.

Pages

Friday, July 12, 2013

அமலால் நிறையும் ரமலான் !

பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்
படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்
கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்
கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்
பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவரும் மாதம்
பயபக்தி யாதென்று சோதிக்கும் மாதம்
வசிக்கின்ற ஷைத்தானை விலங்கிலிடும் மாதம்
வறியவர்க்கு ஈந்திடவே “ஃபித்ராவின்” மாதம்

குடலுக்கு மோய்வாக்கி குரானோதும் ரமலான்
குற்றங்கள் தடுத்துவிடும் கேடயமாம் ரமலான்
*திடலுக்கு வருவதற்குச் சேமிக்கும் ரமலான்*
திண்ணமாகச் சுவனத்தைப் பெற்றிடத்தான் ரமலான்
உடலுக்கும் பயிற்சியாக்கும் நெறிமுறைகள் ரமலான்
உயிர்க்குள்ளே உணவானச் சுடராகும் ரமலான்
கடலுக்குள் மீன்போல கல்புக்குள் ரமலான்
கர்த்தனவ னறியுமிர கசியம்தான் ரமலான்

குறிப்பு: 
இப்பாடலில் தடிமன் எழுத்துக்களில் உள்ளவைகள் அறபுச் சொற்கள்; இவ்வாறாக அறபுத்தமிழினைப் பாடலில் இணைப்பது இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் ஏற்றுக் கொள்ளப்படிருப்பதை உமறுப்புலவர் அவர்களின் சீறாப்புராணம் மற்றும் உள்ள இலக்கிய நூற்களில் காணலாம். 

கீழே அச்சொற்கட்கான பதவுரை வழங்கியுள்ளேன்:
1 ] அமலால் நிறையும் ரமலான் ( அமல் = நற்செயல் )
2 ] ஷைத்தான் = இறைவனால் சபிக்கப்பட்டு நம் இரத்த நாளங்களில் ஓடிக்கொண்டிருக்கும் நம்மை வழிகெடுக்கும் ஒரு தீயசக்தி.
3 ] ஃபித்ரா = நோன்பில் ஏற்பட்டத் தவறுகட்குப் பரிகாரமாகவும் ஏழைகளின் உணவுத் தேவைக்கு நோன்புப் பெருநாளைக்கு முன்னதாகக் கொடுக்கப்பட வேண்டிய தர்மம்
4 ] குர்-ஆன் = இறைவன் வழங்கிய இறுதி வேதம்
5 ] கல்பு = ஹ்ருதயம்; உள்ளம்
6 ] ரமலான் = இஸ்லாமிய ஐந்து கடமைகளில் ஒன்றான (வைகறை முதல் அஸ்தமனம் வரை) நோன்பிருக்கும் மாதம்

*திடலுக்கு வருவதற்குச் சேமிக்கும் ரமலான்* = மஹ்ஷர் என்னும் திடல் judgment day ground மறுமை நாளின் தீர்ப்பு வழங்கப்பெறும் இடம்

யாப்பிலக்கணம்:
காய், காய், காய், மா (அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும்
எண்சீர் கழிநெடிலடி விருத்தம்
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 11-07-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

18 comments:

 1. கவிதையோடு அதன் கீழே கொடுக்கப்பட்ட குறிப்புகள் அருமை + புது முயற்சி

  வாழ்த்துக்கள் கவிக்குறளுக்கு...

  // அமலால் நிறையும் ரமலான் !//

  மிகச்சரியாகச் சொன்னீர்கள்

  அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. விரைவாகவும் உடனுக்குடனும் பதிவுக்குக் கொண்டு வந்து விட்ட என் அருமைத் தம்பி விழிப்புணர்வு விததகர்- சமூகச் சேவகர் சேக்கனா நிஜாம் அவர்கட்கு என் உளம் நிறைவான நன்றிகள்.

  குறிப்பு: அடிக்குறிப்பிட்டதன் நோக்கம்: இலண்டன் தமிழ் வானொலியில் என் தமிழை தன் தேன்குரலால் வாசிக்கும் அன்புத் தங்கை ஷைஃபா மலிக் அவர்கள் முஸ்லிம் பெண்மணி என்றாலும், எங்கள் கவிதைகட்கு விமர்சனம் செய்யும் தொகுப்பாளினி திருமதி வேதிகா மற்றும் திருமதி இராஜ கௌரி ஆகியோர் அறபுச் சொற்களறியாதவர்கள் என்பதாற்றான் அறபுச் சொற்கட்குத் தமிழ் விளக்கம் இட்டேன். நான் கணித்தபடியே,, இப்பாடலைக் கேட்டு விமர்சனம் செய்த தொகுப்பாளினி திருமதி வேதிகா அவர்கள் குறிப்பிட்ட அறபுச் சொற்களின் அர்த்தம் தெரியாமல் இருந்ததை உணர்ந்த என் அன்புத் தங்கை திருமதி ஷைஃபா மலிக் அவர்கள் தமியேன் கொடுத்திருந்த தமிழ் விளக்கங்களை உடனுக்குடன் திருமதி வேதிகா அவர்கட்குத் தெரிவித்தார்கள்; இஃதே போல், இப்பாடலை இன்று தமியேன் பதிவு செய்யப்போகும் என் “யாப்பிலக்கண வகுப்பறையாம்” சந்தவசந்தம் இணையக் குழுமத்திலும் ஆங்கு வீற்றிருக்கும் ஆசானகளில் பலர் அறபுச் சொற்களறியாத சகோதர சமயத்தைச் சார்ந்தவர்களாதலால், அவர்கட்கும் உதவும் என்பதாலும், மேலும், இந்த சமூக விழிப்புணர்வுப் பக்கங்கள் என்னும் உங்களின் தளத்திலும் அதிகம் வருகை தந்து விமர்சனமும் பின்னூட்டங்களும் இடுகையிடுபவர்கள் சகோதரச் சமயத்தைச் சார்ந்த அன்புச் சகோதரர்/ சகோதரிகள் என்பதாலும் தான் இம்முயற்சியில் இறங்கினேன்.

  ReplyDelete
 3. பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவரும் மாதம்
  பயபக்தி யாதென்று சோதிக்கும் மாதம்

  ரமதான் கருணை நிறைக

  ReplyDelete
 4. //
  கடலுக்குள் மீன்போல கல்புக்குள் ரமலான்
  கர்த்தனவ னறியுமிர கசியம்தான் ரமலான்//
  நல்ல கவி எழுதியுள்ளீர்கள். மேற்கண்ட வரிகளுக்கு விளக்கம் தந்தால் என் புரிதலுக்கு வசதியாக இருக்கும்.
  அன்புடன் "உங்களுக்கு நண்பன்"

  ReplyDelete
 5. அன்பு நண்பர் அன்புடன் புகாரி அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் உளம்நிறைவான நன்றிகள்!

  ReplyDelete
 6. எனக்கு நண்பனாகிவிட்ட “உங்களுக்கு நண்பன்” அவர்கள் கேட்ட வினாவிற்கு விடை:

  \\கடலுக்குள் மீன்போல கல்புக்குள் ரமலான்\\

  கடலுக்குள் இருக்கும் மீன் தரைக்கு வந்து விட்டால் துடிப்பது போல், எம் கல்புக்குள் இருக்கும் நோன்பு நோற்கும் ரமலான் மாதம் முடிந்து விட்டாலோ, எம் ஹிருதயம் துடிக்கும் ; அஃதே ஈமானின் சுவையாகும்!

  //கர்த்தனவ னறியுமிர கசியம்தான் ரமலான்//

  கர்த்தன் அவன் அறியும் இரகசியம் தான் ரமலான் என்பதன் பொருள்:

  எல்லா வணக்கங்களும் வெளிப்படையாகப் பிறர் காணும் தன்மையுடையன; ஆனால், நோன்பு மட்டும் அதனை நோற்றவர்க்கும் இறைவனுக்கும் மட்டும் தெரிந்த இரகசியமாகும்; நோன்பு நோற்றவர் உள்ரங்கத் தூய்மையுடன் அதனைப் பாதுகாக்கின்றாரா என்பதன் இரகசியம் படைத்தவன் மட்டுமே அறியும் ஓர் இரகசியமாகும்! இப்படிப்பட்ட நோன்பைப் பிரகடனப்படுத்தும் ரமலான் மாதம் படைத்தவனின் இரகசியமாகும்!

  உங்களின் வருகைக்கும் வினாவுக்கும் உளம்நிறைவான நன்றிகள்!

  ReplyDelete
 7. சங்கை மிகு ரமளானின் சிறப்பு பற்றிய கருத்துள்ள கவி

  வாழ்த்துக்கள் கவியன்பர் அவர்களே

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துரையளித்த அன்பர் அதிரை சித்தீக் அவர்கட்கு என் உளம்நிறைவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   Delete
 8. ரமலானின் புகழ்பாடிய நெஞ்சைத்தொட்ட வரிகள்.
  அத்தனையும் அற்ப்புதம். அருமை. வாழ்த்துக்கள்.

  RAMADHAN KAREEM

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் என் உளம்நிறைவான நன்றிகள், கவிஞர் அதிரை மெய்சா.

   உங்களின் “சங்கைமிகு ரமலானே” கவிதையைக் கேட்டேன், இதே வானொலியில். இறைபக்தியும், மறையோதும் நாட்டமும் ஊட்டும் அருள்மிகு வரிகள்!

   அன்பு நிர்வாகி: விழிப்புணவு வித்தகர்- சேக்கனா நிஜாம்!

   அன்புச் சகோதரர்- சக கவிஞர் அதிரை மெய்சா அவர்களின் கவிதையும் இதே இலண்டன் வானொலியில் ஒலிபரப்பட்டும் அதனை இங்குப் பதிவில் கொண்டு வராமல் இருப்பதை என் மனம் வேதனைப்படுகின்றது, ஒரு கவிஞனின் படைப்பு வெளிப்பட வேண்டும் என்பதே மற்றொரு கவிஞனின் எதிர்பார்ப்பு. நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் ஒரே தலைப்பில் வாசிக்கப்பட்டக் கவிதைகளைப் படைத்திருப்பதாற்றான் இங்குப் பதியவில்லை என்பது உங்களின் வாதமாக இருந்தாலும், அற்புதமான கவிஞர் அதிரை மெய்சா என்னும் முஹைதீன் சாஹிப் அவர்களின் அடக்கமும் உங்களைப் பதியவிடாமல் இருந்தாலும், என் மனம் என்னை வாட்டுகின்றது. தயவுசெய்து அந்த அற்புத கவிஞரின் கவிதை ஒலிபரப்பும் இதே விழிமத்தில் உள்ளதை உடன் வெளியிடுக.

   ஒரே தலைப்பென்றாலும் சொல்லும் விதங்களில் வேறுபாடுகள் உள. அத்னை வாசக/ வாசகிகள் கண்டு விமர்சனம்/ பின்னூட்டங்கள் இடலாம்; இதனால் அந்த அற்புத கவிஞர் அதிரை மெய்சா என்னும் முஹைதீன் சாஹிப் அவர்கட்கும் ஓர் ஊக்கம் கிடைக்கும்.

   Delete
  2. அன்பின் கவிக்குறள் அவர்களே,

   'புதுமைக்கவி' அதிரை மெயசா அவர்களின் ஆக்கங்கள் பதிவது தொடர்பாக நீங்கள் குறிப்பிட்டது போல் எல்லாம் ஒன்றுமில்லை மாறாக கவிஞர் ஒரு வாரம் கவிதை மறுவாரம் கட்டுரை என இரு பன்முக படைப்பை பதிவதில் ஆர்வம் கொண்டிருப்பதால், அதன்படி பதிவுகள் தளத்தில் பதிந்து வருகின்றன.

   இந்த வாரம் புதுமைக்கவி அதிரை மெயசா அவர்களின் கவிதை தளத்தில் பதியப்படும் அவை ரமலானைப்பற்றிய கவிதையாக இருக்கும்.

   இந்தளவு அதிரை மெய்சா அவர்களின் மீது அன்பை தன்னகத்தே அடக்கி வைத்துள்ள உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. உங்களின் தொடர் ஊக்கத்தால் மென்மேலும் புதிய எழுத்தாளர்கள் நமதூரில் உருவாவது உறுதி. இறைவன் அருள் புரியட்டும்.

   Delete
  3. வளர்ச்சிப்பொறாமையில் நசுக்க நினைக்கும் இவ்வையகத்தார் மத்தியில் கருணைக்கண் திறந்து என் முகம் பார்த்த கவியன்பரின் இப்பரந்த மனப்பான்மை கண்டு மெய் சிலிர்த்துப் போனேன். தாங்களின் பெருந்தன்மையான எண்ணத்திற்கு மிக்க நன்றி. இன்ஷா அல்லாஹ் எனது கவிதையான ''சங்கை மிகு ரமலான்'' நிச்சயம் இடம் பெறும்.
   ramadhan kareem

   Delete
  4. என் மனம் குளிர வைத்த உங்களிருவரின் பின்னூட்டங்கட்கு என் உளம்நிறைவான நன்றிகள்!

   தமியேனின் உளத்தூய்மையை உணர்ந்து கொண்ட என் சக கவிஞர் அதிரை மெய்சா என்னும் முஹைதீன் சாஹிப் அவர்கள் பக்க்கமாக என் சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, இன்ஷா அல்லாஹ் பெருநாளைக்கு உங்களைச் சந்திக்கும் எண்ணத்தில் உள்ளேன் என்பதையும் முற்கூட்டியே சொல்லிக் கொள்வதில் மகிழ்கிறேன்.

   உங்களை மட்டுமல்ல, என் அன்புத் தங்கை கவியருவி முத்துநகர் ரத்தினம் - வித்தகத்தின் புத்தகம் மலிக்கா ஃபாரூக் அவர்களையும் புகழின் உச்சியில் நிறுத்த வேண்டும் என்பதே என் அவாவும் துஆவும் ஆகும். கவியருவி மலிக்கா அவர்களின் பேட்டிக்காகத் தமியேன் எவ்வளவு பாடுபட்டேன் என்பதை விழிப்புணர்வு வித்தகர் அறிவார்; இன்ஷா அல்லாஹ் என் அன்புத்தங்கையின் பேட்டியை மிக விரைவில் அவர் தருவார். அதுபோல், உங்களை அமீரகத்தின் அனைத்துக் கவியரங்கு மேடைகள்/ தொலைக்காட்சிகளில் நிறுத்தி உங்கள் பெயரும் எம் மண்ணின் பெயரும் பேசப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உஙகளைச் சந்திக்கும் வாய்ப்பைக் கேட்டு நிற்கிறேன்; இன்ஷா அல்லாஹ் கைகூடும் என்றே நம்புகிறேன்;

   அன்புத்த் தங்கை கவியருவி மலிக்கா அவர்கள் நின்று போன அமீரகத் தமிழ் மேடைகளைத் தமியேன் அலங்கரித்து நம் ஊரின் பெயர் பேசப்பட காரணமாகியுள்ளது போல், யான் நின்று கவிபாடிய இடங்களிலெல்லாம் நீங்களும் கவிபாட வேண்டும்; இன்னும் அதிரை என்றால் அங்குக் கவிஞர்கட்குப் பஞ்சமே இல்லை என்று சொல்லாத நெஞ்சமே இல்லை என்று பேசப்பட வைப்பதே என் நோக்கமாகும்.

   Delete
  5. விழிப்புணர்வு வித்தகரின் பேராதரவாலும் பெரும் ஊக்கத்தாலும் அன்பர் சக கவிஞர் அதிரை மெய்சா அவர்களைக் கட்டுரை எழுத்தாளாரகவும் மிளிர வைத்து விட்டதற்கும் என் உளம் நிறைவான வாழ்த்தும் நன்றிகளும் உரித்தாகுக!

   where inspiration
   there creation

   Delete
 9. பதிவுக்கு நன்றி.
  இனிய ரமலான் முபாரக்.

  “பசித்திரு, விழித்திரு, தனித்திரு”

  பசித்திரு:-
  நோன்பு நாட்களில் நோன்பு நோற்று பசியை உணர்ந்திரு இரு.

  விழித்திரு:-
  தூக்கத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்காமல் தியானத்தில் இரு.

  தனித்திரு:-
  நோன்பு, தியான வேளையில் உலக சிந்தனைகளைவிட்டு தனித்து இரு.

  மச்சான் உங்களின் இந்தக் கவிதை மிகவும் அருமை, இன்ஷா அல்லாஹ் அடுத்த ரமலான் வரை இதன் சுவை இருக்கும்.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 10. அன்பின் மச்சான் ஜமால் முஹம்மத், அஸ்ஸலாமு அலைக்கும்! ரமளான் கறீம்!!

  ஆம். சென்ற வருடம் மற்றொரு தளத்தில் கவிவேந்தர் அவர்களின் மேற்பார்வையிடப்பட்டு வெளியிடப்பட்டதே இப்பாடல்; இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் மீள்பதிவு செய்தாலும் “புதியதாகவே” மிளிரும் என்பது என் எண்ணம்; காரணம், இதில் கலந்திருப்பது புனித ரமளானின் தூய வண்ணம்! மார்க்கம் சம்பந்தமான எதுவும் மீண்டும் மீண்டும் எழுதினாலும், கேட்டாலும் எத்தனை ஆண்டுகளானாலும் புதியனவாகவேத் தோன்றும்!

  உங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் என் கனிவான நன்றிகள்= ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா!

  ReplyDelete
 11. கவிஞர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வது பார்க்க மகிழ்வாக இருக்கிறது.

  முத்துப் பேட்டை வருவதாக வாக்களித்து பின் கவியன்பன் பறந்து போய்விட்டாரே!

  ReplyDelete
  Replies
  1. கண்பட்டதால் எனக்குக்
   கண்ணில் அடிபட்டது அன்று!
   பேட்டியை நடத்தும் வழிகளைக்
   காட்டிவிட்டுத்தான் பறந்தேன்!

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers