.

Pages

Sunday, August 2, 2015

அற்புத மனிதர் - அப்துல் கலாம் !

மக்கள் திலகமே!
மாமணியே!
அப்துல் கலாமே
நீ கேட்டதை விட
அதிகமே அருளினான்
இறைவன்!

நிறுத்தாதப் பேச்சு
நீ பிறந்து விழுந்த
நாளிலிருந்தே!
பிராணன் போகும் போதும்
பேசியவரே!

பேசிய தெல்லாம்
தேசியம் காக்க!
இளஞ்சிட்டுகளை
இராஜாளிப் பறவைகளாக்க!

கடுகைப் பொறித்த போதும்
"கலாம் " என்றது
கடுகளவு உள்ளப்
பொருளிலெல்லாம்
களங்கண்டவன் நீ!

கனவு கண்டவன்
களிக்க வல்ல,
காக்க நாட்டை
சாதிக்க!

அக்னிச் சிறைக்குள்
அடை காக்கப் பட்டவன்
ஆழ்ந்த ஞானம்பூண்ட
தந்தையாம்
மரத்தில் இருந்து
விழுந்த கனி
உலகமே சுவைத்தது!

உன் தலையில்
வகுடு பிளந்தாலும்
உள்ளத்தில்
ஒரு
கீரலுமில்லை!

விரிந்த பார்வை
வியப்பான நோக்கு!
நாட்டு மக்கள்
ஒன்றுபட
நாள்தோறும் பிரார்த்தித்தாய்!
மதத்தை இணைக்கும்
கயிறாக்கினாய்!

வாழ்வதும் வீழ்வதும்
நாட்டுக்கே என்ற
நற்குறிக் கோளை
நெஞ்சங்களில்
மலர்ச்சி தீபமாக்கினாய்!

நாட்டு மக்களின்
உறுதிக்கு
உறுதுணையாகி
களங்கமிலா கல்வியைப்
போதித்தாய்
வேளாண்மையை
வளர்த்தாய்

கணிப்பொறியில்
கருத்தைப் பொருத்தி
ககனத்தார் முன்
பாரத நாட்டைப்
பார்த்திட வைத்தாய்
வியப்பாக!

மதச் சகிப்புத்
தன்மையை
மண்முடியாய் பூண்ட
ஜனாதிபதி நீ!

நல்வழியில் நடத்திச் செல்ல
எண்ணி எண்ணித்
தொழுதாய்!

இறைவன் நடத்தினான்
நன்றி காட்டினாய்!
'செயல்களின் பலனே
செய்தவனுக்கு ' என்ற
வேதக்கருத்தில் ஊறினாய் :
உன்மரணத்தில்

அதை
உலகமும் உணரவைத்தாய்!
வேதம் கற்றவன்
பிறமத
நாதங்கற்றவன்
விந்தையாளனை
விளங்கிக் கொண்டவன் :

வளர்பொருள்
வல்லரசாதல் -
நாட்டைப் பற்றி
உன் கனவு!

இரண்டாயிரத்து
இருபதை
இலட்சியப் புள்ளியாக்கினாய்
அதைக்காணு முன்பே
மண்ணறைப்
பள்ளிக்குப் போனாய்!

கோடிக் கணக்கான
நெஞ்சங்களில்
கூடுகட்டி வாழும்
புல்புல் நீ!
குவலயம் கண்டிராதப்
புகழ்மாலைப் போட்ட
புனிதன் நீ!

வளர்ந்த இந்தியாவைக்
காண
உன்னுள் எரியும்
அறிவுத் தீயை
அணையாமல் காப்போம்
உறுதி!

ஆசானின் பிரம்படி
உன்னை
விஞ்ஞானி யாக்கியது!
தந்தையின் உபதேசம்
உன்னை
மெய்ஞ்ஞானி யாக்கியது!
தாயின் வளர்ப்பு
உன்னை
உலகப் பிரஜையாக்கியது!

மற்றவர் மகிழ -
நீமட்டும் அழுதுப்
பிறந்தாய்!
இன்று
நீமட்டும் மகிழ
உலகெல்லாம் அழ
எங்களைப்
பிரிந்தாய்!

ஓ! அப்துல் கலாமே
நீர் அற்புதமான மனிதர்!
நீ பிறந்ததும் சிறப்பு
நீ வாழ்ந்ததும் சிறப்பு
உன்னுடைய இறப்பு
சிறப்பே!
'கவிஞர்' அதிரை தாஹா

[ 7 ] பத்திரிக்கையாளன் ஒரு பார்வையாளன் !

என் அன்பு நெஞ்சங்களே ! உங்களிடம் மீண்டும் என்னுள் எழும் எண்ணங்களை நான் வாசித்த,பார்த்த, ரசித்தவற்றை பகிர்ந்து கொள்வதில் மனநிறைவடைகிறேன் .

ஊடக பார்வை:
கடந்த சில நாட்களாக இந்திய ஊடகத்தை முற்றிலும் ஆட்கொண்ட செய்தி மறைந்த முன்னாள் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களை பற்றிய செய்திகள் தான்.
* ஒரு விஞ்ஞானியாக
* ஒரு எழுத்தாளனாக
* ஒரு விரிவுரையாளனாக
* ஒரு மேடை பேச்சாளனாக

இப்படி பண்முக திறமையை தன்னுள் அடக்கி கொண்ட ஒரு அறிவாளி அவரின் இத்தனை திறமைகள் அனைத்தும் வருங்கால இளைஞர்களிடம் போய் சேர வேண்டும் என்று நினைத்த அவருடைய வேட்கை  எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.  அவருடைய பொன் மொழிகள். எல்லோராலும் ஏற்று கொள்ள தக்கவை .

"உன் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் உன் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்"

"கனவு காணுங்கள், உறக்கத்தில் அல்ல உறக்கத்தை விரட்டும் உனது எதிர்கால இலக்கு பற்றியதாக உள்ள கனவு"

இப்படி மாணவ செல்வங்கள் பற்றிய சிந்தனை தான் தாய், தந்தையை போற்ற வேண்டும் என்று எப்பொழுதும் அறிவுறுத்துவார். அவரின் இழப்பு பேரிழப்பு தான்.

வலைதளங்களில் அவருடைய செய்திகளும், பொன்மொழிகளும் நிறைத்து தனது அஞ்சலியை இளைஞர்கள் செலுத்தி வருகிறார்கள்.

நான் பத்து வருடத்திற்கு எனதூரில் ஒரு டியூசன் சென்டர் நடத்தி வந்தேன். ஆங்கிலம் எழுதவும், படிக்கவும் பயிற்சி அளித்தேன். கல்லூரி படிப்பை முடித்த இளைஞன் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் தருவாயில் ஆங்கிலம் படிக்க வரவில்லை என என்னிடம் வந்தான் நான் கொடுத்த பயிற்சியில் ஓரளவு தெரிந்து கொண்டான். ஒரு நாள் நான் எனதூரில் உள்ள நூலகம் செல்ல நடந்து சென்று கொண்டிருந்தேன். எதிரே வந்த அந்த மாணவன் எனக்கு அளித்த மரியாதையை இன்றும் என்னை நெகிழ வைக்கிறது.

இலட்ச கணக்கான மாணவ சமுதாயத்தை கவர்ந்த அப்துல் கலாம் அவர்களுக்கு அவர் மறைவுக்கு இந்திய நாடே மரியாதை செலுத்துவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. எல்லா பணியை விட ஆசிரியர் பணியே சிறந்த பணி என்பதை அறிந்து கொள்வோம்.
மீண்டும் சந்திக்கிறேன்...
பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

என் பார்வையில் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் !

வேதத்தின் வரிகளையும் வேந்தரின் வழிகாட்டலையும் வாய்ச்சொல்லில் சொல்லுவதும் அறிவு. தன் வாழ்வின் வழியாக வாழ்ந்துக் காட்டுவதும் உயர்வு.

அதிகாலை தொழுகை, பள்ளியில் ஓதல் அதன்பின் இரயிலடியில் செய்தித்தாள் விற்பனை, பிறகு கல்வி கற்றல். இளம் வயதில் இப்படி வாழ்க்கையில் சுறுசுறுப்பு, வறுமை வதைக்க விடாமல் விடாத துருதுருப்பு.

மனிதகுலத்தில் அனைவரும் சமம். வர்ணபேதங்கள் பிரிக்கமுயன்றாலும் உள்ளன்பு,அவர் உண்மையாக இருந்ததினாலேஅது பேதங்களை உடைத்து ஒற்றுமை சுகத்தை, மனிதத்தை நுகர்ந்தது.

அக்கம் பக்கம் அனைவரும் ஒரே வழிநெறியில் இல்லாவிட்டாலும் அவ்வழிகளில் தன்னெறியுடன் பழகும் பக்குவம் இவரின் குணத்தின் உயர்வே.

வறுமையில் வதந்குவோர் கல்வியை விடாமல் வாலிபத்திலும் கற்பது பொதுவாக எல்லோர்க்கும் ஏற்புடையதல்ல. ஆனாலும் அக்காலத்தில் அத்திப் பூர்த்துப்போல் அங்கும்மிங்கும் இலட்சியவாதிகள் இவர்கள்போல் இருக்கத்தான் செய்தார்கள்.

கற்பதே நோக்கம் அதை விட்டு நான் பெரியவன் எனது முறை சிறந்தது என வேற்றுமை உணர்வுகள் வாலிப வயதில் தலைதூக்காமல் ஒற்றுமையில் உழன்று மனித அன்பை வெளிப்படுத்தும் சகஜ மனம் எல்லோர்க்கும் ஏற்படுதல் விருப்பமானதே. ஆனாலும் அவ்வாறு வாழ்ந்தவர்கள் போற்றுதலுக்குரியவர்களே. அதில் இவர் விதிவிலக்கல்ல.

ஏழ்மை எப்படிப் பந்தாடினாலும் ஆழ்மனதின் ஆசை உயர்கல்வி. அதனை அடைவது தெளிவான உள்நோக்கு, தொலைநோக்கு. அந்த அப்பியாசத்திலே ஊறி வளர்ந்ததால் இலட்சிய இலக்குகளை கனவு காணவேண்டும் என்ற விடாப்பிடியான வழிகாட்டல். தான் பெற்ற இன்பம் வையகம் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம்.

அக்கம்பக்கம் அன்மித்தவர்கள் இந்துமத வழிப்படி வாழ்பவர்கள். கற்கும் சூழல் கிருத்தவமதப்படி அமைவுகள். இதனில் இஸ்லாமிய வழியில் வளர்ந்து வாழ்ந்து வந்ததால்' நான் இஸ்லாமியன் கிருத்துவ மெழுகுவர்த்திக் கொண்டு இந்து வணக்கங்களுக்குறிய குத்து விளக்கு ஏற்றுகிறேன்' என்று தாமரை இல்லைத் தண்ணீர்போல் பழக்கப்பட்டு வளர்ந்த அவர்களின் மனதின் வார்த்தைகள் மதிக்கப்பட வேண்டியவைகள்.

இஸ்லாமிய நெறியில் தன் மனதில் பண்பாடு இருந்ததால் சொற்ப காலத்தில் பாரதம் முழுவதும் ஏன் உலகளவிலும் அவர் புகழ் உயர்ந்தது. ஏனென்றால் வழிகாட்டல்கள் வாழ்ந்து காட்டவே அல்லாமல் உச்சரிக்க மட்டும் அன்று என்பதால்தானே !

ஜாதி, மதம், அரசியல் போன்ற எந்த சாயமும் பூசிக்கொள்ளாத இஸ்லாமியர் வாழ்வு இவர் வாழ்வுப் பிரகாரம்தானே இக்காலத்தில் இருக்கும்.

வாழும் நாட்டின்பற்று ஈமானில் ஒரு பங்காக உள்ளது. அதனாலே அவர் 'நூறு கோடிக்கும் அதிகமான என் நாட்டு மக்களின் முகத்தில் புன்னகைக் காண கனவு காண்கின்றேன்.இந்தக் கனவு மெய்ப்பட நிலையான பொருளாதாரத்தை உருவாக்க தேசம் கொள்ள வேண்டிய பார்வை' என்று தனது கலந்துரையாடலில் கூறியது ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதே.

நன்றி மறப்பது நன்றன்று என்பதை தான் மிக உயர்பதவியில் இருக்கும்போது வெளிப்படுத்துவது மிக உயர்ந்த பண்பு. தன் உரைகளில், கருத்துக்களில்  தன் கல்வி ஆசான்களை ஞாபகம் செய்ய என்றும்இவர்கள் மறந்ததில்லை.

தான் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று முதல் முறையாக கேரளாவுக்குச் சென்று, அங்கு தன்னுடைய விருந்தாளிகளாக திருவனந்தபுறத்தில் தான் விஞ்ஞானியாகப் பணியாற்றியபோது அறிமுகமான எளியவர்களான செருப்புத் தைப்பவர் ஒருவரையும், ஒரு சிறிய உணவு விடுதி உரிமையாளர் ஒருவரையும் மட்டுமே அழைத்துக்கொண்டது உயர்ந்த, பரந்த எண்ணமுடையவரின் பண்பல்லாமல் வேறாகாது.

விழா மேடையில் ஐந்து நாற்காலியில் ஒன்று மட்டும் ஜனாதிபதிக்காக சிறப்பைக்காட்ட வேறுபட்டிருந்தது. அதில் அமர அவர் மறுத்து அனைவருக்கும் சமமான நாற்காலி அமைக்கச்செய்து அதில் ஒன்றிலே அமர்ந்தது சமத்துவம் தன் உணர்விலே எச்சூழலிலும் இல்லாமல் போகாது என்று வாழ்ந்துகாட்டுதல் வழிகாட்டப்பட்ட வழிநெறி பிறளாது இருப்பதின் சான்றன்ரோ !

அவரவர் வழிகள் அவரவர்க்கு என்பதற்கேற்ப அனைத்து வழிகளையும் மதித்து, அவர்கள் மனதில் சிறு மரு உண்டாகாமல் அவர்கள் வழிபாடுமுறைகளை மதித்து, உண்மைகள் பலகோணத்தில் உள்ளதை உணர்ந்தும் அதனையும் மதித்தும் நடப்பதில் வெகுஜன மக்களை அரவணைத்து செல்வதில் பொதுநிலை மனதுடைய ஒரு ஜனாதிபதிக்கு கடினமானதுதான். இருப்பினும் தன் உள்ளார்ந்த நிலையினில் தெளிவாக இருந்தால் எங்கும் யார்மனமும் புண்படாமல் வாழலாம் என்று செயல்படுவதில், செயல்படுத்தியதில் சிலருக்கு புரிந்துக்கொள்வதில் குழப்பம் உண்டானால், அக்கவனிப்பாரில் குழப்பம் ஏற்பட்டால் அவர்தான் என்னதான் செய்வார் ?

போட்டோக்கள் எல்லாம் பிம்பங்கள். அப்போட்டாவில் உள்ளம், எண்ணம், மனநிலை தெரியாதுதானே ? எனவே பல வேறுபட்டக் கருத்துக்கள் ஏற்படுவதும் தடுக்கயியலாதுதான்.

என் இறப்பு இந்திய பொருளாதரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்பதால் 'நான் இறந்தால் விடுமுறை அளிக்காதீர்கள்' என்றார்.

தனது பாதுகாப்பிற்காக முன் செல்லும் ஜீப்பில் நின்றுகொண்டு வந்தவரை உட்காரச் செய்ய எடுத்த முயற்ச்சிகள், தன் பங்களாவில் கால் பாதிக்கப்பட்டு கிடந்த மயிலின் காலுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து அது திரும்ப தன் 370 ஏக்கர் பங்களாவில் சுதந்திரமாக வாழ வழிவகுத்தது எவ்வுயிரையும் தன் உயிர்போல் மதிக்கும் கருணை உணர்வின் சான்றுகள் அல்லவா !

உயர் அல்ல இந்திய உச்சப் பதவியில் இருந்த இவர் குடும்பம் இன்றும் நடுத்தர நிலையில் இருக்கிறது. அவருக்கு ஐந்து கோட் உடுப்புகள். அவரின் அறையில் மேஜை நாற்காலி, படுக்க கட்டில், அத்துடன் பெற்ற நினைவுப் பரிசுகள், புத்தகங்கள்.

இந்திய அமைச்சரவை அவரை 'உண்மையான தேசியவாதி' என்று புகழாரம் சூற்றியுள்ளது. இது அதிகம் சிந்திக்க தூண்டுவதல்லாமல் உண்மையின் மணிமகுடம் என்றாலும் மிகையாகாது.

இவரின் இழப்பு இந்தியாவிற்கு மட்டும்மன்றி உலகுக்கு என்று அமெரிக்க மாளிகையில் அந்நாட்டு தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறப்பது இவரின் அறிவுக்கு, மனிதாபிமானத்திற்கு என்றாலும் மிகையில்லை.

இந்த பிரம்மச்சாரிக்கு குழந்தைகள்மீது அளவற்ற பாசம். மாணாக்கர்களே ஆக்கப்பூர்வ சக்திகள். அதனால் இந்தியாவை 2020க்குள் வளர்ந்த வல்லரசாக்க இவர்களுக்குள் இவர்கள் இருக்குமிடம் சென்று இறக்கும்வரை அறிவை விதைக்க கடின முயற்சி.

இன்னும் இவ்வாறு எழுதிக்கொண்டே போகலாம். ஆனாலும் ஒவ்வொரு இந்தியனும் இவைகளை அறிந்ததுதான்.

பல மேடைகளில் இவர் பெயர் உச்சரிக்காமல் இருந்ததில்லை. இருந்தாலும் எளிமைக்கு, நேர்மைக்கு, சமத்துவத்திற்கு இந்த இஸ்லாமியரிவரை எடுத்துக்காட்டாக இனியும் எல்லா மேடைகளிலும் உச்சரிக்கப்டாமல் போவதில்லை.அவரின் அருமை உணர்வோம் அவர் சொன்ன கனவை காண்போம். அதன் மூலமும் வாழ்வில் வெல்வோம்.

வேதத்தின் வரிகளையும் வேந்தரின் வழிகாட்டலையும் வாய்ச்சொல்லில் சொல்லுவதும் அறிவு. தன் வாழ்வின் வழியாக வாழ்ந்துக் காட்டுவதும் உயர்வு.

நபிதாஸ்
Pro Blogger Tricks

Followers