வாழ்வுகள் சேர்ந்திடுமே வல்லோன்
வழியாக நிற்பதே வாழ்வு.

வாழ்வுகள் எல்லாம் வழிப்படும் வாழ்ந்திடத் 7
தாழ்மையே பூரணத் தன்னகமாய் - வாழ்ந்த
வழிதனை நீபற்ற வள்ளல் பெருமான்
வழியன்றி வேறில்லை வாழு

வாழவேண்டும் நாமற்ற வண்ணம் தலைவனை 8
ஆழமாகக் கொண்டே அகத்திலே - தாழக்
கிடப்பினும் சிங்கத்தின் கீர்த்திபோல் மங்கா
இடத்திலே நின்னை இடு.
தொடரும்...
நபிதாஸ்

Monday, September 22, 2014

[ 12 ] மகவே கேள் : சுயநலம் !

சுயநலம் என்ற சூழலில் சிக்கி கொள்ளாதே. நாகரீகம் அடைந்த வாழ்க்கையில் சுயநலமான செயல் அருவருக்கத்தக்க செயலாக கருதப்பட்டாலும் தனி மனித வாழ்வில் அவ்வப்போது எட்டி பார்க்கத்தான் செய்கிறது.

சில வரிகளில் ஒரு புது கவிதை...

அன்று திருவிழா
அப்பா வாங்கி வந்தார்
அதிக மான பண்டங்கள்
அவ்வளவும் எனக்கே என்றான்
ஐந்து வயது பாலகன்
அம்மா சிரித்தாள்

அப்பாவின் இறந்த நாள்
ஐம்பது வயது மகன்
அத்தனை சொத்துக்களும் எனக்கே என்றான்
அம்மா அழுதாள்

ஆம், நன்கு புரிந்து கொள் உனது உழைப்பால் பிறர் நலம் பெற நினைத்தால் உன் வாழ்வு சிறக்கும். அதே சமயம் உன் வாழ்வு சிறக்க பிறர் நலம் பாராமல் உனக்கு மட்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் அது உன்னை பிறரிடம் இருந்து பிரித்து காட்டும். அது மட்டுமன்றி, உனக்கு உள்ள உறவின் வட்டம் மிக சுருங்கிவிடும்.

தன்னலம் பாராமல் செயல் படு ! உன் நலம் தானாக தேடி வரும் !!
வணிகம், ஒரு சேவை அடிப்படையிலேயே அமைந்துள்ளது. அரசியல், ஒரு சேவை அடிப்படையிலே  அமைந்துள்ளது. சுயநலம் என்ற வட்டம் உன் கழுத்தை இறுக்கி விடும். கவனம்...

நன்றி ! மீண்டும் வேறு ஒரு தலைப்போடு சந்திக்கிறேன்...

முற்றும்
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Saturday, September 20, 2014

[ 2 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

தனக்காக வாழாமல் தன்தலைவன் ஆன 1
உனக்காக என்று உணர்ந்தால் - எனக்காக
எல்லாம் இருப்பதை என்கண்ணால் காணுகின்ற
நல்லார் நிலையினில் நான்.

நானென்ற எண்ணத்தை நாளும் அவனாகத் 2
தானென்ற நற்றளத்தில் சார்ந்திட - ஏனென்ற
கேள்விகளும் எப்பொழுதும் கேட்க எழாதாமே
ஆள்கின்ற உச்சம் அது.

அதுயிது வென்பதெல்லாம் ஆங்கில்லை என்பாய் 3
எதுவது வென்பதை ஏற்றால் - இதுஅது
என்றே தெளிந்திட ஏற்பாயே நல்லடிமை
நன்றே அதனிலே நாடு.

நாடிடும் நாட்டங்கள் நன்றே நடந்திடும் 4
தேடிடும் யாவுமே தென்படும் - கூடிடும்
வித்தைப் புரிந்தால் விளையும் நலன்களே
சொத்தில் சிறந்தயிதைத் தேடு.
தொடரும்...
நபிதாஸ்

Sunday, September 14, 2014

பாவம் தந்தை !

கடை வீதி சென்று
கனி பல வாங்கிவந்து
இல்லம் வந்தடைந்து
இல்லத்தாளிடம் கொடுத்திடுவார்

குழந்தைக்கு தாயவளும்
கனிவாக புகட்டிடுவாள்
தூரத்தே அமர்ந்திருக்கும்
அப்பாவை பார்த்து அதும்

உன்னோடு 'கா' என கூறும்
பாவம் அப்பா பரிதவிப்பார்
பள்ளி பருவம்
வந்த பின்னர்
பக்குவமாய் பாடம் சொல்லி
தந்திடவே முனையும்போது

பிள்ளையின் பார்வையது
வேறுபக்கம் திரும்பிடவே
அப்பாவும் அதட்டிடுவார்
பட்டென ஓடிவந்து
தாயவளும் பிள்ளையை
அணைத்தவாறு படித்தது போதும்
நாளை படிதிடுவான் என்பாள்

பருவங்கள் தப்பிடாமல்
படிப்பிக்க எண்ணும் தந்தை
பிள்ளையின் பார்வை தன்னில்
தந்தையவன் எதிரியாக
தெரியும் போது
பாவமடா தந்தையுமே

காலங்கள் கடந்த பின்னர்
தந்தை தாத்தாவாய் போகும் போது
தன் பிள்ளை செய்யும் தொல்லை கண்டு
இப்படித்தான் என்னையுமே அப்பாவும்
வளர்த்தாரோ
தூரத்தே நின்றிருந்த அப்பா மேல்
முதன் முதலாய் பரிவு வந்து
பாவம் தந்தை என
என் மனமும் சொல்லியது
ஆம், உண்மையிலே
பாவமடா தந்தையுமே

இது பெண் ஆதிக்க காலம்
பாசத்தால் பின்னிய வலையில்
சிக்கியது என்னவோ ஆண் ஆன்மாவே
( இன்னும் சொல்வேன்...)
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Wednesday, September 10, 2014

[ 1 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

அன்புடையீர், 
அவன் அடிமை (வெண்பா அந்தாதி) நூறு பாடல் ஒன்று எழுத விரும்பி முதற்கண் காணிக்கை. கடவுள் புகழ், கடவுள் வணக்கம், கடவுள் வாழ்த்து, என்பன தொடரின் தொடக்கமாக எழுதியத்தைப் பதிகிறேன்.  

நபிதாஸ்
காணிக்கை :
ஈடில்லா உண்மைதந்தே ஏற்றம் திறந்திட
நாடியோர் காப்பாற்றும் நாயகமாம் - வாடியஎம்
வாழ்விலே உச்ச வழிதிறந்த எம்குருக்கே
தாழ்பனிந்தக் காணிக்கைச் சாறு.

கடவுள் புகழ்:
எங்கும் நிறைந்த எதுவுமாகா ரூபமில்லா
தங்கும் அனைத்தாய்த் தனியோனே - இங்கேயே
உன்னை எனதின் உணர்விலே மையமாகத்
தன்னைக் கொடுத்தாய் சமத்து.

கடவுள் வணக்கம்:
இல்லா ததில்லா திருக்கும் நிறையோனைச்
சொல்லாதே நீஎதையும் சொல்லிலவன் - எல்லாமே
ஒன்றின் உருவாய் உணர்ந்திட்டே வாழ்ந்திட
உன்னதமாம் நல்வணக்கம் ஒப்பு.

கடவுள் வாழ்த்து:
என்னில் கொடுத்தேநான் என்னை அறியவே
உன்னைப் படைத்தே உவந்தேனே - உன்னிலே
தன்னை யுணர்ந்தறிந்தே தன்னைத் தெளிந்ததால்
உன்னைநான் வாழ்த்திட ஓங்கு.
(தொடரும்)
நபிதாஸ்

Monday, September 1, 2014

பதர்

பதர்கள் பல உண்டு
படிப்பினை அதிலுண்டு
நிதர்சன வாழ்வில்
நிதம்நாம் காண்கின்றோம்

நெல்மனியில் பதர்
நீயும்நானும் காண்பது
சொல்லில் பதர்
சொறிகிறோம் நிதம்

செயலில் பதர்
செய்வதே தினம்
இயல்பாய் நாம்மில்
இருக்கும் குணம்

எண்ணத்தில் பதர்
எக்கச்சக்கம் எப்போதும்
உண்ணுவதில் பதர்
உயிரழிக்கும் உரம்

மனிதரில் பதர்
மதியுடன் உணர்
புனிதராய் திகழ
புத்தியை மாற்று

உயிரில்லா நெற்கோலம்
உற்பத்தி ஆகிவிடும்
பயிராக முடியாது
படிப்பினையும் உண்டு

எண்ணத்தின் உயிர்
ஏற்றமிகு நம்பிக்கை
வண்ணமாய் வடித்தே
வாழ்விலே மிளிர்

நம்பிக்கை உயிர்
நன்கே விதைத்தே
தெம்பாக வாழத்
தெரிந்திட நம்பு

உதரிடும் நம்பிக்கை
உண்டாக்கும் பதர்
பதரில்லா எண்ணம்
படைத்திடு  நித்தம்

நம்பிக்கை எண்ணம்
நாடியதை நிகழ்த்தும்
நம்பாதோர் திண்ணம்
நம்மின்பதர் தோற்றம்

நபிதாஸ்
Pro Blogger Tricks

Followers