.

Pages

Tuesday, February 25, 2014

எனக்கு வேண்டும் பொறுமை !?

நான் சொல்கிறேன்
அவன் கேட்கிறான்
தலையையும் அசைக்கிறான்
தவறாதும் சிரிக்கிறான்
நிலைதனை அறிதிட
நேராக கேட்கிறேன்
தலைதெறிக்க ஓடிடவே
தாங்காமல் பதறுகிறேன்
விலையில்லா அறிவுகளை
விளங்காமல் பிதற்றுகிறான்
பிழையில்லை அவனிடம்
பித்துப்பிடித்தே அலைகின்றேன்

மீண்டும்
நான் சொல்கிறேன்
அவன் கேட்கிறான்
விளக்கமாய் விளங்கிட
வீரியம் கொண்டே
கலக்கமில்லை அவனிடம்
கவனமாக கேட்கிறான்
பலமான ஆர்வமுடன்
பக்குவமாய் நான் கேட்க
சுலபமாய் சொல்கிறான்
சொல்லாத சங்கதிகள்
அழதான் வேண்டுமோ
அது என் தப்புதான்

உருவத்தில் அழகன்
உள்ளத்தில் மலுங்கன்
புருவத்தில் புத்தன்
புரிவதில் பித்தன்
சொன்னதே சொல்வான்
சொல்லில் நிற்பான்
என்னதான் தந்தாலும்
ஏற்கவே மறுப்பான்
நிமிர்த்திட துடித்தாலும்
நிலைமாற மறுக்கிறான்
தமிழும் அறிந்தவன்
தவறாமல் வலைத்துக்கொள்கிறான்

தப்பது அவனிடமில்லை
தப்பில் வீழ்ந்துவிட்டான்
இப்பவும் சொல்கிறேன்
இதயத்தில் எழுதிவிட்டான்
எப்படித்தான் ஆடினாலும்
என்னதான் செய்தாலும்
அப்பவே எழுதிவிட்டான்
ஆண்டவனும் அவன்விதி
செய்தவைகள் திரும்புகின்றன
செயல்படத்தான் வேண்டுமே
பொய்களையே புனிதமாய்
போற்றித்தான் வாழ்கின்றான்

அந்தோ பாவம் !
அவன் கண்கள்
அழகாய் கடிவாளமிட்டன
என்னதான் சொன்னாலும்
ஏற்பதுப்போல் இருக்கின்றான்
முத்திரை குத்தப்பட்டுவிட்டது
நித்திரை கலையவில்லை
சொன்னதிலே நிற்கிறான்
சொல்வதையும் கேட்கிறான்

மீண்டும்
நான் சொல்கிறேன்
அவன் கேட்கிறான்
சொல்லுவது கடமை
கேட்பதும் கடமை
நடப்பது மடமை
வேண்டுவது பொறுமை
ஆம் !
எனக்கு வேண்டுவது பொறுமை.

நபிதாஸ்

24 comments:

 1. அவனையா சொல்றிங்க !?

  கவிதையை நான் பொறுமையா வாசித்தேன் :)

  ReplyDelete
  Replies
  1. ஆம் ! புரிந்துக்கொண்டால் சரிதான், சந்தோஷமே.

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. எவன் அவன்?

  இக்கவியின் அர்த்தத்தை புரிந்துகொள்ள கூடுதல் அறிவு தேவையோ!

  யாப்பிலக்கண வடிவிலான கவிதைகளை புரிந்துகொள்ளத்தான் நான் சிரமப்படுவேன்.. ஆனால் இலகுவான வரிகளின் அர்த்தத்தை புரிந்துகொள்ள இயலவில்ல..

  ReplyDelete
  Replies
  1. கவிதைகள் என்பதில் கருத்துக்கள் போதிந்துதான் இருக்கும் அன்றோ.

   மனிதரில் பலவிதம். பார்ப்பதற்கு நல்ல தோற்றம். ஆனால் எதயையும் புரிந்துக்கொள்வதில் பலர் பலமாதரியாகப் புரிந்துக்கொள்கின்றனர். ஒருவர் ஒன்று சொல்ல அதை அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப புரிகின்றனர். என்னதான் மீண்டும் தெளிவாக சொன்னாலும் அவர்கள் முன்பு அறிந்த அறிவுக் கண்ணோட்டத்தில் தான் சொல்லும் கருத்துக்களை ஒப்பிட்டு, அல்லது அதற்கு இசைவாகப் பார்க்கின்றனர்.
   முன்பு நான் எழுதியுள்ளதை நினைவு செய்கிறேன். ஜோசியக்காரன் ஜோசியம் பார்ப்பவனிடம் "நீ பெரியப்.... பெரிய.... படிப்பு படிப்பாய்", என்றானாம். இவனோ அப்படியானால் கலக்டரோ அல்லது எஞ்சினியரோ அல்லது டாக்டரோ அல்லது அதிலும் இன்னும் உயர்வானப் படிப்பாக இருக்குமோ என்று, என்னதான் அவர் சொல்கிறார் என்பதை அறிய "எண்ணப் படிப்பு படிக்கப் போகிறேன்", என்று வினவ, ஜோசியக்காரன் அவன் அறிந்த பெரியப் படிப்பு பத்தாம் வகுப்பு அதனைச் சொன்னானாம்.
   பலவாரம் தொடர் எழுதியும் வணக்கம் வழிபாடு வித்தியாசம் தெரிய மறுக்கின்றனர். எண்ணக் கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கூறியும் அதிக கேள்விகள் இல்லை. கவிஞர் கலாமின் சாந்த வசந்த பின்னுட்டங்களில் எழுதிய வணக்கம் என்ற சொல்லுக்கு // வணக்கம் என்ற சொல் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்.தயவு செய்து திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி காக்கா// என்று நுண்மையாக சிந்திக்கும் கவிங்கருக்கு இந்த பின்னூட்டம் என்றதைப் படிக்க என் அனுபவத்தில் ஏற்பட்ட நிகழ்வை வார்த்தையால் வடிக்கப்பட்டதுதான் இக்கவிதை. எழுதும் வார்த்தைகளுக்கு அவர்கள் அறிந்தப் பொருளைத்தான் புரிகின்றனர். உண்மைகளை புரிந்துக்கொள்ள பெரும்பாலும் மறுக்கின்றனர்.
   வேண்டின் இன்னும் விரிக்கலாம்.

   Delete
  2. \\எழுதும் வார்த்தைகளுக்கு அவர்கள் அறிந்தப் பொருளைத்தான் புரிகின்றனர். உண்மைகளை புரிந்துக்கொள்ள பெரும்பாலும் மறுக்கின்றனர்.\\

   உண்மையிலும் உண்மை; அப்பின்னூட்ட மறுமொழியில் என் கருத்துரைகளை மட்டுமே பதிந்தேன்; தாங்களும் முன்னர் விளக்கிய கருத்துக்களை அப்படியே நகலெடுத்துப் போடலாமென்றே நினைத்தேன்; ஆயினும் தாங்களாகவே முன்வந்து மீள்பதிவு செய்வீர்கள் என்றே \\மேலும் விளக்கங்கள் ஞானியார் நபிதாஸ் அவர்கள் தருவார்கள்” என்று முடித்தேன். இப்பொழுது நான் எதிர்பார்த்த வாறே “குடைச்சல்” செய்கின்றார்கள் என்பதையும் யூகிக்கின்றேன். அமீரகத்தைப் பாராட்டி யான் எழுதிய கவிதைக்கும் “ஷிர்க்” என்ற முத்திரையைக் குத்தியவர்கள் யார் என்றும் அறிவேன்.உளத்தூய்மையை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே என்பதில் கிஞ்சிற்றும் ஐயமின்றி இருக்கும் எமக்கு இந்தப் புரிந்துணர்வில் குறைபாடுடையோர்கள் பற்றி எல்லாம் பொருட்படுத்துவதே இல்லை; மாறாக, அவர்கள் இருக்கும் தளத்திற்கும் செல்வதும் இல்லை.

   Delete
 4. அர்த்தமுள்ள கவிவரிகளாகவே தெரிகிறது. என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சற்று தடுமாற்றமாக இருக்கிறது. கொஞ்சம் புரியவைத்தால் நல்லது. வருத்தம் வேண்டாம். நன்றி நபிதாஸ் அவர்களே.!

  ReplyDelete
  Replies
  1. நான் என்றுமே வருத்தப்படுபவன் அல்ல. நல்ல கேள்விகள் கேட்கமாட்டார்களா என்றுதான் ஆசைப்படுவேன். கேள்விக்கு பதில் தந்தபின் அதனைக் காணாமல் போல் இருப்பது சில சமயம் அதிர்ப்தியையும் தந்தன. ஆக்கங்கள் எழுதுவது படிப்பவர் புரிந்துக்கொள்வதற்கே எனவே புரியும் வரைக்கும் கேள்விகள் கேட்கலாம் அதிரை மெய்சா அவர்களே. மேலே உள்ள விளக்கம் அதில் கேள்விகள் இருந்தால் தொடரலாம்.

   Delete
 5. பதிவுக்கு நன்றி.

  அருமையான ஆக்கம்.
  நல்ல கருத்துகளோடு மிகவும் அழகாக இருக்கின்றது.

  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  இப்படிக்கு.
  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
  Replies
  1. பொறுமையுடையவன் எதைச் சாதிக்க வேண்டுமென நினைக்கிறானோ அதைச் சாதிப்பான் – பெஞ்சமின் ஃப்ராங்கிளின்.

   Delete
  2. ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீரூற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனிதருகிறது !

   Delete
  3. இந்த பயணம் நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் பெரியது ! பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது ரொம்பவே அவசியம். பொறுமை கசப்பானது. ஆனால் அது தருகின்ற கனியோ ரொம்ப இனிப்பானது என்பார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில்.

   Delete
  4. ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது வெற்றி உடனடி சாத்தியம் ஆவதில்லை. வேர் பிடிக்காமல் முளைக்கின்ற செடிகள் நிலைப்பதும் இல்லை. நதிகள் நடந்து கொண்டே இருக்கும். அதன் பாதையில் வசந்தங்களையும், துயரங்களையும் சந்திக்கும். அருவிகளில் விழும், தடைகளில் எழும், மௌனமாய் அழும் ஆனாலும் அதன் இலட்சியம் கடைசியில் நிறைவேறும். அதுவரை அதன் பயணம் பொறுமையாய் நடந்து கொண்டே இருக்கும்.

   Delete
  5. இந்த பொறுமைக்கு முதல் தேவை நம்பிக்கை. விடியும் எனும் நம்பிக்கையே இரவில் நம்மை நிம்மதியாய் தூங்க வைக்கிறது. முடியும் எனும் நம்பிக்கையே பயணங்களுக்கு நம்மைத் தூண்டுகிறது. நம்முடைய பொறுமை நம்பிக்கை இழக்கும் போது “பொன் முட்டையிடும் வாத்தை வெட்டிக் கொன்ற முட்டாளாய்” செயல்படத் துவங்குவோம்.

   Delete
  6. பொறுமை தனது பயணத்தை நிறுத்தும்போது தோல்வி நம்மை நோக்கி நடைபோடத் துவங்கும்.

   Delete
  7. பொறுமையின் உதாரணமாக சீனாவின் மூங்கில் செடியைச் சொல்வார்கள். சீன மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும் ஆனால் செடி வளரவே வளராது. ஒரு இன்ச் அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும். நான்கு ஆண்டுகளாய் அவருக்கு சிலாகிக்கவோ, மகிழ்ச்சி கொண்டாடவோ எதுவுமே இருப்பதில்லை.

   Delete
  8. ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் துவங்கும். அதுவும் எப்படி ? சட சடவெனும் அசுர வளர்ச்சி. ஒரே ஆண்டில் அது எட்டிப் பிடிக்கும் உயரம் எவ்வளவு தெரியுமா ? 80 அடிகள். நான்கு ஆண்டுகாலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது ?

   Delete
  9. ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு ரகசியம் இதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் அற்புதம் என்றோ, கடவுள் படைப்பின் மகத்துவம் என்றோ நீங்கள் பெயரிட்டுக் கொள்ளுங்கள். முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. ஐந்தாவது ஆண்டில் நான் எண்பது அடி உயரமாக வளரப் போகிறேன், என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை என அது முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும். அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை !

   Delete
  10. பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது. அவசரப் பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல், நமது அடித்தளத்தை வலுவாக்கிக் கொள்ள பொறுமை நம்மைத் தூண்டுகிறது. தண்ணீரின் ஆழம் தெரியாமல் குதிப்பதோ, மலையின் ஆழம் தெரியாமல் ஏறச் செல்வதோ ஆபத்தில் முடியும் ! பாதியிலேயே பொறுமையைக் கழற்றி விட்டுவிடுபவர்கள் வெற்றியின் பதக்கங்களை அணிந்து கொள்வதில்லை.

   Delete
  11. அவசரம் நமக்கு சிப்பிகளைத் தரலாம், ஆனால் பொறுமையே முத்துகளைத் தரமுடியும். “நேரமும் பொறுமையுமே போராளிகளின் பலம்” எனும் லியோ டால்ஸ்டாயின் தத்துவ முத்து பொய் சொல்வதில்லை ! ஒருவனுடைய திறமைகளை வெற்றிகளாக உருமாற்றித் தருவது பொறுமையே ! பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு ! அதுவே வாழ்வின் அலைகளை எதிர்கொள்ளும் துடுப்பாய் பயன் தரும் !

   Delete
  12. பொறுமையான முயற்சியே வெற்றியின் அடிநாதம் என்பதை எல்லா சாதனையாளர்களும் ஒத்துக் கொள்வார்கள். யாருக்கும் வெற்றி என்பது கிறிஸ்மஸ் தாத்தாவின் பரிசுப் பொருள் போல வந்து சேர்வதில்லை.

   Delete
  13. வெற்றிக்கு 99 சதவீதம் பொறுமையான உழைப்பும், ஒரு சதவீதம் உந்துதலும் இருக்க வேண்டும் என்கிறார் ஐன்ஸ்டீன் ! வெற்றியையும், வெற்றியைக் கொண்டாடும் மனநிலையையும், ஆழமான குடும்ப உறவையும் தருகின்ற பொறுமை கடலினும் பெரிது தான் !

   Delete
  14. தங்கள் தந்த ஒவ்வொரு கருத்துக்களும் முத்துக்கள். அதனை மாலையாக நினைவினில் சூடிக்கொள்கிறேன். மிகச் சிறப்பான கருத்துக்கோர்வைகள்.
   நன்றி அறிஞரே !

   Delete
 6. விளக்கங்களுக்கு நன்றிகள்...!!

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers