.

Pages

Wednesday, July 15, 2015

அவன் பேசினால் !

உன்னி லுருவாகி யுள்ளதான
.....வுந்தனகங்காரம் மெல்லவே
என்னில் கரைந்திடவே தந்தேனே
.....என்னை வணங்கிடும் தத்துவமே.
நின்னில் வழக்காக நித்தமுமே
.....நிந்தன் நினைவினை பத்தாகத்
தன்னில் வளர்த்தே வருகிறாய்த்
.....தம்மைக் கெடுத்தே வருந்துகிறாய்.

உடம்பு வணக்கத்தில் தோற்றமாக
.....வுள்ளம் பலவெண்ண மாற்றம்
தடத்தில் விலகி வழக்காகத்
.....தன்னில் நடத்தும் பழக்கம்.
அடக்கும் வழியறிந்து வொன்றாகி
.....யமைதி தரித்து நன்றே
நடத்தும் முறையில் வணங்க
.....நபியின் நிலையி லிணங்கு.

அசைவு வனைத்துமடங்கி
.....யமைதி நிலவ முடங்கி
திசையி லொடுங்கியே யென்னைத்
.....தெரிந்து யிழந்திடு வுன்னை.
இசைந்தே உரையாடல் நானு
.....மிரசூலுமத்தஹி(யா)தில் பேணும்
விசையை யறிந்தே வணங்கும்
.....விதமே விரும்ப மெனக்கு.

உந்தன் வணக்கம் பலனும்
.....உனக்கே வுதவும் விளங்கிடு
எந்தன் வழியைநீ பற்றிட
.....யேற்கும் பணிவையே பெற்றாய்முன்.
தந்தேன் வணக்கத்தி லென்னை
.....தகுதி உயர்த்திடு வுன்னைபின்.
பந்தம் தெளிந்திட வுந்துதலில்
.....பட்டிட்டால் பக்குவமே வுந்தனிலே.

நபிதாஸ்

Wednesday, July 8, 2015

[ 6 ] பத்திரிக்கையாளன் ஒரு பார்வையாளன் !

அன்றாட நிகழ்வுகள் நம் கண் முன்னே கடந்து செல்கின்றன. ஆனால் நம் மனதில் நெருடும் நிகழ்வுகள். நம் நினைவுகளை விட்டு விலகுவதில்லை. கடந்த ஒருவாரமாக வாட்ஸப்பில் வந்த ஒரு விடியோ பதிவு "ஒரு சிறுவனை, அதுவும் மூன்றோ அல்லது நான்கு வயது நிரம்பிய சிறுவனை மது அருந்த வைத்து வேடிக்கை பார்த்த விடியோ காட்சி பெறும் சர்ச்சயை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வு பெரும்பான்மையான மக்களிடம் போய் சேர்ந்ததை அறிந்த இளைஞர்கள் மீண்டும் வேறு சிறுவனை வைத்து மது அருந்த வைத்து அதனை படம்பிடித்து முகநூலில் போட்டுள்ளனர். இதுபோன்ற பதிவுகளை நாம் அங்கீகரிக்க கூடாது. சிலர் இதனை எதிர்ப்பதாக கூறி மீண்டும் பதிவு செய்கின்றனர் அதனை கூட செய்யாதீர்கள்.

மன நிறைவை தந்த முகநூல் பதிவு: தமிழகத்தில் இந்து-முஸ்லிம் உறவு பண்டை காலம் தொட்டு உறவு முறை கூறி அழைத்து வந்த பழக்க வழக்கத்தை பற்றிய விரிவான பதிவை பதிந்து இருந்தார்கள். இன்றைய காலத்திற்கு ஏற்ற பதிவாய்  என் மனதிற்குபட்டது.

இன்றைய காலத்தில் மதச்சாயம் பூசி அரசியல் செய்யும் சூழலில் பொதுவான அரசியலில் மக்கள் ஒன்று சேர வேண்டும். மத நம்பிக்கைக்கு யார் ஆள்வது என்பதற்கும் முடுச்சு போடுவதால் பல மோதல்கள் பல்லாயிரக்கணக்கான
உயிர் சேதங்கள் தவிர்க்க, கொள்கை, நம்பிக்கை இவற்றின் அடிப்படையில் நம் நாட்டில் மோதல்கள் தொடர்வதை நிறுத்த பழைய காலத்தில், உறவுமுறை கூறி  வாழும்  முறை மீண்டும்  வழக்கத்தில் வர வேண்டும்.

ஒருமுறை கவிஞர் வாலியும், கவிஞர் கண்ணதாசனும் சந்தித்து கொண்டார்களாம் ( சாதரணமாகவே ஒரு கவிஞன் மற்றொரு கவிஞனின் படிப்பினை பாராட்ட மாட்டான். தனக்கென ஒரு இடம் அதில் தான் மட்டுமே சக்கரவர்த்தி என்ற எண்ணம் இருக்கும் ) கவிஞர் கண்ணதாசன் அவர்கள், கவிஞர் வாலி அவர்களை பார்த்து எனக்கு நிகராய் நீ கவிதை எழுதுகிறாய். உனது கவி, என் மறைவிற்கு பின் இரங்கற்பாவாக அமைய வேண்டும் என்றாராம். கண்ணதாசன் அவர்கள் கூறியபடியே சில மாதங்கள் கழித்து மறைந்து விட்டார். இரங்கல் கூட்டம் நடந்தது. வாலி மேடை ஏறினார். இரண்டே வரியில் தனது கவியை முடித்துக்கொண்டார்.

"காலன் படிக்கத்தெரியாதவன். நல்ல கவிதை புத்தகத்தை கிழித்து விட்டான்" என்று கூறி மேடையை விட்டு இறங்கி விட்டாராம் கவிஞர் வாலி.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...
பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

* முகப்பில் உள்ள படம் மணிமேகலை பதிப்பகம், கற்கண்டு வார இதழ் ஆசிரியர் லேனா தமிழ்வாணன் அவர்களின் மகனுடன் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் சந்தித்த போது எடுத்த படம்.

Friday, July 3, 2015

அதில் பங்கு வேண்டாம் !

உண்ணாமல் இருந்தாலும்
உன்னோன்பு ஏற்கலாகாதாம்
தண்மை குணங்களாக
தகுதி வரவேண்டும்

பொய்யான பேச்சுகளும்
பொய்யானநடவடிக்கைகளும்
மெய்யாக விட்டிட்டே
மேன்மை பெறவேண்டும்

வணக்கங்கள் எதற்காக ?
வல்லோனே கேட்க்கின்றான்
இணக்கமான குணமில்லை
எப்பொழுது மனிதத்தன்மை ?

பரந்த மனமில்லை !
பக்குவமும் இன்னுமில்லை !
அரவ குணங்களே
அப்பப்ப அரங்கேற்றம்

'எல்லாப் புகழும்
இறைவனுக்கே' என்றானே
வல்லோன் மொழிதனிலே
வாசிப்பு மட்டும்தானா !?

திட்டங்கள் தீட்டி
தேகம் குளிரலாமோ !
பட்டங்கள் சூற்றி
பதவி பெறலாமோ !?

தானே ! வரவேண்டும்
தருவதும் அவன்தானே
வீணே ? வருத்தங்களும்
விலகிடத்தான் வைத்திடுமே

அற்ப ஆசைகளும்
அப்பப்ப அரங்கேற்றம்
சொற்ப நேரம்தானே
சுகமும் நிற்கும் !?

நித்தியன் ஒன்றே
நிறைவான நோக்கம்
சத்தியமாக வாழ்தலே
சன்மார்க்க வழியாகும்

புத்திகளில் புகுந்திட்ட
புதுமைகளைக் களைந்திடுவோம்
பத்தினித் தன்மைகளை
பயன்பாட்டில் கொண்டிடுவோம்

அகங்காரம் அவனுடையது
அதில் பங்குவேண்டாம் !
இகத்தினில் வாழ்ந்திடவே
இதனையும் மனம்கொள்வோம்

'தான்''நான்' அழிந்தே
தகுதி உயரவேண்டும்
ஏன்னென்றால் அந்நிலை
ஏகனின் தனிநிலையாகுமே.

நபிதாஸ்

Wednesday, July 1, 2015

[ 22 ] அவன் அடிமை: வெண்பா அந்தாதி

(81)
நாடிடுவீர் உச்சமாக நாயகரின் வாழ்வுதனைத்
தேடிடுவீர் உந்தன் தியானத்தில் - வீடுபேறும்
இல்வாழ்வின் நல்லமைவாய் என்றும் நிலைத்திடுமே
சல்லாபம் விட்டே தரித்து.

(82)
தரித்திட வேண்டும் தலைவனில் ஆழப்
புரிந்திட நல்லடிமைப் போல - அரிதாகும்
துன்பம், துயரம், துரோகங்கள் வாழ்வினில்,
இன்பம் நிறையும் இணங்கு.

(83)
இணங்கியே இல்லாதும் ஏகனில்எல் லாம்மாய்
வணக்கத்தில் ஒன்றி வரனும் - சுணங்காதாம்
ஆற்றல்கள் நோக்கத்தை ஆற்றிவிடும் எப்போதும்
போற்றிடுவார்மேன்மைப்புகுத்து

(84)
புகுந்திடு ஏற்றமிகுப் புண்ணிய வாழ்வில்
மிகுந்திட ஆனந்தம் மின்னும் - வகுத்திடு
வல்லவன் பாதையில் வாழ்வுகள், தன்னைப்போல்
எல்லாமும் என்பதில் என்று.

நபிதாஸ் (தொடரும்)

வெண்பா (81
பொருள்: மனிதகுல முன்மாதரி நாயகப் பெருமானின் வாழ்க்கை முறைகளை தீவிரமாக விரும்பி நாட்டம்கொண்டு மனவோர்மை நிலை தியானத்தில் அவ்வாழ்வு நிலைகளை சிந்தித்து அடைந்துக்கொள். அதன்மூலம் வீடுபேறு என்ற சுவர்க்கநிலை உன்னுடைய இல்லற வாழ்க்கையிலே நல்லமைவாக இனி நிலைத்துவிடும். அதனால் சிற்றின்பம் தூண்டும் பேச்சுக்களை விட்டு அந்நல்வழியில் உன்னைப் புகுத்தி அவ்வாழ்வையே அணிந்துக்கொள்.

வெண்பா (82
பொருள்:  இறைவனை நன்கு ஆழப் புரிந்திட்ட நல்ல அடிமைப்போல இறைவனின் வழிகாட்டுதலைத் தரித்துக்கொள். அதனால் துன்பங்கள், துயரங்கள், துரோகங்கள் உன் வாழ்வில் இல்லாமல் போய் மாறாக இன்பம் வாழ்வில் நிறைந்துவிடும். அதனால் அந்நல்லடிமை வழிகாட்டுதலை உன்னில் இணக்கமாக்கி அமைத்துக்கொள்.

வெண்பா (83
பொருள்: இறைவணக்கத்தில் அவனன்றி ஏதுமில்லாத அவனில் தன்னையிழந்து ஒன்றிவிடனும். அவ்வாறானவர்களின் நோக்கங்களை ஆற்றல்கள செயலக்கிவிடும். அவைகள் காலத்தாலும் போற்றப்படும். அத்தகைய மேன்மையான வணக்கத்தை உன்னில்கொள் என்பதாகும்.

வெண்பா (84
பொருள்: நன்மைகள் செய்யும் புண்ணிய வாழ்க்கையாக உன் வாழ்க்கையை அமைத்திடு. அவ்வாறாக அங்கு ஆனந்தம் பிரகாசிக்கும். இறைவன் வகுத்திட்ட பாதைகளை தன் வாழ்க்கையின் பாதையாக அமைத்திட தன்னைப்போல் எல்லாமும் என்ற பரந்த எண்ணத்தில் அப்புண்ணிய வாழ்வு அமையும்.
Pro Blogger Tricks

Followers