.

Pages

Friday, March 27, 2015

[ 15 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(53)
இருக்கின்ற ஒவ்வொன்றும் எப்படி யென்றே
வருகின்ற உண்மையில் வாசி - அருமை
அறிந்திடுவாய் 'எங்கேயோ அல்லவொன்றே எங்கும்',
தெறிந்திடுமே உன்னிலே தீர்ப்பு.

(54)
தீர்ப்பு விரும்புவார் திண்ணமாய் எல்லோரும்
ஈர்ப்பு மலர இதயத்தில் - ஒர்ம
ஒருமை நிலையில் உதித்திடும் தீர்வே
அருமை அமைந்தவ் அறம்

(55)
அறமென்றால் தன்னை அறிவதே அன்றி
சிறக்காதே இல்வாழ்க்கைச் சீராய் - இறந்திடும்
முன்னே இறத்தல் முதலறமாம் வாழ்விலே
பின்னே வராதேப் பிழை.

(56)
பிழையெனக் கண்டே பிழைத்தல்தொடரும்
பழைமையில் ஊறிப் படர்ந்தே - அழைத்தே
வளைத்திட உள்ளம் வராதே தெளிவு
முளைக்கவே துன்பம் முடிவு
(தொடரும்)
நபிதாஸ்

வெண்பா (53
பொருள்: இவ்வுலகில் இருக்கின்ற ஒவ்வொன்றும் எப்படி உண்டாகியது என்றக் கேள்விகளைத் தன்னுள்ளே கேட்டுக் கொண்டே சென்றால் உன்னில் வரும் பதில்களை நன்கு ஆராய்ந்தறிந்து சிந்திக்க அதன் அருமை அறிந்திடுவாய். மகா வல்லமை எங்கேயோ இருக்கின்றது என்பதல்ல அந்த ஒன்றே எங்கும் எல்லாமாக இருக்கின்றது என்ற உண்மை உன்னிலே தீர்வாக அறிந்திடுவாய்.

வெண்பா (54
பொருள்: திண்ணமாக எல்லோர் மனதிலும் ஒரு தீர்ப்புமேல் ஈர்ப்பு மலர அத்தீர்ப்பு எல்லோராலும் விரும்பப்பட வேண்டும்ம். பாரபட்ச்சம் பார்க்காது ஒன்றே பலவென்றதான அனைவரும் சமமென்ற மனநிலையில்; மனஉறுதியில் உதிக்கும் தீர்ப்பானது அந்த அனைவராலும் விரும்பப்படுகின்ற அருமைகள் நிறைந்த அறமெனப்படும் எல்லோராலும் விரும்பப்படும் தீர்ப்பாகும்.

வெண்பா (55
பொருள்: தன்னைப்பற்றிப் பூரணத் தெளிவாக அறிதலே அறமென்பதாகும். அவ்வாறல்லாவிட்டால் பல்வேறு காலங்களிலும் அல்லது நிலைகளிலும் வாழ்க்கைச் சீராகச் சிறப்புடையதாகாது. அவ்வாறுத் தன்னை அறிதலின் மூலம் இவ்வுலக மாயவலையில் சிக்கி இதுதான் வாழ்வென்ற இந்த நிலையில்லாததான இவ்வுலகவாழ்வில் இவ்வுடல் அழியும் முன்னே நிலையற்ற இவ்வாழ்வை அறிந்துணர்ந்து இழந்து நிலையான அவ்வுலக வாழ்வை அறிந்து வாழ்தலே முதல் அறமாகும். அவ்வாரானப் பின்னே வாழ்வில் பிழைகளே உண்டாகாது.  

வெண்பா (56
பொருள்: தொடர்ந்துப் பழகிப்போனப் பழக்கவழக்கத்தால், பிழைப்புக்காகப் பிழையெனத் தெரிந்தும் தவறுகளை விடாதுத் தொடர்ந்துச் செய்வார்.அழைத்துச் சுட்டிக்காட்டினாலும் அவருள்ளம் வளைந்திடாது. அவரில் நற்தெளிவு மலர்ந்திட துன்பம் உண்டாகித் திருத்தும்.

Monday, March 23, 2015

[ 3 ] பத்திரிக்கையாளன் ஒரு பார்வையாளன் !

ஊடக பார்வை:
இந்தியாவின் கலாசாரம், வாழ்வியல் முறையில் திருமண வாழ்க்கை
என்பது உலக அளவில் போற்றப்பட கூடிய ஒன்று. இந்து சமய முறையில்
திருமண வாழ்க்கையை துவக்க தாலி கட்டும் முறை காலாகாலமாக
நடைமுறையில் உள்ளது. அப்படிபட்ட ஒரு முறையை இது தேவையா
பெண்களுக்கு தாலி அவசியமா என்ற தலைப்பில் பல தொலைக்காட்சி
நிறுவனங்கள் நிகழ்ச்சி நடத்துகின்றன. இது தேவையற்ற நிகழ்ச்சி. மக்கள் மனதை புண்படுத்தும் நிகழ்ச்சி

ஊடகத்தின் ஒரு பகுதியான சினிமா நூறு வருடங்களாக காதலை மைய்யமாக வைத்து தனது கருத்தை சொன்னது. அது இந்திய கலாச்சாரத்தினை அசைக்க கூட முடியவில்லை. ஆனால் இன்றைய சமூக ஊடகத்தின் வாயிலாக திருமண வைபவங்களை கொச்சை படுத்தும் விதமாக தாலி தேவை இல்லை என்ற ஒரு கருத்தை மையமாக வைத்து விவாதம்
செய்வது என்பது ஏற்றுகொள்ள முடியாத ஒன்று.

* ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட் போடும் பெண்ணுக்கு தாலி இடையூராக இருக்கலாம்.
* அன்றாட வாழ்வில் கணவனை நேசிக்கும் பெண்ணுக்கு தாலி ஒரு போதும்
இடையூறாக இருப்பதில்லை.
* பெண் விடுதலை என்ற பெயரில் ஊடகம் செய்யும் சேட்டை.

நான் ஒரு இஸ்லாமியனாக நடுநிலையான பார்வையாளனாக சொல்கிறேன்.
இந்திய கலாசாரத்தின் ஆணிவேரை அசைக்கும் முயற்சி. அதிர்ச்சிகரமான, மோசமான நிகழ்வொன்றை பதிய விரும்புகிறேன்.

சேலம் அருகே ஜவ்வருசி தொழிற்சாலையில் வேலை பார்த்து விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த கணவன் மனைவி ஊருக்கு வெளியே ஆள் அரவமற்ற சூழல் திடீரென்று ஐந்து பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து கணவனை சரமாரியாக தாக்கி, கணவனை நிலைகுலைய செய்து விட்டு அவர் மனைவியை ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடி விடுகிறது.

இந்த செயல் மிருகத்தனமான, காட்டு மிராண்டித்தனமான செயலைகண்டித்து பல மகளிர் இயக்கங்கள் ஆர்பாட்டம் நடத்தின. சில பெண்கள் ஊடகம் வாயிலாக பேட்டி கொடுக்கிறார்கள். அதிக பட்ச தண்டனையாக தூக்கிலிட வேண்டும் என்று ஆம் சரியான கருத்து. இது சவூதி அரேபியாவில் நடைமுறையில் உள்ளது. அதை மட்டும் ஏன் காட்டுமிராண்டிதனமான செயல் என்று சிலர் கூறுகின்றனர். ஒன்றும் புரியவில்லை.

வழக்கம்போல நான் ரசித்த ஒன்றை கூறி இவ்வார பதிவை முடிக்கிறேன்.
சிறிய ஹைக்கூ கவிதை:

சிறு குழந்தை...
பொக்கை வாயில்
அம்மா என்றது ..
பாசமாய் இருந்தது ...

பொக்கை வாய் ..
கிழவன் அம்மா என்றார்
பாவமாய் இருந்தது ..

மீண்டும் சிந்திப்போம் ...சந்திப்போம்.
பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Sunday, March 15, 2015

[ 14 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(49)
அறிந்தவர் என்றால் அறிந்தவர்த் தன்னைப்,
பிறிதொன்றும் இல்லையே பேறு - மறிக்கும்
வலையில் விழாமலே வாழ்வார் கடலும்
அலைபோல்,அதுபோல ஆகு.

(50)
ஆகிடுமே ஆகுகவென் றானின்சொல் உண்டாகத்
தாகிக்கத் தாகம் தணித்திடும் - போகிகளின்
தேவைகளும் தீர்த்திடும் தேவையற்றான் தன்னிலே
சாவையுமே வெல்லுமாம் சாது

(51)
சாதுரியம் கொண்டே சமாளித்தே வென்றிடுவார்
ஓதுவாரே உண்மை யுணர்ந்திட - சூதுகளும்
சூழாமல் ஆகிடுமே சூன்யமாய், ஓர்மையில்
ஆழாமல் ஆகா அது.

(52)
அதுவென் றிவன்கூறல் ஆகாதே, தன்னை
அதுதன் இருப்பில் அறிய - இதுவும்
அவனதுத் தத்துவம் அன்றேல் துவிதம்
இவனதுச் சொத்தாய் இருக்கும்.

நபிதாஸ்

வெண்பா (49) 
பொருள்: யார் தன்னை அறிந்தவரோ அவரே அறிந்தவர் என்பவராவார். அவ்வாறறிந்தவரே அவரடைய வேண்டியப் பேற்றினைப் பெற்றவர் ஆவார். அவர்கள் இவ்வுலகப் பிரிவினை என்ற மாய வலையில் விழாமல் கடலும் அலையும்போல் இறைவழியைப் பற்றி வாழ்வார்கள். அவர்களே தன்னை அறிந்தவர்கள் ஆவார்கள். அதுபோல அறிந்தாகிட வேண்டும்.

வெண்பா (50
பொருள்: அமைதியே ஆன இறையாற்றல் ஆகுக என்று சொன்னவுடன் ஆகிவிடும். எவ்வாறெனில் தேவைகளான ஒன்றின் மீதின் தாகம் போகிகளுக்கு உண்டானவுடன் அதுத் தானே அத்தேவைகள் தீர்ந்து/தீர்த்துத் தணித்துவிடும். எதனையும் செய்யும் தேவையற்றான் வழிகாட்டலிலே வாழும், அமைதியே வடிவானத் தேவையுடைய போகிகளின் எண்ணங்களையும், தேவையற்றான் அவன் இவ்வாறே ஆக்கிவிடுகிறான்.    

வெண்பா (51
பொருள்: எப்படியாகப்பட்டக் கடும் சம்பவங்களையும் சமாளித்துவிடுவார்கள். வேதங்களையும் அதன் பரிபூரண உண்மைகள் தெளிந்தே உணர்ந்தே ஓதுவார்கள். கடும் சூழ்ச்சிகளும் சர்வ சாதரணமாக ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். இவாறெல்லாம் நிகழ உச்ச இறையோர்மையில் இரண்டற்ற நிலையில் ஆழாமல் ஆகாது.

வெண்பா (52
பொருள்: தான் படைக்கப்பட்டதெல்லாம் அவனின் ஆற்றல்களான என்றதனிருப்பில் அறிந்த இவன் தான் அவனென்றிவன் கூறல் ஆகாது. இதுவெல்லாம் அவனதுத் தத்துவங்களே என்றறியாவிட்டால் இணையைத் தோற்றுவிக்கும் துவிதத்தில் மூழ்கி அதுவே இவனது பிரிக்கமுடியாதச் சொத்தாக இருக்கும்.

Tuesday, March 10, 2015

[ 2 ] பத்திரிக்கையாளன் ஒரு பார்வையாளன் !

வெளி நாடுகளில் வாழும் நம்மவர்களில் சிலர் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். ஊரில் வசிக்கும் பலரின் பார்வையில் உயர்வாக தெரியும் உங்களுக்கென்ன வெளிநாட்டு வாழ்க்கை கொடுத்து வைத்தவங்க நீங்க விமான பயணம்...சொகுசான வாழ்க்கைதான் போங்க... என்று வியக்கும் பலருக்கு நான் தரும் தகவல்கள் எதிர்மறையாக இருக்கும் எப்படி ?

பாவம் அவர்கள் பாசை தெரியா ஊரில் வீட்டிற்குள் அடைப்பட்டிருக்கும்
அப்பாவிகள்... அதிகாலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு ..பிறகு கணவனை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு ..பிள்ளைகள் பள்ளிக்கூடம் விட்டு வரும் வரை தனியாய் காத்திருப்பார்கள் .பின்னர் பிள்ளைகள் வரவு அவர்களுக்கு உணவு பரிமாறி முடித்த கையோடு இரவு நேர உணவுக்கு ஆயத்தமாகி அதன் பின்னர் கணவர் வேலை விட்டு வரும் தருணம் கணவனுக்கு பணிவிடை. முடிந்த பின்னர் ..அதிகாலை பிள்ளைகளுக்கு உணவு தயாரித்தல் இப்படியாக இரவு பத்து மணி ஆகிப்போகும் ..உறக்கம் ஐந்து மணி நேரம் கிடைப்பதே கடினம் இப்படியாகவே அவர்கள் வாழ்வு.

ஆசையாய் ஒரு நாள் வெளியே செல்ல ஆசைபடும் மனைவிக்கு கணவனின்
ஆர்வம் அவ்வளவாக இருப்பதில்லை வாரத்தில் ஒருநாள் ஓய்வாய் இருக்கவே ஆசைப்படுவார். வெளிநாட்டில் வாழும் இல்லத்தரசிகள் தொலை பேசிகள் மூலமாகவே தனது தொடர்புகளை வைத்துக்கொள்வார்கள். தங்க கூண்டில் அடைக்கப்பட்ட கிளிகள் தான் அவர்கள்.

ஊடகப்பார்வை:
தற்போதைய  ஊடத்தில் குறிப்பாக தொலைக்காட்சியில் அன்றாட நிகழ்வுகளை விவாதிப்பது நடைமுறையில் உள்ளது. தினத்தந்தி தொலைக்காட்சியில் விவாதம் செய்யும் நிகழ்வை ..கேலி செய்யும் விதமாக விஜய் டிவியில் காட்டினார்கள். முற்றிலும் உண்மையான செயல்பாடுகளை அப்படியே சித்தரித்து இருந்தார்கள்.

ஒருமுறை முஸ்லிம்களை குற்றம் சாட்டும் தலைப்பை எடுத்து ..அதன் அடிப்படையில் விவாதம் செய்ய குற்றம்சாட்டி விவாதிக்க நல்ல அனுபவம் வாய்ந்த உயர் அதிகாரிகள் அழைக்கப்பட்டு இருந்தார்கள். முஸ்லிம் தரப்புவாதியாக ...படிப்பறிவற்ற ...தர்க்ககலை அறியாத அப்பாவியான தேசிய லீக் தலைவர் அழைக்கப்பட்டு இருந்தார். முஸ்லிம்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கும் போது பதில் சொல்ல தெரியவில்லை. அப்படியே பதில் சொல்லமுற்படும் போது ..சார் இடையே  குறுக்கிடாதீர்கள் என்று அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது."குறுக்கே பேசாதீங்க "என்று ஒன்றும் பேசாத பசீர் அவர்களை அனுமதி மறுக்கும் அதே நிகழ்வை நினைவு படுத்தும் விதமாக ..விஜய் டிவியில் அது இது எது...என்ற நிகழ்ச்சியில் ..சிரிச்சா போச்சு என்ற பகுதியில் காட்டினார்கள்.

தேசிய லீக் கட்சியின் தலைவர் ஒட்டு மொத்த முஸ்லீம்களின் தலைவரோ, பிரதிநிதியோ கிடையாது. ஆயுத எழுத்து என்ற நிகழ்ச்சியில் அதன் தொகுப்பாளர் அறிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லீம்கள் பற்றிய விவாதங்களுக்கு... பி.ஜெய்னுலாபுதீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, பேராசிரியர் ஹாஜா கனி போன்றவர்கள் அழைக்கப்பட்டால் கொஞ்சமாவது தர்க்கங்களுக்கு தக்க பதில் கிடைக்கும். இதுவே இந்த வார ஊடகப்பார்வை.

'சின்னக்குத்தூசி' என்ற புனைப்பெயரில் பத்திரிகை துறையில் வளம்வந்ததென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் படைப்புகளில் முடிவுரை நகைச்சுவையாக முடித்து வைப்பார் அதே போன்று இவ்வார சிந்தனை....

ஒருவர் ...நாயுடன் நடந்து வந்தார் ..
எதிரே வந்த ஒருவர்... என்ன கழுதையுடன் இந்த பக்கம் ..
கோபமாக... இது நாய் தெரியல ...உனக்கு
அதற்கு அவர் ..நான் கூறியது நாயிடம் என்றார்.

இது தான் ஜோக்...

நாயுடன் வந்தவர் தன்னை கழுதை என்று கூறி விட்டார் என்பதை அறிந்து
விட்டார்.

ஒரு கேள்வி ! நாயுடன் வந்தவர் புத்திசாலித்தனமாக ஒரு பதில் கூறி மற்றவரை எப்படி மடக்கலாம் கூறுங்கள் பார்க்கலாம். பின்னூட்டம் மூலம் பதிலை எதிர்பார்கிறேன்.
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, March 6, 2015

[ 13 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(45)
பிடிப்புகள் கொண்டே பிறப்புகள் தோன்றும்
தடிப்புகள் தன்னில் தலைக்கும் - வடித்திடும்
நடிப்புகள் நாயனின் நாட்டத்தில் தோன்ற
படிப்புகள்வேந்தரில் பற்று

(46)
பற்றிலே உச்சம் படைப்பில் மலர்திடும்
பற்றிலே பற்றற்றான்பற்றாகின் - பற்றினில்
பார்வையில்சாந்தமும் பாசமும் ஈர்த்திடுமவ்
ஓர்மையில் ஆக்கமும் உண்டு

(47)
உண்டென்றால் எல்லாமே உண்டுதான் என்றாலும்
கண்கள்தான் இல்லையே காயமன்றி - உண்மையில்
ஒன்றினிலே எல்லாமே ஒன்றென்றாய் உண்டுமைகள்
என்றிருப்பின்மெய்தான் எது?

(48)
எதுவாய் யெனத்தோன்றும் கேள்வித் தன்னை
அதுவாய் அறியும் அகமே - இதுதான்
அதுவாய் முதலாம் அறிதல் அசைவாம்
அதுவாய் அதனில் அறி

நபிதாஸ்

வெண்பா (45) 
பொருள்: ஒவ்வொரு பிறப்பும் சிலக் குணப்பிடிப்புகளைக் கொண்டு பிறக்கும். அவ்வாறானக் குணங்கள் உருவத்தடிமன்களாக அப்பிறப்பில் மலர்ந்தமையும். எனவே வாழ்வினில் இறைவன் விரும்பும்படி வாழ, மனிதவாழ் கல்விகளை என்றும் தன் வழிகாட்டல் மூலம் இவ்வுலகை ஆளும் வேந்தர் பெருமானில் கற்றுப் பற்றுகவென்பதாகும்.

வெண்பா ( 46) 
பொருள்: படைக்கப்பட்டவனாகிய மனிதனிவன் தன்பற்றினிலே அவ்வழியில் மிகச் சிறப்பென்றெது உச்சமோ அதனைப்பற்றுவான், இவன் பற்றிலே அவனாற்றலில் எல்லாமாகிய; அவன் படைப்பில் தேவையற்றவனாகிய அவனைப் பற்ற. அவ்வாறு இறைவழியினைப் பற்றியதன்படி அவ்வோர்மையில் வாழ்ந்து வருவோர்களின் பார்வையில் அமைதியும் கவர்ந்திழுக்கும் பாசமும் இருக்கும். அவர்கள் எண்ண விருப்பங்களும் இறைவன் நிறைவேற்றுவான்.     

வெண்பா ( 47) 
பொருள்: பார்க்கின்ற அனைத்தும் உண்டு என்றால் உண்டுதான். ஆனாலும் மனித உடம்பில்லாமல் அவனது கண்ணில்லை. கண் தனித்தில்லை. மனித உடம்பில் கண் போல் வாய், செவி, நாசி, கைகள், கால்கள் போன்றப் பல ஒவ்வொன்றும் என்ற உண்டுமைகள் இருக்கின்றன. இவைகள் மனிதன் இல்லையேல் இல்லை. அவ்வாறானால் இருக்கின்ற இவைகள் உண்மையாக எது ? பலப்புலன்களாக தெரிந்தாலும் மனிதன் என்பதுதான் உண்மை. அதுபோல் காண்கின்ற அனைத்தும் ஒன்றுக்கொன்றுத் தொடர்புடைய ஒன்றினிலானது. அவைகள் நிலையற்றது. நிலையானதில் பல உண்டுமைகளாகத் தெரிகிறது. எனவே இப்பொழுது எது உண்மை ? என சிந்தித்தறிந்துக்கொள்.

வெண்பா (48) 
பொருள்: எதனாலப்படி தான் படைக்கப் பட்டோம் என்றக் கேள்வி எழுமதுவே அப்படியாகினேன் என்றறியும் அகம். இவ்வாறானதது முதலாம் அறிதல் அசைவாம். அவ்வாறன அமைவினகமாய் அறிந்துக்கொள் என்பதாகும்.
Pro Blogger Tricks

Followers