.

Pages

Saturday, November 30, 2013

[ 22 ] 'வளைகுடா வாழ்க்கை' [ பாலைவனத்தில் கலைதாகம் !? ]

பாலைவனத்தில் கலைதாகம் !?
பொதுவாக வறண்ட பூமியில் பாலைவனத்தில் தாகம் ஏற்படும். நம்மவர் மனதில் கலை தாகம் கலைதாகம் ஏற்பட்டு அதனால் ஏற்பட்ட விளைவை
இவ்வார ஆக்கத்தில் பதிய விரும்புகிறேன்....

வளைகுடா நாடுகளில் நம்மவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சந்தோசப்பட வேண்டிய விஷயம். கடந்த காலங்களில் தான் உண்டு வேலையுண்டு என்ற நிலை மாறி பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடத்திட மன்றங்கள் உருவாகின. பெரும் பதவியில் உள்ள தமிழர்கள் தமிழ் மன்றங்கள்
நிறுவி மாதம் ஒருமுறையாவது இசை நிகழ்ச்சி, கலைநிகழ்ச்சி நடத்தி மகிழ்வர். வருடங்களில் இருமுறையாவது தமிழக கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துவர். சினிமா நடிகர்கள் மற்றும் சினிமா பின்னணி பாடகர்கள்
பங்கு கொள்ளும் நிகழ்வு தமிழர்கள் மட்டுமல்லாது மலையாளிகளிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

அது போன்ற நிகழ்வுகளில் வளைகுடாவாழ் தமிழர்களில் கலைதிறமை உடையவர்களை பங்குபெற செய்வர். இது போன்ற நிகழ்வுகள் நம்மவர்களை மகிழ்வடைய செய்யும் என்றாலும் நிகழ்வுகளில் பங்கு பெற்று கலை நிகழ்வுகளை நடத்தியவர்களுக்கு தினமும் காதில் கரஒலி  கேட்டு கொண்டே இருக்கும் எப்பொழுது அடுத்த நிகழ்வு நடை பெரும் என்று மனம் ஏங்கிகொண்டே இருக்கும் வேலை முடிந்ததும் மன்றங்களுக்கு சென்று
பல மணி நேரங்களை கழித்து வருவர். இதில் பல பேர் பல கெட்ட பழக்க வழக்கங்களை பழகியயவர்களும்உண்டு.

கலை  தாகத்தால் தனது வேலையை இழந்து நாடு திரும்பி கஷ்ட்டப்பட்ட ஒரு இளைஞனின் வாழ்க்கை நிகழ்வை பதிய விரும்புகிறேன்...
தமிழகத்தை சேர்ந்த ஒரு இளைஞன் மிமிக்கிரி செய்வதில் கலை தேர்ந்தவன். நன்கு பாடவும் தெரியும். எல்லா கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வான் இவன் படைப்பு கரஒலிக்கு தப்பாது, பார்க்கவும் நல்ல பார்வையாக இருப்பான்.

ஒரு முறை தமிழகத்தை சார்ந்த சினிமா கலைஞர்கள் பங்கு கொள்ளும் நிகழ்வு ஏற்பாடு செய்ய பட்டது. அந்த இளைஞனுக்கு ஏகபட்ட சந்தோசம் அரங்க அமைப்பு முதல் குளிர்பானம் விநியோகம் வரை எல்லா ஏற்பாட்டையும் சுறு சுறுப்பாக செய்து முடித்தான். நிகழ்வு நடை பெற இரண்டு நாட்களுக்கு முன் தமிழக சினிமா கலைஞர்களும் வந்து சேர்ந்தனர். அந்த இளைஞன் இரண்டு நாள் வேலைக்கு விடுப்பு எடுத்து சினிமா கலைஞர்களுக்கு உதவியாக இருந்தான்.

நிகழ்ச்சிக்கான ஒத்திகை நிகழ்வை நடத்தினர். அந்த இளைஞனின்
திறமையை கண்ட ஒரு நடிகர், தம்பி நீ தமிழ் சினிமாவில் பிரகாசிக்க வாய்ப்புண்டு சென்னை வந்தால் என்னை வந்து பார் என்று குடிபோதையில் உளறி விட்டு சென்றார்.

கலை நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது. அந்த இளைஞனின் பங்கு சிறப்பாக அமைந்ததை அரங்கின் கர ஒலி பறை சாட்டியது. அந்த இளைஞனின் கலைதாகம் மேலும் கூடியது. ஊருக்கு செல்ல முடிவெடுத்து கம்பெனியில் அனுமதி கேட்டான். கம்பெனி மறுக்கவே வேலையை உதறி தள்ளி நான் ஊர் செல்கிறேன் என்று கூறி வீடு திரும்பினான். உடன் தங்கி இருந்த நண்பர்கள் எவ்வளவோ அறிவுரை கூறினர். அவன் செவியில் விழவேயில்லை.

ஊர் சென்றான் வீட்டில் உள்ளவர்கள் வினவினர்...
தம்பி நீ வளைகுடா நாடு சென்று ஒருவருடம் கூட ஆகவில்லையே அதற்குள் விடுமுறையா ! என வினவினர்...

அதற்கு அவன் பதிலேதும் கூறவில்லை... ஒரு வாரம் கழித்து சினிமா நடிகர் முகவரியை எடுத்து கொண்டு சென்னை சென்றான். முகவரி உள்ள இடத்தை அடைந்தான். பெரிய வீடு, வாசலில் வாட்ச்மேன் நிற்க அவரிடம் தான் வந்த நோக்கத்தை கூறினான். அந்த இளைஞனை பாவமாக பார்த்தான். தம்பி உன்னை போல எத்தனையோ இளைஞர்கள் வருகிறார்கள் ஒன்றுக்கும் உதவாத விஷயம் இப்போ அவர் ஊரில் இல்லை என்றார் ஆனால் அவரின் கார் உள்ளே இருந்தது.

வாசலிலேயே காத்திருந்தான்... அவன் எதிர்பார்த்தது போல கார் வெளியே வர
நடிகர் அதி இருந்தார். ஓடி சென்று மூன்றாம் பிறை சார் சார் என்று ஓடினார். அந்த இளைஞன்.

கார் நின்றது...
என்ன வேண்டும் தம்பி ?
என்ன தெரியல சார்...
யாருப்பா நீ ? என்றார் நடிகர்

அவர் கொடுத்த வாக்குறுதியை நினைவு கூறினான்...

தம்பி இப்போ வாய்ப்பு இல்லை ஏதாவது வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் என்று கூறினார் பதில்  எதிர்பாராமல் கார் கிளம்பி சென்றது. கலங்கி போனான் தலைக்கேறிய பித்தம் ஒரு நொடியில் தெளிந்தவனாக காரையே வெறித்து பார்த்து விட்டு ஊர் திரும்பினான். ஆறு மாதம் கஷ்டம்.... இருந்த காசெல்லாம்
கரைந்து போனது. யாரும் உதவ முன் வரவில்லை. மீண்டும் வளைகுடா நண்பர்களுக்கு போன் செய்தான். போப்பா உன்னை நம்பி விசா எடுத்தால்
கச்சேரி கலை நிகழ்ச்சி என்று அலைவாய் விசா எடுத்து எனக்கு கெட்ட பெயர் வரும் என்றார்.

மறு முனையில் அழுதே விட்டான் அவ்விளைஞன் இனி அந்த தவறே செய் மாட்டேன் உதவி வேண்டினான். நண்பர்கள் உதவிடவே மீண்டும் வளைகுடா வந்தான். தம்பி நாளைக்கு கச்சேரி வருகிறாயா என அழைத்ததும் காததூரம் ஓடினான் அந்த இளைஞன்.

நிழல் வேறு நிஜம் வேறு அறிந்து கொள்ளுங்கள் இளைஞர்களே !

[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, November 29, 2013

எதிர் நீச்சல்


அதிரை ஜாஃபரின் இனிய குரலில் கவியன்பன் கலாம் அவர்களின் அழகிய வரிகள்...
கோடிக் கணக்கில் அணுக்களையும்
........கோத்துப் போட்டி வளர்த்ததனால்
ஓடி நீச்சல் அடித்ததனால்
.....ஊறும் கருவாய் உதித்ததுவே!

பாரை நோக்கி வந்ததுமே
...பாலைக் குடிக்கச் சத்தமுடன்
ஊரைக் கூட்டி மகிழ்வதெலாம்
....ஊறும் போட்டி மனத்தினாலே!

நாளும் பொழுதும் வளர்வதற்கு
.....நாடும் துணிவால் புரள்வதற்கு
நீளும் கைகள் பிடிப்பதற்கு
....நீச்சல் துவங்கும் துடிப்புடனே!

ஊன்றி எழுந்து நடந்திடவே
...ஓடித் தவழ்ந்துக் கடந்திடவே
தோன்றும் உணர்வால் முயன்றிடவே
....தோல்வி அறியா எழுச்சியாமே!

பாடம் படிக்கும் போதினிலும்
....பாரில் வெல்லும் போட்டிகளும்
ஓடம் போல தேடுதலும்
....ஓயா உழைப்பின் நீச்சலாமே!

ஏணிப் படியாய் முயற்சிகளும்
...ஏற்கும் மனத்தின் பயிற்சிகளும்
நாணிக் குறுகாத் துணிவுகளும்
...நாடும் வெற்றிக் களிப்புகளாய்!

நீயும் காணும் சுவனங்கள்
...நீயே கொண்ட கவனங்கள்
வாயில் தட்டும் தருணங்கள்
...வாய்ப்பே ஆகும் அறியுங்கள்!

ஆடை, உணவு தேடித்தான்
....ஆளாய்ப் பறப்போம் ஓடித்தான்
கோடை, குளிரும் பாராமல்
....கொள்வோம் எதிராய் நீந்தித்தான்!

சூழும் பகைகள் எதிர்த்தவரை
...சோகம் எல்லாம் மிதித்தவரை
வாழும் வாழ்க்கை துணிந்தவரை
.....வாழ்த்தும் நீச்சல் அறிந்தவரை!

ஆர்த்துக் கரையைத் தொடத்தொடத்தான்
........ஆழி அலைகள் தவழ்ந்திடுதே
சேர்க்கும் உடலின் குருதியெலாம்
...சேர்ந்த ஓட்டம் உயிரதுவாம்!

ஓங்கி அடிக்கும் உளியாலே
...ஓடிப் போகும் மலைதானே
வீங்கி வளரும் செடியாலே
....வீழ்ந்து போகும் தடிபாறை!

எட்டா திருக்கும் இமயமும்தான்
.....ஏறிப் பழக இறங்கிவிடும்
கிட்டா திருக்கும் உயர்வுகளும்
...கீழே பணியும் முயற்சியினால்!
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 28-11-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

Thursday, November 28, 2013

[ 11 ] அறிவுத்தேன் [ அருவில் உருவம் ]

ஒன்றது உருவம்
தானது இன்றி
தலைவன ரூவில்
சமைந்தது உருவம் !

தலைவன் அருவில் சமைந்த உருவம் எவ்வாறு ?
மண் ஆற்றல். இது திடத் தன்மையக் குறிப்பது. வடிவம் உள்ளது. நீர் ஆற்றல். இது திரவத் தன்மைக் குறிப்பது. நிலையான வடிவமில்லாத பொருள். திரவமேத் திடம், அதாவது திரவமே மண்ணாகி உள்ளது (என்று முன்பே பார்த்துள்ளோம்). இவ்விரண்டும் உள்ள நாம் வசிக்கும் கோலம் அதனை பூமி என்கிறோம். ஆனாலும் மண் வேறு, நீர் வேறு, பூமி வேறு என்று பிரிவாகத்தான் வழக்கில் கொண்டுள்ளோம்.

பிரபஞ்சம் தன் சூரிய குடும்பங்களின் பூமி போன்ற கோலங்களில்தான் அது தன்னைப் பூக்குமிடங்களாகக் கொள்கிறது.  பூமி என்ற மண்ணும் நீரும் உள்ள இப்பெரியக் கோலத்தில் ஐம் பூதங்கள் இணைய ஏதுவான தட்ப வெப்பச் சூழல் கொண்டு உயிராற்றல் உண்டாகி, அது உருவங்கள் என்ற தனித்த தன்மைகளாகி தன்னில் இயக்கங்களையும் உண்டாகிக் கொள்கிறது.

பிரபஞ்சமே தன்னைப் பலவாக மாற்றிக்கொண்டது என்ற கருத்தை முன்பே பார்த்துள்ளோம். அதுபோல் பூமியில் பல உயிரினங்கள், ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை அவ்வாறு பூமியின் இயக்கத்தோடு அவைகள் தனித்த இயக்கமும் தோற்றமும் கொண்டு ஒவ்வொன்றும் இயங்குகின்றன.
அவைகளில் தன்னைவிட ஏதாவது ஒன்றிலோ அல்லது பலவகைகளிலோ கூடுதல் ஆற்றல் மற்றது ஒன்று கொண்டிருந்தால் அது அவைகளின் தலைமைக்குத் தகுதியானது என்றும், மனிதன் என்றால் தலைவர் என்றும் சொல்கிறோம். ஆக தலைவனில் உள்ளது அனைத்திலும் உள்ளது. மேலும் சில பல தனித்தத் தன்மைகள் தலமையில் தலைமை நிலைக்கேற்ப வெளிப்படுகிறது.

பிரபஞ்சம் என்ற அரூபமே வெளி, காற்று, வெப்பம், நீர், மண் இவைகளின் அனைத்தினது மூலமாக இருக்கின்றது என்று பார்த்துள்ளோம். பூமியின் மூலம் மண்ணும், நீரும். அதுபோல் பூமியில் உள்ள அனைத்தினது மூலம் பூமி ஆகும். அனைத்தினது மூலத்தை விட்டு, மறந்து பூமியில் உள்ள அவைகள் ஒவ்வொன்றும் தனித்தது என்றும், தன்னில் உண்டாகும் அறிவு ஆற்றலைக் கொண்டு தன்னையும் தனித்தது என்ற எண்ணம் கொண்டு மனிதன்தான்  பார்க்கின்றான். அது மனிதனின் சுபாவ வழக்கமானாலும் நுண்ணறிவின் உண்மைப்படிப் பொருத்தம் இல்லாத ஒன்றாகும்.

தங்கத்தில் மோதிரம் சமைந்ததுபோல், அனைத்தும் அருவில் சமைந்து உள்ளது. மோதிரம் என்று தனித்து இல்லை. தங்கத்திலே மோதிரம் ஆகும். தங்கத்தில் தங்கம் மோதிரம் போல் தெரிகின்றது. அதுபோல் தலைவன் என்ற ஓர் அரூவில் தான் உருவங்கள் சமைந்துள்ளது.

அறிவு மயக்கமோ அல்லது அறியாமை மயக்கமோ, மண்ணை மறந்து மண்ணில் உண்டாகிய அனைத்தும் வேறாக மனிதன் கருதுவது எங்ஙனம் சரியாகும் ? தலைவன் என்று சொல்லக்கூடிய ஒன்றில் இருந்துதானே அனைத்தும் உண்டாகியுள்ளது.

இன்னும் முன்பு எழுதப்பட்ட ஓர் உதாரணம், அதனை இங்கும் நினைவுகூறுவோம். அரூபம் அது மகா சக்த்தி வாய்ந்தது, அதனின் வழி ஆற்றல்களான எலக்ட்ரான், புரோட்டான், நியுட்ரான். அவைகள் மூலம் ஆக்சிஜன்,  ஹைட்ரஜன் போன்ற இன்னும் பல வாயுவுகளும் உண்டாக்கியுள்ளன.

ஆக்சிஜன்,  ஹைட்ரஜன் அவைகள் சேர்ந்து ஆவியான நீர் அம்சம். அது குளிர்ந்தால் தண்ணீர். அது இன்னும் மிக குளிர்ந்தால் ஐஸ் கட்டி அம்சமாகின்றது. (புளுட்டோ கிரகத்தில் ஐஸ் இரும்பு உடைக்கும் வலிமையுள்ளதாம்.) இம்மாற்றத்தில் ஒன்றுக்கொன்று தனித்தக் குணம். ஆனாலும் அடிப்படையில் மூலம் ஒன்றே. அரூபம் அதனின் ஆற்றலே உருவம் என்ற உருவங்களாகி இருக்கின்றது. மேலும் உருவத்தின் ஆற்றல் அரூபத்தின் ஆற்றலில் நின்றும் உள்ளது என்று பார்த்தோம்.

மண்ணும் அரூபத்தின் ஆற்றல். மண்ணில் உண்டாகும் உயிர்ப்பும் அதனின் ஆற்றல். அதனை மறந்து அதனை கொண்டு இருக்கும், இயங்கும் யாவும் தனித்தது, வேறானது என்று அறிவது சரியாகாது.

தங்கத்தில் மோதிரம், சில்வரில் பாத்திரம், இரும்பில் ஆயுதம், நீரில் பனிக்கட்டிகள், காற்றில் வாயுக்கள், ஒளியில் பல வண்ணங்கள், ஒலியில் சுரங்கள், மண்ணில் மனிதன், மனிதனில் மனம், மனதில் எண்ணங்கள், எண்ணத்தில் உண்மைகள், உண்மையில் பிரபஞ்சம்.

பிரபஞ்சம் என்ற அரூபம் ஒன்று அதனில் அனைத்தும் இவ்வாறு ஒன்றானது பலவாகி உள்ளது. விளங்கிக்கொள்ளப் பிரிவாகப் பார்த்து பழக்கதோஷத்தில் வேறு என்றே மனிதன் உணர்ந்துக் கொள்கிறான்.

தான் உண்டாக காரணமான  மூலம் என்ற ஆதியைத் தலைவன் என்று கொள்ளும்போது அதனிலிருந்து (அனைத்தும்) படைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும்.

இஸ்லாமியத்தில் மண்ணால் மனித உருவம் படைக்கப்பட்டுப் படைத்தவன் தன் உயிரை அவ்வுருவில் ஊதினான், அது மனிதன் ஆகியது என்று உள்ளது. இங்கு மனிதனில், மனிதனின் மூலம், அவனின் மண்ணும்; உயிரும். அவைகள் அல்லாது இவன் இல்லை. ஆனாலும் தன் மூலத்தை அறிந்தாலும் தன்னைத் தன் மூலத்தைவிட்டுப் பிரித்தே மனிதன் தான் வேறாக உணர்கின்றான் ! தன் மூலத்திலிருந்து படைக்கப்பட்ட மனிதனை வேறு என்றால் எப்படி அம்மூலம்தான் ஏற்றுக்கொள்ளும் ? யார்தான் தன் உரிமையை விட்டுக்கொடுப்பார் ?! மேலும் தான் இந்த ஊரைச்சேர்ந்தவன் என்று அறிதலைவிட்டு தெளிவில்லாமல், தானே இந்த ஊர் என்பதும் அறிவுடமையாகாது.

அரூபம் ரூபங்களாகி உண்டாகி உள்ளது. தங்கத்தில் சமைந்த மோதிரம்போல் தலைவன் அருவில் சமைந்த உருவங்கள்.

கண்ணது பார்வை
உன்னது பார்வை
கண்ணைக் காண
கண்ணுரு தெரியும் !

காணும் கண் காணும் போது மாட்டுமே தெரிவதெங்கனம் ?
நபிதாஸ்

Tuesday, November 26, 2013

வால்வோ !? சாவோ !?

மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகளில் எத்தனையோ கருவிகள் மனிதவாழ்வில் ஒன்றிப்போய் விடுகிறது இன்றைய செல்போனும் மின் விசிறியும் இல்லாமல் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது என்று சொல்பவர்கள் தான் அதிகம் ஒரு காலத்தில் மனிதன் தொலைதூர பயணத்திற்கு கால்நடைகளைத்தான் வாகனமாய் பயன்படுத்தி வந்தனர் வியாபார நோக்கிற்காக சாமான்களை ஏற்றிக்கொண்டு வெளி ஊர்களில் விற்பனை செய்து அங்கு கிடைக்கு பொருள்களை வாங்கி வந்து சொந்த ஊர்களில் வியாபாரம் செய்வர் ஒரு வியாபார பயணம் என்பது மாத கணக்கில் நீண்டு இருக்கும் வேலை செய்வதற்காக வெளியூர் செல்வது அன்றைய காலங்களில் இல்லை காரணம் பயண இடைஞ்சல் தொலை தொடர்பு வசதி இவைகளை கருத்தில் கொண்டு சொந்த ஊரில் வேலை செய்வார்கள் வியாபார நோக்கம், கல்வி தேடல், ஆராய்ச்சி,, இவைகளின் நோக்கத்தால் தொலை தூர பயணம் மேற்கொள்வர்.
       
இன்றைய காலம் அப்படியல்ல மாட்டு வண்டி, குதிரை வண்டி, போய் இரண்டு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள்,மற்றும்   6 சக்கர வாகனங்களாக வளர்ச்சி கண்டுள்ளது  நாட்டின் வளர்ச்சி என்பது  சாலைகள் வளர்ச்சியிலும் பார்க்கப்படுகிறது போக்குவரத்து வசதிகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த நாடு வளர்ச்சியிலும் வேகம் எடுக்கும் இன்று மனிதர்கள் நீண்ட தூர பயணத்திற்கு ஆம்னி பஸ்களை பயன்படுத்துகின்றனர் காரணம் சொகுசான,விரைவான பயணம் உடல் சோர்வு இல்லாது மறுநாள் வேலைக்கு விடுப்பு எடுக்காது சொல்லாம் ஒரு இரவு தூக்கம் கூட சிரமப்பட கூடாது என்ற நோக்கத்தால் கட்டணம் அதிகமாக இருந்தாலும் ஆம்னி பஸ்களாகிய வால்வோ பஸ்களை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர்[மனித வாழ்வோடு ஒன்றிப்போய் விட்டதில் இதுவும் ஒன்று] வாழ்வு சிறக்கவேண்டும் என்று நாம் நினைக்கையில் வால்வோ பஸ்கள் நம் வாழ்வை பறிக்கின்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெருகிறது சென்ற அக்டோபர்3௦ ஆம் தேதி பெங்களுருவில் இருந்து ஹைதராபாத் சென்ற வால்வோ பஸ் மற்றும் அதே பெங்களுருவில் நவம்பர் 13 ஆம் தேதி  மும்பைக்கு சென்ற வால்வோ பஸ் இரண்டும் விபத்துக்குள்ளாகியது இரண்டுமே ஒரே காரணம்தான் டிவைடர் என்று சொல்லப்படும் இரண்டு சாலைகளையும் பிரித்து காட்டப்படும் அந்த தடுப்பில் உரசி அல்லது மோதி டீசல் டாங் தீ பற்றிக்கொள்ள முதல் பஸ்ஸில் சென்ற பயணிகள் 45 பேர்களும் இரண்டாம் பேருந்தில் 8 நபர்களும் தீக்கு இறையாகிப்போனார்கள் வாழ்க்கையில் எத்தனையோ கனவுகளோடு, பயண கட்டணங்கள் ஆதிகமானாலும் கவலைபடாது சொகுசாக செல்ல நினைத்தவர்களுக்கு! சொகுசு வால்வோ முடிவு வாழ்வாய்ப்போனது.
     
இனி இது போன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருக்க பயணிகள் விழிப்புணர்வு அவசியம் பேரூந்து நிர்வாகமும் விழிப்புடன் இருத்தல் வேண்டும் நம் சமூகவிழிப்புணர்வு பக்கம் தரும் ஆலோசனைகள் :
1. எல்லா வால்வோ பஸ்களிலும் டிவி இருக்கின்றது பயணம் புறப்படும் முன் ஆபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று டெமோ வீடியோ செயல்முறை விளக்கம் காண்பிக்க வேண்டும்

2. ஒவ்வொரு இருக்கைக்கும் கிழே கனத்த இரும்பு கம்பி [ கண்ணாடியை உடைப்பதுபோல் ] வைத்திருக்க வேண்டும் அல்லது குறைந்தது 4 இருக்கையிலாவது வைத்து அதை [இருக்கை எண்ணை]குறிப்பிட்டு இருக்க வேண்டும்

3. அவசர வழி எப்படி உபயோகிப்பது என்பதையும் செயல்படுத்தி காண்பிக்க வேண்டும்

4. டீசல் நிரப்பும் பொழுது டீசளோடு உடனடியாக தீ பற்றாத இரசாயானத்தை கலக்க நிர்வாகம் தவறக்கூடாது

5. நீண்ட தூர பயணத்தில் இரண்டு ஓட்டுனர்கள் இருக்க வேண்டும்

6. கிளீனர் என்பவர் வண்டியை துடைப்பதற்கும் ரிவேர்ஸ் பார்ப்பதற்கு மட்டுமே உள்ளார் அவர் நல்ல விபரம் தெரிந்த பலசாலியான ஆளாய் இருந்தால் விபத்து நிகழும்போது பயணிகளுக்கு உதவியாய் இருப்பார் [ இல்லையேல் முதலில் தப்பிப்பவர் அவராகத்தான் இருப்பார்]

7. 120 கிலோமீட்டர் மீட்டர் வேகம் செல்லும் தகுதியான சாலைவசதிகள் இல்லாது இருந்தும் ஓட்டுனர்கள் வேகத்தை மட்டுப்படுத்துவது இல்லை

8. டீசல் டேங்கை சுற்றி தண்ணீர் டேங்கு கவசம் போல் இருந்தால் விபத்தின்போது தீயை அணைக்க ஏதுவாக இருக்கும் அல்லவா

9. ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் ஓட்டுனர் மது அருந்தி இருக்கிறாரா என்பதனை சோதனை செய்யும் கருவி வைத்து ஓட்டுனரை சோதிக்கவேண்டும்  மதுவால் விபத்து நடந்து இருந்தால் சோதனை சாவடி ஊழியரையும் கைது செய்யும்படி சட்டம் இயற்றவேண்டும்
   
வாழ்வோ சாவோ இனி வால்வோ பயணம் வேண்டாம் என்று முடிவெடுக்கும் நிலைக்கு பயணிகளை ஆட்படுத்திவிடாதீர்

வாழ்க்கை வாழ்வதற்கே
வால்வோ சாவதற்கென்றாள்
வால்வோ அவசியமில்லை !
மு.செ.மு.சபீர் அஹமது

Monday, November 25, 2013

நபிதாஸின் அம்மா !

உன்னையே உருக்கி அம்மா
.....உலகிலே விட்டாய் எம்மை
தன்னிலே வரைந்த என்னை
.....தரணியில் தந்தாய்த் தன்னாய்.
சின்னதா ! செய்தேன் தப்பு
.....சிறிதென நடித்தாய்த் தப்ப
என்னையே கண்டாய்க் கனவு
.....என்றுமே நான்உன் நினைவு.

வனப்புகள் செய்தே நாளும்
.....வசதிகள் தந்தாள் கேளும்
சினத்தினால் உண்ணாக் கோபம்
.....சிணுங்கிதான் நிற்பாள் பாவம்.
மனதினில் பரிவைக் கோர்பாள்
.....மதியுடன் பசியைத் தீர்பாள்  
தனக்கென வாழாத் தானம்
.....தந்ததில் வாழ்தேன் நானும்.

பிறப்புகள் எதுவும் உண்டா
.....பிறவியில் காண்ப துண்டா
பிறந்ததும் எனக்குத் தானோ !
.....பிறவியோ உனக்கு வீனோ ?
துறவறம் கொள்வார் பின்னால்
.....துறவியாய் வாழ்வாள் என்னால்
திறம்பட எதுவும் தந்தும்
.....தீர்த்திட முடியாப் பந்தம்.

என்முகம் சோகம் ஏற்காய்
.....இன்னலை அழித்தே தீர்பாய்
உன்முகம் என்னைத் தேடும்
.....உறங்கிட தாலாட்(டு) பாடும்.
அன்னையின் பாதம் நிற்கும்
.....அதன்கீழே மகனின் சொர்க்கம்
சொன்னவர் உலகின் கோமான்
.....சொல்வழி நடந்தால் சீமான்

கண்டதும் அதிகம் என்னை
.....கனவிலும் இழந்தாய் உன்னை
மண்ணிலே எதுவும் இல்லை
.....மனதிலும் நானே தொல்லை
ஆண்டவன் படைப்பில் காண்போம்
.....அதினிலே பொறுமை என்போம்
அண்ணலார் சொன்னார் நன்றே
..... அன்னையும் சிறப்பு என்றே !

நபிதாஸ்

Saturday, November 23, 2013

[ 21 ] 'வளைகுடா வாழ்க்கை' [ இடை நிலை () உயர் நிலை ஊழியர்கள் ]

டை நிலை ஊழியர்கள் :
அலுவலகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் செலவினங்கள் போக ஓரளவு மிஞ்சும் நிலை இவர்களில் பலர் குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள் சில கம்பெனிகளில் வீட்டு வாடகைக்கான தொகையை கம்பெனியே செலுத்தும் நிலையும் உண்டு அவர்களுக்கு இதர செலவுகள் மட்டுமே ..எனவே அது போன்ற நல்ல சூழல் நல்ல கம்பெனிகள் அமைய பெற்றவர்கள் அதிர்ஷ்ட்ட சாலிகள் தான். ஆனால் சிலருக்கோ அலுவலக பணியாளராக இருந்தாலும் சராசரிக்கு கீழ் சம்பளம் கிடைக்கும் சூழல் அவர்களும் தமது குடும்பத்தை அழைத்து கஷ்ட ப் படும் சூழலும் சூழலும்
உண்டு.

சிலரின் மனைவிகள் படித்தவராக அல்லது நல்ல தொழில் தெரிந்தவராக இருப்பார் .அவர்களும் வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வர். ஆனால் கலாச்சாரம் பேணும் சில சமூகத்தினர் குடும்பத்தை அழைத்து கஷ்டப்படும்  சூழலையும் பார்க்க முடிகிறது. அதில் பரிதாப சூழல் என்ன வென்றால் சிறு குழந்தைகள் ஆசை படும் பொருட்களை வாங்கி கொடுக்க முடியாத சூழ்நிலை. இதில் சில புத்திசாலிகள் பணம் ஈட்டுவதில் குறியாக இருப்பர் அவர்கள் குடும்பத்தை அழைக்காது. இரண்டு மூன்று பேரோடு கூட்டு சேர்ந்து தனி நபர் வாழ்க்கை வாழ்ந்து கணிசமான
தொகையை மிச்சம் செய்து பணம் சேர்ப்பர். வருடம் ஒருமுறை
விடுமுறையில் ஊர் வந்து செல்வர்.

சிலரின் நிலை அலை பாயும் மனதுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களின் நிலை என்றும் புதியவர்களாக இருப்பார்கள் எப்படி !?
தான் வேலைப்பார்க்கும் கம்பெனியில் திருப்தி கொள்ளாமல்என்றுமே பெற கம்பெனி மேல் கவனம் செலுத்துவது அங்கு கூடுதலான சம்பளம், நல்ல நிலை, நல்ல போனஸ் என்று தான் பார்க்கும் வேலையில் இருப்பு கொள்ளாமல் ஓரிரு வருடங்களில் வேலை மாறி கொண்டு இருப்பர். இதன்
காரணத்தால் மூத்த நிலை ( சீனியர் ) பதவிக்கு செல்லாமல் இளம் தலை முறையினருக்கு உதவியாளராகவே தனது கடைசி காலம் வரை கலைத்து விடுகின்றனர். இவர்கள் நிலை பரிதாபமானது தான் !

யர் நிலை ஊழியர்கள் :
உயர் அதிகாரி என்றால் எல்லா வகையிலும் வசதி இருக்கும் இதில் எள்ளளவும் சந்தேகம்  இல்லை .அலுவலகத்தில் எல்லா தரப்பிலும் தனது ஆதிக்கம் இருப்பதால் எதிரிகள் இருப்பது சங்கடமான ஒன்று .அவரை சந்திக்கும் நட்பு வட்டாரம் உறவுகளின் வருகை எல்லாம் வேலை வாய்ப்பு பற்றிய வினாக்களால் சலிப்பு ஏற்படும். இது பொதுவான நிலை இதன் காரணமாக குடும்பத்துடன் தனியாக வசிக்க முனைவதும் உண்டு.

நம் தமிழர்களில் பலர் உயர் நிலை அலுவலர்கள் சமூகத்துடன் ஒட்டி பழகுவதில்லை என்பதே உண்மை ..ஆனால் மலையாளிகள் உயர்நிலை உள்ளவவர்கள் கடை நிலை ஊழியர்களிடம் சகஜமாக பழகுவதை அன்றாடம் காண முடிகிறது.

உளவியல் ரீதியான ஒரு தகவலை பதிய விரும்புகிறேன்...
புலன் பெயர்ந்து வந்து வாழும் இவர்களுக்கு வளைகுடா நாட்டில் கிடைக்கும் வசதி மண்ணின் மைந்தர்களான அரபிகளின் நேரடி பழக்க வழக்கங்களால் தாம் வெளிநாட்டில் இருந்து வந்து பிழைப்பு தேடி வந்துள்ளோம் என்பதை
மறந்து விடுகின்றனர். சில சமயங்களில் தனது ஒத்த நிலையில் உள்ள அரேபியர்களிடம் கருத்து வேறுபாடான நிலையில் அவர்களிடம் மோதும் நிலைக்கு தள்ள பட்டு வேலை இழக்கும் நிலைக்கும் ஆளாவது உண்டு .இது போன்ற தருணங்களில் நிதான நிலைக்கு வந்து அரபிகளிடம் சமரசம் செய்து கொள்ளல் நலம் என்றே நினைக்கிறேன்.

சிலருக்கு  அலுவல் நேரம் குறைவாக  இருக்கும் மற்ற நேரத்து ஏதாவது ஒரு வியாபாரம் செய்வோம் என்று முயற்சி செய்து அதில்  வெற்றி பெறுபவரும் உண்டு. கை காசை இழந்து, வேலையை இழப்பவர்களும் உண்டு. பெரும் பதவியில் உள்ளவர்களுக்கு அந்த வேலை மீது சலிப்பு ஏற்படுவது உண்டு குறுகிய காலத்தில் வேலையினை விட்டு விலகி ஊர் திரும்புபவரும் உண்டு.

[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, November 22, 2013

பிரபல பதிவர் ஜாஃபரின் இனிய குரலில் கவியன்பனின் வாழ்க்கை என்னும் பாடம் !


இனிய குரலில் ஜாஃபர் பாடிய காணொளி :

'கவியன்பன்' கலாம் இயற்றிய எழுத்து வடிவில் உள்ள கவிதை :
வாழ்க்கை என்னும் பாடம் :
வெற்றிலையும் சுண்ணாம்பும் சேர்ந்தால் நாக்கு
...........வெளிக்காட்டும் செந்நிறத்தின் அழகு போல
வெற்றிகளை ஈட்டிவரும் சான்றோர் வாழ்வு
........... வீரியமாய்த் தந்திரமும் இணைந்த  தாலே
சுற்றிவரும் சூழ்ச்சிகளை எளிதில் கண்டு
..........சுழற்றியதை முறியடித்தார் விரைந்து சென்று
கற்றிடுவோம் அவர்வாழ்வில் முன்னேற் பாட்டை!
..........கழற்றிடுவோம் நம்வாழ்வில் ஐயப் பாட்டை

பல்லுக்குள் அகப்பட்ட நாக்கைப் போலப்
........பக்குவமாய்ச் சுழலுதலே வாழ்க்கை என்போம்
சொல்லுக்கும் செயலுக்கும் வேறு பாடோ
.......சோதனைகள் கொண்டுவரும் முன்னேற் பாடே
வில்லுக்குள் பூட்டிவைத்த அம்பைப் போல
......விவேகத்தைப் பூட்டிவைப்போம் அன்பி னாலே
கல்லுக்குள் மறைந்துள்ளத் தேரை வாழக்
.....கருணையாளன் உணவளித்துக் காப்பா னன்றோ

வாய்கொண்டு விழுங்குகின்ற முயற்சி போல
.........வாழ்க்கையிலும் விடாமுயற்சி இருக்க வேண்டும்
நோய்கொண்டு வாடினாலும் மருந்தை நாடி
.........நோகாமல் சிகிச்சைகள் செய்வோம் தேடி
தாய்கொண்டு வந்தவுடல் அழிவைத் தேடித்
........தானாக மாய்வதற்குக் குழியைத் தோண்டித்
தேய்கின்ற நிலைமைக்கு சைத்தான் நம்மைத்
.......தீண்டுகின்ற சூழ்ச்சிகளை அறிதல் நன்றே!

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 14-11-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

Thursday, November 21, 2013

[ 10 ] அறிவுத்தேன் [ வேற்றுணர்வில் உருவம் !? ]

பலவா பழுத்து
மாவது முளைத்து
வேறா உணர்கிறது
உருவ மாகிறது !

வேறா உணர்கிறது என்றால் ?

உண்டுமை ( Entity ) உள்ளமையில் ( Existence )  அழிந்து ( தான் என்ற தனித்தத் தன்மை இழந்து ) அந்த உள்ளமையில் உண்டாகும் செயல்களான அனைத்தும் அறிந்தப் பதிவில்லா அரூபச் செயல்கள் என்றும் அது வல்லமை யுடைதாகவும் இருக்கும் என்றும் பார்த்தோம்.

ஒரு மனிதன் தன்னைத் தனித்தவனாக உணரப்படுவானாகில் அவனைத் தெரிகின்ற அந்த உருவ அமைப்பு அல்லது அவன் இருப்புக்கு காரணமானது எதுவோ அது அவனது உண்டுமை என்பதாகும். அதுபோலவே மற்றவைகளும், மற்றவைகளுக்கும்.

மனிதன் என்ற தனித்த உண்டுமையான அவன், மண்ணால் படைக்கப்பட்டு உள்ளான் என்ற அறிவுக்கு உட்பட்டு பார்ப்போமானால், விளங்கிக் கொள்வதர்க்காக மண் (பூமி) என்பது ஓர் உள்ளமை.

( ஆனால் உள்ளமையில்தான் பூமி போன்ற பல அனைத்தும் உண்டாகி உள்ளன.)

உள்ளமையில் ( Existence ) அதனின் அதனில் உண்டாகி உள்ள ஒவ்வொன்றும் தன்னைத் தனித்தது, தனக்கு என்று உரிமைகள்; உடயவைகள் உள்ளன என எண்ணும்போது; உணரும்போது அங்குத் தனித்த உண்டுமைகள் ( Entities ) உண்டாகிறன..

மனிதன் தனதுக் கைகள்; கால்கள், தனதுத் தலை; தனது உடம்பு என்றுத் தன் உருவத்தின் ஒவ்வொன்றையும் தனதுத் தனது என்று உணருகிறான். பொதுவாகத் .தன் உடம்பைத் தன்னுடையது என்கிறான். அதுதான் அவன் என்றுக் கூறுகிறான். எதோ ஒன்று அவனது அவ்வுடம்பில் இருக்கின்றது அது அவ்வாறுக் கூறுகிறது எனபதைச் சிந்தித்தால் புரியலாம்.

அவன், அவனது என்றுக் கூறிய அந்தக் கைகளும் அவன் அல்ல, அந்தக் கால்களும் அவன் அல்ல, அவனது என்ற அந்தத் தலையும் அவன் அல்ல, அவன் அவனது உடம்பும் என்று சொன்ன அந்த உடம்பும் அவன் அல்ல. ஆனாலும் வேறொன்று இவைகளை தனதுத் தனது என்று அவ்வுடம்பு மூலம் சொல்கிறது. அந்த ஒன்று அதுதான் நான், தான், தனது என்றுச் சொல்கிறது. இவ்வுடம்பை இவ்வுடம்பு மூலம் தனது என்று அந்த ஒன்றேதான் கூறுகிறது.

மேலும் நான் பார்க்கிறேன் என்றுச் சொல்கிறோம். கண் இல்லாமல் பார்க்கமுடியாது. அதனால் கண்தான் நான் ஆகுமா ? அல்லது நான் என்ற உணர்வு இல்லாமல் கண்தான் பார்க்குமா ?   ஆக இந்த உருவத்திற்கு அப்பார்ப்பட்டு நான் என்ற உணர்வு ஒன்று உள்ளது என்பது சரிதானே ?! அதனை உயிர், மனம், ஆன்மா என்றெல்லாம் சொல்கிறோம்.

ஆனாலும் ஆன்மா என்பது மிக வலிமையுள்ளது அதன் ஆற்றலை அளவிடமுயாது. எனவே அது அப்பார்ப்பட்டும் என்பதும் அல்ல. அதுவே அவ்வாறாகி அதுவில் அவ்வாறு கூறுகிறது. ஆன்மாவே உடம்பென்றும் உருவாகி அவ்வுடம்பில் அவ்வாறு பார்க்கிறேன் என்று சொல்கிறது. ஆனால் புத்திதான் பிரிவாக உணர்ந்து தனித்த உண்டுமையாகத் தான் தோன்றியத் தன் உருவைக் கொள்கிறது.

தான், நான் என்று அவ்வாறு மண்ணால் ஆனத் தன்னைக் கூறும்போது தன் உருவத்தை மட்டும் உணர்கிறது, பார்க்கிறது. அந்நிலையில் பல பொருள்கள் அதன் பார்வையில் படும் போது, மண்ணில் இருக்கும் அனைத்தும் மண்ணால் ஆனவைகளே என்ற எண்ணமற்று, அவைகள் தனக்கு அன்னியமானவைகள் என்று எண்ணுகிறது. அப்பொழுது பல உருவங்கள் அதற்குத் தெரிகிறது. (மண்ணில் இருக்கும் அனைத்தும் மண்ணால் ஆனவைகளே)

பிறந்த குழந்தை தான், நான், என்று எண்ணுவதில்லை. வளர்ந்த மனிதன் தான், நான் என்று எண்ணுகிறான். பிறந்த குழந்தை உள்ளமையில் உண்டாகி  வளர்ந்து பின் மனிதன் என்றத் தனித்த உண்டுமை உணர்வில் இருக்கின்றது.

பிறந்தவுடன் குழந்தை (Existence) தனதுக் கைகள்; கால்கள், தனதுத் தலை; தனது உடம்பு என்று நினைத்ததே இல்லை. -(Existence) - பார்க்கும் பல அனைத்தும் வேறு என்றும், தான் என்றும் நினைக்காது. எப்பொழுது அதன் ஆறாவது அறிவு வேலை செய்ய தொடங்குகிறதோ அப்பொழுதுதான் அது தனதுக் கைகள்; கால்கள், தனதுத் தலை; தனது உடம்பு என்று நினைக்கும்; உரிமைகொள்ள ஆரம்பிக்கும். -(Entity)- பிரிந்த உணர்வு நிலை இங்கு உண்டுமை (Entity) என்றும், பிரியா உணர்வு நிலை உள்ளமை (Existence) என்றும் ஆகும்.

உண்டுமை உணர்வில்தான் தான்; நான். பிறவைகள் என்ற உணர்வுகள் உண்டாகும். அதனது உரிமைக்கொள்ளும் சுபாவங்களும் உண்டாகும். உரிமைக் கொள்ளுதல் என்றாலே பிரிவுகள் உண்டாகும். உதாரணம் வளர்ந்தக் குழந்தை அல்லது மனிதன்.

உள்ளமை உணர்வில் தான்; நான், பிறவைகள் என்ற உணர்வுகளும் உண்டாகாது, எதையும் உரிமை கொள்ளும் சுபாவமும் உண்டாகாது. உதாரணம் பிறந்தக் குழந்தை. அந்நிலையில் பிரிவு உணர்வுகள் இல்லையாதலால், உண்டுமையின் சுபாவமான பூ; காய்; இலை; கிளை; தண்டு; வேர் என்ற பிரிவாகப் பார்க்காது, உள்ளமையின் சுபாவமான மரம் என்றே பார்க்கும். அவ்வாறும் அன்று மரம் என்ற உணர்வும் அற்று பூமி என்ற அறிவுணர்வும் அற்று இயங்கும்.

உள்ளதை ஒன்று என்றும் அதனை உள்ளமை என்றும் கூறுகிறோம். அவ்வொன்றில் உள்ள பலதை உண்டுமைகள் என்கிறோம்.

மா மரம் ஒன்று. அது காய்த்து, அவைகள் பல பழங்களாக பழுத்து, அவைகள் முளைத்து பலமரங்கள் உண்டாகினால், பல மரஉருவங்கள் தெரியும். ஒரே மரம், அது பல மரங்களாகியிருக்கின்றது. ஒவ்வொன்றும் வெவ்வேறு மரங்களாகத்தான் தெரியும். ஆனால் உண்மையில் ஒரே மரம்தான். அதன் பரிணாம வளர்ச்சியின் அமைப்பு அவ்வாறு. இது உதாரணம்.

பிரபஞ்சம் ஒர் இருப்பு (உள்ளமை). அதற்கு உருவமில்லை. அதாவது ஒரே இருப்பாக உணரும்பொழுது உருவமில்லை. அதில் உண்டாகி இருக்கும் மற்றவைகள் பிரிவாக பல இருப்புகளாக (உண்டுமைகளாக) அவைகள் உணரும்பொழுது உருவங்கள் அவைகளுக்குள் அவைகளுக்கு பிரிவு உணர்வால் வேறுபாடுகளாக தெரிகின்றது.

ஒன்று அது பலப் பிரிவுகளாக அதனுள் சுயமாக உண்டான உணர்வால் பிரிந்து அவைகள் பார்க்கும் பொழுது உருவங்கள் அவைகளுக்கு தெரியும். ஒன்றாக உணர்ந்தால் உருவம் இல்லை.

ஒன்றது உருவம்
தானது இன்றி
தலைவன ரூவில்
சமைந்தது உருவம் !

தலைவன் அருவில் சமைந்த உருவம் எவ்வாறு ?
நபிதாஸ்

Tuesday, November 19, 2013

அகம் நாநூறு ! புறம் பலநூறு !!

கீழ் புறம், மேல்புறம், வடபுறம், தென்புறம். பல பக்கம் வியாபித்து இருப்பது அந்தப்புறம் ! அரசர் காலத்து அந்தப்புறம் அல்ல இந்தப்புறம். இந்தப்புறம் அனைவர்களாலும் ரசித்து ருசிக்க இன்பமுடன் பேசப்படும் புறம்.
     
புறம் பேசுதல் பற்றி நபிகள் [ஸல்] அவர்கள் கூருவது என்னவெனில் சொந்த சகோதரனுடைய செத்த மாமிசத்தை யாரும் உண்ண விரும்புவீர்களா அப்படி உண்ண விரும்புபவர்கள் தாம் புறம் பேசித்திரிவார்கள் என்பதாக சூலுரைக்கிறார்கள் புறத்தைப்பற்றி விளக்கமும் தருகிறார்கள் ஒருவர் வெண்மை நிறத்தில் அணிந்திருக்கும் சட்டையில் ஒரு கரும்புள்ளி இருந்து அதை பார்த்த நபர் வேறொருவரிடம் கரும் புள்ளியை குறையாக சுட்டிக்காட்டினால் அதுதான் புறம் என்கிறார்கள் [ ஒருகணம் கண்முடி சிந்திக்க வேண்டுகிறேன் ]

எனது நண்பர் அவர் ஒவ்வொரு வருடப்பிறப்பிற்கும் அவரிடம் உள்ள கெட்ட செயல்களை சபதம் ஏற்று அதை கலைபவராக இருந்து கொண்டு இருக்கிறார். முதலில் சிகரட் பழக்கத்தை விட்டார், பின் மது அடுத்து சினிமாதியேட்டர் செல்லும் பழக்கத்தை விட்டார். எனது மற்றொரு நண்பர் கேட்டார் சினிமா பார்ப்பது குற்றமா என்றார் அதற்க்கு அவரின் பதில் என்னை மிகவும் பாதித்தது 2 1/2 மணிநேரம் வெட்டிப்பொழுது கழிவது, கவர்ச்சி காட்டும் பெண்களை பார்ப்பது பெய்யான கருத்தை மனிதர் மனதினுள் திணிப்பதில் சினிமா சிறந்த சாதனமாக  உள்ளது என்று சொன்னார் உண்மைதான்

இஸ்லாமியனான என் மனதில் உதித்தது அலாஹ்வை சுமார் 2 1/2 மணி நேரம் முழுவதுமாக மறந்திருக்க கூடிய இடமாக சினிமா தியேட்டர்கள் உள்ளதல்லவா ?
   
சினிமா தியேட்டர் செல்வதையும் விட்டு விட்டார் மறுவருடம் என்னிடம் சொன்னார் இந்த வருட பிறப்பிற்கு என் வீட்டில் உள்ள TV ஐ அப்புறப்படுத்தப்போகிறேன் என்றார் நானே காரணம் கேட்டேன் அவர் சொன்னார் பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து விட்டார்கள் அவர்களோடு ஒன்றாய் அமர்ந்து விளம்பரம் கூட பார்க்க முடியவில்லை அவ்வளவு கலாச்சார சீர்கேடு என்றார் அத்தோடு தந்தைமேல் பிள்ளைகளுக்கு பயம் கலந்த மரியாதை இருக்கவேண்டும் தாயும் தந்தையும் மாறிமாறி பாசத்தையும் நட்பையும் காட்டி பிள்ளைகளை சீரழித்து விடக்கூடாது ஒன்றாய் அமர்ந்து கண்ட கண்றாவிகளை டிவியில் பார்த்தால் தந்தைமேல் உள்ள பயம் போய்விடும் ஆகையால் தான் இனி டிவி வேண்டாம் என்றார்!. இதுவரை சுய தவறுகளை விடுவதற்கு யாரிடமும் அனுமதி தேவை இல்லை வீட்டில் உள்ள டிவியை அப்புறப்படுத்த வீட்டார் சம்மதம் வேண்டுமல்லவா!? என்று நான் என்னிக்கொண்டேன்  ஆனால் அவர் சொன்னபடி செய்துவிட்டார்.

சபதம் மன்னருக்கு இப்பொழுது எடுக்கும் சபதம் சவாலாக இருக்கப்போகிறது காரணம் இந்த வருடத்தில் இருந்து புறம் பேசவோ,புறம் கேட்கவோ போவதில்லை என்றார் அவர் சொன்ன அடுத்த வினாடியே நிச்சயம் உங்களால் இதை நிறைவேற்ற முடியாது என்று அவரிடமே சொன்னேன் அவர் பார்ப்போமா என்று சபதம் செய்தார் நானும் சவால் விட்டேன் அவர் சபதம் மேற்கொள்ளும் நாளும் வந்தது நான் மூன்று நாட்களாக அவரை பார்க்கவில்லை நான்காம் நாள் என் நண்பனிடம் இருந்து போன் வந்தது அவன் கேட்டான் உனக்கும் சபதம் மன்னனுக்கும் என்ன பிரச்சனை என்றான் நடந்ததை சொன்னேன் அதற்க்கு அவன் சொன்னான் அவர் உன்மீது ரொம்ப வருத்தப்பட்டார் அவர் மனதை நோகடித்து விட்டாயாம் சவால்வேறு விட்டாயாமே என்றான் நான் சற்று அமைதியாக சொன்னேன் அவரின் சவால் என் விஷயத்தை உன்னிடம் சொன்னதிலேயே அவரின் சவால் தோற்றுப்போனது என்றேன் அதை அவனும் ஆமோதித்தான்.

நண்பர்களே நீங்கள் புறம் பேசுபவரா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொவீர்கள் உங்களையே சுயபரிசோதனை செய்ய இப்பொழுது ஒரு விஞ்ஞான சாதனம் வந்து விட்டது அதைக்கொண்டே சோதித்துப்பார்க்கலாம். நீங்கள் செல் பேசும் அத்துணை Call களையும் பதிவு செய்யுங்கள் மறுநாள் பொறுமையாக பதிவு செய்த அத்துணை கால்களையும்   போட்டு கேளுங்கள் நீங்கள் மற்றவர் பற்றி என்னவெல்லாம் பேசினீர்கள் அல்லது கேட்டீர்கள் என்பது தெரியும்.
   
இன்று செல் போன்கள்  அதிகம் விற்பனை ஆவதற்கு முக்கிய காரணங்களில் புறம் பேசுதலும் அடங்கும்! நபி [ஸல்] அவர்கள் கூறுகிறார்கள் சைத்தான் இரு கைகளிலும் தேன் கிண்ணத்தை வைத்து புறம் பேசுபவர்களது நாவிலும் புறம் கேட்பவர்களது காதிலும் தேனை தடவி விடுகிறானாம் [ தேனை சும்மா தடவினால் கசக்கவா செய்யும் ] அந்த காரணம்தான் நாம் அதிகமாக புறம் பேசுதல் கேட்டலில் இன்பம் கொள்கிறோம் சைத்தானின் முழு கட்டுப்பாட்டிலும் மனிதர்கள் சிக்குண்டு போய் இருக்கிறார்கள்.

சிகரெட் புகைத்தலுக்கு  எதிர்ப்பும் உண்டு ஆதரவும் உண்டு. பொய் பேசக்கூடாது என்பதற்கு ஆதரவும் உண்டு எதிர்ப்பும் உண்டு. வியாபாரத்தில் பொய் இல்லாமல் முடியாது என்பார்கள் 1000 பொய்யை சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்யலாம் என்பார்கள் ஆனால் புறம் பேசுவது பற்றி கேட்டால் அத்துனைபேர்களும் கோரசாக தப்பு தப்பு என்பார்கள் இந்த மனிதர்களை நான் சிகரெட் பாக்கெட்டோடு ஒப்பிடுவேன்.
     
சிகரெட் பாக்கட்டின் மேலே புகைப்பது உடல் நலத்திற்கு கேடு என்று பொறிக்கப்பட்டு இருக்கும் ஆனால் உள்ளே உடல் நலத்திற்கு கேடான 10 சிகரெட்டுகள் இருக்கும் உள் ஒன்று புறம் ஒன்று என்பது இதுதான். இன்றைய மானுடரும் அப்படியே புறம் ! ஆ ஆ ஆ அது பாவம் என்பார்கள் அவர்கள் புறம் பேசாத நாட்களே இருக்காது அப்படி பட்டவர்கள் தான் சிகரெட்  பாக்கெட் போன்றவர்கள் ஆவார்கள்
     
அலுவலகத்திற்கு லேட்டாக வந்த ஊழியரை மேனேஜர் கேட்பார் தாமதத்தின் காரணம் ? அவர்சொல்வார் பஸ் லேட்டாக வந்தது என்பார் பஸ் டிரைவரை கேட்டால் ட்ராபிக் என்பார் எல்லோருமே மற்றவர்கள்மேல் பழியை போடுவதிலேயே இருப்பார் தம் குறையை சொல்ல மறுப்பார் இதுதான் மானுடர் நிலை
       
ஒருவர் புறம் பேசுவதில்லை, புறம் கேட்பது இல்லை என்று முடிவெடுத்தால் அவருக்கு நண்பர் வட்டாரம் சுருங்கிவிடும் ஆம் நீண்ட நேரம் பேசுவதற்கு வேறு என்ன இருக்கிறது யாரவது அவரிடம் வந்து மற்றவர் பற்றி குறை கூறினால் அது போன்ற விஷயங்களை என்னிடம் பேசாதே என்று முகத்தில் அடித்தார்ப்போல் சொல்லவேண்டும்  அப்படி சொல்லும் பட்சத்தில் சிடுமூஞ்சி என்ற பெயர்தான் கிடைக்கும் கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு போகும் ஊரில் கோர்ட் சூட்டோடு செல்லுதல் எப்படியோ அதுபோல் மற்றவர்கள் பற்றி பேசுவதோ கேட்பதோ இல்லை என்று முடிவு எடுத்தவர் நிலையும் அப்படியே
       
இறைவனிடம் கையேந்தி இந்தப்புறத்தில் இருந்து விடுதலை பெற நீயே அருள் புரிய வேண்டும் என்று பிராத்திப்போமாக  !

மு.செ.மு.சபீர் அஹமது

Sunday, November 17, 2013

[ 11 ] பயண அனுபவங்கள் – சீனா


தொழுகைக்கான நேரம் வருவதை அறிந்து கொண்ட நான் எனது நண்பரையும் கூட அழைத்துக்கொண்டு நேராக ப்ரேயர் ஹாலை நோக்கி நடந்தேன். இஸ்லாமியர்களுக்கென தனியாக அவர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாகிய தொழுகையை நிலை நிறுத்திக்கொள்வதற்காக கூடம்மொன்று அங்கே அமைக்கப்பட்டிருந்தன. வணிகச்சந்தையில் கலந்து கொண்டுள்ள பெரும்பாலான இஸ்லாமிய வாடிக்கையாளர்கள் இங்கு நடைபெறுகிற தொழுகையில் தவறாது கலந்துகொண்டு தங்களின் கடமையை சிறப்புடன் நிறைவேற்றிக்கொள்வது எனக்கு மகிழ்ச்சியை தந்தன.

அங்கே எனது கடமையும் நிறைவேற்றிக்கொண்டு அங்கிருந்து பகல் உணவருந்துவதற்காக எனது நண்பரையும் கூட அழைத்துக்கொண்டு நேராக உணவகம் நோக்கி நகர்ந்தோம்.

வணிகச்சந்தையில் துரித உணவகம் மற்றும் சுயமாக தேர்ந்தெடுத்து சாப்பிடும் பல வகை உணவுகள் [ Buffet ] அடங்கிய இஸ்லாமிய உணவு விடுதி ஆகியன இருந்தாலும் அதிகமானோர் துரித உணவகத்திற்கே விரும்பி செல்கின்றனர்.

பலவகை உணவுகள் [ Buffet ] அடங்கிய உணவு விடுதியைப் பொறுத்தவரை வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் உணவுகளைப் பிரித்து இருவேறு விலைகளை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் இங்கும் கூட்டம் எப்போதும் அலைமோதும்.

நாங்கள் மெக்டொனால்ட் [ Mcdonalds ] என்ற துரித உணவகத்தை தேர்ந்தெடுத்து அங்கே சென்றோம். அங்கே தனித்தனியாக பிரிக்கப்பட்டு பல்வேறு கவுண்டர்களைக் கொண்ட ஒவ்வொரு வரிசையிலும் நின்றுகொண்டிருந்த கூட்டங்கள் எங்களை வியக்க வைத்தன காரணம் வெவ்வேறு நாடுகளிலிருந்து வருகை புரிந்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் இத்துரித உணவை வாங்குவதற்காக போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நின்றதே !

நாங்களும் அங்குள்ள வரிசையொன்றில் நின்றவாறே கடந்துசென்று கவுண்டரை அடைந்தோம். எதிரே உள்ள விற்பனை பெண்மணியால் தரப்பட்ட உணவின் படத்துடன் கூடிய விலைப்பட்டியல் அடங்கிய அட்டையில் எங்களின் விருப்ப உணவை அவர்களிடம் சுட்டிக்காட்டினோம். குறிப்பாக சிக்கன், பீஃப் போன்ற உணவுகள் ஹலால் செய்யப்படவில்லை என்பதால் எங்களின் சாய்ஸ் கடல் சார்ந்த உணவாகவே இருந்தன. அங்கே அமர்ந்து சாப்பிடுவதற்குரிய அனைத்து வசதிகளும் அந்நிறுவனத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் பேசுவதற்கு இலகுவாக ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு அங்கே அமர்ந்தோம்.

சீன தேசத்தில் மொத்த சனத் தொகையில் 41 சதவீதத்தினர் துரித உணவையே விரும்புகின்றனர் என்பது ஆய்வு அறிக்கைகள் குறிப்பாக Mcdonalds , KFC, Pizzahut, போன்ற அன்னிய துரித உணவு வகைகளை சீன மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர்.  மேலும் நகரில் ஆங்காங்கே காணப்படும் துரித உணவங்களில் வேலைக்குச் செல்லும் இருபாலர்களும் தினமும் உண்டு மகிழத் தவறியதில்லை. இது போன்ற உணவுகளில் அதிகளவில் கலோரிகள் காணப்படுவதால் உடலில் கொழுப்புச்சத்து கூடுவதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடியது என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

வணிகச்சந்தை நடைபெறும் பெரும்பாலான நாட்களில் சுயமாக சமைத்து சாப்பிடுவதற்கோ அல்லது சுவையுடன் கூடிய இந்திய - அரபிய உணவங்களை நாடிச்செல்வதற்கோ போதிய நேரம் இல்லை என்ற போதிலும் அதிகமான நேரங்களில் நான் எடுத்துக்கொள்ளும் உணவாக இவற்றையே பயன்படுத்தி வந்தேன். இதனாலேயே ஒவ்வொரு முறையும் சீனா சென்று திரும்பியவுடன் முதலில் எனது உடலின் இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவை குறிப்பாக LDL மற்றும் Triglyceride  போன்றவற்றின் நிலைகளை அறிந்துகொள்ள பரிசோதனை நிலையத்திற்கு செல்லத் தவறியதில்லை.
செயற்கை நிறமிகளையும், சுவையூட்டிகளையும் கொண்டுள்ள இதுபோன்ற உணவுகளை ருசிக்காகவும், நறுமணத்திற்காகவும் சாப்பிடுவதிலிருந்து சற்று நாம் விலகி இருந்தால் கண்டிப்பாக இரத்தப் பரிசோதனை செய்து கொள்வதிலிருந்து சற்று விலகி இருக்கலாம். உடல் ஆரோக்கியத்தையும் பேணிப் பாதுகாக்கலாம்.

உணவருந்திக்கொண்டு இருக்கும்போது எனது அழைப்பேசி ஒலித்தது... எடுத்தேன்... மறுமுனையில்..!?

‘பயண அனுபவங்கள்’ தொடரும்...
சேக்கனா M. நிஜாம்
இது ஒரு மீள்பதிவு

Saturday, November 16, 2013

[ 20 ] 'வளைகுடா வாழ்க்கை' [ ஆசைப்பட்டு தொட்டு விடுவேன் ! காசகண்டு விட்டு விடுவேன் ! ]

ஆசைப்பட்டு தொட்டு விடுவேன் ! காசகண்டு விட்டு விடுவேன் !
நம்மவர்களில் பலர் வளைகுடா வாழ்க்கை பற்றி சரியான தகவலை பெறவில்லை என்றே சொல்வேன். அரபு நாட்டில் பொருளீட்டி வருபவர்கள் நல்ல வசதியான வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள். நல்ல வருமானம் அவர்களுக்கென்ன !? என்று அங்கலாய்பவர்களுக்கு இந்த பதிவை முன் வைக்கிறேன்...

எல்லா நாடுகளிலும் உயர்நிலை ஊழியர், நடுநிலை ஊழியர், கடை நிலை ஊழியர் என்று மூன்று நிலை உண்டு. அதன் அடிப்படையில் வருமானங்களும் வசதிகளும் நிறை குறை உண்டு ஒவ்வொருவரின் நிலை என்ன ? என்பதை விளக்குகிறேன்...

முதலில் கடை நிலை ஊழியரின் நிலை :
குறைந்த சம்பளம் ஆனால் அரபு நாடுகளில் வீட்டு வாடகை அதிகம் தனி நபரால் ஒரு வீட்டை வாடகை எடுத்து வசிக்க இயலாது. குறைந்த சம்பளக்காரர்கள் ஐந்து அல்லது ஆறு நபர்கள் ஒன்று சேர்ந்து
ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பர். ஒன்றாக சேர்ந்து சமைத்து சாப்பிடுவது வீட்டில் தங்கி கொள்வது. இதில் வாங்கும் சம்பளத்தில் பாதி அளவு செலவாகி விடும் மீதமுள்ள பணத்தை அப்படியே ஊருக்கு அனுப்பி விடுவர். அவ்வப்போது கடைவீதிகளுக்கு செல்லும் சூழல். அரபு நாடுகளில் புது வகையான கனி வர்க்கங்கள் விற்கும் ஐந்தாறு பலன்கள் கொண்ட ஒரு பெட்டியின் விலை ஊர் காசுக்கு மூன்றாயிரம் ரூபாய் அளவிற்கு இருக்கும்.

ஆ ! இவ்வளவு விலையா ? வேண்டாம் என்று நகர்ந்து விடுவர். ஊரில் விற்கும் மாங்கனிகள் கூட அரபு நாடுகளில் அதிக விலை ஆசை பட்டு தொட்டு விடுவர்
காசை ( விலையை ) கண்டு விட்டு விடுவர்.

மற்றொரு தீராத கஷ்ட்டங்கள்  கடை நிலை ஊழியர்க்கு உண்டு. வேலை விட்டு வந்து அயர்ந்து தூங்க எத்தனிக்கும் போது மூட்டை பூச்சி தொல்லையால் மிகவும் கஷ்ட்டப்படுவார்கள். வார விடுமுறையில் மூட்டை பூச்சி ஒழிப்பு நடவடிக்கை தொடரும்... அது மட்டுமின்றி தனது துணி மணிகளை துவைத்து சுத்தம் செய்வர். வாரங்கள் முழுவதும் ஓய்வில்லை. ஆனால் இந்நிலை அறியா இந்தியாவில் வசிக்கும் உறவுகள் வளைகுடாவில் இருந்து வரும் பணத்தை தண்ணீரை போல செலவு செய்வார்கள்.

விளக்கத்திற்காக சிறிய காட்சி உங்கள் முன் கொண்டு வருகிறேன்...
கடை வீதி, மீன் விற்கும் நபரிடம் வளைகுடா வருமானம் உள்ள முதியவர் பேரம் பேசும் காட்சி :

மீன் எவ்வளவப்பா ?

நானூற்றி ஐம்பது

ஒரு ஆள் எடுத்து வைக்க சொல்லி விட்டார் !?

அதற்கு அந்த முதியவர், அட போப்பா... அவர் எப்போ வருவது

இந்தா ஐநூறு ரூபாய் எடுத்து போடு என்பார்.

பிள்ளை ஆசைப்பட்டு தொட்டு காச கொண்டு விட்டு விடுவது அங்கே ! ஐம்பது ரூபாய் கூடுதலாய் கொடுத்து மீன் வாங்குவது இங்கே.

வெளி நாட்டில் கஷ்ட்டப்படுவது யாருக்கும் தெரிவதில்லை. இந்தியாவில் நுழையும் போது ஏர்போட்டில் சுமை தூக்கும் தொழிலாளி முதல் சொந்த உறவுகள் வரை அரபு நாட்டில் பணம் கொட்டி கிடப்பது போலவும் அதனை அள்ளி கொண்டு வருவது போலவும் நினைப்பது தான் வேதனை !

[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, November 15, 2013

கவியன்பன் கலாமின் கவிதைக்கு குரல் கொடுத்த பிரபல பதிவர் ஜாஃபர் [ காணொளி ]

தஞ்சை மாவட்டம் அதிரை என்ற ஊரின் பிரபல கவிஞர் அபுல் கலாம். இவர் யாப்பு வடிப்பதில் மூத்த கவிகளில் ஒருவராக இந்த ஊரில் திகழ்ந்து வருபவர். இவருக்கு இணையத்தோடு தொடர்புடைய நட்பு வட்டம் ஏராளம். குறிப்பாக இவர் எழுதும் கவிதையை ரசிக்கும் பெண் வாசகர்கள் அதிகம். வயது வித்தியாசமின்றி அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர். தான் பெற்ற கவி புலமையை பிறருக்கு எத்திவைக்க வேண்டும் என்ற உயரிய பண்புடையவர். எந்தவொரு தலைப்பை கொடுத்தாலும் உடனுக்குடன் கவிதை எழுதுவதில் வல்லவர். 'கவியன்பன்' என்றும் 'கவிக்குறள்' என்றும் இணையத்தோடு தொடர்புடைய அவர்களின் நண்பர்களால் அன்புடன் பாராட்டப்படுபவர்.

இலண்டன் வானொலி இவரின் கவிதையை வாரமொருவரை தொடர்ந்து வாசித்து வருகின்றன. சமீபத்தில் இவருக்கு இலங்கையிலிருந்து செயல்படும் சர்வேதச அளவினான தடாகம் இலக்கிய வட்டத்திலிருந்து 'கவித்தீபம்' என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தது.

சமீபத்தில் இவர் எழுதிய கவிதை 'பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!' இந்தக் கவிதையை  தஞ்சை மாவட்டம் அதிரை என்ற ஊரைச்சேர்ந்த பிரபல பதிவர் ஜாஃபர் அவர்கள் தனது இனிய குரலில் பதிவு செய்து காணொளியாக வடிவமைத்துள்ளார்.

காணொளியை கண்டு மகிழ்வதற்கு முன்பு நண்பர் ஜாஃபர் அவர்களைப்பற்றிய சிறு குறிப்பொன்றை நாம் பார்ப்போம்...
தஞ்சை மாவட்டம் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்றுள்ள இவர் சவூதி அரேபியாவின் மருத்துவமனை ஒன்றில் மருத்துவக் காப்பீட்டு ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகின்றார்.

சமூக ஆர்வலரான இவர் அய்டா என்ற சமுக அமைப்பின் ஆலோசணைக் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார். பதிவர், ஊடக ஆர்வலர், உள்ளூர் வலைத்தளம் அதிரை எக்ஸ்பிரஸ்ஸின் நிர்வாகி மற்றும் இன்னும் சில தளங்களின் பங்களிப்பாளர் போன்ற பணிகளில் ஈடுபட்டு சேவை செய்து வருகின்றார்.

சமூக விழிப்புணர்வு ஆக்கங்கள் பலவற்றை உள்ளூர் தமிழில் அழகாக எழுதியுள்ளார். இயற்கையாகவே நகைச்சுவை உணர்வுடன் பேசும் இவருக்கு ஏராளமான நட்பு வட்டாரம் உள்ளன. இளம் பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தொடர்ந்து அவர்களின் ஆக்கங்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார்.

இனிய குரலில் ஜாஃபர் பாடிய காணொளி :


'கவியன்பன்' கலாம் இயற்றிய எழுத்து வடிவில் உள்ள கவிதை :

பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!
பாவையை விட்டு வந்து
….பாலையின் சூட்டில் நொந்து
தேவையைக் கருத்திற் கொண்டு
…தேடினோம் செல்வம் இன்று
யாவையும் மறக்கும் நெஞ்சம்
..யாழிசை மழலை கொஞ்சும்
பூவையும் மிஞ்சும் பிள்ளை
..பிரிவினைத் தாங்க வில்லை!
விடையினைக் கொடுத்த நேரம்
…விலகியே நிற்கும் தூரம்
தடைகளாய்ப் போன தூக்கம்
..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம்
மடையென திறக்கும் கண்ணீர்
..மனத்தினில் கொதிக்கும் செந்நீர்
உடைந்திடும் இளமைக் கட்டும்
..உடையினில் வேடம் மட்டும்!
வாயினைக் கட்டிப் பூட்டி
…வயிற்றினைப் பசியால் வாட்டி
காயமும் தாங்கிக் கொண்டு
…கயிற்றினில் தொங்கிக் கொண்டு
தாயகத் தேவை ஆசை
..தீர்ப்பது எங்கள் காசே
மாயமாம் இந்த மோகம்
…மடியுமோ இந்த வேகம்?
வாடிய பயிராய் வாழ்க்கை..
…வளமுள காசின் சேர்க்கை
தேடிய செல்வம் தீரும்
..தேவையோ நாளும் ஊறும்
 ஓடியே களைத்து மீண்டும்
…ஓடவே நம்மைத் தூண்டும்
ஓடிடும் விலையின் ஏற்றம்
..ஓட்டுமே ஊரை விட்டும்
ஒட்டகம் போல நாங்கள்
  ஓய்விலாச்  சுமைகள் தாங்க
ஒட்டகம் மேயும் நாட்டில்
..உழைப்பதைச் சொன்னேன் பாட்டில்
பெட்டகம் நிறைய வில்லை
…பெரிதினும் பெரிதாய் இங்கே
கட்டிடம் கட்டும் வேலை
….கரணமும் விட்டால் மேலே!

'கவியன்பன்' கலாம்

Thursday, November 14, 2013

[ 9 ] அறிவுத்தேன் [ ஒன்றின் அரூபச் செயல் ! ]

ஒன்றே இருந்து
பார்த்தல் கேட்டல்
தன்னில் நிகழ்தல் -இது
அரூப மன்றோ !

ஒன்றின் பார்த்தல், கேட்டல் போன்ற செயல்கள் அரூபமா ? எவ்வாறு ?

ஒன்றாக உணரும் போது, அறியும் போது வேறில்லை என்ற தெளிவில் அரூபம் இருக்கும். ஒன்றே உருவாகி இருப்பதால் அதை தவிர்த்த வேறு இல்லாததால் எதைப் பார்க்க ? பார்வையே இல்லை ! உருவமும் இல்லை ! ஒன்றின் உருவம் என்பது அரூபமே என்று பார்த்தோம்.

'என்ன ! தத்ரூபமாக இறந்து போன எங்கம்மாவை கனவு கண்டேன். அது கனவாகவேத் தெரியவில்லை. முற்றிலும் நிஜ நிகழ்வினதுபோல் இருந்ததே ! ஏன்தான் விழித்தேனோ !' கனவை விட்டுப் பிரிய மனமில்லாமல் புலம்பல்.

'.என்னமோ கனவு கண்டேன், ஞாபகம் இல்லை.' மறதி. முந்தைய கனவானது நினைக்கும் அளவிற்கு ஞாபகப் பதிவாகி இருப்பது பிந்தைய கனவானது ஞாபகப் பதிவு மிகமிக குறைந்தது.

என் தாயார் என்னுடைய வாழ்வில் என்னை எவ்வாறெல்லாம் பாதுகாத்து வளர்த்தார்கள். தனக்கு என்று எதுவும் பார்க்காமல் எனக்கு என்றே பார்த்துப் பார்த்து கவனமாக வளர்த்தார்கள். சிறு வயதில் என் சுட்டித் தனத்தால் நான் செய்த தவறுகளுக்கு என்னை அடித்துவிட்டு அவர்கள் மனம் வேதனைப்பட்டு 'ஏன்தான் அடித்தோமோ' என்று என்னைக்காட்டிலும் கண்ணீர் மல்க அழுவார்கள். இது மனதில் பதிவான நீண்ட நாள் மறவாதச் செயல்.

நினைக்கும் போது கண்கள் குளமாகி வேதனையைத் தரும். அச்செயலால் மனதில் ஒருவித சுகமான வேதனை நினைக்கும் போதெல்லாம் தந்துகொண்டே இருக்கும். வேதனைத் தருகிறது என்று நினைக்காமல் மனம் இருக்காது. விட்டு விட்டு, திரும்ப திரும்ப நினைக்க ஆசைப்படும். திரும்ப திரும்ப நினைப்பதாலும் அது ஆழ் பதிவானச் செயல்.

விழுந்து விழுந்து படிக்கின்றேன் ஒரு வார்த்தைக்கூட ஞாபகம் இல்லை. பரிட்ச்சையில் மாணவனின் நிலை. இது பதிவில்லச் செயல். காரணம் பலவாகவும் இருக்கலாம். இருப்பினும் புரிந்து படித்தால் உணர்வு உண்டாகும். அதன்மூலம் மனதில் பதிவு உண்டாகும்.

ஒருவர் ஒருவரைப் பார்த்து 'பார்த்த ஞாபகம் வருகிறது. ஆனாலும் புரியவில்லை.', என்று சொல்லப் பார்த்திருக்கின்றோம். இது பதிவுகள் கரைந்த நிலை.

இவர் தூக்கத்தில் நடப்பார். காலையில் கேட்டால் 'அப்படியா !' என்பார். இது பதிவில்லா பழக்கமான தொடர் செயல்.

சொல்லச் சொல்ல 'அப்படியா ! அப்படியா !' என்று கவனத்தை வேறு எங்கோ வைத்துக்கொண்டு கேட்ப்பார். 'என்ன சொன்னேன்', என்று கேட்டால் மறுபடியும் சொல் என்பார். இதுவும் முற்றிலும் கவனமில்லாச் செயல். இதனால் விளைவுகள் இல்லை.

நேரிலே நிற்பவரைத் தெரியாது எதோ உள் கவனத்தில் பிரம்மை பிடித்தவர் போல் இருப்பார். கண்கள் காணும். ஆனால் அவருக்குத்தெரியாது. பதிவில்லாச் செயல். அதனாலும் விளைவும் ஒன்றும் இல்லை..

அடுத்தவர் தோட்டத்தில் மேய்ந்ததால் அடிப்பட்டு கால் உடைந்தாலும், நொண்டி நொண்டி ஆடு அடுத்த நாளும் அங்கு மேயப் போகும். ஆடு அதற்கு நம்மைப் போல் மனப் பதிவுகள் இல்லை. அதனால் விளைவுகளை அது அறியாது. நம்மைப் போல் தான் என்ற தனித்த உணர்வும் அதற்கு இல்லை.

ஆறறிவு மாந்தரைத் தவிர்த்த மற்றவைகளுக்கு தான், நான் என்ற பிரிந்த உணர்வில்லை. தேவைக்கு எங்கு உணவு இருந்தாலும் சென்று சாப்பிடும். தான், நான் என்ற தனித்த உணர்வு அவைகளிடம் இல்லாததால் அவைகள் செய்யும் செயல்கள் அதன் மனதில் பொதுவாக தனது என்று பதிவாகாது. அது அறியாப் பதிவில்லாச் செயல் 

உண்டுமையில் ( Entity ) உள்ளமை ( Existence ) கொள்பவன் மனிதன். மற்றவைகள் உள்ளமை கொள்ளாது. தான், நான் என்று உள்ளமை கொள்ளும் மனிதனில் தனது, எனது என்பதுடன் அணைத்து செயல்களும் பதிவாகும். உண்டுமையில் உள்ளமை கொள்ளாத மற்றவைகள் அதனிடம் உண்டுமையின் சுபாவ அறிவைத் தவிர்த பொதுவாக வேறு அறிவுகள் இருக்காது. பழக்கப்படுத்தி பதிய வைத்தால் ஒலி நாட அல்லது ஒலிப் பதிவு வில்லைப் போல் பதிவு செயல்படும். பொதுவாக விபரமாக உணர்ந்து செயல்படாது. உணர்வில்லையேல் பதிவில்லை. அதனால் அதன் செயல்களின் பதிவும் இருக்காது. இது அறியா பதிவில்லாதச் செயல்.

பற்றற்று வாழ் என்பார். தாமரை இலை தண்ணீர் போல் சிலர் பற்றற்று வாழ்வார்கள். ஆனாலும் ஒன்றை மட்டும் விடாமல் பற்றி வாழ்வார்கள். அவர்கள் நீக்கமற நிறைந்திருப்போனை மட்டும் பற்றி வாழ்வார்கள். அவர்களைத்தான் எங்கும் நிறைந்தோனும் விரும்புவான். அவர்களே பிறவியின் நோக்கத்தை பூரணப்படுத்தியவர்கள். அவர்களே மனிதருள் மாணிக்கம். அவர்களின் தேவைகளை நீக்கமற நிறைந்தோன் நிறைவேற்றி தருவான், தந்துகொண்டே இருப்பான். இவைகள் பரிபாஷைகள். ஆனால் ஒன்றின் பதிவில்லச் செயல்கள். தன் தேவை ஒன்று நடந்து விட்டால் அது தன்னைக்கொண்டு நடந்ததென்ற நினைப்பே அற்றவர்கள். இது அறிந்த பதிவில்லாச் செயல். இவர்களின் தேவை என்பதே அனைத்துக்கும் நன்மை பயக்குபவையாக இருக்கும். இவர்களின் எண்ணங்கள் செயல் வண்ணங்களாகும்.

பிறந்த குழந்தை அப்பொழுது ஐயறிவு வேலை செய்யத் தொடங்கும். பார்கும், சப்தங்களை கேட்கும். ஆனால் ஏன், எதற்கு என்று அதற்கு தெரியாது; விளங்காது, விளங்கவும் முயலாது. இது அரூபச் செயல். உண்டுமையின் செயல். தான், நான், எனது என்ற தனித்த உணரவில்லை. அதன் மனதில் எதுவும் இருக்காது. எதுவும் இல்லை என்றால் மனதில்(உண்டுமையில்) அரூபம் தான் இருக்கும். அதன் செயல் பதிவற்ற அறியாச் செயல். இது அறியாப் பதிவில்லாச் செயல்.

பதிவு ஏற்பட்டல்தான் நன்மை, தீமை. அதனால் அதன் பலாபலன் அதற்கு இல்லை. அதன் எல்லாச் செயலும் பதிவில்லாச் செயல். தூய செயல். பல செயல்கள் இருந்தும் அவைகள் யாவும் உண்டுமையின் ஒரே செயல் பதிவின்மையால் அவைகள் அரூப நிலையில் இருக்கின்றது.

குழந்தை வளர்ந்து வரும்போது, இதன் ஐயறிவுடன் ஆறாவது அறிவு செயல்பட தொடங்கும். ஒரு குறிப்பிட்டவைகளை திரும்பத் திரும்ப பார்க்க அல்லது கேட்க கவனம் உண்டாகும். இக்கவனத்தில் புத்தி ஏற்பட்டு பிறரை பார்க்க தான், நான், எனது போன்ற பிரிவு அறிவு, உணர்வு உண்டாகும். தன்மீது அதிக அக்கறைக் கொள்வோர் மீது விருப்ப உணர்வு தோன்றும். அவர்களை விரும்பும். நாட்கள் செல்லச் செல்ல, பின் வருடங்களும் செல்லச் செல்ல தான், நான் என்ற உணர்வுப் பதிவு வலிமையாகிக் கொண்டே போகும்.

நன்கு வளர்ந்த பின் அறிவு, புத்திக் கூர்மை உண்டாகி பூரணப் பக்குவாமான வயதில் நுண்மைகள் புரிந்து தெளிவாகி தன் நிலைகளை பின்னோக்கி ப்பார்த்து, தான் எங்கிருந்து வந்தோம் என்ற தன் உண்மை சுயம் அறிந்து; புரிந்து; தெளிந்து தான், நான் என்ற தனித்த; பிரிந்த உணர்வு கரைந்து; இழந்து; தெளிந்து உண்டுமையின் அறிந்த பதிவில்லாச் செயல் அங்கு உண்டாகும். வேண்டின் அது வல்லமையுடைதாகவும் இருக்கும்.

அவ்வாறு அந்நிலையில் ஒன்றின் பார்த்தல், கேட்டல் போன்ற செயல்கள் நிகழ்ந்தால் அவைகள் அரூபச் செயல். அதனை அரூபமாக நிகழ்தல் என்று அறியலாம்.

பலவா பழுத்து
மாவது முளைத்து
வேறா உணர்கிறது
உருவ மாகிறது !

வேறா உணர்கிறது என்றால் ?
நபிதாஸ்

Tuesday, November 12, 2013

புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொழியாக்கம் அவசியமா !?

ன்பு வாசகர்களே !
இவ்வுலகில் எத்தனையோ நாட்டுக்காரர்கள் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி சந்தைப்படுத்துகின்றனர் அந்த பொருள்கள் அவர்கள் மொழியிலேயே அறிமுகப்படுத்தப்படுகின்றது. அவைகளை நாம் உபயோகிக்கும் பொழுது நம் தாய் மொழியான தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்யப்படுகிறது அப்படி மொழியாக்கம் செய்கையில் சில வார்த்தைகள் நமக்கு புரியாமல் போகின்றது ஆதலால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மொழியின் உச்சரிப்பிலேயே நாமும் உச்சரிக்கலாமே ஏன் சிரமப்பட்டு வேறு நாட்டவர் கண்டுபிடித்ததற்கு நாம் பெயர் சூட்டி கொள்வது சரியா !? மாற்றான் பிள்ளைக்கு நாம் பெயர் சூட்டுவது என்ன நியாயம் ? என்று கேட்கின்றனர்

முதலில் ஒன்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ஜப்பானிலோ, ரஷ்யாவிலோ, சைனாவிலோ ஆங்கிலம் கிடையாது. ஆனால் அவர்கள் கண்டுபிடித்த பொருட்கள் சந்தைப்படுத்தும் பொழுது நமக்கு ஆங்கிலத்தில்தான் அறிமுகப்படுத்தப்படுகிறது. என்ன காரணம் ? ஆங்கிலம் உலக மக்களால் அதிகம் பேசப்படுவதே ஏன் ஆங்கிலம் உலகமொழியானது அவர்களின் ஆதிக்க குணம் உலகில் பெரும்பகுதி ஆண்டதினாலும் மற்றும் மொழிப்பற்று இந்த இரண்டும்தான் காரணம். ஆங்கிலேயர்களை விரட்டிய நாம் ஆங்கிலத்தை வைத்துக் கொண்டோம் ! மட்டுமல்லாது புதிய கண்டுபிடிப்புக்களுக்கு ஆங்கிலப் பெயரே போதும் என்கிறோம் 2000 வருட பாரம்பரிய தமிழ் மொழிக்கு புதிய கண்டுபிடிப்புகளுக்கு பெயரிடுவதை கிண்டல் செய்கிறோம் புதிய வரவுகளுக்கு தாய் மொழியில் பெயரில்லை என்றால் நரிக்குறவர்களின் கதிதான் நமக்கும் ஏற்படும் !

ஆம் ஒரு நறிக்குறவர் இறந்தால் அவர் மொழியும் இறக்கிறதாம் புரிந்திருக்குமே உங்களுக்கு நாம் உபயோகிக்கும் கை கடிகாரமும் மடிகணினியும் நாம் கண்டுபிடிக்காததுதான் அதற்கு நம் தாய் மொழியில் பெயர்கூட இல்லை என்றால் எப்படி காலம் செல்ல செல்ல கற்கால மொழியாக கருதப்பட்டுவிடும் நம் தமிழ் மொழி  ஒரு மனிதரின் பயோடேட்டாவை பூர்த்தி செய்ய அதில் கேட்கப்படும் கேள்வி

பெயர் :
வயது :
படிப்பு :
தந்தை / கணவர் பெயர் :
தாய் மொழி :

நன்றாக புரிந்துகொள்ளுங்கள் தாய் தன் தாய்பாலை மட்டுமல்ல தன் மொழியையும் ஊட்டுகிறாள், புகட்டுகிறாள் எந்த ஒரு வார்த்தையானாலும் பொருளானாலும் தாய் மொழியில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும் இல்லையேல் நாம் அம்மொழியை புறந்தள்ளுகிறோம் என்பது பொருளாகும்   உதாரணத்திற்கு அரேபிய உணவாகிய மந்தி எனும் உணவை நாம் மந்தி என்றே சொல்லிக்கொள்வதால் என்ன நடந்து விடப்போகிறது என்று நாம் நினைப்போமேயானால் ஒரு சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள்

முதல் நபர்: கலிகாலம் மனுஷாளுக்கு வெவஸ்தையே இல்லாமல் போய்யுடுத்து.

இரண்டாம் நபர் : என்னவோய் காலங்காத்தாலே புலம்புரீறு

மு-ந : பின்னே என்னவோய் பக்கத்தாலே ஒரு பிள்ளையாண்டான் செல் போனிலே என்ன பேசிக்கிறான் கேட்டியா ?

இ-ந : என்ன பேசுறான் ?

மு.ந : அபிஸ்டு ! அபிஸ்டு ! பிள்ளையாண்டான் சொல்றான் மாப்ளே இன்னைக்கி First டைமா மந்தி சாப்பிட்டேன்டா நல்ல டேஸ்ட் மீண்டும் மீண்டும் சாப்பிடன்னும்னு  ஆசையா இருக்குடா அப்டீன்னு பேசுறான்

இ.ந : அதுக்கென்ன இப்போ

மு.ந : அபிஸ்டு மந்தின்னா குரங்கு வோய் நமக்கு தெரியக்கூடாதுன்னு குரங்க ! மந்தின்னு சொல்றான் அந்த பிள்ளையாண்டான்  ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியா  குரங்கையும் சாப்பிடுறாங்களே பகவானே நீதான் இவாளை ஷேமிக்கணும்

இப்படி ஒரு சம்பவம் [ ஆமாம் கற்பனைதான் ] நடக்கணுமா ?

என் மகள் [ நான்காம் வகுப்பு  ] மாமாவிற்கு ஒரு ஒரு கடிதம் வரைக என்ற வினாவிற்கு கடிதம் வரைகிறாள்...

அன்புள்ள மாமா நலம் நலம் அறிய ஆவல் ! நீங்கள் என் பிறந்த நாளுக்காக அனுப்பிய கை கடிகாரம் மிகவும் அழகாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது நன்றி. தாங்கள் அண்ணனின் பிறந்த நாளைக்கு மடிக்கணினி பரிசாக அனுப்பி வையுங்கள் உங்களோடு தொடர்பு கொள்ளவும் உலக விஷயங்களை அறிந்து கொள்ளவும் வசதியாக இருக்கும். அத்தைக்கு எனது அன்பான முத்தங்கள்.

இப்படிக்கு,
[ XXXXXX ]

என்று முடிக்கிறாள் இப்படி ஒரு கடிதம் முழுமையான தமிழில் எழுவதற்கு துப்பில்லாமல் போய்விடும் வாட்சையும், லேப்டாப்பையும் தமிழ் படுத்தாமல் விட்டிருந்தால், தமிழ்படுத்திய செல்போனும் Google தமிழும் நாம் படிக்கையில் குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. காரணம் நாம் ஆங்கில வழிக்கல்வியில் பயின்றதும் தாய் புகட்டிய பாலும் தமிழும் மறந்ததே காரணம் என்னதான் தமிழ் பண்டிட்டானாலும் டீக்கடையில் டீ கொடுப்பான்னுதான் கேட்கமுடியுது காரணம் கோவணம் மட்டுமே கட்டிக்கொள்ளும் ஊரில்  வேட்டி சட்டை போட வெட்கப்பட வேண்டியிருக்கே ஆனால் கக்கத்திலாவது வேஸ்ட்டியும் சட்டையையும் வைத்துக்கொள்வோம்.

புதியதோர் உலகம் செய்வோம் ! அதில் தீய எண்ணத்தில் போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் !

மு.செ.மு.சபீர் அஹமது

Monday, November 11, 2013

எமனை அழைக்கும் மானுட வர்க்கம் !

இதம் தரும் காற்றை
கட்டிட இடிபாடுகளுக்குள்
தொலைத்து விட்டு...

கடல் அலை தேடி
ஓடும் காலமிது.

புழுதி பறக்கும் சாலையில்
உயிர் பிழைக்க
புகலிடம் தேடும்
இயற்கை காற்றும்...

வாகன புகையில்
சிக்கிச் சிதைந்து
சின்னா பின்னப் பட்டும்
தன் பணியை செய்யும்
பிரான வாய்வாக.

வாசலில் வந்து நிற்கும்
காற்றை தாளிட்டு மூடி
வஞ்சகரை விரட்டுவது போல்
ஜன்னலுக்கும் திரைச் சீலையிட்டு
காற்றை விரட்டி..
ஏசி அறைக்குள்
எமனை அழைக்கும்
மானுட வர்க்கம்.
 சசிகலா

Saturday, November 9, 2013

[ 19 ] 'வளைகுடா வாழ்க்கை' [ பைக் மெசஞ்சர் ]

வளைகுடா வாழ்கையில் பைக் மெசஞ்சர் !
பொருளாதார ரீதியாக நிறைவு பெற்ற நாடுகளில் போக்குவரத்துக்கு கார்களே பயன்படுத்தபடும். அதில் பைக் போன்ற வாகனங்கள் காண்பது
மிக அபரிதான ஒன்று. ஆனால் ஆசிய நாடுகளில் சாலைகள் தொலை நோக்கு பார்வையோடு அமைக்க படவில்லை. மேலை நாடுகளில் பிரதான வீதிகள் மிக விசாலமாக இருக்கும் எவ்வளவு கார்கள் வந்தாலும் நிறுத்தும் வசதியும் இருக்கும்.

கடைவீதிகள் என்ற அமைப்புகள் குறைந்து வணிக வளாகங்கள் என அமைய
பெற்றிருக்கும். ஆனால் துபாய் போன்ற நகரங்களில் மக்கள் நெருக்கடி, குறுகிய வீதி போன்ற காரணங்களால் அதிக அளவில் கார் நடமாட்டம் தவிர்த்து பைக் பயன் படுத்தும் சூழல். இந்த சூழல் நம்மவர்களுக்கு வேலை வாய்பாய் அமைந்து விட்டது.

இது பற்றி வளைகுடா வாழ் வாசகர் எனக்கு தகவல் தந்து பதியும் படி வேண்டி கொண்டார் எனவே அதனை இவ்வார பதிவாக பதிகிறேன்... தனது பெயரை கூட பதிய விரும்பாத நல்ல மனம் படைத்த இவ்வாசகர்க்கு எனது நன்றி !

இதோ அவருடைய தகவல்...
வளைகுடா வாழ்க்கையில் முக்கியமாக குறிப்பாக துபையில் உள்ள அனைத்து  பிரதான வீதிகளிலும் நம் சகோதரர்கள் அனுதினமும் பைக்கில் வளம் வருவதைக் காணலாம். நமது ஊர்களில் நம் இளைஞர்களோ பந்தாவுக்காக பைக் வைத்து ஒட்டிகொண்டிருக்கிறார்கள். ஆனால் வளைகுடாவில் பைக் ஓட்ட லைசன்ஸ் எடுப்பது பிழைப்புக்கு ஒரு மூலாதனமாக இருக்கிறது. காரணம் பைக் மெசஞ்ஜர் என்று அழைக்கப்படும் இந்த வேலை விரைவாக கிடைப்பதுடன் கைநிறைய நல்ல சம்பளமும் கிடைக்கிறது.

நெடுஞ்சாலைகளில் இந்த வளைகுடா நாட்டில் பைக் ஓட்டிச் செல்வது என்பது
ஒரு சாகச நிகழ்ச்சியை செய்வது போலத்தான் நினைக்க வேண்டும். கரனம் தப்பினால் மரணம் என்று சொல்வது போல் அவ்வளவு ஆபத்து நிறைந்தது.

இங்கு நெடுஞ்சாலைகளில் செல்லும் கார்கள் முதல் கனரக வாகனம் வரை கடும் வேகத்தில் செல்லும் அத்தனைக்கும் ஈடு கொடுத்து கவனமுடன் சிந்தனைகளை சிதறவிடாமல் பைக் ஓட்டிச் செல்லவேண்டும். ஆனால் இத்தனை ஆபத்துக்கள் நிறைந்திருக்கும் இந்த பைக் மெஸின்ஞ்ஜர் வேலைக்கு சேரவே அதிக பட்சம் ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம் கல்வியில் பின்தங்கி இருப்பவர்களுக்கு வளைகுடாவை பொருத்தமட்டில்
பைக் லைசன்ஸ் வைத்திருப்பது டிகிரி வைத்திருப்பதற்கு சமமாக வேலைவாய்ப்பு இலகுவாக கிடைக்க பெரிதும் கை கொடுக்கிறது. அவர்களுக்கு மட்டுமல்லாது வேலையில்லா பட்டதாரிகளும் கூடஒரு சிலர் கடைசி கட்டத்தில் இந்த வேலைக்குத் தான் சேர்கிறார்கள்.

வளைகுடாவில் குறிப்பாக துபாய் போன்ற பெரு நகரங்களில் அதிக அளவில் ஏற்றுமதி இறக்குமதி என்று வியாபாரச் சந்தைகள் பெருகிவிட்டதால் சாலைகளில் எப்போதும் வாகனப் போக்குவரத்து நிறைந்து காணப்படும். எந்த ஒரு வேலையையும் செய்வதற்கு காரில் சென்றால் காரை பார்க் செய்ய பார்க்கிங் கிடைப்பது கடினம். அதற்காக மணிக்கணக்கில் நேரத்தை செலவிட வேண்டும். தவறான வழித்தடத்தில் நிறுத்தி விட்டால் அபராதம்
எழுத உடனே அதிகாரி வந்து விடுவார்.

இந்தப் பிரச்சனைகள் எதுவும் பைக்கிற்கு கிடையாது. ஆகவே அனைத்து தரப்பான வேலைகளையும் வேகமாக செய்து முடிக்க பைக்கே முக்கிய வாகனமாக திகழ்கிறது. காரில் சென்று ஒரு வேலையை முடிக்க ஆகும் நேரத்தில் பைக்கில் சென்றால் ஒன்பது வேலையை முடித்து வந்து விடலாம்.

ஆகவே பைக்மெசஞ்ஜர்களை இங்குள்ள அலுவலகம், கூரியர் சேவை, உணவு டோர் டெலிவரி போன்ற வேலைகளை துரிதமாக செய்து முடிப்பதற்காக அனைத்து ஸ்தாபனங்களிலும் வேலைவாய்ப்பு அளிக்கிறார்கள்.
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, November 8, 2013

பெண்ணிவள்..!

காற்றாய் மென்மையும் கனியாய் இனிமையும் கொண்டு
......கனவிலும் நினைவிலுமே
ஊற்றாய்ப் பெருகிடும் மேனி உணர்வுகள் எல்லாம்
..ஒடுங்கிடத் துணையாக
ஆற்றல் மிக்கவன் படைத்து வழங்கினான் நாமும்
....ஆறுதல் பெற்றிடத்தான்
போற்றும் வாழ்வினில் இன்பம் எய்திட இவளைப்
....புரிந்தவர் வென்றனரே!.

பெண்ணும் பொறுமையில் பூமி போலவே இருப்பாள்
....பேச்சினில் புகழ்ந்ததுமே
பெண்ணும் பொறுமையை இழப்பாள் பேச்சினில் வாய்மைப்
...பிறழ்ந்திடும் வேளையிலே
கண்ணும் இமைகளால் கவனம் செலுத்துதல் போல
...காத்திட விரும்புவாளே
விண்ணின் தாரகை  யல்லள் மேதினி கொள்ளும்
...விளக்கதன் சுடராவாள்!

பிள்ளை பெற்றிட மட்டும் இருப்பதாய் நினைத்தால்
....பிழைகளும் உன்னிடந்தான்
உள்ளம் உணர்வுகள் எல்லாம் உணர்ந்திட வேண்டி
....உதவிட ஏங்கிடுவாள்
கள்ளம் கபடமும் கொண்டு வாழ்ந்திட நினைத்தால்
....கனவிலும் மறந்திடுவாள்
வெள்ளம் போலவே  கவலைப் பொங்கிடும் போதில்
...விவேகமாய் முடிவெடுப்பாள்!

பலத்தில் ஆனையைப்  போல இருப்பதால் பெண்ணும்
.....பக்குவம் விழைந்திடுவாள்
நலத்தில் அக்கறை காட்டும் இவளது நலத்தை
...நளினமாய் மறைத்திடுவாள்
குலமும் கோத்திரப் புகழும் கொண்டவள் பிறந்தக்
.....குடிலையே  தேடிடுவாள்
விலகும் சொந்தமும் நம்மைச் சுற்றியே இருக்க
..விரும்புதல் இவள்குணமே!

யாப்பிலக்கணம்:
எழுசீர் விருத்தம்:
வாய்பாடு (மா, விளம், மா, விளம், மா
                    விளம், காய்) 1-6 மோனை
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 07-11-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

நாற்றம் மதுமலர் தேக்கம் நனையிதழ் ஊட்டம்
  நாடிடும் வண்டினமும்
போற்று மெழில்சுனை ஆட்டம் புதிதெழும் காற்றும்
  புரள் அலையோட்டமென
சாற்றும் மொழிதரும் பாட்டும் முழவொலி கேட்டும்
  மனமெழும் தீரமுடன்
நேற்றும் இன்றுடன் நாளை நிகழ்வது யாவும்
  நிலைகொள வழிசமைத்தாள்

சீற்றம் இடியொளி மின்னல் சொரிமழை வானம்
  சிதறிடும் மர இலைகள்
ஆற்றும் செயலிவை யாவும் அவனியில் சேரும்
  இயற்கையின் கடமைகளே
ஏற்கும் உடைகளும் உண்ணும் உணவுடன் இனிமை
  உறவுகள் அவள்தரவே
கூற்றன் கொடிதெனும் பாசக் கயிறிட கொள்ளும்
   கணம்வரை உயிரளித்தாள்

ஏற்றம் எழவிழும் தாக்கம் இழிமையின் துச்சம்
  இவைதரும் உணர்வழிய
மேற்கும் மறைகதிர் போக்கும் மதியின் பொன்கீற்றும்
   மகிழ்வுள்ளம் ஆக்கிவிட்டு
நூற்கும் நூலிழை சேர்க்கும் நாற்குணப் பெண்மை
   நினைவுகள் இனிமை யென்றாள்
போற்றும் செயலதும் புகழும் இயற்கையின்
  புலமை கவிஞரின் வழக்கமன்றோ

பெண்ணும் பெண்ணவள் பேச்சும் பேச்சினில் மாற்றம்
  பெரிதெழ ஆக்கியவள்
மண்ணும்  மண்விழை பொன்னும் பொன்முடி அரசும்
  படையுடன் போரெனவும்
எண்ணும்  மனதினில் இன்பம் இளமை யின் எண்ணம்
  இவைகளில் சாம்ராஜ்ஜம்
திண்ணம் விழநிலை கொள்ளும் திறனுடை0 பெண்ணும்
  தேர்ந்திட அழகீந்தாள்

முன்னும் கண்விழி அம்பும் மெய்யிடை போரும்
  மூளென தீயிடுவாள்
என்னும் வலிமையும் கொண்டால் இகமதில் இன்னும்
  எழும் வலி இவள் கொண்டால்
தன்னும் தன்நிலை- பேணுந் தன்மையில் ஆளும்
   தகமையைக் கொள்வளெனில்
மின்னும் தாரகையல்லள் மேதினி கொள்ளும்
   இன்னொரு சுடராவாள்

Thursday, November 7, 2013

[ 8 ] அறிவுத்தேன் [ ஒன்றின் உருவம் ]

ஒன்றே இருப்பது
உருவா கிருப்பது
ஒன்றின் உருவம்
என்பது எதுவது ?

ஒன்றின் உருவம் என்றால் என்ன ?

ஒன்றிலே உண்டாகி, அந்த ஒன்றே பலவாகி நிற்கின்றது. அவ்வாறு பலவாகி நிற்பவைகள் உண்டாகும் முன் ஒன்றாகவே இருந்தது என்பதையும், அரூபமே உருவங்கள் ஆகின்றது என்பதையும் நாம் முந்தைய விளக்கத்தில் கவனத்தில் கொண்டுள்ளோம்.

இருப்பது ஒன்று. அது எல்லாமாகி இருக்கின்றது. இப்பொழுது இப்பூமியில் ஒரே ஒரு மரம் மட்டும் இருப்பதாகக் கொள்வோம். அம்மரம் ஒரு விதையிலிருந்து உண்டாகி இருக்கும் என்றுதான் நாம் வழக்கமான அறிவுப்படி விளங்குவோம். ஆனாலும் பூமியில் வேறுப்பட்ட வெப்ப, குளிர், சுழற்சி, ஈர்ப்பு,  சூரியனிலிருந்து உள்ள தூரம், இவைகள் போன்றவைகள் இதற்கும் அப்பாற்பட்டவைகள் ஆன இக்காரணிகளின் ஒருங்கிணைப்பில் மரம் மற்றவைகள் சுயமாகவும் உண்டாகுகின்றன.

புதிதாக வேயப்பட்ட கீற்றுகள் கொண்டு கட்டப்பட்ட ஒரு வீட்டில் வெயில், மழை சுழற்சிக்குப்பின் கூரையிலிருந்து பூரான் கீழே விழும். பழைய சாக்கு அதனை மண்பானையைக் கொண்டு மூடி வக்க சில நாட்களுக்கு பின் தேள் உண்டாகும் என்பர். செத்த மீனிலிருந்து(கருவாடிலிருந்து) புழுக்கள் உண்டாகும். இவ்வாறும் உயிரினங்கள் தோன்றுகின்றன. பின் அவ்வாறு உண்டாகிய பல உயிரினங்கள் அவைகளில் பெரும்பாலானவைகள் காரணி இசைவுகள் இல்லாமல்/அமையாமல் தன் இனத்தை தானாகவும் உற்பத்தி செய்து கொள்கின்றன.

இப்பூமியில் ஒரே ஒரு மரம் மட்டும் இருப்பதாகக் கொண்டதை தொடருவோம். மரத்தையும் பூமியையும் பார்க்கும் போது மரமும், பூமியும் தெரிகின்றது. மரம் என்பது பூமிக்கு வேறு எங்கிருந்தோ வந்ததல்ல ! பூமியே மரமாக மாற்றம் கொள்கிறது. தாயின் வயிற்றில் (கர்ப்ப பையில்) உள்ள சதை பிண்டம் எப்படி கண், காது, கை, கால் போன்ற உறுப்புகளாக மாறுகின்றதோ அது போல் மரம் பூமியில் இருக்கின்றது.

பூமியோ திரவத்திலிருந்தும், திரவமோ காற்றிலிருந்தும், காற்றோ ஆகாயத்திலிருந்தும் உண்டாகியதை முன்பு பார்த்துள்ளோம். அதன்படி வெளி என்ற ஆகாயம் மரமுமாகின்றது.

பூமியின் உயிர் ஆற்றல் மரத்திலும், ஆகாயத்தின் உயிர் ஆற்றல் பூமியிலும் என்பதால் ஆகாயத்தின் உயிர் ஆற்றல் மரத்தில் இருந்து மரத்தை வளரச்செய்கிறது. ஆகாயத்தின் உயிர் அரூபம்.

அரூப உயிரென்றும் ஆகாயமென்றும் அன்று. ஆகாயமே அரூப உயிர். அரூப உயிரே ஆகாயம். அரூப உயிரே மரமும் ஆகும். அரூபத்திற்கு உருவமில்லை. ஆனாலும் அரூபமே உருவமாக தெரிகிறது. உயிர்தத்துவம் இல்லாவிட்டால் நாற்றமெடுத்த மீனில்(கருவாட்டில்) புழுக்கள் உண்டாகாது. சில காரணிகளைக் கொண்டு சில நேரங்களில் உயிரினம் உண்டாகும்.

பார்க்கும் என்ற ஒரு நிலை இருக்க உருவம் தெரிகின்றது. ஒன்றே அனைத்தாகி இருக்கும்போது, பார்வையும் அவ்வொன்றிலிருந்து என்கின், எதைப் பார்க்க ? வேறு என்ற மற்றவைகள்தான் இல்லையே. எனவே பார்வையே உண்டாகாது ! பார்வைக்குரியவைகளும், பார்வையும் இல்லை. அதுபோல் உருவத்துக்குரியவைகளும், உருவமும் இல்லை !

ஒருவன் ஒன்றைப்பற்றி மிக ஆழமான, பரிபூரணமான சிந்தனயில் மூழ்கியிருக்கும்போது அவன் கண்களுக்கு எந்த உருவமும் ஏன் தன் உருவமும்கூட தெரியாது. ஒருவர் கூப்பிட்டாலும் அல்லது அவர்முன் கையசைத்தாலும் உடன் தெரியாது. சிந்தனை களைய தொடங்கும்போது உணரும்; கேட்கும்; தெரியும்.

உண்டாகிய அனைத்தும் அரூபத்திலிருந்தே. ஆனதால் அவைகள் ஒன்றினது உருவம்; உருவங்கள். வேர், தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி என்பது போல் பலவாக தெரிந்தாலும் அவை ஒரு மரத்தின் தோற்ற அமைவுகள். மரம் என்று பார்க்கும் போது அம்மரத்தில் அவைகள் அடங்கிவிடுகின்றது. அவைகளை தனித்து பார்க்க/கவனிக்க வேர், தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி போல் பலவாக தெரிகிறது. ஒன்றே/ஒன்றாகாக இருக்கும் போது ஒன்றிற்கு உருவம் என்றும் அரூபம் என்றும் என்றில்லை, இல்லை. இருக்கின்றது, இருப்பு இருக்கின்றது. இவ்விடத்தை பூஜ்யம் என்றாலும் ஒன்று என்றாலும் ஒரே அர்த்தம் தரக்கூடியது.

ஒன்றாக உணரும் போது, அறியும் போது வேறில்லை என்ற தெளிவில் அரூபம் இருக்கும். ஒன்றே உருவாகி இருப்பதால் அதை தவிர்த்த வேறு இல்லாததால் எதைப் பார்க்க ? பார்வையே இல்லை ! உருவமும் இல்லை ! ஒன்றின் உருவம் என்பது அரூபமே.

எனவே வேறொன்று இல்லாது ஒன்றே இருக்கும்போது உருவம் இல்லை. இரண்டு இருந்தால்தான் ஒன்றை ஒன்று பார்கமுடியும். அப்பொழுது உருவம் தெரியும். ஒன்றாகிவிட்டால் எங்கே உருவம் ? அல்லது ஒன்றுமட்டும் இருந்தால்  உருவமின்மைதானே. ஆழச்சிந்தனையுடன் தெளிவு பெறவேண்டும்.

ஒன்றே இருந்து
பார்த்தல் கேட்டல்
தன்னில் நிகழ்தல் -இது
அரூப மன்றோ !

ஒன்றின் பார்த்தல், கேட்டல் போன்ற செயல்கள் அரூபமா ? எவ்வாறு ?
நபிதாஸ்

Wednesday, November 6, 2013

உண்மைகள் வெறுக்கப்படுகிறதா !?

வெண் மதியே !
பெண் ரதியே !
எனும் காதலன்
பொய் கூற்றுக்கு
காதலி
ரசிக்கிறாள் ?

உடன் பிறப்பே !
ரத்தத்தின் ரத்தமே !
எனும் தலைவனின்
பிதற்றலை
தொண்டன்
ரசிக்கிறான் ?

என் வருமானம்
முழுவதும்
உன்னிடமே !
எனும் கணவனின்
பொய்க்கு
மனைவி
சந்தோசிக்கிறாள் ?

மாராக

இவ்வளவு
அலங்காரம்
தேவையா?
எனும் காதலன்
உண்மை வார்த்தையை
காதலி வெறுக்கிறாள் !

உங்கள்
மனைவி,மக்களை
காப்பாற்றும்
வழியை பாருங்கள் !
எனும் தலைவனின்
எதார்த்த வார்த்தையை
தொண்டன்
மறுக்கிறான்?

என் வருமானத்தில்
ஒரு பகுதி
என் கஷ்டப்படும்
தம்பிக்கு
போய் சேர்க்கிறது !
எனும் கணவனின்
உண்மை வாரத்தையை
மனைவி
வெறுக்கிறாள்?

இப்படி இருக்க
நான்
உண்மை பேசட்டுமா ?
பொய் பேசட்டுமா ?
மு.செ.மு.சபீர் அஹமது

Tuesday, November 5, 2013

சூதும் மாதும் வேதனை செய்யுமா !?

சூதும் மாதும் வேதனை செய்யும் !

அப்படி என்றால் மது ?
ஹலோ, ஹலோ ஓ ஓ, உங்களைத்தான், நான் கூப்பிடுவது உங்கள் காதுகளில் விழுகலையா ? தயவுசெய்து கொஞ்சம் நின்னு கேட்டுட்டுத்தான் போங்களேன்.

சிறு வயது பள்ளிப்பருவம் ஞாபகம் இருக்குதா ?

அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்

இப்படி டீச்சர் சொல்லிக் கொடுத்த நினைவு இருக்கின்றதா ?

அதோடு “சூதும் மாதும் வேதனை செய்யும்” என்று டீச்சர் சொல்ல நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் சூதும் மாதும் வேதனை செய்யும் என்று உரக்க சொன்னோமே,

அதாவது ஞாபகம் இருக்குதா ?

ஆ ஆ  ஆ! இப்போ ஞாபகம் வந்துருச்சி.

அன்று சூதையும் மாதையும் சொன்னவர்கள் ஏன் மதுவை சொல்ல மறந்தனர்? அப்போ, மது வேதனை செய்யாதா?

இன்று மதுவுக்கு பல பக்கத்திலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருக்கின்றது, ஆனால் சூதையும் மாதையும் எதிர்க்க மறந்து விட்டனர்.

என்னங்க இது? எனக்கு ஒரே குழப்பமாக இருக்கின்றது.

இதற்கு என்னதான் விடை ? நானும் பல கோணங்களில் சிந்தித்து விட்டேன், ஒரு விடையும் கிடைக்க வில்லை.

மேற்கத்திய நாடாகிய ஐரோப்பா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் சூதும் உண்டு, மாதுவும் உண்டு, மதுவும் உண்டு. சூது ஆட்டத்திலும், மாதுவின் அழகிலும் செல்வத்தை விரயமாக்கும் அவர்கள், மதுவை ஒரு மருந்தாக நினைத்து பருகி வருகின்றனர். அதாவது அவர்கள் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு ஐந்து மில்லிக்குமேல் பருக மாட்டார்கள், அந்த ஐந்து மில்லியையும் அவர்கள் பருகி முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் முப்பது நிமிடங்கள்.

நம் நாட்டில் எப்படியோ எனக்கு தெரியாது. எது எப்படி இருந்தாலும் உடல் நலத்திற்கும் குடும்பத்திற்கும் தீங்கு என்று வரும்போது அது தேவையா?

ஒரு சொட்டு குடித்தால் என்ன ?
ஒரு பாட்டில் குடித்தால் என்ன ?
ஒரு பைசா திருடினால் என்ன ?
ஒரு கோடி திருடினால் என்ன ?

திருட்டு, திருட்டுதான். இது தானங்க உண்மை.

ஒட்டு மொத்த சமுதாயமும் ஒன்று சேர்ந்து இதனால் உடல் நலத்திற்கும், குடும்பத்திற்கும் நாட்டுக்கும் தீங்கு என்று சொன்னபிறகு அதை நாடுவது எவ்வளவு குற்றமான செயல்.

தண்ணீரை பாதுகாப்போம்.
தண்ணி அடிப்போரை கண்டு விலக மாட்டோம்,
அவர்களை திருத்த முயற்சிப்போம்.

செல்வங்களை பாதுகாப்போம்.
சூதாட்டத்தில் செல்வங்களை விடுவோரை கண்டு வெறுக்க மாட்டோம்,
அவர்களை திருத்த முயற்ச்சிப்போம்.

மாதர்களை தாய்மார்களாக, சகோதரிகளாக கண்ணியப்படுத்துவோம்.
விலை மாதுவை கண்டு ஒருங்க மாட்டோம்,
அவர்களை திருத்தாமல் நாங்கள் தூங்க மாட்டோம்.

சூதும் மாதும் வேதனை செய்யும், கூடவே மதுவும் தொழமையாகிவிடும்.

வாழ்க்கை என்ற பாதையில் ஒரு சில இடங்களில் வளைவுகளும் நெளிவுகளும் வரும், தேசத்திற்கும் சமுதாயத்திற்கும் குடும்பத்திற்கும் உடல் நலத்திற்கும் கூடும் என்று இருந்தால் வளையலாம் நெளியலாம், கூடாது என்று இருக்கும்போது அந்தமாதிரியான வளைவுகளும் நெளிவுகளும் நமக்கு தேவையா?

சிந்தித்து பாருங்கள், மனதை ஒரு நிலைப் படுத்திப் பாருங்கள், உண்மையாக மெய்யாக நிச்சயமாக உங்கள் மனதில் ஒரு தெளிவு உதயமாகும்.

நம் பாரதத்தை மட்டும்மல்ல இவ்வுலகையே பரிசுத்தமானதாக மாற்றிவிடலாம்.

இப்போ பாருங்க, என் மனதில் பட்டதை உங்களிடம் சொல்லிவிட்டேன், இன்னும் நிறைய செய்திகள் எனக்கு தெரியாமல் இருக்கலாம், ஆகவே, உங்களுக்குள் தெரிந்த விஷயங்களை இங்கு சொல்லி எனக்கு விளங்கப்படுத்துங்களேன்.
'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Monday, November 4, 2013

சமூக சீர்கேட்டிற்கு காரணம் ? சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி [ காணொளி ]


'சமூக சீர்கேட்டிற்கு காரணம் ?' 


தகவல் தொழில்நுட்பமா !?   மாறிவரும் கலாச்சாரமா !? 

என்ற இரு வேறு தலைப்புகளில் அதிரையின் பிரபல பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர்கள் இரு அணிகளாக இருந்து மோதும் சூடான விவாதங்கள். இதில் நடுவராக 'முத்தமிழ் நேசன்' கவிஞர் M.R. முத்து அவர்களும், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள்தான் சமூக சீர்கேட்டிற்கான காரணம் என வலியுறுத்தி T.V. பேச்சாளர் மதுக்கூர் இராமச்சந்திரன் மற்றும் 'நிருபர்' இல. சிவா M.A. ஆகியோர் இணைந்து ஓர் அணியிலும், இல்லையில்லை மாறிவரும் கலாச்சாராம்தான் சமூக சீர்கேட்டிற்கான காரணம் என வலியுறுத்தி 'நகைச்சுவை தென்றல்' அதிரை புஹாரி மற்றும் 'சிந்தனை பேச்சாளர்' கவிஞர் தியாக. புருஷோத்தமன் ஆகிய இருவரும் மற்றறொரு அணியாக இருந்துகொண்டு நம்மையெல்லாம் நகைச்சுவையூட்டி சிந்திக்க வைக்கின்றனர்.

வயிறுகுலுங்க சிரிக்க வைக்கின்ற இந்த சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியின் காணொளியை சமூக விழிப்புணர்வு பக்கங்களின் வாசகர்களுக்கு அன்புடன் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். 

இதோ அதன் காணொளி...
 

 நன்றி : அதிரை நியூஸ்
Pro Blogger Tricks

Followers