.

Pages

Friday, March 8, 2013

மனைவி எனும் துணைவி !மனைவியென்னும் மாதரசி நாடும் அன்பை
.....மகிழ்வுடனே மதித்திடுவோம் அவளின் பங்கை
நினைவிலென்றும் நீங்காது நெஞ்சில் மேவும்
.....நித்தமவள் வழங்கிவரு மின்பம் யாவும்
சுனைநீராய் வற்றாமல் தியாகம் செய்வாள்;
.....சுரக்குமன்பால் மறவாமல் நியாயம் செய்வோம்!
பனைமரமாய் நற்பலன்கள் தருவாள் என்றும்
.....பகுத்தறிவைப் பயன்படுத்திச் செய்வோம் நன்றி

சலவையையும் சளைக்காமல் செய்வாள்;ஊணும்
.....சமைத்திடுவாள்; இல்லத்தில் தூய்மை காணும்
நிலவினைப்போல் வெளிச்சமாக்கி வைத்துக் காத்து
.....நிற்குமவள் செயலுக்குச் சொல்வோம் வாழ்த்து
புலமையுடன் கூரறிவும் பெற்ற இல்லாள்
.....புத்தியுடன் கணவனுக்கு வழியும் சொல்வாள்
கலவரமாய் முகத்தினில் ரேகைப் பார்த்து
.....கவலைகளும் போக்கிடுவாள் அன்பை ஈந்து

இல்லாளை மதிப்போர்க்கு வாழ்க்கை இன்பம்
.....இல்லாத சந்தேகம் கொண்டால் துன்பம்
பொல்லாத பழிகளையும் நம்ப வேண்டா
.....பொய்சொல்லி ஆபத்தில் சிக்க வேண்டா
நல்லோராய்க் குழந்தைகள் வளர வேண்டி
.....நாடோறும் கஷ்டங்கள் யாவும் தாண்டி
சொல்லொண்ணாப் பொறுமையினை நெகிழ்ந்து யோசி
.....சொர்க்கமெனக் கொண்டாடி மகிழ்ந்து நேசி

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

22 comments:

 1. மனைவி பெருமை அருமை !

  பெண்கள் சமூகத்தில் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்

  மகளிர் தினத்தன்று நல்ல கருத்துடன் கூடிய கவிதை தந்த கவிக்குறளுக்கு என் வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. ஆம். பொருத்தமான தருணத்தில் இவ்விருத்தப்பா ஈண்டுப் பதிவிடல் வேண்டும் என்பதே என் அவா. நீங்களும் என் விருப்பத்தை நிறைவேற்றினீர்கள். இச்செய்யுள் இலண்டன் தமிழ் வானொலியியில் வியாழன் கவிதை நேரம் (பா முகம்) ஒலிபரப்பப்பட்டதன் ஒலிப்பேழை அல்லது விழிமம் அங்கிருந்து வருவதற்குத் தாமதம் ஆனதால், முதலில் என் ஒதுக்கீடான “சனிக்கிழமை”க்குள் பதிய வேண்டியும், மகளிர் தினச் சிறப்புக் கவிதையாக அமையவும் வேண்டினேன்; அதன்படியே உடன் பதிவுக்குக் கொணர்ந்த உங்கட்கு என் உளம்நிறைவான நன்றிகள்= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

   Delete
 2. பதிவுக்கு நன்றி.

  மனைவி எனும் துணைவி.
  அருமையான தலைப்பு.

  உண்மையான மனைவி எப்படி இருப்பாள் என்று இக்கவிதைமூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

  அதே நேரத்தில்.
  பெண்மையைக் குறித்து உயர்த்தியும் புகழ்ந்தும் பாடாத பாடல்கள் இல்லை, எழுதாத கவிதைகள் இல்லை, வடிக்காத கட்டுரைகள் இல்லை, காட்டாத காட்ச்சிகள் இல்லை. பாவையர் என்றும், பூவையர் என்றும், இல்லத்தரசி என்றும், பெருமையாகப் பேசப்படும் அந்த பெண்ணினத்திற்காக தீவிர முழக்கம் ஆண்கள் போராட்டம், புதுமைப் பெண்ணுக்கு புத்துயிர் தர ஆண்கள் பரிந்துரை. பெண்களை பாது காப்போம், வரதட்சணையை ஒழிப்போம், பெண்கள் எங்களின் கண்கள், இப்படி ஒரு பக்கம் பெண்களுக்காக ஆண்களின் குரல்கள்.

  மறுபக்கம் பெண்களை பொம்மைகளாக, அழகுப் பொருளாக, போதைப் பொருளாக, பார்க்க மட்டும் ரசிக்க, ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கின்றாள் என்று பெருமையாக பேசும் ஆணினம்தானே பெண்ணை சீரழிக்க விரும்புகிறது.

  காலந்தொட்டு நடந்து வரும் சிசுக் கொலைகள், கல்லிப்பால் கொலைகள், வரதட்சனைக் கொலைகள், இன்னும் எத்தனையோ கொலைகளுக்கு மத்தியில் பெண்களை ஒரு வட்டத்துக்குள் சுழலுபவளாகவே இந்த சமூகம் பாவித்து வருகிறது.

  இன்று பெண்களுக்கு கருவில்கூட பாதுகாப்பு கிடையாது, சிலர் பெண் என்று ஸ்கேனில் தெரிந்ததும் உடனே அந்த கருவை கலைத்துவிடுகின்றனர்.

  வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்.
  அன்புடன்.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
  Replies
  1. அன்பின் மச்சானின் அருமையான தகவல்களுடன் கூடிய பின்னூட்டம் என் கவிதைக்குக் கிட்டிய ஊட்டச் சத்து என்றே கருதுகிறேன்; உண்மையில், மகளிர் தினம் கொண்டாட இற்றைப் பொழுதின் மன்பதைக்குத் தகுதியே இல்லை என்பதைத் தான் சமீபகால நிகழ்வுகள் சான்றுகளாய்க் காண்கின்றோம். கட்டிலுக்குக் கன்னியாக, தொட்டிலுக்கு அன்னையாக, உடன்பிறப்புகட்குச் சகோதரியாக, இல்லத்தின் அரசியாக, எல்லா நேரங்களிலும் பணிவிடை செய்யும் வேலைக்காரியாக, தியாகத்தின் சுடராக விளங்கும் மனையாளின் மாண்பை மகளிர் தினத்தில் நினைப்போம்!

   Delete
 3. காகா கவிதை பெண்களின் சிறப்பு கூறுது ஜசக்கல்லாஹ் ஹைரன்

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தங்கை பர்வீன் ஆயிஷா, அஸ்ஸலாமு அலைக்கும், உன் வருகை நீண்ட நாட்களுக்குப் பின் காண்கிறேன்; உன் இனிய வாழ்த்துரைக்கு என் உளம்நிறைவான நன்றிகள்; ஜஸாக்கல்லாஹ் கைரன். இத்தளத்திலும் உன் வருகைத் தொடரும் என்று எதிர்பார்க்கிறேன். இச்செய்யுளின் கருத்துக்களை என் அன்புத் தங்கையான உனக்கு, காக்காவாகிய என் அறிவுரைகளாய் நீ எடுத்து உன் வாழ்விலும் கணவர் போற்றும் நல்ல மனைவியாக வாழ்ந்து ஈருலகிலும் நற்பேறுகள் அடைவாயாக (ஆமின்)

   Delete
 4. நங்கையும் நாணுவாள்
  தங்களின் கவிபார்த்து
  நயம்படச்சொன்நீர்
  நல்லகவி நமக்கெல்லாம்

  ReplyDelete
  Replies
  1. எழிலார்ந்த கருத்துக்களால் எம்மை ஈர்த்தத் தொழிலதிபர் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் குறிப்பிட்ட வரிகள்
   \\நங்கையும் நாணுவாள்
   தங்களின் கவிபார்த்து\\ என்பது உண்மைதான்;
   ஆனால், இக்கவிதைக்கு அல்ல; இச்செய்யுளின் தொடர்ச்சியாக வேறொரு தலைப்பில் (”இல்லறமும் இலக்கணமும்”) என் வலைத்தளத்தில் பதிந்துள்ள அக்கவிதைக்குத் தான்; அதனாற்றான் இத்தளத்தில் யான் அக்கவிதையைப் பதியவில்லை; மேலும், ஒவ்வொரு முறையும் என் மரபுப்பாக்களைப் பிழைத்திருத்தம் மற்றும் யாப்பிலக்கணம் சரிபார்த்திட வேண்டி என் ஆசான் புதுவைப் பாவலர் இராஜ.தியாகராஜனார் அவர்கட்கு அக்கவிதையை அனுப்பியப் போதில், அவர்கள் தெரிவித்த மறுமொழி: “ கவியன்பரே! உங்கள் பா வரிகளில் சொற்குற்றம், பொருட்குற்றம், இலக்கணப்பிழைகள் காண முடியா. ஆயினும், இற்றைப் பொழுதினில் இளைஞர்கள்\இளைஞிகள் நீங்கள் சுட்டும் கருத்துகளை நன்றாய் முன்னரே உணர்ந்தே வைத்திருக்கின்றனர்; அதனால் பொதுதளத்தில் பதிய வேண்டா” என்று கேட்டுக் கொண்டதனால் என் முகநூல் பக்கத்திலும் கூட அச்செய்யுளை யான் பதியவில்லை.

   அப்பாடலைக் காண இங்குச் சுட்டவும்:

   http://kalaamkathir.blogspot.ae/search?q=%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
   Delete
 5. வாழ்க்கைத் துணைவியரை
  வர்ணனையாய் கவி வடித்து
  வழங்கிய கவியன்பருக்கு
  வாழ்த்துக்கள் பல கோடி


  ஒவ்வொருவருடைய வாழ்விலும் மனைவியுறவு என்பது அவசியமான முக்கியமான உறவு. அவ்வுறவை மதித்து
  நடந்திடுவோம்.

  ReplyDelete
  Replies
  1. புதுமைக் கவிஞர் மெய்சா அவர்கள் சொல்லுவதும் மெய்தான். மனையறிவு இருக்கும் அளவுக்கு மனைவியைப் பற்றிய அறிவுக் கிஞ்சிற்றும் இல்லாமல் திருமணம் செய்த வேகத்தில் விவாகரத்துகள் பல்கிப் பெருத்து விட்டன!

   உங்களின் இனிய வாழ்த்துரைக்கு என் உளம்நிறைவான நன்றிகள்.

   Delete
 6. மனைவி என்றால் வீட்டை விளங்கச்செய்பவள் என்று பொருள். மனை=வீடு = வி=விளங்கச்செய்பவள். பெண்டாட்டி என்றால் பெண்டாளப்படக் கூடிய பெண் என்று பொருள். பெண்டு என்றால் பெண்மை என்பதாகும். ஆட்டி என்றால் பெண். எடுத்துக்காட்டு: மணவாட்டி = மணப்பெண் என்பன சரியா கவி அய்யா ?

  பெண்களின் சிறப்பை அழகாக எழுதியுள்ளீர்கள் அய்யா

  வாழ்க தமிழ் வளர்க தமிழ்ப்பற்று

  ReplyDelete
  Replies
  1. பெண்ணின் சிறப்பை என்னை விடச் சொல்வளத்துடனும் அதன் உள்ளார்ந்த பொருளுடனும் சரியாக விளக்கமளித்த உங்கட்கு என் உளம்நிறைவான நன்றி அய்யா.

   Delete
 7. மனைவியின் பெருமையை அருமையாக பேசி இருக்கிறீர்கள். மகிழ்ச்சியுடன் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரி திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களின் இனிய வாழ்த்துரைக்கு என் உளம்நிறைவான நன்றி.

   “உங்களில் எவர் தன் மனைவியிடம் நற்பெயர் பெறுகின்றாரோ அவரே சிறந்தவர்; நான் என் மனைவியரிடத்தில் நற்பெயர் பெற்றுள்ளேன்” என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் போதனையாகும்.

   Delete
  2. வணக்கம் திரு அபுல். உங்களது பத்தி மூலம் நபிகள் நாயகத்தின் போதனை ஒன்றை படிக்கும் பேறு கிடைத்தது. மகிழ்ச்சி!

   Delete
  3. அன்புச் சகோதரி அவர்கட்கு நபிகளார்(ஸல்) அவர்களின் பொன்மொழியை எத்தி வைக்கும் வாய்ப்பும் அச்சகோதரி அவர்கள் அக்கருத்தை ஊன்றிப் படித்ததும் யான் பெற்ற பேறு என்பேன்.

   Delete
 8. இப்படியான இல்லாள் இப்போது இல்லாள் ;-)

  கலவரமாய் முகத்தினில் ரேகைப் பார்த்து
  .....கவலைகளும் போக்கிடுவாள் அன்பை ஈந்து

  உங்கள் கவிதையை வாசித்து அறிந்துகொள்ளட்டும் ஒரு பெண் தான் வாழ்க்கை அந்தப் பெண் துணை பிசகினால் உயிரே பிசகும் என்று.

  நல்ல எண்ணங்களைக் கொண்ட நேர்மறைக் கவிதை நண்பா, வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அன்புடன் புகாரி அன்புடன் வழங்கிய வாழ்த்துரைக்கு அன்புடன் உளம்நிறைவாய் என் நன்றியை நவில்கிறேன் நண்பா! நீங்கள் குறிப்பிட்டது உண்மைதான், இற்றைப் பொழுதின் இளைஞிகள் சமையல் கலை கூட கற்காமல் கணினி மட்டும் கற்றால் போதும் என்று இருந்து விடுவதால், இல்லாளின் தகுதி இல்லாளாய்க் காண்கின்றோம்.

   Delete
 9. இன்று மட்டுமல்ல... என்றுமே போற்றப்பட வேண்டியவர்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் உளம்நிறைவான நன்றி. ஆம். இன்று மட்டுமன்று என்றும் மனையாளின் மாண்பை மதிப்பதே நன்று.

   Delete
 10. தாய் சேய் இரண்டும் பெண்தான் அவர்கள் இரண்டும் இரண்டு கண்கள். கவிதை வரிகளால் வரிணீத்தது அருமை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. அன்பு நேசர் ஹபீப் , அஸ்ஸலாமு அலைக்கும், உங்களின் வாசித்தலின் ஆழ்ந்த ஆளுமையை இக்கூற்றினூடே காண்கிறேன். ஆம். தாயும் சேயும் போற்றப்படல் வேண்டும். உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் உளம்நிறைவான நன்றி=ஜஸாக்கல்லாஹ் கைரன்.

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers