.

Pages

Saturday, December 31, 2011

நிலம் வாங்கப் போறிங்களா ?


அதிரை : 24/12/2011 ,


சகோதரர்களே ! நாம் அனைவரும் இரவு பகல் என பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கக்கூடிய பணத்தில் நல்லதொரு செயல் திட்டங்களை தீட்டி நிறைவேற்றுவது என்பது நிதர்சனம். குறிப்பாக திருமணம் செய்தல், நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், நகைகள், பொருட்கள் வாங்குதல், பிள்ளைகளின் கல்வி, சகோதரிகளின் திருமணம், பெற்றோர்களின் மருத்துவ செலவு மற்றும் அன்றாட செலவுகள் என எண்ணற்ற நம்முடைய ஒவ்வொரு கடமைகளையும் சிறிது சிறிதாக நிறைவேற்றிக் கொள்வோம்.

நமதூரில் வசிக்கக்கூடிய அனைத்து சகோதரர்களுக்கும் நிலம் வாங்கி வீடு கட்டுதல் என்பது ஒரு கடமையாகவோ, கனவாகவோ இருக்கும். மேலும் நமதூரில் விற்கக்கூடிய மனைகளின் விலைகளை நன்கு அறிவீர்கள். இவ்வளவுத் தொகையை கொடுத்து வாங்கு முன் நாம் கவனமாக கீழ் கண்ட முறைகளை பின்பற்றி பாதிப்புகள் ஏற்படாதவாறு நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மனைகள் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை :

1. நிலத்தின் லே-அவுட் ( Layout ) போட்டு அதற்கு அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

2. நிலத்தின் பகுதி பத்து ஏக்கருக்கு ( அதாவது முப்பது “ மா “ ) குறைவாக இருந்தால், மாவட்ட டீ.டி.சி.பி. ( Directorate of Town and Country Planning – DTCP ) அலுவலகத்தின் அனுமதி தேவை.

3. நிலத்தின் லே-அவுட்டில் சாலை வசதி, பூங்கா, பொது இடம் என்று இடங்களை ஒதுக்கிருக்க வேண்டும்.

சாலை, குடிநீர், மின்சாரம் வசதிகள் விரைவில் நமது உள்ளாட்சியின் மூலம் கிடைக்ககூடிய வாய்ப்புகள், மேலும் நாம் உடனடியாக வீடு கட்டும் சூழ்நிலை உருவானால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியின் மூலம் ‘ புதிய வரைபட அனுமதி ‘ என பயன்களை அடையலாம்.

சொத்துகள் / மனைகள் வாங்கும் போது என்ன என்ன “ டாகுமென்ட்ஸ் “ கள் கவனிக்கப்பட வேண்டியவை ?

1. பட்டா : ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது - பட்டா. இப்பட்டாவில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், ( Survey Number and Subdivision ), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.

2. சிட்டா : ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா ? என்பதும் தீர்வை ( வரி ) கட்டிய விவரங்கள் சிட்டாவில் இருக்கும்.

3. அடங்கல் : ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் 'அடங்கல்'. அடங்கலில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இருக்கும்.

4. வில்லங்க சான்றிதழ் ( Encumbrance Certificate ) : 22 ஆண்டுகள் வில்லங்க சான்றிதழ் போதும். 30 ஆண்டுகள் ரொம்ப நல்லது. சொத்தின் உரிமை ( Ownership ) , சொத்தின் நான்கு எல்லைகள், பேங்க் அடமானங்கள், நீதி மன்ற வழக்குகள் இவைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

5. சொத்து ஆவணம் ( பத்திரம் ) :

1. நிலத்தின் உரிமையாளர் உயிரோடு இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்தோடு நிலம் விற்கப்படுகிறதா ? என்று தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமான விஷயம், யாரெல்லாம் வாரிசுதாரர்கள் என்று வாரிசு சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்வது. உரிமையுள்ள வாரிசுகளில் யாரேனும் மைனராக இருந்தால், உயர்நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் ( Guardian ) மூலம்தான் சொத்து விற்கப்படவேண்டும்.

2. அதிகாரம் பெற்ற முகவர் ( Power of Attorney Holder ) மூலம் சொத்து வாங்கும்போது, முகவருக்கு சொத்தை விற்கும் அதிகாரம் இருக்கிறதா என்பதை அதிகார ஆவணத்தை தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், விற்பனை ஒப்பந்தம் செய்வதற்கு மட்டும் கூட அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அப்படிபட்டவரிடம் இருந்து விற்பனை ஆவணம் பதிவு செய்துக்கொள்ள முடியாது. அதிகாரம் கொடுத்தவர் உயிரோடு இருக்கிறாரா ? என்று தெரிந்துக்கொள்ளவும். இல்லையென்றால், அதிகாரமும் இல்லை. பவர் பத்திரப்பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரமாகவும், அதே சமயம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பவர் பத்திரம் பதிவு செய்தால், ரூ.1,000 கட்டணம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3. மனநலம் பாதிக்கப்பட்டவரின் சொத்தை வாங்குவதற்கும் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும். நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் போது, உரிமை, உடமைகளுடன், அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

4. முன்பணம் கொடுப்பதற்கு முன் கண்டிப்பாக மூல ஆவணத்தை பார்க்க வேண்டும். மூல ஆவணம் இல்லையென்றால், சொத்து அடமானத்தில் இருக்கலாம்.உங்களிடம் கொடுக்கப்பட்ட விற்பனை ஆவணம், மூல ஆவணமா ( Original Deed ) அல்லது படி ஆவணமா ( Duplicate copy ) என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். மூல ஆவணம் நமக்கென்று கிடைக்க வாய்ப்பில்லாத அபார்ட்மெண்ட் ப்ளாட் விற்பனையின் போது, மூல ஆவணத்தை பார்வையிடுவது அவசியம்.

5. அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கும் போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும், நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அபார்ட்மெண்ட் கட்ட அனுமதி, திட்டத்தின் அனுமதி, வரைபடத்தின் அனுமதி என்று அனைத்து அனுமதியையும் பார்க்க வேண்டும். அனுமதி பெற்ற வரைப்படத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருக்க கூடாது.

6. விற்பனை ஆவண பதிவிற்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்துக்கொள்வது நல்லது. விற்பனை ஒப்பந்தத்தில், முன்பணம், விற்பனைத் தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

இறைவன் நாடினால் ! தொடரும்............

TEEN AGE – பருவம் !


அதிரை : 26/12/2011 ,

நமது வாழ்க்கையில் நான்கு பருவங்களாக பிரித்து அதில் குழந்தை பருவம், வாலிபப் பருவம், குடும்பப்பருவம், முதுமைப்பருவம் என கணக்கீடு செய்தால் இதில் ரொம்ப முக்கியமானது, நுட்பமானது, சிக்கலானது வாலிபப் பருவமே.

நல்ல ஒரு ஈமான் தாரியாகவும், தொலுகையாளியாகவும், சமூகம் போற்றக்கூடிய பொறுப்பான மாணவன் / மாணவி என்றும், பெற்றோர்கள் மகிழக்கூடிய நல்ல பிள்ளை என்றும், ஆசிரியர்கள் பெருமைபடக்கூடிய நல்ல மாணவன் / மாணவி என்று இப்பருவத்தில்தான் உருவாகின்றன...........

அதேபோல் பாலியல் ஈர்ப்புகளுக்கு ஆளாவதும், தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாவதும், குற்ற செயல்களில் ஈடுபடுவதும், கல்வியில் பின்தங்குவதும், என எல்லாமும் இந்த வாலிப பருவத்தில்தான் உருவாகின்றன..............

இன்றைய வாலிப பருவத்தினரை பள்ளிகள் எவ்வாறு கண்காணிக்கவும், வழிநடத்தவும் வேண்டும் என்கிற அவசியத்தை உணர வேண்டும். மாணவர்களை வழிநடத்தவும் கண்காணிக்கவும் முடியாதவர்களாகப் பெற்றோர்கள் தங்கள் வேலைப்பளு மற்றும் பணி நிமித்தமாக வெளிநாடுகளில் வசிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.. இந்த நேரத்தில் வாலிப பருவத்து மாணவ / மாணவிகளை வழிநடத்தக்கூடிய இடம் பள்ளியாக மட்டுமே இருக்கின்றது. மேல் நிலைப் பள்ளிகளில் இந்த வாலிப பருவத்து மாணவர்களைச் சரியாக வழிகாட்டிவிட முடியுமானால், வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்திவிட முடியுமானால், அவர்களது வாழ்க்கைப் பயணம் சரியான திசையில் அமைந்துவிடும்.

பள்ளி தலைமையாசிரியர்களும், வகுப்பு ஆசிரியர்களும் இந்த மாணவர்களின் போக்கு, செயல்பாடுகளைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. சக மாணவர்களுடன் பேசினாலே போதுமானது. இதற்கான நேரம் ஒதுக்கவும், இவர்களது மனப்போக்குகளைக் கண்டறிந்து, அதில் உள்ள ஆபத்துகளைச் சொல்லி எச்சரித்தாலும்கூட போதுமானது. மதிப்பெண் பெற்றுக் கொடுப்பது மட்டுமே பள்ளியின் கடமை என்று மட்டும் இருந்துவிடாமல்......மாணவர்களின் ஒழுக்கங்கள், அவர்களின் கடமைப் பொருப்புனர்வுகள், மார்க்க பற்றுதல்கள், கல்வி அறிவு, ஆரோக்கியம் என அவர்களை கண்காணித்து நல்வழிப்படுத்தும் இடமாகவும் மாற்றம் பெற்றாக வேண்டும்.

குறிப்பு : ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனவள ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்ற திட்டம் அரசிடம் இருக்கிறது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் அமலுக்கு வரவேயில்லை. இத்திட்டம் நிறைவேறினால் இதன் மூலம் மாணவர்களை ‘ COUNSELLING ‘ செய்து அவர்களின் வழிகேட்டிலிருந்து தடுக்கலாம்.

இறைவன் நாடினால் ! தொடரும்............

பேரூராட்சி அலுவலகம் – எப்படி இருக்க வேண்டும் ?அதிரை : 25/12/2011 ,


பேரூராட்சி அலுவலகம் - செம்மையான பராமரிப்புகள் :

1. அலுவலக வளாகத்தை எப்போதும் தூய்மையாகவும், அழகாகவும் வைத்திருத்தல் வேண்டும்.


2. பூச்செடிகள் மற்றும் அலங்காரப் பொருட்களை பாங்குற அமைத்து மனதுக்கு இதமான சூழ்நிலையில் அலுவலக வளாகத்தை பராமரித்தல் வேண்டும்.


3. அலுவலக முகப்பில், பிறப்பு இறப்பு பதிவு, குடி நீர் இணைப்பு உரிமங்கள் மற்றும் ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் தொடர்பான நடைமுறைகளை விளக்கும் அறிவிப்பு பலகைகளை அழகுற அமைத்து, எளிதில் காணத்தக்க இடங்களில் வைத்திருத்தல் வேண்டும்.


4. முக்கிய இடங்களை குறிப்பிடும் பேரூராட்சியின் வரைபடம் வைத்திருத்தல் வேண்டும்.


5. பணியாளர்கள் இருக்கைகள், சட்டங்கள் அழகுற அமைத்து பராமரித்தல் வேண்டும்.


6. பொதுமக்கள் தங்களது குறைகளைப் பதிவு செய்ய வசதியாக, புகார் புத்தகம் எளிதில் காணத்தக்க வகையில் வைத்திருத்தல் வேண்டும்.


7. பதிவு செய்யப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தல் மற்றும் சம்பந்தப்பட்டவருக்கு தகவல் அளித்தல் வேண்டும்.


8. பேரூராட்சி அலுவலகத்திற்க்கு வரும் பொதுமக்களிடம், இனிமையாகவும், நட்புணர்வுடன் பலகுதல் வேண்டும்.


9. அனைத்து பணியாளர்களுக்கும், அவர்களுக்குரிய கடமைகள் மற்றும் பொது மக்கள் குறித்த திட்டவட்டமான பணி அட்டவணை ( JOB CHART ) தயாரித்து அதன்படி செயல்படுதல் மற்றும் அதன் விவரங்கள் குறித்து எளிதில் கண்களில் படும் இடங்களில் பதிவு செய்து வைத்திருத்தல் வேண்டும்.


10. அனைத்து பணியாளருக்கும் அடையாள அட்டை வழங்கப்படுவதுடன் அவற்றை அவர்கள் தங்கள் பணி நேரத்தில் கட்டாயமாக அணிந்திருத்தலை உறுதி செய்தல்.


11. ஆவணங்களையும், பதிவேடுகளையும் அழகாகவும், நேர்த்தியாகவும் பராமரித்தல் வேண்டும்.


12. பேரூராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் மின்னஞ்சல் ( E-Mail ) மற்றும் வலைதள முகவரிகளை ( Web Address ) எளிதில் காணத்தக்க இடங்களில் பதிவு செய்து வைத்திருத்தல் வேண்டும்.


இறைவன் நாடினால் ! தொடரும்............


Source : Web Site of TNG

கலெக்டரிடம் நேரிடையாக ஆன்லைனில் புகார் செய்ய !


அதிரை : 04/12/2011 ,


நம்மை சுற்றிலும் தினம் தினம் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் உள்ளது. குறிப்பாக குடிநீர், சாலைவசதி, மின்சாரம், சுகாதாரம், சமுக நலம், நிலம் கையகப்படுத்துதல், உணவுப்பொருள் வழங்கல், கல்வி, சான்றிதல் பெறுதல், இயற்கை சீற்றம் இன்னும் ஏராளமாகச் சொல்லிக்கொண்டே போகலாம். நம் ஊரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளும் அவர்களுடைய வரம்புக்கு உட்பட்டதை அவர்களின் கடமையிலிருந்து செய்ய தவறியதில்லை. அதேசமயத்தில் அவர்களின் வரம்புக்கு மீறியதை அவர்களைச் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்துவதும் தவறு அவர்களும் நம்மைப்போலவே.

ஓவ்வொரு மாவட்டத்திர்க்கும் முதன்மையானவர் மாவட்ட கலெக்டர் ஆவார். நாம் அவரை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று அவர்களுடைய அலுவலகத்தில் “ மக்கள் குறைதீர்ப்பு நாளில் “ தொடர்புகொண்டு நம்முடைய கோரிக்கையை மனுவாக கொடுக்கலாம் அவர்களும் அதைப் பெற்றுக்கொண்டு மனு ரசீது கொடுப்பார்கள். அதைப்பெற்றுக்கொண்ட நாம் சம்பந்தப்பட்டவர்கள் நம் கோரிக்கை மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று கண்காணிக்க இலகுவாக இருக்கும். மேலும் நமது கோரிக்கைகள் கலெக்டர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் உள்ளதால் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு குறைவு.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அவர்களின் அலுவலக முகவரி :-
கச்சேரி ரோடு, தஞ்சாவூர் – 613 001
தொலைப்பேசி எண் : 04362 – 230102
மின்னஞ்சல் முகவரி :
collrtnj@nic.in
பஸ் ஸ்டாப் : ஆற்றுப்பாலம் அருகில்


வேலைப்பளு காரணமாக நம்மால் அவரது அலுவலத்துக்கு செல்ல இயலவில்லை என்றாலும் அல்லது பணியின் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் நமது சகோதரர்களும் கீழ் கண்ட முறையில் ஆன்லைனில் நமது புகார்களை பதிவு செய்யலாம். ( ONLINE PETITION FILING )

1. இதற்க்கு முதலில் http://onlinegdp.tn.nic.in/indexe.php இந்த லிங்கில் செல்லுங்கள்.
2. அதில் Tamil Version ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அதில் கிளிக் செய்து தஞ்சாவூர் மாவட்டத்தை தேர்வு செய்து அதில் நம்முடைய கோரிக்கைகளை பதிவு செய்துகொள்ளலாம்.
3. பதிவு செய்து அனுப்பியவுடன் நம்முடைய கோரிக்கைக்காண பதிவு எண் ஓன்று கொடுப்பார்கள் அதை வைத்து நமது கோரிக்கையின் நிலவரத்தையும் அதில் அறிந்துகொள்ளலாம்.
4. சகோதரர்களே, கோரிக்கையில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம்.

இறைவன் நாடினால் ! அடுத்த பதிவில் “ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை “ பற்றி விளக்கமாக எளிய வடிவில் பார்ப்போம்.

அதிரையில் நிலத்தின் அரசு மதிப்பீடு உயர்வு !


அதிரை : 02/12/2011 ,நிலத்தை வாங்கும்போது பத்திரப்பதிவு அலுவலங்களில் அந்த ஆவணம் பதிவு செய்வது உண்டு. அப்போது அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டின்படி ( GUIDELINE VALUES ) முத்திரைத்தாள் கட்டணத்தை பத்திரப்பதிவு அலுவலங்களில் அந்த நிலத்தை வாங்குபவர் செலுத்த வேண்டும்.


தமிழ் நாடு முழுவதும் நிலத்தின் தற்போதைய மதிப்பீட்டுக்கு ஏற்ப வழிகாட்டும் மதிப்பீட்டை மாற்றி அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக பத்திரப்பதிவு அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பகுதிகளுக்கு சென்று வழிகாட்டும் மதிப்பீட்டை அறிந்து புதிய பட்டியல் தயாரித்துள்ளனர்.
அவ்வாறு தயாரிக்கப்பட்ட பட்டியலில் அதிராம்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு தெருவின் மதிப்பீடுகளும் பல மடங்குகளாக உயர்த்தி நிலத்தின் ஒரு சதுர


அடியின் விலை கீழ்க்கண்டவாறு நிர்ணயம் செய்துள்ளார்கள்.


ஆலடித் தெரு.............ரூ 250
பிலால் நகர்…….......…. ரூ 150
ஆறுமுக கிட்டங்கி தெரு…....……..ரூ 150
ஆதம் நகர் ( M.S.M NAGAR மற்றும் K.S.A LANE உள்ளடக்கிய ).……..ரூ 100
செட்டித்தெரு………..…ரூ 500
ஹாஸ்பிட்டல் ரோடு……………ரூ 500
காட்டுபள்ளிவாசல் தெரு…....…..ரூ 250
வெற்றிலைக்காரத் தெரு......................ரூ 200
சின்ன நெசவுக்காரத் தெரு………ரூ 250
ஹாஜா நகர்…………………ரூ 150
கடற்கரைத் தெரு..............ரூ 250
தரகர் தெரு.................ரூ 300
பாத்திமா நகர்………………ரூ 100
காலியார் தெரு……………ரூ 150
மேலத்தெரு……………………ரூ 200
மேலத்தெரு (சவுக்கு கொல்லை).............ரூ 250
பெரிய நெசவுக்காரத் தெரு……..….ரூ 250
நடுத்தெரு…………………ரூ 300
செக்கடி தெரு..............ரூ 250
சேது ரோடு.................ரூ 400
தட்டாரத் தெரு.................ரூ 300
வண்டிப்பேட்டை....................ரூ 200
புதுத் தெரு……..……….ரூ 300
புதுமனைத் தெரு………………….ரூ 500
புதுக்குடி நெசவுக்காரத் தெரு……………..ரூ 100
கீழத் தெரு..................ரூ 200
சால்ட் லேன்………………………ரூ 200

செட்டி தோப்பு.......ரூ 500
ஹாஜியார் லேன்..........ரூ 200
கரையூர் தெரு................ரூ 250
வள்ளியம்மை நகர்.............ரூ 100
மதுக்கூர் ரோடு................ரூ 200
மரைக்காயர் லேன்.............ரூ 300
பழஞ்செட்டித்தெரு........................ரூ 500
பழஞ்செட்டித்தெரு கீழ் பக்கம்.............ரூ 200
பட்டுக்கோட்டை ரோடு.........ரூ 300
சாயக்காரத் தெரு............ரூ 200


ஏற்கனவே நமதூரில் மனைகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதில் பத்திரப்பதிவுக்காக செய்யப்படுகிற செலவுகளும் உயர்ந்தால் பாதிக்கப்படுவது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தான். அவர்கள் நிலம் வாங்கி அதில் ஒரு வீடு கட்டி குடியேறும் திட்டம் வெறும் கனவாகவே அமைந்துவிடும் சூழல் உள்ளது.

மேற்கண்ட பட்டியலை பார்த்து மக்கள் சொல்லும் கருத்தையும் கேட்டு பத்திரப்பதிவு அதிகாரிகள் அதை அரசிடம் தெரிவித்து அரசின் ஒப்புதல் பெற்று இறுதி கட்டணம் நிர்னையிப்பார்கள். ஆகையால் நமது சமுதாய மக்களின் நலனை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு தங்களின் கோரிக்கையை தங்களால் இயன்றளவு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும்படி அனைத்து சகோதரர்களிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மின்னஞ்சல் முகவரிகள் :-
E-mail : digrthanjavur@tnreginet.net
E-mail : dropattukkottai@tnreginet.net
E-mail : sroadhiramapattinam@tnreginet.net

“ கொசு “ தொல்லை தாங்க முடியலப்பா !


அதிரை : 16/12/2011 ,


தண்ணீருக்கு அடுத்தபடியாக நோய் பரப்புவது கொசுக்களாகும். டெங்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற பயங்கர வியாதிகளை கொசுக்கள் பரப்புகின்றன. இது தவிர பலவித வைரஸ்களை பரப்புவதன் முலம் வேறு சில வியாதிகள் தொற்றவும் காரணமாக இருக்கின்றன.
இந்த கொசுக்களால் மனித இனம் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சமல்ல. உலகில் 40 சதவீதம் பேருக்கு டெங்கு காய்ச்சல் கொசுக்கள் முலம் பரவுகிறது. ஆண்டு தோறும் 10 கோடி பேர் பாதிப்புக்குள்ளாவதில் ஏறக்குறைய 22 ஆயிரம் பேர் பாதிப்பு அதிகமாகி இறந்துவிடுகிறார்கள். ஏடிஸ் இன கொசுக்களே இதற்கு காரணமாகும்.

மனிதர்களின் உயிரையே பறிக்கும் மிகவும் அபாயகரமான நோய்களை வேகமாக உண்டாக்குவதில் கொசுக்களுக்கே முதலிடம். கொசுக்களிடமிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வது நமது நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. குறிப்பாக குழந்தைகள் இதனால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு கொசுவின் இனப்பெருக்க காலத்தில் அது ஆயிரக்கணக்கான கொசுக்களை உற்பத்தி செய்து விடுகிறது. எனவே கொசுக்களை முற்றிலும் ஒழிப்பது என்பது சாத்தியமில்லாதது. ஆனால் அவற்றின் உற்பத்தியைக் குறைக்க முடியும். கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாவதற்கு நாமே காரணமாக இருக்கிறோம்.

இயற்கையாக கொசுக்களின் உற்பத்தியை ஓரளவு குறைப்பது எப்படி ?

1. வீட்டின் பின்பகுதியில் தண்ணீரைத் தேங்க விடுவது கூடாது. நீர் தேங்கும் இடங்களில் பிளிச்சிங் பவுடரை இடலாம் மற்றும் பினாயிலையும் ஆங்காங்கே தெளிக்கலாம்.
2. சுத்தம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாதது சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருத்தல் கூடாது.
3. தெருக்களில், குளம், குட்டைகளில் கழிவு மற்றும் குப்பைகளை கொட்டுவது உள்ளிட்ட சில காரணங்களால் கொசுக்களின் உற்பத்தி பல மடங்காகி விடுகிறது. இதை முதலில் நிறுத்த வேண்டும்.
எனவே இயற்கையாக கொசுக்களின் உற்பத்தியைத் முழுவதுமாக தடுக்க முடியாவிட்டாலும், கொசுவின் உற்பத்தியைத் ஓரளவு தடுக்கும் விதத்தில் நாம் செயல்பட முயற்சி செய்ய வேண்டும்.

செயற்கையாக கொசுக்களின் கடியை தடுப்பது எப்படி ?

1. சீனாவில் உள்ள NINGBO, FOSHAN, SHUNDE போன்ற மாகாணங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிற ELECTRONIC INSECT KILLER MACHINE, INSECT KILLER BAT மற்றும் இன்றைய காலகட்டத்தில் பல நவீன எலக்ட்ரானிக் சாதனங்கள் வந்துள்ளன. இவைகளையும் பயன்படுத்தலாம்.
2. மேலும் ELECTRONIC SPRAY, INSECT KILLER LIQUED, COIL போன்றவைகளையும் பயன்படுத்தலாம். ஆனால் இவைகள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

மேலும் கொசுத்தொல்லையை ஒழித்திட, நமது பேருராட்சியை அணுகி அவர்களை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் / மாவட்ட மலேரியா ஒழிப்பு அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக்கொள்ளலாம்.குறிப்பு :- தற்பொழுது மழை மற்றும் பனி காலமாக இருப்பதால் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து சூடு தணிந்த பிறகு அருந்த வேண்டும்.

இறைவன் நாடினால் ! தொடரும்........................................

பிள்ளைச் செல்வம் !

அதிரை : 19/12/2011 ,

ஏழை எளியோர்கள், நடுத்தர மற்றும் உயர் வர்க்கத்தினர் அது யாராக இருந்தாலும் சரி “ பிள்ளைச் செல்வம் “ என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. இச்செல்வம் வேண்டி வேண்டாத வழிபாடுகள் இல்லை ! போகாத வழிபாட்டுத்தலங்கள் இல்லை !! செல்லாத மருத்துவமனைகள் இல்லை !!! சாப்பிடதா நாட்டு மருந்துகள் இல்லை !!! இன்னும் என்னவெல்லாம் செய்தும்.............?

எங்கெல்லாம் குடிநீர் ஆதாரங்கள் ரசாயனக் கழிவுகளால் மாசுபட்டுள்ளனவோ அந்தப் பகுதிகளில்தான் குழந்தையின்மை பாதிப்புகள் அதிகம் என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. மருத்துவத் தொழில்நுட்பம் நன்கு வளர்ந்த இக்காலக்கட்டத்தில், திருமணம் நடைபெற்ற அடுத்த சில மாதங்களுக்கிடையே குழந்தை வாய்ப்பு தள்ளிச்சென்றால் உடனடியாக பெற்றோரே தம்பதிகளை மகப்பேறு சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். நமது பெற்றோர்களிடம் பொறுமை இல்லை.

மகப்பேறு எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டதோ அதே அளவுக்கு குழந்தையின்மையும் அதிகரித்துவிட்டது. பிள்ளைச் செல்வத்துக்கான இந்த ஆர்வத்தை, பதற்றத்தை, வேதனையை மருத்துவத் துறையில் உள்ள சிலர் காசாக்கிடப் பார்க்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கருப்பை சுத்திகரித்தல் தொடங்கி, விந்து உயிர் அணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மாத்திரை, சினை முட்டைக்கு மாத்திரைகள் என்று பல வழிகளில் இந்த நோயாளிகள் செலவழிக்க நேரிடுகிறது.

மருத்துவத்தின்படி இவை யாவும் அவசியமான, நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்தச் சிகிச்சைக்கான கட்டணங்களுக்கும், அவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளுக்கும் அதிக விலை கொடுத்தாக வேண்டும். இந்த மாத்திரைகளின் உற்பத்திச் செலவுக்கும் விற்பனை விலைக்கும் உள்ள இடைவெளி மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளி. அந்த அளவுக்கு லாபம் பார்க்கின்றன மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்.

செயற்கை கருவூட்டல் முறையை நாடுவோர் அதிகரிக்கும் வேளையில், தற்போது வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விழைவோரும் அதிகரித்து வருகின்றனர். செயற்கை கருவூட்டல் முறை தோல்வியுறும் பெண்களுக்கு இப்போது மருத்துவதுறையால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது பரிந்துரைக்கப்படுகிறது.

சகோதரர்களே ! வாடகைத் தாய் மூலம் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது இஸ்லாத்தில் கடுமையாக விளக்கி வைக்கப்பட்டுள்ளது ( ஹராம் ).
சகோதர, சகோதரிகளே ! அல்லாஹ் மீது நம்பிக்கை வையுங்கள், ஒருவொருகொருவர் குறை கூர்வதை தவிர்த்து, தாழ்வுமனப்பான்மையைக் கைவிடுங்கள், பொறுமையை கடைபிடியுங்கள் மனச்சோர்வை நீக்கிவிட்டு முயற்சி செய்யுங்கள் நிச்சயமாக பிள்ளைச்செல்வத்தை நாம் அடைந்தே தீர்வோம் !
குறிப்பு : இன்று காலையில் வெளிவந்த ஒரு நாளிதழின் தலையங்கத்தை தற்செயலாக படிக்க நேர்ந்தது அதில் எற்பட்ட inspiration இப் பதிவை ஏற்படுத்த நேரிட்டது.

பேரூராட்சிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன ?


அதிரை : 15/12/2011 ,பேரூராட்சிகளின் செயல்பாடுகள் !தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகள் நான்கு நிலைகளாக ( நிலை-2, நிலை-1 , தேர்வு நிலை, சிறப்பு நிலை ) பிரிக்கப்பட்டு அதில் அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேருராட்சியாக உள்ளது.


பேரூராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன ?


1. பொது சுகாதாரம் – துப்புரவு, கழிவு நீர் அகற்றுதல், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை.
2. மக்கள் உடல் நலம் மற்றும் நோய் தடுப்பு ( மருத்துவ வசதி உட்பட )
3. குடி நீர் வழங்கல்
4. விளக்கு வசதி
5. சாலை வசதி
6. தெருக்கள் அமைத்தல், பராமரித்தல்
7. பொதுசொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு
8. கட்டிடங்கள் கட்டுவதை ஒழுங்கு செய்தல்,
9. தொழிற்ச்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுவதை உரிமம் வழங்கி முறைபடுத்துதல்
10. பிறப்பு, இறப்பு பதிவு
11. மையானங்கள் ( கஃப்ர்ஸ்தான் ) ஏற்படுத்தி பராமரிப்பு

பொது சுகாதாரம் பராமரிப்பு :-

1. குப்பைகள் உருவாகும் இடத்திலேயே பிரிப்பது, அவற்றை குப்பைகிடங்குகளுக்கு கொண்டுசெல்வது, பிறகு பாதுகாப்பான முறையில் குப்பைகளை அழிப்பது மற்றும் குப்பைகளிலிருந்து திரும்ப பயன்படுத்தக்கூடிய பொருள்களை தயாரிக்ககூடிய பொருள்களை தனியாக பிரிப்பது ( Waste Recycling ) போன்ற அம்சங்கள் உண்டு.

2. வீடுகளிலேயே திடக்கழிவுகளைப் பிரித்து சேகரம் செய்யப்படுகின்றன.

3. குப்பை அகற்றுதல் பற்றியும், சுற்றுப்புற சுகாதாரம் குறித்தும் தெருக்களில் அசுத்தம் செய்வதை தடுக்கவும், பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை தெருக்களில் வீசி எறிவதை தடுக்கவும் மக்களிடயே விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் பயன்தரதக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. அனுமதித்த அளவை வீட குறைவான துப்புரவு பணியாளர்கள் இருக்கும் பட்சத்தில், மிகை செலவீனம் ஏற்படாத வகையில் சுய உதவிக் குழுவினரை பயன் படுத்திக் கொள்ளலாம்.

5. கழிவு நீர் தேங்காமல் கண்காணித்தல் வேண்டும்.

6. கொசுத்தொல்லையை ஒழித்திட, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் / மாவட்ட மலேரியா ஒழிப்பு அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

7. மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனரால் அரசு மூலம் வழங்கும் லார்விசைடு ( Larvicide ) வாங்கி பயன்படுத்த வேண்டும்.

8. பொதுக்கழிப்பிடங்கள் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

9. பிளிச்சிங் பவுடர், பினாயில் ஆகியவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில்தான் வாங்கப்படவேண்டும்.

10. மக்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ கழிவு மேலாண்மைப் பணிகள் அவசியம். அதிலும் நன்கு திட்டமிட்டு மேலாண்மை செய்தல் மிகவும் அவசியம்.

11. திடக்கழிவுகளை அவை உற்பத்தியாகும் இடங்களிலேயே மக்கும் கழிவு, மக்காத தன்மையுள்ள கழிவு என தரம்பிரித்து, தனித்தனியாக சேகரம் செய்யப்படவேண்டும்.

12. தரம்பிரித்து கழிவுகளைக் கையாளலாம் மற்றும் சேகரம் செய்யும் முறைக் குறித்து பொதுமக்கள் நன்கு அறிந்து விரைந்து செயல்பட விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

13. பொதுஇடங்களில் ஏற்படும் கலவை குப்பைகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் அகற்றுதல் வேண்டும்.

14. மக்கும் தன்மையுள்ள குப்பைகளை உரமாக்குதல் மற்றும் மக்காத தன்மையுள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்தல் வேண்டும்.

15. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை நேரடியாக பெறத்தக்க ஏற்பாடுகள் செய்தல் வேண்டும்.

16. கழிவு மேலாண்மைப் பணிகளில் சுய உதவிக் குழுக்கள், தொண்டுநிறுவனங்கள் ஆகியவற்றின் சேவைகளைப் பெறுதல் வேண்டும்.

17. தள்ளு வண்டி / மிதி வண்டி மூலம் ஒவ்வொரு வீட்டிலும் பெறப்படும் தரம் பிரித்த குப்பைகளை, லாரி / டிராக்டர் மூலம் பெற்று செல்ல இரண்டாம் சேகரிப்பு மையங்கள் ( Secondary Collection Point ) ஏற்படுத்தி தள்ளு வண்டி / மிதி வண்டிகள் மற்றும் அவற்றின் பராமரிப்பாளர், நீண்ட தூரம் தேவையின்றி பயணிப்பதை தவிர்த்தல் வேண்டும்.

18. கழிவுகளை தரம் பிரிக்கும் கூடம், உரத்தயாரிப்பு கூடம், மக்காத் கழிவுகளை தரம்பிரித்து மறு சுழற்சிக்கு அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொள்ளும் கூடம், இருப்பு வைப்பு கூடம் ஆகிய வசதிகளுடன் உரத்தயாரிப்பு கூடம் அமைத்தல் மற்றும் தர வளாகத்தை அழகுற பராமரித்தல் வேண்டும்.

19. உரிய வழிமுறைகளை கையாண்டு தரமான உரம் தயாரித்தல் வேண்டும்.

20. மண் புழு உரம் தயாரித்தல் வேண்டும்.

21. கழிவு நீர்க் கால்வாய்களை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நாசினி தெளித்தல் வேண்டும்.

22. அபாயகரமான கழிவுகளை அவற்றிக்குரிய நடைமுறைகளை பின்பற்றி கவனமாக கையாளுதல் மற்றும் அழித்தல் வேண்டும்.

23. மருத்துவக்கழிவுகளை அந்தந்த மூவு செய்து கொள்தல், கண்காணித்தல் மற்றும் தவறு செய்யும் மருத்துவமனைகள் மற்றும் தனி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

24. திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு பயன்படுத்தும் வாகனங்களுக்கு உரிய பணி அட்டவணை தயாரித்தல் மற்றும் அதனை பின்பற்றுதல்- வாகனங்களுக்கு எண்கள் இட்டு பராமரித்தல் வேண்டும்.

இறைவன் நாடினால் ! தொடரும்......
Source : Website of the Tamil Nadu Government

அதிரையில் லஞ்சமா ?


அதிரை : 12/12/2011 ,இன்றைய உலகில் ஒவ்வொரு ஊரிலும் முக்கிய ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்சனைகளில் முதலிடத்தில் வருவது லஞ்சம் ! இதில் லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் இந்திய சட்டப்படி குற்றமாகும். நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வரிகள் ( PROFESSIONAL TAX, SALES TAX, CENTRAL SALES TAX, CUSTOM DUTY, INCOME TAX, Dividend Distribution TAX, EXCISE DUTY , MUNICIPAL & FIRE TAX, STAFF PROFESSIONAL TAX, CASH HANDLING TAX, FOOD & ENTERTAINMENT TAX, GIFT TAX, WEALTH TAX, STAMP DUTY & REGISTRATION FEE, INTEREST & PENALTY, ROAD TAX, TOLL TAX , VAT & etc… ) மூலமாகவே ஒவ்வொரு அரசு ஊழியர்களும் அவர்களுடைய சம்பளமாகப் பெறுகிறார்கள்.


இதில் அவர்களுடைய கடமையை செய்ய எதற்கு நாம் பணம் கொடுக்க வேண்டும் ? முன்பெல்லாம் அதிகாரத்தை மீறுவதற்கு லஞ்சம் கொடுத்தார்கள் ஆனால் இன்று முறைப்படி நடக்க வேண்டிய வேலைகளுக்கும் லஞ்சம் கொடுக்கிறார்கள்.


நமதூரில் பட்டா பெயர் மாற்றம் செய்தல், சான்றிதழ் பெற, மின் இணைப்பு பெற, மீட்டர் பொருத்துதல், டாக்குமென்ட் ரெஜிஸ்டர் செய்ய, பாஸ்போர்ட் விசாரணைக்கு, நிலத்தை அளந்து கொடுக்க, புதிய வீடு கட்ட வரைபட அனுமதி, பியூஸ் போகும்போதெல்லாம் லைன் மேனுக்கு என இன்னும் பல வேலைகளை முடித்துக்கொள்ள பணத்தை லஞ்சமாக கொடுக்கிறார்கள் “ என்று பொதுமக்கள்களிடேய ஒரு கருத்து நிலவுகிறது.

என்னதான் தீர்வு ?


1. மக்களிடையே விழிப்புணர்வு வர வேண்டும்.
2. பணத்தை லஞ்சமாக கொடுப்பது சட்டப்படி தவறு என்பதை அவர்கள் உணர வேண்டும்.
3. அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் மக்கள் தைரியமாக புகார் செய்யும் மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
4. ஒவ்வொரு வருடமும் சர்வதேச ஊழல் ( லஞ்ச ) ஒழிப்பு தினமான டிசம்பர் 9 ம் தேதி அன்று நமது ஊரைச்சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கம், சமுக ஆர்வலர்கள் மற்றும் மாணவ , மாணவிகள் ஒருங்கிணைந்து அமைதி பேரணி நடத்தலாம். இதனால் நமதூரைச்சேர்ந்த மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
5. அதிரையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், இஸ்லாமிய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிரபல அரசியல் கட்சிகள், சமுக ஆர்வலர்கள், வர்த்தக சங்கம் மற்றும் வெளிநாடுவாழ் சகோதரர்கள் அனைவர்களும் ஒன்று இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு வரும் வகையில் அரசு அலுவலங்கள் முன்பாக, லஞ்ச ஒழிப்பு துறையினரின் முகவரி, தொலைபேசி எண்களை தெளிவாக குறிப்பிட்டு அறிவிப்பு பலகை வைக்கலாம். தேவைப்பட்டால் முக்கிய பொது இடங்களிலும் இதனை விளம்பரப்படுத்தலாம்.

மேலும் நமது புகார்களை கீழ்க்கண்ட “ VIGILANCE AND ANTI-CORRUPTION “ அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தலாம்.

சென்னை அலுவலகம் :-
THE DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION,
NCB 21 TO 28, P.S.KUMARASAMY RAJA SALAI (GREENWAYS ROAD), RAJA ANNAMALAIPURAM, CHENNAI – 600 028. Telephone : 91-44-24615929 / 24615949 / 24615989 / 24954142 Fax : 91-44-24616070
E-mail:
mailto:dvac@tn.nic.in / http://www.dvac.tn.gov.in/

தஞ்சாவூர் அலுவலகம் :-
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Tamil University Post, Thanjavur – 613010.
04362-227100 (Off)
04322-247555 (Res)
cell: 94450-48884

குறிப்பு :-
சகோதரர்களே ! லஞ்சத்தைப் பற்றி தங்களுக்கு எற்பட்ட அனுபவங்களை கீழ் கண்ட “ கருத்துக்கள் “ ( COMMENTS PAGE ) பகுதியில் பதியும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இறைவன் நாடினால் ! அடுத்த பதிவில் “ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை “ பற்றி விளக்கமாக எளிய வடிவில் பார்ப்போம்.

“ பர்தா ” அணிவதைப்பற்றி அமெரிக்க கல்லுரி மாணவியின் அனுபவம் !

அதிரை :  05/12/2011,
ஒரு நேரத்தில், பர்தா அணிவதைப் பற்றி மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர் ? என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.

தென் கலிஃபோர்னியா இஸ்லாமிய மையத்திலுள்ள மஸ்ஜிதுக்குச் செல்லும்போது மட்டும் பர்தா அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அத்துடன் கைகளையும், கால்களையும் மறைக்கும் நீண்ட உடைகளையும் அணிந்து வந்தேன். பிறகு படிப்படியாக தோழிகளின் வீடுகளுக்குச் செல்லும்போது பர்தாவுடன் சென்றேன். கடைசியாக, வசந்தகால விடுமுறைக்குப் பிறகு கல்விக்கூடத்திநற்குச் செல்லும்போது பர்தாவைத் துணிந்து அணிந்து சென்றேன். பள்ளிக்கூடத்திற்கு பர்தாவுடன் செல்வதைப் பற்றித்தான் மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். ஆனால், இப்புதிய அனுபவம் மிகவும் உற்சாகம் மிகுந்த அனுபவமாக அமைந்துவிட்டது. எல்லோரும் என்னை வியப்புடன் பார்ப்பது எனக்குள் மிகுந்த பரபரப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
வகுப்பு இடைவேளையின் போது சகமாணவிகள் பர்தாவைப் பற்றி பல கேள்விகளை எழுப்பினர். நான் பர்தா அணிந்திருப்பதைப் பார்த்த எனது ஆசிரியையும் அதன் காரணங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். ஆகவே, வரலாறு பாட வகுப்பின் போது அது பற்றி உரையாடலாம் எனக் குறிப்பிட்டார். இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்பு. திருமறை வலியுறுத்தும் பர்தாவின் பல நன்மைகளை எனது அனுபவத்தில் கண்டு கொண்டேன். முதலாவதாக, நான் பெண் என்று மரியாதை காட்டப்படுகிறது. ஒரு பால் பொருள் (Sex Object) என்று நோக்கப்படுவதில்லை.
இரண்டாவதாக, நான் ஒரு இஸ்லாமியப் பெண் என்று மக்களால் அறியப்படுகிறது. பர்தா அணிவதன் மூலம் நான் மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், மற்றவர்கள் என்னைத் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. நான் பர்தா அணியவில்லை என்றால், அதைப்பற்றி கேள்விகள் யாரும் கேட்கப்போவதில்லை. ஆகவே, எனது நெறியான இஸ்லாம் பற்றிய செய்திகளை விளக்குவதற்கு கடைசியில் வழிவகுக்கும். பர்தாவைப் பற்றிய ஐயங்கள் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடக்கூடும்.
பர்தா பற்றிய வியத்தகு அனுபவங்கள் எனக்கு ஏற்பட்ட போதிலும், மற்றவர்கள் எவரும், எவரையும் வற்புறுத்துவது கூடாது எனக் கருதுகிறேன். அடிக்கடி பர்தா அணிவது பற்றிய தவறான, வழிதவறிய அழுத்தம் தரப்படுகிறது. பர்தா அணியாதவர்கள் ஏதோ பெரும் தவறிழைத்துவிட்டனர் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து விடக் கூடாது. மாறாக, பர்தா ஏன் அணிய வேண்டும் என்பதை மென்மையாக எடுத்துச் சொல்ல வேண்டும். மக்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை எடுத்துச் சொல்ல வேண்டுமேயல்லாது, அவைகள் பற்றி கட்டாயப்படுத்தக் கூடாது.
பர்தா அணிதல் என்பது ஒருவரின் நெறியை பகிரங்கமாகப் பறைசாற்றுவதாகும். அதன் மூலம், ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடும்.
ஏனையவற்றைவிட மதத்தைப் பின் பற்றுதல் மிகவும் எளிதானது என்பதை உணர்த்துவதாக பர்தா அமைந்துள்ளது. வீண் பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்பதை நான் நிச்சயமாக அறிந்து விடுவதைக் காட்டிலும், எனது தலைமுடிகள் பர்தாவினால் மறைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து விடுவது மிகவும் எளிதாகும். பர்தா அணிவதன் மூலம்எனது குணநலன்களில் சிறந்த மாற்றங்கள்ஏற்பட்டுள்ளன. பர்தாவைப் பற்றி தவறான கருத்துக்களே மக்களிடம் இன்னும் நிலவி வருகிறது. ஏனெனில் மற்றவர்களை மதிப்பிடுவது என்பது மிகவும் எளிதாகும். பர்தா அணிந்த பெண்மணி ஒருவர் தனக்கு எதிரில் வரும் ஒருவரைப் பார்க்க நேரிடின், அவர் நல்லவரா?’ அல்லது கெட்டவரா?’ என்பதை எளிதில் மதிப்பிட்டு விடலாம்.

(
இக்கட்டுரையாசிரியர் லைலா அஸ்கர், வெஸ்டர்ன் பிரிட்ஜ் (Western Bridge) பள்ளி மாணவி. அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜல்ஸ் டைம்ஸ்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையாகும் இது. கட்டுரையின் தமிழாக்கம்: டாக்டர், பீ. ஹாமிது அப்துல்லாஹ் அவர்கள்.)
Pro Blogger Tricks

Followers