.

Pages

Friday, March 7, 2014

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் [ காணொளி இணைப்பு ] !

முடியாது போகும் என்று முயல்வதை விடுதல் கண்டு
முடியாத செயலின் எல்லை முற்றிலும் இல்லை இல்லை
விடியாத இரவும் இல்லை விலக்கிடுச் சோம்பல் தொல்லை
தடைகள்தான் வந்தும் தூண்டும் தடகளம் போலத் தாண்டு!

இல்லாமல் போகா வாய்ப்பு இதுவெலாம் மனத்தின் ஏய்ப்பு
புல்லான போதும் கையில் புடமிடும் தங்கம் செய்யும்
வில்லான உறுதி மட்டும் விரைவுடன் முடிவை எட்டும்
சொல்லோடு செயலும் நின்றுச் சோம்பலும் ஒழியும் இன்று!

மல்லாந்துப் படுத்து வீணே மதியையும் சிதைத்தல் தானே?
கல்லாத போழ்தும் நெஞ்சில் காட்டிடும் அக்னிக் குஞ்சாய்ச்
சொல்லாலும் விளங்காச் சிந்தைச் சுடர்விடப் பொறியின் விந்தை
நில்லாமல் உழைக்கும் மெய்யும் நிதர்சனம் இதுவே மெய்யாம்!

உன்மனத்தில்  தோன்றிச் சுட்டும் உதிப்பினால் வெற்றிக் கிட்டும்
பன்முகத்தில் உன்றன் பார்வைப் பளிச்சிடத் தோன்றும் தீர்வே
நன்மையைநீ விரும்பிச் சேர்த்தால் நலமுடன் திரும்பிப் பார்த்தால்
பன்மையில்காண் வழிகள் ஆங்குப் பயனுறச் செழிக்கும் ஓங்கி!

வரிகளின் வரம்பு: பதினாறு அடிகள் மட்டும்
யாப்பிலக்கணம்:
காய்+மா+தேமா(அரையடிக்கு)
+விளம்+மா+தேமா(அரையடிக்கு)

பாடலாசிரியர்: அதிரை கவியன்பன் கலாம் (அபுதபி)
Lyrics: Adirai Kavianban KALAM (Abu Dhabi)

பாடியவர்: அதிரை  பாடகர் ஜஃபருல்லாஹ் (ஜித்தாஹ்)
Singer: Adirai Ilam murasu JAFARULLAH (Jeddah)

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு :
இந்தக் கவிதை நேற்று [ 06-03-2014 ] இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் அதிரை பாடகர் ஜாஃபர் அவர்களின் இனிய குரலோடு ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

11 comments:

  1. தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வரிகள் !

    இனிய குரலில் அழகிய கவிதை

    ReplyDelete
  2. இதே கூட்டணி ஆங்கில கவிதை ஒன்றுக்கு பாடினால் சிறப்பாக இருக்கும். மேலும் அதிரை வரலாற்றில் முதல் முயற்சியாக அமையும்.

    ReplyDelete
    Replies
    1. அஃதெப்படி? யான் மனத்தினில் திட்டமிட்டு எண்ணி வைத்திருப்பதை இப்படிப் போட்டு உடைத்து விட்டீர், தம்பி நிஜாம்! இதுதான் உளவியல் அதிர்வலையின் வெளிப்பாடு என்பர், உளவியலார்கள். இன்ஷா அல்லாஹ், யாம் யாப்பிலக்கணம் கற்றுக் கொள்ளும் சந்த வசந்தம் இணையக்குழுமத்தில் இந்த வாரம் முழுவதும் ஆங்கிலக் கவிதைகளாகவே இயற்றக் கற்பித்துக் கொண்டும் வீட்டுப் பாடங்களும் தந்து உள்ளனர்; எனக்குத் தற்பொழுது விடுப்புப் பயண அலுவல்கள் நெருக்கம் காரணீயமாக அந்த வீட்டுப்பாடங்களை ஒத்தி வைத்தாலும் இன்ஷா அல்லாஹ் விரைவில் எழுதி விடுவேன்; ஆயினும், நம் பாடகர் இளம் முரசு தம்பி ஜஃபருல்லாஹ் அவர்களும் மிகுந்தப் பணி நெருக்கம் காரணீயமாகவே அவதிப்படுவதால், அவரை மீண்டும் மீண்டும் வற்புறுத்துதல் கூடுமோ என்றும் ஓர் அச்சமும் தய்க்கமும் கூடவே என் மனத்தினில் உதிப்பதும் யோசிக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே, யாம் உருவாக்கியுள்ள சொந்த வலைத்தளமான ஆங்கிலக் கவிதைகளுக்கான http://gardenofpoem.blogspot.ae/
      என்ற வலைத்தளமும் துவங்கி இரண்டுப் பாடல்கள் மட்டுமே பதிந்திருக்கின்றேன். இன்னும் எழுதுவதற்கான அழகியச் சொற்றொடர்களைச் சேமித்து வைத்திருந்தாலும், தாய்மொழித் தமிழின்பால் உள்ள ஈர்ப்பால் தமிழ்க் கவிதைகளுக்கே முன்னுரிமை கொடுத்தும், உடனுக்குடன் வேண்டுவோர்க்கு அனுப்பி வைப்பதாலும் அந்த ஆங்கிலப் பாடல்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லை; இன்று, அன்புத் தம்பி நீங்கள் என்பாலும் என் ஆங்கிலப் புலமையின் பாலும் கொண்டுள்ள அதிகமான அன்பின் கார்ணீயமாகவே அன்புக் கட்டளையிட்டுள்ளீர்கள் என்பதை உளம்போந்து உணர்ந்து கொண்டு என் உளம்நிறைவான நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன்; ஜஸாக்குமுல்லாஹ் கைரன்.

      Delete
  3. கவித்தீபத்தின் உணர்வு பூர்வமான வரிகளுக்கு தனக்கென உரித்தான சகோதரர் ஜாஃபரின் கனீர்குரலில் கவிதை சிறப்பாக அமைந்துள்ளது. மிக அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அல்ஹம்துலில்லாஹ்; எல்லாப் புகழும் இறைவனுக்கே!

      இலண்டன் வானொலியார் இப்பொழுது வரி வரம்புகளை மீண்டும் சுருக்கி “ 12 வரிகள் மட்டும்” என்றும் அறிவித்து விட்டனர்; மேலும், காணொளியில் தான் பதிந்து அனுப்ப வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதித்து விட்டனர். இந்நிலையில் கவிஞர்களாகிய எமக்கும் ஓர் அதிர்ச்சியான விடயமே என்றாலும், யாப்பின் வழிநின்று எழுதும் பொழுது பொதுவாகவே “அடிக் கணக்கு” உண்டென்பதால், 4 அடிகள், 8 அடிகள், 12 அடிகள், 16 அடிகள் என்ற கணக்கில் தான் அந்தக் கருவுக்குள் அமைக்க வேண்டும் என்கின்ற ஒரு கட்டுப்பாட்டில் யாம் எழுதிப் பழக்கப்படுத்தப்பட்டதால் யாம் இதனைப் புதியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், காணொளி அல்லது ஒலிப்பேழையில் பதிவதென்பது எனக்கு இயலாமையாகும்; எனக்குக் குரல்வளம் இல்லை; இப்படி நுண்ணறிவின்படிப் பதியும் ஆற்றலும் இல்லை என்பதால் நம் பாடகர் அவர்களுக்கு இவ்விரண்டும் வாய்க்கப்பெற்றவர் என்பதால் அவர்களின் பேருதவியைத் தான் அடியேன் கேட்டு நிற்கின்றேன்; அவர்களும் அயராமல் துணை செய்கின்றார்கள்; அவர்களின் பேருதவிக்கு யான் கடப்பாடு உடையவனாகி அவர்களுக்கு நன்றியும், துஆவும் செய்கின்றேன்.

      உண்மையில் இந்த வாரம் “விருப்புத்தலைப்பு” என்றதும் எனக்குள் எந்தக் கருவில் எழுதுவது என்றே யோசிக்கவில்லை. இக்கரு என்னுள் உருவானதே குளியறையில் தான்!

      Delete
    2. என் அறைக்கு ஒதுக்கப்பட்ட குளியறையில் யான் செல்லும் வேளையில் வேறொருவர் குளித்துக் கொண்டிருப்பதால் பூட்டியிருந்தது. பக்கத்துக் குளியறையில் குளிக்கச் சென்றேன்; ஆனால், குளிக்கும் தண்ணீரை நிரப்ப வாளியும், குவளையும் வழக்கமான எங்கள் குளியறையில் உள்ளதால், என்ன செய்வதென்று நினைத்த மாத்திரத்தில் “அக்னிக் குஞ்சொன்று கண்டேன்” என்ற பாரதியின் வரிகள் போல், திடீரென்று ஒரு பொறி தட்டியது, அங்கிருந்த ஒரு வாளியைப் பயன்படுத்தினாலும் , அள்ளிக் குளிப்பதற்குக் குவளை இல்லையே என்ற கவலை! அப்பொழுதும் இந்த அக்னிக் குஞ்சாய்ச் சிந்தைப் பொறித் தட்டியது; விளைவால் முடிவு எட்டியது! கையில் எப்பொழுது யான் குளியறைக்குச் கொண்டு போகும் சிறிய வாளியில் (சோப்பு, ப்ற்பசை வகையறா வைத்துள்ள) உள்ளவற்றைத் தனியாக எடுத்து வைத்து விட்டு அதனையே அள்ளிக் குளிக்கும் குவளையாகவும் பயன்படுத்திச் சுகமான குளியலை முடித்தேன்; குளிக்கும் பொழுதே இந்தக் கருவும் தலைப்பும் தேர்ந்தெடுத்தேன்; “வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்”
      குளித்த உடனே, அறைக்குள் வந்துக் கணினியைத் திறந்து மடமடவென 16 அடிக்குள் யாப்பின் வழியில் இப்பாடலை அறுசீர் விருத்ததில் அமைத்தனன்..

      “முடியாது போகும் என்று” என்பதே காய்+ மா+ மா என்ற சீர் அமைப்பில் உட்கார்ந்து கொண்டதால் அடுத்த அரையடியை விளம்+ மா+ மா என்று அமைப்பதும் ஓரு அறுசீர் விருத்த அழகு என்று சென்ற வார எங்களின் யாப்பிலக்கணப் பாடத்தில் கற்பித்ததை மனத்தினில் இருத்தினேன்; ஈற்றுச்சீர்களும் சந்தங்களாய் அமைத்தால் தான் பாடகர் மிக்வும் விரும்புகின்றார் என்பதும் யான் அறிந்தவனாதலால் அவ்வாறே வார்த்தைகள் அருவிகளாய்க் கொட்டின.

      \\கவித்தீபத்தின் உணர்வு பூர்வமான வரிகளுக்கு\\ என்ற உங்களின் வாழ்த்துரையைப் படித்ததும் யானும் இந்தக் கரு அமைந்ததும் ஓர் உணர்வின் அடிப்படை என்பதை எழுத வேண்டியாகி விட்டது; உண்மையில், கவிதைகள் உணர்வுப் பூரவ்மாகவும் , உண்மையில் நடந்தவற்றையே அடிப்படையாகவும் கொண்டு எழுதும் பொழுது அதில் ஓட்டம் என்பது மிக அற்புதமாக்வே அமையும்; அதிலும் ஓசை நயம் மிளிர யாப்பும் துணை செய்யும்.

      உங்களின் உளம்போந்த அருமையான கருத்துரைக்கு எங்களின் உளம்நிறைவான நன்றிகள்.

      Delete
  4. எண்ணத்தில் பதிந்த எல்லாம் ஏகனின் அருளால் நல்லா
    வண்ணத்தில் வந்தே ஆகும் வகுத்ததும் அவனே ஆகும்
    உண்மைகளை ஊர்ந்தே நோக்கு உயர்வுகள் உன்னில் ஆக்கு
    எண்பிக்க வேண்டும் என்றால் ஏற்றிடு நம்பி இன்றே

    ReplyDelete
    Replies
    1. குவளையைத்தான் ஆங்குக் காணேன் குளியலின் அறையில் போனேன்
      கவலையைத்தான் நொடியில் பற்றிக் கலங்கிடப் பொறியும் பற்றித்
      தவற்றினையும் போக்கக் கண்டு தன்னிடம் வாளி கொண்டு
      அவசரமாய் முடிவை எட்ட; அக்கினிப் பொறியும் தட்டும்!


      இப்படித்தான் பாடல் இங்கு இயற்றிய கருவும் பொங்கும்
      அப்படித்தான் உணர்வின் ஓசை அழகுற வடிக்கும் ஆசை
      செப்படியின் வித்தை இல்லை செய்யுளில் இதுவே எல்லை
      எப்படியும் கருவும் ஊறும் இயல்பினில் கவிதைத் தேறும்

      Delete
  5. பதிவுக்கு நன்றி.

    அருமையான ஆக்கம்.
    நல்ல கருத்துகளோடு மிகவும் அழகாக இருக்கின்றது.
    வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. மச்சானின் கருத்து மகிழ்ச்சியை அளித்து எமக்குத் தூண்டுகோலாய் அமைந்து விட்டது; நன்றி.

      Delete
  6. கருத்திட்ட/ கருத்திடும் நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும் மிக்க நன்றிகள்.

    நண்பர் சேக்கனா நிஜாமின் ஆவால் விரைவில் நிறைவேற்றுவேன் இன்ஷா அல்லாஹ்.. ஆயினும். ஆங்கில இலக்கண வரைமுறைக்கு ராகம் தேடுவது மிக்க கடினம் என்றாலும் இந்த கவிதையின் தலைப்புக் கேற்றபடி முயற்சிப்போம்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers