.

Pages

Friday, May 31, 2013

பணம் படுத்தும் பாடு

உழைப்பென்னும்  நான்கெழுத்துத்  தாயின்  சேயே !
        ****உலகமெலா மொருகுடையில் ஆளும் நீயே
மழைத்துளிபோல் உயிர்நாடி யாகிப் போனாய்
       ***மழலைகளாய்ச் சில்லறைக ளீன்று போட்டாய்
தழைத்தோங்கும் செல்வத்தின் ஆணி வேராய்த்
      ****தான்மட்டும் அடையாளச் சின்ன மானாய்
பிழைப்போரும் உன்பின்னா லோட  நாட்டம்
    ****பிச்சையெடுப் போருமுன்றன்  மீதே  நோட்டம்

பொருளாதா ரப்போட்டி  நீண்ட நாளாய்ப்
     ****போர்களையும் தூண்டிவிடும் தூண்டு கோலாய்
இருளான நிலைமைக்கு மாக்கி விட்டாய்
     ****இறைபக்தி எண்ணங்கள் போக்கி விட்டாய்
வருமானம் ஈட்டுதலை வெறியா யாக்கி
     ****வறியோரைக் கொல்லுதலே குறியா  யாக்கி
ஒருமான  மில்லாத கூட்டம் சேர்த்தாய்
    ****ஒழுக்கத்தைப் புதைத்திடவே செய்தாய்  நீயே

விரும்பிப்போ னாலும்நீ எம்மை விட்டு
    ****விலகித்தான் போகின்றாய்; விலகிப் போனால்
விரும்பித்தான் வருகின்றாய் உன்றன் மாய
    ****வித்தைகளை எங்கிருந்து கற்றாய் நீயும் ?
நிரம்பத்தான் ஆசையுடை உடுத்திக் கொண்டாய்
    ****நிம்மதியை உளம்விட்டே எடுத்து விட்டாய்
வரம்பில்லாத் தேவைகளைக் காட்டு கின்றாய்
   ***வங்கியின்பால் எங்களையும் ஓட்டு கின்றாய்

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 30-05-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் ஒலிப்பேழை இதோ...

விதி

நினைப்பு – இது
அமைதியில்
அசைபோடும்
நடந்தவைகள்.

சிந்தனை – இது
அமைதியில்
அசைபோடும்
விரும்புபவைகள்.

நடந்தவைகள்
விரும்புபவைகள் – இதன்
நாட்டத்தில்
நடப்பவைகள்
நிகழ்பவைகள்.

நடந்தவைகள்
விரும்புபவைகள்
நிகழ்பவைகள்
இவைகள்
வாழ்வுகள்.

அவனின்றி
ஆற்றல்கள்
இல்லை!...
அதில்
சர்சைகள்
வேண்டாம்!

எங்கோ
யாரோ
எழுதவில்லை!

உன்னில்
உன்னுள்
உன்னால்
அவன்
எழுதுகிறான்.

நடப்பவை  
விதி
நடத்துனர்
மதி.

இனியென்ன!
இனிப்பும், கசப்பும்
உன்கையில்!

நடத்திடு!
நலமுடன்
வாழ்வை.
நபிதாஸ்

Thursday, May 30, 2013

வாழப் பரிந்துரைக்கும் வண்ணக் கவிதைகள்

கவிதை

உச்சரிக்கும் ஒவ்வொருமுறையுமே
உள்ளக் கிளைகளிலிருந்து
ஆயிரமாயிரம் பட்டாம் பூச்சிகள்
சிறகடித்துப் பறக்கின்றன

உள்ளுக்குள் வாழும் கல்லுக்கும்
... சிறகுகள் முளைத்து
உயரே உயரே
எழுந்து எழுந்து பறக்கின்றது

எந்தப் புண்ணியவான் சூட்டியது
இத்தனை அழகுப் பெயரை

கவிதை

உணர்வுகளை
மொழியாய் மொழி பெயர்க்கும்
ஓர் அழியாக் கலை

மொழியின் உயிர்
உயிரின் மொழி

உயிர்த் துடிப்புகளை
அப்படி அப்படியே காலன் தின்னாததாய்ச்
சேமித்து வைக்கும் உயிர்ப் பெட்டகம்

தன்னுள் கிளர்ந்த உணர்வுத் தீயை
துளியும் தணியாமல்
வெள்ளைத் தாள்களில்
பற்றியெரிய வைப்பதெப்படி
என்னும் கடுந்தவிப்பில்
கவிஞன் தன்னையே செதுக்கி
உயிர்ப்பித்த தவம்

சத்திய கவிதைகளில்
சித்தம் நனையும்போது
இளமை துளிர்க்கின்றது
அந்த உயிர் நீடிக்கின்றது

கவிதை

இயந்திரங்கள் மனிதனை இயக்க
பழுதாகும் இன்றைய வாழ்வை
கருணையோடு அள்ளியணைத்துச்
சரிசெய்யும் மருத்துவம்

கற்பனையிலும்
வந்துபோகாத மனித இயல்பைக்
கர்ப்பமாய்ச் சுமந்து
மனித குலத்தின்மீது
மழையாய்ப் பொழிவிக்கும் அக்கறை மேகம்

அதிநுட்ப அறிவியல் விருத்தி
தூரங்களையெல்லாம்
சுருக்கிச் சூறையாடியபோது
கூடவே சுருங்கிப்போன
நம் மனங்களையும்
வாழ்க்கைச் சுவைகளையும்
மலர்த்தித்தரும் சந்தனக் காற்று

இறுக்கத்தின் எண்ணங்களில்
தேங்கித் தேங்கி நிரம்பி வழியும்
விரக்திக் கேள்விகளால்
வெட்டுப்படும் பந்தங்களை
ஒட்டவைக்கும் உயிர்ப் பசை

பொருள்மட்டுமே தேடும் சிறுமை வாழ்வை
ரசித்துச் சுவைத்து வாழும்
அருமை வாழ்வாக்கும் அழகு தேவதை

நாளைகளில் நம்பிக்கை இல்லாக்
கோழைகளாக்கும் இந்த நூற்றாண்டுகளின்
பிரம்மாண்டங்களில்
நால்திசை நாடுகளும்
இடுப்பில் அணுகுண்டுகளைத்
தூக்கி வைத்துக்கொண்டு நிலாச் சோறு ஊட்ட

உலகம்
ஒரு நொடியில் பொடியாகும் அபாயம்
நம் நிழலைக் கிள்ளியெறிந்துவிட்டு
அந்த இடத்தை அபகரித்த
பெருமிதத்தில் மந்தகாசிக்க

விழிகளில் நம்பிக்கை ஒளியூட்டி
நடுங்கும் கரங்களைப் பிடித்து நிறுத்தி
இயல்பு வாழ்க்கைக்குள்
இழுத்துச் செல்லும் அன்புக் கரம்

கவிதை
அன்புடன் புகாரி

Wednesday, May 29, 2013

புக்கி !? ஜாக்கி !? ஜோக்கர் !? ரம்மி !? கிரிக்கெட் சூதாடிகளே...

பணி செய்யும்
அலுவலகத்திற்கு
போடாச்சு லீவு
பள்ளி, கல்லுரிக்கு
கொடுத்தாச்சு
விடுப்பு மடல்
சொந்தபந்தங்களின்
விஷேசத்திற்கு
காட்டியாச்சு
டாடா
காரணம் கிரிக்கெட்
         
***

இரவை பகலாக்கி
பணத்தை விரையமாக்கி
கண்டுகளிக்கும்
களியாட்டம்
அதுதான்
கிரிக்கெட் எனும்
சூதாட்டம்
   
***

ஆடுகளம்
விளையாடுகளம்
ஆனது
சூதாடுகளம்
     
***

நம் நாட்டு அணி ஜெயிக்க வேண்டும், நம் மாநில அணி ஜெயிக்க வேண்டும் நமக்கு பிடித்த வீரர் கலக்க வேண்டும் என்று அப்பாவி ரசிகனின் ஆசைகள், கனவுகள், மண்ணாகிபோனது புக்கிகளால். யார் அந்த புக்கி ? சூதாட்ட கம்பெனிகளால் நியமிக்கப்பட்ட ஏஜென்ட் சொல்லும் காரியத்தை கச்சிதமாய் விளையாட்டு வீரர்களிடம் தொடர்பை ஏற்படுத்தி வீரர்கள் கேட்கும் அத்துனையும் கொடுத்து [ மது, மாது பணம்... ] வீரர்களை வளைத்துப்போடும் தந்திரகாரர்கள்தான் இந்த புக்கிகள் [ கேவலம் கெட்ட புரோக்கர்கள் ] புக்கிகளுக்கு நிறைய நடிகைகளின் தொடர்புகள் உண்டாம் !?

சமீபத்தில் சூதாட்டம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டு மூன்று விளையாடிகள் போலீசாரால் கைது செயப்பாட்டு இருக்கின்றனர்

1. ஸ்ரீசாந்த்
2. அங்கித் சவான்
3. அஜித் சந்டிலா

ஆகிய மூவர் விளையாட்டு மைதானத்தை வெளிச்சம் போட்டு காட்டி விளையாடி ஏமாற்றியவர்களை நமக்கெல்லாம் காவல் துறை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது இன்னும் எத்துனை பேர்கள் வெளிச்சத்திற்கு பின்னால் ஒழிந்து இருக்கின்றார்களோ ? அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் இந்த விளையாடிகளுக்கு பத்ம பூசனும், பத்ம விபூசனும் கொடுக்கச்சொல்லி நாமெல்லாம் சிபாரிசு செய்கின்றோம் அரசியல் வாதிகளோ MP பதவி கொடுத்து அழகு பார்க்கின்றனர் இந்த மாயை ஒழிய வேண்டும்.

Match fixing, Spot fixing, Part fixing, என்று விதவிதமாய் சூதாடுகின்றனர் மேட்ச் பிக்சிங் என்பது அன்று நடக்கும் மேட்ச்சில் யார் வெற்றி பெறுவார் என்பதை வைத்து சூதாடுவது ஒரு குழுவையே வளைத்துப்போடுவது சிரமம் என்பதால் ஓரிரு விளையாடிகளை வலைத்து போட்டு Spot fix செய்கிறார்கள் இப்பொழுது புதிதாக Part fixing  அதாவது விளையாட்டின் ஓர் பகுதியை தேர்ந்தெடுத்து சூதாடுவது சென்னையில் CBCID யினரால் 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடம் விசாரித்ததில் கிரிக்கட் சூதாட்ட புரோக்கர்கள் நானுறு கோடிக்குமேல் இலாபம் அடைந்து இருப்பதாக கண்டு பிடித்துள்ளனர்.

அந்நியனின் ஆட்டம் அந்நியனின் குறுக்கீடு அந்நிய கலாச்சாரம் உள்ளூர் விளையாட்டை புறந்தள்ளிவிட்டு அந்நிய விளையாட்டை ஆதரித்த அனைவருக்கும் ஏமாற்றம் வெட்கக்கேடு தலைகுனிவு மாட்டிக்கொண்ட விளையாடிகளுக்கு மட்டுமல்ல அந்த விளையாட்டை ஆதரித்த நமக்கும்தான் இப்பொழுது புதிய சூதாட்டம் சூதாடிகளிடம் வளம் வருகின்றது என்ன தெரியுமா ? இன்னும் எத்துனை விளையாடிகள் வலையில் மாட்டப்போகின்றனர் என்றுதான் ! பெட் கட்டிக்கொள்கிறார்கள் திருந்தாத ஜென்மங்கள்.  .

நாட்டை காட்டிக்கொடுப்பவனும் சொந்த வீட்டில் திருடுபவனும் இந்த சூதாடி விளையாடிகளும் ஒரே ஜாதிதான். சமீபத்தில் சூதாட்டத்தில் பங்கு பெற்றதாய் கைது செய்யப்பட பிரபலமானவர்கள், கிரிக்கெட் விளையாட்டோடு தொடர்புடைய பணக்காரர்கள் ஆவார். இவர்களுக்குத்தான் பணத்தின் மீது பேராசை அதை சம்பாதிக்கும் வழி பற்றி கவலைப்படாமல் மனம்போன போக்கில் செல்கிறார்கள் மாட்டிக்கொண்டால் சம்பாதித்த பணமிருக்கு வெளியில் வந்துவிடலாம் என்ற தைரியம் அவர்களுக்கு.

வீரன் என்பவன் நேர்மையான போராளி இந்த விளையாட்டு காரர்களையும் விளையாட்டு வீரர்கள் ? என்கிறோம் அவமானம். அணியை ஏமாற்றி ரசிகனை ஏமாற்றி விளையாடும் இவர்களா விளையாட்டு வீரர்கள் இல்லை இவர்கள் வெறும் விளையாடிகளே [ சூதாடிகளே ]

மு.செ.மு.சபீர் அஹமது

Tuesday, May 28, 2013

பூனைக்கு மணி கட்டுவது யார் !?

முன் குறிப்பு : அன்று மருத்துவம் தெய்வீகத்து சமம் என்று கருதப்பட்டது, ஆனால் இன்று ஒரு சில மருத்துவர்களும், மற்றும் பல மருந்து கடைகள் வைத்துருப்போரும் செய்யும் தவறுகளினால் மருத்துவத்துக்கே கெட்டப் பெயர் வந்து கொண்டிருக்கு.  

வைத்தியம் என்றால் என்ன ? இப்படி ஒரு கேள்வியை பொது மக்களிடம் கேட்டால் ஆளாளுக்கு ஒரு பதிலைத் தருவார்கள். அல்லது ஏம்பா உனக்கு என்ன பைத்தியமா என்னிடம் வந்து வைத்தியத்தைப் பற்றி கேட்கிறாய் என்பார்கள். மேலும் ஒரு வியாதியை குறிப்பிட்டு கேட்டாலும் அதுக்கும் அவர்களுக்கு தெரிந்த வைத்திய முறையை சொல்லுவார்கள், அப்படி பார்த்தால் எல்லோரும் வைத்தியரா என்றால், எல்லோரும் ஒரு வகையில் மருத்துவத்தை அறிந்து வைத்துள்ளனர் என்றே சொல்லலாம்.

இன்று நம்மிடையே சுற்றிக் கொண்டிருக்கும் வைத்திய முறைகள்.

ஆயுர்வேதம். / யூனானி. / ஹோமியோபதி. / அலோபதி (ஆங்கிலம்).

இன்னும் அனேக மருத்துவங்கள் நம்மைச் சுற்றி சுற்றி வந்தாலும்.  போலிகளுக்கு குறைவே கிடையாது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆயுர்வேதம் என்பது இந்தியத் துணைக்கண்டத்துக்கு உரிய மரபுவழி மருத்துவ முறையாகும். இது இப்பகுதிக்கு வெளியில் உள்ள பல நாடுகளில் கூட ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பயன்பாட்டில் உள்ளது. முனிவர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய மருத்துவ நூல்கள்தான் இன்றைய ஆயுர்வேத மருத்துவ முறையாகும்.

யூனானி மருத்துவம் முறை கிரேக்க-அரேபிய வைத்திய முறையாகும். யூனானி மருத்துவ முறை பற்றிய தகவல்கள் இரண்டாம் நூற்றாண்டு முதல் கிடைக்கிறதாயினும் இந்த மருத்துவம் பற்றிச் சிதறிக் கிடந்த தகவல்கள் பாரசீக மருத்துவரான இப்னு சீனா (980-1037) என்பவரால் தொகுக்கப்பட்டன. ஆயுர்வேத மருத்துவத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த யூனானி மருத்துவ முறை இந்தியாவில் மாற்று வைத்திய முறையாக காணப்படுகிறது.

ஹோமியோபதி அலோபதிக்கு எதிராக ஜெர்மனியில் தோன்றிய மருத்துவம், ஹோமியோபதி உலகின் மருத்துவத்தில் இரண்டாவதாகும், சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில மருத்துவத்தில் எம்.டி.பட்டம் பெற்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஹானிமன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையாகும்.

அலோபதி அறிவியல் அடிப்படையில் இயங்கி வருவது நவீன மருத்துவம் அலோபதி பருத்துவம் என்ற பெயரில் வழங்கப்படும் ஆங்கில மருத்துவ முறையாகும்.

மருத்துவத்தைப் பற்றிய ஆரம்ப கால குறிப்புகளில் பின்வரும் ஐந்து வகை ஆதாரங்கள் நமக்கு கிடைக்கின்றன.

அ) இந்தியாவின் ஆயுர்வேத குறிப்புகள்.
ஆ) எகிப்தின் பாப்பிரஸ் மருத்துவ குறிப்புகள்.
இ) பழமை வாய்ந்த சீன மருத்துவ குறிப்புகள்.
ஈ) செவ்விந்திய மாயா மருத்துவ குறிப்புகள்.
உ) கிரேக்க மருத்துவ குறிப்புகள்.

அன்று ஊருக்கு ஒரு வைத்தியர் இருப்பார், முகத்தைப் பார்த்து, இமைகளை கொஞ்சம் நீக்கிவிட்டு கண்களைப் பார்த்து, கை பிடித்து நாடி நரம்பெல்லாம் தொட்டு பார்த்துவிட்டு மருந்து கொடுப்பார், வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எண்ணைத் தேய்த்து குளிப்பது, வருடத்திற்கு இரண்டு முறை பேதிகள் கொடுத்து வயிற்றை சுத்தம் செய்வது, இப்படி வழக்கத்தில் இருந்து வந்தது, நோயும் அதோடு பறந்தும் போனது. மக்களும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள்.

இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தாய்மார்கள் குழந்தைகளை வீட்டிலேயே சுகப் பிரசவமாக பெற்று வந்தார்கள், பிரசவத்தை கவனிப்பதற்கென்றே அந்தந்த பகுதிகளில் கை மருத்துவத்தில் கைதேர்ந்த ஒரு பெரிய மனுஷி இருப்பார், அவருடை கைப் பக்குவத்தில் வீட்டிலேயே சுகப் பிரசவமாகிவிடும். இன்னும் சொல்லப்போனால் என் கூடப் பிறந்த அத்தனைபேரும் இம்மாதிரியான கை மருத்துவ முறையில் வீட்டிலேயே சுகப் பிரசவமாக பிறந்ததாக என் தாய் சொல்லுவார்கள். முப்பது வயதை கடந்தவர்களில் 90%சதவீதத்தினர் வீட்டிலேயே சுகமாக பிறந்தவராக இருப்பார்கள்.

இன்று நவீனம் என்ற பெயரில் மக்களின் ஆரோக்கியம் பல வழிகளில் சீரழிந்து வருகின்றது என்று சொன்னால் அதை மறுப்பவர்கள் யாரும் உண்டா?

அன்று மருத்துவம்  ஒரு உறுதிமொழிக்குள்  கட்டுப்பட்டு இருந்தது நோயாளிகள் நிரந்தர சுகம் அடைந்தார்கள், நோயாளிகளும் மருத்துவர்களும் மன நிறைவு அடைந்தனர். அதே மருத்துவம் இன்று ஒரு வியாபாரத்திற்குள் கட்டுப்பட்டு கிடக்கின்றது நோயாளிகள் தற்காலிக சுகம் அடைகிறார்கள், நோயாளிகளும் மருத்துவர்களும் மன நிறைவு அடையாமல் திண்டாடி வருகின்றனர். இப்படியான இந்தச் சூழலில் மருந்து கடைகளின் உதயம், மேலும் மருத்துவர்கள் நோயாளிகளை வெளியில் அலைய விடக்கூடாது என்ற (தூய உள்ளத்தோடு) தங்களுக்கு அருகிலேயே மருந்து கடைகளை நிறுவி இருக்கின்றனர்.

அப்பப்பா சொல்லி மாளாது, ஒவ்வொரு மருந்து கடைகளிலும் அலைமோதும் மக்கள் கூட்டம் அந்த அளவுக்கு வியாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது, ஒருத்தருக்கு ஒரு வியாதி வந்து விட்டால் அவ்வளவுதான், அவர் சாகும்வரை மாத்திரை மருந்துமாக அலைய வேண்டியதுதான், அதுதான் அவரின் தலையெழுத்து. இதுதான் தலையெழுத்து என்று இருக்கும்போது இன்னொரு வியாதி முன்பிருந்த நோயிக்கு நட்பு நோயாக வந்து விடும்.

சில நாட்களுக்கு முன் நான் மாலை நேரம் காற்று வாங்க மெதுவாக நடந்து கொண்டு போகும்போது, மருந்து கடை ஒன்றில் ஒருவர் மருந்து வாங்கி வரும்போது கை தவறி கீழே விழுந்து விட்டது, சட்டென்று நான் அதை எடுத்து பார்த்ததில் அது வெறும் மாத்திரைதான், அவரிடம் கொடுத்து விட்டு, இது எந்த மாதிரியான நோய்க்கு உண்டான மருந்து என்று வினவ அவர் சொன்ன பதிலை கேட்டு எனக்கு தூக்கி வாரிப்போட்டது,. நீங்க இப்படி செய்யக்கூடாது ஒன்னு இருக்க மற்றொன்று ஏற்பட்டுவிடும் ஆகவே முறையாக மருத்துவரிடம் ஆலோசனை செய்து அதுக்கு தக்கவாறு மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தேன்.

மருந்து கடைகள் வைத்துருப்போர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மொத்தமாகவோ அல்லது உதிரியாகவோ மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுக்கக் கூடாது, அனேக இடங்களில் போலி மருந்துகளும் நல்ல மருந்துகளோடு நைசாக கடைக்குள் வருவதாக தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன, பொதுவாக சாதாரண மருந்துகள் மருந்து கடைகள் என்றில்லாமல் எல்லா கடைகளிலும் கிடைகின்றது, கூடிய விரைவில் காய்கறி கடைகளிலும் கிடைத்தாலும் ஆச்சரியப்படவேண்டியது இல்லை. மருந்து விஷயங்களில் கடை உரிமையாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்துகவரில் “நலம் பெற வேண்டுகிறோம்” என்று எழுதினால் மட்டும் போதாது, நீங்கள்  நோயாளிகளுக்காக ஒவ்வொரு நாளும் உண்மையான விசுவாசத்தோடு பிரார்த்திக்க வேண்டும்.

மருத்துவர்கள் தன்னிடம் வரும் நோயாளிகளை நிரந்தரமாக குணப்படுத்த முயற்சிக்க வேண்டும், ஒரு சில மருத்துவர்களிடமும் மருந்து கடைகளிடமும் ஏகப்பட்ட நோயாளிகள் வாடிக்கையாகவே மாத்திரை மருந்து வாங்கி சாப்பிட்டு தற்காலிக சுக மனிதனாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு சில மருத்துவ மனைகளை தவிர அநேக மருத்துவ மனைகள் சுகாதாரம் இல்லாமல் நோயாளிகளுக்கு அவதி தரும் இடமாக இருக்கின்றது.

நம் பாரதத்தில் பல இடங்களில் போலியான பதிவு எண்களை வைத்துக்கொண்டு ஏகப்பட்ட மருந்துவங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றது, இந்த விஷயத்தில் நோயாளிகளின் விழிப்புணர்வு மட்டும் இல்லை பொது மக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

மருந்து கடைகளில் மருந்து வாங்கும்பொழுது அதன் தயாரிப்பு தேதி மற்றும் முடிவு பெரும் தேதியை மறக்காமல் கவனிக்க வேண்டும், மேலும் மருந்து கடை ஊழியர்களிடம் இந்த மருந்து உண்மையானதா அல்லது போலியானதா என்று கேட்க தவற வேண்டாம். இப்படி ஒவ்வொரு நோயாளியும் கேட்க்கும் பட்சத்தில் மருந்து கடை காரர்களுக்கு பயம் வந்து விடும்.

ஆக மொத்தத்தில் மருத்துவர்கள், மருத்துவ மனைகள், மருந்து கடை உரிமையாளர்கள், நோயாளிகள், பொதுமக்கள் அனைவரும் மருத்துவம் விஷயத்தில் மிகுந்த அக்கறையுடன் விழிப்புணர்வோடு இருந்தால் தரமற்ற மருத்துவத்திலிருந்து தப்பிக்கலாம்.

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Monday, May 27, 2013

வழக்குக் கூண்டில் வாய்பொத்தி நிற்கும் வறுமைக்கோடு [ நிறைவுப்பகுதி ]

குறுந்தொடர் : III [ நிறைவுப்பகுதி ]

இக்குறுந்தொடரின் இரண்டாவது பகுதியை இப்படி முடித்து இருந்தேன்.

//காரணம் இல்லாமல் காரியம் நடக்காதே! இதெற்கெல்லாம் என்ன காரணங்கள் ?

காரணங்கள் இருக்கின்றன.. இந்தக்காரணங்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களின் நலன்களை அடகுவைக்கும் காரணங்கள் . 

அவை என்னென்ன ? பார்க்கலாம். //

இப்போது தொடர்ந்து பார்க்கலாம்.

திட்ட கமிஷன் என்பது ஒவ்வொரு நாட்டின் பொருளாதார கட்டமைப்புகளுக்கான உயிர்நாடியாகும். ஐந்தாண்டுத்திட்டங்களும், வளர்ச்சித்திட்டங்களும் , மக்கள் நலவாழ்வுத்திட்டங்களும் இந்தக்குழுவில் இருக்கும் மகாபனுவர்கள் தரும் செயல் அறிக்கைகளை வைத்துத்தான் மேற்கொள்ளப்படும். ஆனால் இவர்கள் தரும் பொருளாதார அறிக்கைகளைப்பார்த்தால் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக உண்மைப் பொருளாதார, சமூக சூழ்நிலைகளை வேண்டுமென்றே மறைத்துவிட்டு இப்படி பித்தலாட்டமான அறிக்கை தருவது காட்டில் நிலவு காய்வதற்கும் கடலில் மழை பெய்வதற்கும் ஒப்பானது. பயனாளிகளுக்குப்பயன்படாதது.
திட்டக்கமிஷனின் தில்லுமுல்லு அறிக்கைக்கு காரணங்களாக கருதப்படுபவை அல்லது கணிக்கப்படுபவை.

1. உலக வங்கியை திருப்திப்படுத்த
2. உலகபெருங்குழுமங்களின் இசைக்கேற்ப நடனமாட
3. உலக நாட்டினரின்முன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்கிற மாயமான தோற்றத்தை சித்தரிக்க,
4.  உள்நாட்டில் வறுமை ஒழிப்புத்திட்டங்களை ஒழித்துக்கட்ட
5.  முக்கியமாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு அரசு தரும் மானியங்களைக் குறைக்க,
6. நிர்வாக கோளாறுகளை மறைக்க,
7. கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறையை கண்டுகொள்ளாதிருக்க

இத்தகைய காரணங்களால்தான் இப்படி ஒரு செப்பிடுவித்தைக்குள் திட்ட கமிஷன் இறங்கி இருக்கிறது என்று காரணங்களைச் சொல்லலாம்- சொல்கிறார்கள்.

அண்மைக்கால இந்திய அரசின் பொருளாதார கொள்கை ரீதியான நடவடிக்கைகள் உலக வங்கியை திருப்திப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கும் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. முக்கியமாக நாட்டின்  முதுகெலும்பான விவசாயத்துக்கான முதலீடுகள் குறைக்கப்பட்டு பெருந்தொழில்களுக்கான முதலீடுகள் அதிகரிக்கப்பட்டது உலக வங்கியின் தலையணை மந்திரத்துக்கு உட்பட்டே. பெருந்தொழிலகள் பெருக்குவதற்காக விவசாய நிலங்கள் உலகவங்கியின் வழிகாட்டுதல்களின்பேரில் அபகரிக்கப்படுகின்றன. இருக்கும் நிலத்தையும் இழந்த ஏழை விவசாயி வறுமைக்கோட்டின் கீழாவது படுத்து ஒய்வு எடுக்க முடியவில்லை. ஒரு பொருளாதார அறிக்கையின்படி “ Structural adjustment policies prescribed by the International Monetary Fund (IMF) and the World Bank as conditions for loans and repayment.” என்ற வரிகள் விளங்க வைக்கும் .

உணவுதானிய வேளாண்மையானது குறைக்கப்பட்டு பணப் பயிரை நோக்கி திருப்பிவிடப்பட்டது. அதற்கு உழவர்களை விரட்டுவதற்கு ஏற்ப உணவுதானியக் கொள்முதல் விலை திட்டமிட்ட வகையில் குறைக்கப்பட்டது. இதனால் உணவுப் பயிரிட்டு வந்த உழவர்கள் பணப்பயிரை நோக்கி விரட்டப்பட்டார்கள். இதே மாதிரிக் கொள்கை இந்தியா போன்ற உலகின் பிற பின்தங்கிய நாடுகளிலும் உலகவங்கியால் கட்ன்தரப்பட்ட நாடுகளிலும் பின்பற்றப்பட்டது. பருத்தி, மூலிகை போன்ற மாற்றுப் பயிர் சாகுபடி எல்லா நாடுகளிலும் ஊக்குவிக்கப்பட்டது. இவை ஏற்றுமதிச் சந்தைக்காக உற்பத்தி செய்யப்பட்டன. இதனால் வறுமைதான்  வளர்ந்தது.
உழைப்பவர் வாழ்வே வீதியிலே! உறங்குவதோ நடை பாதையிலே! இரக்கம் காட்டத்தான்  நாதி இல்லே!

அந்நிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடு இல்லை. அந்நிய நிறுவனங்கள் செய்யும் முதலீடுகளுக்கு வரியும் இல்லை. நாட்டின் மூலவளங்கள் பெருங்குழுமங்களுக்கு தாரைவார்க்கப்படுகின்றன. கோதாவரி நதி தீர எரிவாயு உரிமைப்போராட்டதில் சகோதரர்களின் பங்காளி சண்டைக்கு நாட்டின் பிரதமர் கட்டைப் பஞ்சாயத்துபண்ணுகிறார். கறுப்புப்பணத்தை பதுக்கியவர்களின் பட்டியலைத் தர மறுக்கிறது அரசு. திருடனுக்கு தேள் கொட்டிய கதையாகிவிடுமென்ற அச்சம்தான் காரணம். . நாட்டை வணிகப்பாத்தி கட்டி பன்னட்டுக்குழுமங்களுக்கு விற்கத்துடிக்கிறது அரசு. சில்லறை வணிகத்தில் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்யும் கொள்கை அவசர அவசரமாக “கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத்தூக்கி மனையில் வை” என்ற நோக்கில் அரசு துரிதகதியில் செயல்பட நினைத்தது.

பன்னாட்டுக்குழுமங்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி விமான நிலையங்களை புதிதாக கட்ட ரூ. 10,000  கோடி ஒதுக்கினார்கள். காமன்வெல்த் விளையாட்டுக்காக ரூ. 60,000   கோடி ஒதுக்கினார்கள்.  காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிக்கு ஒதுக்கிய தொகை போதவில்லை என்று ஏழ்மை ஒழிப்பு, மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகளை திசை திருப்பினார்கள்.

Tens of millions of dollars have been diverted in India from schemes to fight poverty and used to fund Delhi's Commonwealth Games, a report says. The Housing and Land Rights Network pressure group says its report is based on official documents obtained under India's right to information act. The group says there should be an independent inquiry into how this was allowed to happen. [ Source: BBC News 14th May 2010. ]

இப்படி உலக வங்கி என்ற மாமியாரும், பன்னாட்டுக்குழுமங்கள்  என்கிற மனைவியும் சொல்லும் சொல்கேட்டு ‘ மாமியா வீட்டோட போய்விட்ட மருமகன் ‘ போல் மத்திய அரசு செயல் படுகிறது. மாமியார் வீட்டில் போய் இறங்கி மாமியார் வீட்டு ஜனங்கள் கூடி “ பொட்டி” பிரிக்கிறார்கள். தாய் வீடோ, விவ்சாயம்போல் புறக்கணிக்கப்படுகிறது.  உலக வறுமையின் காரணங்களை ஆய்ந்த அறிக்கை கூறுகிறது.

To attract investment, poor countries enter a spiraling race to the bottom to see who can provide lower standards, reduced wages and cheaper resources. This has increased POVERTY and inequality for most people. It also forms a backbone to what we today call globalization. As a result, it maintains the historic unequal rules of trade.

அடுத்து, நிர்வாகத்தில் கோளாறுகள்,  முக்கியமாக உணவுபங்கீட்டில் பாகுபாடுகள், ஊழல்கள், கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தாமை ஆகியவற்றை குறிப்பிடலாம். நாட்டின் உணவு  உற்பத்திப் புள்ளி விவரங்களை உணவுத்தேவையின் புள்ளிகளோடு ஒப்பிட்டால் உற்பத்தி தன்னிறைவு அடைந்துள்ளது. அதாவது நமது அனைத்து மக்களுக்கும் தேவையான அளவு உணவு உற்பத்தி ஆகியே  இருக்கிறது. ஆனாலும் பட்டினிச்சாவுகள் என்? பற்றாக்குறை ஏன்? திட்டமிடப்படாத பகிர்விலும் பாதுகாப்பிலும் ஏற்பட்ட ஒட்டைகள்தான் காரணங்கள்.
உணவு உற்பத்தி

2008- 2009 218.20  மில்லியன் டன்
2009- 2010 237.47  மில்லியன் டன்  அதாவது உற்பத்தியின் அளவு  உயர்ந்தே இருக்கிறது.

ஆனாலும் ஒருகோடியே அறுபத்தொன்பது லட்சம் டன் உணவுப்பொருள்கள் சரியான சேமிப்பு கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் வீனாகிப்போயின.

ஒரே ஒரு சோற்றுப்பருக்கை உண்ணும் தட்டில் ஒட்டிக்கொண்டிருந்தாலும் எடுத்து சாப்பிடு, தட்டையை வழித்து சாப்பிடு , கைவிரல்களை சூப்பி சாப்பிடு என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் வியர்வை சிந்தி உற்பத்தியான டன் கணக்கான உணவுப்பொருள்கள் வெயிலிலும் மழையிலும் கிடந்தது வீணாக விட்டது யார் குற்றம் ?

திட்டமிட்ட பகிர்வு இல்லை- சேமித்துவைக்க வக்கில்லை. பகிர்ந்தளிக்கும் திட்டங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது . இதோ உலகவங்கியின் அறிக்கையே சுட்டிக்காட்டுகிறது.

Corruption in developing countries definitely must be high on the priority lists (and is increasingly becoming so in the wake of the global financial crisis), but so too must it be on the priority lists of rich countries. World Bank report said attempts by the Indian government to combat poverty were not working. It said aid programmes were beset by corruption, bad administration and under-payments.

இத்தகைய காரணங்களால் தங்கள் மீது எழுப்பப்படும் கேள்விக்கணைகளை தாங்க வக்கில்லாமல் வறுமைக்கோட்டின் துப்பட்டிக்குள் நுழைந்துகொண்டு பேராசிரியர் சுரேஷ் டி. தெண்டுல்கர் தந்த வக்கற்ற அறிக்கையை வகையில்லாமல் ஏற்றுக்கொண்டு தனது கையால் ஆகாத தனத்தை வறியவர், எளியவர், வகையிலர், தொகையிலரின் வாழ்வின் மேல் தாக்கி இருக்கிறது மத்திய அரசு.

மக்கள் இளிச்சவாயர்களாக விழிப்புணர்வற்று இருக்கும்வரை இதுபோன்ற செயல்களே நடக்கும்.
இதோ வைரமுத்து

சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்

ஏ நாடாளுமன்றமே!
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்

மக்களின் அறியாமையை பயன்படுத்தி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் அதை ஏற்றுகொள்வார்கள் என்று கருதும் அரசுகள் அழியவேண்டும். அழியுமா ? அழிப்போமா ? எதை எதிர்க்காவிட்டலும் இந்த அரசின் வறுமைக்கோட்டு அறிக்கையை அனைவரும் எதிர்க்க வேண்டும்.

வழக்கு மன்றம் முடிவுறுகிறது. வறுமைக்கோடு வழக்கு கூண்டிலேயே தளர்ந்து போய்  நின்றது ஒரு பாட்டில்  தண்ணீர் வாங்கிக்குடித்து தளர்ச்சியைப் போக்கிகொள்ளக்கூடாதா என்று கேட்டேன்.  வறுமைக்கோடு  என்னைத்திருப்பிக் கேட்டது இருக்கும் 22/=ரூபாயில், 14/= ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் வாங்கி விட்டால் பாக்கி 8/= ரூபாயை வைத்து நான் நாக்கு வழிக்க்கவா ?  என்று எனக்குத் தெரியவில்லை.

யாரைக்கேட்கலாம் ? எக்ஸ் க்யூஸ் மி இந்த அட்ரஸ் எங்கே இருக்குதென்று சொல்ல முடியுமா ? மன்மோகன் சிங், ரேஸ் கோர்ஸ் ரோடு, புது டில்லி.

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

Saturday, May 25, 2013

[ 11 ] உள்ளம் கேட்குமே !? MORE…[ காதல் ஸ்பெஷல் ]

காதல் வெற்றி கண்டு திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் இல்வாழ்வில்  சந்தோசமாக வாழகிறார்களா ?

எத்தனை பேரின் வாழ்க்கை  வெற்றி அடைந்துள்ளது ? இப்படிப்பட்ட கேள்விகளுடன் இந்தவார ஆக்கத்தைக் காண்போம்...

பொதுவாகவே காதலர் தனிமையில் சந்தித்து பேசும்பொழுது  காதலன் காதலிக்கு பிடித்தமான செயல்களை மட்டுமே செய்வான் அந்த பெண்ணிடம் உரையாடும் பொழுது  அளவாக பேசி கவர்வான். உடை விசயத்தில் மிகவும் கவனமாக இருப்பான். உணவு உண்பதுகூட மிகக்குறைவாக உண்பான். என்ன தான் ருசியாக இருந்தாலும் கட்டுப்பாடாக இருப்பான். அதிர்ந்து பேச தெரியாதவன் போல் அமைதியாகக் காணப்படுவான்.

இது நாள் முழுவதும் நடைமுறைப்படுத்துவது கஷ்டம். ஓரிரு மணி நேர சந்திப்பு என்பதால் சாத்தியமாகிறது. காதலின் இலக்கு காமம்தான் ! காமம் தணிக்கும் சூழல் கிடைக்காத பொழுது கல்யாணம் செய்தால் கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்காக தான் கல்யாணமே செய்து கொள்கிறார்கள். அப்படி கல்யாணமாகி  தம்பதிகளாய் வளம் வருபவர்கள் கொஞ்சிக்குலாவி வாழ்கையை நடத்துகிறார்களா ? என்றால் நிச்சயமாக இல்லை.

உற்றார் உறவினர் உதவி இல்லாது ஏதோ தான் உழைக்கும் உழைப்பின் வருவாயை வைத்து காலம் கடத்தும் சூழல் அமையும். அத்தருவாயில் ஏதாவது ஒரு காரணத்திற்காக கணவன் மனைவியை கடிந்து கொள்வான்.  அதற்கு அவள், என் அப்பா அம்மா பார்த்துக்கல்யாணம் செய்து தந்திருந்தால் சண்டை என்று வந்தால்  போய் சொல்லி அழுவேன் ! இப்போது  எந்த நாதியும் இல்லா நிலையில் இருக்கிறேன் என்ன செய்வேன் என்பாள்.

பல காதல் மணம் புரிந்த கணவன்மார்கள்  மிக இலகுவாக கேட்கும் கேள்வி ‘உனக்கு என்னை பிடித்து விட்டது என்று இருபது ஆண்டு கூட இருந்த அம்மா அப்பாவை விட்டு விட்டு என்னோடு  வந்து விட்டாய் இப்போ என்னை பிடிக்கவில்லை என்று யாரோடாவது ஓடி செல்ல மாட்டாய் என்பது கூட சாத்தியம் தானே’ என்பான்  கால சூழல் அதிகமாக காதலன் பக்கமே சாதகமாக  இருக்கும். அப்படியே அதன் காரணமாக அடங்கி போகவே செய்வாள் காதலி. "மலரை போன்றவளே  என்று வர்ணித்த அவனின் வர்ணனை மலரின் வாழ்நாள் போன்று  குறுகிய கால வயதை கொண்ட அன்பேயாகும்.

குறிப்பாக இந்த காலத்தில் பல பெண்ணை மயக்குவது பெரிய சாதனையாகச் சொல்லித்திரியும் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். பெண்களே எந்தக் காரணம் கொண்டும் ஏமாந்து விடாதீர்கள். சிலர் காதலர்களாக இருப்போம் ஆனால்  கல்யாணம் வேண்டாம் எனக்கூறும் இளைஞர்களும் உண்டு. ஆனால் கல்யாணமாகி வாழ்வில் வசந்தம் வீசும் தருவாயில் புயலாய் பழைய காதலன் நுழைவான் உள்ளம் தடுமாறும் எனவே உள்ளம் கேட்கும் எல்லாம் நல்லதல்ல.... மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் என்ற பழமொழிக்கேற்ப வாழ்வோம்.

காதல் வலை வீசும் இடங்கள் ஒரே சூழலில் தினமும் சந்திக்கும் இடங்கள் மனதை தடுமாற செய்யும் சூழலாகும். உள்ளத்தின் வாசல் கண்களே .தினமும் ஒரே நபரை பார்ப்பது

அவன் அல்லது அவளுக்கு நல்லதல்ல ..கண்களை பாதுகாத்துக்கொள்ளல் நல்லது நவீன கால ஊடகம் முகநூல் வலைதளங்கள் உள்ளத்தை வதைக்கும் கருவியாக உள்ளது உஷார் !

ஆணோ, பெண்ணோ காதல் மூலம்  வாழ்வில் வளம் காண்பது என்பது இயலாத காரியம் ஐம்பது வருட காலமாக காதலுக்கு வக்காலத்து  வாங்கி வரும்  சினிமா காதல் ஜெயித்ததாக முடிப்பார்கள். காதலுக்கு பின் வாழ்வை எப்படி எதிர்க்கொள்கிறார்கள் என்பதை காண்பிப்பதே இல்லை.

 சினிமா வேறு தன் வாழ்க்கை வேறு அல்ல  என்று வாழும் கமல் அவர்களின் காதல் வாழ்க்கை பொய்த்து போனது மட்டுமே உண்மை ! கல்யாணத்திற்கு பின் காதல் கொள்ளல் உள்ளம் கொள்ளை கொள்ளும் காதல் கண்களைப்பேணி காதலினை தவிர்ப்போம் !
இன்னும்  வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, May 24, 2013

கவியன்பன் கலாமின் 'அன்பு'

அன்பெனும் இனியநீர் மனமெனும் கேணியில்
     ஆழமாய் ஊறிட உயிராம் __  கயிற்றால்
     ஆங்குள உணர்வெனும் வாளி __ கொண்டுக்
கண்களாம் குடங்களில் ஊற்றிடக் கொட்டிடும்
    கண்களில் நீர்மழை கண்டால்__ அந்தக்
     கணபொழுது அன்பினை அறிவாய் !

அள்ளிநீ கொடுப்பதால் குறைவிலாச் செல்வமாய்
     அளவிலா வகையினில் திரும்பிக் __ கிடைக்கும்
      அற்புதச் சூட்சமம் அறிந்தால் __ மீண்டும்
உள்ளமே நிரப்பிடும் அன்பெனும் சுவையினை
    உலகெலாம் பரப்பிட நினைப்பாய் __ இந்த
    உன்னத விலையிலா அன்பை!

பக்தியாய்ப் பாசமாய் நட்பெனும் காதலாய்ப்
    பலவேறுக் கிளைகளைக் கொணட __ இம்மரம்
    பாரெலாம் நிறைவுடன் காண்பாய்__ இதன்
சக்திதான் என்னவாம் சந்தேகப் புயலிலும்
   சரிந்திடா வண்ணமாய் உறுதி __ கொள்ளும்
   சாதனை ஆணிவேர் அன்பே !

உலகமும் சுழல்வது உன்னத அன்பினால்
   உண்மையை உணர்வது உன்றன் __ கடனாம்
   உலகினைச் சுற்றியும் அன்பின்___ வேலி
கலகமும் தடுத்திடும் மெல்லிய நூலிழைக்
    காவலாய் அன்பெனும் உணர்வு ___ இருத்தல்
    கண்டுநீ போற்றிடு அன்பை!

மன்னவன் அன்பினால் அடிமையாய் மாறிட
     மயக்கிடும் மருந்தென அன்பு __செய்யும்
     மாயையை வியந்தனன் அஃதே __ போலச்
சின்னவன் குழந்தையாய்க் கிழவரும் மாறிடச்
    செய்திடும் வேலையும் அன்பு__ மட்டும்
    சிறந்தவோர் அற்புதமாய்க் கண்டேன்!

தட்டிடும் வேளையில் உறவுகள் சினத்தினால்
    தள்ளியே போய்விடும் எட்ட __ இயலாத்
    தூரமாய் விரைவுடன் என்பதால்- அன்பால்
கட்டிடும் உத்தியே சிறப்பென நெருக்கமாய்க்
   கட்டிநீ அணைப்பதால் எவரும் ___ உன்னைக்
   கலந்துதான் பேசுவர் அறிக!

குழந்தைகள் கிறுக்கலைக்  கொஞ்சியே மதித்திடு
    கவிதையாம் அஃதென வாழ்த்து__ உன்னைக்
    கண்டதும் அன்புடன் வருவர்__ என்றும்
பிழைகளைப் பொறுத்தலில் மிஞ்சிடும் அன்பினால்
    பிஞ்சுளம் பொழிந்திடும் பாச __ மழையாய்ப்
     பின்னரும் வருவரே  பேச!

என்பினை அசைத்திடும் இசையென அறிந்திடு
.  எதுவுமே அன்பினில் அடங்கும் __ இயக்கம்
    என்பதை உணர்ந்திட வேண்டும் __ அதனால்
அன்பினால் மோத்திடும் சப்தமே இசையென
    அறிந்திட முடியுமே அன்பு __ மனத்தில்
    ஆழமாய்ப் பதிந்திடும் போதில் !

(வேறு)

அடைக்கின்ற தாள்களின்றித் திறந்த உள்ளம்
      அதனுள்ளே பொங்குகின்ற அன்பு வெள்ளம்
தடையின்றி வெளியாகும் அன்பு ஊற்று
      தாகமெலாம் தீர்ந்திடவே அருந்திப் போற்று
படைத்தவனின் அன்பினிலே நூறில் ஒன்றே
       படைப்பினங்கள் வைக்கின்ற அன்பு என்றே
கிடைத்திட்ட வாய்ப்பான வாழ்வை யோசி
      கிளைகளையும் கேண்மையையும அன்பால் நேசி

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 25-05-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

புனித வாழ்வு

மனம்
தனது என்ற
தன் மனித உருவரை
உரிமைகொள்ள
அது
மனித மனம்.

மனம்
தனது என்ற
தன் பாரத
பிரதமர் பதவியில்
உரிமைகொண்டு பேச
‘பாரதம் பேசுகிறது’
அது
பாரத மனம்.

மனம்
தனது என்ற
தன் எல்லையற்ற பிரபஞ்சவரை
உரிமைகொள்ள
அது
பிரபஞ்ச மனம்.

அங்கு
பொதுநலமே
சுயநலம்.

தன் நாவாலும்
தன் கையாலும்
தனக்கும், பிறர்க்கும்
அமைதி குழையாமல்
வாழும் வாழ்வு
அங்கு
மலர்ந்திடும்.

உலகில்
வாழ்வுகள் வசந்தமாகும்
புனிதங்கள் வாழும்
அமைதி நிலவிடும்.
நபிதாஸ்

Thursday, May 23, 2013

வயதென்ன

கொட்டிய வெயிலில்
கும்மாளமாய்க் குளித்துவிட்டு வந்து
கவர்ச்சி காட்டி அசையும் பூமி மங்கைக்கு
பொன் மஞ்சள் தாவணியை
விரல்
பட்டும் படாமலும் மெல்ல உடுத்திவிட்டு
தன் கொல்லை வாசல் வழியே
செங்கை அசைத்த வண்ணம்
... வெளியேறிக்கொண்டிருந்தான்
ஙஞணநமனமாய்த் தணிந்த
கசடதபறச் சூரியன்

அம் மதுர மாலையில்
ஓர் ஓடைக்கரையில் ஓடும் மீன்களை
ஒவ்வொன்றாய்க் குசலம் விசாரித்த வண்ணம்
குந்தியிருந்தான் கவியொருவன்

அவன் தலை முகட்டில் வெண்மையின் ஆட்சி
முகத் திரையில் சுருக்கத்தின் காட்சி
இதழ்களிலோ நல்ல
கொஞ்சுதமிழால் குழைத்தெடுத்த
ஓர் இளமைப் பாட்டு

ஆவலின் உந்துதலில் எழுந்த ஓர் கேள்வி
தொண்டைக்குழிதாண்டி
என் மொத்தக் கழுத்தையும்
கெளுத்தி முள்ளாய்க் குத்த
அருகே சென்றேன் அவனிடம் கேட்டேன்

"கவிஞனே... கவிஞனே... உன் வயதென்ன?"

நிமிடம் ஒன்று நடந்து நடந்து
என்னை மட்டுமே கடந்து போனது
அந்தக் கவிஞனோ தன் இதழ்களின் குறுக்கே
கெட்டியாய் ஒரு மௌனப் படுதாவையே
கட்டி வைத்திருந்தான்

காதில் விழவில்லையோ
என்ற கவலையில் கேட்டேன் மீண்டும்
என் குரல் மலரில்
சிறு முட்களையும் சேர்த்துக் கட்டி

"ஓ..... கவிஞனே... கவிஞனே....
உன் வயதென்ன....?"

மீன் மொழி கேட்டுக்கொண்டிருந்த
தன் செவிப்பாதை வழியே
ஒரு காண்டாமிருகம்
தறிகெட்டு ஓடுவதாய்த் திடுக்கிட்டான்

நீரில் பதிந்த விழிகளை நிமிர்த்தும் மனமின்றி
நிதானமாய்த் தன் கவியிதழ் விரித்தான்

ஓ.... நண்பனே
கவிஞனுக்கு ஏதடா வயது?

அவன்
பிறக்கும் போதே பெரியவன்
வாழும் போது இளையவன்

எழுதும் போதோ
அவன் வயது ஒன்றாகவும் இருக்கும்
ஒரு யுகமாகவும் இருக்கும்

எந்த வயதுக்குள் நுழைந்து எழுதினாலும்
எழுதி முடித்து மெல்ல வெளிவந்து விழும்போது
மீண்டும் அவன்
பெரியவனாய்த்தான் பிறக்கிறான்
நல்ல இளையவனாய்த்தான்
வாழ்கிறான் என்று கூறி

போ... போ....
உனக்கொன்றும் இது புரியாது என்று
என்னை விலக்கிவிட்டு
அந்த ஓடை மீன்களிடமே சென்று
தன் காதுகளைப் புதைத்துக்கொண்டான்

கவிஞனா இவன்
மகா திமிர் பிடித்த கிறுக்கன்
என்றெண்ணியவனாய்த்
தாளாச் சுடுமணலின்
தகிப்பில் நடப்பவன் போல் நான்
எட்டி எட்டி நடந்தோடினேன்

ஆனால்...
என்னை நிறுத்தி முத்தமிட்டன
அவன் நிறுத்தாமல் உதிர்த்த
தேவ சுகந்தம் பரப்பும் தேன் கவி வரிகள்

இப்போது என் காலுக்கடியில்
கடுஞ்சூட்டு மணல் இல்லை
எனக்கே எனக்கான
என் இனிய தமிழ்ச் சொந்தமண்
என் விரல்களை வேர்களாகக் கேட்டது

அன்புடன் புகாரி

Wednesday, May 22, 2013

இந்த பழமும் புளிக்குமா !?

மனிதனை உலகில் படைக்கும் போது அவனுக்கு நிறைய அருள்களையும் சேர்த்துதான் படைத்துள்ளான் மனிதனோ அவைகளை உணராது தன் குறைகளை மட்டுமே வெளிக்காட்டுபவனாக இருக்கின்றான்.

வாழ்வென்பது இன்ப, துன்பங்களை கொண்டதாய் உள்ளது. வழி என்பது மேடு பள்ளங்கள் கொண்டதாய் இருப்பது போல் ஒருவர் தான் எது செய்தாலும் விளங்குவது இல்லை யாரும் என்னை மதிப்பதில்லை இறைவன் எனக்கு எந்த அருளையும் கொடுக்கவில்லை நான் சபிக்கப்பட்டவனாக இருக்கின்றேன் இவ்வுலகில் வாழ்ந்தென்ன பயன் என்வாழ்வை நான் முடித்துக்கொள்ளப் போகின்றேன் என்று புலம்புவாராயின் அவரிடம் கேட்போம் தங்களிடம் இறைவன் கொடுத்த கண் இருக்கின்றதே அதன் மதிப்பு, அல்லது விலையை சொல்லுங்கள் என்றால் முழிப்பார் உங்களிடம் உள்ளது வேறு கண் குருடரிடம் இல்லையே ஒரு கண்ணை கொடுங்கள் ஒரு இலட்சம் வாங்கித் தருகிறேன் என்றால் கொடுப்பாரா ? சரி அதைவிடுங்கள் தம்மிடம் உள்ள இரண்டு கிட்னிகளில் ஒன்றை கொடுத்தால் 2 இலட்சம் தருகிறோம் என்றால் யோசிப்பார் ஒன்றை கொடுத்துவிட்டு எனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நான் உயிர் வாழ்வதெப்படி என்று நம்மிடமே கேள்வி கேட்பார்.

ஒரு கண்பார்வையற்றவர் தம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளை அனுபவிக்கும் பொழுது அழுது புலம்புவார் தம்முடைய குடும்பத்தார் பொருட்காட்சி காணச்சென்றால் இவர் மட்டும் வீட்டில் தனியாக தமக்கு பாக்கியம் கிடைக்க வில்லையே என்று தேம்பித் தேம்பி அழுவாராம் பள்ளிக்கல்வி பெற்ற தம் நண்பர்களின் அறிவை கண்டு தமக்கு கிடைக்க வில்லையே என்று அழுவாராம் எந்த நேரமும் அழுவதை மற்றவர்கள் பார்த்து பரிகாசிப்பதால் சிலசமயம் தனியாக யாரும் இல்லா இடத்தில் தட்டுத்தடுமாறி சென்று தனியாக அமர்ந்து கதறிக்கதறி அழுவாராம்.

ஒரு சமயம் தனியாக அழுது புலம்பிக்கொண்டு இருக்கையில் வேறொரு அழுகை குரல் இவர் காதிற்கு கேட்டது தனது அழுகையை நிறுத்திவிட்டு அழும் குரல் கேட்கும் இடம் நோக்கி நடந்து வந்து யார் இங்கே அழுவது ? என இவர் கேட்க எந்த பதிலும் வரவில்லை மறுபடி சப்தமாக உங்களுக்கு என்ன பிரச்சனை என்னிடம் சொல்லுங்கள் என்னை விடவா உங்களுக்கு பிரச்சனை வந்து விடப்போகின்றது என்னவென்று சொல்லுங்களேன் என்றாராம்.

அழுதவர் தம் அழுகையை நிறுத்திவிட்டு தமக்கு ஏற்பட்ட அவலத்தை பார்வையற்றவரிடம் கூறலானார், என் சோகத்தை சொல்லி உங்களை ஏன் வருத்தப்பட வைக்கவேண்டும் என யோசிப்பதாய் சொல்ல, பரவாயில்லை சொல்லுங்கள் என்றாராம், அவரும் சொல்ல ஆரம்பித்தார் எனக்கு நேற்றுதான் திருமணம் முடிந்தது, சொல்லி முடிப்பதற்குள் நிறுத்துங்கள் நேற்று கல்யாணம் நடக்க இன்று அழும் நிலை வந்தது புரியாத புதிராய் உள்ளதே ? நான் திருமணம் செய்ய முடியாமல் இருப்பதற்கு வருத்தப்படுகிறேன் என்னை குருடன் என நிராகரிப்பவரை கண்டு மனம் வேதனைப்படுகிறேன் நீங்கள்    என்னவென்றால் திருமணம் முடிந்த மருநாளே அழுது புலம்புகிறீரே என்று கேட்க அழுதவர் தொடர்ந்தார் என் தாயும் தந்தையும் வரதட்சனை பணத்திற்கு ஆசைப்பட்டு  குள்ளமான, கருமையான, அவலட்சனமான எனக்கு எந்த வகையிலும் பிடிக்காத  ஒரு பெண்ணை திருமணம் முடித்து விட்டார்கள் என் வாழ்க்கையே சூன்யமாகிவிட்டது என்று சொல்ல பார்வையற்றவர் திரும்பக் கேட்டாராம் கருமை என்றால் என்ன ?

இவருக்கு அழுகையோடு கோபமும் வந்துவிட்டது.  உன் பார்வையால் ஏற்பட்ட இருளே கருமை என்றார்.

சரி அவலட்சணம் என்றால் என்ன ?
அழுதவருக்கு கடுமையான கோபம் வந்தவராக உமக்கெல்லாம் எப்படி சொல்லி புரிய வைப்பது அதற்கும் உனக்கும் சம்மந்தம் இல்லை என்று கடுஞ்சொல்லால்  திட்டி விட்டார்.

பார்வையற்றவர் விழுந்து விழுந்து சிரித்தவராக கண்பார்வை இருந்தால் இத்தனை பிரச்சனைகளை சந்ததிக்க வேண்டுமா இந்த பிரச்சனைகளுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லையா ! சந்தோஷம் இனி நான் பார்வை இழந்தமைக்கு நான் அழவே மாட்டேன் எது கிடைத்ததோ அது நல்லதே கிடைத்தது இருப்பதை கொண்டு போதுமாக்கி கொள்வேன் என்றவராக அந்த இடத்தை விட்டு சென்றார்  .

வேறு ஒரு சம்பவம் அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் ஒரு மனிதர் அழுது கொண்டு இருக்க மற்றொரு நபர் சிரிப்பாய் சிரித்துக்கொண்டு இருந்தார் அந்த வழியே சென்ற ஒரு நபர் இருவரையும் பார்த்து விட்டு என்ன மனிதர் இவர் ஒருவர் அழுது கொண்டு இருக்க இவர் சிரிக்கின்றாரே என்ன வென்று கேட்ப்போம் என அவர் அருகில் சென்று ஏன் இப்படி சிரிக்கின்றீர் உங்களுக்கே சரியாக படுகிறதா மற்றவர் அழுகையில் நீர் சிரிக்கின்றீரே என்று கேட்கையில் அவர் எந்த பதிலும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே இருந்தார்

சரி அழும் நபரிடமாவது கேட்போம், என்ன சார் உங்க பிரச்சனை நீங்கள் ஏன் அழுகிறீர்கள் அவர் ஏன் சிரிக்கிறார் ?

ஏன் சார் அந்த சோகத்த கேட்கிறீர்கள் நான் இங்கு வரும்பொழுது இப்பொழுது சிரிக்கிறாரே அவர் அழுது கொண்டு இருந்தார் நான் எனது சோகத்தோடு இங்கு வந்தேன் இவரை பார்த்து ஏன் அழுகிறீர்கள் என்றேன் அவரோ எந்த பதிலும் சொல்லாமல் ஒரு காகிதத்தில் எழுதி காட்டினர் எனக்கு காத்து கேட்க்காது வாய் பேச வராது எனது    பெற்றோர்கள் எனக்கு திருமணம் செய்ய ஆசைபடுகின்றனர் ஆனால் மற்றவர்களின் ஏளனம் அவர்களை மிகவும் மனமுடைய செய்கிறது எனக்கும் நல்ல வேலை கிடைப்பதில்லை குறைந்த சம்பளத்தில்தான் வேலை கிடைக்கிறது எல்லோரையும் போல் நானும் மற்றவர்கள் பேச கேட்கணும் நாமும் சரளமாக பேசணும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்றுதான் அழுகிறேன் என்று எழுதி காட்டினார். நான் உடனே கவலைபாடாதே நான் காது கேட்பதினால் படும் அவஸ்த்தைகளை எண்ணி தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுதான் இங்கு வந்தேன் உன்பாடு என்னைவிட எவ்வளவோ மேல் என்று எழுதிகாட்டினேன் அவரோ ஆர்வமாக காரணத்தை கேட்டார் நானும் எழுதிக்காட்டினேன்

நான் சரியாக படிக்கவில்லை நான் வேலை செய்யும் இடத்தில் எனது முதலாளி எந்தநேரமும் என்னை திட்டிக்கொண்டே இருக்கிறார் சம்பளம் தருவதே வேஸ்ட் என்கிறார், வீட்டுக்கு வந்தால் என் மனைவி இன்னும் மோசமாக உனக்கெல்லாம் எதற்கு கல்யாணம், ஒரு குடும்பம், சரியா சம்பாதிக்க தெரியல என்று திட்டிக்கொண்டே இருக்கிறாள் ஆகையால் நான் தற்கொலை செய்யலாம் என்றுதான் இங்கு வந்தேன் என்று  நான் எழுதியதை படித்ததுதான் தாமதம் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார் என்று நடந்ததை சொல்ல வந்த முன்றாவது நபருக்கு ஞானம் பிறந்தவராக தன்னுள் சிரித்துக்கொண்டார்.

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் ஒரு பணக்காரர் தமக்கு நிம்மதி இல்லை ஏழைகளிடம் பணம் இல்லாவிட்டாலும் கட்டாந்தரையில் படுத்தாலும் உறங்குகின்றனர் நாமோ பஞ்சனை இருந்தும் துயில் கொள்ள முடியவில்லை என்று புலம்புவார். ஏழையோ பணம் இருந்தால் எதையும் விலைக்கு வாங்கி விடலாம் பணம்  இல்லை என்றால் நாய் கூட மதிக்காது என்பர் தம்மிடம் இருப்பது பெரிதாக தெரியாது இல்லாதது பறித்தாய் பெரிதாக தெரியும். மனிதனின் குரங்கு புத்தி

கிடைத்ததை நலமென்போம் கிடைக்காததை இந்த பழமும் புளிக்குமா என்போம்  !?
மு.செ.மு.சபீர் அஹமது

Tuesday, May 21, 2013

மின்சாரத்தின் சாதனையும்... நுகர்வோர்களின் வேதனையும்...


திருமண அழைப்பு
மணமகன் : மின்சாரம்                                                                     மணமகள் : நுகர்வோர்

இன்றைய காலங்களில் மின்சார சம்பந்தப்பட்ட தேவைகள் எவ்வளவு அதிகரித்துள்ளதோ அந்த அளவுக்கு மின் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. மின் நுகர்வோர்களின் தேவைகளுக்கு ஏற்ப மின்சார விநியோகம் செய்ய முடியாமல் மின்சார வாரியம் பல வருடங்களாக திண்டாடி வருகின்றது, இதற்க்கு யார் காரணம், மின்சார வாரியமா அல்லது மின் நுகர்வோர்களாகிய மக்களா, இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டால் இரண்டு பக்கமும் தவறு இருக்குது, அதாவது மின் உற்பத்தியிலும் தவறு நடக்குது, மின் நுகர்வதிலும் தவறு நடக்குது.  இது இந்தியா முழுக்க தவறாமல் நடந்து வருகின்றது.

ஒரு பக்கம் பார்த்தால் மின்சார வாரியத்தை நோக்கி மக்கள் குறை கூறிக்கொண்டே இருக்கின்றனர், மறு பக்கம் பார்த்தால் மக்களை நோக்கி மின்சார வாரியம் குறை கூறிக்கொண்டே இருக்கின்றது, குறை கூறுவது பெரிய காரியமாக இருந்தாலும் அதை கூறுவதற்கு முன் எந்த குறைகளும் தன்னிடம் இல்லாமல் மின்சார வாரியமும் நுகர்வோர்களும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மின்வாரியமும் நுகர்வோர்களும் சேர்ந்து செய்யும் தவறுகளை எனக்கு தெரிந்தது மட்டும் இங்கே எழுதி உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகின்றேன்.

மின் நுகர்வோர்கள்
வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும்போது வீடுகளில் உள்ள மின் சாதனங்களைப் பொறுத்து ஒரு முனை மின் இணைப்பு அல்லது மும்முனை மின் இணைப்பு பெறுவது வழக்கம். ஒரு முனை மின் இணைப்பு பெற 25 வாட்ஸ் முதல் 3900 வாட்ஸ் வரை மின் பளு இருக்கலாம், மும்முனை மின் இணைப்பு பெற3901 வாட்ஸ் முதல் 5500 வாட்ஸ் வரை இருக்கலாம் அதற்க்கு நிர்ணயிக்கப்பட்ட டெபாசிட் கட்டணமும் இதர கட்டணங்களும் செலுத்த வேண்டும், அதற்குமேல் போகும் ஒவ்வொரு 1000வாட்ஸ் மின் பளுவுக்கும் ரூபாய் 600 வீதம் கணக்கிட்டு கூடுதலாக செலுத்த வேண்டி வரும்.

மேலே சொன்னதுபோல் வியாபாரகடைகள், தொழிற்சாலைகள், வழிபாட்டுஸ்தலங்கள், அடக்கஸ்தலங்கள், திருமண மண்டபங்கள், பொதுஇடங்கள், விவசாயங்கள், இன்னும் பிற மின் நுகரப்படும் இடங்கள் இவைகள் அனைத்துற்கும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மின் பளுவை கணக்கிட்டு கட்டணங்களும் செலுத்தப்பட்டு டாரிப் விகிதப்படி மின் இணைப்பு கொடுக்கப்படுகிறது.

வீடுகள் :
ஒரு முனை மின் இணைப்பு (சிங்கிள் பேஷ்) கேட்டு விண்ணப்பம் செய்கின்றனர், பரிசீலனைக்கு பின் மின் இணைப்பு கொடுக்கப்படுகின்றது. விண்ணப்பிக்கும்போது 3500  வாட்ஸ் மின் பளு என்று எழுதி கொடுக்கப்படுகிறது. அந்த மின் பளுதான் மின் வாரியத்தில் பதிவாகும், ஆனால் அதற்க்கு பின்பு என்ன நடக்குது தெரியுமா கொஞ்ச நாட்கள் கழித்து பிரிஜ், மின் மோட்டார், கிரைண்டர், ஏசி, டிவி, டிவிடி, சவுண்ட் சிஸ்டம், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், பிரிண்டர், இன்வேர்டார், வட்டார் ஹீட்டர், ரைஸ் குக்கர், அயன்பாக்ஸ், உடல் எடையை குறைக்க நடக்கும் கருவி, ஏர்கூலர், இப்படி படிப்படியாக மின் பளுவை 7000 வாட்ஸ் வரை கூட்டி வைக்கப்படிகிறது. இந்த கூடுதல் மின் பளு 3500 வாட்ஸ் மின் வாரிய கவனத்திற்கு வருவதில்லை.

விவசாயம் :
மும் முனை மின் இணைப்பு (த்ரீ பேஷ்) கேட்டு விண்ணப்பம் செய்கின்றனர், பரிசீலனைக்கு பின் மின் இணைப்பு கொடுக்கப்படுகின்றது. விண்ணப்பிக்கும்போது 5HP மின் மோட்டார் பளு என்று எழுதி கொடுக்கப்படுகிறது. அந்த மின் பளுதான் மின் வாரியத்தில் பதிவாகும், ஆனால் அதற்க்கு பின்பு என்ன நடக்குது தெரியுமா கொஞ்ச நாட்கள் கழித்து 5HP மோட்டாரை வெளியில் எடுத்து விட்டு 7.5HP மின் மோட்டார் பொறுத்தப்படுகிறது. மேலும் இதே மிசாரத்தை அனுமதிக்கப்படாத வகையில் வேறு உபயோகத்திற்கும் பயன்படுத்துகின்றனர், இந்த கூடுதல் மின் பளு2.5HP  மற்றும் அனுமதி இல்லாமல் வேறு காரணங்களுக்கு நுகரப்படும் மின்சாரம் இவை அனைத்தும் மின் வாரிய கவனத்திற்கு வருவதில்லை.

மேலே சொன்னதுபோல் வியாபாரகடைகள், தொழிற்சாலைகள், வழிபாட்டுஸ்தலங்கள், அடக்கஸ்தலங்கள், திருமண மண்டபங்கள், பொதுஇடங்கள், விவசாயங்கள், இன்னும் பிற மின் நுகரப்படும் இடங்களில் மின் வாரிய கவனத்திற்கு தெரியாமல் மின் பளுவை கூட்டிக்கொண்டே போகின்றனர். இப்படியே கூட்டிக்கொண்டே போனால் கூடுதல் மின்சாரம் தேவைப்படும், ஆனால் மின் விண்ணப்பத்தில் என்ன மின் பளு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டதோ அந்த மின் பளுவுக்கு ஏற்ப ட்ரான்ஸ்பார்மர்களை நிறுவி மின் விநியோகம் செய்யப்படுகின்றது.

மேலே சொன்னபடி ஏற்படுகின்ற கூடுதல் மின் பளு, ஓவர் லோடாக மாறுகின்றது, ஓவர் லோடாக மாறும்பொழுது பியூஸ் தாங்குவது இல்லை, ட்ரான்ஸ்பார்மர் கூடுதல் மின் பளுவை தாங்க முடியாமல் பயங்கர சூடாகி வெடிக்கவும் செய்கின்றது, அதிக மின் பளுவால் மின் கம்பிகள் சூடாகி அறுந்து விழுந்து பொதுமக்கள் உயிரை வாங்கி விடுகின்றது, மேலும் மின்சாரத்தை திருடுவது, இன்னும் அனேக குற்றங்களை நுகர்வோர்கள் செய்வதினால் பல அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றது.

மின் நுகர்வோர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:
மின் நுகர்வோராகிய நாம் மின் இணைப்புகளையும், மின் மீட்டருக்கும் மின் கம்பத்திற்க்கும் இடையில் உள்ள சர்வீஸ் ஒயர்களையும், எர்த் இணைப்புகளையும்  வருடத்திற்கு இரு முறை அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரைக் கொண்டு பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கூடுதலாக மின் பளு தேவைப்பட்டால் மின் வாரியத்தை அநுகி ஆலோசித்து அதற்கான வழிமுறைகளை சரிசெய்து கொள்ள வேண்டும், தலைக்குமேல் மின் கம்பிகள் செல்லும் பகுதிகளில் அதற்க்கு நேராக செடிகளையோ, மரங்களையோ நடுதல் கூடாது, மின்சாரத்தை தவறுதலாக உபயோகப்படுத்தக் கூடாது, மின் கம்பிகளில் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் உரசுவதுபோல் இருந்தால் உடனே மின்வாரியத்தை தொடர்பு கொண்டு தகவல் கொடுக்க வேண்டும். குழந்தைகள் தொடும் உயரத்தில் மின் சாதனங்களை வைத்தல் கூடாது.

விவசாயத்திற்கு மின்சாரம் முற்றிலும் இலவசம், இலவசமாகக் கிடைக்கும் மின்சாரத்தை பல இடங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இது கடுமையான குற்றம், நுகர்வோர்கள் இது விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மின் வாரிய கவனத்திற்கு :
அ) மின் இணைப்பு கொடுக்கும் முன், விண்ணப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களை சரிபார்த்தல் வேண்டும்.

ஆ) கட்டிடம் முழுவதுமாக கட்டப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

இ) ஒயரிங் சம்பத்தப்பட்ட அனைத்து இணைப்புகளும் எர்த் உள்பட சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும்.

ஈ) விண்ணப்பிக்கப்பட்ட மின் பளுவுக்குமேல் கூடுதலாக வேறு ஏதும் மின் பளு பொருத்தப்பட்டுள்ளதா என்று உறுதி படுத்தவேண்டும்.

உ) மின் இணைப்பு கொடுத்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மின் பளு ஏதும் கூடி இருக்கின்றதா என்று பரிசோதனையில் இறங்க வேண்டும், அப்படி நுகர்வோர்கள் யாரேனும் தவறு செய்து இருந்தால் தக்க அபராதம் விதிக்க வேண்டும்.

ஊ) மின் வாரியத்திற்கு தெரியாமல் நுகர்வோர்கள் மின் பளுவை அதிகரித்தால் சட்டப்படி குற்றம், ஆகவே கூடுதல் மின் பளு தேவைபட்டால் மின் வாரியத்திற்கு தெரியப்படுத்தி சரிசெய்து கொள்ளுங்கள், போன்ற விழிப்புணர்வு விளம்பரங்களை நுகர்வோர்களுக்கு சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

எ) அந்தந்த பகுதியில் உள்ள ட்ரான்ஸ்பார்மர்களில் எவ்வளவு மின் பளு நுகரப்படுகின்றது என்பதை கருவிகள் கொண்டு அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.

ஏ) மாதாந்திர பராமரிப்பிற்காக எடுக்கும் நேரத்தை சரியான முறையில் பயன் படுத்த வேண்டும்.

ஐ) தங்குதடையின்றி பணிகள் நடைபெற மின் வாரிய ஊழியர்களுக்கு தேவையான மூலப் பொருள்களையும் உதிரிப் பாகங்களையும் தடையில்லாமல் வழங்க வேண்டும்.

ஒ) மின்சார வாரிய அலுவலகங்களில் இரவு நேர பணிகளுக்கு ஆட்கள் கிடையாது, அப்படி ஆட்கள் இருந்தாலும் அவசர தேவைகள் நிமித்தம் நுகர்வோர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு  முறையான பதில் கொடுப்பது கிடையாது, அல்லது தொலைபேசி ரெசிவரை எடுத்து கீழே வைத்து விடுவது, இது மாதிரி தரங்கெட்ட செயல்கள் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.

இன்னும் நிறைய எழுதலாம், வேண்டாம் இதுவே போதும், அப்புறம் அதுவே ஓவர் லோடாக மாறிவிடும்.

மேலே சொல்லப்பட்ட அனைத்தும் முறையாக நடக்குதா அல்லது தவறுதலாக நடக்குதா ? மின் வாரியமும் மின் நுகர்வோகளும் சிந்திக்க வேண்டும்.

இனி யாரை யார் குறை கூறப்போகின்றனர் ?

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Monday, May 20, 2013

[ 2 ] வழக்குக் கூண்டில் வாய்பொத்தி நிற்கும் வறுமைக்கோடு.

குறுந்தொடர் : பகுதி - II 

இந்தக் குறுந்தொடரின் முதல் பகுதியை இப்படி முடித்து இருந்தேன். 

//இந்த அளவு கலோரி உணவு உண்ட இந்த வறுமைக்கோடு என்ற பாவப்பட்ட ஜீவன்,  இந்த விவாதம் நடக்கும் நமது வழக்கு மன்றத்தில் வாய் பொத்தி நிற்கிறது காரணம் தளர்ச்சி. பேசக்கூட முடியவில்லை. 
இந்த விவாதம் பொருந்துமா ? தொடர்ந்து பார்க்கலாம்.//

இப்போது பார்க்கலாம்...

கிராமப்புறத்தில் வசிப்பவர்கள் ரூ. 22/= சம்பாதித்து 2400 கலோரி உண்டும் , நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் ரூ. 29/= சம்பாதித்து 2200 கலோரி உண்டும் ஜீவித்து இருக்கலாமென்றும், அதற்குமேல் சம்பாதிப்பவர்கள் வறுமைகோட்டுக்கு மேலே உள்ளவர்கள் என்று கருதி அரசு வழங்கும் உதவித்திட்டங்கள் வழங்கப்படத் தேவை இல்லை என்றும் கூறுகிறது மேதாவிகளை உள்ளடக்கிய திட்ட கமிஷன்.

திட்ட கமிஷன் சில அடிப்படியான காரணிகளை தனது கவனத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் இப்படி ஒரு  தான்தோன்றித்தனமான அளவுகோலை வழங்கி இருப்பது இத்தகைய மத்திய அரசின் அமைப்புகள் எந்த அளவுக்கு  நாட்டின் நிலையையும், நாடித்துடிப்பையும் உணர்ந்து இருக்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம். ஒரு பானை சோற்றுக்கு இந்த ஒரு சோறு பதம். 
வறுமைக்கோட்டிற்கு வரையறை வகுக்கின்ற பொருளியல் மேதைகள் கீழ்க்கண்ட சில காரணிகளை அடிப்படியாக வைத்து அளவிட வேண்டுமென்று பரிந்துரைக்கிறார்கள்.  

1. ஒரு தனி குடும்பத்துக்கு  பயிரிடத்தகுதி படைத்த விவசாய நிலம் இருக்கிறதா ? 

2. குடி இருக்க வீடு இருக்கிறதா ?

3. சுகாதாரமான கழிப்பறை வசதி இருக்கிறதா ?

4. தொலைக்காட்சிப்பெட்டி இருக்கிறதா ?

5. ஒழுங்கான வருமானம் தரும் வேலைக்குச்செல்பவர்கள் உள்ளனரா ?

6. பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறதா ?

7. குடும்பத்தின் உறுப்பினர்களில் விதவைகள், விவாகரத்து ஆனவர்கள் உள்ளனரா ?

8. பாதுகாக்கப்படவும், பராமரிப்பு தேவையும்பட்ட  முதியவர்கள் உள்ளனரா?

9. குடும்பத்தில் ஊனமுற்றவர்கள், மனநலம் குன்றியவர்கள் உள்ளனரா ?

10. பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகள் உள்ளனரா ?

11. அளவிடும் காலகட்டத்தில் அமுலில் உள்ள அரசின் உதவிகள் என்னென்ன ? 
ஆகிய காரணிகள் முக்கியமாக பரிசீலிக்கப்பட வேண்டியவைகளாகும். 
இப்படி எதையுமே கருதாமல் 'மொட்டைத் தத்தன் குட்டையில் விழுந்தான்' என்று ஒரு அளவுகோலை அறிவிக்கிறது முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனரை – இந்நாள பிரதமரை- தலைவராகக்கொண்ட இந்திய திட்ட கமிஷன். ஒருவேளை இந்த கமிஷனில் பணியாற்றும் மேல்சாதியினர் தரும் அறிக்கைகளை இதன் தலைவரும், துணைத்தலைவரும் படிக்காமலேயே கைஎழுத்துப்போட்டு விடுகிறார்களோ என்று பாராளுமன்றத்தில் சமாஜ்வாடி கட்சியின் ஒரு உறுப்பினர் எழுப்பியுள்ள சந்தேகம் நமக்கும் வருகிறது. 
ஒரு லிட்டர் பால் என்ன விலை விற்கிறது ? ஒரு கட்டுக்கீரையின் விலை என்ன ? ஒரு கோழிமுட்டையின் விலை இவர்களுக்குத் தெரியுமா ? ஒரு உருளைக்கிழங்கின் விலை இவர்கள் அறிந்தார்களா ? இவைகளை விலை கொடுத்து வாங்கி சாப்பிட முடியாதவன் ஒரு உழைக்கத் தகுதி பெற்ற உடல் நலத்துடன் வாழ முடியுமா ? இதற்கு தகுதியற்ற நோஞ்சான்களால் உழைக்க முடியுமா ? உற்பத்தி பெருகுமா? இலவச அரிசி, கோதுமை  இந்தியா முழுதும் வழங்கப்படுகிறதா? இவர்களின் வாதப்படி 2200 கலோரியில் உயிர்தான் வாழமுடியும். உழைக்க முடியுமா ? உயிர் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்தால் போதுமா ? இப்படிப்பட்டக் கேள்விகள் பெருகும். ஆனாலும் பதிலளிக்க எந்த பொறுப்பான பதவி வகிக்கும் கொம்பனுக்கும் தகுதியிருந்தும் திராணி இல்லை.

இன்று நாட்டில் நிலைமை ஏழைகள் அரை வயிற்று சாப்பாட்டுடன் அல்லல்படுகிறார்கள். திரு. அர்ஜுன் சிங் குப்தா என்ற பொருளாதார அறிஞர் ஒரு ஆய்வு வெளியிட்டுள்ளார். அதில் சாதாரண மக்களில் – அதாவது ஒழுங்கற்ற வருமானம் வருபவர்களில் என்று வைத்துக்கொள்ளலாம்- 23% மட்டுமே ஓரளவு வாழ்க்கைத்தரத்துடன்   வாழ்வதாகவும் பாக்கி 77%  வறுமையில்தான் வாழ்வதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். நாம் ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு நமது ஊரை அல்லது சுற்றுப்பகுதிகளை இந்தக்கண்ணோட்டத்துடன் பார்த்து வருவதாக வைத்துக்கொண்டால் திரு. அர்ஜுன் சிங் குப்தா குறிப்பிடுவது உண்மை என்று நாமே உணரலாம். அப்படியே   கவியன்பன் அதிரை அபுல் கலாம் அவர்களின் இந்த அர்த்தமுள்ள கவிதை வரிகளையும் உண்மை என உணரலாம். 

''வலியோ ரெளியோர் மீதினிலே
          வகுத்து வைத்தக் கோடாகும்
பலியாய்ப் போகு மெளியோரும்
         பயமாய்ப் பார்க்கும் கேடாகும்

வேலி தாண்டி வரவியலா
         விரக்தித் தருமே இக்கோடும்
நீலிக் கண்ணீர் வடிக்கின்ற
       நீசர் செய்த பெருங்கேடாம்''- 

விலைவாசிகள் அன்றாடம் ஏறிக்கொண்டிருக்கின்றன என்றும்- இந்த ஆண்டு தரப்பட்ட மாதச்சம்பளம் விலைவாசி அகவிலைப்படிகளோடு ஒத்துப்போகவில்ல என்றும் காரணம் காட்டி வருடத்துக்கு இருமுறை குடியரசுத்தலைவர், பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள்  ஆகியோரின் அகவிலைப்படியையும் சம்பளத்தையும்  உயர்த்திக்கொள்ள உபயோகிக்கும் அதே அளவுகோலை ஏழை மக்களுக்கு உதவும் திட்டங்களுக்கு பயன்படுத்த மறுக்கும் காரணம் என்ன? அந்த அடிப்படையில் பார்த்தால் வருடா வருடம் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களின் எண்ணிக்கை கூடத்தானே வேண்டும்? ஏன் குறைகிறது? 
அதுமட்டுமல்லாமல் அவர்களே தந்து இருக்கிற கீழ்க்கண்ட புள்ளி விபரங்களைப் பாருங்கள். 

2004- 2005  ஆண்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் 37.2%
2010-2011  ஆண்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் 29.8%

மேலேகண்டுள்ள புள்ளிகளின் அடிப்படையில் ஐந்து வருட இடைவெளியில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்வோரின் எண்ணிக்கையின் சதவீதம் குறைந்து இருக்கிறது. அதன் பொருள், அதிகம் பேர் அதிகம் பொருளீட்டும் நிலைமை உருவாக்கி இருக்கவேண்டும். இதற்கு மாறுபாடாகக் காட்டி இருப்பது புதுமையிலும் புதுமையானதும் புதிரானதுமான அலுவாலியா படித்த பொருளாதாரம். (இவங்க செய்யுற ஒவ்வொரு காரியமும் நெஞ்சைப் பொக்குதே!). வருமானத்தை குறைத்துக்காட்டி வருமானவரி கட்டாமல் ஏமாற்றுவோருக்கு வழங்கப்படும்  தண்டனையை இந்த நீசர்களுக்கும் வழங்க வேண்டும்.

காரணம் இல்லாமல் காரியம் நடக்காதே! இதெற்கெல்லாம் என்ன காரணங்கள் ?

காரணங்கள் இருக்கின்றன.. இந்தக்காரணங்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களின் நலன்களை அடகுவைக்கும் காரணங்கள்.

அவை என்னென்ன ? தொடர்ந்து பார்க்கலாம்... 

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

Saturday, May 18, 2013

[ 10 ] உள்ளம் கேட்குமே !? MORE…

காதல்..! காதல் என்றால் ஒரு ஈர்ப்பு ! எனக்கு எழுத்தின் மேல் காதல்… சிலருக்கு பணத்தின் மேல் காதல்…தொழில், கல்வி என்று பலவிதமான நடவடிக்கை மேல் காதல் ஏற்படும் அவைகள் காலம் காலமாய் உணர்வோடு உள்ளத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ஆனால் அதற்காக தன்னை மாய்த்துக்கொள்ள துணிய மாட்டார்கள். இன கவர்ச்சியால் ஏற்படுகின்ற காதல் உள்ளத்தை உருக்கும். காதலாக உறவை உதறி தள்ளி தான் நேசிக்கும் ஒருவனோடு அல்லது ஒருத்தியோடு ஓடிச்செல்ல வைக்கும் நிலைக்கு தள்ளி விடுகிறது.

இதற்கு காரணம் இயற்கையை ஒட்டிய உணர்வு ! உயிரினங்கள் இன பெருக்கத்திற்கு தயார் ஆகி விட்டால் உடனே துணை தேடிச்செல்லும். ஆதி மனிதனும் அப்படி தான் கற்கால மனிதன் தனக்கு துணை கிடைக்க சிற்றின்பம் நிறை வேற மிகவும் சிரமப்படுவான் என ஒரு ஆவணத்தில் படித்துள்ளேன்.

இரைதேட இரண்டு ஆதி மனிதன் சென்றால் போதிய உணவுக்கு இருவரும் சண்டையிட்டு ஒருவன் சாப்பிடுவான் மிஞ்சியதை தோற்றவன் சாப்பிடுவான் .ஆனால் ஒரு பெண்ணை கண்டு அவளை புணர முற்படும் ஆதி மனிதன் தனிமையை விரும்புவான் சில தருணங்களில் இரண்டு ஆண் ஒரு பெண் என்ற சூழல் அந்த தருணத்தில் இரண்டு ஆணுக்கும் போட்டி ஒருவன் வெல்லுவான் மற்றவன் கொல்லபடுவான். மற்றவன் செயல் இழக்கும் வரை அதி மனிதனின் ஆவேச தாக்குதல் தொடரும்...

இது கற்கால மனிதனின் உள்ளத்தின் நிலை பாடு. நாகரிக வளர்ச்சி அடைந்த பின்னர் ஆண் பெண் என்ற கட்டுப்பாடு பல வகையான கலாச்சாரம் என்று வந்து மக்களை நல்ல வழிக்கு கொண்டு வந்தாலும் ஆண் பெண் என்ற ஈர்ப்பு இருக்கவே செய்கிறது.

* மன நிலையை ஓர்மைப்படுத்தி, மத நம்பிக்கை அடிப்படையில் இறைவனின் தண்டனைக்கு ஆளாக்கப்படுவோம் என்ற நம்பிக்கை உள்மனதில் ஆழமாய் பதிய பட்டஆண்,பெண்...

* குல கோத்திரம் என்ற அடிப்படையில் அந்நிய ஆணிடம் தொடர்பு நமது குலத்திற்கு இழுக்கு என்று என்னும் ஆண், பெண்...

இவர்களை காதல் என்ற மாய வலையால் சிக்க  வைக்க முடியாது. நான் உளவியல் ரீதியாக கூற வந்த திசை விட்டு மாறி செல்வதாக நினைக்கிறேன்.

சரி விசயத்திற்கு வருகிறேன்...

1980 களில் இந்திய டுடே தமிழ் பதிவு வந்த சமயம் வாஸந்தி என்ற எழுத்தாளர் தமிழ் பதிப்புக்கு பொறுப்பாசிரியராக இருந்த சமயம் ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட்டு இருந்தார். காதல் என்பது மாயை அமர காவியம் என்று போற்ற படுகின்ற அம்பிகாபதி, அமராவதி காதல்... சலீம் அனார்கலி காதல் இன கவர்ச்சிதான் காதல். இவர்களின் காதல் வெற்றி பெற்றிருந்தால் விவாகரத்தில் தான் முடிந்திருக்கும். என்று நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார்கள்.

நான் கூறியது போல் ஒரு தொழில் மீதோ .ஒரு கலை மீதோ  இருக்கும் காதல் ஈர்ப்பின் வயதை விட ஆண் பெண் இன கவர்ச்சி காதல் அற்ப ஆயுளை கொண்டது. வெற்றி பெற்றிருந்தால், கணவன் மனைவியாகி சண்டையிட்டு கொண்டிருப்பார்கள்.

தூர நின்று ஏங்கிய ஈர்ப்பு அது அடைந்து விட்டால், சலிப்பாக மாறி விடும் ஒரு கலை மீது ஆர்வம் ஏற்பட்டு அதில் சாதிக்க வேண்டும் என்று ஒருவர் தன்னை ஈடுபடுத்தி கொள்ளும் தருவாயில்  அதன் இலக்கை அடைய கால அவகாசம் ஒன்றும் இல்லை சிலர் இளம் வயதிலேயே பிறரால் இனம் காண பட்டு புகழ் அடைவர் சிலர் முதுமை நிலையில் இனம் காண பட்டு வல்லுனராக போற்ற படுவர் அது வரை தான் ஈடு படும் துறை மீது உள்ள காதல் ஓயாது. ஆனால் ஒருவன் ஒருத்தி மீது கொண்ட காதல் உடனே காதலிக்கு சென்றடைய வேண்டும். அவசர நிலையில் தனது எதிர்காலம் என்ன ? என்ற சிந்தனைகளை ஓரம் கட்டி விட்டு ஒருத்தி பின்னால் சற்ற எத்தனிக்கும் ஒருவனின் வாழ்க்கை சின்ன பின்னமாகி போய் விடுகிறது.

தான் காதலிக்கும் ஒருத்தியை ஈர்க்க இளைஞன் தன்னை பல வகையில் தயார் படுத்தி கொள்கிறான் பறவைகளை பிடிக்க வேடன் வலை விரிப்பான் தானியங்கள் பல தூவியும் வன விலங்குகளை பிடிக்க அதற்குதகுந்த இரையை வைப்பான் அது போன்று கன்னியவள் கரம் பிடிக்க காளையவன் போடும் வேடங்கள் பல அதில் ஒன்று சாதுவான தோற்றம் படிக்கும் மாணவனாக... கவிஞானாக... பல கலை கற்றவனாக, காசுள்ள பணக்காரனாக தன்னை காட்டிக் கொள்வான்.

முதலில் தூது விடுவது கவிதை மூலமே ஒருத்தி அகங்காரம் பிடித்த பெண்ணாக இருப்பாள்.அவளை பார்த்து

"அன்பே! நீ
'அமைதியின் ஆளுமை' என்பான்...பிறர் வசீகரிக்கும் அழகு அவன் கண்ணுக்கு தெரிவதால்... அந்த பெண்ணின் அகங்காரம் கூட "அமைதியின் ஆளுமையாய்" தெரிவதுதான் வேடிக்கை !

காதல் மணந்த பின் கசப்பது ஏன் !? அடுத்த ஆக்கத்தில் பார்போம்...
இன்னும்  வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, May 17, 2013

திருப்பம்

தடுக்கி விழுந்தால் தயங்காது மீண்டும்
அடுத்து வருமே அழகு திருப்பம்
இடுக்கண் வருதல் இயம்பும் திருப்பம்
படுத்து விடாது பற.

வாய்ப்புகள் வந்தால் விரைவுடன் பற்றுக
வாய்த்திடும் வேளை வருதல் திருப்பமே
ஒய்ந்திடா வண்ணம் ஒதுங்கும் திருப்பத்தை
ஆய்ந்திட வேண்டுமே ஆங்கு

அனுதினம் நம்மை அணுகும் பயிற்சி
அனுபவம் என்னும் அழகு திருப்பம்
மனிதனாய்ச் செய்யும் மடைமை திருந்த
புனிதனாய் மாற்றும் புவி

வண்டியின் வேகம் வளைவின் திருப்பத்தில்
தண்டனைச் சொல்லும் தவற்றின் திருப்பத்தில்
பண்டிதன் ஆதல் படிப்பின் திருப்பத்தில்
கண்டவுண் மையே கவி
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 09-05-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் ஒலிப்பேழை இதோ...

Thursday, May 16, 2013

உலகம்

சிரியுங்கள்
இந்த உலகம்
உங்களுடன் சிரிக்கிறது

அழுங்கள்
நீங்கள் மட்டுமே
அழுகிறீர்கள்

பாடுங்கள்
அந்த
மலைகளும் உங்களுக்குப்
பதிலளிக்கின்றன

பெருமூச்செறியுங்கள்
அவை
காற்றினில்
காணாமல் போகின்றன

கொண்டாடுங்கள்
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்

கவலைப்படுங்கள்
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை

வாழ்வின் அமுதங்களை
நாம்
எல்லோருடனும்
பங்கிட்டுக்கொள்ளலாம்

ஆனால்-
நம்மின் சோகத்தை
நாம் மட்டுமே விழுங்கவேண்டும்

விருந்தளியுங்கள்
உங்கள் அறை
அமர்க்களப்படுகிறது

கையேந்துங்கள்
எங்கும்
மனிதர்களே
தென்படமாட்டார்கள்

வாழ்வின் வெற்றி
உங்களை வாழச்செய்கிறது

ஆனால்-
அதன் தோல்வி
உங்களை சாகடிப்பதில்லை

ஆழப்பதியும்
அறிவுரை வழங்குகிறது

இன்று வரும்
துயரங்களைக் கண்டு
ஓடி ஒளிந்தால்

நாளை
நம் முகவரி விசாரித்து வரும்
இன்பங்களை
யார் வரவேற்பது

நம்பிக்கை கொள்ளுங்கள்
அதுவே
எல்லாவற்றையும் வெல்லும்
அருமருந்து

அன்புடன் புகாரி

Wednesday, May 15, 2013

[ 11 ] தொழில் புரிவோம் வாருங்கள் [ முற்றும் ]

கட்டுரையின் துவக்கத்தில் கோல்டு மெடலிஸ்ட் சைக்கிள் பயணம் பற்றி ஆரம்பித்தோம் நன்கு படித்தவர்க்கு தன்னம்பிக்கை அவசியம் ஆனால் அதுவே தலைக்கனமாகக் கூடாது தாம் வேலை செய்யும் இடத்தில் தனது தொழில் கல்வியின் பெருமையால் இறுமாப்போடு வேலை செய்யலாம் அதில் பாதகம் தெரியாது சொந்தமாய் தொழில் துவங்கும் போது பணிவு, ஆளுமை திறன் இரண்டறக் கலந்து இருந்தால் முதலாளிக்கு உண்டான மிக சிறப்பான குணமாகும்.

ஒரு மனிதனால் ஒரே நேரத்தில் ஏழு விதமான பிரச்சனைகளை மட்டுமே சிந்திக்கமுடியும் [ தனி நபருக்கேற்ப்ப + / - இரண்டும் மாறுபடும் ] ஒரு சாதாரண மனிதனால்  நான்கு விஷயங்களை மட்டும் தான் யோசிக்க முடியும். ஒரு கட்டாய சூழ்நிலை வரும்போது மன அழுத்தம் ஏற்பட்டு விரக்தி உண்டாகும். ஆகையால் சுயதொழில் செய்ய முற்படுவோர் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும்போதே தம்மை தயார் படுத்திக்கொள்ளல் வேண்டும். இந்த விஷயம் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது.

கட்டுரையின் 3 வது பாகத்தில் ஒரு பொருள் தயாராக எத்துனை தொழிற்ச்சாலைகளில் சென்று வருவதை தெரிந்து வைத்துக்கொள்வதும் அதன் விபரங்களை தெரிவதும் அவசியம் அதுபோல் நம் நிறுவனத்திற்கு பணியாள் சேர்க்கையில் மிக கவனம் தேவை. 

வெளிநாட்டு சம்பாத்தியக்காரரும் உள்ளூர் தொழில் செய்பவரும் கலந்துரையாடலை நான்காம் பாகத்தில் குறிப்பிட்டு இருந்தோம் தொழில் செய்ய ஆசை மட்டும் போதாது அனுபவம் மிக அவசியம். ஆசை தேடலுக்கு உந்து சக்தி. கிடைத்த தொழிலை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்ட இருக்க வேண்டும், புதிய தொழில் நுட்பத்தை புகித்திக்கொண்டே இருக்கவேண்டும், புத்தரைப்போல் ஆசைப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும் [ஆசையை ஒழிக்க ஆசைப்பட்டாரல்லவா] ஆசையும் ஒரு முதலாளிக்கு மிகப்பெரிய சொத்து. மனச்சோர்வு கூடாது  தடைக்கற்களை படிக்கற்களாய் மாற்ற வேண்டும்.

பிறர் ஆலோசனைகளை முழுமையாய் செயல்படுத்தக்கூடாது ஆலோசனை கூறுபவரின் அனுபவம் 10 வருடங்களுக்கு முந்தியதாய் இருக்கும் கால மாற்றம் அவரின் அனுபவம் இன்றைய சூழலுக்கு ஒத்து வராமலும் போகலாம் சுய அறிவு 75% என்றால் 25% பிறர் ஆலோசனைகளாய் இருக்கலாம் 100% பிறர் ஆலோசனைகளாய் மட்டும் இருக்கக் கூடாது சிறந்த தொழிலதிபருக்கு சுயஅறிவு கூடுதல் சதவிகிதமாய் இருக்கவேண்டும். சட்டென புரியும்  தன்மை விரைவாக முடிவெடுக்கும் அறிவு சிறந்த வியாபாரிக்கு அழகு.

விளம்பரத்தில் கவனம் அவசியம்,  முதலாளி தொழிலாளி உறவுகள்  மிக அவசியம், கல்வியாளர்களின் பங்கும் அவசியம் கணக்கு தணிக்கைக்கு ஆடிட்டர் அவசியம்,  சட்ட ஆலோசனைகளுக்கு வக்கீல்கள் அவசியம், தொழிலில் ஏற்படும் இடர்பாடுகளுக்கு அனுபவஸ்தர்களின் உதவி அவசியம், இதற்கும் மேலாக இறைவன் அருள் மிக அவசியம்.   

நோக்கம், சிறப்பு, முயற்ச்சி இவைகள் தான் நல்ல தொழிலதிபரை உருவாக்குகின்றது. சுய தொழிலின் சிறப்புகள் பல உண்டு. கடின உழைப்பிற்க் கேற்ற சம்பாத்தியம், அடிமைத்தனமில்லா பணி, நினைத்த நேரத்தில் விடுப்பு எடுக்கலாம், கெளரவம், அதிக சம்பாத்தியம் இப்படி நிறைய இருக்கின்றது 

இதில் அதிக சம்பாத்தியத்தை மட்டும் நோக்கமாக கொண்டவர் மனிதாபிமானம் அற்றவராய் திகழ்வார். அடிமைத்தனம் இல்லாமை,  நினைத்த நேரத்தில் விடுப்பு. இந்த இரண்டையும் நோக்கமாக கொண்டவர் தொழிலில் சோபிக்க மாட்டார் கடின உழைப்பிற்கேற்ற ஊதியம், கெளரவம் இவைகளை நோக்கமாக கொண்டவர் நல்ல வியாபாரி ஆவார்.

இறைவன் அருளால் நாம் அனைவரும் சிறந்த மனிதாபியாக நல்ல வியாபாரியாக உருவாகிடுவோம் உருவாக்கிடுவோம்.                                                                                                                                                                   

முற்றும்
மு.செ.மு.சபீர் அஹமது

எனக்கு நேரமே பத்தலைங்க...

எனக்கு நேரமே இல்லை’ என்று நாம் சொல்வது வாடிக்கை. ஆனால் அப்படிச் சொல்வதில் உண்மை இல்லை என்பதுதான் உண்மை. காலை எழுந்தவுடன் ஒவ்வொருவர் கையிலும் அரிதான ஒரு செல்வம், இந்த தேசத்தின் முதல் குடிமகன் முதல் கடைகோடி மனிதன் வரை அனைவருக்கும் சமமாக வழங்கப்படுகிறது. அது தான் நாளொன்றுக்கு வழங்கப்படும் 24 மணி நேரம். இந்த ஒன்றில் மட்டுமே உலகெங்கும் சம தர்மம் நிலவுகிறது.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்” என்பது குறள். இது பொருட் செல்வத்துக்கு மட்டுமன்று, நேரச் செல்வத்திற்கும் பொருந்தும் நேரத்தை அளவறிந்து செலவு செய்யாதவனுடைய வாழ்க்கை இருப்பது போல் தோன்றினாலும் இல்லாமல் அழிந்துவிடும். நேரத்தை மிகுந்த பயனுள்ளதாக்கிக் கொள்ள மேற்கொள்ளும் வழிமுறையைத்தான் நேர நிர்வாகம் என்கிறோம்.

எதனோடும் ஒப்பிடமுடியாத அளவுக்கு மதிப்புமிக்க நேரத்தை எப்படியெல்லாம் நிர்வகித்து வாழ்வை வளப்படுத்திக் கொள்வது என்ற விழிப்புணவர்வை ஏற்படுத்தி அதற்கான வழிமுறைகளை கோடிட்டு காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். முதலாவதாக நேரத்தை சிறந்த முறையில் கையாளுவதற்கான சில வழிறைகள்;

நேரத்தை நிர்வகிக்க நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் பட்ஜெட் தாயரிப்பது. அதாவது நேரத்திற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது. ஒவ்வொரு நாளும் வரவு 24 மணி நேரம் அதை உடல் ஆரோக்கியத்திற்கு பொருள் தேடுவதற்கு, படிப்பதற்கு, உற்சாகத்திற்கு, ஓய்விற்கு உறக்கத்திற்கு என்று ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்க வேண்டும்.

பணிகளில் அவசரப்பணிகள் எவை என்றும் அவசியப் பணிகள் எவை என்றும் வகைப்படுத்தி செயல்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்கப்பட வேண்டியவை அவசரப்பணி. நமது இலக்கை அடைய உதவும் பணிகள் அவசியப் பணிகள். அவரசப் பணிகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும். அவசியப்பணிகளை ஆற அமர யோசித்து செய்ய நேரம் உண்டு.

நாமே எல்லாவற்றையும் செய்து முடிக்க முயற்சிக்கக்கூடாது. அது தோல்வியில்தான் முடியும். நம்மால்தான் சிறப்பாக செய்ய முடியும் என்று எண்ணுவது தவறு. உரிய முறையில் பொறுப்புகளைப் பிறருக்கு பகிர்ந்து அளிக்க பழக வேண்டும்.

இப்போதெல்லாம் தொலைபேசி மற்றும் அலைபேசியின் உபயோகத்தை விட தொந்தரவுகளே அதிகமாகி வருகின்றன. தொலைபேசியில் எப்போது, எப்படி, எவ்விதம் பேசுவது என்பதற்கு ஒரு நெறிமுறைவகுத்துக் கொண்டால் ஒழிய நேரத்தை சேமிக்க முடியாது.

ஒரு நல்ல செயலைச் செய்ய கால நேரம் பார்க்கக்கூடாது. நல்லதுக்கு காலமில்லை’ என்ற முதுமொழி கூறுவது இதைத்தான். ஒவ்வொரு நாளும் ராகு காலம், எமகண்டம், என்று பல மணி நேரத்தை பலர் எந்தக் காரியமும் செய்யாமல் வீணாக்கி விடுகின்றனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, அஷ்டமி, நவமி, பாட்டிமை, செவ்வாய்க்கிழமை என்று பல நாட்கள் வீணாக்கப்படுகிறது. இக்கணக்கின்படி ஆண்டில் 168 நாட்கள் கெட்ட நாட்கள். இப்படி நாள்தோறும் பல மணிநேரமும் மாதந்தோறும் பல நாட்களும் வீணாக்கப்பட்ட நாட்களை வாழ்நாள் முழுவதற்கும் கணக்கிட்டால் ‘வாழ்க்கையில் இவ்வளவு நாட்களை வீணாக்கிவிட்டோமா!’ என்று மலைப்பாக இருக்கும்.

எந்தவொரு செயலுக்கும் பொருள் மற்றும் பணத்தைப் போல காலம் என்பதுவும் ஒரு முதலீடு காலத்தின் அடிப்படையில்தான் முதலீடு ‘நீண்ட கால முதலீடு, குறுகிய கால முதலீடுய என்று வகைப்படுத்தப்படுகிறது. காலச்செல்வம் அனைவருக்கும் எளிதாக, இலவசமாக கிடைக்கக்கூடிய ஒன்று. அதனை சிறப்பான வழியில் முதலீடு செய்ய வேண்டும்.

பொழுதுபோக்கு’, ‘பொழுதைக் கழிப்பது’ என்று கூறுவதே தவறு. வெற்றிக்கு முதல் தகுதி பொழுதை நல்ல வழியில் பயன்படுத்துதலே ஆகும். போனால் வராத பொழுதை நாம் போற்றி வாழ பழகிக் கொள்ள வேண்டும். கடவுளால் தரப்பட்ட அரிய கொடை பொழுது. அதன் அருமை தெரியாதவர்கள்தான் ‘பொழுது போகவில்லை’ என்று புலம்புவார்கள். காலத்தின் அருமை தெரிந்தோர் ‘பொழுது போதவில்லை’ என்று வருந்துவார்கள்.

வாழ்க்கைப் பாதையில் நாம் தொடர்ந்து முன்னேற்ற உழைப்பையும் மன உற்சாகத்ததையும் விடா முயற்சியையுமே துணையாகக் கொண்டு, காலநேரம் நமக்கு சாதகமாக வரும் என்று எண்ணிக் கொண்டிராமல் கருத்துடன் சிந்தித்து செயல்பட்டு நன்னம்பிக்கையோடு முயன்று முன்னேறவேண்டும்.

மனிதன்தான் நேரத்தை நிர்வகிக்க வேண்டும். நேரம் மனிதனை நிர்வகிப்பதாக இருக்கக்கூடாது. நேர நிர்வாகம் என்பது நேரத்திற்கு அடிமை ஆவது என்பதல்ல. நேரத்தை வென்று மகிழ்வுடன் வாழ உதவும் வழிமுறை. நேரத்தை நிர்வகித்து வாழ்வது ஒரு இயந்திர வாழ்க்கை என்று பலர் நினைக்கின்றனர். அது தவறு. நேரத்தை நிர்வகித்து வாழ்வது நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்க வல்லது. நேர நிர்வாக நுணுக்கங்களை அறிந்து அதற்கேற்ப செயல்பட்டால் நாளொன்றுக்கு 24 மணி நேரம் அல்ல 48 மணி நேரமே கிடைக்கும்.
'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Monday, May 13, 2013

வழக்குக் கூண்டில் வாய்பொத்தி நிற்கும் வறுமைக்கோடு !?

குறுந்தொடர் : பகுதி 1 

அண்மைக் காலமாக இந்திய அரசின் திட்ட கமிஷனின் அளப்பறிய கடாட்சத்தாளும் கருணையாலும்   “வறுமைக்கோடு “ என்ற வார்த்தையைக் கேட்டு வருகிறோம். கடந்த வாரம் ஊடகங்களிலும், பாராளுமன்றத்திலும் ( வழக்கமான சந்தைக்கடை கூச்சலுடன் ) இந்த வார்த்தை எதிரொலித்தது. வறுமைக்கோட்டுக்கு கீழே என்றும், வறுமைக்கோட்டுக்கு மேலே என்றும் வார்த்தை சிலம்புச்சண்டைகள் நாடெங்கும் அரங்கேறின. இதைப்பற்றி சில கருத்துக்களை இந்த பதிவில் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கோடுகளைப்பற்றி நாம் பேசப்போனால் சின்ன வயதில் நாம் அடித்து விளையாடிய நொண்டிக்கோடு விளையாட்டில் இருந்து, பூப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் ஆகிய இன்னபிற  விளையாட்டுகளின்  மைதானங்களின் கோடுகளிலிருந்து ,  நாடுகளுக்கிடையே போடப்படும் எல்லைக்கோடுகள் வரையும், பூமிப்பந்தின்  மேல் இருப்பதாக புவி இயலில் படித்த பூமத்திய ரேகை, கடக ரேகை மற்றும் மகர ரேகை வரை நமக்குத்தெரியும். அண்ணன்மாரே ! தம்பிமாரே ! வறுமையும்  நமக்குத்தெரியும், புரியும் . கொடிது ! கொடிது ! வறுமை கொடிது ! அதனினும் கொடிது இளமையில் வறுமை ! என்று  ஒளவையார் பாடியதாக ஆறாம் வகுப்பிலேயே  மனப்பாடப்பகுதியில் படித்து இருக்கிறோம். ஆனால் வறுமைக்கோடு தெரியாதே !

வறுமைக்கோடு என்பது என்ன ? பொருளாதாரக் கண்ணோட்டத்தில் வறுமையையும் ,  வறுமைக்கோட்டையும் விளக்குவதானால் முதலில் வறுமை என்பதை சுருக்கமாக இப்படி விளக்கலாம்.

உயிர்வாழத்தேவைப்படும் குறைந்தபட்ச அத்தியாவசியமான பொருள்களையோ, சேவைகளையோ அல்லது சாதனங்களையோ பெறமுடியாத நிலையில் இருப்பவர்களை வறுமையில் அல்லது ஏழ்மையில் இருப்பவர்களாக விளங்கலாம். STATE OF ONE WHO LACKS AN USUAL AND SOCIALLY ACCEPTABLE AMOUNT OF MONEY, SERVICES OR MATERIAL IN HIS POSSESSION.

இதில் குறைந்தபட்சத்தேவை என்பதை வரையறுக்கும் அளவுகோலுக்கு பொருளாதார மேதைகள் வறுமைக்கோடு POVERTY LINE  என்று பெயர் சூட்டி இருககிறார்கள். இந்த அளவுகோலுக்கு அதிகமாக துய்ப்பவர்களுக்கு வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பவர்கள் ABOVE POVERTY LINE என்றும் , இந்த அளவுகோல் அளவு கூட துய்க்க/ பெற முடியாதவர்களுக்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் BELOW POVERTY LINE  என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

எந்த ஒரு பொருளாதார அளவுகோலுக்கும் ஒரு அடிப்படை (BASE) இருக்கும். அந்த அடிப்படையை  வைத்தே பொருளாதார புள்ளி விவரங்கள் அளவிடப்பட்டு வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டப்படும். இந்த அடிப்படை என்பது உயிரற்ற உடலுக்கு ஊதிவிடும் சுவாசம் போன்றது. இந்த அடிப்படையை தேர்வு செய்வது என்பது மிக மிக முக்கியம். ஏணி வைத்து ஏற வேண்டிய உயரத்துக்கு ஏணி வைத்து ஏறவேண்டும். கால பெருவிரலை ஊன்றி உன்னி ஏறவேண்டியதுக்கு பெருவிரலின் சக்தியே  போதும். இமய மலை ஏறவேண்டி இருக்கும்போது ஏணியைக்கொண்டுபோனால் எதுவும் நடக்காது. கையால் எடுக்க முடிந்த காரியத்துக்கு கார்டர் பில்லர் தேவை இல்லை. உங்கள் ஜேப்பில் உள்ள பணத்தை எடுக்க ஜெ சி பி தேவையா ?
அதனால்

- அளவுகோலை உணடாக்க அடிப்படை (BASE)
- அதன் மூலமான புள்ளி விபரங்கள் (FACTS)
- அந்த புள்ளிவிபரங்களை உள்ளடக்கிய திட்டம் (PLAN)  
- திட்டத்தின் அடிப்படியில் செயல் (EXECUTION )

ஆகியன தேவை. இந்த அடிப்படைதான் நாம் போடும் திட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். இது ஒரு நாட்டுக்கு மட்டுமல்ல ஒரு வீட்டுக்கும் பொருந்தும் .

வறுமைக்கோட்டுக்கான அடிப்படை என்ன? எதைவைத்து வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களை கணக்கிடுவது ? ஆகிய கேள்விகளுக்குரிய விடை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஆனால் இந்தியா எடுத்துக்கொண்ட அடிப்படை இமயமலை ஏறுவதற்கு ஏணி கொண்டுபோன கதையாக இருக்கிறது என்பதுதான் இந்த ஆக்கத்தின் ஹை லைட்.

வறுமைக்கோட்டின் அடிப்படை பிலிப்பைன்ஸ் நாட்டில் அந்நாட்டு மக்களின் வாங்கும் சக்தியாகும். அமெரிக்காவில் ஒரு வருடத்தில் – ஒரு குடும்பத்தின் மொத்த வருமானMம்ம அடிப்படையாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் HDI  என்று அழைக்கப்படும் HUMAN DEVELOPMENT INDEX  என்பதை அடிப்படையாக வைத்துள்ளது. இந்த HUMAN DEVELOPMENT INDEX  என்ற அடிப்படையே  உலகில் பரவலாக பெரும்பான்மை நாடுகளால் பின்பற்றப்படுகின்ற அடிப்படையாகும்.  இலங்கை போன்ற நாடுகள் தங்களது அரசியல், இன , மொழி அடிப்படையில் வித்தியாசமான அணுகுமுறைகளை கையாளுகின்றன. மக்கள் நலம் பேணாத அரசுகள் உள்ள நாடுகள் இது பற்றி கண்டு கொள்வதே இல்லை. அங்கேயெல்லாம் வந்தானுக்கு வந்தான் போனானுக்கு போனான்.

ஏழ்மையில் உழலும் மக்களை நோக்கிய அரசின் உதவும் கரங்களை நீளச்செய்யும் இந்த வறுமைக்கோடு நிர்ணயம் இந்தியாவைப் பொறுத்தவரை கேலிக்கூத்து ஆக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்திய திட்ட கமிஷனின் அறிவிப்பின் பிரகாரம் இந்தியாவில் வசிக்கும் எந்த ஒரு குடிமகனும் அவன் நகர்ப்புறத்தில் வசித்தால்  ஒரு நாளைக்கு Rs. 29/=  ம் கிராமப்புறத்தில் வசித்தால் Rs. 22/= ம் ஈட்ட முடிந்தால் அவன் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவன் ; அவனை வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவன் என்று கருதி அரசின் நலத்திட்டங்களின் பயன்களை அவனுக்கு வழங்கவேண்டியதில்லை என்று கூறாமல் கூறி இருக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு Rs. 29/=  சம்பாதித்தால் இந்திய அரசின் திட்ட கமிஷனின் பார்வையில் அவன் பணக்காரன். இந்த அளவுகோல் எவ்வளவு  தவறானது என்று ஒரு பொருளாதாரம் படித்தவனிடம் கேட்க வேண்டியதில்லை. ஒரு பொட்டுக்கடலை விற்பவன் கூட கூறிவிடுவான்.

திட்ட கமிஷனின் இந்த கூற்றைப் பார்க்கும்போது இது திட்ட கமிஷனா ? அல்லது நாம் திட்டுவதற்கான கமிஷனா என்று கேட்கத் தோன்றுகிறது. இவ்வளவு நாள் இப்படி கலவாணிப்பயல்களோடவா சகவாசம் வைத்து இருந்தோம் ? ( நெறியாளர் மன்னிக்கவும் - எனக்கு வருது அப்படி) .

எந்தப் பொருளாதார கோட்பாட்டின் அடிப்படையில் இப்படி ஒரு நகைப்புக்குரிய அளவுகோலை வைத்து நிர்ணயம் செய்தீர்கள் என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் இன்னும் நகைப்புக்குரியது. அதாவது கிராமப்புறத்தில் உள்ளவர்கள் உயிர்வாழ 2400  கலோரி சக்தியும் , நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் உயிர்வாழ 2200 கலோரி சக்தியும் போதுமாம். இந்த அளவு கலோரி உள்ள உணவுகளை இந்த Rs. 22/= & Rs. 29/= ல் பெற்றுக்கொள்ள முடியுமாம்.

இந்த அளவு கலோரி உணவு உண்ட இந்த வறுமைக்கோடு என்ற பாவப்பட்ட ஜீவன்,  இந்த விவாதம் நடக்கும் நமது வழக்கு மன்றத்தில் வாய் பொத்தி நிற்கிறது காரணம் தளர்ச்சி. பேசக்கூட முடியவில்லை.

இந்த விவாதம் பொருந்துமா ? தொடர்ந்து பார்க்கலாம்...

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு உதவிடுவீர் !

தஞ்சை மாவட்டம் , அதிராம்பட்டினம் என்ற ஊரில் உள்ள காதிர் முகைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு ஏழை மாணவி மோகனப்பிரியா தான் எழுதிய அரசுப் பொதுத்தேர்வில் 1107 மதிப்பெண்கள் பெற்று, அதிக மதிப்பெண்கள் எடுத்த பள்ளியின் முதல் மாணவி என்ற சாதனையை நிகழ்த்தி பள்ளிக்கு பெருமையை தேடித்தந்துள்ளார்.

சாதனை புரிந்த மாணவி மோகனப்பிரியா மற்றும் அவரது குடும்பத்தினரை 'அதிரை நியூஸ்' சார்பாக நேரில் சந்தித்து வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்ததுடன் அவர்களோடு ஒரு நேர்காணலையும் பெற்றோம்.சாதனை புரிந்த மாணவி மோகனப்பிரியா ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர், மேற்கல்வி படிப்பதற்காக போதுமான பொருளாதாரச் சூழல் அவருக்கு அமையவில்லை. ஆதலால் தயாள மனம் படைத்தோர் இம்மாணவியின் மேற்கல்வி படிப்பு மற்றும் அதற்குரிய செலவீனங்களின் பொறுப்புகளை தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம்.

மாணவி மோகனப்பிரியா தந்தையின் வங்கி விவரம் :

K. DURAI SAMY
CANARA BANK
ADIRAMPATTINAM BRANCH
SB A/C NO. 27590


நன்றி : அதிரை நியூஸ்

Saturday, May 11, 2013

[ 9 ] உள்ளம் கேட்குமே !? MORE…

குழந்தை பருவத்தில் தாய் தந்தை பாசத்தால் லயித்த உள்ளம் அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சிக்கு செல்ல எத்தனிக்கும் போது சிறு குழப்பம் ஏற்படும் அந்த மனநிலை எல்லா தரப்பு பிள்ளைகளிடமும்  காணப்படும். அதாவது நான் முன்பு கூறிய நான்கு வகை குடும்ப பின்னணி கொண்ட பிள்ளைகளிடமும் காணப்படும் அது இயற்கையே !
                       
பறவைகள், விலங்கினங்கள் குறிப்பிட்ட காலம் வரை குட்டிகளை அல்லது குஞ்சுகளை தன்னகத்தே  வைத்து பாதுகாக்கும்.  தானே இறை தேட ஆரம்பிக்கும் திறன் வந்துவிட்டால் குட்டிகளை தன்னகத்தே அண்ட விடாது. ஆனால் மனித சமுதாயம் அதிலும் இந்திய குடும்பங்களில் இந்திய கலாசாரத்தில்,  தான் பெற்ற பிள்ளைக்கு வாழ்வில் எல்லா தகுதிகளும் வந்த பின்னர் நல்ல துணை ஏற்படுத்தி வாழ்வில் ஒரு இடம் கிடைக்கும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருக்கும் சூழலைக் காண்கிறோம்.
                        
கால சூழல் உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வு மறு நொடியே அறிய முடிகின்ற அளவிற்கு நவீனம் வளர்ந்த இக்காலகட்டத்தில்  பெற்றோர்களின் அறிவுரை கேலியாக தெரியும்  இவை பற்றி ஆய்வு செய்ய எத்தனித்தால் நான் கூற வந்த கருத்தின் திசை மாறி விடும் எனவே மீண்டும் விசயத்திற்கு வருகிறேன் மூன்று விதமான கருத்துக்களை இளம் உள்ளங்களில் பதிய வைக்க வேண்டும்.

1. ஆன்மீக ரீதியான அறிவுரை, ஒழுக்க சீர்கேடு, இறை நம்பிக்கைக்கு எதிரானது என்பதையும், அது ஆன்மாவுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும். பாட்டிகள் மூலம் எளிதாக நிறைவேற்றலாம்.

2. ஒழுக்க சீர் கேட்டால் சமூகத்தில் மரியாதை  கிடைக்காமல் போகும் அதன் மூலம் எதிர்காலம் கேள்வி குறியாகும் என்பதை புரிய வைக்க வேண்டும் .

3. ஒழுக்க சீர் கேட்டால் உடல் நலம் பாதிக்கப்படும். அதன் மூலம் மற்றவர்களால் ஒதிக்கி வைக்க படுவாய் என்பதையும் மனதில் பதிய வைக்க வேண்டும்.ஆனால் அதிக பயஉணர்வை ஏற்படுத்த வேண்டாம்.

வீட்டில் புரிந்துணர்வு குறைந்த தருவாயில், வாலிப பருவத்தில் மனதில் எந்த தீய ஊசலாட்டமும் வராத வண்ணம் இருக்க. படிப்பில் கவனம் குறைந்து மற்ற விசயங்களில் கவனம் திரும்பும் சூழல்  இருக்குமேயானால் விளையாட்டு துறையில் ஈடுபட வைக்கலாம். 

நல்ல நட்பு வட்டாரங்களை ஏற்படுத்தி கொள்ளலாம். தனது மன உளச்சலை குறைத்து கொள்ள நல்ல நட்பை போன்ற மருந்து வேறு எதுவுமில்லை.
  
 * எதிர்கால கனவை ஏற்படுத்தி அதற்காக உழைத்தல் போன்றவைகளால் தனது வாலிப வீரியத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். 

காதல் மாயைப்பற்றி அடுத்த ஆக்கத்தில் தொடர்வோம்...
இன்னும்  வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
Pro Blogger Tricks

Followers