.

Pages

Sunday, December 28, 2014

வேலை வேண்டும் !

வேலைக் கூடச் சிறைதனிலே
விரும்பி நாமே நுழைந்துவிட்டு
மாலை நேர விடுதலையால்
மகிழ்ந்து கொள்ளும் மனிதமனம்!

வேலை யில்லாப் பட்டதாரி
வேலை தேடா  வேடதாரி
மாலை சூடும் மணமகளும்
மதிக்க என்றும் துணிவதில்லை!

வேலை தருமே மரியாதை
விரைந்து கிடைக்கும் ஒருபாதை
காலைத் தூக்கம் வெறுத்ததினால்
கடமை உணர்வு பெருத்திடுமே!

வேலை செய்து பெறும்பணமே
வெல்லும் வாழ்வில் பெருமிதமே
சோலை வனமாய்த் துளிர்த்திடுமே
சோகம் யாவும் துடைத்திடுமே!

வேலை செய்ய உலகமெலாம்
விழைந்து பறந்து அலைந்திடுக
பாலை வானமும் அரவணைக்கும்
பாடு பட்டால் புகழுனக்கு!

வேலை யில்லா இளைஞர்கள்
வீணர்  களிடம் விழுவார்கள்
மூளை யில்லா வன்முறைகள்
முழுது மிவர்கள் செய்முறைகள்!
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Saturday, December 27, 2014

[ 9 ] அவன் அடிமை { வெண்பா அந்தாதி }

(29)
விழைந்திடும் உச்சம் விரைவில் அடைதல்
தழைத்திடும் வாழ்க்கைத் தகுந்தே - பிழையறத்
தன்னிலே தானறியும் தன்மை நிறைவினில்
உன்னிலே மோட்சம் உயர்வு.

(30)
உயர்வுகள் வேண்டின் உழைப்பினில் மட்டும்
அயர்ந்திடா ஆற்றுதல் அன்று - தயங்காதே
தன்னிலே திட்பத் தெளிவுகள் கண்டபின்
நன்மையே செய்வதில் நாடு.

(31)
நாடும் மனதிலே நாட்டம் நிலைதனில்
தேடும் வகையில் திளைத்திடும் - வீடு
அடைதலே மூச்சாய் அகத்தின் உணர்வு
உடையவன் தூண்டும் உவப்பு

(32)
உவப்பின் மிகைவில் உதயமாகி அன்பு
தவத்தில் தனதாகித் தங்கும் -துவக்கம்
அவனில் நிலைக்க அகந்தை அழிந்தே
பவனம் அடைந்திடும் பார்

நபிதாஸ்

வெண்பா (29)  
பொருள்: ஒன்றின் மீது கொண்ட விருப்பம் உச்சமாகக் கொள்ள அதற்கேற்ப அடைந்து வாழ்க்கை அதனில் செழிப்புறும். அதுபோல் தன்னைப்பற்றித் தன்னிலே கலக்கமில்லாதுத் தெளிவாகத் தானறியும் விருப்ப உச்ச நிறைவினில் உன்னிலே உன் மோட்சம். அதுவே உயர்வு.  

வெண்பா (30)  
பொருள்: தன்னிலை புனிதத்தில் உயர அயராது உழைத்திடுதல் மட்டும் செய்வதில் நின்றுவிடாதே. திடமாகத் தன்னைத் தெரிந்து நன்மைகள் புரிதலையே விரும்பு.

வெண்பா (31) 
பொருள்: மனம் விரும்பும் நிலையொன்றில் எவ்வாறுத் தேடியதோ அவ்வழிதனில் மூழ்கிவிடும். அதனால் அதுபோல் வீடுபேறு அடைதல் நிலைத்திட அல்லது தொடர்ந்திட வீடுபேறு வேண்டும் என்ற உணர்வை எங்கும் நிறைந்த இறைவனே விரும்பி அம்மனதின் மூலம் தூண்டியடைய உவக்கிறான்.

வெண்பா (32) 
பொருள்: அதிகமாக மனம் ஒன்றை விரும்ப அங்கு அதன்மீது அன்பு உண்டாகும். பின் அது ஒர்மையானத் தவத்தின் வழிதனில் விரும்பிய அதனை அடைந்துவிடும். அதனால் விருப்பம் இறைவனில் நிலைக்க "தான்", "நான்" என்ற அகந்தை அழிந்து சுவர்க்கம் என்ற வீடுபேரை அடைந்துவிடும், அறிக.

Saturday, December 20, 2014

சுத்தம் சுவனம் தரும்!

வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும்
ஆதாரம் உண்டு
உடல் நலத்திற்கு
ஆதாரம்?
சுகாதாரம்!

புறத்தையும் அகத்தையும்
புழுதியில் போட்டு விட்டார்கள்
இன்று!
இரண்டுக்கும் மத்தியில்
நோய்ப் படைஎடுப்பு
எதிர்த்து சுடும் மருந்தில்
பசைஇல்லை!

கண்ணில்லாப் பிச்சைக்காரர்
வாழ்வாக
சுகாதாரத் திட்டம்
நகர -கிராம
வீதிகளில் எல்லாம்
நாற்றமெடுத்தப்
பிணக்காடு!

நகர வீதிகளில்,
மரத்தின் அடிகளில்
புழுக்களைப் போல்
நாதியற்றுக் கிடக்கும்
மக்கள் -
சுத்தமில்லாமல்!

ஆயுதம் விற்றுக்
காசு பறிக்க
நயவஞ்சகக் கூட்டம்
மோதலை உருவாக்கி
நாடுகளெங்கும் ரத்தச்சாக்கடை
கோரம்! பெரும்
சோகம்!

துவேஷப் புழுதி கிளம்ப
துவண்டு மடியும்
அப்பாவி மக்கள்
வெறிப்பசிக்குத் தீனிகள்!
சிதறிக்கிடக்கும் மேனிகள்!
அசுத்தக்காடுகள்!
அண்டிப் பிழைக்கும்
கிரிமிகள்!
ஆனந்தம்பாடு கொசுக்கள்!
ஆடிக்களிக்கும் பிணிகள்!

ஒவ்வொரு இல்லமும்
கழிவறைப் பெற்றதில்லை!
நாடு பீற்றிக் கொள்கிறது
"Super power " என்று!
வார்டு பிரதிநிதிகள்
வாட்டும் பிரதமர்கள்!
கடமையைச் சாக்கடைக்குள்
மறைக்கிறார்கள்!

கழிப்பறை பெரிதாகத்தான்
உள்ளது - கழுவுதற்குத்
தண்ணீர் மட்டுமில்லை!

அபராதம் போட்டார்கள்
திறந்த வெளியில்.......!
முரட்டுத்தனமாக மக்கள்!
அரசு பராமரிப்பு
மறப்பு!
சொரிசிரங்கில் மக்கள்
சுகம் - குருதிச் சொட்ட!

கிளியைப் பிடித்துக்
கூண்டில் அடைக்கலாம்,
எலியை அடித்துத்
தெருவில் போடலாமா?

நம்ம வீட்டுக்குப்பை
அடுத்த வீட்டுக்கு அலங்காரமா?
கொசுக்குக் கட்டும் தொட்டில்
கடியால்
குலுங்கி ஆடுது கட்டில்!
முத்தெடுக்க "நீதி "
கடலுக்குள் போய்விட்டது!

சுனாமி வந்தால்
மரணம் ஒருநொடியில்
அசுத்த சுனாமி.....
அனு அனுவாய்!
ஆயுள் குறைகிறது
அசுத்தம் பிரார்த்திக்க!

உடையிலே சுத்தமில்லை,
உடலிலே சுத்தமில்லை,
இடத்திலே சுத்தமில்லை,
எதிலுமே சுத்தமில்லை
இனி
வாழ்க்கை மிச்சமில்லை!

மனதிற்கு அமைதியா?
ஓடிப்பிடி சுத்தம்!

சுத்தம் செத்தால்..
உடல் நலக்குறைவு,
உணவுக் கசப்பு,
உழைப்பு இழப்பு,
கவர்ச்சித் தவிப்பு!

முன்னேறு முன்னேறு
சுத்தமாகி முன்னேறு!

கூழானாலும் குளித்துக்குடி
கந்தையானாலும் கசிக்கிக்கட்டு!
வேகாத பண்டம்
வெறும் பகட்டு!

சுத்தம் சுவனம் தரும்!
'கவிஞர்' அதிரை தாஹா

Thursday, December 18, 2014

தாலிபான்கள் என்னும் கூலிப்படைகள் !

பசுத்தோல் போர்த்திய
பயங்கரப் புலிகள்
இசுலாம் கூறிடா
இழிசெயற் கூலிகள்!

வேலையற்றோர் கூடாரம்
வீணர்களின் குழுவாகும்
மூளையற்றோர் இவராலே
முசுலிமுக்கு இழிவாகும்!

சொந்த தேசத்தின்
சொத்துகள் குழந்தைகளாம்
எந்த மூடர்கள்
இப்படி அழித்திடுவர்?

”மாணவர்கள்” பெயருடன்
மாண்புக்கு ஊனமன்றோ?
மாணவர்கள் உடலழித்து
மார்தட்டல் ஈனமன்றோ?

பின்னாளில் இப்படிப்
பிற்போக்காய் வருமென்று
முன்னோர்கள் எங்களை
முற்கூட்டித் தடுத்திட்டார்!

பிரிந்து என்பயன்?
பிணங்களே  கூடின
வரிந்து வன்முறை
வலிகளே தேடின!

மார்க்கத்தின் துரோகி
மன்னிப் பெளிதா
மூர்க்கத்தில் கொலையா?
முட்டாள் மனிதா ?

குறிப்பு:"மாணவர்கள்" என்பது தாலிபான் என்ற சொல்லின் பொருளாகும்.
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Wednesday, December 17, 2014

வங்கி

வாழ்கையில் வறட்சியா
நகை கடன் என்றது

கையில் இருப்பா
நீண்ட கால வைப்பு
இருக்கவே இருக்கு என்று
சிவப்பு கம்பளம் விரித்தது

திருடர்கள் தொல்லையா
பாதுகாப்பு பெட்டகம்
பவ்வியமாய்
உண்டென்றது

சிறப்பான வாழ்வுக்கு
சிறுசேமிப்பு கணக்கு
உங்களுக்காகவே என்றது

பேரனின் கல்விக்கு
கவலை வேண்டாம்
கடனாய் தருகிறோம்
வாருங்கள் அழைத்தது

வீட்டுக்கடன், வாகனக்கடன்
வகை வகையாய்
அழைப்பு விடுத்தது

உங்கள் கடனும் வேண்டா,
என் காலடி தடமும்
உங்கள் இடத்தில்
பதிய வேண்டாம்
என்றிருக்க

கடைசி கொக்கியாய்
கேஸ் மானியம்
என்ற பெயரால்
என்னை இழுக்க !
என்ன செய்யப்போகிறேன் ?
மு.செ.மு.சபீர் அஹமது

Saturday, December 13, 2014

நேரம் !

நொடிக்கு நொடி
கவனம்! படி!
நேற்றை என்பது
உடைந்த பானை
நாளை என்பது
மதில்மேல் பூனை
இன்று என்பது
உன்கை வீணை!

திரட்டிய செல்வம்
கரைந்து போனது
கட்டிய மாளிகை
விட்டுப் போனது
உழைத்தான்
மீண்டது பொருள்
நிமிர்ந்தது மாளிகை!

இழந்ததைப் பெறலாம்
பணத்தின் செறிவால்
பறந்துபோன
காலத்தைப்
பற்றிக் கொணர்வானா?

மறைந்த நேரம்
மரணமானது
உயிர்ப்பித்து ஒருபோதும்
எழுப்பவே முடியாது!
நேற்றைய தினம்
இன்றைய தினத்தைத்
தின்னாமல் இருக்கட்டும்!

தாயின் கருப்பையில்
இருந்த காலம் -
மாறி மண்ணில்
பிறந்து விட்டால்,
மீண்டும்
செல்வதுண்டா?
மண்ணறைக்குள்
சென்று விட்டால்
மீண்டும் வருவதுண்டா?
எல்லாம் காலம் நடத்தும்
ஜாலம்!

உழைப்பவனுக்கு
நேரம் போதாது
ஊதாரிக்கோ
நேரம் போகாது! -நீ
உழைப்பவனா?
ஊதாரியா?

"காலம் சென்றுவிட்டால்
வார்த்தை வெளிப்பட்டால்
அம்பை எய்துவிட்டால்
மீளுமா? "- இது
நபிகளாரின் கேள்விமா!

ஒரு நிமிடம் சிந்தி
எடுத்து வைக்கும் அடி
எங்கே போகிறது?
குடிக்கவா? குப்புறக்
கிடக்கவா?
சூதாடவா? வாதாடவா?
நேரம் உனக்குச்
சரி இல்லை!

சுறு சுறுப்பைக்
கிள்ளிப் போடாதே!
நல்ல வேலையைத்
தள்ளிப் போடாதே!
ஆயுள் போகுமே
நேரம் போக!போக!

அரட்டையை விரட்டு!
ஆகா
நட்பைப் புரட்டு!
நேரமே உயிர்!
நேர்பட வாழ்!
கூர்பட சிந்தி!

காலம் யாருக்காகவும்
காத்திருக்காது!
"காலத்தின் மீது சத்தியமாக "
காத்திருக்காது
காலம்!

காலம் பொன்னானது!
கடமை கண்ணானது!
'கவிஞர்' அதிரை தாஹா

Thursday, December 11, 2014

"எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்?"

கடந்த 06-12-2014 அன்று நடந்த கவியரங்கில் கவியன்பன் கலாமை கவிபாட , கவியரங்கத் தலைவர் திரு கவிஞானி யோகிவேதம் அவர்கள் அழைத்தார்கள் இவ்வாறு:

கவியன்பன் கலாம் அவர்களைக் கவிபாட அழைப்பேன்..
**********
கவியன்பன் கலாமுக்கு கவியோகியின் அழைப்பு..
***************************
அதிரை பட்டினத்தில்  அவதரித்து அபுதாபியில்
அதிக  வேலைசெயும் அன்புக் கவிஞரிவர்!
.
கவிஞர்களின் மனத்தில் அன்பால் கட்டுண்டவர்;
கவியன்பன் கலாம்.. பள்ளிப் படிப்புமுதல்
..
கவிஇயற்றும்  ஆற்றலில் கரைகண்டவர்;ருசிகண்டவர்!
கவிதைகளில் பரிசுபெற்றுக்  கவர்ந்தார் நம்மனத்தை;

‘கவித்தீபம்’,  முதலான கவிவிருது அடைந்தவர்!
கவிதைச்  சங்கமமெனும் இவர்அமைப்பில் அடியேனும்
.
முதற்பரிசு  பெறமுயன்றுப்   பயனடைந்தேன்; நன்றிசொன்னேன்;
முதிய-  ‘துபாய் தமிழர்  சங்கமச்’ செயலாளர்  இவரை
.
இனிப்போகும் இடத்தை  இன்பமாய்ச்  சொல்லவே
கனிவுடன் அழைக்கின்றேன்.. வருக அன்பர் கலாம்!
 ***********************************(கவியோகி)

கவியன்பன் கலாமின் கவிதை இதோ:
”கவியரங்கம்-41” தலைப்பு: "எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்? “
இறைவாழ்த்து:
மறையுடன் மாசிலா மாநபி வழங்கிய
இறையவன் ஆசியைப் போற்றியே துவங்கினன்

தலைவர் வாழ்த்து:
கவிஞானி யோகியார்  காட்டும் விளக்கம்
கவித்திசை நோக்கிக் கவிதைப் படகைச்
செலுத்தவே வந்தனன்; சீர்மிகு வாழ்த்தைச்
செலுத்தினேன்; பாடவே செப்பு.

அவை வாழ்த்து: 
யாப்பின் வழிநின்று யாத்திடும் பாக்களில்
மூப்பின் வழிகாட்டல் முன்னேற்றம் இங்குதான்
சந்த வசந்தமென்னும் சங்கமம் கொண்டோர்க்குச்
சொந்த மெனவாழ்த்தும் சொல்

எங்கே துவங்கி இங்குவந்தோம்
       என்ன தான்நாம் செய்கின்றோம்
எங்கே சென்று முடிந்திடுவோம்
        என்று தான்நாம் அறியாமல்
எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்
        இலக்கே இல்லாப் பயணமென
இங்கே வந்து இயற்றுகின்ற
         இனிய பாடல் சொல்லட்டும்!

தன்னை யறிந்தால் இறையவனைத்
         தானே யறிவான் என்றனரே
தன்னை யறியத் தனிநேரம்
         தானே ஒதுக்க முடியாமல்
தன்னைச் சுற்றித் தனியுலகம்
         தானே போட்டுக் கொண்டதனால்
இன்னும் அறியா மல்நாமும்
        எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்?

முன்னோர் சொல்லை ஏற்காமல்
            முட்டாள் என்றே சொல்லுகின்றோம்
பின்னோர் சொல்லில் மலிந்துள்ள
             பிழைகள் காண முடியாமல்
இன்னல் வந்தால் முடிவுகளை
              எடுக்க முடியாக் குழப்பத்தில்
பின்னே நோக்கிச் செல்வதனால்
             பிறகு எங்கே போகின்றோம்?

வாசிப் பதையும் நிறுத்திவிட்டோம்
         வளமார் தமிழை மறந்துவிட்டோம்
நேசிப் பதையும் நிறுத்திவிட்டோம்
              நெஞ்சில் ஈரம் துறந்துவிட்டோம்
யோசிப் பதற்கும் நேரமின்றி
             எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்?
காசில் குறியா யிருக்கின்றோம்
               களவும் செய்யத் துணிந்துவிட்டோம்!

வேங்கை தின்ற மனிதனையும்
            வேடிக் கைதான் பார்த்தோமே
எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்
           இதயம் இல்லா மானிடராய்?
ஆங்கே ஒருவர் யோசனையை
         ஆர்க்கும் வழங்க முயன்றனரோ?
தாங்கள் பதியும் விழியத்தில்
          தானே கவனம் செலுத்தினரே!

மண்ணின் ஆதிப் பழக்கமெங்கே
           மரபும் உடையும் மாறியதேன்?
விண்ணில் பறக்க முயன்றோமே
          வியர்வை வழியும் விவசாயி
புண்ணாய் வெந்து மடிவதையும்
           புரியா தெங்கே போகின்றோம்?
உண்ணும் நேரத் திலொருநொடி
         உணர்வோம் உழவன் நிலையையுமே!

காடு, கழனி, தோட்டங்கள்
        காசு பணத்தால் அழித்துவந்த
வீடு என்னும் காடுகளால்
        வீட்டுக் குள்ளே காற்றெங்குக்
கூடும் என்று சிந்தையின்றிக்
       கூறு கின்றோம் “காற்றில்லை”
ஏடும் உரையும் இருந்தென்ன
       எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்?

பட்டி தொட்டி எங்கணுமே
      பசுமைப் புரட்சி செய்திடுவோம்
எட்டிப் பார்க்கும் எம்வீட்டில்
      இசைக்கும் காற்றும் மழையுடனே
தட்டிக் கழிக்கும் அதிகாரம்
      தரமில் “மவுலி வாக்கத்தின்”
கட்டி டங்கள் விழுந்தனவே
      காசால் எங்கே போகின்றோம்?

”கத்தி” யுடனே வந்திங்குக்
       கத்த வில்லை கதறவில்லை
புத்தி யிலேதான் பட்டதனால்
       புரிய வைத்தேன் பகுத்துணர
பக்தி யுடனே யான்போற்றும்
       பாடல் வனையும் புலவர்கள்
சக்தி தந்த ஆற்றலிது
        சந்த வசந்தக் குழுமத்தில்!
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Wednesday, December 10, 2014

குப்பைத்தொட்டி !!!


 பெயர்:  குப்பைத்தொட்டி

 மாற்றுப்பெயர்: சுகாதார 'குப்பைத்தொட்டி'

 வயது: எப்ப வேனும்ண்டாலும் 'துரு'ப் பிடித்து தூக்கி வீசப்படலாம்.

 நிரந்தரமா இருக்குமிடம்: 1. ரோட்டோரம், 2. தெருவோர முச்சந்தி, 3. சாக்கடையோரம்

 வேதனைப்படுவது: மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்காமல் எல்லாக் கழிவுகளையும் ஒன்றாகச் சேர்த்து எங்கள் மீது கொட்டுபவர்களை நினைத்து.

 எதிரிகள்: குறிப்பிட்ட நேரத்தில் குப்பைகளை அல்லாமல் காலதாமதம் செய்யும் உள்ளாட்சி ஊழியர்கள்

 வருந்துவது: எங்கள் மீது மலக் கழிவுகளை கொட்டுபவர்களை நினைத்து

 சாதனை: சுற்றுப்புறத்தைச்  சுத்தப்படுத்தும் தொட்டி

 வேண்டுகோள்: மக்கள்தொகை பெருகிக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு ஊரிலும் எங்களுக்கும் கூடுதல் இட ஒதுக்கீடு அளித்து பொதுமக்களுக்கு கூடுதல் சேவையை அளிக்க ஆங்காங்கே தெருவின் முக்கியப் பகுதிகளில் தொட்டிகளை அதிக எண்ணிக்கையில் வைக்க வேண்டுகிறோம். மேலும் கொசுக் கடியிலிருந்து எங்களை பாதுகாக்கும் விதமாகவும், எங்கள் மீது வீசும் துர்நாற்றத்தை போக்கும் விதமாக எங்களைச்சுற்றி 'பிளிச்சிங்' பவுடரை இட வேண்டுகிறோம்.

 கருத்து: "குப்பைகளை தொட்டியில் போடுங்கள், வெளியில் போடாதீர்கள்", "உங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுங்கள்’’

இது ஒரு மீள்பதிவு

Saturday, December 6, 2014

[ 8 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(25)
உணர்வுகள் உள்ளத்தில் உன்னதம் ஆகக்
குணங்களில்செம்மையும் கூடும் - மணக்கும்
மதியிலும்நற்செயலில் மாண்பும்பிறப்பைத்
துதித்திடத் தெய்வம் துணை.

(26)
துணையில்லான் வாழ்க்கைத் துவண்டுவிடும் தூயத்
துணையில்லான் தன்மைச் சுவர்க்கம் - இணையின்
துவிதமில்லான்உள்ளம்தொழுதிடத் துன்பம்
தவிர்த்தேதான்இன்பம் தரும்.

(27)
தருவதில்ஊன்றித்தகுதியைக் கூட்ட
அருமைகள் காண்பார் அதிலே - பெருமைகள்
பேசியும்நீங்கிப் பிதற்றியே போகாமல்
ஆசிகள்பெற்றேநீ ஆள்.

(28)
ஆளுமை ஆற்றல் அருள்மிக்கோர் ஆற்றிட
சூளுரைக் காட்டுவோர் சொக்காரே -நாளும்
வழிப்பட நற்திறமை வல்லருள் மூளும்
விழிப்பின் நிலையில் விழை.
(தொடரும்)
நபிதாஸ்

வெண்பா (25) 
பொருள்: உணர்வுகள் ஒருவரின் உள்ளத்தில் மிக உயர்வானதாக இருக்க, அது அவரின் குணத்தினில் உயர் பண்பட்ட சிறப்பான நிலைகள் மிகுந்து மலரும். மேலும் அது அவரின் அறிவினிலும், செயலிலும் அந்த உயர்ந்த உன்னதத் தன்மைகள் தானே வெளிப்படும். அத்தகைய உயர் பிறப்பிற்கு உரியவரைப் புகழ இறைவனே வழிகாட்டித் துணையாக இருப்பான்.

வெண்பா (26) 
பொருள்: வாழ்வில் துணை இல்லையேல் அவ்வாழ்வு கசந்து துவண்டுவிடும். தூயத்துனையான எந்தத் துணையும் வேண்டாத இறைமையில் தன்னை பூரணமாக இழந்தான் ஆகிய பூரண இறையடிமையான இறைநேசரின் நிலை சுவர்க்கம் ஆகும். ஆகவே இணையுன்டாகும் துவிதம் இல்லாத மனதுடன்  ஓர்மையாய் ஒருமையில் தொழுதிடத் துன்பம் வாழ்வில் ஏற்படாமல் அதுத் தவிர்க்கப்பட்டே ஆனந்தமே தந்திடும்.

வெண்பா (27)
பொருள்: மேன்மக்கள் அல்லது ஞானிகள் தருகின்ற அல்லது பேசுகின்ற வார்த்தைகளில் முழுக்கவனம் செலுத்தி அதில் உள்ள உண்மைகளை உள்ளவாறு உணர்ந்து தனது அறிவை விருத்திச் செய்து சிறந்தவர்களாக தன் தகுதியை மேம்படுத்திக்கொள்வார். அவ்வாறல்லாமல் அப்பேச்சுக்களில் உதாசீனம் செய்து தனக்கு அது இது இப்படி அப்படித் தெரியும் என்றெல்லாம் பெருமைகள் பேசி அர்த்தமில்லாமலும் உலறாமலும் பணிவுடன் அவர்கள் சொன்னவிதம், கருத்து, அதன் நோக்கம் புரிந்து அதன்படி தான் நடந்து அதன்மூலம் அவர்கள் மனக்குளிர்ச்சியால் உளமார வாழ்த்தி, பல ஆசிகள் பெற்று இவ்வுலகில் உன்வாழ்க்கையை ஆள்.  

வெண்பா (28) 
பொருள்: நிர்வாகத் திறமையான ஆளுமை ஆற்றல் சூள்ளுரைகளால் மட்டும் வெற்றியைத் தராது. இறையருள் மிகுந்த நந்நெறியாளர்கள் ஆளுமையே நிலைத்த வெற்றியைத் தரும். ஒவ்வொருநாளும் நல்ல திறமைகள் நிறைந்திட வல்லவனின் அருள் பெற்ற நந்நெறியாளர்கள் வழியினில் வழிநடந்து இறையருள் மூளும் உயர்ந்த வழிகளிலேயே நிலைத்திருக்க விரும்பு

Friday, December 5, 2014

பற்று !

பற்றுவை பெற்ற தாயிடம்
பிறந்த நாட்டிடம்!
உறுபொருள் கொடாமல்
உதவி புரிந்தவை!

தந்தை சொல்மிக்க
மந்திரமில்லை!

தொப்புள் கொடியே
கொடுத்தது உணவு
தொட்டில் பிள்ளை
பால்தரும் அன்னை
தேசக்கொடியே
வேர்; நம் எல்லை!

உடலை மட்டும் பேணா,
ஊரையும் பேணுக!
இழுக்கும் மூச்சுக்காற்றாம்
உறவுகள்
காத்து நிற்பதால்
கடவுளின் அருள் சூளும்!

மதங்கள் எல்லாம்
"மதம் " உண்டாக்கும்
தேசநேசமே
மனிதம் சேர்க்கும்!

நாதத்தில் சிறந்தது
தேசிய கீதம்
கண்ணியம் செய்!

இன்னொருப் பகுதியில்
இடர்துயர் என்றால்,
உன்னது உயிரோ
உசும்பிட வேண்டும்!

வீட்டுக் கொரு
மரம் நடு
இதயங்களில்
நாட்டுப் பற்றை
நாட்டி வளர்!

மழை மண்ணுக்கு
மனித நேயம்
வாழ்வுக்கு!

வாதத்தில் வீழ்ந்தவரை
வாரி அணைக்கலாம்,
தீவிர -
வாதத்தில் வீழ்ந்தவரை
வீழ்த்தி சாய்க்கலாம்!
'கவிஞர்' அதிரை தாஹா

Tuesday, December 2, 2014

[ 3 ] எழுதலாம் வாங்க ! செய்தியும் அதன் பின்னணியும்

செய்தியும் அதன் பின்னணியும் பற்றி இன்னும் கொஞ்சம் பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன்...

புகைப்பட கலை ஆர்வம் அதிகரித்த நிலை, அதே போன்று கேமரா அளவு சிறியதாகி எல்லோரும் உபயோகிக்க ஏதுவான நிலை. 1980 களில் செய்தியாளருடன் புகைப்பட காரர்களும் இணைந்து செயல்படும் நிலை செய்திகளின் ஆதாரம் புகைபடத்துடனே நிரூபிக்கும் நிலை இருந்தது. பெரிய தலைவர்கள் தனக்கென புகைப்பட கலைஞர்களை நியமித்து வைத்திருப்பார். நடிகர்களும் தனக்கென பிரத்தியோக புகைப்பட கலைஞர்களை நியமித்து வைத்திருப்பார்கள்.

முன்பெல்லாம் கிரிக்கெட் விளையாட்டில் இரண்டு நடுவர் மட்டுமே இருப்பார்கள் அவர்கள் கூறும் தீர்ப்பே இறுதியானது. நவீன தொழில் நுட்பம் வருவதற்கு முன்பு புகைப்படகாரர்கள் விளையாட்டின் நிகழ்வுகளை படமெடுத்து செய்தியாக வெளியிடுவர். ஒருமுறை நடுவரால் ரன் அவுட்டை இல்லை என தீர்ப்பு சொல்லப்பட்டது. புகைப்பட கலைஞர்கள் எடுத்த போட்டோவில் மிக துல்லியமாக அவுட் என நிருபிக்கப்பட்டு விமர்சகர்களால் சர்ச்சைக்குள்ளானது. இதன் பின்னர் தொழில் நுட்பம் வளர்ந்த பின்னர் மூன்றாவது நடுவராக வீடியோ பதிவும் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று ராஜீவ் காந்தி கொலை கூட புகைப்படம் மூலமே நிரூபிக்க
பட்டது. செய்தியின் பின்னணியில் புகைப்படம் இன்றி அமையாத ஒன்று.
நிகழ்சிகளை பதிய முற்படும் செய்தியாளர்கள் முதலில் சூழ்நிலையை
விவரித்து எழுதுவார்கள். உதாரணமாக மறைவு செய்தியாக இருந்தால் சுற்றியுள்ளவர்களின் முகபாவங்கள், அவர்களின் செயல்பாடு, அதே போன்று அரசியல் எதிரியாக இருந்தவர் இறுதி சடங்குகளில் கலந்து கொண்டால் அவரின் முகபாவம் செயல்பாடுகளை கூட விளக்குவார்கள். வீட்டின் பின்னணியை கூட விளக்கி எழுதுவார்கள். புகைப்படம் வந்த பின்னர் இவைகளுக்கு தேவையே இல்லாமல் போயிற்று.
தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
Pro Blogger Tricks

Followers