வங்கக்கடலாம் தங்கக்கடலும்
வளமுரு அருங்காவிரியும்
ஊண் ஊட்டிட்டியே தாலாட்டி
வளர்த்த, செல்லிமாநகரெனும்
அதிரையின் அழகிய சரித்திர வரலாறு
கூறுவோம், இத்தளத்தில் காணீர் !
தொன்று தொட்டே துறைமுகத்தொடர்பால்
வளமிகு வாணிபம் செய்தே
கொள்வினை, கொடுப்பினையும் கொண்டு
'செல்லிமாநகர்' கொழித்துச் செழித்து
வரலாற்றுச்சுவடுகளில் அதன் அழகிய
சரித்திரத்தை ஆழவும் பதித்து
வரதுங்க பாண்டியனின் சகோதரர்
அதிவீர பாண்டியன் எனும்
மாமன்னன் பெரும்புலமை பெற்ற
புலவனும் ஆவான் அறநெறிமிக்க
அரசாட்சி கொண்ட பேரரசனுமாவான்
வாழைக்கொல்லை எனும் எழில்சூழ்
வளமிகு நிலத்தில் 'கோட்டை' ஒன்றை
அமைத்து, அறம் தழைக்க
அம்மாவீரனும் கோலொச்சியே
கொற்றவனாகி ஆண்டான் [ கி.பி. 1562-1567 ]
சிறப்புரு, சீர்மிகு செல்லிநகர்
அதிவீர பாண்டியனின் அதிவீரமிகு
தீரச்செயலால் அவன் பெயர் சூடியே
[ நன்றியுள்ள ] மக்கள் அதிவீர பாண்டிய
பட்டினம் என்றே அழைத்தனர்.
மன்னனும் மக்களின் அன்புகண்டு மகிழ்ந்தான்
காலத்தின் ஓட்டத்தில் அப்பெயரும்
மருவி, திரிபுமாகி 'அதிராம்பட்டினம்'
என்றே நிலைத்து நின்றதேயாகினும்,
இறுதியில் அதுவும் சுருங்கி
'அதிரை' - என்றே ஆனது.
வாணிபத் தொடர்பால் அராபியர்
அதிரையை 'அபாத்' - என்றே அழகிய
பெயராலும் அன்று அழைத்தனர்
வரலாற்றிலும் அதனை பதித்தனர்.
எல்லாம் வல்ல ஏகனின் அருள்
தங்கியே நிற்கின்ற, அதிரையாம்
சீர்பதியில் ஆன்மிக அறிஞர்கள்
அறத்துறை வேந்தராம் வள்ளல்
காதிர் முகைதீன் மரைக்காயர்
இலங்கு தமிழில் இலக்கியப்பா
வடித்த 'அமிர்தகவி' செய்யது
முஹம்மது அண்ணாவியார் அவர்தம்
வரிசையில் இன்றும் அதிரையில்
புலவர்கள் கவிஞர்கள் என
அதன் தொடரும் நீளுமே...!
தேசவிடுதலையில் உயிரை
துப்பாக்கி முனையில் அர்ப்பணம்
செய்ய முன்வந்த, தியாகச்சீலர்களாம்
தியாகி எஸ்.எஸ். இபுராஹீம், அப்துல் ஹமீது
சுதந்திரப்போரட்ட விடுதலைப் போரில்
சுபாஷ் சந்திர போஸின் ஐ.என்.ஏ அமைப்பில்
சேவையாற்றிய உடன் பிறந்த சகோதரர்கள்
முஹம்மது ஷரிப், செய்யது முஹம்மது
இன்னபிற இம்மண்ணின் மைந்தர்களும்
இம்மண்ணில் மறைந்தே வாழுகின்றனர்.
செல்லிநகரம் அதிரை குறித்து
அதன் சிறப்பினை யாழ்ப்பாணத்து
புலவனொருவனும் பாவிலே
நாவுரைத்துப் பாடினான் இதன்கீழ்
காணுவீர் !
""கல்வி மாண்டவர் களுன்று
வைகிடமாம் செல்லிமாநகர்"
[ பொருள் : கல்வியில் சிறந்த ஆன்றோர் அறிஞர்கள் நெருங்கியே வாழும் ஊர் ]
இறையருள் பொழியும் அதிரை நம்
நனவிலும், கனவிலும்
நீங்காது நின்று என்றும்
நல்லோர், உலகோர் உள்ளத்தில்
வாழுமே !
"புதுமைக்கவி" அதிரை அப்துல் ரஜாக்
நான் அறிந்திராத பல வரலாற்றுத் தகவல்கள் !
ReplyDeleteஎங்க ஊரு அதிரை
தொடர வாழ்த்துகள்...
அதிரையின் வரலாற்றையும் அதன் பெயர் எப்படியெல்லாம் அழைத்து பிறகு அதிரை என்று அழைக்கப்படுவதையும் அழகாக கவி வரிகளில் சொல்லி அசத்தியதுடன் நமது மூதாதையார்களை நினைவு படுத்தி அவர்களின் செயல் வீரத்தையும் நினைவு படுத்தியுள்ள விதம் அருமை.
ReplyDeleteநன்றி வாழ்த்துக்கள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteபுதுமைக்கவி அதிரை அப்துல் ரஜாக் காக்கா அவர்களின் கவிவரிகள் மிகவும் அருமை. நான் ஊரில் இருந்த அநேக சமயங்களில் அவர்களை பார்த்ததுண்டு. கவிதைகள் மட்டுமல்லாது இன்னும் நிறைய ஆக்கங்களை எதிர்பார்கிறேன். உங்களால் எழுத முடியும் காக்கா.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
வாழ்த்துக்கள்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.எங்க ஊரு அதிரை அருமை.
ReplyDeleteதொடர வாழ்த்துகள்...
அழகு தமிழில் அதிரை சிறப்பினை
ReplyDeleteஅழகுற தந்த மூத்த கவி அப்துல் ரசாக் காக்கா
அவர்களுக்கு வாழ்த்துக்களும் து ஆ களும்