.

Pages

Friday, February 27, 2015

[ 12 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(41)
அறிதலிலே ஒன்றின் அனைத்தானத் தன்னை
அறியுமிவர் ஆகார் அவனாய் - அறிந்தே
அவனடிமை என்பார் அகத்தின் தெளிவில்
இவனாக நிற்பார் இனி.

(42)
இனித்திடும் என்றுமே ஏற்றம் உயரத்
தனித்திடும் உச்சம் சமைந்து - கனிந்தே
அனைத்தையும் தாம்போல் அரவணைத்தே வாழும்
நினைத்திடவே இன்பம் நிறைந்து.

(43)
நிறைவினை உன்னில் நிறுத்த உணவும்,
இறைநிலையும் என்பார் இகத்தார் - முறையை
முறையாக ஏற்க முரணாய் எதிர்த்தும்
விறைத்திட்டே செல்லுதல் வீண்.

(44)
வீணாக இல்லை விபரங்கள் ஒவ்வொன்றில்
காணாமல் போனாலே கைசேதம் - தூணாய்த்
துணையிருக்கும் வாழ்ந்திடத் தோண்டிப்பார் எல்லாம்
பிணைப்பாக நிற்கும் பிடி.

நபிதாஸ்

வெண்பா (41)  
பொருள்: ஒன்றே அனைத்தானது என்பதில் வேறு என்பதில்லை. ஆதலின் தன்னையும் அவ்வொன்றின் அனைத்தானதில் இருக்கின்றது என்றறிந்தாலும் அவனடிமை என்றுதான் கூறுவார். இனியிவ்வாறானவொன்றினதின் அகத்தெளிவில் நிலைப்பார்

வெண்பா (42)  
பொருள்: ஒன்றினால் அனைத்தானதின் தத்துவம் பற்றி அறிதலில் அதனின் ஒவ்வொரு உண்மை நிலையைப் பற்றி அறிந்துவரும் போது மனதில் இன்பம் ஏற்படும். அதனின் உச்சமான அறிதலில் அவ்வறிவில் அறிந்தோராய்த் தனித்திடும். அந்நிலையில் நிலைத்து கனிந்து அனைத்தையும் தாம்போல் அரவணைத்து வாழும். அவ்வாறான வாழும் நிலைப்பற்றி நினைத்திடவே இன்பம் நிறையும்.

வெண்பா (43)  
பொருள்: உணவும், இறைமையும் மனதினில் நிறைவு ஏற்படுத்தும். நிறைவைத் தரவில்லையானால் வழிமுறைகளில் விலகியிருக்கின்றோம் என்பதாகும். நிறைவைத்தருகின்ற அதற்கான முறைகளை ஏற்காது முரண்பட்டு எதிர்பாகச் செல்லுதல் வீணே.

வெண்பா (44)  
பொருள்: ஒவ்வொன்றிலும் விபரங்கள் வீணாக இல்லை. அதனைத் தீர நன்கு அறிந்துக்கொள்லாமல் தவறெனச் செல்லுதல் கைசேதமே. எது தவறெனத் தீர்மானிக்கப்பட்டதோ அதுவே பின்னாளில் பக்கத்துணையாக இருக்கும். எனவே தீர விபரங்களை குற்றம் காணும் வழியில் காணாது நடுநிலையுடன் சிந்தித்து அறிந்துக்கொள்.

Sunday, February 22, 2015

விலை போகா மனிதன் !

என் எழுதுகோலூக்கும் விரலுக்கும்
இருக்கும்
நெருக்கம்போல நண்பர்கள்
இருந்தால்
உலகத்தில் ஏது கலாட்டா!

ஆன்மாவின் ஆழத்திலிருந்து
குரல்!
கேட்காமல் இருக்க முடியவில்லை!

ஆன்மீகத்தில் ஆழம் கண்ட
ஒரு
மன்னர்!
அந்தி வானத்தின் செந்நிறம்போல
மதகுரு!
சீடர்கள் மாலைபோல்
சுற்றி நின்றனர்!
வழியில் எண்ணப்
படமெடுப்பு!

கிளைவிட்டு விழுந்த கனிபோலும்
ரதம்விட்டுக்
கீழே இறங்கினார் -அந்த
மன்னர்!
குருபாதம் பணிந்து நின்றார்!

மந்திரிக்கு சிந்தனை
முந்திரிக் கொட்டையானது
மன்னரின் செயல் -
அவர்
மூளையை அதிரச்செய்தது!

மந்திரி :
"சாதாரண சாமியார் தானே
அவர்காலில் வீழ்ந்தது
எனக்கு
ஆரா ரணமாகி விட்டது! "

மதிமன்னர் :
"மந்திரி! பெருமீன் ஒன்றும்,
கலைமான் தலையும்,
மனிதத் தலையும்
கொண்டு வா! " என்றார்.

மீறமுடியுமா? மன்னர்
கட்டளை!
இரண்டு நாட்களில் மூன்றோடும்
வந்தார்
மன்னர் முன்னர்!

"தாமதம் ஏன்? "
மனிதத்தலையைச் -சுடு
காட்டிலிருந்து பெறுவதில்..... !

"மூன்றையும் சந்தையிலே
விற்று வந்து
சரியாகச் சொல்! " என்றார் மன்னர்.

மந்திரிக்கு
கடலில் மூழ்கி எழுந்ததுபோல
உணர்வு -

சந்தையிலே,
மீன் நல்ல விலைக்குப்
போனது.
அலங்காரப் பொருளாய்
மானின் தலையும்
விற்றது!

மனிதத்தலைக்கு
விலை போகவில்லை
பார்த்தோர்க்கு பயம்
போகவில்லை!

"மன்னா! மனிதத் தலைமட்டும்
விலை போகவில்லை? "
"செல் மீளா?
இலவசமாகக் கொடு "
என்றார் மன்னர்!

என்ன இது!
நொந்த நெஞ்சோடு
போனார் மந்திரி!

இலவசம் என்றாலே ஈயாய்
மொய்க்கும் மக்கள்
தலையை 'இலவசம்! '
என்றதும் தலைதெறிக்க
ஓடினார்கள்!

நடப்பு மன்னனிடம்
நவிலப் பட்டது!

மன்னர் சொன்னார் :
"மந்திரி!
உடலில் உயிர்ரோ ஒட்டி
இருந்தால் தான்
மதிப்பு மனிதனுக்கு!
மீனும் விலையானது
மானும் விலைபோனது
மனித மண்டை
பயமானது!

உயிரோடு அவன்
உலவிய காலத்தில் -அவன்
அடித்த நடனம்! ஆடிய ஆட்டம்
அகங்காரப் பார்வை
செத்தபின்பு என்ன
ஆனது சிந்தியும்!

ஞானிகள் வாழ்ந்தபோதும்
செத்தாராய் வாழ்ந்தார்கள்
எதுவும் சொந்தமில்லை
என்றனர்!
தன்னை உணர்ந்தனர் -தன்
இறைவனை அறிந்தனர்!
அதனால்
அந்தச் சாமியாரைப்
பணிந்தேன்!" என்றார்
மன்னர்!
'கவிஞர்' அதிரை தாஹா

Friday, February 20, 2015

இயற்கையின் செயல்களே !

இயற்கைச் சிரிக்கிறது - ஆனால் !
குழந்தைச் சிரிக்கிறதென்பார்.

இயற்கைப் பொழிகிறது - ஆனால் !
மழைப் பொழிகிறதென்பார்

இயற்கைப் பிரகாசிக்கிறது - ஆனால் !
சூரியன் பிரகாசிக்கிறதென்பார்

இயற்கைச் சுழல்கிறது - ஆனால் !
பால்வெளிச் சுழல்கிறதென்பார்

இயற்கை நடக்கிறது - ஆனால் !
மனிதன் நடக்கின்றானென்பார்.

இயற்கையின் செயல்கள் - ஆனால் !
இயங்கியவைகள் தனதென்றால் !

இதுதானே அநியாயம் ! - ஆனால் !
இயற்கைத் தனைப் பிரிக்கவில்லை

இவைமூலம் அதன் இயக்கங்கள் - ஆம் !
அவ்வெண்ணங்களும் அதனுடையதே
இப்போக்கில் தெளிந்திடுவோர் - என்றும்
இணை நீக்கி வாழ்ந்திடுவாரே.

நபிதாஸ்

Monday, February 16, 2015

உலகமே என் உறவுதான் !

பால் மனம் மாறா
பச்சிளம் குழந்தைக்கு
பார்க்கும் முகமெல்லாம்
உறவு தான்...

பல் முளைக்கா
முகம் தன்னில்!
புன்முறுவல் பூத்த ழைத்து
பலர் முகத்தில் புன்னகையை
வரவழைக்கும் ஆச்சரியம்
இயற்க்கை தன்னின் மாச்சரியம்...

மனிதன் என்ற ஒரு உறவே
சிறுமுல்லை சொல்லி தரும்
பாடமைய்யா அம்முல்லை
வளருமுன்னனே அதற்கு நீ
கொடுக்கும் பாடம்
உலக போக்கை மாற்றும் பாடம்...

சிறு குறுத்து கைகளாலே
இரு கரத்தால் தட்டும் ஓசை
கேட்கும் தருணம்
பார்ப்பவரும் மகிழ்ந்திடுவர்
பட்டனவே சிரித்திடுவார்...

பச்சிளம் குழந்தையது
பாரெல்லாம் பறைசாட்டும்
எல்லாம என் உறவினமே
என கூறி

பாலினமும் அறியாத
வயதிற்கு மத இனமும்
அரியாது அறியாத அக்குழந்தை
யார் மடியில் வளர்கிறதோ
அவர் தம் கொள்கை தனை
பச்சிளம் குழந்தைக்கு
பாய்ச்சிடுவர்...

பல் முளைக்கா பரவமுதல்
பருவமது வரும் வரையில்
சொந்தங்கள் கூட செய்யும் சிறு
சச்சரவால் பகையென...
எனக்கூறும் பெற்றோரால்
பகை பாடம் முதல் பாடமாய்
பச்சிளம் குழந்தைக்கு
பெற்றோர்கள் சொன்னதினால்

பகை என்ற உணர்வுக்கு
புகை மூட்டி பணம் பார்க்க
இயக்கங்கள் பல உண்டு
இயக்கத்தின் கைகளிலே
நர பழிவாங்கும் பல கொள்கை கள்...

எல்லோரும் ஓரினமே
எல்லோரும் நம் சொந்தம்
உலகமே என் உறவு என்றுனக்கு
நாள் தோறும் நான் சொல்வேன்
வேற்றுமையாய் இருக்காமல்
வென்றிடுவோம் அன்பினாலே...

நீ பிறந்து புன்னைகைத்த
அன்று போல என்றும் நீயும்
இருந்து விடு மத பேதம் மறந்து விடு
இன பேதம் மறந்து விடும்
புன்னகையால் இவ்வுலகை
பூத்திடவே செய்து விடு
பூக்களும் ..பொறாமை கொள்ளும்
மனிதர்களின் மகிழ்வினாலே
மலர்களுக்கு வேலை இல்லை
மலர்களுமே சொல்லி விடும்

இனி கனிகளாக மாறி நாங்கள்
மகிழ்ச்சியினை தருகின்றோம்
என மலர்களும் சொல்லி விடும்
வண்ணத்து பூசிகளும்
தேன்னல்லும்  தேனிக்களும்
தேனாடைகள் தந்து நம்மை
இன்பத்தால் திளைக்க செய்திடுமே...

உலகமே உறவென்று  எண்ணுங்கள்
புன்கையே வாழ்வாகும்
சிறு முல்லை சிரிப்புடனே
முடிக்கின்றேன் என் பாவை

( பாவை என்றால் பெண் என்று பொருள்
எனவே என் கவியை என கொள்க...)
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Thursday, February 12, 2015

பெருமை !

பெருமை யடிப்பதால் -அது
நம்மையே
புரட்டி அடிக்கிறது!
குணக்கடல் குன்றிப்போகிறது!
மனக்கடல் மாசுவடைகிறது!

அறிவுக் கருவாகிறது
அடிக்கிற பெருமைக்கு!
பணம் பெருகப் பெருக
மனம் சுருங்கிப் போகிறது!
சிலரோ
அழகை வைத்து

அடிக்கிறார்கள் பெருமை!
அடிக்க அடிக்கப் பெருமை
அடித்தளம் ஆட்டம்
காண்கிறது
ஆற்றங்கரையில் அசைந்தாடும் மரம்
மணல்அரித்து மாள்வது போல!

சிறகறுந்த தேனீ
சேகரிக்குமா தேனை?
விறகெரிந்தபின்னர்
விளங்குவதோ சாம்பல்!
வீண்பெருமையின்
விளைச்சல்
பதர்!

அறிதொறும் அறிதொறும்
அறியாமையே
அங்கம் வகிக்கிறது
பெருமையால் அறியாமை இருள்
பங்கம் செய்கிறது!

பெருமை மழை போன்றது
பெருமைக் குரியவராய்
வாழ்தல் நன்றே!
மழை இறங்க,
அதில் மரங்கள்
களைப்பாறுகிறது!

கனிகள் சில இனிப்பாகிறது
கசப்பும் உண்டு
மழையால் குற்றமில்லை
சேர்ந்த மரத்தின் தன்மை!

"வெண்மேனி பெற்றவன்
கருமேனி பெற்றவனை விட
மேலானவனா? "
நபிகள் கேட்டார்கள்.
நிறத்தால் பெருமை,
நிறமின்னும்
உடையால் பெருமை

வணிகப் பொருளால்
பெருமை!
ஏழையை இழிவுக்கண்ணால்
பார்க்கும் ஈனர்களைப்
பெற்றெடுக்கும் பெருமை!

செல்வர்கள் மட்டுந்தான்
புனிதர்களா?
ஏழைகள் மனிதர்கள்
இல்லையா? அவர்களில்
புனிதர்கள் இல்லையா?

மறைவான உலகில்
ஏழைகள்
மன்னர்கள்!
நீ..... ?
'கவிஞர்' அதிரை தாஹா

Tuesday, February 10, 2015

பத்திரிக்கையாளன் ஒரு பார்வையாளன் !

பத்திரிக்கை துறையை பொறுத்த வரை அன்று முதல் இன்றுவரை
சமுதாய அவலம் முதல் சாதனையாளர் வரை அசிங்கம் முதல் அதிசயம் வரை அன்றாடம் மக்களிடம் சேர்த்ததன் விளைவு இன்று அசுர வளர்ச்சி பெற்ற துறையாக விளங்குகிறது. அதில் பங்கேற்கும் பத்திரிக்கையாளர் சிறந்த படைப்பாளியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ஆனால் தான் காண்கின்ற எதையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும் .

கொண்டு செல்லும் செய்திகளின் அடிப்படையில் அந்த பத்திரிக்கைக்கு
வாசகர்கள் அமைவார்கள். அதே போன்று வலைதளத்தில் வரும் படைப்புகள், வலைதளத்தின் வருகை கூடுதல் எப்போது என்பதை ஒரு பத்திரிக்கையாளனாய் பார்க்கிறேன் அதன் அடிப்படையில் நான் பார்த்த, படித்த, கேட்டவைகளை பகிர்ந்து கொள்ளவே இது போன்ற வித்தியாசமான தலைப்பில் உங்களை சந்திக்கிறேன்...

நான் கத்தார் சென்றிருந்த போது, ஒரு அருங்காட்சியத்திற்கு சென்று இருந்தேன் அங்கு அரேபிய நாட்டு பழங்காலத்து மக்கள் பயன் படுத்திய மண் பாண்டங்கள் முதல் இன்றைய நவீன உடைகள் வரை காட்சி பொருளாக வைத்து இருந்தார்கள். அதில் நான் ஒன்றும் அதிசயத்து போகவில்லை ஆனால் இந்திய விடுதலைக்கு போராடிய திப்பு சுல்த்தான் மன்னரின் உடைகள், அவர் பயன் படுத்திய பல்வேறு பொருட்களை கொண்ட பெரிய தொகுப்பை  அருங்காட்சியத்தின் பெரும் பகுதியை அதற்காக ஒதுக்கி
இருந்தார்கள். பார்த்து பிரமித்து போனேன்...

அதே போன்று ஒரு செய்தி TNTJ என்ற சமுதாய அமைப்பின் வலைதள காணொளியில் *செல்பி* என்ற மனோ வியாதியை பற்றி ஒரு செய்தி தொகுப்பு போட்டிருந்தார்கள். இந்த கால இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்ற நடவடிக்கை பற்றியும் அதனால் ஏற்படும் விளைவு பற்றியும் பதிந்திருந்தார்கள். அதாவது தன்னை தானே படம் எடுத்து கொள்ளுதல் இது சாதாரண செயலாக தெரிந்தாலும் சிலருக்கு இதுவே வெறியாக மாறி விடுகிறது. வித விதமான உடைகளில் தன்னை தானே போட்டோ எடுத்துகொள்ளுதல், அதிகமாக கண்ணாடி முன் நின்று தன்னை தானே பார்த்து குறை ஏதும் உள்ளதோ என பார்த்து கொள்ளுதல் போன்ற நிலைக்கு தள்ளப்படும் நிலையம் உண்டு. மெக்சிகோ நாட்டை சேர்ந்த வாலிபர் செல் போனில் தனக்கு தானே போட்டோ எடுத்து கொண்டு இருந்தார் ஒவ்வொரு செயல் செய்யும்போது போட்டோ எடுப்பது வழக்கம். அவருக்கு விபரீத ஆசை துப்பாக்கி சுடுவது போல போட்டோ எடுத்துக்கொண்டார்.

சரியாக அமையவில்லை மீண்டும் போட்டோ எடுக்க முயற்சி செய்யும்போது வீடியோ, போட்டோ சரியாக எடுக்க பட்டு விட்டது ஆனால் துப்பாக்கியை உண்மையாகவே அழுத்தி விட்டார். முடிவு அவராகவே எடுத்த படத்தை பார்க்க முடியவில்லை.

இளைஞர்களே ஜாக்கிரதை !
பிகார் இளைஞர் ஒருவர். கோன்..பனோ ..குரோர்பதி..என்ற நிகழ்ச்சியில் ஐந்து கோடி ஜெயித்து விட்டார். அதற்கு முன் மாதம் நான்காயிரம் ரூபாய் சம்பளத்தில் இருந்தவராம். அது வரை சொந்தங்கள், உறவினர்கள், கண்டு கொள்ளவே இல்லை. ஐந்து கோடிக்கு அதிபதியானதும் அண்ணன் தம்பி என்று பார்க்க வந்தார்களாம். பலரின் தேவைகள் பூர்த்தி செய்தாரம். கண்மூடி முளிப்பதற்க்குள், பலவகையில் செய்த அவரின் வங்கி கணக்கில், ஐம்பது லட்சமாக குறைந்து விட்டதாம்.

மீண்டும் ஏதாவது ஒரு வேலை செய்ய முயற்சிக்கும் நிலை ! பாவம் என்பதா ?
உறவுகள் ..என்ன செய்கிறதோ ...

ஒரு பட்டிமன்ற பேச்சாளர் சொன்ன சிரிப்பு தத்துவம் புரிந்து சிரியுங்கள்.

தாசில்தார் வீட்டு நாய் செத்து விட்டதாம் ..
ஊரே...அவர் வீட்டில்  கூடியதாம்...
தாசில்தார் செத்து போனாராம். ஒரு நாய் கூட அவர் வீட்டிற்கு செல்ல வில்லையாம்....

புரிந்ததா ? பின்னூட்டத்தில் சந்திப்போம்...

'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Sunday, February 8, 2015

[ 11 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(37)
காட்டி விளக்கிடக் காணும் பொருளாகக்
காட்டா மலெண்ணும் கருவாக - ஊட்டும்
ஒருவர் உதவியில் ஒன்றாகி நின்றே
விரும்பித் தெளிய விளங்கு.

(38)
விளங்க முயலும் விதத்தில் தெளிவு
பிளக்க நினைக்கப் பிரிவு - வளர்த்திடும்
நோக்கம் செயலாகி நேர்த்தியாய் ஆகிவிடும்
ஆக்கும் மனமே அதை

(39)
அதையடைந்தே தீரும் அதனிலே மூழ்க
இதையுணர எல்லாம் இயலும் - விதைக்க
முளைப்பதன்றி மாறி முடங்காதே வாய்ப்பில்
களைப்பதனை நீக்கியே காண்

(40)
காண்பதெல்லாம் உண்மையின் காட்சிகள் காணவே
தூண்டுமுணர் வுத்துயிலாத் தூய்மையில் - மாண்டபின்
காட்சிகளும் கண்ணும் கரைந்தொன்றும், ஒன்றதனின்
ஆட்சிகளின் ஆட்டம் அறி.

நபிதாஸ்

வெண்பா (37)  
பொருள்: இதுதான் என்று சுட்டிக்காட்டிடும் உருவமும் அன்று. ஆனாலும் இப்படித்தான் என்று விளங்கி; விளக்கிக் காட்டாமலும் போக உண்மைக் கருவே சத்திய உண்மை இறை ஆகும். அதனை அறிந்த இறைநெருக்கம் பெற்ற ஒருவர் உதவியில்; அவர்கள் காட்டும் நெறியில்; அந்நெறியான ஒன்றான உண்மையில் நின்றே; அதனில் ஆர்வம் மிகுந்து விரும்பி இறைவனை அறிந்துத் தெளிந்திடவே விளங்கிக்கொள் என்பதாகும்.

வெண்பா (38)  
பொருள்: ஒன்றைப்பற்றி விளங்க முயலும் விதத்தில் அதில் தெளிவுகள் பிறக்கும். அதைவிடுத்து அதில் குற்றம் காண முயன்றால் அவ்வொன்றை வேறொன்றாகக் குற்றம் காணும் உணர்வு காட்டும். ஆக, எந்த நோக்கத்தில் ஒன்றைப்பற்றித் தெரியத் தெளிய விரும்புகிறோமோ அந்த விதத்திலே இவனில் இருக்கும் மனம் என்ற ஆற்றல் செயல்படும் என்பதாகும். எனவே ஆற்றலை முறையான வழியில் செயல்படுத்த வேண்டும்.

வெண்பா (39)  
பொருள்: ஒன்றை அடைய விரும்பினால் அதனை அடையும் வழிதனில் தீவிரமாக மூழ்கினால் அதனை அடைவது உறுதி. இதை அறிந்த ஒருவனால் அவன் விரும்பும் எதனையும் அடைய இயலும். காரணம் இவன் மனதில் எந்த எண்ணத்தை விதைக்கின்றானோ அது முளைத்து அவன் விரும்பியவண்ணம் ஆக்காமல் இவனைப்படைத்த இறையாற்றல் விடாது. எனவே திட்டமிட்டதை அடையமுடியவில்லை என்று களைப்படைந்து முடங்கிவிடாதே என்பதாகும்.

வெண்பா (40)  
பொருள்: இப்பிரபஞ்சத்தில் காண்பதெல்லாம் உண்மையின் காட்சிகளே. அவ்வாறுக் காணும் பொழுதுக் காணவேண்டும் என்றத் தூண்டும் உணர்வு தூய்மை என்ற நிலையில் வழுவாதிருந்திடல் வேண்டும். தூய்மை என்பது வேற்றொன்று இல்லாத ஒன்று ஆகும். வேறொன்று ஒன்று இருந்தால்தான் மற்றதனில் கலந்து மாசு ஏற்படும்; தூய்மைப் போய்விடும். அத்தகைய ஒன்றானத் தூய்மையாகி காணும்போது காட்சிகளும் காணும் செயலும் கண்ணும் கரைந்தொன்றாகிவிடும். அந்நிலையில் ஒன்றே அனைத்தாகி இருக்கின்றதென்ற உண்மையை அறியலாம் என்பதாகும்.

Wednesday, February 4, 2015

மொழியின் நாயகன் யார்?

மொழி அறியா
மழலை சொல் இனிதென்று
இனம் புரியா மகிழ்வை தரும் என்று .
இசைவெள்ளத்தில் மூழ்க செய்யும் ..
யாழிசையும் குழலிசையும் கூட
மழலை முன் ஒன்றுமில்லை
என கூறும் நாயகனே ..நீ

காற்றிடமும் பேசிடுவாய் ..
கல்லிடமும் பேசிடுவாய்
நீரிடமும் பேசிடுவாய்
நெருப்பிடமும் பேசிடுவாய்

பூவிடமும் உறவாவாய்
புல்லிடமும்பாசம் வைப்பாய்
பசுவையும் நீ தாய் என்பாய்
உயிரில்லா பொருளிற்கும்
உறவு வைத்து அழைத்திடுவாய்

உன் பார்வை புதிரானது ..
கதிரவனின் கதிர்களை நீ கோபம் என்பதும்..
தென்றலின் இதம் காதலின் குணம் என்பதும்
அலையை நீ கடலின் சிறு கோபம் என்பதும்
ஆழியை நே பெரும் கோபம் என்பதும்
புதிரான பார்வைதான்

மொழியின் வளத்தை ..
உன் இனமே பறை சாற்றும்
ஓராயிரம் கட்டுரைகளை ..
ஒரே வரியில் சொல்லிடுவாய் .

உன் உள்ளத்தில் உதிக்கும் ..
கருத்துக்கள் ..பசுவின் பால்மடி
அல்லது உயிரினத்தின் தாயின் பால்மடி
உன் கருத்து எழுத்தாகும் வரை
சுரந்த பால் கரக்காத ..
தாயின் மார் வலி...

கரந்தப்பின் ..இனிய அயர்வு
அதுவே உனது உணர்வு
கவிஞனே ..நீயே மொழியின் நாயகன்
நான் பார்க்கும் பார்வையிலே கவிஞா...
நீயே மொழியின் நாயகன்.
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
Pro Blogger Tricks

Followers