.

Pages

Friday, September 27, 2013

வடிவும் வகிடும் (வரி)

வானத்தில் மிதக்கும் வடிவு
....வெண்மேகம் இழைத்த வகிடு
தானத்தில் சிறந்த வடிவு
....தூயோன்சொல் விகித வகிடு

தென்னை மரத்தின் வடிவு
....தென்றல் வருடும் வகிடு
கன்னம் கொடுக்கும் வடிவு
...காந்தக் குழியின் வகிடு

கடலின் நீரில் வடிவு
.....கப்பல் கிழித்த வகிடு
உடலின் சேரும் வடிவு
....உள்ளம் விரித்த வகிடு

புன்னகைப் பூக்கும் வடிவு
....பூவிதழ் விரித்த வகிடு
எண்ணமும் காட்டும் வடிவு
...எம்முணர் வுகளின் வகிடு

வயற்கள் தோறும் வடிவு
.... வரப்புக் கட்டிய வகிடு
செயற்கள் தோறும் வடிவு
....செயலின் திட்டமே வகிடு

ஊரின் பரப்பில் வடிவு
....ஊரும் தெருவின் வகிடு
வேரின் உறுதி வடிவு
....வேறாய்ப் பரவும் வகிடு

வலிமைக் கட்டிட வடிவு
.....வரைபடம் எழுதிய வகிடு
பொழியும் சந்திரன் வடிவு
....பிறையெனப் பிளந்திடும் வகிடு

இலைகளின் ரேகை வடிவு
....இறைவன் தீட்டிய வகிடு
மலைகளின் பாக வடிவு
....மனங்கவர் நீர்வழி வகிடு

ஏறும் எறும்பின் வடிவு
....ஏற்றப் பணியின் வகிடு
ஆறு சிறக்கும் வடிவு
....ஆங்கு அணைகள் வகிடு

தேசிய கொடியின் வடிவு
......தியாக வண்ண வகிடு
தேசிய தலைமை வடிவு
.....தெளிவாய்ப் பண்ணும் வகிடு

குடும்பத்தின் உறவுகள் வடிவு
....குலையாத உறுப்பினர் வகிடு
மிடுக்கான உடையினில் வடிவு
.....மெலிதான மடிப்பினில் வகிடு

முகத்தின் தோற்ற வடிவு
....முகத்தின் மூக்கே வகிடு
முதுகின் தோற்ற வடிவு
....முதுகின் தண்டின் வகிடு

வெண்பா யாப்பின் வடிவு
.....வெண்டளைக் காய்சீர் வகிடு
பெண்பால் சீப்பின் வடிவு
.....பெண்டலை நேர்சீர் வகிடு

செல்வம் பெற்றதன் வடிவு
...செய்யும் செலவின் வகிடு
கல்வி கற்றதன் வடிவு
... கற்றல் முறையின் வகிடு
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இக்கவிதை கடந்த [ 26-09-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

20 comments:

 1. அடடா... என்னவொரு அழகான வரிகள்... பாராட்டுக்கள்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அன்பின் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்கட்கு வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக!


   மரபெனும் தேனடைக்குள் வார்த்த - ஓசை
   ....மழுங்கா அசைசீர் வடிவுக்குள் வார்த்தைத்
   தரப்படும் போதினில் ஈர்ப்பு - அஃதே
   ...தமியேன் வனைந்திங்குக் கோத்திட்ட யாப்பு !

   Delete
 2. Replies
  1. Jazakkallah khairan,

   I have to thank you first, as you induced me to continue my posting of my poems in your site.

   Delete
 3. நான் வியந்த கவியில்

  இக்கவியியும் ஒன்று

  நீங்கள் கண்ட வகிடும் வடிவும் மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. அதிரைத் தமிழூற்றின் பாராட்டு - என்றன்
   .... ஆனந்தப் பாக்குழந் தைக்குத்தா லாட்டு
   உதிரும் வதனமுத்து வாழ்த்தென - என்றும்
   ....உள்ளத்தில் பூட்டி யதைப்பாது காத்தேனே!

   Delete
 4. வாழ்க்கைக்கு தேவை வடிவும் வகிடும் வரிகள் அருமை வாழ்த்துக்கள். காக்கா

  ReplyDelete
  Replies
  1. அன்பின் நேசர் ஹபீப், அஸ்ஸலாமு அலைக்கும்,

   நீண்ட நெடிய விடுப்புக்குப் - பின்னர்
   ....நீவிர் தருமிந்த வாழ்த்துத் துடுப்புக்குத்
   தூண்டல் அடைந்தவென் பாத்தோணி - என்றும்
   .....தொய்வின்றிச் செல்லவே பின்னூட்டம் தாநீ

   Delete
 5. கவித்தீபம் அவர்களின் வித்தியாசமான சிந்தனையை தூண்டும் படைப்பு வடிவும் வகிடும் (வரி) அனைத்து ''வரி'' களும் அருமை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பின் மெய்சா, அஸ்ஸலாமு அலைக்கும்,

   வரியென்று சொல்லித்தான் கேட்டனர் - இலண்டன்
   ....வானொலியின் பாமுகம் பாடுகின்ற பாட்டில்
   சரியென்று யானுமிதை இட்டேன் - ஆங்குச்
   ....சரியென்று ஏற்பாரோ என்றறிய மாட்டேன்!


   வகிடும் வரியாய் உணர்ந்தேன் - அதனால்
   ....வடிவும் வரியும் கலந்து புனைந்தேன்
   வகிடை வரியாய் நினைத்தே - மெய்சா
   ....மனத்தின் அருள்மழைக் கொட்ட நனைந்தேன்!


   Delete
 6. நடப்புகள் நாமின் நிகழ்வினது வடூ
  எடுப்புகள் தந்தேன் எடுத்திடவே - துடிப்புகள்
  கண்ட தவறுகள் காத்திடாது நற்கற்பும்
  பண்புகள் காட்டும் வகிடு.

  உறைந்தது நீண்டால் உருவாகும் புற்று
  கறைத்திட உண்டாகும் இன்பம் - நிறைவாக
  நாமிதை ஊன்றிட நல்நட்பு நிலையாகும்
  சேமித்தால் நல்ல வகிடு.

  வகிடுகளைக் கண்டேன் வனப்புகளைக் கண்டேன்
  தகிப்புகள் தானே துடித்தது - மகிமையில்
  மனதில் முளைத்த மதிகள் கவியால்
  குணத்தில் வரைந்த வகிடு.

  நன்றி ! கவியே !
  நான் வரைந்த ஓவியம்
  ஒன்றாம் வகுப்பு வெண்பாவில்
  நெய்தா பா
  நலம் தானா ?

  ReplyDelete
 7. //நிகழ்வினது வடூ// கலித்தளை) தளை தட்டல்


  \\வடூ எடுப்புகள்\\ (நிரையொன்றிய ஆசிரியத்தளை) தளை தட்ட்ல்

  //எடுத்திடவே - துடிப்புகள்\\ (கலித்தளை) தளை தட்டல்


  அன்பின் ஞான குருவின் ஒன்றாம் வகுப்பு வெண்பாவே இவ்வளவு அருமையாக வனையப்பட்டிருக்கின்றதை நோக்குங்கால், மேலே சுட்டிக்காட்டியுள்ள மூன்று இடங்களில் தளைதட்டல் மட்டும் குறைகளாய் இருப்பினும், நிறைவான ஒரு வெண்பாவைத் தங்களால் யாத்திட இயலும் என்பதே என் கணிப்பு; தங்களின் முகம் மறைத்து எழுதுவது போலவே, தங்களின் திறன் மறைத்தும் இருப்பதும் அறிந்தேன்; திறன் வியந்து செயல் மறந்து வாழ்த்துகிறேன்; பா யாக்கும் மரபறிந்தத் தங்களை பாராட்டுகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. நடப்புகள் நாமின் நிகழ்வினது பாடம்
   எடுப்புகள் தந்தது நேர்மைகாக்க - பட்டறிவு
   கண்ட தவறுகள் நீக்கி, நியாயமணம்
   பண்புகள் காட்டும் வகிடு.

   நன்றி ! கவியே !
   திருத்தம் தகுமானதா ?

   பாவினின் உயிர்(கரு) நிலை யாதோ ?

   Delete
  2. "நியாயமனம்" என்று வாசிக்கவும்.

   Delete
  3. நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் தளைதட்டலில்லாத வெண்பாவின் இலக்கணம் யாவும் பொருந்திய “பலவிகற்ப இன்னிசை வெண்பா” என்றே இதனைக் கருதி ஏற்கிறேன்.

   1)இரண்டாம் அடியின் நான்காம் சீர் (தனிச்சொல் என்று கருதினால்) மட்டும் தான் _ கோடிட்டு முதல் அடியின் முதல்சீர்க்குள்ள எதுகையிட வேண்டி வரும்; இங்கு அந்தக் கோடு வேண்டியதில்லை; ஆதலால் இது பலவிகற்ப இன்னிசை வெண்பாவாய்த் தெரிவு செய்கிறேன்.

   2) நான்கடிகளில், முதலடியில் மட்டுமே மோனை ( ந - நா- நி = இணைமோனை இட்டுள்ளீர்கள்; மற்றவடிகளில் மோனகள் அமையவில்லை என்பதும் ஒரு குறையாகும்; எதுகையும் மோனையும் தான் ஈர்க்கும் வல்லமையாம் யாப்புக்கு என்றறிக.

   குறிப்பு: மோனை என்னும் தொடை:

   அ- ஆ- ஐ- ஔ

   இ- ஈ- எ- ஏ

   உ- ஊ- ஒ- ஓ

   ஞ- ந

   ம - வ

   த - ச

   Delete
 8. கவிக்குறளின் கவிதைக்கு தமிழில் கருதிட இயலவில்லை. கடந்த சில நாட்களாக கணினிப்பழுதால் மிகவும் சிரமப்பட வேண்டியாதியிற்று...

  சமீபத்தில் ஒரு மூத்த கவிஞரை சந்திக்க நேரிட்டது. கவித்தீபத்தைபற்றி கண்ணியத்துடன் குறிப்பிட்டு பேசியது அவரின் எழுத்தாற்றல் அனைவரிடமும் நல்லதொரு சிறப்பை பெற்றுத்தந்துள்ளன என கருத வேண்டியுள்ளது.

  தொடரட்டும் உங்களின் சிறந்ததொரு எழுத்துப்பணி....

  ReplyDelete
  Replies
  1. \\சமீபத்தில் ஒரு மூத்த கவிஞரை சந்திக்க நேரிட்டது. \\

   அன்பின் தம்பியும் எங்களை ஏற்றிவிடும் ஏணியுமான சேக்கனா நிஜாமுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
   நீங்கள் சந்தித்த அந்த மூத்த கவிஞர் யார் என்று அறியலாமா? இவ்விடத்தில் சொல்ல இயலாவிட்டால் என் தனிமடலில் சொல்வீராக! மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன், தம்பீ!

   Delete
 9. செல்வம் பெற்றதன் வடிவு
  ...செய்யும் செலவின் வகிடு
  கல்வி கற்றதன் வடிவு
  ... கற்றல் முறையின் வகிடு என்னவொரு அழகான வரிகள்... பாராட்டுக்கள்..வாழ்த்துக்கள்.காக்கா..

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தங்கை ஹஜீனாகதீஜாவுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

   உன் அன்பான வாழ்த்தினுக்கும், பாராட்டுக்கும் என் உளம்நிறைவான நன்றிகள்= ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா!

   உண்மையில், யான் இத்தளத்தில் கவிதைகளைப் பதிய ஆர்வமூட்டிய, இத்தளத்தின் நிர்வாகி அவர்கட்குத் தான் மிகவும் நன்றி கடன் பட்டுள்ளேன்; ஒரு சிலரின் பின்னூட்டங்களில் “தனிநபர்த் தாக்குதல்கள்” பெருகி விட்டதை நோக்குங்கால், என் மனத்தினில் விரக்தியும் வேதனையும் உண்டாகி “இனிமேல், வலைத்தளங்களில் பதிய வேண்டா.” என்ற முடிவுக்கே யான் வந்தனன். ஆனால், உன்னைப் போன்ற நம் சமுதாயக் கண்மணிகள் உன்னிப்பாகவும் ஆர்வமுடனும் கவிதைகளைப் படித்து உணர்கின்றார்கள் என்றும் அதனால் தொய்வின்றி என் கவிதைகள் ஈண்டுப் பதியப்பட வேண்டும் என்றும் நிர்வாகி அவர்கள் என்னிடம் வேண்டிக் கொண்டது உண்மையிலும் உண்மை என்பதை உன்னுடைய இந்தப் பாராட்டும், கவிதையை உன்னிப்பாய்ப் படித்துணர்ந்துப் பின்னூட்டமிட்டுள்ளதும் சான்றுகளாகும்.

   இந்தக் கவிதையின் முத்தாய்ப்பான கருத்தை நீயும் உள்வாங்கியிருக்கின்றாய் என்று எண்ணும் பொழுது, இப்படிப்பட்ட அறிவாளியான உன்னை என் உடன்பிறந்த சகோதரியும் தோழியாய் அடைந்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன். இன்னும் பின்னூட்டமிடாமல் “அமைதியாக” வாசித்துக் கொண்டிருக்கும் நம் சமுதாயக் கண்மணிகளின் அறிவாற்றலையும் யான் அறிவேன்.

   நான் சென்ற பின்னூட்டத்தில் வேண்டிக் கொண்டபடி, உன்னுடை ஆக்கம் - குறிப்பாக “பெண்களுக்கான ஓர் அறிவுரை” யாக இத்தளத்தில் விரைவில் பதிய வேண்டும் என்பது, உன் அன்பான காக்காவின் கட்டளையாகும்.
   விரைவில் உன் ஆக்கம் வர வேண்டுகிறேன்....

   Delete
 10. பதிவுக்கு நன்றி.

  அருமையான படைப்பு, வித்தியாசம் தெரியுது.
  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers