.

Pages

Thursday, March 20, 2014

மறைந்து வரும் சிட்டு !?

இப்போது சிட்டுக் குருவிகளைக் காண்பது என்பது மிகவும் அபூர்வம்.. சிட்டுக்குருவி இனத்தைக் காத்து முன் போல மீண்டும் வானில் வட்டமிட வைக்க விட பல முயற்சிகள் நடந்து வருகிறது.

ஆண்டுதோறும் மார்ச் 20ம் தேதி உலக சிட்டு குருவிகள் தினமாக கடைப் பிடிக்கப்படுகிறது. அழிந்து வரும் சிட்டு குருவி இனத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. குருவிகளில் சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி, கருங்குருவி, படை குருவி போன்ற பல்வேறு வகைகள் உள்ளன. குருவிகளின் அழிவிற்கு தானிய உணவு பற்றாக்குறை மற்றும் பயிர்களை காப்பாற்ற பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் காரணமாகும்.இன்று வீடு கட்டுவதற்காக வயல் வெளிகள், வனங்களை அழித்து விட்டோம். இதனால் குருவிகள் கூடு கட்ட இடமின்றி போய் விட்டது. உலகம் முழுவதும் வெப்ப மண்டலமாக மாறியதாலும், செல்போன் டவர்களில் எழும் கதிர்வீச்சாலும் குருவிகளுடன் சேர்த்து, 226 பறவையினங்களும் அழிந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், சிட்டுக்குருவியை மாநிலப் பறவையாக அறிவித்தார். மேலும் அதனை காப்பாற்றும் விதமாக  பள்ளிகளில் வைக்க ப்ரத்யேகமாக வடிவமைக்கப் பட்டக் கூடுகளை (கம்பங்களில் மேல் வைக்கப்படும் வகையில்) அமைத்தார்.  தவிர, அங்கு  170 குருவிக் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன (இந்தியாவிலேயே டெல்லி நகரில் தான் இதன் எண்ணிக்கை அதிகம்).

மேலும் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், உடன்குடி சந்தையடியூரைச் சேர்ந்தவர் கோவில்பிச்சை. இவரது மகன் ஜேசுராஜ்(வயது 21). இவரது தங்கை தனீஷ்(வயது 18). கல்லூரியில் பயிலும் இருவருக்கும் உயிரினங்கள், பறவைகள் மீது மிகுந்த பிரியம் கொண்டவர்கள்.

தற்சமயம் அழிந்து கொண்டிருக்கும் உயிரினமான சிட்டுக்குருவிகளை அழிவின் விளிம்பில் இருந்து மீட்க இருவரும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இதற்காகவே அண்ணன்–தங்கை இருவரும் கல்லூரியில் விலங்கியல் பாட பிரிவை தேர்ந்தெடுத்து படித்து வருகின்றனர்.

மேலும் மார்ச் 20–ந்தேதி சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி இவர்கள் இருவரும் சிட்டுக்குருவிக்கென கூடுகள் தயாரித்து இலவசமாக வீடுகள், கடைகளுக்கு கொடுத்து வருகின்றனர்.

இது பற்றி ஜேசுராஜ், தனீஷ் இருவரும் கூறும் போது, 15 வருடங்களுக்கு முன்பு வீடுகள் பெரும்பாலும் ஓடுகள் வைத்து கட்டப்பட்டிருக்கும். மேலும் அதிக அளவில் மக்கள் கிணற்று நீரை பயன்படுத்தியதால் கிணறுகள் அதிகமாக இருக்கும். தற்காலத்தில் வீடுகள் அனைத்தும் கான்கிரீட் வீடுகளாகவும், கிணறு என்பது இல்லாமலும் போய் விட்டது. இதனால் சிட்டுக்குருவிகள் வாழ்விடம் இழந்து தவிப்பதை நாங்கள் இருவரும் உணர்ந்தோம்.

சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடத்தை மீட்டுக் கொடுக்க செயல்படுவது என சபதம் செய்தோம். அதன்படி 100க்கும் மேற்பட்ட செயற்கையான கூடுகளை நாங்கள் உருவாக்கினோம். இவற்றை அக்கம் பக்கம் வீடுகள், கடைகளுக்கு கொடுத்து சிட்டுக்குருவி பற்றிய விழிப்புணர்வும், அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கி வருகிறோம். உயிரினங்களின் வாழ்விடத்தை மீட்டுக்கொடுப்பதில் உயிர் உள்ள வரை போராடுவோம் என்றனர்.

இப்படிச் சிட்டுக்குருவி வாழ்வதற்கு ஏதுவாக இருந்த நடைமுறைகள் அனைத்தும் தழைகீழாக மாறியதால், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நகர பகுதிகளில் குறைந்து விட்டது. ஆனால், அந்த இனமே அழிவுக்கு சென்றுவிட்டதாக கூறும் எந்த ஆதாரமும் இல்லை.

ஆகவே நமதூரிலும், நமதூரைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் உள்ள  ஒவ்வொரு பள்ளி/கல்லூரி மாணவர்களும் ஒன்றிணைந்து சிட்டுக்குருவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, ஜேசுராஜ், தனிஷ் போன்று, நம் பகுதிகளிலும் சிட்டுக்குருவி கூடுகள் அமைத்து  சிட்டுக்குருவியை காப்பாற்றும் முயற்சியில் களமிறங்கலாம்.

உங்கள் சகோதரன்
ஜாஃபர்

11 comments:

  1. மறைந்துவரும் சிட்டு இனத்தை பற்றி நினைவு கூறியது நம்மை குருவிகள் அதிகமாக காணப்பட்ட கடந்த காலத்திற்கு அழைத்து செல்வதாக அமைந்துள்ளது.

    ReplyDelete
  2. இன்றைய தினம் சிட்டுக் குருவிகள், மைனா, தேனீக்கள் போன்ற இனங்களை அதிகமாக பார்ப்பதே ரொம்ப அபூர்வமாக காணப்படுகின்றன.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    தற்போது சிட்டுக் குருவிகள் நகர்புறங்களை விட்டு பசுமையாக உள்ள இடங்களில் தான் துள்ளி துள்ளி பறந்து விளையாடுகிறது.

    காட்டுக்குளம் அருகில் வந்து பாருங்கள், நான் ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேலான சிட்டுக் குருவிகளோடு பல வகையான குருவிகளை எங்கள் வீட்டு அருகிலே காண்கின்றேன்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. சிட்டுக் குருவி (Sparrow) முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக் குருவிகள் பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை.இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள், அடைக்கலக்குருவிகள் ,ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவியாகும்.

      Delete
    2. உலகில் உள்ள குருவிகள் இனம் வேகமாக அழிந்து வருவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பறவைகள் பாதுகாப்பு மையம் ஒன்று தெரிவித்துள்ளது.இந்த மையம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆராய்ச்சி மேற்கொண்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் குருவிகள் இனம் வேகமாக அழிந்து வருவது தெரியவந்துள்ளது. இந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் செல்போன் கோபுரங்களாலும், பிற காரணங்களாலும் குருவிகள் இனம் ...

      Delete
    3. இந்தச் சிட்டுக் குருவிகள் மனிதர்களைக் கண்டு பயப்படுவதில்லை. கூட்டங்கூட்டமாக வசிப்பவை. மிகுந்த இரைச்சல் போடுபவை; நாம் சாப்பிடும் சாப்பாடோ, மற்ற தின்பண்டங்களோ துளி கீழே சிந்தினாலும் எங்கிருந்தோ ‘சிட்டா’ க பறந்து வந்து தன் அலகினால் கொத்தி எடுத்துக் கொண்டு ‘சிட்டா’ க பறந்து போவதால்தான் இதற்கு சிட்டுக் குருவி என்று பெயர் வைத்தார்களோ?

      வீட்டு முற்றங்கள் தான் இவைகளின் ராஜ்ஜியம். இவை குதித்துக் குதித்து வரும் அழகே தனி.

      இவைகளின் இரைச்சல் தாங்காமல் எவ்வளவு முறை விரட்டினாலும் திரும்பவும் வெகு சகஜமாக வீட்டுக்குள் நிழைந்து வீட்டு உத்தரங்களிலும், சுவர்களில் இருக்கும் சின்னச் சின்னப் பொந்துகளிலும் கூடு கட்டுபவை. குருவி கூடு கட்டுவது குடும்பத்திற்கு நல்லது என்று கருதப் பட்டதால் குருவிக் கூட்டைக் கலைக்க மாட்டார்கள்.

      இந்தக் குருவிகள் பெரும்பாலும் தானியத்தைத் தின்று வாழ்பவை. பழங்கள், கொட்டைகள், குப்பைகள், பிரட் துண்டுகள் என்று கிடைத்ததை தின்று வாழக் கற்றவை. இந்த குணமே இவை உலகெங்கிலும் காணக் கிடைப்பதற்குக் காரணம். நகரப் புறங்களில் வீடுகளிலும், கிராமப் புறங்களில் வயல் வெளிகளிலும், தானியக் கிடங்குகளின் அருகிலும் வாழக் கூடியவை.

      இவைகளின் அபரிமிதமான எண்ணிக்கை, எந்தச் சூழலிலும் வாழும் பாங்கு, மனிதர்களைக் கண்டு பயப்படாத தன்மை இவற்றினாலேயே சிட்டுக்குருவிகள் பறவை இனங்களுக்கு ஒரு உதாரணமாகத் திகழ்கின்றன. இவைகளைப் பற்றிய ஒரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? இதுவரை இவைகளைப் பற்றி 5000 விஞ்ஞான அறிக்கைகள் வெளிவந்துள்ளனவாம்.

      Delete
    4. // காட்டுக்குளம் அருகில் வந்து பாருங்கள், நான் ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேலான சிட்டுக் குருவிகளோடு பல வகையான குருவிகளை எங்கள் வீட்டு அருகிலே காண்கின்றேன். //

      நிசமாவா !?

      சொல்லவே இல்லை :)

      காமிராவில் கிளிக்கிட வேண்டியதுதானே ?

      Delete
  4. ஒவ்வொருத்தரும் பொறுப்புடன் செயல்பட்டால் (பல) அழிவுகள் ஏற்படாமல் காக்கலாம்... அண்ணன்–தங்கை இருவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. அருமையான பதிவு...சகோக்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஆஹா... என் வீட்டுக்கு அருகில்.. சிட்டுக்குருவியை காண இயலுமா?

    நல்ல செய்திதான்.. காமிரா கவிஞர்கள் அதனை படம் பிடித்து பதியுங்கள்..ப்ளீஸ்

    ReplyDelete
  7. உடன்குடி சந்தையடியூரைச் சேர்ந்த கோவில்பிச்சை, உயிரினங்கள், பறவைகள் மீது மிகுந்த பிரியம் கொண்டவ இவரது மகன் ஜேசுராஜ், மகள் தனீஷ் இவர்களின் சேவை வாழ்க. அவர்களையும் சிட்டுக்குருவியின் இன்றைய நிலைகளையும் அழகுற கட்டுரை வடித்துத் தந்த ஆசிரியர் ஜாஃபர் அவர்களையும் வாழ்த்தாமல் இருக்கமுடியாது.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers