.

Pages

Thursday, October 31, 2013

அம்மிக்கும் மிக்சிக்கும் போட்டியாம்ல :)

அம்மிக்கும்
மிக்சிக்கும்
போட்டியாம்

அம்மாவின்
ஓட்டு
மிக்சிக்கும்

அப்பாவின்
ஒட்டு
அம்மிக்கும்
என்றானது

மம்மியிடம்
கேட்டேன்
ஏன் மம்மி
அம்மிமேல்
கோபமா ?

அம்மா சொன்னால்
உன்னை
ஸ்கூலுக்கும்
அப்பாவை
அலுவலகத்திற்கும்
சோற்றோடு
அனுப்பிவத்து
அத்தோடு
உன் தாத்தாவிற்கு
அருகம்புல் சாரெடுக்க

இவை
அத்துனையும்
காலைப்போழுதிலேயே
செய்து முடிக்க
மிக்சியே
சூட்டபில்
என் மகனே

மம்மிக்கு புடிக்காத
அம்மியை
ஏனப்பா தேர்ந்தெடுத்தாய் ?

அம்மியில் தானப்பா
ஆரோக்கியம்
சேர்ந்திருக்கு

நான் கூறும்
"அம்மாவின்
கைருசியே தனிதான்"!
என்பதற்கும்
அம்மியின் மகத்துவம்தான்
மகனே

அம்மியோ, மிக்சியோ
அறைபடப்போவது
அம்மாதான் !

மாற்றங்கள்
பல நடந்து
அம்மி மிக்சியானது
ஆட்டாங்கல் கிரைண்டரானது
விறகடுப்பு, கேசடுப்பானது

ஆனால்
அம்மாக்களுக்கு
மட்டும்
மாற்றங்களே
இல்லாது

அடுப்படியே
கதியானது !?
மு.செ.மு.சபீர் அஹமது

Wednesday, October 30, 2013

[ 7 ] அறிவுத்தேன் [ ஒன்றேயது பலவானது ]

ஒன்றிலே உண்டானது
ஒன்றேயது பலவானது
உண்டாகும் முன் வொன்றே
நன்றேயிது அறிவீரே !

எவ்வாறு ?

அரூப நிலை உள்ளது/இருப்பது. அல்லது அரூப நிலை மட்டுமே உள்ளது/இருப்பது. அல்லது அரூபநிலை எங்கும் உள்ளது/இருப்பது அதனை ஆதாரமாகக் கொண்டுதான் அனைத்தும் உண்டாகின. அவ்வரூபத்திற்கு தனது நிலையில் கூடுதல், குறைவு என்பதில்லாது(தங்கமும் மோதிரமும் போல்) உருவ இருப்புகள் அதில் உண்டாகுகின்றது என்று கவனத்தில் கொண்டோம்.

வெளி, நெருப்பு, வளி, நீர், மண்- இவைகள் ஐம்பூதங்கள் என்றழைக்கப் படுகிறது என்பது யாவரும் அறிந்ததே.

வெளி என்ற வெட்டவெளியான ஆகாயம். இது எல்லையற்றது. நாம் வசிக்கும் பூமி, அதையடக்கிய சூரிய குடும்பம், விண்ணில் தெரியும் நட்சத்திரங்கள், இவைகளை உள்ளடக்கிய பால் வீதி மண்டலம் (Milky Way Galaxy), இது போன்ற அல்லது அல்லாமல் எண்ணிக்கையற்ற அறிவு வீச்சுக்கு அப்பாற்பட்ட எத்தனையோ மன்டலங்கள், இவ்வாறு விரிந்துகொண்டே செல்லும் அற்புதங்கள், சொற்பதங்களால் எழுதமுடியாத; சிந்தனைக்கு அப்பாற்பட்ட விரிவானதாக வெளி உள்ளது எனலாம்.

ஒப்பிட முடியாது. இருப்பினும் மகா பெரியது என்பதை நாம் புரிந்துகொள்ள இவைகளை எழுதவேண்டியுள்ளது. அதாவது, பகலில் ஒரு சிறு துளி ஓட்டையின் வெளிச்சத்தில் நம் பார்வையில் தெரியும் காற்றில் பறக்கும் தூசி போன்று நாம் வசிக்கும் பூமியானது இவ்வெளியில் இருக்கலாம்.

இன்னும் ஒரு கோணத்தில் சொல்வதென்றால் இன்னொன்றையும் பார்ப்போம். ஒளியானது ஒரு இடத்தை விட்டு கிளம்பி ஒரு வருட பயணம் சென்று அடையும் தூரம் ஒரு ஒளி ஆண்டு என்கின்றனர். நம் பால் வீதி மண்டலத்தில்,  எத்தனையோ ஒளி ஆண்டுகளுக்கு முன் கிளம்பிய நட்சத்திர ஒளி, நம் பார்வையில் தெரியும் அந்த ஒளிக்குரிய நட்சத்திரம் பார்க்கும் போது தற்சமயம் அழிந்து இல்லாமல் கூட இருக்கலாம், அத்தகைய தூரங்கள். இரண்டு நட்ச்சதிரத்திர்க்கு இடையிலேயே இவ்வாறென்றால் இதுபோல் எண்ணிறைந்த நட்சத்திரங்கள் நம் மண்டலத்திலும், எண்ணிறைந்த மண்டலங்கள் வெளியிலும் இருக்கின்றது.

மேலும் மனிதனால் பூமியிலிருந்து தற்போதைய அறிவு வளர்ச்சியைக் கொண்டு இப்பால் வீதி மண்டலத்தில், அடுத்த நட்சத்திரம் என்ற சூரிய குடும்பத்துக்குள்  நுழையமுடியாது. அதற்குள் இவன் ஆயுள் முடிந்துவிடும். இது ஒரு மண்டலம்(Galaxy) சம்பந்தப்பட்டது. இது போன்ற எண்ணிறைந்த மண்டலங்கள்(Galaxies)  இருக்கும் வெளியை நம் அனுமனத்துக்குகூட அறிந்து விளங்க நமக்கு ஆயுள்கள் போதாது. மகாப் பெரியது. இது உருவம் உண்டாகாத அரூப நிலையில் இருந்து தோற்றம் பெற்ற வெளி. அரூபம் இல்லாமல் வெளி இல்லை. அருவிலிருந்து உருவான வெளி. (தங்கமும் மோதிரமும் போல்).

நெருப்பு என்ற ஒளிரும் எரி சக்தியான வெளி. இது வெளியின்(ஆகாயத்தின்) சுய இச்சையால், அதனுள், அதனில் (இச்சை)அசைவால்,  அதுவே சூடு(உஷ்ணம்) ஏற்பட்டு நெருப்பாக, பிரிவாக தோற்றம் தெரிகிறது. (அன்பின் அபரிமித உச்சத்தில் உஷ்ணம் உண்டாகும்.)

அமைதி தன்னில் சுய அன்பின் நிமித்தம், நெருப்பாக ஆகின்றது. அதுவின் அதிகம் நெருப்புக் கோளங்களாக ஆகின்றது. எண்ணற்ற ஆற்றல்கள் எவ்வாறெல்லாமோ அவ்வாறெல்லாம் அதில் ஆகிக்கொண்டே இருக்கின்றது. அமைதியில் அமைதி ஆற்றலாகிறது. வெளியின் குணமும் அனைத்திலும் அவ்வாறே இருக்கும், அதில் குறை;நிறை என்பதில்லை. இவ்வாறு வெளியின் வெளிப்பாடான விருப்பம் நெருப்பான ஆற்றலாகின்றது. வெளியே நெருப்பாகின்றது.(தங்கமும் மோதிரமும் போல்). .

வளி என்ற காற்றான வெளி. இது வெளியின்(ஆகாயத்தின்) அசைவு. வெளி தன்னில் வெளியான நெருப்பின் நேசம் வேளியிலே தனிய வெளியே காற்றாகிறது.

வெப்பம் உண்டாகும் போது குளிர்சியும் உண்டாகும். வெளியில் ஒரு இடத்தில் உண்டான வெப்பத்தை வெளியில் விட,(உண்டான வெப்பம் சமநிலையடைய குளிர்ச்சியை நோக்கி செல்ல) வெப்பம் விரிவாகி, அதன்மூலம் வெளியில் வேற்று நிலை உண்டாகி வெளியே காற்றாகிறது.

தேநீர் கடையில் நீரை வெப்பமாக்கும் கொதிகலனின் மேல்வாயின் மேப்பரப்பில் வெளி அசைவதை பார்க்கலாம். வெளியின் சுபாவ சமநிலையிருப்புக்காக, உண்டாகிய வெப்பம் அவ்வெளியில் கரைந்து அதனால் வெளியே காற்றாகிறது. அசைந்தால் காற்று அசையாவிட்டால் ஆகாயம் என்பார். வெளியே நெருப்பாகி, வளியும் ஆகிறது. வெளியே வளியாகின்றது(தங்கமும் மோதிரமும் போல்).

நீர் என்ற திரவமான வெளி. வெளியில் நெருப்பு சக்தி உண்டாகும் போது குளிர் தன்மையும் உண்டாகும். அசையும் காற்றில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற வாயுக்களும் உண்டு. ஹைட்ரஜன், ஆக்சிஜன் இவைகள் ஒரு குறிப்பிட்ட நிலையில் இணைந்து குளிர்சியை பெற்று நீராக(திரவமாக) மாறுகின்றது. இதுபோல் காற்றில் உண்டாகி இருக்கும் மற்ற வாயுக்களும் திரவமாக(நீர் போன்று) ஆகும். வெளியே திரவமாகின்றது. (தங்கமும் மோதிரமும் போல்).

மண் என்ற கடினமான வெளி. வெளியின் ஹைட்ரஜன், ஆக்சிஜன் இவைகள் இணைந்து குளிர்ந்து நீராகிறது என்று பார்த்தோம். அது இன்னும் குளிர்ந்து பனிக்காட்டி யாகின்றது. புளுட்டோ என்ற கிரகத்தில் பனிக்கட்டி இரும்பை உடைக்கும் வலிமை உள்ளது என்கின்றனர். ஹைட்ரஜன், ஆக்சிஜன் போல் மற்ற மற்ற வாயுக்களும் ஒவ்வொரு வேறுபட்ட குளிர்ச்சி விகித நிலையில் இணைந்து குளிர்ந்து நீர் போல் திரவமாகி, இன்னும் குளிர்ந்து திடமான மண் ஆகி நிலமாகின்றது. (தங்கமும் மோதிரமும் போல்).

தங்கத்தை வெப்பப்படுத்த திரவ தங்கமாகிவிடும். இன்னும் பன்மடங்கு வெப்பப் படுத்த திரவ தங்கம் காணாமல் போய்விடும். மாறாக குளிர்ந்தால் கடின தங்கமாகிவிடும்.

பூமியின் மையப்பகுதி நீர் போன்று திரவமாகத்தான் இருக்கின்றது. வெப்பகுளிர் சமநிலை உண்டாக சுழற்சி ஏற்படுகிறது. அதன்படி பூமியின்; பூமியில் சுழற்சியாலும், மேற்பரப்பு அழுத்தத்தாலும் பூமியின் மையப்பகுதியில் இருக்கும் நீர் போன்ற திரவம் மேற்பரப்புக்கு வந்து (எரிமலை) குளிர்ந்து மண்ணாகி மலையாகியுள்ளது.  வெளியே மண்ணாகின்றது.(தங்கமும் மோதிரமும் போல்).

இவ்வாறு ஒன்றிலே உண்டாகி, அந்த ஒன்றே பலவாகி நிற்கின்றது. அவ்வாறு பலவாகி நிற்பவைகள் உண்டாகும் முன் ஒன்றாகவே இருந்தது என்பதை நன்கு உணரவேண்டும்.

பிரபஞ்சம் ஒன்றில்தான் அனைத்தும் உண்டாகியுள்ளது. அதாவது அப்பிரபஞ்சமே அவ்வாறு பலவாக மாறியிருக்கிறது. ஒன்றின் தத்துவத்தை இதன் மூலம் அறிய வேண்டும்.

ஒன்றே இருப்பது
உருவா கிருப்பது
ஒன்றின் உருவம்
என்பது எதுவது ?

ஒன்றின் உருவம் என்றால் என்ன ?  
நபிதாஸ்

Tuesday, October 29, 2013

கள்ளக்காதல் !?

தலைப்பு செய்திகளாய் ஆசிரியர் மருத்துவர்கள் பற்றிய செய்திகளை தந்தோம். ஓர் உண்மை சம்பவத்தை பற்றி விவரமாக காண்போம்... கூத்தாநல்லூர் வட்டம் லெச்சுமாங்குடியை சார்ந்த ஓர் ஆசிரியை அறிவியல் ஆசிரியராய் பணியில் இருக்கிறார் அவரின் கணவரும் ஓர் ஆசிரியர் அவர் வேறு பள்ளியில் தலைமை ஆசிரியராய் பணிபுரிகிறார். அறிவியல் ஆசிரியைக்கு தான் பணிபுரியும் அதே பள்ளியில் பணிபுரியும்  ஆசிரியர் மேல் ஓர் ஈர்ப்பு அவரின் நகைச்சுவை பேச்சு, சரளமாக பழகும் தன்மை, இவைகள் பெண் ஆசிரியைக்கு பிடித்துப்போக நட்பு நாள் ஆக காதலாய் [ கள்ளக்காதல் ] மாறிப்போக மனதை பறிகொடுத்தவருக்கு தன்னையும் கொடுத்து விட்டாள் ! இந்த தொடர்பு 7 வருடங்கள் தொடர்ந்தன.

கணவனாகிய தலைமை ஆசிரியருக்கோ இந்த நடவடிக்கைகள் எதுவும் தெரியாமல் போனது காரணம் காலையில் எட்டு மணிக்கு வீட்டை விட்டு சென்றால் இரவு 6 மணிக்குத்தான் திரும்ப வீடு வந்து சேர்வர். இருவரும் வேலை நேரத்தில் மனைவி வேலைக்கு சென்று வருகிறாள் என்று கணவன் நினைக்க அந்த ஆசிரியையோ திசைமாறி இருக்கிறாள் திசைமாரியதோடு மட்டுமல்லாது நிலை தடுமாறி கொலைகாரியாக இன்று சிறையில்.

தன் கணவரை கொலை செய்த குற்றத்திற்காக தானே அப்ரூவராக மாறி தான் செய்த குற்றத்தை அவரே ஒப்புவிக்கிறார் கேளுங்கள் கொடுமையை. கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பே காரை ஏற்றி கொலை செய்துவிடலாம் என்று செயல் படுத்த அதில் தலைமை ஆசிரியருக்கு காலில் முறிவோடு தலை தப்பியது அடங்காத கள்ளக்காதலன் இரண்டு வருடம் கழித்து பெண் ஆசிரியையிடம் கூறுக்கிறான் நாம் இருவரும் சேர்ந்து வாழவேண்டுமானால் உன் கணவன் உயிரோடு இருக்க கூடாது என்று அடுத்த சதித்திட்டம் தீட்டுகிறான் கள்ளக்காதலியும் சம்மதிக்க தோசை மாவில் தூக்க மாத்திரை கலக்கப்பட கணவர் ஆழ்ந்த  உறக்கம் கொள்ள விச ஊசியால் கொலை செயப்பட திட்டம் ! ஊசியும் ஒடிந்து போக அடுத்த முயற்ச்சி வாயில் விஷ மருந்து செலுத்தப்பட்டு இறக்கிறார் அப்பாவி கணவன்.
   
நான்கு மாதங்கள் கழிகிறது கொன்ற கொலைகாரிக்கு மனசாட்சி உறுத்த தானே வந்து சரண்டர் ஆகிறாள் காவல் நிலையத்திற்கு. அந்த ஆசிரியையின் மற்றொரு வாக்கு மூலம் தன் பிள்ளையையும் கள்ளக்காதலன் கொலை செய்து விடலாம் என்ற பயமும் அப்ரூவர் ஆக காரணம் ஆகும் ஆட்டை வேட்டை ஆடிய ஓநாய்கள் தங்களுக்குள்ளே மூர்க்க குணத்தை வெளிப்படுத்தி விட்டதுதான் இந்த செயல்

இவைகள் இப்படி இருக்க ஆடுகளால் வேட்டையாடப்பட்ட ஓநாய் கதையும் நடந்தேறி இருக்கிறது மூன்று மாணவர்கள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு கல்லுரியின் முதல்வரையே ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்த அவலம் ஒழுக்கம் சொல்லிக்கொடுக்க வேண்டிய பள்ளிகள் கவுண்டர்கள் திறந்து பணத்தை சேர்க்கையில் "யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் பாட வேண்டியதுதான்"
 மு.செ.மு.சபீர் அஹமது

Monday, October 28, 2013

மண்புழுவின் தியாகங்கள் !

ஏர்முனையில் சிக்கிமாயும்
மண்புழுவின் தியாகங்கள்
அறிகின்ற அறிவிருந்தால்
விவசாயத்தின் கதைகளில்
வாழ்ந்திருக்கும் சோகம்புரியும்.

உழைப்பவன் அழுதிருக்க
உண்பவன் சிரிக்கின்றான்
உடைந்த மண்பாண்டமாய்
உலகத்தில் விவசாயி.

காசிருந்தால் வாங்கிடலாம்
கானல் நீர் போல் நம்பிக்கை
பொருளின்றி எதை வாங்குவது
விதைத்தால் தானே அறுத்தெடுக்க..

விளை நிலத்தில் விழுகின்ற
தானியம் மட்டும் விதையில்லை
இதயத்தில் விதைக்கப்படும்
நன்மை தீமையும் விதைகளே.

வாழ்வும் விளை நிலம்தான்
நாம்தான் சீர் செய்யவேண்டும்
நன்றாய் அதை உழுதெடுத்து
நன்மை வளர்த்தால் செழித்தோங்கும்.

 சசிகலா

Saturday, October 26, 2013

[ 17 ] 'வளைகுடா வாழ்க்கை' [ படித்தால் மட்டும் போதாதுங்க !? ]

படித்தால் மட்டும் போதாதுங்க !?
கல்லூரி காலங்களில் வாலிப துடுக்கு தன்னோடு படிக்கும் சக மாணவர்களோடு அரட்டை என்று தனது வாலிப வயதை கழித்தவர்கள் படிப்பு
முடிந்து கல்லூரியை விட்டு வெளியே வரும்போது வாழ்க்கை பாடத்தை படிக்க துவங்குவர்.

சிலர் பட்டென வாழ்க்கை என்றால் என்ன ? என்பதை தெரிந்து இலகுவாக
முன்னேற்ற பாதைக்கு பயணிக்க துவங்குவர். ஆனால் சிலரோ தான் படித்தவன் ! நான் பட்டதாரி எனது தகுதிக்கு ஏற்ற வேலை வேண்டும் என்று நிபந்தனை விதித்து தனியாக தனி தீவாக காணப்படுவார்கள். அவர்களின்
வாழ்வில் பல கஷ்டங்கள் பாடம் எடுக்கும். அதன் பின்னர் வாழ்க்கை என்னும் நீரோட்டத்தில் கலந்து பயணிப்பர்.

இதனை போன்று இரு நிகழ்வுகள் வளைகுடா வாழ்வில் நடந்த நிகழ்வை இங்கு விளக்க விரும்புகிறேன்...

ஒருவர் : கல்லூரி இளங்கலை படிப்பை முடித்து கையோடு வளைகுடா பயணமானார். ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு செல்லாது அங்கு சென்று வேலை தேடும் வசதியோடு சென்றார். என்னதான் படித்திருந்தாலும் வேலைக்கு புதியவர் என்பதால் அலுவலகத்தில் எந்த பொறுப்பும் இல்லாது அலுவலக உதவியாளர் பொறுப்பு கொடுக்க ஒரு கம்பெனி முன் வந்தது. ஆனால் அவரோ நான் படித்த படிப்பிற்கேற்ற வேலைவேண்டும். நான் இந்த
வேலையை செய்ய மனமில்லை என்று நிராகரித்து விட்டார்.

இப்படியாக பல வேலைகளை நிராகரித்து ஒரு வருடம் வீணாக கழிந்தது. அவர் பல கஷ்டங்களுக்கு பிறகு தன் நிலை அறிந்து ஒரு வேளையில் சேர்ந்தார் காலம் செல்ல செல்ல வேலையின் அனுபவம், மொழி புலமை கூடியதன் காரணமாக அலுவலகத்தில் நல்ல நிலையில், நல்ல சம்பளத்தில் உள்ளார்.

மற்றொருவர் : கல்லூரியில் இளங்கலை பயின்று பின்னர் முதுகலையில்  ( M.B.A ) தேர்ச்சி பெற்று, வளைகுடா பயணமானார். வேலை தேடும் படலம் அவருக்கும் ஒரு வேலை கிடைத்தது இளங்கலை பட்டதாரிக்கு தனி செயலாளர் பணி. சற்றும் தயக்கம் காட்டாது உடனே ஏற்று கொண்டார். அந்த வேலையை நேர்த்தியாக செய்தார். கம்பெனியின் தலைமைக்கு இவரின்
தனி திறமை பளிச்சென தெரியவந்தது. ஆச்சரியப்பட தக்க வகையில் கம்பெனியின் பொது மேலாளராக பதவி உயர்வு பெற்றார்.

அவரிடம் நான் கேட்டேன், நீங்கள் முதுகலை பட்டதாரியாக இருந்தும்
சராசரிக்கு கீழ் செகரட்டரி வேலைக்கு சம்மதித்ததேன் என்றேன். வளைகுடா நாட்டிற்கு வந்தது பணம் ஈட்டத்தான் முதலில் சூழ்நிலை அறிய ஏதாவது ஒரு வேலையை பார்க்க வேண்டும். பின்னர் நமது திறமையை காட்ட வேண்டும். அதன் பின்னர் நமது கல்வி தகுதியை கூற வேண்டும் .நான் முது கலை பட்டதாரி என்று கூறி இருந்தால் சர்ராசரி வேலை தர தயங்குவார்கள். நான் எனது வேலையை சரியாக செய்தேன் பலன் தானாக தேடி வந்தது என்றார். இருவரின் நடவடிக்கைகளில் நான் உணர்ந்து கொண்டது.

"படித்தால் மட்டும் போதாதுங்க... 
பணிவும் வேண்டுமுங்க "
                     
கைத்தொழில் ஒன்றை கற்று கொள் ! அடுத்த வாரம்...
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, October 25, 2013

எதிர்பார்ப்பு

கருவும் உருவாகிக் காண  எதிர்பார்ப்பு
கருமை முகில்கூடும் காட்சி எதிர்பார்ப்பு
பெருகும் விலைவாசி பேரம் எதிர்பார்ப்பு
உருகும் நிலைபோக உண்மை எதிர்பார்ப்பு

படிக்கும் பருவத்தில் பண்பின் எதிர்பார்ப்பு
அடிக்கும் தருவாயில் அன்பின் எதிர்பார்ப்பு
துடிக்கும் உடலும்தோள் தொங்க எதிர்பார்ப்பு
வடிக்கும் கவிதைக்கு வார்த்தை எதிர்பார்ப்பு

நகைக்கும் சிரிப்புக்கு நாடே எதிர்பார்ப்பு
பகைக்கும் குணத்திற்குப் பாவம் எதிர்பார்ப்பு
மிகைக்கும் கருணைக்கு மேன்மை எதிர்பார்ப்பு
புகைக்கும் பழக்கத்தால் புற்றே எதிர்பார்ப்பு

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 24-10-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

Thursday, October 24, 2013

[ 6 ] அறிவுத்தேன் [ அரூப வணக்கம் ]

ஒன்றாய் இருப்பான் !
இல்லாது இருப்பான் !
இரன்டற் றிருப்பான் ! -இது
அரூப வணக்கம் ! 

அரூப வணக்கம் என்றால் என்ன ?

அருவம் அல்லது அரூபம் என்பது, உருவம் இல்லாமை அல்லது உருவம் தோன்றாமை என்பதை குறிக்கும். இன்னும் தெளிவாக சொல்வதென்றால் உருவத்தின் முந்தின நிலை..

இல்லாதது என்பது இல்லை. அது என்றுமே இல்லை. அப்படி ஒன்றும் இல்லவே இல்லை. பெரும்பாலும் தோன்றாமையை இல்லாமை என்று குறிக்கலாம்; குறிக்கப்படுகிறது. அத்தகைய இல்லாமையிலிருந்துதான் உள்ளமை என்கிற இருப்பு/இருப்புகள் உண்டாகின.

நாம் ஒன்றை செய்ய சிந்திக்கின்றோம், பின்பு செயல்படுகின்றோம்; செயல்படுத்துகின்றோம். அந்த சிந்தனை/எண்ணம் எங்கிருந்து வந்தது ? உங்களிடம் ஏற்கனவே இருந்திருந்தால் அது ஞாபகத்திற்கு வரும். நாம் அறியாத புதிய எண்ணமாக இருந்தால்/இருப்பதால் அது இல்லாமை என்கிற உள்ளமையிலிருந்து உண்டாகி நம் கவனத்திற்கு வரும்.

எனவே, உங்களில் இல்லை ஆனால் உங்களுக்கு ஒரு அறிவு தேவைப்படுகிறது. அதற்காக தனிமையில் இருந்து சிந்தனை செய்கிறீர்கள். அந்த தேவை/விருப்பம் அதனை நிறைவேற்ற, உங்களிடம் இல்லாத எண்ணம் எங்கிறிந்தோ என்ற இல்லாமை என்கிற உள்ளமையிலிருந்து உண்டாகி உங்கள் கவனத்தில் வருகிறது. பின் செயலாகிறது. பிறருக்குச் சொல்லும்போது சப்த சொற்களாக அடுத்தவருக்கும் செல்கிறது. அவ்வெண்ணப்படி செயல் புரிந்தால் அது செயல்.

வாயுக்கள் ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்றவைகள். இவைகளின் மூலம் எலக்ட்ரன், புரோட்டான் நியூட்ரான். இதற்கும் முந்தின நிலை ஒளிக்கற்றைகலான ஆற்றல்கள். அதற்கும் முந்தின நிலை இல்லாமை என்ற தோன்றாமை என்கிற உள்ளமை. அதாவது அரூப நிலை.

அரூப நிலை. அதிலிருந்து ஆற்றல்கள். ஆற்றல்களிலிருந்து ஒளிகற்றைகள்.. அதிலிருந்து எலக்ட்ரன், புரோட்டான், நியூட்ரான். இவைகளிலிருந்து ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள், கனிமங்கள் உண்டாகின்றன. இவ்வாறு உருவம் இல்லாமையிலிருந்து உருவங்கள் உண்டாகின்றது.

அதாவது எலக்ட்ரன், புரோட்டான் நியூட்ரான் இவைகளின் கூடுதல் குறைதலுக்கேற்ப வாயுக்கள் என்றும் கனிமங்கள் என்றும் ஆகின்றன. இதனை இங்கு விளக்க வேண்டியது இல்லை. இருப்பினும் இணையும் வாயுவுக்கள் அவைகள் மூலமும் உருவம் ஆவதை மட்டும் காண்போம்.

ஆக்சிஜன், ஹைட்ரஜன் இவைகள் இணைந்து வாயுவாகி, குளிர்ந்து நீராகி, மிககுளிர்ந்து பனிக்கட்டியாகவும் ஆகின்றது. உருவம் இல்லாமை(அரூபம்) உருவமாக தெரிகின்றது.

அரூப நிலை உள்ளது/இருப்பது. அல்லது அரூப நிலை மட்டுமே உள்ளது/இருப்பது. அல்லது அரூபநிலை எங்கும் உள்ளது/இருப்பது அதனை ஆதாரமாகக் கொண்டுதான் அனைத்தும் உண்டாகின. அவ்வரூபத்திற்கு தனது நிலையில் கூடுதல், குறைவு என்பதில்லாது(தங்கமும் மோதிரமும் போல்) உருவ இருப்புகள் அதில் உண்டாகுகின்றது. இது பொருள்.

அரூப எண்ணத்திற்கு ஏற்ப அவ்வரூபில் சமைந்த உருவம்/உருவங்கள் செயல் படுகிறது. அரூப எண்ணத்திற்கு ஏற்ப உருவம் இணங்கி செயல்படுகின்றது. உருவம் அரூபத்தினது ஆணைக்கேற்ப நடக்கின்றது. ஆணைக்கேற்ப அடிபணிகிறது. அடிபணிதல் வணக்க தாத்பரியத்தையுடையது. இதனை வணக்கம் என்று சொல்வதைத்தவிர வேறில்லை.

இணங்குதல் வணங்குதல், ஆணைக்கேற்ப அடிபணிதல், இணங்கி நடத்தல் என்பதின் அடிப்படையில் ஒருவரது சொல்லை ஏற்று அடிபணிந்து மற்றவர் நடத்தலை வணங்கி நடக்கின்றார் என்றுதானே கூறமுடியும். அரூபத்தினது என்னத்திற்கு ஏற்ப உருவம் நடந்தால் அது அரூப வணக்கம் ஆகும். இது ஒன்றின் செயலின் விளக்கம். இதுவே அரூப வணக்கம்.

மேற்கண்ட விளக்கத்தின்மூலம், ஒரே உள்ளமை நிலையில் இருத்தல், அந்நிலையில் நிகழும் செயல் நிலைகள், இவைகள் வணக்கம். இவ்வாறுதான் (வேறு என்ற எண்ணங்கள், அவ்வெண்ணங்களை உண்டாக்கும் அசைவுகளின் குறுக்கீடுகள் இல்லாது) வணக்கம் இருக்கவேண்டும் என்பது எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய கருத்து.

ஒன்றிலே உண்டானது
ஒன்றேயது பலவானது
உண்டாகும் முன்வொன்றே
நன்றேயிது அறிவீரே !

எவ்வாறு ? 
நபிதாஸ்

Wednesday, October 23, 2013

ஒரு காகிதம் பேசுகிறது...

என்னை
சுவாசிக்கத் தெரிந்தவர்களுக்குத்தான்
மனித மனங்களை
வாசிக்கத் தெரியும்

நான் செய்திகளின்
வீரியம் புரியாத
மலட்டுக் காகிதம்

எனினும்
செய்திகளின் சாரத்தை
நேரெதிராய்
மனித முகங்களில் வாசித்தேன்

வரலாற்றை
வாழ வைப்பதும்
இலக்கியத்தை
இயங்க வைப்பதும்
என் தலைமுறைகள்தாம்

அறிவியலின் அருமை
எனக்குத் தெரியாது
கணக்கின் வீரியம் புரியாது.

நானும்
கரும்பலகையும்
ஒரே சாதிதான்.

நாங்கள்
ஆற்றலின் விருட்சத்துள்
புதைந்திருக்கும் விதைகள்

என்னில் அச்சடித்து
விபத்தை விற்கிறார்கள்

ஆபாசத்தை
அறுவடை செய்கிறார்கள்

உலகத்தை சுருக்கி
உதடுகளில் வைக்கிறார்கள்

எல்லாம் படித்து
எதைக் கிழித்தார்களோ...
அண்ணா சிங்காரவேலு

Tuesday, October 22, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டிகளும் !?

ஒரு ஊரில் ஒரு இடையன் இருந்தார் அவருக்கு ஒரு ஆட்டு மந்தை இருந்தது தினமும் அதை மேய்த்துக்கொண்டு தனது காலத்தை போக்கி கொண்டு இருந்தார் தினமும் காலை சூரியன் உதயமானதும் ஆடுகளை மேய்பதற்காக காட்டுக்குள் செல்வார் மாலை வெயில் சாய்ந்ததும் வீடு திரும்புவார் இதுவரை ஒரு ஆடுகூட வேட்டை மிருகங்களிடம் அகப்பட்டது இல்லை.
       
ஒரு சமயம் இடையனுக்கு உடலில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது  அது என்னவென்று அப்போது அவருக்கு புரியவில்லை நாட்கள் செல்ல செல்ல அவரின் குணம்,என்னம்,அனைத்திலும் ஒரு வித்தியாசமான மாற்றம். அது என்னவென்றால் ஒரு ஓநாயின் மூர்க்கம்,குணமும் அவருள் தோன்றியது ஓநாயின் குணாதிசயங்கள் அவருள் உருவெடுக்க அவர்  காட்டிற்குள் சென்றவுடன் அது அதிகமானது.
     
தான் மேய்க்கின்ற ஆட்டையே அடித்து தின்னும் அளவிற்கு அவரின் குணங்கள் மாறிப்போயின தினம் ஒரு ஆடு குறைய தொடங்கியது அவரை நம்பி ஆட்டை மேய்க்க அனுப்பியவர்கள் சிறிது காலம் கடந்தே  சுதாரித்து கொண்டார்கள் அவரை பின்தொடர்ந்து சென்று அவரின் நிலை அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தனர் ஊர் மக்கள் அவரிடம் ஒப்படைத்த ஆடுகளை திரும்ப பெற்றுக்கொண்டு அவருக்கு நல்ல மருத்துவம் பெற ஏற்பாடு செய்தனர் அந்த ஊர் மக்கள். இவ்வளவு நேரம் படித்தது கதைதான் இனி உண்மை சம்பவங்கள்.

இன்றைய நாளிதழ்களில் வரும் தலைப்பு செய்திகளை வருசைப்படுத்துகிறேன்... 

1. பள்ளி மாணவிகளிடம் சில்மிசம் செய்த ஆசிரியருக்கு அடி உதை 
2. டியுசன் வரும் மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகள் பேசிய ஆசிரியர் கைது 
3. ICU வார்டில் அட்மிட்டான பெண்ணிடம் டாக்டர் பலாத்காரம்  
4. ஐந்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் கொடுமை செய்த ஆசிரியர்! பொது மக்கள் அடி உதை  
5. ஆபாச CD விற்ற தனியார் பள்ளி ஆசிரியர் கைது 
   
இது போன்ற செய்திகள் இப்பொழுதெல்லாம் அடிக்கடி தினசரிகளில் பார்க்க முடிகிறது என்ன காரணம் தன்னுடைய மாண்பு,மகத்துவம் தெரியாமல் ஆசிரியரும்,டாக்டர்களும் அத்துமீரும்போழுது இப்படி சம்பவங்கள் நடை பெறுகிறது தொழில் செய்பவரை தொழில் அதிபர் என்றும்,கட்டுமான வேலை செய்பவரை கட்டிட தொழிலாளி என்றும் கூறும் நாம் ஆசிரியர், டாக்டர் போன்றோரை ஆசிரிய தொழில் என்றோ மருத்துவத்தொழில் என்றோ கூறுவது கிடையாது மாராக ஆசிரிய பணி மருத்துவப்பணி என்று மகத்துவமாக அழைக்கிறோம் ஆனால் அவர்களோ தினசரிகளில் தவறான செயலுக்கு தலைப்பு செய்தியாகிறார்கள் வெளியே பயிரை மேய்தல் தகுமோ? இடையனின் ஓநாய் குணம்தான் பாலியல் தொந்தரவு செய்யும் ஆசிரியர் மருத்துவர்கள் ஆவார்கள் அவர்களிடம் மனித குணம் தழைத்தோங்க செய்ய வேண்டும் தவறுகள் செய்யும் இவர்களுக்கு தண்டனை கூடுதலாக வழங்க வேண்டும் இவர்கள் ஏன் இப்படி நடக்கிறார்கள் ?  

காரணங்கள் பல கூறலாம். அது ஒவ்வொருவரின் சூழலுக்கு ஏற்ப கருத்துக்களை சொல்வார்கள் இன்று 7 ஆம் வகுப்பு மாணவி ஹார்மோன்கள் மாற்றங்களால் கல்லூரி பயிலும் பெண்களைப்போல் தோற்றம் அளிக்கிறாள் அத்தகையோர்களுக்கு குட்டை பாவாடை சிருடையாக பள்ளி நிருவாகம் கட்டாயப்படுத்துகிறது.அதுவும் ஒரு காரணமாக எடுத்துக்கொள்ளலாம்
   
பள்ளிகளில் பாடங்கள் போதிக்கப்படும் அளவிற்கு ஒழுக்கங்கள் போதிக்கப்படுவது இல்லை ஆபாசங்கள் தலை விரித்தாடுகிறது இது போன்ற எண்ணற்ற காரணங்கள் சொல்லலாம் வாசகர்களாகிய தாங்களும் காரணங்களையும் ஆலோசனைகளையும் கருத்திடுங்கள்.

அடுத்த வாரம் ஒரு உண்மை சம்பவத்தைப்பற்றி பார்ப்போம்.
தொடரும்...
  மு.செ.மு.சபீர் அஹமது

Monday, October 21, 2013

நிலையில்லா ஓட்டங்கள் !

பசியென்ற ருசிமட்டும்
படைப்பில் இல்லையெனில்
இயக்கங்கள் நின்றிருக்கும்
இரையெடுத்த மலைப்பாம்புபோல்.

தாய் இறக்கி விட்டபின்
மண்ணில் மாயும்வரை
நிலையில்லா ஓட்டங்கள்
இன்பமும்  துன்பமும்
பார்வையின் வெளிப்பாடே !

உள்ளார்க்கு  எல்லாமே
எந்நாளும்  அரங்கேறும்
இல்லார்க்கு உறவுகளும்
புள்ளியாய் தூரத்தில்!

வழியெல்லாம் சிந்தியவிதை
களம்சென்று சேர்வதில்லை
ஒளியாய் உலாவிவரும்
நிலவில் ஒளியில்லை!
பணம்  படுத்தும்பாடு கண்டேன்
அதுபடும் பாடும் கண்டேன்
குணம்கொண்ட மனிதர்கள்
பணமின்றி வாடுகின்றார்!

மரித்த பூவே மாலையாகும்
மனிதமனம் நினைப்பதில்லை
மணம்வீசும் நேரம்வரை
புவிதனில் ஆராட்டு!

நல்நோக்கத்தை மனமணிந்து
ஆக்கத்தை உழைப்பாக்கி
அன்போடு சீராட்டின்-நாளை
அகிலமே வணங்கி நிற்கும்!
சசிகலா

Saturday, October 19, 2013

[ 16 ] 'வளைகுடா வாழ்க்கை' [ கற்றவற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ! ]

கற்றவற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு...!
இரு நண்பர்கள், இருவரும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். அதில் ஒருவர் பத்தாம் வகுப்பு  தேர்வில் தோல்வி அடைய, மற்றவர் தேர்வில் தேர்ச்சி அடைந்து பள்ளி படிப்பை தொடர்ந்தார். தேர்வில் தோல்வி  அடைந்தவர் மீண்டும் முயற்சி செய்யாமல் வளைகுடா சென்று விட்டார். சென்றவருக்கு நல்ல வேலை ! ஏதோ ஒரு அலுவலகத்தில் ஆபீஸ் பாய் வேலை நல்ல சம்பளம், மன நிறைவாய் வேலை செய்து வந்தார். இரண்டு வருடம் கடந்து விடுப்பில் ஊர் வந்தார். நல்ல போசாக்கான உணவு குளிரூட்டப்பட்ட குடியிருப்பில் வசித்ததன் விளைவு பார்க்க நல்ல நிறமாக காணப்பட்டார்.

பார்ப்போர் எல்லாம் நலம் விசாரிப்பு அவருக்கு நண்பனை காண வேண்டும் என்ற ஆவல் ! நண்பனை கண்டு ஏக சந்தோசம், பள்ளி படிப்பை முடிக்கும் தருவாயில் நண்பன் வளைகுடா சென்று வந்த நண்பனை பார்த்ததும் சந்தோசம் ஒருபுறம், மறுபுறம் நான் எப்போது சம்பாதிக்க ஆரம்பிப்பது என்ற ஏக்கம் !

மச்சான்... எனக்கு படிக்கவே  பிடிக்கவில்லை நானும் உன்னைப்போல
வளைகுடா வந்து விடுகிறேன் என்றான் படிக்கும் நண்பன் ...!

அடப்பாவி அந்த காரியத்தை மட்டும் செய்து விடாதே ! நான் படும் கஷ்ட்டம் கொஞ்சமல்ல பல பேர் இழி சொல்லுக்கு ஆளாகி வேலை செய்து வருகிறேன். அந்த நிலை உனக்கு வேண்டாம்.

எப்படியாவது படித்து விடு... இன்னும் மூன்று வருடம் அதன் பின்னர் நானே உனக்கு முயற்ச்சிக்கிறேன் என்றார் நண்பர். நண்பன் சொல் கேட்டு அவரும் கல்லூரி படிப்பை முடித்தார் மறு விடுப்பில் வந்த நண்பர் விசாவுடன் வந்து நண்பரை அழைத்து சென்றார். படிக்காத நண்பன் ஐந்து வருடம் ஈட்டிய பணத்தை ஒரே வருடத்தில் படித்த நண்பர் சம்பாதித்து விட்டார் !

இன்னும் ஒரு சம்பவத்தை குறிப்பிட விரும்புகிறேன்...
காலம் செல்ல செல்ல வேலை வாய்ப்புகளில் படித்தவர்களுக்கிடையே போட்டி நிலவ ஆரம்பித்தது. இது கம்பெனி நிர்வாகிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. பட்டதாரியாக இருந்தாலும் உபரியாக என்ன தெரிந்துள்ளாய் என்ற ஒற்றை கேள்வி மூலம் பலரை கழித்து கட்ட ஏதுவாக அமைந்தது. நான் கூற வரும் நிகழ்வும் இது சார்ந்ததே...

ஒருவருக்கு கல்லூரி படிப்பை முடித்ததும் உடனே கல்யாணமும் ஆனது உல்லாசமாய் ஆறு மாதம் கழிந்தது. உறவினர் மூலம் வளைகுடா பயணத்திற்கு ஏற்பாடானது... வளைகுடா சென்றார் அங்கே படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை எதுவும் இல்லை. வளைகுடாவிற்கு வருவதற்காக செய்த செலவுகள் ஊரில் கடனாக இருப்பதை அறிந்து எதோ ஒரு வேளையில் சேர்ந்தார். பலரிடம் தான் ஒரு பட்டதாரி  என்பதை கூறி தகுந்த வேலை தேடினார்.

ஒருவர் கூறிய அறிவுரை அவர் எதிர்காலத்திற்கு ஏற்றதாய் அமைந்தது. தம்பி இந்த காலத்தில் கல்லூரி படிப்பு ஒரு தகுதிதான். ஆனால் அலுவலக நிர்வாகத்திற்கு கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும் அல்லது மேற்படிப்பு தகுதி வேண்டும் என்றார். தனது தவறை உணர்ந்தார்.

ஆறு மாதத்தை வீணடித்து விட்டதை தனது மனைவியிடம் கூறி மனம் வருந்தினார். சற்றும் எதிர்பாராத பதில் மனைவியிடமிருந்து வந்தது. உடனே ஊருக்கு வாருங்கள். நீங்கள் விரும்பும் மேற்படிப்பை தொடருங்கள். அதற்கு உண்டான செலவுகளை எனது நகைகளை விற்று சமாளித்து கொள்ளலாம் என்றார்.

அது போன்றே ஊர் வந்தார்... அக்கறையாய் கல்வி பயின்றார். மீண்டும் வளைகுடா சென்றார். தான் படித்த கல்வி ! செல்வமாய் மாறி பண மழையாய் பொழிந்தது. மனைவி விற்று கொடுத்த நகைக்கு நான்கு மடங்கு நகை அணிவித்து அழகு பார்த்தார்.

நவீன காலக்கல்வி  நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் வளர்த்து வருவதால் கல்லூரி படிப்பை முடித்து விட்டோம் என்று இருக்காமல் வேலை பார்த்து கொண்டே பகுதி நேரமாக மேற்படிப்பை படியுங்கள் என் அன்பு நெஞ்சங்களே..! வளைகுடா வாழ்வில் கல்வியின் மகத்துவம் அங்கு சென்றவர்களிடம் கேட்டால் தெரியும்...

படித்தால் மட்டும் போதாதுங்க !? அடுத்த வாரம்...
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, October 18, 2013

படிக்கச் சென்றனர்: துடிக்கக் கொன்றனர் !

சன் செய்தியில் தலைப்புச் செய்தி: [ 09/10/2013 ]
நெல்லை மாவட்டம், தூத்துகுடியில் உள்ள தனியார் பொறி இயற் கல்லூரி முதல்வரை, அக் கல்லூரி மாணவர்களே அரிவாளால் வெட்டிக் கொன்றனர். - இது நிகழ்ந்தது , காலை எட்டரை மணிக்கு,  அவர் தம்முடைய காரில் கல்லூரிக்கு வந்து சேர்ந்த போது. நேற்று மாலை,  ஒரு மாணவன் மீது முதல்வர்  ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக,  அம்மாணவனைக் கல்லூரியிலிருந்து நீக்கியதற்காக  மாணவர்கள் அவரை  வெட்டிக் கொன்றனர். 

இச்செய்தியைக் கருவாக வைத்து யான் இன்று எழுதிய கவிதை இதோ:
படிக்கவே அனுப்பிப் பெற்றோர் பயத்துடன் இருக்கும் ஆசை
அடிக்கவா அறிவை ஊட்டி அனுதினம் வளர்த்தார் ஆசான்?
வெடிக்குதே மனமும் ஏனோ விடியலின் சமயம் செய்தி
படித்ததும் எனக்கும் தானே படிப்பவர் செயலை எண்ணி

அறிவிலார் நிகழ்த்தும் பாவம் அனைத்தையும் படித்துப் பார்த்தால்
அறிவுளோர் அடைவர் சோகம்; அவர்களின் குறைகள் என்ன?
நெறிகளை முறையாய்க் கற்றால் நிலத்தினில் குருதி சிந்தி
வெறியுடன் அலைந்துக் கொல்லும் வெகுளியும் வருமா முந்தி?

தடியுடன் அரிவாள் கொண்டு தலையினை உடனே வெட்டி
முடிவுரை எழுதிச் சென்று முடிவிலே அவர்தம் பெற்றோர்
முடிவிலா இருளில் வாழ முடிந்ததே இவர்கள் கற்றப்
படிப்பினில் இருந்து நாமும் படிப்பினைப் பெறுவோம் இன்றே!

தவறுகள் நடக்கா வண்ணம் தணிந்துதான் தடுத்தார் ஆசான்
கவலைகள் பயமும் இன்றிக் கலைகளாய்க் கொலையும் ஆச்சு
அவலமும்  வருதல் நோக்கி அமைதியாய் நடந்தால் என்ன?
எவருமே உதவ மாட்டார்  இனிவரும் பலன்தான் என்ன?

எழுத்தினை அறியச் செய்த இணையிலா அறிஞர் ஆசான்
கழுத்திலே அரிவாள் வைக்கக் கடுமனம் வருதல் மோசம்
அழுத்திடும் விழியில் பொங்கும் அழுகையில் எழுதிப் பாட
வழுத்தியே விளிக்கும் ஆசான் வலியினை நினத்துப் பார்க்க!

தியாகமும் நிரம்பச் செய்து தினம்தினம் வறுமை தாங்கி
வியாதிகள் பெருகக் கண்டும் விடியலாய் உனையே ஏங்கி
மயானமும் அழைக்கும் காலம் வரைக்குமே பொருளை ஈட்டி
நியாயமாய் அளித்த பெற்றோர் நினைவினில் வராமல் போச்சே!

படித்துநீ பெறுதல் பட்டம் படித்திட விரும்பும் பாரும்
துடித்திடும் கொலையைக் கற்கத் துணையது எவரோ கூறும்?
குடித்திடும் மதுவா? உள்ளம் குடிபுகும் விழியாள் தானா?
கெடுத்திடும்  கொலைவெறி உன்னில் கொணர்ந்திட வளர்த்தாய்த் தானாய்!

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 17-10-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

Thursday, October 17, 2013

[ 5 ] அறிவுத்தேன் [ இல்லாது இருப்பான் !? ]

வணங்கும் ஒருவன்
வணங்க 'அவனில்'
இணங்கி இழந்து
இல்லா திருப்பான் !

இல்லா திருப்பான் என்றால் என்ன ?

இல்லாது எப்படி இருக்கமுடியும் ?  ஓர் உதாரனம் மூலம் காண்போம் அது மிகப் பொருத்தமன்று. இருப்பினும் விளக்கம் தரும். ( உதாரணத்திற்காக தங்கம் நிலையானது என்ற கருத்தில் உதாரணத்தை காணவும் ). தங்கத்தில் மோதிரம் இருக்கின்றது. மேலும்  தங்கம் இல்லையேல் மோதிரம் இல்லை ! தங்கம்தான் நிலையாக இருக்கின்றது. தங்கம் இருக்கும்வரை மோதிரங்கள் இருக்கலாம், மோதிரங்கள்  அல்லாமல் வேறு அணிகலங்களாகவும் இருக்கலாம். மோதிரம் இல்லாதது, நிலையற்றது, தங்கம் நிலையானது ஆனால் அது தங்கத்தில் இருக்கின்றது. தங்கம் இல்லையேல் மோதிரம் இல்லை.. ஆக, இல்லாத மோதிரம் எப்படி தங்கத்திலோ. அதுபோல இல்லது இருப்பான்.

இரண்டற ஒரே இருப்பு. வணக்கத்தில் அவன், இவன் என்று இரண்டு இருந்தால் வணக்கமாகாது. அதைத்தான் வணங்கும் ஒருவன் வணங்க 'அவனில்' இணங்கி இழந்து இல்லா திருப்பான் என்ற ஓர் உள்ளமை நிலையினை காண்பிக்கப்பட்டுள்ளது.

இல்லாது இருப்பான் என்றால் இவன் இல்லை என்ற அர்த்தமும்மல்ல. மாறாக வணக்கத்தின் எண்ணத்தில் ஒரே சுயமாக இருப்பான் என்பதாகும். இதைத்தான் மேற்கண்ட தங்க-மோதிரம்  உதாரணம் மூலம் காண்பிக்கப்பட்டுள்ளது. தங்க மோதிரத்தின் இருப்பின் நிலையில், மோதிரம் என்றும், தங்கம் என்றும் இரண்டு இருப்பில்லை. இவ்வாறு வணக்கத்தில் இருக்கவேண்டும்.

அவனல்லா திருப்பான் !
இவனில்லா திருப்பான் !
அவன்செயலா யிருப்பான் !
அருவுருவா யிருப்பான் !

மேற்கண்ட உதாரணமே இங்கும் தொடர்கிறது. பார்பவள் மோதிரத்தை பார்க்கின்றாள். அதன் அழகில் மயங்கி தங்கத்தை மறந்து மோதிரம் என்றுதான் சொல்கிறாள். அழகில் மயங்கி தங்கத்தின் தகுதியான விலையை காட்டிலும் அதிகம் விலைக்கொடுத்தும் வாங்கவும் துனிந்து வங்கிவிடுகிறாள். அவள் பார்த்தது மோதிரத்தைத்தான். மோதிரம் மட்டும் அவளுக்குத் தெரிகிறது.

அவன் தங்கத்தைப் பார்க்கின்றான். பணம் கொடுப்பவன் அவனன்றோ ! பொருமதியைக் காட்டிலும் அதிகம் விலை கொடுக்க தயங்குகிறான். இருப்பினும் அவளின் ஆசைக்காக வாங்குகிறான்.

வியாபாரியோ தங்கத்தையும் மோதிரத்தையும் ஒருங்கே பார்க்கின்றான்.

அவனல்லாது இருப்பான். வணக்கத்தில் இரண்டிருப்பில்லாத ஒரே இருப்பின் உணர்வில் அவன் என்ற தனித்த உணர்வு அற்று தங்கம் மோதிரமாகத் தெரிவது போல், ஒருமையில்  இருப்பான். இருக்கவேண்டும். முற்றிலும் இணங்கி அவன் இவன் என்று வேறுபட்ட உணர்வுகள் இல்லாது ஒருமையில் ஒர்மையாக இருக்கவேண்டும். அதுவே அவன் இல்லாது இருக்கவேண்டும் என்பதாகும்..

இவனில்லாது இருப்பான். வணக்கத்தில் இவன், இவன் அவன் என்ற உணர்வு அற்று மோதிரம் தங்கமாகத் தெரிவது போல், இருப்பான்; இருக்கவேண்டும். முற்றிலும் இணங்கி இவன் இல்லாது இருக்கவேண்டும்.

அவன் செயலாக இருப்பான். வணக்கத்தில் தன்; தனது செயல் என்று இல்லாது வணக்குபவன் அவன் செயலாக இருப்பான்; இருக்கவேண்டும். அப்பொழுது தங்கம்; மோதிரம் என்றில்லாது தங்கத்தின் அருவும் அதுவே, உருவும் அதுவே என்ற அருவுருவாக இருக்கவேண்டும். ( இங்கு தங்கத்தை அரு என்றும், மோதிரத்தை உரு என்றும் உதாரணமாக காண வேண்டுகிறேன். அரு- தோற்றமற்றது. உரு- தோற்றம்கொண்டது.)

ஒன்றாய் இருப்பான் !
இல்லாது இருப்பான் !
இரன்டற் றிருப்பான் ! -இது
அரூப வணக்கம் ! 

அரூப வணக்கம் என்றால் என்ன ?                       
நபிதாஸ்

Wednesday, October 16, 2013

வேலி

ஒழுக்கமும் பேணுதல் ஒருவகை வேலியே
......உணர்ந்துதான் செயல்படுநீ - என்றும்
விழுப்பமே தந்திடும் பலன்களைப் பார்த்ததும்
.......மேன்மையாய் உயர்ந்திடுநீ!

கண்களின் பார்வையைத் தாழ்த்தியே நடப்பதும்
.....கண்களின் வேலியாகும் - இஃதே
பெண்களின் உள்ளமும் உன்னிடம் மதிப்பினைப்
.....பெற்றிடும் வேலையாகும்!

நாணமும் வேலியாம் மானமே காத்திட
…..நம்பினோர் நலம்பெறுவர் --அதனால்
காணலாம் நற்பயன் உள்ளமும் உடலுமே
….களிப்பினால் பலம்பெறுமே!

வறுமையும் வதைத்திடும் போதினில் இறையவன்
....வழிதனைப் பேணுவாய்நீ - அதற்குப்
பொறுமையாம் வேலியைப் பூட்டியே காத்திடு
....புலம்புதல் நாணுவாய்நீ!

உண்மையை வேலியாய்ப் பூட்டிட மவுனமாய்
....உதடுகள் காத்ததனால்-- என்றும்
திண்மையாய் உரம்பெறும் மனத்தினில் ஏற்படும்
...தெளிவிலா வார்த்தைகளும்!

மரபெனும் யாப்ப்பினை எழுதிட இலக்கண
.......வரம்புகள் முழுமையாகும்-- வேலியாய்
வரப்புகள் கட்டிய பாத்திகள் இடுவதால்
........வயல்களும் செழுமையாகும் !

மக்களைக் காத்திடும் வேலியாய் அரசியல்
......வளம்பெறல் மெய்தானா? -அந்த
மக்களை மறந்திட நினைப்பதும் மனத்தினில்
....மண்டிய பொய்தானா ?

வேலியே பயிரையும் காப்பதாய் நினைப்பது
.. வேகமாய்ச் சுருட்டுகின்ற  - இவர்கள்
போலிகள் என்பதை உணர்ந்திடும் போதினில்
.. புரிந்திடும் திருட்டுகளும்!

வண்ணப்பாடல் \தனதன தனன தான/ கருவிளம் புளிமா தேமா

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 09-10-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

Tuesday, October 15, 2013

எப்பவுமே அலார்ட்டா இருக்கோணும் ஆமாம் !?

வாக்கு ஒப்புகைச் சீட்டு: 
தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு வாக்காளர்கள், தாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் பொருட்டு அவர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் வசதியை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வசதியை வரும் தேர்தலின்போதே அறிமுகப்படுத்துமாறும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.  

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யும்போது அவர்கள் எந்தக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்தார்கள் என்பதை உறுதிப்படுத்த ரசீது வழங்கும் நடைமுறையை கொண்டுவர வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, தலைமை நீதிபதி பி.சதாசிவம் மற்றும் நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் வசதியைப் பொருத்துவதற்காக உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த ஒப்புகைச் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயர், வேட்பாளரின் பெயர், அவர் சார்ந்துள்ள கட்சியின் பெயர், சின்னம் போன்றவை இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் ஒரு வாக்காளர் தன்னுடைய வாக்கு தான் விரும்பிய கட்சி, வேட்பாளருக்குத்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனால் ஏற்படும் நடவடிக்கைகளை [ செயல்பாடுகள் ] சுவாரஸ்யமாக அலசுவோம்...

சம்பவம் 1:
இதனால் நம் பஞ்சாயத்தார்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் சென்ற தேர்தலில் நம் பஞ்சாயத்து வாக்குகள் ஏலம் விடப்பட்டது போல் இந்த முறையும் வேட்பாளர்கள் ஏலம் கேட்கலாம் எங்கள் பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்டு 500 வாக்குகள் இருக்கு பாத்து கேளுங்க ஏலத்த!

அங்கு வந்த வேட்பாளரில் ஒருவர் போனமுறை நாந்தே ஏலம் எடுத்தேன் 500 ஓட்டுன்னு சொல்லித்தே ஏலம் கேக்கவச்சிய விழுந்த ஓட்டுல 5 செல்லாத ஒட்டு 17 ஒட்டு மாத்தி போட்டுட்டானுவ அதுனால இது சரிபட்டு வராது இப்ப புதுசா சட்டம் வந்திருக்குள்ள ஓட்டு போட்ட ஒடனே சீட்டு வருமாமே அந்த சீட்ட கொண்டு வந்து கொடுத்துட்டு பணத்த வாங்கிகோங்க என்ன சரிதானே ?

சம்பவம் 2:
வேட்பாளர்: "இந்தாமா போன தேர்தல்ல ஒங்கிட்ட பணத்த கொடுத்துட்டு சத்தியம் வங்குனதேலாம் வானா  நீ ஓட்ட மாத்தி போட்டே சாமி குத்தமாயிடும் அதுனால ஓட்டு போட்ட சீட்ட கொண்டா கையிலே காசு வாயில தோச இன்னாங்ர"

சம்பவம் 3:
இந்த பாருங்கப்பா நம்மகிட்ட காசு வாங்குனவன் பேரு அட்ரசு எல்லாத்தையும் குறிச்சுக்கோ செல்லுல போட்டோவும் எடுத்துக்க  ஒட்டு போட்டுட்டு வெளியில வருவானுள்ள கையில இருக்குற சீட்ட வாங்கி பாரு மாத்தி போட்டானுன்னு வச்சுக்கோ அங்கேயே போட்டு தள்ளிடு.

நல்லது செய்யப்போயி இப்படியும் சம்பவங்கள் நடக்க நிறைய சான்ஸ் இருக்கு

"எப்பவுமே அலார்ட்டா இருக்கோணும் ஆமாம்"  :)

மு.செ.மு.சபீர் அஹமது

Monday, October 14, 2013

உறவுகளின் மேன்மை !

உறவுகளே உறவுகளே ஒன்று கூடுங்கள்....
ஒற்றுமையே பலம் என்றுணருங்கள்..
தந்தை தாய் எவ்வழி வந்தால் என்ன ?
தரணியில் நிலையாம் அன்பைப் பயிலுங்கள்.

அள்ள அள்ள சுரக்கும் செல்வம்
நல்ல நல்ல சேதிகள் சொல்லும்
கள்ளமில்லா உள்ளம் கொள்ளும்
கன்னித் தமிழ் அங்கே கொஞ்சும்.

மழைத்துளி ரசிக்க வைக்கும்
மண் வாசம் நுகர வைக்கும்
வானவில்லை பார்த்து மகிழ்ந்து
வட்டமடித்து கூடி விளையாட வைக்கும்.

கூட்டாஞ்சோறு ஆக்க வைக்கும்
கூடி திருவிழா பார்க்க வைக்கும்
பகிர்ந்துண்டு மகிழ வைக்கும்
பார்ப்போரை உறவாய் இணையவைக்கும்.

பாட்டன் பேத்தி கதையை கோர்க்கும்
பட்டுப் போன உறவை துளிர்க்கும்
சிரித்து நிற்கும் செம்பவழ முத்தும் (மழலை)
செழித்து வளரும் பண்பதனை கற்றும்.

விருந்தோம்பல் பழக வைக்கும்
வீட்டிற்கொரு தோட்டமமைக்கும்
தொன்றுதொட்டு வரும் ஒழுக்கமதை
தொலைத்திடாது வரும் தலைமுறை காக்கும்.

சசிகலா

Saturday, October 12, 2013

[ 15 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ காடாறு மாதம் !? நாடாறு மாதம் !? ]

காடாறு  மாதம் !? நாடாறு மாதம் !?
பழங்காலத்தில் விவசாயிகள் தனது வாழ்க்கையை பற்றி கூறும்போது காடாறு மாதம் நாடாறு மாதம் என்பர். அதாவது பணபயிர் எனப்படும் சோளம், கரும்பு போன்ற பயிர் விளைவிக்கும் போது அதனை பாதுகாக்கும் பொருட்டு மரத்தின் மேல் குடில் அமைத்து, மிருகங்கள் விளைநிலத்தை சேதப்படுத்தாமல் பாதுகாப்பர். கதிர் முற்றிய பின்னர் களவு போகாமல் பாது காத்து வருவர். நன்கு விளைந்த பின்னர் அதனை நகருக்குள் கொண்டு வந்து விற்பனை செய்வர். இதற்கு ஆறுமாத அவகாசம் தேவைப்படும் அதனையே நாடாறு மாதம் காடாறு மாதம் என்பர்.

ஆனால், நான் கூற வரும் நிகழ்வு வளைகுடாவில் வசித்த நபர் பற்றியது...
ஆறு மாத காலத்திற்கு மேல் வளைகுடாவில் வசிக்க மாட்டார். ஏதாவது ஒரு அரபியிடம் விசா பெற்று அந்த அரபியிடம் வேலை பார்க்காது வேறு இடத்தில் வேலை செய்து வருபவராக இருந்தார். ஆறுமாதம் வேலைப்பார்த்து கிடைக்கும் பணத்தில் ஊருக்கு போக வர விமான டிக்கெட் எடுப்பது நான்கு மாதம் ஊரில் இருந்து செலவு செய்ய போதுமான பணம் வைத்து கொள்வது.. இப்படியாக பத்து வருடத்தினை கழித்து விட்டார்.

மனைவி, மக்கள் செல்வ செழிப்பில்லா வாழ்விலேயே வாழ்ந்தனர். கால போக்கில் அவர்  வாழ்வில் முதுமையுடன் நோயும்  ஒன்று சேர்ந்து கொள்ள வளைகுடா பயணம் தடைபட்டு போனது. முதிய வயதை கழிக்க எந்த வித வசதியும் இல்லாமல் பஞ்ச பராரியாய் கடைவீதியிலும், டீக்கடை வாசலிலும் வருவோர், போவோரிடம் யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளபட்டார். மனைவி கசந்த வாழ்க்கைக்கு தள்ளப்பட்டார். பிள்ளைகளும் பாராமுகமாக இருந்திடவே !

இவாரா !?  அவர் !? என்று வியக்கும் நிலைக்கு ஆளானார் !

மனம் போன போக்கில் போகாமல் மனதை கட்டுப்படுத்தி, உழைத்து வந்த நோக்கினை நிறைவு செய்ய வேண்டும் என்ற நல் நோக்கில் இந்த பதிவை வெளியிடுகிறேன்.

மனைவி மக்கள் உங்களின் உழைப்பை நம்பி வாழும் காலங்களில் நீங்கள் நன்கு உழைத்து குடும்பத்தினை காப்பாற்றினால் நீங்கள் முதுமையில் நன்கு கவனிக்க படுவீர்கள் என்பது திண்ணம்.
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, October 11, 2013

[ 4 ] அறிவுத்தேன்

இந்து; இஸ்லாம் என்றும், கிருத்துவம்; சீக்கியம் என்றும் பௌத்தம்; ஜைனம் என்றும் இறைவன் பலப்பிரிவுகளை ஏற்படுத்தவில்லை. இவைகள் மனிதன் இறைவனை அறிந்து அடைவதற்கு உண்டான அந்தந்த காலத்து வழிகள். கால இடைவெளியில்  அந்தந்த காலத்தில் வெவ்வேறு இடங்களில் உண்டாகி தனித்ததுபோல் அறியாமையினால் நிற்கின்றது.  அடுத்த காலத்தில் தோன்றிய வழியோடு இணங்கி இருந்திருந்தால் இன்று ஒரே வழியாகத்தான் இருந்திருக்கும்.

எல்லா வழிகளிலும் அனுஷ்டான முறைகள் வெவ்வேறாக இருப்பினும் நோக்கம் ஒன்றே. அவனை  அறிந்து  அடையவேண்டும் என்பதுதான். அதனால் ஏதாவது ஒன்றை எடுத்து விளக்கம் தந்தால் அனுஷ்டானங்களை அறிந்து அதனை செய்து அவனை அடைதல் இலகுவாகும். இஸ்லாமியத்தை அறிந்ததால் அதனைக்கொண்டு விளக்கம் தந்தால் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரை தொடராக வருகிறது. உண்மை சாராம்சத்தை புரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதால் தகுதியான கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

- நபிதாஸ் 

வணக்கத்தின் தாத்பரியம் :
இதன் தாத்பரியத்தை உணர்ந்தால் வணக்க நிலைகள் எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மைகள் தெரியலாம். செய்கின்ற வணக்க எண்ணச்செயலைத் தவிர வேறு எண்ணங்கள், செயல்கள் குறிக்கீடு இல்லாது வணங்கவேண்டும் என்ற உண்மை மறை பொருளாக விளங்கலாம்.

வணக்கத்தில், வணக்கம் சம்பந்தப்பட்ட அனுஷ்டானங்களை தவிர வேறு சப்தம், அசைவுகள் தன் அல்லது பிறர் கவனத்தை இறை ஓர்மை எண்ணத்திலிருந்து விலக்கும் வேறு எந்த சிந்தனையையும் தூண்டுமாறு இருக்கக்கூடாது என்புதும் புரியலாம். (ஆனால் இன்று பெரும்பான்மை அவ்வாறு இல்லை !)

வணக்கத்தில் ஓர்மை நிலையில் செய்யும் செயல்கள் இரண்டற்ற ஓர் உள்ளமை இருப்பு அறிந்த/உணர்ந்த நிலையில் ஒன்றின் செயலாய் இருக்க வேண்டும். எவ்வாறெனில்,

பரத்தின் செயலில்
பலவது இருந்தும்
ஒன்றின் செயலாய்
அறிதல் ஞானம் !

பூமி பேச வேண்டும் என்றால் எப்படி பேசும். நீங்களோ அல்லது நானோ பேசினால் அது பூமி பேசியதாகத்தானே அர்த்தம். பூமியில் உள்ள அனைத்தினது செயல்கலெல்லாம் பூமியின் செயல்களே. அதுபோல் பரம் என்ற பிரபஞ்சம் அதில் பல செயல்கள் இருந்தாலும் அது பிரபஞ்ச ஒன்றின் ஒரு செயலே ஆகும். அவ்வாறு ஒன்றினது செயல் என்று அறிவது ஞானம். வணக்கத்தில் அவ்வாறு வேறுகள் அற்ற ஒன்றினது செயலாக இருத்தல் வேண்டும். இதுவே வணக்கத்தில் ஓர்மை நிலையில் செய்யும் செயல்கள். இரண்டற்ற ஓர் உள்ளமை இருப்பு அறிந்த/உணர்ந்த நிலையில் செய்யும் செயல்கள் ஒன்றினது செயல் ஆகும்.

தானியங்கி அரிசிமாவு அரவை இயந்திரம். அதில் மின்சாரம் செல்ல, மோட்டார் சுற்ற, பெல்ட் அசைய, அரவை சுற்ற, அரிசி அதில் விழ, மாவாகி தானே வரும். பல செயல்களின் தொடர் இணைப்பால் ஒரு செயல். ஒவ்வொன்றையும் தனியாகப் பார்த்தால் பல செயல்கள். இவையனைத்தும் ஒரு செயலே. ஓர் அரவை இயந்திரத்தின் ஒரே செயலே.

நடக்க நினைக்க
காலது நடக்கும்
காண பார்க்கும் -இது
அரூப வணக்கம் !

அரூபம் எண்ணம்
உருவம் தன்னில்
நிகழும் செயலாய்
அதுதான் வணக்கம் !

முன்பு எழுதப்பட்டதிலும் இதற்கான விளக்கமுண்டு. இருப்பினும் இவ்விளக்கத்தையும் காண்போம்.

நடக்க நினைக்க காலது நடக்கும். காண கண் பார்க்கும் இது அரூப வணக்கம். எப்படியெனில், நினைப்புகள் எல்லாம் அரூபம். இந்த அரூப எண்ணத்திற்கேற்ப அவ்வெண்ணம் தோன்றிய உருவில் அவ்வுருவத்தின்  உருவகால், கண் இயங்குகிறது. மேலும்  இவைகள் மனிதனுடையது அன்றி வேறில்லை. ஒர் உள்ளமைதான். இரண்டுள்ளமையில்லை. அரூபம் எண்ணம்தனை அப்படியே சம்பந்தப்பட்ட உருவம் அவ்வெண்ணங்களை செயல்களாக நிகழ்த்துகின்றது. அது வணக்கம். அதைத்தான் வணக்கம் என்று சொல்லமுடியும். இரண்டற்ற ஒர்மைநிலையில் தான் பூரண செயல்பாடுகள் நிகழும். இதுபோல் (அரூப) வணக்கம் இருக்கவேண்டும்.

வணங்கும் ஒருவன்
வணங்க 'அவனில்'
இணங்கி இழந்து
இல்லா திருப்பான் !

இல்லாது இருப்பான் என்றால் என்ன ?
தொடரும்...
நபிதாஸ்

Thursday, October 10, 2013

தொப்பை !?

தொப்பை என்பது யாதெனில் கொழுப்பு கூடுதலாகி வயிறு பெருக்கும் சூழலே தொப்பையாகும் அதை தொந்தி என்றும் ஏளனமாய் சொல்வர் உண்ணும் உணவு அதிகமாவது, உண்ட உணவிற்கு ஏற்றாற்போல் உழையாமையே தொப்பை உருவாக காரணம் ஆகிறது கேஸ் உருவாகும் உணவு உட்கொள்ளலும் தொப்பை உருவாக காரணமாகும் .
   
என்னதான் பேன்ட் பெல்ட்டை இறுக்கி கட்டினாலும் சட்டையை கொஞ்சம் லூசாக அணிந்தாலும் தொப்பையை மறைப்பது கடினம் இன்று தொப்பையை குறைக்கிறேன் பேர்வழிகள் நிறைய முளைத்திருக்கின்றனர். வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்ச்சி செய்யலாம் என்று நிறைய சாதனங்கள் விற்றுத்தீர்கின்றன. சாப்பபிட்டு சாப்பிட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் வந்த தொப்பை மீண்டும் வீட்டுக்குள்ளேயே பயிற்சி என்ற பெயரால் சாதனங்கள் !? எங்கு போய் இந்த அநியாயத்தை போய் சொல்ல !
   
உணவு பழக்கத்தால் வரும் இந்த தொப்பை உணவு உற்பத்தி செய்யும் விவசாயியிடம் காணமுடியாது காரணம் அதிகாலையில் வயலில் வேலை செய்ய கிளம்பிவிடுவார்  [நம்மில் வாக்கிங், ஜாக்கிங் செல்லும் நேரம் ] பழையதையே காலை உணவாக உண்பர் குனிந்து செய்யும் வேலைக்கு தொப்பை வராது என்பது விவசாய பெருமக்களே ஆதாரம்.
   
நான் ரயிலில் சென்று கொண்டிருந்த சமயம் ஒரு வயல் வெளியில் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார் அவரில் ஒரு மாற்றம் அதாவது அவருக்கு தொப்பை பெருத்திருந்தது குனிய முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டு வேலை செய்து கொண்டுருந்தார் என்ன காரணமாக இருக்கும் என்று யோசனை செய்து கொண்டு வந்தேன் ஆம் பொறிதட்டியது...
 
முன்பெல்லாம் முப்போகம் விளைந்த நிலங்கள் இன்று ஒரு போகத்திற்கே விளைச்சல் இல்லை விளையும் ஒரு போகமும் சில சமயம் மழை அதிகரிப்பால் நாசம் ஆகிறது தொடர்ந்து வேலை செய்தால் தானே ஆரோக்கியம் இருக்கும், தொப்பை போடாமல் இருக்கும் ?
 
மற்றொரு விஷயம் ஏற்றம் இறைத்து நீர் பாய்ச்சியவர்கள் இன்று  மோட்டார் சுவிச்சு போட்டு விவசாயம் செய்கின்றனர்   தொடர்ந்து எட்டு மணி நேரம் மின்சாரம் இருக்குமா என்றால் அதுவும் இருக்காது எப்படி தொடர் உழைப்பு வரும் ? தொப்பை பெருக்கத்தான் செய்யும்
 
மின்சார வாரியம் பற்றி இன்று உலாவரும் ஓர் நகைச்சுவையை சொல்கிறேன் "எங்கள் வீட்டில் இட்டலிக்கு தொட்டுக்கொள்ள சட்டினியா ? பொடியா ? என்பதை மின்சார வாரியமே முடிவு செய்கிறது" இது தான் நிலை ! விவசாயத்திற்கு இலவச கரண்ட் என்று கூறிவிட்டு மின்சாரமே தருவதில்லை நடு இரவில் மின்சாரம் கிடைக்கும் அந்த நேரத்தில் எப்படி விவசாயம் செய்வது
 
விவசாய நிலங்களெல்லாம் குடியிருப்பு காலனியாக்கி விட்டன விவசாயிகலேல்லாம் ப்ரமோட்டர்களாகி விட்டனர் பிளாட் வியாபாரிகள் ஆகிவிட்டனர் பெயருக்கு கொஞ்சம் நிலங்களை வைத்துக்கொண்டு அரசு மானியங்களை பெற்றுக்கொண்டு வயிறு பெருத்த விவசாயிகளாய் திரிகின்றனர்
   
போதிய உணவு கிடைக்கப்பெறாதவர்கள் வேலைக்கேற்ற ஊதியம் இல்லாதவர்கள் தான் இன்று தொப்பை இல்லா மனிதர்கள்.
   
போலீஸ் உத்தியோகம் செய்வதற்கு ஆட்கள் தேர்வு செய்யும்பொழுது வயிறு புடைத்தோர்க்கு அனுமதி இல்லை ஆனால் வேலை கிடைத்த சில வருடங்களிலேயே தொப்பையோடுதான் காவலர்களை காண்கிறோம் போலீசின் அடையாளமே தொப்பையாக இருக்கிறது என்ன காரணம்? வேலை குறைவு, கட்டுப்பாடு இல்லாத உணவு,..! முன்பெல்லாம் அரைக்கால் டிரவுசரோடு சைக்கிளில் போலீஸ் காரர்களை கண்டிருப்போம் இன்று அப்படியா ?

வயிறு பெருத்தால் தொப்பை என்கிறோம்! ஏளனமாய் பேசுகிறோம்! ஆனால் ஒருவருக்கு வயிறு பெருக்க அவரை நாம் தொப்பை என்று கூறுவது கிடையது! மாராக அவரை மாண்போடு கர்ப்பிணி என்போம், தாய்மை அடைந்தவள் என்போம்.நம் நாட்டில் சட்டம் இயற்ற வேண்டும் கர்ப்பிணிகள் தவிர மற்ற வயிறு பெருத்தோர்க்கு ரேஷனில் பொருள்கள் கிடையாது என்று சட்டம் இயற்ற வேண்டும்  தாய்மையை போற்றுவோம் தொப்பையை குறைப்போம்.
மு.செ.மு.சபீர் அஹமது

Tuesday, October 8, 2013

தண்ணீர் !!! தண்ணீர் !!!!

நீ அதிசயம் மட்டுமல்ல ...
ஆச்சரியமான ஆசான் ....
                                                                                                 
உன் நேர்மையான பாதை வழி எங்கும் இன்பமே ....
உன் பாகுபாடில்லாத அனுகுமுறை யால்
நீ போகும், நிற்கும் ,நடக்கும்,ஓடும் இடமெல்லாம் சுகமே ....

நீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை
அதனால் நீ தளர்வதுமில்லை
பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும்
உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி ....

சுத்தத் தங்கமாக வலம் வந்து
மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும்
நீ உண்மையில் ஒரு சீர்திருத்தவாதி .....
அழுத்தமாக நீ செய்யும் தியாகம் ....நன்மையின் உச்சம் ..

நீ பயணித்த பாதையில்தான்
உயிரினம் வாழுமிடம் அமைத்தது ...
உன் வருகையால் அடைந்த தைரியம்...அளவிடற்கரியது ...

உன் சலசலப்பில் நாங்கள்
உன்னை பருகினோம் ,
உன்னில் நீந்தினோம் ,
உன்னில் பயணித்தோம் ,
உன் வரவால் பயிரிட்டோம் ...
உன்னால் நாங்கள் அடையும் சுகம் ...விவரிக்கமுடியதது ...

உன் பருவ காலங்களில் நீ
வரும் வழியெல்லாம் உன்னுடன் நீ
அழைத்து வரும் துள்ளல் தரும் இதம்.... எப்படிச் சொல்வேன் ?...

நீ பாய்ந்த பிரதேசங்களில் எல்லாம்
தரை நிலமாக இருந்தவை எல்லாம்
பூஞ்சோலை யாய் மாறியது ....
உயிரினம் சுவாசிக்க ....புசிக்க .....
மட்டுமல்ல ..ரசிக்க வும் !!!!

ஆனால்..........?

நீ பயணித்த வழியில் வாழுமிடம்
அமைத்த உயிரினம் .....

உன் வழியை ,
உன் பாதையை ,
சில மாதங்கள் நீ தங்குமிடத்தை எல்லாவற்றையும்
உயிரினங்கள் அடைத்து கூடு கட்டிகொண்டன .....

உன் வரவை அவர்களே (உயிரினங்கள் ) தடுத்து கொண்டார்கள் ..
இழப்பு ....யாருக்கு ?...
நீரின்றி அமையாது உலகம் .......

சிந்திப்போமா?.....நாளை விடியலுக்கு .....

harmys அப்துல் ரஹ்மான்

குறிப்பு : இந்த படைப்பு 'அதிரை நிருபர் பதிப்பகம்என்ற இணையதளத்தில் வெளிவந்து அனைவரின் வரவேற்பையும், பாராட்டுதலையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Monday, October 7, 2013

சுயநலத்தின் முதல் குழந்தை !

சுயநலத்தின் முதல் குழந்தை,
யார் ? பதில்தான் தேடுகிறேன்!
வானில்லைப் புவியில்லை,
நீரில்லை, மலையில்லை,
மண்ணில்லை, மரமில்லை,
காற்றில்லை-பாவமனிதனுமில்லை.

எதுவுமில்லா வெறுமையின்,
வசந்தகாலம் கொன்றுவிட்டு,
இயற்கையெனும் விதையை,
ஊன்றியதின் நோக்கமென்ன!
என்பெயர் விளங்க வேண்டும்,
எனைவணங்க கைகள் தேவை,
என்ற சக்தியின் சுயநலத்தால்,
நாம் வந்து வீழ்ந்தோமோ?

முற்பிதாக்கள் செய்த பாவம்,
முல்லைப்பூவைச் சேருவதேன்,
அதைக்கொய்து உயிரெடுக்கும்,
இதயமற்ற செய்கையேன்,
பேசா மடந்தைகளை- நாம்,
நம் உணவாய் நினைப்பதேன்,
நமைக்காக்க சட்டங்களைத்,
தீட்டிவைத்து அழிப்பதேன்,
உறவென்ற பெயர்சொல்லி,
அடிமைத்தனம் வளர்ப்பதேன்,
எல்லாமே பொய்யுரைகள்,
சுரண்டும் சுயநலங்கள்!

திறந்துவிட்டால் பறந்துபோகும்,
என்பதினால் திருமணங்கள்!
நம்பிக்கைக்கு விலங்கிட்டு,
அரங்கேறும் நாடகங்கள்,
மனதைக் கேட்டால் தெரிந்துவிடும்,
வலியைச் சுமந்து பயணங்கள்,
பிரியங்களும்,பிரிவுகளும்,
ஒருகூட்டுப் பறவைகளாய்,
இறகைவெட்டிப் போட்டதனால்,
கூண்டில் இணை ஜோடிகளாய்.
என் உதிரம்,என் குடும்பம்,
என்பிள்ளை,என்வீடு,
என்சுற்றம்,என் சமூகம்,
என்சொத்துஎன் பணம்,
என்தேசம்,என் உலகம்,
எனதென்றே பாடுகிறோம்,
என் மூச்சிக் காற்றுக்கும்,
எனக்கும் பந்தமென்ன ?
எங்கிருந்தோ வருகிறது,
என்னுயிர் காக்கிறது!

எதையுமது கேட்டதில்லை,
எப்போது அதுபோகும்,
எனக்குச்சொல் மானுடமே!
அடங்காத  ஆழ்கடலும்,
அறியாத பெரும் புயலும்,
அமிலமான எரிமலையும்,
அறியாத தாதுக்களும் ,
அழகாய் ஒளிரும் கதிரவனும்,
அடியில்வாழும் பொக்கிஷமும்,
அத்தனையும் நமதேயெனறு,
அனைவருமே நினைக்கும்வரை,
அத்தனையும் சுயநலமே,
அமைதி வேண்டுமெனில்
அழுக்கான சுயம் அழிப்போம்!

நன்றியுடன்...
சசிகலா

Saturday, October 5, 2013

[ 14 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ குடும்பத்தை மறந்தவன் !? ]

மனைவி மக்களை மறந்த தலைவன்...
நான் கூறிவரும் தகவல்கள் 1990 களில் நடந்த நிகழ்வுகள். பொறுப்பற்ற இரு தலைவன் பற்றிய தகவல்கள் படிப்பினைக்காக தருகிறேன்.

குடும்பத்தின் வறுமையை போக்க உள்ளூரில் பொறுப்பில்லா ஒருவரை குடும்பத்தார் வளைகுடா நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆறுவயது பெண் குழந்தையின் தந்தையான அவர் தனது குழந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

பிள்ளையை பிரிய மனசில்லாமல் பிரிந்து சென்றார். அவர் சென்ற நாட்டை பார்த்து பிரமித்து போனார். உடனே வேலையும் கிடைத்தது. முதல் மாத சம்பளத்தில் .அன்பு மகளுக்கு ஆசையாய் ஒரு கவுன் வாங்கி வந்தார். எப்படி அனுப்புவது என்று புரியாமல் திகைத்தார். பெட்டிக்குள் வைத்துவிட்டு பிறகு அனுப்ப தருணம் பார்த்து கொண்டு இருந்தார்.

வேலைக்கு சென்று விட்டு வந்து பிள்ளை ஞாபகம் வரும் போதெல்லாம் பிள்ளையின் உடையை பார்ப்பார். காலம் செல்ல செல்ல... ஊர் ஞாபகம் மறந்து போக...

கூடாத நட்பு ..வேண்டாத பழக்கம் சேர்ந்து கொள்ள வேலைக்கு செல்லும் நேரத்தை சுருக்கி கொண்டு குடிப்பது, சூது விளையாடுவது என்று  நேரத்தை வீணடிக்க வருடங்கள் கரைந்தோடின...

மகள் வயதுக்கு வந்து விட்டாள். தொடர்பு குறைந்த சூழல் ..அந்த பிள்ளைக்கு நல்ல வரன் வரவே தந்தை வரவை எதிர்பார்த்தனர். எந்த தகவலும் இல்லை விடுப்பில் வருவோரிடம் செய்தி சொல்லி அனுப்பியும் பலனில்லை.

நல்ல வரனை கைவிட மனமில்லாமல் குடும்பத்தார் அப்பிள்ளைக்கு மணமுடித்து வைத்தனர். காலம் தனது பயணத்தை தொடர்ந்தது ஆறு வருடம் கடந்தது...

பொறுப்பில்லா அம்மனிதனின் உடல் நிலை நோய் வாய்பட உடன் இருந்தோர் வற்புறுத்தி ஊருக்கு அனுப்பி வைத்தனர். தான் கொண்டு வந்த பொருட்களில் முக்கியமான ஒன்றை எடுத்து வைத்தார். மகளுக்கு வாங்கிய கவுனை காட்டினார். அந்த கவுன் மகளின் மகளுக்கு அதாவது பேத்திக்கு சரியாக இருந்தது.

கேட்கவே காமெடியாக  இருந்தாலும் மிக மோசமான நிகழ்வு என்பேன் ! வாழ்வையும் தொலைத்து எந்த பலனும் இல்லா வாழ்க்கை. பிழைக்க வந்த இடத்தில் தீய  பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்வை வீணாக்கி நம்பி இருக்கும் குடும்ப மகிழ்வையும் வீணடிக்காதீர் என்பதற்கான பதிவே இது.

அதே போன்று வேறு ஒரு நிகழ்வை பதிய விரும்புகிறேன்...
அன்பின் பரிமாற்றத்தின் முக்கிய பங்கு போன் பேசுவதில் உண்டு. நீண்ட காலம் வளைகுடாவில் வசித்து வந்த ஒருவர் தனது மனைவிக்கு போனில் தொடர்பு கொள்கிறார் ஏனோ தெரியவில்லை போனில் வாக்குவாதமாக மாறி போனது.

அக்காலகட்டம் தொலைபேசி வசதியான வீட்டில் மட்டுமே இருக்கும். கணவனுக்கு போன் பேச பக்கத்து வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டிருந்த பெண் அழுத வண்ணம் ஆவேசமாக தனது வீட்டிற்கு போய் தனது அறைக்குள் சென்று  தாழிட்டு  தூக்கில் தொங்கி தன்னை மாய்த்து கொண்டார்.

மனைவியை கோபமாக பேசிய நபருக்கு இது தெரியாது. வளைகுடாவில் கடிதம் வர ஏழு எட்டு நாட்கள் ஆகும். ஆனால் செய்தித்தாள் இரண்டாவது நாளே வந்து விடும். செய்தி தாளில் தனது மனைவி சாவு செய்தி கேட்டு அதிர்ந்து போனார். அவர் ஊருக்கே செல்லவில்லை. மனைவியின் சொந்தம் சும்மா விடாது என்பதால் அந்த முடிவு. வாழ்வை தொலைத்து வீணாகி போனார்...

வறுமையை போக்க வளைகுடா வரும் அன்பர்களே...
பணம் ஈட்டுவதில் மட்டுமே குறியாக இருங்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு மேல் தங்கி விடாதீர்கள் ! பணம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அன்பும் முக்கியம் !

அடுத்த வாரம் நாடாறு மாதம் காடாறு மாதம் !?
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, October 4, 2013

முதியோர் தின சிந்தனைகள் !

நன்றுபல முதியோர்கள் செய்துவந்த கருமங்கள்
    ….நல்லதொரு மனிதாநீ…..தெரிவாயோ ?
இன்றுவுள இளைஞர்கள் பெற்றவரை முதியோர்கள்
      …இல்லமதில் இடுவார்கள்…..அறிவீரோ ?
கன்றுகளும் பசுதேடிச் செல்லுவதை அறியாமல்
      …காலமது இளைஞர்கள் …..திசைமாற்றிக்
கொண்டுசெலும் நரகத்தை நோக்கியெனப் புரியாமல்
   ….கொன்றுவிடும் குணப்பண்பைக் ...குழிதோண்டி !

வண்ணமுள நிலையோடு வட்டமிடும் பருவந்தான்
    ......வாலிபத்தின் முறுக்கோடு.... .குறும்பாக
எண்ணமெலாம் குழைத்திட்ட இன்பமதை நினைத்தாலே
.........இப்பொழுது முதுமைக்கு ......வெறுப்பாக
கண்ணிமைக்கும் பரப்பில்தான் கட்டிவைத்தோம் நினைக்கின்ற
     ....காலமதின் சுவட்டின்கண் ......பதிவாக
.மண்ணுடைய சுகங்கள்தான் இப்பொழுது  நிறம்மாறும்
      ....மண்ணிலேநீ மடிதல்தான்.......விதியாக

 பள்ளிகளில் படித்திட்டக் காலநிலை அசைபோட்டால்
...........பக்குவமாய் மனத்தில்தான் ......ஒளியாகும்
துள்ளிவரும் அதன்முன்னே இம்முதுமை இருள்போக
...........தோல்வியாகிப்  புதுத்தெம்பு .......வெளியாகும்
வெள்ளமென வழிகின்ற பாசமழை நனையாமல்
..........வீம்பெனவே கழிக்கின்ற ....பொழுதாகும்
உள்ளபடி விரக்திக்கு வித்திடுமே முதியோர்க்கு
........உள்ளமெங்கும் வடுவாகிப்..... பழுதாகும்

குறிப்பு:
யாப்பிலக்கண வாய்ப்பாடு: வண்ணப்பாடல்-”ஆனந்தக் களிப்பு”  (நந்தவனத் திலொராண்டி.... பாடல் வகை)

தன்தனன தனதான தன்தனன தனதான
தன்தனன தனதான .....தனதான

கூவிளங்காய் புளிமாங்காய்  கூவிளங்காய் புளிமாங்காய்
....கூவிளங்காய் புளிமாங்காய்... புளிமாங்காய்
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Thursday, October 3, 2013

நபிதாஸின் அறிவுத்தேன் - குறுந்தொடர் [ 3 ]

சேக்கனா நிஜாம் அவர்களே !
இப்பொழுது தாங்கள் விளக்கம் வினவிய "வணக்கம்" என்ற தலைப்பில் எழுதிய கவிதைக்கு வருவோம். மேற்கண்டவைகளை மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.

ஒன்றை ஒன்று
தெளிவாய் அறிந்தும்
நன்றாய் வணங்க -அது
உருவ வணக்கம்.

வணங்கும் ஒருவன்
வணங்கபட ஒருவன்
இங்கே அவசியம் -இது
உருவ வணக்கம்.

இரண்டு தனித்தனியான உள்ளமைகள் என்ற கருத்தில் உள்ள உருவங்கள். இரண்டும் தெளிவாகத் தெரியும் உருவங்கள். ஒன்றை மற்றது வணங்கினால் அது உருவ வணக்கம்.

ஒன்றது உருவம்
மற்றது அறியா
இருப்பினு மதுவும்
உருவ வணக்கம் !

இரண்டு தனித்தனியான உள்ளமைகள், ஆனால் வணங்கும் உருவம் ஒன்று தெளிவாகத்தெரியும். மற்றது அதன் உருவம் தெளிவாகத் தெரியாவிட்டாலும் எதோ ஒரு இலக்கணத்திர்குட்பட்டு அது வணங்கப்படுகிறது.

அது அவனின் கற்பனையான உருவமாக இருக்கலாம் அல்லது கற்பனை செய்யமுடியாத வெறுமையாகவும்  இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் இரண்டு வெவ்வேறு உள்ளமைகள். ஒன்று தெரியும் மற்றது உருவம் தெரியாது, புரியாது. அதுவும் உருவ வணக்கத்தைச் சேர்ந்ததுதான்.

எண்ண அசையும்
நினைக்க நடக்கும்
எண்ணமும் புலனும்
இதுவும் வணக்கம் !

நடக்க நீ நினைக்கின்றாய் உனது கால் நடக்கின்றது. அவ்வாறு கால் நடக்காவிட்டால் அது உனக்கு இணங்கவில்லை என்றாகிவிடும். ஆனால் கால் இனங்கி நடக்கின்றது. அரூப எண்ணத்திற்கு உருவ கால் இணங்கி நடக்கின்றது. இதுவும் வணக்கம்.

இனிதது வாழ்வு
இதனை புரிய
மனிதன் மற்றவை
வணங்க படைத்தான்.

மனித வர்க்கத்தையும், ஜின் வர்கத்தையும் தன்னை வணங்கவே படைத்தேன் என்கிறான் இறைவன். இங்கு வணக்கத்தை தவிர மற்ற செயல்கள் செய்யக்கூடாது என்று பொருள் அல்ல. வணக்கத்தின் தாத்பரியத்தை அறிந்து வாழ்க்கையையே வணக்கமாக அமைத்துக்கொள்ள வேண்டும். இறைவன் சொல்படி, அவன் விருப்பப்படி நம் வாழ்வின் செயல்பாடுகள் இருந்தால் அது இறை வணக்கம் தான். அவ்வாறு வாழ்ந்தால் வாழ்வு சுவர்க வாழ்வாக இனிக்கும். நிம்மதி நிலவும்.

வல்லவனின் சொல்லது
வணக்கத்தி லனைத்தும்
வழுவாதிருக் கின்றன -அது
அரூப வணக்கம் !

அனைத்தும் தன்னை வணங்கிகொண்டுதான் இருக்கின்றது என்று இறைவன் சொல்கிறான். அவ்வாறு வணங்கவில்லை என்றால் பிரபஞ்ச இயக்கமில்லை. ஒன்றோடு  ஒன்று கிரககோலங்கள் மோதி அதனோடு மற்ற யாவும் அழிந்துவிடும். அவ்வாறானால் இறையல்லாத  இன்னொரு ஆற்றல் இருக்கின்றது என்ற கருத்தும் உண்டாகிவிடும். ஆனால் அவ்வாறு இல்லை. எல்லாம் அததற்கு வகுத்தப்படி வழுவாதுதான் இயங்குகிறது.

இதில் எப்படி அரூப வணக்கம் என்றால், இறைவன் வகுத்த எண்ணப்படி அவைகள் இயங்குகிறது. அதற்கு மாற்றமாக இயங்கினால் அழிவு ஏற்பட்டுவிடும். இறைவனின் அரூப திட்ட இலக்கணத்திற்கு உட்பட்டு இயங்குவது அரூப வணக்கம் தானே.

இதன் தாத்பரியத்தை உணர்ந்தால் வணக்க நிலைகள் எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மைகள் தெரியலாம். செய்கின்ற வணக்க எண்ணச்செயலைத் தவிர வேறு எண்ணங்கள், செயல்கள் குறிக்கீடு இல்லாது வணங்கவேண்டும் என்ற உண்மை மறை பொருளாக விளங்கலாம்.
'அறிவுத்தேன்' தொடரும்...
நபிதாஸ்

Wednesday, October 2, 2013

நண்பேன்டா !

மாமா தந்த
ஐந்து காசில்
வாங்கி வந்தேன்
கமர்கட்டு
காக்காய்
கடிகடித்து
நானுந்தந்தேன்
நண்பனுக்கு

     ***
அவன்
வாங்கி வந்த
குச்சி ஐசில்
எங்களின்
நாவு சிவப்பு நிறமாய்
மாறிப்போனது

     ***
இணைபிரியா
நட்புக்கு
இனைந்து
எடுத்துக்கொண்ட
புகைப்படம்
இன்றும்
எங்களிடம்
பொக்கிஷமாய்!

       ***
பள்ளிப்படிப்போடு
அவர்தம்
சூழலால்
பிரிந்துவிட்டோம்
பிரியா விடையோடு

       ***
கடிதத்தொடர்பு
உறவின்
பாலமாய்
இருக்க

      ***
ரிடயர்மென்ட்
எனும் மூன்றாம்
நண்பன்
எங்களை
ஒன்று சேர்த்தான்

       ***
எங்கள்
பேரப்பிள்ளைகளும்
வாரிசுரிமைபோல்
நன்பர்களாய்
ஷேர் செய்கின்றனர்

       ***
புளுடூத்திலும்
பேஸ்புக்கிலும்
[ அவர்தம்
நட்பை ]

       ***
எங்கள் ஷேர்
கமர்கட்டும்!
குச்சி ஐசும்!
என்று சொன்னால்
ச்சி டர்ட்டி ஹேபிட்
என்கிறான்
என் பேரன் !
மு.செ.மு.சபீர் அஹமது

Tuesday, October 1, 2013

மானிடம்

சுட்டெரிக்கும் கோடையில்
போகும்  பாதையில்
ஒரு குழாயடி
சந்தோசம்....
உடல் வியர்க்கிறது
மூளை குளிக்கச்சொல்லுகிறது
குளிக்கமட்டுமே சொல்கிறது
மனமோ குளித்தால் தண்ணீர்
போகும் பாதையை பாத்திகட்டி
அருகில் உள்ள செடிகளுக்கு
வழியமைத்து குளிக்கச்சொல்லுகிறது .......

வழிதவறிய காட்டில்
ஒரு மாமரம் ..
மூளை மாங்காயை ப் பறித்து
பசியாற சொல்கிறது
பசியாற மட்டுமே சொல்கிறது
மனமோ பசியாறிவிட்டு
சிறிது தொலைவில் மாங்கொட்டையை
மண்ணில் புதைக்கச்சொல்லுகிறது
மீண்டும் ஒரு மரம் வளர .........

அவசரமாக நடக்கையில்
பாதையில் வாழைப்பழ த்தோல்
கண்ணில் படுகிறது ..
மூளை அதை ஓராமாக காலால் தள்ளிவிடச்சொல்லுகிறது
காலால் தள்ளிவிட மட்டுமே  சொல்லுகிறது
மனமோ அதை கையில் எடுத்து
எதிரே வரும் ஆட்டிற்கோ ,மாட்டிற்கோ
கொடுக்கச்சொல்லுகிறது ....

வீட்டின் வாயிற்படியில்
ஒரு யாசகன் ...
மூளை சில்லறையை கொடுக்கச்சொல்லுகிறது
சில்லறையை மட்டுமே கொடுக்கச்சொல்லுகிறது
மனமோ யாசகனை உள்ளே அழைத்து
சுத்தம் செய்ய தண்ணீர் கொடுத்து
உணவு பரிமாறி வழியனுப்ப சொல்லுகிறது ....

முன்பெல்லாம் மூளையோடு
மனதும் சரிவர இணைந்து இருந்தது
இப்போ
மனதை தொலைத்து விட்டு
மூளையோடு மட்டும்
அப்படி எங்குதான்
தொலைகிறது இந்த மானிடம் ?

harmys அப்துல் ரஹ்மான்

குறிப்பு : இந்த படைப்பு 'அதிரை நிருபர் பதிப்பகம்என்ற இணையதளத்தில் வெளிவந்து அனைவரின் வரவேற்பையும், பாராட்டுதலையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Pro Blogger Tricks

Followers