.

Pages

Monday, June 30, 2014

[ 7 ] மகவே கேள் : நேரம் செலவிடும் முறை !

கவே கேள் :
நேரம் செலவிடும் முறை !
நீ ..பள்ளி வாழ்வை முடித்து கல்லூரி வாழ்வை துவங்கும்  நீ ஒவ்வொரு நொடி பொழுதையும் கவனமாய் செலவிட கற்றுக் கொள் அதுவே உனது குறிக்கோள் நிறைவேற செய்யும் செயலாய் அமையும்.

கல்லூரி காலம் என்றால் கலாட்டா காலம் ..வசந்தம் பொங்கும் காலம் என்று கடந்து வந்த காலத்தை கூறும் எத்தனையோ பேர் வறுமையில் வாடும் நபராக பார்க்கிறேன் .கல்லூரி காலத்தைப்பற்றி கூறும் அவரின் முகத்தில் புன்னகை பூக்கும் .நிகழ காலத்திற்கு திரும்பும் அவர் சோகம் கொள்வார் .எனவே உனது நேரத்தை வீணடிக்கும் பொழுது போக்கு விசயங்களை தூர எறிந்து விடு .

உன் பருவம் அறிந்து செயல் படு நான்கு ஆண்டு தவம் நாற்பது ஆண்டுகாலம் பலன் தரும் என்பதை மறக்காதே .வழி காட்டும் ஒவ்வொரு ஆசான்  இடமும் நீயே சென்று ஆலோசனை கேள் நேரம் இன்றி அமையாதது என்பதை நன்றாய் புரிந்து கொள்.

நேரம் பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டதை போல பிறந்த குழந்தைக்கு உறக்கம் முக்கியம் உறக்கத்தின் மூலம் நேரத்தை கழிக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை ..ஆனால் வாலிப பருவத்தை அடைந்த வாலிபன் உறக்கத்தை குறைத்து கடின உழைப்பில் ஈடு பாடு உள்ளவனாக இருத்தல் வேண்டும். உன் பருவத்தில் கிடைக்கும் நேரம் பொக்கிசமான நேரம்
விரயம் செய்து விடாதே !

மீண்டும் கூறுகிறேன்...
உனது நேரம் பொன் போன்றது. விரயம் செய்து விடாதே ..
போன் ...விரயத்தின் வழி காட்டி ஊடகம் ..அப்படியே விழுங்கும் ராட்சஸமிருகம் இல்லாத ஒன்றை இருப்பதாய் காட்டும் சினிமா வீண்
நேரம் ஒதுக்கி வீண் அரட்டை அடிக்கும் கும்பலில் சிக்கி வீணாகி விடாதே ..
கோடி கோடி தொண்டனில் ஒருவனாய் கொடிபிடித்து அலைந்து விடாதே
குறிக்கோள் கொள் வெல்வாய் உன் வாழ்வை எல்லாம் முடிந்த பின் நேரத்தை குறை கூறாதே நேரம் சரியில்லை என்பவன் .பின்பம் இல்லா ஒன்றை காட்டி குற்றம் சாட்டுவதை போன்றது ..இலக்கை அடைய நேரம் வகுத்து வாழ்வை வகு ..வெற்றி நிச்சயம்.
அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Saturday, June 28, 2014

“பிறை சொன்ன சேதி என்ன ?

மறைகூறும் செய்திகளைப் பின்பற்ற
,,,,,மனிதகுலத்தில் முஸ்லிம்கள் ஆனோரே
பிறைகூறும் செய்திகளாய்ப் பாவடிவில்
,,,,,பொழிகின்றேன் ஏற்பீரே தீனோரே!

இருளகற்றி ஒளிவீசி வானில்நான்
…..இருந்துகொண்டு பேசுகின்றேன் மானிடரே!
அருள்வசந்தம் சுமந்துகொண்டு உங்களிடம்
….அகத்தினுள்ளே நீக்குகின்றேன் மாஇடரே!

வரவேற்கக் காத்திருந்த நீங்களெல்லாம்
…வாய்மையை மட்டுமுங்கள் வாய்களிலே
உரமிட்டு வைத்திருந்து என்வரவை
….உற்சாகமாய்க் காணவந்தீர் வாயிலிலே!

பிறைக்கீற்றின் கதிர்வீச்சில் சுமந்துவந்தேன்
…..பிழைபொறுக்க ரமலானின் மாதமாக
இறைக்கூற்றை நான்சுமந்த ஒருபிறையில்
….இறக்கிவைத்தான் மாநபி(ஸல்)க்கு வேதமாக!

கறைகளையும் தீமைகளையும் அழுகின்றக்
,,,கண்ணீரால் கழுவத்தான் வந்துள்ளேன்
இறையிடமே மன்னிப்பைக் கேட்கவேண்டி
,,,இம்மாதமாய் உங்களிடம் தந்துள்ளேன்!

பசித்துணியால் பாவக்கறை துடைத்திடவே
,,,பயிற்சிகளைத் தருகின்றேன் சத்தியமாக
வசித்திருக்கும் ஷைத்தானை இப்பசியால்
,,,வதைத்திடுங்கள் ஒருமாதப் பத்தியமாக!

ஷைத்தானை விலங்கிட்டு அடக்குமாற்றல்
…. “சபுரென்னும் பூட்டுக்குள் பூட்டித்தான்
வைத்தேனே பிறையென்னும் ஒளியாக
,,,வீசுகின்ற ரமலானைக் காட்டித்தான்!

வானோக்கிப் பார்க்கின்ற கண்களையும்
…வரிசையான தீமைதரும் காட்சிகளால்
வீணாக்கிப் பறிக்கின்ற ஷைத்தானை
…விலக்கிடுங்கள் என்பிறையின் சாட்சிகளால்!

ஆன்மாவின் உணவாக இம்மாதம்
….ஆக்கிவைத்து நோன்பென்னும் பசியாக
தேன்பாயும் திருமறையைத் தினமோத
..தித்திக்க வைத்தேனே ருசியாக!

ஆண்டுதோறும் வருகின்றேன் உங்களிடம்
…ஆவலுடன் காத்திருப்பீர்; நம்புகின்றேன்
மாண்டுபோகும் ஷைத்தானை உங்களிடம்
…மடியினிலே கண்டுமனம் வெம்புகின்றேன்!

அழுகையெனும் தண்ணீரால் கழுவிடுங்கள்
….அழுக்காறு பாவத்தைக் கவனமாக
தொழுகையெனும் தவத்தினாலே பெற்றிடுங்கள்
….தொடர்ந்துவரும் வரமென்று சுவனமாக!

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு :
இந்தக் கவிதை கடந்த [ 26-06-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

Tuesday, June 24, 2014

போலிகள் !? [ நடிப்புகள் ]

அறிவுத்தேன் II

அன்புடையீர், 
வேலை பளுவின் நிமித்தம் தொடர் காலதாமதமாக எழுதலாகிற்று.

பொதுவாக ஒருவரைப்போல் பேசுதல் அல்லது நடித்தல் என்பது போலியாகும்.

ஒரு நடந்த சம்பவம் அல்லது கற்பனை நீதிக்கதைகள் இதனை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த அல்லது விளங்க வைக்க பிறர் அந்த சம்பவத்தில் அல்லது கதையில் இருப்பவற்போல் நடித்துக் காட்டுவார்.

நடிப்பில் யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் இல்லையாதலால் அதில் போலியின் பாதிப்புகள் இல்லை. அதனால் காதால் கேட்பதை கண்ணாலும் பார்த்து விளங்கிக் கொள்வதற்காக தத்ரூபமாக நடிப்பதை போலியின் தீமை தரும் வட்டத்திற்குள் அல்லாமல் உள்ளது என்று சொல்லலாம்.

இங்கு நடிப்பவர் அந்த அந்த கதாப்பாத்திரமாக நடித்து அதனின் உண்மைகளை அறியச்செய்வதற்கு துனைபுரிகிறார். கதாபாத்திரத்தைப் பொறுத்து இவர் போலி. ஆனால் போலியின்சுபாவம் இல்லை. நடித்த பின் அக்கதாபாத்திரம் வேறு தான் வேறு என்றதான் இருப்பார். அதனால் இவரை  நடித்து விளங்க உதவுகிறார் என்றதான் சொல்வோம். இதன் விளைவால் பாதிப்புகள் இவரால் இருக்காது..

பொதுவாக போலி என்பதின் தாத்பரியம் அதனில் ஏமாற்றுதல் அல்லது பாதகம் அல்லது துரோகம் இழைத்தல் அல்லது துன்பத்தில் வீழ்த்துதல் போன்றவைகளும் இருக்கும்.

சில நேரங்களில் சில பல பொது நன்மைக்காக இவ்வாறு உண்மையைப் போன்று நடிக்க வேண்டிவரும். அதனை ஆகுமானப் போலி எனலாம்.

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட ஆஸ்திரிய நாட்டில் பிறந்து, ஜெர்மானியில் சர்வாதிகாரியாக இருந்து, அர்ஜென்டினாவில் இறுதிவரை வாழ்ந்து மறைந்த அடால்ப் ஹிட்லர் ஆறு நபர்களை தன்னைப்போன்று டூப்பாக ஜெர்மனியில் சர்வாதிகாரியாக இருந்தபோது சில காரணங்களுக்காக் வைத்திருந்துள்ளார்.

நன்மை தரும் கசப்பு மருந்தை இனிப்புத் தடவி தருவதும் போலியின் குணம் கொண்டதாகாது. அதுபோல் எந்த ஒரு செயலும் அதனால் அதன் விளைவால் பொது நன்மை தராமல் தீமைகள் விளைவிக்குமானால் அவைகளே போலியாகும். அவ்வாறு சொல்வதில் தவறிருக்காது.

ஏமாற்றுவதற்காக சில தடயங்களை விடுதல், பிறர்போல் தன குரலில் பேசுதல், நடித்தல் போன்றவைகள் போலிகளாகும்.

ஒரு சிலர் சில சமூக நல்ல வாழ்வியல் தத்தவங்களை தன் வாழ் நாட்களில் சொல்லி, போதித்து வாழ்ந்து செயல்படுத்தி காட்டிச் சென்றிருப்பார்கள். பின்னாளில் தன் சுய இலாபங்களுக்காக அக்கொள்கைகளை சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்பவர்களும் உண்டு. அதன் மூலம் அத்தத்துவங்களே தவறு என்று பலர் சொல்லும் நிலைக்கு இவர்களால் ஏற்பட்டுவிடும் அல்லது கொண்டும் போய்விடும். காரணம் போலிகள் அதில் நுழைவதால் தான் அவ்வாறு ஏற்படுகிறது.

சில நேரங்களில் அசல் போலவே உருவத்திலும் போலிகள் இருக்கும். சில பொருள்களை மிகத்தரமாக செய்து விற்பவரே போலிகளையும் செய்தும் விற்பார். அதனைப்பற்றி வரும் வாரத்தில் பார்ப்போம்.
(தொடரும்)
நபிதாஸ்

Saturday, June 21, 2014

சுற்றி எரிகிறது ! சுந்தரத் தீவு !!

சுற்றி எரிகிறது
...சுந்தரத் தீவு
நெற்றி வைத்து
...நீளமாய்க் கேளு

காலமும் காணாக்
...காட்சித்தான் பின்ன
 பாலகர் செய்த
... பாவம்தான் என்ன?

கொடுமையிலும் கொடுமை
...கொலைசெயுமிவ் வன்மை
கடுமையுடன் தடுத்தால்
...களைந்துவிடும் தீமை

இறைவனின் கோபம்
....இவர்களைஅடையுமா?
விரைவுடன் தீர்ப்பு
...வந்திடவும்; மடிவர்

இறுதிநாள் வருகைக்கு
....இக்கொடுமை ஒருசான்றா?
உறுதியாய்க் கொடுமைக்கு
...உள்ளமெலாம் உருகாதா?

கொத்துக் கொலைகண்டு
...குழந்தைகள் நிலைகண்டு
கத்தும் கடல்கூட
...கதறுமே பழிதீர்க்க

தீர்ப்புநாள் வராதென்று
....தீதைச் செய்தாயோ?
யார்க்குமே அடங்காத
...யுத்தப் பித்தனே

அர்ஷில் எட்டும்
....அலறல் சத்தம்
குர்ஸி தட்டும்
...குழந்தை ரத்தம்

பாதிக்கப் பட்ட
...பள்ளியும் மக்களும்
நீதிக்கு முன்பு
...நிற்கின்ற வேளை

கூட்டுச் சதியால்
..கூடிக் குலாவி
வேட்டு வெடித்தல்
..வேடிக் கையே!

பொய்நாக் கூட்டம்
...புரிய வில்லையா?
ஐநா சபையோர்
...அறிய வில்லையா?

பிரிவினை கேட்டனரா?
பிரியமுடன் நடந்தனரா?
எரியுமுன் கோபமதில்
இழந்ததுவுன் பகுத்தறிவே!
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Wednesday, June 18, 2014

[ 6 ] மகவே கேள் : நேரம் கடந்து செல்வதில் கவனம் கொள் !

நேரம் கடந்து செல்வதில் கவனம் கொள் !
உனக்கு இவ்வுலகில் இறைவன் எல்லா வற்றையும் அளவுடனேயே தந்துள்ளான். நீ சுவாசிக்கும் காற்று முதல் உனக்கு உணவு உடைஎன்று எல்லா வற்றிக்கும் அளவுகோல் உண்டு. அதில் முக்கியமான ஒன்று உனக்கு தரப்பட்ட வாழ்நாள் .அதனை நீ எப்படி கடந்து வந்தாய் ? அல்லது எப்படி பயன் படுத்தினாய் ? என்பதில் தான் உன் வாழ்க்கை பயணம்.. வெற்றியின் பாதையிலா..? அல்லது படுபாதாள பாதையிலா ? என்பதை அறிய முடியும் ..!

கொஞ்சம் விளக்கமாய் அறிவோம் வா...
நாட்களை 24 மணி நேரமாய் பிரித்து மிக அழகாய் கடந்திட நம் முன்னோர் வழி காட்டியுள்ளனர் அதனை ஒவ்வொரு வயதிற்கும் வித்தியாச மான முறையில் கடத்திட வேண்டும். பிறந்தது முதல் ஒரு வயது வரை உணவு உடனே உறக்கம் அதுதான் ஆரோக்கியமான தன்மை தாய் மகிழ்வாள்.

குழந்தையின் உடல் நிலை ஆரோக்யமாக உள்ளது என மகிழ்வாள் ..பின்னர் ..ஐந்து.. ஆறு வயதிற்குள் அக்குழந்தை மனித வாழ்வின் அன்றாட தேவை பூர்த்தி செய்து கொள்ளும் வண்ணம் தாய் உதவியுடன் இருக்க பழகி ..நடக்க ..பேச பழகி ..நீ இயற்கையாய் உடல் ஆரோக்கியத்துடன் வளம் வரும்போது உன்னுடன் மகிழ்வும் அழகாய் வீட்டில் வளம் வரும் ..பின்னர் நீ உலக வாழ்வில் அங்கம் வகிக்க கல்விச்சாலை அனுப்ப படுவாய் அந்த கால கட்டம் தான் உணக்கு நேரங்களின் அவசியம் அறிய படவேண்டிய தருணம். 24 மணி நேரத்தை சரியாய் பிரித்து கொள். உறக்கம் 8 மணி நேரம், இரவு 9 மணிக்கு உறங்க சென்றால் அதி காலை 5 மணிக்கெல்லாம் விழித்து விடலாம்.

"உனக்கு இறைவன் தந்த விசாலமான நேரம் உன் முன் குவிந்து கிடக்கும் அதிகாலையில் உனது மனம் வெற்றிடமாக இருக்கும் அந்த நேரத்தில் நீ பாடங்களை படைக்க முற்பட்டால் ..மனப்பாடம் செய்ய ஏதுவாக இருக்கும் ..
ஓரிரு மணி நேரம் படித்த பின்னர் உடல் குளித்து ..உணவுண்டு பள்ளிக்கு செல்ல எத்தனிக்கும் நீ முதல் மாணவனாய் காட்சி அளிப்பாய் ..உன் முகம் பார்த்தாலே ..ஆசிரியர் முகம் மலரும் ஒவ்வொரு தருணத்திலும்    ஆசிரியரால்  பாராட்ட படும் மாணவனாய் காட்சி தருவாய் பள்ளி சென்று வீடு திரும்பும் உனக்கு சவாலாய் அமையும் மனோ ஆசைகளை கலைந்தால் மட்டுமே அடுத்த நாளும் மகிழ்வாய் கழிக்க முடியும் விளையாட்டு முக்கியம் என்றாலும் அதன் காரணமாய் நேர விரையம் ..வேண்டாத நட்பு என்று
உனது எதிர்கால இலக்கின் திசையை மாற்றி விட கூடும் நீ பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிய பின்னர் எவ்வளவு மணி நேரம் உள்ளது .உறங்க செல்லும் நேரத்தை அவசியம் கருத்தில் கொள் ..மீண்டும் அதிகாலை விழிக்க வேண்டும் அல்லவா ?

காலத்தை பற்றி கவியாய் சில வரிகள்...
கண்ணே ...
காலம் கண் போன்றது ..
உறங்கியே கழித்து விடாதே
நேரம் பொன் போன்றது
அளவாய் செலவிடு ..
காலத்தை வென்று விடு ..
இல்லையேல் உன் எதிகாலத்தை
அது கொன்று விடும் ..
ஒவ்வொரு நாளும்
உன் மீது வைக்க படும் சுமை
அன்றே இறக்கி வைத்து விடு
எச்சரிக்கை நீ இறக்கி வைக்கும்
சுமை நீ செல்லும் பாதைக்கு
இடையூறாக இருத்தல் கூடாது
உன் படு குழியை மூடும் பாறை களாய் அமையட்டும்
நேரமில்லை என்பதும் கூடாது ..
இவ்வளவு நேரம் இருக்கிறதே என்ற அங்கலாய்ப்பும்
கூடாது ..பள்ளி ..கல்லூரி நாட்களில் நீ செலவிடும்
உன் எதிர் காலத்தின் நன்மைக்கு வித்திடும் விதையாய்அமையட்டும்
நேரத்தை நலமாய் கழித்து வளமாய் வாழ வாழ்த்துகிறேன்...
அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, June 13, 2014

பாலைவனத்திலிருந்து ஒரு பரிதாபக் குரல் !

திரியாய்த் தானே வாழ்வினில்
 *****தினமும் எரியும் ஆசைகள்
புரியா மடமை இலாமலே
 *******புரிந்தே நாங்கள்  உணர்வதும்
தெரியா தொன்றும் அல்லவே
 ********தெரியும் வெளிச்சம் காணவே
சரியா பிழையா விடைகளை
 *******சரியாய்த் தெரியா வாழ்விதே!

இளமை விதையை விதைப்பதால்
*******இழப்பின் ஈட்டைப் பெற்றிலோம்
வளமை ஒன்றே   பயிரென
*********வானம் பார்க்கும் உழவராம்
குள்மாயக் கண்ணீர் வேரினுள்
*********குடமென ஊற்றி உழைத்திடும்
களமெனக் காணும் பாலையில்
**********காசு வளர்க்கும் மரமிதே

பாலைச் சூடும் உணர்ந்திடா
*******பாழும் மனமும் உன்வசம்
நீலக் கடலைத் தாண்டியே
*******நீயும் இருப்பாய் என்னுயிர்
காலம் பிரித்த காதலைக்
******காதில் சொல்லும் செல்லிடை
கோலம் போடும் வலைதளம்
*********கொடுஞ் சிறையின் மீன்களாய்!

 முகநூல் வாயால் கதைத்திட
********முகமும் காண  விழித்திரை*
சுகமும் ஊடல் பேச்சினில்
*******சுவனம் காண்போம் கணினியில்
அகமும் புறமும் இல்லறம்
********அடையும் இன்பம் இதுவென
பகரும் உலகில் வாழ்வதால்
*******பாழாய்ப் போகும் நாட்களே!

விடுப்பில் கிடைக்கும் விடுதலை
*********விம்மிக் கரையும் நாட்களும்
அடுத்தி ருக்கும் நட்பினால்
**********அகலும் துயர எண்ணமே
படுத்து றங்கும் பாயிலும்
********பசியைப் போக்கும் உணவிலும்
தொடுத்த குறிப்போ வேறிடம்
*********தொடரும் இதயம் இந்தியா!

தினமும் ஈரம் சேர்த்திட
*******திர்ஹம் செலவு செய்திட
மனமும் ஒப்பி வருவதும்
********மாதம் ஒன்று ஆண்டினில்
கனமாய்ப் பாரம் சேர்ந்ததை
******காய்ந்துக் கருகிப் போனதை
வனமாய்ப் போன மனத்தினை
******வடிநீர் ஊற்றிக் காக்கவே!

பெட்டி நிறையப் பெற்றதும்
*******பிரிவுச் சொரிய இழந்ததும்
கட்டிக் கொண்ட கடனுடன்
********கட்டு டல்கள் சிதைந்ததும்
சுட்டும் விழியை விற்றபின்
*******சொக்கும் கனவுச் சித்திரம்
விட்டில் பூச்சி கவர்ச்சியில்
*******விடையை அறியா விசித்திரம்

கரு : கவிமகன் காதர் ( Kaayalpattinam, India )
உரு: கவியன்பன் கலாம் காதர் ( Adirampattinam, India )

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு :
இந்தக் கவிதை கடந்த [ 12-06-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

Thursday, June 5, 2014

அரசியலில் சீர்திருத்தம் வேண்டும் !

அதிசயம் இங்கே அதிசயம் - ஆமாம்
.....அனைவரும் இப்போ அறியணும்
அதிபதி ஆக்கும் அரசியல் - அதனில்
.....அறியனும் போக்கில் பிசகுகள்

பலமுனைப் போட்டிகள் தேர்தலில் - தோற்றப்
.....பார்வையில் நல்நேர்மை போலதில்
அலங்கோலம் ஆகி இருக்கிறதே - அவசியம்
.....அறிவுடன் ஆழமாய் பார்க்கணுமே

ஜனநாய கம்என்றால் ஆளுவோர் - அவரில்
.....சரிபாதி மேலே கொண்டோர்
இனஒத்த மூன்றின் ஒருபகுதி - மானிடர்
.....மத்தியில் ஆளுதலா நீதி ?

மயக்கிடும் இந்தஜன நாயகம் - வழிதனில்
.....மதிவிழித்தே காக்கனும் தாயகம்
இயக்கும் இரண்டே அமைப்புகள் - இங்கே
.....இருந்திட வேண்டுமே தேர்தலில்

அமைப்பின் இரண்டிலும் சாதிமதம் - சமமாய்
.....அணியாக நிர்பதே நீதியாகும்
சமைந்தே அவரினில் போட்டிகள் - விகிதம்
.....சார்ந்தே நிறுத்தனும் தேர்தலில்
 
அவரவர் தேவை உரிமைகள் - அங்கே
.....அடைவதில் இன்ப உணர்வினில்
விவரங்கள் ஆழமாய் சிந்திப்பீர் - விரைவாய்
.....விதைத்தே செழித்திட்டே வாழ்ந்திடுவீர்

வல்லரசு என்பதும் வந்திடும் - மக்கள்
.....வாழ்வினில் சொர்க்கமும் நின்றிடும்
நல்லதே வேண்டுவோர் நாடனும் - நன்கு
.....நம்மில் ஒருமித்தே பேணனும்

அமைதியில் இந்தியா நின்றிடும் - அதன்
.....அழகுநல் திட்டங்கள் வென்றிடும்
இமைகள் விழித்திட்டே நோக்கிடுமே ! - இனி
.....இந்தியா இவ்வுலகை ஆண்டிடுமே

அதனால் திருத்தங்கள் வேண்டும் - அனைத்திலும்
.....அவசியம் மாற்றங்கள் கொண்டும்
பதவிகள் ஊர்பகுதி தோறும் - சேவையாளர்
.....பகுத்தே நிறுத்திட பாரும்

தெருச்சேவைச் செய்தோரின் தேர்வில் - நல்ல
.....திறமையாளர் ஊராள சேர்ப்பீர்
அருமையாய் அவ்விதம் ஆகியே - வல்ல
.....அவரிலே சட்டமன்றம் போகியே

நபிதாஸ் (தொடரும்)

Wednesday, June 4, 2014

[ 5 ] மகவே கேள் ! சமுதாய சேவை

சமுதாய சேவை :
இளமை காலத்தில் கிடைக்கும் அறிய வாய்ப்பு ! அதை நீ பயன்படுத்தி
கொண்டால் உனது எதிர் காலத்தில் நல்ல பயனுள்ள பாடமாக அமையும். சமுதாயம் என்பது அண்டை வீட்டார், உறவினர் எனலாம் அவர்களுக்கு உதவி செய்வது என்பதே ! நான் சமுதாய சேவையாக கருத்துகிறேன்..

நான் சிறுவனாக இருந்த காலத்தில் சில மூதாட்டிகள் கடைக்கு சென்று சில பொருட்கள் வாங்கி வர சொல்வர். மறுப்பேதும் சொல்லாது வங்கி வருவேன். அவர்கள் உதவி கிடைத்த திருப்தியில் நல்வாழ்த்து கூறுவார் . அது மனநிறைவை தரும். நமது வயது வரம்பை பொறுத்து உதவிகளின் தன்மை மாறும்.

மின்சார கட்டணம் கட்டி வருவது.
மின் இணைப்பு பற்றி புகார் செய்து வருவது.
நகராட்சி...ஊராட்சி நிர்வாகத்தில் ..வீட்டு வரி செலுத்துவது.
இரயில் ..விரைவு பேருந்துகளுக்கு முன் பதிவு செய்வது ..

என்று எழுத்து பூர்வமான அலுவலக வேலைகள் செய்ய கோறுவர். இது உனக்கு கிடைக்கும் அறிய வாய்ப்பாய்கருதி சேவை செய். தலை சாய்த்து செய்யும் சேவை ..உனக்கு அரும் மருந்தாய் அமையும் எதிர் காலத்தில் நீ பட்டதாரியாய் ஆனா பின்பு நீ சுய தொழில் செய்வதாக இருந்தாலும் சரி ..அலுவலக அதிகாரியாய் வளம் வருவதாக இருந்தாலும் சரி ..துரிதமாய் செயல் படஏதுவாக அமையும்  .

"முகமது நபி அவர்கள் சிறு பிராயத்தில் .வேலை நிமித்தம் கடை வீதி செல்வதாக இருந்தால் அக்கம் பக்கத்தாரிடம் நான் கடை வீதிக்கு செல்கிறேன் தங்களுக்கு உதவி ஏதும் வேண்டுமா ?.. என வினவி ..செல்வார்களாம். எனவே
அவர்களை அக்கம் பக்கத்தினர்  "அல்-அமீன் (நபிக்கைக்கு உரியவர் ) என்று
அன்பாய் அழைப்பார்களாம்

உன்னை பற்றி அண்டை வீட்டார் .நல்லவர் சொல்லாதவரை
நீ நல்லவனாக இருக்க முடியாது. அண்டை வீட்டார் என்ற அளவுகோல் யாது என நபிகளாரின் தோழர் வினவ .. பதிநான்காவது வீடு வரை உனது அண்டை வீடாகும்.

அண்டை வீட்டார் மரணித்தால் ..உணவிற்கு ஏற்பாடு செய்வது மிக நன்மையான ஒன்று என நபிகளார் உபதேசித்து உள்ளார்கள். அண்டை வீட்டார் .எந்த மதமாக இருப்பினும் சரியே .. உனது உறவு நலமாக இருக்க வேண்டும் .மகவே கேள் ...உன் வாழ்வு நலமாகட்டும்
அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
Pro Blogger Tricks

Followers