.

Pages

Saturday, December 31, 2011

நிலம் வாங்கப் போறிங்களா ?


அதிரை : 24/12/2011 ,


சகோதரர்களே ! நாம் அனைவரும் இரவு பகல் என பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கக்கூடிய பணத்தில் நல்லதொரு செயல் திட்டங்களை தீட்டி நிறைவேற்றுவது என்பது நிதர்சனம். குறிப்பாக திருமணம் செய்தல், நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், நகைகள், பொருட்கள் வாங்குதல், பிள்ளைகளின் கல்வி, சகோதரிகளின் திருமணம், பெற்றோர்களின் மருத்துவ செலவு மற்றும் அன்றாட செலவுகள் என எண்ணற்ற நம்முடைய ஒவ்வொரு கடமைகளையும் சிறிது சிறிதாக நிறைவேற்றிக் கொள்வோம்.

நமதூரில் வசிக்கக்கூடிய அனைத்து சகோதரர்களுக்கும் நிலம் வாங்கி வீடு கட்டுதல் என்பது ஒரு கடமையாகவோ, கனவாகவோ இருக்கும். மேலும் நமதூரில் விற்கக்கூடிய மனைகளின் விலைகளை நன்கு அறிவீர்கள். இவ்வளவுத் தொகையை கொடுத்து வாங்கு முன் நாம் கவனமாக கீழ் கண்ட முறைகளை பின்பற்றி பாதிப்புகள் ஏற்படாதவாறு நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மனைகள் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை :

1. நிலத்தின் லே-அவுட் ( Layout ) போட்டு அதற்கு அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

2. நிலத்தின் பகுதி பத்து ஏக்கருக்கு ( அதாவது முப்பது “ மா “ ) குறைவாக இருந்தால், மாவட்ட டீ.டி.சி.பி. ( Directorate of Town and Country Planning – DTCP ) அலுவலகத்தின் அனுமதி தேவை.

3. நிலத்தின் லே-அவுட்டில் சாலை வசதி, பூங்கா, பொது இடம் என்று இடங்களை ஒதுக்கிருக்க வேண்டும்.

சாலை, குடிநீர், மின்சாரம் வசதிகள் விரைவில் நமது உள்ளாட்சியின் மூலம் கிடைக்ககூடிய வாய்ப்புகள், மேலும் நாம் உடனடியாக வீடு கட்டும் சூழ்நிலை உருவானால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியின் மூலம் ‘ புதிய வரைபட அனுமதி ‘ என பயன்களை அடையலாம்.

சொத்துகள் / மனைகள் வாங்கும் போது என்ன என்ன “ டாகுமென்ட்ஸ் “ கள் கவனிக்கப்பட வேண்டியவை ?

1. பட்டா : ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது - பட்டா. இப்பட்டாவில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், ( Survey Number and Subdivision ), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.

2. சிட்டா : ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா ? என்பதும் தீர்வை ( வரி ) கட்டிய விவரங்கள் சிட்டாவில் இருக்கும்.

3. அடங்கல் : ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் 'அடங்கல்'. அடங்கலில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இருக்கும்.

4. வில்லங்க சான்றிதழ் ( Encumbrance Certificate ) : 22 ஆண்டுகள் வில்லங்க சான்றிதழ் போதும். 30 ஆண்டுகள் ரொம்ப நல்லது. சொத்தின் உரிமை ( Ownership ) , சொத்தின் நான்கு எல்லைகள், பேங்க் அடமானங்கள், நீதி மன்ற வழக்குகள் இவைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

5. சொத்து ஆவணம் ( பத்திரம் ) :

1. நிலத்தின் உரிமையாளர் உயிரோடு இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்தோடு நிலம் விற்கப்படுகிறதா ? என்று தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமான விஷயம், யாரெல்லாம் வாரிசுதாரர்கள் என்று வாரிசு சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்வது. உரிமையுள்ள வாரிசுகளில் யாரேனும் மைனராக இருந்தால், உயர்நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் ( Guardian ) மூலம்தான் சொத்து விற்கப்படவேண்டும்.

2. அதிகாரம் பெற்ற முகவர் ( Power of Attorney Holder ) மூலம் சொத்து வாங்கும்போது, முகவருக்கு சொத்தை விற்கும் அதிகாரம் இருக்கிறதா என்பதை அதிகார ஆவணத்தை தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், விற்பனை ஒப்பந்தம் செய்வதற்கு மட்டும் கூட அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அப்படிபட்டவரிடம் இருந்து விற்பனை ஆவணம் பதிவு செய்துக்கொள்ள முடியாது. அதிகாரம் கொடுத்தவர் உயிரோடு இருக்கிறாரா ? என்று தெரிந்துக்கொள்ளவும். இல்லையென்றால், அதிகாரமும் இல்லை. பவர் பத்திரப்பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரமாகவும், அதே சமயம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பவர் பத்திரம் பதிவு செய்தால், ரூ.1,000 கட்டணம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3. மனநலம் பாதிக்கப்பட்டவரின் சொத்தை வாங்குவதற்கும் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும். நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் போது, உரிமை, உடமைகளுடன், அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

4. முன்பணம் கொடுப்பதற்கு முன் கண்டிப்பாக மூல ஆவணத்தை பார்க்க வேண்டும். மூல ஆவணம் இல்லையென்றால், சொத்து அடமானத்தில் இருக்கலாம்.உங்களிடம் கொடுக்கப்பட்ட விற்பனை ஆவணம், மூல ஆவணமா ( Original Deed ) அல்லது படி ஆவணமா ( Duplicate copy ) என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். மூல ஆவணம் நமக்கென்று கிடைக்க வாய்ப்பில்லாத அபார்ட்மெண்ட் ப்ளாட் விற்பனையின் போது, மூல ஆவணத்தை பார்வையிடுவது அவசியம்.

5. அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கும் போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும், நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அபார்ட்மெண்ட் கட்ட அனுமதி, திட்டத்தின் அனுமதி, வரைபடத்தின் அனுமதி என்று அனைத்து அனுமதியையும் பார்க்க வேண்டும். அனுமதி பெற்ற வரைப்படத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருக்க கூடாது.

6. விற்பனை ஆவண பதிவிற்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்துக்கொள்வது நல்லது. விற்பனை ஒப்பந்தத்தில், முன்பணம், விற்பனைத் தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

இறைவன் நாடினால் ! தொடரும்............

2 comments:

  1. சகோ ( சேக்கனா M. நிஜாம் ) அவர்களின் பதிவிர்க்கு நன்றி.,,,,
    இன்றைய காலகட்டதில் நில மோசடி அதிகரித்து வரும் தருணத்தில் நீங்கள் காட்டும் விழிப்புணர்வு எங்களுக்கு மிகவும் பயனுல்லதாக அமைந்துள்ளது.......
    ------------------------------
    எதிர்ப்பார்புடன்.....
    முஹம்மது நிஜாமுதீன்.J.M(www.nplanners.webs.com)
    S/Oகோ.மு.அ. ஜமால் முஹம்மது.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers