.

Pages

Sunday, February 8, 2015

[ 11 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(37)
காட்டி விளக்கிடக் காணும் பொருளாகக்
காட்டா மலெண்ணும் கருவாக - ஊட்டும்
ஒருவர் உதவியில் ஒன்றாகி நின்றே
விரும்பித் தெளிய விளங்கு.

(38)
விளங்க முயலும் விதத்தில் தெளிவு
பிளக்க நினைக்கப் பிரிவு - வளர்த்திடும்
நோக்கம் செயலாகி நேர்த்தியாய் ஆகிவிடும்
ஆக்கும் மனமே அதை

(39)
அதையடைந்தே தீரும் அதனிலே மூழ்க
இதையுணர எல்லாம் இயலும் - விதைக்க
முளைப்பதன்றி மாறி முடங்காதே வாய்ப்பில்
களைப்பதனை நீக்கியே காண்

(40)
காண்பதெல்லாம் உண்மையின் காட்சிகள் காணவே
தூண்டுமுணர் வுத்துயிலாத் தூய்மையில் - மாண்டபின்
காட்சிகளும் கண்ணும் கரைந்தொன்றும், ஒன்றதனின்
ஆட்சிகளின் ஆட்டம் அறி.

நபிதாஸ்

வெண்பா (37)  
பொருள்: இதுதான் என்று சுட்டிக்காட்டிடும் உருவமும் அன்று. ஆனாலும் இப்படித்தான் என்று விளங்கி; விளக்கிக் காட்டாமலும் போக உண்மைக் கருவே சத்திய உண்மை இறை ஆகும். அதனை அறிந்த இறைநெருக்கம் பெற்ற ஒருவர் உதவியில்; அவர்கள் காட்டும் நெறியில்; அந்நெறியான ஒன்றான உண்மையில் நின்றே; அதனில் ஆர்வம் மிகுந்து விரும்பி இறைவனை அறிந்துத் தெளிந்திடவே விளங்கிக்கொள் என்பதாகும்.

வெண்பா (38)  
பொருள்: ஒன்றைப்பற்றி விளங்க முயலும் விதத்தில் அதில் தெளிவுகள் பிறக்கும். அதைவிடுத்து அதில் குற்றம் காண முயன்றால் அவ்வொன்றை வேறொன்றாகக் குற்றம் காணும் உணர்வு காட்டும். ஆக, எந்த நோக்கத்தில் ஒன்றைப்பற்றித் தெரியத் தெளிய விரும்புகிறோமோ அந்த விதத்திலே இவனில் இருக்கும் மனம் என்ற ஆற்றல் செயல்படும் என்பதாகும். எனவே ஆற்றலை முறையான வழியில் செயல்படுத்த வேண்டும்.

வெண்பா (39)  
பொருள்: ஒன்றை அடைய விரும்பினால் அதனை அடையும் வழிதனில் தீவிரமாக மூழ்கினால் அதனை அடைவது உறுதி. இதை அறிந்த ஒருவனால் அவன் விரும்பும் எதனையும் அடைய இயலும். காரணம் இவன் மனதில் எந்த எண்ணத்தை விதைக்கின்றானோ அது முளைத்து அவன் விரும்பியவண்ணம் ஆக்காமல் இவனைப்படைத்த இறையாற்றல் விடாது. எனவே திட்டமிட்டதை அடையமுடியவில்லை என்று களைப்படைந்து முடங்கிவிடாதே என்பதாகும்.

வெண்பா (40)  
பொருள்: இப்பிரபஞ்சத்தில் காண்பதெல்லாம் உண்மையின் காட்சிகளே. அவ்வாறுக் காணும் பொழுதுக் காணவேண்டும் என்றத் தூண்டும் உணர்வு தூய்மை என்ற நிலையில் வழுவாதிருந்திடல் வேண்டும். தூய்மை என்பது வேற்றொன்று இல்லாத ஒன்று ஆகும். வேறொன்று ஒன்று இருந்தால்தான் மற்றதனில் கலந்து மாசு ஏற்படும்; தூய்மைப் போய்விடும். அத்தகைய ஒன்றானத் தூய்மையாகி காணும்போது காட்சிகளும் காணும் செயலும் கண்ணும் கரைந்தொன்றாகிவிடும். அந்நிலையில் ஒன்றே அனைத்தாகி இருக்கின்றதென்ற உண்மையை அறியலாம் என்பதாகும்.

6 comments:

 1. வெண் பாக்களுக்கு ...
  விளக்கமளித்து ...மொழி காக்கும்
  கவிப் பிறவி ..கவிஞர் நபி தாஸ் ..
  அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல

  ReplyDelete
  Replies
  1. அதிரைசித்திக் மொழியார்வம் அங்குமிங்கும் ஆகா !
   பதிவை(த்)தந்தே உள்ளம் பறித்தார் - மதியில்
   பிறந்திடும் எண்ணங்கள் மாயோன் விதைப்பே
   உறவிடுதல் எங்கே ? உயர்வு.

   பொருள்: அதிரை சித்திக் அவர்களின் மொழியார்வம் வெளிநாட்டிலிருந்தாலும் உள்நாட்டிலிருந்தாலும் ஆகாவெனப் போற்றும்படி உணர்கின்றேன். பதிவுகள் பலதந்து மனத்தைக் கவர்ந்தார். மதியில் பிறந்திடும் எண்ணங்கள் அவனின் ஆற்றலின்றி பிறக்காது. அவ்வாறிருக்க எங்கனம் அவைகளை உரிமைகொள்ள ?

   Delete
 2. வகை வகையாய் வெண்பாக்கள்
  வந்து விழுகுது வனப்பாக
  நபிதாஸின் சிந்தனையில்
  நமக்கு நல்ல போதனைகள்
  நாளெல்லாம் வழங்கிடவே
  நாமெல்லாம் காத்திருப்போம்

  ReplyDelete
  Replies
  1. வகைவகையாய் வாரத்தில் வல்லமையின் ஊற்றை
   தொகைதொகையாய் தந்தத் தொகுப்பே - மிகையாய்
   மதிக்கின்றாய் மாசற்ற மாண்பில், மகிழ்வே
   அதிரைமெய்சான் அன்பின் அறிவு.

   பொருள்: ஒவ்வொரு வாரத்திலும் மிகுக்கும் கட்டுரைகள் பல தரும் அதிரையின் கட்டுரைத் தொகுப்பே அதிரை மெய்சா, உங்கள் உயர்ந்த எண்ணத்தில் தாங்கள் மிகையாய் மதிக்கின்றீர்கள். சிற்றின்ப மகிழ்வைத் தந்தாலும் அம்மதிப்பு அதிரை மெய்ச அவர்களின் அன்பில் விளைந்த அறிவு ஆகும்.

   Delete
 3. அதிரை வரலாற்றில் வெண்பா அந்தாதி எழுதி வருவது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன்.

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உயர்ந்த நினைப்பு உயர்த்தும் உயர்வை
   அயர்ந்த மனதிலே அச்சம் - பயத்தில்
   மயக்கம், மதியில் மணப்பததி(ரை) யுள்ளம்
   வியக்கும் வரிகள் விடு

   பொருள்: உயர்வான எண்ணங்கள் உண்டாகும் ஒருவரை உயர்த்தும் உயர்வாக. ஆனாலும் தாங்கள் வாசனைக் கமழ எழுதியதை நுகர அதிகாலை அயர்ந்த மனதில் அச்சம் கவ்விவிட்டது. பயத்தில் மயக்க உணர்வு படர்ந்தது. ஆன்றோர் சான்றோர் வாழ்ந்த அதிரையில் அன்றும் பூத்திருக்கும். பூக்கள் அதிரையின் உள்ளத்தில்தான் உண்டாகி வருவது. அதனால் வியந்து எழுதும் வரிகள் விடுதல் நலமே.

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers