.

Pages

Thursday, December 11, 2014

"எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்?"

கடந்த 06-12-2014 அன்று நடந்த கவியரங்கில் கவியன்பன் கலாமை கவிபாட , கவியரங்கத் தலைவர் திரு கவிஞானி யோகிவேதம் அவர்கள் அழைத்தார்கள் இவ்வாறு:

கவியன்பன் கலாம் அவர்களைக் கவிபாட அழைப்பேன்..
**********
கவியன்பன் கலாமுக்கு கவியோகியின் அழைப்பு..
***************************
அதிரை பட்டினத்தில்  அவதரித்து அபுதாபியில்
அதிக  வேலைசெயும் அன்புக் கவிஞரிவர்!
.
கவிஞர்களின் மனத்தில் அன்பால் கட்டுண்டவர்;
கவியன்பன் கலாம்.. பள்ளிப் படிப்புமுதல்
..
கவிஇயற்றும்  ஆற்றலில் கரைகண்டவர்;ருசிகண்டவர்!
கவிதைகளில் பரிசுபெற்றுக்  கவர்ந்தார் நம்மனத்தை;

‘கவித்தீபம்’,  முதலான கவிவிருது அடைந்தவர்!
கவிதைச்  சங்கமமெனும் இவர்அமைப்பில் அடியேனும்
.
முதற்பரிசு  பெறமுயன்றுப்   பயனடைந்தேன்; நன்றிசொன்னேன்;
முதிய-  ‘துபாய் தமிழர்  சங்கமச்’ செயலாளர்  இவரை
.
இனிப்போகும் இடத்தை  இன்பமாய்ச்  சொல்லவே
கனிவுடன் அழைக்கின்றேன்.. வருக அன்பர் கலாம்!
 ***********************************(கவியோகி)

கவியன்பன் கலாமின் கவிதை இதோ:
”கவியரங்கம்-41” தலைப்பு: "எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்? “
இறைவாழ்த்து:
மறையுடன் மாசிலா மாநபி வழங்கிய
இறையவன் ஆசியைப் போற்றியே துவங்கினன்

தலைவர் வாழ்த்து:
கவிஞானி யோகியார்  காட்டும் விளக்கம்
கவித்திசை நோக்கிக் கவிதைப் படகைச்
செலுத்தவே வந்தனன்; சீர்மிகு வாழ்த்தைச்
செலுத்தினேன்; பாடவே செப்பு.

அவை வாழ்த்து: 
யாப்பின் வழிநின்று யாத்திடும் பாக்களில்
மூப்பின் வழிகாட்டல் முன்னேற்றம் இங்குதான்
சந்த வசந்தமென்னும் சங்கமம் கொண்டோர்க்குச்
சொந்த மெனவாழ்த்தும் சொல்

எங்கே துவங்கி இங்குவந்தோம்
       என்ன தான்நாம் செய்கின்றோம்
எங்கே சென்று முடிந்திடுவோம்
        என்று தான்நாம் அறியாமல்
எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்
        இலக்கே இல்லாப் பயணமென
இங்கே வந்து இயற்றுகின்ற
         இனிய பாடல் சொல்லட்டும்!

தன்னை யறிந்தால் இறையவனைத்
         தானே யறிவான் என்றனரே
தன்னை யறியத் தனிநேரம்
         தானே ஒதுக்க முடியாமல்
தன்னைச் சுற்றித் தனியுலகம்
         தானே போட்டுக் கொண்டதனால்
இன்னும் அறியா மல்நாமும்
        எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்?

முன்னோர் சொல்லை ஏற்காமல்
            முட்டாள் என்றே சொல்லுகின்றோம்
பின்னோர் சொல்லில் மலிந்துள்ள
             பிழைகள் காண முடியாமல்
இன்னல் வந்தால் முடிவுகளை
              எடுக்க முடியாக் குழப்பத்தில்
பின்னே நோக்கிச் செல்வதனால்
             பிறகு எங்கே போகின்றோம்?

வாசிப் பதையும் நிறுத்திவிட்டோம்
         வளமார் தமிழை மறந்துவிட்டோம்
நேசிப் பதையும் நிறுத்திவிட்டோம்
              நெஞ்சில் ஈரம் துறந்துவிட்டோம்
யோசிப் பதற்கும் நேரமின்றி
             எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்?
காசில் குறியா யிருக்கின்றோம்
               களவும் செய்யத் துணிந்துவிட்டோம்!

வேங்கை தின்ற மனிதனையும்
            வேடிக் கைதான் பார்த்தோமே
எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்
           இதயம் இல்லா மானிடராய்?
ஆங்கே ஒருவர் யோசனையை
         ஆர்க்கும் வழங்க முயன்றனரோ?
தாங்கள் பதியும் விழியத்தில்
          தானே கவனம் செலுத்தினரே!

மண்ணின் ஆதிப் பழக்கமெங்கே
           மரபும் உடையும் மாறியதேன்?
விண்ணில் பறக்க முயன்றோமே
          வியர்வை வழியும் விவசாயி
புண்ணாய் வெந்து மடிவதையும்
           புரியா தெங்கே போகின்றோம்?
உண்ணும் நேரத் திலொருநொடி
         உணர்வோம் உழவன் நிலையையுமே!

காடு, கழனி, தோட்டங்கள்
        காசு பணத்தால் அழித்துவந்த
வீடு என்னும் காடுகளால்
        வீட்டுக் குள்ளே காற்றெங்குக்
கூடும் என்று சிந்தையின்றிக்
       கூறு கின்றோம் “காற்றில்லை”
ஏடும் உரையும் இருந்தென்ன
       எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம்?

பட்டி தொட்டி எங்கணுமே
      பசுமைப் புரட்சி செய்திடுவோம்
எட்டிப் பார்க்கும் எம்வீட்டில்
      இசைக்கும் காற்றும் மழையுடனே
தட்டிக் கழிக்கும் அதிகாரம்
      தரமில் “மவுலி வாக்கத்தின்”
கட்டி டங்கள் விழுந்தனவே
      காசால் எங்கே போகின்றோம்?

”கத்தி” யுடனே வந்திங்குக்
       கத்த வில்லை கதறவில்லை
புத்தி யிலேதான் பட்டதனால்
       புரிய வைத்தேன் பகுத்துணர
பக்தி யுடனே யான்போற்றும்
       பாடல் வனையும் புலவர்கள்
சக்தி தந்த ஆற்றலிது
        சந்த வசந்தக் குழுமத்தில்!
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

13 comments:

  1. உடன் பதிவுக்குள் கொணர்ந்தமைக்கும் உங்களின் ஆதரவுக்கும் மிக்க நன்றி, சகோதர்- விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா நிஜாம் அவர்களே!இந்தக் கவிதை அமீரகத்தில் நடந்த கவியரங்கில் பாடியது அல்ல; "சந்தவசந்தம்" என்னும் இணைய குழுவில் நடந்த கவியரங்கில் என் கவிதை அரங்கேறியதும் ஆங்கு வீற்றிருந்த உலகத்தமிழ்ப் புலவர்களின் என் ஆசான்களின் பாராட்டுகளைப் பெற்றேன். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. என்றும் அதிரையின் பெயரை அகிலமெலாம் உச்சரிக்க வைப்பேன்., இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  2. "எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்?"

    ஏற்றமிகு உங்கள் படைப்பு
    ஏகபோகத் தனிச்சிறப்பு
    கவித்தீபம் கவிப்படைப்பு
    காண்போற்க்குத் தேனினிப்பு

    வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் கவிப் படைப்புக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, கவிஞர் அதிரை மெய்சா

      Delete
  3. கவியரங்கில் வாழ்த்தை பெற்ற கவிக்குறளுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. ஆகா என்ன ஆக்கமிது !
    .....அழகு கருத்தில் அமைந்தது !
    பாகாய் தன்னைப் படைத்தவனை
    .....பார்க்கப் படைப்பை தூண்டுவது !
    வாகாய் வார்த்தை வளத்தினிலே
    .....வல்லோன் நெருக்கம் மணக்கிறது
    தாஹா நபியின் உம்மத்தில்
    .....தவழும் உந்தன் தாகமோ !

    ReplyDelete
    Replies
    1. ஞானப் பேழை அளித்திட்ட
      ஞானம் இங்கே குவித்திட்டேன்
      கானம் கொண்டும் உரைத்திடலாம்
      கல்வி இதுவாம் உணர்ந்திடலாம்

      Delete
    2. மிக்க நன்றி, மாணவர் நபிதாஸ்

      Delete
  5. பதிவுக்கு நன்றி.‎

    கட்டு அவிழ்த்து விடப்பட்ட கவிதை.‎
    கட்டுக்குள் அடங்காத கவிதை.‎

    படித்தால் பரவசம் ஊட்டும் கவிதை.‎
    படித்து சுவைத்தால் பரவசமாய் மாரவைக்கும் கவிதை.‎

    கரையைக் காண முடியாத கவிதை.‎
    கரையைக் கண்டாலும் கரையேற விடாத கவிதை.‎

    வாழ்த்த வழி இல்லை.‎
    வாழ்த்தாமலும் இருக்கு முடிய வில்லை.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  6. மிக்க நன்றி, விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா நிஜாம்!

    ReplyDelete
  7. கவிதையே. தெரியுமா?
    கலாம் என் சொந்க்காரர்

    ReplyDelete
    Replies
    1. கவிதைக்குச் சொந்தம் என்பதையும் கவிதையில் சொன்ன என்றன் சொந்தத்திற்கு என் உளம் நிறைவான நன்றிகள் சொந்தம்!

      Delete
  8. எங்கள் கவிதைக்கு,

    கவிதை வார்த்தற்கு நன்றி.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers