.

Pages

Monday, August 5, 2013

தேவையற்றானின் தேவை !

ஆயிரம் ரக்காத்து வணக்கங்கள்
அதனைவிட மேல் !
அவனைப்பற்றிய சிந்தனையில்... மூழ்குவது
அண்ணலார் அறிவிப்பு.

புனித ரமளான்
அதில் ஓர் இரவு
அது மட்டும்
ஆயிரம் மாதங்களை விட மேலானது !
அவனின் அறிவிப்பு.

அந்த இரவும்
வந்து சொல்லும் வழியில்
அந்த இருசஹாபிகள் சண்டையில்
மறந்துவிட்டது.

ஆனாலும்
ரமலானின் கடைசி பத்தில்
ஒற்றைப் படையில்
அந்த ஓர் இரவு !
அண்ணலாரே அறிவிப்பு.

அந்த இரவின் மகிமை
என்பது வருடம் நான்கு மாதம்
நின்று வணங்கினால் கிடைக்கும் நன்மை !
அதுவும் கண் இமைக்கும் நேரம் கூட
மாறு செய்யாமல் !
இது வானவர் கோமான் ஜிப்ரயீல் அறிவிப்பு.

அறிவிப்புகள் அதன் நோக்கங்கள்
அறிந்தால் அது ஒன்றே !

அமல் செய்ய
பகலைவிட்டு இரவு மட்டும்
ஏன்' அவன்'  கூறவேண்டும் ?

அமைதி, தனிமை
இவை இரவில் சத்தியம்

தனித்தவனை அறிந்துகொள்ள
தனித்திருக்க தனித்த தக்க தருணமோ !.
ஆனாலும் இவிரவுக்கு மட்டும்
ஏன் ? இத்தனை சிறப்புகள் !...

புனித ரமளானில்
இனிய நன்மைகள்.

நற்செயல் எண்ணம்
உள்ளத்தில் மலர்ந்தாலே ஒரு நன்மை.
செய்தால் ஒன்றுக்கு
பத்து, எழுபது, நூறு, ஆயிரம் !

இவன் தகுதிக்கேற்ப
'அவன்' தருகிறான்!

அவனை அறியும் தகுதி- அதுவே
அதிகம் பெரும் வெகுமதி.யோ !

தீய எண்ணம்
உள்ளத்தில் உதித்தால்
இல்லை தண்டனை !
செய்தாலே ஒன்றுக்கு
ஒரு தண்டனையே !

நன்மை தீமை கணக்கில் ஏற்றத்தாழ்வு.
என்ன கருணை !
இவன் மீது அவன் கருணை.!
இல்லை !
இதில் ஏதோ சுய நலம் !

'அவனை' அறிந்துகொள்ள
இவன் வேண்டும்.
அதற்கு 'அவனின்'  இத்தனை சலுகைகள் !
சுய நலம் !

அதைத்தான் அவன்
'நான் மறைந்த பொக்கிஷம்
என்னை அறியப்பட வேண்டும் !
அதற்காகவே
படிப்புகளை படைத்தேன்'
என்றானோ !
தெளிவான சுய நலமோ !

இரமளானின் சிறப்புகளும், சலுகைகளும்
இவை மிகும் இப்புனித இரவும்
இவன் படைக்கப்பட்ட நோக்கமும்
'அவனை' அறிவதர்காகவேயாம்.

தேவையற்றானின் இத்தேவையில்
'அவனும்' இவனும்
தேவையற்றவனாகும் தேவை !
இணையழிந்து பிரிவில்லாத
அவனின் சுயமாகும் தேவை !
சுயத்தின் சுய நலம் !
ஆம் ! அது பொது நலமே.

இடம் பொருள் காலம் என்பார்.
'அவனும்' லைலத்துல் கத்ர் சொன்னான்
அவ்விரவிலே வேதம் தந்தேனென்றான்
அண்ணலும் காலம் காட்டினர்.

அண்ணலாரின் ஆயிரமாயிரம் அற்புதம் !
கல்,கறி,மரம் பேசியது ! சந்திரன் பிளந்தது !
சென்ற உயிர் மீண்டது ! கனவில் தந்தது நினவில் நின்றது !
எண்ணிலடங்க அதில் "அருள்மறை" ஒன்றே
அண்ணலவர்கள் அற்புதம் அற்புதம் என்றனர்.

அவனும் அண்ணலுக்கு
நிகரில்லா அவிரவில்
வேதம் தந்ததைத்தான்
வேதத்தில் சொல்கிறான்.

வேதம் பெற
நீதர் நிகரில்லானை
நிகரில்லாது அறிந்தும், அடைந்தும்
இருந்ததாலே பெற்றனர்.

தான் பெற்ற இன்பம்
தன்னை சார்ந்தோர் பெறவே
தலைவனின் லைலத்துல் கத்ரை
தூதரும் வழிகாட்டினர்

ஏகனவனை !
எதுகையற்றவனை !
எங்கும் நிறைந்தவனை !
எங்கு நோக்கினும்
அவன் முகமென்றானை !
உருவமற்றானை !
புனித இரவில் நாமும்
அவன் நாட்டத்தில்
அறிந்திடுவோம் !
அடைந்திடுவோமே !

இது சந்தர்ப்பம்
இதை விட்டால்...
இனி அடுத்த வருடம்தான் !

அண்ணலாரின் திருப்பேரர்
அப்துல் காதிர் ஜீலானி அண்ணவர்களும்
"அவன் அடியார்களுக்கு
இருபத்தியேழில்
லைலத்துல் கத்ரு இரவை அமைத்துள்ளான்"
என்றனரே !

அண்ணலாரும்
"மார்கத்தில் முந்தியது
'அவனின்' இரகசியங்களை அறிவது"
என்றனரே !

நபிதாஸ்

அமல்- அவனை அறிந்திட செய்யும் செயல்.
சஹாபி- நபித் தோழர். 
ரக்காத்- தொழுகையில் ஒரு சுற்று.
லைலத்துல் கத்ர்- புனித இரவு.

8 comments:

  1. நல்ல கவி தந்தீர் ..

    அது என்ன ..?

    மார்கத்தில் முந்தியது
    'அவனின்' இரகசியங்களை அறிவது///

    விளக்கம் தாருங்களேன் ..//

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அழைக்கும்.
      மூன்று நாட்கள் இணையம் வரவில்லை. அதனால் உடன் பதில் எழுதவில்லை.

      நல்லது அதிரை சித்திக் அவர்களே !
      நல்லக் கேள்வி. மிகவும் சந்தோசம்.

      நம் உயிரின் மேலான நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிதான் அது.

      "அவ்வல தீன மக்ரிபத்துல்லாஹ்"

      "மார்கத்தில் முந்தியது அல்லாஹ்வைப் பற்றி அறிவது." என்று வழிகாட்டியுள்ளார்கள்.

      அண்ணல் (ஸல்) அவர்கள் வார்த்தையாதலால் இது தங்களுக்கு போதும் என்று நினைக்கிறேன்.

      Delete
  2. \\ஏகனவனை !
    எதுகையற்றவனை !\\

    ஒப்பில்லான் என்ற வரிகளை விடவும் “எதுகையற்றவன்” என்கின்ற சொல்லே ஓர் ஆன்மீக வாதியாக-ஞானப் பாடல்களை இயற்றி வருவராகவே உங்களைப் புடமிட்டுப் படமிட்டுக் காட்டும்!

    மறைந்திருந்தாலும், மறைக்க முயன்றாலும் நீங்கள் ஒரு ஞானத்தோட்டத்தின் வாசமலர் என்பதைக் காட்டிக் கொடுக்கும் உங்கள் வரிகள்; அதுவும் ”அத்தோட்டத்தின்” வாசங்களை நுகர்ந்து கொண்டிருக்கும் தமியேனுக்கும் ப்ரியும்!

    ReplyDelete
  3. //ப்ரியும்\\
    புரியும் என்று வாசிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. நல்லது அன்பர் அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் அவர்களே !

      நான் மிகவும் ரசித்த சொல் அது.

      அது ஒரு மஹா ஞானியின் வரத்தை.

      கவிஞர் அல்லவா நீங்கள் எனவே அது
      உங்களையும் கவர்ந்துவிட்டது.

      ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.

      Delete
    2. அது ஒரு மஹா ஞானியின் சொல்.

      என்று வாசிக்கவும்.

      Delete
    3. அந்த மஹா ஞானியைக் கண்டவனும்; கரம் பற்றியவனுமாகிய தமியேனுக்குத் தெரியும் அந்த அற்புத மனிதரின் அற்புதச் சொல் என்று! புதுக்கவிதையின் தாத்தா என்றழைக்கப்பெறும் மு.மேத்தா அவர்கள் தான் முதன் முதலில் அம்மஹா ஞானியின் சொல் இலக்கணத்தை ஒரு சொற்பொழிவில் துபையில் சொன்னார்; அதே விடயத்தைத் தங்களின் வரிகளிலும் யான் கண்டதும் என் நினைவு நாடாச் சுழனறது; அதனை ஈண்டுப் பதிய விழைந்தது. அம்மஹா ஞானி யாப்பு என்னும் மரபின் வழி நின்று காவியங்கள், பாடல்கள் இயற்றுவதால் அவர்களின் ஒரு செய்யுளில் “எதுகை இல்லாதவன்” என்று போடப்பட்டிருக்கும் அரியதொரு புதிய விளக்கத்தை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களூம் வெகுவாகப் பாராட்டியுள்ளார் “ஞானிகட்கு மட்டுமே கைகூடும் இப்படிப்பட்ட அற்புதமான வரிகள்” என்று அவர் விமர்சித்துள்ளார். ஆகவே, செய்யுள் இயற்றுபவர்கட்கும், செய்யுளை ஊன்றிப் படிப்பவர்கட்கும் உறுதியாக “எதுகை இலான்” என்னும் அரியதொரு சொல்லுக்குப் பொருள் விளங்கும் என்பது உண்மையே.

      தங்கட்கும் , குடும்பத்தார் மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஈதுல்ஃபித்ர் வாழ்த்துகள்.:


      நோதல் உறுவோர் நிலையுணர்ந்து
      .. நோன்பை நோற்று வறியோருக்(கு)

      ஈதல் என்னும் அறம்பேணி
      ... எங்கும் அமைதி தனைவேண்டி

      ஈதாம் பெருநாள் இதனில்நாம்
      .. இறையை எண்ணி அவன்புகழை

      ஓதும் செயலால் உலகுள்ளோர்
      .. உயர்வு காண வழிவகுப்போம்.





      Delete
    4. கவிஞர் அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் அவர்களே !
      உங்கள் வாழ்த்துக்கு நன்றி !

      கரம் பற்றிய நீங்கள் உங்கள் நோக்கங்களை அடைவீர். நேர்வழிகள் சிலருக்கு திறக்கிறது. நாடப்பற்றவர்கள் நன்மையை அடைய ஒரே பார்வையில் செல்லவேண்டும். கவனச் சிதறல் வலுவை குறைத்துவிடும், காலத்தையும் நீட்டிவிடும்.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers