.

Pages

Wednesday, April 29, 2015

[ 19 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(69)
தாவிட உள்ளம் தனிமைச் சுயத்தெளிவில்
தாவிடும் உள்ளம் தலைவனுள் - ஆவியும்
தாவிடும் மெல்லத் தளர்ந்திட்டே காலத்தே
ஓவியம் இல்லஅரு ஓம்பு

(70)
ஓம்பு உறவினர் உற்றார் ஒருகாலும்
வீம்பில் எதிலும் விடமாட்டார் - கூம்பியே
உன்னவன் என்றேநீ உள்ளத்தில் எண்ணங்கள்
நன்னெறி ஊன்றியே நம்பு.

(71)
நம்புதலில் திண்ணம் நழுவாதே நின்றிட
நம்பிட்ட நாட்டம் நடக்குமாம் - நம்பிடும்
நல்லவைகள் அல்லவைகள் நன்கே நடந்திடுதல்
வல்லவனின் ஆற்றலான வாக்கு.

(72)
வாக்குகள் நாக்கினால் வந்ததல்ல மாறாக
ஆக்கையில் உண்டாகி ஆளுமே - ஊக்கமுடன்
உன்னிலே தேடிட உள்ளத்தை வாசலாக
நன்கொடைத் தந்தவனே, நம்பு

நபிதாஸ் (தொடரும்)

வெண்பா (69
பொருள்:  தான் யார் ? தான் எப்படி வந்தோம் ? அவ்வழியே செல்லத் தன் ஆதி மூலம்தான் எது ? என்று தன் சுயத்தெளிவில் தன் உள்ளம் தனிமையில் சிந்திக்கத் தாவிட, தன் உள்ளம் மேலும் தாவிடும் தன் தலைவனுள். இவ்வாறு சிந்தித்துக்கொண்டே முடிவில்லாமல் சென்றால் தன் ஆவியும் என்ற உயிரும் உடல் தளர்ச்சியினால் தாவிவிடும். எனவே உடன் காலத்தே தன் தலைவன் யார் ? அவன் அருவென்ற உருவமில்லாதவன் என்பதைப் பேணித் தலைவனுள் (இறைவனுள்) சிந்தனைச் செய். (அதன் மூலம் தன்னையும் அறிவாய் தன் தலைவனையும் அறிவாய்)

வெண்பா (70
பொருள்: உற்றார் உறவினர் அவர்களை நேசமுடன் பேணி நடந்துக்கொள். அவர்கள் ஒருகாலும் உன்னை வீம்பாகக்கூட எதிலும் பாதிப்பு ஏற்பட விட்டுவிடமாட்டார்கள். எனவே ஒன்றாக ஒற்றுமையாக அவர்களை அரவணைத்தே அவர்கள் உன்னுடையவர்கள் என்ற இறைவனின் நன்னெறியுடன் நீ உன் ஆழமான உள்ளத்தில் எண்ணங்கள் என்றும் மலர நம்பிக்கைக்கொள். நன்நம்பிக்கை நாட்டப்படி நல்லதாகவே மாற்றிவிடும். எண்ணம் என்பதும் வேண்டுதலே அதனை இறைவன் செயல்படுத்துவான்.

வெண்பா (71
பொருள்: நம்பிக்கையில் கிஞ்சுற்றும் நழுவாது மிகவும் உறுதியாக 
நின்றிட அந்நம்பிக்கை நாட்டாப்படியே நடந்துவிடும். இவ்வாறு நம்பிடும் நல்லதும் அல்லதானக் கெட்டதும் நன்றே நடந்திடுதல் எல்லாம் வல்லவனான அவனின் ஆற்றல்மிகு வாக்குப் போன்றதாகும். ஏனென்றால் அவன் நாட்டம் நடப்பதன்றி வேறாகாததுடன், அவன் நாட்டம் என்பதும் நம்பிக்கையும் அவன் படைத்த இம்மனதுடன் தொடர்புடையது.

வெண்பா (72
பொருள்:வாக்கு என்பது நாக்கினால் உண்டானதல்ல. மாறாக மனித உடம்பிலிருந்து உண்டாகி செயல்படும்; செயல்படுத்தும். மேலும் மிக ஆழமாக ஊக்கமுடன் உன்னிலே அறிந்திட உன் உள்ளத்தை அவன் நன்கொடை வாசலாக தந்த அவனின் ஆற்றலிலிருந்துத்தான் வருகிறது என்பதை நம்பு. வாக்கு பலிக்கிறது என்றுச் சொன்னால் எல்லாம் வல்லவனிடமிருந்துதான் என்பதை அறிந்துக்கொள். மனிதனுக்கு ஆற்றலில்லை எல்லாவற்றையும் படைத்த இறைவனிடத்தில் தான் ஆற்றல்கள் உள்ளது. அவனிடமிருந்துத்தான் ஆற்றல்கள் வருகிறது.

4 comments:

 1. தனிமையில் இனிமையும்
  தந்திடும் பொழுதினில்
  நினைவுகள் நீந்திடும்
  நீள்கொண்ட கனவினில்

  தனெக்கென உறவிருந்தும்
  தந்துமகிழ அருகில்லை
  தியாகங்கள் உழைப்பாகி
  தூரத்து விண்மீனாய்
  துடித்திடும் மானிடரே

  வெண்பாவை துணையாக்கி
  தன்பாவை பாடிடவே
  உள்ளத்தின் ஏக்கங்கள்
  உன்பாவில் உலர்ந்திடும் மனம்

  ReplyDelete
  Replies
  1. தனிமை இனிமை தருமாம் கனவில்
   மனித உறவும் மனதில் - புனித
   வாழ்வும் துடித்தே வருந்தும் வெளிநாட்டில்
   ஆழ்ந்தே உலர்ந்தல் அறிந்து

   Delete
 2. பொருள்: உற்றார் உறவினர் அவர்களை நேசமுடன் பேணி நடந்துக்கொள். அவர்கள் ஒருகாலும் உன்னை வீம்பாகக்கூட எதிலும் பாதிப்பு ஏற்பட விட்டுவிடமாட்டார்கள். எனவே ஒன்றாக ஒற்றுமையாக அவர்களை அரவணைத்தே அவர்கள் உன்னுடையவர்கள் என்ற இறைவனின் நன்னெறியுடன் நீ உன் ஆழமான உள்ளத்தில் எண்ணங்கள் என்றும் மலர நம்பிக்கைக்கொள். நன்நம்பிக்கை நாட்டப்படி நல்லதாகவே மாற்றிவிடும். எண்ணம் என்பதும் வேண்டுதலே அதனை இறைவன் செயல்படுத்துவான்/

  அருமையான அறிவுரை ..வாழ்த்துக்கள் நபிதாஸ் அவர்களே

  ReplyDelete
  Replies
  1. அறிவுரையில் ஆழ்ந்த அதிரையின் சித்திக்
   அறிவினிலே உண்மைகள் ஆளும் - அறிதல்
   அனைவர்க்கும் ஆகினால் அன்பு ஒளிரும்
   நினைத்ததிலே இன்பம் நிறைவு

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers