.

Pages

Monday, November 24, 2014

[ 7 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]


(21)
இருப்பதையே யில்லாமை யென்றறித லிங்கே
யிருப்பவனி னெண்ணத்தி னேற்றம் - உருப்பெற்று
வொன்றாகக் காணு முயர்வி னருள்நிலையி
லின்பங்கள் வாழ்வி லியல்பு

(22)
இயல்புகள் என்றும் இறையடிமைப் பண்பில்
செயல்லினில்ஆகுமே சித்தாய் - புயல்கள்
அடித்தாலும் வாழ்வு அதிராமல் புற்போல்
பிடிப்புடனே நிற்கும் பிறப்பு.

(23)
பிறப்பில் புதினங்கள் பேசத் திகழும்
சிறப்பின் அமைவின் சிருஷ்டி- அறம்கூறும்
இன்பமறி யாதெதிர்க்க இன்னும் அருளிருந்தும்
அன்னியமே அவ்விடத்தில் அஞ்சு.  

(24)
அஞ்சவேண்டாம் ஏகன் அடிமையாய் ஆனதில்
பஞ்சமில்லை பத்தும் பணிந்திடும் - கிஞ்சித்தும்
அண்டாதே அச்சமும் ஆசையும், தேவைகள்
உண்டாகித் தீர்க்கும் உணர்.
(தொடரும்)
நபிதாஸ்

வெண்பா (21)
பொருள்: இருப்பதையே இல்லாமை என்றறிதல் இங்கே
இருப்பவனின் எண்ணத்தின் ஏற்றம் - உருப்பெற்று
ஒன்றாகக் காணும் உயர்வின் அருள்நிலையில்
இன்பங்கள் வாழ்வில் இயல்பு. இருக்கின்ற எல்லாவற்றையும் சிந்தித்து இறுதியில் இல்லை என்ற முடிவுக்கு வருவதும் இவ்வுலகில் எண்ணத்தின் ஏற்றமான நிலைதான். ஆனாலும் இல்லாமை என்ற ஒன்றினில் உருவங்கள் தோன்றி பல்வேறாக தோன்றினாலும் அந்த இருக்கும் இல்லாமை என்ற ஒன்றின் ஓர் உருவாகவே அனைத்தையும் காணுதல் உயர்வு. அந்நிலையே அருள்பெற்ற நிலையாகும். அந்நிலையில் வாழ்வில் இன்பங்கள் இயல்பாகிவிடும். 

வெண்பா (22)
பொருள்: மனித இயல்புகள் என்றுமே இறைவனை பணிந்த இறையடிமைப் பண்பின் குணத்திலே நிலைக்க மனிதச் செயல்கள் யாவும் நல்லறிவு நிறைந்ததாய் நிலைக்கும். வாழ்வில் பல இன்னல்கள் நிலைகுழைக்க நேர்ந்தாலும் புயலிலும் நிலைக்கும் புற்செடிப்போல் நன்கு பிடிப்புடன் தன் வாழ்வைத் தன் நன்னோக்கிலே தொடரும் அவ்விறையடிமைப் பிறப்பு.

வெண்பா (23)
பொருள்: சிறந்த உயர்ந்த பிறப்புகள் பிறக்கும்போதே சிலப் புதினங்கள் நிகழும். (யானை வரும் முன்னே மணியோசை வரும் என்பதுப் போல அல்லது வாசனைமுன் வந்து மல்லிகையை பின் காண்பதுப்போல). அவ்வாறு பிறந்த அவ்வுயர் பிறப்புக் கூறும் இன்பம் நிறைந்த அறம் தெளிவாகப் புரிந்துக் கொள்ளாமல் தான் அருள் பெற்றவன் அறிவாளி என்று கூறுவோர் முழுமைப் பெறாதவர்களே. என்னதான் அறிவாளியாக இருந்தாலும் இவர்கள் முளுமையடையாதவர்கள் ஆதலால் இவர்கள் அவ்வுயர்ந்த பிறப்புகளிடத்து அஞ்சி ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

வெண்பா (24)
பொருள்: பத்து என்று கூறும் மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தானம், தவம், உயர்வு, தொழில், முயற்சி, காமம் ஆகிய அத்தனையும் எந்த ஊரும் செய்துவிடாது எங்கும் நிறைந்த ஏகன் அவனின் அடிமையாக ஆகிவிட்டால். கொஞ்சம் கூட அவர்மனதில் எதன் மீதும் அச்சமும் பாழ்படுத்தும் ஆசையும் நெருங்காது. அவர்களின் தேவைகள் உண்டாகும் போதே அவைகள் உண்டாகிய அவ்வாறே அதுதானே பூர்த்தியும் ஆகிவிடும் என்பதை அறிவீராக.

2 comments:

  1. வெண்பா அந்தாதி
    பண்பாய் உணர்த்திடும்
    தெம்பாய் அடிமை
    உம்பா உலகில்
    உயிர்த்தெழும் கவிதை
    தம்பார் வைதனில்
    சிறப்பாய் நின் அந்தாதி

    ReplyDelete
    Replies
    1. உம்பார்வை வெண்பாவில் உச்சரித்தே உகந்திட
      எம்பார்வை உன்னிலே ஏங்கிடுதே - நம்பார்வை
      எல்லோரும் எண்ணத்தில் ஏற்ற வரைகின்றோம்
      நல்லறிவும் நாள்தோறும் நன்கு.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers