.

Pages

Friday, February 28, 2014

பருவம் [ பாடலுடன் கவிதை ]

முந்தியப்  பருவம் கருவறை வளர்ச்சி
**** முதன்முதற் அங்குதான் சுழற்சி
தந்தையும் தாயும் இறையவ னருளால்
****தளிர்நடை பயிற்றுதல் பருவம்
பந்துபோ லுருண்டுத் திங்களும் ஆண்டும்
****பருவமாய் வளர்ந்திடும் நீண்டு
வந்திடும் முதுமைத் தோற்றமும் பாயும்
*******வளமையும் இளமையும் தேயும்!

இளமையில் வேட்கைப் பருவமாய் அலைந்தாய்
****இல்லறம் கண்டதால் நிலைத்தாய்
வளமையில் இறையை மறந்ததை யோசி
****வறுமையின் புயலதும் வீசி
உளமதில் பருவ மாற்றமும் வந்து
*****உறுதியும் குலைந்துநீ நொந்து
களமதில் மாறும் காட்சியாய் உருவம்
******கரைந்ததும் காலமெனும் பருவம்!

கருவறைப் பருவம் பெற்றதை மறந்தாய்
****கனவினில் மிதந்துநீ திரிந்தாய்
ஒருமுறை எழும்பித் தீர்ப்பினைக் கண்டே
****ஒருயுகப் பருவமும் உண்டே
பெருகிடும் துயரம்; பேறெனச் சுவனம்
******பெற்றிடத் தீர்ப்பிலே கவனம்
பருவமாம் மறுமை நிரந்தரம் அன்றோ?
.********படித்திடு வாழ்வினில் நன்றாய்!

அறுவடைப் பருவம் மட்டுமே ஆங்கு
*********அதற்கென விதைத்திடு இங்கு
மறுமுறை உலகின் பருவமும் தீண்டா
*********மறுமையை நம்புவோர் வென்றார்
நெறிமுறை பேணி வாழ்ந்திடும் பருவம்
*******நிழலெனத் தொடரும் உருவம்
பறிமுதல் செய்த உயிருடன் வாழ்க்கைப்
.**********பருவமும் சென்றிடும் காற்றாய்!

பாடலாசிரியர்: அதிரை கவியன்பன் கலாம்,(அபுதபி)
பாடியவர்: அதிரை பாடகர்: ஜாஃபர் (ஜித்தாஹ்)

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு :
இந்தக் கவிதை நேற்று [ 27-02-2014 ] இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் அதிரை பாடகர் ஜாஃபர் அவர்களின் இனிய குரலோடு ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

Tuesday, February 25, 2014

எனக்கு வேண்டும் பொறுமை !?

நான் சொல்கிறேன்
அவன் கேட்கிறான்
தலையையும் அசைக்கிறான்
தவறாதும் சிரிக்கிறான்
நிலைதனை அறிதிட
நேராக கேட்கிறேன்
தலைதெறிக்க ஓடிடவே
தாங்காமல் பதறுகிறேன்
விலையில்லா அறிவுகளை
விளங்காமல் பிதற்றுகிறான்
பிழையில்லை அவனிடம்
பித்துப்பிடித்தே அலைகின்றேன்

மீண்டும்
நான் சொல்கிறேன்
அவன் கேட்கிறான்
விளக்கமாய் விளங்கிட
வீரியம் கொண்டே
கலக்கமில்லை அவனிடம்
கவனமாக கேட்கிறான்
பலமான ஆர்வமுடன்
பக்குவமாய் நான் கேட்க
சுலபமாய் சொல்கிறான்
சொல்லாத சங்கதிகள்
அழதான் வேண்டுமோ
அது என் தப்புதான்

உருவத்தில் அழகன்
உள்ளத்தில் மலுங்கன்
புருவத்தில் புத்தன்
புரிவதில் பித்தன்
சொன்னதே சொல்வான்
சொல்லில் நிற்பான்
என்னதான் தந்தாலும்
ஏற்கவே மறுப்பான்
நிமிர்த்திட துடித்தாலும்
நிலைமாற மறுக்கிறான்
தமிழும் அறிந்தவன்
தவறாமல் வலைத்துக்கொள்கிறான்

தப்பது அவனிடமில்லை
தப்பில் வீழ்ந்துவிட்டான்
இப்பவும் சொல்கிறேன்
இதயத்தில் எழுதிவிட்டான்
எப்படித்தான் ஆடினாலும்
என்னதான் செய்தாலும்
அப்பவே எழுதிவிட்டான்
ஆண்டவனும் அவன்விதி
செய்தவைகள் திரும்புகின்றன
செயல்படத்தான் வேண்டுமே
பொய்களையே புனிதமாய்
போற்றித்தான் வாழ்கின்றான்

அந்தோ பாவம் !
அவன் கண்கள்
அழகாய் கடிவாளமிட்டன
என்னதான் சொன்னாலும்
ஏற்பதுப்போல் இருக்கின்றான்
முத்திரை குத்தப்பட்டுவிட்டது
நித்திரை கலையவில்லை
சொன்னதிலே நிற்கிறான்
சொல்வதையும் கேட்கிறான்

மீண்டும்
நான் சொல்கிறேன்
அவன் கேட்கிறான்
சொல்லுவது கடமை
கேட்பதும் கடமை
நடப்பது மடமை
வேண்டுவது பொறுமை
ஆம் !
எனக்கு வேண்டுவது பொறுமை.

நபிதாஸ்

Saturday, February 22, 2014

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் !

சொல்லக்  கொதிக்குதுடா நெஞ்சம் - நாட்டில்
.......சோதனை வந்ததடா நேர்மைக்குப் பஞ்சம்
மெல்லக் கரையும் மனிதம் - உலகில்
.......மெலியுதே முன்னோரும் காத்தப் புனிதம்!

ஆன்மீகம் இல்லாத கல்வி - அதனால்
.....அனைத்துத் துறைகளிலும் வந்தது தோல்வி
மேன்மைகள் பெற்றனர் முன்னோர் - அதனை
....மீண்டும் கொணர்ந்திட வில்லையே பின்னோர்!
..
கள்ள வணிகம் பதுக்கல் - எல்லாம்
......காலத்தின் கட்டாயம் என்றே மதிக்கும்
உள்ள நிலமைகள் எண்ணி - நாளும்
.....உள்ளம் கொதிக்கவே வேகுதடா கண்ணீர்!

மெல்ல இனிசாகும் செந்தமிழும் - இளையோர்
.... மென்று குதறியே காரி உமிழும்
கொல்லும் கொலைவெறிப் பாயும் - பாடலால்
.....கொஞ்சமும் அச்சமின்றித் தாய்மொழித் தேயும்

தோலுர்ணவு மட்டுமே தூண்டும் - அதற்குத்
......துணைசெய்யும் தோழமைதான் கள்ளமாய் வேண்டும்
பாலுணர்வுச் செய்கையில் பின்னி - இன்று
.....பாழ்பட்டுச் சாகுதடா  நாணமிலாக் கன்னி!

ஆளுமை என்னும் பெயரில்  - ஆண்கள்
.....ஆதிக்கம் செய்திடப் பெண்கள் துயரில்
மீளுதல் இல்லா அடிமை - வரன்
...மேலேதான் தட்சணைக் கேட்கும் கொடுமை!

சாதி மதங்களின் சண்டை  - அதனால்
......சாயும் மனிதனின் மாண்புள மண்டை
மீதி  யுளோர்களின் யாக்கை   -  என்னோகுமோ
.......மேதி னியிலுளோர் அச்சமுடன் வாழ்க்கை!

நாட்டினில் உள்ள நிலைமை - மாறிட
.....நாடுவோம் தூயநற் றொண்டின் தலைமை
பாட்டினில் சொன்னேன் கவியரங்கில் - இவைகளைப்
.....ப்டைத்தவன் மாற்றுவான் இந்தப் புவியரங்கில்!

கொதித்திடும் எண்ணங்கள் சாடலாய் -ஈண்டுக்
....கொட்டியே தீர்த்தனன்  சந்தத்தின் பாடலாய்
மதித்திடும் பாவலர்  ஆன்றோர் --யாவரும்
...மதிப்பெண் இடுதலே யான்பெற்ற சான்றாம்!

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : 'சந்த வசந்தம்' இணையக் கவியரங்கில் அரங்கேறிய இந்த கவிதை அதில் பங்கேற்ற அனைத்து சான்றோர்களின் வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

'கவியன்பன்' கலாம் அவர்களின் இந்த கவிதைக்கு சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் இனிய குரலில் பாடிய பாடல் இதோ...

Thursday, February 20, 2014

அவன் இரகசியம் !?

எல்லாமா யெங்கணுமே உள்ள ஏகன்
......என்னுள்ளு மெல்லாமா யாகும் நாதன்
வல்லமையி னுருவமைத்து நாதர் தந்தான்
.....வழிகாட்டும் நிகரில்லா வேந்தர் பெற்றோம்
சொல்லிடவோ சொற்களுமே தருவ தில்லை
.....சொன்னாலும் புரிவதிலு மிலகு மல்ல
இல்லாமை இல்லாஉள் ளஎல்லா மென்றும்
.....இருப்பதெது வுமேஅல்லச் சொல்ல என்றார்

இல்லமையி லுள்ளமையாய் நிற்கும் சொந்தம்
.....இருப்பதுவு மவனல்லா மலில்லை நித்தம்
பொல்லாத வழிகளையே நாடு மெண்ணம்
.....புரிந்திட்டால் புனிதமாய் நிற்கு மென்றும்
நில்லென்று நிகரில்லாச் சொத்துத் தன்னில்
.....நீநின்றிட நிகரற்றோன் விருப்ப முன்னில்
நல்லிதிலே நிலைபெற்று நிலைக்க நன்கு
.....நாம்நாட்டம் நிறைவு(ச்)செய்தே நிலைப் போமே

பன்வடிவம் மிளிருமணி கலனாம் தங்கம்
.....படைத்தவனும் பற்பலவா யுள்ளா னெங்கும்
நன்கிதனில் நாம்கொள்ள நமனை வெல்வோம்
.....நற்சாந்தி மனம்ப்பெற்றே என்றும் வாழ்வோம்
மின்னலாகத் தெளிவுவேகம் அவனில்க் கொண்டு
.....மேன்மையாகி முன்நின்றுக் காண்போம் நன்கு
பொன்பொருளில் பற்றற்றப் பண்பில் நிற்போம்
.....புனிதவாழ்வில் பற்றாப்பற் றியுமே வாழ்வோம்

தன்னாலே தருகின்றத் தகவ லெல்லாம்
.....தந்திடுவான் தனுள்ளம்கொள் நாதர்ச் சொல்லால்
ஒன்றிலுமே அவனொன்றி இல்லை என்றால்
.....ஒன்றித்தான் வரத்தூதன் றிவேரு முண்டோ ?
என்றாலு மென்றுமவர் சொல்லில் நானே
.....இல்லைஅவன் தூதன்றி என்றேப் பேண
நன்வழியே வாழ்ந்து(க்)காட்டி நாமும் பற்ற
.....நல்மணியாய் வாழ்ந்திடுவோ மேநா மேற்றே

மாம்பழமும் உருசிக்கு மென்பார் உண்டோர்
.....மாநிலையும் படிப்பதினால் பற்றக் காணோர்
தாமதனில் தங்கிடவும் தகுந்தோர் வேண்டும்
.....தவறாதுத் தேடியேத்தான் பணிந்துக் கேளும்
தாம்பெற்ற நுட்பமிழந் து(த்)தாகிப் போனோர்
.....தந்ததிலே அகத்தாகித் தனித்தே நிற்பார்
நாமென்றேத் தலைத்தாங்கி நாளும் நிற்போர்
.....நாட்டமதில் நீங்கித்தான் நெருங்கார்ப் பாவம்

கோனறிவுக் கொண்டோர்கள் நானே என்பார்
.....குறைமதியும் கூறிடுமேத் தானே என்றும்
தனென்ற நல்லோர்கள் கரைந்தில் லாமல்
.....தலைவனேத்தான் இருப்பதுப்போல் அல்ல அல்லோர்
நானென்றுச் சொன்னதிலும் அவர்கள் இல்லை
.....நானேயன் றஇவனிலோ இவனே உண்டு
வானறிவுப் பெற்றாலும் வல்லோன் ஆகான்
.....வல்லோனில் வந்தவைகள் வந்த தேயாம்

நபிதாஸ்

Monday, February 17, 2014

அறியாமையினால் பிரிவுகளா !?

II அறிவுத்தேன்
ஒரு சொல் பல கருத்தைத்தரும். அதனால் அவரவர் அறிந்த அல்லது அவரவர்களின் நோக்கத்திற்கு ஏற்ப கவிதை வார்த்தைகள் அதற்கு பொருள் கொள்கின்றனர்.

கண்ணில் கோளாறு இருக்கும் போது சிலவைகள் இரண்டாகத் தெரியும். சிலருக்கு தெளிவாகத் தெரியாது. சிலதுக்கு பொருளின் வண்ணம் தெரியாது. கண்ணின் தன்மைக்கேற்ப ஒரே பொருள் அது எவ்வாறு உள்ளதோ அவ்வாறு உள்ளபடி அவர்களுக்குத் தெரியவில்லை.

இருட்டில் கிடக்கும் கயிறு பலருக்கு பாம்பாகத் தெரியும். காரணம் இரவு நேரத்தில் தனிமையில் இவனை அறியாமலே ஒரு வித பயம் கவ்வும். அதனால் அரண்டவன் கண்ணுக்கு அது பாம்பாகத்தான் தெரியும்.

மனதில் தெளிவாக எச்சலனமும் இல்லாதவனுக்கு அது பாம்பாகத் தெரியாது. அதுப் போல ஒரே வார்த்தை அல்லது வாக்கியத்திற்கு பலர் பல மாதரிக் கருத்துக் கொள்கின்றனர். தெளிவான உள்ளம் சலனமற்றது. அதற்கு உண்மைகள் புரியும்.

ஒரு கருத்தில் தெளிவடைய தாம் அறிந்ததைத்தான் சொல்லி விளக்க வேண்டும். அதன்படி போலிகள் எவ்வாறு தான் போலி என்றே அறியாமல் உருவாகின்றார்கள் என்பதை விளக்குவதற்காக அறிந்த இஸ்லாம் மார்க்கத்தை ஈங்கு எடுத்தாள்வதில் தவறாக என்பதற்கு இணங்கி இஸ்லாமிய கருத்தொன்று எழுதப்படுகிறது.

இஸ்லாம் மார்க்கத்தில் காயத்திரி மந்திரம் என்ற கலிமா. அது ஒரு இருவரி இஸ்லாமிய கொள்கையின் மந்திரச்சொல் ( மந்திரம்=அறிவு ).

கலிமா அதன் விளக்கம் எத்தகையது என்பதை விளங்கிக்கொள்ள இப்பிரபஞ்சமும் ஒரு தட்டிலும் அக்கலிமா மறு தட்டிலும் வைக்க கலிமா உள்ளதட்டே தாழும், என்று கூறப்படும்.

மேலும் அக்கலிமா சொன்னவர் சுவர்க்கவாதி என்றும் சொல்லப்படும். கலிமா சொன்ன இஸ்லாமியர்கள் அவர்களே நாளை மறுமையில் இறைவனின் சன்னதியில் அவனின் தீர்ப்புக்காக இருப்பார்கள் என்றும் உள்ளது. இதன் பொருள் என்ன ?

ஒன்றை ஒருவர் சொல்கின்றார் என்றால் அதைப்பற்றி அறிந்ததை அவர் உணர்ந்து சொல்வார். அதுபோல் கலிமாவை அறிந்து, புரிந்து சொல்கின்றவர் வாழும் போதே சுவர்க்கவாதி என்றப் பொருள் தானே அவ்வுண்மைகளில் உள்ளது என அறிந்தோர் உணருவர்.

ஒவ்வொரு இஸ்லாமியரும் கலிமா சொன்னவர்கள். அவர்கள் வாழ்வில் அவர்கள் சுவர்க்கவாதிகள் போல் உள்ளனரா என்று அவர்களே உற்று நோக்கினால் தன்நிலை தெரியும்.

ஒன்றுபட்டு அமைதியுடன் ஓர் உயிர் பலவுடலாக இருக்க வேண்டியவர்கள் கலிமாவை அறிந்த நிலைக்கேற்பவே இன்று பல குழுக்களாக உள்ளனர். இது போன்றே பல மதத்திலும் பல குழுக்கள் இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.

நற் போதனையில் பேதங்கள் நீங்கி வாழ வேண்டிய மனித இனம் இன்று அறிந்தோம் என்ற அறியாமையில் பலப் பிரிவுகள் தன்னுள் கொண்டுள்ளது.

மனிதனில் இந்த மாற்றங்களுக்கு காரணம்தான் என்ன ? அதனைப் போக்க வழிதான் உண்டா ?
தொடரும்...
நபிதாஸ்

Saturday, February 15, 2014

வேலன்டைன் குறும்பாக்கள்

வேலண்டைன் என்னும்
விண்கலம் ஏறி
"செவ்வாய்"க் கேட்டான்;
செதுக்கியச் சிலையாய் நின்றாள்!

நன்றாய்ப்பார்
நானொரு சனிக்கோள் என்றாள
இன்றோ தேடினான்
இவளிடம் “திருநள்ளாறு”!

அட்டைகள் தோறும்
அழகாய்ப் "பொரித்த"
சட்டைக் கழற்றிய இதயம்
சட்டெனக் கவரும் வண்ணம்!.

செல்பேசிகளில்
செலவாகிப் போயின
செல்வங்கள் நில்லாமல்
வரவாகிப் போயின
வணிகர்களின் கல்லாவில்!.

பொருளாதாரம் செழித்தது.
பொழுதும் கழிந்தது;
அருளாதாரம் அழிந்தது
அதுவே காதல் என்றது!

காதலின் புனிதம்
காணாமற் போன மனிதம்
காமத்தின் உச்சம்
காதலென்று உச்சரிக்கும்!

வணிகமில்லா அன்புக்கு
வணிகம் செழிக்க வைத்து
வணிகமயமாக்கிய காதல்!
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Tuesday, February 11, 2014

ஆமாம் ஒன்றே !

ஒன்றே தன்னிலே உருவாய் எங்கும்
நன்றே நின்னிதில் நனவாய் தங்கி
இன்றே தன்னிலே இதனைப் பொங்கி
அன்றே இல்லதை அகற்றி ஓங்கே.

ஓங்கி உன்னிலே உணர்வைத் தூண்டி
தாங்கித் தன்னிலே தருவாய் அன்பை
ஏங்கி என்றுமே இருக்காய் உண்மை
வாங்கித் தந்திடும் வழியில் கொண்டே

கொண்டே வாழ்ந்திடக் கொடுக்க இன்பம்
அண்டை வீட்டிலும் அகலும் துன்பம்
உண்ட ஊன்களும் உருசி காட்டும்
கண்டே நம்மிலும் கசியும் அன்பே.

அன்பாய் நிற்பதில் அறிவோம் நன்மை
பொன்னாய் மின்னிடும் புகழும் உன்னில்
ஒன்னாய் கொள்ளுதல் உயர்வும் நின்னில்
சொன்னார் நலமுடன் சுவர்க்கக் கோமான்

கோமான் கொள்கையின் குணத்தைக் கொண்டே
சீமான் வாழ்வினைச் சுயத்தில் காணே
பூமான் தன்னிலே புரிந்தால் நன்றே
ஆமாம் என்பதே அவனே ஒன்றே.

நபிதாஸ்

நேர் நிறை ஒன்றிய ஆசிரிய குறு அந்தாதி

Saturday, February 8, 2014

அறியா அறிவுப்போலிகள் !?

அறிவுத்தேன் II
இதை எப்படி புரிந்துக்கொள்வது ? விளைவுகளைப் பொருத்தும் இதனைப் புரிந்துக் கொள்ளலாம். இதனை பின்பு விவரிப்போம். அதற்கு சம்பந்தமான சில விளக்கங்களைப் பார்ப்போம். அவைகள் அறியா அறிவுப் போலி. அதிலும் விளக்கம் புரியலாம்.

கருத்துப் போலிகள் சில சமயம் விளங்கியவர்கள் அறிவுத் திறமைக்கேற்பவும் உண்டாகிவிடுகிறது. இது போன்ற அறியா அறிவுப் போலிகள் தவிர்த்திடுதல் மிகவும் கடினமானது. காரணம் ஒவ்வொருவரும் தன் அறிவை, தன் திறமையை முழுமையாகத்தான் நம்புவார்கள்.

முக்கிய தலைவர்கள் பத்திரிகைப் பேட்டித் தருவார்கள். நிருபர்களும் பல மாதரி துடுக்காவும்; மறித்தும் கேள்விகள் கேட்ப்பார்கள். பேட்டி பத்திரிகையில் வந்தததும் பேட்டிக் கொடுத்தவர் நான் இன்னக் கருத்தில் சொன்னேன், அவர்கள் அதனை இவ்வாறு தவறாகப் போட்டுவிட்டார்கள் என்பார்.

இது புரிகின்ற ஆற்றல் குறைவால் தவறுகள் ஏற்படுகிறது. சொற்கள் அதனின் உண்மையான அர்த்த மூலத்தை புரியாததனால் இவ்வாறு தவறுகள் ஏற்படலாம்.

இப்பொழுது சொல்லானது எவ்வாறு அவரவர் அறிவு, தகுதி, திறமை. புத்திக் கூர்மை, நுண்ணறிவாற்றல், தெளிவு இவற்றால் எப்படிப் புரியப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

இரண்டற்றவன். இச்சொல் எவ்வாறு விளங்கிக் கொள்ளப்படுகிறது என்றுப் பார்ப்போம். பொதுவாகப் பலர் இதனை மேலோட்டமாகப் படித்துச் செல்கின்றனர். அதாவது புரியாமலே படிக்கும் ஓட்டத்தில் அடுத்தக் கருத்திர்க்கு போய்விடுவார்கள்.

சிலர் இரண்டில்லை, அதாவது இரண்டுகள் இல்லாத மூன்றாம் நிலை என்றும் அந்த மூன்றாம் நிலையில் இந்த இரண்டும் உள்ளது என்றும் புரியலாம். உதாரணமாக தங்கமும் மோதிரமும். மோதிரம் தங்கத்தில் இருந்து உண்டானது. தங்கம் பூமியில் உண்டாகியது. எனவே இந்த இரண்டும் இல்லாத மூன்றாம் நிலையைப் புரிவார்கள்.

சிலர் இரண்டாகத் தெரிந்தாலும் ஒன்றே இரண்டாகத் தெரிகின்றது. அந்த இரண்டற்ற நிலை என்றுப் புரிவார்கள். இவர்கள் தங்கம் மோதிரமாகத் தெரிந்தாலும் தங்கம்தான் என்றுப் புரிவார்கள்.

சிலர் இரண்டு இல்லை. ஒன்றைத்தான் பார்ப்பவன் இரண்டாகப் பார்க்கின்றான் என்று விளக்கம் தருவார்கள். அதுதான் இரண்டற்றவன் என்பதின் பொருள் என்பார்கள். மோதிரமும் இல்லை தங்கமும் இல்லை. ஒன்றுதான் இருக்கின்றது. பார்ப்பவன் இவன் அறிவைக் கொண்டுப் பார்க்கின்றான். மோதிரத்தையோ அல்லது தங்கத்தையோ பார்க்கின்றான். ஆனால் ஒன்றுதான் அவரவர் பார்வை விளக்கம் (தகுதி, திறமை) அதற்குத் தகுந்தார்ப் போல் புரியப்படுகிறது என்று விளக்கம் தருவார்கள்.

சிலர் கையாகவும் மனிதனாகவும் இவன்தான் பார்க்கின்றான்.. கையும் இல்லை மனிதனும் இல்லை. பூமியில் உண்டான இவன் பூமி (மண்). இவன் பேசினால் பூமிதான் பேசுகிறது. ஆனால் இவன், தான் பூமியைவிட்டு வேறானவன் என்பதுபோல் இவன் புரிந்து, தான் பேசுவதாக புரிகின்றான் என்பார்கள்.

பூமி எவ்வாறு பேசும் ? இவன் மூலம் தானே பேசும். அவ்வாறு பேசுவதை இவன் என்று கருதிய, நம்பிய, உணர்ந்த அந்த அம்சத்துக்குள் இவன் உரிமை கொண்டாடி விடுகிறான் என்பார்கள். அமைதியில் நிதானமாக கவன ஓர்மையில் தொடரைத் தொடரவும்.

வாய் பேசினால் வாய் அதுவாப் பேசுகிறது ? அல்லது உன் உடன்பு அதுவாப் பேசுகிறது ? அல்லது நீ என்ற உன் கற்பித உன் அறிவு அல்லது உன் உள்ளுணர்வு அதுவாப் பேசுகிறது ? அல்லது உன் உணர்வு எதுவால் உண்டானதோ அதுவாப் பேசுகிறது ?

பாரதப் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியிடம் இந்தியாவின் கருத்தைக் கூறினால் அது இந்தியா தன் கருத்தைக் கூறியதாகத்தானே பொருள் ! அதைவிடுத்து பாரதப் பிரதமர் தன் அறிவில் உண்டானது என்று அந்த நேரத்தில் சிலக் கருத்தை கூறினாலும் அது இந்தியாவின் கருத்துத் தானே ! அவ்வாறல்ல அது என் கருத்து என்று எவ்வாறு பாரதப் பிரதமர் சொல்லக்கூடும் ? அங்கு பதியப்பட்டது இந்தியாவின் கருத்துத் தான் என்று உலகம் ஏற்றுக்கொள்ளும். மேலும் இந்தியாதான் எவ்வறுப் பேசும் ? பாரதப் பிரதமர் மூலமும் பேசும், உங்கள் மூலமும் பேசும், என் மூலமும் பேசும். இரண்டற்ற நிலையை இவ்வாறும் சிலர் புரிவார்கள்.

சிலர் இந்தியாவும் அமெரிக்காவும் பேசிக்கொண்டது உலகம் தனக்குள் இவ்வாறு பேசிக்கொண்டது என்றும் புரிவார்கள் !

நபிதாஸ்

Thursday, February 6, 2014

புறத்தோற்றம் !?

இறைவனின் அருள் கொடைகளில் செல்வம், ஆரோக்கியம், மனை, மக்கள், அதில் மனிதனின் வெளித்தோற்றமும் அழகாய் மிடுக்காய் அமைவதும் அவனின் கிருபையே. ஆள் பாதி ஆடை பாதி என்பது நம் மானுட வர்க்கத்திற்கு எந்தவித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது. first impression is best impression என்பார்கள் நம்முடைய முகத்தோற்றம் சரியாக இருக்கும் பட்சத்தில் நாம் சந்திக்கும் நபரிடம் நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சுலபமாக இருக்கும் !

நம்மீது அவர் நல்ல அபிப்பிராயம் கொள்ளாத பட்சத்தில், நம் கருத்து எவ்வளவு சரியாய இருந்தாலும் எடுபடாமல் போய்விடும் !? இது நேர்முக தேர்வு விஷயத்தில் மிக பொருத்தமாக இருக்கும் சிலருக்கு எவ்வளவு உயர்ந்த ஆடை உடுத்தினாலும் மிடுக்காய் தெரியமாட்டார்கள் அதுதான் வெளி தோற்றம் சிறப்பாய் அமைந்து இருப்பவர்கள் இறைவனின் அருள் பெற்றவர்கள் என்றேன்.
     
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் திருடனை அவன் [ திருட்டு ] முழியிலேயே கண்டுகொள்ளலாம். பாராரியை அவன் தோற்றத்திலேயே சாதாரணமாக காணலாம். ஒவ்வொருவரின் உத்தியோகத்திற்கும் ஒரு உடை வழங்கப்பட்டுள்ளது. அதைவைத்து கண்டுகொள்ளலாம் இதுவெல்லாம் வெளி விஷயம் இனி சொல்ல இருப்பது முக்கியமான விஷயம்

எதிர்மறையான விஷயம் [ காண்போம் ]
   
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பண்டைய மொழி அதாவது உள்ளே உள்ள விஷயம்தான் வெளியே தெரியும் என்பார்கள் ஆனால் வேஷதாரிகள் தன் அறிவு நிலையை தன் ஆன்மீக நிலையை கல்வி கற்ற நிலையை பறைசாற்றுவதற்காக தன்னை முற்றும் துறந்தவன் என்றும் எதிலுமே நாட்டம் இல்லாதவன் போல் காட்டிக்கொண்டும் வேடமிட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர். மக்களோ வேடதாரியின் மேல் மோகம் கொண்டு வீழ்ந்து விட்டில் பூச்சிகளாய் மாய்கின்றனர் பாவிகள் செய்யும் குற்றத்திற்கு பழமொழியை குற்றம் சொல்ல முடியுமா ? கோடி கோடி சொத்துக்கள் உள்ள ஆசிரமங்களுக்கு பெயர் மடம் அங்கே இருப்பவர் சாமியார் இது எதிர்மறை இல்லையா !?
       
இரண்டாம் விஷயம் ஆள் பாதி ஆடை பாதி என்பது உண்மையான விஷயம்தான் முன்னாள் முதல்வர் காமராசர் அவர்கள் மாணவர்களிடம் பேதங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக பள்ளிச்சீருடை கொண்டுவந்தார். இன்று தமிழகத்தில் ஆங்கில வழிக்கல்வி பயில்விக்கும் பள்ளிக்கூடங்கள் நிறைய முளைத்து இருக்கின்றன. அங்கே  ஆங்கிலத்தைத்தான் முதல் பாடமாக  பயில்விக்கிறார்கள். சரி ஆங்கிலேயரின் சூழலுக்கேற்ற பழக்கமான காலுக்கு சூ, மோசா, கழுத்துக்கு இறுக்கி பிடித்த டை இடுப்புக்கு பெல்ட் அத்துனையும் 100 டிகிரி வெயில் கொளுத்தும் நம் தேசத்தில் என்பது எதிர்மறையான விஷயம் அல்லவா ? [ தேவையா நமக்கு ! :) ]

உள்ளொன்றும் புறமொன்றும் வேண்டாம் அகத்தின் அழகை முகத்தில் காட்டுவோம் [ உண்மையாய் ]

மு.செ.மு.சபீர் அஹமது

Monday, February 3, 2014

பணமா அது எப்புடின்னு தெரியுமா !?

ஹலோ, பணத்தை வைத்து இவ்வளவு வேலைகளையும் செய்கின்றீர்களே, அந்த பணத்தப்பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா ?

கொஞ்சம் பொறுங்கள். பணம் பத்தும் செய்யுமாமே ? உங்களுக்கு அந்த பத்தும் தெரியுமா ? தெரிந்தால் கொஞ்சம் பகிருங்களேன்.

பணம் பத்தும் செய்யும், இது பழமொழி. அது பாதாளவரைக்கும் போகும், பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும், இதை எல்லோரும் அடிக்கடி சொல்வதுண்டு, பணம் அது ஒன்றும் இல்லை, ஆனால் அது இல்லாமல் ஒன்றும் இல்லை. எப்படி பார்த்தாலும் பணம் தேவைப்படுகிறது.

இன்று மனிதனின் மிகவும் முக்கியமான மற்றும் அடிப்படை தேவை எது என்றால் அது பணம், பணமில்லார்க்கு இந்த உலகம் இல்லை என்ற நிலை வந்து விட்டது.

பணம் என்பது, மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள், சேவைகள் முதலியவற்றை எளிதாகப் பரிமாறிக்கொள்ளவும், கடன்களைத் திருப்பித்தரவும் சரி சமமான மதிப்புடையதாக ஓர் அரசால் உறுதியளிக்கப்பட்ட அடையாள அலகு.

வரலாற்றுப்படி சந்தைப் பொருளாதார உருவாக்கத்தின்போது பண்டமதிப்பு பணம் நிறுவப்பட்டாலும் தற்போது புழக்கத்தில் இருக்கும் அனைத்து பண அமைப்புகளும் ஆணைத்தாள் பணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. தனக்கான தனிமதிப்பு எதுவும் இல்லாத காசோலை அல்லது கடன் பத்திரம் போன்றே ஆணைத்தாள் பணத்திற்கும் ஒரு பண்டமாக மதிப்பு எதுவும் இல்லை. சட்டபூர்வமான தனது மதிப்பை அரசின் ஆணையாலேயே பெறுகிறது. எனவே இது அரசாணை இடப்பட்ட நாட்டின் எல்லைகளுக்குள்ளே மட்டுமே செல்லுபடியாகும். இத்தகைய அரசாணைகளால் ஆணைத்தாள் பணம் நாட்டின் எல்லைகளுக்குள் தேவையான பொருட்களையும் சேவைகளையும் வாங்கவும் விற்கவும் பரிமாறிக்கொள்ளவும் முடிகிறது.

சில பேர் அந்திவேளை, சந்திவேளையில் பணம் கொடுக்க மாட்டார்கள் இதை ஒரு கெட்ட சகுன செயலாக கருதினார்கள், ஏன் அப்படி கருதினார்கள்?

குறிப்பாக, மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் மண்ணெண்ணெய் விளக்குகளின் உதவியுடன் முன்னோர்கள் கொடுக்கல் வாங்களில் ஈடுபட்டனர், எனவே இரவு நேரத்தில் எவ்வளவு கொடுத்தோம் வாங்கினோம் என்பதில் பல சிக்கல் ஏற்பட்டது. தற்போது மின்சார வசதி இன்னும் சோலார் வசதி உலகம் முழுவதும் இருந்தாலும் இன்னும் அந்தப் பழக்கம் பல இடங்களில் இருந்து வருகின்றது, அதாவது மாலை மணி 5.30 ஆகிவிட்டால் போதும் எந்த பண பட்டுவாடவும் நடக்காது. இது ஒரு மூடநம்பிக்கை என்றே சொல்லலாம்.

மனிதன் பணத்தை பல வழிகளில் சம்பாதிக்கின்றான்/ஈட்டுகின்றான்/பெறுகிறான், நல்ல வழிகளிலும், தீய வழிகளிலும் பெறுகிறான்..

உடல் உழைப்பைக் கொண்டு உண்மையாக, பாதி உடல் உழைப்பும் பாதி அப்படியும் இப்படியும், பிறரை ஏமாற்றி, கட்டப் பஞ்சாயத்து, திருடுதல், இன்னும் அனேக வழிகளில் பெறுவதை பல ஊடக வாயிலாக அறிகின்றோம்.

சில பேர் தாமே முதலாளியாகவும் தொழிலாளியாகவும் வீட்டிலே இருந்துகொண்டு அவரவருக்கு தெரிந்த முடிந்த வேலைகளை செய்து கொண்டு பணத்தை சம்பாதிக்கின்றனர், நேரத்திற்கு வேலைக்கு வரவேண்டும் என்று யாரும் சொல்ல அதிகாரம் கிடையாது, இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவர் விரும்பும் நேரம் பணி செய்து விட்டு விரும்பும் நேரம் ஓய்வு எடுத்து விட்டு, வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு, சிறப்புடன் இருக்கும் சிலரை பார்க்கலாம். இப்பேர்பட்டவர்களை நீ இந்த வேலையைத்தான் செய்ய வேண்டும் என்று யாரும் அழுத்த முடியாது, மாதம் இவ்வளவுதான் சம்பளம் என்ற ஓர் அளவே கிடையாது, அவர் திறமைக் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்.

பஸ் ஸ்டான்ட், கடைத்தெரு போன்ற இடங்களில் பணத்திற்க்காக ஒரு கூட்டத்தினர் வந்து பாட்டு பாடுவது, குஸ்த்தி போடுவது, கம்பி வளையத்துக்குள் இரண்டு பேர் ஒன்றாக நுழைந்து வெளிவருவது, குரங்கை வைத்து நடனம் காட்டுவது போன்ற காட்சிகளை பார்க்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது, அதே சமயம் ஒரு ஐந்து பைசா, ஒரு ரூபாயாவது போடாமல் அந்த இடத்தை விட்டு நகராதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், இதுவும் ஒரு வகையில் பணம் ஈட்டுதல்தான்.

அப்படியானால் பணம் யாருக்கு சொந்தம் என்று பார்த்தால் யாருக்குமே சொந்தம் கிடையாது என்றே சொல்ல முடியும். ஆனால் பணத்தை மனிதன் எதுவுக்கெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து கொள்கின்றான், ஆனாலும் பணத்தைக் கொண்டு செய்ய முடியாத காரியம் அநேகம் உண்டு அதில் ஒன்றை மட்டும் இங்கு நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

இப்போ உள்ள சூழலில் மனிதனுக்கு முக்கியமானது தண்ணீர், இது வெகுவாக குறைந்து வருகின்றது, போதிய மழை இல்லை, நிலத்தடி நீர் படுவேகமாக இறங்கி வருகின்றது இது இப்படியே நீடித்தால் கடும் பஞ்சம் வரும்.

உலக அரங்கில் எவ்வளவோ முயற்ச்சித்து வருகின்றனர். ஆனாலும் முடியவில்லை. பணத்தை சிலவு செய்து எங்கெல்லாம் நீர் கிடைக்கும் என்று பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு வருகின்றது, சில இடங்களில் நீர் குறைவாகவே கிடைக்கின்றது பல இடங்களில் நீர் அறவே இல்லை. அதிகளவு பணம் சிலவு செய்தும் பலன் இல்லை.

இறைவன் தண்ணீரை இரண்டு மூலக்கூறுகளை வைத்து படைத்து இருக்கின்றான், “ஹைட்ரஜன் இரண்டு பங்கு, ஆக்சிஜன் ஒரு பங்கு” இது இப்படி இருக்க, தண்ணீரைப் பெற நாம் பணம் கொடுத்து இரண்டுபங்கு ஹைட்ரஜன்வாயு-ஒருபங்கு ஆக்சிஜன் வாயு இந்த இரண்டையும் விலைக்கு வாங்கி கலந்துவிட்டால் தண்ணீர் கிடைத்து விடுமா? தண்ணீருக்கு பதிலாக வேறு ஒரு வாயு உருவாவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காற்று எப்படி இறைவனால் இலவசமாக கொடுக்கப்பட்டதோ, அப்படியே நீரும்.

ஆக, பணத்தைக் கொண்டு நீரை விலைக்கு வாங்கலாமே தவிர, உருவாக்க/தயாரிக்க முடியாது, இதுதான் உண்மையும்கூட.

உலகம் செழிக்க, நாடு செழிக்க, உயிர் இனங்கள் செழிக்க, சமூகம் செழிக்க, பணத்தைக் காட்டிலும் தண்ணீரே என்று உணர்ந்து நாம் எல்லோரும் அந்த நீரைப் பெறுவதற்கு மழைக்காக இறைவனிடம் வேண்டிடுவோம்.

முடிவாக ஒன்றை மட்டும் இங்கு சொல்ல விரும்புகின்றேன்.

அப்படிப்பட்ட பணம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், இருப்பவர்களுக்கு நன்மையான வழிகளிலும், அவரை சார்ந்துள்ள குடும்பங்களுக்கு, சமூகத்துக்கு, சமுதாயத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, உலகத்துக்கு நன்மையாக இருக்கும்.

இருக்கக்கூடாத இடத்தில் இருந்தால், இருப்பவர்களுக்கு தீமையான வழிகளிலும், அவரை சார்ந்துள்ள குடும்பங்களுக்கு, சமூகத்துக்கு, சமுதாயத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, உலகத்துக்கு தீமையாக இருக்கும்.

என்னங்க, நான் சொல்வது தவறா ?

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Saturday, February 1, 2014

[ 2 ] கருத்துப்போலிகள் !?

II அறிவுத்தேன் 

ஓர் உண்மைக் கருத்தை எவ்வாறு விளங்கிக் கொள்வது ?
எல்லோருக்கும் நன்மைதரும் ஓர் உண்மைக் கருத்தானது அவ்வாறு எல்லோருக்கும் நன்மை தராமல் சிலரைத் தவிர்த்து பிறருக்குத் துன்பம் தருமானால் அது தவறுதலாகப் புரிந்து உள்ளது என்றதான் சொல்ல வேண்டும்.

புரிதலுக்காக வேண்டி கருத்தைச் சொன்னவரிடம் தாம் விளங்கியதை நேரடியாகத் திருப்பிச் சொல்லும்போது சொன்னவர் கருத்திற்கேற்ப தன் புரிதலைத் திருத்திக்கொள்ளலாம். மேலும் புரிதலுக்காகவும் சந்தேக கேள்விகள் கேட்டும் விளங்கிக் கொள்ளலாம்.

சொன்னவர்கள் காலம் கடந்து இருக்குமானால் அவர்கள் வழித்தோன்றல்கள் மூலமும் அல்லது மற்றவர்கள் விளங்கியவர்கள் அவர்களிடம் அக்கருத்தின் குணமான உதாரணமாக எல்லோருக்கும் நன்மை பயக்குதல் அவர் மூலமும் நிகழ்ந்தால் ஏற்றுக்கொள்ளலாம்; விளங்கிக்கொள்ளலாம்.

மாறாக அறிவு மயக்கம் தரும் அல்லது எதையும் சொல்லும் திறமைமிகு ஆற்றலாலும்,  அதனை செவியுறும் விபரம் குறைந்தவர்கள் அவர்களால் மறுக்கத்தெரியாததாலும், சிலவற்றால் கட்டுப்பட்டும் இருக்கும் சிலராலும், உண்மை அதனினின்றும் விலகி விளங்கியவர்களின் போலிக் கருத்தில் சிக்குவது தவிர்க்க இயலாது.

இவ்வாறுதான் பெரும்பாலும் ஒரு உண்மைக் கருத்தின் உண்மையிலிருந்து விலகி தப்புகளும் தவறுகளுமாக விளங்கிக்கொள்வதில் ஏற்படுகின்றது.

ஒன்றைபற்றி ஒருவரிடம் விளக்கம் கேட்டால் அதை அறிந்தவர், சொல்லும் திறமை குறைந்து இருந்தால் அவர் விளக்கம் எடுபடாது. அதே நேரத்தில் சொல்லும் திறமை மிகுந்தவர் தவறாக விளக்கம் தந்தால் அது விளக்கமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

நாம் பெரும்பாலும் நம்மை அன்மித்தவரிடம்தான் முதலில் விளக்கம் கேட்ப்போம் அல்லது நமக்கு பழகப் பட்டவரிடம்தான் விளக்கம் கேட்ப்போம். அவர்கள் வழிகாட்டும் முறையில்தான் நம் விளக்கங்கள் இருக்கும்.

இது போன்றவர்களிடம் விளக்கம் கேட்பது தகுதியானதா என்பதைப் பற்றி பெரும்பாலும் பலர் சிந்திப்பதில்லை. ஒருவரிடம் விளக்கம் கேட்பதானால் அவர் கல்விமானாக இருப்பது மட்டும் பொருத்தமில்லை. அவர் நல்லவராக இருக்க வேண்டும்.

நல்லவர் என்றால் அவரின் வாழ்க்கையில் தன் குடும்பதாருடனும், மற்ற பிற மனிதருடனும் இவர் பழகும் விதம், அவர் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட நலன்கள், இவைகளை வைத்து அவரைக் கணித்து விடலாம். நல்லவர் யாருக்கும் துன்பம் தரமாட்டார். இவர்கள் போன்றவர்களிடம் விளக்கம் கேட்டால் அவர்கள் வழி காட்டும் முறை சரியானதாக் இருக்கும்.

திரும்ப திரும்ப ஒரு போலிக் கருத்தை அடிக்கடி வலியுறுத்திப்பேசினாலும் அதைக் கேட்கும் அக்கருத்தை புதிதாக கேட்பவர்கள் அதுப் பற்றியே தன் சிந்தனையைச் செலுத்தும் போதும் அக்கருத்து விரும்பப் படலாம். போதைக்கு அடிமையானவன் ஆரம்பத்தில் அரைகுறையாகப் பிடிக்காமலும் ஆனாலும் ஓர் ஆசையில், அடிமையானவர் நிர்பந்தத்தில்தான் போதை வஸ்த்தை அருந்துவான். பின்னர் அதற்கு அடிமையாகி அதுதான் அவனுக்கு மிக உயர்வானப் பொருளாகத் தெரியும். திரும்ப திரும்ப பார்க்க கழுதைகூட அழகாகத்தான் தெரியும்.

போலியை உண்மை என நம்பி, அதனைப்பற்றியே அப்போக்கிலே அதற்கு ஒத்த சாதகமான விதத்தில் சிந்தித்து, அதில் மயங்கி அதனை விட்டு மீளமுடியாமல் இருப்பவர்கள், அதிலிருந்து, ( தான் போலியை உணர்ந்து; அறிந்து) வெளி வருவது மிகக் கடினம். பொது உண்மைகளை மறுத்தும் எதிர்த்தும் பேசுவது அந்நிலையில் தவறாகத் தெரியாது. இவ்வாறான நிலைதான் மிகப் பரிதாபத்திற்குரியது.

இதனை எப்படிப் புரிந்துக் கொள்வது ?
தொடரும்...

நபிதாஸ்
Pro Blogger Tricks

Followers