.

Pages

Sunday, August 17, 2014

பசுமை உலகில் படர் !

இரண்டற்றான் எண்ணம் இருப்போரை நாட
பரம்பொருளின் வாசம் படுமே - அரச
உரம்கொண்ட வல்லோர் உணர்வில் இயல்பாய்
சரளமாகும் ஆளும் சடங்கு.

சடங்கில் இருப்பதெல்லாம் சத்தியத்தின் பாதை
முடங்கின் முடியாதே முக்தி - தடங்கல்
அடங்கின் திறக்கும் அவன்வாசம் பற்ற
இடங்கள் உனதில் இருப்பு.

இருப்பாய் எதனில் இருக்க அதுவே
அரும்பும் அதுவாய் அறிக - ஒருங்கே
கருத்தில் கரைசேர்க்கும் கல்லாதான் தன்னில்
உருக்க மனதில் உசுப்பு.

உசுப்ப உனதின் உணர்வு அவனில்
அசுத்தத் துவைதம் அகலும் -நசுங்கப்
பொசுங்க அவனாய் நனவாகும் அந்தப்
பசுமை உலகில் படர்.

நபிதாஸ்

இலக்கணம் : அந்தாதி நேரிசை வெண்பா  

4 comments:

  1. பசுமையின் விளக்கம்
    பல பரிணாமம்
    அறிந்திடல் நன்று
    அறிபவர் எவரோ

    விளைநில மெல்லாம்
    வெறிச்சோடிய நிலையில்
    மனையான காட்சி
    மடமைக்கு சாட்சி

    நதிநீரும் கடலில்
    கலக்கின்ற போதும்
    நமக்கென்று பெய்யும்
    மழைநீராய் மகிழ்வித்து

    அநியாயம் அநியாயம்
    அறிந்திட்டே செய்திடல்
    அதற்கில்லை பரிகாரம்
    அறிந்திடலே சுபயோகம்

    ReplyDelete
    Replies
    1. பசுமையின் பரிணாமம்
      .....பலவிதம் அறிந்தவிதம்
      பசுக்களே மேய்ந்தயிடம்
      .....பலவித மனைகளாகி
      பசுமைகள் உண்டாக்கப்
      .....பாய்ந்திடும் மழைநீரும்
      நசுக்கிடும் அநியாயம்
      .....நடத்திடல் சொன்னீரே

      கருத்தினை புரிந்தேனே
      .....கள்ளமில் லாதகுணம்
      பொருந்திட வார்த்தைகளும்
      .....புரிந்திடல் இலகுவாக
      வருணனை வழக்கிலுமே
      .....வசதியின் வழிகளிலே
      மருட்சிகள் போக்கிடுமே
      ......மனிதரின் இதயத்தில்

      Delete
  2. குறுகிய காலத்தில் தமிழ் இலக்கணத்தில் 'அந்தாதி நேரிசை வெண்பா' படைக்கும் அளவிருக்கு திறமையை வளர்த்து இருக்கிறீர்கள்.

    தொடர்ந்து படைத்திட வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    வெண்பாவிற்கு சிறு விளக்கம் தர எழுதுகிறேன்.

    இரண்டற்றான் எண்ணம் இருப்போரை நாட

    பரம்பொருளின் வாசம் படுமே - அரச

    உரம்கொண்ட வல்லோர் உணர்வில் இயல்பாய்

    சரளமாகும் ஆளும் சடங்கு.

    *****

    உள்ளமும் உடலும் வலிமையுடையோர் அவர்களுக்கு ஆளுமை இலகாவதுப் போல இரண்டற்றான் ஆனா இறைவன் பொருத்தம் பெற்றவர்கள் மூலம் அவன் வாசம் வீசிடும்

    +++++

    சடங்கில் இருப்பதெல்லாம் சத்தியத்தின் பாதை

    முடங்கின் முடியாதே முக்தி - தடங்கல்

    அடங்கின் திறக்கும் அவன்வாசம் பற்ற

    இடங்கள் உனதில் இருப்பு.



    *****

    ஒவ்வொரு சடங்குகளும் இறைப் பொறுத்தம் பெற வழிக் காட்டும். அவைகளை விட்டால் அவன் அருள் கிட்டாது. அதனைத் தடுப்பவைகளை விட்டுச்.சிந்தித்து அதன் உண்மை உணர்ந்துச் செயல்பட அவன் பொருத்தம் கிட்டும். அதன்மூலம் உன் இதயத்தில் அவன் வீற்றிருப்பான்.

    +++++

    இருப்பாய் எதனில் இருக்க அதுவே

    அரும்பும் அதுவாய் அறிக - ஒருங்கே

    கருத்தில் கரைசேர்க்கும் கல்லாதான் தன்னில்

    உருக்க மனதில் உசுப்பு.

    ****

    ஒன்றின் எண்ணத்தில் நிலைத்திருக்க அவ்வெண்ணமாக ஆகுதல் போல கல்லாதான் இறைவன் அறிவின் மூலம் அவனின் எண்ணத்தில் நினைத்தே நிலைக்க அவன் பொருத்தம் கிட்டும். ஆனதால் உன் மனதை அமைதியில் ஒன்றித்தே அவ்வாறுக் கொள்.

    +++++

    உசுப்ப உனதின் உணர்வு அவனில்

    அசுத்தத் துவைதம் அகலும் -நசுங்கப்

    பொசுங்க அவனாய் நனவாகும் அந்தப்

    பசுமை உலகில் படர்.

    *****

    அவனிலே உன் உணர்வை நிலைக்க இணைகள் உண்டாக்கிடும் துவைதம் அகலும். அவ்வாறு துவைத உணர்வுகளை இல்லாமலாக்கி அவன் பொருத்தம் கிட்டும். அவன் பொருத்தம் பெற்றவர்கள் வாழ்வு என்றும் பசுமையே ஆனச் செழுமையே. அந்த பசுமை உலகைப் பற்றிப் பிடி.

    நன்றி

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers